Monday, April 28, 2014

கல்யாணமா சார்! அப்படினா பிளிச் பண்ணிக்குங்க!!!

ஊரில் எனக்கு விவரம் தெரிந்து சலூனுக்குச் சென்று முடிவெட்டுவதற்குப் பத்து ரூபாய் இருந்தது. இப்போது எண்பது ரூபாய் என்று நினைக்றேன். கடந்த சில வருடங்களாக‌ ஊரில் முடிவெட்டுவதற்கான‌ நேரம் எனக்கு அமைவது இல்லை. எங்கு இருக்கிறேனோ, அங்கிருந்து ஊருக்குப் போகும் போது முடிவெட்டிச் சென்று விடுவேன். அதனால் ஊரில் இருக்கும் வரை முடிவெட்ட வேண்டிய நிலை வருவது இல்லை. பெரும்பாலும் நான் சுயமாகச் சவரம் செய்வது இல்லை, கடையில் தான் சரவம் செய்வேன். சுயமாகச் சரவம் செய்வதற்குச் சோம்பேறிதனம் என்று சொல்ல முடியாது. சுயமாகச் செய்தால் குறைந்தது முகத்தில் பிளேடால் ஒரு மூன்று கோடுகளாவது போடாமல் சரவம் செய்து முடிக்க மாட்டேன். கீறல்கள் விழுவதற்குக் காரணம் முகத்தில் கொஞ்சம் முடி வளர்ந்தாலும் உடனடியாகக் கட்டிகள் வந்துவிடும். அந்தக் கட்டிகளில் தான் அதிகமாகக் கீறல்கள் விழும். அதற்குப் பயந்தே சலூனுக்கு ஓடிவிடுவேன்.

எந்த இடத்தில் நான் தங்கி இருந்தாலும் அதன் பக்கத்தில் ஒரு சலூன் கடையைப் பழக்கம் பிடித்து வைத்துக் கொள்வேன், வாரம் தவறாமல் சென்றுவிடுவதால் அவர்களுக்கும் நம்முடைய முகம் மறப்பது இல்லை. சென்னையில் அதிக நாட்கள் அம்பத்தூர் கனராபேங்க் அருகில் தான் தங்கி இருந்தேன். அந்த ஏரியாவில் மெயின் ரோட்டின் வளைவில் ஒரு பெரிய‌ மலையாள சர்ச் உண்டு. அதன் பக்கத்தில் இருக்கும் சலூனுக்குத் தான் நான் வாரம் ஒருமுறை செல்வேன். அந்தச் சலூனின் ஓனர் சற்றுக் குள்ளமாக, கமலின் விருமாண்டி மீசையைப் போல், அந்த‌படம் வருவதற்கு முன்பே இவர் வைத்திருந்தார், வாரத்தின் ஞாயிறு என்றால் என்னை அங்குப் பார்க்க முடியும். பக்கத்திலேயே வேறு சில கடைகள் இருந்தாலும், இவரது கடை மட்டும் எப்போதும் கூட்டமாக இருக்கும். முடிவெட்டியுடன் தலையை நன்றாக மசாஜ் செய்து கழுத்தை இரு பக்கமும் திருப்பி, அழகாக நெட்டி முறிப்பார், இதற்காகத் தனியாகக் காசு ஏதும் வாங்க மாட்டார். கடைக்கு வரும் கூட்டம் இவருடைய தொழில் நேர்த்தியின் காரணமாகக் கூட இருக்கலாம். அவருடைய சொந்த ஊர் தென்காசி என்று சொன்னதாக ஞாபகம்.

இப்போது நான் இருக்கும் ஹைதிராபாத்தில் இருக்கும் பெரும்பாலன‌ சலூன்களில் ஹேர்கட்டிங் மற்றும் சேவிங் மட்டுமில்லாமல் பிளிச்சிங், ஸ்டீம் ட்ரீட்மென்ட், ஹெட் மசாஜ், ஆயில் மசாஜ், பெடிக்யூர், மினிக்யூர், ஹேர் செட்டிங், ஹேர் பெர்மிங் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்ட போர்டை மாட்டிருப்பார்கள். அதில் விவரமாகக் கட்டணத்தை மட்டும் போட்டிருக்க மாட்டார்கள். வெளியிலிருந்து பார்த்தால் கடை ரெம்பச் சாதரணமாகத் தான் இருக்கும். உள்ளேயும் பெரிய அளவில் எந்த வசதியும் இருக்காது. ஆனால் எல்லா வகையான ட்ரீட் மென்டிற்கும் கட்டணம் பெரிய கடைகளில் வாங்குவது போல் வாங்கி விடுவார்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஹைதிராபாத் ஆபிஸில் பணிசெய்து பேச்சிலர் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது, மஸ்கட் ஆபிஸில் இருந்து மாற்றலாகி ஹைதிராபாத் ஆபிஸுக்குப் புதிதாக நண்பர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருக்கு அப்போது தான் கல்யாணம் முடிவு ஆகி, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. ஆபிஸ் கொடுத்திருந்த‌ ஹெஸ்ட்க‌வுஸில் தான் நாங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். அவர் முன்பு எப்போதும் ஹைதிராபாத்துக்கு வந்தது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கு இவருக்குத் தெரியும். தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கிற்கும் ஹைதிராபாத்தில் இருப்பவர்கள் பேசும் தெலுங்கிற்கும் பெரிய அளவில் வேறுபாடு உண்டு. புதிய இடமாக இருப்பதால் வெளியில் எங்குச் செல்லவேண்டுமானாலும் என்னோடு தான் வருவார்.

நிச்சாயதார்த்தம் முடிந்திருந்ததால் போனில் அதிகமாகப் பேசிக்கொண்டே இருப்பார். அதனால் ஆபிஸ் முடிந்தால் எங்களுடன் ஹெஸ்ட்கவுஸூக்கு வராமல் வெளியில் எங்கள் தெருவை சுற்றிகொண்டே போன் பேசுவார். ஒரு நாள் ரெம்ப நேரம் ஆகியும் இவர் ஹெஸ்ட்கவுஸிற்கு வரவில்லை. நான் இவர் வெளியில் நின்று போனில் தான் பேசிக்கொண்டிருப்பார் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரவு சாப்பிடும் நேரம் ஆகிவிட்டதால் வெளியில் சென்று போனில் பேசிக்கொண்டிருக்கிறாரா? என்று தேடினேன், அங்குக் காணவில்லை. தெருவைச் சுற்றிவருவார் என்று சிறிது நேரம் வெயிட் பண்ணினேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய மொபைலுக்கு அவருடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மொபைலை ஆன் செய்து காதில் வைத்தால், ஸ்டீபன், உங்ளுடைய‌ பர்சை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக ஒரு சலூன் பெயரை சொல்லி அங்கு வருமாறு என்னை அழைத்தார்.

நானும் அவசர அவசரமாக் கிளம்பி அந்தச் சலூனுக்குச் சென்றால், ஆள் அடையாளம் தெரியாமல் கெட்டப்பே மாறி நின்றார். முடி வெட்டியிருந்தார், முகம் வேறு பட்டிப் பார்த்துப் பெயின்ட் அடித்தது போல் இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக வெளியில் வந்து ஒரு முந்நூறு ரூபாய் கொடுங்க! என்றார். நானும் கொடுத்தேன். கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு என்னிடம் வந்து, வாங்க வீட்டிற்கு போகலாம்! என்றார்.

இருவரும் சலூன் கடையைத் தாண்டி நடந்தவுடன், நண்பரிடம் என்ன விசயம் என்று விசாரித்தேன். ஹேர்கட் பண்ணலாம் என்று வந்தேன், சலூன் கடைக்காரர் ஹேர்கட் பண்ணி முடித்தவுடன், ஹெட் மசாஜ், பிளிச், ஸ்டீம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, இது பண்ணினால் நல்லாயிருக்கும் என்று சொல்லி ஒவ்வொன்றும் பண்ணுவத்ற்கு தொடங்கினார், சிறிய கடையாக இருப்பதால் கட்டணம் பெரிய அளவில் இருக்காது என்று நினைத்து, நானும் விசாரிக்காமல் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தேன். கடைசியாக‌ எல்லாம் முடித்துவிட்டு 1300 ரூபாய் கொடுங்க என்றார். நான் ஆயிரம் ரூபாய் தான் வைத்திருந்தேன், அதானால் தான் உங்களை, இங்கு வருவதற்குச் சொன்னேன் என்றார். வெள்ளாந்தியாகப் பேசும் நண்பரை பார்த்து சிரிப்பதா? பரிதாபம் கொள்வதா? என்று தெரியாமல் இருவரும் வீட்டிற்கு நடந்தோம்.



நண்பருக்குத் தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கு கொஞ்சம் தெரியும் என்று நான் முன்பே சொல்லியிருந்தேன் இல்லையா?. இவர் சலூன் கடைக்காரரிடன் ஹேர்கட் பண்ணும்போது அரைகுறையாகத் தெலுங்கில் பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது தனக்கு அடுத்த மாதம் திருமணம் என்பதைச் சொல்லியிருக்கிறார். சலூன் கடைக்காரர் அதையே சாதகமாகப் பயன்படுத்தி, சார்! அப்ப நீங்க இப்பயிருந்தே இந்த மாதிரி ட்ரீட்மென்ட் பண்ணினால் கல்யாணம் பண்ணும் போது முகம் பளிச்சென்று இருக்கும் என்று சொல்லி, ஹெட் மசாஜ், ஆயில் மசாஜ் மற்றும் பிளிச், ஸ்டீம் என்று ஒவ்வொன்றாகப் பண்ணியிருக்கிறார். நம்ம நண்பரும் கடைக்காரரின் பேச்சில் மயங்கி எல்லாவற்றிற்கும் தலைய ஆட்டியிருக்கிறார்.

அப்புறம் என்ன? ஆடு மாட்டினால் பிரியாணி பண்ணாமலா விடுவார்கள்!!!

.

Friday, April 25, 2014

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்_நீங்க எல்லாம் நல்லா வரணும்!!!

நான் சவூதி அரேபியாவில் புராஜெக்ட் செய்து கொண்டிருந்த போது சிறிதுகால இடைவெளி கிடைத்தாலும் உடனடியாக ஊருக்கு வந்துவிடுவேன். ஒருமுறை பத்து நாட்கள் விடுமுறைக்காக ஊருக்கு வந்துபோவதற்கு ஆபிஸில் இருந்து டிக்கெட் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் என்பது மிகக் குறுகியகாலம் என்றாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது நான் தவறவிடுவதில்லை. வெளிநாடுகளில் குடும்பங்களை விட்டு தனியாக‌ வந்து, ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் என்று தொடந்து வேலைசெய்து கொண்டிருக்கும் போது கூடச் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தின் நினைவுகள் நம்மை அடிக்கடி தொல்லைச் செய்வதில்லை. ஆனால் விரைவில் ஊருக்குப் போகிறோம் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டால் போதும் நம்மையறியாமல் மனம் விடுமுறைக்காக மீதம் இருக்கும் நாட்களை எண்ணுவதற்குத் தொடங்கிவிடும். அதிலும் டிக்கெட் கைக்கு வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், காத்திருக்கும் ஒரு மணிநேரம் கூட ஒரு யுகமாக மாறிவிடும்.

ஆபிஸில் என்னுடைய விமான டிக்கெட்டை எமிரேட்ஸ் ஏர்லைன்சில்(EMIRATES AIRLINES) புக்கிங் செய்திருந்தார்கள். த‌மாமில்(Dammam) இருந்து துபாய்(Dubai), அங்கு ஒரு மணிநேரம் டிரான்சிட்(Transit), பின்னர்த் துபாயில்(Dubai)) இருந்து திருவனந்தபுரம்(Thiruvananthapuram). நான் ஊருக்கு வரும் நேரம் ஹஜ் சீசன், சாதரணமாகவே சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களில் இமிக்கிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் முடிப்பது என்பது சாதாரண விசயம் கிடையாது. நீண்ட‌ வரிசையில் தேவுடு காத்தே நீங்கள் வெறுத்துவிடுவீர்கள். நீண்ட வரிசையில் கால் கடுக்க‌ நின்றுவரும் நம்மிடம், ஏர்போர்ட்டில் பணிபுரியும் சவூதிகள் செய்யும் செயல்கள் மற்றும் கேட்கும் கேள்விகள், ஏன்டா நீங்க எங்க நாட்டுக்கு வர்றீங்க? என்பது போல்தான் இருக்கும். சாதாரணமாகவே இப்படிப் படுத்தியெடுக்கும் ஏர்போர்ட்டில் ஹஜ் சீசன் என்றால் பயணிகள் கூட்டம் இரண்டு மடங்காக இருக்கும். எனவே நான் தாமாம் ஏர்போர்ட்டிற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்டேன்.



லக்கேஜ் ஸ்கேன், டிக்கெட் கவுண்டர் மற்றும் எமிக்கிரேசன் என்று எல்லா இட‌ங்களிலும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். லக்கேஜ் ஸ்கேன் முடித்துவிட்டு டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நானும் காத்திருந்தேன். என்னுடைய வரிசை வந்தவுடன் லக்கேஜை எடுத்து வேயின் கன்வேயரில் வைத்துவிட்டு பாஸ்போர்ட்டையும் ஆன்லைன் டிக்கெட்டையும் எடுத்துக் கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்தேன். தோளின் இருந்த ஹேண்ட் பேக்கேஜையும் எடுத்து வேயின் கன்வேயரில் வைக்கச் சொன்னார். மொத்தமாக 35 கிலோ என்று ரெட் டிஜிட்டல் டிஸ்பிளே காட்டியது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் செக்கிங் பேக்கேஜ் 30 கிலோவும், கேபின் பேக்கேஜ் 7 கிலோவும் தான் அனுமதிப்பார்கள். என்னுடைய மொத்த பேக்கேஜ் வெயிட் 35 கிலோ தான், ஆனால் கேபின் பேக்கேஜ் 10 கிலோவாக இருந்தது. சாதாரணமாக எந்த ஏர்லைன்ஸும் கேபின் பேக்கேஜ் 10 கிலோ கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். கவுண்டரில் இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கேபின் பேக்கைஜை கையில் எடுத்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு டிக்கெட்டை கையில் கொடுத்தார்.

டிக்கெட்டை கையில் வாங்கிகொண்டு, கேபின் பேக்கைஜை எடுத்துத் தோளில் மாட்டிவிட்டு இமிக்கிரேசன் முடிக்கக் கிளம்பினேன், அங்கும் மிக நீண்ட வரிசையிருந்தது. விமானம் கிளம்பும் நேரமும் நெருங்கிகொண்டிருந்தது. நான் வரிசையில் காத்திருக்கும் போதே அரைமணி நேரம் லேட்டாகத் துபாய் எமிரேட்ஸ் கிளம்பும் என்று டிஸ்பிளே மற்றும் ஸ்பீக்கரில் சொல்லப்பட்டது. ஒரு மணிநேர டிரான்சிட்டில் துபாய் ஏர்போட்டிலிருந்து திருவனந்தபுரம் எமிரேட்ஸ் விமான‌த்தை பிடிப்பது என்பதே கொஞ்சம் கஷ்டமான விசயம். இதில் அரைமணி நேரம் லேட்டாகக் கிளம்பினால் எப்படி அடுத்த விமானத்தைப் பிடிப்பது, அதுவும் லேட்டாகத் தான் கிளம்புமா? எனப‌து தான் என்னுடைய கவலையாகயிருந்தது.

ஒரு வழியாக இமிக்கிரேசன் முடித்து அவசர அவசரமாகக் கேட்டை அடைந்து விமானத்தில் ஏறிக்கொண்டேன். முப்பது நிமிடம் லேட் என்று சொல்லி நாற்பது நிமிடம் ஆக்கிய பிறகுதான் விமானத்தை எடுத்தார்கள். துபாய் நேரம் இரவு ஒன்பது மணிக்கு என்னுடைய அடுத்த விமானத்திற்கான போர்டிங். நான் தாமாமிலிருந்து துபாய் வந்து இறங்கும் போது மணி சரியாக 8.45. டிராசின்சிட் பாதையில் நடையும் ஓட்டமாகக் கடந்துவந்து கேட்டில் இருக்கும் அதிகாரியிடன் டிக்கெட்டை காட்டினால் சார்! உங்க பிளைட் கிளம்பிடுச்சு, நீங்க இங்க வெயிட் பண்ணி நாளைக்கு இதே நேரத்தில் போகலாம் என்றார். என‌க்கு வெறித்தனமான‌ கோபம். போர்டிங் ஒன்பது மணி போட்டு இருக்கீங்க!, மணி இப்பதான் 8.50 ஆகின்றது, எப்படிச் சார் கிளம்பும்? என்றேன். சாரி சார் கிளம்பிடுச்சு என்றார்.

உண்மையில் எமிரேட்ஸ் நிர்வாகம் அன்றைக்குத் துபாயில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானச் சேவையை ரத்துச் செய்திருக்கிறார்கள். போர்டிங் நேரம் ஒன்பது என்று போட்டிருக்கிறார்கள், எப்படி 8.45 க்கு விமானம் கிளம்ப முடியும்? பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தால், இவர்கள் வழக்கமாக‌ இப்படிதான் செய்கிறார்கள் என்று பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது அறிந்து கொண்டேன்.



இப்போது என்னுடைய பக்கத்தில் வேறு எவராவது இருக்கிறார்களா? என்று பார்த்தேன், ஒரே ஒருவரை தவிர எவரும் இல்லை. நான் வந்த விமானத்தில் திருவனந்தபுரம் செல்வதற்கு மொத்தமே இரண்டு பேர்கள் தான். பக்கத்தில் இருந்த ஒருவரும் மலையாளி. அவர் இரண்டு வருடம் பணி முடித்து மூன்று மாதம் விடுமுறையில் இந்தியா வருகிறார். என்னால் ஒரு நாள் இங்குத் தங்க முடியாது, இதில் என்னுடைய பிரச்சனை ஏதும் இல்லை, அங்கேயே நான் டிக்கெட் வாங்கிவிட்டேன். பிளைட் தாமதமாக வந்தது என்னுடைய தவறு ஏதும் கிடையாது என்று சண்டையிடுவதற்குத் தொடங்கினேன். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரி, சார்! என்னால் ஒண்ணும் பண்ண முடியாது! நீங்க வந்து மேனேஜரை பாருங்கள்! என்று ஒரு கேபினை காட்டினார்.

மேனேஜரிடம் சென்றும் இதைத் தான் சொன்னேன். நான் ஊருக்கு வந்திருப்பதே பத்து நாட்கள் விடுமுறையில் தான், இதில் தேவையில்லாமல் ஒரு நாள் இங்குத் தங்குவதற்கு என்னால் முடியாது என்றேன். இல்ல சார் நாங்க, நீங்கள் தங்குவதற்குப் பைவ் ஸ்டார் ஹோட்டல் கொடுக்கிறோம் என்றார். நான் மேலும் கோபமாக நீங்க கொடுக்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்காக எல்லாம் நான் இங்குத் தங்க முடியாது, உடனடியாக எனக்கு அடுத்தப் பிளைட் புக்கிங் செய்து தாருங்கள் என்று சண்டையிட்டேன். இங்கு நடக்கும் பிரச்சனையை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அதிகாரியும் வந்து சேர்ந்து கொண்டார். என்னிடம் உங்க லக்கேஜ் எங்களுடைய பிளைட்டில் இருந்து டிரான்சிட் பண்ணுவது கஷ்டம். அதனால் நீங்க தயவுசெய்து நாளை செல்லுங்கள் என்று கொஞ்சினார். இருவரிடமும் நான் இங்குத் தங்கவே முடியாது. என்னுடைய பத்து நாட்கள் விடுமுறையில் ஒரு நாளை நான் இழக்கவிரும்பவில்லை என்று என்னுடைய ரிட்டன் டிக்கட்டை காட்டினேன். இனிமேலும் என்னிடம் பேசிப் பலனில்லை என்று உடனடியாக வேறு எந்தப் பிளைட் எப்போது இருக்கிறது என்று ஆன்லைனில் பார்த்துவிட்டு ஒமன் ஏர்லைன்ஸில் புக்கிங் செய்து டிக்கெட்டை கையில் கொடுத்தார்.

நான் இவ்வளவு தூரம் சண்டையிட‌வில்லையென்றால் என்னை ஒரு நாள் தங்கவைத்திருப்பார்கள். சொந்த ஊருக்கு வரும் சந்தோசத்தில் இருக்கும் நம்மிடம் வந்து கூலாக ஒரு நாள் தங்கிச் செல்லுங்கள் என்று சொல்லும் போது நமக்கு ஏற்படும் வலி இவர்களுக்குப் புரியபோவதில்லை. மனைவி உட்பட‌ வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நான் வருகிறேன் என்று வீட்டில் சொல்லியதால் அப்பாவும், அண்ணனும் கார் எடுத்து வந்து ஏர்போட்டில் வேறு வெயிட் செய்வார்கள். பயணத்தின் இடையில் வீட்டிற்குப் போன் செய்து நான் வரவில்லை என்று சொன்னால் எப்படியிருக்கும்?.

பிளைட் கிளம்ப அரைமணி நேரம் தான் இருக்கிறது சீக்கிரம் செல்லுங்கள் என்றார். கேபின் பேக்கேஜை துக்கி கொண்டு ஒமன் ஏர்வேஸ் கேட்டிற்கு ஓடினேன். அங்குச் சென்றால் ஒரு பெண் ஒமனி தான் இருந்தார். அவர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்துக் கொண்டே உங்களுடைய செக்கிங் பேக்கேஜுக்கு நாங்கள் பொறுப்புக் கிடையாது என்றார். அப்போது இருந்த மனநிலையில் லக்கேஜாவது மண்ணாகட்டியாவது என்று தான் இருந்தது. நான் வைத்திருந்த‌ கேபின் பேக்கேஜை பார்த்தவர் வேயின் மெஷினில் வைக்கச் சொன்னார். பத்து கிலோ என்று காட்டியது. உடனடியாக ஒமனி பெண் பத்து கிலோ கேபின் பேக்கேஜ் அனுமதிக்க மாட்டோம் என்றார். நான் என்னுடைய மொத்த வெயிட்டையும் டிக்கெட்டில் சுட்டிக் காட்டினேன். அவர் அதைக் கேட்பதாகயில்லை. நீங்க எமிரேட்ஸ் மேனேஜரிடம் சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என்றார்.

விமானம் கிளம்புவதற்கான‌ நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது. அங்கிருந்து திரும்பவும் எமிரேட்ஸ் ஆபிஸுக்கு ஓடினேன். அங்குச் சென்றால் மேனேஜர், இதுக்குத் தான் சார் நான் சொன்னது நீங்க நாளைக்குப் போங்க! என்று, இப்போது பாருங்க, உங்களுடைய லக்கேஜுக்கு நாங்கள் தேவையில்லாமல் பணம் கட்ட வேண்டி வருகிறது என்றார். அப்போது தான் எனக்குப் புரிந்தது, மூன்று கிலோ என்னிடம் அதிகமாக் இருப்பதற்கு இவர்களிடம் பணம் கட்டவதற்குச் சொல்லுகிறார் என்று. ஒரு வழியாக மேனேஜரும் கையெழுத்துபோட்டுக் கொடுத்துவிட்டார்.

ஒரு வழியாக எல்லாம் முடித்து ஒமன் விமானத்தில் ஏறிக்கொண்டேன். கொடுமையைப் பாருங்கள். தமாமில் இருந்து கிளம்பி துபாய், துபாயில் இருந்து மஸ்கட், மஸ்கட்டில் இருந்து திருவனந்தபுரம். எல்லாப் பயணத்தையும் முடித்துக் காலையில் திருவனந்தபுரம் வந்து இறங்கும் போது காலை எட்டு மணி. ஜெட் ஏர்வேஸில் தினமும் தமாமில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானச் சேவையிருக்கிறது. பெரும்பாலும் நான் அதில் தான் வருவேன், இந்தமுறை தான் ஆபிஸில் உள்ளவர்கள் இப்படி புக்கிங் செய்து சொதப்பிவிட்டார்கள். நான் விமானநிலையத்தில் வந்து இறங்குவதற்கு முன்பாகவே என்னைப் பற்றிய தகவல் திருவனந்தபுரம் ஏர்போட்டில் உள்ள எமிரேட்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நான் இறங்கியவுடன் நீங்கள் தான் ஸ்டீபனா? என்று ஓர் எமிரேட்ஸ் பெண் அதிகாரி ஒரு பெரிய பார்மை கொண்டு நீட்டினார். நான் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டே, எதற்கு என்றேன்? உங்க செங்கிங் பேக்கேஜ் இந்த விமானத்தில் வரவில்லை, அதற்காகத் தான் கம்பிளைன்ட் எழுதவேண்டும் என்றார்.

நல்லவேளையாகக் கேபின் பேக்கிஜில் என்னுடைய டிரஸ் எல்லாவறையும் வைத்திருந்தேன், அதனால் தான் வெயிட் அதிகமாகயிருந்தது, இல்லையென்றால் மாற்றுவதற்குக் கூட‌ டிரஸ் இல்லாமல் தான் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பேன். செக்கிங் பேக்கேஜை இவர்களிடம் இருந்து வாங்கியது ஒரு பெரிய கதை. நேரம் இருக்கும் போது பகிருகிறேன்.

.

Tuesday, April 22, 2014

கண்களை மிரட்டும் மாம்பழங்கள்!!!

நான் இருக்கும் ஏரியாவில் இரு வாரங்களுக்கு முன்பே மாம்பழங்கள் வரத்துத் தொடங்கிவிட்டது. கடந்த சில மாதங்களாக‌ ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நாக்கிற்கு மாம்பழத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்று தோன்றியது. முழுமையான சீசன் ஆரம்பித்திருக்கவில்லை. நாங்கள் வழக்கமாக வாங்கும் பழக்கடைக்காரர் இன்னும் ஒரு வாரம் போனால் தான் சார் மாம்பழம் நல்லாயிருக்கும், இப்போது கிடைக்கிறத வாங்காதீங்க, கல்லைப் போட்டுப் பழுக்க வச்சுருப்பானுங்க! புளிக்கும்! என்று கூறியது மனதில் ஒரு மூலையில் ஒலித்தாலும், தெருவில் புதிதாக முளைத்திருந்த பழக்கடையில் மஞ்சள் கலரில் மாம்பழம் அடுக்கியிருந்தது கண்ணைப் பறித்தது. இங்குப் பழக்கடை மற்றும் காய்கறிக்கடை வைத்திருப்பவர்கள் அவைகளை அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியே நம்மை வாங்குவதற்குத் தூண்டும். எதையும் குப்பையாகக் குவித்துப் போட மாட்டார்கள்.



மாம்பழம் வாங்குவதில் என்னைவிட மனைவி அதிக ஆர்வமாக‌ ஆர்வமாக இருந்தார். எல்லாப் பழமும் ஒரே அளவில் மஞ்சள் மூலாம் சீராகப் பூசியது போன்று இருந்தது. தோலில் பச்சை நிறத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. கிலோ எவ்வளவு என்று கேட்டேன் எண்பது என்று பழக்கடைக்காரர் சொன்னார். இப்போது எல்லாகடைகளிலும் மாம்பழங்கள் குவிந்து இருப்பதால், அதே அளவுள்ள மாம்ப‌ழம் கிலோ முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. ப‌ழக்கடைக்காரர் எடைப்போடும் போது சரியாக ஐந்து மாம்ப‌ழம் நின்றது. வீட்டிற்கு வந்தவுடன் மனைவி முதல் வேலையாக ஒரு மாம்பழத்தில் தோலை நீக்கி விட்டு அதிலிருந்து ஒரு தூண்டை வெட்டி என்னிடம் கொடுத்தார். பழத்தில் இருந்த புளிப்புசுவையால், கீழே படத்தில் உள்ள குழந்தை தனது கண்ணைச் சிமிட்டுவது போல்தான் நானும் சிமிட்டினேன்.


சில மாம்ப‌ழங்கள் புளிப்பாகத் தான் இருக்கும், அந்த மாம்பழங்களின் வெளித்தோற்றத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். புளிக்கும் மாம்பழங்களின் தோல்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த மாழ்பழம் வெளித்தோற்றத்தில் முழுவதும் மஞ்சள் நிறம். எந்த வகையான மாம்பழத்தையும் இயற்கையாகப் பழுக்க வைத்தால் தோலில் பச்சை நிறம் கொஞ்சமாவது இருக்கும். நான் இப்போது வீடுகட்டியிருக்கும் நிலத்தில், ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு முழுவதும் மரமாகத் தான் இருந்தது. அதிலும் மாமரம் மட்டும் சுமார் இருப‌து வகையாவது நின்றிருக்கும். இந்த மரங்களில் காய்க்கும் மாம்பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. எனது தாத்தா அந்தக் காலத்தில் தேடிதேடி ஒவ்வொரு ரகங்களையும் கொண்டு வந்து நட்டதாக அப்பா சொல்லுவார்கள்.

எனது வீட்டில் நின்ற, ஒவ்வொரு வகையான மாமரத்தின் பெயரும், அதன் சுவையும், அந்த மரங்களில் நாங்கள் ஏறி ஆட்டம் போட்டததும் இப்போதும் மனதில் விட்டு நீங்காமல் இருக்கிறது. எனது பழைய வீட்டின் சுவரையொட்டிய‌வாறு இரண்டு மாமரங்கள் இருந்தது, ஒரு வகை மாங்காயின் காம்பின் பக்கம் ஆப்பிளில் இருப்பது போல் குழி விழுந்து உருண்டை வடிவில் இருக்கும், அதனால் இதை நாங்கள் குண்டுகண்ணி என்று அழைப்போம். இன்னொரு வகைக் கிளீமூக்கு மாங்காயின் தோற்றத்தில் சிறிது நீளமாக இருக்கும், இதன் சுவை மாவாகச் சீனியைப் போன்று மிகவும் தித்திப்பாக‌ இருக்கும், அதனால் இதைச் சீனி மாங்காய் என்று அழைப்போம்.

எனது வீட்டின் தென் மூலையில் எலுமிச்சை அளவில் காய்கள் காய்க்கும் இரண்டு ரக மாமரங்களும் இருந்தன. இவை இரண்டிலும் உள்ள பழங்களில் நார்கள் அதிகமாகவும் இருக்கும். மேலும் இந்த மாங்காய் இரண்டும் பழுத்தாலும் காம்பில் இருந்து பால்(சுணை) அதிகமாக வரும், அதனால் அந்தப் பாலை கையால் பிழிந்து வெளியேற்றிவிட்டுதான் சாப்பிடுவோம். இந்த மாங்காய்கள் அளவில் சிறிதாக இருப்பதாலும் பாலின் தன்மை அதிகமாக இருப்பதாலும், மரத்திலிருந்து பறித்துப் பழுக்க வைப்பது கிடையாது. மரத்தில் இருந்து தானாகக் கனிந்து விழும் போது அதையெடுத்துக் கழுவிச் சாப்பிடுவோம்.

கற்கண்டு என்று ஒரு வகையான மாமரம் எனது பழைய வீட்டின் பின்புற வாசலில் நின்றது. அந்த மரத்தில் காய்க்கும் மாங்காயின் தோல் சற்றே தடிமனாக இருக்கும். வடிவில் மாங்காய் என்றால் படங்களில் என்ன அளவில் இருக்குமோ, அதுபோல் நீள அகலங்கள் அளவிட்டு செய்தது போல் இருக்கும். இதன் பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் இளம்சிவப்பாக இருக்கும், சுவைத்தால் உண்மையில் கற்கண்டு போல் அவ்வளவு தித்திப்பாக இருக்கும். இதன் தித்திப்பைப் போன்று இப்போது நான் வாங்கிச் சுவைக்கும் எந்த‌ மாம்பழங்களும் இருந்த‌தில்லை.

கப்பை மாங்காய் என்ற பெயருடன் சில மாமரங்கள் எங்கள் வீட்டில் நின்றது. அதில் மட்டுமே மூன்று வகையான ரகம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் இருக்கும் இதன் சிறப்புக் காயாக இருக்கும் போதே வெளித்தோல் சிவப்பும் பச்சையும் கலந்து இருக்கும். பழுத்தால் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். மரத்தில் இருந்து கனிந்து பழுத்தாலும் புளிப்புச் சுவையுடைய மாங்காயும் எனது பெரியம்மா வீட்டில் இருந்தது. வருக்கை, செங்க வருக்கை என்று இரண்டு வகை மாழ்பழங்கள். இப்படியான மாம்பழங்களின் பெயர்கள் எனது மாவட்டத்தைத் தவிர வேறு எவருக்குமாவது பழக்க பட்டிருக்குமா என்றும் தெரியவில்லை.



இப்போதும் எனது வீட்டில் இருக்கும் ஒரே மாமரம் தண்ணி மாங்காய் என்று எங்களால் அழைக்கப்படுவது மட்டும்தான். இதில் உள்ள மாங்காய் ஒவ்வொன்றும் தேங்காய் போன்று பெரிதாக இருக்கும். பச்சையாக இருக்கும் மாங்காயை வெட்டி வைத்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் ஊறிவிடும், அதனால் தான் தண்ணி மாங்காய் என்று அழைப்போம். பச்சையாகவும் பழமாகவும் சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். கோடையில் காற்றுப் பலமாக அடிப்பதால், தேங்காய் போன்று பெரிதாக இருக்கும் இந்த மாங்காய், கனம் தாங்காமல் காம்பிலிருந்து அறுந்து கீழே விழுந்துவிடும். இதை விளையும் வரை மரத்தில் வைத்துப் பாதுகாப்பது ரெம்பப் பெரிய விசயம்.

மாங்காயை பறித்துப் பழுக்க வைப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. மரத்தில் இருந்து பறிக்கும் போதே அவை கீழே விழாமல் வலையில் பறிக்க வேண்டும். அதன்பிறகு அவற்றின் காம்புகளை உடைத்துப் பால்(சுணை) வழிய‌ வைக்க வேண்டும். வழிந்த‌ பால் மாங்காயில் ஒட்டியிருந்தால் சுத்தமாகத் துணியால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். இவைகளை அடியில் வைக்கோல் பரப்பிய‌ கடவத்தில் அடுக்க வேண்டும். ஒரு வரிசை மாங்காய் அடுக்கிய பின்னர், சிறிது வைக்கோல் வைக்க வேண்டும், அந்த வைக்கோல் மேல் அடுத்த வரிசை மாங்காயை அடுக்க வேண்டும் இவ்வாறு லேயர் லேயராக வைக்கோலும், மாங்காயும் கடவம் முழுவதும் அடுக்க வேண்டும். முழுவதும் அடுக்கியபின் கடவத்தைக் கோணிப்பையைக் கொண்டு மூடி இறுக்கமாகக் கட்டி வைத்துவிடுவார்கள். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் எல்லா மாம்பழங்களும் பழுத்துவிடும். கோடைக்காலத்தில் எங்கள் வீட்டில் கடவம் கடவமாக மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பார்கள்.

எனது வீட்டில் இத்தனை வகையான மாம்பழங்களைப் பார்த்திருந்த போதும் இப்போது நான் காசு கொடுத்து வாங்கும் மாம்பழங்க‌ளைப் போல் வெளித்தோல் இவ்வளவு மஞ்சள் நிறமாக எந்தப் பழமும் இருப்பதில்லை. கலர் அதிகமாக வர வேண்டும் என்பதற்காக‌ கொன்றை மரத்தின் இலைகளைப் பறித்து வைக்கோலுடன் சேர்த்து வைப்போம் அப்போதும் மஞ்சள் நிறமாகத் தோன்றுவதில்லை, சிறிதாக‌ சிவப்பு நிறம் ஆங்காங்கே இருக்கும். கலர் நன்றாக வரவில்லையென்றாலும் தித்திக்கும் சுவை மட்டும் இரட்டிப்பாக இருக்கும்.

ஆனால் இப்போது நான் வாங்கும் மாம்பழங்களில் கலர் மட்டும் நன்றாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது, ஆனால் சுவை?..

இவ்வளவு கலராக இருக்கிறது என்றால் மாம்பழங்கள் நன்றாகப் பழுத்திருக்கிறது என்று தான் நமக்கு நினைக்கத் தோன்றும், ஆனால் வீட்டில் சென்று சாப்பிட்டுப் பார்த்தால் புளிப்பாக இருக்கும். நன்றாக முதிர்ந்த மாங்காய்களைத் தான் இயற்கையாகப் பழுக்க வைக்க முடியும், அதனால் தான் இவற்றின் சுவை தித்திப்பாக இருக்கிறது. நான்றாக முதிராத மாங்காய்களைப் பறித்துச் செயற்கையாகப் பழுக்க வைப்பதால் தான், கலர் மட்டும் வந்துவிடுகிறது, சுவை புளிப்பாக இருக்கிறது.

இன்னும் சில அறிவாளி வியாபாரிகள் மாமரத்தின் பச்சை இலைகள் பறித்து வைத்து அதன் மீது மாம்பழங்களை அடுக்கிவைத்து, கார்பைடுகல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதில்லை இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது என்று சொல்லி, வெளியில் விற்கும் மாம்பழங்களின் விலையை விட அதிக விலைக்கு விற்கிறார்கள். இயற்கையாகப் பழுக்க வைக்கப் பட்ட‌தென்றால் மாங்காய் மட்டும் பழமாக மாறும் போது இலைகள் மட்டும் பச்சையாக எப்படியிருக்கும்? யாரிடம் சொல்வது? யாரிடம் கேட்பது?

சாப்பிடும் பழங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட அழகாகவும், கலராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் மக்களின் மனநிலைகள் மாறத வரை எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழபோவதில்லை.

.

Saturday, April 19, 2014

சனிக்கிழமையானால் சண்டியர்!!!

ஒருவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியான ஆள் எவராக இருக்க முடியும். உழைப்பை சுரண்டுபவர்களைப் பற்றி அறிந்தவர்களால் தான் என்பதில் எவருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. ஆனால் நீ ஒரு கார்பரேட் முதலாளியிடம் பணிசெய்வதால் தொழிலாளர்கள் பற்றிப் பேச உனக்கு உரிமையில்லை என்று சொல்வது எப்படியான வாதம் என்று எனக்குப் புரியவில்லை.

நீ அந்தக் கார்பரேட் அலுவலகத்தில் உழைத்த உழைப்பை வெளிநாட்டுக் கம்பெனிக‌ளிடம் கொடுத்து லட்சம் டாலர்கள் சம்பாதித்துவிட்டு, அதில் வரும் சில லட்சங்களை ரூபாயில் உனக்குக் கூலியாகத் தருகிறார்கள். முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்கள் எப்படிப் புரட்சி, போராட்டம் என்று பேசலாம் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய கூலியை தான் வாங்குகிறோம் என்பதைக் கூட அறியாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?.

நண்பரே! ஓடாத குதிரையை எவரும் வாங்கி ரேசில் ஓட விடுவது இல்லை. வலுவான குதிரையின் மீது தான் பணம் கட்டுவார்கள். அதேபோல் தான் உழைக்காத‌ எவருக்கும் லட்சங்களில் சம்பளங்களை இந்தக் கார்பரேட் கம்பெனிகள் கொடுத்துவிடுவதில்லை என்பதை நண்பர் புரிந்தால் நலம்.

ஒரு பண்ணையாரிடம் பல‌ தொழிலாளிகள் வேலைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பண்ணையார் தொழிலாளிகளிக்கு உரிய ஊதியத்தை கொடுக்காமலும், தொழிலாளிகளின் நலனில் அக்கறையும் இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களை அவரின் கீழ் வேலைச் செய்யும் தொழிலாளிகளை விட எவர் அதிகாமாகத் தெரிந்து வைத்துக் இருக்க‌ முடியும்?. அந்தத் தொழிலாளி வர்கம் பண்ணையாரிடம் வாங்கிய சம்பளத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறது என்ற காரணத்திற்காக, அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களுக்கு எதிராகக் கருத்துக்களோ அல்லது போராட்டங்களே செய்யக் கூடாது என்று சொல்வது என்னவகையான நியாயம்?.

குடிப்பது தவறு என்று சொல்கிறோம். ஆனால் உனக்குத் தான் குடிப்பழக்கமே கிடையாதே, அப்புறம் நீ எல்லாம் எப்படி அய்யா குடிப்பழக்கம் தீங்கு என்று சொல்லவருகிறாய் என்று கேட்பது போல் தான் இருக்கிறது வா. மணிகண்டன் அவர்கள் எழுதியிருக்கும் பதிவு. குடிப்பழக்கத்தின் கொடுமையை ஒருவர் அனுபவித்துத் தான் அறியவேண்டும் என்றில்லை. அதன் வீச்சுச் சமூகத்தில் எத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற‌து என்பதைச் சிந்திக்கச் சிறிய அளவு மூளை இருந்தால் போதுமானது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த பல வகையான போராட்டங்களில் பெரியளவில் கவனத்தில் ஈர்த்தது காந்தியடிகளின் "ஒத்துழையாமை இயக்கம்". வரலாற்றைப் படித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். அப்படியானால் ஆங்கிலேயர்களில் கீழ் வேலைப்பார்த்துவிட்டு, அவர்களிடம் ஊதியமும் வாங்கிவிட்டு எப்படி அய்யா? இந்தப் போராட்டத்தை நடத்துகிறீர்கள் என்று கேட்பதற்கு ஒப்பாகும் உங்களின் இந்த‌ப் பதிவு.

நானும் முழுமையாகக் கம்யூனிசத்தைப் படித்தவன் இல்லை. எல்லா இசங்களையும் கரைத்து குடித்தவனும் இல்லை. ஏதோ பொதுவுடமை தத்துவ நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொள்கை இல்லாத வழ்க்கை என்பது உயிர் இல்லாத உடம்பு போன்றது என்பதை முழுமையாக நம்புப‌வன். கொள்கைகள் மட்டும் தான் எந்தவொரு சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் என்று இன்றும் ந‌ம்புப‌வன். தனிமனித துதிபாடல்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை, மக்களால் தூக்கியெறியப்படும்

சில ம‌னிதர்களைக் குறிவைத்து எழுதிய பதிவாக எனக்குத் தெரியவில்லை. அப்படியாகயிருந்தால் அவர்களின் பெயர்களையோ, தளங்களையோ சுட்டி எழுதியிருப்பார். ஆனால் போகிற போக்கில் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவனெல்லாம் கம்யூனிசத்தைப் பற்றிப் பேசுவதா? என்று தலையில் குட்டு வைத்துவிட்டு செல்வதால் தான் இந்த ப‌திவு எழுத தேவையாயிற்று.



.

பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்! அப்ப பெண் வேட்பாளர்கள்?

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் எவருக்கும் மறுப்பு இருக்காது. சுதந்திரம் அடைந்து அறுபத்தி ஏழு ஆண்டுகள் கடந்து வந்துவிட்டோம். பெண்களின் சமூக‌ உரிமைகளையும், அரசியலில் அவர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் சுதந்திரபோராட்டக் காலத்திலேயே காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பேசியுள்ளனர். பதினைந்து முறை நாடாளுமன்ற தேர்தல்களையும் நடத்தி முடித்துவிட்டோம். கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த‌ பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 61/543. சதவீத எண்ணிக்கையில் பார்க்கும் போது 11.23%. 39 தொகுதிகள் கொண்ட‌ தமிழ்நாட்டில் இருந்து கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்திடுக்கப்பட்ட பெண் எம்பி ஒருவர் மட்டும் தான், அவரும் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தமுறை அந்த ஒன்றாவது வருமா? என்பது கேள்விக்குறி தான்.

Thursday, April 17, 2014

கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம்_சிரிங்க! முடியலைனா சிந்தியுங்க!

மு.க.ஸ்டாலின்(திமுக): 

அதிமுகாவிற்கும், பிஜேபிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது உண்மை. துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு உற்ற நண்பர். அவர் சொல்லுவதைத் தான் கேட்பார். ஆட்சி அமைத்தவுடன் அவரைப் போய்ப் பார்த்தாரா இல்லையா?. நீங்கள் எல்லோரும் பத்திரிக்கையில் போட்டோ பார்த்திருப்பீர்கள். எனக்கும் அவர் நண்பர் தான், ஏன் நம்முடைய‌ தலைவர் கலைஞருக்கும் நண்பர் தான். அவருடைய வீட்டுக் கல்யாணத்திற்குக் கூடத் தலைவர் போயிருந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து சோ அழைப்பிதழ் தந்ததால் கலைஞர் நேரில் சென்று வாழ்த்தினார். கலைஞர் வந்திருக்கிறார் என்பதாலேயே ஜெயலலிதா அந்தக் கல்யாணத்திற்கு வரவில்லை.

டிஸ்கி: தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவ‌னுக்கு வந்தால் தக்காளி சட்னி, இந்த அப்ரோச் ரெம்ப நல்லயிருக்கு.

ஜெ.ஜெயலலிதா(அதிமுக): 

மாநிலத்தில் போதுமான அளவு மின் உற்பத்தியிருந்தும், செயற்கையாக மின் தட்டுப்பாடு ஏற்படுத்த சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. அவர்களை இனம் கண்டு கடுமையாகத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி: என்னது கிணத்தைக் காணுமா?.. தெளிவா சொல்லுங்க கிணத்தைக் காணுமா?.. இல்ல, கிணறுப் பக்கத்தில் இருந்த பம்புச் செட்டைக் காணுமா?..

விஜயகாந்த(தேமுதிக): 

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது மக்களே, ஆனால் விவசாயத்திற்கு வளர்ச்சிக்கு ஏன் நிர்ணயிக்கப் படவில்லை. மக்களே! தமிழ் நாட்டில் டாஸ்மாக் வேணுமா? வேணாமா?

கூட்டத்தில் உள்ள மக்கள் வேண்டாம்! வேண்டாம்!..

நீங்க எல்லாம் டாஸ்மாக் "வேண்டாம்!" என்று சொல்வதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்திருச்சு மக்களே, அதனால் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்திடுச்சு, கொஞ்சம் இருங்க மக்களே, துடைச்சுக்கிறேன்.

தான் போட்டிருந்த கருப்புக் கண்ணாடியைக் கழற்றிச் சிரித்துக்கொண்டே கையில் இருந்த கைக்குட்டையால் கண்ணீரை துடைப்பது போல் நடித்துக் கண்பிக்கிறார்.

டிஸ்கி: இவரு இன்னும் கேமாரா முன்பு நடிப்பதை மறக்கவில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

வை.கோ.(மதிமுக): 

மேடையில் பேசும் போது தொடர்ச்சியாக இருமிக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. அருகில் இருக்கும் தொண்டர்கள் தண்ணீர் வேண்டுமா? என்று கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்ல கனைக்சன் சரியில்லை, ஏதோ பண்ணுகிறார்கள்(ஒரு வேளை சூனியம் வைச்சிருப்பாங்களோ).

இந்த மைக் கனைக்சன் வழியாகக் கரண்ட் பாசாகி ஏதோ வந்து எனது தொண்டையை அடைக்கிறது. அதனால் தான் என்னால் பேச முடியாமல் இருமல் வருகிறது. சிறிது நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "மைக் செட் சூப்பர்" என்று சொல்லி முடித்தார்.

டிஸ்கி: கூடவே நல்ல மலையாள மந்திரவாதியை வச்சுகிறது நல்லது. சூனியத்தை எடுக்குறதுக்காவது உதவும்.

பொன்.ராதாகிருஷ்னன்(பிஜேபி): 

வைகேவிற்காக‌ விருதுநகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த‌ பொன்னார் அவர்கள், மக்களைப் பார்த்து உங்களுடைய வாக்குகளை எல்லாம் நம்முடைய தாமரை சின்னத்திற்குத் தாருங்கள்! தாருங்கள்! என்று பேசியபோது பக்கத்தில் இருந்த வைகே, பொன்னாரில் காதில் தாமரை இல்லை, பம்பரம் பம்பரம் என்று கத்தினார்.

சுதாரித்த பொன்னார், குஜராத்தில் ஒரு மோடியைப் போல், தமிழ்நாட்டில் நான் வைகோவை பார்க்கிறேன், அதனால் தான் தாமரை சின்னம் என்று கூறினேன் என்று சமாளித்தார். வைகோவும் கூச்சமே இல்லாமல் சிரித்துகொண்டிருந்தார்.

டிஸ்கி: பொன்னார் அமைத்திருக்கும் (விஜயகாந்த்)கூட்டணியின் காத்துப் பலமாக அடிக்கிறது போல.. அதான் இப்படி உளற வேண்டியதாயிற்று.

கார்த்திக் சிதம்பர‌ம்(காங்கிரஸ்): 

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மத்திய அரசு 148 ரூபாய்க் கொடுக்கிறது, ஆனால் உங்களுக்கு 100 ரூபாய் தான் கொடுக்கிறார்கள். மீதியை இங்கு ஆளும் அரசு கொள்ளைய‌டிக்கிறது.

உங்க பையன் வெளிநாட்டில் இருந்து 2000 ரூபாய் அனுப்புகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் போஸ்ட மேன் உங்களிடம் 1000 ரூபாய் தான் தருகிறான் என்றால் யாரைடைய குற்றம்?..

மக்கள் எல்லோரும் "போஸ்ட் மேனின் குற்றம்" என்று குரல் கொடுக்கிறார்கள்.

அதனால் தான் சொல்கிறேன் மக்களே, தவறு யார் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இவைகளைச் சரிசெய்ய‌ அதிகார‌த்தை எங்களுக்குத் தாருங்கள் என்று தான் உங்களிடம் கேட்கிறேன்.


டிஸ்கி: அப்படினா இப்பவரைக்கும் உங்க அப்பா தானே ஆட்சியில், அதிகார‌த்தில் இருக்கிறார். அப்படியிருந்தும் முழுமையான பணம் கிடைக்கவில்லையே! இதை யாரிடம் சொல்வது கார்த்திச் சார்?...

வானதி சீனிவாசன்(பிஜேபி): 

தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாமல் அனைவரும் இருளில் வாழ்கிறோம். விவாசாயிகள் கஷ்டப் படுகிறார்கள். சிறு தொழில் செய்வேர் தொழில் நடத்தமுடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் குஜராத்தை பாருங்கள், பதினேழு மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கிறார்கள். அதைப்போல் திரு.நரேந்திர‌ மோடி அவர்கள் பிரதமராக வந்தால் பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ்க்கு என்ன, சீனாவிற்கே மின்சாரம் விற்க முடியும்.

டிஸ்கி: நீங்க இப்படி இங்க கொடுக்கும் வாக்குறுதிகளைச் சீனாக்காரன் கேட்டால் எப்படிச் சிரிப்பான் என்று தான் தெரியவில்லை.

நடிகர் சிங்கமுத்து(அதிமுக):

நான் விஜயகாந்தைப் பார்த்து ஒண்ணோ ஒண்ணு மட்டும் கேட்கிறேன். வீதியில நின்னுட்டு எந்தப் பக்கம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று திசைகளை மட்டும் சரியா சொல்லிட்டாருனா, நான் இந்தியாவை விட்டே போயிடுறேன். ஆமாய்யா! இது சத்தியம்!!..

டிஸ்கி: இந்தக் கொடுமையெல்லாம் யாரோட தலையில‌ போய் அடிச்சுக்கிறது!

நடிகர் ராஜேந்திரன்(தேதிமுக):

நாற்பதுக்கும் நாற்பதாம், யாருகிட்ட சொல்லுறீங்க?.. அப்படி அதிமுக‌ மட்டும் நற்பதுக்கு நாற்பது ஜெயித்துவிட்டால் ஒரு பக்கத்து மீசைய எடுக்குறேன். இது சவாலு தான்.

டிஸ்கி: மீசைக்குப் பாதிப்பு இல்லையென்று தெரிந்து தானே அடிச்சுவிடுறீங்க..

நடிகர் கார்த்திக்(காங்கிரஸ்):

நம்ம காங்கிரஸை தவிர, எந்தக் கட்சிக்கு நாட்டை ஆளா தகுதி இருக்கிறது என்று நான் கேட்கிறேன். யாரையும் தவறாக‌ பேசக்கூடாது, மோடி வேண்டுமானால் என்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்த வரட்டும். எல்லாவற்றிற்கு என்னால் பதில் சொல்ல முடியும். என்னைத் தேர்தலில் நிற்பத‌ற்கு சொன்னார்கள், ஆனால் நான் தான் வேண்டாம் என்று மறுத்தேன். காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவது தான் என்னுடைய குறிக்கோள். அதற்காகத் தொடந்துப் பிரசாரம் செய்வேன்.


டிஸ்கி: நீங்க வேற அப்ப அப்பப்ப வந்து கிச்சுக் கிச்சு மூட்டுறீங்க.. என்ன! மக்களால் சிரிக்கத் தான் முடியவில்லை.

.

Wednesday, April 16, 2014

சூடு கண்ட பூனையாய் நான்_தேங்காய் சிதறல்!!!

சூடு-1: தேங்காய் சிதறல்

எனது மாவட்டம் முன்பு கேரளாவோடு தொடர்பு இருந்ததாலோ என்னவோ, எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள், எந்த‌க் குழம்பு வைத்தாலும் தேங்காய்ச் சேர்க்காமல் இருக்க மாட்டார்கள். என‌து மனைவியிடமும் தேங்காய் இல்லாமல் ஒரு குழம்பு வை என்றால் முழிக்கத் தான் செய்வார். அதனால் எங்கள் இருவருக்கு மட்டுமே ச‌மையல் செய்தாலும், வாரம் இரண்டு தேங்காயாவது செலவு ஆகும். அதனால் ஊரிலிருந்து எப்போது வந்தாலும் ஓர் அட்டைப்பெட்டியில் தேங்காய் எடுத்துவர மறப்பதில்லை.

சமையலுக்குத் தேவையான தேங்காயை என்றைக்குமே மனைவி தான் இரண்டாகப் பிளைப்பார். அவர் கொஞ்சம் மெதுவாக டொக், டொக் என்று பலதடவை வெட்டுக்கத்தியால் எல்லாபுறங்களிலும் வெட்டி சரிசமமாக இரண்டாகப் பிளந்துவிடுவார். அன்றைக்கு ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் வீட்டில் ஹாலில் அமர்ந்து டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவி தேங்காய் உடைப்பதற்கு டொக்..டொக் என்று வெட்டத் துவங்கினார். நாம் வீட்டில் இருக்கும் போது மனைவி தேங்காய் உடைப்பதா? என்று கடமையுணர்ச்சிப் பொங்கலுடன் கிச்சனுக்குச் சென்று மனைவிடம் இருந்த தேங்காயை வாங்கினேன்.

அவர் வேண்டாம் உங்களால் சரியாக உடைக்க முடியாது, நானே உடைத்துக் கொள்கிறேன், நீங்க போய் எப்பவும் போல் டீவியைப் பாருங்க என்று என்னிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். பிளாக் பண்ணிய வெப்சைட்டேயே ப்ராக்ஸிப் போட்டு உடைக்கிறோம், இதைச் செய்ய மாட்டோமா? என்று மனைவியை ஒரு நக்கல் பார்வையால் பார்த்துக் கொண்டே தேங்காயை உடைக்கத் தயாரானேன்.

தேங்காய் எப்போதும் வாங்குவதை விட அளவில் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. தேங்காய் எப்படி உடைக்க வேண்டும் என்று தெரியுமா? இப்படி உடைக்க வேண்டும்! என்று மனைவியைப் பார்த்துக் கொண்டே தலைக்கு மேல் வெட்டுக்கத்தியை ஓங்கி முதல் வெட்டை தேங்காயின் மீது போட்டேன், அந்த வெட்டு தேங்காயின் நடுவில் விழாமல் ஓரமாக விழுந்து தொலைத்தது. வெட்டு சரியா விழவில்லை! என்று மனைவியைப் பார்த்து வழிந்துவிட்டு, இரண்டாவது வெட்டை போட்டேன். வெட்டிய வேகத்தில் தேங்காயில் மேல் உள்ள ஒரு சிறு துண்டு சிரட்டை பாய்ந்து வந்து நெற்றியைப் பதம் பார்த்தது. சுர்ரென்று எரிச்சலுடன் வந்த வலியை வெளிக்காட்டாமல் தேங்காயைப் பார்த்தேன். இப்போது விழுந்த வெட்டு முன்பு விழுந்த வெட்டிற்கு எதிர் பக்கத்தில் தேங்காயின் ஓரமாக விழுந்து சிரட்டையைச் சிராய்த்திருந்தது. அந்தச் சிராய்த்த சிரட்டைத் துண்டுதான் என் நெற்றியைப் பதம் பார்த்திருக்க வேண்டும்.

இந்த முறையும் தேங்காயுடன் மோதியதில் நாக்அவுட் ஆனதால், மனைவியின் முகத்தைப் பார்க்காமல் கோபத்தில் இன்னும் வலுவாக ஓங்கி மூன்றாவது வெட்டை குறிப்பார்த்து நடுவில் போட்டேன். வெட்டு எங்கு விழுந்தது என்று பார்பதற்குள் கையிலிருந்த தேங்காய் நான்கு பகுதியாக உடைந்து, ஆளுக்கொரு திசையாகப் பலமான சத்ததுடன் போய் விழுந்தது. வடிவேலு ஒரு படத்தில் தன்னுடைய மனைவியிடம் சண்டையிடும் போது அங்க என்னமா சத்தம்! என்று முறுக்கு மீசை மாமானார் வீட்டில் கீழிருந்து கேட்பது போல, எங்களுடைய ஹவுஸ் ஓனர் ஆன்டியும் அங்க என்னமா சத்தம் என்று கீழிருந்துக் குரல் கொடுக்க, என்னுடைய மனைவி வெளியில் சென்று ஒண்ணும் இல்ல ஆன்டி, தேங்காய் உடைக்கும் போது கைத் தவறிக் கீழே விழுந்துவிட்டது என்று சமாளித்து வந்தார்.

நான் மெதுவாக‌ உடைத்திருந்தாலும் இரண்டு பாகமாக உடைத்தியிருப்பேன். இப்படி நான்கா உடைத்து போட்டிருக்கீங்க?. இதைத் துருவலில் வைத்து எப்படித் துருவது? என்று என்னை முறைக்க ஆரம்பித்தாள் மனைவி.

இவ்ளோ பன்ணிட்டோம்! இதைப் பண்ண மாட்டோமா! என்று மனைவின் கையிலிருந்த தேங்காய் துண்டுகளையும், கத்தியும் எடுத்துக் கொண்டு போய் ஹாலில் உக்கார்ந்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட‌த் துவங்கினேன். ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டீவியில், டேய்!! சின்னப் பேச்சாடா பேசினா! இதுவும் வேணும்! இதுக்கு மேலும் வேணும்! என்ற வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடி ஆதித்யா சேனலில் போய்க்கொண்டிருந்தது.



குறிப்பு: இந்தத் தலைப்பில் அவ்வப்போது மேலும் சில‌ சிறுகதைகள் வரும். அதனால் தான் சூடு-1 என்று இதற்குச் சப் டைட்டில் போட்டிருக்கிறேன்.

.

Monday, April 14, 2014

இன்றைய சூழ்நிலையில் பசுமாடு வளர்ப்பது என்பது?.

கடந்தவாரம் வீட்டிற்கு அலைப்பேசியில் அழைத்துப் பேசிய போது அப்பா, அம்மா, அண்ணன் உட்பட‌ எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னது நம்முடைய‌ பசுமாடு கன்று ஈன்றுருக்கிற‌து என்பது தான். எங்கள் வீட்டில் பெரும்பாலும் பசுமாடு ஒன்று எப்போதும் இருக்கும், அதுவும் பால் கற‌க்கும் பசுமாடாகத் தான் இருக்கும். என்னுடைய‌ அப்பா சவுதியில் ஓர் ஆறு வருடங்கள் கட்டிட‌ வேலை செய்து இருப்பார்கள். அப்போது நான் பள்ளியில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்திருப்பேன். அதன் பிறகு அப்பா வெளிநாட்டிற்குப் போகவில்லை. ஊரில் ஏதாவது தொழில் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு சவுதியை அப்போதே கைக் கழுவி விட்டார்கள். ஊரில் வந்தும் பல தொழில்களைச் செய்தார்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. ஆறு வருடங்கள் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் கடனாளியாகவும் ஆகிப் போனார்கள்.

அப்பா வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே வீட்டில் பசுமாடு வாங்கி வளர்க்க ஆரம்பித்திருந்தார்கள். எனக்கும் அண்ணனுக்கும் பள்ளி விடுமுறை நாட்களில் இதற்குப் புல் பறித்து வந்து போடுவது தான் வேலை. புல் பறிப்பதற்கு என்று இரண்டு, மூன்று மைல்கள் நடந்து போவதும் உண்டு. என்னுடைய‌ பெரியப்பா வீட்டில் ஆடுகள் வளர்ப்பார்கள், அதனால் அவைகளுக்கு வேண்டிய தழைகளை வெட்டுவதற்குப் பெரியப்பா வாரம் ஒருமுறை ஆணைக்கிடங்கு மலைக்குச் செல்வது உண்டு. நாங்களும் அவருடன்  புல்லறுப்பதற்கு மலைக்குச் செல்வது உண்டு.

1994‍-ஆம் ஆண்டு வாக்கில் அரசாங்கத்தால் சாண எரிவாயுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதை அமைப்பவர்களுக்கு மானியமும் வழங்கியது. எங்கள் வீட்டிலும் தொடர்ந்து பசுமாடுகள் இருந்து வந்ததால் சாண எரிவாயுக் குழாய் அடுப்பு எங்கள் வீட்டில் வைக்கப்பட்டது. இடையில் சிறிதுக் காலம் அம்மாவுக்கு உடல்நிலைச் சரியில்லாத போது எங்கள் வீட்டில் பசுமாடுகள் வளர்க்கப்படவில்லை. அந்த நேரத்தில் இந்தச் சாண எரிவாயுக் குழாயை மூடிவிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பசுமாட்டை எப்படிப் பராமரிக்க வேண்டும் மற்றும் அவைகளுக்குத் தேவையான உணவுகள் எவை மற்றும் எப்போது அவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் அறிந்துவைத்திருந்தோம்.

எங்கள் வீட்டில் நான், அண்ணன், அக்கா உட்பட அனைவருக்கும் பசுவின் பாலைக் கறப்ப‌தற்கும் தெரியும்.(இப்போதும் என்னால் முடியுமா?..) ராமராஜன் படத்தில் காட்டுவது போல் பால் கறப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. எங்கள் வீட்டில் இருக்கும் பசுமாடு ஒரு நேரம் குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டர் பால் கறக்கும். ஒரு கையால் பால் கறந்தால் அரை லிட்டர் பாலைக் கறப்பத‌ற்குள் பெருவிரல் வலிக்கத் தொடங்கிவிடும். நான்கு காம்புகளையும் மாற்றி மாற்றித் தொடர்ச்சியாகக் கறக்க வேண்டும். ஒற்றைக் காம்பை மட்டும் கறந்து கொண்டே இருந்தால் மற்றக் காம்பில் இருக்கும் பாலை, பசு உள்ளே எக்கி இழுத்துக் கொள்ளும். அதனால் அதிகப் பால் கறக்கும் மாடுகளில் இரண்டு காம்புகளையும் ஒரு நேரத்தில் இரண்டு கைகளால் கறக்க வேண்டும்.

பசுமாடுகள் தொடச்சியாகப் பால் தருவது இல்லை. எனவே எங்கள் வீட்டில் எப்போதும் இரண்டும் பசுமாடுகள் இருக்கும். ஒரு பசுமாடு சினையாக இருக்கும் போது இன்னொரு மாடு பால் கொடுக்கும். நம்மிடம் பால் வாங்குபவர்களுக்குத் தொடச்சியாகப் பால் கொடுக்க வேண்டுமானால் இரண்டு பசுமாடு வைத்திருப்பது தேவையாக இருக்கும். ஒரு பசுமாடு சினையாக இருக்கும் போது ஆறு முதல் ஏழு மாதம் பால் கறக்க முடியும், அதன் பிறகு கறக்க முடியாது. இந்தக் காலக் கட்டத்தில் நம்மிடம் பால் வங்குபவ‌ர்களுக்குப் பால் இல்லை என்று சொல்லிவிட்டால் அவர்கள் வேறு யாரிடமாவது வாங்குவதற்குத் துவங்கிவிட்டால் பின்பு நமது வீட்டில் உள்ள பசுமாடு கன்று ஈன்றபின்பு அவர்களைப் பால் வாங்க அழைக்க முடியாது. அந்தக் காரணத்திற்காவது எங்கள் வீட்டில் இரண்டு பசுமாடுகள் வைத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.

எப்படியும் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டில் உள்ள இரண்டு பசுமாடுகளில் ஏதாவது ஒன்று கன்று ஈனும். அந்த‌ கன்றுகுட்டியை பாரமாரிப்பதற்கு வீட்டில் எங்கள் மூவருக்கும் போட்டிதான் நடக்கும். மேலும் கன்று ஈன்ற இரண்டு நாட்களில் பசுவிலிருந்து கிடைக்கும் பாலில் அம்மா செய்துதரும் சீம்பாலின் ருசியும் தனிதான்.

சில வருடங்களாக அப்பா, வீட்டில் இரண்டு பசுமாடுகள் வைத்துப் பராமரிப்பது கஷ்டம் என்று ஒரு பசுமாடு தான் வளர்த்து வருகிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பெல்லாம் பால் விற்பது என்பது எளிது, எவருக்கெல்லாம் வேண்டுமோ, அவர்களே எங்கள் வீடுகளுக்கு வந்து வாங்கிக் கொள்வார்கள். இப்போது அப்படியில்லை, பாக்கெட்களில் கிடைக்கும் பால்களை வீடுகளில் கொண்டு போடுவதால் அதைதான் விரும்புறார்கள். வீட்டில் வளர்க்கும் பசுமாடுகளின் பால்களையும் அப்படியே வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்கிறார்கள். கறந்த நுரையுடன் கிடைக்கும் பசும்பாலுக்கும், பதப்படுத்தப்பட்டுப் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் கவர் பாலுக்கும் உள்ள வித்தியாசம் இந்தக் காலத்து அர்ஜூன் அம்மாகளுக்கு எங்குத் தெரியப்போகிறது. மேலும் மாட்டுத் தீவனங்களின் விலையும், புண்ணாக்குகளின் விலையும் மிகப் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ள‌து.

இப்போது வயல்களில் மெஷின்களின் மூலம் அறுவடைச் செய்வதால் வைக்கோல்கள் எல்லாம் குறும்பாகத் தான் கிடைக்கிறது. அவைகளின் விலையும் பசுமாடுகளுக்கு முன்னால் போடுவது போல் இல்லாமல் பின்னால் போடுவது போல் தான் இருக்கிறது. முன்பெல்லாம் பசுமாடுகள் போடும் சாணங்களை விற்றுக் கிடைக்கும் பணத்திலேயே வைக்கோல் வாங்கிவிட முடியும். இன்று எவரும் இயற்கை உரங்களை வயல்களுக்குப் போடுவது இல்லை. எல்லோரும் செயற்கை உரங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அப்படியே வயல் வைத்திருப்பவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வது வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேங்கிறது. அப்புறம் எங்க, இந்தச் சாண உரங்களைக் கொண்டுபோய் வயல்களில் கொட்டுவது? என்பது தான். எனது வீட்டிலும் கடந்த ஒரு மாதமாக எருக்குண்டில் இருக்கும் சாணத்தை விற்க முடியவில்லை என்று அப்பாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

காலை ஐந்து மணிக்கு எல்லாம் அப்பா எழுந்து பால் எடுத்துவிடுவார்கள். பின்பு அந்தப் பசுமாட்டைக் கழுவுதற்குக் குளத்திற்கு அழைத்துச் செல்வார்கள். வரும்போது அம்மா காபிப் போட்டு ரெடியாக வைத்து இருப்பார்கள். அதைக்குடித்து விட்டு, பசுமாட்டுக்குத் தேவையான புண்ணாக்கு மற்றும் தீவனங்கள் கலந்து தண்ணீர் கொடுத்து, மாட்டுத்தொழுவத்திலுள்ள சாணங்களைச் சுத்தம் செய்து, அவைகளுக்குத் தேவையான புல் மற்றும் வைக்கோல் வைத்துவிட்டு வீட்டிற்கு டிபன் சாப்பிட வரும் போது மணியானது பத்தைத் தாண்டியிருக்கும். அவசர அவசரமாக டிபனைச் சப்பிட்டுவிட்டு உடனடியாகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு புல்ல‌றுப்பதற்குக் கிளம்பி விடுவார்கள். வைக்கோல் மட்டுமே போட்டு வளர்க்க வேண்டுமானால் கணிசமான தொகையை வைக்கோலுக்குச் செலவு செய்ய வேண்டிவரும். மேலும் பசும்புல் உணவாகப் பசுமாடுகளுக்குக் கொடுத்தால் நமக்குக் கொஞ்சம் அதிகமாகப் பால் கொடுக்கும். அதனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அப்பா புல்ல‌றுக்கக் கிளம்பிவிடுவார்கள்.

காலையில் புல்லறுக்கச் சென்ற அப்பா மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் வருவார்கள். அப்பா வீட்டிற்கு வருகிறார் என்பதைப் பசுமாடுகளே குரலெழுப்பிக் காட்டிக்கொடுத்துவிடும். இத்தகைய‌ மோப்ப சக்தி மாடுகளுக்கும் உண்டு. அவை குரலெழுப்பிச் சமிக்ஞைச் செய்வது மதிய உணவிற்கு தான். அவைகளுக்குத் தேவையான புல் மற்றும் வைக்கோல் வைத்துவிட்டுதான் மதியச் சாப்பாட்டில் அப்பா கை வைக்கமுடியும். சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் தூங்குவார்கள். திரும்பவும் மாலையில் பால் எடுப்பது மற்றும் மாட்டுத்தொழுவத்தைச் சுத்தம் செய்வது என்று காலையில் செய்த‌ எல்லா வேலையும் திரும்பவும் இருக்கும்.

சில வருடங்களாக எங்கள் வீட்டில் பசுமாடுகள் கன்றுகள் ஈனும் வரை வைத்துருப்பது கிடையாது. வத்தும் பால்(கன்று ஈன்று சில மாதங்கள் ஆகியது) பசுமாட்டைத் தான் சந்தையில் இருந்து அப்பா வாங்கிவருவார்கள். அதைச் சில மாதங்கள் வளர்ப்பார்கள். அந்தப் பசுமாட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கும், வெளியில் சிலருக்கும் கொடுக்குமள‌விற்கும் பால் கிடைக்கும். சந்தையில் இருந்து வாங்குவதால் அது சினையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு, வாங்கிய சில மாதங்களிலேயே டாக்டரை அழைத்து வந்து பரிசோதனை செய்வார்கள், சினையாக இருந்தால் எத்தனை மாதம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்வார்கள். சினையில்லை என்றால் சினைக்கு அழைத்துச் செல்வார்கள். சினையிட்டு ஒன்பது மாதம் வரை வளர்ப்பார்கள்.

பசுமாடுகள் சினையிடப்பட்ட ஐந்து அல்லது ஆறு மாதங்களிலிருந்து பால் எடுக்க முடியாது. எனவே அப்பா இந்த இடைப்பட்ட காலத்தில் பாலுக்காக இன்னொரு வத்தும் பால் பசுமாட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள். சினையாக இருக்கும் மற்றொரு பசுமாட்டைச் சரியாக ஒன்பதாவது மாதத்தில் நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள். ஒன்பதாவது மாதத்தில் பசுமாட்டை நல்லவிலைக்கு விற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. என்ன கன்று ஈனும் என்பதும், எவ்வளவு பால் கொடுக்கும் என்பதும் நாம் உறுதி செய்து கொடுக்க வேண்டியது இல்லை. அதனால் பெண் கன்றாக இருக்கும், அதிகமாக‌ பால் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை சொல்லி அதிக விலை விற்க முடியும். கன்று ஈன்ற பின்பென்றால் இவையிரண்டையும் பொறுத்து விலையின் ம‌திப்பு குறையும்.

கடந்த சில வருடங்களாக எங்கள் வீட்டில் பசுமாட்டைக் கன்று ஈனும் வரை வைத்திருப்பது கிடையாது என்று சொல்லியிருக்கும் நான், முதல் பத்தியில் கடந்த வாரம் எங்கள் வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது என்று சொல்லிருக்கும் முரண்பாட்டிற்குக் காரணம் அம்மா தான்.



எப்போதும் சரியாகப் பசுமாட்டின் சினை மாதங்களைக் குறித்து வைத்துக் கொள்ளும் அம்மா இந்தமுறை கோட்டை விட்டுவிட்டார்கள். ஒரு மாதம் குறைத்துக் கணக்கு வைத்து விட்டார்கள். அதனால் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பசுமாடு கன்று ஈன்றுவிட்டது, அதுவும் பெண் கன்றுக்குட்டி. சில வருடமாக எங்கள் வீட்டில் உள்ள பசுமாட்டைக் கன்று ஈன்று விடுவதற்கு முன்பாகவே விற்றுவிடுவதால் கன்று வளர்ப்பு என்பது சில வருடங்கள் இல்லாமல் இருந்தது. அதனால் இந்தமுறை இந்தப் பசுமாட்டையும், கன்றையும் விற்க வேண்டாம், வளர்க்கலாம் என்று எல்லோரும் முடிவெடுத்துவிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் பசுமாடு வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன‌?.

.

Saturday, April 12, 2014

சொம்பு அடிக்கத் தீயா வேலைசெய்யணும் குமாரு!!!

1) புராஜெக்ட் மீட்டிங் என்று சொன்னவுடனேயே மேனேஜர் பேசுவதற்கு முன்னால் இருக்கும் செயரில் போய் அமர்ந்து கொள்ளவேண்டும். முக்கியமாக மேனேஜர், ஐ அம் கரெக்ட என்று கேட்பது நம்மைப் பார்த்துக் கேட்பதாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும். அப்படி அவர் கேட்கும் போது அவர் சொன்னது புரிஞ்சுதோ இல்லையோ எஸ் சார், யூ ஆர் கரெக்ட் என்று பெரிசா தலையை ஆட்டி வைக்க வேண்டும். அப்போதே அவர் கவனம் உங்க மேல பட்டுவிடும்.

2) புராஜெக்ட் மீட்டிங் நடந்து கொண்டிருக்குப் போது, எல்லாம் தெரிஞ்சவனே மூடிக்கிட்டு அமைதியாக இருக்கும் போது, நாம் மட்டும் பெருசா சவுண்டை கொடுக்கணும். சொல்லுறது தப்பா இருந்தாலும் அதுக்கு ஒரு பீட்டர் இங்கிலீஸ்ல ஒரு வெளக்கெண்ணை விளக்கம் கொடுக்கணும். மேனேஜர் பேசும் போது, ஒவ்வொரு சென்டென்ஸையும் அவரு முடிக்குப் போது நாமளும் எல்லாம் தெரிஞ்ச‌ ஏகாம்பர‌ம் போல முடிக்கிற வார்த்தையை மட்டும் சவுண்டா சொல்லி முடிக்கணும்.

3) பண்ணுற புராஜெக்ட்ல ஏதாவது தப்பு நடந்து பிரச்சனையாகி, மேனேஜ‌ர் அழைத்து திட்டும் போது, தப்பித் தவறி கூட எதிர்வினை ஆற்றிவிடக்கூடாது. முகத்திலேயே குத்தினாலும் வலிக்காத மாதிரியே முகத்தை வச்சுக்கனும். எல்லாம் திட்டி முடிச்சதுக்கு அப்புறம், அவருகிட்ட போயி "சாரி சார், அடுத்த முறை அதை நால மடிச்சு எட்டா அடுக்கி வைப்பேன்" என்று வழிய வேண்டும். ரெம்ப முக்கியமானது, அறையை விட்டு வெளியே வரும் போது மேனேஜருக்கு நன்றி சொல்ல மறந்துவிடக் கூடாது. இதை ஏன் ரெம்ப முக்கியம் என்று சொல்கிறேன் என்றால் நீங்க திட்டியது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுவதற்கு.(சுரணையில்லை என்பதை நாசுக்கா எப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு).

4) எல்லா ஆபிஸுலும் நால்லா வேலை செய்தும், மேனேஜருக்குப் பிடிக்காமல் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். அவனை முதலில் தேடி அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும். அப்புறம் என்ன!! புராஜெக்ட்டில் என்ன தவறு நடந்தாலும் அவன் மீது பழியைப் போட்டு ஒன்றுக்கு நாலாக மேனேஜ‌ரின் அறைக்குச் சென்று வத்தியை வைக்க வேண்டும். முடிந்தால் அவனுடைய பிர்சனல் விசயங்களையும் ஸ்பை மூலம் அறிந்து மேனேஜருக்கு அவ்வப்போது சுவாரசியமாகப் பரிமாற வேண்டும்.

5) ஆபிஸுக்கு மேனேஜர் வருவதற்கு முன்பாகவே நாம் ஆபிஸுக்கு வந்துவிட வேண்டும், தப்பித் தவ‌றி கூட மாலையில் மேனேஜர் ஆபிஸை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு நாம் கிளம்பி விடக்கூடாது. மேனேஜர் அறைக்கு வந்தவுடன், எழுந்து சென்று குட்மார்னிங் சொல்லி வர வேண்டும். எதிரில் அவரைப் பார்க்கும் போதேல்லாம் சலாம் வைக்கத் தவற‌க்கூடாது. அப்படியே அவர் எதிரில் வரவில்லையென்றால் அதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும்.

6) காலையிலே ஆபிஸுக்கு வந்தவுடன் ஒரு நியுஸ் பேப்பரையும் விடக் கூடாது அத்தனையும் மதியத்திற்கு முன்பு படித்துவிட வேண்டும், அப்ப மதியதுக்கு மேல வேலை செய்யணுமான்னு நீங்க கேக்குறது புரியுது. அதுவும் இல்ல, லன்ச் முடித்து வந்தவுடன் பேஸ் புக்கை ஒரு ரவுண்டு கட்டி அடிக்கணும். அப்ப எப்ப தான் வேலை பாக்குறது என்று சின்சியர் சிகாமணியா, நீங்க கேட்பது புரிகிறது. மாலையில் நான்கு மணிக்கு மேல‌ மெதுவாகப் பைல்களை ஓபன் பண்ணி என்ன பண்ணலாம் என்று யோசிக்கணும், முடிஞ்சா அது சரியில்லை, இது சரியில்லை என்று வேலையை ஆரம்பிப்பதுக்கு முன்னே மேனேஜருக்கு சிசி வைச்சு நாலு மெயிலை தட்டணும். அந்த‌ மெயில்களுக்கு "எல்லாம் இருக்குடா!! கண்ணை நல்லா திறந்து பாருனு" ரிப்ளே மெயில் வந்தாலும் கவலையே படாமல் அடுத்த மெயிலை டைப் பண்ண தொடங்க வேண்டும்.

7) நாலு மணிக்கு மேல் வேலையை ஆரம்பித்துப் பக்கத்தில் இருக்குறவன் வீட்டிற்கு நகர்ந்தாலும், நாம சீட்டைவிட்டு நகரக் கூடாது. ரெம்பச் சின்சியரா வேலை பார்ப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, யாரெல்லாம் வீட்டிற்குப் போகிறார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும். ஆறு மணிக்கு மேலே மேனேஜர் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்து வீட்டிற்குக் கிளம்பலியா என்று கேட்கும் போது, ஒரு பைல் பாதியில நிக்குது சார், அதை படுக்க வச்சுட்டு கிள‌ம்புறேன் என்று பருப்பா! சாரி பொறுப்பா! பதில் சொல்ல வேண்டும்.

8) புராஜெக்ட்டில் ஏதாவது உங்களுக்குத் தெரியவில்லை என்றால் டீமில் இருக்கும் சீனியரிடமோ, டீம் லீடரிடமோ கேட்கக் கூடாது. நேரடியாக‌ நாட்டாமை டூ பாங்காளி, பங்காளி டூ நாட்டாமை என்பது போல் மேனேஜர் டூ நாம், நாம் டூ மேனேஜர் என்பது போல் தான் வைத்துக்கொள்ள வேண்டும். உப்புக்கு பெறாத அடுத்தவன் விசயமாக இருந்தாலும் மேனேஜரின் அறைக்குச் சென்று போட்டுக் கொடுத்துவிட்டு தான் மறுவேலையே பார்க்க வேண்டும். உங்களுடன் புராஜெக்ட்டில் இருக்கிறவன் உங்களை ஒரு பொருட்டாவே கருத‌வில்லையென்றாலும், நான் உங்களிடம் வந்து பேசுவதால் "புராஜெக்ட்டில் இருக்குக்கிறவர்கள் என்னை ஒதுக்குகிறார்கள்" என்று எஸ்ட்ரா பிட்டையும் சேர்த்து மேனேஜர் காதில் போட வேண்டும்.

9) வேலையைச் சீக்கிரமே முடித்துவிட்டாலும், தப்பித் தவறி கூட நம்முடைய‌ அவுட்புட்டை ஆபிஸ் நேரத்தில் மெயில் பண்ணிவிடக் கூடாது. ஆபிஸ் முடிந்து எல்லோரும் வீட்டிற்குப் போனதுக்குப் பிறகு தான் டெலிவிரபிள் மெயில் பண்ணனும், முடிந்தால் ஆபிஸில் காத்து இருந்து, லேட் நைட் பண்ணினால் இன்னும் பெரிய ஆளாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மறுநாள் மேனேஜர் வந்து எல்லார் முன்னிலும் உங்களுடைய சின்சியாரிட்டியை பாராட்டாமல் இருக்க மாட்டார்.

10) மேனேஜ்மென்டில் இருந்து நடத்தும் பார்ட்டி மற்றும் கல்ச்சுரல் புரோகிராம், கெட் டுகெதர் போன்ற‌ ஒன்றையும் தவற விடக்கூடாது. முதல் ஆளாகப் போயி மேனேஜர் பக்கமாகச் சீட் இருந்தால் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றிய அறிவிப்புகள் மற்றும் போட்டோக்கள் மெயிலில் வரும் போது, ரெம்ப நன்றி, நான் கலந்து கொண்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், உங்களை அங்குப் பார்த்ததில் ம‌கிழ்ச்சி என்று அந்த மெயில்களுக்கு ரிப்ளே பண்ணத் மறக்க‌க்கூடாது.

                                                 *-------**-------**-------**-------**-------*




இவ்வளவும் கடந்த வருடம் நீங்கள் செய்தவரா? அப்ப கவலையே வேண்டாம் அடுத்த மாதம் உங்களுக்கு டபுள் இங்கிரிமென்ட்.

இவ்வளவும் கடந்த வருடம் நீங்கள் செய்யவில்லையா? கவலையை விடுங்க, அடுத்த வருடம் நாம‌ டபுள் இங்கிரிமென்ட் வாங்க, சொம்படிப்போம் சாரி சேர்ந்துழைப்போம். கவுண்டவுன் ஸ்டார்ட்...

                          தீயா வேலைசெய்யணும் குமாரு!!!

.

Thursday, April 10, 2014

நீ சேமிக்க வேண்டாம்! இழக்காமல் இருந்தால் போதும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அருகாமையில் இருக்கும் விமான நிலையம் என்றால் திருவனந்தபுரம் விமான நிலையம் தான். நான் அலுவலக வேலையாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வது உண்டு. வெளிநாடுகளுக்குச் சென்று வரும் போது இந்தியாவில் நான் இப்போது பணிபுரியும் என்னுடைய ஹைதிராபாத் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இருக்கும். ஹைதிராபாத்திலோ, வெளிநாட்டிலோ இருந்து நான் வந்தாலும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தான் வந்து இறங்குவேன். விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்கு, எனது வீட்டில் இருந்து அப்பா அல்லது அண்ணன் யாராவது ஒருத்தர் வாடகைக்குக் கார் எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வந்து விடுவார்கள். நானும் அதில் ஏறி எந்த விதமான‌ பிரச்சனையில்லாமல் வந்து விடுவேன். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து எனது வீட்டிற்கு வருவதற்கு ஆயிரத்து அறுநூறு ரூபாய் வாடகை வாங்குவார்கள்.

என்னுடைய கல்யாணம் முடிந்த ஓரிரு மாதத்தில், ஹைதிராபாத் அலுவலகத்திற்கும், சவூதி அரேபியாவிற்கும் ஒரு புராஜெக்ட் வேலையாகத் தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை ஒரு மாதத்திற்குள் பயணம் செய்ய வேண்டி வந்தது. அப்போது நான் ஹைதிராபாத்தில் வீடு எதுவும் எடுத்திருக்கவில்லை. எனவே ஹைதிராபாத் வந்தால் அலுவலகத்தில் இருந்து ஏற்பாடு செய்திருக்கு ஹோட்டலில் தங்குவேன். வேலை முடிந்தவுடன் திரும்பவும் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து ஊருக்கு சென்றுவிடுவேன்.

வாரம் ஒருமுறை என்று திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து இறங்கி வீட்டிற்குப் போவதற்கும், வீட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வருவதற்கும் மொத்தமாக மூவாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகும். நான் எப்போதும் ஹைதிராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் வருகிறேன் என்றால் ஒரு நாளைக்கு முன்னரே வீட்டில் சொல்லிவிடுவேன், அவர்களும் வாடகைக் காருக்குச் சொல்லிவிடுவார்கள். இவ்வாறு வாரம் ஒருமுறை வாடகைக் காருக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் செலவு செய்வது என்பது கொஞ்சம் ஓவராக எனக்குப் பட்டது. அதனால் ஒருமுறை வீட்டில் உள்ளவர்களிடம் நான் வருவதற்கு நீங்கள் கார் எதுவும் எடுத்து வர வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். எப்படி வரப் போகிறாய்? என்று அப்பா கேட்டார்கள், என்னிடம் ல‌க்கேஜ் எதுவும் இல்லை அதனால் நான் பஸ்ஸில் வருகிறேன் என்றேன். நான் ஏதாவது புதிதாகச் செய்கிறேன் என்று சொதப்பி வைப்பேன் என்பது அப்பாவிற்கு நன்றாகத் தெரியும். அதனால் அப்பா வேண்டாம்! நான் கார் எடுத்து வருகிறேன், அதிலேயே வந்துவிடு என்றார்கள், நான் கேட்கவில்லை.

ஹைதிராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வருவதற்கு விமான டிக்கெட்டிற்கு மட்டும் எட்டாயிரம் ரூபாய் செல‌வு செய்கிறவனுக்கு, ஆயிரத்து அறுநூறு ரூபாய் கார் வாடகைக் கொடுப்பதில் என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. விமான டிக்கெட் ஆபிஸிலேயே புக் செய்து கொடுத்துவிடுவார்கள். விமான நிலையத்தில் இருந்து ஊருக்குச் செல்வதற்கான கார் வாடகை மட்டும் தான் நான் எனது கையில் இருந்து செல‌வு செய்வேன். என்னுடைய திட்டம் ஹைதிராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து, விமான நிலையத்தில் இருந்து ஆட்டோ அல்லது கால் டாக்சி பிடித்துப் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து ஊருக்குப் பஸ்ஸில் செல்வது.



இரவு பதினொரு மணிக்கு ஹைதிராபாத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சென்னையில் இருந்து டிரான்சிட் விமானம் பிடித்துக் காலையில் ஆறு மணியளவில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தேன். எனது வீட்டில் இருக்கும் அண்ணன் மற்றும் அக்கா குழந்தைகளுக்காக எப்போதும் நான் ஹைதிராபாத்தில் இருந்து வீட்டிற்குப் போகும் போது இங்குள்ள கராச்சி பேக்கரியில் இருந்து பாதாம், பிஸ்தா, சாக்லெட் என்று வித விதமான பிஸ்கட் வாங்கிச் செல்வது உண்டு. இந்தமுறை நேரம் இல்லாததால் எதுவும் வாங்கவில்லை, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும் போது சரவணப் பவன் கடையில் புதிய ரக இனிப்பு வகைகளைக் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது, உடனாடியாக அங்குச் சென்று கொஞ்சம் இனிப்புகளை வாங்கிக் கொண்டேன். சரவணப் பவனின் விலை அனைவருக்குத் தெரியும் மொத்தமாக எழுனூற்று ஐம்பது ரூபாய் ரூபாய் பில் வந்தது.

விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்து ஆட்டோ ஏதாவது கண்ணில் படுகிறாதா என்று தேடிய போது, ஒருவர் என்னிடம் வந்து, சென்னையில் இருந்து வர வேண்டிய‌ பிளைட் வந்திடுச்சா? என்று கேட்டார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு திரும்புவதற்குள், பிளைட்டில் இருந்து வந்தவங்க எல்லாம் வெளியே வந்திட்டாங்களா? என்று அடுத்தக் கேள்வியை வைத்தார். நான் அவரைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் இல்லைங்க, லக்கேஜ் போட்டவங்க வெளியே வந்து இருக்க மாட்டாங்க, கொஞ்சம் நேரம் ஆகலாம் என்றேன். நீங்களும் இந்தப் பிளைட்டில் தான் வந்தீங்களா? என்று அடுத்தக் கேள்வியை வைத்தார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு, யாருக்காக வெய்ட் பண்ணுறீங்க என்றேன், என்னோட தம்பி சென்னையில் இருந்து வரான், அவனுக்காகத் தான் கார் கொண்டு வந்திருக்கிறேன் என்றார். நீங்க எங்குப் போகனும் என்று என்னிடம் கேட்டார், நான் வில்லுக்குறி என்றேன். அவர் எனது ஊரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குளச்சல் என்ற ஊர் தான் தங்களுடைய‌ சொந்த ஊர் என்றும் அங்கிருந்து தான், தன்னுடைய தம்பியை அழைத்துச் செல்ல கார் எடுத்து வந்திருப்பதாக விவரித்தார்.

நீங்க எப்படிப் போகப் போறீங்க? என்று என்னிடம் கேட்டார், நான் பஸ்ஸில் போகலாம் என்று இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் எதுக்கு நீங்க பஸ்ஸில் போகனும், நாங்க அழகியமண்டபம் வழியாகத் தான் குளச்சலுக்குப் போவோம், நீங்கள் அங்கு இறங்கி கொள்ளுங்கள் என்றார். நான் உங்களுக்கு எதுக்குச் சிரமம் என்று சொல்லிவிட்டு நகரப் பார்த்தேன். அதற்குள் அவருடைய தம்பி வெளியில் வந்து இவரைப் பார்த்து தனது கையைக் காட்டினார். இவர் என்னிடம் கொஞ்சம் நில்லுங்கள், என்று சொல்லிவிட்டுத் தம்பியிடம் சென்று லக்கேஜ் இருந்த வண்டியை வாங்கிக் கொண்டு இருவரும் என்னை நோக்கி வந்தார்கள்.

வ‌ரும் போதே என்னைப் பற்றி அவருடைய தம்பியிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன், இருவரும் என்னை நெருங்கி வந்தவுடன், அவருடைய தம்பியும் என்னிடம் வந்து கையைக் குலுக்கி தன்னை அறிமுகப் படுத்திவிட்டு, நீங்க எதுக்குப் பஸ்ஸில் போகணும், நாங்க அந்தப் பக்கம் தான் போகிறோம், எங்களுடம் வாங்க என்றார். அதற்கு மேலும் அவர்களிடம் மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் அவர்கள் கொண்டு வந்திருந்த காரில் ஏறினேன். அண்ணன், தம்பி இருவரும் பின்னால் அமர, நான் டிரைவரின் பக்கத்தில் உள்ள இருக்கையில் முன்னால் அமர்ந்து கொண்டேன். என்னுடைய கையில் இருந்த சிறிய டிராவல் பேக்கை அவர்களின் லக்கேஜை வண்டியின் டிக்கியில் போடும் போது நானும் போட்டுக் கொண்டேன். கையில் சரவணப் பவனில் வாங்கிய இனிப்பு கவர் மட்டும் இருந்தது.

விமான நிலையத்தில் இருந்து நாங்கள் கிளம்பும் போதே காலை மணி ஏழு தாண்டியிருந்தது. காரில் ஏறிய பிறகு தான் ஒருவர், ஒருவருடைய பெயர்களையே அறிமுகம் செய்து கொண்டோம், நான் ஸ்டீபன் என்றேன், அவர்களில் அண்ணன் தன் பெயர் ராபின் என்றும், தம்பி ரூபன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அப்படியே அவர்களின் வேலைகளைப் பற்றியும் பேசினோம், சென்னையில் இருந்து வருபவர் கப்பலில் பணி செய்வதாகவும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணிமுடித்து ஊருக்கு வந்து போவதாகவும் சென்னார். நானும் என்னுடைய புராஜெக்ட்கள் பற்றி அவர்களுக்கு விளக்கினேன்.

கொஞ்சம் நேரம் எங்களுக்குள் பேசிக் கொண்டிருதோம். பேசிக் கொண்டிருக்கும் போதே சென்னையில் இருந்து வந்தவர் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தார். இதற்குள் எனக்கு வீட்டில் இருந்து இரண்டு முறை போனில் அழைப்பு வந்துவிட்டது, எங்கு வருகிறாய், எப்படி வருகிறாய் என்று, நான் காரில் வருவது பற்றிச் சொன்னேன். திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் செல்லும் சாலை என்பது ஒரு வழிச்சாலை மற்றும் குண்டும் குழியும் அதிகம். அதனால் அந்தச் சாலையில் நாற்பது தாண்டி வேகத்தில் செல்வது கடினம். காலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் அதிகமாக‌ செல்வதால் டிராபிக் வேறு அதிகமாக இருந்தது. நான் எனது மொபைலை எடுத்து இணையத்தைத் திறந்து செய்திகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

கார் மார்த்தாண்டம் நெருங்கிய போது மணி ஒன்பது ஆகியிருந்தது. தூங்கி கொண்டிருந்தவர் எழுந்து வண்டியை நல்ல ஹோட்டலில் நிறுத்துங்கள் டிபன் சாப்பிட்டுப் போகலாம் என்றார். நான் வீட்டில் போய் டிபன் சப்பிடலாம் என்ற ஐடியாவில் தான் இருந்தேன். அம்மா போனில் பேசும் போதும் நான் வீட்டிற்கு வந்து டிபன் சாப்பிடுகிறேன் என்று தான் சொல்லியிருந்தேன். நம்முடன் இருப்பவர்கள் சாப்பிடப் போகும் போது நான் மட்டும் வரவில்லை என்று சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் நானும் அவர்களுடன் சாப்பிடவத‌ற்கு தயாரானேன்.

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு முன்பே, வலதுப் பக்கத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் புதிதாகத் திறந்திருக்கும் ஹோட்டலுக்குள் நுழைந்தோம். எங்கள் ஏரியாவில் பெரும்பாலான ஹோட்டல்களில் காலையிலேயே புரோட்டா கிடைக்கும், அதற்குச் சால்னாவாகப் பீப், முட்டை அல்லது கடலை கறி என்று வைத்திருப்பார்கள். இந்த ஹோட்டலில் பீப்க்கு பதிலாக மட்டன் கறி இருக்கிறது என்றார்கள். அவர்களில் டிரைவர் உட்பட‌ மூன்று பேரும் புரோட்டா வித் மட்டன் என்று சொன்னார்கள். நான் பெரும்பாலும் டிராவல் செய்யும் போது நான்வெஜ் அதிகமாக‌ சாப்பிடுவது இல்லை, அதனால் நான் ஆப்பம் வித் கடலை என்று ஆர்டர் பண்ணினேன்.

தண்ணீர் பாட்டில், டீ, காபி என்று அவரவருக்குத் தேவையானவற்றை ஆர்டர் பண்ணினோம், நாம் வருவதோ ஓசியில் கார் பயணம், இதில் நம்முடைய‌ சாப்பாட்டிற்கு வேறு அவர்கள் பணம் கொடுக்க வேண்டுமா என்று நினைத்துக் கொண்டு சர்வரிடம் பில்லை என்னிடம் கொடுக்குமாறு கூறினேன். அவரும் என்னிடம் கொண்டு பில்லை தந்தார். பக்கத்தில் இருந்த அண்ணன் தம்பி இருவரும் நாங்கள் கொடுக்கிறோம் என்று என்னிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள், நான் கேட்கவில்லை அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பே நான் முடித்துவிட்டதால் நேராகக் கேஷியரிடம் சென்று பில்லை பார்த்துவிட்டு ஓர் ஐநூறு ரூபாய் தாளைக் கொடுத்தேன். பில்லில் நானூற்று இருபது ரூபாய் என்று இருந்தது.

சென்னையில் இருந்து வந்தவருக்குப் புகைப் பழக்கம் இருக்கும் போல, என்னிடம் கேட்டார், நான் இல்லை என்றேன், டிரைவர் அவருக்குக் கம்பெனி கொடுக்க இருவரும் ஹோட்ட‌லுக்கு வெளியில் வந்து ஊதினார்கள். நானும் இன்னொருவரும் காரில் சென்று வெயிட் பண்ணினோம். இருவரும் புகைத்து முடித்துவிட்டு, பின்பு வந்து காரில் ஏறி பயணத்தைத் தொடந்தோம். காரில் ஏறியவுடன், நாங்கள் உங்களை வில்லுக்குறியிலேயே டிராப் செய்து விடுகிறோம், அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக நாங்கள் குளச்சம் போய் விடுவோம் என்றார்கள். அழகிய மண்டபத்தில் இருந்து இவர்கள் குளச்சல் சென்றால் ஒரு நான்கு கிலோ மீட்டர் டிராவல் குறைவாக வரும். ஆனால் என்னை டிராப் செய்ய எனது ஊருக்கு வந்தால் இவர்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் நான் வேண்டாம் என்றேன், அவர்கள் கேட்கவில்லை. வண்டியை நேராக வில்லுக்குறிக்கு விடுங்கள் என்று டிரைவரிடம் சொன்னார்கள்.

வில்லுக்குறி மெயின் சாலையில் இருந்து பத்து மீட்டர் இடைவெளியில் தான் என்னுடைய வீடு இருக்கிறது. சரியாக வில்லுக்குறியை நெருங்கும் போது வீட்டில் இருந்து மனைவியின் போன் அழைப்பு, நான் போனை எடுத்துக் காதில் வைத்து "பக்கத்தில் வந்துவிட்டேன்" என்று சொல்லுவதற்குள் கார் வில்லுக்குறியில் நிறுத்தியாகிவிட்டது. டிரைவரும் என்னுடன் இறங்கி பின்னால் இருந்த லக்கேஜை எடுக்க உதவினார். நான் காதில் போனை வைத்துக் கொண்டே நன்றி சொன்னேன். அவர் தலையைச் சொறிந்தார். நான் யூகித்துக் கொண்டு பாக்கெட்டில் கையை விட்டால் எல்லாம் ஐநூறு ரூபாய் தாள். சில்லறைக் கேட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்துக் கொண்டே ஓர் ஐநூறு ரூபாய் தாளை கையில் திணித்து விட்டுப் பின்னால் இருந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனில் மனைவியுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு நடந்தேன்.

மனைவியிடம் போனில் "இதோ இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனை கட் செய்துவிட்டு என்னிடம் இருக்கும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கும் போது, விமான நிலையத்தில் உள்ள சரவணபவன் கடையில் வாங்கிய‌ இனிப்பு கவரை எடுக்க மற‌ந்து காரில் விட்டு வந்திருந்தேன். திரும்பி சாலையைப் பார்த்தால் கார் கிளம்பியிருந்தது. அவர்களுடைய போன் நம்பர் கூட வாங்கியிருக்கவில்லை. அவர்களுடைய பெயர் மற்றும் ஊர் குளச்சல் என்று மட்டும் தான் தெரியும். குளச்சல் என்பது சிறிய கிராமம் கிடையாது, அதைச் சுற்றியும் பல ஊர் உண்டு. எவரிடமும் சென்று விசாரிக்கவும் முடியாது. ஒருவேளை அவர்கள் அந்த இனிப்பை எனக்குத் தர வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கும் என்னுடைய போன் நம்பரோ, முகவரியோ தெரியாது.

எப்படியோ, ஆயிரத்து அறுநூறு ரூபாய் சேமிக்கப் போகிறேன் என்று, இனிப்பு கவர் எழுனூற்றி ஐம்பது, ஹோட்டல் பில் ஒரு நானூற்றி இருபது மற்றும் டிரைவரின் டிப்ஸ் ஐநூறு, ஆக மொத்தம் ஆயிரத்து அறுநூற்று எழுபது ரூபாய் இழந்து வந்திருந்தேன். இதில் கொடுமை என்னவென்றால் நான் வீட்டிற்கு வந்தவுடன் அண்ணன் மற்றும் அக்காவின் குழந்தைகள் இருவரும் என்னுடைய டிராவல் பேக்கை பிரித்துச் சாக்லெட் தேடியது தான். அவர்கள் இருவரின் ஏமாற்றத்திற்கு என்ன விலைக் கொடுப்பது என்று தெரியவில்லை.

.

Tuesday, April 8, 2014

எல்லாவற்றையும் இழப்பத‌ற்குத்தானே ஆசைப்படுகிறாய் பாலகுமாரா!!!

குடிப் பழக்கத்தைப் பற்றி எனது தளத்தில் அதிகமாகவே எழுதியிருக்கிறேன். ஆக்டோபஸ் போன்று குடும்பத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் இந்தப் பழக்கத்தின் தீமையை முழுமையாக உணர்ந்தவன் என்ற முறையில் தான் எழுதி வருகிறேன். சிறு வயதில் தனது தந்தையின் குடிப்பழக்கத்தை அருகில் இருந்து பார்த்தவனும், அதனால் தன்னுடைய குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் முழுமையாக உணர்ந்தவன் எவனும் தனது குழந்தைக்கு அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க விரும்ப மாட்டன். நான் ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறேன், வாரத்திற்கு ஒருமுறை குடிக்கிறேன் என்று சிலாய்க்கும் எவரும் தனது குழந்தை இந்தப் பழக்கத்தை விரும்புகிறதா, தன்னுடைய‌ மனைவி சந்தோசமாகத் தான் இந்தப் பழக்கத்தை ஏற்று நம்முடன் வாழ்கிறாளா என்று அறிய விரும்புவதில்லை.

குடிக்கும் நண்பர்கள் எவரும் தன்னுடன் நட்பாக இருக்கும் குடிக்காத நண்பர்களிடன் அவர்கள் குடிக்கும் போது செய்யும் கூத்துகளைப் பற்றிக் கேட்க விரும்புவதில்லை. அப்படியே குடிக்காத நண்பர்கள் கொடுக்கும் அறிவுரைகளையும் இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. இவர்கள் குடிப்பதைப் பற்றி விவாதிப்பது எல்லாம் உடன் குடிக்கும் நண்பர்களுடன் தான். அவர்கள் என்ன இவர்களுக்குச் சொல்லிவிடப் போகிறார்கள்? நாளைக்கு எந்தக் காரணத்தைச் சொல்லிக் குடிக்கலாம், எங்குக் குடிக்கலாம் என்பதைத் தான் விவாதிப்பார்கள்.



குடிக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு குடிக்காத நண்பன் இருந்தால் அவனுடைய நிலைமை ரெம்பக் கொடுமையானது. சொன்ன விசயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதில் ஆரம்பித்து, ஒண்ணும் இல்லாத விசயத்திற்குக் கண்ணீர் விட்டு அழுவது வரை நடக்கும். காலையில் எழுந்து ஏன்டா இப்படிப் பண்ணினாய்? என்று கேட்டால் என்ன பண்ணினேன்? என்று தெரியாதது போல் நம்மிடமே திரும்பக் கேட்பது.

கிராமங்களில் குடிப்பவர்களிடம் ஒரு முரட்டுத்தனம் அவர்களை அறியாமலே வந்து விடுகிறது. அந்த முரட்டுத்தனத்தை வீடு வரும்வரை வெளியாட்கள் எவரிடமும் காட்டுவதற்குத் துணிவது இல்லை. அதில் எல்லாம் ரெம்ப‌ விவரமாக இருப்பார்கள். வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியிடமோ அல்லது வயதான பெற்றோர்களிடமோ தான் காட்டுகிறார்கள். இன்னும் சில பேருக்கு குடித்தால் தான் தன்னுடைய குழந்தைகள் மீது பாசம் அதிகமாக வந்துவிடும். பகலில் சும்மா இருக்கும் போது அந்தக் குழந்தையைச் சீண்டுவது கிடையாது. ஆனால் இரவு குடித்துவிட்டால் போது பாசம் பொங்கி வழிந்துவிடும், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பிக் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு வந்து முத்த மழையால் நனைத்து முரட்டுத்தனமாய்க் கொஞ்சுவது. அந்தக் குழந்தைத் தூக்கக் கலக்கத்தில் மிரண்டு போய் விழிக்கும். ஒரு வேளை அந்தக் குழந்தை அழுதுவிட்டு அம்மாவை நோக்கிக் கையை நீட்டிவிட்டால் போதும் அவ்வளவு தான், ஏன்டி நீ, எனக்கெதிராகக் குழந்தையை வளர்க்கிறாயா? என்னிடம் வரக்கூடாது என்று சொல்லிக் கொடுத்து வள‌ர்க்கிறாயா? என்று சண்டையை ஆரம்பித்துவிடுவான்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், குடித்தால் தான் வாயையே திறந்து மற்றவர்களிடம் பேசுவார்கள். நண்பர்களிடமே, குடியிருக்கும் இடத்தில் பக்கத்து வீட்டுக்கார்களிடோ, உறவினர்களிடமோ இவர்கள் குடிக்காமல் இருந்தால் எந்தவிதமான நட்பும், உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள், இவ்வளவு ஏன்? முகத்தைக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் ஒரு குவாட்டர் கட்டிங் போட்டு விட்டால் போது அப்போது தான் உலகில் இல்லாத உறவு முறைகளும், பாசங்களும் பொங்கி வழியும். அடுத்தவன் காது அறுந்து ரத்தம் வழிந்தாலும் விடமாட்டார்கள், தொடர்ந்து மொக்கையைத் தான் போடுவார்கள். அப்படியே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுத் தப்பிவிடலாம் என்று நாம் நினைத்தால், அப்போது தான் நீங்க எல்லாம் கோபுரம், என்னைப் போலச் சாக்கடையிடம் பேசுவீங்களா? என்று இல்லாத‌ சென்டிமென்ட் வசனம் எல்லாம் பேசுவார்கள்.

மனைவிடமும், பிள்ளைகளிடமும் கூடப் பேச வேண்டும் என்றால், இவர்களுக்குக் குவாட்டர் உள்ளே போக வேண்டும். குடித்து விட்டு வந்து தான் பிள்ளைகளுக்கு அறிவுரையே அருளுவார்கள். அப்போது மனைவியோ, குழந்தையோ இவருக்கு எதிராக‌ ஏதாவது சொல்லிவிட்டால் போதும், அவர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்து வீட்டையே போர்களாமாக மாற்றி விடுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. இங்கிருந்து வெளிநாடுளுக்குச் சென்று வேலை செய்பவ‌ர்கள் அதிகம், அதிலும் குறிப்பாக அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்குச் செல்பவர்கள் அதிகம். இத்தகைய நாடுகளின் தட்பவெட்பச் சூழ்நிலைகளில் கட்டிட வேலை என்பது மிகவும் கடினமான ஒன்று. பெரிய‌ அளவிலான சம்பளங்களும் இருப்பது இல்லை. அதனால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று மாத விடுமுறைக்கு ஊர்களுக்கு வருவார்கள். வரும் போதே ஏர்போர்ட்லேயே டூட்டிப் பிரி(Duty free) கடைகளில் பாட்டில் வாங்கி அடுக்கிவிடுவார்கள். போதா குறைக்கு விமானத்திலேயும் சரக்கை ஊற்றி விட்டி விடுவார்கள். பல வருடங்கள் கழித்து ஆசையாகக் கணவர் வருகிறார், அப்பா வருகிறார், மகன் வருகிறான் என்று கார் கொண்டு வந்து காத்திருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றவர்கள் முன்பு இந்த டூட்டிப் பிரி கவர்களுடன் தான் தோன்றுவார்கள். 

வந்த ஒரு மாதங்கள் வெளிநாட்டில் குடிக்க முடியவில்லை, அதனால் குடிக்கிறேன் என்று ஒரு காரணத்தைச் சொல்லி நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவன் வந்திருக்கிறான் என்று தெரிந்தால் போதும், அவனைச் சுற்றியே வந்து, தினமும் குடிப்பதற்கு என்றே ஊரில் ஒரு கூட்டம் தயாராக‌ இருக்கும். இவர்களுக்கு மட்டும் வருடத்தில் எல்லா நாட்களும் கொண்டாட்டம் தான். யார் யார் வெளிநாட்டில் இருக்கிறார்கள் எப்போது ஊருக்கு வருவார்கள் என்ற தகவல்கள் உறவினர்களுக்குத் தெரிகிறதோ இல்லையே இவர்கள் கைகளில் அப்டேட்ஸ் சரியாக இருக்கும்.

வெளிநாட்டிக்குத் திரும்பப் போவதற்கு முன்பும் ஒரு மாதமாகக் குடிக்க ஆராம்பித்து விடுவார்கள். இதற்கு இனி இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் என்னால் குடிக்க முடியும் என்று ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டு குடிப்பார்கள். இப்போது நண்பர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள், காரணம் கொண்டு வந்த பணம் அனைத்தும் வந்த ஒரு மாதத்திலேயே குடித்தும், நண்பர்களுக்கு விருந்து வைத்தும் செல‌வு செய்திருப்பார்கள். இப்போது கடன் வாங்கித் தான் குடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் இப்போதைய‌ நிலை என்ன என்பது, ஒரு மாததிற்கு முன்பு இவர்கள் கூடக் குடித்தவர்களுக்குத் தெரியும், எங்கே தன்னிடம் கடன் கேட்டு விடுவார்களோ அல்லது தன்னிடம் செலவு செய்யச் சொல்வார்களோ என்று ஒருவரும் அவர்கள் பக்கம் தலை வைக்க மாட்டார்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து ஊருக்கு வந்திருப்பது மூன்று மாதம் விடுமுறையில் இதில் இரண்டு மாதங்கள் குடித்தே காலத்தைக் கடத்திவிடுவார்கள். மீதம் இருக்கும் ஒரு மாதத்தில் உறவினர்கள் வீட்டில் நடக்கும் காதுக்குத்து, கல்யாணம், இழவு, திருவிழாக்கள் என்று சொல்லியே பாதி நாட்கள் குடித்துக் கொண்டாடி விடுவார்கள். இப்படி விடுமுறைக்கு ஊருக்கு வரும் நபர்கள் குடிப்பத்தை மட்டுமே முழு நேர வேலையாகச் செய்வார்கள். மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ என்று தனியாக நேரம் ஒதுக்க மாட்டார்கள். விடுமுறைக்கு எதற்கு இவர்கள் ஊருக்கு வருகிறார்கள், பேசாமல் அங்கேயே இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று மனைவியும், பெற்றோரும் நினைக்கும் அளவிற்குக் கூத்து அடிப்பார்கள். குடித்துவிட்டு மனைவிடம் போடும் சண்டைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் இவர்கள் மேல் பெரிதான ஈர்ப்பு இருப்பதில்லை.

குடியை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் பல பேர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் திருந்தி விடுவார்கள் என்று பெற்றோர்கள் இவர்களுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிவைத்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் குடித்துக் கொண்டே தான் வாழ்க்கையை ஓட்டுவர்கள். ஒரு கட்டத்தில் உடம்பில் வலு இல்லாமல் வீட்டில் வீழ்வார்கள் அல்லது மரணத்தைத் தழுவுவார்கள். இளம் வயதில் சிறு குழந்தைகளுடன் விதவையாக இருக்கும் பல பெண்களை எங்கள் ஊரில் பார்க்கமுடியும். இன்னும் சிலர் குடிக்காரக் கணவனால் அடி உதை வாங்கிக் கொண்டு எல்லாம் என் தலைவிதி என்று இருப்பவர்கள், இப்போது அதே குடிகாரக் கணவன் உடம்பில் வலு இல்லாமல் மருத்துவமனைகளில் இருக்கும் போது பக்கத்தில் கவனித்துக் கொண்டிருப்பார்க‌ள்.



தன்னுடைய மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்பதை மட்டுமே முக்கியமாகக் கருதும் இவர்கள், தன்னுடன் வாழும் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என்று எவரின் நலனிலோ, மகிழ்ச்சியிலோ, கொண்டாட்டங்களிலோ அக்கறை கொள்வது இல்லை. "மது அடிமை" என்ற ஒற்றைச் சொல்லில் சுயத்தை இழந்து, குடும்பங்களைத் தவிக்கவிட்டு, சமூக அக்கறையில்லாமல் வாழ்வதற்குத் தானே ஆசைப்படுகிறாய்!!!!

.

Sunday, April 6, 2014

மல்லிகைப் பூ மணத்தில் மீன்குழம்பு!!

என்னவோ தெரியவில்லை, கன்னியாகுமரி எனது மாவட்டம் என்பதால் மீன் என்பது என்னுடைய வாழ்வியலில் ரெம்ப நெருக்கமான ஒன்று. இத்தகைய நெருக்கம் என்பது எனக்கு மட்டும் அல்ல, எனது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலனவர்களும் அப்படித் தான். கண்டிப்பாக வாரத்தில் ஆறு நாட்களும் மீன் குழம்பும், பொரித்த மீனும் எங்கள் வீட்டில் இருக்கும். அப்படியென்றால் ஒரு நாள் மட்டும் காய்கறி சாப்பிடுவீங்களா? என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது தான். ஞாயிறு விடுமுறை என்பதால் கடலிற்குப் பெரும்பாலானவர்கள் மீன் பிடிக்கச் செல்வது இல்லை, அதனால் அன்று எங்கள் ஊரில் இருக்கும் மீன் சந்தையில் மீன்கள் வருவது இல்லை. அதற்குப் பதிலாக‌ அன்று ஒரு நாள் மட்டும் அந்த மீன் சந்தையில் சிக்கன் அல்லது மட்டன் கடையைப் போடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை சர்ச்க்குப் போய்விட்டு விட்டு வீட்டிற்கு வரும் போதே அப்பா கையில் கறியுடன் தான் வருவார். காலையிலேயே டிபன் கறிக்குழம்புடன் தான் ஆரம்பம ஆகும். இந்த நிகழ்வு எங்கள் வீட்டில் மட்டுமே நடக்கும் என்பது இல்லை, எங்கள் ஊரில் இருக்கும் பெரும்பாலனவர்களில் வீட்டில் வாரம்தோறும் நடக்கும் நிகழ்வு இது தான்.

எங்கள் ஊரில் மீன் என்பது சென்னை போன்ற பெரு நகரங்களில் விற்பதை போல் எடைப் போட்டு விற்பனை செய்வது இல்லை. நெத்தலி, கூனி போன்ற சிறுமீன்களைக் கூறு(சிறுக்குவியல்) போட்டு விலையைச் சொல்லுவார்கள். சாளை, மத்தி போன்ற மீன்களை எண்ணம் வைத்து விற்பார்கள். அயிலை, நெய்மீன், வெங்கட, விளமீன், வாளை, பிள்ளை சுறா, சீலா போன்ற‌ பெரிய மீன்களை எல்லாம் தோரயமாக விலை சொல்லுவார்கள், நாம் அவற்றைப் பேரம் பேசி வாங்கவேண்டும். எங்கள் ஊரில் இருக்கும் மீன் கடையில் பேரம் பேசத் தெரியவில்லை என்றால் மீன் வாங்குவது என்பது குதிரைக்கொம்பு கதையை போல் தான், கண்டிப்பாக அதிகமான விலைக் கொடுத்து தான் மீன் வாங்கி வருவீர்கள்.

உள்ளுரில் இருக்கும் மீன் சந்தை என்பதால் இங்கு பெரும்பாலும் எங்கள் ஊரில் உள்ள‌ பெண்களைத் தான் அதிகமாகப் பார்க்க முடியும். இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஊரில் படிக்கும் போது விடுமுறை நாட்களில் இந்த மீன் சந்தைக்கு என்னுடைய பெரியம்மாவுடன் செல்வேன். பேரம் பேசுவது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இப்படியெல்லாம் பேரம் பேசலாமா? என்று வியந்து பார்த்தது எங்கள் ஊரில் உள்ள இந்த மீன் சந்தையில் தான். மீன் வியாபாரி இருபது ரூபாய் என்று சொல்லும் மீனை எந்தவித அலட்டலும் இல்லாமல் மூன்று ரூபாய் என்று கேட்பார்கள், அவரும் அவ்வளவுக்கு எல்லாம் வராது என்பார், அப்படியே பேரம் பேச்சு நடந்து ஐந்து ரூபாயில் விலை முடியும். பாருங்கள்! எவ்வளவு விலை சொன்ன மீனை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினார்கள் என்று. இப்போதும் ஊருக்குச் செல்லும் போது இந்த மீன் சந்தைக்குச் சில நாட்கள் போவது உண்டு. இன்றைக்கும் இந்த மீன் சந்தையின் பேரம் பேசும் நிலை இதுதான் ஆனால் அன்று இருபது ரூபாய் என்று சொல்லிய‌ மீன் இன்று இருநூறு ஆகியிருக்கிற‌து.

எங்கள் வீட்டில் அம்மா வைக்கும் மீன் குழம்பையே சாதத்தில் ஊற்றி சாப்பாட்டை முடித்து விடலாம், வேறு வகையான‌ குழம்பு எதுவும் தேவைப்படுவது இல்லை. வைக்கவும் மாட்டார்கள். அப்படியே குழம்பு என்று வைத்தால் அதன் பெயர் வெறங்கறி(வெறும் கறி: இதில் தேங்காய் அரைத்து மீன் மசாலா போட்டு வைப்பார்கள், வேறு எதுவும் போட மாட்டார்கள் அதனால் தான் அது வெறும் கறி). எனது மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் நான் இந்தக் குழம்பை பார்த்தது இல்லை. மதியமும், இரவும் மீன் வைத்து தான் எங்கள் வீட்டில் சாப்பாடு இருக்கும். அம்மா மீன் குழம்பு வைப்பதற்கு என்று தனியாகவே மசாலா அரைத்து வைத்திருப்பார்கள். அந்த மசாலாவில் குறைந்தது பதினைந்தில் இருந்து இருபது பொருட்கள்(வத்தல், மல்லி, சீரகம், மஞ்சள், பால் காயம், அரிசி, மிளகு, வெந்தயம்.. போன்ற‌) சேர்த்து அரைத்து வைத்திருப்பார்கள். தேங்காய் அரைத்து விட்டு வைக்கும் எனது வீட்டின் மீன் குழம்பின் சுவையே தனிதான்.

தினமும் மதியம், இரவு என்று வாரத்தின் ஆறு நாட்களும் இந்த மீன் குழம்பை ஊற்றி சாப்பிடுவ‌தில் சலிப்பு என்பது வருவதே இல்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருப்பவர்களுக்குச் சலிப்படையாமல் சாப்பிட, தினமும் என்ன குழம்பு வைப்பது, என்ன பொரியல் பண்ணுவது என்பதை முடிவு செய்வதே ஒரு பெரிய போராட்டமாக இருக்கும். இப்போது நான் இருக்கும் ஹைதிராபத்திலும் எனது மனைவிக்கும், எனக்கும் இந்தப் பிரச்சனை வருவது உண்டு.

கட்டுரையின் தலைப்புக்கு வரவே இல்லையே என்று நினைக்காதீர்கள், மீனைப் பற்றிய அரிச்சுவடுத் தெரியாதவன் எல்லாம் பெருசா பேச வந்துட்டான் என்று கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால் தான் மேலே உள்ள‌ விளக்கங்கள். இப்போது தலைப்பிற்கு வந்து விடலாம். மல்லிகைப் பூ மணத்தில் மீன் குழம்பு வைக்க முடியுமா? என்பது தான் இன்றைக்கு என்னுடைய குழப்பம். முடியும் என்று உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த சாரு அவர்கள் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். உலக இலக்கியம் படித்தவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று மீன் உணவுடன் நெருங்கிய தொடர்புடைய என்னால் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை.

மீனை சுத்தம் செய்வது என்பது கண்டிப்பாக ஒரு கலை தான். நன்றாகச் சுத்தம் செய்யவில்லை என்றால் ஒரு வகையான கவுச்சு நாற்றம் வருவது உண்மை. ஆனால் நன்றாகச் சுத்தம் செய்துவிட்டால் மல்லிகைப் பூ மணம் வந்துவிடும் என்று நம் காதில் இரண்டு பெரிய வாழைப்பூவை மாட்டிவிட நினைப்பதால் தான் இந்த சீற்றம்.

ஒரு காய்கறியை சமையல் செய்தாலே எத்தகைய மணம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் இயற்கையான மணத்தை விட வேறு மணம் வருவதற்கு வாய்ப்பு உண்டா? என்றால் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இயற்கையாக மீனின் வாசம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த மீனைச் சமையல் செய்யும் போது மீனின் வாசம் வராமல் வேறு வாசம் வந்தால் அதில் போடப்பட்டது மீன் அல்ல, வேறு ஏதோ என்று தான் அர்த்தம்.

வத்தல் மற்றும் மல்லிப் பொடிகளுக்குப் பதிலாக, சந்தன‌மும் ஜவ்வாதும் கலந்து குழம்பு வைத்தாலும் மீனின் வாச‌ம் தான் வருமே தவிர, நம்ம ஊர் ஊதுபத்தியின் வாசம் வீசுவது இல்லை. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு, பிறவிக் குணத்தைப் பேய்க்குக் கொடுத்தாலும் அது மாறுவது இல்லை என்பது. அதைப் போலத் தான் மீனின் குணத்தை மாற்ற முடியாது.

மீன் குழம்பை ரசித்து உண்பவர்களுக்குத் தெரியும், அந்தக் குழம்பில் மீனின் குணமும், மணமும் இல்லையென்றால் அதன் சுவை மீனின் சுவையாக இருக்காது வேறு ஏதாகவோ இருக்கும். அப்படியென்றால் மல்லிகைப் பூ வாசம் வீசும் மீன் குழம்பு என்று கவித்துவமாகச் சொல்வதில், ஒன்று இயற்கையாக வரும் மீனின் வாசனையைக் கொண்ட மீனால் அந்தக் குழம்பு செய்யப்படவில்லை அல்லது மீனின் வாசனையை மல்லிகைப் பூ வாசமாக எண்ணி நுகருகிறார். எதுவாக இருந்தாலும் இரண்டு பிரச்சனையிலும் "அவர் நமது காதில் சர்வ சாதரணமாக நாலு முழ பூவை சொருகி விட்டு செல்ல பார்க்கிறார்" என்று தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

வீட்டிலேயே கருவாடு தயாரிக்கும் பேக்டரி வைத்திருக்கிறேன் என்றும் அளக்கிறார். அந்தப் பேக்டரி துவங்குவதற்குக் காரணம் வெளியில் கிடைக்கும் கருவாடுகளில் உப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார். ஒரு பொருளைப் பதப்படுத்துவதற்கு உப்பு என்ற மூலப் பொருள் இல்லாமல் முடியுமா என்றால், நான் முடியாது என்று தான் சொல்வேன். உப்புப் போடாமல் உலர்த்தப் பட்ட கருவாடு என்பது அழுகிய மீனை போன்றது. மீனில் தான் அழுகல் இருக்கும். கருவாட்டில் அழுகல் என்று ஒன்று இல்லை என்று வாதிட்டால் கருவாட்டைப் பற்றி முழுமையாக அறியாதவர் என்று தான் நான் சொல்வேன். குறைவான‌ அளவு உப்புச் சேர்த்து உலர்த்தப்படும் கருவாடு என்பது அழுகிய மீனை காய வைத்து சாப்பிடுவதைப் போன்றது. இத்தகைய கருவாடை குழம்பில் போட்டவுடன் முற்றிலும் கரைந்து காணமல் போய்விடும். நல்ல கருவாட்டு குழம்பிற்கும் இந்தக் குழம்பிற்கும் வாசம் முற்றிலும் வேறாக இருக்கும்.

உப்பு அதிகமாக‌ போட்டு உலர்த்தப்படும் கருவாடுதான் சுவையாக இருக்கும். கருவாட்டில் இருக்கும் உப்பின் தன்மையை எடுக்க வேண்டுமானால் இரண்டு முறை தண்ணீரில் கருவாடை சிறுது நேரம் ஊறவைத்துக் கழுவி சுத்தம் செய்து எடுத்தால் போதும்.

மீன் குழம்பு மல்லிகைப் பூ வாசம் வீசும் முறையை உங்களுக்கு என்னால் சொல்லித்தர முடியாது. அந்த அளவிற்கு உலக இலக்கியம் நான் படிக்கவில்லை ஆனால் மீன் குழம்பு மீனின் வாசம் வீச எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல தர‌ முடியும். மீனின் செதில்களை எடுத்து துண்டுகளாக நறுக்கிய பின்பு கொஞ்சம் பரல் உப்பை(கல் உப்பு) மீன் துண்டுகள் இருக்கும் சட்டியில் போட்டு நன்றாகத் தோய்த்துக் கழுவினால் கவுச்சி நாற்றம் சுத்தமாக இருக்காது.

சிறிது மஞ்சள் தூளுடன் தயிர் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்தால் வாத்துக் கறி மட்டும‌ல்ல எந்தக் கறியிலும் வரும் கவுச்சி நாற்றம் என்பது அறவே இருக்காது. தயிர் இல்லையென்றால் எழுமிச்சைப் பழச்சாறு பிழிந்தும் ஊறவைக்கலாம்.

.


Thursday, April 3, 2014

ஏன்னா? நான் வேறுமாதிரி!!!

வீட்டின் பக்கத்தில், சாலையோரத்தில் வாரம் ஒரு முறை காய்கறிகள் கொண்டு வந்து கடை போடும் நடைபாதை வியாபாரிகளிடம் விலை குறைவாக இருந்தாலும் காய்கறிகள் வாங்க மாட்டேன். ஆனால் காரை எடுத்துக் கொண்டு ஒரு கிலோமீட்டர் பயணம் செய்து மார்ஜின் பிரி சூப்பர் மார்கெட்டில் பாக்கெட்டில் அடைக்கப் பட்டிருக்கும் காய்கறிகளை அதில் போடப்பட்டிருக்கும் விலைக்கு வாங்கி வருவேன்.

நடக்கும் தூரத்தில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் இருந்தாலும், நடந்து சென்று குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்து வர‌ மாட்டேன். காரிலோ டூவீலரிலோ தான் அழைத்து வருவேன். ஆனால் அதிகாலையிலேயே எழுந்து காலில் ஸ்போர்ட் சூவையும், தலையில் ஹெட் செட்டையும் மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பி விடுவேன்.

வீட்டின் முன்பு தள்ளு வண்டியில் பிரஷ் ஆன பழங்களைக் கொண்டு வந்தாலும் அவர்களிடம் வாங்க மாட்டேன். ஆனால்பெரிய பிரெஷ் மார்கெட்டுகளுக்கு சென்று மாதக்கணக்கில் குளிர்பதன பெட்டியில் வைத்து பாலிதீன் பைகளில் பேக்கிங் செய்து வைத்திருக்கும் பழங்களை வீட்டிற்கு வாங்கி வருவேன்.

வீட்டில் திடிரெனப் பவர் கட் ஆனால், கதவை திறந்து அருகில் உள்ளவர்களுக்குப் பவர் இருக்கிறதா என்று அறியவோ அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் அவர்கள் வீட்டில் பவர் இருக்கிறதா என்று விசாரிக்கவோ மாட்டேன். நேரடியாக மின் இணைப்பு அலுவலகத்திற்குப் போன் செய்து எனது வீட்டில் பவர் கட் ஆகிடுச்சு என்று கம்பிளைன்ட் செய்வேன். அவர்கள் உங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள பெரிய‌ மரம் சாய்ந்து மின்கம்பியில் விழுந்துவிட்டது அதனால் உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் பவர் இருக்காது சார் என்று அவர்கள் சொல்லும் தகவலைக் கேட்டு அப்படியா!!! என்பேன்.

எனது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, தனியாக‌ ஒரு வீடுக் கட்டிக் கொடுத்து அதை பராமரிக்க வேலைக்காரர்களையும் வைத்திருப்பேன். ஆனால் வீட்டில் உள்ள முதியவர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டுருப்பேன்.

தியேட்டரில் காமெடிப் படம் பார்க்க சென்றிருப்பேன். சுற்றி இருக்கும் எல்லோரும் படத்தில் வரும் கமெடிக் காட்சிகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் நானோ எப்படிச் சிரிக்க வேண்டும் என்பதையே மறந்து இருப்பேன். பக்கத்தில் இருப்பவன் சிரிக்கும் போது தெரியாமல் என் மேல் விழுந்துவிட்டால் இன் டீசன்ட் பிலோ என்று மனதில் திட்டி இருப்பேன்.

வீட்டில் இருக்கும் போது என்னுடைய கைக்குழந்தையைத் தூக்கி சுமக்க மாட்டேன். அதற்காக வேலைக்கு ஒரு சிறுமியை வீட்டில் வைத்திருப்பேன். வாக்கிங் போகும் போது கூடப் பேபி ஸ்டோலரில் தான் குழந்தையை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்வேன். ஆனால் உடம்பைக் குறைக்க‌ தினமும் ஜிம்முக்கு சென்று வெயிட் லிப்டிங் பண்ண மறக்க மாட்டேன்.

வாக்கிங் செல்லும் போதோ அல்லது பயணங்கள் மேற்கொள்ளும் போதோ உடன் வருபவர்களின் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். மறந்தும் கூட அவர்களின் முகத்தைப் பார்த்து சிரிக்க மாட்டேன். ஆனால் எனக்கென்று தனி உலகம் என்று காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு ஐபேடிலோ மொபைலிலோ பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன்.



கோவிலுக்கோ கடைகளுக்கோ செல்லும் போது அந்த இடங்களில் வண்டியை பார்க் செய்ய வசதி இருக்குமா என்று சிந்திதிக்க மாட்டேன். அங்குக் காரில் சென்று ஒரு மணி நேரம் வெயிட் செய்து காரை பார்கிங் செய்வேன். ஆனால் கடைக்குள்ளோ கோவிலுக்குள்ளோ சென்று சிறிது நேரம் வரிசையில் நிற்க வேண்டி வந்தால் அங்கு எல்லோருடனும் நின்று வரிசையில் வெயிட் செய்ய மாட்டேன், வெளியில் வந்து விடுவேன்.

ஆபிஸில் இருந்து காரில் வரும் போது அந்த‌ பீட்சா கடை இருக்கும் வழியாகத் தான் வந்திருப்பேன். ஆனாலும் வீட்டிற்கு வந்து மொபலில் பீட்சா கடைக்குப் போன் செய்து இரண்டு மீடியம் மஸ்ரூம் பீட்சா ஹோம் டெலிவரி என்று ஆர்டர் செய்வேன்.

.
Related Posts with Thumbnails