Monday, May 30, 2016

இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!

இன்றுடன் ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது, கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் படி என்னை மாற்றியமைத்தது இந்த ஐபிஎல் போட்டிகள். அதுவரையிலும் இந்தியா மட்டுமே ஜெயிக்க வேண்டும், எதிர் அணி எவ்வளவு வலுவாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலையில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக உலகத்தில் உள்ள அத்தனை கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி ரசிகன். பள்ளியில் விடுமுறை விட்டுவிட்டால் போதும் பேட்டைத் தூக்கி கொண்டு கிரவுண்டுக்கு ஓடி விடுவேன். சோறு தண்ணி இல்லாமல் 10 ரூபாய் பெட் மேட்சுக்கு ஊர் ஊராகச் சுற்றிய வரலாறு கூட உண்டு.

இப்படி எல்லாம் எழுதியவுடன் பெரிய ஒரு ஆல் ரவுண்டரை இந்தியா டீம் இழந்திடுச்சோ! என்று நீங்கள், நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல. பேட்டிங் என்றால் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது தெரியும், பவுலிங் என்றால் பந்தை மாங்கா எறிவது போல் எறியாமல் கையை சுற்றிப் போட தெரியும். எனக்கு அந்த அளவிற்குத் தெரிந்திருப்பதே என்னுடைய டீமிற்கு பெரிய தகுதியாக இருந்தது என்றால் எங்களுடைய டீம் எவ்வளவு பெரிய டீம் ஆக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், வாரம்தோறும் ஊரில் பல இடங்களில் நடக்கும் பெட் மேட்சுகளில் எங்க டீம் போய் அடி வாங்காத இடமே கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருந்துவிட்டு, அடுத்த வாரமும் அடி வாங்கிய டீமிடம் போய் பெட் மேட்சு கேட்போம்.



நான் விளையாடும் போது எட்டு ரூபாய்க்கு ரப்பர் பந்து வாங்குவதே பெரிய கஷ்டம், அதற்கு வாரம் தோறும் தலைக்கு 50 காசு, 1 ரூபாய் என்று டீமில் வசூலிக்க வேண்டும், அந்த 50 காசுக்கும் 1 ரூபாய்க்கும் கடன் சொல்லுறவங்களே டீமில் அதிகம் பேர் இருப்பார்கள். இது இப்படி இருக்க வாரம்தோறும் 10 ரூபாய் பெட் மேட்சு போட்டுத் தோற்பதற்கு எவரிடமும் பணம் இருக்காது, அதற்கு என்று சில புரவலர்களை வைத்திருப்போம். நம்ம புரவலர்கள் எல்லாம் உள்ளுரில் வேலை செய்பவர்களாக தான் இருப்பார்கள். மாலையில் வேலை முடித்து கிரவுண்டுக்கு வரும் புரவலர்களிடம், அண்ண! இந்த வாரம் அந்த ஊர் டீமோட பெட் மேட்சு போடுறோம், தோத்த காசை வாங்குறோம் அண்ண! நீங்க, தான் ஒப்பனிங் பேட்டிங்! கெத்து காட்டுறோம்! மறந்திறாதீங்க! என்று உசுப்பேற்ற சில பேர், நம்ம டீம்ல ரெடியா இருப்பாங்க.

அண்ணா! நீங்களும் நானும் தான் ஒப்பனிங் பேட்டிங் இறங்குகிறோம்! நான் அடிக்கவே மாட்டேன் அண்ணேன், ஸ்டிரோக் மட்டும் வச்சு ஓடி வந்து உங்களுக்கு வாய்ப்பு தருவேன், நீங்க தான் பேட்டை சுத்தணும்! இன்னைக்கு நாம் யாருன்னு, அந்த டீமுக்கு காட்டுறோம்! அண்ண, ஆனா ஒண்ணு, நீங்க பேட்டை சுத்தும் போது மட்டும் பந்தை பார்த்து சுத்துங்க! ஏன்ன, நீங்கப் பேட்டை நல்லா தான் சுத்துறீங்க, என்ன ஒண்ணு பந்து தான் பேட்டில் பட மாட்டேங்குது, ஆனா ஒண்ணு அண்ணே! பந்து மட்டும் பேட்டில் பட்டால் போதும் கிரவுண்டுக்கு வெளிய தான்னேன் என்று தன்னை கலாய்க்கிறானா, பாராட்டுறானா! என்று தெரியாமல் பெட் மேட்சுக்கு வந்து நிற்கும் புரவலர் அண்ணனிடம் பெட் மேட்சுக்கான பணம் வாங்கி விட்டால் போதும், “ஒப்பனிங் பேட்டிங் நீங்க தான்!!” என்று சொன்னவன் அவர் கண்ணிலிருந்து காணாமல் போயிருப்பான்.

இப்ப மற்றொருவன் வந்து, அண்ணா! நாம தான் டாஸ் ஜெயித்திருக்கிறோம், பெட் மேட்சுக்கு காசு வேற, நீங்க தான் கொடுத்து இருக்கிறீர்கள், எதிரணியில் பவுலிங் நல்லா போடுறவன் பேரை சொல்லி, அவன் வேற முதல் ஓவரே பவுலிங் போட இருக்கிறான், உங்க விக்கெட் போச்சுன்னா டீம்ல எவனும் அப்புறம் ஒழுங்க ஆட மாட்டன், நீங்க தான் அண்ணே! மேட்சை நடத்தணும், வாண்ணே! வந்து அம்பயரா நில்லுன்னு! என்று அடிக்கிற வெயிலுல கொண்டு மண்டைக் காய விட்டுடுவானுங்க.

ஊர்ல விளையாடும் போது அம்பயர் எல்லாம் சும்மா தான், பேட்டிங் பண்ணுறவன் சொல்லுறது தான் அம்பயர் சொல்லுவார், பேட்டிங் பண்ணுறவன் வைடு என்று சொன்னால் அம்பயர் வைடு கொடுப்பார், விக்கெட் இல்லையென்றால் விக்கெட் இல்லை, எதிரணியில் உள்ளவன் சண்டை போடுவது மட்டும் அம்பயரிடம், பெட் மேட்சில் அம்பயராக நிற்பதற்கும், தெருவில் குழாயடியில் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

அம்பயரா நிற்கும் புரவலர் அண்ணன், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், நான் போகலாமா என்று டீம் நண்பர்களை பார்த்தால், அண்ணே! நல்ல டார்கெட் வைக்கணும், இப்ப ரன்ரேட் ரெம்ப கம்மிண்ணேன், நீங்க வேற பெட் மேட்சுக்கு பணம் கொடுத்து இருக்கீங்க! என்று அப்பப்ப பீதியை காட்டி, நாம ஜெயிக்கணும் அண்ணே! அவன் போகட்டும், இவன் போகட்டும், கடைசி ரெண்டு ஓவர் அண்ணேன், நீங்க தான் பேட்டை சுத்துறீங்க்க, நாலு சிக்சர் போகும், ரன்ரேட்டும் நல்லா இருக்கும், என்று வாயிலேயே வடை சுட்டுவிட்டு கடைசி வரைக்கும் பேட்டை கையில் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி ஊர்க் கதை பேசினால் அப்படியே நீண்டு விட்டுப் போகும், நான் சொல்ல வந்தது சொல்ல முடியாமல் போகும். பேச்சுலராக சவுதியில் இருக்கும் போது, என்னுடன் ப்ராஜெக்ட்க்கு வந்த மூன்று பேருடன் சேர்ந்து தங்கியிருந்த வில்லாவிற்குள் கிரிக்கெட் விளையாடுவோம். நான்கு பக்கமும் இரண்டு ஆள் உயரத்திற்குச் சுவர் இருக்கும், அதற்குள் தான் நாங்கள் நான்கு பேரும் வெளியில் தூக்கி அடித்தால் அவுட் என்று வைத்து விளையாடுவோம். நாங்கள் அப்போது தான் முதல் முறையாகச் சவுதிக்கு வந்திருந்தோம், வெளியில் யாரையும் அறிமுகம் கிடையாது, கொஞ்ச நாட்களில் எங்கள் ப்ராஜெக்ட்லில் ஒரு சிறிய பகுதியை அவுட்சோர்சிங் கொடுத்திருந்தோம், அந்த அவுட்சோர்சிங் கம்பெனிலிருந்து இரண்டு மலையாளி நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த மலையாளி நண்பர்களும் லீவு நாட்களில் எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுவார்கள், அவர்கள் இருவரும் சவுதி வந்து நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கும். அதனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள், நாங்கள் தங்கியிருக்கும் வில்லாவிற்கு பக்கத்தில் ஒரு காலியிடம் இருப்பதாகவும், அதில் கிரிக்கெட் விளையாடலாம், பலர் லீவு நாட்களில் விளையாடுவார்கள் என்றும் அந்த மலையாளி நண்பர்கள் சொன்னார்கள். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் எங்கள் நால்வரையும் வற்புறுத்தி அந்தக் காலியிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுடைய நண்பர்கள் சிலரும் இருந்தார்கள், பவுலிங் போடுவதற்கு ஒரு தளம் போல் போட்டு விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. நான்கு சுவருக்குள் விளையாடிய எங்களுக்கு அந்த இடத்தில் விளையாடியது ரெம்பவே ஜாலியாக இருந்தது.



மறு வாரமும் அந்த மலையாளி நண்பர்களுடன் விளையாட அந்தக் காலியிடத்திற்கு சென்றோம், ஆனால் அன்று அந்த இடத்தில் நமது பக்கத்து நாட்டு மக்கள் (பாகிஸ்தான்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். மலையாளி நண்பர்கள் அவர்களிடம் போய் பேசினார்கள், நாங்கள் இப்ப தான் விளையாட வந்தோம், விளையாடி முடிப்பதற்கு ரெம்ப நேரம் ஆகும், உங்களுக்கு விளையாடனும் என்றால் வாருங்கள்! ஒரு மேட்சு போடலாம் என்று அந்தப் பக்கத்து நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று மலையாளி நண்பர்கள் எங்களிடம் வந்து சொன்னார்கள். பின்னர் அவர்களே இவங்க! கூட விளையாட வேண்டாம் நாம அடுத்த வாரம் வந்து விளையாடலாம் என்று சொன்னார்கள், கிரகம்! என்னோட வாயிதான் சும்மா இருக்காம, ஊர்லயே பெரிய பெரிய டீம் கூடவே விளையாடி ஜெயித்துருக்கோம், இவங்க என்ன பெரிய பிசாத்து டீம், வாங்க ஒரு மேட்சு போடுவோம் என்று நண்பர்களை உசுப்பேற்றினேன்.

மலையாளி நண்பர்கள் என்னிடம் மட்டும், மலையாளத்தில் பேசுவார்கள், அவர்கள் என்னிடம், "வேண்டாம் ஸ்டீபன்! நமக்கு இவிட பந்து பொறுக்கும் சோலி மாட்டும் தான் கிட்டும்" என்று சொன்னார்கள், நான் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், என்னுடைய நண்பர்களிடம் வாங்க விளையாடுவோம் என்று சொல்லியது தான் தாமதம், பக்கத்து நாட்டு மக்கள் டாஸ் போட அழைத்தார்கள், போட்ட டாஸில் அவர்கள் தான் ஜெயித்தார்கள், பேட்டிங் என்று சொல்லி, இரண்டு பேர் பேட்டிங் இறங்கினார்கள். மலையாளி நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

நம்ம நண்பர் ஒருவர், கொஞ்சம் நல்லா பவுலிங் பண்ணுவார்கள், அவரை தான் ஓபனிங் பவுலிங் போட அழைத்தோம், பந்தைப் பக்கத்து நாட்டு மக்கள் தான் கொடுத்தார்கள், டென்னிஸ் பாலில் செல்லோடேப் சுற்றி இருந்தார்கள், அதை வைத்துத் தான் விளையாட வேண்டும் என்று சொன்னார்கள், நார்மலா நாம விளையாடும் டென்னிஸ் பால் கொஞ்சம் கனமாக இருக்கும், இது ரெம்ப லைட் வெயிட், சரி என்று சொல்லிக்கொண்டு பவுலிங் போட ரெடியானோம்.

நாங்கள் ஆறு பேரும் பில்டிங் நிற்க தயாரானோம், மிட்விக்கெட், மிட்ஆன், மிட்ஆப் என்று நின்று கொண்டிருந்த எங்களை, பேட்டிங் பண்ணுவதற்கு நின்று கொண்டிருந்த பக்கத்து நாட்டுக்காரர் கோ லாங்! கோ லாங்! என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை, இவன் ஏண்டா பில்டிங் செட் பண்ணுறான், நாம் தானே பீல்டிங் செட் பண்ணனும்! இவனுக்கு என்ன வந்தது? என்று அவன் சொல்வது புரியாது போலவே நிற்க, என்னிடம் வந்து கையை பிடித்து அழைத்துக்கொண்டு சிக்ஸ் லைனில் நிற்க வைத்தான். நான் அவனிடம் "எனக்குத் தெரியும் போடா, போய் ஒழுங்கா பேட்டிங் புடிடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு திரும்பவும் வந்து மிட்ஆப் ல் வந்து பீல்டிங் நின்றேன், அவன் திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று சொன்னான், எல்லாம் எனக்குத் தெரியும், பேட்டிங் புடிடா என்று சொல்லிக்கொண்டே நண்பரை பவுலிங் போடச் சைகை காட்டினேன்.

பேட்டிங் பண்ணுவதற்க்கு நின்ற பக்கத்து நாட்டுக்காரர் ஸ்டைல் ஒரு மார்க்கமாக இருந்தது, நம்ம ஊரில் டீம் பிரிக்கும் போது கடைசிவரை எவரும் எடுக்காமல் ஒருத்தனை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, கடைசியில் எடுத்து டபுள் சைட் பேட்டிங்டா நீ! என்று நாசூக்காகப் போடுவோம் தானே, அவன் பேட்டை எவ்வாறு பிடிப்பானோ! அதுபோல் தான் பக்கத்து நாட்டுக்கார ஓபனிங் பேட்ஸ்மேன் பேட்டைப் பிடித்திருந்தான். நம்ம நண்பர் ஓடி வந்து முதல் பாலை போட்டார், போட்டது தான் தெரியும், பந்து பேட்டில் பட்டு சிக்ஸ் லைன் தாண்டி விழுந்தது. பந்து விழுந்த திசை சரியாக என் கையை பிடித்துக் கொண்டு பக்கத்து நாட்டுக்காரர் கொண்டு விட்ட இடம். இப்போது அந்தப் பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மேன் சிரித்துக்கொண்டே "மேர போலேனா! போலேனா! என்றான்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும்! போடா டேய்! ஒரு பால் ஏதோ குருட்டாம் போக்கில் பேட்டில் பட்டு சிக்ஸ்ர் போயிட்ட நீ பெரிய ஆளா! ஓடிப்போய் மணலில் அழுந்தியிருந்த பந்தை எடுத்து வந்து, பவுலிங் போடும் நண்பரிடம் கொடுத்து, அடுத்த பாலை போடு நண்பா! என்று சொல்லிவிட்டு திரும்பவும், மிட்ஆப் பொசிசனில் பீல்டிங் வந்து நின்றேன், திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மென் கத்தினான், இப்போதும் எல்லாம் தெரியும் நீ மூடு! என்று சைகை செய்துவிட்டு பவுலிங் போட சொன்னேன்.

இந்தப் பந்தும் சிக்ஸர் பறந்தது, நண்பரும் எல்லா வியூகத்திலும் பந்தை போட்டார், பந்து மிட் ஏரியாவை தாண்டி தான் விழுந்தது, அடுத்த ஓவரே நான் பவுலிங் போட வந்தேன், நம்ம பாலும் நாலு திசைக்கும் பறந்தது, எவ்வளவு தான் ஓடி வந்து போட்டாலும் பந்து ஸ்லோவாக தான் போனது, லைட் வெயிட் பந்தில் ரெம்ப பாஸ்ட்டா வீச முடியவில்லை. அப்புறம் என்ன? மொத்தம் எட்டு ஓவர் கதறக் கதற ஓட விட்டார்கள், பந்தைப் பொறுக்குவதற்கு நாலு திசையிலும் ஓடியே களைத்திருந்தோம். இப்போது தான் மலையாளி நண்பர்கள் சொன்ன "சோலி" யும், பக்கத்து நாட்டுக்காரர் சொன்ன "கோ லாங்!" க்குமான அர்த்தம் புரிந்தது.

எட்டு ஓவரில் ஒரு ரன் அவுட் தவிர வேறு எந்த விக்கெட்டும் எடுக்க முடியவில்லை, ரிட்டய்ர்டு ஹெர்டு முறையில் ஒருவர் பின் ஒருவர் வந்து பந்தை துவம்சம் செய்தார்கள். இப்போது தான் அப்ரடியின் சிக்ஸ்ர் மகிமை புரிந்தது. எல்லோரும் நல்ல ஹேண்ட்பவர் வைத்திருக்கிறார்கள், அவர்கள் பேட்டில் பட்டால் பந்து தெறிக்கிறது. ஒருவழியாக பவுலிங் முடித்து பேட்டிங் பிடித்தால் இன்னும் கொடுமையாக இருந்தது, நாங்களும் அதே பந்தில் தான் பவுலிங் போட்டோம், ஆனால் அவர்கள் வீசும் பந்து சொயிங்! சொயிங்! என்று இடுப்புக்கு வந்தது. எப்படியோ மூணு ஓவர் வரை மொத்த விக்கெட்டும் சமாளித்ததே பெரிய விசயம்.

நான்காவது ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்துவிட்டு நொந்து நூடில்ஸ் ஆகி நண்பர்கள் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பும் போது, எங்களுடன் விளையாடிய‌ பக்கத்து நாட்டுக்காரர் ஒருவன் வந்து "அடுத்த வாரமும் இதே டைம் நாங்க இங்க தான் விளையாட வருவோம், கண்டிப்பா வாங்க!! என்று எங்களிடம் கைக்கொடுத்தார். எதற்கு வைச்சு செய்யவா? அதான் செஞ்சுட்டீங்களே! இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!


.

Friday, May 27, 2016

நமக்கு நாமே!! அரசியல் அல்ல!!

நான் ஹைதிராபாத்திலிருந்து சவுதி வருவதற்கு முன்பு தான் வீடு கட்டும் வேலையை முழுமையாக முடித்திருந்தேன். அதற்காக என்னுடைய வீட்டில் உள்ளவர்களின் நகைகள் அனைத்தும் வங்கியில் அடமானம் வைத்திருந்தேன், மேலும் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் கடனாகவும் வாங்கியிருந்தேன். சவுதி வந்தவுடன் முதல் வேலையாக இங்குள்ள வங்கிகளில் லோன் வாங்க முடியுமா! என்று தான் ஒவ்வொரு வங்கியாக நானும், இன்னொரு நண்பரும் அலைந்தோம். இந்தியாவில் என்னால் எந்த வங்கியிலும் லோன் வாங்க முடியவில்லை. இந்த நிறுவனங்களுக்கு லோன் கொடுக்கலாம் என்று வங்கிகளால் பரிந்துரைக்க பட்ட நிறுவன லிஸ்டில் என்னுடைய நிறுவனம் இல்லை. என்னுடைய சம்பளமும் எந்த வங்கி கணக்கிலும் தொடர்ச்சியாக வருவது இல்லை, நாம் தான் நாடோடி ஆயிற்றே! அப்புறம் எங்கே!

சவுதியில் இருக்கும் வங்கிகளிலும் நமது நாட்டில் இருக்கும் அதே நடைமுறை தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்களுக்குக் கூப்பிட்டு கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள், ஆனால் சிறிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை கண்டு கொள்வதில்லை. என்னுடைய நிறுவனத்திற்குத் தான் இந்தியன் வங்கிகளிலேயே லோனுக்கு தகுதி இல்லை என்று சொல்லும் போது சவுதியில் இருக்கும் வங்கிகள் மட்டும் கூப்பிட்டா கொடுக்கப் போகிறது, அவர்களும் இல்லை என்று தான் கை விரித்தார்கள்.



சவுதி வங்கிகளில் உள்ள லோன் முறைகளைப் பற்றி அலுவலகத்தில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தான், நாம் ஏன் வங்கிகளில் லோன் வாங்க வேண்டும், நாம் அனைவரும் சேர்ந்து ஒரு பண்ட் சிஸ்டம் (Fund System) உருவாக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது, நண்பர்கள் எல்லோரும் அதை வரவேற்றதால் உடனடியாக செயல் படுத்தும் திட்டத்தில் இறங்கினோம். வெளிநாட்டிற்கு வேலை தேடும் நண்பர்கள் எல்லோருக்கும் பணத்திற்கான தேவைப் பெரிய அளவில் இருக்கும், அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வருபவர்களுக்குச் சொல்லவே வேண்டாம். வீடு கட்டுவது, அக்காவின் திருமணம், பெற்றோரின் மருத்துவ செலவிற்கு வாங்கிய கடன் என்று எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றுவதைத் தான் குறிக்கோளாகக் கொண்டு உழைப்பார்கள்.

நான் வந்திருந்த ப்ரொஜெட்டில் பணிசெய்ய வந்திருந்தவர்களில் பாதி பேர் முதல் முறையாக வெளி நாட்டிற்குச் சம்பாதிக்க வந்தவர்கள், அனைவரும் ஒரு பெரிய லிஸ்டுடன் தான் வந்திருந்தார்கள். சிலருக்கு உடனடியாக ஒரு பெரிய பண தொகை தேவைப்பட்டது. முதலில் ஒரு 5 லட்சம் பண்ட் உருவாக்கலாம், அதை மாதம் தோறும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்று பேசினோம், அதிக மாதம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து மாதம் ஒருவர் ஐம்பதாயிரம் வீதம் பத்து பேர் ஐந்து லட்சம். பத்து மாதத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் ஒருவருக்கு ஐந்து லட்சம் கிடைக்கும் படி பண்டை முடிவு செய்தோம். இப்போது யாருக்கு முதலில் ஐந்து லட்சம் கொடுப்பது, யார் இறுதியில் எடுப்பது என்ற கேள்விகள் வந்தது.

ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்து முதல் மாதத்தில் ஐந்து லட்சம் கிடைப்பதற்கும், பத்து மாதம் ஐம்பதாயிரம் வீதம் முதலீடு செய்து இறுதியில் ஐந்து லட்சம் கிடைப்பது என்பதையும் ஒன்றாகக் கருத முடியாது. இருவருக்கும் கிடைக்கும் தொகை சமமாக இருந்தால் எல்லோரும் முதல் மாதமே எனக்கு வேண்டும் என்று சொல்லுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால், முதல் மாதம் பண்டை எடுப்பவரின் தொகையில் சிறிய சதவீதம் அளவு தொகையைக் குறைத்து மாற்றம் செய்து அப்படியே வரிசையாக எல்லா மாதத்திலும் சீரியமாற்றம் செய்து கடைசி மாதம் எடுப்பவருக்கு முழுத் தொகையை கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். முதல் மாதம் பண்டை எடுக்கும் ஒருவருக்குக் கொடுக்கும் முழுத்தொகை குறைவாக இருப்பதால் அதில் வரும் மீதபணத்தைக் கட்டும் ஒவ்வொருவரின் இஎம்ஐயில் குறைக்கலாம் என்றும் பட்டியல் தயார் செய்தோம். கீழ்கண்ட அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியலாம்.



அவரவர் தேவைக்கு ஏற்ப எவருக்கு முதல் பண்ட் வேண்டும், எவருக்கு இரண்டாவது மாதம் வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்து பட்டியலைத் தயாரித்து கொண்டோம். நாங்கள் வெளிநாடுகளில் ப்ரொஜெக்ட்களில் இருப்பதால் எல்லோரும் ஒரே நேரத்தில் வருட விடுமுறையை எடுக்க முடியாது. அதனால் வருட விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் போது பெரும்பாலும் கைக்கு இந்தத் தொகை வருமாறு அமைத்துக் கொள்வோம். வெளிநாட்டில் பணிசெய்து தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஊரில் வீடு கட்டுதல், அக்காவின் திருமணம் என்ற செலவுகளுக்கு இது கிடைக்கும் படி பார்த்து கொள்வோம், திடிரென ஒருவருக்கு பணம் தேவைப்பட்டாலும் அந்த மாதத்தில் இந்த பண்ட் பணத்தை அவருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு அவருடைய மாதம் வரும் போது மற்றவர் எடுத்துக் கொள்வோம். முழுமையாக ஒருவர் ஐம்பதாயிரம் சேமிக்க முடியாது என்றால், இரண்டு பேர் சேர்ந்தும் கட்டலாம் என்றும் நடைமுறை படுத்தினோம். எங்கள் நிறுவனத்தில் நாங்கள் பதிமூன்று பேர் சேர்ந்து இந்தப் பண்டை நடத்தி வருகிறோம், எழு பேர் முழுமையாகச் சேமிக்கிறோம், மீதம் ஆறு பேர் பாதி பாதியாக சேமிக்கிறார்கள். இவ்வாறு ஒன்றரை ஆண்டுகளில் தொடங்கப்பட்டஇரண்டு பண்டுகளை முழுமையாக முடிக்கப் போகிறோம்.

இதற்காக எவரும் மெனக்கெடுவது இல்லை, இந்தப் பண்டில் சேர்த்திருக்கும் அனைவரும் ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளை அவரவர் வங்கி கணக்குகளில் இணைத்து வைத்திருக்கிறோம், சம்பளம் போட்டவுடன் முதல் வேலையாக இந்த பண்ட் பண பரிமாற்றம் தான் நடைபெறும். இந்த மாதம் எவருக்குத் தொகை அனுப்ப வேண்டும் என்று முன்பே பட்டியலில் இருப்பதால் அவருடைய கணக்கிற்கு எல்லோரும் பரிமாற்றம் செய்துவிட்டு இந்தப் பண்டிற்காக உருவாக்கப் பட்டவாட்ஸ்அப் குருப்பில் தெரிவித்துவிடுவோம்.

இந்த பண்ட் பற்றி எங்கள் மேனேஜரிடம் பேசும் போது, இந்த சிஸ்டம் ரெம்ப நல்லா இருக்கு, நானும் வருகிறேன், என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்! என்று எங்களுடைய இரண்டாவது பண்டில் சேர்ந்தது எங்களுக்கு ஊக்கம் தருவதாய் அமைந்தது.

இதில் என்ன பெரிய லாபம் இருக்கமுடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் சில நல்ல விசயங்கள் இதில் இருக்கிறது.

1) தனியார் நிறுவனங்கள் நடத்தும் ஏலச்சீட்டுகள் இந்தமுறை தான், ஆனால் அவற்றின் நம்பிக்கை பற்றிய பயம் எல்லோருக்கும் உண்டு, மேலும் அந்தச் சீட்டுகள் நடத்துபவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தை நமக்குள் பகிர்ந்து கொள்கிறோம்.

2) இந்த ஏலச்சீட்டுகளில் நமக்குத் தேவையான நேரங்களில் கிடைப்பது அரிது, அப்படிக் கிடைத்தாலும், ஏல குறைவு என்று பெரும் தொகையை அமுக்கி விடுவார்கள்.

3) பத்து மாதங்களில் இந்த பண்ட் சிஸ்டம் முடிவதால், மனதளவில் அயர்ச்சி ஏற்படுவது இல்லை, 20 மாத ஏல சிட்டுகள் தான் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது, அவற்றில் முதல் ஐந்து மாதங்களில் சீட்டை நாம் பிடித்துவிட்டால் அடுத்த பதினைந்து மாதம் தவனை தொகை கட்டும் போது ஒருவித அயர்ச்சி வந்துவிடுகிறது.

4) இந்த ஏலச்சீட்டுகளில் முதல் சில மாதங்களில் நீங்கள் சீட்டை பிடிக்க வேண்டுமானால், நீங்கள் செக் லீப் மற்றும் பத்திரத்தில் கையெழுத்து மற்றும் ஜாமீன்தாரர் என்று ஒரு பெரிய நடைமுறை சிக்கல் உண்டு.

5) நம்முடைய பண்ட் பணம் எப்போது கிடைக்கும் என்ற தெளிவான முடிவு தெரிவதால், நம்முடைய திட்டங்களை அதற்கு ஏற்றது போல செயல் படுத்தலாம்.




இது எல்லாவற்றையும் விட, நம்முடன் வேலை பார்ப்பவர்களின், வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, சகோதிரிகளின் கல்யாணம் என்று ஒவ்வொரு கனவுகளும் நிறைவேறும் போதும், அந்த‌ சந்தோசங்களை நம்மிடம் பகிரும் போதும் நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவது இயல்பு. ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல விசயம் ஒருவரின் வாழ்க்கையில் இந்தப் பண்டினால் நடக்கிறது. 

நம்முடைய தேவைகளை இதுபோன்று ஏதாவது ஒரு வழிகளில் நாம் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். வெற்று முழக்கங்கள் பயன் தரா!!

.

Monday, May 23, 2016

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் அயோக்கியர்களா?

தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் வாக்கிற்கு அதிகம் பணம் கொடுத்தவர்கள் அரியணையை ஏறுபவர்களாகவும், குறைவாக பணம் கொடுத்தவர்கள் மண்டப படிகளில் இருப்பவர்களாகவும், பணம் கொடுக்காதவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது. தேர்தலில் வாக்களித்தவர்கள் அனைவரும் ஜனநாயக பரிசுத்தவான்கள் போலவும், வாக்களிக்காதவர்கள் அனைவரும் ஜனநாயக நாட்டில் பாவிகள் என்பது போலவும் ஊடகங்கள் கட்டியெழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக, வாக்கு சதவீதம் குறைவாகப் பதிவான கன்னியாகுமரி மற்றும் சென்னையை குறிவைத்து, படித்தவர்களுக்கு ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து என்று அமிலத்தை வீசுகிறார்கள். எது நம்முடைய ஜனநாயகத்தில் கேலிக்கூத்து என்பதைக் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.



தேர்தல் பரப்புரைகள் தொடங்கிய நாள் முதல், தினந்தோறும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி ஒரு சிறு விசாரணையாவது நடத்தப்பட்டதா? எவருடைய பணம்? எந்தக் கட்சி வேட்பாளரால் கொண்டுவரப்பட்டது? அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்பது பற்றி முழுமையான தகவல்களை இந்த மக்களுக்குக் கொண்டு சென்றனவா? இன்றைக்குத் தேர்தல் ஜனநாயகம் பற்றி பேசும் ஊடகங்கள். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பணம் இந்தமுறை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது.

யாரால், எந்தத் தொகுதிக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற புள்ளிவிவரம் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கே தெரிகிறது என்றால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் கொண்டு நடத்தப்படும் தேர்தல் ஆணையத்திற்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். பணம் பட்டுவாடா, லாட்ஜில் மூட்டை மூட்டையாய் பணம், கண்டெய்னரில் பிடிபட்ட பணம், லாரியில் கொண்டுசென்ற பணம் என்று தேர்தலே அம்மணமாய் கிழிந்து தொங்கும் போது, இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து! என்று அறிவித்து ஒட்டு போடும் வேலையைத் தேர்தல் ஆணையம் செய்யும் போது வராத கோபம் வாக்களிக்காதவன் மீது வருவது வியப்பே!



ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்று வந்துவிட்டது, எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை ஆறுமுனை போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் நீட்டி முழங்க வேண்டுமானால் இந்தக் கட்சிகள் உதவும், ஆனால் மக்களின் நலன் சார்ந்து உண்மையில் முழுமையான மாற்றம் கொண்டுவர ஏதேனும் கட்சிகள் வந்ததா? என்றால் ஏமாற்றமே!, நான்கு கட்சிகள் சேர்ந்து ஒரு அணியாகத் திரண்டு முழுமையாக ஒரு வருடங்கள் முழுமையடையவில்லை, இந்த நால்வரும் முந்தைய தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தவர்கள். அதனுடன் ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பேரம் பேசிய விஜயகாந்த் கட்சி மற்றும் பெரிய கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமாக(வாசன்) இவர்கள் தான் மூன்றாவது அணி. மதவாதம் பேசும் தேசிய கட்சி, சாதி வெறியை வளர்க்கும் மாற்றம் முன்னேற்றம் கட்சி மற்றும் இனவாதத்தைத் தூண்டும் தமிழர் கட்சி இவர்கள் தான் உங்களுக்குத் தேர்தலில் மாற்றத்தை முன்வைத்தவர்கள். இருக்கிற கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக்கொள் என்பது போல் தான் இந்த மாற்றுக் கட்சிகள், அப்படி வைக்காதவனைக் காறி உமிழ்வது அபத்தத்தின் உச்சம்.

இவ்வளவு வக்கணையாய் பேசுகிறவன் வந்து நோட்டாவிற்கு ஒட்டு போட வேண்டியது தானே என்று நீங்கள் கேட்டால் அதைவிட நகைச்சுவை எதுவும் இல்லை. இந்த நோட்டாவிற்கான முழுமையான அதிகாரம் என்ன என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் 100 சதவீத ஓட்டுப் போட சொல்லி மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறது, ஆனால் தகுதியான வேட்பாளரை மக்கள் முன் நிறுத்துவதற்கு எந்தவித சட்டத்தையும் கடைப்பிடிப்பது இல்லை.

எதற்காக நான் ஒட்டு அளிக்கிறேன், என்னுடைய சார்பாக என்னுடைய தேவைகளையும், கருத்துக்களைச் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க நினைத்து நான் ஒட்டு அளிக்கிறேன். அவ்வாறு நான் ஒட்டு போடும் வேட்பாளர் தேர்தலில் தோற்றால் என்னுடைய வாக்கு சீட்டிற்க்கான அங்கீகாரம் எங்கே? என்னுடைய குரலை சட்டசபையில் பேசுபவர் யார்? தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு அளித்த மக்களின் குரல்கள் வெற்றி பெற்ற வேட்பாளரின் குரலால் நசுக்கப்படும், வெற்றி பெற்றவர் பெரும்பான்மை பலம் பெற்றவர்களின் குரல் என்றால், சிறுபான்மை பலம் பெற்ற ஒடுக்கப்பட்டோரின் குரல் மவுனிக்க வேண்டியது தானா? இது தான் ஜனநாயகமா? இதற்குத் தான் நான் வாக்களிக்க வேண்டுமா?

உதாரணமாக இந்தத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுகிறார். வெற்றி பெற்றவருக்கு இணையாகச் சதவீதத்தில் இவரும் வாக்குகள் வாங்குகிறார், இவருக்கு ஓட்டுப் போட்ட மக்களின் குரல்கள் சட்டசபையில் ஒலிக்காது, அதற்குக் காரணம் அவர் வெற்றி பெறவில்லை. இதில் இருக்கும் சிக்கல் ஜனநாயக மாண்புக்கு உட்பட்டது தானா?

என்னுடைய வாக்குக்கான மதிப்பு, நான் வாக்களிக்கும் அந்த வேட்பாளர் வெற்றி பெறவில்லை என்றால் குப்பைக்கு சமம் என்றால், நான் எதற்காக வாக்களிக்க வேண்டும்? இப்படி என்னுடைய வாக்குக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் நடைபெறும் ஒரு ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்க‌படும் மக்களாட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்.

மக்கள் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரத்தை கொடுப்பதற்கான ஜனநாயக‌ வழியை வகுத்துக் கொடுத்துவிட்டு வாக்களிக்காதவர்களைக் குறை சொன்னால் பரவாயில்லை, ஆனால் நீ செலுத்தும் வாக்கு வெற்றி பெற்றவருக்கு என்றால் மதிப்பு, இல்லையென்றால் அது வெறும் "கைவிரல் மை" என்றால் எவருக்கும் அழியாத கைவிரல் மையைப் போட்டு அழகுப்பார்க்க‌ விரும்புவது இல்லை. வாங்கும் வாக்குகள் சதவீத அடிப்படையில் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பிரதிநித்துவம் கொடுக்கவேண்டும் என்ற முழக்கம் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


.
Related Posts with Thumbnails