Showing posts with label டாஸ்மாக். Show all posts
Showing posts with label டாஸ்மாக். Show all posts

Monday, June 27, 2016

அறிவுஜீவிகள் வெட்கப் பட வேண்டாமா?

சமீபத்தில் ஒரு நாள், ஊரில் என்னுடன் படித்த பெண் நண்பர் ஒருவரை அலைப்பேசியில் அழைத்திருந்தேன், அவர் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார், எதற்காக அங்குச் சென்றார் என்பதை விசாரிப்பதற்கு அவகாசம் தராமல், என்னை மாலையில் அலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார்.

மாலையில் என்னை அழைத்து, தம்பிக்கு உடம்பு சரியில்லை, அவனுடைய நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு பிரச்சனையாக இருக்கிறது என்றும் அபாய கட்டத்தில் அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை கொடுப்பதாகச் சொன்னார். என்னால் அவர் தம்பி என்று சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை, திரும்பவும் யாருக்கு உடம்பு சரியில்லை என்று கேட்டேன், காரணம் அவர் சொல்லியிருக்கும் உறுப்புகளுக்கு வரும் வியாதியெல்லாம், எந்தப் பழக்கம் உள்ளவருக்கு வரும் என்பது மருத்துவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் மீண்டும் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்திருக்கிறது என்றும், வீட்டில் உள்ள எவருக்கும் இவனுடைய இந்தக் குடி பழக்கம் சரியாக தெரியாது என்றும் சொன்னார்.

அவர் சொல்லியதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் எனக்கும் அவருடைய தம்பியை நன்றாகத் தெரியும், என்னைவிட ஐந்து வயது குறைவாக இருப்பான். பள்ளியில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன், அப்போது மிகச் சிறுவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் இந்தப் பெண் நண்பரிடம் பேசிய போது, அவருடைய தம்பியை பற்றி விசாரித்தேன், அவன் படிப்பில் பெரிய அளவு ஈடுபாடு இல்லையென்றும் சொந்தமாக தொழில் செய்வதாக சொல்லி நாகர்கோவிலில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு துணிக்கடை வைத்திருக்கிறான் என்று சொல்லியிருந்தார்.

துணிக்கடை வைத்திருக்கும் போது பெரும்பாலும் இரவில் வீட்டிற்குத் தூங்குவதற்கு வருவது இல்லையாம், நண்பர்களுடன் சேர்ந்து கடையில் தூங்கிவிடுவானாம், அதனால் அவனுடைய தொடக்க கால குடிப்பழக்கம்  வீட்டிற்குத் தெரிந்திருக்கவில்லை. இவனுடைய குடிப்பழக்கம் அளவிற்கு அதிகமாகிய பிறகு தான் வீட்டிற்குத் தெரிய வந்திருக்கிறது, இவனைக் கண்டிக்க வேண்டிய அப்பாவிற்கும் குடிப் பழக்கம் உண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் ஓடு வேய்ந்த மண் வீடு இடிந்து விழுந்திருக்கிறது, இப்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறார்களாம். இப்படியான சூழ்நிலையில் தான் இவனுடைய மருத்துவ செலவு வந்திருக்கிறது.

முதலில் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள், அவர்கள் இவனுடைய மோசமான நிலைமையைப் பார்த்துவிட்டு உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைத்து இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்ந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள், உயிருக்கான உத்திரவாதம் ஒரு வாரம் வரையிலும் சொல்லப்படவில்லை. நாள் ஒன்றிற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது.

என்னுடைய நண்பர் காதல் திருமணம் செய்தவர், அவர்  நெல்லையில் இரண்டு குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். தந்தையின் வருமானம் அவருடைய குடிப்பழக்கத்திற்கு சரியாக இருந்தது. மருத்துவமனையில் ஆன பண செலவுகளின் பெரும் பகுதியை இவர் தான் புரட்டியிருக்கிறார். தினமும் ஐம்பதாயிரம் செலவு என்றால் இப்படியான குடும்பத்தால் எத்தனை நாட்கள் கடத்திவிட முடியும், என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார். சிலரின் ஆலோசனைப் படி கேரளாவில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனை மற்றும் (அம்மா) அமிர்தா மருத்துவமனை போன்றவற்றில் விசாரித்திருக்கிறார், எவரும் குடியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இலவச சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள்.

நண்பரின் தம்பியின் மெடிக்கல் ரிப்போர்ட்

குடிப் பழக்கத்தால் 27 வயதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இந்தளவிற்குப் பாதிக்க படுகிறது என்றால் டாஸ்மாக்கில் கொடுக்கப்படும் போதை வஸ்துக்கள் எப்படியானவை என்ற கேள்விகள் வருகிறது. இப்போது டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களின் தரம் யாரால் எவரால் சோதிக்கப்படுகிறது, அதில் இருக்கும் ஆல்கஹாலின் அளவுகள் மற்றும் கெமிக்கல் மிக்சிங் போன்றவை எதன் அடிப்படையில் இந்த மதுபானங்களில் சேர்க்கப்படுகிறது என்பதற்கு வெளிப்படையான தகவல்கள் கிடையாது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட  பிராண்டட் மது பாட்டில்கள் கிடைப்பது அரிது,  அப்படியானால் கிராமங்களில் விற்கப்படும் பாட்டில்கள் சொல்லவே வேண்டாம். கிராமங்களில் உள்ள டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் பிராண்டட் பெயர் சொல்லி கேட்பது இல்லை, 120 ரூபாய், 150 ரூபாய் சரக்கு கொடு என்று தான் கேட்கிறார்கள். அதில் பெயர் போட்டிருக்கிறதா, முத்திரைகள் இருக்கின்றதா என்றெல்லாம் எவரும் சோதித்து பார்ப்பது இல்லை.

முன்பெல்லாம் ஊரில் கள்ள சாராயம் குடித்தவர்களுக்கு கூட ஒரு ஐம்பது வயதிற்கு மேல் தான் உடலில் பிரச்சனைகள் வரும், ஆனால் இன்று அரசாங்கம் விற்கும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை வாங்கிக் குடித்தால் இளம் வயதிலேயே மருத்துவமனையில் சென்று படுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஒருவனுக்கு வியாதியைக் கொடுக்கிற மதுவை வரிந்து கட்டிக்கொண்டு ஆண்டுக்கு டார்கெட் வைத்து வியாபாரம் செய்கிறது இந்த அரசு. ஆனால் அந்த மக்களின் வியாதியைக் குணப்படுத்தும் அரசு மருத்துவமனைகளைக் கண்டு கொள்வதில்லை. கிராமங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் நிலையை இந்தக் கட்டுரையில் விவரித்து விட முடியாது, மருத்துவர்கள் இருந்தால், செவிலியர்கள் இருக்க மாட்டார்கள், செவிலியர்கள் இருந்தால் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் இருந்தால், மருத்துவ முறைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. ஒருவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வராதீர்கள், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஒருவர் என்னிடம் பேசும் போது சாதாரணமாக சொல்லுகிறார்.

இன்று டாஸ்மாக்கின் அமோக விற்பனையால் தான் அரசாங்கம் நமக்கு இலவசங்களைக் கொடுக்க முடிகிறது,  வருட வருடம் மாநிலத்திற்கான நிதிநிலை அறிக்கையைப் போட முடிகிறது, இல்லையென்றால் பெரிய துண்டு விழும் என்று விவாதிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இப்படிச் சொல்ல வெட்கப் பட வேண்டாமா? ஒருவனுடைய மதுப் பழக்கம் அவனை மட்டும் பாதிப்பதில்லை, அவனைச் சார்ந்த குடும்பத்தையும் சீரழிக்கிறது, குடும்பங்கள் தான் சமூகத்தின் ஆணி வேர்கள் என்று வக்கணையாக ஏட்டில் எழுதி வைத்துப் படிக்கிறோம். ஆணி வேர்களுக்கு நஞ்சை உறிஞ்ச கொடுக்கும் டாஸ்மாக் கடைகளால் மட்டும் தான் ஒரு அரசாங்கம் ஆட்சி செய்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்றால் அந்த ஆட்சியின் கீழ் வாழும் நாம் எல்லாம் மாக்கள் தான். பல குடும்பங்கள் மதுவால் அழிந்தாலும் பரவாயில்லை, என்னுடைய இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று சொல்லும் அரசுகள் உண்மையில் "நமக்கான அரசு தான்" என்பதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும்.



ஒரு சுதந்திர நாட்டில், ஒரு குடி மகன் மதுக் குடிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை, அந்த உரிமையை எப்படி நாம் பறிக்க முடியும் என்று சில பேர் கேள்வி கேட்கிறார்கள். குடிப்பழக்கம் என்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை, அவரைச் சுற்றியிருக்கும் சமுகத்தையும் பாதிக்கிறது என்பதை எத்தனைப் புள்ளி விபரங்கள் மற்றும் செய்திகளை எடுத்து வைத்தாலும் இவர்கள் கேட்க போவது இல்லை. குடிப்பழக்கத்திற்கு நாங்கள் அடிமை இல்லை, ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறோம் என்று சொல்லும் கூட்டம் தான் டாஸ்மாக் விடுமுறை நாள் என்று அரசு அறிவித்தால் அதற்கு முந்தின நாளே வாங்கி ஃப்ரிஜில் வைத்துக் கொள்கிறது. குடிப்பழக்கம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை ஒன்றும் இல்லை. ஒழுக்க கேடான செயல்களுக்கு எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம், என் தனிப்பட்ட உரிமை என்று சட்டம் பேசிவிட முடியாது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் இந்த டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று சொல்லும் அறிவுஜீவிகள் கண்டிப்பாக மது பிரியர்களை நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் பார்த்திருப்பார்கள். கண்டிப்பாக மதுப் பழக்கம் உள்ளவர்களிடம் இவர்களுக்கான தொடர்பு அறவே இருப்பது இல்லை. நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு மட்டும் தான் இந்த மாற்று ஏற்பாடுகள் தேவை, இந்த நடுத்தர வர்க்கத்திற்கு திடீரென வேலைப் போய் விட்டால் கூட என்ன செய்வது என்று தெரியாது, அதற்கும் கூட மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது, உறவுகளையும், சமூக அக்கறைகளையும் தொலைத்து நிற்கும் இந்தக் கூட்டத்திற்கு எல்லாவற்றுக்கும் தனியாகவே ஒரு மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது என்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நடந்த இன்போசிஸ் நிறுவனத்தில்  வேலைப்பார்த்து வந்த இளம் பெண்ணின் படுகொலையே சாட்சி.

கிராமத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சொல்லுவது, காலையிலேயே கடையை திறந்து வைத்து ஆசையைத் தூண்டி விடுகிறார்கள், அந்தக் கடைப்பக்கம் செல்லாமல் வேறு பாதையில் செல்லலாம் என்றால், அங்கு நமக்குத் தெரிந்தவர்கள் இருவர் குடிக்க கிளம்புவார்கள், இல்லையென்றால் குடித்துவிட்டு வந்து நம்மிடம் பகடி செய்வார்கள், இப்படியான சூழ்நிலையை எதிர் கொள்வது தான் கடினம் என்று அங்கலாய்க்கிறார்கள். எனது அப்பாவும் குடிப்பழக்கம் உள்ளவர் தான், சில நாட்கள் காலையில் ஆரம்பித்தால் அன்று முழுவதும் அவர் அந்தப் போதை உலகத்தில் தான் இருப்பார். அவரிடம், அப்பா! டாஸ்மாக்கை மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால், அது இல்லையென்றால் குடியா மூழ்கிவிடும், அதோடு தொலைந்தது என்று விட்டு விடுவேன் என்று சொல்லுவார்கள். ஆனால் "குடிக்காமல் இருங்கள்" என்று சொன்னால் "முடியாது" என்று தான் சொல்வார்கள். இவர்களால் குடிக்காமல் இருக்க முடியும், ஆனால் எளிதாகக் கிடைக்கிறது என்ற எண்ணம் தான் இவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாமல் வைத்திருக்கிறது.

என்னுடன் சவுதியில் இருக்கும் சில நண்பர்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது நாள் தோறும் தவறாமல் மாலையில் டாஸ்மாக் சென்று வருபவர்கள் தான். ஆனால் இப்போது அவர்களால் குடிக்காமல் ஒரு வருடங்களுக்கு மேல் இருக்க முடிகிறது. குடிப்பதற்கு எளிதாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, "நீ குடிக்காதே" என்று அவனைக் கட்டுப்படுத்த நினைப்பது எப்படியான மனநிலை என்று புரியவில்லை

வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து குடும்பங்களின் இளம் குருத்துக்களை குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைத் தான் சேரும். இன்றைக்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் டாஸ்மாக் கடையை தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போன்ற காட்சிகளை அமைக்கும் இயக்குநர்களின் கற்பனை வறட்சியும் குடிப்பழக்கத்தை ஆதரித்து அதற்குத் தூபம் போடுவது போல் அமைகிறது..



.

Tuesday, April 8, 2014

எல்லாவற்றையும் இழப்பத‌ற்குத்தானே ஆசைப்படுகிறாய் பாலகுமாரா!!!

குடிப் பழக்கத்தைப் பற்றி எனது தளத்தில் அதிகமாகவே எழுதியிருக்கிறேன். ஆக்டோபஸ் போன்று குடும்பத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் இந்தப் பழக்கத்தின் தீமையை முழுமையாக உணர்ந்தவன் என்ற முறையில் தான் எழுதி வருகிறேன். சிறு வயதில் தனது தந்தையின் குடிப்பழக்கத்தை அருகில் இருந்து பார்த்தவனும், அதனால் தன்னுடைய குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் முழுமையாக உணர்ந்தவன் எவனும் தனது குழந்தைக்கு அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க விரும்ப மாட்டன். நான் ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறேன், வாரத்திற்கு ஒருமுறை குடிக்கிறேன் என்று சிலாய்க்கும் எவரும் தனது குழந்தை இந்தப் பழக்கத்தை விரும்புகிறதா, தன்னுடைய‌ மனைவி சந்தோசமாகத் தான் இந்தப் பழக்கத்தை ஏற்று நம்முடன் வாழ்கிறாளா என்று அறிய விரும்புவதில்லை.

குடிக்கும் நண்பர்கள் எவரும் தன்னுடன் நட்பாக இருக்கும் குடிக்காத நண்பர்களிடன் அவர்கள் குடிக்கும் போது செய்யும் கூத்துகளைப் பற்றிக் கேட்க விரும்புவதில்லை. அப்படியே குடிக்காத நண்பர்கள் கொடுக்கும் அறிவுரைகளையும் இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. இவர்கள் குடிப்பதைப் பற்றி விவாதிப்பது எல்லாம் உடன் குடிக்கும் நண்பர்களுடன் தான். அவர்கள் என்ன இவர்களுக்குச் சொல்லிவிடப் போகிறார்கள்? நாளைக்கு எந்தக் காரணத்தைச் சொல்லிக் குடிக்கலாம், எங்குக் குடிக்கலாம் என்பதைத் தான் விவாதிப்பார்கள்.



குடிக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு குடிக்காத நண்பன் இருந்தால் அவனுடைய நிலைமை ரெம்பக் கொடுமையானது. சொன்ன விசயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதில் ஆரம்பித்து, ஒண்ணும் இல்லாத விசயத்திற்குக் கண்ணீர் விட்டு அழுவது வரை நடக்கும். காலையில் எழுந்து ஏன்டா இப்படிப் பண்ணினாய்? என்று கேட்டால் என்ன பண்ணினேன்? என்று தெரியாதது போல் நம்மிடமே திரும்பக் கேட்பது.

கிராமங்களில் குடிப்பவர்களிடம் ஒரு முரட்டுத்தனம் அவர்களை அறியாமலே வந்து விடுகிறது. அந்த முரட்டுத்தனத்தை வீடு வரும்வரை வெளியாட்கள் எவரிடமும் காட்டுவதற்குத் துணிவது இல்லை. அதில் எல்லாம் ரெம்ப‌ விவரமாக இருப்பார்கள். வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியிடமோ அல்லது வயதான பெற்றோர்களிடமோ தான் காட்டுகிறார்கள். இன்னும் சில பேருக்கு குடித்தால் தான் தன்னுடைய குழந்தைகள் மீது பாசம் அதிகமாக வந்துவிடும். பகலில் சும்மா இருக்கும் போது அந்தக் குழந்தையைச் சீண்டுவது கிடையாது. ஆனால் இரவு குடித்துவிட்டால் போது பாசம் பொங்கி வழிந்துவிடும், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பிக் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு வந்து முத்த மழையால் நனைத்து முரட்டுத்தனமாய்க் கொஞ்சுவது. அந்தக் குழந்தைத் தூக்கக் கலக்கத்தில் மிரண்டு போய் விழிக்கும். ஒரு வேளை அந்தக் குழந்தை அழுதுவிட்டு அம்மாவை நோக்கிக் கையை நீட்டிவிட்டால் போதும் அவ்வளவு தான், ஏன்டி நீ, எனக்கெதிராகக் குழந்தையை வளர்க்கிறாயா? என்னிடம் வரக்கூடாது என்று சொல்லிக் கொடுத்து வள‌ர்க்கிறாயா? என்று சண்டையை ஆரம்பித்துவிடுவான்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், குடித்தால் தான் வாயையே திறந்து மற்றவர்களிடம் பேசுவார்கள். நண்பர்களிடமே, குடியிருக்கும் இடத்தில் பக்கத்து வீட்டுக்கார்களிடோ, உறவினர்களிடமோ இவர்கள் குடிக்காமல் இருந்தால் எந்தவிதமான நட்பும், உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள், இவ்வளவு ஏன்? முகத்தைக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் ஒரு குவாட்டர் கட்டிங் போட்டு விட்டால் போது அப்போது தான் உலகில் இல்லாத உறவு முறைகளும், பாசங்களும் பொங்கி வழியும். அடுத்தவன் காது அறுந்து ரத்தம் வழிந்தாலும் விடமாட்டார்கள், தொடர்ந்து மொக்கையைத் தான் போடுவார்கள். அப்படியே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுத் தப்பிவிடலாம் என்று நாம் நினைத்தால், அப்போது தான் நீங்க எல்லாம் கோபுரம், என்னைப் போலச் சாக்கடையிடம் பேசுவீங்களா? என்று இல்லாத‌ சென்டிமென்ட் வசனம் எல்லாம் பேசுவார்கள்.

மனைவிடமும், பிள்ளைகளிடமும் கூடப் பேச வேண்டும் என்றால், இவர்களுக்குக் குவாட்டர் உள்ளே போக வேண்டும். குடித்து விட்டு வந்து தான் பிள்ளைகளுக்கு அறிவுரையே அருளுவார்கள். அப்போது மனைவியோ, குழந்தையோ இவருக்கு எதிராக‌ ஏதாவது சொல்லிவிட்டால் போதும், அவர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்து வீட்டையே போர்களாமாக மாற்றி விடுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. இங்கிருந்து வெளிநாடுளுக்குச் சென்று வேலை செய்பவ‌ர்கள் அதிகம், அதிலும் குறிப்பாக அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்குச் செல்பவர்கள் அதிகம். இத்தகைய நாடுகளின் தட்பவெட்பச் சூழ்நிலைகளில் கட்டிட வேலை என்பது மிகவும் கடினமான ஒன்று. பெரிய‌ அளவிலான சம்பளங்களும் இருப்பது இல்லை. அதனால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று மாத விடுமுறைக்கு ஊர்களுக்கு வருவார்கள். வரும் போதே ஏர்போர்ட்லேயே டூட்டிப் பிரி(Duty free) கடைகளில் பாட்டில் வாங்கி அடுக்கிவிடுவார்கள். போதா குறைக்கு விமானத்திலேயும் சரக்கை ஊற்றி விட்டி விடுவார்கள். பல வருடங்கள் கழித்து ஆசையாகக் கணவர் வருகிறார், அப்பா வருகிறார், மகன் வருகிறான் என்று கார் கொண்டு வந்து காத்திருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றவர்கள் முன்பு இந்த டூட்டிப் பிரி கவர்களுடன் தான் தோன்றுவார்கள். 

வந்த ஒரு மாதங்கள் வெளிநாட்டில் குடிக்க முடியவில்லை, அதனால் குடிக்கிறேன் என்று ஒரு காரணத்தைச் சொல்லி நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவன் வந்திருக்கிறான் என்று தெரிந்தால் போதும், அவனைச் சுற்றியே வந்து, தினமும் குடிப்பதற்கு என்றே ஊரில் ஒரு கூட்டம் தயாராக‌ இருக்கும். இவர்களுக்கு மட்டும் வருடத்தில் எல்லா நாட்களும் கொண்டாட்டம் தான். யார் யார் வெளிநாட்டில் இருக்கிறார்கள் எப்போது ஊருக்கு வருவார்கள் என்ற தகவல்கள் உறவினர்களுக்குத் தெரிகிறதோ இல்லையே இவர்கள் கைகளில் அப்டேட்ஸ் சரியாக இருக்கும்.

வெளிநாட்டிக்குத் திரும்பப் போவதற்கு முன்பும் ஒரு மாதமாகக் குடிக்க ஆராம்பித்து விடுவார்கள். இதற்கு இனி இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் என்னால் குடிக்க முடியும் என்று ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டு குடிப்பார்கள். இப்போது நண்பர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள், காரணம் கொண்டு வந்த பணம் அனைத்தும் வந்த ஒரு மாதத்திலேயே குடித்தும், நண்பர்களுக்கு விருந்து வைத்தும் செல‌வு செய்திருப்பார்கள். இப்போது கடன் வாங்கித் தான் குடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் இப்போதைய‌ நிலை என்ன என்பது, ஒரு மாததிற்கு முன்பு இவர்கள் கூடக் குடித்தவர்களுக்குத் தெரியும், எங்கே தன்னிடம் கடன் கேட்டு விடுவார்களோ அல்லது தன்னிடம் செலவு செய்யச் சொல்வார்களோ என்று ஒருவரும் அவர்கள் பக்கம் தலை வைக்க மாட்டார்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து ஊருக்கு வந்திருப்பது மூன்று மாதம் விடுமுறையில் இதில் இரண்டு மாதங்கள் குடித்தே காலத்தைக் கடத்திவிடுவார்கள். மீதம் இருக்கும் ஒரு மாதத்தில் உறவினர்கள் வீட்டில் நடக்கும் காதுக்குத்து, கல்யாணம், இழவு, திருவிழாக்கள் என்று சொல்லியே பாதி நாட்கள் குடித்துக் கொண்டாடி விடுவார்கள். இப்படி விடுமுறைக்கு ஊருக்கு வரும் நபர்கள் குடிப்பத்தை மட்டுமே முழு நேர வேலையாகச் செய்வார்கள். மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ என்று தனியாக நேரம் ஒதுக்க மாட்டார்கள். விடுமுறைக்கு எதற்கு இவர்கள் ஊருக்கு வருகிறார்கள், பேசாமல் அங்கேயே இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று மனைவியும், பெற்றோரும் நினைக்கும் அளவிற்குக் கூத்து அடிப்பார்கள். குடித்துவிட்டு மனைவிடம் போடும் சண்டைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் இவர்கள் மேல் பெரிதான ஈர்ப்பு இருப்பதில்லை.

குடியை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் பல பேர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் திருந்தி விடுவார்கள் என்று பெற்றோர்கள் இவர்களுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிவைத்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் குடித்துக் கொண்டே தான் வாழ்க்கையை ஓட்டுவர்கள். ஒரு கட்டத்தில் உடம்பில் வலு இல்லாமல் வீட்டில் வீழ்வார்கள் அல்லது மரணத்தைத் தழுவுவார்கள். இளம் வயதில் சிறு குழந்தைகளுடன் விதவையாக இருக்கும் பல பெண்களை எங்கள் ஊரில் பார்க்கமுடியும். இன்னும் சிலர் குடிக்காரக் கணவனால் அடி உதை வாங்கிக் கொண்டு எல்லாம் என் தலைவிதி என்று இருப்பவர்கள், இப்போது அதே குடிகாரக் கணவன் உடம்பில் வலு இல்லாமல் மருத்துவமனைகளில் இருக்கும் போது பக்கத்தில் கவனித்துக் கொண்டிருப்பார்க‌ள்.



தன்னுடைய மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்பதை மட்டுமே முக்கியமாகக் கருதும் இவர்கள், தன்னுடன் வாழும் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என்று எவரின் நலனிலோ, மகிழ்ச்சியிலோ, கொண்டாட்டங்களிலோ அக்கறை கொள்வது இல்லை. "மது அடிமை" என்ற ஒற்றைச் சொல்லில் சுயத்தை இழந்து, குடும்பங்களைத் தவிக்கவிட்டு, சமூக அக்கறையில்லாமல் வாழ்வதற்குத் தானே ஆசைப்படுகிறாய்!!!!

.
Related Posts with Thumbnails