Monday, April 25, 2011

வாய‌ மூடுறா!!! என்னை சொன்னேன்.

கடந்த விடுமுறையில், ஊர்ல இருக்கும் போது சந்துரு இன்னைக்கு வர்றானு அம்மா சொல்லும் போதே உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. இந்த வாட்டியும் அவங்க்கிட்ட மாட்டிட்டு முழிக்காதடா?.. உசாரா இருந்துக்கனு என்னை நானே சொல்லிக்கொண்டேன். சந்துரு எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த யமுனா அக்காவின் பையன். இவன் பிறந்தவுடன் யமுனா அக்கா சென்னையில் போய் செட்டில் ஆகிவிட்டார்கள். மே மாதம் ஸ்கூல் லீவில் மட்டும் ஊருக்கு அவங்க அம்மாவை பார்க்க வருவாங்க, அப்ப எங்க வீட்டுக்கும் வருவது வழக்கம். "இந்த காலத்து பசங்ககிட்ட பார்த்துத்தான் பேசனும்" என்பதை புரியவைத்தவன் இவன் தான்.

இப்படித்தான் நான் போன வருசம் ஊருக்கு வந்திருக்கும் போது, இந்த யமுனா அக்காவும், சந்துருவும் ஊருக்கு வந்திருந்திருந்தார்கள். பக்கத்தில் ஊரில் இருக்கும் அவங்க அம்மாவை பார்த்துவிட்டு மதியம் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள், கூடவே நம்ம சந்துருவும் வந்திருந்தான். என்னை சந்துரு "அங்கிள்" என்று தான் கூப்பிடுவான். எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் போதே யமுனா அக்காவை ஏதாவது சொல்லி கிண்டல் பண்ணுவது என்னுடைய வழக்கம். அன்றும் அப்படித்தான் யமுனா அக்காவிடம் என்னுடைய அம்மா, சென்னையில் இருந்து எப்ப வந்தேம்மா? என்று கேட்டார்கள். அதுக்கு யமுனா அக்கா, "மார்னிங் செவன் தேர்ட்டி" என்று இங்கிலீஷில் பதில் சொன்னார்கள். பக்கத்தில் இருந்த நான், "துரையம்மா இப்ப எல்லாம் இங்கிலி பீசில் தான் பேசுது" என்று சொன்னது தான் தாமதம் பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரித்துவிட்டார்கள், ஒருவனை தவிர.. அதுதான் நம்ம சந்துரு.. நானும் சரி, பையனுக்கு காமெடி புரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து யமுனா அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு செயர் போட்டு அங்கு உக்கார்ந்திருந்தேன். யமுனா அக்கா பக்கத்தில் உக்கார்ந்திருந்த சந்துரு மெதுவாக என்னிடம் வந்தான். வந்தவன், என்னிடம் "அங்கிள் நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க? என்றான். நானும் சும்மா இல்லாமல் "மெட்டீரியல் இஞ்சினீயர்" என்று கெத்தா சொல்லிட்டேன். என்ன அங்கிள் பீட்டர் விடுறீங்க.... சும்மா தமிழ்ல சொல்லுங்க என்று போட்டான் பாருங்க ஒரு பிட்டு, கொஞ்சம் ஆடித்தான் போனேன். சுதாரித்து பதில் சொல்லுவதற்குள் வீட்டில் இருந்த மொத்த பேரும் சிரிச்சு முடிச்சாச்சி......

என்ன அங்கிள் மெட்டீரியல் இஞ்சினீயருக்கு தமிழ்ல என்ன?.. என்று திரும்பவும் கேட்டான். அது.......... அது வந்து... இஞ்சினீயர் என்றால் "பொறியாளர்" டா என்று சத்தமாக சொல்லி சிரித்த என்னை, ஒரு சின்ன ரியாக்சனும் இல்லாமல் அப்படியே நக்கலாக பார்த்து விட்டு, இஞ்சினீயர்னா, பொறியாளர்னு எங்க்களுக்கும் தெரியும் அங்கிள், முன்னாடி இருக்கிற மெட்டீரியலுக்கு என்ன தமிழ் வார்த்தை என்று என்னை மடக்கினான். டேய் மெட்டீரியலுனா? "மெட்டல்" டா, அதான் உலோகம், கனிமம், தாது போன்றவை. அவைகளை மூலப்பொருட்கள் என்று சொல்லுவார்கள் அதுதான் அதனுடைய தமிழ் அர்த்தம் என்று பாடம் நடத்தினேன். போங்க அங்கிள் மெட்டீரியல் என்ற ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரிய பாடம் நடத்துறீங்க.. என்று சிரித்து விட்டு, அப்ப நீங்க மெட்டல் எஞ்சினீயரா?.. இனி நான் உங்களை மெட்டல் அங்கிளுனு கூப்பிடுறேன் என்று சொல்லி விட்டு ஓடினான்.

அவனுடைய அம்மாவை நான் கலாய்த்த போது, இவன் மட்டும் சிரிக்காமல் இருந்ததுக்கு அர்த்ததை இப்போது புரிந்து கொண்டேன்.. அட சாமீ.. இப்ப உள்ள பசங்க என்னா விவரம்......... !!!!!!..
இந்த சந்துரு தான், இந்த வருட லீவிலும் ஊருக்கு வருகிறான் என்று அம்மா காலையில் சொல்லி கொண்டிருந்தார்கள். இந்த வருடமும் அவனிடம் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள கூடாது என்று கவனமாக இருந்தேன். அதற்கு ஏற்றது போல் ஆபிஸில் இருந்து அவசரமாக ஒரு போன் அழைப்பு வந்தது. என்னுடைய மேனேஜர் தான் பேசினார். அவசரமாக ஒரு பைல் மெயில் பண்ணுறேன், கொஞ்சம் குவாலிட்டி செக் பண்ணி அனுப்புங்க என்று சொன்னார்.

நானும் நல்லவன் போல் லேப்டாப்பை ஆன் பண்ணி அந்த பைலை டவுன்லோட் செய்து வேலை செய்ய ஆரம்பிக்கும் போது, யமுனா அக்காவும் சந்துருவும் வந்தார்கள். வந்த அக்காவிடம் நலன் விசாரித்துவிட்டு, சந்துருவை என்னுடன் அழைத்து கொண்டு லேப்டாப் முன் அமர்ந்தேன். என் பக்கத்தில் இருந்த செயரில் அவனையும் உக்கார சொல்லிவிட்டு, என்னுடைய வேலையை ஆரம்பித்தேன். அது எக்ஸல் பைல். அதில் சில மெட்டீரியல் விபரங்கள் இருக்கும் அவை ஸ்டாண்டர்டு பார்மெட்டுக்கு சரியாக உள்ளதா என்பதை தான் நான் சரி பார்க்க வேண்டும். அதற்க்காக எக்ஸலில் உள்ள பல பார்முலாக்களை உபயோகிக்க வேண்டும். நான் ஒவ்வொரு பார்முலாவாக போட்டு செக் செய்து கொண்டு இருப்பதை, சந்துரு ஆச்சரியமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தவன், என்னிடம் என்ன அங்கிள்!!!! இந்த வேலை தான் ஆபிஸிலும் பார்ப்பீங்களா? என்றான். நானும் ஆமாப்பா.. இந்த பார்முலா எல்லாம் உபயோகப்படுத்துவது ரெம்ப கஷ்டம். கொஞ்சம் மாறினாலும் எல்லாம் தப்பாயிடும் என்று பில்டப் கொடுத்தேன்.

என்ன அங்கிள், உங்களுக்கு மேக்ரோ எழுத தெரியாதா?.. விபில அதான் விசுவல் பேசிக்ல ஒரு மேக்ரோ எழுதி வைச்சீங்கணா 5 நிமிச வேலை. அதுவே ஆட்டோமெட்டிக்கா செக் செய்யும் என்றான். இப்ப‌டி ஒவ்வொருவாட்டியும் நீங்க‌ லொட்டு.. லொட்டுனு பார்முலாவை டைப் ப‌ண்ண‌ வேண்டிய‌துயில்லை என்று சொல்லிவிட்டு ந‌க்க‌லா சிரித்தான்...

அப்ப‌டியே அவ‌னை பார்த்து வ‌ழிந்துவிட்டு, வ‌லிக்காத‌ மாதிரியே லேப்டாப்பை இழுத்து மூட‌ தொட‌ங்கினேன்..

என்ன‌ அங்கிள் வேலையை முடிச்சிட்டீங்க‌ளா?... வாய‌ மூடுறா!!! என்று என்னை நானே சொல்லிவிட்டு, அவ‌ன் கேட்ட‌ கேள்வியை காதில் வாங்காம‌ல், நீ அடுத்த‌ வ‌ருச‌ம் எந்த‌ கிளாஸ்டா போக‌ போறே? என்றேன்.

நான் செவ‌ந்த் கிளாஸ் போறேன் அங்கிள் என்றான்..

Tuesday, April 12, 2011

தேர்த‌ல்_இறுதிக்க‌ட்ட‌ ஓட்டு சேக‌ரிப்பு

தேர்த‌லில் போட்டியிடுப‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளை ம‌க்க‌ளிட‌ம் சொல்லி ஓட்டு கேட்ப‌தெல்லாம் சினிமாக்க‌ளில் ம‌ட்டும் தான் பார்க்க‌ முடியும் என்று நினைக்கிறேன்...

ஒவ்வொருவ‌ரின் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளையும், கொலைபாத‌க‌ங்க‌ளையும் காட்டி ஓட்டு கேட்கிறார்க‌ள். எந்த‌ ஆட்சியில் அதிக‌மாக‌ வ‌ன்முறைக‌ள் க‌ட்ட‌விழ்க்க‌ ப‌டுகிற‌து என்று போட்டா போட்டி போட்டு த‌ங்க‌ள் ஊட‌க‌ங்க‌ளில் ஒளிப‌ர‌ப்புகிறார்க‌ள். க‌ண‌க்கில் அட‌ங்காத‌ குற்ற‌ங்க‌ளை காட்டி எங்க‌ள் ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?... உன‌து ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?.. என்று போட்டி போடும் வேட்பாள‌ மாக்க‌ளே(எழுத்துப்பிழை இல்லை)!!!!.. ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் ம‌க்க‌ளுக்கு செய்த‌ ந‌ல்ல‌ விச‌ய‌ம் ஒன்றை உங்க‌ளால் சுட்டிக் காட்ட‌முடியுமா?..
எதிரெதிர் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளை காட்டி ஓட்டுப்பிச்சை கேட்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளே!!!... உங்க‌ள் ஆட்சியில் ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் செய்த‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை ப‌ட்டிய‌ல் இட்டு, ம‌க்க‌ளிட‌ம் காட்டி எப்போது ஓட்டு கேட்க‌ப் போகிறீர்க‌ள்?..

அவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் ந‌ட‌ந்த‌ ஊழ‌ல் ம‌ற்றும் வ‌ன்முறைக‌ளை இவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் குறைவாக‌ இருக்கிற‌து என்று ந‌டுநிலைமையாள‌ர்க‌ளும் வாய் ச‌வுடால் அடிக்கிறார்க‌ள்.... அட‌ பெரிய‌ம‌னுச‌ங்க‌ளா!!!! ஊழ‌ல், வ‌ன்முறை இர‌ண்டுமே அர‌சிய‌லில் த‌ப்பு.. அதில‌ சின்ன‌து, பெருசு... அதிக‌ம், குறைவு.. காமெடியா இல்ல‌... போங்க‌ய்யா!!!! போங்க‌.... நீங்க‌ளும் உங்க‌ள் ந‌டுநிலைமையும்.....

அர‌சிய‌ல் என்றாலே ஊழ‌லும், வ‌ன்முறையும் தான் என்ப‌து பெரும்பால‌ன‌ ம‌க்க‌ளில் க‌ருத்து. அந்த‌ மாயையை இப்போது உள்ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் ஊட‌க‌ங்க‌ளும் அழ‌காக‌ வ‌ள‌ர்த்தெடுகின்ற‌ன‌. இப்ப‌டியே போனால் வ‌ன்முறையும், ஊழ‌லும் தான் அர‌சிய‌ல் செய்ய‌ முக்கிய‌ கார‌ணிகள் என்று ஆகிவிடும்.. இந்த‌ ஊட‌க‌ங்க‌ளும் அத‌ற்கு தூப‌ம் போடும்..

செழிக்க‌ட்டும்‌!!!! ஊழ‌ல்‌ அர‌சிய‌ல்...

வ‌ள‌ர‌ட்டும்‌!!!! இல‌வ‌ச‌ங்க‌ள்...

--------X--------X-------X----------X----------X-------------X------------X----------------X----------X----

என்னுடைய‌ தொகுதி ப‌த்ம‌னாப‌புர‌ம். என்னுடைய‌ தொகுதி வேட்பாள‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் தான்.

ஆஸ்டின் - தேமுதிக‌

புஷ்ப‌ லீலா ஆல்ப‌ன் - திமுக‌

சுஜித்குமார் - பிஜேபி

இதில் தேதிமுக‌ வேட்பாள‌ர் ஆஸ்டின் ம‌க்க‌ளுக்கு அறிமுக‌மான‌ ஒருவ‌ர். இவ‌ர் முன்பு அதிமுகாவில் இருந்த‌வ‌ர். விஜ‌ய‌காந்த‌ க‌ட்சி ஆர‌ம்பித்த‌வுட‌ன் வ‌ந்து சேர்ந்த‌வ‌ர்.

இந்த‌ தேர்த‌லில் பிஜேபி த‌னியாக‌ வேட்பாள‌ரை நிறுத்தியிருக்கிற‌து. எங்க‌ள் ப‌குதியில் பிஜேபிக்கு க‌ணிச‌மான‌ ஓட்டு உண்டு. எது எப்ப‌டியிருந்தாலும் க‌டைசி இர‌ண்டு நாட்க‌ள் ந‌ட‌த்தும் வாக்கு சேக‌ரிப்பு தான் எங்க‌ள் தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும்..

அப்ப‌டி என்ன‌தான் ப‌ண்ணுவார்க‌ள்?.. யாரெல்லாம் வெளியூரில் இருக்கிறார்க‌ள்? என்ப‌த‌ன் க‌ண‌க்கெடுப்பு ஒன்று.

ஊரில் இருந்தும் ஓட்டு போட‌ பூத்திற்கு வ‌ராத‌வ‌ர்க‌ளின் க‌ண‌க்கெடுப்பு ம‌ற்றொன்று..

இந்த‌ க‌ண‌க்கெடுப்பு ப‌ட்டிய‌ல் போட‌ ஒவ்வொரு க‌ட்சிக்கும் ஒரு குழுவே இருக்கும். கார‌ண‌ம் வெளியூர்க‌ளிலும், வெளிநாடுக‌ளும் இருப்ப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை இங்கு அதிக‌ம். இறுதியாக‌ ப‌ட்டிய‌லில் வ‌ரைவு அந்த‌ந்த‌ க‌ட்சி பெருசு‌க‌ளின் கைளுக்கு சென்றுவிடும்.

அப்புற‌ம் என்ன‌!!!!!!! எந்த‌ பூத்தில் எந்த‌ க‌ட்சியின் கை ஓங்கி இருக்கிற‌தோ அங்கே அந்த‌ ப‌ட்டிய‌லில் உள்ள‌வ‌ர்க‌ளின் ஓட்டுக‌ளை போட‌ வேண்டிய‌துதான்..

இப்ப‌ எங்க‌ தொகுதியில‌ எந்த‌ க‌ட்சி ஜெயிக்க‌ போவுதுனு என‌க்கு புரியுது.. உங்க‌ளுக்கு புரியுதா?....... :)

Monday, April 4, 2011

ஊர் நினைவ‌லைக‌ள்_மாம்ப‌ழ‌த்துறையாறு அணை

நீங்க‌ எந்த‌ ஊரு த‌ம்பி?..

நான் க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ வில்லுக்குறி..

க‌ண்ணுக்கும், ம‌ன‌சுக்கும் ப‌சுமை த‌ரும் ஊருதான்.. உங்க‌ளுக்கு இந்த‌ சூடான‌ சென்னை வாழ்க்கை கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மாதான் இருக்கும்..

ஆமாங்க‌.. என்று சொல்லிவிட்டு அவ‌ர‌து முக‌த்தை பார்த்தால், ரெம்ப‌ ச‌ந்தோச‌மான‌ புன்ன‌கையுட‌ன், உண‌ர்ச்சி பொங்க‌, எங்க‌ள் ஊரில் உள்ள‌ வ‌ய‌ல் வெளிக‌ள் ப‌ற்றியும், நீர் நிலைக‌ள் ம‌ற்றும் அணைக‌ள் ப‌ற்றியும் அவ‌ற்றின் பெருமைக‌ளைப் ப‌ற்றியும் விவ‌ரிப்பார். அதில் என‌க்கு தெரியாத‌ சில‌ விச‌ய‌ங்க‌ளும் அட‌ங்கும்.

வெளியூரில் இருக்கும் ந‌ம்மை போன்ற‌ ம‌க்க‌ளுக்கு சொந்த‌ ஊரின் நினைவுக‌ளை ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசும் போது ந‌ம்முடைய‌ ம‌ன‌ம் த‌ன்னைய‌றியாம‌ல் ஒருவித‌ ம‌கிழ்ச்சியில் க‌ளிப்புறுவ‌து ம‌றுக்க‌யிலாது..

ஆனால் இவ‌ர்க‌ள் விய‌ந்து சொல்லும் அனைத்து விச‌ய‌ங்க‌ளுக்கும் ந‌ம்முடைய‌ ஊர், இப்போதும் ஏற்புடைய‌துதானா? என்ற‌ கேள்வி என்னில் எப்போதும் எழுவ‌து உண்டு..
சிறுவ‌ய‌தில் எங்க‌ள் ஊரில் கிண‌றுக‌ள் அதிக‌மாக‌ இருக்கும். அதில் இருந்து இறைக்கும் நீர் தான் குடிப்ப‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும். இந்த‌ கிண‌றுக‌ள் 50 அடியில் இருந்து 60 அடிக‌ள் வ‌ரை ஆழ‌ம் இருக்கும். இதில் 10 - 15 அடிக‌ள் நீர் எப்போதும் இதில் இருக்கும். கோடைக்கால‌த்திலும் வ‌ற்றாத‌ சில‌ கிண‌றுக‌ளை எங்க‌ள் ஊரில் நான் பார்த்த‌து உண்டு.

கால‌ ஓட்ட‌த்தில் இந்த‌ கிண‌றுக‌ளில் நீர் ஊற்றுக‌ள் குறைய‌ தொட‌ங்கிய‌து. ஒரு க‌ட்ட‌த்தில் முற்றிலும் நின்று க‌ட்டாந்த‌ரையை காட்டி ப‌ல்லிளித்த‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான் எங்க‌ள் ஊரில் உள்ள‌ ப‌ல‌ கிண‌றுக‌ளுக்கு மூடுவிழா போட‌ப்ப‌ட்ட‌து. அதில் என‌து வீட்டில் உள்ள‌ கிண‌றும் அட‌ங்கும். இப்போது எங்க‌ள் ஊரில் நீர் உள்ள‌ கிண‌றுக‌ளை பார்ப்ப‌து என்ப‌து மிக‌ அரிது.

கிணறுகளுக்கு மூடுவிழா போட்ட வீட்டில் எல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டது. இந்த ஆழ்துளைக் கிணறுகளில் ஆழம் சுமார் 250 அடியில் இருந்து 300 அடிகள்.. இப்போது இந்த ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து கொண்டு தான் வருகின்றது.

நிலத்தடி நீர் மட்டம் தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது, என்பது கண்முன்னே அழகாக தெரிகிறது.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் குளம் மற்றும் வாய்க்கால்கள் அதிகமாக இருக்கும். இவையிரண்டும் தான் விவசாயத்திற்கு ஊன்று கோலாய் இருந்தவை. இந்த குளங்கள் மற்றும் வாய்க்கால் பக்கம் நிலம் வைத்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி பல குளங்களை குட்டையாக மாற்றியதுண்டு.. சில நீர் நிலைகள் இருந்த இடங்களே, தடம் தெரியாமல் இன்று அடையாளம் தொலைத்து நிற்கின்றன. புதிய குளங்கள் எதுவும் வெட்டப்படவும் இல்லை. விவசாயத்திற்கு நீர் ஆதாரம் குறைவாக இருக்கிறது என்று பல விளைநிலங்கள் வீடுகளாக மாறி வருகிறது.

ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம்?_க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ள்

மேற்கண்ட என்னுடைய பதிவில் நான் காமெடியாக எழுதியிருந்தாலும் இதுதான் உண்மை..

எங்கள் ஊரில் மலைகள் அதிகமாக இருப்பதால் பருவ மழைகள் பொய்ப்பது இல்லை(2004 சுனாமி நிகழ்வுக்கு பிறகு பருவ மழைகளில் மாறுதல் உள்ளதாக சிலர் சொல்லுகிறார்கள், அது எவ்வளவு தூரம் உண்மையென்று எனக்கு தெரியவில்லை), ஆனால் இந்த மழை நீர்கள் சரியாக சேமிக்கப்படுவது இல்லை. அப்படியே கடலில் கலந்துவிடுகிறது. கோடைக்காலங்களில் எங்கள் ஊரில் வெயிலின் உக்கிரம் முன்பெல்லாம் அதிகமாக தெரிவதில்லை. ஆனால் இப்போது எங்கள் ஊரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

மேலே உள்ள விசயங்களால் குறைப்பட்டிருக்கும் எனக்கு, ஊரில் நேரில் பார்த்த சில ஆக்க பூர்வமான செயல்கள் ஆறுதல் தந்தன

பாலிதீன் பைகள் முற்றிலும் தடைச்செய்யபட்டிருக்கிறது. இந்த பைகளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடமும் அதிகமாக சென்றைடைந்திருக்கிறது. கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்பவர்களும் கைகளை வீசிக்கொண்டு செல்லாமல், கையில் துணிப்பைகளுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து எங்கள் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. எல்லா மாவட்டங்களிலும் இந்த கட்டுப்பாடு வந்தால் நன்றாக இருக்கும்..

இந்த ஆண்டு கட்டப்படும்.. அடுத்த ஆண்டு கட்டப்படும் என்று சில ஆண்டுகளாக எங்கள் ஊரில் சொல்லிவந்த மாம்பழத்துறையாறு அணைக்கட்டு ஒரு வழியாக கடந்த ஆண்டு கட்டி முடிக்கப் பட்டுவிட்டது. இது அமைந்திருக்கும் பகுதி இயற்கையாக அணைக்கட்டுவதைக்கு ஏதுவாக இருந்த இடம். மலைகளில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் இந்த அணையில் சேமிக்க படுகிறது... இந்த அணையின் மூலம் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மற்றும் விளை நிலங்களுக்கான நீர் ஆதரம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது...

அணை ப‌ற்றிய‌ விப‌ர‌ம் எல்லாம் இங்க‌ பாருங்க‌..நான் போன‌து ம‌ழைக்கால‌ம் இல்லீங்கோ..போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரெம்ப‌ நாள் ஆச்சுங்கோ..

Related Posts with Thumbnails