பள்ளியில் வகுப்பு முடிப்பதற்கு சரியாக பத்து நிமிடம் இருப்பதற்கு முன்பு எல்லா புத்தகங்களையும் எடுத்து அடுக்கி விடுவேன். பள்ளியிலேயே சத்துணவில் சாப்பிடுவதால் என்னிடம் ஒரு வட்ட சில்வர் தட்டு இருக்கும். மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி ஈரத்துடன் துணி பையில் வைத்தால், பையில் இருக்கும் புத்தகங்கள் நனைந்து விடும் என்பதால் அதை உலருவதற்காக வெளியில் வைத்திருப்பேன்.
நான் இருக்கும் வகுப்பறையின் ஜன்னல் வழியாக பார்த்தால் வட்ட வடிவமாக வெண்கல தட்டு தொங்கவிடப்பட்டிருப்பது தெரியும். அதன் பக்கத்தில் ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இறுதி பாடவேளையின் கடைசி நேரத்தில் அந்த சுத்தியலையே பார்த்து கொண்டு இருப்பேன். எனது பக்கத்தில் இருக்கும் ஷெர்லின் கொஞ்சம் வசதியானவன். அவனுடைய அப்பா வெளி நாட்டில் வேலை செய்வதால், அவனுக்கு அவனுடைய அப்பா எண்களை காட்டும் கைகடிகாரம் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார்.
எங்கள் வகுப்பிலேயே கைகடிகாரம் கட்டி வரும் மாணவன் அவன் ஒருவன் தான். அதுவும் அவன் என் பக்கத்தில் இருப்பதால் எனக்கு வசதியும் கூட. நான்கு மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் போதே வெளியில் இருக்கும் மணியின் பக்கத்தில் இருக்கும் சுத்தியலின் கைப்பிடியை பார்த்து கொண்டே இருப்பேன். அதன் அருகில் ஒரு கை வருவது மட்டும் தெரிந்தால் போதும் என்னுடைய புத்தகப்பை எப்படி எனது தோளில் போகும் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.
இவ்வளவு அவசரமாக கிளம்புவதற்கு காரணம் பள்ளியில் நுழைவு வாயிலை தாண்டுவதற்கு தான். அந்த நுழைவு வாயிலில் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு பேர்தான் செல்ல முடியும். கொஞ்சம் தாமதித்தாலும் மாணவர்களின் கூட்டம் அதிகமாகிவிடும். அதன்பிறகு பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் காத்து இருந்து தான் செல்ல முடியும்.
பள்ளியை விட்டு வெளியில் வந்துவிட்டால் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன். சாதரணமாக என் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்ல பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் ஆகும். காலையில் பள்ளிக்கு வரும் போது நான் கூட இந்த நேரத்தை எடுத்து கொள்வேன். ஆனால் மாலையில் ஐந்து நிமிடங்கள் தான். வாசலில் வரும் போதே "அம்மா சாப்பாடு ரெடியா?" என்று கேட்டு கொண்டுதான் வீட்டிற்குள் நுழைவேன். அம்மாவும் மீன் குழம்பு வைத்து சாப்பாடு ரெடியாக வைத்து இருப்பார். மதியம் பள்ளியில் சத்துணவில் சாப்பிடுவதால் மாலையில் இந்த சாப்பாடு தேவையான ஒன்றாகவே இருக்கும்.
சாப்பாடு முடித்து விட்டு வீட்டிற்கு வெளியில் வந்து விட்டால் அந்தி மாலை இருட்டும் வரை வீட்டிற்குள் திரும்ப வருவது இல்லை. எங்கள் அப்பாவின் கூட பிறந்தவர்கள் ஆறு பேர் உண்டு. அனைவரும் எங்கள் வீட்டின் பக்கத்தில் தான் இருந்தார்கள். அனைவரின் வீடுகளும் வரிசையாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் என்னை போல் சிறுவர் பாட்டாளம் உண்டு.
எங்கள் குடும்பம் நெல் விவசாயத்தை மையமாக கொண்டது. நெற்பயிரை அறுவடை செய்வதற்கு பெரிய இடம் தேவைப்படும். அந்த இடத்தை கிராமத்தில் "களம்" என்று அழைப்பார்கள். அந்த களத்தை அறுவடை காலத்தில் உபயோகப்படுத்துவார்கள். மற்ற நேரத்தில் அந்த இடம் எங்களுடைய விளையாட்டு களமாக இருக்கும். கோலி குண்டு, சிங்காம்பிள்(கிட்டிபிள்), பந்து எறிதல், பாண்டி, நாடு பிடித்தல் போன்ற விளையாட்டுகள் பிரதானமாக இடம்பெறும்.
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-
பள்ளி விடுவதற்கு பதினைந்து நிமிடங்கள் இருப்பதற்கு முன்பாகவே என்னுடைய அண்ணி பள்ளியின் வாசலில் காவல் நின்றார்கள். பள்ளியில் நான்கு மணிக்கு மணி அடிக்கின்றது. ஒரு சின்ன ஆரவாரமும் கேட்கவில்லை, எந்த மாணவர்களும் வெளியில் வரவும் இல்லை. நான் என் அண்ணியிடம் "வகுப்பு முடிந்து விட்டதல்லாவா?" என்று கேட்டேன். அவரும் "ஆம்" என்று எனக்கு பதிலளித்தார். சிறிது நேரத்தில் வரிசையாக கைதிகள் வருவது போல் ஒவ்வொரு மாணவனாக வந்து கொண்டிருந்தார்கள்.
வந்த எந்த ஒரு மாணவனின் முகத்திலும் வீட்டிற்கு போகிறோம் என்ற சந்தோசத்தை பார்க்க முடியவில்லை. பிரிக்கேஜியில் இருந்து மாணவர்கள் வரிசையாய் வர ஆரம்பித்து நான்காம் வகுப்பு வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. அரவிந்த் படிப்பது ஐந்தாம் வகுப்பு. அவன் வரிசையில் தூரத்தில் நிற்பதை அண்ணி பார்த்து விட்டார். கண்களாலேயே அவனை மிரட்டினார். "சீக்கிரம் வா" என்று.
வாசலில் அரவிந்த் வந்தவுடன் கையை பிடித்து கொண்டு "உனக்கு நடக்க தெரியாதா?" உன்னுடைய வகுப்பு படிக்கும் சுரேஷ் முதல் ஆளாய் வந்துவிட்டான். "வா!!! சீக்கிரம் வந்து வண்டியில் ஏறு" என்று மிரட்டினார். வண்டியில் அண்ணியும், அரவிந்தும் ஏறியவுடன் நான் வண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு செலுத்தினேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் நாங்கள். பள்ளி முடிந்து நான் ஓடி வந்த தொலைவைதான் நாங்கள் மூன்று பேரும் வண்டியில் வந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் அரவிந்திற்கு சாப்பாடு வலுகட்டாயமாக கொடுக்க படுகிறது. காலையில் பள்ளிக்கு போகும் போதே அவனுடைய புத்தக மூட்டையை விட பெரிதாக, சாப்பாடு மூட்டை ஒன்று கொடுத்து அனுப்ப படுகிறது. அதில் மதியம் சாப்பாடு, மற்றும் ஒரு பாட்டிலில் பால், ஒரு பழம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கட் போன்றவை. இத்தனையும் சாப்பிட்டால் மாலையில் பசி எப்படி எடுக்கும்?. சாப்பாடு முடிந்தவுடன் அவசர அவசரமாக துணி மாற்ற படுகிறது.
கையில் மற்றொரு புத்தக பையுடன் வண்டியில் ஏறினான். இப்போது அவன் போகும் இடம் ஹிந்தி வகுப்பிற்கு. நான் அவனை வண்டியில் கொண்டு விட்டு விட்டு வீட்டிற்கு வந்தேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து அவனை திரும்ப அழைத்து கொண்டு ஒரு கம்யூட்டர் கிளாசில் விட்டேன். அங்கு அவனுக்கு ஒரு மணி நேரம் வகுப்பாம். இது முடிந்தவுடன் அரவிந்த் வீட்டிற்கு வருவது கிடையாது. எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அவனுடைய மிஸ்ஸிடம் டியுசன் வகுப்பு ஒரு மணி நேரம்.
எல்லா வகுப்பையும் முடித்துவிட்டு அரவிந்த் வீட்டிற்கு வருவது ஒன்பது மணி.
அரவிந்தை பார்க்கும் போது எனது மனதிற்குள் ஒரு நெருடல் வராமல் இல்லை. அந்த நெருடல் அனுதாபமா? ஏக்கமா?
தொடரும்........
.
.