Wednesday, June 29, 2016

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் நடந்த சுவாதி படுகொலை மிகக் கொடூரமானது, கண்டிப்பாக இந்தக் கொலையை செய்தவன் மனித தன்மை சிறிதும் இல்லாதவனாகத் தான் இருப்பான். அவனுக்கு எத்தகையைக் கொடூர தண்டனையைக் கொடுத்தாலும் அது இந்தக் கொலைக்கு ஈடாகாது. இது இப்படி இருக்க இந்தக் கொலையை வைத்து சமூக வலைத்தளங்களில் சிலர் நடத்தும் அரசியலும், கண் துடைப்பு ஒப்பாரிகளும் தாங்க முடியவில்லை.

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

அவர்கள் பாடிய பீப் பாடல்களின் நீட்சிகள் தான் இந்தச் சுவாதியின் கொலையும், வினுபிரியாவின் தற்கொலையும் என்று கூடவா இந்த மர மண்டைகளுக்குப் புரியவில்லை. யாருக்காகக் கொடி பிடிக்கிறோம், எதற்காகக் கொடி பிடிக்கிறோம் என்று கூட தெரியாமல் எவனோ ஒருவன் வெட்டி ஒட்டிய வால்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடலை பாடியதற்குச் சிம்பு மற்றும் அனிருத் இருவரில் ஒருவரோ, அவர்களுடைய குடும்பத்தினரோ இதுவரையிலும் ஒரு சிறு துளி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தவறுகள் செய்வது இயல்பு, ஆனால் அதைத் திருத்தி கொள்ள முயல்வதும், நடந்த தவற்றுக்கு வருத்தம் தெரிவிப்பதும் தான் பண்பட்ட மனிதர்களின் செயல்களாக இருக்கும். ஆனால் இந்தத் தற்குறிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, மாதர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்க இந்த இருவர் செய்த ஈனச் செயலுக்கு இலக்கணம் கற்பிப்பது தான் கொடுமையாக இருக்கிறது.

தன்னுடைய மனைவியையோ, சகோதரியையோ எந்தவொரு பொது தளங்களிலும், சமூக தளங்களிலும் இயங்க அனுமதிக்காத காவாளி கூட்டம் தான் இன்றைக்கு மாதர் சங்கங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வகுப்பு எடுக்கிறது. இது கூட வேண்டாம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் கூடும் கூட்டங்களுக்கு கூட தன்னுடைய வீட்டிலிருக்கும் பெண்களை அனுமதிக்காத கூட்டம் தான் இன்று ஏதோ ஒரு சில பிரச்சனைகளுக்காவது குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்பைப் பார்த்து ஊளையிடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் செயல்படும் ஒரு சில‌ பெண்களையே இந்த ஆணாதிக்க மனநிலை கொண்ட கூட்டம் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல, வலைத்தளங்களில் கூட பெண்களுக்கு எதிராக எழுதியிருக்கும் பல பதிவுகளை நீங்கள் பார்க்கலாம், முன்பு போல் பல பெண்கள் இந்தத் தளங்களில் செயல்படாமல் முழுமையாக விலகி இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் பெண்களின் முன் இருப்பது மிகப் பெரிய சவால். அவர்களுக்கு ஆதரவாகக் கூட நீங்கள் எழுத வேண்டாம், அவர்களைக் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.

தன்னைப்போல் ஒரு பிறவி தான் பெண், இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் அனைத்து உரிமையும் அவளுக்கும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள அல்லது அந்த உரிமையை அவள் எடுத்துக் கொள்ளும் போது சகித்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் அந்த ஆணாதிக்க மனோபாவம் தான் இப்படியான செயல்களை செய்ய வைக்கிறது.

தன்னை ஒரு பெண் விரும்பா விட்டால், அவனவனுக்கான திறமை மற்றும் தகுதிக்கேற்ப அவளைத் தாக்குவதற்கு கீழ்கண்ட வழிகளில் ஆயுதங்களைத் தூக்குகிறான்.

*அவளைத் திட்டி பாடல்கள்/கவிதைகள் எழுதுவது, எழுத முடியாதவன் கை கொட்டி அந்தப் பாடல்களை/கவிதைகளை ரசிப்பது.. 

*அவளுடைய நடத்தைக்குக் களங்கம் விளைவிக்க முயல்வது, சமூகத்தில் அவளின் ஒழுக்கத்தைப் பற்றி புனைவு கதைகள் கட்டுவது..

*சமூக வலைத்தளங்களில் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பகிருவது, அதை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டுவது..

*அமிலத்தை எடுத்து அவளின் முகத்தில் வீசுவது இல்லையென்றால் கத்தி எடுத்து படுகொலை செய்வது..

எப்படியான மனநிலையில் நாம் வாழ்ந்து கொண்டியிருக்கிறோம் என்று சுய சிந்தனை செய்து கொள்வது நமக்கும் நம்முடைய தலைமுறைக்கும் நலன் பயக்கும். காரணம் நீ வானத்திலிருந்து குதித்து வந்தவன் அல்ல, உன்னுடன் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கும் இன்னொரு பிறவியை அழிக்கத் தான் மேலே சொல்லியிருக்கும் ஆயுதங்களை எடுத்து வீசுகிறாய்.



(பழைய திருவிளையாடல் பட பாலைய்யா வசனம் ஞாபகம் வரலாம்)

ஆமா, யாரோ பண்டிதராம்!
என்னை சொல்லிட்டு இவன் உளறுகிறான், பண்டிதர் இல்ல, பாகவதராம்! ஹி ஹி !!
இரண்டு பயலுவளும் உளறுகிறார்கள்!
அப்படியா! நீ திருத்திச் சொல்லு!
பண்டிதரும் இல்ல ! பாகவதரும் இல்ல ! ஒய் ஜி மகேந்திரன் னு ஒருத்தரு!
யாரவர்?
இந்த கலா மண்டபத்துல நாடகத்துல எல்லாம் நடிப்பாருல்ல!
வேதனை! வேதனை! இந்த படு கொலையைக் கண்டிக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா?
பழைய படங்களில் கூடச் சோடா புட்டி கண்ணாடி போட்டுவிட்டு, கைவிரலைச் சப்பி கொண்டே நடிப்பார் அவரு தானுங்க!
என்னடா இது! இந்தத் தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை! இந்தப் படுகொலையை பத்தி கருத்து கேட்க வேற ஆளே கிடைக்கவில்லையா!
என்னங்க செய்யுறது! மேக்கப் போட்டு திரையில் வந்துட்டா, சமூகத்துக்குக் கருத்து சொல்லித் தானே ஆகவேண்டும்!
ஆமா! ஆமா! கண்டிப்பா சொல்லித்தான் ஆகவேண்டும்!
சமூகத்தில் அநியாயம் நடந்தால் அப்படியே பொங்கிடுவார்!
ஓ அப்படியா! அந்த பீப் பாட்டுக்கு இசை அமைத்த, இவருடைய பங்காளி பையன் அனிருத் பற்றி என்ன பொங்கி இருக்காரு?

ஙே! ஙே! ஙே! ஙே! ஙே!

பாலா இருந்தால் பொங்கும்! பச்சை தண்ணி எப்படிப் பொங்கும்?


.

Monday, June 27, 2016

அறிவுஜீவிகள் வெட்கப் பட வேண்டாமா?

சமீபத்தில் ஒரு நாள், ஊரில் என்னுடன் படித்த பெண் நண்பர் ஒருவரை அலைப்பேசியில் அழைத்திருந்தேன், அவர் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார், எதற்காக அங்குச் சென்றார் என்பதை விசாரிப்பதற்கு அவகாசம் தராமல், என்னை மாலையில் அலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார்.

மாலையில் என்னை அழைத்து, தம்பிக்கு உடம்பு சரியில்லை, அவனுடைய நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு பிரச்சனையாக இருக்கிறது என்றும் அபாய கட்டத்தில் அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை கொடுப்பதாகச் சொன்னார். என்னால் அவர் தம்பி என்று சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை, திரும்பவும் யாருக்கு உடம்பு சரியில்லை என்று கேட்டேன், காரணம் அவர் சொல்லியிருக்கும் உறுப்புகளுக்கு வரும் வியாதியெல்லாம், எந்தப் பழக்கம் உள்ளவருக்கு வரும் என்பது மருத்துவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் மீண்டும் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்திருக்கிறது என்றும், வீட்டில் உள்ள எவருக்கும் இவனுடைய இந்தக் குடி பழக்கம் சரியாக தெரியாது என்றும் சொன்னார்.

அவர் சொல்லியதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் எனக்கும் அவருடைய தம்பியை நன்றாகத் தெரியும், என்னைவிட ஐந்து வயது குறைவாக இருப்பான். பள்ளியில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன், அப்போது மிகச் சிறுவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் இந்தப் பெண் நண்பரிடம் பேசிய போது, அவருடைய தம்பியை பற்றி விசாரித்தேன், அவன் படிப்பில் பெரிய அளவு ஈடுபாடு இல்லையென்றும் சொந்தமாக தொழில் செய்வதாக சொல்லி நாகர்கோவிலில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு துணிக்கடை வைத்திருக்கிறான் என்று சொல்லியிருந்தார்.

துணிக்கடை வைத்திருக்கும் போது பெரும்பாலும் இரவில் வீட்டிற்குத் தூங்குவதற்கு வருவது இல்லையாம், நண்பர்களுடன் சேர்ந்து கடையில் தூங்கிவிடுவானாம், அதனால் அவனுடைய தொடக்க கால குடிப்பழக்கம்  வீட்டிற்குத் தெரிந்திருக்கவில்லை. இவனுடைய குடிப்பழக்கம் அளவிற்கு அதிகமாகிய பிறகு தான் வீட்டிற்குத் தெரிய வந்திருக்கிறது, இவனைக் கண்டிக்க வேண்டிய அப்பாவிற்கும் குடிப் பழக்கம் உண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் ஓடு வேய்ந்த மண் வீடு இடிந்து விழுந்திருக்கிறது, இப்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறார்களாம். இப்படியான சூழ்நிலையில் தான் இவனுடைய மருத்துவ செலவு வந்திருக்கிறது.

முதலில் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள், அவர்கள் இவனுடைய மோசமான நிலைமையைப் பார்த்துவிட்டு உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைத்து இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்ந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள், உயிருக்கான உத்திரவாதம் ஒரு வாரம் வரையிலும் சொல்லப்படவில்லை. நாள் ஒன்றிற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது.

என்னுடைய நண்பர் காதல் திருமணம் செய்தவர், அவர்  நெல்லையில் இரண்டு குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். தந்தையின் வருமானம் அவருடைய குடிப்பழக்கத்திற்கு சரியாக இருந்தது. மருத்துவமனையில் ஆன பண செலவுகளின் பெரும் பகுதியை இவர் தான் புரட்டியிருக்கிறார். தினமும் ஐம்பதாயிரம் செலவு என்றால் இப்படியான குடும்பத்தால் எத்தனை நாட்கள் கடத்திவிட முடியும், என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார். சிலரின் ஆலோசனைப் படி கேரளாவில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனை மற்றும் (அம்மா) அமிர்தா மருத்துவமனை போன்றவற்றில் விசாரித்திருக்கிறார், எவரும் குடியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இலவச சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள்.

நண்பரின் தம்பியின் மெடிக்கல் ரிப்போர்ட்

குடிப் பழக்கத்தால் 27 வயதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இந்தளவிற்குப் பாதிக்க படுகிறது என்றால் டாஸ்மாக்கில் கொடுக்கப்படும் போதை வஸ்துக்கள் எப்படியானவை என்ற கேள்விகள் வருகிறது. இப்போது டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களின் தரம் யாரால் எவரால் சோதிக்கப்படுகிறது, அதில் இருக்கும் ஆல்கஹாலின் அளவுகள் மற்றும் கெமிக்கல் மிக்சிங் போன்றவை எதன் அடிப்படையில் இந்த மதுபானங்களில் சேர்க்கப்படுகிறது என்பதற்கு வெளிப்படையான தகவல்கள் கிடையாது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட  பிராண்டட் மது பாட்டில்கள் கிடைப்பது அரிது,  அப்படியானால் கிராமங்களில் விற்கப்படும் பாட்டில்கள் சொல்லவே வேண்டாம். கிராமங்களில் உள்ள டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் பிராண்டட் பெயர் சொல்லி கேட்பது இல்லை, 120 ரூபாய், 150 ரூபாய் சரக்கு கொடு என்று தான் கேட்கிறார்கள். அதில் பெயர் போட்டிருக்கிறதா, முத்திரைகள் இருக்கின்றதா என்றெல்லாம் எவரும் சோதித்து பார்ப்பது இல்லை.

முன்பெல்லாம் ஊரில் கள்ள சாராயம் குடித்தவர்களுக்கு கூட ஒரு ஐம்பது வயதிற்கு மேல் தான் உடலில் பிரச்சனைகள் வரும், ஆனால் இன்று அரசாங்கம் விற்கும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை வாங்கிக் குடித்தால் இளம் வயதிலேயே மருத்துவமனையில் சென்று படுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஒருவனுக்கு வியாதியைக் கொடுக்கிற மதுவை வரிந்து கட்டிக்கொண்டு ஆண்டுக்கு டார்கெட் வைத்து வியாபாரம் செய்கிறது இந்த அரசு. ஆனால் அந்த மக்களின் வியாதியைக் குணப்படுத்தும் அரசு மருத்துவமனைகளைக் கண்டு கொள்வதில்லை. கிராமங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் நிலையை இந்தக் கட்டுரையில் விவரித்து விட முடியாது, மருத்துவர்கள் இருந்தால், செவிலியர்கள் இருக்க மாட்டார்கள், செவிலியர்கள் இருந்தால் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் இருந்தால், மருத்துவ முறைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. ஒருவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வராதீர்கள், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஒருவர் என்னிடம் பேசும் போது சாதாரணமாக சொல்லுகிறார்.

இன்று டாஸ்மாக்கின் அமோக விற்பனையால் தான் அரசாங்கம் நமக்கு இலவசங்களைக் கொடுக்க முடிகிறது,  வருட வருடம் மாநிலத்திற்கான நிதிநிலை அறிக்கையைப் போட முடிகிறது, இல்லையென்றால் பெரிய துண்டு விழும் என்று விவாதிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இப்படிச் சொல்ல வெட்கப் பட வேண்டாமா? ஒருவனுடைய மதுப் பழக்கம் அவனை மட்டும் பாதிப்பதில்லை, அவனைச் சார்ந்த குடும்பத்தையும் சீரழிக்கிறது, குடும்பங்கள் தான் சமூகத்தின் ஆணி வேர்கள் என்று வக்கணையாக ஏட்டில் எழுதி வைத்துப் படிக்கிறோம். ஆணி வேர்களுக்கு நஞ்சை உறிஞ்ச கொடுக்கும் டாஸ்மாக் கடைகளால் மட்டும் தான் ஒரு அரசாங்கம் ஆட்சி செய்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்றால் அந்த ஆட்சியின் கீழ் வாழும் நாம் எல்லாம் மாக்கள் தான். பல குடும்பங்கள் மதுவால் அழிந்தாலும் பரவாயில்லை, என்னுடைய இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று சொல்லும் அரசுகள் உண்மையில் "நமக்கான அரசு தான்" என்பதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும்.



ஒரு சுதந்திர நாட்டில், ஒரு குடி மகன் மதுக் குடிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை, அந்த உரிமையை எப்படி நாம் பறிக்க முடியும் என்று சில பேர் கேள்வி கேட்கிறார்கள். குடிப்பழக்கம் என்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை, அவரைச் சுற்றியிருக்கும் சமுகத்தையும் பாதிக்கிறது என்பதை எத்தனைப் புள்ளி விபரங்கள் மற்றும் செய்திகளை எடுத்து வைத்தாலும் இவர்கள் கேட்க போவது இல்லை. குடிப்பழக்கத்திற்கு நாங்கள் அடிமை இல்லை, ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறோம் என்று சொல்லும் கூட்டம் தான் டாஸ்மாக் விடுமுறை நாள் என்று அரசு அறிவித்தால் அதற்கு முந்தின நாளே வாங்கி ஃப்ரிஜில் வைத்துக் கொள்கிறது. குடிப்பழக்கம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை ஒன்றும் இல்லை. ஒழுக்க கேடான செயல்களுக்கு எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம், என் தனிப்பட்ட உரிமை என்று சட்டம் பேசிவிட முடியாது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் இந்த டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று சொல்லும் அறிவுஜீவிகள் கண்டிப்பாக மது பிரியர்களை நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் பார்த்திருப்பார்கள். கண்டிப்பாக மதுப் பழக்கம் உள்ளவர்களிடம் இவர்களுக்கான தொடர்பு அறவே இருப்பது இல்லை. நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு மட்டும் தான் இந்த மாற்று ஏற்பாடுகள் தேவை, இந்த நடுத்தர வர்க்கத்திற்கு திடீரென வேலைப் போய் விட்டால் கூட என்ன செய்வது என்று தெரியாது, அதற்கும் கூட மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது, உறவுகளையும், சமூக அக்கறைகளையும் தொலைத்து நிற்கும் இந்தக் கூட்டத்திற்கு எல்லாவற்றுக்கும் தனியாகவே ஒரு மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது என்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நடந்த இன்போசிஸ் நிறுவனத்தில்  வேலைப்பார்த்து வந்த இளம் பெண்ணின் படுகொலையே சாட்சி.

கிராமத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சொல்லுவது, காலையிலேயே கடையை திறந்து வைத்து ஆசையைத் தூண்டி விடுகிறார்கள், அந்தக் கடைப்பக்கம் செல்லாமல் வேறு பாதையில் செல்லலாம் என்றால், அங்கு நமக்குத் தெரிந்தவர்கள் இருவர் குடிக்க கிளம்புவார்கள், இல்லையென்றால் குடித்துவிட்டு வந்து நம்மிடம் பகடி செய்வார்கள், இப்படியான சூழ்நிலையை எதிர் கொள்வது தான் கடினம் என்று அங்கலாய்க்கிறார்கள். எனது அப்பாவும் குடிப்பழக்கம் உள்ளவர் தான், சில நாட்கள் காலையில் ஆரம்பித்தால் அன்று முழுவதும் அவர் அந்தப் போதை உலகத்தில் தான் இருப்பார். அவரிடம், அப்பா! டாஸ்மாக்கை மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால், அது இல்லையென்றால் குடியா மூழ்கிவிடும், அதோடு தொலைந்தது என்று விட்டு விடுவேன் என்று சொல்லுவார்கள். ஆனால் "குடிக்காமல் இருங்கள்" என்று சொன்னால் "முடியாது" என்று தான் சொல்வார்கள். இவர்களால் குடிக்காமல் இருக்க முடியும், ஆனால் எளிதாகக் கிடைக்கிறது என்ற எண்ணம் தான் இவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாமல் வைத்திருக்கிறது.

என்னுடன் சவுதியில் இருக்கும் சில நண்பர்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது நாள் தோறும் தவறாமல் மாலையில் டாஸ்மாக் சென்று வருபவர்கள் தான். ஆனால் இப்போது அவர்களால் குடிக்காமல் ஒரு வருடங்களுக்கு மேல் இருக்க முடிகிறது. குடிப்பதற்கு எளிதாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, "நீ குடிக்காதே" என்று அவனைக் கட்டுப்படுத்த நினைப்பது எப்படியான மனநிலை என்று புரியவில்லை

வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து குடும்பங்களின் இளம் குருத்துக்களை குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைத் தான் சேரும். இன்றைக்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் டாஸ்மாக் கடையை தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போன்ற காட்சிகளை அமைக்கும் இயக்குநர்களின் கற்பனை வறட்சியும் குடிப்பழக்கத்தை ஆதரித்து அதற்குத் தூபம் போடுவது போல் அமைகிறது..



.

Wednesday, June 22, 2016

நாகர்கோவில்_ஜாக்கி ஜட்டி கிடைக்குமிடம்?

சமீபத்தில் லங்கோடு போடுவதிலும், வாங்குவதில் உள்ள பிரச்சனைகளை பற்றித் தான் தற்போதைய இலக்கிய உலகம் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் நமது மாவட்ட இலக்கிய பிதாமகர் வெளியூர் பயணத்திற்கு தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்ற போது எங்கும், எதிலும் நீக்க மற போலிகள் நிறைந்திருப்பது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை தொடர்ந்து முகநூலிலும், வலைத்தளத்திலும் யாரெல்லாம் பிராண்டட் ஜட்டி போடுகிறார்கள்/லோக்கல் உபயோகிக்கிறார்கள் என்ற முக்கியமான ஆய்வுகளில் நம்மவர்கள் திளைக்கிறார்கள். அந்தக் கட்டுரையில் குறிப்பாக தனக்கு ஜாக்கி ஜட்டி கிடைக்கவில்லையென்றும், நாகர்கோவிலில் மிகப் பெரிய ரெடிமேட் ஷாப் "டவர் ரெடிமேட்" கடையில் கூட அந்த பிராண்ட் ஜட்டி கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் எழுதியிருந்தார். நாகர்கோவிலில் எங்குத் தேடியும் டியூரோ செல் பேட்டரி கிடைக்கவில்லை என்ற ஒரு புகார் வேறு அந்தக் கட்டுரையில் இருக்கிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும், அந்தக் கட்டுரைக்கும் வரும் வாசகர் கடிதத்தை பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள், ஜட்டியே போடுவது இல்லை போலவும், இப்போதும் பழைய வேட்டியைக் கிழித்து கோவணமாகச் சுற்றி கொண்டிருப்பவர்கள் போலவும், ஒரிஜினல் பிராண்டுக்கும், டூப்பிளிகேட் பிராண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குபவர்கள் போலவும் ஒரு தோற்றம் அந்தக் கட்டுரையில் தென்படுகிறது. அதிலும் இங்குள்ள எந்தக் கடையிலும் ஒரிஜினல் பொருட்கள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைக்கிறார்.

எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் பல வேலைகளுக்குச் சென்றவர்கள். இப்போதும் பெரும்பான்மையான குடும்பத்தில் ஒருவராவது வளைகுடா நாடுகளில் வேலையில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் பெரும்பாலும் பிராண்டட் எலக்ட்ரானிக் பொருட்களை தான் வாங்கி வைத்திருப்பார்கள். சொந்தக்காரனிடம் கூட வெளிநாட்டிலிருந்து உனக்காகக் கொண்டு வந்தேன் என்று ஏதாவது ஒரு பொருளை நீட்டினால், சோனியா, மேட் இன் ஜப்பானா என்று கேட்டு தான் வாங்கிக் கொள்கிறார்கள், அப்படியான ஊரில் நமது ஜெயமோகன் அவர்கள் சொல்வது போல் டூப்பிளிகேட் பொருட்களை மட்டுமே நம்பி ஒருவர் கடையை திறந்தால், அவர் சீக்கிரம் அந்தக் கடையை மூடி விட்டு போக வேண்டியது தான். அதற்காக எனது மாவட்டத்தில் போலி பிராண்டட் பொருட்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். எத்தனை டூப்பிளிகேட் பிராண்டட் இருக்கிறதே, அதே அளவு ஒரிஜினல் பிராண்டும் இருக்கிறது என்பது தான் நான் கூற வருவது.

ஜாக்கி ஜட்டி பற்றி சொல்லவே வேண்டாம், இப்போது கல்லூரியில் படிக்கும் அனைத்து இளைய பட்டாளங்களும் அந்த பிராண்டட் ஜட்டியின் ரோப் வெளியில் தெரியும் அளவிற்கு தான் ஜீன்ஸ் பேண்ட் வாங்கி அணிகிறார்கள். அதனால் இலக்கியம் படைக்கும் பெருசுகள் எல்லாம் ஜாக்கி ஜட்டியை வாங்கி தன்னுடைய வேட்டி, மற்றும் பேண்டுக்கும் மறைவாகப் போட்டுவிட்டு நாங்களும் பிராண்டட் ஜட்டி தான் போடுகிறோம் என்று இளசுகளின் முன்னால் மார் தட்டிட முடியாது, வேண்டுமானால் ஒன்று பண்ணலாம், சூப்பர் மேன் போல் ஜட்டியை வாங்கி பேண்டுக்கு மேல் போட்டு கொள்ளலாம்.

நமது எழுத்தாளர், நாகர்கோவில் முழுவதும் ஒரு ஜாக்கி ஜட்டி வாங்க அலைந்தேன், எங்கும் கிடைக்கவில்லை என்று எழுதியிருப்பது தான் என்னை இந்தக் கட்டுரையை எழுத வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது, மிகப் பெரிய எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் கட்டுரையை படித்த அவருடைய வாசகர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தால் ஒரு பிராண்டட் லங்கோடு கூட வாங்க முடியாது போல! என்ற முன் முடிவுக்கு வரக்கூடும். அதற்குத் தினமும் அவரது இணையதளத்தில் ஜாக்கி ஜட்டி கட்டுரைக்கு வந்து கொண்டிருக்கும் வாசகர் கடிதங்களே சாட்சி!

அவர் வீடு இருக்கும் பார்வதிபுரத்திலிருந்து அப்படியே செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி நடந்தால், பால் பண்ணை பஸ் ஸ்டாப் வரும், அந்த சிக்கனலில் இருக்கும் ஹோண்டா டூவீலர் ஷோரூம் பக்கத்தில் ஒரு மெகா மார்ட் இருக்கிறது, அங்குப் போனால் வித விதமான ஜாக்கி ஜட்டிகள் வாங்கலாம், இந்த ஜட்டியில் என்ன வித விதமான என்று கேட்கிறீர்களா? இருக்கிறது, இந்தமுறை நான் வாங்கிய கிளாசிக் டைப் ஜாக்கி ஜட்டி, காலேஜ் பசங்க போடுற ஜீன்ஸ் பேண்டு போல் பிருஷ்டத்திற்கு கீழாக நிற்கிறது, எவ்வளவு தான் முயற்சித்தாலும் பாதி பிருஷ்டத்திற்கு மேல் ஏற மாட்டேன் என்கிறது, உன்னோட பிருஷ்டம் பெருசு ஆனதற்குக் கடைக்காரன் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, ஆனால் என்னுடைய பிருஷ்டம் பெரிதானதால் வந்த பிரச்சனை இல்லை, அந்த வகையான மாடலின் வடிவமைப்பே அப்படி தான் இருக்கிறது, என்னென்ன வகை இருக்கிறது என்று தெரிய வேண்டுமானால் குகூள் செய்து பாருங்கள் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அதனால் ஜாக்கி ஜட்டி வாங்குபவர்கள் இதையும் கவனத்தில் வைத்து வாங்குங்கள். இந்தமுறை நான் வாங்கிய நான்கு செட் ஜாக்கி ஜட்டியை போடாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறேன். ஏன்டா! ஒரு எதிர்வினை கட்டுரையில் கூட அட்வைஸ், மெசேஜ் என்ற மொக்கைகள் இல்லாமல் எழுதத் தெரியவில்லை. நீயெல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டே! என்று சொல்லும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது..ஹி.. ஹி..

அப்படியே நமது எழுத்தாளர் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டு, மீண்டும் செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி முன்நோக்கி நடந்து அடுத்த பஸ் ஸ்டாப் ஆன மத்தியாஸ் வார்டு வந்தால் அங்கு டெரிக் சூப்பர் மார்கெட் இருக்கிறது. இவருக்கு டூயூரோ செல் பேட்டரி என்ன, பிலிப்ஸ் மற்றும் சானியோ பிராண்ட் பேட்டரி வகைகள் வரைக் கிடைக்கும். நமது எழுத்தாளர் இன்னும் திருவிதாங்கோடு பக்கம் இருக்கும் கடைகளுக்கு போனது இல்லை என்று நினைக்கிறேன், வளைகுடா நாடுகளில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சாக்லெட் வரை அனைத்துப் பொருட்களும் அங்குக் கிடைக்கிறது, அப்படி அந்தக் கடைகளில் இல்லையென்றால், என்ன பொருள் வேண்டும் என்பதை நாம் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் ஒரு வாரக் காலத்தில் நமக்கு வாங்கி வந்து தருகிறார்கள்.

இந்த பிராண்டட் பொருட்கள், நான் சொல்லிய இரண்டு இடங்கள் தவிர வேறு எங்கும் கிடைக்காதா என்றால், இல்லை வேறு பல இடங்களில் இருக்கும் கடைகள் பற்றியும் என்னால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்க முடியும், ஆனால் நமது எழுத்தாளரின் வசதிக்காக அவர் வசிக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிடைக்கும் கடைகளை மட்டும் எழுதியிருக்கிறேன்.



ஜட்டி பற்றிய கதை வந்ததால், எனது நண்பருடைய அனுபவத்தையும் சேர்த்து எழுதுகிறேன், இந்த அனுபவம் வட இந்தியா போன போது எனக்கும் ஒருமுறை நடந்து இருக்கிறது. சவுதியில் நண்பர் ஒருவரை ஒரு புது ப்ரொஜெக்ட் விசயமாக, ஒரு நாள் மீட்டிங் போய் வரலாம் என்று மேனேஜர் அழைத்துக் கொண்டு போயிருந்தார். அந்த ப்ரொஜெக்ட் பண்ண வேண்டிய சைட் கொஞ்சம் ரிமோட் ஏரியா, பெரிதாக டெவலப் ஆகாத சிட்டி. நண்பரும் ஒரு நாள் தானே, என்று அதிகமான துணிகள் எடுத்துப் போகவில்லை, இரண்டு செட் துணிகள் மட்டும் கைப் பையில் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். ப்ரொஜெக்ட் மீட்டிங் முடிந்தவுடன், உங்கள் நிறுவனத்திலிருந்து ஒரு ஆள் இன்றிலிருந்தே வேலையைத் தொடங்க வேண்டும், உங்கள் ப்ரொஜெக்டுக்கு தேவையான அனைத்தும் டாக்குமெண்டுகளும் வரத் துவங்கி விட்டது என்று கிளைண்ட் வற்புறுத்தியிருக்கிறான். அப்புறம் என்ன, ப்ரொஜெக்டில் கிளைன்ட் சொன்னால் தட்ட முடியுமா? ஒரு வாரம் "நீ சமாளித்துக் கொள்!" என்று நண்பரை அடகு வைத்துவிட்டு மேனேஜர் வந்து விட்டார்.

ஒரு வாரம் என்று நினைத்து, ஒரு மாதம் அந்த நண்பர் ப்ரொஜெக்டில் தனியாக இருக்க வேண்டி வந்தது, அதன் பிறகு தான் என்னுடன் சேர்ந்து மூன்று பேர் வந்தோம். ஒரு மாதம் நண்பர் தங்கியிருந்த ஹோட்டலில் தான் நாங்களும் தங்க வைக்கப் பட்டோம், நண்பரின் ரூமில் ஒரு மூலையில் கசங்கிய ஜட்டி குவியாக கிடந்தது, என்ன என்று விசாரித்த போது, ஹோட்டலில் துணி துவைப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றும், வெளியில் லாண்டரியில் தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கும் ஜட்டி குவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், இங்கிருக்கும் லாண்டரி கடையில் ஒரு ஜட்டி துவைப்பதற்கு கூட இரண்டு ரியால் கேட்கிறான், இரண்டு முறைத் துவைக்க கொடுத்தால் நான்கு ரியால் ஆகிறது, புதிதாகக் கடையில் விற்கும் பத்து ஜட்டிகள் இருக்கும் பாக்கெட் முப்பது ரியால் தான் சொல்கிறான், அதனால் நான் இரண்டு பாக்கெட் வாங்கி உபயோகித்து வருகிறேன் என்று சொன்னார்.


.


.

Monday, June 20, 2016

ஏண்டா! இவனா நம்ம கோவாலு!

ஊர் திருவிழாவை திட்டமிட்டு இந்த முறை வருட விடுமுறையை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து, பிப்ரவரி முதல் வாரம் வரை எடுத்திருந்தேன், முதல் இரண்டு வாரங்கள் கோவில் திருவிழா மற்றும் சொந்த வேலைகள் என்று கொஞ்சம் பிஸியாக போனது, குடும்பத்துடன் பெரிதாக வெளியில் எங்கும் சுற்ற முடியவில்லை. திருவிழா முடிந்த வாரத்தில், ஒரு நாள் வீட்டில் சொந்த வேலைகள் எதுவும் பெரிதாக இல்லை, அதனால் வெளியில் சென்று வரலாம் என்று காலையில் மனைவியிடம் சொன்னேன், ஊரில் இருக்கும் போது பெரும்பாலும் நான் "வெளியில் செல்லலாம்" என்றால் நாகர்கோவிலுக்குப் படம் பார்க்கப் போகிறோம் என்று தான் அதன் பொருள் என்று மனைவிக்குத் தெரியும்.

காலையில் குளித்து, டிபன் சாப்பிட்டு இருவரும் கிளம்பும் போது மணி பத்தை நெருங்கியது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, வராண்டாவில் நிறுத்தியிருந்த டூவீலரை வெளியில் எடுக்கும் போது தான் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று பேப்பரில் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது, திரும்பவும் வீட்டிற்குள் சென்று பேப்பரைப் புரட்ட வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால், போகிற வழியில் சுவரொட்டி போஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து, மனைவியைப் பின்னால் ஏற்றிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

எனது வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு பதிமூன்று கிலோமீட்டர் தொலைவு தான் இருக்கும், போகிற வழியில் பெரிய அளவில் சினிமா போஸ்டர்களை பார்க்க முடியவில்லை, அப்படியே ஒட்டியிருந்தாலும் என்னால் வண்டியை நிறுத்திப் பார்க்க முடியவில்லை. அதனால் நேராக ராஜா மால் சென்று விடலாம் அங்கு ஏதாவது ஒரு புது படம் கண்டிப்பாக இருக்கும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு வண்டியை நேராக செட்டிக்குளம் விட்டேன். ராஜா மாலின் கீழ் தளத்தில் பார்க்கிங் வசதி இருக்கிறது, மனைவியை மாலின் முன் இறங்கச் சொல்லிவிட்டு, வண்டியைக் கொண்டுபோய் பார்க்கிங் ஸ்டாண்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் மாலுக்குள் நுழைந்தோம். இந்த மாலில் இரண்டாவது தளத்தில் தான் தியேட்டர் இருக்கிறது, நேராக இரண்டாவது தளத்திற்கு சென்று என்ன படம் இருக்கிறது என்று கவுண்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன், அவர் கதக்களி, ரஜினி முருகன், குங்க்பூ பாண்டா-3 இருக்கிறது என்றார், நான் கதக்களிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினேன்.

டிக்கெட் வாங்கி விட்டு ஷோ-டைமை பார்த்தேன், காலை 11.30 என்று இருந்தது, என்னுடைய கையிலிருந்த மொபைலில் மணியைப் பார்த்தேன், மணி 10.40 தான் ஆகியிருந்தது, இன்னும் படம் தொடங்குவதற்கு 40 நிமிடம் இருந்தது, இங்குக் காத்திருப்பதை விட, மேல் தளத்தில் இருக்கும் புட் கோர்ட்க்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருவரும் மாடிப் படியேறினோம், பெரிய அளவில் கூட்டம் இல்லை, எங்களைப் போல படம் பார்க்க வந்தவர்களும், கல்லூரிகளுக்குக் கட் அடித்துவிட்டுச் சுற்றிக்கொண்டிருக்கும் சில இளசுகளையும் ஆங்காங்கே இருக்கைகளில் பார்க்க முடிந்தது. மனைவியிடம் ஏதாவது சாப்பிடுகிறாயா என்று கேட்டேன், அவர் கண்கள் ஐஸ்கிரீம் பார்லரை தான் நோக்கியது, சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம் பார்லர் பக்கத்தில் போடப்பட்டிருந்த டேபிளில் மனைவியை அமரச் சொல்லிவிட்டு, நான் சென்று பார்லரில் ஒரு கேரமல் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரீம்  ஆர்டர் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த காபி ஷாப்பில் எனக்கு ஒரு காபி ஆர்டர் செய்தேன்.

ஐஸ்கீரீமை வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு, காபி வாங்குவதற்காகக் காபி ஷாப்பில் வெயிட் பண்ணினேன். இரண்டு வாண்டுகள் வேகமாக ஓடிவந்து ஐஸ்கீரீம் பார்லரின் டேபிளில் இருந்த மெனுகார்டை எடுப்பதற்காகத் துள்ளி கொண்டிருந்தார்கள், நில்லுங்கடா.. டேய்... டே .. என்று சத்தமிட்டு கொண்டு அவர்கள் பின்னால் ஓடி வந்த ஒருவர் டேபிளில் இருந்த மெனு கார்டை எடுத்து அந்த வாண்டுகளிடம் கொடுத்துவிட்டு, கடைக்காரரிடம் கண்ணாடியில் தெரிந்த ஐஸ்கீரீமை காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வாண்டுகளும் ஒருவர் மாறி ஒருவர் மெனுக்கார்டை பார்த்து, திஸ் இஸ் இ வாண்ட் என்று கை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நான் ஆர்டர் பண்ணிய காபி வரவே, அதை வாங்கிக் கொண்டு மனைவி இருந்த டேபிளின் எதிர் பக்கத்தில் அமர்ந்து இந்த இரண்டு வாண்டுகளின் செய்கைகளை நானும் மனைவியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம், அந்த இரண்டு வாண்டுகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தன. டாட் திஸ் இச் ஐ வாண்ட் என்று ஒரு வாண்டு அவர்கள் பக்கத்தில் நின்றவரிடம் கை காட்டும் போது தான், நான் அவர் முகத்தைச் சரியாக பார்த்தேன், எங்கோ பார்த்த முகமாக இருந்தது, எனக்கு உடனடியாக ஞாபகம் வரவில்லை, மனைவியிடம் நான் அவரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர் என்னை அடையாளம் கண்டுபிடித்து, "ஹே பால்! ஹவ் ஆர் யூ மேன், ஆப்டர் லாங் டைம், ஹேவ் எ ஸ்ர்பிரைச்சுடு" என்று என்னிடம் வந்தார்.

என்னை "பால்" என்று அழைத்ததும், அவனுடைய (ஆமா இனி அவர் என்ற மரியாதை இல்லை அவன் தான்) பேச்சில் இருந்த தடங்கலும் எனக்கும் ஒருவனை ஞாபகப் படுத்தியது, ஆம்! நான் நினைத்தது சரி தான், இவன் என்னுடன் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ-வில் ஒன்றாகப் படித்தவன். பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்கள் மட்டும் தான் என்னை "பால்" என்று அழைப்பார்கள். ஆனால் இவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசியது இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிளஸ் ஒன்னில் நான் படிக்கும் போது கணித பாடப் பிரிவில் காமர்ஸ் என்று ஒரு பிரிவு இருந்தது, அதில் சேருவதற்கு எவரும் விரும்ப மாட்டார்கள்,  பத்தாம் வகுப்பில் கணிதத்தில் ஒரு ஐம்பது மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்கள், கணித பிரிவை எடுத்து படிக்க விரும்பினால் அவர்களை இந்தப் பிரிவில் சேர்த்துக்கொள்வார்கள். பெரும்பாலும் இந்தப் பாட பிரிவை எடுத்தவர்களுக்கு, அந்தப் பாட பிரிவைப் பற்றிய முழு புரிதல் இருப்பதில்லை. பள்ளி நிர்வாகம் அந்தப் பாட பிரிவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சிலரை வலுக்கட்டாயமாகச் சேர்த்துவிடுவார்கள், கணிதம் பயாலஜி பிரிவு எடுத்தவர்களுடன் தான், காமர்ஸ் பிரிவு எடுத்தவர்களும் வகுப்பில் ஒன்றாக இருக்க வைக்கப் படுவார்கள். பயாலஜி மற்றும் காமர்ஸ் பாடம் மட்டும் தனித்தனியாக நடத்தப்படும்.

ஏண்டா! நண்பன் ஒருத்தனை பார்த்தேன்னு மேல் பத்தியில் எழுத்திட்டு, அவனைப் பற்றி ஏதாவது எழுதுவானென்று பார்த்தா, அப்படியே யூ டார்ன் எடுத்து பயாலஜி, காமர்ஸ்னு மொக்கை போடுறனு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது, சரி சரி ! சொல்லுறேன், நான் பிளஸ் ஒன்னில் பயாலஜி பிரிவில் படிக்கும் போது அவன் என்னுடன் காமர்ஸ் வகுப்பில் படித்தான். பத்தாம் வகுப்பிலேயே இரண்டு மூன்று முறை அட்டம்ட் எழுதி வந்தவன். என்னைவிட ஒரு மூன்று வயதாவது மூத்தவனாக இருப்பான், ஆனால் பார்ப்பதற்கு அப்படித் தெரியாது, கொஞ்சம் குள்ளமாக இருப்பான். கன்னம் இரண்டும் இட்லி வைத்துத் தைத்தது போல் உப்பலாக இருக்கும். அவன் பேசும் போது நாக்கு கொஞ்சம் குழறும். அவனுடைய அப்பாவிற்கு மரவள்ளி கிழங்கு மொத்த வியாபாரம், ஊரில் சொத்து பத்து அதிகம் உண்டு, பள்ளி படிக்கும் போதே அவனிடம் கை நிறைய பணம் புழங்கும்.

எல்லாப் பாடத்திற்கும் தனித் தனியாக டியூசன் வைத்திருந்தான், ஆனால் அவனுக்கும் படிப்பிற்கும் காதத் தூரமாக இருந்தது, எந்தத் தேர்விலும் பாஸ் மார்க்கு வாங்குவது இல்லை, அவனுக்கு அதைப் பற்றிய கவலையும் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுடன் வியாபாரத்தைக் கவனிக்க கிளம்பி விடுவான். பிளஸ் டூ விலும் நான்கு பாடம் தோல்வி அடைந்தான் என்று நினைக்கிறேன். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு நான் பள்ளிக்கு சென்றிருந்த போது, அவனும் பள்ளிக்கு வந்திருந்தான், இனிமேல் ஐடிஐ படிக்கப் போவதாக என்னிடம் சொன்னான், அப்போது தான் அவனை நான் கடைசியாக பார்த்தது, அதன்பிறகு சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது தான் தியேட்டரில் பார்க்கிறேன்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தான், அவனுடைய ஆங்கில பேச்சில் மெய்மறந்து அப்படியே நிற்கும் போது, என்ன பால்! என்ன தெரியலியா! நான் தான் கிருஷ்ணன் என்றான், ஆகா ! நீதானா நானும் உன்னை எங்கேயே பார்த்தது போல இருக்கு என்று என்னோட வைப் கிட்ட இப்பா தான் சொல்லிட்டு இருந்தேன், நீ அதுக்குள்ள என்னை அடையாளம் கண்டு அழைத்து விட்டாய் என்று கை கொடுத்து என்னுடைய மனைவியை அறிமுகம் செய்து பேசிக்கொண்டிருந்தேன், அவனும் குடும்பத்துடன் தான் வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவனுடைய இரண்டு மகன்களும் கையில் இரண்டு பெரிய கப் ஐஸ்கீரீமுடன் வந்தார்கள். டாட்! ஐ காண்ட் ஹோல்ட் திஸ் வெரி சில்! என்று ஒருவன் தனது கையில் இருந்த ஐஸ்கீரீமை நீட்ட, அருகில் இருந்த என்னுடைய மனைவி அவனிடம் இருந்து அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அவனைச் செயரில் அமர வைத்தார்

தான் இப்போது சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அங்கு தான் குடும்பத்துடன் இருப்பதாகவும் சொன்னான், இரண்டு கடைகள் தள்ளி இருக்கும் பீட்சா கடையில் சாப்பிடும் போது தான் இந்த இரண்டு வாண்டுகளும் ஐஸ்கீரீம் வேண்டும் என்று தொல்லை படுத்தி அழைத்து வந்ததாகவும், தன்னுடைய மனைவி அந்த டேபிளில் காத்திருப்பதாகவும் சொல்லி எங்களை அங்கு வருமாறு அழைத்தான். நாங்களும் அவனுடன் அந்த டேபிளுக்கு சென்றோம், அந்த புட் கோர்ட்டில் இருந்த மொத்த கடைகளின் உணவு வகைகளும் அந்த டேபிளில் இறைந்து கிடந்தது, அவனுடைய மனைவியையும் அறிமுகப்படுத்தி வைத்தான். அவரும் சிங்கப்பூரில் நர்ஸ் ஆக வேலை பார்ப்பதாக சொன்னார்.

பிள்ளைகளிடமும், மனைவியிடமும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினான், என்ன விசயமாக இங்கு வந்தாய் என்று கேட்டேன், பிள்ளைகள் எல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள், அதான் வந்தேன் என்றான், நானும் படம் பார்க்கத் தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு, என்ன படம் பார்க்க! கதகளியா?, ரஜினி முருகனா? என்று கேட்டேன். அவன் இல்லடா! தமிழ்ப் படங்கள் எல்லாம் இப்ப பார்கிறது இல்லை! குங்க்பூ பாண்டா-3 பார்க்க வந்தேன் என்று எனக்கு பல்பு கொடுத்தான். நான் என்ன படம் பார்க்க வந்திருக்கிறேன் என்று கேட்டான், நான் கதக்களி என்று சொன்னேன், அவனுடைய ஷோ-டைம் காலை 11.15 , எங்கள் படத்தின் ஷோ-டைமை விட 15 நிமிடம் முன்னதாக இருந்ததால் எங்களிடம் விடைபெற்று கொஞ்சம் சீக்கிரமாக நால்வரும் கிளம்பினார்கள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் இருந்த பாதி உணவுகள் அப்படியே இருந்தது, அந்த டேபிளில் நாம் இருவரும் இருந்தால், பார்க்கிறவங்க நம்மள தப்பா நினைப்பாங்க, வா ! நாம போய் வேறு டேபிளில் அமரலாம் என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு முன்பு நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு மாறினோம். வந்து அமர்ந்த என்னுடைய மனைவி என்னிடம், இவரை பற்றி, நீங்க! என்னிடம் ஏதும் சொன்னது போல ஞாபகம் இல்லையே! எல்லோரைப் பற்றியும் ஒரு கதை சொல்லுவிங்க! என்று கேட்டார்.



அவரிடம் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

நான் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் போது என்னுடன் படித்த இரண்டு பேர் மாதத்திற்கு ஒரு நாளாவது  வகுப்புக்குக் கட் அடித்துவிட்டு படம் பார்க்க நாகர்கோவிலுக்குப் போய்விடுவார்கள். படம் முடிந்து திரும்ப பள்ளிக்கு அருகில் இருக்கும் தென்னந் தோப்பில் இருந்துவிட்டு, பள்ளி முடிந்து எல்லோரும்  வீட்டிற்குச் செல்லும்போது இவர்களும் கூட்டத்தில் கலந்து விடுவார்கள், அவர்கள் இருவரின் பள்ளி பேக்கில், எப்போதும் இரண்டு செட் கலர் சட்டை மற்றும் பேண்ட் இருக்கும். இந்த இருவருடனும் புதிதாக ஒருவன் வந்து சேர்ந்தான், அவனுடைய பெயர் கோபால், நாங்கள் அவனை கோவாலுனு கூப்பிடுவோம். கோவாலிடம் பணத்திற்குப் பஞ்சம் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் தனது அப்பாவுடன் வியாபாரத்திற்குச் செல்வான், எனவே எப்போதும் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகள் அவன் கையில் புழங்கும், சில நேரங்களில் ஐம்பது ரூபாய் நோட்டும் வைத்திருப்பான்.

கோவாலுக்கு நாகர்கோவிலுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருந்தது, அதற்காக பிடித்த ஆட்கள் அந்த இரண்டு பேர், ஒரு முகூர்த்த நாளில் மூன்று பேரும் சேர்ந்து நாகர்கோவிலுக்கு வண்டி ஏறினார்கள்.  செட்டிகுளத்தில் நாம் இருக்கும் இந்த மால் வருவதற்கு முன்பு இந்த இடத்தில் இரண்டு தியேட்டர் இருந்தது, சக்ரவர்த்தி, மினி சக்ரவர்த்தி அந்த இரண்டு தியேட்டருக்கு தான் அந்த மூன்று பேரும் படம் பார்க்க பதினெட்டு வருடங்களுக்கு முன்பு வந்தார்கள். அந்தத் தியேட்டரில் அன்று எல்லா ஷோவும் ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டப் பட்டிருந்தது, ஒரு தியேட்டரில் முரளியின் தேசிய கீதம் படமும், மற்றொரு தியேட்டரில் விஜய காந்தின் வீரம் வெளஞ்ச மண்ணு என்ற படமும் ஓடியது.

கோவாலு எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்று இவர்களுடன் வந்திருந்தான், அவன் நாகர்கோவிலில் முதல் முறையாகப் படம் பார்க்க வருகிறான். தியேட்டர் மற்றும் படங்களை பற்றிய விபரங்கள் எதுவும் அவனுக்குத் தெரியாது. நண்பர்கள் இரண்டு பேரும் டிக்கெட் இல்லையாம், ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டியிருக்கிறது என்று கோவாலிடம் சொல்லி கொண்டிருந்தார்கள். கோவாலுக்கு நிராசையாக இருந்தது, எப்படியும் படம் பார்த்து விடலாம் என்று இவர்களை நம்பி வந்தவன்.

இவர்கள் மூன்று பேரும் நிற்கும் பக்கமாக ஒருவர், பால்கனி இருவத்தி ஐந்து, பால்கனி இருவத்தி ஐந்து  என்று சொல்லிக்கொண்டு சென்றார். அந்த நண்பர்கள் இருவரும் இருபத்தி ஐந்து ரூபாய் கொடுத்து படம் பார்க்க வேண்டாம் இன்னொரு நாள் கழித்து வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள், கோவாலு விடவில்லை, என்னது! இருவத்தி ஐந்து ரூபாய் கொடுத்தால் படம் பார்க்க போகலாமா!, அப்படியானால் போவோம்!, செலவை நான் பார்த்து கொள்கிறேன், நான் இன்னைக்கு எப்படியாவது படம் பார்க்கத் தியேட்டருக்குள் போக வேண்டும் என்று சொன்னான். அந்த இரண்டு பேரும் எவ்வளவு சொல்லியும் நம்ம கோவாலு கேட்கவில்லை.

ஒரு வழியாக பிளாகில் எழுபத்து ஐந்து ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் போனார்கள். பால்கனியில் வாசல் அருகிலிருந்த முதல் முன்று சீட்டு தான் இவர்களுக்குக் கிடைத்தது, வாசலுக்கு அருகிலேயே கோவாலு அமர்ந்திருந்தான். படம் தொடங்கியது, லஷ்மி மூவி மேக்கர் பெருமையுடன் வழங்கும் "வீரம் வெளஞ்ச மண்ணு" என்று பெயர் வந்தது, வாசலின் அருகில் இருந்த நம்ம கோவாலு லேய் மக்கா! நம்மள ஏமாத்திட்டானுவே டேய் ! என்று கூச்சல் போட்டு அந்த நண்பர்களைப் பார்த்து கத்தினான். அந்த இரண்டு பேருக்கும் ஒண்ணும் புரியவில்லை, கத்தியவன் சும்மா இருக்காமல் வாசலைத் திறந்து வெளியில் ஓடினான், அங்கு எதேச்சையாக இவர்களுக்கு பிளாகில் டிக்கெட் விற்ற நபர் நிற்க, அவரிடம் சென்று, கையைத் தட்டி "ஓய்! எழுவத்தி ஐந்து ரூபா வாங்கும் போது, என்ன ஓய் சொன்னீரு! பால்கனி படம் என்று தானே சொன்னீரு! இப்ப அங்க வேறு ஏதோ படம் போடுறான்" என்று கோவாலு காத்த, அவரு இவனை கோபத்தில் சட்டையைப் பிடிக்க  அந்த இரண்டு நண்பர்களும் வெளியில் வர சரியாக இருந்தது. இல்லையென்றால் அன்னைக்கு கோவாலுக்கு கடைசி படமாக இருந்திருக்கும் என்று கதையை முடித்தேன்.

என்னுடைய மனைவிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை, ஆமா! அந்த கோவாலு யாரு ? என்று கேட்க நான் சொன்னேன் அவனுடைய முழுப் பெயர் "கோபால கிருஷ்ணன்" என்று!...


.

Thursday, June 16, 2016

உறவுகளைச் சிதைத்த நிதி நிறுவனத்தின் (PACL) மோசடி!!!

கிராமங்களில் தனியார் முதலாளிகளால் நடத்தப்படும் நிதி நிறுவனங்களை நம்பி பணத்தை கட்டும் மக்களையும், தனி ஆட்களால்  நடத்தப்படும் ஏலச்சீட்டுகளில் பங்கெடுக்கும் மக்களையும் அதிகப்படியான வட்டிக்கு ஆசைப்படும் மக்கள், கொழுத்த லாபத்திற்கு பேராசைப் படும் மக்கள் என்ற சிறுமை படுத்தும் சொற்றொடர்களில் அடக்கிவிட முடியாது. இப்படியான நிதி நிறுவனங்களிலோ, ஏலச்சீட்டுகளிலோ பணம் கட்டுபவர்கள் பெரிய அளவில் எதிர்கால திட்டங்கள் தீட்டி, வட்டிகளைக் கணக்கிட்டு, வரும் லாபத்தை வைத்துக் கொண்டு பெரும் குபேரர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் எவரும் அந்தச் சீட்டுகளில் சேர்வதில்லை. மாறாகப் பங்காளி சொன்னான், பக்கத்து வீட்டுக்காரன் சேர்ந்திருக்கிறான், சொந்த பந்தங்களும் என்னை அந்தச் சீட்டுகளில் சேர்ந்துகொள்ளச் சொன்னார்கள் என்ற வெள்ளந்தி தனமான காரணங்களால் தான் இப்படியான மோசடிகளில் விட்டில் பூச்சிகளாக பெரும்பாலானவர்கள் விழுகிறார்கள்.

எங்கள் கிராமத்தில் இந்த பிஏசிஎல் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய வேர்களைப் பரப்பியிருந்தது, உள்ளூரில் சிறுசிறு வேலைகள் செய்துகொண்டு கொஞ்சம் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் எல்லோரும் இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய உறவினர்கள் ஒருவரையும் விடாமல் பாலிசி எடுத்துக்கொள்ளுமாறு துரத்தினார்கள். சில இடங்களில் அவர்களுக்கென்று தனியாக அலுவலகமும் வைத்திருந்தார்கள். இந்த பிஏசிஎல் நிறுவனத்திலிருந்து எங்கள் ஊரில் செயல்பட்ட முகவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அதனால் தான் சுலபமாக, வெகு விரைவில் மக்களிடம் இந்த நிறுவனம் காலூன்ற முடிந்தது.

முன்பெல்லாம்  நான் வெளிநாட்டிலிருந்து ஊருக்குச் சென்றால் இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் முகவர்கள் குறைந்தது ஒரு பத்து பேராவது என்னைத் தேடி வீட்டிற்கு வருவார்கள். அதில் பாதி பேர் நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள், மீதம் பாதி பேர் என்னையோ அல்லது என் குடும்பத்தில் உள்ளவர்களையோ தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணங்கள் சொல்லித் தப்பித்து விடுவேன். தொடக்கத்தில் என்னிடம் இதுவும் எல்ஐசி போலத் தான், ஆனால் இது ஐந்து வருடத்தில் முடிந்துவிடும் என்பது போல மேலோட்டமாக சொன்னார்கள், ஒருமுறை என்னுடைய உறவினர் ஒருவரிடம் இந்த நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய கோப்புகளை காட்டச் சொன்னேன், அப்போது தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, நாம் கொடுக்கும் பணத்திற்கு இவர்கள் நிலங்களைத் தான் கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள், எங்கு நிலம் இருக்கிறது? அந்த நிலத்தை நாம் பார்க்க முடியுமா? எப்போது எனக்கு அது கிடைக்கும் என்ற என்னுடைய கேள்விக்கே அந்த முகவரிடம் பதில் இல்லை. நீங்க அதையெல்லாம் பார்க்க வேண்டாம், ஐந்து வருடம் முடியும் போது இவ்வளவு ரூபாய் (ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் தொகையை சொல்லி) உங்களுக்குக் கிடைக்கும் என்பது போல தான் சொன்னார்.

இந்த பிஏசிஎல்  நிறுவனத்திலிருந்து முகவர்களாகச் சுற்றி வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நிறுவனத்தின் செயல்முறைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு எல்ஐசி போன்று செயல்படும் ஒரு நிறுவனம், எல்ஐசியில் நாம் சேர்ந்திருக்கும் திட்டம் முடிவு பெற பதினைந்து வருடங்கள் பணம் கட்ட வேண்டும், அதன் பிறகு தான் நமக்கு மொத்த தொகை கைக்கு வரும். ஆனால் பிஏசிஎல் நிறுவனத்தின் திட்டங்களில் ஐந்து வருடம் பணம் கட்டினால் போதும், அடுத்த ஆறு மாதங்களில் முதிர்வு பணம் கைக்கு வந்துவிடும் என்பது போல தான் எல்லோரிடம் கொண்டு சேர்த்தார்கள். இன்னும் சிலரிடம் கூட்டுறவு வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் கட்டப்படும் ஆர்டி போலத் தான் என்றும், அதில் கிடைக்கும் முதிர்வு தொகையை விட இதில் அதிகமாகக் கிடைக்கும் என்றும் போகிற போக்கில் அள்ளி விட்டார்கள்.

கிராமங்களில் உள்ளவர்கள் மேலே சொல்லியவற்றையெல்லாம்  எப்படி நம்புகிறார்கள் என்பதில் தான் உளவியல் சிக்கல் இருக்கிறது, மேலே சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்தும் முகவர்கள் என்று சொல்லப்படும் உறவினர்களால் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இங்கு பிஏசிஎல் என்ற நிறுவனத்தை நம்புவதை விட மக்கள், இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லி வரும் உறவினர்களின் வார்த்தைகளை நம்புகிறார்கள், என்னுடைய பங்காளி என்னை ஏமாற்ற மாட்டான், என்னுடைய சித்தப்பா என் பணத்தின் மீது ஆசைப்பட மாட்டார், நண்பன் எதற்காக என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்பது போல இந்த முகவர்கள் என்ற உறவினர்கள் மீது அபார நம்பிக்கை வைக்கிறார்கள். இதனால் தான் இந்த நிதி நிறுவனம் செய்த மோசடியை, முகவர்கள் என்ற உறவினர்கள் செய்த மோசடியாக நினைத்து புழுங்குகிறார்கள். இன்றைக்கு இந்த பிஏசிஎல் என்ற நிறுவனம் செய்த மோசடியின் விளைவு பல குடும்பங்களின் உறவுகளை மிக மோசமாகச் சிதைத்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தால் இந்த பிஏசிஎல் நிதி நிறுவனத்தின் முகவர்கள் பத்து பேர் என்னைத் தேடி வருவார்கள் என்று சொன்னேன் அல்லவா, அவர்களைக் கல்யாணத்திற்கு முன்பு வரை எப்படியோ சமாளித்து விட்டேன், கல்யாணம் முடிந்த பிறகு இன்னும் கூடுதலாக வரத் தொடங்கினார்கள், இதற்கு ஒரே வழி, யாராவது ஒருவரிடம் ஒரு திட்டத்தில் சேர்ந்துவிட்டு, எல்லோரிடமும் நான் அவரிடம் பணம் கட்டுகிறேன் என்று முடித்துக் கொள்ளலாம் என்றால் யாரிடம் திட்டத்தில் சேர்வது என்ற சிக்கல்?.

நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் என்னுடைய குடும்ப காரர்களே பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தில் முகவர்களாக இருக்கிறார்கள், அவர்களிடம் நான் சேராமல் உங்களிடம் சேர்ந்தால் நன்றாக இருக்காது என்று அவர்களை ஒரு வழியாகச் சமாதான படுத்தி அனுப்பிவிட்டு, குடும்ப காரர்களில் இருக்கும் முகவர்களிடம் சேரலாம் என்றால் எந்தக் குடும்ப காரரிடம் சேர்வது என்ற சிக்கல்?.

மனைவியின் உறவினர்கள் என்ற முறையில் இரண்டு பேர் முகவர்கள், அண்ணனின் மனைவியின்  உறவுமுறையில் சிலர், எங்களுடைய குடும்ப உறவினர்களில் பலர் என்று ஒரு பெரிய லிஸ்டே இருந்தது. என்னுடைய மனைவி என்னிடம், "எங்களது உறவினர்களாக இருக்கும் முகவர்களிடம்  நான் பேசிக்கொள்கிறேன்" வேறு இருப்பவர்களிடம் எவராவது ஒருவரிடம் சேருங்கள் என்று ஒரு சிக்கலை அவிழ்த்தார். மற்ற இரண்டு உறவினர்களில் கண்டிப்பாக ஒருவர் வீதம் போட்டு தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது. அண்ணனின் உறவினரில் அண்ணியின் சித்தி, எங்களின் குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார், இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது அண்ணனின் குழந்தைகளை பார்ப்பதற்காக வாருவார், எனவே அவரிடமே அண்ணனுடைய குழந்தையின் பெயரில் ஒரு திட்டத்தில் சேரலாம் என்றும், என்னுடைய மனைவி திருமணம் முடிந்த முதல் ஒரு வருடம் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், எனவே அவருடைய பெயரில் ஒரு திட்டம் எடுக்கலாம் என்று என்னுடைய பெரியப்பாவின் மகள் எனக்கு அக்காள் முறை வரும் அவர்களிடம் சேர்வது என்றும் முடிவு செய்தோம். எல்லாம் ஒரு வருடம் ஆறு மாதம் நன்றாகத் தான் போனது, பணத்தை மாதம் மாதம் வீட்டிற்கே வந்து வாங்கிச் சென்றார்கள். ஒரு மாதம் பணம் கொடுப்பதற்கான ரசீதை அடுத்த மாதம் பணம் வாங்கும் போது கொடுத்தார்கள்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் மீது சிபிஐ புகார், அலுவலகங்களில் சிபிஐ  ரெய்டு என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்ததிலிருந்து அடிக்கடி எங்கள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த இந்த நிறுவனத்தின் முகவர்களான உறவினர்கள் இப்போது வருவதில்லை, என்னுடைய அக்கா வாரத்திற்கு ஒரு நாளாவது எங்களுடைய வீட்டிற்கு வருவார். இந்த நிதி நிறுவனத்தின் மோசடிக்கு பிறகு எங்களிடம் என்ன சொல்வது என்ற தர்மசங்கட நிலைக்கு ஆளாகி வீட்டிற்கு வருவதை குறைத்துக்கொண்டார். நாங்களும் அவரை எங்காவது பார்த்தால் அவரிடம் என்ன கேட்பது, எப்படி கேட்பது என்ற தயக்கம், அப்படியே அவரிடம் கேட்டாலும், இந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை பற்றிய செய்திகள் அவருடைய மேலதிகாரிகளும் சரியாக சொல்வதில்லை என்று பதில் சொல்லுகிறார்கள். ஆனால் கட்டிய தொகை கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று இன்னும் எங்களை நம்ப சொல்லுகிறார்கள்.

இது என்னுடைய கதை இல்லை, பலருடைய குடும்பங்களில் இது தான் நிலைமை, காரணம் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல் எவரும் இந்த நிறுவனங்களின் நம்பிக்கையை விட, இந்த உறவினர்களின் வார்த்தையை நம்பி  தான் திட்டங்களில் அதிகமாகசேர்ந்தார்கள். நானும் கூட இந்த இரண்டு குடும்ப முகவர்களிடமும், உங்களுடைய நிறுவனத்தின் மீது எனக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது, உங்களின் வார்த்தையை நம்பியும், இதனால் உங்களுக்கும் ஒரு சிறு பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் நான் இந்தத் திட்டத்தில் சேருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தில் சேர்ந்திருந்த முகவர்களுக்குக் கொடுக்கப்படும் போனஸ் தொகையானது மற்ற நிறுவனங்களில் கொடுக்கப்படும் தொகையை விட அதிகம், அதனால் அதிகமான முகவர்கள் இந்த நிறுவனத்தில் சேருவதில் காட்டிய ஆர்வம் இந்த நிறுவனத்தின் மோசடிக்குத் துணையாக அமைந்தது, மிகக் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் தன்னுடைய கிளைகளைக் கிராமங்களின் அடிவரையிலும் சென்று சேர்த்தது. முதல் ஐந்து வருடங்களில் சேர்ந்தவர்களுக்கு, சொல்லிய காலத்திற்குள் முதிர்வு தொகையை கொடுத்திருந்தது, அவ்வாறு கிராமங்களில் முதிர்வு தொகை பெற்ற ஒரு சிலரின் பெயர்களை மூலதனமாகச் சொல்லி  பலரிடம் இந்தத் திட்டங்களை கொண்டு சேர்த்ததில் இந்த முகவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

இந்த நிதி நிறுவத்தின் மோசடியால் பணத்தை இழந்தது ஒருபுறம் இருந்தாலும், குடும்ப உறவினர்களின் உறவுகளிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இன்றளவும் பலகுடும்பங்களில் உள்ளவர்கள் தான் கட்டிய பணத்தை உறவினர்களானமுகவர்களிடம் கேட்டு சண்டைகள் போடுகிறார்கள். இந்தச் சண்டையை சகிக்க முடியாமல் சில முகவர்கள் தங்களுடைய கை காசுகளைப் போட்டும், கடன் வாங்கியும் அவர்களுக்கான தொகையை திரும்பக் கொடுத்து குடும்ப உறவினர்களைத் திருப்தி படுத்துகிறார்கள்.




சஹாரா நிறுவனம் செய்த நிதி நிறுவன மோசடியை விட இந்த பிஏசிஎல் நிறுவன மோசடி பல மடங்கு பெரியது என்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிதி நிறுவன மோசடி இது தான் என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதற்கு முறையான அங்கீகாரம் பெறவில்லை என்று இன்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இவர்கள் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கும் பல கோடி ரூபாய் தொகையை அரசு அங்கீகரித்த வங்கிகள் மூலமாகத் தான் பரிமாற்றம் செய்திருப்பார்கள், சாமானியனான என்னால் ஒரு வங்கியின் மூலம் இன்னொருவரின் வங்கி கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் கூட முழுமையாகப் பண பரிமாற்றம் செய்ய முடியவில்லை. ஒரு ரூபாய் பண பரிமாற்றம் செய்ய வேண்டுமானாலும்  நம்மிடம் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் இருக்க வேண்டும், எதற்காக என்று கேட்டால் இது தான் வாங்கியின் சட்ட நடைமுறை என்று நமக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இவர்களில் சட்டம் யாரை நோக்கிப் பாயும் என்பது ஏழை விவசாயி பாலனை தாக்கியதிலும், முதலாளி மல்லயாவை பத்திரமாக லண்டனில் சேர்த்ததிலும் தான் பல்லிளிக்கிறதே!..


இந்த நிறுவனத்தின் மோசடியைப் பற்றிய விகடன் கட்டுரை:
Related Posts with Thumbnails