Monday, March 31, 2014

சுயத்தை இழப்பது_கிரிக்கெட்டா?.. வீரர்களா?..

பால்ய வயதில் உண்ணும் நேரத்திற்கு உண்ணாமலும், படிக்கும் நேரத்தில் படிக்காமலும் கிராமத்தில் ஊர் ஊராகக் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றியது இப்போதும் மன‌தில் நிழலாடுகிறது. சொல்லும் படியாகப் பெரிய அளவில் விளையாடவும் தெரியாது. ஆனாலும் அதன் மீதான மோகம் அளவிடமுடியாதது. எனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் தான் நாங்கள் விளையாடும் மைதானம் இருந்தது. அந்த மைதானம் அமைந்திருக்கும் இடம் எனது நண்பனுடையது. புல் வளர்ந்துக் காடாக இருந்த இடத்தைத் திருத்தி விளையாடுவது போல் உருவாக்கியது அந்த நண்பனும் நாங்களும் தான்.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடம் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடுவது அந்தக் கிரிக்கெட் மைதானத்திற்குத் தான். எங்கள் நண்பர்களுக்குள் இரண்டு அணியைப் பிரித்துத் தான் பெரும்பாலும் விளையாடுவோம். ஓர் அணியில் நான் இருந்தால் மற்றொரு அணியில் எனது அண்ணன் இருப்பான். இப்படியாகத் தான் இரண்டு அணியிலும் நண்பர்கள் அனைவரின் அண்ணன் தம்பிகள் என்று பிரிந்து நின்று விளையாடுவோம். சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கக் கூட‌ ஒருவரும் இருக்க மாட்டர்கள். ஆனாலும் வெற்றித் தோல்விக்கு அவ்வளவு போராட்டம், சண்டை நடக்கும். உடன் விளையாடுபவர்கள் நம்முடைய‌ அண்ணன் தம்பி மற்றும் நண்பர்கள் என்ற எண்ணம் சிறிதும் இருப்பது இல்லை. நான் இருக்கும் அணி வெற்றி பெற‌ வேண்டும் அது மட்டும் தான் மனதில் ஓடும்.

ஒரு வைய்டு பாலுக்கு அவ்வளவு கடுமையான வாக்குவாதம் நடக்கும். ரன் அவுட்டாக இருந்தால் சொல்லவே வேண்டாம், கட்டி பிடித்துச் சண்டை மட்டும் தான் நடக்காது, மற்ற எல்லாம் நடந்து விடும். இரண்டு அணியில் உள்ளவர்களும் சண்டையிட்டு கூச்சல் போடுவதை எங்களுடன் விளையாடாமல் வெளியில் இருந்து யாராவது பார்த்தால் இவர்கள் இனிமேல் ஒருவர் ஒருவரோடு பேசவே மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். மறுநாளே அணியை மாற்றி விளையாடும் போது நேற்று சண்டை போட்ட இருவரும் சேர்ந்து அடுத்த அணியில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு கூச்சல் இடுவார்கள். இவ்வாறு போடும் சண்டை போலி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அந்த நிமிடத்தில் "ந‌மது அணியின் வெற்றி" என்று ஒன்று மட்டுமே எல்லோர் மன‌தில் ஆழமாக பதிந்து இருக்கும்.

இப்படி சண்டையிட்டு விளையாடும் அணி வெற்றியடைந்து விட்டால் என்ன நடந்துவிடும், பெரிதாக ஒன்றும் இருக்காது. அந்த மைதானத்தை விட்டு வெளியில் வரும் வரை அல்லது வீட்டிற்கு போகும் வரையிலும் எதிர் அணையில் உள்ளவர்களைப் பார்த்து ஒரு குத்தல் பேச்சுடன் கூடிய‌ ஏளன புன்னகை, எங்களுக்குள் ஒரு வெற்றிக்கான புன்னகையின் பகிர்வு மற்றும் மனதிற்குள் ஏற்படும் ஒரு வகையான திருப்தி. இதை அந்த நிலையில் இருந்து அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்டிப்பாக ஒரு பெட் மேட்ச் இருக்கும். பெட் மேட்ச் விளையாட நாங்கள் பெரும்பாலும் பக்கத்து ஊருக்கு தான் போவோம். அதற்கும் காரணம் இருக்கு, சொந்த ஊரில் விளையாடி எதிர் அணியிடம் தோற்றால் அவ்வளவு கவுரவமாக இருக்காது என்பதால் எதிர் அணியின் ஊருக்கே சென்று விடுவது. இங்கும் எதிர் அணியில் விளையாடுபவர்கள் எங்களுடன் பள்ளியில் ஒன்றாக‌ படிப்பவர்களாகத் தான் இருப்பார்கள். பள்ளி நாட்களில் நட்பாக இருந்து ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டு ந‌டப்பவர்களாகத் தான் இருப்போம். ஆனால் இன்றைய‌ இந்தப் பெட் மேட்சில் ஒருவர் ஒருவரை எதிரியாகப் பார்த்து தான் விளையாடுவோம். அப்போது என்னுடைய அணி வெல்ல வேண்டும், நான் நன்றாகப் பவுலிங் மற்றும் பேட்டிங் பண்ண‌ வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருக்கும்.

பெட் மேட்சிக்கான தொகை பத்து அல்லது அதிகமாகப் போனால் இருபது ரூபாய் தான் இருக்கும். அதற்காக நடக்கும் போராட்டம் என்பது பெரிதாக இருக்கும். இப்படியான மேட்சிகளில் நிற்கும் அம்பயர்களின் பாடு பெரும் பாடாக இருக்கும். அவுட் கேட்டு நிற்கும் பவுலரை மட்டும் அல்லாமல் கூடச் சேர்ந்து கூச்சல் போடுபவர்களையும் சமாளிக்க வேண்டும். ஒரு ரன்னிற்கு உயிரே போய்விட்டதாக எண்ணி சண்டையிட்டுக் கொள்வோம். பவுலிங் பண்ணும் போது எதிர் அணியில் பேட்டிங் செய்பவன், பள்ளியில் ஒரே பெஞ்சில் அருகில் இருப்பவனாகத் தான் இருப்பான். ஆனாலும் கொலை வெறியில் பாலை பவுண்ஸ் பண்ணுவதும் நடக்கும். நாங்கள் விளையாடும் இடம் டீவியில் இப்போது கண்பிக்கும் புல் வளர்ந்த சமதளமான பரப்பாக இருக்காது. சரல் மண் கொட்டப்பட்டு மேடும் பள்ளமாக இருக்கும். ஆங்காங்கே வேலியில் கற்றாழை முள்ளும் நட்டு வைத்திருப்பார்கள். அந்த வேலிகள் தான் பவுண்டரி எல்லையாக இருக்கும். ஜான்டி ரோட்ஸ் பிடிக்கும் கேட்சுகளைப் போல‌ முயற்சி செய்து பார்க்கும் போது சரல் மண் முட்டியை சிராய்க்கும். பவுண்டரியை தடுக்க நினைக்கும் போது வேலியில் இருக்கும் கற்றாழை முள் காலை பதம் பார்க்கும்.

நாங்கள் ஊர் ஊராக இதுபோல் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றும் போது, வீட்டில் உள்ளவர்க‌ள் திட்டுவது மட்டுமல்லால் சில‌ சம‌யம் உதையும் தருவார்கள். அர்ச்சனை நடக்கும் போது, அப்பா கேட்கும் முதல் வார்த்தை வெற்றியா?.. தோல்வியா?.. என்று தான். வெற்றி என்றால் திட்டு குறைவாகக் கிடைக்கும், தோல்வி என்றால் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். இப்படித் தோற்பதற்காக ஊர் ஊராகப் போக வேண்டுமா?.. என்று கேவலமாக அம்மா திட்டுவார்கள். இதுவே வெற்றிக்காகப் போராடும் ஊக்கத்தைத் தரும்.

அன்றைக்கு நடக்கும் பெட் மேட்சில் ஜெயித்துவிட்டால் கையில் பட்ட சிராய்ப்புகளும், காலில் ஏறிய முள்ளின் வலியும் துளியும் இருக்காது. அன்று முழுவதும் விளையாட்டின் வெற்றி களிப்பே முகத்தில் இருக்கும். ஆனால் தோல்வி என்றால் வீட்டில் போனவுடன் காயத்திற்கான மருந்தை கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

இவ்வளவு ஏன்!! இப்போதும் கூட ஆபிசில் இருக்கும் நண்பர்கள் அணி பிரித்துக் கிரிக்கெட் ஆடினால் கூட எந்த அளவிற்குச் சண்டை போட முடியுமோ, அவ்வளவு தூரம் சண்டையிடுவதும் நடக்கும். நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து போகும் போது, ஜாலியாக‌ இரண்டு மணி நேரம் விளையாட போகிறோம், அதில் எதற்காக வாக்குவாதம் செய்ய வேண்டும், இன்றைக்கு எந்தச் சண்டையும், எவருடனும் போட கூடாது என்று மனதில் நினைத்து போனாலும் களத்தில் அவ்வாறு இருக்க முடிவதில்லை. பவுலிங் போடும் போது இல்லாத வைய்டை வைய்டு என்று சொன்னால் என்னையறியாமல் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதைத் தடுக்கமுடிவதில்லை. இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் விளையாட்டுக் களத்தில் "வெற்றி" என்ற ஒன்றை மட்டுமே மனம் விரும்பும் என்பதை விளக்குவதற்குத் தான்.

விளையாட்டு மைதானத்தில் களம் இறங்குபவர்களையும், போர்களத்தில் எதிரிகளை எதிர்த்து போராடுபவர்களையும் மட்டும் தான் "வீரன்" என்று அழைக்கிறோம். வீரன் என்பவன் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெற்று தருபவனாகவும் அல்லது அதைப் பெறுவதற்குத் தன்னலம் கருதாமல் போராடுபவனாக‌ மட்டுமே பார்க்க படுகிறான். நம்முடைய பண்டைய‌ இலக்கியங்களில் "வீரன்" என்பதற்குப் பல விளக்கங்களையும் பலரின் வீரச் செயல்களையும் பார்க்க முடியும். போரில் புறமுதுகுக் காட்டும் வீரன் எவ்வாறு அழைக்கப்பட்டான் என்பதையும், வீரப் பண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் எட்டப்பனுக்கான இடம் என்ன என்பதும் அனைவரும் படித்திருப்போம்.



இன்று நடக்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் ஊழல்களையும், பெட்டிங் போன்ற‌ செய்திகளைப் படிக்கும் போது விளையாட்டு என்பது எப்படியான வியாபாரமாக மாறி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதில் விளையாடும் வீரர்களும் தங்களின் சுயத்தை முழுவதும் தொலைத்து நிற்பதாகத் தான் பார்க்க முடிகிறது. தான் நேசிக்கும் விளையாட்டில் வரும் வெற்றியை தான் சுவாசிக்காமல் எதிர் அணிக்கு பணத்துக்காக‌ விலை பேசுகிறான் என்றால் அவனுடைய மனநிலை எத்தகையதாக இருக்கும்?.. இன்றைய சமூகத்தில் மீதான அவனுடைய எண்ணவோட்டம் என்னவாக‌ இருக்கும்?..

கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்ற‌ துறைகளில் யாரெல்லாம் நுழைய கூடாதோ அவர்களின் கூடாரமாகவும், கைப்பாவைகளாகவும் தான் இந்தத் துறைகள் இன்று இயங்குகின்றன‌. இவைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் வாய் மூடி மவுனிக்கிறது.

இந்த ஐபில் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும், ஜெயித்தாலும்...

காசு..
பணம்..
துட்டு..
மணி மணி.. 

கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. பணம் வருகிறது என்றால் சுயம் என்ன?.. ஆடையை இழந்து அம்மணமாக வாழவும் தயார்...


.

Thursday, March 27, 2014

இவங்களே இப்படித்தான்!!! குத்துங்க எசமான் குத்துங்க!!!

1) ஒரு வாரமாகப் புதிதாக வந்திருக்கும் சினிமாக்குப் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியிடம் இன்னைக்குக் கண்டிப்பா நாம ஈவ்னிங் படம் பாக்க போறோம் என்று தலையில் அடிக்காத குறையாகச் சத்தியம் செய்து விட்டு ஆபிஸுக்கு வந்து இருக்கிற வேலையெல்லாம் இழுத்து போட்டு எவ்வளவு சீக்கிரமா செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமா செய்து விட்டு, பிடுங்கிய ஆணியை எல்லாம் ஒரு ரிப்போட்டா போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று மெயிலை திறந்தால் கிளைண்ட் அனுப்பிய மெயில் ஒரு நான்கை ஒபன் பண்ணி பார்க்கமலே "பிளீஸ் டூ நீட் புள்" என்று புராஜெக்ட் மேனேஜர் அனுப்பி வைத்திருப்பார். அதுல ஹை பிரியாரிட்டி கிளிக் செய்யப் பட்டிருக்கும், அது மட்டும் அல்லாமல் ஆபிஸில் இருக்கும் மொத்த பெரிய புள்ளிகளும் சிசியில் வைக்கப்பட்டிருக்கும்.

2) மூணு மாசத்துக்கு முன்பே, என்னோட மனைவின் தங்கச்சிக்குக் கல்யாணம் இருக்கிறது, நான் கண்டிப்பா போகணும், ஒரு வாரமாவது லீவு வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் சொல்லி இருப்போம். அப்பயெல்லாம் மூணு மாசம் கழிச்சி தானே, ஒண்ணும் பிரச்சனையில்லை தாராளமா நீங்க போகலாம் என்று சொல்லிவிட்டு, ஊருக்கு போறதுக்கு ஒரு வாரம் இருக்கும் போது அடுத்த வாரம் நான் கிளைன்ட் மீட்டிங்கு அவுட் ஆப் கண்டிரி போறேன் நீங்க தான் புராஜெக்ட்டை பார்த்க்கணும் என்று சீரியஸா பேசுவாரு. நான் இல்லனா நீங்க தான் புராஜெக்டை பார்த்துகிறீங்கனு மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கிறேன் என்று கொக்கியை போடுவாரு.

3) எல்லா நாளும் ஒன்பது மணி ஆபிஸுக்கு, எட்டே மூக்காலுக்கே போய் லைட் போடுற‌துல தொடங்கி, ஏசியை ஆன் செய்து ரூம் பிரஷ்னெர் அடிக்கிறது வரை நாமளா தான் இருப்போம். அப்பயெல்லாம் மேனேஜர் சீக்கிரம் வர மாட்டார், ஆனா ஒரு நாளு டிராபிக்ல வண்டி மாட்டி ஐந்து நிமிடம் லேட்டா வந்த அன்னைக்குத் தான் நம்மளை தவிர எல்லோரும் சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்து இருப்பார்கள், கிளாஸ் டோரை திறந்து உள்ளே பார்த்தால் மேனேஜர் கூடச் சீக்கிரம் வந்து இருப்பார். ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு முகத்துக்கு நேர் பார்த்துக் குட் மார்னிங் சொல்லுவார். அவர் சொல்லும் விதமே நீ இன்னைக்கு லேட்டா வந்திருக்க என்பதை உணர்த்தும்.

4) கம்பெனி நடத்தும் பார்மேசன் நாளில் மேனேஜர் உட்படப் பெரிய புள்ளிகள் அனைவரும் சொல்லிவைத்தார் போல், ஜப்பான்ல சான்சுகி கூப்டாக, அமெரிக்காவில் பில்கேட்ஸ் கூப்டாக, இவ்வளவு ஏன் இந்தியாவுல பா.சிதம்பரம் அவுங்களும் புராஜெக்ட் பண்ண கூப்பிட்டாக என்று கலர் கலரா சொன்னதை நம்பி மூணு மாசம் கழிச்சி போட போற இங்கிரிமென்ட் கனவு இப்பவே வர தொடங்கிவிடும். இங்கிரிமென்ட் கவர் கொடுக்கும் நாளில் மேனேஜர் ரூம்க்கு போனா, அந்தப் புராஜெக்ட்ல பணம் வர்ல, அந்தக் கிளைன்ட் ஏமாத்திட்டான், எக்னாமிக் கிரைசிஸ், புதுப் புராஜெக்ட் ஏதும் வரலனு கதற, கதற அழவைச்சிட்டுக் கையில் ஒரு குச்சி ஐஸு போல இங்கிரிமென்ட் கவரை தந்து விடுவார்.

5) புதுசா வர‌ போற புராஜெக்ட்டுக்குத் தேவையான பைல்களை மெயிலிலும், டாக்குமென்ட்களைப் பிரிண்ட் போட்டும் பெரிய பெரிய‌ கட்டா கொடுத்து வீட்ல இருந்து ரிபர் பண்ணுங்கனு சொல்லும் மேனேஜர், முடிச்சு கொடுத்த புராஜெக்ட்டுக்கு வர வேண்டிய இன்சன்டிவ் பற்றித் தவறா கூடப் பேச மாட்டார். நாம கேட்கலாம் என்று மேனேஜர் ரூம்க்கு போன ஏவனோ ஒரு புராஜெக்ட் மேனேஜர் பாதியில வுட்டுட்டு போன புராஜெக்ட்டுக்குப் பணம் வர்லனு மேனேஜிங் டைரக்டர் திட்டினார் என்று தலையில் கை வைப்பார்.



6) ஆறு மாசம் பண்ண வேண்டிய புராஜெக்டை, ஆர்வ கோளாரில் மூணு மாசத்துல முடிக்கலாம் என்று மைக்ரோசாப்ட் புராஜெக்ட்ல ஒவ்வொரு நாளும் முடிக்க வேண்டிய டார்கெட்டை பார் சார்ட் போட்டு கிளைண்டுக்கு பிளான் போட்டு கொடுத்துவிட்டு, நீங்க கொடுத்த பிளான் படி ஏன் புராஜெக்ட் முடிக்கவில்லை என்று கிளைன்ட் கேட்கும் போது மட்டும், அப்படியே நம்ம பக்கம் முகத்தைத் திருப்பிக் கேட்க வேண்டியது. நாமளும் வழக்கம் போலச் சர்வர் சரி இல்ல, கிளைன்ட கொடுத்த இன்புட் சரியில்லை, ஆன்சைட்ல இருந்து இன்பார்மேஷன் கரெட்ட வந்து சேரலனு ஒரு பக்க மெயில் டைப் பண்ணனும்.

7) தலை வலிக்குது என்று ஓர் அரை நாள் லீவு வாங்கலாம் என்று மேனேஜர் ரூம்க்குப் போனால், உக்கார வச்சு, நாம பண்ணிய புராஜெக்ட்டுக்குக் கிளைன்ட் கொடுத்திருக்கும் கமெண்டுகளை ஒவ்வொன்னா படிக்க ஆரம்பித்து விடுவார். இது போதாது என்று புராஜெக்ட்டுப் பிளானை வேறு ஓபன் செய்து வைத்துவிட்டு நாம் இன்னைக்கு இவ்வளவு டார்கெட் முடிச்சு இருக்கனும், ஆனா அதுல பாதிக் கூட முடிக்கவில்லை. எப்படி முடிக்கப் போகிறோம், புதுசா பிளான் ஏதும் வைச்சு இருக்கீங்கள?.. இப்படியே போய்ட்டு இருந்தா புராஜெக்ட்டை கிளைன்ட் கேன்சல் பண்ணிடுவான். நீங்க தான் ஏதாவது பண்ணனும் என்று கேப் விடாமல் பேசுவார். நமக்கு வந்த தலைவலி எப்பவோ ஓடி போயிருக்கும். அதுக்கு பதிலா பிபி ஏற துவங்கியிருக்கும்.

8) வெள்ளிக்கிழமை வந்தாலே முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோசமாக இருக்கும். இரண்டு நாளு லீவு இருக்கு நிம்மதியா தூங்கலாம், அவுட்டிங் போகலாம், சினிமா பார்க்கலாம் என்று நினைத்து கொண்டிருப்போம். அன்றைக்கு மதிய நேரத்திற்குப் பிறகு வேலை என்பது ஏதோ கடமைக்கு என்று தான் செய்து கொண்டிருப்போம். அப்பதான் கான்பிரன்ஸ் ரூம்க்கு எல்லோரும் வாங்க என்று மேனேஜரின் மெசேஸ் வரும். என்னவா இருக்கும் என்று உள்ள போனா முகத்தில் அப்படி ஒரு கடுமை இருக்கும். கிளைன்ட் கிட்ட இருந்து இப்ப தான் மெயில் வந்தது, நாம் கொடுத்த பிளான் படி டார்கெட்டை அச்சீவ் பண்ணலியாம், இப்படியே போனால் புராஜெக்ட் கான்டிராக்டை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறான். அப்படி ஒண்ணு நடந்த நீங்களும், நானும் வீட்டுக்கு தான் போகணும் என்று பீதியை கிளப்புவார் மேனேஜர். அப்புறம் என்ன "எல்லா நாளும் எங்கள் வீட்டில் கார்த்திகை" என்று விஜயகாந்த் உடன் கைகோர்த்துப் பாடுவதைப் போல், நாங்களும் "வாரத்தில் ஏழு நாளும் எங்கள் ஆபிஸில் சிவராத்திரி" என்று மேனேஜருடன் கை கோர்க்க வேண்டும்.

9) ஊருக்கு போயிட்டு வரும் போது ஏடிம் கார்ட்ல இருக்கிற மொத்த காசையும் காலி செய்துவிட்டு, பார்சையும் காலியா வைத்துக் கொண்டு எப்படியும் நாளைக்கு மாதத்தின் முதல் தேதி, சம்பளம் கார்ட்ல கிரெடிட் ஆகிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அப்ப தான் அட்மின் கிட்ட இருந்து மெசேஸ் வரும், எதிர்பாரத விதமா இன்னைக்குச் சம்பளம் பேங்க்ல போட முடியவில்லை, நாளைக்குத் தான் போடுவோம், மறுநாள் பேங்க் லீவு அதனால மண்டே தான் உங்களுக்குக் கிரெடிட் ஆகும் என்று. அப்புறம் என்ன வழக்கம் போலக் நல்ல‌ குடும்பஸ்தனா பார்த்து தேட வேண்டியது தான். ஏன்னா அவன் தான் மாச கடைசி ஆனாலும், அக்கவுட்ல பணம் வைத்திருப்பான். அதுல‌ என்ன "நல்ல குடும்பஸ்தன்" என்னைப் போலவும் எப்பவுமே அக்கவுண்டை காலியா வைத்திருக்கும் குடும்பஸ்தன் சில பேரு இருப்பாங்க தானே!!.

10) பொங்கலுக்கு ஊருக்கு போறதுக்கு மூணு மாசத்துக்கு முன்பே இரயில்ல டிக்கெட் புக் பண்ணி வைச்சுட்டு இருந்தா, பொங்கல் வர்றதுக்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி பொங்கலுக்கு நீங்க ஊருக்கு போக வேண்டாம்!! அது முடிஞ்ச பிறகு ஒரு வாரம் லீவு போட்டு போயிட்டு வாங்க, எல்லோரும் ஒரே டைம் லீவு போட்டா புராஜெக்ட்டை ரன் பண்ண முடியாது என்று தோளின் மீது தட்டுவார் மேனேஜர்.

.

Tuesday, March 25, 2014

முளைக்கும் ஞானப்பல்_பிடுங்குவதைத் தவிர வேறு வ‌ழியில்லை!!!

போன வருடத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் எனக்குக் கடுமையான‌ பல்வலி, என்னால் தாங்க முடியவில்லை. கீழ் தாடையின் பின் கடவாய் பல்லில் உள்ள‌ ஈறு நன்றாக வீங்கி குத்தல் வேறு. முகத்தில் ஒரு பக்கம் கன்னம் நன்றாக‌ வீங்கி விட்டது. தாடையின் அடியில் கழலை வேறு கட்டி விட்டது. ஈறு வலி பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துக் காலையில் உப்பால் நன்றாக வாயை கொப்பளித்து விட்டு, ஒரு கப் பால் மட்டும் அருந்திவிட்டு, ஆபிஸுக்குக் கிளம்பிவிட்டேன். என்னால் வாயை கூட நன்றாகப் பிளந்து பேச முடியவில்லை, எதையும் சாப்பிடவும் முடியவில்லை. ஒரு வேளை சிங்கப் பல் முளைக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் எனக்குச் சில வருடங்களுக்கு முன்பே அந்தப் பல் முளைத்து விட்டது. அதனால் எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை. எனக்குச் சொத்தை பல் இதுவரையிலும் எதுவும் இல்லை. அதனால் அது சம்பந்தமான பிரச்சனையாகவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் தாங்க முடியாத வலி. நேரம் ஆக ஆக வலி அதிகமாகி கொண்டே இருந்தது.

ஆபிஸில் உள்ள‌ நண்பர்கள் ஒவ்வொருவரும் மருத்துவ மனைக்குப் போகச் சொன்னார்கள். நான் இருக்கும் ஹைதிராபாத் ஏரியாவில் எந்தத் திசையில் திரும்பினாலும் பல் மருத்துவமனைகளைத் தான் பார்க்க முடியும். எந்த மருத்துவமனைக்குப் போவது என்பதில் எனக்கும் நண்பர்களுக்கும் குழப்பம், நானும் இங்குள்ள பல் மருத்துவமனைகளுக்குப் போனது கிடையாது.

என்னுடைய கன்னம் வீங்கி இருப்பதும், நான் வாய் திறக்க முடியாமல் பேசுவதையும் பார்த்த‌ தெலுங்கு நண்பர் ஒருவர், நீங்க என்னுடன் வாங்க, பக்கத்தில் இருக்கும் பல் மருத்துவமனைக்கே போய் விடலாம் என்றார். சரி என்று நானும் அவருடன் டூவிலரில் அமர்ந்தேன். நாங்கள் கிளம்பிய நேரம் மதிய நேரமாக‌ இருந்ததால் பெரும்பாலன கிளீனிக்குகள் மூடி இருந்தன. கொஞ்ச தூரம் சென்ற பின்பு, ஒரு டென்டல் கிளீனிக் திறந்திருப்பதைப் பார்த்தோம், வண்டியை பார்க் செய்துவிட்டு கிளீனிக்குள் நுழைந்தோம். முன் அறையிலேயே, கம்யூட்டர் வைத்த மேஜையின் முன்பாக‌ பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்தவுடன் மே ஐ ஹெல்ப் யூ சார் என்றார். நண்பர் என்னைக் காட்டி, இவருக்கு பல்வலி டாக்டரை பார்க்க வேண்டும் என்றார். பெயர், வயது, முகவரி, மொபைல் எண் என்று அனைத்தையும் கேட்டு விட்டு, முந்நூறு ரூபாய்க் கொடுங்கள் என்றார். பணத்தைக் கொடுத்தவுடன், அதை வாங்கி மேஜையில் போட்டு மூடிவிட்டு, பிரிண்டரை ஆன் செய்து என்னுடைய தகவல்களை, அவர்கள் கிளீனிக் பெயரிட்ட பேப்பரில் பிரிண்ட் செய்து, ஒரு பைலில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டார், என்னைச் சைகைக் காட்டி பின்னால் வர சொல்லி, பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

நானும் உள்ளே நுழைந்தேன், அங்கு முப்பது வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இருந்தார், வெள்ளை கோட் மாட்டியிருப்பதால் அவர் தான் டாக்டராக இருக்க முடியும் என்று எண்ணிகொண்டேன். அவர் முன்பாக இருந்த நாற்காலியில் என்னை அமர சொன்னார். நானும் அமர்ந்தேன், என்ன பிரச்சனை என்பதைக் கேட்டவர் கையில் ஒரு போர்க் போன்ற இரும்பு கத்தி ஒன்றையும், சிறிய டார்ச் லைட்டையும் கையில் எடுத்து வாயை பிளக்க சொன்னார். என்னால பெரிய அளவில் வாயை திறக்க முடியவில்லை. அவர் எழுந்து நின்று போர்க் போன்ற கத்தியால் தாடையை அழுத்தி பார்த்து விட்டு, அணிந்திருந்த கோட்டின் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து எவரிடமோ தெலுங்கில் பேச தொடங்கினார். அவர் பேசியதை வைத்து பார்க்கும் போது, அவருடைய சீனியராகத் தான் இருக்க வேண்டும். பேசி முடித்து விட்டு சார் உங்களின் பல்லுக்கு ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும். இப்போது சீனியர் டாக்டர் இங்கு இல்லை, ஈவ்னிங் வந்தால் ஸ்கேன் எடுத்துவிட்டு சீனியர் டாக்டரிடம் நீங்கள் கன்சல்ட் பண்ணலாம் என்றார். மேலும் உங்க வலிக்கு ஒரு மாத்திரை எழுதியிருக்கிறேன், ஒன்று மட்டும் போடுங்கள், நான்கு மணி நேரம் உங்களுக்கு வலி இருக்காது என்றார். என்ன பிரச்சனை என்று கேட்டேன், அதற்கு அவர் நம்ம ஊரு படங்களில் வரும் டாக்டர்களில் டயலாக் ஆன, எதுவும் ஆபரேசன் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும் என்பது போல், ஸ்கேன் எடுத்தால் தான் எதுவும் சொல்ல முடியும் என்றார். நானும் வெளியே வந்து விட்டேன்.

என் பின்னாலேயே முன் அறையில் இருந்த‌ பெண்மணியும் வந்தார், வந்தவர் மாத்திரை எழுதிய சீட்டை கொடுத்துவிட்டு, ஈவ்னிங் எப்ப சார் வருவீங்க, அப்பாயின்மென்ட் போட்டு வைக்கவேண்டும் என்றார். ஐ வில் டிரை டு கம் யேர்லி என்று சொல்லிவிட்டு நண்பனுடன் நடந்தேன். எல்லா டாக்டர்களும் எழுதும் புரியாத மருந்து சீட்டு போல் இல்லாமல் மாத்திரையைப் படிக்க முடிந்தது. "கேட்ரால்" (ketorol) என்று மாத்திரையின் பெயர் எழுதியிருந்தது, பல்வலி என்று சொன்னவுடன் எனது நண்பர் ஒருவரும் இந்த மாத்திரையின் பெயரை சொல்லித்தான் வாங்கிச் சாப்பிட சொல்லியிருந்தார். டாக்டரின் கன்சல்ட் இல்லாமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம் என்று மற்ற நண்பர்கள் சொல்லியதால் இங்கு வர வேண்டியதாயிற்று.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரையை வாங்கி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன். ஒரு மாத்திரையைப் போட்ட சிறிது நேரத்திலேயே பல்வலி குறைந்து விட்டது,. ஆனால் பல் ஈறுகளின் வீக்கம் குறையவில்லை. காலையில் இருந்து ஏதும் சாப்பிடத‌தால் கடுமையான பசி வேறு, ஒய்ப் கொடுத்த பயிறு கஞ்சியைக் குடித்து ஒரு தூக்கத்தைப் போட்டேன். சரியா நான்கு மணி நேரம் தான் அந்த மாத்திரை வேலை செய்தது. மாலை ஆறு மணியளவில் மீண்டும் கடுமையான பல்வலி ஆரம்பித்தது. ஒய்ப், காலையில் நான் சென்ற‌ டென்டல் கிளீனிக்கு திரும்பவும் போகலாம் என்றார். எனக்கோ, சாதாரண‌ பல்வலிக்கு ஸ்கேன் என்பது கொஞ்சம் ஓவராகப் பட்டது. பக்கத்தில் இருக்கும் வேறு கிளீனிக் போகலாம் என்று நான் சொன்னேன், அவரும் சரி என்று இருவரும் கிளம்பினோம்.

நான் வசிக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மெயின் ரோட்டில் குறைந்தது பத்து டென்டல் கிளீனிக்காவது இருக்கும். நாங்கள் இருவரும் நடந்து மெயின் ரோட்டை அடைந்தோம். அந்த ரோட்டின் முதல் வரிசையிலேயே இருந்த கடைகளில் முதல் மாடியில் வெள்ளை நிற போர்டில் புளுக் கலரில் எழுதப் பட்ட டென்டல் கிளீனிக்கை நோக்கி நடந்தோம். அந்தக் கிளீனிக் உள்ளே நுழைந்தவுடன் ரிசர்ப்சன் என்று எதுவும் இல்லை, விசாலமான‌ ஒற்றை அறை கொண்டது அதில் பாதியில் ஒரு ஸ்கீரின் தொங்க விடப்பட்டு, அந்த அறை இரண்டாகப் பிரிக்கப் ப‌ட்டிருந்தது. ஸ்கிரீன் முன்னால் ஒரு சாய்வு நாற்காலியில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் மட்டும் இருந்தார். அவர் முன்னால் ச‌ற்று உயரம் அதிகமான ஸ்டூல் போன்ற இருக்கை இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு ரோபட்டின் கை போன்ற ஒரு மெஷின் இருந்தது. எங்களைப் பார்த்தவுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் எழுந்து, ஐ அம் டாக்டர் ... என்று கை கொடுத்து விட்டு, ஸ்டூல் போன்று எதிரில் இருந்த‌ இருக்கையில் என்னை அமர சொன்னார்.

அவர் சொன்ன பெயரும், வெளியில் தொங்கவிடபட்டிருந்த போர்டில் இருந்த பேரும் ஒன்றாக இருந்தது. என்ன பிரச்சனை என்று என்னைக் கேட்டார், நானும் சொன்னேன். என்னோட கன்சல்டன் பீஸ் முந்நூறு ரூபாய் சார், அப்புறமா கொடுங்க என்று சொல்லிவிட்டு, ஒரு வெள்ளை நிற‌ அப்பிளிக்கேசன் தாளில் என்னுடைய பெயர், வயது, முகவரி, மொபைல் எண் என்று எழுதத் தொடங்கினார். முன்பு எப்போதாவது இது போல் பல்வலி வந்திருக்கிறதா, அடிக்கடி வருமா என்ற‌ கேள்விகளையும் கேட்டு வைத்தார். நான் எல்லாவற்றிற்கும் இல்லை ஒற்றை வரியில் பதில் சொன்னேன். இவரும் கையில் கத்தி போன்ற இரும்பை வைத்துக் கொண்டு வாயில் நுழைத்து டார்ச் லைட் கொண்டு பார்த்தார். பரிசோதனைச் செய்துவிட்டு, உங்களுக்கு ஞானப்பல்(Wisdom Tooth) தான் முளைக்கிறது, ஆனால் அதைச் சரியாக வெளியே வர விடாமல் தாடையில் உள்ள தசை தடுக்கிறது அதனால் தான் உங்களுக்கு வலியும் இருக்கிறது, எதற்கும் ஒரு சிறிய‌ எக்ஸ்‍ரே எடுத்து பார்த்து விடலாம் என்றார். அந்தக் கிளீனிக்கில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் இவர் எக்ஸ்ரே தானே சொல்லுகிறார் என்று பக்கத்தில் அமர்ந்திருந்த ஒய்ப்பை பார்த்துவிட்டு சரி என்று தலையாட்டினேன். சார் எக்ஸ்ரேவிற்கு ஒரு நூறு ரூபாய் தனியாக அப்புறம் பே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு ரோபோ கை போன்று இருந்த மெசினை எனது பக்கமாகக் கொண்டு வந்து வாயினுள் ஒரு சிறிய சதுர வ‌டிவ பிலிம் அட்டையை வாயில் திணித்தார். என்னால் வாயையே முழுமையாகத் திறக்க முடியவில்லை, அதில் இந்தச் சதுர அட்டையை ஈறு வீங்கி இருக்கும் பக்கமாக அழுத்தும் போது வலி தாங்க முடியவில்லை. நான் அ என்று கத்தினால் பக்கத்தில் இருக்கும் ஒய்ப் ஆ என்று கத்துவார், அதற்குப் பயந்தே வலியை சமாளித்தேன். ஒரு வழியாக எக்ஸ்ரே எடுத்துக் கழுவி விட்டார்.

நான் முதல் முறையாகப் பல்லுக்கான எக்ஸ்ரேவை இப்போது தான் பார்க்கிறேன். கடைவாய் பல் இரண்டு மட்டும் தான் அதில் தெரிகிறது. வேறு எதுவும் எனது கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது டாக்டர் என்னுடைய சீட்டின் பின் புறத்தில் படம் வரைய தொடங்கினார். சார் உங்க ஞானப்பல் இப்படித் தான் முளைக்க வேண்டும் என்று ஒரு படம் வரைந்தார், ஆனால் உங்கள் பல் இப்படி முளைக்காமல் உள் நோக்கி முளைக்கிறது என்று இன்னொரு படம் வரைந்தார். அதில் முன்பு வரைந்தற்கு எதிர் திசையில் பல்லின் நீளத்தை நீட்டி வரைந்திருந்தார். இப்படி நீட்சியாக இருக்கும் பல் தாடையில் உள்ள தசையைச் சேதப் படுத்துகிறது, அதனால் தான் உங்களுக்கு வலி அதிகமாக இருக்கிறது என்று தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் சொல்லி முடித்தார்.

இதற்கு என்ன தான் தீர்வு என்று கேட்டேன், அந்தப் புதிதாக‌ முளைக்கும் ஞானப்பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் டாக்டர். இப்போதே பல்லைப் பிடுங்க முடியாது, உங்களின் வலியை முதலில் குறைக்க வேண்டும் அதன் பிறகு தான் பல்லைப் பிடுங்க வேண்டும், நான் இப்போதே சில மாத்திரைகளை எழுதி தருகிறேன், அவைகளைச் சாப்பிடுங்கள், வலி முழுமையாகக் குறைந்த பிறகு வாருங்கள் பிடுங்கி விடலாம், ஒரு பல் பிடுங்குவதற்கு நான் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் சார்ஜ் செய்வேன் என்றும், அப்புறம் உங்கள் ப‌ற்களில் கறைகள் இருக்கின்றது அதை இப்போதே கிளீன் செய்கிறேன், அதற்கும் ஓர் அறுநூரு ரூபாய் சார்ஜ் ஆகும் என்று சொல்லிக்கொண்டே, என் பதில் எதையும் எதிர்பார்க்காமல் சீட்டில் மருந்தை எழுத தொடங்கினார். நானும் ஒய்ப்பும் என்ன செய்வது என்று தெரியாமல் விளித்துக் கொண்டிருந்தோம்.

மருந்து எழுதிவிட்டுத் தலையை நிமர்த்த டாக்டரிடம், அந்தப் பல்லைப் பிடுங்காமல் ஏதும் செய்ய முடியாதா? என்று கேட்டேன். இல்லை சார், உங்களுக்கு நிரந்தரமான தீர்வு வேண்டுமானால் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் டாக்டர். அவர் சொல்லும் போது, இப்போது இருந்த வலி மறந்து, இனி பல் பிடுங்கினால் வரும் வலியை இப்போதே நினைக்கத் தொடங்கிருந்த‌ என்னைப் பார்த்து, எதுக்கு சார் நீங்க பயப்படுறீங்க, நான் இன்றைக்குக் கூட ஒருவருக்குப் பல் பிடுங்கியிருக்கிறேன், நாளைக்கும் எனக்கு ஓர் அப்பாயின்மென்ட் இருக்கு, திஸ் இஸ் ஜஸ்ட் லைக் தட் சர்ஜரி என்றார்.

சற்றும் யோசிக்காமல், டாக்டர் நான் இந்த வார இறுதியில் ஊருக்குப் போகிறேன், அங்குப் போய்ப் பல்லைப் பிடுங்கிக் கொள்கிறேன், நீங்கள் இப்போது வலியைக் குறைப்பதற்கான‌ மருந்து மட்டும் எழுதிக் கொடுங்கள் என்றேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன், இல்ல சார் நீங்க நினைப்பது போல் பெரிய சர்ஜரி இல்லை என்றார். நானும் விடாமல் "ஆத்தா வையும் வீட்டுக்குப் போகனும், காசு கொடு" என்பது போல் பேசியதைப் பார்த்து விட்டு சார் அப்படினா நீங்க ப‌ல்லை கிளீன் மட்டும் பண்ணிக்குங்க என்றார். இல்ல டாக்டர் என்னால் வலியைக் கட்டுபடுத்த முடியவில்லை, இப்போது நீங்கள் கிளீன் செய்தால் என்னால் தாங்கிக்கொள்ள‌ முடியாது. வலி குறைந்த பிறகு நாளைக்கு வேண்டுமானால் வருகிறேன் என்றேன். ஒரு வழியாக "நாளைக்கு வாருங்கள்" என்று ஐந்நூரு ரூபாய் பில்லை போட்டுக் கையில் கொடுத்து விட்டு, மருந்து சீட்டையும் கொடுத்தார்.

கையில் இருந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு மருந்து சீட்டை வாங்கிக் கொண்டேன், மருந்து சீட்டில் இரண்டு மாத்திரைகள் எழுதியிருந்தார். வெளியில் வந்து யோசித்துப் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் நான்கு மணிநேரம் வலி தாங்கும் மாத்திரையைச் சாப்பிடலாம், இந்த மாத்திரைகளை வாங்க வேண்டாம் என்று ஒய்ப் சொல்ல நானும் சரி என்று, வீட்டிற்குத் திரும்பினோம். போகும் வழியில் மொபைல் போன் அடித்தது, எடுத்து யாரென்று கேட்டால் மதியம் போய் இருந்த கிளீனிக்கில் இருந்து கால் பண்ணுறோம், எப்ப சார் ஸ்கேன் எடுக்க வர்றீங்க என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்று மனதிற்கு நினைத்துக் கொண்டே பல்வலி சரியாகிவிட்டது என்று சொல்லி மொபைலை கட் செய்தேன்.

ஊரில் இருக்கும் அம்மா முதற்கொண்டு எவரிடமும் இதுவரையிலும் எனக்குப் பல்வலி என்று சொல்லவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் போனைப் போட்டு அம்மாவிடம் சொன்னேன், அவர்கள் கடவாய் பல் முளைக்கும் போது இரண்டு நாட்கள் வலி இருக்கத் தான் செய்யும், அதற்காகப் பல்லை எல்லாம் பிடுங்க கூடாது என்றும், இந்த வயதில் பல்லைப் பிடுங்கினால் தலைவலி வரும் என்று சொல்லி, சில பாட்டி வைத்தியங்களையும் சொன்னார். மிதமான வெந்நீரில் உப்பு போட்டு அடிக்கடி வாய்க் கொப்பளிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, அப்படியே பல் வலி அதிகமாக இருந்தால், இரண்டு நாட்கள் ஆபிஸில் லீவு சொல்லிவிட்டு இங்கு வந்து விடு, நம்ம ஊரில் உள்ள டாக்டரிடம் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

இரவு ஒரு மாத்திரையைப் போட்டுவிட்டுத் தூங்கிவிட்டேன், இடையில் சரியாக அதிகாலை ஒரு மணியளவில் திரும்பவும் பல் வலி, உடனே இன்னொரு மாத்திரையை எடுத்துப் போட்டுவிட்டு தூங்கி விட்டேன். காலையில் எழுந்த போது பெரிய அளவில் வலி இல்லை, ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் வீங்கய படியே இருந்தது. வாயின் உள்ளும் பல் ஈறு வீங்கி இருந்தது. அம்மா சொன்ன படியே வெந்நீரில் உப்பு போட்டு வாயைக் கொப்பளித்து, பல்லை துலக்கினேன். நேரம் ஆக ஆக வலி திரும்பவும் அதிகரித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, நேற்று என்னோடு வந்த தெலுங்கு நண்பரிடம் இருந்து போன் வந்தது. இப்ப பல் வலி எப்படி இருக்கிறது, திரும்பவும் அந்தக் கிளீனிக்கு போனீங்களா? ஸ்கேன் எடுத்தாதீர்களா? என்று கேட்டார். நான் நேற்று நடந்தவைகளைக் கூறினேன். அவர் உடனே, ஸ்டீபன் நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம், நாம் கோட்டியில்(கோட்டி என்பது ஹைதிராபாத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம்) இருக்கும் பெரிய டென்டல் கிளீனிக்குப் போகலாம், நீங்க ரெடி ஆகுங்க, நான் உங்களை வீட்டில் வந்தே அழைத்துச் செல்கிறேன் என்றார். திரும்பவும் முதல்ல இருந்தா!!! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினேன். ஒய்ப்க்கு நான் போவதில் விருப்பம் இல்லை, ஆனால் நானும், என் முகமும் இருக்கும் நிலையைப் பார்த்துவிட்டுப் போங்கள் என்றார்.

அந்தப் பெரிய‌ பல் மருத்துவமனையின் நுழைவாயிலை பார்த்தவுடனே, இது நமக்கான மருத்துவமனை இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். ஆனால் கூட்டி வந்த நண்பரின் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாமல் உள்ளே நுழைந்தோம். "நாங்க இருக்கோம் வாங்க" என்று இப்போது அழைக்கும் மருத்துவமனைகளின் தோரனை அங்கேயும் இருந்தது. வரவேற்பறையில் என்னுடைய முழுத் தகவல்களையும் சேகரித்துவிட்டு நானூறு ரூபாய் என்றார்கள். அதைக் கொடுத்தவுடன், ரூம் நம்பர் நான்கில் போய் டாக்டரை பாருங்கள் என்றார்கள். நான் அங்குப் போவதற்குள் என்னுடைய பைல் டாக்டரின் கையில் இருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டுவிட்டு, வரிசையாகச் சில டெஸ்ட்களை எழுதினார். முதலில் ஸ்கேன் எடுக்க வேண்டும், அப்புறம் பல்லை கிளீன் செய்ய வேண்டும், கடைசியாக‌ இரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொன்றாக முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். என்னைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லாத குறையாக ஒவ்வொரு இடமும் வழி காட்டினார்கள்.

முதலில் ஸ்கேன் எடுத்துவிட்டார்கள், பிறகு இரத்த பரிசோதனைக்குத் தேவையான இரத்தையும் எடுத்துவிட்டு, பல்லை கிளீன் செய்யும் அறைக்கு அனுப்பினார்கள். அதிக அழுத்தத்தில் கெமிக்கலை பீய்ச்சி அடித்துப் பல்லை கிளீன் செய்யும் போது மட்டும் அதிகமான கூச்சம் இருந்தது. கிட்ட தட்ட அரைமணி நேரம் நடந்து. எல்லாம் முடித்த பிறகு அனைத்து ரிப்போட்டும் டாக்டரின் அறைக்குச் சென்றுவிட்டது. ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து என்னிடம் காட்டி வலதுப் பக்கம் கடவாயில் முளைத்திருக்கும் இரண்டு பல்லும் தாடையில் உள்ள தசையை அழுத்துகிறது, எனவே இரண்டு பல்லையும் பிடுங்கிவிடலாம் என்றார். நேற்று சென்று வந்த‌ டாக்டர் ஒரு பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னதுக்கே தலைதெறிக்க ஓடி வந்தேன் இங்க என்னடானா இரண்டு பல்லைப் பிடுங்க வேண்டுமாம், டாக்டரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.



இரண்டு பல்லையும் பிடுங்கிவிட்டு, அதில் தசைகளை அழுத்தாத அளவு புதுப் பல்லை பிளான்டிங் செய்துவிடலாம் என்றார். பிளான்டிங் முறையை எனக்கு அவர் விளக்கியதில் இருந்து நான் புரிந்து கொண்டது இது தான், என்ன வென்றால் முதலில் காங்கிரிட் போட வேண்டும் பின்பு அதில் மேற்பூச்சு பூச வேண்டும் பின்பு பட்டி பார்க்க வேண்டும் கடைசியாகச் சில மாதங்கள் கழித்து வர்ணம் பூச வேண்டும் என்பதை மெடிக்கல் டெக்னிக்கல் வார்த்தையில் சொன்னார்.

ஒவ்வொன்றுக்கும் ஆகும் செலவையைம் பட்டியல் இட்டார், பல்லைப் பிடுங்கி விட்டு, புதுப் பல்லை நடுவதற்கு(Dental implant surgery) 15000 ரூபாய் ஆகும் என்றும், பின்பு ஓர் ஆறு மாதம் கழித்து பல்லின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்ய‌(Implant restoration) இன்னும் ஒரு 15000 ரூபாய் என்றும், அப்புறம் கடைசியாக ஒரு வருடம் கழித்து வேக்சிங்(Waxing) செய்வதற்கு 10000 ரூபாய் ஆகும் என்றும், இந்த மூன்றையும் செய்து விட்டால் உங்கள் பல்லுக்குப் பிரச்சனை என்பதே வராது என்றும் சொன்னார்.

வலி குறைவதற்கு மாத்திரை எழுதி இருக்கிறேன், தினமும் வாயை கொப்பளிக்க ஒரு மொத் வாஷ் லிக்யூர் எழுதியிருக்கிறேன். நாளைக்கு ஆபரேசனுக்கு டைமை ரிசர்ப்சனில் புக் செய்து கொள்ளுங்கள் என்று என்னைப் பார்த்தார்.

இவரிடமும் பல் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லையா என்று அப்பாவியாகக் கேட்டேன். பெர்மனட் சொலுசன் வேண்டுமானால் நீங்கள் நான் சொன்ன முறையைக் கையாளுவது தான் நல்லது என்று முடித்தார். அதற்கு மேல் அங்கு இருக்க எனக்கு விருப்பம் இல்லை. வரவேற்பறையில் மொத்தமாக இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் பில் போட்டுக் கையில் கொடுத்தார்கள். நாளைக்கு மதியத்திற்கு மேல் தான் ஆபரேசன் தியேட்டர் காலியாக உள்ளது, உங்களுக்கு ஓகே வா சார் என்று ஒரு பெண்மணி கேட்டார், "நான் இங்குத் திரும்ப வந்த தானே நீங்க ஆபரேசன் பண்ணுவீங்க" என்று மனதிற்குள் நினைத்து விட்டு, அப்படியே புக் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னுடைய பைலை வாங்கிக் கொண்டு வெளியில் திரும்பி நடந்தேன். அப்போது என்னுடன் வந்த‌ நண்பன் இங்கேயே மெடிக்கல் ஷாப் இருக்கிறது என்றார். ஓ அந்த வருமானம் கூட அடுத்தவனுக்குப் போகக் கூடாதா? என்று இங்கேயே வைத்திருக்கார்களா என்று மனதில் நினைத்துக் கொண்டு மெடிக்கல் ஷாப்பை நோக்கி நடந்தோம்.

இரண்டு நாட்கள் என்னைப் படுத்திய பல்வலி மறுநாள் காலையில் தூங்கி எழும் போது துளியும் இல்லை. கன்னத்தில் இருந்த வீக்கமும் மறைந்திருந்தது. அதற்கு மேலும் நான் பல்லைப் பிடுங்க போயிருப்பேன் என்று நினைக்கிறீங்களா?... 

எனக்கு இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, பல் சம்பந்தமாக‌ இதுவரையில் எனக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. இரண்டு நாட்கள் முன்பு நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த சிக்கன் பிரியாணியில் உள்ள லெக் பீஸை கடிக்கும் போது, அந்த எலும்பில் உள்ள மஜ்ஜை பல்லின் இடையில் அடைத்துக் கொண்டு வலிக்கிறது. இதற்காக இங்க உள்ள டாக்டரிடம் போனால் என்ன ஆகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

.

Thursday, March 20, 2014

பயண அனுபவமும், தொ(ல்)லைக்காட்சித் தொடர்களும்..

எத்தனை வாட்டி ஊருக்கு வந்தாலும் ஒரு முறை கூடக் கன்னியாகுமரிக்கு போக முடியல. தம்பி டேய் நீயும் இந்த வாட்டி இங்க தானே இருக்கிற நாம் எல்லோரும் கன்னியாகுமரிக்கு போய்ட்டு வந்திடலாம். ஸ்கூல் படிக்கும் போது அங்க போனது, அதுக்க அப்புறம் இன்னும் ஒரு தடவ கூடப் போகல. சென்னையில இருக்கேன் தான் பேரு, ஆனா பாப்பாவை இன்னும் ஒரு தடவை கூடப் பீச்சுக்கு கூட்டிட்டு போகல. கொஞ்சம் பெருசா வளர்ந்த பிறகு போகலாம் என்று சொல்லியே நாட்கள் ஓடிவிட்டது என்று அக்கா என்னிடம் அவளுடைய ஆதங்கத்தை வைத்தாள்.

நானும் இங்க தான் இருக்கிறேன் என்று தான் சொல்லிக்கணும், கல்யாணம் முடிஞ்ச அப்புறம், ஒரு தடவையாவது கன்னியாகுமரிக்கு போகனும் என்று நினைப்பேன், ஆனா அதுக்கான வாய்ப்பு அமையவே இல்லை. தம்பி உனக்கு ஒரு வாரம் லீவு இருக்கு தானே, இந்த வாட்டி நாம குடும்பத்தோட கன்னியாகுமரிக்கு போயிட்டு வந்திடலாம் என்று அண்ணனும் தன்னுடைய ஆசையையும் என்னிடம் வைத்தான்.

அண்ணனும், அக்காவும் அவங்களுடைய ஆசைகளை என்னிடம் சொல்லியாயிற்று, இனி அதைச் செயல்ப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னுடையது மட்டும் தான். இவங்க எல்லோரையும் வீட்ல இருந்து நேரத்திற்குக் கிளப்பி, பார்க்க வேண்டிய இடம் எல்லாம் பார்த்துவிட்டு பொழுது சாய்வதுக்கு முன்பு கூட்டி வர முடியுமா? என்பது தான் என்னுடைய மனதில் தோன்றியது. மூணு புராஜெக்டை ஒரே நேரத்தில் தந்து மூணையும் நீ தான் பார்க்கணும் என்று ஆபிஸில் சொன்னா கூடப் பார்த்து விடலாம். ஆன அக்கா, அண்ணன், என்னுடையது என்று மூன்று குடும்பத்தையும் வெளியில் கூட்டி போயிட்டு வார்றதுனா சும்மாவா. ஒரு துணிக்கடைக்குப் போனாலே ஒம்பது மணி நேரம் ஆக்குறவங்க, இப்ப என்ன செய்யப் பொறாங்களோ என்று அடிவயிறு கலங்க ஆரம்பிச்சுது.

மனதில் இருந்ததை ஒரு பக்கம் ஓரம் கட்டி வச்சுட்டு, அதுக்கு இப்ப என்ன? நளைக்கே போயிடலாம் என்றேன்.

அம்மா, அப்பா நீங்களும் எங்க கூட வாங்க என்று அக்கா கூப்பிட்டது தான் தாமதம், என்னால ரெம்ப நேரம் வண்டியில உக்கார முடியாது, எனக்கு முதுகு வலிக்கும் என்று அம்மா ஒதுங்கி அப்பாவை பார்த்து சிரிக்க, அப்பாவும் இங்க இருக்கிறா ஆடு, கோழி எல்லாம் யாரு பாக்குறது, நீங்க போயிட்டு வாங்க என்று அப்பாவும் மெல்ல நகர்ந்தார்.

காலையில வீட்ல சாப்பிட்டு விட்டே கிளம்பலாம், மதிய சாப்பாட்டிற்கு வீட்டில் இருந்து ஏதாவது பண்ணி சாப்பிட‌ கொண்டு போனால் நல்லா இருக்கும் என்று அத்தான் ஆரம்பித்தார்கள்.

அதுக்கென்ன "பிரியாணி" பண்ணிட்டால் போச்சு என்று அண்ணி சொல்ல, நானும் பண்ணுறதே பண்ணிறீங்க மட்டன் பிரியாணியாய்ப் பண்ணினால் நல்லா இருக்கும் என்று ச‌ப்பு கொட்டினேன்.

ஆமா, காலையில எழுந்து பாப்பாக்களை ரெடி பண்ணுறதே பெரிய வேலை, இதுல மட்டன் பிரியாணியாம் மட்டன் பிரியாணி. வேணும்னா தயிர் சாதமும், புளி சாதமும் கிண்டலாம் என்று சொல்லி சிரித்தார் அக்கா.

நீங்க கிண்டுற தயிர் சாதமும், புளி சாதமும் சாப்பிடுவதற்கு, அங்க ரோட்டோரத்துல இருக்குற க‌டையிலேயே சாப்பிட்டுவிடலாம், அதனால காலையிலே சீக்கிரமா கிளம்புறதுக்குள்ள வழிய பாருங்க, ஒன்பது மணிக்கு எல்லாம் கார் வீட்ல நிற்கும் என்றான் அண்ணன்.

மறுநாள் காலை ஒன்பது மணி! 

என் வீட்டு அம்ம‌ணி அதுவரையிலும் அயன் பண்ணி கொண்டிருந்த‌ சுடிதாரை தூக்கி கொண்டு அவசர அவசரமாகப் பாத்ரூம்க்கு ஓடினார். குளிச்ச தலையுடன் ஒரு பக்க தோளில் தொங்க‌ போட்டிருந்த சட்டையை எடுத்து மெதுவாக அயன் பாக்ஸில் வைத்து தேய்க்க தொடங்கினார் அத்தான்.

வீட்டின் ஹாலில், தான் முழுவதும் கிளம்பி கையில் இட்லி தட்டுடன் அம்மணாம ஓடும் பாப்பாவை துரத்தி கொண்டு ஓடினார் அண்ணி. வீட்டின் கொல்லை புறத்தில், குத்த வைத்து உக்காந்திருக்கும் பாப்பாவை "சீக்கிரம் சீ போ" இல்லைனா உன்னை விட்டுட்டு நாங்க ம‌ட்டும் கார்ல போயிடுவோம் என்று மிரட்டி கொண்டிருந்தார் அக்கா.

இப்பவே மணி ஒன்பது தாண்டியாச்சி, இதுக்குத் தான் நான் நேத்தே வர மாட்டேன் என்று சொன்னேன், ஓர் இடத்துக்கு நேரத்துக்குப் போனாமா வந்தமானு இருக்கணும், ஆனா இவங்களைக் கூட்டிட்டு சொன்ன நேரத்திற்கு வரவும் முடியாது, போகவும் முடியாது என்ற முனகலுடன் கையில் இரண்டாவது காப்பியை கொண்டு தந்தார் அம்மா.

பெரிய கார்ல தானே போறீங்க, பக்கத்து வீட்டு பெரியப்பாவையும், பெரியாம்மாவையும் உங்க கூட வர சொல்லியிருக்கேன். அவங்க கரெட்டா கிளம்பி திண்ணையில் உக்காந்து இருப்பாங்க, காப்பியை குடிச்சுட்டு, நீ போய் அவங்களை வெயிட் பண்ண சொல்லு என்றார் அப்பா.

வீட்டில் நடக்கும் வேலைகளைப் பார்த்தால் இப்ப எல்லாம் இவர்கள் கிளம்ப மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டே,கையில் இருந்த‌ காப்பியை குடித்து விட்டுப் பக்கத்தில் இருந்த பெரியப்பா வீடு நோக்கி நடந்தேன். அப்பா சொன்னது போல் அவர்கள் இருவரும் கிளம்பி தான் இருந்தார்கள். என்னப்பா எல்லோரும் கிளம்பியாச்சா?. கீழ ரோட்ல கார் வந்து நிற்குது என்று பெரியப்பா என்னை நோக்கினார். இல்லை பெரியப்பா நம்ம வீட்டுப் பொம்பளைகள் எல்லாம் கிளம்ப எவ்வளவு நேரம் ஆகுமுனு உங்களுக்குத் தெரியாதா என்று பெரியப்பாவை பார்த்தேன். அவருடைய முகத்தில் புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை.

நம்ம வீட்டு பொம்பளங்க‌ எல்லாம் ஓர் இடத்திற்குக் கிளம்பனும் என்றால் பெரும் பாடு தான், ஆமா, நாம‌ போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வந்திடலாம் இல்ல என்று பெரியம்மா கேள்வியைக் கேட்டு என் முகத்தைப் பார்த்தார். ஏதும் வேலை இருக்கா பெரியம்மா என்று அவரிடம் கேட்டேன். இல்ல சும்மா தான் கேட்டேன் என்றார் பெரியம்மா. அதெல்லாம் ஆறு மணிக்குள்ள வந்திடாலாம் என்றேன். பெரியம்மா முகத்தில் சந்தோச புன்னகை தெரிந்தது. சரி பெரியம்மா நீங்க இங்க உக்காந்திருங்க, நான் போய் அவங்களைச் சீக்கிரம் கிளம்பச் சொல்லுறேன் என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாய் கிளம்பி கொண்டிருந்தார்கள், அப்போதே மணி பத்தை தாண்டியிருந்தது. ஒருவர் சிலேடை காணவில்லை என்றும் இன்னொருவர் ஸ்டிக்கர் பொட்டை இங்க தான் வச்சிருந்தேன் நீங்க பாத்தீங்களானு என்னிடம் கேட்க, நானே என்னோட சட்டை பாக்கெட்ல இருக்கு என்று சொல்லிவிட்டு அண்ணனை தேடினேன். நேத்து பூ வாங்க சொல்ல மறந்திட்டாங்களாம், அதான் இப்ப பூ வாங்க அவன் டூவீலரை எடுத்திட்டு ரோட்டுக்குப் போயிருக்கிறான் என்று அம்மா மெல்லிய புன்னகையுடன் என்னிடம் சொன்னார்.

எப்படியோ எல்லோரும் ஒரு வழியா கிளம்பி, வீட்டை விட்டு வெளியில் வரும் போது மணி பதினொன்று. வீட்டில் இருந்து நடந்து கீழே நிற்கும் வண்டியின் அருகில் நெருங்கும் போது, அண்ணி மட்டும் வீட்டை நோக்கி திரும்பவும் ஓடினார். ஏன்னு கேட்டால், பாப்பாவின் பால் பாட்டிலை மறந்து விட்டாராம் என்று அண்ணன் தலையில் அடித்தான். வண்டி கிளம்பி கன்னியாகுமரி போகிறதுக்குள்ள பாப்பாக்கள் இரண்டு பேரும் இரண்டு இடங்களில் இறங்க வைத்து விட்டார்கள். எப்படியோ கன்னியாகுமரிக்கு போயி இறங்கும் போது மணி பனிரென்டு முப்பது.

கடல் உள்ள போனா நீங்க திரும்ப‌ வர்றதுக்கு ரெம்ப நேரம் ஆகும். அதனால சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொன்ன டிரைவரின் ஆலோசனையின் படி ஹோட்டலை நோக்கி நடந்தோம்.

வந்ததோ இடங்களைச் சுற்றிப் பார்க்க, ஆனா முதல் வேலையே சாப்பாடு தான் நடந்தது. நான் நினைச்ச மட்டன் பிரியாணியையும் ஆர்ட‌ர் பண்ணிட்டேன், சாப்பாடும் ஒரு வழியாக முடிந்து விட்டது.

இப்போது ஒவ்வொரு இடமாகச் சுற்ற தொடங்கினோம், முதலில் போனது விவேகானந்தர் பாறைக்கு, கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறையில் இருந்து திரும்ப வர்றதுக்கு விசைப்படகிற்காக‌ ரெம்ப நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கு ரெம்ப நேரம் கால் கடுக்க‌ நின்னதாலோ, என்னவோ எல்லோரும் ஒன்றாகத் திருவள்ளுவர் சிலைக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள். சூரியனும் மேற்கு நோக்கி விரைவாக‌ நகரத் தொடங்கி விட்டான்.



இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சென்றதை விட, கோவிலை சுற்றி இப்போது அதிகமான புதுக் கடைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பொருட்களைப் பேரம் பேசி வாங்குவதற்குள் நேரம் போய்க் கொண்டே இருந்தது. பெண்கள் ஒவ்வொருவரையும் மிரட்டி ஒவ்வொரு கடையில் இருந்தும் வெளியேற்றியது பெரியம்மா தான். அதனால் ஆண்கள் எங்களுக்குப் பெரிய அளவில் கஷ்டம் இல்லை.

ஒவ்வொரு மணி நேரம் ஆகும் போதும், மணி நான்கு ஆகிவிட்டது, ஐந்து மணி ஆகிவிட்டது சீக்கிரம் வாங்க, வீட்டிற்கு ஆறு மணிக்குள்ள போகனும் என்று கோபமாகக் கத்தி கொண்டே பெரியம்மா இருந்தார்கள். ஒரு ஸ்டிக்கர் பொட்டு வாங்கவே நாலு கடை பார்க்கும் நம்ம ஆளுங்க இதற்கு எல்லாம் அசருவாங்களா என்ன. சவகாசமா கேட்டால் சங்குமுகம் வரும் போது மணி ஆறு. பெரியம்மாவின் கண்கள் கோபத்தில் கொப்பளித்தது. ஆனால் வெளியில் ஏதும் சொல்லாமல் இருந்தார்.

இருந்ததே இருந்தோம், அப்படியே சூரியன் மறையுறதையும் பார்த்து விட்டு போவோம் என்றார்கள். சூரியனும் ஒரு வழியாகக் கடலில் விழுந்து விட்டான். தண்ணீரில் விளையாட போன நம்ம‌ ஆட்களுக்குக் கடலை விட்டு வர மனம் ஒப்பவில்லை.

கடலை விட்டு வெளியில் வந்து பிளாட்பாரம் கடைகளையும் பார்க்க வேண்டும் என்று அங்கேயும் சுற்ற தொடங்கினார்கள்.

எப்படியோ ஒரு வழியாக எல்லோரும் வண்டியில் வந்து ஏறும் போது மணி எட்டு. பெரியம்மாவின் முகம் மட்டும் கொடுரமாக இருந்தது. அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது, ஆறு மணிக்குள்ள வீட்டிற்கு வரலாமா என்று பெரியம்மா கேட்டது.

வண்டியில் அம‌ரும் போது, கொஞ்சம் தள்ளி தான் இருக்கிறது என்ற பெரியப்பாவின் குரலுக்கு, அனல் பறக்கும் பார்வையுடன் கூடிய கோபம் பெரியம்மாவின் கண்ணில் தெறித்தது. அனைவரும் வண்டியில் ஏறியவுடன், வண்டி கிளம்பத் தொடங்கியது. கடலில் ரெம்ப நேரம் ஆட்டம் போட்டதனால் பாப்பா இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்தார்கள். பயணக் களைப்பும், வண்டியின் ஜன்னல் வழியாக வீசிய‌ இயற்கை காற்றும் எல்லோரின் கண்களையும் சுழற்றியது.

பக்கத்தில் இருந்த என்னுடைய மனைவியிடம், ஆமா, பெரியம்மா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்?, ஆறு மணிக்கும் யாரையும் வீட்டிற்கு வர சொல்லி இருப்பார்களோ என்று கிசுகிசுத்தேன். அதற்கு என் மனைவியோ புன்சிரிப்புடன் அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஆறு மணியில் இருந்து பெரியம்மா தொலைக்காட்சி தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னைக்கு நம்ம கூட வந்ததால் எல்லாத் தொடரும் அவங்களால பார்க்க முடியாம போச்சு, அதான் இவ்வளவு கோபமாக இருக்காங்க‌ என்றார். இவ்வளவு தானா, நானோ ஏதோ பெரிய விசயமாக இருக்குமோ என்று நினைத்தேன் என்றேன். உங்களுக்கு என்ன தெரியும் அந்தத் தொடர்களை ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கதையோட தொடர்ச்சி போயிடும் என்றார். என்ன பெரிய கதை மாடி படியில இருந்து இறங்கி வந்து கிச்சனுக்குப் போய் ஒரு கப் தண்ணி குடிச்சுட்டு, திரும்பவும் மாடி படி ஏறி பெட்ரூம் கதைவை திறக்கும் போது "தொடரும்" என்று போடுவான் என்றேன். ரெம்பச் சத்தம் போட்டு பேசாதீங்க, பெரியம்மா காதில் கேட்டுவிடப் போகிறது என்றார்.

பெரியம்மாவிற்குத் தொலைக்காட்சி தொடர் தானே பார்க்க முடியல, வீட்டுக்குப் போய்த் திரும்பவும் போட சொல்லி, நான் அவங்களுக்குக் காட்டுறேன் என்றேன். ஆமா, நீங்க சொன்ன உடன் போடுவதற்குத் தொலைக்காட்சி தொடர் என்ன உங்க வீட்டு டிவிடி பிளேயரில் உள்ள படமா? என்றார். சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தேன்.

வண்டி எங்கள் ஊர் எல்லையைத் தொடும் போது, இரவு மணி ஒன்பதை தாண்டியிருந்தது. பயணக் களைப்புடன் வண்டியில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தோம். பெரியம்மா அவங்க வீட்டிற்குக் கிளம்பினார். அவர்கள் சென்ற பின்னாடியே நானும் வீட்டில் இருந்த‌ என்னுடைய லேப்டாப்பை தூக்கி கொண்டு அவர்கள் பின்னால் போனேன். என்னுடைய யுஎஸ்பி மோடத்தை லேப்டாப்பில் கனெக்ட் செய்து, இணையத்தில் இருந்து பெரியம்மா சொன்ன அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் அவர்களுக்குப் போட்டு காட்டினேன். "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் விஜய் சேதுபதி, தாதாவாக நடித்திருக்கும் பசுபதி அவர்களிடம் "குமுதா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்வது போல் நானும் "பெரியம்மா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வந்தேன்.

வீட்டிற்கு வந்தவுடன் என்னோட மனைவி என்னிடம் வந்து, நீங்க இணையத்தில் தொலைக்காட்சி தொடர் பார்க்கலாம் என்பதை எனக்குச் சொல்லி தரவே இல்லியே என்றார். நீ தான் தொலைக்காட்சி தொடரே பார்க்க மாட்டியே என்றேன். இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டா பார்ப்பாங்க, சரி சரி அந்த விஜய் டிவியில் போடும் "உறவுகள் தொடர்கதை" சீரியலை லேப்டாப்பில் எனக்குப் போட்டு தாங்க என்றார்.

.

Monday, March 17, 2014

தமிழ் சினிமா_டாஸ்மாக்கும், குழந்தைகள் காதலும்!!!

இன்றைய தமிழ் திரைப்பட உலகிற்குப் பல புதிய இளம் இயக்குனர்களின் வருகை ஆரோக்கியமானதாகத் தான் பார்க்க படுகிறது. கடந்த சில வருடங்களில் சமூகம் சார்ந்த படங்கள் அதிகமாக வந்திருப்பதும் பாராட்டுக்குரியதே. ஆனாலும் சில திரைப்படங்களில் சில காட்சிகள் வலுக்கட்டாயமாக‌த் திணிக்கப் படுகின்றதா, அல்லது கதைக்கு அவசியமாக‌ வைக்கிறார்களா என்பது மட்டும் புரியவில்லை. அவைகளில் முதன்மையாய் இருப்பது டாஸ்மாக் கலாச்சாரம், இன்னொன்று குழந்தைகளில் காதல்.

இப்போது வெளிவரும் திரைப்படங்களில் டாஸ்மாக் பார்களின் முன்பு நின்று கொண்டு குத்துப்பாடல் பாடி ஆடுவதோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு டாஸ்மாக் பார்களில் வட்டமாக அமர்ந்து கும்மாளம் அடிப்பதோ இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். காதல் தோற்றால் மது அருந்திக் கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டின் முன் நின்றுகொண்டு சண்டையிட வேண்டும் அல்லது ஒட்டு மொத்தப் பெண்களையும் திட்டிப் பாட்டுப் பாடி ஆட வேண்டும் என்ற அதர பழசு காட்சியைத் தாண்டி எவராலும் இன்றைக்கும் யோசிக்க முடியவில்லையா?. பழைய இயக்குனர்கள் தான் அதைத் தாண்டி யோசிக்கவில்லை என்று வைத்தாலும் இன்றைக்குப் புதிதாக வரும் இளம் இயக்குனர்களும் அதற்கு மேல் தான் இருக்கிறார்கள்.

கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்களில் கல்லூரி மாணவர்களாக‌ நடிக்கும் நடிகர்களின் கைகளிலும் மதுப்பாட்டில் கொடுக்காமல் இயக்குனர்களால் அந்தத் திரைப்படங்களை எடுக்க முடியவில்லை. திரைப்படங்களில் காதலிக்கும் நாய‌கிகள் தன்னுடைய காதலன் மதுக் குடிப்பவன் என்று தெரிந்தால், தன்னுடைய காதலன் பிறந்த நாளுக்கு மதுப்பாட்டில்களைப் பரிசாக அளிப்பதாகக் காட்சி அமைக்கும் இயக்குனர்களிடம் கேட்பது ஒன்று தான். நீங்கள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறீர்களா?. இன்றைய கல்லூரி பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் எல்லாம் நீங்கள் ஊடகங்களில் பார்ப்பது இல்லையா?. அவர்களின் உண்ணாவிரதங்கள் உங்கள் இதயங்களை நெருட வில்லையா?. இத்தகைய‌ காட்சிகளைத் திரைப்படங்களில் வைப்பது, மது என்ற அரக்கனுக்கு எதிராகப் போராடும் பெண்களைக் கொச்சை படுத்துவதாக உங்கள் மனசாட்சிக்கு தெரியவில்லையா?. எத்தனையோ கல்லூரி மாண‌வர்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அரசு மூட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும் உங்களுக்கு தெரியாதா?.

விளையாட்டை மையமாகக் கொண்டு வரும் படங்களில் கூட உங்களால் நடிகர்களின் கைகளில் மதுப்பாட்டில் கொடுக்காமல் எடுக்க முடியவில்லை. விளையாட்டில் ஒரு மாணவன் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் அவன் கையில் தொடக் கூடாத ஒன்று போதைப் பொருட்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த இயக்குனர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே. வலுக்கட்டாயமாகத் திரைப்படங்களில் திணிக்கப்படும் மொக்கை காமெடிகள் மற்றும் பாடல் காட்சிகள் அமைக்க‌ வேண்டுமானால் இத்த‌கைய‌ டாஸ்மாக் க‌டை கலாச்சாரம் தான் உதவும். அதை தாண்டி இவர்களால் யோசிக்க முடியாததற்கு காரணம், இயக்குனர்களின் கற்பனை வறட்சி என்று சொல்வதைத் தவிர வேறு என்ன?.

இன்றைக்குத் தமிழ் நாட்டில் எவருமே குடிக்கவில்லையா?. அல்லது டாஸ்மாக்கில் மதுப்பானங்களே விற்பனையாகவில்லையா என்று நீங்கள் கேள்விகள் கேட்கலாம். உண்மைதான், ஊருக்கு ஊர் பள்ளிக்கூடம் இருக்கின்றதோ இல்லையோ!, ஆனால் டாஸ்மாக் கடைகள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லுமளவிற்குத் தமிழக அரசு எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறது. ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போது மக்களிடம் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான‌ போராட்டங்கள் அதிகரித்திருக்கின்றது. இந்தக் கடைகளுக்கு எதிராக, அந்தக் கல்லூரி மாண‌வர்கள் போராட்டம், இந்தக் கல்லூரி மாணிவிகள் உண்ணாவிரதம், சென்னையில் சமூக ஆர்வலர்களின் ஆர்பாட்டம் மற்றும் கிராமங்களில் பெண்கள் அமைப்பினர் சாலை மறியல் என்ற செய்திகளைத் தான் தினந்தோறும் ஊடங்களிலும் நாளிதழ்களிலும் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த சூழலில் இருக்கும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பிரதிபலிப்பதில் சினிமா ஊடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இன்றைய‌ சினிமா ஊடகம், டாஸ்மாக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் வேலையைச் செய்கின்றனவா? அல்லது அதற்கு எதிராக மக்கள் நடத்தும் போரட்டங்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்கின்றனவா?. என்று பார்த்தால் இரண்டாவது வேலையைச் செய்வதாகத் தான் தோன்றுகிறது. போதைப்பொருட்களுக்கு அடிமையாகாத‌ அடுத்த‌ தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதனால் இப்போது வரும் இளம் இயக்குனர்களாவது டாஸ்மாக் கலச்சாரத்தைத் தவிர வேறு பாதையில் பய‌ணித்தால் நன்று.

சிறு வயதில் பள்ளி வாழ்க்கையை அனைவரும் கடந்து தான் வந்திருப்போம். ஓரிரு வருடங்கள் ஒரு பள்ளியில் படித்துவிட்டு வீட்டின் சூழலால் அந்தப் பள்ளியில் இருந்து மாற்றலாகி வேறு ஒரு பள்ளியில் போய்ச் சேரும் முதல் நாள், அறிமுகம் இல்லாத நண்பர்களில் எவன் ஒருவன் நமக்கு முதலில் ஒரு குச்சியோ, அல்லது மாங்கா வடுவோ தருகிறானோ அவனைத் தான் நம்முடைய மனம் காலம் முழுவதும் மறக்காமல் இணைபிரியா நண்பனாக வைத்திருக்கும், அவனுடன் தான் தோளில் மீது கையைப் போட்டுப் பள்ளியில் நடைப் போடுவோம். அதைப்போல் தான் பெண் தோழிகளிடமும், எழுதுவதற்குப் பென்சில் இல்லை என்று வகுப்பாசிரியரால் எழுப்பி விடப்படும் போது, சினேகப் பார்வையால் எந்தப் பெண் நமக்குப் பென்சில் தந்து உதவுகிறாரோ அவர் மீதும் நம்மையறியாமல் ஒர் இனம் புரியாத ஈர்ப்பு வந்து விடுகிறது.

சிறுவர்களுக்கு தன்னுடன் படிக்கும் அல்லது விளையாடும் ஒருவரின் மீது வரும் ஈர்ப்பு, அந்த ஒருவர் ஆண்களாக் இருந்தால் அது நட்பு என்றும், பெண்ணாக இருந்தால் காதல் என்றும் இன்றைய சினிமாக்கள் சித்தரிப்பது ஆபாசத்தின் உச்சம்.

இப்போது வரும் சினிமாக்களில் நாயகனின் பால்ய கால‌ வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறேன் என்று இயக்குனர்களின் மனதில் உள்ள‌ வக்கிர எண்ணங்களை எடுத்து தொலைக்கிறார்கள். சிறு வயது நாயகன் என்றால் அவனுக்கு ஒரு சிறு வயது காதலியும் காட்டப்படுகிறாள். அந்த வயதிலேயே அவளுக்குப் பரிசுகள் தருவதில் இருந்து, அந்தக் காதலிக்காக நண்பர்களுடன் சண்டை போடுவது வரை காட்சி படுத்துகிறார்கள். இதைவிடக் கொடுமை அந்தச் சிறு வயது காதலிக்கு முத்தம் கொடுப்பது என்று வைக்கும் காட்சிகள். இவையெல்லாம் எந்த விதத்தில் படத்தின் வெற்றிக்கு உதவுகின்றன என்று நமக்கு தெரிய‌வில்லை, ஆனால் அந்த காட்சிகளை குழந்தைகளுடன் வந்து திரையரங்குகளில் பார்க்கும் பெற்றோரின் மனநிலையும், அந்த குழந்தைகள் மனநிலையும் எப்படி இருக்கும் என்று இயக்குனர்கள் சிந்தித்தால் நலமாக இருக்கும்.

.

Thursday, March 13, 2014

என்னைப் பார்த்து ஏன்டா அந்தக் கேள்வியைக் கேட்டே!!!

சிலருக்கு ஊடகங்களில் பிரபலாமனவர்களை எங்காவது பார்த்து விட்டால் போதும் அவர்களுக்குள் ஓர் இனம் புரியாத ஆனந்தம் அவர்களுக்கும் தெரியாமலே வந்து விடுகிறது. நாம் ரசிப்பதையோ அல்லது அவர்களிடம் உரையாடுவதையோ, அவர்களுடன் போட்டோ பிடித்துக் கொள்வதையோ அவர்கள் விரும்புகிறார்களா என்று கூட நாம் சிந்திப்பது இல்லை. எப்படியாவது அவர்களிடம் பேசி விட வேண்டும் என்பது மட்டும் தான் சிலரின் எண்ணமாக இருக்கிறது.திரையுலகில் உள்ள நடிகர்களாக இருந்தால் இன்னும் சொல்லவே வேண்டாம்.

எனது அலுவலகத்திலும் ஒருவர் இருக்கிறார். அவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு என்ற இடம் தான் சொந்த ஊர். படங்களைப் பற்றியும், பட நடிகர்களையும் பற்றித்தான் அதிகமாகப் பேசுவார். அவருடைய சொந்த ஊரிலும் வருடத்திற்கு இரண்டு முறையாவது படப்பிடிப்பு நடக்கும். அப்போது படப்பிடிப்புக்கு வரும் நடிகர்களை மொபைலில் போட்டோ பிடித்து வந்து எங்களிடம் காண்பித்துப் பெருமைப்பட்டுக் கொள்வார். அதோடு மட்டும் அல்லாமல் அந்த நடிகரிடம் பேசினேன், இந்த நடிகரிடம் பேசினேன், அவருக்குப் பேசவே தெரியவில்லை எப்படித்தான் படத்தில் உள்ள வசனங்கள் எல்லாம் பேசுறாங்களோ என்று விமர்சனம் செய்வார்.



இப்படி இவருடைய நடிகர் புராணங்களை நாங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் எங்கள் அலுவலகத்திற்குப் புதிதாகப் பணிக்கு பலரை எடுத்திருந்தார்கள். அதில் ஒருவர் சென்னையில் பணியாற்றியவர். அவர் சென்னையில் பணியாற்றும் போது அவருடைய அறை நண்பராக இருந்தவர் சினிமா துறையில் வேலை செய்பவர். அவர் மூலமாக அவருக்கு நடிகர் சரவணன்(பருத்தி வீரன்) அவர்களில் மொபைல் எண் கிடைத்திருக்கிறது. அதை அவருடைய மொபைலில் பதிவு செய்து வைத்திருக்கிறார். எங்கள் அலுவலகத்தில் வந்த சில நாட்களிலேயே எங்கள் கூட்டத்தில் ஒருவராக அவரும் ஐக்கியமாகி விட்டர்.

ஒரு நாள் அலுவலகத்தில் தேநீர் இடைவேளையின் போது நடிகர்களைப் பற்றிப் பேசும் நண்பர் புதிதாக வந்த நண்பரிடம் நான் அந்த நடிகரிடம் பேசியிருக்கிறேன், இந்த நடிகரிடம் பேசியிருக்கிறேன் என்று சொல்ல, அவர் உடனே தன்னிடம் இருந்த மொபைலில் உள்ள நடிகர் சரவணன் அவர்களின் எண்ணை கொடுத்து பேச சொன்னர். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை, நாங்களும் கூடச் சேர்ந்து எங்கள் முன்னால் நீங்க பேசுங்க என்று கூவ, வேறு வழியில்லாமல் சென்னை நண்பர் கொடுத்த எண்ணை மொபைலில் அழுத்தினார்.

லவ்டு ஸ்பீக்கர் மட்டும் தான் போட்டு பேச வேண்டும் என்று சொல்லி அவரைச் சூழ்ந்து நின்றோம். எப்படியும் இவர் சொதப்பல் தான் செய்ய போகிறார் என்று வேடிக்கைப் பார்த்து நின்றோம்.

நண்பரோ மொபைல் போனில் அழைத்து நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தார். நலன் விசாரிப்புகள் இருவரும் மாறி,மாறி பேசிக் கொண்டார்கள். உங்க நடிப்பு எனக்கு ரெம்பப் பிடிக்கும் என்று நண்பர் சொல்ல பக்கத்தில் இருந்த எங்களுக்குச் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. மொபைலில் ஸ்பீக்கர் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் நாங்கள் சிரித்தது சரவணன் அவர்களுக்கும் கேட்டிருக்க வேண்டும். சரவணன் அவர்களும் "அலுவலகத்தில் வேலையைத் தவிர எல்லாம் பாக்குறீங்க போல" என்று சிரித்துக் கொண்டே நன்றி சொன்னார். இப்ப என்ன படம் நடிச்சிட்டு இருக்கீங்கனு என்று நண்பர் கேட்க, சரவணன் அவர்களும் பேர் வைக்காத இரண்டு மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி ஆரம்பம் எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நண்பர் சொன்ன விசயத்தினால் நடிகர் சரவணன் மட்டும் அல்ல சுற்றி நின்ற நாங்களுமே திகைத்து நின்றோம்.

ஒரு நொடி நேர அமைதிக்குப் பின், நான் உட்பட அனைவரும் "ஹா ஹா" "ஹேக்ஹே" "ஹேஹே" என்ற சிரிப்பொலி.

மறுமுனையில் இருந்து "டொயிங்" "டொயிங்" என்ற சத்தம் வந்து நண்பரின் மொபைல் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. நண்பரோ அவர் சொன்ன விசயத்தினால் தான் நடிகர் சரவணன் அவர்கள் கோபத்தில் மொபைல் இணைப்பை துண்டிப்பு செய்தார் என்று நினைக்காமல், சுற்றி நின்று நாங்கள் சத்தமாகச் சிரித்ததால் தான் அவர் கோபப்பட்டு துண்டித்துவிட்டார் என்று எங்களை முறைக்க‌ ஆரம்பித்து விட்டர். சுற்றி நின்ற நாங்களோ இன்னும் சத்தமாகக் கை கொட்டி சிரிக்க ஆரம்பித்து விட்டோம். நண்பரோ இன்னும் வெறியுடன் எங்களைப் பார்த்தார்.

நடிகர் சரவணன் அவர்களிடம் நண்பர் சொன்ன விசயம் இது தான். சார் நீங்க நடிகை ரஞ்சிதா அவர்களுடன் நடித்த படம் சமீபத்தில் தான் டிவியில் பார்த்தேன் ரெம்ப நல்லாருந்தது என்பது தான். நண்பர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அவர் சொன்ன சூழல் தான் எங்களைச் சிரிப்பதற்கும், நடிகர் சரவணன் அவர்களைக் கோபப்படுவதற்கும் வைத்தது. நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா அவர்களின் வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில் தான் நண்பர் இப்படி ஒரு விசயத்தை நடிகர் சரவணன் அவர்களிடம் சொன்னது.

மறுமுனையில் இருந்த நடிகர் சரவணன் அவர்களின் நிலைமை என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கவுண்டமணி அவர்கள் கரகாட்டகாரன் படத்தில் என்னைப் பார்த்து ஏன்டா அந்தக் கேள்வியைக் கேட்ட? என்று செந்திலை உதைத்துக் கொண்டே இருப்பார். அதுபோல் சரவணன் அவர்களும் "என்ன பார்த்து அவன் எப்படி இப்படிச் சொல்லலாம்?? என்று லைட் பாய்ஸ் யாரையாவது உதைத்திருக்கக் கூடும். அப்படியே மொபைல் போனை தூக்கி போட்டு உடைத்திருப்பார். இல்லையென்றால் குறைந்த பட்சம் சிம்கார்டையாவது தலையைச் சுற்றி தூக்கி எறிந்திருப்பார்.

நம்ம நண்பரை குறை ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை, காரணம் நடிகர் அவர்களுடன் பேசுவதற்கு ஒரு மாததிற்கு முன்னால் தான் கே டிவியில் சரவணன் மற்றும் ரஞ்சிதா அவர்கள் நடித்த "பொண்டாட்டி ராஜ்யம்" படத்தைப் பார்த்திருக்கிறார். நண்பருக்கு சரவணன் அவர்களிடம் பேசும் போதும் இந்தப் பொண்டாட்டி ராஜ்யம் படம் மட்டும் தான் ஞாபகம் இருந்திருக்கிறது, ஆனால் சூழல் சுற்றி இருந்தவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் நித்தி மற்றும் ரஞ்சிதா வீடியோவை ஞாபகப் படுத்திவிட்டது.

எல்லாவற்றையும் விட நண்பர் ஒரு மணி நேரம் கழித்து சொன்னது தான் ஹைலைட்.. சாரி கேட்கலாம் என்று போன் பண்ணி பார்த்தேன் மொபைல் சுவிட் ஆப் என்று வருகிறது என்பது தான்.

இன்னுமா அந்த மெபைல் எண்ணை அவர் வைத்திருப்பார், எப்போதே விட்டு எறிந்திருப்பார் என்றேன். அப்படினா அவரோட புது எண்ணை எவரிடமாவது கேட்டு வாங்க வேண்டும் என்று என்னைப் பார்த்து சிரித்தார்.

எக்ஸ் கீயூஸ் மீ !! உங்களில் யாரிடமாவது அவ‌ரோட புது மெபைல் எண் இருந்தா என்னிடம் சொல்லுங்களேன்.. என்னோட நண்பர் புதுக் கான்செப்ட் உடன் அவரிடம் பேச காத்திருக்கிறார்..

Tuesday, March 11, 2014

இலங்கை தமிழர் பிரச்சனை_எத்தனை முரண்பாடுகள்!!!

ஐந மனித உரிமை அமைப்பின் ஆணையாளர்: நவனீதன் பிள்ளை

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போர் நடந்த போது, மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது உண்மை, அதற்காகச் சர்வதேச விசாரனை வேண்டும். போர் முடிந்த போதும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளது, சிங்கள இராணுவதினரால் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது கண்டிக்கத் தக்கது. 

எதிர்க்கட்சி தலைவர்(பிஜேபி): சுஷ்மா சுவராஜ் 

இலங்கைக்குச் சென்று வந்த எங்களது பயணம் திருப்தி அளித்துள்ளது. இலங்கையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினோம். தமிழர்களின் மறுகுடியமர்த்தல் பகுதிகளையும் பார்வையிட்டோம். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு பிரமிக்கிறேன்.

மதிமுகக் கட்சி தலைவர்: வைகோ 

இலங்கை பிரச்சனையில் தமிழ் ஈழம் மட்டும் தான் ஒரே தீர்வு. போர் குற்றவாளி, சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை சர்வதேச விசாரணை கூண்டில் ஏற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழினமே, தமிழர்களே விழித்தெழுங்கள். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி: திருமாவளவன் 

இலங்கையில் பொது வாக்கெடுப்பெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் எல்லோரும் ஒங்கி குரல் கொடுக்கும் போது தான் சர்வதேச சமூகத்தின் அழுத்ததைப் பெற்றுத் தமிழீழத்தை வென்றெடுக்க முடியும். இந்திய அரசு இதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்: கோபண்ணா 

இலங்கை ஒரு சுதந்திரம் பெற்ற நாடு, அந்த நாட்டில் உள்விவாகாரங்களில் இந்தியா ஓரளவிற்குத் தான் தலையிட முடியும். இலங்கை தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.: விஜயதரணி 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் நிர்பந்ததினால் தான் இலங்கையில் வடக்கு மாகணத் தேர்தலை நடத்தமுடிந்தது. ராஜிவ் மற்றும் ஜெயவர்த்தனே ஒப்பந்ததின் 13 வது சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருவதற்கான அனைத்து முயச்சியையும் இந்தியா செய்து வருகிறது.

பிஜேபி மாநில செயலாளர்: ராகவன் 

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத் தான் பிஜேபி செய்யும். இங்கு இருந்து கொண்டு தமிழீழம் என்று குரல் எழுப்புவதை ஏற்க முடியாது. 13 வது சட்ட மசோதாவை நிறைவேற்றி தமிழர்களுக்கு முழுமையான அதிகார பகிர்வை கொடுக்கத் தான் பிஜேபி விரும்புகிறது. 

காந்திய மக்கள் கட்சி: தமிழருவி மணியன் 

நரேந்திர மோடியால் மட்டுமே இலங்கையை மிரட்டி வைக்க முடியும். சிங்கள அதிபர் ராஜபக்சேவிற்கு, இப்போது இந்தியா சுண்டைக்காயாக இருக்கிறது. கண்டிப்பாக மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆவார், ஈழ தமிழர்களின் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார்.

தலைமைக் கழகப் பேச்சாளர்(அதிமுக) : ஆவடி குமார் 

தமிழர் ஒருவர் பிரதமராக ஆகாமல் ஈழ தமிழர் பிரச்சனை முடிய போவதில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. அம்மா அவர்கள் இந்த முறை பிரதமர் ஆவது உறுதி. அவர் தலைமையில் ஈழ தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் எல்லை பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்படும். 

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்: குமரன் பத்மநாபன் 

இப்போது உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது, ஆயுத போரட்டம் மூலம் ஈழ விடுதலையை அடைய முடியாது. இங்குள்ள தழிழர்களும் தனி நாடு விரும்பவில்லை. ஒருங்கிணைந்த இலங்கைலேயே வாழ விரும்புகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், புலம் பெயர்ந்த புலிகள் அமைப்பில் ஈடுபாடு கொண்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் தான் பிரிவினையை ஆதரிக்கிறார்கள்.

வட மாகாண முதலமைச்சர்: விக்னேஷ்வரன் 

எங்கள் நாட்டின் பிரச்சனையை நாங்களே பார்த்துக் கொள்வோம். இப்போது தமிழர்களின் மறுவாழ்வு, நில உரிமைகள், இரணுவத்தை வெளியேற்றுதல் போன்ற பணிகளைச் செய்வதே என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும். வெளியில் இருக்கும் தமிழர்கள் இந்தப் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பதே நல்லது. 

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற எம்.பி: ஸ்ரீதரன் 

இன்றைக்கும் இலங்கையில் வாழும் என்னைப் போன்றவர்களும் கூட அரசை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் தான் இருக்கிறோம். இந்த நேரத்தில் தமிழ் நாட்டு மக்களில் குரலும், இளைஞர்களின் போரட்டமும் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களில் சர்வதேச முன்னெடுப்புகளும் தான் எங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றது. 13 வது சட்டத்திருத்தம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் தமிழர்களுக்குத் தந்துவிடாது.

                                                                *-----*

இலங்கை தமிழர் பிரச்சனை எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடத்தவும், நடுநிலையாளர்களுக்கு மேடையில் முழங்கவும், விமர்சகர்களுக்கு சுய விளம்பரம் தேடவும் நன்றாக பயன்படுகிறது.

பிரச்சனை ஒன்று, ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் இயக்கங்களில் உள்ள கொள்கைகளை வைத்து எத்தனை முரண்பாடுகள்!!!
தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.


.

Sunday, March 9, 2014

சாலையைப் போடுங்க‌, ஆனா மண்டை உடையாம போடுங்க!!!

சாலைகளைப் போடுவதற்கு அரசு எப்படி ஒப்பந்தங்கள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதைக் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றிருந்தேன். பல போரட்டங்களுக்குப் பிறகு மீண்டும் நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான சாலையைப் போட தொடங்கியிருந்தார்கள். இவர்கள் ஒரு பகுதியில் இருந்து போட்டு மறுபுறத்தில் முடிப்பதற்குள் முதலில் போட பட்டிருக்கும் சாலைகள் பல்லை காட்ட தொடங்கியிருக்கும். இது தான் இவர்கள் போடும் சாலையின் லட்சணம். இவை ஒருபுறம் இருக்க நான் கேட்ட முதல் கேள்விக்கான அவசியம் இதுதான். நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலான நெடுஞ்சாலை ஒருவழிச்சாலை, இரண்டு புறமும் வாகனம் போவதும், வருவதுமாக இருக்கும்.

இவர்கள் சீரமைக்கும் சாலையில் முதல் முதலாக எந்த அளவில் சாலையில் தார் போட்டு இருப்பார்களோ, அதே அளவில் தான் திரும்பவும் அதன் மேல் சல்லியை கொட்டி தார் ஊற்றுகிறார்கள். எல்லோருக்கும் தெரியும் தார் சாலை என்பது சாதரணத் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்கும். இப்படி உயரமாக இருக்கும் சாலையில் ஒவ்வொரு முறையும் சீரமைக்கும் போது ஒர் அங்குலம் முதல் இரண்டு அங்குலம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு இரண்டு அல்லது முன்று முறை செய்யும் போது சாலையின் உயரம் தரையின் சமதளத்தில் இருந்து ஒர் அடிவரை உயர்ந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் சாலைப்போடுபவர்கள் இந்த இரண்டு ஓரங்ளையும் சிறுது சல்லிக் கொட்டி மழித்து விடுவது இல்லை. அவ்வாறு செய்தால் ஒப்பந்த தாரர்களுக்குக் கொஞ்சம் சல்லியும் சிறிது தாரும் செலவு ஆகும். அதனால் இவர்கள் செய்வது இல்லை, இன்னும் சில ஒப்பந்த தாரர்கள் சாலையின் இரண்டு ஓரங்களிலும் மண்ணைக் கொட்டி மறைத்து விடுவார்கள். சாலைப் போட்ட நான்கு நாட்கள் நன்றாக இருக்கும், ஒரு மழை வந்தால் காணமல் போகும்.

இதைப் போன்ற‌ ஒரு வழிச் சாலையில் இருச்சக்கர‌ வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், இரண்டு பெரிய பேருந்தோ அல்லது கனரக வண்டியோ நேர் எதிராக வந்தால் இவர்கள் முதலில் ஓரங்கட்டுவது ஓரத்தில் செல்லும் இருச்சக்கர‌ வாகனத்தைத் தான். சாலையில் இருந்து ஒர் அடி பள்ளத்தில் இருக்கும் தரையில் இருச்சக்கர‌ வண்டியை அனுபவம் இல்லாமலோ அல்லது கைத் தவறியோ விட்டால் என்ன ஆகும் வண்டியின் சக்கரத்தை சுழற்றி ஆளை கிழே தள்ளும். பெரும்பாலன விபத்துக்கள் இப்படித்தான் நடக்கின்றன்.

இந்த நெடுஞ்சாலை ஒரு வழிச்சலையாக இருப்பதால் ஒரு வண்டி முன்னால் போகும் போது இரண்டாவது வண்டி முதல் வண்டியை முந்த வேண்டும் என்று நினைக்கும் போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஓரங்கட்டுவது இருச்சக்கர வாகனத்தைத் தான். இருச்சக்கர வண்டியை ஓட்டும் நீங்கள் வலுக்க‌ட்டாயமாகப் பள்ளத்தில் இறக்க‌ நிர்பந்திக்கப் படுவீர்கள். உங்களால் வண்டியைக் கட்டுப்படுத்தி ஓர் அடிக்கு மேல் இருக்கும் பள்ளத்தில் இறக்க‌ முடியாவிட்டால் கீழே விழ வேண்டியது தான்.



இன்றைக்கு நமது நாட்டில் சாலைகள் ஒழுங்காக இல்லை, சாலை விதிகளும் ஒழுங்காக இல்லை, அப்படியே இருந்தாலும் அதை மதிப்பதற்கு மக்களும் தயாரில்லை. ஆனால் 200 சி.சி, 250 சி.சி என்று இருச்சக்கர‌ வாகனங்களைக் கல்லூரி படிக்கும் இளைஞர்களைக் குறி வைத்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அந்த வண்டியை ஓட்டுவதற்கான சாலை வசதி இருக்கிறதா என்று வண்டி வாங்குபவனே கவலை படாத போது, வண்டியை விற்பவன் எங்கே கவலைப்படப் போகிறான். சி.சி அதிகமான‌ வண்டிகளை இப்போது பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம். அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கைகளில் சி.சி அதிகமாக உள்ள வண்டிகளைத் தான் பார்க்க முடிகிறது. ஒரு வண்டியில் இரண்டு, முன்று பேர் என்று சிட்டாகப் பறக்கிறார்கள். இப்படி வண்டியில் போகும் என்று சொல்ல முடியாது பறக்கும் கல்லூரி மாணவர்கள் வண்டியை கொண்டு சாலையின் ஓரத்தில் இருக்கும் பள்ளத்தில் விட்டால் என்ன ஆகும், மண்டை தான் உடையும்.

கன்னியாகுமரி மாவட்ட செய்திதாள்களை என்றைக்குப் புரட்டினாலும் பக்கத்திற்குப் பக்கம் இருச்சக்கர வாகன விபத்துக்களைப் படிக்க‌ முடியும். எனது நட்பு வட்டம் மற்றும் உறவுகளில் கூடச் சமீக காலங்களில் நடந்த விபத்துகள் மட்டும் மூன்று. இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள், இன்னொருவர் ஆசிரியர். நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடைப்பெறும் இடங்கள் எது என்று எவரிடம் கேட்டலும் கீழே உள்ளவற்றைப் பட்டியல் இடுவார்கள். பார்வதி புரத்தை அடுத்த உள்ள‌ களியங்காடு, சுங்கான்கடையை அடுத்து உள்ள‌ கருப்புக்கோடு, தோட்டியோடு, வில்லுக்குறி பாலம் மற்றும் குமாரகோவிலை ஒட்டியுள்ள தென்கரை பாலம். இந்த இடங்களில் தான் அதிகமான இருச்சக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் முறையான அறிவிப்புப் பலகைகள் கூட இல்லை, அப்படியே சில இடங்களில் இருந்தாலும் அவை கண்ணுக்கு தெரியாதவாறு மிகச் சிறியதாக ஓரத்தில் எங்காவது நட்டு வைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் ஊள்ள சாலைகளைப் பற்றிப் பேசும் போது நமது கண் முன் வந்து நிற்கும் முக்கியமான ஒரு சாலை கோட்டார் ரயில்வே நிலையத்திற்குச் செல்லும் சாலை. எனக்குத் தெரிந்து இந்தச் சாலை ஒரு நாளும் மேடு பள்ளம் இல்லாமல் இருப்பது இல்லை. பிரசவத்திற்கான சாலை என்று விளையாட்டிற்குச் சொல்லும் சாலையைப் பார்க்க வேண்டும் என்றால் இது தான். தினமும் ஆயிரகணக்கானோர் வந்து செல்லும் இந்தச் சாலையின் நிலைமை ரெம்ப மோசம்.

வாஜ்பாய் அவர்கள் பிரதமாக இருக்கும் போது கொண்டு வந்த தங்க நாற்கரச் சாலையைப் பற்றிக் கருத்து விவாதங்களிலும், மேடையெங்கும் நாங்கள் கொண்டு வந்த அருமையான திட்டம் என்று முழங்கும் பொன்னார் அவர்கள், அவரது சொந்த தொகுதியில் அத்திட்டம் நடைமுறை ப‌டுத்தாது பற்றி வாயே திறப்பது இல்லை. காவல் கிணறுடன் இத்திட்டம் முடக்கப்பட்டு நிற்கின்றது. சாலை விரிவாக்கம் செய்தால் பல முதலாளிகளில் கடைகள் தகர்க்கப்படும். அரசியல்வாதிகளுக்குத் தான் முதலாளிகளுக்கு நஷ்டம் என்றால் இரத்த கண்ணீரே வருமே..

.

Thursday, March 6, 2014

என்ன மாப்ளே!!! நாய் ஒண்ணும் செய்யாது!!

எனது நண்பனுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணமானப் புதிதில் உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு அழைப்பது உண்டு. ஒரு நாள் புது மனைவியின் சித்தி வீட்டிற்கு அதாவது நண்பனின் சின்ன மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவன் தனது மனைவியைக் காலையிலேயே டூவீலரில் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் அவசரமாக வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் அங்குத் தங்காமல் மதியம் உணவுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்.

நண்பனுக்கு நாய் என்றாலே ஏழாம் பொருத்தம் தான். அதுவரை தூங்கிக் கொண்டிருக்கும் நாய் கூட, இவன் அந்த வழியாக வந்தால் காது புடைக்க, வாலை நிமிர்த்துக் குரைக்கத் தொடங்கிவிடும். எனவே நாயை மட்டும் ஒருவர் வீட்டில் பார்த்து விட்டால் அந்த வீட்டிற்குத் தனியாகப் போக மாட்டான். இவன் விருந்துக்குப் போயிருந்த வீட்டில் ராஜபாளையம் நாய் ஒன்று இருந்திருக்கிறது. காலையில் இவன் சென்ற போது இவன் கண்ணில் அது மாட்டவில்லை அல்லது அது கண்ணில் இவன் மாட்டவில்லை.



நண்பனுக்கு வெளியில் இருந்த வேலை எல்லாம் முடிவதற்கு மதியம் ஆகிவிட்டது. அலைச்சல் அதிகமாக இருந்ததால் பசி வேறு இவனை வாட்டியது. மாமியார் வீட்டுக் கறி விருந்துச் சாப்பாடு நினைவுக்கு வரவே வண்டியை நேராக மாமியார் வீட்டுக்கு விட்டான். வண்டியை "கேட்" டுக்கு வெளியில் நிறுத்தி, லாக் செய்துவிட்டு, மெதுவாக நடந்து "கேட்டை" திறக்க சென்றால் பெரிய அதிர்ச்சி, ஒரு பக்கம் ராஜபாளையம் நாய்க் கம்பீரமாக நிற்கிறது, இன்னொரு பக்கத்தில் தோட்டத்தில் சின்ன மாமியார் வாழையிலை வெட்டிக்கொண்டு இருக்கிறார்.

மறுபக்கத்தில் இருக்கும் நாயை பார்த்தவுடன், அதுவரையிலும் அடிவயிற்றில் இருந்த பசி இவனுக்குச் சுத்தமாக மறந்துப் போச்சு. அதென்னவோ தெரியவில்லை இவனைப் பார்த்தவுடனே அதுவும் பாதி நறுக்கிய வாலையும் முறுக்கத் தொடங்கிற்று. மறுபக்கத்தில் இருந்த மாமியார் "சும்மா வாங்க, டாமி ஒண்ணும் செய்யாது" என்று இவனைப் பார்த்தார்.

இவனுக்கோ இருந்த பசி மறந்து, காலையில் சாப்பிட்டதை அடிவயிறுக் கலக்க ஆரம்பிச்சுட்டுது.

"ஆமா!! உங்க நாயி அது..  உங்களை ஒண்ணும் செய்யாது, வர்றது எல்லாம் எனக்குத் தான்" என்று மனசுக்குள் நினைத்து விட்டு, "மாமி நீங்க கொஞ்சம் அது பக்கத்துல வந்து பிடிச்சுக்குங்க, நான் வந்துடுறேன்" என்று சொன்னான்.

சின்ன மாமியாரும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு, வந்து நாயைப் பிடிப்பதற்குள், வீட்டின் உள்ளிருந்து வாசலில் வந்த சின்ன மாமனார் "என்ன மாப்ள நீங்க!! இந்த நாய்க்குப் போய் இப்படிப் பயப்படுறீங்கனு" இவனுடைய ஆண்மைக்குச் சவால் விட இவனும் "சடோர்னு" கேட்டைத் திறந்து வீட்டை நோக்கி நடக்க, முறுக்கிய வாலுடன் டாமியும் பாய, "ஆஆஆனுனு" நண்பனின் அலறல்.

நாய்ப் பாய்ந்த வேகத்தில் அதன் பல் எதுவும் படவில்லை, நகம் தான் கீறி விட்டுருந்தது.

அப்புறம் என்ன?. பக்கத்து வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் குசலம் விசாரிக்க வந்துட்டாங்க.

"நம்ம டாமி, ஊர்ல இதுவரைக்கும் யாரையும் கடிச்சதே கிடையாதுனு" பெருசு ஒண்ணு கன்னத்தில் கை வைக்க, "அப்ப நான் என்ன திருட்டு பயலானு" நண்பன் மனதினுள் நினைத்து முறைக்க,

ஆமா அக்கா "புதுசா வந்த மாப்பிளையையாக் கடிக்கனுமுனு" இன்னொரு பெருசு நெற்றி புருவத்தை உயர்த்த, அதுக்கென்ன "புது மாப்பிளை, பழைய மாப்பிளை" என்று பார்த்தா கடிக்கும் என்று மனசுக்குள் நண்பன் புலம்பினான்,

என்ன மாமா என்னை கறிவிருந்துக்கு கூப்பிட்டீங்க, அதுக்கு முன்னாடி இந்த நாய்க்கு கறிவிருந்து போட்டு இருக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு பரிதாபமாக மாமாவை பார்க்க, அவரு "மன்னிசிடுங்க மாப்பிள" என்று தலை கவிழ்ந்தார்.

நாயின் பல்லுப் படல என்றாலும், "கறி ஏதும் இரண்டு நாளைக்குச் சாப்பிட வேண்டாம், வெறும் ரசம் மட்டும் சாப்பிடுங்கனு" பக்கத்துவீட்டுக் காரர் சொல்ல, "விருந்துக்கு வந்த இடத்துல இப்படி ஆகிப் போச்சேனு" இன்னொருவர் ஆரம்பிக்க, நண்பனுக்கோ ஆள விட்ட போதும், இப்படியே ஓடியே போயிருவேன் என்பது போல் ஒவ்வொருவரையும் பார்த்தான்.

எப்படியோ எல்லோரையும் ஒருவழியா சமாதானப் படுத்திவிட்டு, ரசம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மனைவியை வண்டியில் ஏற்றி, வீட்டுக்குக் கிளம்பினால், தெருவில் போகும் வழியில் இரண்டு பக்கமும் கூட்டமாக நின்னு வேடிக்கை வேறு பாத்திருக்கிறார்கள். நண்பனோ சாலையைத் தவிர வேறு எதையுமே பார்க்காதது போல் வண்டியை ஓட்டிவந்திருக்கிறான்.

இது போதாதுனு வழியில் மூணு இடத்தில் வண்டியை நிப்பாட்டி

என்ன மச்சான் "நாய் கடிச்சாமே" அக்கா சொன்னானு ஒருத்தரும்,

என்ன மாமா "நாய் எங்கக் கடிச்சினு" வேற ஒருத்தரும்,

"போகும் போதே ஆஸ்பத்திரிக்கு போயிட்டு போங்க மருமவனேனு" இன்னொருத்தரும் சொல்ல..

நண்பனுக்கோ கடுங்கோபம். "ஆமா இது இப்ப ரெம்ப முக்கியம்" என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டான். எல்லோருக்கும் போலி சிரிப்பையும், தலையும் ஆட்டிவிட்டு வந்திருக்கிறான்.

இனிமேலும் சின்ன மாமியார் வீட்டுக்குத் தனியா போவானு நினைக்குறீங்க!!!!..

குறிப்பு: இந்தப் பதிவு நான் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதியது.

.

Monday, March 3, 2014

ஆட்டோ_ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல!!!!

நான் இந்தப் பதிவில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆட்டோவில் கட்டண மீட்டர்கள் வைக்கக் கூடாது என்றோ, அல்லது அதில் வைத்திருக்கும் கட்டணத்தை விட அதிகமாக வாங்குவது நியாயம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஆட்டோ கட்டணத்தை ட்டும் பெரிதாகப் பேசும் அல்லது எழுதும் நண்பர்களிடம் கேட்பது ஒன்றுதான். ஆட்டோக்காரர்களிடம் மட்டும் "ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல" என்று சர்வ சாதரணமாககேட்கும் நாம் கீழே நான் சொல்லியிருக்கும் விசயங்களை எப்படி அணுகிறோம் என்று அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.


இன்று பெருநகரங்களில் இருக்கும் திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு சாதரண மினரல் வாட்டர் பாட்டிலின் விலை என்ன? அதே வாட்டர் பாட்டிலை வெளியில் வாங்கினால் அதன் விலை என்ன? என்பது அனைவருக்கும் தெரியும்திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு பாப்கார்ன் விலையில் வெளியில் உள்ள கடைகளில் அதேப்போல் இரண்டு வாங்க முடியும். ஆனால் அங்கெல்லாம் யாரும் ஏன்டா இப்படி விற்கிறீங்கனு பொங்குவதைப் பார்க்க முடியவில்லை. வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதைவிடக் கொடுமை வெளியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று வாசலியே போர்டு மாட்டிவிட்டு, அதற்கும் ஆள் வைத்துப் பரிசோதனை செய்கிறார்கள். டிக்கெட் எடுத்து தான் உள்ளே வருகிறேன், அதேப்போல் என்னுடைய பணத்தை கொடுத்து தான் வெளியில் இருந்து உணவுப் பொருளும் வாங்கி வருகிறேன். ஏன்டா இவைகளை நான் உள்ளேக் கொண்டு போகக்கூடாது என்று எவரும் கேட்பதில்லை. திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்குச் செய்யும் செலவை விட, இங்கு வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அநியாயமாகக் கொடுக்கும் விலையின் செலவு அதிகம். திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு கணக்குக் கேட்காமல் வாங்கிச் சாப்பிட்ட‌ நாம் தான் வெளியில் வந்து, நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று "ஆட்டோ வேணுமா சார்?" என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் புக் பண்ணும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், வாரத்தில் சாதரண நாட்களில் இருக்கும் டிக்கெட்டின் விலையை விடச் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை நூறு ரூபாயில் இருந்து முந்நூறு ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த மோசடி முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தான் இருந்தது, ஆனால் இப்போது வார இறுதி நாட்களிலேயே இப்படி விலையேற்றி கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பஸ் முதலாளிகள் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் டீசலுக்கு அதிக விலை கொடுப்பதில்லை, அதேப்போலப் பஸ் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் அதிகச் சம்பளம் கொடுத்தும் விடப் போவதில்லை. "அப்புறம் எதற்கு இந்த விலையேற்றம்?" எவருக்கும் கேட்கும் துணிவில்லை. ஒரு பஸ் டிக்கெட்டிற்கு நூறு முதல் முந்நூறு ரூபாய் அதிகமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் கொடுத்து பயணித்து விட்டு விடியற் காலையில் பஸ்சை விட்டு இறங்கி போக வேண்டிய இடத்திற்காக ஆட்டோவை தேடும் போது, நமக்காகவே காத்திருந்தது போல் வந்து "எங்க சார் போகனும், வா சார் உட்கார்" என்று கேட்கும் ஆட்டோகாரரிடம் தான் "மீட்டர் போட்டா ரேன்" என்று சட்டம் பேசுவோம்.

இப்போது சாதரணமாக ஒரு ஹோட்டலில் சென்று டிபன் ஆர்டர் செய்தாலே அதைக் கொண்டு வந்து பரிமாறும் சர்வர், இறுதியில் பில் கொடுக்கும் போது நமது முகத்தைப் பார்க்கிறார். அவருக்கும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் டிப்ஸ் வைக்க வேண்டும். சாப்பிட்டது ஐம்பது, அதற்குக் கொடுக்கும் டிப்ஸ் பத்து. இன்னும் கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் நடக்கும் டிப்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் தனது கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல. இவ்வளவு தாரளமாக நடந்து கொள்ளும் நாம் தான் ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் ஆட்டோகாரரிடம் வந்தால் மட்டும் சிக்கனம் பேசுவோம். நான் இப்போது இருக்கும் ஹைதிராபாத்க்கு வந்தவர்களுக்குத் தெரியும். பிரியாணி என்றால் அது பாவர்ஜி ஹோட்டல் என்று. அந்தக் கடையின் பிரியாணி என்றால் சாப்பிட விருப்பமில்லை என்று சொல்பவனும் சாப்பிடுவான். அந்த அளவிற்குப் பிரியாணி சுவையாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிட எப்போதும் நமது ஊரில் நடக்கும் கல்யாணப் பந்தி போல் தள்ளுமுள்ளாகத் தான் இருக்கும். இந்த ஹோட்டலில் பில் போடுவதும், பணம் வங்குவதும் நமக்குப் பரிமாறும் சர்வர் தான். மொத்தமாகப் பில் போட்டு கொடுக்கும் போதே அவருக்குத் தேவையான டிப்ஸை அவரே பில்லில் போட்டு நம்மிடம் வாங்கிக் கொள்வார். ஒரு வேளை பில்லில் போட மறந்து விட்டால் அவரே கேட்டு வாங்கிக் கொள்வார். நாம் சாப்பிடும் தொகைக்கு ஏற்ப அவர்களின் டிப்ஸும் இருக்கும்.

இப்போது பயணத்திற்கு "நாங்க இருக்கோம் வாங்க" என்று நம்மைக் கனிவாக அழைப்பவர்கள் கால் டாக்சி வைத்திருப்போர். இவர்கள் இப்போது ஒரு சிஸ்டம் வைத்திருக்கார்கள், ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்டகிலோ மீட்டர் நாம் பயணம் செய்யலாம் அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். இதைப் பிளான் செய்து நாம் புக் பண்ணினால் என்ன ஆகும் என்பதைக் கீழே விளக்குகிறேன். நாம் போக வேண்டிய இடத்திற்கு ஆகும் நேரம் கால் மணி நேரம், அப்படியானால் வருவதற்கும் கால் மணி நேரம், சென்றஇடத்தில் நமக்கு ஆகும் வேலைக்கான நேரம் அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒரு மணி நேரம் நமக்குத் தேவைப்படுகிறது. அதனால் நாம் அந்தக் கால் டாக்சியில் உள்ள ஒரு மணி நேர பிளானை புக் செய்கிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் போகும் போது கால் மணி நேரத்தில் சென்று விடுகிறேம், அங்குள்ள வேலையையும் அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வரும் போது டிராபிக் காரணமாக நாம் பத்து நிமிடம் தாமதமாக வருகிறோம் என்றால் அவர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? அதேப்போல் மற்றொரு ஒரு மணி நேரத்திற்கான பணம். இரண்டு மணி நேரத்திற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உண்டு. டிரைவரிடம் எப்படி என்று கேட்டால் அவர் மீட்டரை காட்டுவார். சார் எனக்கு இதில் எதுவும் கிடைக்காது, நீங்கள் குறைத்துக் கொடுத்தால் எனது சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்று கையை விரிப்பார். இதையே ஒர் ஆட்டோ டிரைவர் செய்தால் நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்கும்.



இன்றைக்கும் சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு சிலஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார். அது மட்டுமல்ல குடித்துவிட்டு நடுச் சாலையில் விழுந்துக் கிடப்பவர்களைச் சற்று ஒதுக்கி போடுவதற்கோ அல்லது அவனுடய ஆடையைச் சரிசெய்வதற்கோ வழியில் செல்லும் எவருக்கும் மனசு வராது. அதையும் மனிதாபிமானம் உள்ள ஓர் ஆட்டோ டிரைவர் செய்வதை நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.

மீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், முதியோர்களை இன்றைய தலைமுறைகள் எவ்வாறு கவனிக்கின்றன என்ற தலைப்பில் பேசிய ஒரு பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியது; இன்றைக்கு வீட்டில் தனியாக இருக்கும் பெரும்பாலான முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மனிதாபிமானம் உள்ள ஏதாவது ஒரு சிலஆட்டோ டிரைவர்கள் தான். இந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை.

சமீபத்தில் நான் சென்னை வந்தபோது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவரிடம் மீட்டர் கட்டணம் பற்றிப் பேசினேன். என்னங்க மீட்டர் போட்டு ஓட்டினா லாபமா? நஷ்டமா? என்றேன், அவரோ எனக்கே தெரியல சார் என்றார். அப்புறம் நஷ்டம் தான் சார். எங்க சார்!! சவாரி கிடைக்க மாட்டேங்குது, எங்களுக்கு உறுதியாக இத்தனை சவாரி கிடைக்கும் என்று இருந்தால் லாபமாக இருக்கும். ஆனால் இப்போது சாவரி கிடைப்பதே குறைவாக இருக்கு என்று சொன்னார். அவர் கூறியதும் எனக்கு உண்மையாகப் பட்டது, காரணம் இவர்களுக்கு இன்று இத்தனை சாவரிகள் கிடைக்கும் என்ற உறுதி இல்லை. ஆனால் அன்றைக்கும் அவர்கள் குடும்பத்தை நடத்த வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு மேல் மட்டத்தில் இருப்பவர்களையே அசைத்துப் பார்க்கிறது, இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். நம்மிடம் வாங்கும் பத்து, இருபது ரூபாய்களைக் கொண்டு அவர்கள் ஒன்றும் பங்களா கட்டிவிட முடியாது. அவர்கள் குடியிருப்பது என்பதோ வாடகை வீடுகளிலும், சேரிகளிலும் தான். அவர்களின் வாழ்க்கை தரமும் பெரிதாக உயர்ந்தாகவும் இல்லை.


இந்த ஆட்டோ டிரைவர்களுக்குக் கேட்கும் தொகையை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுக்கும் சில பயணிகளால் தான் இந்த பிரச்சனை என்றுப் புகார் வேறு கூறுகிறார்கள் முற்போக்காளர்கள். இவர்களால் தான் இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லோரிடமும் அதிகமாக பணம் கேட்பதாகவும் எழுதுகிறார்கள். இப்படிக் கொடுப்பவர்கள் தான் முதலில் திருந்த வேண்டும் என்று அறிவுரை வேறு. என்ன கொடுமை... கண்டிப்பாக நான் கொடுக்கும் பத்து அல்லது இருபது ரூபாய், அவனுடைய குழந்தைக்குப் பிஸ்கட் ஆகத் தான் வீட்டுக்கு போகும். இப்படிக் கொடுப்பதை நிறுத்தி தான் நான் திருந்த வேண்டும் என்றால் நான் திருந்தாமலே இருந்துவிட்டுப் போகிறேன்.

பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களில் சட்டையைப் பிடிப்பது எதனால். மேலே சொல்லியிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் எந்தப் பத்திரிக்கையும் எழுதியதாகவோ அல்லது ஊடகங்கள் பொங்கியதாகவோ தெரியவில்லை. காரணம் இந்தப் பெரிய கார்பரேட் முதலாளிகளில் விளம்பரம் பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் தேவை. இவர்களில் நியாயம், அநியாயம் எல்லாம் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் தான்.

.

Related Posts with Thumbnails