Tuesday, August 31, 2010

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி - நிறைவு

நமது சென்னையில் காக்கைகளை பார்க்க முடியவில்லை, கோவையில் நடந்த மாநாட்டிற்கு பல மரங்கள் முறிக்கப்பட்டன, சிட்டுக்குருவி என்று ஒரு இனத்தை பார்க்கவே முடியவில்லை என்று வரும் செய்திகளும் பல்லுயிர் பெருக்கத்தின் அழிவின் நீட்சியே.

பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்ததும், பல்லுயிர் பெருக்கத்தின் செறிவு மிகுந்த பகுதியாக கருதப்படுவது அமேசான் மழைக்காடுகள் தான். இந்த காடுகளின் அழிவுகள் தான் இன்று பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.

அமேசான் மழைக்காடுகள்:

தென் அமெரிக்கா கண்டத்தில் பரந்து விரிந்துள்ளது இந்த மழைக்காடுகள். மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகையானது இந்த மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் தான் அமேசான் ஆறும், அதன் துணை ஆறுகளும் ஓடி பின் கடலில் கலக்கின்றன. இதன் பரப்பளவு சுமார் 7 மில்லியன் சதுரகிலோ மீட்டர். இதில் காடுகள் மட்டும் சுமார் 5.5 மில்லியன் சதுரகிலோ மீட்டர்.இந்த காடுகள் சுமார் ஒன்பது நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. பிரேசில் நாட்டில் தான் இந்த மழைக்காடுகளின் 60 சதவீதம் உள்ளது. இந்த காடுகளில் சுமார் 2.5 மில்லியன் பூச்சியினங்களும், பத்தாயிரத்திற்கு அதிகமான தாவரயினங்களும், ஏறத்தாழ இரண்டாயிரம் பறவை மற்றும் பாலூட்டிகளும் வகைகள் இருப்பதாக ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மழைக்காட்டில் பாயும் ஆறுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான மீன் வகைகளும் காணப்படுகின்றன.

இந்த மழைக்காடுகளில் சுமார் 75,000 வகையான மரங்களும் தாவர இனங்களும் காணப்படுகின்றன. உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் இந்த காடுகளில் உள்ள தாவரங்கள் தான் உட்கொள்ளுகின்றன. எனவே இவைகளை பாதுகாப்பது சுற்றுபுறச்சூழலுக்கு மிக இன்றியமையாதது ஆகும்.

1960 ஆம் ஆண்டுவரை இந்தக் காடுகளுக்குள் இருக்கும் வளங்களை சுரண்டாமல் இருக்க கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு சில பண்ணைகள் மற்றும் பண்ணை விவசாயம் செய்ய, என்று உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அதில் இருந்து அந்த காடுகளின் அழிவுகள் தொடங்குகிறது.1991 முத‌ல் 2000 வ‌ரையிலான‌ ஆண்டுக‌ளில் இந்த‌ காடுக‌ளின் நில‌ப்ப‌ர‌ப்பு 415000 முத‌ல் 587000 ச‌துர‌ ப‌ர‌ப்ப‌ள‌வு அழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ ஆய்வுக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. 2000 முத‌ல் 2005 வ‌ரையிலான் இடைப்ப‌ட்ட‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ காடுக‌ளின் அழிவுக‌ள் மிக‌ப்பெரிய‌ அள‌வு என்று க‌ண‌க்கிட‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து இதுவ‌ரையிலும் அழிக்க‌ப்ப‌ட்ட‌ காடுக‌ளின் அழிவுக‌ளின் ச‌த‌வீத‌த்தை விட‌ இந்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளின் அழிவுக‌ள் 18% அதிக‌ரித்துள்ள‌து.

இதே ச‌த‌வீத‌த்தில் இந்த‌ காடுக‌ள் அழிக்க‌ப் ப‌டுமானால் இன்னும் 20 வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ ம‌ழைக் காடுக‌ளின் ப‌ர‌ப்ப‌ள‌வு 40% வ‌ரை குறையும் அபாய‌ம் உள்ள‌து. இந்த‌ காடுக‌ளின் அழிவுக‌ளால் ப‌சுமை இல்ல‌ வாயுக்க‌ள்(Green House Gases) க‌ண்டிப்பாக‌ பாதிக்க‌ப்ப‌டும். இந்த‌ ப‌சுமை இல்ல‌ வாயு பாதிப்புக‌ளின் விளைவுக‌ள் தான் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming).

இந்த‌ பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வின் வீரிய‌த்தால் வ‌ரும் 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் துருவ‌ப் ப‌குதியில் உள்ள‌ ப‌னிப்ப‌றைக‌ள் முற்றிலும் உருக‌த் தொட‌ங்கிவிடும் என்று ஆய்வாள‌ர்க‌ள் எச்ச‌ரிக்கிறார்க‌ள். இந்த‌ ப‌னிப்பாறைக‌ளின் உருகுத‌‌லில் வெளியிட‌ப்ப‌டும் மீதேன் போன்ற‌ க‌ரிய‌மில‌ வாயுக்க‌ள் மேலும் வ‌ளிம‌ண்ட‌ல‌த்தை பாதிக்கும். இப்ப‌டித்தான் ஒவ்வொரு விளைவுக‌ளும் ஒன்றுட‌ன் ஒன்றுத் ச‌ங்கிலித் தொட‌ர் போல் தொட‌ர்புடைய‌வை. என‌வே இந்த‌ விளைவுக‌ளின் கார‌ணிக‌ளை க‌ட்டுப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகிற‌து.பாதுகாக்க‌ எடுக்க‌ப்ப‌டும் முய‌ற்ச்சிக‌ள்:

உல‌க‌ அள‌வில் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு இழ‌ப்பு ஏற்ப‌டும் இந்த‌ இருப‌தாம் நூற்றாண்டில் சூழ‌லிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள், இய‌ற்க்கை ஆய்வாள‌ர்க‌ள் ம‌ற்றும் அறிவிய‌ல் அறிஞ‌ர்க‌ள் போன்றோர் இந்த‌ப் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தைப் ப‌ற்றி ஆராய‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ர். ஜான் முய‌ர்(John Muir) என்ப‌வ‌ர் இவைக‌ளை பாதுகாப்ப‌திற்கும், அழிவின்றி பாதுகாப்ப‌திற்கும் உள்ள‌ வேறுப்பாட்டை பின்வ‌ருமாறு விள‌க்குகிறார்.

இழ‌ப்பின்றி பாதுகாப்ப‌து என்ப‌து ம‌னித‌ ஊடுருவ‌ல் அல்ல‌து உப‌யோக‌ம் இல்லாத‌ பாதுகாப்பான‌ ப‌குதிக‌ளாகும். இழ‌ப்பின்றி பாதுகாத்த‌ல் என்ற‌ வ‌ரைமுறையின் ப‌டி இய‌ற்கையான‌ வாழிட‌ங்க‌ளுட‌ன் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை நிலையாக‌ பேணுவ‌தே ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகிற‌து.

இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌துவ‌த்தைக் க‌ருத்தில் கொண்டுதான் ஐக்கிய‌ நாடுக‌ள் ஒருங்கினைப்பான‌து இந்த‌ வ‌ருட‌த்தை ப‌ல்லுயிர் பெருக்க‌தின் ஆண்டாக‌(International Year of Biodiversity) அறிவித்துள்ள‌து.

ப‌ல்லுயிர் பெருக்க‌ ஆண்டின் குறிக்கோள்க‌ள்:

1) ம‌க்க‌ளிட‌ம் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தையும், அத‌ன் முக்கிய‌துவ‌த்தை ப‌ற்றி விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்துவ‌து.

2)அந்த‌ந்த‌ நாடுக‌ளில் உள்ள‌ குழும‌ங்க‌ளில் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை பாதுகாக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌த்தை ஊக்குவிப்ப‌து.

3)ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அழிவுக‌ளை குறைக்க‌க் காணும் வ‌ழிமுறைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்துவ‌து.

4)அர‌சாங்க‌ம் ம‌ற்றும் ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் மூல‌ம் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அழிவை த‌டுக்கு முய‌ற்ச்சி எடுப்ப‌து.

5)ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு ப‌ட‌ங்க‌ள் ம‌ற்றும் வாச‌க‌ங்க‌ளை இந்த‌ 2010 ஆண்டிற்குள் ம‌க்க‌ள் ம‌த்தியில் கொண்டு சேர்ப்ப‌து.

உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ல்லுன‌ர்க‌ள் த‌ற்போது உள்ள‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் த‌ன்மைக‌ளை அறிவிய‌ல் கொண்டு கூற‌வ‌து ஹோலோசீன் இழ‌ப்பு கால‌ம்(The Holocene extinction) அல்ல‌து ஆறாவ‌து மொத்த‌ இழ‌ப்பு கால‌ம்(Sixth Mass Extinction match) என்ப‌தாகும். ப‌ல‌ தொல்பொருள் ஆர‌ச்சியாள‌ர்க‌ளின் ப‌திவேடுக‌ளின் ப‌டி இந்த‌ ஆறாவ‌து மொத்த‌ இழ‌ப்பான‌து அத‌ன் முந்திய‌ ஐந்து இழ‌ப்புக‌ளை காட்டிலும் அதிக‌ம் என்கிற‌து. இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளில் இருந்து மீள்வ‌த‌ற்கு உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ல்லுன‌ர்க‌ள் ப‌ல‌ வ‌ரைமுறைக‌ளை வ‌குத்து செய‌ல்திட்ட‌ங்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்.

நாமும் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தை உண‌ர்ந்து ப‌ல்லுயிர்க‌ளை வாழ‌வைப்போம். அவைக‌ளின் வாழ்க்கை தான் ந‌ம்முடையாக‌ வாழ்க்கையாக‌ அமையும் என்ப‌தையும் க‌ருத்தில் கொள்வோம்.

Biodiversity is life.
Biodiversity is our life.

குறிப்பு: ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றி முழுவ‌தும் எழுத‌ வேண்டுமானால் குற‌ந்த‌து இருப‌து இடுகையாவ‌து எழுத‌ வேண்டும். நான் என்னால் முடிந்த‌ அள‌வு மேலோட்ட‌மாக‌வே எழுதியுள்ளேன். இத‌ன் அவ‌சிய‌த்தின் சிறுதுளியை விதைக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தில் தான் எழுதியுள்ளேன். இத‌ன் நீட்சிக‌ளை முடிந்தால் அவ்வ‌ப்போது தொட‌ர்வேன்.

.

.

.

Monday, August 23, 2010

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி

ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையான‌து இந்த‌ வ‌ருட‌த்தை உல‌க‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் வ‌ருட‌மாக‌ அறிவித்துள்ள‌து(International Year of Biodiversity-2010). இவ்வாறு அறிவித்திருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வையும், அத‌ன் அவ‌சிய‌த்தையும் ம‌க்க‌ளிட‌ம் கொண்டுசெல்வ‌தாகும்.

Biodiversity is life.
Biodiversity is our life.
விள‌க்க‌ம்:

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌து. இந்த‌ உயிரின‌ங்க‌ளின் த‌ற்போதைய‌ நிலைக‌ளை அள‌விட‌வும், அவைக‌ளின் பெருக்க‌த்தையும் ம‌திப்பிடுகிற‌து.

எத‌ற்க்காக‌ இந்த‌ உயிரின‌ங்க‌ளை பாதுகாக்க‌ வேண்டும்?.

நாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்து தான் இருக்கின்ற‌ன‌.

இப்போது உள்ள‌ வாழ்க்கைமுறையில் நோயில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து நினைத்து பார்க்க‌ முடியாத‌ ஒன்று, இந்த‌ நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள் தான்.

இருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும் தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து.

இவ்வாறு ந‌ம‌க்கு இன்றிய‌மையாத‌ பொருட்க‌ளான‌ உண‌வு, உடை, உற‌விட‌ம் என்ற‌ கார‌ணிக‌ளுக்கு நாம் இவைக‌ளை சார்ந்தே வாழ‌ வேண்டியுள்ள‌து. இவ்வாறு ந‌ம‌க்கு எல்லாவித‌த‌திலும் தேவையாக‌ இருக்கும் இந்த‌ உயிரின‌ங்க‌ளை நாம் பாதுகாக்கிறோமா? என்ப‌து ந‌ம்மை நாம் கேட்க‌ வேண்டிய‌ கேள்வி.

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் இய‌ற்கையாக‌ க‌ண்ணுக்கு தெரியாம‌ல் ந‌டைபெறும் ப‌ல‌ ப‌ணிக‌ளை செய்கின்றது. வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் ந‌டைபெறும் வேதியிய‌ல் ம‌ற்றும் நீர் சுழ‌ற்ச்சிக‌ளை ச‌ம‌ன் ப‌டுத்துகிற‌து. நீரை தூய்மை ப‌டுத்துத‌ல்(மீன்க‌ள்) ம‌ற்றும் ம‌ண்ணில் ச‌த்துக‌ளை ம‌றுசுழ‌ற்ச்சி செய்து(ம‌ண்புழு) வ‌ள‌மான‌ நில‌த்தை கொடுக்கிற‌து. ப‌ல்வேறு ஆய்வுக‌ளின் ப‌டி இய‌ற்கையான‌ சூழ்நிலையை ந‌ம்முடைய‌ அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் அமைத்து கொள்ள‌ முடியாது என்று ஆய்வாள‌ர்க‌ள் தெரிவிக்கிறார்க‌ள்.

உதார‌ண‌மாக‌ பூக்க‌ளில் பூச்சிக‌ள் மூல‌ம் ந‌ட‌க்கும் ம‌க‌ர‌ந்த‌சேர்க்கையை ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்மால் ந‌ட‌த்த‌ முடியுமா?... (முடியும் ஆனால் இய‌ற்கையாய் ந‌டைபெறும் ஒரு செய‌லை செய்ய‌, செய‌ற்கைக்கு எவ்வ‌ள‌வு செல‌வு செய்ய‌ வேண்டிவ‌ரும்)

தொழிற்ச‌லைக‌ளுக்கு தேவையான‌ மூல‌ப்பொருட்க‌ள் பெரும்பாலும் உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளில் இருந்தே எடுக்க‌ப்ப‌டுகிற‌து. என‌வேதான் இந்த‌ உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளை அழியாம‌ல் பாதுகாப்ப‌துக்கு உல‌க‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து.

இய‌ற்கையை ர‌சிப்ப‌து என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் மிக‌ பிடித்த‌மான‌ ஒன்று. கோடைக்கால‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால் இய‌ற்கையை ர‌சிக்க‌ ம‌லைப் பிரேதேச‌ங்க‌ளுக்கு கிள‌ம்பிவிடுவோம். இய‌ற்கை அருவிக‌ளும், ப‌ற‌வைக‌ளும் எவ‌ர் க‌ண்க‌ளையும் கொள்ளை கொள்ளும். இந்த‌ இய‌ற்கைய‌ழ‌கு தான் ப‌ல‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளுக்கும், க‌விஞ‌ர்க‌ளுக்கும், ஓவிய‌ர்க‌ளுக்கும் ம‌ற்றும் க‌லைஞ‌ர்க‌ளுக்கும் ஊக்க‌மாய் அமைந்துள்ள‌து.அழிக்கும் கார‌ணிக‌ள்:

ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை அழிக்கும் கார‌ணிக‌ளை எட்வ‌ர்ட் ஓ வில்ச‌ன் என்ற‌ ஆய்வாள‌ர் ஆங்கில‌த்தில் HIPPO (ஹிப்போ) என்று அழைக்கிறார். அதில் ஐந்து கார‌ணிக‌ளை குறிப்பிடுகிறார்.

1)வாழிட‌ம் அழித்த‌ல் (H-Habitat destruction)
2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)
3)மாசுபாடு (P-Pollution)
4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)
5)அதிக‌மான‌ அறுவ‌டை (O-Overharvesting)

1)வாழிட‌ம் அழித்த‌ல்:

இதை ப‌ற்றி அதிக‌ம் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை. ந‌ம் க‌ண்முன்னே ந‌ட‌க்கும் செய‌ல்க‌ள் தான். ப‌ல‌ விளைநில‌ங்க‌ள் க‌ட்டிட‌ங்க‌ளாக‌வும், காடுக‌ள் தொழிற்சாலைக‌ளாக‌ மாறிக்கொண்டிருக்கின்ற‌து. உயிரின‌ங்க‌ளில் வாழிட‌ங்க‌ளை அழித்து ந‌ம‌து வாழிட‌ங்க‌ளை பெருக்கி கொள்கிறோம். கி.பி 1000 முத‌ல் இன்றுவ‌ரை அழிவிற்கு உண்டான‌ தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்கின‌ங்க‌ள் ம‌னித‌ ந‌ட‌வ‌டிக்கையால் ஏற்ப‌ட்ட‌தே ஆகும்.

2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள்:

உல‌கில் ப‌ல்வேறு ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அந்த‌ சூழ‌லுக்குகேற்ப‌ கூட்ட‌மாக‌ வாழ்கின்ற‌ன‌. அவ்வாறு கூட்ட‌மாக‌ வாழ்வ‌த‌ற்கு கார‌ண‌ம் க‌ண்ட‌ங்க‌ள், க‌ட‌ல்க‌ள், ம‌லைக‌ள், ஆறுக‌ள் ஆகிய‌வ‌ற்றால் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்துவிடாம‌ல் பிரித்துவைக்க‌ப்ப‌டுவ‌தால் தான். ஆனால் த‌ற்போது ம‌னித‌ர்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போக்குவ‌ர‌த்து வ‌ச‌திக‌ளால் இவைக‌ள் த‌ங்க‌ளின் சூழ‌லில் இருந்து சுல‌ப‌மாக‌ இட‌ம்பெய‌ர்கின்ற‌ன‌. இவ்வாறு இட‌ம்பெய‌ரும் சிற்றின‌ங்க‌ள் அந்த‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ சிற்றின‌ங்க‌ளில் வ‌ள‌ர்ச்சியை அப‌க‌ரித்து த‌ன்னுடைய‌ இன‌த்தை விருத்திசெய்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டுவ‌ந்து ந‌ம‌து நாட்டில் ப‌யிரிட‌ப்ப‌டும் ப‌ழ‌ங்க‌ளை சொல்ல‌லாம்.

3)ம‌ர‌ப‌ணு மாசுபாடு:

தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்குக‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ம‌ர‌ப‌ணு சோத‌னைக‌ள் மூல‌ம் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌ங்க‌ள். இத‌னால் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌த்தின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளில் மாசுபாடு ஏற்ப‌டுகிற‌து. இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும்.

எந்த‌வொரு உயிரியிலும் வெளிப்புற‌த் தோற்ற‌த்தை ம‌ட்டும் அடிப்ப‌டையாக‌ வைத்து க‌ல‌ப்பின‌ம் செய்யாம‌ல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புற‌த் தோற்ற‌த்திலும் உள்ள‌ மாற்ற‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு ஆய்வு செய்வ‌தே சிற‌ந்த‌து.

உதார‌ண‌மாக‌ இப்போது ச‌ந்தையில் உள்ள‌ க‌த்திரிக்காவை(Genetically Modified Brinjal) சொல்ல‌லாம்.

4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு:

ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை ஆண்டுதோறும் அதிக‌ரித்து கொண்டே இருக்கிற‌து. இந்த‌ அதிக‌ப்ப‌டியான‌ வ‌ள‌ர்ச்சியும் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு த‌டையாக‌ இருக்கின்ற‌து. இந்த‌ ம‌க்க‌ள்த்தொகை பெருக்க‌த்தால் சுற்றுப்புற‌ச்சூழ‌ல் வெகுவாக‌ ப‌திக்க‌ப்ப‌டுகிற‌து அத‌னால் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் போன்ற‌ நிக‌ழ்வுக‌ளும் நிக‌ழ்கின்ற‌ன‌. ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌ த‌ள‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும் ப‌வ‌ள‌ப்பாறைக‌ள், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வுக‌ளால் இன்னும் 20 முத‌ல் 40 வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலும் அழிந்துவிடும் அபாய‌ம் உள்ள‌து.

5)அதிக‌மான‌ அறுவ‌டை:

தாவ‌ர‌ங்க‌ளில் விளையும் பொருட்க‌ளை உண‌வுக்கு என்று பொரும்ப‌குதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைக‌ளின் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குவ‌த‌ற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அதிக‌ விளைச்ச‌ல் த‌ரும் வீரிய‌ ர‌க‌ ப‌யிர்க‌ளை ப‌யிர் செய்து அதில் இய‌ற்கைக்கு மீறிய‌ அதிக‌ ம‌க‌சூலை பெறுகிறோம்.

இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் அதிக‌ம் செறிந்துள்ள‌ ப‌குதியான‌ அமோசான் ம‌ழைக்காடுக‌ள் ப‌ற்றியும், அவ‌ற்றின் அழிவுக‌ள் ப‌ற்றியும் அடுத்த‌ ப‌குதியில் எழுதுகிறேன்.


தொட‌ரும்...

குறிப்பு: ஒரு வார‌த்திற்கு முன்னால் இர‌வு ப‌தினொரு ம‌ணிய‌ள‌வில் டிவி ரிமோட்டை பொதிகை சேன‌ல் திருப்பினேன். அதில்தான் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் ப‌ற்றி டாக்ட‌ர் ஒருவ‌ர் த‌ன்னுடைய‌ க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொண்டிருந்தார். அத‌ன் தாக்க‌ம் தான் என்னை எழுத‌ தூண்டிய‌து. என்னுடைய‌ ச‌ந்தேக‌ம் எல்லாம் இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது?.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்? ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை?..

.

.

Monday, August 16, 2010

ச‌ப்பாத்தி தோசையாக‌ மாறிய‌க் க‌தை..

சென்னையில் வேலை செய்யும் போது, நாங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் நான்கு பேர் ரூம் எடுத்து த‌ங்கி இருந்தோம். அதில் ஒருவ‌ன் என்னுடைய‌ ஊர்கார‌ன் பெய‌ர் குமார், ம‌ற்ற‌ இருவ‌ரும் ஆபிசில் என்னுட‌ன் வேலை செய்ப‌வ‌ர்க‌ள். அந்த‌ ஆபிசில் வேலைக்கு சேர்ந்த‌ பின்பு என்னிட‌ம் ந‌ண்ப‌ன் ஆன‌வ‌ர்க‌ள். ஒருவ‌ன் திருநெல்வேலி பெய‌ர் கிஷோர், இன்னொருவ‌ன் திருச்சி பெய‌ர் கார்த்திக். ரூமில் நாங்க‌ள் ச‌மைய‌ல் எதுவும் செய்வ‌து கிடையாது. வெளியில் ஹோட்ட‌லில் தான் சாப்பிட்டு வ‌ந்தோம்.

ஹோட்ட‌லில் சாப்பிடுவ‌து போர் அடிக்க‌வே, அனைவ‌ரும் யோசித்து அறையில் ச‌மைப்ப‌து என்று முடிவான‌து. அத‌ற்க்கான‌ எல்லா ஏற்பாடும் செய்ய‌ ஆர‌ம்பித்தோம். ஒவ்வொருத்த‌ரும் ஊருக்கு போயிட்டு வ‌ரும் போது அவ‌ர்க‌ளால் முடிந்த‌ பொருட்க‌ளை வீட்டில் இருந்து சுட்டு வ‌ருவ‌து என்று முடிவு செய்து வேலையில் இற‌ங்கினோம்.

அடுத்த‌ ஒரு வார‌த்தில் ச‌மைய‌ல் செய்வ‌த‌ற்க்கான‌ பாத்திர‌ங்க‌ள் அனைத்தும் ரெடி. நான் ஊரில் இருந்து கேஸ் ஸ்ட‌வ் எடுத்து வ‌ந்திருந்தேன். வீட்டு ஓன‌ரிட‌ம் சொல்லி ஒரு சிலிண்ட‌ரை ஆட்டைய‌ போட்டுவிட்டோம். பொண்ணு கிடைச்சாலும் புத‌ன் கிடைக்காது, என்று அன்னைக்கே ச‌மைய‌லை ஆர‌ம்பித்துவிட்டோம். கிடைக்கிற‌ காயை வெட்டிப் போட்டு ப‌ருப்பை அவித்து கொட்டி சாம்பாருனு சொன்னேன். அரிசியை அவித்து சாத‌ம் ரெடி ப‌ண்ணி சாம்பாருட‌ன் சாப்பிட்டோம், ஹோட்ட‌ல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு செத்து போன‌ நாக்குக்கு இதுவும் வித்தியாச‌மாக‌ இருந்த‌து.

மூணு நாளு ந‌ல்லா தான் போயிட்டு இருந்த‌து. ச‌னிக்கிழ‌மை ராத்திரி எல்லோரும் ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருக்கும் போது, "ந‌ம‌க்கு சைவ‌ம் தான் ச‌மைக்க‌ வ‌ராது, ஆனா சிக்க‌ன் குழ‌ம்பு சூப்ப‌ரா செய்வேன்" என்று ந‌ம்ம‌ கார்த்திக்கு வாயை தொற‌ந்தான். நானும் நாக்கை தொங்க‌ போட்டிட்டு "அப்ப‌டியானு கேட்க‌" ப‌க்க‌த்துல‌ இருந்த‌ ம‌க்க‌ளும் அப்ப‌ நாளைக்கே செய்திட‌லானு சொல்ல‌, நானும் த‌லையாட்டினேன்.

ச‌ரி, நாளைக்கு சிக்க‌ன் செய்தா ம‌திய‌ம் தான் சாப்பிட‌ முடியும், காலையில் என்ன‌ ப‌ண்ணுற‌துனு? நான் கேட்டேன். உட‌னே ந‌ம்ம‌ கிஷோர் நானும் ர‌வுடிதானு காமிக்க‌, நான் சூப்ப‌ரா ச‌ப்பாத்தி செய்வேனு சொன்னான். என‌க்கு ச‌ந்தோச‌ம் தாங்க‌ முடிய‌லை, ந‌ம‌க்கு கிடைத்த‌ ரூம்மேட்க‌ள் ச‌மைப்ப‌தில் மிக‌வும் திற‌மைசாலிக‌ள் என்று ம‌ன‌தில் நினைத்து கொண்டேன்.

அப்ப‌ என்னென்ன‌ வேணுமோ!! இப்ப‌வே வாங்கிட‌லாம். நாளைக்கு ஞாயிறு, யாரும் க‌டையை தொற‌க்க‌ மாட்டாங்க‌ என்று சொல்லிவிட்டு க‌டைக்கு கிள‌ம்பினோம். நாளைக்கு ச‌மைக்க‌ போகிற‌ இர‌ண்டு போரும், தேவையான‌ பொருட்க‌ளை வாங்கி கொண்டிருந்த‌ன‌ர். அவைக‌ளை சும‌க்கும் பொறுப்பு எங்க‌ளுக்கு த‌ர‌ப்ப‌ட்ட‌து.

உருளை கிழ‌ங்கு, வெங்காய‌ம், த‌க்காளி, க‌றி ம‌சாலா, முட்டை, தேங்காய், ச‌ப்பாத்தி மாவு என்று அம‌ர்க்க‌ள‌ ப‌டுத்தினார்க‌ள். நாங்க‌ள் பொருட்க‌ள் வாங்கிய‌ க‌டையில் நெய் இல்லையென்று க‌டைக்கார‌ர் சொன்னார், நான் உட‌னே நெய் எதுக்கு என்று கிஷோரிட‌ம் கேட்டேன். கொஞ்ச‌ம் நெய் போட்டு சுட்டா தான் ச‌ப்பாத்தி சாப்டா வ‌ரும் என்று சொல்லிவிட்டு ப‌க்க‌த்து க‌டைக்கு ஓடினான். என‌க்கு அப்ப‌வே ச‌ப்பாத்தியின் வாச‌ம் மூக்கில் நுழைய‌ ஆர‌ம்பித்த‌து.

சிக்க‌ன் ம‌ட்டும் தான் வாங்க‌வில்லை, அதை காலையில் வாங்கி கிளீன் ப‌ண்ண‌ வேண்டிய‌ பொறுப்பு குமாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

ம‌றுநாள் காலை, எல்லாம் தூக்க‌த்தை விட்டு எழுந்த‌தே ஒன்ப‌து ம‌ணிக்கு தான். குமார் எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு சிக்க‌ன் வாங்க‌ ஓடினான். சிக்க‌ன் வாங்கி வ‌ந்த‌வ‌ன், தோலை ம‌ட்டும் உரித்து முழு கோழியாக‌ வாங்கி வ‌ந்தான். நான் அவ‌னிட‌ம் "ஏன்டா!! கோழியை வெட்டி வாங்கி வ‌ர‌வேண்டிய‌து தானே" என்றேன்.

க‌டையில‌ கூட்ட‌ம் அதிக‌ம் ம‌ச்சி, அவ‌னுங்க‌ ஒழுங்க‌ வெட்ட‌ மாட்ட‌னுங்க‌, நான் சூப்ப‌ர‌ வெட்டுவேனு பீதியை கிளாப்பினான். எல்லாம் ந‌ம்ம‌ளைவிட‌ பெரிய‌ ச‌மைய‌ல் கார‌னா இருப்பானுங்க‌ போலிருக்கு என்று நினைத்து கொண்டேன்.

ந‌ம்ம‌ கார்த்திக் வெங்காய‌ம், த‌க்காளி வெட்ட‌ தொட‌ங்கினான். நான் அவ‌னிட‌ம் ஏதாவ‌து ஹெல்ப் வேணுமானு கேட்டேன். நீ தான் மூனு நாளு சாம்பாருனு ஒண்ணு வெச்சா இல்லையா, இன்னைக்கு என் முறை, நீ ஓர‌மா போய் உக்காரு, தேவைனா கூப்பிடுறோம் என்றான்.

ந‌ம்ம‌ ச‌ப்பாத்தி சுடுற‌ கிஷோர் தான் முத‌லில் அடுப்பை ப‌ற்ற‌ வைத்தான். என்ன‌டா!! அதுக்குள்ள‌ ச‌ப்பாத்தி உருட்டிட்டானானு போய் பார்த்தால், ஒரு பெரிய‌ பாத்திர‌த்தில் த‌ண்ணியை ஊத்தி அடுப்பில் வைத்திருந்தான். எதுக்குனு கேட்டா!! வெந்நீரில் மாவு பிசைஞ்சா தான் ச‌ப்பாத்தி சூப்ப‌ரா வ‌ரும் என்றான். நோட் ப‌ண்ணுங்க‌ப்பா!!! நோட் ப‌ண்ணுங்க‌ப்பா !!

அப்ப‌டியே சிக்க‌ன் வெட்டுப‌வ‌ன் என்ன‌ செய்கிறாருனு வெளியே போய் பார்த்தால், இர‌ண்டு காலு ம‌ற்றும் இற‌க்கை ம‌ட்டும் வெட்டாம‌ல் த‌னியா வ‌ச்சிருந்தான். ஏன்டானு!!! கேட்டால்‌ இதை முழுசா போட்டா தான் க‌டிக்கிற‌துக்கு சூப்ப‌ரா இருக்குமுனு சொன்னான். அட‌ !!! அட‌ !!

த‌க்காளி, வெங்காய‌ம், உருளை கிழ‌ங்கு எல்லாம் வெட்டி த‌ட்டில் அடுக்கியிருந்த‌தே, ஒரு பைவ்ஸ்டார் ஹோட்ட‌ல் கிச்ச‌ன் ரேஞ்சுக்கு இருந்த‌து. வெட்டிய‌ சிக்க‌னை எடுத்து கொண்டு கொடுத்த‌ குமாரிட‌ம், நேற்று த‌யிர் வாங்க‌ மற‌ந்திட்டேன், நீ போய் ஒரு பாக்கெட் த‌யிர் வாங்கிட்டு வா!! த‌யிர்ல‌ சிக்க‌னை ஊற‌ வைச்சாதான் ப‌ஞ்சு போல‌ இருக்கும் என்று கார்த்திக் சொன்னான்.

ப‌சி பிடுங்கிய‌து, இவ‌னுங்க‌ வ‌ர்ண‌னையே என‌க்கு நாக்குல‌ த‌ண்ணி வ‌ர‌ வைச்சிடுச்சி, ம‌ணி வேற‌ ப‌த்து ஆகி போன‌து. ந‌ம்ம‌ ச‌ப்பாத்தி போடுற‌வ‌ன் இப்ப‌தான் ஒரு பாத்திர‌த்தில் இர‌ண்டு முட்டையை அடித்து ஊற்றி க‌ல‌க்கி கொண்டிருந்தான். எப்ப‌டியும் அரை ம‌ணி நேர‌த்திற்கு மேல் ஆகும் என்று நினைத்து கொண்டு துணி துவைக்க‌ பாத்ரூம் போனேன்.

பாத்ரூமில் இருந்த‌ என்னை, அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌த்தில் குமார் வ‌ந்து அழைத்தான். என்ன‌னு உள்ள‌ வ‌ந்து பார்த்தா, ந‌ம்ம‌ கிஷோரு வைச்சிருந்த‌ பாத்திர‌த்தில் இருந்த‌ மாவு, ச‌ப்பாத்தி மாவா இல்லாம‌ல் இட்லி மாவா ஆகி இருந்த‌து. "த‌ண்ணி பார்த்து ஊத்துடானு சொல்லிட்டு தான் இருந்தேன், அப்பிடியே க‌வுத்துட்டான் இந்த‌ குமாரு" என்றான் கிஷோர். நான் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தான் ஊத்திட்டே இருந்தேன், இவ‌ன் தான் "ஏண்டா!! குழ‌ந்தை ஒன்னுக்கு போற‌து போல் ஊத்துற‌னு" கிண்ட‌ல் அடிச்சான் அதான் க‌வுத்தேன் என்றான் குமார்.

ஏண்டா!! நீங்க‌ இர‌ண்டு பேரும் க‌வுத்து விளையாடுற‌துக்கு எங்க‌ வ‌யிறு தான் கிடைச்சுதானு சொல்லிட்டு, கொஞ்ச‌ம் இருந்த‌ த‌ண்ணியை நானே க‌வுத்து விட்டு மாவை க‌ல‌க்கி தோசை சுடுங்க‌னு சொல்லிட்டு துணியை துவைக்க‌ போனேன்.துணியை துவைத்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வ‌ரும்போது தோசை சுட்டு அடுக்க‌ ப‌ட்டிருந்த‌து. ஆனால் ப‌க்க‌த்தில் இருந்த‌ சிக்க‌ன் குழ‌ம்பு பாத்திர‌ம் ம‌ட்டும் கொதித்து கொண்டிருந்த‌து. என்ன‌டா இன்னும் சிக்க‌ன் ரெடியாக‌லையானு கேட்டா உருளைகிழ‌ங்கு வேக‌லை, அத‌னால‌ கொஞ்ச‌ம் த‌ண்ணி விட்டு வேக‌ வைச்சிருக்கேனு சொன்னான் கார்த்திக்.

குழ‌ம்பை திற‌ந்து பார்த்தால், அது கோழிக்குழ‌ம்பு போல் தெரிய‌வில்லை, உருளைக்கிழ‌ங்கு குழ‌ம்பு போல் காட்சி அழித்த‌து. அப்ப‌டியே க‌ர‌ண்டி விட்டு கிண்டி பார்த்தேன், கிஷோர் போட்ட‌ கோழிக்காலில் உள்ள‌ ச‌தை அவ்வ‌ள‌வும் குழ‌ம்பில் க‌ரைந்து சாப்பிட்டு வைத்த‌ எலும்பு போல் காட்சிய‌ளித்த‌து.

அப்ப‌டியே நேற்று வாங்கிவ‌ந்த‌ பையில் உருளைக்கிழ‌ங்கு இருக்கிற‌தா? என்று பார்த்தேன். அது வெறும் காலி பையாக‌ இருந்த‌து. ஒரு கிலோ கோழிக்க‌றிக்கு ஒன்ற‌ரை கிலோ உருளைக்கிழ‌ங்கு சேர்த்து ந‌ம்மாளு குழ‌ம்பு வைத்துள்ளார். அதுவும் கிழ‌ங்கை முத‌லில் வேக‌வைக்காம‌ல் கோழிக்க‌றியுட‌ன் சேர்த்து வேக‌வைத்துள்ளார். அப்ப‌டினா அதுல‌ எங்க‌ க‌றி இருக்கும்?.. வெறும் எலும்பு தான் இருக்கும்.

எப்ப‌டியோ ப‌ய‌புள்ள‌ங்க‌ பேசியே ப‌சியை அட‌க்கிட்டானுங்க‌.. ஹி..ஹி..

.

.

Thursday, August 12, 2010

சில‌ துரோக‌ங்க‌ள்_ஜெனி அக்கா-2

இத‌ன் முத‌ல் பாக‌ம் ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் கீழே சொடுக்கி ப‌டித்துவிட்டு தொட‌ர‌வும்.

முத‌ல் பாக‌ம்

அடுத்த‌ நான்கு ம‌ணி நேர‌த்தில் க‌ட‌லூரில் இருந்து பெரிய‌ப்பாவும், பெரிய‌ம்மாவும், சில‌ சொந்த‌ காரர்க‌ளும் ஒரு காரில் வ‌ந்தார்க‌ள்‌. அழுகைக‌ள் தான் பிர‌தான‌மாக‌ இருந்த‌து. ஜெனி அக்காவின் முக‌த்தை அருகில் சென்று பார்க்கும் தைரிய‌ம் என‌க்கு வ‌ர‌வில்லை. தூர‌த்தில் நின்று பார்த்தேன். முக‌த்தில் எந்த‌வொரு மாற்ற‌மும் தெரிய‌வில்லை. சிறிது ப‌க்க‌த்தில் சென்று பார்த்தேன். க‌ழுத்தில் ம‌ட்டும் ஒரு சிறிய‌ இர‌த்த‌க் க‌ட்டு போல் இருந்த‌து.

ஒவ்வொருவ‌ரும் வ‌ர‌ வ‌ர‌, க‌ட்டிலில் ப‌டுக்க‌ வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ஜெனி அக்காவின் ப‌க்க‌த்தில் சுற்றிலும் அம‌ர்ந்திருந்த‌ கூட்ட‌த்தின் அழுகை அதிக‌மாக‌ இருந்த‌து. அத‌ற்கு மேல் அங்கு நிற்ப‌த‌ற்கு ம‌ன‌ம் ஒப்ப‌வில்லை. அங்கிருந்து ந‌க‌ர்ந்து சிறிது தூர‌த்தில் ஒரு வேப்ப‌ம் ம‌ர‌ம் இருந்த‌து. அத‌ன் அருகில் வீடு வேலை செய்வ‌த‌ற்க்காக‌ கொட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌ண‌ல் குவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அத‌ன் மேல் சென்று அம‌ர்ந்து கொண்டேன். சிறிது நேர‌த்தில் சித்த‌ப்பாவும் வ‌ந்து சேர்ந்து கொண்டார்.

ஜெனி அக்காவை வைத்திருந்த கூட்டத்தில் இருந்து சிறிது நேரத்தில் பெரியப்பாவும், அப்பாவும் வெளியே வந்தார்கள். பெரியப்பா விழியில் வழிந்த நீரை துடைத்து கொண்டு எங்களை நோக்கி நடந்தார்கள்.

அருகில் வந்து "என்னடே!!! பண்ணலாம்" என்று இறுக்கமான குரலில் கேட்டார்.

"எதுக்கும் போலிசில் ஒரு கம்பிளைன்ட் கொடுக்கலாம்" என்று சித்தப்பா சொன்னார்கள்.

அவனுளுட்ட மட்டும் சொன்ன, என்னடே பண்ணிட போறானுவ?. போன என் மகளை கூட்டிட்டா வந்திட போறானுவ?. என்று கண்ணில் ததும்பிய நீரை துடைத்தார் பெரியப்பா.

கம்பிளைண்ட் கொடுத்தா போஸ்ட் மார்டம் பண்ணாமல் பாடியை தரமாட்டார்கள். காலையிலேயே நடந்தது, மணி மூணு ஆகி போச்சி என்ன பண்ணலாமுனு சொன்னா தான் அடுத்த விசயத்தை பார்க்க முடியும். என்று எங்களுடைய கூட்டத்தில் நுழைந்தார் ஒருவர்.

ஆள் பார்ப்பதற்கு ஜெனி அக்காவின் வீட்டுகாரர் சாயலில் இருந்ததால், அவருடைய தம்பியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டேன்.

அவளை கூறு போட்டு பார்க்கும் அளவுக்கு என்னுடைய மனதில் தெம்பு இல்லடே, அதனால அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பாருங்கள். என்று சொல்லிவிட்டு பெரியப்பா பக்கத்தில் இருந்த மரத்தின் மீது சாய்ந்தார். அவருடைய கண்கள் குறும்பாட்டின் இரத்தம் போல் கலங்கி நின்றது.

உடனடியாக எங்கள் கூட்டத்தில் இருந்து சென்றவர் அங்கு கூடியிருந்த பெண்களிடம் குளிப்பாட்டுவதற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் கையில் வெள்ளை டவலுடன் வாயை பொத்தி அழும் அண்ணனிடம் காதில் ஏதோ சொன்னார்.

அதுவரையிலும் அமைதியாக அழுது கொண்டிருந்தவர், ஐயோ என் மவனுவ ரெண்டு பேரையும் அனாதையா விட்டுட்டு போய்ட்டியே சண்டாளி!!!

உனக்கு நான் என்ன குறைவெச்சேன், இப்படி தவிக்கவிட்டு போய்ட்டியே!!! போய்ட்டியே!!! என்று தலையில் அடித்து கொண்டு சத்தம் போட்டு மண்ணில் புரண்டு அழுதார்.

இவர் கதறி அழுவதை பார்த்ததும் எல்லாருடைய கவனமும் இவரை தேற்றுவதிலும் வேடிக்கை பார்ப்பதிலுமே இருந்தது.

அதற்க்குள் அவசர அவசரமாக ஜெனி அக்காவை கொண்டு போய் குளிப்பாட்டுவதில் சில பெண்கள் மும்முரமாக இருந்தனர்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளிப்பாட்டி, பவுடர் போட்டு, புது துணி உடுத்தி கட்டிலில் கிடத்தினார்கள்.

ஏம்பா!! சவப்பெட்டி எடுக்க ஆள் அனுப்புனீங்களா? இல்லையா? அதுக்குள்ள யாருப்பா குளிப்பாட்டுனது? குளிப்பாட்டி திரும்பவும் கட்டிலில் காக்க வைக்க கூடாது என்று கத்தினார் என்னுடைய அப்பா.

கூட்டத்தில் இருந்த சித்தி, வெளியே வந்து சித்தப்பாவை சைகை காட்டினார், சித்தப்பா சித்தியின் அருகில் சென்றார். சித்தி சித்தப்பாவின் காதில் ஏதோ சொன்னார். உடனே சித்தப்பா அப்பாவின் கையை பிடித்து கொண்டு எங்களை நோக்கி வந்தார்கள்.

கோபமாக வந்த சித்தப்பா, பெரியப்பாவிடம் "ஜெனியோட முதுகு பக்கத்துல அடிப்பட்டது போல காயம் இருக்காம், என் வீட்டுக்காரி குளிப்பாட்டும் போது பார்த்திருக்கா, பக்கத்துல இருந்த பொம்பளைங்க அவளை தொடவிடலியாம்" என்றார்.

ஆமடே.. இரண்டு நாளைக்கு முன்னாடி மருமவன் எனக்கு போன் பண்ணியிருந்தான், ஏதோ மாடி படியில இருந்து கீழ விழுந்திட்டாளாம், அப்ப அடிப் பட்டிருக்கும் என்றார் பெரியப்பா.

இவர்கள் இப்படி பேசிட்டு இருக்கும் போதே எங்கள் கூட்டதில் நுழைந்த ஜெனி அக்காவின் வீட்டுகாரரின் தம்பி, "எங்க அண்ணனும் எங்க குடும்பத்துல தலைச்சன் பிள்ளை, உங்க பொண்ணும் தலைச்சன் பிள்ளை. இவா வேற நான்டிட்டு நின்னு செத்து போயிருக்கா. அதனால பேசாம அடக்கம் பண்ணுறதுக்கு பதிலா எரிச்சுட்டாத்தான் எல்லோருக்கும் நல்லதுனு எங்க ஊரு சாமியாடி சொல்லுறாரு" என்று பெரியப்பாவிடம் சொன்னார்.

அதற்கு அப்பா, அதெல்லாம் முடியாது, எங்க சம்பிரதாயத்தில் நாங்கள் அடக்கம் தான் பண்ணுவோம், எரிக்க முடியாது என்றார்.

இல்ல நான் இரண்டு குழந்தைகளின் நல்லதுக்கு சொல்லுறேன், அப்புறம் அதுகளுக்கு இதனால பிரச்சனைனா? யாரு என்ன பண்ண முடியும் என்றார்.

சரி, உங்க சம்பிரதாய படியே நடத்துங்க என்று சொல்லிவிட்டு தலைகவிழ்ந்தார் பெரியப்பா.

அப்பாவும் சித்தப்பாவும், பெரியப்பாவின் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு பதில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

தூரத்தில் இவருடைய பதிலுக்காக காத்திருந்தது போல், கையில் டவலுடன் வாயை பொத்தி கொண்டிருந்த ஜெனி அக்கா வீட்டுகாரர் "ஹஓஓஓ" என்று கதறி அழுதார்.

========================================================

நேற்று இரவு நடந்த அண்ணன் தம்பியின் உரையாடல்:

லேய்... கிறுக்கு பயலே என்னல பண்ணி வைச்சிருக்க.

சாந்தி வீட்டுக்கு போயிட்டு வந்தேன், காட்டுகத்து கத்தினா, ரெண்டு அடிதான் அடிச்சேன், இப்படி ஆகி போச்சி..

சீ...த்தூ...உனக்கு கூத்தியா வீட்டுக்கு போறதுதான் பொளப்பா, _மவனே திருந்த மாட்டியா? செத்துட்டாளா!!

ஆமா தம்பி!!!! செத்து போயிட்டா...

என்னாது போயிட்டாளா, நாளைக்கு அவா குடும்ப காரங்க வந்து கேட்டா என்னல சொல்லுறது..

நீதான் ஏதாவது பண்ணனும்..

இதை மறைச்சி தொலைக்கலனா உன்னோட சேர்ந்து நாங்களும் இல்லா, போலிஸ் ஸ்டேசன் கம்பி எண்ணனும்......

குறிப்பு: சில‌துரோக‌ங்க‌ள் என்ற‌ அத்தியாய‌த்தில் ஜெனி அக்காவின் க‌தையை இன்றைய‌ ப‌குதியுட‌ன் முடித்து விட்டேன். இனி அடுத்த‌ ஒரு க‌தையுட‌ன் சில‌ துரோ‌க‌ங்க‌ள் தொட‌ரும். மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து உண்மை க‌தை இல்லை. நான் பார்த்த‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அடிப்ப‌டையாக‌ வைத்து எழுதிய‌து. அத‌னால் யாரும் உண்மை என்று சிலாய்க்க‌ வேண்டாம்.

.

.

.

Wednesday, August 11, 2010

சில‌ துரோக‌ங்க‌ள்_ஜெனி அக்கா-1

ஜெனி அக்கா ஊரில் இருந்து வ‌ந்துவிட்டால் எங்க‌ள் வீட்டில் உள்ள‌ அனைவ‌ருக்கும் ச‌ந்தோச‌த்திற்கு அள‌வே இருக்காது. ஆட்ட‌ம் பாட்ட‌ம் என்று ஒரே ஆர்பாட்ட‌மாக‌ இருக்கும். வ‌ரிசையாக‌ இருக்கும் எங்க‌ள் பெரிய‌ப்பா, சித்த‌ப்பா வீடுக‌ளுக்கு சென்று அறிமுக‌ப்ப‌டுத்திவிட்டு எங்க‌ளுட‌ன் தான் எப்போதும் இருப்பார். முத்துப்ப‌ல் தெரிய‌ இனிக்க‌ இனிக்க‌ பேசுவார்,‌க‌தைக‌ள் ப‌ல‌ சொல்வார், ஜெனி அக்கா வ‌ந்துவிட்டால் போதும் எங்க‌ள் வீட்டில் வாண்டுக‌ளின் கூட்ட‌ம் அதிக‌மாகிவிடும். எல்லாரிட‌மும் ச‌க‌ஜ‌மாக‌ பேசுவார். அனைவ‌ரையும் வ‌சீக‌ரிக்கும் முக‌ம்.

ஜெனி அக்கா என்னுடைய‌ பெரிய‌ப்பாவின் ஒரே பெண். பெரிய‌ப்பாவின் தொழில் ரிக‌ண்டிச‌னிங் பேட்ட‌ரிக‌ள் செய்து விற்ப‌து. இப்போதைய‌ மோல்ட‌டு பேட்ட‌ரிக‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்பு இவைக‌ள் அதிக‌ம் பிர‌ப‌ல‌‌ம். ஊள்ளுரில் என்னுடைய‌ சித்த‌ப்பா இந்த‌ க‌டை வைத்திருந்த‌தால், பெரிய‌ப்பா க‌ட‌லூர் சென்று புதிய‌ க‌டை ஒன்று ஆர‌ம்பித்தார். க‌ட‌லூரில் மீன்பிடி தொழில் சிற‌ந்து விள‌ங்குவ‌தால் இந்த‌ பேட்ட‌ரிக‌ளின் வியாபார‌மும் சூடுபிடித்த‌து. ப‌ட‌கில் ஆழ்க‌ட‌லில் சென்று மீன் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ பேட்ட‌ரிக‌ளில் இய‌ங்கும் லைட்டின் ஒளிதான் அணையாவிள‌க்கு. புதிதாக‌ பேட்ட‌ரிக‌ள் செய்து விற்ப‌தும், வாட‌கைக்கு விடுவ‌தும் என்று பெரிய‌ப்பாவிற்கு தொழில் அமோக‌மாய் இருந்த‌து.

க‌ட‌லூரில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ பெண்க‌ள் க‌ன்வெண்ட் ஸ்கூலில் தான் ஜெனி அக்கா ப‌டித்து கொண்டிருந்தார்க‌ள். அரையாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறை ம‌ற்றும் முழுவாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறையில் த‌வ‌றாம‌ல் எங்க‌ள் ஊருக்கு வ‌ந்துவிடுவார்க‌ள்.

இந்த‌ வ‌ருட‌ம் முழுவாண்டுத் தேர்வு முடிந்து ஒருவார‌ம் ஆகிவிட்ட‌து, ஜெனி அக்கா வ‌ர‌வில்லை. நான் அம்மாவிட‌ம் சென்று என்ன‌வென்று கேட்டேன். "ஜெனி அக்காவுக்கு இந்த‌ வ‌ருட‌ம் க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌ போறாங்க‌!! மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சு, அடுத்த‌ மாத‌ம் க‌ல்யாண‌ம் ந‌ட‌க்குது, அதுக்குத்தான் பெரிய‌ப்பா, பெரிய‌ம்மா ம‌ற்றும் ஜெனி அக்கா எல்லாம் வ‌ருவாங்க‌" என்று அம்மா சொல்லிக்கொண்டே ச‌மைய‌ல்‌ வேலையில் இருந்தார்க‌ள். அப்ப‌, இனிமேல் அக்கா எங்க‌ கூட‌ விளையாட‌ வ‌ர‌மாட்டாங்க‌ளா? என்று கேட்ட‌ என்னை த‌லையில் த‌ட்டிவிட்டு சிரித்தார் அம்மா.

ஜெனி அக்காவின் க‌ல்யாண‌ நாளும் வ‌ந்த‌து. என் குடும்ப‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ச‌ந்தோச‌மாக‌ ஒவ்வொரு வேலையில் இருந்தார்க‌ள். பெரிய‌ப்பா வாங்கி கொடுத்த‌ புது துணியை போட்டு கொண்டு என‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலையை பார்க்க‌ சாப்பாடு ப‌ந்த‌லுக்கு ஓடினேன். சாப்பாடுப் ப‌ந்தியில் இலை போட்ட‌வுட‌ன் இலையை க‌ழுவுவ‌த‌ற்கு த‌ண்ணீர் கொடுப்ப‌தும், பின்பு அவ‌ர்க‌ளுக்கு ட‌ம்ள‌ர் வைத்து அதில் த‌ண்ணீர் நிர‌ப்புவ‌து தான் எங்க‌ளுடைய‌ வாண்டு கூட்ட‌த்திற்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலை.

சாப்பாடுப் ப‌ந்தி எல்லாம் முடிந்து ம‌ண‌ம‌க்க‌ளை வ‌ழிய‌னுப்பும் போதுதான் என்னுடைய‌ அம்மா என்னை தேடிவ‌ந்து கையைபிடித்து கொண்டு ம‌ண‌மேடைக்கு கூட்டி போனார். ஜெனி அக்காவிற்கு அழ‌காக‌ அல‌ங்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. கூட‌ இருந்த‌ மாப்பிள்ளை க‌றுப்பு கோட்டு, சூட்டு போட்டு சிரித்து கொண்டே இருந்தார், ப‌ல் ம‌ட்டும் தான் வெள்ளையாக‌ தெரிந்த‌து. ஜெனி அக்கா என்னை பார்த்த‌வுட‌ன் ஒரு மெல்லிய‌ புன்ன‌கை உதிர்த்துவிட்டு கையை பிடித்து கொண்டார். என் அண்ண‌னும், அப்பாவும் மேடைக்கு வ‌ர‌, நாங்க‌ள் எல்லோரும் ம‌ண‌ம‌க்க‌ளை சுற்றி நிற்க‌ போட்டோகிராப‌ரின் கையில் இருந்த‌ கேம‌ராவில் இருந்து வ‌ந்த‌ ஒளி என்னை க‌ண்மூட‌ வைத்த‌து.

க‌ல்யாண‌ம் முடிந்து ஜெனி அக்காவை விருந்துக்காக‌ வ‌ந்த‌போது பார்த்த‌து. அத‌ன்பிற‌கு ஜெனி அக்காவை பார்த்த‌தே கிடையாது. வீட்டில் அப்ப‌ப்ப‌ அம்மாவும், பெரிய‌ம்மாவும் பேசும் போது அவ‌ர்க‌ளுடைய‌ வாயில் ஜெனி அக்காவை ப‌ற்றிய‌ பேச்சு வ‌ரும்போது நானும் கேட்டு கொள்வேன். ஜெனி அக்காவிற்கு இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌து வ‌ரை தெரியும். நான் ஒருமுறை கூட‌ அவ‌ர்க‌ள் வீட்டிற்கு போன‌து கிடையாது.

ஜெனி அக்காவை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி கொடுத்த‌ ஊர் தோவாளை. ம‌ல‌ர்மாலை க‌ட்டுவ‌த‌ற்கு தென் மாவ‌ட்ட‌ங்க‌ளில் மிக‌வும் பிர‌சித்த‌ பெற்ற‌ ஊர். ரோஜா, அருளி, வ‌ந்தி, செவ்வ‌ந்தி, கொழுந்து போன்ற ம‌ல‌ர்க‌ளின் விவ‌சாய‌த்திற்கும் பேர் பெற்ற‌து. ஜெனி அக்காவின் வீட்டு காரரும் த‌னியாக‌ ப‌ல‌ ம‌ல‌ர் தோட்ட‌ம் வைத்திருப்ப‌தாக‌ அம்மா சொல்வார்க‌ள். அவைக‌ளில் உள்ள‌ ம‌ல‌ர்க‌ளை எல்லாம் சென்னை போன்ற‌ ஊர்க‌ளுக்கு அனுப்பும் தொழில் செய்வ‌தாக‌வும் அப்பா சொல்ல‌ கேட்டிருக்கிறேன்.

ஒருநாள் காலை, க‌ல்லூரிக்கு போக‌ நான் ரெடியாகி கொண்டிருக்கும் போது, ப‌க்க‌த்தில் உள்ள‌ சித்த‌ப்பா வீட்டில் இருந்த‌ போன் அடிக்கும் ச‌த்த‌ம் என‌க்கு கேட்ட‌து. அந்த‌ ஒலியிலேயே என‌க்கு தெரிந்த‌து அது எஸ்டிடி(STD) கால்தான் என்று. போனை பேசி முடித்த‌ சித்தி வெள‌றிய‌ முக‌த்துட‌ன் எங்க‌ள் வீட்டிற்கு ஓடி வ‌ந்தார்.

அவ‌ச‌ர‌மாக‌ வ‌ந்த‌ சித்தி வ‌ழியில் நின்ற‌ என்னிட‌ம் "சுரேஷ்... க‌டைக்கு போய் இருக்கும் சித்த‌ப்பாவை உட‌னே கையோடு கூட்டி வா" என்று சொல்லிவிட்டு அம்மாவிட‌ம் சென்று "இந்த‌ ஜெனி பொண்ணு தூக்க‌ல‌ தொங்கிடிச்சாம், க‌ட‌லூரில் இருந்து ‌பெரிய‌ அத்தானும், அக்கா எல்லாம் கிள‌ம்பி வ‌ந்திட்டு இருக்கிறாங்க‌ளாம். ந‌ம்ம‌ளை வ‌ண்டி புடிச்சு உட‌னே போய் பார்க்க‌ சொன்னாங்க‌" என்று க‌த‌றினார்.

இவ‌ர்க‌ளின் க‌த‌ற‌லை கேட்டு, வெளியில் தோட்ட‌த்தில் இருந்த அப்பாவும் ஓடி வந்தார். விச‌ய‌த்தை கேள்விப்ப‌ட்டு உட‌ன‌டியாக‌ ஒரு வேன் பிடிக்க‌ அப்பா கிள‌ம்பினார்க‌ள், நான் என்னுடைய‌ டூவில‌ரை எடுத்து கொண்டு சித்தாப்பாவை கூப்பிட‌ சென்றேன்.

அடுத்த‌ அரை ம‌ணி நேர‌த்தில் எங்க‌ள் சொந்த‌ப‌ந்த‌ங்க‌ள் என்று ஒரு வேன் புல்லா நிர‌ம்பிற்று. வ‌ண்டி தோவாளையை நோக்கி கிள‌ம்பிய‌து. வ‌ண்டியில் இருந்த‌ அனைவ‌ரின் முக‌மும் இறுக்க‌மாக‌ இருந்த‌து. அம்மா ம‌ற்றும் சித்தியின் க‌ண்க‌ளில் நீர் திவ‌லைக‌ள் எட்டி பார்த்த‌து. "ப‌தினெட்டு வ‌ய‌து முடிய‌ல‌, அதுக்குள்ள‌ அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு அந்த‌ ம‌னுஷ‌ன் த‌லையில‌ க‌ட்டி வ‌ச்சிட்டான்." என்று மௌன‌மாக‌ இருந்த‌ வ‌ண்டியில் அப்பா பேசினார்.

"நேற்றைக்கும் ச‌ண்டை போட்டிருப்பா!!! அதுல‌ தான் இது ந‌ட‌ந்திருக்கும்" என்று சித்த‌ப்பா வ‌ண்டியின் ஓர‌த்தில் உள்ள‌ ஜ‌ன்ன‌லை வெறித்து கொண்டு பேசினார்.

"க‌ல்யாண‌ம் ப‌ண்ணி குடும்ப‌ம் ந‌ட‌த்திக்கிடுவாளானு நானும் ந‌ல்ல‌ சொன்னேன், அவ‌ங்க‌ தான் கேக்க‌லை" என்று என் அம்மாவும் புல‌ம்பினார்.

வ‌ண்டி தோவாளை மெயின் ரோட்டில் இருந்து இற‌ங்கி மேற்கு ப‌க்க‌மாக‌ செல்லும் ஒற்றை ரோட்டிற்குள் நுழைந்த‌து. அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌த்தில், சென்று கொண்டிருந்த‌ வ‌ண்டியை ஒரு பெரிய‌ புளிய‌ ம‌ர‌த்தில் அருகில் இருந்த‌ காலியிட‌த்தில் ஓர‌ம் க‌ட்ட‌ சொல்லிவிட்டு, வ‌ண்டியில் இருந்த‌வ‌ர்க‌ளை இற‌ங்க‌ சொன்னார் அப்பா.

வ‌ண்டி நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌ இட‌த்தில் இருந்து, சிறிது தூர‌த்தில் ஒரு வீட்டின் முன் போட‌ப்ப‌ட்ட‌ ப‌ச்சை ஓலை கொட்ட‌கையில் கூடியிருந்த‌வ‌ர்க‌ளை பார்க்கும் போதே அதுதான் ஜெனி அக்காவின் வீடு என்று ஊகித்து கொண்டேன். எங்க‌ளை பார்த்த‌வுட‌னே கூட்ட‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளின் அழுகை ஓல‌ம் அதிக‌மான‌து. அந்த‌ கூட்ட‌த்தில் இருந்து "மாமாஆஆஆஆ"!!!!!!! என்று ஓல‌மிட்டு ஒருவ‌ர் ஓடி வ‌ருவ‌தை பார்த்தேன். வ‌ந்த‌வ‌ர் என்னுடைய‌ அப்பாவின் காலில் விழுந்தார். அப்போது தான் அடையாள‌ம் க‌ண்டு கொண்டேன், அவ‌ர் தான் ஜெனி அக்காவின் புருச‌ன். நான் அவ‌ரை பார்த்து எட்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து, முன்பு பார்த்த‌தை விட என் க‌ண்க‌ளுக்கு‌ இள‌மையாக‌ தெரிந்தார்.

காலில் விழுந்த‌வ‌ரை என்னுடைய‌ அப்பாவும், சித்த‌ப்ப‌வும் சேர்ந்து தூக்கினார்க‌ள். மாமா!!!!!!!! நான் காலையிலேயே தோட்ட‌த்துக்கு ம‌ருந்து அடிக்க‌ போயிருந்தேன், ம‌வ‌னுங்க‌‌ இர‌ண்டு பேரும் என்னுடைய‌ அண்ண‌ன் வீட்டில் விளையாடிட்டு இருந்தாங்க‌. அந்த‌ நேர‌ம் பார்த்து கிறுக்கி ம‌வா தூக்குல‌ தொங்கிட்டா மா..மா ...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று க‌த‌றினார்.


--தொட‌ரும்

=============================================

குறிப்பு: சில‌ துரோக‌ங்க‌ள் - என்ற‌ த‌லைப்பில் நான் பார்த்த‌, கேட்ட‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை என‌து எழுத்தில் கொண்டு வ‌ர‌லாம் என்று நினைத்து தான் இந்த‌ க‌தையை ஆர‌ம்பிக்கிறேன். நீங்க‌ள் தான் சொல்ல‌ வேண்டும் எப்ப‌டியென்று.

.

.

Sunday, August 8, 2010

எந்திர‌ன் ரிலீஸ் எப்ப‌டி இருக்கும்?...

எந்திர‌ன் ப‌ட‌த்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்க‌ள். பாட‌ல்க‌ள் அனைத்தும் ஏற்க‌ன‌வே ரிலீஸ் ஆகி ப‌ட்டையை கிள‌ப்புகிற‌து. க‌ண்டிப்பாக‌ இர‌ண்டு பாட‌ல்க‌ள் எல்லோருடைய‌ வாயிலும் முனுமுனுக்க‌ ப‌டுவ‌து உறுதி. "அரிமா அரிமா" நான் இப்போது அடிக்க‌டி கேட்டும் பாட‌லாக‌ இருக்கிற‌து.பெரும்பாலும் நான், என‌க்கு விருப்ப‌மான‌ ப‌ட‌ங்க‌ளை ரிலீஸின் முத‌ல்நாளே பார்த்து விடுவேன். அப்ப‌டி பார்த்தால் தான் ஒரு திருப்தி. சென்னை சிட்டியில் எல்லா ப‌ட‌த்துக்கும் முத‌ல் நாள் டிக்க‌ட் கிடைப்ப‌து குதிரை கொம்பு தான். அத‌னால் நான் சென்னையின் புற‌ந‌க‌ரான‌ அம்ப‌த்தூரில் உள்ள‌ ராக்கி காம்பிள‌க்ஸ் தான் பெரும்பாலான‌ ப‌ட‌ங்க‌ள் பார்ப்பேன்.

மாஸ் ஹீரோக்க‌ளின் ப‌ட‌ங்க‌ள் என்றால் ரிலீஸ் ஆன‌ ஒரு‌நாள் முழுவ‌தும் அந்த‌ காம்பிள‌க்ஸில் உள்ள‌ நான்கு ஸ்கிரின்க‌ளிலும்(ராக்கி, சினி ராக்கி, மினி ராக்கி, ல‌ஷ்மி ராக்கி) போட்டுவிடுவார்க‌ள். என‌வே ஏதாவ‌து ஒன்றில் டிக்க‌ட் கிடைத்துவிடும். அதிக‌மாக‌ போனால் டிக்க‌ட்டின் விலை எண்ப‌தில் இருந்து நூறுவ‌ரை இருக்கும். அத‌ற்கு மேல் விற்ற‌தை நான் பார்த்த‌து இல்லை.

ர‌ஜினியின் சிவாஜி ப‌ட‌ம் ரிலீஸ் ஆன‌ அன்று முத‌ல் நாள் ப‌ட‌ம் பார்க்க‌ வேண்டும் என்ற‌ ஆசை இருந்த‌து. ஆனால் அன்றைக்கு ஆபிஸில் ஆணி அதிக‌ம் லீவு போட‌ முடியாத‌ நில‌மை. நான் என்னுடைய‌ ந‌ண்ப‌னிட‌ம் "கூட்ட‌ம் அதிக‌மா இருக்குமுடா!! அத‌னால‌ காலையிலேயே போய் மாலைக் காட்சிக்கு இர‌ண்டு டிக்க‌ட் வாங்கி வ‌ச்சிக்கோ" என்று சொல்லிவிட்டு ஆபிஸுக்கு போய்விட்டேன்.

ஆபிஸ்ல‌ இருக்கும் போது ந‌ண்ப‌ன் போன் ப‌ண்ணினான் "டேய் நான் தியேட்ட‌ரில் இருக்கிறேன், இன்னும் இர‌ண்டு நாளைக்கு டிக்க‌ட் எதுவும் இல்லையாம், அத‌னால‌ நான் டிக்க‌ட் வாங்க‌ல‌னு சொன்னான்" என்னால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை, இவ‌ன் தியேட்ட‌ர் ப‌க்க‌மே போகாம‌ல் க‌தை விடுகிறான் என்று நினைத்து கொண்டேன். கார‌ண‌ம் எந்த‌வொரு ப‌ட‌த்திற்கு இப்ப‌டி இருந்த‌து இல்லை. நான் கேட்ட‌தும் இல்லை.

மாலையில் ஆபிஸ்வேலை முடித்துவிட்டு வ‌ந்து, வ‌ண்டியை எடுத்து கொண்டு ந‌ண்ப‌னும் நானும் தியேட்ட‌ருக்கு போனோம். போகும் போதே ந‌ண்ப‌ன் சொன்னான் டிக்கெட் கிடைக்காது என்று, நான் அதை காதிலே வாங்க‌வில்லை. அம்ப‌த்தூர் OT ப‌ஸ் ஸ்டாண்டை தாண்டி போகும் போதே தெரிந்த‌து ம‌க்க‌ளின் கூட்ட‌ம். தியேட்ட‌ர் ப‌க்க‌ம் வ‌ண்டியை கொண்டு போக‌ முடியாத‌ அள‌வு கூட்ட‌ம். போலிஸ் வேறு போட்டிருந்தார்க‌ள். என‌வே வ‌ழியிலேயே நாங்க‌ள் ரெகுலராக‌ சாப்பிடும் ஹோட்ட‌லில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு ந‌ட‌ந்து மெதுவாக‌ தியேட்ட‌ர் ப‌க்க‌ம் சென்றேன்.

காட்சி நேர‌ங்க‌ள் எல்லாம் மாற்றியிருந்தார்க‌ள். மேட்னி ஷேவே இன்னும் முடிய‌வில்லை. அத‌னால் மெயின் வாச‌லை மூடி வைத்திருந்தார்க‌ள். டிக்க‌ட் எடுப்ப‌த‌ற்கு க‌வுண்ட‌ரில் ஹ‌வுஸ்புல் போர்டு மாட்டி இருந்தார்க‌ள். கேட்டில் நிற்கும் தியேட்ட‌ர் ஊழிய‌ர்க‌ள் இர‌ண்டு நாட்க‌ளுக்கு டிக்க‌ட் இல்ல‌ அத‌னால‌ யாரும் வெயிட் ப‌ண்ண‌ வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தார்க‌ள்.

அவ‌ர்க‌ள் சொல்வ‌தை கேட்டு கூட்ட‌ம் ம‌ட்டும் ந‌க‌ர்ந்த‌தாக‌ தெரிய‌வில்லை. "டிக்க‌ட் இல்லைனு சொல்லிட்டு அவ‌னுவ‌ளுக்கு தெரிஞ்ச‌ ஆட்க‌ளுக்கு ம‌ட்டும் ஆயிர‌ம், ஐநூறுனு விக்கிறானுங்க‌" என்று என்னுடைய‌ ப‌க்க‌த்தில் இருந்த‌ தாடிவ‌ச்ச‌ அறுப‌து வ‌ய‌து பெரிசு சொல்லிய‌து.

இது எதுவும் ஆவுற‌து இல்ல‌னு ப‌க்க‌த்தில் இருந்த‌ ந‌ண்ப‌னிட‌ம் "வாட‌ நாம‌ போக‌லாம், அப்புற‌மா வ‌ந்து பாக்க‌லாம்" என்றேன். அவ‌ன் என்னிட‌ம் "ஒரு நிமிட‌‌ம்" என்று சொல்லி கொண்டு ஒரு ப‌க்க‌மாக‌ ந‌ட‌ந்தான். நான் கூட்ட‌த்தை வேடிக்கை பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். அப்போது ஒரு ஹோண்டா காரில் இருந்து கூலிங்கிளாஸோடு இற‌ங்கிய‌ ந‌ப‌ர் நேராக‌ சைக்கிள் நிறுத்த‌ காசு வ‌சுலிப்ப‌வ‌ரை நோக்கி சென்றான். அவ‌ரிட‌ம் சென்று மூன்று ஆயிர‌ம் ரூபாய் நோட்டை நீட்டி என‌க்கு மூன்று டிக்க‌ட் வேண்டும் என்றான். யோவ் டிக்க‌ட் எதுவும் இல்லையா!! போய்யா என்று சுத்த‌ சென்னை பாஷையில் க‌த்தினார். அப்ப‌டியும் அவ‌ரிட‌ம் ந‌ம்ம‌ கூலுங்கிளாஸ் ஹீரோ கெஞ்சி கொண்டிருந்தான்.

அப்ப‌டியே ம‌றுப‌க்க‌ம் திரும்பினால் குடும்ப‌ த‌லைவ‌ர் ஒருத்த‌ர் த‌ன் குடும்ப‌ த‌லைவியிட‌ம் டிக்க‌ட் காசை திணித்து "நீ போய் கேளு" அப்ப‌த்தான் டிக்க‌ட் த‌ருவானுங்க‌ என்று சொல்லிகொண்டிருந்தார். அந்த‌ த‌ங்க‌ம‌ணி அம்மா ம‌ருங்க‌ ம‌ருங்க‌ விழித்து கொண்டிருந்தார்க‌ள்.

கூட்ட‌த்தில் இருந்து க‌ரை வேட்டி, ச‌ட்டை போட்ட‌ ஆளு ஒருத்த‌ர் நேராக‌ தியேட்ட‌ருக்குள் நுழைந்தார். அவ‌ரை பார்த்த‌வுட‌ன் வாச‌ல் தானாக‌ திற‌ந்த‌து. அவ்ர் பின்ன‌டியே ஒரு குடும்ப‌ம் உள்ளே நுழைந்த‌து. இப்ப‌டி வ‌ருவோரையும், போவோரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த‌ என்னை "ஒரு நிமிட‌‌ம்" என்று சொல்லிவிட்டு போன‌ ந‌ண்ப‌ன் அரை ம‌ணி நேர‌ம் க‌ழித்து வ‌ந்து கையை பிடித்தான்.

என்ன‌டானு கேட்டேன், என‌க்கு தெரிஞ்ச‌ ஒருத்த‌ரிட‌ம் டிக்க‌ட் இருக்கு ஆயிர‌த்து ஐநூறு ரூபாய் கொடுத்தால் இர‌ண்டு டிக்க‌ட் கொடுப்பார் என்றான். போடா வென்று!!!!!!!! இன்னும் இந்த‌ மாச‌ம் முடிய‌ ப‌தின‌ஞ்சு நாளு இருக்கு என்னிட‌ம் செல‌வுக்கு இருக்கிற‌தே அவ்வ‌ள‌வு தான். வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்ட‌ல்ல‌ கொத்து புரோட்டா சாப்பிட‌லாம் என்று இழுத்து வ‌ந்தேன்.

60 கோடி ரூபாய் ப‌ட்ஜெட்ல‌ தாயாரித்த‌ "சிவாஜி" ப‌ட‌த்திற்கே இந்த‌ அள‌வு டிக்க‌ட் விலை என்றால்(அதுவும் சென்னைக்கு அவுட்ட‌ர்) இதை போல் மூன்று ம‌ட‌ங்கு அதிக‌ ப‌ட்ஜெட்ல‌ த‌யாரித்த‌ "எந்திர‌ன்" ப‌ட‌த்திற்கு முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் என்ன‌ டிக்க‌ட் விலை வைப்பார்க‌ள் நினைக்க‌வே த‌லை சுத்துது. ஆனா அந்த‌ காமெடி எல்லாம் பார்க்க‌தான் என‌க்கு இந்த‌ வ‌ருட‌ம் கொடுத்து வைக்க‌வில்லை.... ஹி.. ஹி... "எல்லாம் ந‌ன்மைக்கே"

======================================================


.

.

Tuesday, August 3, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்..??!!த‌ல‌(த‌லையாய‌) ந‌ண்ப‌ர் நாஞ்சில் பிர‌தாப் அழைப்பை ஏற்று இந்த‌ தொட‌ர்ப‌திவு:

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நாடோடி

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இது என்னுடைய‌ உண்மையான‌ பெய‌ர் இல்லை. என‌க்கு பெற்றோர் வைத்த‌ பெய‌ர் ஸ்டீப‌ன். ப‌டித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல‌ ஆர‌ம்பித்த‌து முத‌ல் என்னுடைய‌ நாடோடி வாழ்க்கை ஆர‌ம்ப‌மாகிற‌து. தொட‌ர்ச்சியான‌ ஓட்ட‌ங்க‌ள் தான்(மார‌த்தானா என்று கேட்க‌ப்ப‌டாது), இதுவ‌ரையிலும் தொட‌ர்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌து. என‌வேதான் "நாடோடி" என்று இந்த‌ பெய‌ரை வைத்தேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

நின்ற‌ பொருள் அசைய‌வும், அசைந்த‌ பொருள் நின்ற‌தும்... நான் கால‌டி எடுத்து வைத்த அன்னைக்கு ந‌ட‌ந்த‌து என்று சொன்ன‌ நீங்க‌ ந‌ம்ப‌வா போறீங்க‌!!!!‌ ம‌லையேறி சிக‌ர‌ம் தொட்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்க்கும் ஒருவ‌ர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து வீட்டு சுவ‌ர் ஏறி குதிப்ப‌தில்லையா?... அதுபோல் தான்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தின‌மும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ வாச‌க‌ர் க‌டித‌ங்க‌ளை நானே எழுதி என‌து மெயிலுக்கு போஸ்ட் ப‌ண்ணுவ‌தில் இருந்தே உங்க‌ளுக்கு தெரியும் நான் எவ்வ‌ள‌வு பிர‌ப‌ல‌ம் என்று!!!!!. இருந்தாலும் இன்னும் ஒரு வேலை பாக்கியிருக்கு என்னிடைய‌ வ‌லைப்ப‌திவின் பெய‌ரை எவ‌ர‌ஸ்ட் சிக‌ர‌த்தில் ப‌திக்க‌ வேண்டும் என்ப‌து தான். அதையும் ப‌ண்ணிட்டேன் என்றால் "ப‌திவுல‌க‌ வ‌ர‌லாற்றில் முத‌ன் முறையாக‌" என்று போட்டுவிட‌லாம். அத‌ற்க்கான‌ முத‌ற்க்க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌து, விரைவில் முடிந்துவிடும்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில‌ சொந்த‌ விச‌ய‌ங்க‌ளை எழுதியிருக்கிறேன். ப‌ல‌ க‌ருப்பு, வெள்ளை ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு அழாகாக‌ வ‌ண்ண‌ம் பூசியும் எழுதியுள்ளேன். விளைவு பெரிதாக‌ ஒன்றும் இல்லை. இதுவ‌ரையில் யாரிட‌ம் இருந்தும் வெளியிட‌ப்ப‌ட‌ முடியாத‌ அள‌வு பின்னூட்ட‌ம் பெற்ற‌தும் இல்லை. யாருக்கும் நானும் அப்ப‌டி இட்ட‌துமில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

க‌ண்டிப்பாக‌ பொழுதுபோக்கிற்காக‌ தான் ஆர‌ம்பித்த‌து.. ச‌ம்பாத்திய‌ம் எல்லை க‌ட‌ந்து ப‌ல‌ ந‌ல்ல‌ ந‌ட்புக‌ளை..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு க‌ண்ணே க‌ண்ணுனு தான் இருந்த‌து. வீடியோக்க‌ள் அதிக‌மாக‌ ப‌திவேற்ற‌ம் செய்வ‌தால் வ‌லைப்ப‌திவு திற‌ப்ப‌த‌ற்க்கு அதிக‌ நேர‌ம் எடுத்து கொள்கிற‌து என்று ந‌ண்ப‌ர்க‌ள் தெரிவித்த‌தால், வீடியோக்க‌ளை ம‌ட்டும் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ ஒரு வ‌லைப்ப‌திவு ஆர‌ம்பித்தேன். மொத்த‌ம் இர‌ண்டு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

"தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா" இந்த‌ பாட‌லின் முத‌ல் வ‌ரியை ஞாப‌க‌ம் வைத்த‌ அள‌விற்க்கு இந்த‌ வ‌ரியை ஞாப‌க‌ம் வைக்க‌ த‌வ‌றி விடுகிறோம்..

=========================================

என்‌ கையில‌ கிடைத்த‌ தீப்ப‌ந்த‌த்தை அப்ப‌டியே அணைக்க‌ விருப்ப‌ம் இல்லை. அத‌னால‌ ந‌ம்ம‌ "த‌மிழ் உத‌ய‌ம்" ர‌மேஷ் அவ‌ர்க‌ளை இந்த‌ ப‌திவை தொட‌ர‌ அழைக்கிறேன்..

..


.
Related Posts with Thumbnails