Showing posts with label க‌ற்ப‌னை. Show all posts
Showing posts with label க‌ற்ப‌னை. Show all posts

Saturday, May 3, 2014

தயவுசெய்து கிச்சன் பக்கம் வராதீங்க!!!

அன்றைக்குச் சனிக்கிழமை, ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் தூங்கி எழுவதேற்கே லேட்டாகிவிட்டது. மனைவியோ சீக்கிரமே எழுந்து டிபன் ரெடி பண்ணிவிட்டார். நான் பல்தேய்த்து, குளித்து டிபன் சாப்பிட டேபிளில் அம‌ரும் போது மணியானது பத்தை தாண்டியிருந்தது. வாரிய தலையுடன் வெளியில் கிளம்பிய மனைவி எனக்கு அவசர அவசரமாக நான்கு இட்லியை தட்டில் பரிமாறிவிட்டு, "நான் பக்கத்து வீட்டு அக்கா கூடச் சூப்பர் மார்கெட் போய் வருகிறேன், கொஞ்சம் நீங்க ப்ரிஜில் இருக்கும் கீரையை வெளியில் எடுத்து ந‌றுக்கி மட்டும் வைச்சுருங்க!" என்று சொல்லிவிட்டுக் கையில் கூடையுடன் கிளம்பினார்.

காலையில் எப்போதும் டிபன் சாப்பிடும் நேரத்தை விட இன்று லேட்டாக இருந்ததாலோ என்னவோ, பசி அதிகமாக இருந்தது. தட்டில் மனைவி வைத்த நான்கு இட்லி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு இட்லி எடுத்து சாப்பிட்டுவிட்டு கிச்சன் சென்று ப்ரிஜ்ஜில் பாலீதீன் கவரில் இரண்டு கட்டுகளாகக் கட்டியிருந்த கீரையை எடுத்தேன். கீரையின் வேரில் அதிகமான அளவு மண் ஒட்டியிருந்தது. அதைத் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நறுக்கத் தொடங்கினேன். இரண்டு கட்டுகளையும் நறுக்கிய போது ஒரு பெரிய தட்டு முழுவதும் வந்தது.

சூப்பர் மார்கெட் சென்ற மனைவி திரும்பி வருவதற்கு நேரம் இன்னும் அதிகமாகவே இருந்தது. அதனால் நறுக்கிய கீரையை நாமே பொரியல் செய்தான் என்ன? என்ற எண்ணம் மனதில் எழவே, உடனே அதைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கினேன். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவையிரண்டையும் தனியாக நறுக்கி வைத்துக் கொண்டேன். தேங்காயும் துருவி தனியாக ஒரு தட்டில் அரைத்து வைத்துக் கொண்டேன். இப்போது ஸ்டவ்வில் கடாயை வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம் பருப்புப் போட்டு, வெங்காயம் பச்சை மிளகாயைக் கொட்டி வதக்கிவிட்டு நறுக்கிய‌ கீரையைக் கொட்டினேன்.



கொட்டிய கீரையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்புப்போட்டு கிளறி, கடாயைச் சிறிது நேரம் மூடி வைத்தேன். சிறிது நேரத்தில் மூடியை எடுத்து கீரையைக் கிளறிவிட்டு ரெடியாக இருந்த தேங்காயைத் தூவி இறக்கினேன். இருபதில் இருந்து முப்பது நிமிடங்களில் எல்லாம் வேலையும் முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து டீவியை ஆன் செய்து ஒவ்வொரு சானலாக மாற்றத் தொடங்கினேன்.



சிறிது நேரத்தில் சூப்பர் மார்கெட் சென்ற மனைவி வீட்டிற்குள் நுழைந்தார். வாயிலில் நுழையும் போதே, நான் கீரையை நறுக்கி மட்டும் தானே வைக்கச் சொன்னேன், பொரியலே பண்ணிடீங்களா!! என்று ஹாலில் இருந்த‌ என்னிடம் கேட்டுக் கொண்டே கிச்சனுக்குள் சென்றார். கிச்சன் ஷெல்பில் அவர் கழுவி அடுக்கி வைத்திருந்த மொத்தப் பாத்திரங்களும், இப்போது வாஷ் பேஷனில் கிடந்தது. ஒரு கீரையைப் பொரியல் பண்ணுவதற்குள் இவ்வளவு பாத்திரங்களையா எடுத்து வாஷ் பேஷனில் போடுவது? என்று கேள்வியை என்னிடம் திருப்பினார்.

ஆமா!! என்பது போல் பெரிதாக‌ தலையை ஆட்டி வைத்தேன்.

சரிங்க, வாஷ் பேஷ‌னில் இருக்கும், இந்த இரண்டு பெரிய பாத்திரத்தை வைத்து என்ன செய்தீர்கள்?

கீரையின் வேரில் மண் அதிகமாக ஒட்டியிருந்தது, அதனால் ஒன்றில் மாற்றி ஒன்றில் கழுவினேன்.

அதுக்கு எதுக்குப் பாத்திரம்? வாஷ்பேஷனில் இருக்கும் டேப்பை திறந்துவிட்டே கழுவலாமே!!

ஓ!! இதை இப்படிக் கூடச் செய்யலாமா என்று மைன்ட் வாய்ஸ் சொல்லியது.
ஆமாயில்ல, சரி அடுத்த முறை அப்படியே கழுவலாம்..

ஆமாங்க!! எதுக்கு ரெண்டு கடாயும் எடுத்துக் கழுவுதற்குப் போட்டிருக்கீங்க? சின்னக் கடாயில் தானே கீரையைப் பண்ணியிருப்பீர்கள், அப்புறம் எப்படிப் பெரிய கடாயும் வாஷ் பேஷனுக்கு வந்தது?.

சின்னக் கடாயில் தான் பொரியல் பண்ண ஸ்டவ்வில் வைத்தேன், கீரையை முழுவதும் கொட்டிய போது அந்தச் சிறிய‌ கடாயில் நிற்கவில்லை, அதனால் பெரிய கடாயை எடுத்து மாற்றினேன்.

என்னது!! சின்னக் கடாயில் கீரை நிற்கவில்லையா? அப்படினா எத்தனை கட்டுகள் எடுத்து பொரியல் செய்தீர்கள்?.

ப்ரிஜ்ஜில் இருந்த இரண்டு கட்டையும் நறுக்கி பொரியல் செய்தேன்.

நாம் ரெண்டு பேரும் சாப்பிட‌ ரெண்டு கட்டு கீரையா?. ஒரு கட்டுத் தாராளமா போதுமே, பண்ணியது எல்லாம் சரிதான், ரெண்டு கட்டையும் நீங்க தான் சாப்பிடணும்!!

அதுக்கென்ன!! சாப்பிட்டால் போச்சு!!

ஆமா! ஷெல்பில் இருந்த மொத்த தட்டுகளும் இங்க தான் கிடக்குது!! அதுல என்ன செய்தீர்கள்?.

அது.. வந்து... ஒரு தட்டுல வெங்காயம் வெட்டி வச்சேன், அப்புறம்ம்ம்ம் ஒரு தட்டுல பச்சை மிளகாய் வெட்டி வச்சேன், இன்னொன்னுல தேங்காய்....

எல்லாம் சரிங்க!! கீரை பொரியல் பண்ணுவதற்கு எதுக்குங்க மிக்சி?..

அது வந்து, தேங்காயை துருவி துருவி பார்த்தேன், சரியாக வரல, அதனால தேங்காயை உடைத்து போட்டு மிக்சியில் அரைத்து கொட்டினேன்..

பத்து நிமிடத்தில் நான் செய்யுற பொரியல், அதை நீங்கள் செய்து ஒரு மணி நேரம் எனக்குப் பாத்திரம் கழுவும் வேலையைக் கொடுத்திருக்கிறீர்கள்!!!

"இதுக்கு பேசாமல் கையை காலை வச்சுட்டு, டீவியாவது பார்த்திருக்கலாம்". மைன்ட் வாய்ஸ்

ஹாலில் ஓடிய டீவியில் வெற்றிக்கொடி க‌ட்டுப் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விகளுக்குப் பார்த்திபன் கொடுக்கும் பதிலை பார்த்து, வடிவேலு தன் முகத்திற்கு நேரே கையை நீட்டி வேணுன்டா!! உனக்கு வேணும்!! என்ற வசனம் பேசும் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.


.

Thursday, March 6, 2014

என்ன மாப்ளே!!! நாய் ஒண்ணும் செய்யாது!!

எனது நண்பனுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணமானப் புதிதில் உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு அழைப்பது உண்டு. ஒரு நாள் புது மனைவியின் சித்தி வீட்டிற்கு அதாவது நண்பனின் சின்ன மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவன் தனது மனைவியைக் காலையிலேயே டூவீலரில் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் அவசரமாக வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் அங்குத் தங்காமல் மதியம் உணவுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்.

நண்பனுக்கு நாய் என்றாலே ஏழாம் பொருத்தம் தான். அதுவரை தூங்கிக் கொண்டிருக்கும் நாய் கூட, இவன் அந்த வழியாக வந்தால் காது புடைக்க, வாலை நிமிர்த்துக் குரைக்கத் தொடங்கிவிடும். எனவே நாயை மட்டும் ஒருவர் வீட்டில் பார்த்து விட்டால் அந்த வீட்டிற்குத் தனியாகப் போக மாட்டான். இவன் விருந்துக்குப் போயிருந்த வீட்டில் ராஜபாளையம் நாய் ஒன்று இருந்திருக்கிறது. காலையில் இவன் சென்ற போது இவன் கண்ணில் அது மாட்டவில்லை அல்லது அது கண்ணில் இவன் மாட்டவில்லை.



நண்பனுக்கு வெளியில் இருந்த வேலை எல்லாம் முடிவதற்கு மதியம் ஆகிவிட்டது. அலைச்சல் அதிகமாக இருந்ததால் பசி வேறு இவனை வாட்டியது. மாமியார் வீட்டுக் கறி விருந்துச் சாப்பாடு நினைவுக்கு வரவே வண்டியை நேராக மாமியார் வீட்டுக்கு விட்டான். வண்டியை "கேட்" டுக்கு வெளியில் நிறுத்தி, லாக் செய்துவிட்டு, மெதுவாக நடந்து "கேட்டை" திறக்க சென்றால் பெரிய அதிர்ச்சி, ஒரு பக்கம் ராஜபாளையம் நாய்க் கம்பீரமாக நிற்கிறது, இன்னொரு பக்கத்தில் தோட்டத்தில் சின்ன மாமியார் வாழையிலை வெட்டிக்கொண்டு இருக்கிறார்.

மறுபக்கத்தில் இருக்கும் நாயை பார்த்தவுடன், அதுவரையிலும் அடிவயிற்றில் இருந்த பசி இவனுக்குச் சுத்தமாக மறந்துப் போச்சு. அதென்னவோ தெரியவில்லை இவனைப் பார்த்தவுடனே அதுவும் பாதி நறுக்கிய வாலையும் முறுக்கத் தொடங்கிற்று. மறுபக்கத்தில் இருந்த மாமியார் "சும்மா வாங்க, டாமி ஒண்ணும் செய்யாது" என்று இவனைப் பார்த்தார்.

இவனுக்கோ இருந்த பசி மறந்து, காலையில் சாப்பிட்டதை அடிவயிறுக் கலக்க ஆரம்பிச்சுட்டுது.

"ஆமா!! உங்க நாயி அது..  உங்களை ஒண்ணும் செய்யாது, வர்றது எல்லாம் எனக்குத் தான்" என்று மனசுக்குள் நினைத்து விட்டு, "மாமி நீங்க கொஞ்சம் அது பக்கத்துல வந்து பிடிச்சுக்குங்க, நான் வந்துடுறேன்" என்று சொன்னான்.

சின்ன மாமியாரும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு, வந்து நாயைப் பிடிப்பதற்குள், வீட்டின் உள்ளிருந்து வாசலில் வந்த சின்ன மாமனார் "என்ன மாப்ள நீங்க!! இந்த நாய்க்குப் போய் இப்படிப் பயப்படுறீங்கனு" இவனுடைய ஆண்மைக்குச் சவால் விட இவனும் "சடோர்னு" கேட்டைத் திறந்து வீட்டை நோக்கி நடக்க, முறுக்கிய வாலுடன் டாமியும் பாய, "ஆஆஆனுனு" நண்பனின் அலறல்.

நாய்ப் பாய்ந்த வேகத்தில் அதன் பல் எதுவும் படவில்லை, நகம் தான் கீறி விட்டுருந்தது.

அப்புறம் என்ன?. பக்கத்து வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் குசலம் விசாரிக்க வந்துட்டாங்க.

"நம்ம டாமி, ஊர்ல இதுவரைக்கும் யாரையும் கடிச்சதே கிடையாதுனு" பெருசு ஒண்ணு கன்னத்தில் கை வைக்க, "அப்ப நான் என்ன திருட்டு பயலானு" நண்பன் மனதினுள் நினைத்து முறைக்க,

ஆமா அக்கா "புதுசா வந்த மாப்பிளையையாக் கடிக்கனுமுனு" இன்னொரு பெருசு நெற்றி புருவத்தை உயர்த்த, அதுக்கென்ன "புது மாப்பிளை, பழைய மாப்பிளை" என்று பார்த்தா கடிக்கும் என்று மனசுக்குள் நண்பன் புலம்பினான்,

என்ன மாமா என்னை கறிவிருந்துக்கு கூப்பிட்டீங்க, அதுக்கு முன்னாடி இந்த நாய்க்கு கறிவிருந்து போட்டு இருக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு பரிதாபமாக மாமாவை பார்க்க, அவரு "மன்னிசிடுங்க மாப்பிள" என்று தலை கவிழ்ந்தார்.

நாயின் பல்லுப் படல என்றாலும், "கறி ஏதும் இரண்டு நாளைக்குச் சாப்பிட வேண்டாம், வெறும் ரசம் மட்டும் சாப்பிடுங்கனு" பக்கத்துவீட்டுக் காரர் சொல்ல, "விருந்துக்கு வந்த இடத்துல இப்படி ஆகிப் போச்சேனு" இன்னொருவர் ஆரம்பிக்க, நண்பனுக்கோ ஆள விட்ட போதும், இப்படியே ஓடியே போயிருவேன் என்பது போல் ஒவ்வொருவரையும் பார்த்தான்.

எப்படியோ எல்லோரையும் ஒருவழியா சமாதானப் படுத்திவிட்டு, ரசம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மனைவியை வண்டியில் ஏற்றி, வீட்டுக்குக் கிளம்பினால், தெருவில் போகும் வழியில் இரண்டு பக்கமும் கூட்டமாக நின்னு வேடிக்கை வேறு பாத்திருக்கிறார்கள். நண்பனோ சாலையைத் தவிர வேறு எதையுமே பார்க்காதது போல் வண்டியை ஓட்டிவந்திருக்கிறான்.

இது போதாதுனு வழியில் மூணு இடத்தில் வண்டியை நிப்பாட்டி

என்ன மச்சான் "நாய் கடிச்சாமே" அக்கா சொன்னானு ஒருத்தரும்,

என்ன மாமா "நாய் எங்கக் கடிச்சினு" வேற ஒருத்தரும்,

"போகும் போதே ஆஸ்பத்திரிக்கு போயிட்டு போங்க மருமவனேனு" இன்னொருத்தரும் சொல்ல..

நண்பனுக்கோ கடுங்கோபம். "ஆமா இது இப்ப ரெம்ப முக்கியம்" என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டான். எல்லோருக்கும் போலி சிரிப்பையும், தலையும் ஆட்டிவிட்டு வந்திருக்கிறான்.

இனிமேலும் சின்ன மாமியார் வீட்டுக்குத் தனியா போவானு நினைக்குறீங்க!!!!..

குறிப்பு: இந்தப் பதிவு நான் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதியது.

.

Thursday, February 27, 2014

என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா ???

நம்ம ஆளுங்களுக்கு வீட்ல பொண்ணுப் பார்க்க ஆரம்சிட்டாங்க என்பதை அவர்கள் நடந்து கொள்ளும் விதங்களை வைத்தே சொல்லிட முடியும். 

1) முதல் கவலையே மயிரைப் பற்றிய தாக இருக்கும். ஊர்ல உள்ள ஆத்துத் தண்ணியில குளிக்கும் போது கருக் கருனு அடர்த்தியா இருந்துச்சு, இப்ப இங்க வந்து இந்த உப்பு தண்ணியில குளிச்சுச் செம்பட்டை பாய்ஞ்சி மண்டையே காலி ஆகிடுச்சுனு அறையில் இருக்கும் நண்பனிடம் புலம்ப ஆரம்பிப்பார்கள். இந்தப் புலம்பலை கேட்டு கிட்டு இருக்குறவனோ "சிக்கினான் அடிமை ஒருத்தனு" மயிரு வளரனமுனு சொல்லிட்டு வர்ற விளம்பரம் அத்தனையும் இவனை வச்சே டெஸ்ட் பார்த்திருவான். இதுவும் ஒவ்வொருத்தரின் பண வசதிகேற்ப எண்ணையில் ஆரம்பித்து ஹேர் பிளாண்டிங் வரை போகும்.

2) அது வரையிலும் கண்ணாடியின் முன்பு போய் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவன், இப்போது கண்ணாடியை சிறுது கீழே இறக்கி தொப்பையைப் பார்த்து "ஓ மை காட்" என்பான். அன் லிமிட்டடு மீல்ஸ் ரெண்டு சாப்பிடும் போது தெரியாத தொப்பை இப்போது, நண்பன் டீ குடிக்கலாம் என்று கூப்பிட்டால் கூட மச்சி "கிரீன் டீ" சொல்லு என்பான். இணையத்தில் படித்தாலும் சரி, புத்தகங்கள் வாங்கினாலும் சரி, தொப்பையைக் குறைக்கும் வழிகளைத் தான் அவன் கண்கள் தேடும். தங்கியிருக்கும் அறையில் பெல்லி ரெடிசுர் பெல்டில் இருந்து ஆர்பிட் எலைட் வரை அவரவர் வசதிகேற்ப இருக்கும்.

3) உடம்பை பற்றிய கவலையெல்லாம் வந்துவிடும். ஒன்பது மணி ஆபிசுக்கு எட்டரைக்கு அலாரம் வச்சு, எட்டே முக்காலுக்கு எழுந்து குளிச்சும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஒன்பது மணிக்குப் பைக்கை ஸ்டார்ட் செய்கிறவன், விடியற்காலை ஆறு மணிக்கே அலாரம் வச்சி எழுந்து டிராக் சூட்டை மாட்டுவான், அப்படியே பக்கத்தில் தூங்கிறவனையும் பிடிச்சு இழுப்பான் "வாடா வாக்கிங் போகலாம்" என்று. ஆளு பாக்குறதுக்குப் பவர் ஸ்டார் போல இருந்துட்டு, வாரணம் ஆயிரம் சூர்யா உடம்புக்கு ஆசை படுவாங்க. ஆபிஸ் முடிஞ்சு படம் பாக்கலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி ஜிம்முக்கு போகனும் என்று நமக்குப் பல்பு கொடுப்பார்கள்.

4) பண்டிகைக்கும், திருவிழாவிற்கும் எடுத்த நான்கு டிரஸ்ஸை வருசம் புள்ளா போட்டுகிட்டு இருப்பவன் தீடிரென மாசத்துக்கு நான்கு டிரஸ் எடுப்பான். பண்டிகைக்கு எந்தக் கடையில தள்ளுப்படி அதிகமா போட்டிருக்குனு பார்த்து பார்த்து எடுத்தவன், பிரண்டட் கடையா தேடிப் பார்த்து தான் இப்ப டிரஸ் எடுப்பான். சும்மா இல்லீங்க இன்னர் வேர் கூடப் பிரண்டட் பெயர் போட்டுருந்தால் தான் செலக்ட் பண்ணுவான்.

5) நாமுளும் அவன் கூட நாலு வருசமா ஒன்னா ரூம்ல தான் இருந்திருப்போம், எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா என்பது அந்தப் பாத்ரூம் கண்ணாடிக்கு தான் வெளிச்சம். ஆனா இப்ப புது இருநூறு கிராம் அடவான்ஸ்ட் சென்சோடைன் டூத் பேஸ்ட்டும், சென்சிட்டிவ் டூத் பிரஷும் ஹால்ல இருக்கிற கண்ணாடி முன்னாடி இருக்கும். காலையிலேயும் மாலையிலேயும் டங் கிளீனர் வச்சு இவன் போடுற சவுண்டை பார்த்து நம்ம நாக்கை, நாமளே பிடிங்கி வெளியே போட்டுவிடலாம் போல இருக்கும்.

6) எப்பவுமே சவரம் செய்யாத அரைத் தாடியுடம் அலையும் நம்ம ஆளு கிட்ட ஏன்டா சவரம் செய்யலைனு கேட்ட "டைம் இல்ல மச்சி" என்பான். இப்ப எல்லாம் வீட்லேயே ட்ரிபிள் பிளேடு ரேசர் வைச்சு தினமும் கண்ணாடி முன்பு ஒரு மணி நேரம் நிற்பான். வாரத்துக்கு ஒரு முறை சலூனுக்கும் கிளம்பிடுவான். ஸ்டீம் பாத், ஹேர் கலரிங், ஆயில் மசாஜ், பேசியல் என்று சொல்லி பீதியை கிளப்புவான்.

7) நான்கு வருடமா அதே இடத்தில் தான் இருந்திருப்பான். ஹோட்டல், தியேட்டர் தவிர எங்கேயுமே சுற்றாத ஆளு புதுசா அந்த ஏரியாவில் இருக்கும் கோவிலை தேடுவான். வெள்ளிக்கிழமை ஆகிட்டா காலையிலேயே குளிச்சுட்டு விபூதியை பூசிடுவான். பக்கோடா சாப்பிடலாம் வாடானு கூப்பிட்டா கூட, மச்சி சிக்கன் பக்கோடாவா சொல்லுனு சொல்லுறவன், இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்.

8) தியேட்டரில் படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சிகள் வந்தால் வெளியே தம் அடிக்கவோ, அல்லது மொபைல் போனில் கேம் விளையாடவோ செய்வான், இன்னும் ஏன், லேப்டாப்புல படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சியை மட்டும் பாஸ்ட் பார்வர்டு செய்து இரண்டரை மணி நேரப் படத்தை இரண்டு மணி நேரத்தில் பார்த்து முடிப்பான். இப்ப என்னடானா ஹெட் போனை தலையில் மாட்டிவிட்டு மெலோடிஸ் பாட்டா கேட்டுட்டு இருப்பான். ரூம்க்கு வந்தாலும் சன் மியூசிக்கோ, இசை அருவியோ தான் ஓடும். நாம ரிமோட்டை வாங்கி வேற சேனல் மாத்தினால் "ஞானசூனியம்" என்று தலையில் அடிப்பான்.

9) பேண்ட், சர்ட், செருப்புனு சுத்திட்டு இருந்த ஆளு, இப்ப ஜீன்ஸ், டீ சர்ட், சிலிம் பிட், கேன்வாஸ் என்று கலக்குவான். தண்ணியையும், அயன் பாக்ஸையும் பார்க்காத ஜீன்ஸ் பேண்ட் இப்ப லாண்டரிக்கும், வாசிங் மிசினுக்குப் போகும்.

10) லீவு நாள்ல அழுக்கான துணியைத் துவைக்காமல் குப்புற அடிச்சு தூங்கிட்டு, திங்கட்கிழமை காலையில அழுக்கான சட்டையைத் துக்கிட்டு, ஸ்பிரே அடிக்கத் தேடுற ஆளு, இப்ப எல்லாம் குளிச்சு முடிஞ்சு பாடி ஸ்பிரே போடாமல் இன்னர் பனியன் போட மாட்டன். வெளியில் நடந்து போகும் போது, வழியில் நிற்கும் ஒரு டூவீலரை கூட‌ விட மாட்டான். பக்கத்தில் போய்ப் பாக்கெட்ல இருக்குற சீப்பை எடுத்து தலையைச் சீவி விட்டு, "மச்சி முடி ரெம்பக் கொட்டுதுடா, எதாவது பண்ணனும்" என்பான்.


அப்படியே இதையும் பார்த்துட்டு போங்க.. இணையத்தில் சுட்டது தான்..



.

Tuesday, July 27, 2010

இந்த‌ பொண்ணுங்க‌ளே இப்ப‌டித்தான்!!!..

1) வாத்தியாரு போர்டுல எழுதி போடுறதுல அவரு ஸ்பீடுக்கு எழுதமுடியாமல், எல்லோரும் எழுதிட்டீங்களானு கேட்கும் போது "நான் இன்னும் முடிக்கலனு" சொல்லுறதுக்கு கூச்சபட்டு இருந்திட்டு, வாத்தியாரு அழிச்சி முடிச்சப்புறம் நம்ம கிட்ட வந்து உன் நோட்டை கொடு எழுதிட்டு தந்திடுறேனு கெஞ்சுவார்கள். சரினு நோட்டை கொடுத்துவிட்டா மறுநாளு நோட்டு தண்ணில நனைஞ்சது போல இருக்கும், என்னானு கேட்டா என் தம்பி ஒண்ணுக்கு அடிச்சிட்டானு கூலா சொல்லுவார்கள்.

2) குளிக்காம, பல்லும் தேய்க்காம புது துணியை மட்டும் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டு, நாம குளிச்சிட்டு, பல்லும் தேய்ச்சிட்டு நேற்று போட்ட டிரஸை இன்னைக்கு போட்டு வந்தத பற்றி கிண்டல் பண்ணுவார்கள். அவர்கள் மூஞ்சி கூட கழுவாமல் பவுடர் போட்டதை கண்ணுல இருக்கிற கூழை காட்டி கொடுத்திரும், அதை நாம சொன்னா மூஞ்சை தூக்கி வச்சிட்டு நாலு நாளு பேச மாட்டார்கள்!!!

3) ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போகும் போது ஏவானவது புதுசா வேற ஸ்கூல்ல படிச்ச பையன் ஒருத்தன் வந்து சேருவான். இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.

4) அப்படியே சைலண்டா நம்மள கழட்டிவிட்டுருவார்கள். இவ ஏன் நம்மள கழட்டி விட்டானு ஆரய்ச்சில இறங்கி, கொஞ்சம் படிச்சிட்டு இருந்த படிப்பையும் கோட்டை விட வச்சிருவார்கள். அப்படியே விட்டுட்டாலும் பரவாயில்லை. தீடிரெனு ஒரு நாள் வந்து எனக்கு பைசம் சைட்டைவம்(பட்டாணி) செடியின் பூ ஒண்ணு வேணுமுனு இளிச்சிட்டு வந்து நிப்பார்கள். நாமளும் காடு மேடுனு அலைஞ்சி திரிஞ்சி கொண்டு வந்து கொடுத்தா!!. மகேஷ் இரண்டு கொண்டு வந்தான், எனக்கும் ஒண்ணும் கொடுத்தான்னு வழிவார்கள்.

5) உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!



6) வாத்தியாரு கேட்ட கேள்விக்கு பதில் தெரியலனு நாம எழுந்து நிக்கும் போது, அவளிடம் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லி வாத்தியாரின் கோபத்தை கிளறி விடுவார்கள்.

7) நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன வாத்தியாரு, இன்னைக்கு மறந்து பாடம் நடத்த போனா, முத ஆளா எழுந்து சார் இன்னைக்கு பரிட்சை வைக்கிறேன்னு நேத்தைக்கு சொன்னீங்கனு எடுத்து கொடுப்பார்கள்.

8) ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநாளே பொண்ணுங்க எல்லாம் எழுதி கொண்டு வந்து அவருடைய டேபிளில் அடுக்கி விடுவார்கள். நாம இன்னும் அந்த ரெக்கார்டு நோட்டை கடையில் இருந்து வாங்கியே இருக்க மாட்டோம்.

9) காலையிலேயே இன்னைக்கு எந்த வாத்தியாரு எல்லாம் வரலேனு லிஸ்ட் எடுத்து அவருடைய பாடவேளையில் விளையாட போய்விடலாம் என்று பிளான் பண்ணி, கிரிக்கெட் விளையாட டீம் எல்லாம் பிரிச்சி வச்சிட்டு அந்த பாட வேளைக்கு காத்திருந்தா, நல்ல பிள்ளையாட்டு இந்த பொண்ணுங்க டீச்சர்ஸ் ரூம்க்கு போய் ஆணியில்லாமல் தூங்கிட்டு இருக்கும் ஏதாவது டீச்சரை கூட்டி வந்து மொக்கை போட வச்சிடுவாங்க.

10) A+B வெக்டார் இல் ஆரம்பித்து X+Y+Z-வெக்டார் வரைக்கும் ஒரு 70MM இங்கிலிஷ் படத்தை ஓட்டிட்டு நம்ம கணக்கு டீச்சர் புரிஞ்சுதானு நம்மளை பார்த்து கேக்காமல் பொண்ணுங்களை பாத்து கேக்கும் போது, பொண்ணுங்க எல்லாம் ஒண்ண சேர்ந்து ஆமா.. ஆமானு மேலும் கீழும் தலையை ஆட்டுவார்கள். அவங்களை கேட்டுட்டு இந்த பக்கம் நம்மளை பார்த்து கேக்கும் போது நம்ம மட்டும் என்னா?.. இல்லைனா தலையை ஆட்ட முடியும் நாமளும் கோயில் மாடு போல தலையை ஆட்ட வேண்டியது தான். அதுக்கு மாறா எவனாவது தலையை ஆட்டுறதை டீச்சர் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். அந்த பொண்ணுங்க எல்லாம் பாடத்தை கவனிக்க வருது, நீங்க எதுக்குடா வர்றீங்கனு ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு பயந்தே கமுக்கமா உக்கார்ந்து விடுவோம். டீச்சர் போனதும் இந்த பொண்ணுங்க கிட்ட என்ன புரிஞ்சுதுனு கேட்டா... ஒண்ணும் புரியலைனு கோரஸ் பாடும்...

அட ராமா... ராமா.. இந்த பொண்ணுங்க கூட எல்லாம் என்னை ஏண்டா படிக்க வச்ச?... (இதை க‌வுண்ட‌ம‌ணி வ‌ச‌ன‌ம் போல் ப‌டிக்க‌ வேண்டாம்..ஹி..ஹி..)

....................ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.....................

இதுக்கு செய்வினை, செய‌ப்பாட்டுவினை ஆற்றுப‌வ‌ர்க‌ள் எல்லாம் மேலே உள்ள‌ வாச‌க‌த்தை ந‌ல்லா திரும்ப‌ திரும்ப‌ ப‌டிச்சிட்டு ஆத்துமாறு கேட்டுகொள்கிறேன் :))

குறிப்பு: நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலான‌ந்தாவின் ஆசிர‌ம‌த்தில் முத‌ன்மை சிஷ்ய‌ன் ஆகுவ‌த‌ற்கு அனும‌தி வாங்கி விட்டேன். அத‌னால‌ இதுக்கு க‌மெண்ட் போடுப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டில் கிடைக்கும் ஆத‌ர‌வுக்கு(பூரிக்க‌ட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க‌ எச‌மான் குத்துங்க‌.. ஆனா ஒரு சின்ன‌ க‌ண்டிஷ‌ன் "பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..

.

.

.

Sunday, July 11, 2010

தொட‌ர்ப‌திவு_க‌ன‌வே க‌லையாதே..

க‌ற்ப‌னை உருவ‌ம் என்ற‌வுட‌ன் என் ம‌ன‌தில் தோன்றிய‌து காமிக்ஸ் உல‌கின் அர‌ச‌ன் மாயாவியின் உருவ‌ம் தான். சின்ன‌ வ‌ய‌தில் இவ‌ரின் ர‌சிக‌ன் என்று சொல்வ‌தை விட‌ தீவிர‌ வெறிய‌ன் என்று தான் சொல்ல‌ வேண்டும். க‌தைக‌ள் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌‌ கால‌த்தில் முத‌லில் என‌க்கு அதிக‌ ஆர்வ‌த்தை ஏற்ப‌டுத்திய‌து இவ‌ரின் க‌தைக‌ள் தான். இர‌வு தூக்க‌த்தில் கூட‌ மாயாவி என்று க‌த்திய‌தாக‌ அம்மா சொல்வார்க‌ள், அந்த‌ள‌வு இவ‌ருடைய‌ க‌தைக‌ள் என்னை பாதித்திருந்த‌து.

"ஒரு நாள் உருவ‌த்தில் முக‌மூடி வீர‌ர் மாயாவியாக‌ நான் இருந்தால் எப்ப‌டியிருக்கும்" என்ப‌தை ப‌ற்றி ஒரு சின்ன‌ க‌ற்ப‌னை.



ப‌டிக்கும் ப‌ருவ‌த்தில் ஏதாவ‌து முக்கிய‌ வேலையில் நான் ஏதாவ‌து முட்டாள் த‌ன‌மாக‌ செய்துவிட்டால் என்னுடைய‌ அம்மா என்னை "ம‌ர‌ம‌ண்டை" என்று திட்டுவார்க‌ள், ஒருவேளை நான் மாயாவி உருவ‌த்தில் இருந்திருந்தால் "இரும்பும‌ண்டை" என்று திட்டியிருப்பார்க‌ளோ!!!!!!!

என்னுடைய‌ அப்பாவின் கூட‌ பிற‌ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌டும‌ண்டையில் முடிக‌ள் இருக்காது, என் அப்பா உட்ப‌ட். அவ‌ர்க‌ளை நான் சொட்டை என்று கிண்ட‌ல் செய்த‌து உண்டு, அத‌ற்கு அவ‌ர்க‌ள் "நாளை உன‌க்கும் இது போல் வ‌ரும்" என்று சொல்வார்க‌ள். நான் அவ‌ர்க‌ளிட‌ம் "ம‌யிர் போனால் ம‌ண்டை பாலிஸ்" என்று நையாண்டி செய்த‌து உண்டு. இப்போது என‌க்கும் முடிக‌ள் கொட்ட‌ தொட‌ங்கிவிட்ட‌து, அதைப‌ற்றிய‌ க‌வ‌லையும் வ‌ர‌தொட‌ங்கிவிட்ட‌து. மாயாவியை போல் த‌லை இருந்து விட்டால் இந்த‌ முடி ப‌ற்றிய‌ பிர‌ச்ச‌னையே வ‌ராது அல்ல‌வா!!!!!...

இந்த‌ பிளாக்க‌ரில் புர‌பைல் போட்டோ போடுவ‌திலும் பிர‌ச்ச‌னை வ‌ந்திருக்காது. அப்ப‌டியே ந‌ம்ம‌ க‌ம்பெனி முத்திரையை(ம‌ண்டையோடு) போட்டு விடாலாம். யாரும் வாயே தொற‌க்க‌ மாட்டார்க‌ள்.

நான் ஸ்கூல் ப‌டிக்கும் போது வீட்டில் இருத்து ம‌திய‌ சாப்பாடு எடுத்து போவேன். அதில் எங்க‌ம்மா என‌க்கு டெய்லி ஒரு அரைமுட்டை(இன்னொரு அரைமுட்டை அண்ண‌னுக்கு) வைத்து த‌ருவார்க‌ள். அந்த‌ அரைமுட்டை ம‌திய‌ வேளையில் ல‌ஞ்ச் பாக்ஸில் இருக்காது, ந‌ம்ம‌ கோவாலு ல‌வுட்டிருவான். டேய்!!!!! கோவாலு உன்னைதாண்டா தேடிகிட்டு இருக்கிறேன்... நான் மாயாவியா உருமாருகிற‌ அன்னைக்கு நீ மாட்டினா ம‌வ‌னே!!!... முத‌ல் மோதிர‌ முத்திரை உன‌க்கு தாண்டா!!!!!!

பார்க்க‌ர்ல ச‌ட்டையும், லீயில் ஜீன்ஸும், ஜாக்கில‌ ப‌னிய‌னும் வாங்க‌ வேண்டிய‌ வேலையே இல்ல‌.. டெய்லி ஒரு டிர‌ஸ் மாத்த‌னும் என்ற‌ தொல்லையும் கிடையாது(இப்ப‌ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம் ஆறு மாச‌த்துக்கு முன்னாடி போட்ட‌ ஜீன்ஸ் பேண்டை இன்னும் க‌ழ‌ட்ட‌ல‌, த‌ண்ணி பார்த்து வ‌ருச‌ க‌ண‌க்காவுது.... நோ.. நோ... நோ பேட் வேர்ட்ஸ்.. மீ.. பாவம்)

இப்ப‌ பெட்ரோல், டீச‌ல் விக்கிற‌ விலையில‌ வ‌ண்டி வாங்கி ஓட்ட‌ முடியுமா, வண்டி வேணுண்ணா வாங்கி சோக்கேஸுல் வ‌ச்சி அழ‌கு பாக்க‌லாம், ஆனா பெட்ரோல் ஊற்றி ஓட்ட‌ முடியாது. பிளைட்ல‌, கார்ல‌, ட்ரெயின்ல‌, ப‌ஸ்ல‌, டுவீல‌ர்ல‌னு எல்லாத்திலேயும் போயாச்சி ஆனா குதிரையில‌?????.... மாயாவி குதிரை மேல‌ இருந்த‌ ஆசையில‌, ஒரு த‌ட‌வ‌ அப்பாட்ட‌ "நான் குதிரையில் சவாரி செய்ய‌ன‌னு சொல்ல‌" அப்பாவும் அது ஒண்ணும் பிர‌ச்ச‌னை இல்ல‌னு சொல்லி மெரினா பீச் கூட்டிட்டு போய் க‌ழுதை மேல‌ சாரி.. குதிரை மேல‌ என்னை ஏத்தி வைச்சி குதிரையை ந‌ட‌க்க‌ வ‌ச்சாரு!!!!.கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அன்னைக்கு முடிவு ப‌ண்ணினேன் இனிமேல் ஏறினா மாயாவியின் வெள்ளை குதிரை மேல் தான் என்று..

ம‌ர‌க்கிளைக‌ளில் ப‌டுத்து உற‌ங்கி
கோழியின் கூவ‌லில் விழித்து
ப‌ற‌வைக‌ளின் ரீங்கார‌ங்க‌ளில் ம‌ன‌தை ப‌றிகொடுத்து
ம‌ர‌ங்க‌ளில் க‌னிந்த‌ ப‌ழ‌ங்க‌ளை புசித்து
காட்டு வில‌ங்குக‌ளின் மொழி பேசி
தெளிந்த‌ நீரோடையில் குளித்து..
ஒரு நாள் பொழுதாயினும் ம‌ற‌க்க‌ முடியுமா...
இய‌ற்கையோடு இய‌ந்த‌ வாழ்க்கை.

உள் ம‌ன‌தில் முக‌மூடி போட்டு கொண்டு ம‌னித‌ன் என்று சொல்லி கொண்டிருக்கும் வில‌ங்குக‌ள் வாழும் ச‌முதாய‌த்தில், வெளியில் முக‌மூடி போட்டு கொண்டு ம‌னித‌னாக‌ வாழ‌வே ஆசைப்ப‌டுகிறேன்.. க‌ன‌வே க‌லையாதே....

என‌க்கு இந்த‌ த‌லைப்பை கொடுத்து எழுத‌ தூண்டிய‌ அமைதிச்சார‌ல் ச‌கோத‌ரிக்கு மீண்டும் ஒரு ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன்... குற்ற‌ம் குறையிருப்பின் பொறுத்த‌ருள்க‌.

நான் எழுதிய‌ க‌ட‌ந்த‌ இர‌ண்டு தொட‌ர்ப‌திவிலும் யாரையும் தொட‌ர‌ அழைக்க‌வில்லை, கார‌ண‌ம் ரெம்ப‌ லேட்டா தான் என‌து கைக்கு வ‌ந்த‌து. பெரும்பாலான‌ எல்லோருமே எழுதிவிட்டார்க‌ள். இது இப்போது தான் ஆர‌ம்பித்து இருப்ப‌தால் சில‌ரை அழைக்க‌லாம் என்று இருக்கிறேன்.

ரெம்ப‌ சீரிய‌ஸா ப‌திவு எழுதுகிற‌ ந‌ம்ம‌ த‌மிழ் உத‌ய‌ம் ர‌மேஷ் சார் அவ‌ர்க‌ளை இந்த‌ தொட‌ர்ப‌திவில் அழைக்கிறேன். இந்த‌ க‌ற்ப‌னை ப‌திவிலும் என்ன‌ ப‌ண்ணுகிறார் என்று பார்ப்போம். த‌மிழ் சார் உங்க‌ த‌லைப்பு இது தான்.

ம‌க்க‌ள் செறிந்த‌ கூட்ட‌த்தில் ஒரு த‌வ‌று ந‌ட‌க்கிற‌து. அதை செய்த‌வ‌ன் நீங்க‌ள் தான் செய்தீர்க‌ள் என்று க‌த்துகிறான். அதை நீங்க‌ள் எப்ப‌டி ச‌மாளிப்பீர்க‌ள்(எந்த‌ த‌வ‌றாக‌வும் இருக்க‌லாம் நீங்க‌ளே க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள், அதேபோல் அது எந்த‌ இட‌மாக‌வும் இருக்க‌லாம் நீங்க‌ளே க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள்)

தொட‌ர்க‌தைக‌ளிலும், சிறுக‌தைக‌ளிலும் க‌ல‌க்கும் செல்ல‌ நாய்க்குட்டி அவ‌ர்க‌ளையும் இந்த‌ தொட‌ர் ப‌திவுக்கு அழைக்கிறேன். உங்க‌ளுடைய‌ த‌லைப்பு

ப‌ழைய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் ஆட்சியில் நீங்க‌ள் இருந்தால் ( நீங்க‌ள் எந்த‌ ஒரு கேர‌க்ட‌ராக‌வும் எடுத்து கொண்டு எழுத‌லாம், ம‌ன்ன‌ர‌க‌வோ, ராணியாக‌வோ, பிர‌ஜையாக‌வோ) அந்த‌ அனுப‌வ‌த்தை ப‌கிர‌வும்.

.

.

.

Saturday, May 22, 2010

ஓடுங்க‌.. ஓடுங்க‌..

எப்ப‌டியோ த‌ன‌து மூத்த‌ ம‌க‌ளுக்கு க‌ல்யாண‌ம் செய்து முடித்த‌ கையோடு திருப்ப‌தி ஏழும‌லை வெங்க‌டேச‌பெருமாளை வேண்டி விட்டு வ‌ந்த‌தில் இருந்து ரெம்ப‌ ச‌ந்தோச‌மாக‌ இருந்தார் ஏகாம்ப‌ர‌ம். எப்ப‌டியும் த‌ன‌து இளைய‌ ம‌க‌னுக்கு இந்த‌ வ‌ருட‌ம் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிவிட‌ வேண்டும் என்ப‌தில் தீர்மானமாக‌ இருந்தார்.

ம‌க‌னுக்கு பொண்ணுபார்க்கும் வேலையில் தீவிர‌மாக‌ இற‌ங்கினார் ஏகாம்ப‌ர‌ம். இப்ப‌ எல்லாம் யாருங்க‌ வீட்ல‌ போய் பொண்ணை நேர்ல‌ பார்க்கிறா!!. அல்ல‌து கேட்கிறா!!.. ந‌ம்ம‌ ஊர்லேயே இதுக்குனு ஆபிஸ் வைச்சு நாலு பேர் இருக்காங்க‌. அது போதாதுனு நம்ம‌ ப‌க்க‌த்து வீட்டு ப‌ங்க‌ஜ‌ம் இல்ல‌ அவ‌ கூட‌ இப்ப இந்த‌ இந்த‌ வேலை தான் பார்கிறாளாம். போனா வார‌ம் நாம‌ ம‌ணிய‌ம்மை வீட்டு க‌ல்யாண‌த்துக்கு போயிருந்தோம் இல்லையா? அந்த‌ க‌ல்யாண‌ம் கூட‌ ப‌ங்க‌ஜ‌ம் ஏற்பாடு ப‌ண்ணிய‌து தானாம். நாம‌ளும் அவ‌கிட்ட‌ சொல்லிடுவோமா? என்று கையில் இருந்த‌ காப்பியை ஏகாம்ப‌ர‌த்திட‌ம் கொடுத்துவிட்டு ப‌திலுக்காக‌ க‌த்திருந்தாள் ம‌னைவி ல‌ட்சுமி.

நீ ச‌ரியான‌ விவ‌ஸ்தை கெட்ட‌வா.. என் பைய‌னுக்கு பொண்ணு பார்க்க‌ நான் போகாம‌ ஊர்ல‌ இருக்கிற‌வ‌னை போயா பார்க்க‌ சொல்லுறா!!.. அந்த‌ வேட்டியையும் ச‌ட்டையும் எடுத்து வைச்சுட்டு அடுப்புல‌ ஏதாவ‌து வேலை இருந்தா போய் பாரு.. இன்னைக்கு நான் ஒரு இட‌த்துக்கு பொண்ணு பார்க்க‌ போறேன் என்று ம‌னைவிக்கு க‌ட்ட‌ளையிட்டார் ஏகாம்ப‌ர‌ம்.

அன்றையில் இருந்து ம‌க‌னுக்கு பொண்ணு பார்க்க‌ ஆர‌ம்பிச்ச‌து. ஊரில் அவ‌ருக்கு தெரிந்த‌ சொந்த‌, ப‌ந்த‌ங்க‌ள் எல்லார் வீட்டிலும் உள்ள‌ பொண்ணுங்க‌ளை த‌ன்னுடைய‌ ம‌க‌னுக்கு கேட்டுவிட்டார். அனைவ‌ரும் இப்ப‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌வில்லை. என் பொண்ணு மேலே ப‌டிக்க‌ வேண்டும் என்று இருக்கிறாள் என‌வே இப்போது க‌ல்யாண‌ம் வேண்டாம் என்று சொல்கிறாள். என்ற‌ ப‌தில்க‌ள் தான் வ‌ந்த‌ன‌.

இன்னும் சில‌ இட‌ங்க‌ளில் ந‌ம்ம‌ ஏக‌ம்ப‌ர‌த்தின் முக‌த்தை பார்த்தாலே, அந்த‌ வீட்டில் உள்ள‌ பெரிவ‌ர்க‌ள் வ‌ந்து என் பொண்ணுக்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌வில்லை என்று, ஏகாம்ப‌ர‌ம் கேட்ப‌த‌ற்கு முன்னாடியே ப‌தில் சொன்னார்க‌ள்.

இப்ப‌ எல்லாம் ஏகாம்ப‌ர‌ம் ஊர் முழுவ‌தும் ரெம்ப‌ பிர‌ப‌ல‌ம். இவ‌ருடைய‌ த‌லையை பார்த்தாலே பொண்ணுங்க‌ எல்லாம் ஏதோ “பிள்ளை பிடிக்கிற‌வ‌ர்” என்ற‌ ரேஞ்சில் ஓட‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌.

இன்னும் சில‌ வீட்டில் க‌லேஜிக்கு போகும் பொண்ணுங்க‌ளிட‌ம் அம்மாக்க‌ள் எல்லாம் இந்த‌ வ‌ருச‌ம் அரிய‌ர் ஏதாவ‌து வ‌ச்சிங்க‌னா, "ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌த்தை வீட்டுக்கு வ‌ர‌ சொல்லிடுவேன்" என்று மிர‌ட்டினாங்க‌னா பார்த்துக்க‌ங்க‌..

இதுக்கெல்லாம் சோர்ந்து போற‌ ஆளு இல்ல‌..‌ ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌ம். செந்த‌கார‌ங்க‌தான் வேலைக்கு ஆக‌ல, வெளியில‌ பார்க்க‌லாம் என்று தேட‌ ஆர‌ம்பித்தார். பார்க்கிற‌ ஆளுக‌ளிட‌ம் எல்லாம் ந‌ம்ம‌ சால‌ம‌ன் பாப்பையா சொன்ன‌து போல்" ந‌ம‌க்கு ஒரு பைய‌ன் இருக்கான். வாங்க‌!!! பாருங்க‌!!! ப‌ழ‌குங்க‌!!! புடிச்சா க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்.. என்று விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ தொட‌ங்கினார்.

இப்ப‌டியே பொண்ணு தேடிட்டு இருந்த‌ ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌த்தை தெருவில் பார்த்தாலே, ஓடுங்க‌!! ஓடுங்க‌!! அவ‌ர் வ‌ந்திட்டு இருக்கார்" என்ப‌து போல் ஓட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

இப்ப‌டிதான் ஏகாம்ப‌ர‌ம் ஒரு நாள் தெருவில் போய்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய‌வ‌ரும் இள‌ம் பெண்ணும் எதிரில் வ‌ந்தார்க‌ள். பெரிய‌வ‌ருட‌ன் வ‌ரும் பொண்ணு அவ‌ருடைய‌ ம‌க‌ளாக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைத்து கொண்டு ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌ம் அந்த‌ பெரிவ‌ரிட‌ம் த‌ன்னுடைய‌ ம‌க‌னை ப‌ற்றியும், அவ‌னுக்கு பொண்ணு தேடி கொண்டிருப்ப‌தாக‌வும் சொன்னார். பொறுமையாய் எல்லா க‌தையையும் கேட்டுவிட்டு "எதுக்கு இது எல்லாம் என்னிட‌ம் சொல்லுகிறீர்க‌ள்" என்று ஏகாம்ப‌ர‌த்தை பார்த்து கேட்டார் அந்த‌ பெரிய‌வ‌ர்.

உங்க‌ பொண்ணை என் பைய‌னுக்கு கேட்க‌லாம் என்று பெரிய‌வ‌ரின் ப‌க்க‌த்தில் இருந்த‌ இள‌ம் பொண்ணை பார்த்த‌வாறு கேட்டார் ஏகாம்ப‌ர‌ம். இதை கேட்ட‌ அந்த‌ பெரிய‌வ‌ர் ஷாக்க‌டித்த‌து போல் திடுகிட்டு "யோவ் உன‌க்கு க‌ண்ணு தெரியாதா இது என்னோட‌ ரெண்டாவ‌து ச‌ம்சார‌ம்ய்யா?... என்று க‌த்தினார்.

மேலே ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை கேள்வி ப‌ட்டு ஊர்ப‌க்க‌மே எட்டி பார்க்காம‌ல் இருக்கும் ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌த்தின் ம‌க‌னை யார‌வ‌து பார்த்தா கொஞ்ச‌ம் ந‌ம்ம ஏகாம்ப‌ர‌ம் ஐயாவுக்கு த‌க‌வ‌ல் கொடுங்க‌ளேன், ப்ளீஸ்... ப்ளீஸ்... என்ன‌து அடையாள‌மா? அது இர‌ண்டு கால் இருக்குமுங்க‌, இர‌ண்டு கை கூட‌ இருக்கும் ஆமாங்க‌ க‌ரைட்டுதான்‌.. ஆனா த‌லை ஒண்ணுதான் இருக்கும்.. அவ‌ரை பார்த்தா எப்ப‌டியாவ‌து சொல்லி அனுப்புங்க‌.. என‌க்கு ந‌ம்பிக்கை இருக்கு நீங்க‌ க்ரெக்டா சொல்லிடுவீங்க‌..

குறிப்பு: மொக்கை போட்டு ரெம்ப‌ நாளாச்சி... என்னால‌ முடிஞ்ச‌து.. த‌லைப்பை பார்த்தாலே உங்க‌ளுக்கு தெரியும்... அது ந‌ம்ம‌ள‌ நோக்கி வ‌ந்திட்டு இருக்கு ஓடுங்க‌.. ஓடுங்க‌ தான்.. இதையும் மீறி வ‌ந்து ப‌டிச்சீங்க‌னா!!!! நான் பொறுப்பில்லை.

.

.
Related Posts with Thumbnails