ஒரு தவறை சுட்டிக்காட்டு எழுதுவதாலோ!!.. அல்லது அந்த தவறைப் பற்றிய விவாதத்தில் தனது கருத்துக்களை பதிவு செய்தாலோ!!!.. முதலில் உங்களை நோக்கி வரும் கேள்வி, நீ மட்டும் யோக்கியமா?.. நீ யோக்கியன் என்றால் உன் பக்கத்து வீட்டுக் காரன் யோக்கியமா?.. என்று தான் வரும்.
மேலே சொன்ன இரண்டையும் நீங்கள் எப்படியோ முட்டி மோதி "யோக்கியன்" என்று நிலை நிறுத்தி விட்டால் முடிந்து விட்டது!!! என்று நீங்கள் நினைத்தால்.. உங்களை விட முட்டாள் யாரும் இல்லை :)))
அடுத்து அடிப்பாங்க பாருங்க ஒரு அந்தர் பல்டி.. இந்த உலகத்தில் யாரும் செய்யாததையா?.. நான் செய்துவிட்டேன் என்பார்கள். உலகம்.. உலகம்...என்று அவர் பேசுவதை பார்த்தால் சிலருக்கும், உண்மையில் உலகத்தில் உள்ளவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்களோ!!! என்று பீதியாகிவிடும். ஆனால் இவர்கள் சொல்லும் உலகம் என்பது அந்த முனை "டீக்கடையில் கூடும் நான்கு பேர்" என்பது அனேகருக்கு தெரியாது.
உன்னுடைய சட்டையை கழட்டி பார்!!.. நெஞ்சை பிளந்து பார்!!.. கண்ணாடி முன்பு நின்று பார்!!!.. என்று வரும் யோக்கியமான கேள்விகளை கேட்டும் போது நமக்கும் அடிவயிறு கலங்க ஆரம்பித்துவிடும். நம்முடைய புரிதல் பற்றி நமக்கே சந்தேகம் வருவதை தவிர்க்க இயலாது.
நான் எட்டு வருடங்களுக்கு முன்னால் அம்பத்தூரில் உள்ள ஒரு வாகன உதிரிப்பாகம் தாயரிக்கும் தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வந்தேன். அங்கு நான் இரண்டு வருடங்கள் வேலை பார்த்து இருப்பேன். பின்பு எனக்கு வேறு வேலை கிடைத்ததால் அங்கிருந்து வெளியேறினேன். நான் வேலையை விட்டு வெளியில் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு எனது மாவட்டத்தில் உள்ள ஒரு பையன் வந்து வேலையில் சேர்ந்தான். சொந்த மாவட்டம் என்பதால் அவனிடம் கொஞ்சம் சீக்கிரமாகவே பழகி விட்டேன். கொஞ்சம் துடுதுடுப்பான பையன், வேறு தொழிற்ச்சாலைகளில் வேலைப் பார்த்த முன் அனுபவம் ஏதும் இல்லாததால் யார் என்ன வேலை சொன்னாலும் தயங்காமல் செய்வான்.
"பணியிட பாதுக்காப்பு" என்பது எந்தளவில் இருக்கும் என்பது அம்பத்தூர் தொழிச்சாலைகளில் வேலை பார்த்தவர்களுக்கு தெரியும். மெஷினில் வேலை பார்ப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானலும் எதுவும் நடக்கலாம். ஏதாவது ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கும்.
அந்த தொழிற்ச்சாலையில் இருந்து வெளிவந்து ஆறு மாதம் கழித்து, என்னுடன் அதே தொழிற்ச்சாலையில் வேலைப் பார்த்த பழைய நண்பர் ஒருவரை பார்க்க முடிந்தது. அவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, எனது மாவட்டத்தில் இருந்து வந்த அந்த பையனை பற்றியும் விசாரித்தேன். அப்போது அவர் சொன்னது எனக்கு பேரதிர்சியாக இருந்தது. அவன் மேனுவல் ஹைடிராலிக் பிரஸ் மெசினில்(Manual Hydraulic Press Machine) வேலை பார்க்கும் போது ஒரு "கை" போய்விட்டதாக கூறினார்.
மேலும் "பிளாஸ்டி கை" வாங்கி வைக்கிறோம், உன்னால் முன்பு போல எல்லா வேலையும் செய்ய முடியும், அனைத்து மருத்துவ செலவையும் நாங்களே ஏற்று கொள்கிறோம், ஆயுள் முழுவதும் நாங்களே பணியில் வைத்து கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லி அவனுடைய குடும்பத்தினரிடம் "போலிஸ் கேஸ்" ஆகாமல் பார்த்து கொண்டார்கள். ஆனால் இவர்கள் சொன்னது எதுவும் செய்யாமல் கொஞ்ச நாளிலேயே வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். என்று அவர் சொன்னபோது விக்கித்து நின்றேன்.
நான் மேலே உள்ள சம்பவத்தை சொல்வதற்கு காரணம், சமீபத்தில் அந்த தொழிற்ச்சாலை ஐ எஸ் ஓ தரச் சான்றிதழ்(ISO) பெற்றது. ஆனால் அந்த தொழிற்ச்சாலையில் பாதுக்காப்புக்கான எந்த விதமான புது மாற்றமும் செய்யப்படவில்லை.
எனது "கை" தப்பிவிட்டது என்பதாலும், ஐ எஸ் ஓ(ISO) தரச்சான்றிதழ் பெற்றுவிட்டது என்பதாலும் அந்த தொழிற்ச்சாலையை பற்றி "பணிபுரிய சிறந்த இடம்" என்று நானே ஒரு ஆவணப்படம் எடுத்தால் எப்படி இருக்கும்?... என வாசகர்களின் சிந்தைக்கே விட்டு விடுகிறேன்.
காலத்தின் கட்டாயம் இது.....இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை, எப்படியும் சம்பாதிக்கலாம் என்று திருவாய் மலரும் மெத்த படித்த, முற்போக்கு, திராவிட, பின்நவீனத்துவ, உலக இலக்கியம் படித்த பெருமக்கள் துணைக்கு அழைப்பது யாரை என்றால் "பிதாவே இவர்களை மன்னியும்" என்று சொன்ன இயேசு பெருமானை...
வெட்டி ஒட்டுவதில் அதி மேதாவிகளான நம் பெருமக்கள், அந்த பைபிள் வசனத்தில் கீழே இருக்கும் இரண்டு வரியை சேர்த்து ஒட்டியிருந்தால் நல்லாயிருக்கும்... சரி அவங்களுக்கு என்ன பிரச்சனையோ... :))) நாம அதை ஒட்டி படிப்போம்...
"7 அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.
8 மீண்டும் குனிந்து தரையில் எழுதலானார்.
9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்; அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.
10 அவர் நிமிர்ந்துபார்த்து, "மாதே, எங்கே அவர்கள் ? உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று கேட்டார்.
11 அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என, இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்."
கூட்டத்தினரை பார்த்து "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்று முதல் வரியில் சொல்லிவிட்டு, இரண்டாவது வரியில் "இனிமேல் பாவம் செய்யாதே போ" என்று சொல்லி இயேசு அந்த பெண்ணை நல்வழி படுத்துகிறார்.
ஆனால் தத்துவ முடிச்சுகளை அவிழ்க்க நமது நீதிமான்களுக்கு முதல் வரி மட்டும் போதுமானதால் இயேசு சொன்ன இரண்டாவது வரி தேவையில்லாமல் போயிற்று....
சரி இந்த ஒட்டு வேலையை விட்டுவிட்டு, பைபிளில் சொல்லப்படும் பிரச்சனையையும், இங்கு இவர்கள் ஆராயும் பிரச்சனையையும் ஒன்றா? என்று சீர் தூக்கிப் பார்த்தால்............ ரெம்ப கேவலமாக இருக்கிறது. உண்மையில் யாருக்கு இவர்கள், முட்டு குடுத்து நிறுத்துகிறார்களோ.. அவரே முகம் சுழிப்பார்.....
ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்து காப்பி பண்ணி இது போல் ஒட்டு போடும் வேலையை செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு நாலு முறை படியுங்கள்.... அப்புறம் தத்துவ முடிச்சுகளை அவிழுங்கள்...
ஆமா.... எனக்கு ஒரு டவுட்டு....
எனக்கு தேவைனா ஆத்திகம் முகமூடி போட்டுகிறதும், தேவையில்லைனா நாத்தீகம் முகமூடி போட்டுகிறதும் தான் திராவிட கொள்கையா?........
.
.