Showing posts with label ப‌ள்ளி வாழ்க்கை. Show all posts
Showing posts with label ப‌ள்ளி வாழ்க்கை. Show all posts

Monday, June 20, 2016

ஏண்டா! இவனா நம்ம கோவாலு!

ஊர் திருவிழாவை திட்டமிட்டு இந்த முறை வருட விடுமுறையை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து, பிப்ரவரி முதல் வாரம் வரை எடுத்திருந்தேன், முதல் இரண்டு வாரங்கள் கோவில் திருவிழா மற்றும் சொந்த வேலைகள் என்று கொஞ்சம் பிஸியாக போனது, குடும்பத்துடன் பெரிதாக வெளியில் எங்கும் சுற்ற முடியவில்லை. திருவிழா முடிந்த வாரத்தில், ஒரு நாள் வீட்டில் சொந்த வேலைகள் எதுவும் பெரிதாக இல்லை, அதனால் வெளியில் சென்று வரலாம் என்று காலையில் மனைவியிடம் சொன்னேன், ஊரில் இருக்கும் போது பெரும்பாலும் நான் "வெளியில் செல்லலாம்" என்றால் நாகர்கோவிலுக்குப் படம் பார்க்கப் போகிறோம் என்று தான் அதன் பொருள் என்று மனைவிக்குத் தெரியும்.

காலையில் குளித்து, டிபன் சாப்பிட்டு இருவரும் கிளம்பும் போது மணி பத்தை நெருங்கியது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, வராண்டாவில் நிறுத்தியிருந்த டூவீலரை வெளியில் எடுக்கும் போது தான் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று பேப்பரில் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது, திரும்பவும் வீட்டிற்குள் சென்று பேப்பரைப் புரட்ட வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால், போகிற வழியில் சுவரொட்டி போஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து, மனைவியைப் பின்னால் ஏற்றிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

எனது வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு பதிமூன்று கிலோமீட்டர் தொலைவு தான் இருக்கும், போகிற வழியில் பெரிய அளவில் சினிமா போஸ்டர்களை பார்க்க முடியவில்லை, அப்படியே ஒட்டியிருந்தாலும் என்னால் வண்டியை நிறுத்திப் பார்க்க முடியவில்லை. அதனால் நேராக ராஜா மால் சென்று விடலாம் அங்கு ஏதாவது ஒரு புது படம் கண்டிப்பாக இருக்கும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு வண்டியை நேராக செட்டிக்குளம் விட்டேன். ராஜா மாலின் கீழ் தளத்தில் பார்க்கிங் வசதி இருக்கிறது, மனைவியை மாலின் முன் இறங்கச் சொல்லிவிட்டு, வண்டியைக் கொண்டுபோய் பார்க்கிங் ஸ்டாண்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் மாலுக்குள் நுழைந்தோம். இந்த மாலில் இரண்டாவது தளத்தில் தான் தியேட்டர் இருக்கிறது, நேராக இரண்டாவது தளத்திற்கு சென்று என்ன படம் இருக்கிறது என்று கவுண்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன், அவர் கதக்களி, ரஜினி முருகன், குங்க்பூ பாண்டா-3 இருக்கிறது என்றார், நான் கதக்களிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினேன்.

டிக்கெட் வாங்கி விட்டு ஷோ-டைமை பார்த்தேன், காலை 11.30 என்று இருந்தது, என்னுடைய கையிலிருந்த மொபைலில் மணியைப் பார்த்தேன், மணி 10.40 தான் ஆகியிருந்தது, இன்னும் படம் தொடங்குவதற்கு 40 நிமிடம் இருந்தது, இங்குக் காத்திருப்பதை விட, மேல் தளத்தில் இருக்கும் புட் கோர்ட்க்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருவரும் மாடிப் படியேறினோம், பெரிய அளவில் கூட்டம் இல்லை, எங்களைப் போல படம் பார்க்க வந்தவர்களும், கல்லூரிகளுக்குக் கட் அடித்துவிட்டுச் சுற்றிக்கொண்டிருக்கும் சில இளசுகளையும் ஆங்காங்கே இருக்கைகளில் பார்க்க முடிந்தது. மனைவியிடம் ஏதாவது சாப்பிடுகிறாயா என்று கேட்டேன், அவர் கண்கள் ஐஸ்கிரீம் பார்லரை தான் நோக்கியது, சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம் பார்லர் பக்கத்தில் போடப்பட்டிருந்த டேபிளில் மனைவியை அமரச் சொல்லிவிட்டு, நான் சென்று பார்லரில் ஒரு கேரமல் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரீம்  ஆர்டர் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த காபி ஷாப்பில் எனக்கு ஒரு காபி ஆர்டர் செய்தேன்.

ஐஸ்கீரீமை வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு, காபி வாங்குவதற்காகக் காபி ஷாப்பில் வெயிட் பண்ணினேன். இரண்டு வாண்டுகள் வேகமாக ஓடிவந்து ஐஸ்கீரீம் பார்லரின் டேபிளில் இருந்த மெனுகார்டை எடுப்பதற்காகத் துள்ளி கொண்டிருந்தார்கள், நில்லுங்கடா.. டேய்... டே .. என்று சத்தமிட்டு கொண்டு அவர்கள் பின்னால் ஓடி வந்த ஒருவர் டேபிளில் இருந்த மெனு கார்டை எடுத்து அந்த வாண்டுகளிடம் கொடுத்துவிட்டு, கடைக்காரரிடம் கண்ணாடியில் தெரிந்த ஐஸ்கீரீமை காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வாண்டுகளும் ஒருவர் மாறி ஒருவர் மெனுக்கார்டை பார்த்து, திஸ் இஸ் இ வாண்ட் என்று கை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நான் ஆர்டர் பண்ணிய காபி வரவே, அதை வாங்கிக் கொண்டு மனைவி இருந்த டேபிளின் எதிர் பக்கத்தில் அமர்ந்து இந்த இரண்டு வாண்டுகளின் செய்கைகளை நானும் மனைவியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம், அந்த இரண்டு வாண்டுகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தன. டாட் திஸ் இச் ஐ வாண்ட் என்று ஒரு வாண்டு அவர்கள் பக்கத்தில் நின்றவரிடம் கை காட்டும் போது தான், நான் அவர் முகத்தைச் சரியாக பார்த்தேன், எங்கோ பார்த்த முகமாக இருந்தது, எனக்கு உடனடியாக ஞாபகம் வரவில்லை, மனைவியிடம் நான் அவரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர் என்னை அடையாளம் கண்டுபிடித்து, "ஹே பால்! ஹவ் ஆர் யூ மேன், ஆப்டர் லாங் டைம், ஹேவ் எ ஸ்ர்பிரைச்சுடு" என்று என்னிடம் வந்தார்.

என்னை "பால்" என்று அழைத்ததும், அவனுடைய (ஆமா இனி அவர் என்ற மரியாதை இல்லை அவன் தான்) பேச்சில் இருந்த தடங்கலும் எனக்கும் ஒருவனை ஞாபகப் படுத்தியது, ஆம்! நான் நினைத்தது சரி தான், இவன் என்னுடன் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ-வில் ஒன்றாகப் படித்தவன். பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்கள் மட்டும் தான் என்னை "பால்" என்று அழைப்பார்கள். ஆனால் இவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசியது இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிளஸ் ஒன்னில் நான் படிக்கும் போது கணித பாடப் பிரிவில் காமர்ஸ் என்று ஒரு பிரிவு இருந்தது, அதில் சேருவதற்கு எவரும் விரும்ப மாட்டார்கள்,  பத்தாம் வகுப்பில் கணிதத்தில் ஒரு ஐம்பது மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்கள், கணித பிரிவை எடுத்து படிக்க விரும்பினால் அவர்களை இந்தப் பிரிவில் சேர்த்துக்கொள்வார்கள். பெரும்பாலும் இந்தப் பாட பிரிவை எடுத்தவர்களுக்கு, அந்தப் பாட பிரிவைப் பற்றிய முழு புரிதல் இருப்பதில்லை. பள்ளி நிர்வாகம் அந்தப் பாட பிரிவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சிலரை வலுக்கட்டாயமாகச் சேர்த்துவிடுவார்கள், கணிதம் பயாலஜி பிரிவு எடுத்தவர்களுடன் தான், காமர்ஸ் பிரிவு எடுத்தவர்களும் வகுப்பில் ஒன்றாக இருக்க வைக்கப் படுவார்கள். பயாலஜி மற்றும் காமர்ஸ் பாடம் மட்டும் தனித்தனியாக நடத்தப்படும்.

ஏண்டா! நண்பன் ஒருத்தனை பார்த்தேன்னு மேல் பத்தியில் எழுத்திட்டு, அவனைப் பற்றி ஏதாவது எழுதுவானென்று பார்த்தா, அப்படியே யூ டார்ன் எடுத்து பயாலஜி, காமர்ஸ்னு மொக்கை போடுறனு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது, சரி சரி ! சொல்லுறேன், நான் பிளஸ் ஒன்னில் பயாலஜி பிரிவில் படிக்கும் போது அவன் என்னுடன் காமர்ஸ் வகுப்பில் படித்தான். பத்தாம் வகுப்பிலேயே இரண்டு மூன்று முறை அட்டம்ட் எழுதி வந்தவன். என்னைவிட ஒரு மூன்று வயதாவது மூத்தவனாக இருப்பான், ஆனால் பார்ப்பதற்கு அப்படித் தெரியாது, கொஞ்சம் குள்ளமாக இருப்பான். கன்னம் இரண்டும் இட்லி வைத்துத் தைத்தது போல் உப்பலாக இருக்கும். அவன் பேசும் போது நாக்கு கொஞ்சம் குழறும். அவனுடைய அப்பாவிற்கு மரவள்ளி கிழங்கு மொத்த வியாபாரம், ஊரில் சொத்து பத்து அதிகம் உண்டு, பள்ளி படிக்கும் போதே அவனிடம் கை நிறைய பணம் புழங்கும்.

எல்லாப் பாடத்திற்கும் தனித் தனியாக டியூசன் வைத்திருந்தான், ஆனால் அவனுக்கும் படிப்பிற்கும் காதத் தூரமாக இருந்தது, எந்தத் தேர்விலும் பாஸ் மார்க்கு வாங்குவது இல்லை, அவனுக்கு அதைப் பற்றிய கவலையும் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுடன் வியாபாரத்தைக் கவனிக்க கிளம்பி விடுவான். பிளஸ் டூ விலும் நான்கு பாடம் தோல்வி அடைந்தான் என்று நினைக்கிறேன். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு நான் பள்ளிக்கு சென்றிருந்த போது, அவனும் பள்ளிக்கு வந்திருந்தான், இனிமேல் ஐடிஐ படிக்கப் போவதாக என்னிடம் சொன்னான், அப்போது தான் அவனை நான் கடைசியாக பார்த்தது, அதன்பிறகு சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது தான் தியேட்டரில் பார்க்கிறேன்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தான், அவனுடைய ஆங்கில பேச்சில் மெய்மறந்து அப்படியே நிற்கும் போது, என்ன பால்! என்ன தெரியலியா! நான் தான் கிருஷ்ணன் என்றான், ஆகா ! நீதானா நானும் உன்னை எங்கேயே பார்த்தது போல இருக்கு என்று என்னோட வைப் கிட்ட இப்பா தான் சொல்லிட்டு இருந்தேன், நீ அதுக்குள்ள என்னை அடையாளம் கண்டு அழைத்து விட்டாய் என்று கை கொடுத்து என்னுடைய மனைவியை அறிமுகம் செய்து பேசிக்கொண்டிருந்தேன், அவனும் குடும்பத்துடன் தான் வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவனுடைய இரண்டு மகன்களும் கையில் இரண்டு பெரிய கப் ஐஸ்கீரீமுடன் வந்தார்கள். டாட்! ஐ காண்ட் ஹோல்ட் திஸ் வெரி சில்! என்று ஒருவன் தனது கையில் இருந்த ஐஸ்கீரீமை நீட்ட, அருகில் இருந்த என்னுடைய மனைவி அவனிடம் இருந்து அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அவனைச் செயரில் அமர வைத்தார்

தான் இப்போது சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அங்கு தான் குடும்பத்துடன் இருப்பதாகவும் சொன்னான், இரண்டு கடைகள் தள்ளி இருக்கும் பீட்சா கடையில் சாப்பிடும் போது தான் இந்த இரண்டு வாண்டுகளும் ஐஸ்கீரீம் வேண்டும் என்று தொல்லை படுத்தி அழைத்து வந்ததாகவும், தன்னுடைய மனைவி அந்த டேபிளில் காத்திருப்பதாகவும் சொல்லி எங்களை அங்கு வருமாறு அழைத்தான். நாங்களும் அவனுடன் அந்த டேபிளுக்கு சென்றோம், அந்த புட் கோர்ட்டில் இருந்த மொத்த கடைகளின் உணவு வகைகளும் அந்த டேபிளில் இறைந்து கிடந்தது, அவனுடைய மனைவியையும் அறிமுகப்படுத்தி வைத்தான். அவரும் சிங்கப்பூரில் நர்ஸ் ஆக வேலை பார்ப்பதாக சொன்னார்.

பிள்ளைகளிடமும், மனைவியிடமும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினான், என்ன விசயமாக இங்கு வந்தாய் என்று கேட்டேன், பிள்ளைகள் எல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள், அதான் வந்தேன் என்றான், நானும் படம் பார்க்கத் தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு, என்ன படம் பார்க்க! கதகளியா?, ரஜினி முருகனா? என்று கேட்டேன். அவன் இல்லடா! தமிழ்ப் படங்கள் எல்லாம் இப்ப பார்கிறது இல்லை! குங்க்பூ பாண்டா-3 பார்க்க வந்தேன் என்று எனக்கு பல்பு கொடுத்தான். நான் என்ன படம் பார்க்க வந்திருக்கிறேன் என்று கேட்டான், நான் கதக்களி என்று சொன்னேன், அவனுடைய ஷோ-டைம் காலை 11.15 , எங்கள் படத்தின் ஷோ-டைமை விட 15 நிமிடம் முன்னதாக இருந்ததால் எங்களிடம் விடைபெற்று கொஞ்சம் சீக்கிரமாக நால்வரும் கிளம்பினார்கள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் இருந்த பாதி உணவுகள் அப்படியே இருந்தது, அந்த டேபிளில் நாம் இருவரும் இருந்தால், பார்க்கிறவங்க நம்மள தப்பா நினைப்பாங்க, வா ! நாம போய் வேறு டேபிளில் அமரலாம் என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு முன்பு நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு மாறினோம். வந்து அமர்ந்த என்னுடைய மனைவி என்னிடம், இவரை பற்றி, நீங்க! என்னிடம் ஏதும் சொன்னது போல ஞாபகம் இல்லையே! எல்லோரைப் பற்றியும் ஒரு கதை சொல்லுவிங்க! என்று கேட்டார்.



அவரிடம் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

நான் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் போது என்னுடன் படித்த இரண்டு பேர் மாதத்திற்கு ஒரு நாளாவது  வகுப்புக்குக் கட் அடித்துவிட்டு படம் பார்க்க நாகர்கோவிலுக்குப் போய்விடுவார்கள். படம் முடிந்து திரும்ப பள்ளிக்கு அருகில் இருக்கும் தென்னந் தோப்பில் இருந்துவிட்டு, பள்ளி முடிந்து எல்லோரும்  வீட்டிற்குச் செல்லும்போது இவர்களும் கூட்டத்தில் கலந்து விடுவார்கள், அவர்கள் இருவரின் பள்ளி பேக்கில், எப்போதும் இரண்டு செட் கலர் சட்டை மற்றும் பேண்ட் இருக்கும். இந்த இருவருடனும் புதிதாக ஒருவன் வந்து சேர்ந்தான், அவனுடைய பெயர் கோபால், நாங்கள் அவனை கோவாலுனு கூப்பிடுவோம். கோவாலிடம் பணத்திற்குப் பஞ்சம் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் தனது அப்பாவுடன் வியாபாரத்திற்குச் செல்வான், எனவே எப்போதும் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகள் அவன் கையில் புழங்கும், சில நேரங்களில் ஐம்பது ரூபாய் நோட்டும் வைத்திருப்பான்.

கோவாலுக்கு நாகர்கோவிலுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருந்தது, அதற்காக பிடித்த ஆட்கள் அந்த இரண்டு பேர், ஒரு முகூர்த்த நாளில் மூன்று பேரும் சேர்ந்து நாகர்கோவிலுக்கு வண்டி ஏறினார்கள்.  செட்டிகுளத்தில் நாம் இருக்கும் இந்த மால் வருவதற்கு முன்பு இந்த இடத்தில் இரண்டு தியேட்டர் இருந்தது, சக்ரவர்த்தி, மினி சக்ரவர்த்தி அந்த இரண்டு தியேட்டருக்கு தான் அந்த மூன்று பேரும் படம் பார்க்க பதினெட்டு வருடங்களுக்கு முன்பு வந்தார்கள். அந்தத் தியேட்டரில் அன்று எல்லா ஷோவும் ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டப் பட்டிருந்தது, ஒரு தியேட்டரில் முரளியின் தேசிய கீதம் படமும், மற்றொரு தியேட்டரில் விஜய காந்தின் வீரம் வெளஞ்ச மண்ணு என்ற படமும் ஓடியது.

கோவாலு எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்று இவர்களுடன் வந்திருந்தான், அவன் நாகர்கோவிலில் முதல் முறையாகப் படம் பார்க்க வருகிறான். தியேட்டர் மற்றும் படங்களை பற்றிய விபரங்கள் எதுவும் அவனுக்குத் தெரியாது. நண்பர்கள் இரண்டு பேரும் டிக்கெட் இல்லையாம், ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டியிருக்கிறது என்று கோவாலிடம் சொல்லி கொண்டிருந்தார்கள். கோவாலுக்கு நிராசையாக இருந்தது, எப்படியும் படம் பார்த்து விடலாம் என்று இவர்களை நம்பி வந்தவன்.

இவர்கள் மூன்று பேரும் நிற்கும் பக்கமாக ஒருவர், பால்கனி இருவத்தி ஐந்து, பால்கனி இருவத்தி ஐந்து  என்று சொல்லிக்கொண்டு சென்றார். அந்த நண்பர்கள் இருவரும் இருபத்தி ஐந்து ரூபாய் கொடுத்து படம் பார்க்க வேண்டாம் இன்னொரு நாள் கழித்து வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள், கோவாலு விடவில்லை, என்னது! இருவத்தி ஐந்து ரூபாய் கொடுத்தால் படம் பார்க்க போகலாமா!, அப்படியானால் போவோம்!, செலவை நான் பார்த்து கொள்கிறேன், நான் இன்னைக்கு எப்படியாவது படம் பார்க்கத் தியேட்டருக்குள் போக வேண்டும் என்று சொன்னான். அந்த இரண்டு பேரும் எவ்வளவு சொல்லியும் நம்ம கோவாலு கேட்கவில்லை.

ஒரு வழியாக பிளாகில் எழுபத்து ஐந்து ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் போனார்கள். பால்கனியில் வாசல் அருகிலிருந்த முதல் முன்று சீட்டு தான் இவர்களுக்குக் கிடைத்தது, வாசலுக்கு அருகிலேயே கோவாலு அமர்ந்திருந்தான். படம் தொடங்கியது, லஷ்மி மூவி மேக்கர் பெருமையுடன் வழங்கும் "வீரம் வெளஞ்ச மண்ணு" என்று பெயர் வந்தது, வாசலின் அருகில் இருந்த நம்ம கோவாலு லேய் மக்கா! நம்மள ஏமாத்திட்டானுவே டேய் ! என்று கூச்சல் போட்டு அந்த நண்பர்களைப் பார்த்து கத்தினான். அந்த இரண்டு பேருக்கும் ஒண்ணும் புரியவில்லை, கத்தியவன் சும்மா இருக்காமல் வாசலைத் திறந்து வெளியில் ஓடினான், அங்கு எதேச்சையாக இவர்களுக்கு பிளாகில் டிக்கெட் விற்ற நபர் நிற்க, அவரிடம் சென்று, கையைத் தட்டி "ஓய்! எழுவத்தி ஐந்து ரூபா வாங்கும் போது, என்ன ஓய் சொன்னீரு! பால்கனி படம் என்று தானே சொன்னீரு! இப்ப அங்க வேறு ஏதோ படம் போடுறான்" என்று கோவாலு காத்த, அவரு இவனை கோபத்தில் சட்டையைப் பிடிக்க  அந்த இரண்டு நண்பர்களும் வெளியில் வர சரியாக இருந்தது. இல்லையென்றால் அன்னைக்கு கோவாலுக்கு கடைசி படமாக இருந்திருக்கும் என்று கதையை முடித்தேன்.

என்னுடைய மனைவிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை, ஆமா! அந்த கோவாலு யாரு ? என்று கேட்க நான் சொன்னேன் அவனுடைய முழுப் பெயர் "கோபால கிருஷ்ணன்" என்று!...


.

Tuesday, July 27, 2010

இந்த‌ பொண்ணுங்க‌ளே இப்ப‌டித்தான்!!!..

1) வாத்தியாரு போர்டுல எழுதி போடுறதுல அவரு ஸ்பீடுக்கு எழுதமுடியாமல், எல்லோரும் எழுதிட்டீங்களானு கேட்கும் போது "நான் இன்னும் முடிக்கலனு" சொல்லுறதுக்கு கூச்சபட்டு இருந்திட்டு, வாத்தியாரு அழிச்சி முடிச்சப்புறம் நம்ம கிட்ட வந்து உன் நோட்டை கொடு எழுதிட்டு தந்திடுறேனு கெஞ்சுவார்கள். சரினு நோட்டை கொடுத்துவிட்டா மறுநாளு நோட்டு தண்ணில நனைஞ்சது போல இருக்கும், என்னானு கேட்டா என் தம்பி ஒண்ணுக்கு அடிச்சிட்டானு கூலா சொல்லுவார்கள்.

2) குளிக்காம, பல்லும் தேய்க்காம புது துணியை மட்டும் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டு, நாம குளிச்சிட்டு, பல்லும் தேய்ச்சிட்டு நேற்று போட்ட டிரஸை இன்னைக்கு போட்டு வந்தத பற்றி கிண்டல் பண்ணுவார்கள். அவர்கள் மூஞ்சி கூட கழுவாமல் பவுடர் போட்டதை கண்ணுல இருக்கிற கூழை காட்டி கொடுத்திரும், அதை நாம சொன்னா மூஞ்சை தூக்கி வச்சிட்டு நாலு நாளு பேச மாட்டார்கள்!!!

3) ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போகும் போது ஏவானவது புதுசா வேற ஸ்கூல்ல படிச்ச பையன் ஒருத்தன் வந்து சேருவான். இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.

4) அப்படியே சைலண்டா நம்மள கழட்டிவிட்டுருவார்கள். இவ ஏன் நம்மள கழட்டி விட்டானு ஆரய்ச்சில இறங்கி, கொஞ்சம் படிச்சிட்டு இருந்த படிப்பையும் கோட்டை விட வச்சிருவார்கள். அப்படியே விட்டுட்டாலும் பரவாயில்லை. தீடிரெனு ஒரு நாள் வந்து எனக்கு பைசம் சைட்டைவம்(பட்டாணி) செடியின் பூ ஒண்ணு வேணுமுனு இளிச்சிட்டு வந்து நிப்பார்கள். நாமளும் காடு மேடுனு அலைஞ்சி திரிஞ்சி கொண்டு வந்து கொடுத்தா!!. மகேஷ் இரண்டு கொண்டு வந்தான், எனக்கும் ஒண்ணும் கொடுத்தான்னு வழிவார்கள்.

5) உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!



6) வாத்தியாரு கேட்ட கேள்விக்கு பதில் தெரியலனு நாம எழுந்து நிக்கும் போது, அவளிடம் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லி வாத்தியாரின் கோபத்தை கிளறி விடுவார்கள்.

7) நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன வாத்தியாரு, இன்னைக்கு மறந்து பாடம் நடத்த போனா, முத ஆளா எழுந்து சார் இன்னைக்கு பரிட்சை வைக்கிறேன்னு நேத்தைக்கு சொன்னீங்கனு எடுத்து கொடுப்பார்கள்.

8) ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநாளே பொண்ணுங்க எல்லாம் எழுதி கொண்டு வந்து அவருடைய டேபிளில் அடுக்கி விடுவார்கள். நாம இன்னும் அந்த ரெக்கார்டு நோட்டை கடையில் இருந்து வாங்கியே இருக்க மாட்டோம்.

9) காலையிலேயே இன்னைக்கு எந்த வாத்தியாரு எல்லாம் வரலேனு லிஸ்ட் எடுத்து அவருடைய பாடவேளையில் விளையாட போய்விடலாம் என்று பிளான் பண்ணி, கிரிக்கெட் விளையாட டீம் எல்லாம் பிரிச்சி வச்சிட்டு அந்த பாட வேளைக்கு காத்திருந்தா, நல்ல பிள்ளையாட்டு இந்த பொண்ணுங்க டீச்சர்ஸ் ரூம்க்கு போய் ஆணியில்லாமல் தூங்கிட்டு இருக்கும் ஏதாவது டீச்சரை கூட்டி வந்து மொக்கை போட வச்சிடுவாங்க.

10) A+B வெக்டார் இல் ஆரம்பித்து X+Y+Z-வெக்டார் வரைக்கும் ஒரு 70MM இங்கிலிஷ் படத்தை ஓட்டிட்டு நம்ம கணக்கு டீச்சர் புரிஞ்சுதானு நம்மளை பார்த்து கேக்காமல் பொண்ணுங்களை பாத்து கேக்கும் போது, பொண்ணுங்க எல்லாம் ஒண்ண சேர்ந்து ஆமா.. ஆமானு மேலும் கீழும் தலையை ஆட்டுவார்கள். அவங்களை கேட்டுட்டு இந்த பக்கம் நம்மளை பார்த்து கேக்கும் போது நம்ம மட்டும் என்னா?.. இல்லைனா தலையை ஆட்ட முடியும் நாமளும் கோயில் மாடு போல தலையை ஆட்ட வேண்டியது தான். அதுக்கு மாறா எவனாவது தலையை ஆட்டுறதை டீச்சர் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். அந்த பொண்ணுங்க எல்லாம் பாடத்தை கவனிக்க வருது, நீங்க எதுக்குடா வர்றீங்கனு ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு பயந்தே கமுக்கமா உக்கார்ந்து விடுவோம். டீச்சர் போனதும் இந்த பொண்ணுங்க கிட்ட என்ன புரிஞ்சுதுனு கேட்டா... ஒண்ணும் புரியலைனு கோரஸ் பாடும்...

அட ராமா... ராமா.. இந்த பொண்ணுங்க கூட எல்லாம் என்னை ஏண்டா படிக்க வச்ச?... (இதை க‌வுண்ட‌ம‌ணி வ‌ச‌ன‌ம் போல் ப‌டிக்க‌ வேண்டாம்..ஹி..ஹி..)

....................ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.....................

இதுக்கு செய்வினை, செய‌ப்பாட்டுவினை ஆற்றுப‌வ‌ர்க‌ள் எல்லாம் மேலே உள்ள‌ வாச‌க‌த்தை ந‌ல்லா திரும்ப‌ திரும்ப‌ ப‌டிச்சிட்டு ஆத்துமாறு கேட்டுகொள்கிறேன் :))

குறிப்பு: நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலான‌ந்தாவின் ஆசிர‌ம‌த்தில் முத‌ன்மை சிஷ்ய‌ன் ஆகுவ‌த‌ற்கு அனும‌தி வாங்கி விட்டேன். அத‌னால‌ இதுக்கு க‌மெண்ட் போடுப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டில் கிடைக்கும் ஆத‌ர‌வுக்கு(பூரிக்க‌ட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க‌ எச‌மான் குத்துங்க‌.. ஆனா ஒரு சின்ன‌ க‌ண்டிஷ‌ன் "பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..

.

.

.

Sunday, June 13, 2010

ப‌ள்ளி வாழ்க்கை_அனுதாப‌மா? ஏக்க‌மா?

பள்ளியில் வகுப்பு முடிப்பதற்கு சரியாக பத்து நிமிடம் இருப்பதற்கு முன்பு எல்லா புத்தகங்களையும் எடுத்து அடுக்கி விடுவேன். பள்ளியிலேயே சத்துணவில் சாப்பிடுவதால் என்னிடம் ஒரு வட்ட சில்வர் தட்டு இருக்கும். மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி ஈரத்துடன் துணி பையில் வைத்தால், பையில் இருக்கும் புத்தகங்கள் நனைந்து விடும் என்பதால் அதை உலருவதற்காக வெளியில் வைத்திருப்பேன்.

நான் இருக்கும் வகுப்பறையின் ஜன்னல் வழியாக பார்த்தால் வட்ட வடிவமாக வெண்கல தட்டு தொங்கவிடப்பட்டிருப்பது தெரியும். அதன் பக்கத்தில் ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இறுதி பாடவேளையின் கடைசி நேரத்தில் அந்த சுத்தியலையே பார்த்து கொண்டு இருப்பேன். எனது பக்கத்தில் இருக்கும் ஷெர்லின் கொஞ்சம் வசதியானவன். அவனுடைய அப்பா வெளி நாட்டில் வேலை செய்வதால், அவனுக்கு அவனுடைய அப்பா எண்களை காட்டும் கைகடிகாரம் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார்.

எங்கள் வகுப்பிலேயே கைகடிகாரம் கட்டி வரும் மாணவன் அவன் ஒருவன் தான். அதுவும் அவன் என் பக்கத்தில் இருப்பதால் எனக்கு வசதியும் கூட. நான்கு ம‌ணிக்கு ஐந்து நிமிட‌ம் இருக்கும் போதே வெளியில் இருக்கும் ம‌ணியின் ப‌க்க‌த்தில் இருக்கும் சுத்திய‌லின் கைப்பிடியை பார்த்து கொண்டே இருப்பேன். அத‌ன் அருகில் ஒரு கை வ‌ருவ‌து ம‌ட்டும் தெரிந்தால் போதும் என்னுடைய‌ புத்த‌க‌ப்பை எப்ப‌டி என‌து தோளில் போகும் என்ப‌து என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்.

இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மாக‌ கிள‌ம்புவ‌த‌ற்கு கார‌ண‌ம் ப‌ள்ளியில் நுழைவு வாயிலை தாண்டுவ‌த‌ற்கு தான். அந்த‌ நுழைவு வாயிலில் ஒரே நேர‌த்தில் மூன்று அல்ல‌து நான்கு பேர்தான் செல்ல‌ முடியும். கொஞ்ச‌ம் தாம‌தித்தாலும் மாண‌வ‌ர்க‌ளின் கூட்ட‌ம் அதிக‌மாகிவிடும். அத‌ன்பிற‌கு ப‌த்தில் இருந்து ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் காத்து இருந்து தான் செல்ல‌ முடியும்.

ப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்துவிட்டால் அவ்வ‌ள‌வு ச‌ந்தோச‌மாக‌ இருக்கும். அடுத்த‌ ஐந்து நிமிட‌த்தில் வீட்டில் இருப்பேன். சாத‌ர‌ண‌மாக‌ என் ப‌ள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்ல‌ ப‌த்தில் இருந்து ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் ஆகும். காலையில் ப‌ள்ளிக்கு வ‌ரும் போது நான் கூட‌ இந்த‌ நேர‌த்தை எடுத்து கொள்வேன். ஆனால் மாலையில் ஐந்து நிமிட‌ங்க‌ள் தான். வாச‌லில் வ‌ரும் போதே "அம்மா சாப்பாடு ரெடியா?" என்று கேட்டு கொண்டுதான் வீட்டிற்குள் நுழைவேன். அம்மாவும் மீன் குழ‌ம்பு வைத்து சாப்பாடு ரெடியாக‌ வைத்து இருப்பார். ம‌திய‌ம் ப‌ள்ளியில் ச‌த்துண‌வில் சாப்பிடுவ‌தால் மாலையில் இந்த‌ சாப்பாடு தேவையான‌ ஒன்றாக‌வே இருக்கும்.

சாப்பாடு முடித்து விட்டு வீட்டிற்கு வெளியில் வ‌ந்து விட்டால் அந்தி மாலை இருட்டும் வ‌ரை வீட்டிற்குள் திரும்ப‌ வ‌ருவ‌து இல்லை. எங்க‌ள் அப்பாவின் கூட‌ பிற‌ந்த‌வ‌ர்க‌ள் ஆறு பேர் உண்டு. அனைவ‌ரும் எங்க‌ள் வீட்டின் ப‌க்க‌த்தில் தான் இருந்தார்க‌ள். அனைவ‌ரின் வீடுக‌ளும் வ‌ரிசையாக‌ இருக்கும். அனைவ‌ரின் வீட்டிலும் என்னை போல் சிறுவ‌ர் பாட்டாள‌ம் உண்டு.

எங்க‌ள் குடும்ப‌ம் நெல் விவ‌சாய‌த்தை மைய‌மாக‌ கொண்ட‌து. நெற்ப‌யிரை அறுவ‌டை செய்வ‌த‌ற்கு பெரிய‌ இட‌ம் தேவைப்ப‌டும். அந்த‌ இட‌த்தை கிராம‌த்தில் "க‌ள‌ம்" என்று அழைப்பார்க‌ள். அந்த‌ க‌ள‌த்தை அறுவ‌டை கால‌த்தில் உப‌யோக‌ப்ப‌டுத்துவார்க‌ள். ம‌ற்ற‌ நேர‌த்தில் அந்த‌ இட‌ம் எங்க‌ளுடைய‌ விளையாட்டு க‌ள‌மாக‌ இருக்கும். கோலி குண்டு, சிங்காம்பிள்(கிட்டிபிள்), ப‌ந்து எறித‌ல், பாண்டி, நாடு பிடித்த‌ல் போன்ற‌ விளையாட்டுக‌ள் பிர‌தான‌மாக‌ இட‌ம்பெறும்.

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-

ப‌ள்ளி விடுவ‌த‌ற்கு ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் இருப்ப‌த‌ற்கு முன்பாக‌வே என்னுடைய‌ அண்ணி ப‌ள்ளியின் வாச‌லில் காவ‌ல் நின்றார்க‌ள். ப‌ள்ளியில் நான்கு ம‌ணிக்கு ம‌ணி அடிக்கின்ற‌து. ஒரு சின்ன‌ ஆர‌வார‌மும் கேட்க‌வில்லை, எந்த‌ மாண‌வ‌ர்க‌ளும் வெளியில் வ‌ர‌வும் இல்லை. நான் என் அண்ணியிட‌ம் "வ‌குப்பு முடிந்து விட்ட‌த‌ல்லாவா?" என்று கேட்டேன். அவ‌ரும் "ஆம்" என்று என‌க்கு ப‌தில‌ளித்தார். சிறிது நேர‌த்தில் வ‌ரிசையாக‌ கைதிக‌ள் வ‌ருவ‌து போல் ஒவ்வொரு மாண‌வ‌னாக‌ வ‌ந்து கொண்டிருந்தார்க‌ள்.

வ‌ந்த‌ எந்த‌ ஒரு மாண‌வ‌னின் முக‌த்திலும் வீட்டிற்கு போகிறோம் என்ற‌ ச‌ந்தோச‌த்தை பார்க்க‌ முடிய‌வில்லை. பிரிக்கேஜியில் இருந்து மாண‌வ‌ர்க‌ள் வ‌ரிசையாய் வ‌ர‌ ஆர‌ம்பித்து நான்காம் வ‌குப்பு வ‌ருவ‌த‌ற்கு இருப‌து நிமிட‌ங்க‌ள் ஆகிவிட்ட‌து. அர‌விந்த் ப‌டிப்ப‌து ஐந்தாம் வ‌குப்பு. அவ‌ன் வ‌ரிசையில் தூர‌த்தில் நிற்ப‌தை அண்ணி பார்த்து விட்டார். க‌ண்க‌ளாலேயே அவ‌னை மிர‌ட்டினார். "சீக்கிர‌ம் வா" என்று.

வாச‌லில் அர‌விந்த் வ‌ந்த‌வுட‌ன் கையை பிடித்து கொண்டு "உன‌க்கு ந‌ட‌க்க தெரியாதா?" உன்னுடைய‌ வ‌குப்பு ப‌டிக்கும் சுரேஷ் முத‌ல் ஆளாய் வ‌ந்துவிட்டான். "வா!!! சீக்கிர‌ம் வ‌ந்து வ‌ண்டியில் ஏறு" என்று மிர‌ட்டினார். வ‌ண்டியில் அண்ணியும், அர‌விந்தும் ஏறிய‌வுட‌ன் நான் வ‌ண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு செலுத்தினேன். அடுத்த‌ ஐந்தாவ‌து நிமிட‌த்தில் வீட்டில் நாங்க‌ள். ப‌ள்ளி முடிந்து நான் ஓடி வ‌ந்த‌ தொலைவைதான் நாங்க‌ள் மூன்று பேரும் வ‌ண்டியில் வ‌ந்தோம்.



வீட்டிற்கு வ‌ந்த‌தும் அர‌விந்திற்கு சாப்பாடு வ‌லுக‌ட்டாய‌மாக‌ கொடுக்க‌ ப‌டுகிற‌து. காலையில் ப‌ள்ளிக்கு போகும் போதே அவ‌னுடைய‌ புத்த‌க‌ மூட்டையை விட‌ பெரிதாக‌, சாப்பாடு மூட்டை ஒன்று கொடுத்து அனுப்ப‌ ப‌டுகிற‌து. அதில் ம‌திய‌ம் சாப்பாடு, ம‌ற்றும் ஒரு பாட்டிலில் பால், ஒரு ப‌ழ‌ம் ம‌ற்றும் ஒரு பாக்கெட் பிஸ்க‌ட் போன்ற‌வை. இத்த‌னையும் சாப்பிட்டால் மாலையில் ப‌சி எப்ப‌டி எடுக்கும்?. சாப்பாடு முடிந்த‌வுட‌ன் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ துணி மாற்ற‌ ப‌டுகிற‌து.

கையில் ம‌ற்றொரு புத்த‌க‌ பையுட‌ன் வ‌ண்டியில் ஏறினான். இப்போது அவ‌ன் போகும் இட‌ம் ஹிந்தி வ‌குப்பிற்கு. நான் அவ‌னை வ‌ண்டியில் கொண்டு விட்டு விட்டு வீட்டிற்கு வ‌ந்தேன். ச‌ரியாக‌ ஒரு மணி நேர‌ம் க‌ழித்து அவ‌னை திரும்ப‌ அழைத்து கொண்டு ஒரு க‌ம்யூட்ட‌ர் கிளாசில் விட்டேன். அங்கு அவ‌னுக்கு ஒரு ம‌ணி நேர‌ம் வ‌குப்பாம். இது முடிந்த‌வுட‌ன் அர‌விந்த் வீட்டிற்கு வ‌ருவ‌து கிடையாது. எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டில் குடியிருக்கும் அவ‌னுடைய‌ மிஸ்ஸிட‌ம் டியுச‌ன் வ‌குப்பு ஒரு ம‌ணி நேர‌ம்.

எல்லா வ‌குப்பையும் முடித்துவிட்டு அர‌விந்த் வீட்டிற்கு வ‌ருவ‌து ஒன்ப‌து ம‌ணி.

அர‌விந்தை பார்க்கும் போது என‌து ம‌ன‌திற்குள் ஒரு நெருட‌ல் வ‌ராம‌ல் இல்லை. அந்த‌ நெருட‌ல் அனுதாப‌மா? ஏக்க‌மா?


தொட‌ரும்........

.


.
Related Posts with Thumbnails