Friday, May 30, 2014

டிரைவிங் லைசென்ஸ்_ஆணியே புடுங்க வேண்டாம்!!!

நான் படித்த டிப்ளமோ கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படித்து முடிக்கும் மூன்று வருடத்திற்குள், கல்லூரியில் இருக்கும் டிரைவிங் ஸ்கூலில் சேர வைத்துச் சிறப்புப் பயிற்சியும் கொடுத்து இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கான லைசைன்ஸை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். நானும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுப் படிக்கும் போதே டூவீலர் மற்றும் கார் இரண்டிற்கும் சேர்த்து லைசென்ஸ் வாங்கி வைத்து விட்டேன்.

வாங்கிய லைசென்ஸை பத்திரமாக எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்க்கும் போது கம்பெனி வேலையாக டூவீலர் எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றுவேன். ஒருமுறை கூட டிராபிக் போலீஸில் மாட்டியது இல்லை. நான் அம்பத்தூரில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் போது, பெரும்பாலும் டூவீலரை உபயோகிப்பது மூன்று வழித்தடங்களில் தான். ஒன்று பழைய மெசின் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டூல்கள் வாங்குவதற்காக‌ மோர் மார்கெட் மற்றும் எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்கும் வேளச்சேரி ரானே மெட்ராஸ் மற்றும் எண்ணூர் அசோக் லைலன்ட்.

நான் சென்னையில் டூவீலர் ஓட்டுவது, எனது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. நான் டூவீலர் ஓட்டிவிடக் கூடாது என்பதால் தான் என்னிடம் லைசென்ஸை தராமல் அம்மா வாங்கிப் பாதுக்காப்பாக வைத்திருந்தார். அவர் என்னிடம் லைசென்ஸ் கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனக்குச் சரியாக டூவீலர் ஓட்டுவதற்குத் தெரியாது என்பது அவரது எண்ணம். அவருடைய எண்ணதிற்குக் காரணம் இதுதான். முன்பெல்லாம் சைக்கிள் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் வாடைகைக்கு எடுத்து, ஓட்டி கற்றுக் கொள்ளலாம். கால் வண்டி, அரை வண்டி மற்றும் முழு வண்டி என்று பிரித்து வைத்து ஒரு மணி நேரத்திற்கு 25 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை வாடகை வாங்குவார்கள். இந்த வண்டிகளில் நமக்கு ஏற்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வதற்குப் பெரும்பாடு பட வேண்டும். இப்போது எல்லா வீடுகளிலும் ஆளுக்கு ஒரு டூவீலர் என்று இருக்கிறது, ஆனால் அப்போது ஊரில் அரசு பணியில் இருப்பவர்களிடமோ அல்லது புதிதாக வாத்தியார் வேலைக்குச் சேர்ந்தவர்களிடமோ மட்டும் தான் டூவீலரை பார்க்க முடியும். அவர்களும் அந்த வண்டியில் தனது பொண்டாட்டியைக் கூடப் பின்னால் ஏற்றுவதற்குத் தயங்குவார்கள். காரணம் வண்டியின் டயர் தேய்ந்து போகும் என்று, அவர்களிடம் சென்று ஓட்டி கற்றுக்கொள்ள வண்டி கேட்டால் என்ன சொல்லுவார்கள்?.

எனக்கும் அண்ணனுக்கும் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள‌ வேண்டும் என்ற ஆசை வந்தவுடன் அப்பா ஒரு பழைய ராஜூத் வண்டி(Rajdoot Bike) வாங்கிக் கொடுத்தார்கள். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஊரையே அலற வைக்கும். நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். முழு நேரமும் அண்ணன் தான் அந்த வண்டியை ஓட்டுவான். அந்த வண்டியை தெருவில் ஓட்டி சென்றாலே அனைவரும் ஒதுங்கி வழிவிடுவார்கள். அந்தளவிற்கு ஒலியை எழுப்பும். அப்பா எப்போதாவது என‌க்கு கற்றுக் கொடுக்கச் சொன்னால் மட்டுமே என்னிடம் வண்டியை அண்ணன் கொடுப்பான், இல்லையென்றால் என்னிடம் தர மாட்டன். எனக்கும் அந்த வண்டியை ஓட்டுவதற்குப் பெரியளவில் ஆர்வம் இல்லை. ஒரு வருடத்தில் அந்த வண்டியையும் அப்பா விற்றுவிட்டார்கள். அந்த வண்டியில் ஓட்டிய பழக்கத்தில் தான் காலேஜில் நண்பர்களின் உதவியுடன் லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தேன். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அம்மாவின் தூரத்து உறவுமுறையில்(எனக்கு மாமா முறை வரும்) ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வண்டியில் வந்திருந்தார். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம். ரெம்ப நேரம் வீட்டில் அமர்ந்து எங்களுடன் பேசிவிட்டு கிளம்புவதற்காக வெளியில் வந்தார். அம்மாவும் நானும் கூடவே வெளியில் வந்தோம், திடிரெனப் புது வண்டியை பார்த்தவுடன் எனக்கு ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மாமாவிடம் கேட்டவுடன் அவரும் சாவியைக் கொடுத்துவிட்டார்.

சாவியைக் கையில் வாங்கிய போதே, அம்மா என்னிடம் ஓட்ட‌ வேண்டாம் என்று சொன்னார். பக்கத்தில் நின்ற மாமா, ஒண்ணுமில்லை அக்கா! ஓட்டிப் பழகட்டும் என்றார். எனது வீட்டின் முன்பு வண்டி ஓட்டுவதற்கு என்று பெரிய அளவில் இடம் கிடையாது, சிறிய அளவில் தான் இடம் உண்டு. எங்கள் வீடு சற்று மேடான பகுதியில் இருக்கும், வீட்டின் முன்பு எங்கள் எல்லையின் முடிவில் நாங்கள் செங்கலால் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தோம். நான் வண்டியில் ஏறி காலால் ஸ்டாண்டை எடுத்துவிட்டு முன்னால் சாவியைப் போட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். இதுவரையிலும் எல்லாம் சரியாகத் தான் செய்தேன். யாருக்கும் எந்தவிதமான‌ சேதாரமும் இல்லை. பர்ஸ்ட் கியரை மெதுவாக‌ போட்டு ஆக்ஸிலேட்டரை நான் கொடுத்தது தான் தாமதம் வண்டி எம்பிகுதித்துக் கிளம்பியது. நான் நிதானத்தை இழந்திருந்தேன்.

நான் எனது வீட்டிலிருந்த ராஜூத் வண்டியில் ஆக்ஸிலேட்டரைக் கொடுப்பது போல் எடுத்தவுடன் பாதிக்கு மேல் முறுக்கிவிட்டேன். அந்தப் பழைய ராஜூத் வண்டியில் நீங்கள் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரை முக்கால் பாகம் முறுக்கினால் தான் வண்டி லேசாக மூவ் ஆகும். அதே நினைப்பில், இந்தப் புது ஸ்ப்ளெண்டர் பைக்கிலும் ஆக்ஸிலேட்டரை முறுக்கிவிட்டேன். வண்டி எம்பிகுதித்தவுடனேயே அம்மா அலற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் அலறலும், மாமாவின் பிரேக்கை பிடி!! பிரேக்கை பிடி!! என்ற சத்த‌மும் என்னைப் பதற்றபட வைத்திருந்தது.

பதட்டத்தில் கை என்னையும் அறியாமல் ஆக்ஸிலேட்டரை தான் முறுக்கியது. சிறிதுதூரம் செல்வதற்குள் சுதாரித்துக்கொண்டு பிரேக்கில் காலை வைத்து அழுத்த துவங்கினேன், அதற்குள் வீட்டின் முன்னால் இருந்த செங்கள் சுவரின் மீது மோதி விட்டேன் அந்தப் பதட்டத்தில் வண்டியின் பிரேக், கிளெச், ஆக்ஸிலேட்டர் என்று மொத்ததின் மீதும் இருந்த‌ கை, கால்களை எடுத்திருந்தேன், வண்டியானது காம்பவுண்ட் சுவரை மட்டும் இடித்துத் தள்ளி ஆப் ஆகி நின்றது. வண்டி இன்னும் ஒரு செங்கல் தூரம் நகர்ந்திருந்தால், வண்டியோடு சேர்ந்து நானும் பள்ளத்தில் விழுந்திருப்பேன். எனது வீடு மேட்டில் இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். எங்கள் எல்லையின் காம்பவுண்ட் சுவருக்குக் கீழே ஓர் ஆள் உயரம் பள்ளமாக இருக்கும். என்னுடைய இந்தச் செய்கையை நேரில் பார்த்த பிறகும் எனது அம்மா என்னிடம் லைசென்ஸை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?.

அன்றிலிருந்து நான் வண்டியைப் பற்றியோ, லைசென்ஸைப் பற்றியோ பேசினால், நீ ஆணியே புடுங்க வேண்டாம்!! என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிடுவார்கள். அத்தோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊரில் எவரும் வண்டி ஓட்டிப் பழகுவதைப் பற்றிச் சொன்னால் போதும், அம்மா என்னோட கதையைக் கதாகாலட்சேபமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கல்யாணம் முடிந்த புதிதில் என்னுடைய‌ மனைவியிடமும் இந்தக் கதையைச் சொல்ல மறக்கவில்லை. அந்தளவிற்கு நான் அவர்களை மிரட்டியிருந்தேன். இதனால் தான் என்னுடைய‌ சென்னை வாசம் லைசென்ஸ் இல்லாமல் கழிந்தது.

சென்னையில் இருக்கும் போது ஆபிஸ் வண்டியை எடுத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வெளியில் செல்வேன். என்னுடைய ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் நான் வண்டி ஓட்டியபோது எந்தவொரு டிராபிக் போலீஸிலும் மாட்டியது இல்லை. ஒருமுறை அம்பத்தூர் கம்பெனியிலிருந்து டூல் வாங்குவதற்காக மோர் மார்கெட் செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய டூல்களை என் ஒருவனால் கொண்டுவர முடியாது என்பதால் கூட ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எல்லாம் வாங்கிமுடித்து வரும் வழியில், அண்ணா நான் வண்டியை ஓட்டுகிறேன் என்று என்னுடன் வந்த பையன் வண்டியை வாங்கினான். வண்டியில் ஏறிய அடுத்தச் சிக்னலிலேயே போலீஸின் முன்பு நிப்பாட்டி பைன் கட்ட வைத்துவிட்டான்.



நான் டூவீலர் ஒட்டும் போது லைசென்ஸ் இல்லை என்பதற்காகச் சிக்னலில் போலீஸை கண்டு மிரள்வது கிடையாது, அவருக்குப் பயந்து ஓரமாகக் கொண்டும் வண்டியை நிப்பாட்டுவது இல்லை. துணிச்சலாகச் சிக்னலில் டிராபிக் போலிஸின் முன்னால் தான் வண்டியை நிப்பாட்டுவேன். ஏதாவது ரோட்டில் போலீஸ் மடக்குகிறார்கள் என்று ஒதுங்குவது இல்லை. என்னுடைய போக்கில் நான் சென்றுவிடுவேன். அதுவே எனக்குப் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. டிராபிக் போலீஸை கண்டு மிரண்டாலே, நீங்கள் எல்லாச் சிக்னலிலும் பைன் கட்டுவீர்கள். சில வருடங்கள் இப்படியே போனதான், ஊரில் சொந்தமாக வண்டி வாங்கிய பிறகும் லைசென்ஸ் பற்றிய கவலை எனக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஆபிஸ் வேலையாக‌ வெளிநாடு செல்லும் போது வீட்டில் இருக்கும் லைசென்ஸை தேடினால் கிடைக்கவில்லை. அம்மாவும் வைத்த இடத்தை மறந்திருந்தார்கள். பல வருடங்கள் ஆகியதால் வீட்டில் அவ்வப்போது பெயிண்டிங், ஷிப்டிங் என்று இருக்கும் போது தொலைந்து போனது.

அவ்வாறு தொலைந்த/தொலைத்த‌ லைசென்ஸை சமீபத்தில் தான் வாங்கினேன். அந்தக் கதையையும் நேரம் இருக்கும் போது எழுதுகிறேன்.

Wednesday, May 28, 2014

கல்யாணம்_இந்த ஆவணியில் வேண்டாம்! அடுத்த ஆவணியில் பண்ணலாம்!

எனது அம்மாவின் சித்தி, அப்படியானால் எனக்குப் பாட்டி முறை வேணும். அவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள். அவர்களை வளர்ப்பதில் ஆண், பெண் பேதங்களைக் காட்டினார்களோ! இல்லையோ!, ஆனால் அவர்களைப் பெற்றெடுக்கும் போது சரிசமமாக நான்கு ஆண், நான்கு பெண் என்று ஆண், பெண் சமவுரிமையை நிலை நாட்டினார். அம்மாவின் சித்தப்பாவிற்கு, எனக்குத் தாத்தா முறைவரும், அவர்களுக்கு மாநில‌ அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தில் கிளர்க் வேலை. கணவருக்கு அரசு வேலையாக இருந்தால் பாட்டியால் எட்டுக் குழந்தைகளையும் வளர்ப்பதில் பெரிய கஷ்டம் இருக்கவில்லை. தாத்தாவிற்கும், பாட்டிக்கும் ஆண்டவர் இயேசுவின் மீது அளவுகடந்த பக்தி. ஞாயிறு என்றால் வீட்டில் ஒருவரையும் பார்க்க முடியாது. சர்ச்சில் இருக்கும் எல்லாக் குழுக்கள் மற்றும் சபைகளிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கும். இவர்களுக்குச் சர்ச்சின் மீது இருந்த அதே ஆர்வம் பிள்ளைகளுக்கும் இருந்தது. அதனால் அவர்களின் மூத்த மகள் மற்றும் இளைய மகள் தவிர, மற்ற‌ இரண்டு மகள்களும் கல்யாணம் வேண்டாம் என்று துறவறக் கன்னியர் சபைக்குச் சென்றுவிட்டனர்.

பாட்டிக்கு வரிசையாக‌ பிறந்த எட்டுப் பிள்ளைகளில், கடைக்குட்டியைத் தவிர அனைத்துப் பிள்ளைகளுக்கும் உள்ள பிறப்பின் இடைவெளி என்பது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் தான். கடைக்குட்டி மட்டும் ரெம்பவும் தாமதமாகப் பிறந்தான். கன்னியராகத் துறவறச‌பைக்குச் சென்று இரண்டு சித்திகளைத் தவிர மற்ற இரண்டு சித்திகளுக்கும், இரண்டு மாமாவிற்கும் திருமணத்திற்கான இடைவெளிகள் என்பது ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் இருக்கும். எல்லோருக்கும் ரெம்பத் தாமதமாகத் தான் தாத்தாவும், பாட்டியும் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது மீதம் இருப்பது கடைக்குட்டி மாமாவும், அதற்கு முந்தைய மாமாவும். கடைக்குட்டி மாமாவின் வயதில் இருக்கும் பையன்களுக்கே கல்யாணம் முடிந்தும், பலருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றது. கடைக்குட்டி மாமா பிறந்ததே ரெம்பத் தாமதம் என்று முன்பே நான் சொல்லியிருந்தேன். கடைக்குட்டி மாமாவிற்கும், அதற்கு முந்தைய மாமாவிற்கும் உள்ள வயது வித்தியாசம் எப்படியும் ஆறிலிருந்து ஏழு இருக்கலாம். அப்படியானால் கடைக்குட்டிக்கு முந்தைய மாமாவின் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவரின் வயதை நான் கணக்கிட்டு எழுதினால், இங்கு ஒரு முதிர்கன்னனின்(முதிர்கன்னிக்கு எதிர்பால் முதிர்கன்னனாகத் தானே இருக்கும்!!, உன்னோட தமிழ‌றிவில் தீயை வைத்துக் கொளுத்த!!) வயதை எழுதிய பாவத்திற்கு ஆளாவேன்.

கல்யாணம் ஆகாமல் இருக்கும் மாமாவிற்கு ஊரில் தான் வேலை. எலட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் ஒர்க்குகள் சொந்தமாகக் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்வார்கள், நன்றாகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளும் வேலையில்லை என்று வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். நான் ஊருக்கு வந்திருக்கிறேன் என்று எவர் மூலமாக அறிந்தால், அன்றே எனது வீட்டிற்கு வந்து நலன் விசாரிப்பார்கள். வெளியில் எங்குக் கண்டாலும் என்ன மருமவனே! எப்ப‌டி இருக்கிற? இப்போது எந்த இடத்தில் இருக்கிறாய்? என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்திற்கு முன்பு, நானும் அவரிடம், எப்படி மாமா நல்லாயிருக்க முடியும்?. நீங்க காலக் காலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தா எனக்குச் சைட் அடிக்க நல்ல ஒரு பெண்ணையாவது பெத்து வைத்திருப்பீங்க!! இப்போது பாருங்கள், சைட் அடிக்கக் கூட நல்ல பொண்ணு ஒண்ணும் கிடைக்க மாட்டேங்கிறது! என்று நக்கல் அடிப்பேன்.

மாமாவின் வயதை அவரது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஊகித்து விட முடியாது. தலைமுடி மட்டும் தான் ஆங்காங்கே நரைத்து இருக்கும். உருவத்தில் இளமையாகத் தான் இருப்பார்கள். மாமாவிற்கு இருக்கும் சொந்தபந்தங்களுக்குக் குறைவில்லை. அவருடன் பிறந்தவர்கள் மட்டுமே, ஆளுக்கு ஒரு திசையாகத் தேடியிருந்தால் கூட எப்போதோ அவருடைய கல்யாணம் முடிந்திருக்கும். நான் ஊருக்கு வந்துபோகும் போதேல்லாம் இந்த வருடமாவது கல்யாணம் நடக்குமா மாமா? என்று கேட்பேன். வீட்ல இருக்கிறவர்கள் பாக்குறாங்கடா! ஒண்ணும் அவசரம் இல்ல! பொறுமையாக‌ பண்ணிக்கலாம்! என்று பதில் சொல்லுவார்கள். பெரும்பாலும் ஒருவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்தால் நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் செல்லுவார்கள். ஆனால் இவருக்கு வீட்டில் உள்ளவர்கள் வருடக் கணக்கில் பார்த்தார்கள்.

நான் ஊருக்கு சென்றுவரும் போதெல்லாம் எப்போது மாமா, கல்யாணசாப்பாடுப் போட போறீங்க? என்று கேட்க மறப்பதில்லை. அவரும் சிரித்துக் கொண்டே நீ, கல்யாணசாப்பாடுச் சாப்பிட வேண்டும் என்பத‌ற்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்லிச் சிரிப்பார். சில நேரங்களில் வீட்டில் உள்ளவர்களைக் குறையாகச் சொல்லி கவலைப்படுவார். எனக்குத் திருமணம் முடிந்த பிறகு அவரிடம் கல்யாணம் பற்றிய‌ பேச்சுகளைப் பற்றி அதிகம் பேசுவது கிடையாது. கண்டிப்பாக இப்போது நான் அவருடைய கல்யாணம் பற்றிக் கேட்பது அவருக்கு உறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தால் அதைப் பற்றிப் பேசுவது இல்லை. சில வருடங்களாகவே அவருடைய முகத்தில் கல்யாணத்தைப் பற்றிக் கவலைகள் அதிகமாகத் தென்பட்டது. எப்போதும் மழிக்காத, டிரிம் செய்த‌ அரைத் தாடியுடன் தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எனது வீட்டில் உள்ளவர்கள் எவரேனும் கல்யாணம் பற்றிக் கேட்டால் சலிப்பாகப் பதில் சொல்வார்கள், அல்லது வேறு திசைக்குப் பேச்சை மாற்றுவார்கள்.

கடந்த வாரம் ஊருக்குப் போயிருந்தபோது மாமாவை ஒரு வேலையாகச் சென்ற வழியில் பார்க்க முடிந்தது. முகம் வழவழப்பாக மழிக்கப்பட்டு, தலைமுடியும் அடர்கருப்பில் காட்சியளித்தது. மாமாவிடம் அவருடைய மாற்றம் குறித்து எதுவும் கேட்காமல், சாதரண நலன் விசாரிப்புகள் மட்டும் விசாரித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அண்ணனிடம் மாமாவின் மாற்றத்தைப் பற்றிக் கேட்டேன். ஆமாடா, அவங்களுக்கு நம்ம ஊரிலேயே ஒரு பொண்ணைப் பார்த்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருக்கும் போய்ப் பார்த்திருக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம். நிச்சயதார்த்தம் தேதியும் குறித்துவிட்டார்கள் என்றான். எனக்கும் மனதிற்குச் சந்தோசமாக இருந்தது.

மறுநாள் மாலையில் வெளியில் சென்றுவந்த அப்பா, மாமாவிற்குப் பார்த்து வைத்திருந்த பெண்ணின் வீட்டார்கள், இந்தத் திருமணம் வேண்டாம்! நிறுத்திவிடலாம்! என்று சொல்லிவிட்டார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். நான் அப்பாவிடம் என்ன காரணம்? என்று கேட்டேன். அப்பாவிடம் விசயத்தைச் சொல்லியவருக்கும் சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. மொட்டையாகப் பெண் வீட்டார்கள் திருமணம் இப்போது வேண்டாம்!! என்று சொல்லியதாகக் கூறினார்கள். இதைக் கேட்டுகொண்டிருந்த அம்மா, நேற்று மூத்தவன்(தாத்தாவின் எட்டுப் பிள்ளைகளில் முதலானவர்) வீட்டிற்கு வந்திருந்தான். தான் இன்னும் இளையவனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நேரில் பார்க்கவில்லை என்றும், நேற்று மாலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்ப்பதாகவும் சொன்னானே!!. ஒருவேளை இவர்கள் சென்று பார்த்த நேரத்தில் தான் ஏதேனும் பிரச்சனை வந்திருக்கும், எதற்கும் அவனை விசாரித்தால் தெரியும்! என்று மூத்த மாமாவிற்கு அம்மா போன் செய்தார்கள்.

நீங்கள் கேள்விப்பட்ட‌ விசயம் உண்மையானது தான்!. அவன் நாளைக்குக் காலையில் வீட்டிற்கு வந்து என்ன விசயம் என்பதை விளக்கமாக‌ சொல்லுகிறேன் என்று போனை வைத்துவிட்டான் என்று சொல்லி, அம்மா அப்பாவின் முகத்தைப் பார்த்தார்கள்.

காலையில் வீட்டிற்கு வந்த மூத்த மாமா அம்மாவிடம், தம்பிக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நானும் என்னோட பொண்டாட்டியும் பார்க்கவில்லை. வீட்ல உள்ளவர்கள் எல்லோரும் பெண்ணைப் பார்ப்பதற்குப் போகும் போது என்னோட குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லாத‌தால் நானும் வீட்டுக்காரியும் குழந்தையை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போய்விட்டோம். அன்றிலிருந்தே என்னிடம் நீயும் அண்ணியும் வந்து எனக்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பாருங்க! என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சரி! என்று சொல்லி இளையவன்(கடைக்குட்டி மாமா), நான், என்னோட மனைவி, குழந்தை மற்றும் அப்பாவும் போய்ப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். கிளம்புகின்ற நேரம் நானும் உங்க கூட வருகிறேன் என்று சொன்னான். அவனுக்காக‌ தான் பொண்ணையே பார்ப்பதற்குப் போகிறோம், நீ எங்க கூட வரதே! என்று அவனைத் தடுக்கவா முடியும். சரி வா! என்று சொன்னோம்.

பெண்ணின் வீட்டிற்குச் சென்று அமர்ந்திருந்தோம். அப்போது பெண்ணின் அம்மா தான் பேச்சை ஆரம்பித்தார்கள், எனக்கு இருப்பது இரண்டு பெண்கள், ஒரு பையன். மூத்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவளோட மாப்பிள்ளை ஒரு குடிக்காரன். அவனால ஒரு பிரியோஜனம் இல்ல, இந்தக் கல்யாணத்தை முன்னின்று நடத்த வேண்டிய என்னோட புருசனும், மூக்கு முட்ட குடிச்சிட்டு இந்தா ரூம்ல‌ கட்டிலில் விழுந்து கிடக்கிறான், அதனால எதுனாலும் நான் தான் பேச வேண்டும் என்றார்.

வீட்டின் நிலைமையை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசினார். என்னோட பையன் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். அவன் ஆவணி மாதம் தான் ஊருக்கு வருகிறான். இப்போது சித்திரை மாதம், நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். எங்கள் பையன் வரும் ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்றார். இதைக் கேட்டுகொண்டிருந்தவன் சட்டென்று இந்த ஆவணி மாதம் எதற்கு? அடுத்த வருடம் ஆவணி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று நக்கலாகப் பதில் சொன்னான். இவ்வாறு இவன் பேசியது பெண்ணின் அம்மாவிற்குக் கோபத்தைத் தூண்டியிருக்கும். ஆனால் அவர் அதைப் பேச்சில் வெளிக்காட்டாமல் முகத்தில் வெளிக்காட்டினார். பெண்ணின் அம்மா எந்தவொரு விசயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், பக்கத்தில் இருந்தவன் சும்மா இருக்காமல் அவர்கள் பேசுவதை நையாண்டி செய்வது போலவே பேசினான். நான் கையைப் பிடித்து அழுத்திகொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நீ அமைதியாக இரு! பெரியவர்கள் பேசட்டும் என்றும் சொன்னேன். அவன் எதுவும் காதில் போட்டு கொள்ளவில்லை.

இவனுக்குப் பெண்ணின் அம்மா ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னது பிடிக்கவில்லை. உடனே கல்யாணம் செய்யவேண்டும் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தான்.

எது எப்படியோ, இவன் இவ்வாறு நக்கல் செய்து கொண்டிருந்தது பெண்ணின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. நாங்கள் வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வரும் போது, எவர் இந்தத் திருமணத்திற்காக ஓட்டன்(புரோக்கர்) வேலைப்பார்த்தாரோ அவரிடம், என்னோட பொண்ணுக்கு நான் இப்போது கல்யாணம் பண்ணவில்லை. மெதுவாக வேற‌ நல்ல இடமாகப் பார்க்கலாம் என்று எனது காதில் படும்படியே சத்தமாகச் சொன்னார். அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்தோம் என்று கூறி முடித்தார்.

அட! மாமா! மாமா!

சாப்பாட்டை ஆக்க பொறுத்த நீங்க!! ஆற பொறுக்கலியே!!!

.

Wednesday, May 7, 2014

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்_நீங்கள் தான் காசு கொடுக்கணும்!!!

இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்த ஒரு விமானபயணம் எனக்கு இதுவரையிலும் ஏற்பட்டிருக்கவில்லை. விமானபயணத்தில் டிரான்சிட் இருக்குமானால் அந்தப் பயணம் அவ்வளவு சுவரஸ்யமாக இருக்காது, ஒவ்வொரு டிரான்சிட்டிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து, உங்களுடைய‌ கேபின் பேக்கேஜ் ஸ்கேன் மற்றும் கஸ்டம்ஸ் செக்கப் போன்றவற்றை முடித்து அடுத்த விமானத்தைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்று உங்களுக்கு ஆகிவிடும். சவூதி அரேபியாவில் உள்ள‌ தமாம் ஏர்பேர்ட்டிலிருந்து கிளம்பிய நான் துபாய் சென்று, மஸ்கட்டையும் சுற்றி ஒருவழியாகத் திருவனந்தபுரத்தை அடைந்த போது, எமிரேட்ஸ் அதிகாரிகள் வந்து உங்களுடைய‌ செக்கிங் பேக்கேஜ் வரவில்லை என்று சொல்லியது, இன்னொரு தலைவலியாக அமைந்தது.

மேலே இருக்கும் என்னுடைய‌ பயண அனுபவத்தைப் படிக்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி படிக்கலாம்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்_நீங்க எல்லாம் நல்லா வரணும்!!!



நீண்ட ஒரு பார்மை கையில் கொண்டுவந்த எமிரேட்ஸ் பெண் ஸ்டாப், முதலிலேயே தன்னை அறிமுகம் செய்துவிட்டு, என்னுடைய விமான‌ டிக்கெட்டையும், பாஸ்பேர்ட்டையும் வாங்கித் தேவையான தகவல்களை அந்தப் பார்மில் எழுதிக் கொண்டார். என்னுடைய செக்கிங் பேக்கேஜில் இரண்டு லக்கேஜ் பேக் இருந்தது. ஒன்றின் வெயிட் தோரயமாகப் பதிமூன்று கிலோ இருக்கும், இன்னொன்று பனிரெண்டு கிலோ இருக்கும். இப்போது என்னிடம் அந்தப் பேக்குகளில் இருந்த பொருட்களின் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.

என்னுடைய லக்கேஜ் பேக்குகளில் இருக்கும் பொருட்களிளின் தக‌வல்களை ஓரளவுச் சரியாகத் தருமாறு முன்பே அந்தப் பெண் ஸ்டாப் கேட்டுக்கொண்டார். நானோ அவசர அவசரமாகச் சவூதியிலிருந்து கிளம்பி வந்ததால், கிளம்புவதற்கு முதல்நாள் தான் லூ லூ மாலுக்கு(Lu Lu Shoping Mall) சென்று சில பொருட்கள் வாங்கி இரண்டு லக்கேஜிலும் அடைத்து வந்தேன். அதிலிருந்த பொருட்களின் விபரங்கள் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவர் வைத்திருந்த பார்மில் வெளிநாட்டிலிருந்து, நம்மவர்கள் கொண்டுவரும் பொருட்களின் விபரங்கள் எழுதப்பட்டிருந்து. அந்தப் பார்மில் இருக்கும் பெருள் நம்முடைய லக்கேஜில் இருக்கிறது என்றால் அதன் எடை அல்லது எத்தனை எண்ணம் என்ற விவரம் மட்டும் கொடுத்தால் போதும். இந்த வசதி எனக்கு ரெம்ப உதவியாக இருந்தது, என்னுடைய லக்கேஜ் பேக்கில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் ஞாபகபடுத்த வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.

எமிரேட்ஸ் பெண் ஸ்டாப் பார்மில் எழுதியிருந்த ஒவ்வொரு பொருட்களின் பெயர்களையும் என்னிடம் சொல்ல, அந்தப் பொருட்கள் என்னுடைய லக்கேஜில் இருக்கின்றனவா? எத்த‌னை கிலோ இருக்கின்றது? என்ற விவரங்களை நானும் சொல்ல, அவரும் குறித்துக் கொண்டே வந்தார். டீவியில் ஆரம்பித்துச் சோப்பு, சீப்பு, கண்ணாடி வரை அந்தப் பார்மில் இருந்தது. எதற்காக இந்தளவு விவரங்கள் கேட்டு எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன், அதற்கு அவர் "கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் பண்ணுவதற்கு இந்தத் தகவல்கள் தேவை சார்! என்றுமட்டும் தான் என்னிடம் சொன்னார்.

ஆனால் அவர் எல்லாவற்றையும் எழுதிமுடித்து, அந்தப் பார்மை என்னிடம் கொடுத்துவிட்டு, நான் எல்லாம் சரியாக எழுதியிருக்கிறேனா? என்று ஒருமுறை படித்துவிட்டு என்னிடம் கையெழுத்துப் போடும்படி சொன்னார். அப்போது நான் இருந்த அவசரத்தில் கையெழுத்தைப் போட்டுவிட்டு, மறுபக்கம் இருந்த டெர்ம்ஸ் அன்ட் கண்டிசனை(Terms and Conditions) மேலோட்டமாகப் படித்தேன். அதில் ஒருவேளை என்னுடைய லக்கேஜ் தொலைந்துவிட்டால், நான் இங்கு எழுதி கொடுத்திருக்கும் பொருட்களை மட்டும் தான் அவர்களிடம் கிளைம் செய்யமுடியும் போன்ற விபரங்களை நல்ல விவரமாகச் சொல்லியிருந்தார்கள். நான் அந்தக் கண்டிசன்களைப் படிப்பதை பார்த்த அந்த எமிரேட்ஸ் பெண் ஸ்டாப் உங்க லக்கேஜ் எல்லாம் தொலையாது சார்! கண்டிப்பா வந்திடும்! நீங்க பயப்படாமல் கையெழுத்துப் போடுங்கள் என்று சொல்லிச் சிரித்தார்.

விமானபயணத்தில் ஏற்பட்ட களைப்பும், சலிப்பும் ஒரு சேர இருந்ததால் என்னால் அவரிடம் சகஜமாகச் சிரிக்க முடியவில்லை. எத்தனை நாட்களில் என்னுடைய லக்கேஜ் வரும் என்று கேட்டேன். அவர் சாதரணமாகப் பதினைந்து நாட்கள் ஆகும் சார், உங்களுக்கு நாங்கள் தகவல் சொல்லியபிறகு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். எனக்கோ கடுங்கோபம், ஏங்க! நான் வரவேண்டிய பிளைட் வரவில்லை சரி! மறுநாள் வரும் விமானத்தில் என்னுடைய லக்கேஜை அனுப்ப வேண்டியது தானே, எதற்குப் பதினைந்து நாட்கள் என்றேன். நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பார்மில் ஒரு காப்பியை என்னிடம் கொடுத்துவிட்டு, சார்!! நான் இந்த வேலைக்குப் புதிது, நீங்க வந்து மேனேஜரிடம் பேசுங்கள் என்றார்.

நானும் மேனேஜரின் அறைக்குச் சென்று கேட்டேன், அவரோ, அந்தப் பெண் ஸ்டாப் மலையாளத்தில் சொல்லியதை, இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நான் அவரிடம் என்னுடைய விடுமுறையே மொத்தம் பத்து நாட்கள் தான்! நீங்கள் பதினைந்து நாட்கள் கழித்துத் தான் லக்கேஜ் வரும் என்று கூலாகச் சொல்லுகிறீர்களே! என்று கேட்டேன். அதற்கு அவர் நான் மேக்சிம் டைம் சொல்லுகிறேன், அதற்கு முன்னதாகவே வந்திடும்! உங்கள் லக்கேஜ் சீக்கரமே கிடைப்பத‌ற்கு நான் துபாய் ஆபிசில் பேசுகிறேன் என்றார். என்னவோ பண்ணுங்கள்!! உங்கள் விமானத்தில் பயணம் செய்தது தான் நான் செய்த‌ தவறு!! என்று சொல்லிவிட்டு வெளியே எனக்காகக் காருடன் காத்திருந்த அண்ணனுடன் வீட்டிற்குக் கிளம்பினேன்.

சரியாக நான்கு நாட்களில் வீட்டு லேண்ட் லைன் போனில், எமிரேட்ஸ் ஆபிஸ் திருவனந்தபுரத்திலிருந்து பேசுகிறோம் என்று அப்பாவிடன் சொல்லி, உங்கள் மகனுடைய‌ லக்கேஜ் வந்துவிட்டது! அவரை வந்து வாங்கிக்கொள்ள சொல்லுங்கள், என்று போனில் பேசியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்போது வீட்டில் இல்லை, வெளியில் ஒரு வேலையாக‌ போயிருந்தேன், வீட்டிற்கு வந்தவுடன் அப்பா விசயத்தைச் சொன்னவுடன், என்னிடம் அவர்கள் கொடுத்திருந்த ஒரு காப்பிப் பார்மில் இருந்த போன் நம்பரை அழைத்து உறுதிபடுத்திக் கொண்டேன். என்னிடம் பேசிய ஒரு பெண் ஸ்டாப் உங்கள் லக்கேஜ் கஸ்டம்ஸில் இருக்கிறது, நீங்கள் வந்து கஸ்டம்ஸ் முடித்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

அன்று மாலை நான்கு மணியளவில் கார் எடுத்துகொண்டு நானும், அண்ணனும் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்குக் கிளம்பினோம். நான் ஏற்கனவே ஒரு பதிவில் என்னுடைய ஊரில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்குச் செல்லுவதற்கு இரண்டு மணிநேரமும், 1600 ரூபாய் வாடகையும் ஆகும் என்று சொல்லிருக்கிறேன். மாலை ஆறு மணிக்கெல்லாம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்குச் சென்றுவிட்டோம். ஏர்போர்ட் வாயிலில் காவலுக்கு நிற்கும் போலிசாரிடம் விசயத்தைச் சொல்லி என்னிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் கொடுத்த பார்மின் ஒரு காப்பியையும் காட்டி உள்ளே சென்றேன். நேராக எமிரேட்ஸ் ஆபிஸுக்குள் சென்றேன். அங்கு இருந்த ஒருவர் என்னிடம் விசயத்தைக் கேட்டுவிட்டு, என்னை நேராகக் கஸ்டம்ஸ் பிரிவுக்குக் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மூலையில் வரிசையாக‌ லக்கேஜிகள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அதில் என்னுடைய லக்கேஜை மட்டும் தேடவதற்குச் சொன்னார்.



அங்கு இருந்த மொத்த லக்கேஜிகளையும் சுற்றிசுற்றி வந்து பார்த்தேன். அதில் என்னுடைய ஒரு செக்கிங் பேக்கேஜ் மட்டும் தான் இருந்தது, இன்னொன்றை அங்குக் காணவில்லை. விசயத்தை என்னுடன் வந்த‌ எமிரேட்ஸ் அலுவலரிடம் தெரிவித்தேன். அவர் இன்னும் ஒருமுறை தேடிப்பார்பதற்குச் சொன்னார். நானும் பிள்ளையார் சிலையைச் சுற்றுவது போல் லக்கேஜ் இருக்கும் இடத்தை இருமுறை சுற்றிவந்து விட்டேன். என்னுடைய இன்னொரு லக்கேஜ் கண்ணில் மாட்டவில்லை, அங்கு இருந்தால் தானே கண்ணில் மாட்டும். இப்போது இருக்கும் ஒரு லக்கேஜை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்றால், கஸ்டம்ஸில் இருந்த ஆபிஸர்கள் அனுமதிக்கவில்லை. உங்களுடைய பார்மில் இரண்டு செக்கிங் பேக்கேஜ் என்று போட்டிருக்கிறது, ஒன்றை மட்டும் எங்களால் உங்களுக்குக் கொடுக்க முடியாது, இரண்டும் வந்தபிறகு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். நான் எமிரேட்ஸ் அலுவலரின் முகத்தைப் பார்த்தேன். அவர் சார்! நீங்க வாங்க! இவர்களிடம் பேசவும் கூடாது, பேசவும் முடியாது என்று சொல்லி என்னை அழைத்துத் திரும்பவும் எமிரேட்ஸ் அலுவலகத்திற்குக் கூட்டி வந்தார்.

திரும்ப எமிரேட்ஸ் ஆபிஸுக்கு வந்தவுடன், அங்கிருந்தவர்களிடம் எதற்காக‌ என்னை வர சொன்னீர்கள்? என்று கேட்டேன். அதற்கு உங்களில் ல‌க்கேஜ் வந்திருக்கு என்று காலையில் ஷிப்ட் முடித்தவர்கள் எங்களிடம் சொன்னார்கள், நாங்கள் சென்று செக் பண்ணவில்லை, சாரி சார்! எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்கள். நான் இப்போது யாரிடம் பேசவேண்டும் என்று கேட்டேன், அதற்கு அவர்கள் பக்கத்துக் கேபினை கையைக் காட்டினார்கள். அங்குச் சென்றால் ஏர்ஹோஸ்டர் டிரஸ் அணிந்த‌ பெண் ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று விசயத்தைச் சொல்லி கேட்டால், சார்! கஸ்டம்ஸில் எங்களால் பேச முடியாது, அதனால் உங்களுடைய இன்னொரு லக்கேஜும் வந்தபிறகு ஒன்றாக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் 1600ரூபாய் காருக்கு வாடகையைக் கொடுத்து என்னுடைய வேலையை எல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் ரெம்பச் சாரி சார்! உங்களுடைய இந்தக் கார் வாடைகையை எங்களது ஆபிஸில் தருவத‌ற்கு சொல்லுகிறோம் என்றார். அடுத்த முறை வரும் போது கார் வாடகைக்கான பில்லை கொண்டு வாருங்கள் என்றார். இதற்கு மேலும் இவரிடம் பேசுவதால் எந்தவிதப் பலனுமில்லை என்று வெறுங்கையுடன் திரும்பவும் வீட்டிற்குக் கிளம்பினேன்.

அடுத்த இரண்டு நாட்களில் திரும்பவும், என்னுடைய மொபைல் நம்பருக்கே போன் செய்து அழைத்திருந்தார்கள். இந்தமுறையும் கார் எடுத்துகொண்டு அண்ணனும், நானும் ஏர்போட்டிற்கு வந்தோம். இந்தமுறை கஸ்டம்ஸ் ஏரியாவில் என்னுடைய இரண்டு பேக்கேஜை மட்டும் தனியாக எடுத்து வைத்திருந்தார்கள். நான் சென்றவுடன் கஸ்டம்ஸில் இருந்த ஆபிஸர், உங்க லக்கேஜை எடுத்துசென்று ஸ்கேன் பண்ணி வாருங்கள் என்றார். நான் எடுத்துசென்று ஸ்கேன் பண்ணிவந்தவுடன், என்னிடம் இருந்த பார்மில் எழுதியிருந்த லிஸ்டை பார்த்துவிட்டு, உங்களின் பேக்கேஜில் இருக்கும் பொருட்களின் மதிப்பை பார்க்கும் போது முப்பதாயிரத்தை தாண்டும் போல இருக்கிறது, அதனால் நீங்கள் டியூட்டி கட்ட வேண்டும் என்றார். நான் அவரிடம் முப்பதாயிரம் தாண்டாது என்றேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் என்னுடைய கையைப் பிடித்துச் சிறிது தூரம் அழைத்துச் சென்று பாட்டில் ஏதாவது இருந்தால் கொடுத்துவிட்டுப் போங்கள் என்றார். நான் அவரிடம் அப்படி எதுவும் என்னிடம் இல்லை என்றேன். சரி! ஒரு சிறிய தொகையாவது டியூட்டி கட்ட வேண்டும் என்றார். நான் என்னுடைய பயண அனுபவத்தைச் சொன்னவுடன், ஐநூற்று முப்பது ரூபாயை ஒரு ரசீதில் எழுதி அங்கிருந்த‌ பேங்கில் கட்டிவருவத‌ற்கு சொன்னார். எல்லாம் விதி என்று நினைத்துக்கொண்டே, அதையும் கட்டிவந்து லக்கேஜை எடுத்துக் கொண்டேன்.

டிராலியில் லக்கேஜை எடுத்துக் கொண்டு, எமிரேட்ஸ் ஆபிஸுக்கு சென்று, என்னுடைய கார் வாடகைக்கு ஆன பணத்தைக் கேட்டேன். இப்போது தான் இவர்களின் சுயரூபத்தைப் பார்க்க முடிந்தது. ஒருவர் மாறி ஒருவர் வந்து என்னிடம் விபரங்கள் கேட்க ஆரம்பித்தார்கள். ஆளுக்கு ஒரு லாங்குவேஜில் பேசினார்கள். முதலில் வந்தவர் மலையாளத்தில் பேச ஆரம்பித்தார். நானும் மலையாளத்தில் பதில் சொல்லிகொண்டே இருந்தேன். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியாக‌ சார்! எங்களால் உங்களுக்கு வாடகை பணம் தரமுடியாது என்றார். ஏன்? என்று நான் கேட்டால், உங்களுடைய லக்கேஜ் தொலைந்தது ஓமன் ஏர்வேஸிசில். அதற்கு நாங்கள் பணம் கொடுத்தால் எங்களுடைய மேனேஜ்மென்ட் ஒத்துகொள்ளாது என்றார். நான் அவரிடம் என்னை இருமுறை அலைய வைத்திருக்கிறீர்கள். அது யாருடைய தவறு? என்றேன். அதற்குப் பதில் சொல்லமுடியாமல் கேபினின் உள்ளே சென்று இன்னொருவரை அனுப்பிவைத்தார். இப்போது வந்தவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசி முதலிருந்து தக‌வல்களைக் கேட்க ஆரம்பித்தார். இவரும் அவர் சொல்லியதையே சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

இப்போது வெளியில் வந்தவர் என்னிடம் ஹிந்தியில் பேசுவத‌ற்கு ஆரம்பித்தார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அவரிடன் இன்னும் எத்தனை பேருக்கு நான் விளக்கமும் தகவலும் அளிக்க வேண்டும். உங்களுடைய மேனேஜரை அழையுங்கள் நான் அவரிடமே பேசிக் கொள்கிறேன் என்றேன். என்னுடைய கோபத்தைப் பார்த்தவர் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் மேனேஜர் வெளியில் வந்தார். வந்தவர் நன்றாகத் தமிழ் பேசினார். என்னிடம் வந்து அமைதியாகச் சார்! உங்களுடைய கார் வாடகை பணத்தைக் கொடுக்கிறேன் என்று தெரியாமல் சொல்லிவிட்டார்கள்! இப்படி வாடகை பணம் கொடுக்க எங்களிடன் எந்தவிதமான சிஸ்டமும் கிடையாது என்றார். நான் அவரிடம், ஒருமுறை மட்டும் வந்து என்னுடைய லக்கேஜ் எடுத்திருந்தால், நான் பெரிதும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் இரண்டுமுறை என்னை அலைய வைத்திருக்கிறீர்கள்! அதுவும் இல்லாமல் தவறான தகவல்களை வேறு கொடுக்கிறீர்கள், இப்போது கூட நீங்கள் உள்ளே இருந்து கொண்டு வேறு ஆட்களை அனுப்பிப் பேசுகிறீர்கள், இதுதான் உங்களின் கஸ்டமர் சர்வீஸா? என்று அவரிடம் வாதம் செய்தேன்.

எல்லாவற்றிற்கும் அந்த மேனேஜர் ரெடிமேடக ஒரு பதில் வைத்திருந்தார். கடைசியாக இரண்டுமுறை காரில் வந்து போனதற்கு, ஒருமுறை மட்டும் பணம் கொடுக்கிறேன் என்று ஒத்துக் கொண்டார். அதுவும் அவருடைய சம்பளத்திலிருந்து இந்தப் பணத்தைத் தருவதாக வேறு ஒரு கதையை அளந்தார்.

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா!!, கம்பெனிக்கு விசுவாசமா இருங்க, அதுக்காக அடுத்தவனை ஏய்த்து உங்களின் கடமை உணர்ச்சியை வெளிக்காட்டதீர்கள்!!.

இதைப்போல் எத்தனை மனித‌ர்களைப் பார்த்திருப்போம்!!! அவர்களின் எத்தனை கதைகளைக் கேட்டிருப்போம்!!!

.

Saturday, May 3, 2014

தயவுசெய்து கிச்சன் பக்கம் வராதீங்க!!!

அன்றைக்குச் சனிக்கிழமை, ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் தூங்கி எழுவதேற்கே லேட்டாகிவிட்டது. மனைவியோ சீக்கிரமே எழுந்து டிபன் ரெடி பண்ணிவிட்டார். நான் பல்தேய்த்து, குளித்து டிபன் சாப்பிட டேபிளில் அம‌ரும் போது மணியானது பத்தை தாண்டியிருந்தது. வாரிய தலையுடன் வெளியில் கிளம்பிய மனைவி எனக்கு அவசர அவசரமாக நான்கு இட்லியை தட்டில் பரிமாறிவிட்டு, "நான் பக்கத்து வீட்டு அக்கா கூடச் சூப்பர் மார்கெட் போய் வருகிறேன், கொஞ்சம் நீங்க ப்ரிஜில் இருக்கும் கீரையை வெளியில் எடுத்து ந‌றுக்கி மட்டும் வைச்சுருங்க!" என்று சொல்லிவிட்டுக் கையில் கூடையுடன் கிளம்பினார்.

காலையில் எப்போதும் டிபன் சாப்பிடும் நேரத்தை விட இன்று லேட்டாக இருந்ததாலோ என்னவோ, பசி அதிகமாக இருந்தது. தட்டில் மனைவி வைத்த நான்கு இட்லி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு இட்லி எடுத்து சாப்பிட்டுவிட்டு கிச்சன் சென்று ப்ரிஜ்ஜில் பாலீதீன் கவரில் இரண்டு கட்டுகளாகக் கட்டியிருந்த கீரையை எடுத்தேன். கீரையின் வேரில் அதிகமான அளவு மண் ஒட்டியிருந்தது. அதைத் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நறுக்கத் தொடங்கினேன். இரண்டு கட்டுகளையும் நறுக்கிய போது ஒரு பெரிய தட்டு முழுவதும் வந்தது.

சூப்பர் மார்கெட் சென்ற மனைவி திரும்பி வருவதற்கு நேரம் இன்னும் அதிகமாகவே இருந்தது. அதனால் நறுக்கிய கீரையை நாமே பொரியல் செய்தான் என்ன? என்ற எண்ணம் மனதில் எழவே, உடனே அதைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கினேன். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவையிரண்டையும் தனியாக நறுக்கி வைத்துக் கொண்டேன். தேங்காயும் துருவி தனியாக ஒரு தட்டில் அரைத்து வைத்துக் கொண்டேன். இப்போது ஸ்டவ்வில் கடாயை வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம் பருப்புப் போட்டு, வெங்காயம் பச்சை மிளகாயைக் கொட்டி வதக்கிவிட்டு நறுக்கிய‌ கீரையைக் கொட்டினேன்.



கொட்டிய கீரையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்புப்போட்டு கிளறி, கடாயைச் சிறிது நேரம் மூடி வைத்தேன். சிறிது நேரத்தில் மூடியை எடுத்து கீரையைக் கிளறிவிட்டு ரெடியாக இருந்த தேங்காயைத் தூவி இறக்கினேன். இருபதில் இருந்து முப்பது நிமிடங்களில் எல்லாம் வேலையும் முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து டீவியை ஆன் செய்து ஒவ்வொரு சானலாக மாற்றத் தொடங்கினேன்.



சிறிது நேரத்தில் சூப்பர் மார்கெட் சென்ற மனைவி வீட்டிற்குள் நுழைந்தார். வாயிலில் நுழையும் போதே, நான் கீரையை நறுக்கி மட்டும் தானே வைக்கச் சொன்னேன், பொரியலே பண்ணிடீங்களா!! என்று ஹாலில் இருந்த‌ என்னிடம் கேட்டுக் கொண்டே கிச்சனுக்குள் சென்றார். கிச்சன் ஷெல்பில் அவர் கழுவி அடுக்கி வைத்திருந்த மொத்தப் பாத்திரங்களும், இப்போது வாஷ் பேஷனில் கிடந்தது. ஒரு கீரையைப் பொரியல் பண்ணுவதற்குள் இவ்வளவு பாத்திரங்களையா எடுத்து வாஷ் பேஷனில் போடுவது? என்று கேள்வியை என்னிடம் திருப்பினார்.

ஆமா!! என்பது போல் பெரிதாக‌ தலையை ஆட்டி வைத்தேன்.

சரிங்க, வாஷ் பேஷ‌னில் இருக்கும், இந்த இரண்டு பெரிய பாத்திரத்தை வைத்து என்ன செய்தீர்கள்?

கீரையின் வேரில் மண் அதிகமாக ஒட்டியிருந்தது, அதனால் ஒன்றில் மாற்றி ஒன்றில் கழுவினேன்.

அதுக்கு எதுக்குப் பாத்திரம்? வாஷ்பேஷனில் இருக்கும் டேப்பை திறந்துவிட்டே கழுவலாமே!!

ஓ!! இதை இப்படிக் கூடச் செய்யலாமா என்று மைன்ட் வாய்ஸ் சொல்லியது.
ஆமாயில்ல, சரி அடுத்த முறை அப்படியே கழுவலாம்..

ஆமாங்க!! எதுக்கு ரெண்டு கடாயும் எடுத்துக் கழுவுதற்குப் போட்டிருக்கீங்க? சின்னக் கடாயில் தானே கீரையைப் பண்ணியிருப்பீர்கள், அப்புறம் எப்படிப் பெரிய கடாயும் வாஷ் பேஷனுக்கு வந்தது?.

சின்னக் கடாயில் தான் பொரியல் பண்ண ஸ்டவ்வில் வைத்தேன், கீரையை முழுவதும் கொட்டிய போது அந்தச் சிறிய‌ கடாயில் நிற்கவில்லை, அதனால் பெரிய கடாயை எடுத்து மாற்றினேன்.

என்னது!! சின்னக் கடாயில் கீரை நிற்கவில்லையா? அப்படினா எத்தனை கட்டுகள் எடுத்து பொரியல் செய்தீர்கள்?.

ப்ரிஜ்ஜில் இருந்த இரண்டு கட்டையும் நறுக்கி பொரியல் செய்தேன்.

நாம் ரெண்டு பேரும் சாப்பிட‌ ரெண்டு கட்டு கீரையா?. ஒரு கட்டுத் தாராளமா போதுமே, பண்ணியது எல்லாம் சரிதான், ரெண்டு கட்டையும் நீங்க தான் சாப்பிடணும்!!

அதுக்கென்ன!! சாப்பிட்டால் போச்சு!!

ஆமா! ஷெல்பில் இருந்த மொத்த தட்டுகளும் இங்க தான் கிடக்குது!! அதுல என்ன செய்தீர்கள்?.

அது.. வந்து... ஒரு தட்டுல வெங்காயம் வெட்டி வச்சேன், அப்புறம்ம்ம்ம் ஒரு தட்டுல பச்சை மிளகாய் வெட்டி வச்சேன், இன்னொன்னுல தேங்காய்....

எல்லாம் சரிங்க!! கீரை பொரியல் பண்ணுவதற்கு எதுக்குங்க மிக்சி?..

அது வந்து, தேங்காயை துருவி துருவி பார்த்தேன், சரியாக வரல, அதனால தேங்காயை உடைத்து போட்டு மிக்சியில் அரைத்து கொட்டினேன்..

பத்து நிமிடத்தில் நான் செய்யுற பொரியல், அதை நீங்கள் செய்து ஒரு மணி நேரம் எனக்குப் பாத்திரம் கழுவும் வேலையைக் கொடுத்திருக்கிறீர்கள்!!!

"இதுக்கு பேசாமல் கையை காலை வச்சுட்டு, டீவியாவது பார்த்திருக்கலாம்". மைன்ட் வாய்ஸ்

ஹாலில் ஓடிய டீவியில் வெற்றிக்கொடி க‌ட்டுப் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விகளுக்குப் பார்த்திபன் கொடுக்கும் பதிலை பார்த்து, வடிவேலு தன் முகத்திற்கு நேரே கையை நீட்டி வேணுன்டா!! உனக்கு வேணும்!! என்ற வசனம் பேசும் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.


.

Thursday, May 1, 2014

ரியல் எஸ்டேட் தொழில் எனும் நீர்குமிழி!!!

ஊரில் பெற்றோர்கள் சம்பாதித்து வைத்த பணத்தைப் படிக்கும் போதே ஊதாரித்தனமாகச் செலவு செய்துகொண்டும், படித்து முடித்த பிறகும் உருப்படியாக எந்த வேலைக்கும் செல்லாமல் பொறுக்கித் தனமாக ஊரை சுற்றிக் கொண்டிருந்த சிலர், திடிரென வெள்ளையும் சொள்ளையுமாக ஊரில் வலம் வந்தார்கள். இவர்களின் கெட்டப்பே தலைக்கீழாக மாறியிருந்தது. காலையில் குளிக்கிறார்களோ, இல்லையோ, நம்மருகில் வந்தால், உடல் முழுவதும் சென்டின் வாசம். கழுத்தை சுற்றி ஒரு பெரிய‌ முறுக்கு செயின், இந்த முறுக்கு செயின் கழுத்தில் போட்டிருப்பது வெளியில் தெரியுமளவிற்குச் சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் எப்போதும் திறந்தே வைத்திருப்பார்கள்.

வலதுகையில் ஒரு விரல் தடிமனுள்ள சங்கிலியை பிரேஸ்லெடாகச் சிலர் போட்டிருப்பார்கள். இன்னும் சிலர் தங்கத்தால் செய்த‌ குறுங்வளையத்தைக் கையில் அணிந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள். புதிதாகப் பார்த்த எவரும் "இவன் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டான்" என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக‌வே மீசையும் பெரிதாக வைத்திருப்பார்கள். இப்படிக் கெட்டப் போட்டு சொந்த ஊரில் சுற்றுபவர்கள் சொல்லிக்கொண்டிருந்தது ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறேன் என்பது தான். இதேப்போல் சுற்றியவர்களில் சிலர் என்னுடன் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள்.

நான் வெளிநாட்டிலிருந்து எப்போது ஊருக்கு வந்தாலும் என்னிடம் வந்து ஊரில் விலைக்காக இருக்கும் வீடுகளையும், நிலங்களையும் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார்கள். நான் இப்போது சொத்துகள் ஏதும் வாங்கும் நிலையில் இல்லை என்று சொன்னாலும், முழுதாகப் பணம் இப்போது கொடுக்க வேண்டாம், உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவு பணத்தை இப்போது கொடுக்கலாம், மீதம் பின்புகொடுத்து சொத்தை எழுதி வாங்கலாம் என்று தவணை முறை எல்லாம் சொல்லுவார்கள். நானும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்தமுறை பார்க்கலாம் என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.

வீட்ல உள்ளவங்களுக்கு என்ன டவுட்டுனா... எப்படி இவ்வளவு பொருட்களை கொடுக்க முடியுமுன்னு!!! எனக்கு என்ன டவுட்டுனா... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கனு!!!

ஊரில் இருக்கும் சொத்துக்களுக்கு விலையை நிர்ணயம் செய்பவர்கள் இந்த ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுபவர்கள் என்று ஆகிபோனார்கள். எப்படியென்றால், எவரும் தன்னுடைய‌ வீட்டில் கஷ்டமான சூழ்நிலை வரும் போது தான் பெரும்பாலும் சொத்துக்களை விலைக்குப் பேசுவார்கள். அவர்களில் தற்போதைய பணத்தேவை என்ன என்பதை அவர்களிடம் பேசும்போதே இந்தப் புரோக்கர்கள் பல்ஸ் பார்த்துவிடுவார்கள். அந்தச் சொத்துக்கான அடிமட்ட‌ விலையைப் பேசி, உரிமையாளருக்கு உட‌னடியாக‌ தேவைப்படும் தொகையை இவர்கள் தங்கள் கைகளிலிருந்து அட்வான்ஸாகக் கொடுத்து எழுதி வாங்கிக் கொள்வார்கள். முழுமையான பணத்தைக் கொடுத்து அந்த‌சொத்தை தங்கள் பெய‌ருக்கு எழுதி வாங்காமல், மறுவிலைக்கும் ஆட்களைத் தேடுவார்கள். என்னைப்போல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தான் முதலில் இவர்கள் குறிவைப்பார்கள்.

சொத்து உரிமையாளரிடம் பேசி வைத்திருக்கும் விலையை விட, அப்போது அந்தச் சொத்திற்கு இருக்கும் மார்கெட் நிலவரத்தைப் பொறுத்து, ஐம்பதில் இருந்து நூறு சதவீதம் வரை அதிக விலை வைத்துதான் மறுவிலைக்கு ஆட்களைத் தேடுவார்கள். இவர்களுடைய தொழில் நெட்வொர்க் பெரியளவில் இருப்பதால் வெளியூரிலிருந்தும் ஆட்களைக் கொண்டுவந்தும் சொத்துக்களை விற்றுவிடுவார்கள். தனியாக எவரும் இந்த ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுவது இல்லை. இரண்டு அல்லது மூன்றுபேர் சேர்ந்துதான் இந்தத் தொழிலைச் செய்தார்கள். ஒரு சொத்தை முடித்தாலே பல லட்சங்கள் இவர்களுக்கு லாபமாக வரும். ரியல் எஸ்டேட் தொழில் பண்ணும் சிலர் முதலில் சொத்து உரிமையாளர்களுக்குக் கொடுக்கும் தொகையும் பெரும்பாலும் தங்கள் கைகளிருந்து கொடுப்பது கிடையாது, வெளிநாட்டில் பணிசெய்யும் சிலரை தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு அவர்களுடைய பணத்தைக் கொண்டு வாங்கி விற்கும் வேலையையும் செய்தார்கள். கிடைக்கும் லாபத்தில் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

வெளிநாடுகளில் பணிசெய்து கொண்டிருப்பவர்கள், விடுமுறையில் ஊருக்கு வரும்போது, இந்த ரியல் எஸ்டேட் பண்ணுவர்களின் சம்பாத்தியத்தைப் பார்த்து தாங்களும் இதைப்போல் செய்யலாம் என்று வெளிநாட்டிற்கு முழுக்கு போட்டவர்களும் உண்டு. ஒரு பதினைத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு சென்ட் மனையின் விலை சில‌ ஆயிரங்களாக‌ இருந்தது, அதே மனைகள் இன்று பல லட்சங்களில் விலை போகிறது. எனது அப்பாவின் தலைமுறையில் இருந்தவர்களுக்கு மூன்று குழந்தைகளுக்கு மிகாமல் எல்லோருக்கும் இருந்தது. அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு சொத்துக்களை அவர்கள் சம்பாதித்து வைக்கவில்லை. எனவே அவர்களின் பிள்ளைகள் தாங்களாகவே படித்து, வேலைக்கு சென்று சம்பாதித்து அவர்களுக்குத் தேவையான சொத்துக்களை வாங்க ஆரம்பித்தார்கள், இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் கூடப் பல லட்சம் கொடுத்து வாங்கும் அளவுக்கு விலையானது விண்ணை முட்டி நின்றது.

சரியாக‌ ஐந்து வருடங்களில் அவரவருக்குத் தேவையான சொத்துக்களை வாங்கியவுடன், ரியல் எஸ்டேட் தொழில் என்ற நீர்குமிழி உடைய தொடங்கியது. இன்றைய சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் எவரும் பெற்றுக்கொள்வது இல்லை. அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான சொத்துக்கள் தனது தந்தையால் சம்பாதித்தும் வைக்கப்படுள்ளது. இப்போது சொத்துக்கள் வாங்குபவர்கள் தனது அடிப்படைத் தேவைகளுக்கு வாங்குவதில்லை, லாபம் சம்பாதிப்பதிப்பது மட்டுமே குறிக்கோளாகயிருக்கிறது. கடந்த சில வருடங்களாக‌ ரியஸ் எஸ்டேட் தொழில் அதிக லாபம் ஈட்டுவதாக‌ இல்லாததால் எவரும் அதில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. இப்போது ஷேர் மார்கெட் மற்றும் தங்கத்தின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள்.

கடந்த சில வருடங்களில் அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சில சட்டங்களும் மற்றும் சொத்துகளைத் தங்கள் பெயரில் எழுதுவதற்குக் கொடுக்கும் கட்டணங்களில் அதிகரிப்பும் இந்த ரியல் எஸ்டேட் தொழிலை கொஞ்சம் கட்டுபடுத்தியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் சொத்துகளில் மதிப்பு அதிகரிப்பது போன்ற ஒரு சூழ்நிலையை ரியல் எஸ்டேட் பண்ணுபவர்கள் கட்டமைத்திருந்தார்கள். இப்போது சில வருடங்களாகச் சொத்துகளில் மதிப்புப் பெருமளவில் ஏற‌வில்லை. சொத்து உரிமையாளர்களுக்கு, ஒரு தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து வாங்கிப்போட்ட ரியல் எஸ்டேட் முதலாளிகள், அந்தச் சொத்துக்களைப் பிறருக்கு விற்கவும் முடியாமல், அட்வான்ஸையும் வாங்க முடியாமல் இப்போது தவித்து வருகிறார்கள்.

.
Related Posts with Thumbnails