Wednesday, September 14, 2011

கூடங்குளம்_மக்களின் போரட்டம்!!!

நான் படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் எங்கள் மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவை கீழ்க்கண்ட முன்று திட்டங்கள்.

# கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்.

# கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய போகும் ரப்பர் தொழிற்ச்சாலை.

# குளச்சல் துறைமுகம்.

சில ஓட்டு கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் அள்ளிவீசிய வாக்குறுதிகளில் இவைகளும் அடங்கும்.

இவைகளின் மூலம் எங்கள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருக போகிறது. அதனால் தொழிற்நூட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளை குறிவைத்து படித்த மாணவர்கள் அதிகம். அதில் நானும் ஒருவன்.. :))

இந்த கால கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் அதிக அளவில் பாலிடெக்னிகள் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போதும் வேறு மாவட்டங்களை கணக்கிடும் போதும் எங்கள் மாவட்டத்தில் இவைகளின் எண்ணிக்கை அதிகம் தான். திரும்பிய திசையெங்கும் கல்லூரிகள்.

படித்து முடித்தவுடன் அனைவரும் செய்யும் முதல் காரியம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. காரணம் மேலே சொன்ன திட்டங்கள் நிறைவேறினால் வேலை நிச்சயம் என்பது அனைவரின் எண்ணம். நானும் பதிந்து வைத்திருக்கிறேன். ஆறு வருடம் தவறாமல் புதுப்பிக்கவும் செய்தேன்.அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை மற்றும் பொறுமையில்லை அப்படியே கிடப்பில் இருக்கிறது.

மேலே கூறிய மூன்று திட்டங்களில் நடைமுறைக்கு வந்தது கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் மட்டும் தான். மற்றவை என்ன ஆனது? என்று அந்த அரசியல் ஆண்டவருக்கே வெளிச்சம். இத்திட்டத்திற்கு கையெழுத்து போடப்பட்ட ஆண்டு 1988. ஒரு சில காரணங்களால் பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்பு 2001 ஆம் ஆண்டில் இருந்து மிக துரிதமாக வேலைகள் ஆரம்பிக்கபட்டது.

இது ஆரம்பிக்க பட்ட காலத்தில் ஊடகங்களின் தாக்கமும், தகவல் பரிமாற்றங்கள் அதிகமாக இல்லாததால் மக்களுக்கு இந்த அணுமின் உலையை பற்றிய தகவல்களும், விழிப்புணர்வுகளும் அதிகம் இல்லை. அரசியல்வாதிகளும் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லத் தவறிவிட்டார்கள். அதற்கு பதிலாக அணு உலையின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடக்கும் போதே, ஆரம்பித்தவுடன் அனைவருக்கும் வேலை என்று மட்டும் சொல்லி ஓட்டுகளாக மாற்றினர். இன்னும் சிலர் முன்பணம் கொடுங்கள் உடனே வேலைவாங்கி தருகிறேன் என்று கல்லா கட்டினார்கள்.

ஆனால் இத்திட்டம் முழுமையடைந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள எவருக்கும் பணிகள் வழங்கப்படவில்லை. ஒரு சில இயக்கங்களில் போராட்டங்களுக்கு பிறகு சிலரை ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்தார்கள். அவர்களையும் முழுமையாக பணியில் வைத்துக்கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவரும் இந்த காலகட்டங்களில் நம்முடைய அரசு மட்டும் மீண்டும் மீண்டும் புதிய அணு உலைகளை நிறுவுகிறது. இந்த கூடங்குளம் அணு உலையிலும் இந்த வருடம் புதிய 4 ரியாக்டர்கள் (Reactors) நிறுவப்படுகிறது. இதில் இவர்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.“வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட இந்த பூமியில் மனித உயிர்களும், இதர உயிரினங்களும் முக்கியம் அல்லவா?”

இது தான் ”தூக்கம் கெடுத்து கட்டில் வாங்குவதோ?..”

இந்த கூடங்குளம் குறித்து அதிகம் கவலைப்பட மேலும் ஒரு வலுவான காரணம் உண்டும். இது சுற்றிலும் கடலால் சூழப்பட்ட பகுதி. சுனாமி போன்ற பேரலைகள் பயம் காட்டும் இந்த காலக்கட்டதில் இந்த அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே!!!!!!!!!!...

இந்த அழிவுகள் எல்லாம் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். பலர் சாகும் வரை உண்ணாவிரதமும் இருக்கிறார்கள். இவர்களின் அறப்போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நம்முடைய சில பதிவர்களும் இதில் கலந்துள்ளார்கள் அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். இந்த பதிவில் பதிவர் கூடல் பாலா அவர்கள் எழுதிய போரட்டம் பற்றிய சுட்டியும் இணைத்துள்ளேன். முடிந்தவரை இந்த போரட்டத்தை பற்றி பலரிடம் கொண்டு சேர்க்க நண்பர்களை வேண்டுகிறேன்.

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

நன்றி: பதிவர் கூடல்பாலா.

Tuesday, August 2, 2011

குழித்துறை; வாவுபலி பொருட்காட்சி

"ஆடி பட்டம் தேடி விதைக்கணும்" என்று ஒரு பழமொழி உண்டு. நெல் விவசாயம் செய்யஆடி மாதம் விதைத்தால் தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். எனவே விவசாயிகளை பொறுத்தவரையில் ஆடி மாதம் என்பது பயிர்கள் நடவு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடி மாதம் நடப்படும் செடி, மரம், கொடி எதுவாக இருந்தாலும் நன்றாக வளரும், நல்ல பலனை தரும் என்பது எங்கள் ஊரில் வழக்கில் இருக்கும் ஒரு ஐதீகம். இயற்கையாக எங்கள் ஊரில் ஆடி மாதம் மழை பொழியும், எனவே இந்த மழையும் எங்கள் ஊரில் மரம், செடி இந்த மாதத்தில் நடுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது. அதனால் பெரும்பாலும் எங்கள் ஊரில் ஆடி அமாவாசை அன்று எல்லோர் வீடுகளிலும் ஒரு மரமாவது நடுவார்கள். மரம் வைக்க இடம் இல்லாதவர்கள் ஒரு ரோஜா செடியாவது வீட்டின் முன்புறம் நட்டு வைப்பார்கள்.

எங்கள் வீட்டிலும் நான், எனது அக்கா, மற்றும் அண்ணன் மூன்று பேரும் போட்டி போட்டு செடிகள் நடுவோம். யாருடைய செடி முதலில் "பூ" பூக்கும் என்பதில் போட்டி நடக்கும். ரோஜா செடியாக இருந்தால் யாரு வைத்த கம்பு முதலில் தளிர்விடுகிறது என்று போட்டி இருக்கும். ரோஜா செடி வளர்க்கும் நாங்கள் பெரும்பாலும் கடையில் இருந்து தொட்டி செடி வாங்கி வைப்பது இல்லை. ஏற்கனவே வேறு சொந்தகாரர்களின் வீடுகளில் இருக்கும் ரோஜா செடியில் இருக்கும் முதிர்ந்த கம்புகளை வெட்டி வந்து எங்கள் வீட்டில் வைப்போம். இரண்டு வாரங்களில் அந்த கம்பு தளிர்விட ஆரம்பிக்கும். ஊன்றி வைக்கப்பட்டிருக்கும் ரோஜா செடியின் கம்பை தளிர்விடுவதற்கு முன்பு சிறிது அசைத்து விட்டாலே அது தளிர் விடாமல் காய்ந்து போகும். எங்கள் வீட்டில் போட்டியின் காரணமாக அடுத்தவரின் ரோஜா கம்பை அசைத்து தளிர்விடாமல் செய்யும் வில்லங்க வேலையும் நடக்கும், யாரு கம்பை அசைத்தது என்று எங்கள் மூவருக்கும் சண்டையும் நடக்கும். ஒரு வாரம் ஆகிவிட்டது இன்னும் தளிர் விடவே இல்லையே என்று அந்த கம்பை பிடுங்கி பார்த்து பல்பு வாங்கிய அனுபவமும் எனக்கு உண்டு.

ஆடி மாதங்களில் எங்கள் ஊரில் அதிகமாக மரக்கன்று மற்றும் பூச்செடி வியாபாரிகளை பார்க்கமுடியும். இதுமட்டுமல்லாது மரம், செடி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதத்தில் எங்கள் மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் நடைபெறும் "வாவுபலி பொருட்காட்சி" ஒரு வாய்ப்பாக‌ அமையும். இங்கு எல்லா விதமான மரக்கன்றுகளும், பூச்செடிகளும் கிடைக்கும்.

இந்த வாவுபலி பொருட்காட்சியானது 1926 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. அந்தகாலத்தில் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் நடத்துவதற்கு ஆடிமாதம் இறுதி அமாவாசை அன்று குழித்துறை ஆற்றின் இருபுறமும் மக்கள் கூடுவார்கள். இவ்வாறு கூடும் மக்களை கவரும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த வாவுபலி பொருட்காட்சி.

அதனை தொடர்ந்து வருடம்தோறும் இந்தபொருட்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மூன்று நாட்களாக ஆரம்பிக்கபட்ட இந்த பொருட்காட்சியானது விதவிதமான கோழிகள், மற்றும் மரக்கன்றுகள், பூச்செடிகள் என ம‌க்க‌ளின் பார்வைக்கு வைத்தன. ஆனால் இப்போது மரம், செடி மற்றும் மலர் கண்காட்சிக‌ள் ம‌ட்டும‌ல்லாது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று பட்டியல் நீண்டு 20 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த‌ க‌ண்காட்சிக்கு வ‌ந்து செல்ப‌வ‌ர்க‌ள் வீட்டிற்கு திரும்பும் போது க‌ண்டிப்பாக‌ ஒரு ம‌ர‌க்க‌ன்றாவ‌து வாங்கி செல்வார்க‌ள். ம‌ர‌ம் ந‌டுவ‌த‌ற்கு வ‌ச‌தியில்லாத‌வ‌ர்க‌ள் ஒரு பூச்செடியாவ‌து வாங்கி செல்வார்க‌ள். எப்ப‌டியோ ம‌ர‌ங்க‌ள் அழிந்து வ‌ரும் இக்கால‌த்தில் இது போன்ற‌ ம‌ர‌க்க‌ன்றுக‌ளின் ச‌ந்தைக‌ள், க‌ண்காட்சி போன்ற‌வைக‌ள் அவ‌சியமாகின்ற‌ன‌. இங்கு வ‌ந்து ஆர்வ‌மாக‌ ம‌ர‌ங்க‌ளை வாங்குப‌வ‌ர்க‌ளை பார்க்கும் போது ந‌ம‌க்கும் அவ‌ற்றின் மீதான‌ ஈர்ப்பு ம‌ன‌தில் வ‌ந்து விடுகிற‌து.

86‍-வ‌து வாவுப‌லி பொருட்காட்சி இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து. க‌ட‌ந்த‌ மாத‌ம் 20- ஆம் ‍தேதி தொட‌ங்கி இந்த‌ மாத‌ம் 8- ஆம் தேதி வ‌ரை ந‌டைபெறுகிற‌து. இதை ப‌ற்றிய‌ தின‌ம‌ல‌ர் செய்தியின் லிங்க் கீழே இணைத்துள்ளேன்.


குழித்துறை வாவுபலி பொருட்காட்சி கோலாகல துவக்கம்


குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்

ந‌ன்றி,
தின‌ம‌ல‌ர்.


க‌ட‌ந்த‌ ஆண்டு என‌து ந‌ண்ப‌ன் வாவுப‌லி பொருட்காட்சிக்கு சென்று வ‌ந்த‌ போது மொபைலில் எடுத்த‌ சில‌ ப‌ட‌ங்க‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்கிறேன்.


.

.

.

Thursday, July 21, 2011

குடி குடியைக் கெடுக்கும்_விள‌ம்ப‌ர‌ ப‌ல‌கை?

"குடி குடியைக் கெடுக்கும்" "ம‌து நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு" போன்ற‌ வாச‌க‌ங்க‌ளை தாங்கி தான் இன்றைய‌ ம‌து ப‌ட்டில்க‌ள் விற்ப‌னைக்கு வ‌ருகின்ற‌ன‌. ஆனால் இந்த‌ வாச‌க‌ங்க‌ளை உள்வாங்கி தான் ந‌ம்முடைய‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் குடிக்கிறார்க‌ளா?. என்னை நானே கேட்கும் கேள்விக‌ளில் இதுவும் ஒன்று.

முன்பெல்லாம் ஊர்க‌ளில் வியாபார‌ம் செய்ய‌ப்ப‌டும் சாராய‌ம், க‌ள் போன்ற‌வைக‌ள் ஊருக்கு வெளியில் ஆட்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் இல்லாத‌ ப‌குதிக‌ளில் ம‌றைமுக‌மாக‌ ந‌ட‌க்கும். அந்த‌ இட‌ங்க‌ளுக்கு சென்று வ‌ருப‌வ‌ர்க‌ளும் ஏதோ செய்ய‌ கூடாத‌ குற்ற‌த்தை செய்து விட்ட‌தாக‌ த‌லை க‌விழ்ந்து வ‌ருவார்க‌ள். இவைக‌ளை விற்ப‌னை செய்ப‌வ‌ர்க‌ளும் ச‌மூக‌ விரோதிக‌ளாக‌ தான் பார்க்க‌ப்ப‌ட்டார்க‌ள். கேன்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ சாராய‌த்தை சிறிய‌ க‌ண்ணாடி கிளாஸ்க‌ளில் அள‌ந்து வியாபார‌ம் செய்வார்க‌ள். இத்த‌கைய‌ வியாபார‌ங்க‌ள் ந‌ட‌க்கும் இட‌ங்க‌ளில் பெரும்பாலும் குடிப்ப‌வ‌ரும், விற்ப‌னை செய்ப‌வ‌ரை த‌விர‌ வேறு எவ‌ரும் இருக்க‌ மாட்டார்க‌ள். ஒருவ‌ர் குடித்து விட்டு வ‌ந்த பிற‌கு தான் அடுத்த‌வ‌ர் செல்வார். பெரும்பாலும் கூட்ட‌ம் சேர்க்க‌ விட‌ மாட்டார்க‌ள். ஒரு நாள் விற்ற‌ இட‌த்தில் ம‌றுநாள் விற்க‌ மாட்டார்க‌ள். கார‌ண‌ம் போலீஸ் ரெய்டு. இங்கு நான் போலீஸ் ரெய்டு என்ற‌வுட‌ன் சாராய‌ வியாபாரியை பிடித்து கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிடுவார்க‌ள் அத‌ற்கு ப‌ய‌ந்து தான் இடங்களை மாற்றுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்க‌ள் அறியாமை. மாமூல் கொடுக்க‌ வேண்டும் என்று தான் இட‌த்தை மாற்றுவார்க‌ள். எந்தெந்த‌ இட‌ங்க‌ளில் எப்போது வியாபார‌ம் ந‌ட‌க்கும் என்ப‌து குடிம‌க‌ன்க‌ளில் காதுக‌ளுக்கு தானாக‌ சென்றுவிடும்.

ஊர்க‌ளில் இவ்வாறு விற்க‌ப்ப‌டும் சாராய‌ வியாபார‌ம் பெரும்பாலும், பெண்க‌ள் ம‌ற்றும் குழ‌ந்தைக‌ள் புள‌ங்காத‌ இட‌ங்க‌ளில் தான் ந‌ட‌க்கும். கால‌ப்போக்கில் இந்த‌ இந்த‌ வியாபார‌மும் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்ற‌து. ச‌ந்து பொந்துக‌ளில் விற்க‌ப்ப‌ட்ட‌வைக‌ள் எல்லாம் க‌ள்ளுக்க‌டை, சாராய‌க்க‌டை என்று உருமாறி, நாவீன‌ விருச்ச‌த்தில் ஒயின்ஷாப்புக‌ளாக‌வும், பார்க‌ளாக‌வும் ஜொலித்து, இப்போது அர‌சே எடுத்து ந‌ட‌த்தும் டாஸ்மாக்காக‌ உய‌ர்ந்து நிற்கின்ற‌து. ஊரில் உழைத்து வாழ‌ விருப்ப‌ம் இல்லாம‌ல், பிற‌ர் குடியை கெடுத்து வாழ‌ நினைப்ப‌வ‌ர்க‌ள‌ தான் இந்த‌ சாராய‌ வியாபார‌ம் செய்தார்க‌ள். அவ‌ர்க‌ள் ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தை அடுத்த‌வ‌னிட‌ம் சுர‌ண்டிய‌ ப‌ண‌மாக‌ தான் ச‌மூக‌ ம‌க்க‌ள் பார்த்தார்க‌ள். ஆனால் இன்றைய‌ ந‌வ‌நாக‌ரீக‌ உல‌கில் டாஸ்மாக் மூல‌ம் வ‌ரும் ப‌ண‌த்தில் தான் "ம‌க்க‌ளுக்கு ப‌ட்ஜெட்டே போடுகிறோம்" என்று வெட்க‌ம் இல்லாம‌ல் ஊட‌க‌ங்க‌ளுக்கு பேட்டி கொடுக்கிறார்க‌ள்.

இந்த‌ சாராய‌ம், க‌ள்ளு போன்ற‌வைக‌ள் ஊருக்கு வெளியில் ஒதுக்கு புற‌ங்க‌ளில் விற்க‌ப்ப‌டும் போது இவைக‌ளால் ச‌மூக‌த்திற்கு ஏற்ப‌டும் தீங்கு குறைவாக‌ தான் இருந்த‌து. ஆனால் இவை பார்க‌ளாக‌ உருமாறிய‌ பின்புதான் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு அடிகோலிய‌து. குடித்த‌வ‌ன் சும்மா இருந்தாலும் அவ‌னுடைய‌ வாய் சும்மா இருக்காது. போதை த‌லைக்கேறிய‌ பிற‌குதான் சில‌ருக்கு ஞான‌மே பிற‌க்கும். இந்த‌ ஞான‌த்தால் அடுத்த‌வ‌ன் வாயை கிள‌றி, அது வாய் ச‌ண்டை ஆகி, வாய் ச‌ண்டை இரு குடும்ப‌ ச‌ண்டையாகி, குடும்ப‌ ச‌ண்டை இரு கோஷ்டி ச‌ண்டையாகி, கோஷ்டி ச‌ண்டை பெரிய‌ ஊர்க‌ல‌வ‌ர‌மாக‌ வெடித்திருக்கிற‌து என்ப‌து நித‌ர்ச‌ன‌ம். இன்றைக்கும் ப‌ல‌‌ டாஸ்மாக் க‌டைக‌ளில் உள்ள‌ பார்க‌ளில் ஒரே வ‌ண்டியில் வ‌ந்திற‌ங்கி ஒரு பாட்டில் வாங்கி, ஒரே கிளாஸில் குடிக்க‌ ஆர‌ம்பித்த‌ இருவ‌ரும், சிறிது நேர‌த்தில் போதை த‌லைக்கேறி; வ‌ச‌வு வார்த்தைக‌ளில் ஆர‌ம்பித்து, க‌ட்டிப்பிடித்து ச‌ண்டையிடும் நிலைமைக்கு மாறியிருப்பார்க‌ள். பிற‌கு அங்குள்ள‌ பார் ஊழிய‌ர்க‌ள் தான் ஒருவ‌னை முன்புற‌ வாச‌ல் வ‌ழியாக‌வும், அடுத்த‌வ‌னை பின்புற‌வாச‌ல் வ‌ழியாக‌வும் ஆட்டோவில் ஏற்றிவிடுவ‌தை நாளும் பார்க்க‌லாம்.

என‌து ஊர் வில்லுக்குறியில் ஒயின்ஷாப் என்ப‌து கிடையாது. அத‌ற்கு கார‌ண‌ம் இங்கு தொண்ணூறுக‌ளில் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள். அந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் ஒருவ‌ரின் உயிர் ம‌ற்றும் ஒருவ‌ரின் கை ப‌றி போன‌து. இந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் தோன்ற‌ இங்கிருந்த‌ ம‌துக்க‌டைக‌ளும் ஒரு கார‌ண‌ம் என்று ரெக்கார்டு ப‌திவாகி போன‌து. அத‌னால் தான் இதுவ‌ரையிலும் இங்கு எவ‌ராலும் டாஸ்மாக் கொண்டுவ‌ர‌ முடிய‌வில்லை.(இத‌னால் இங்கு இருப்ப‌வ‌ர்க‌ள் ரெம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் என்று எண்ண‌ வேண்டாம், ப‌க்க‌த்துல‌ அந்த‌ ப‌க்க‌ம் நுள்ளிவிளை, இந்த‌ ப‌க்க‌ம் குமார‌கோவில், எட்டி போனால் சுங்காங்க‌டை என‌ மூன்று ப‌க்க‌ம் த‌ண்ணியால்(டாஸ்மாக்) சூழ‌ப்ப‌ட்ட‌ தீப‌க‌ற்ப‌ம் தான் வில்லுக்குறி).

இப்போது அர‌சால் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ப‌ல‌ டாஸ்மாக் க‌டைக‌ள், ம‌க்க‌ள் குடியிருப்புக‌ளுக்கு அருகிலும், ப‌ள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளுக்கு அருகிலும், பெண்க‌ள் அதிக‌மாக‌ புள‌ங்கும் கோவில்க‌ளின் ப‌க்க‌த்திலும் பார்க்க‌ முடிகிற‌து. ம‌க்க‌ளும் எந்த‌வித‌மான‌ உறுத்த‌லும் இல்லாம‌ல் இவைக‌ளை க‌ட‌ந்து செல்கிறார்க‌ள்(க‌ட‌ந்து செல்ல‌ ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்திவிட்டார்க‌ள்). சினிமாவும், ஊட‌க‌ங்க‌ளும் ம‌க்க‌ளை இவ‌ற்றில் இருந்து எளிதாக‌ வில‌கி செல்ல‌ ப‌ல‌ யுத்திக‌ளை கையாளுகின்ற‌ன‌. சினிமாவில் குடிகார‌ ஹீரோக்க‌ள், குடித்துவிட்டு அவ‌ர்க‌ள் செய்யும் கூத்துக‌ளை ர‌சிக்கும் ஹீரோயின்க‌ள் என்று இவ‌ர்க‌ள்‌ அமைக்கும் காட்சிக‌ளை வைத்தே சொல்லிவிட‌லாம் எத்த‌கைய‌ க‌லாச்சார‌த்தை வ‌ள‌ர்த்தெடுக்கிறார்க‌ள் என்று.ப‌தின்ம‌ வ‌ய‌தை க‌ட‌ந்த‌ மாண‌வ‌ர்க‌ள் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் குடிப்ப‌த‌ற்க்கும், புகைப்ப‌த‌ற்கும் அடிமையாக‌ இருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இது தீய‌ ப‌ழ‌க்க‌மாக‌ தெரிய‌வில்லை, மாறாக‌ கொண்டாட்ட‌மாக‌ இருக்கிற‌து. த‌ண்ணிய‌டிப்ப‌தையும், புகைப்ப‌தையும் இவ‌ர்க‌ள் ஒரு த‌குதியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்கிறார்க‌ள். இத்தைகைய‌ த‌குதியை வ‌ள‌ர்த்தெடுக்காத‌வ‌ர்க‌ள் இன்றைய‌ நாக‌ரீக க‌லாச்சார‌த்தில் கோவ‌ண‌ம் க‌ட்டிய‌வ‌னாக‌ தான் பார்க்க‌ப்ப‌டுகிறார்க‌ள்.

"குடி குடியைக் கெடுக்கும்" "குடிப்ப‌ழ‌க்க‌ம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு" என்ற‌ வாச‌க‌ங்க‌ள் ஆட்டோக்க‌ளிலும், சினிமா டைட்டில்க‌ளிலும் சென்ற‌டைந்த அள‌வு, இன்றைய‌ இளைய‌த்த‌லைமுறையை சென்ற‌டைய‌வில்லை, அதுவ‌ரையிலும் தில்ஷ‌ன் போன்ற‌ மொட்டுக‌ளின் உயிர்க‌ளும், ப‌ல‌ ம‌னைவிக‌ளின் க‌ண்ணீர்க‌ளும் இந்த‌ பூமியில் சிந்த‌ப்ப‌டும் என்ப‌து திண்ண‌ம்.‌

குறிப்பு: ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம். க‌டைசி ப‌திவு எழுதி ஒரு மாத‌திற்கு மேல் ஆகிவிட்ட‌து. இந்த‌நாட்க‌ளில் என்னிட‌ம் தொட‌ர்புகொண்டு விசாரித்த‌ந‌ட்புக‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி. ச‌வூதி வ‌ந்து என்னை நிலைப்ப‌டுத்திக் கொள்ள‌இவ்வ‌ள‌வு நாட்க‌ள் எடுத்துவிட்ட‌து. இனி தொட‌ந்து எழுத‌வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எப்ப‌டி என்று பார்ப்போம்!!!!.


.


.

Wednesday, June 8, 2011

பொழ‌ப்பு சிரிப்பா சிரிக்குது..

இன்னும் இர‌ண்டு தின‌ங்க‌ளில் ச‌வுதிக்கு போக‌ இருப்ப‌தால், ம‌ஸ்க‌ட்டில் ஏதாவ‌து வாங்க‌லாமா?... என்று க‌டைக்க‌டையாக‌ நேற்று சுற்றினோம், மாலையில் ஐந்து ம‌ணிக்கு ஆர‌ம்பித்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரைக்கும் சுற்றினோம். என்னுட‌ன்‌ இன்னும் இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் உண்டு. அதில் ஒருவ‌ன் என்னுடைய‌ அறைத்தோழ‌ன், சொந்த‌ ஊர்கார‌ன், ப‌ள்ளியில் ஒன்றாக‌ ப‌டித்த‌வ‌ன், இப்போதும் என்னுட‌ன் ஒன்றாக‌ வேலைப்பார்ப்ப‌வ‌ன் என்று என‌க்காக‌ ப‌ல‌ ப‌ட்ட‌ங்க‌ளை சும‌ப்ப‌வ‌ன். இன்னொருவ‌ர் என்னுட‌ன் ச‌வுதிக்கு வ‌ருப‌வ‌ர்.

ஐந்து ம‌ணி நேர‌ம் ஜூஸ் க‌டையில் இருந்து ஜூவ‌ல்ல‌ரி க‌டை வ‌ரைக்கும் சுற்றினோம்.. ஆனா க‌டைசிவ‌ரை ஒரு பொருளும் வாங்க‌வில்லை...

ரெம்ப‌ க‌டுப்பான‌ என்னுடைய‌ ந‌ண்ப‌ன், டேய்.. நீங்க‌ இன்னைக்கு ஏதும் வாங்குவ‌து போல‌ என‌க்கு தெரிய‌வில்லை என்று சொல்லிக்கொண்டே, க‌டைசியாக‌ நாங்க‌ போன‌ டிர‌ஸ் ஷோருமில் இருந்து ஒரு டீ ஷ‌ர்ட்டும், ஜீன்ஸும் எடுத்தான். இங்கேயே இருக்க‌ போற‌வ‌ன் டீ ஷ‌ர்ட்டும்‌ ஜீன்ஸும் எடுக்கிறாம், வெளியூர் போற‌ நாம‌ ஏதுமே எடுக்க‌வில்லையா? என்று வ‌ர‌லாறு ந‌ம்மை த‌ப்பா பேசிட‌ கூடாது என்று ஆளுக்கு ஒரு க‌ர்சீப் வ‌ங்கிட்டோம் இல்லா?... எப்புடி????????..

இப்ப‌டி ஒரு வ‌ழியா ஷாப்பிங்(க‌டையில் பொருள் வாங்கினா தான் ஷாப்பிங் என்று லாஜிக் எல்லாம் பேச‌ப‌டாது) எல்லாம் முடிச்சிட்டு வீட்டிற்கு வ‌ந்தோம். வீட்டில் ஹாலில் அம‌ர்ந்து எங்க‌ள் ஆபிஸின் டிரைவ‌ர் கே டீவியில் ஒரு ப‌ட‌ம் பார்த்து கொண்டிருந்தார். அவ‌ர் பெங்க‌ளூர் கார‌ர். த‌மிழ், ம‌லையாள‌ம், ஹிந்தி, க‌ன்ன‌ட‌ம், அர‌பி என்று ப‌ல‌ பாஷை அவ‌ருக்கு தெரியும். இருப‌து வ‌ருட‌ங்க‌ளாக‌ ஓம‌னில் இருக்கிறார். நானும் என‌து ந‌ண்ப‌னும் தின‌மும் தூங்குவ‌த‌ற்கு முன்னால் ஒரு ம‌ணி நேர‌மாவ‌து பேசிக்கொண்டே டீவி பார்ப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதில் பெரும்பாலும் ப‌ட‌ங்க‌ளில் இருக்கும் லாஜிக் இல்லாத‌ மேட்ட‌ர் தான் விவாத‌மாக‌ ஓடும்.

நேற்றும் வ‌ழ‌க்க‌ம் போல் ஹாலில் "ப‌" வ‌டிவில் போட‌ ப‌ட்டிருக்கும் ஷோபாவில் எதிர்ரெதிரில் போட‌ப்ப‌ட்ட‌ ஷோபாவில் நாங்க‌ள் இருவ‌ரும் ப‌டுத்துக்கொண்டே டீவி பார்க்க‌ தொட‌ங்கினோம். அவ‌ர் டீவிக்கு நேர் எதிரில் போட‌ப்ப‌ட்ட‌ ஷோபாவில் அம‌ர்ந்து ப‌ட‌ம் பார்த்து கொண்டிருந்தார்.

முத‌லில் ப‌ட‌த்தின் பெய‌ர் எங்க‌ள் இருவ‌ருக்கும் தெரிய‌வில்லை, அவ‌ரிட‌மும் கேட்டேன், அவ‌ருக்கும் தெரிய‌வில்லை. ச‌ரி என்று ப‌ட‌த்தை பார்க்க‌ ஆர‌ம்பித்தோம்.. ச‌த்ய‌ராஜ் சிறிது ம‌ன‌நிலை பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌ ந‌டித்திருந்தார். அவ‌ருடைய‌ பெய‌ர் அழ‌கேச‌ன் என்று அவ‌ர‌து பாட்டியாக‌ ந‌ட‌த்திருந்த‌ ம‌னோர‌மா அழைத்த‌தில் இருந்து அறிந்து கொண்டோம்.

உட‌னே என்னுடைய‌ ந‌ண்ப‌ன், டேய் அழ‌கேச‌ன் என்று ஒரு ச‌த்ய‌ராஜ் ப‌ட‌ம் வ‌ந்த‌தை நான் கேள்வி ப‌ட்டிருக்கிறேன் என்று கூற‌, அப்ப‌டினா இந்த‌ ப‌ட‌ம் "அழ‌கேச‌ன்" தான் என்று சொல்லிக்கொண்டே ப‌ட‌த்தை பார்க்க‌ ஆர‌ம்பித்தோம்.. விள‌ம்ப‌ர‌ இடைவேளையின் போதும் அழ‌கேச‌ன் என்று சொல்லி ப‌ட‌த்தின் பெய‌ரை உறுதிப்ப‌டுத்தின‌ர்.

ச‌த்ய‌ராஜிக்கு ம‌ன‌நிலை ச‌ரியில்லாத‌வ‌ராக‌ ந‌டிப்ப‌த‌ற்கு அவ‌ர‌து உட‌ல்க‌ட்டு சுத்த‌மாக‌ ஒத்துழைக்க‌வில்லை. ப‌ல‌ வ‌ச‌ன‌ங்க‌ளும், காட்சிக‌ளும் 16 வ‌ய‌தினிலே ப‌ட‌த்தை க‌ண் முன் நிறுத்திய‌து. நாங்க‌ள் இருவ‌ரும் ப‌ட‌ம் பார்க்க‌ ஆர‌ம்பித்தில் இருந்து, ஒவ்வொரு வ‌ச‌ன‌ம் வ‌ரும் போதும் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்து சிரிக்க‌ ஆர‌ம்பித்தோம்..

ப‌ட‌த்தில் ச‌த்ய‌ராஜை ம‌ன‌நிலை ச‌ரியில்லாத‌வர் என்று சொல்ல‌ வ‌ருவார்க‌ள், திடிரென‌ பார்த்தால் அவ‌ர் இப்போதைய‌ அர‌சிய‌ல் ப‌ற்றியெல்லாம் ந‌ன்றாக‌ அறிவுப்பூர்வ‌மாக‌ பேச‌ ஆர‌ம்பித்துவிடுவார். பாட்டெல்லாம் கூட‌ பாடுவார். இப்ப‌டி ஒவ்வொரு காட்சியிலும் ந‌ட‌க்கும் காமெடிக‌ளை நாங்க‌ள் இருவ‌ரும் பார்த்து பார்த்து சிரித்து கொண்டே இருந்தோம். எங்க‌ளுட‌ன் ஒருவ‌ர் ப‌ட‌ம் பார்த்து கொண்டிருக்கிறாம் என்ப‌தை நாங்க‌ள் இருவ‌ரும் கொஞ்ச‌மும் நினைக்க‌வே இல்லை.

உச்ச‌க‌ட்ட‌ காமெடியாக‌ ஒரு காட்சியில் ஹீரோயின் ச‌த்ய‌ராஜை திரும‌ண‌ம் செய்து கொள்வ‌தாக‌ சொல்லுகிறார். உட‌னே கேம‌ரா மார்ட‌ன் டிர‌ஸ் போட்ட‌ ச‌த்ய‌ராஜ் ம‌ற்றும் ஹீரோயின், ஒரு ந‌ட‌ன‌க்குழுவுட‌ன் ஆட்ட‌ம் போடுவ‌தை காண்பிக்கிற‌து. இந்த‌ பாட‌ல் ஆர‌ம்பித்த‌து தான் தாம‌த‌ம் நாங்க‌ள் இருவ‌ரும் ஷோபாவில் இருந்து எழுத்து உக்கார்ந்து சிரிக்க‌ ஆர‌ம்பித்தோம்...

சிரித்துக்கொண்டே திரும்பி பார்த்தால் ஒருவ‌ர் கொலைவெறியோடு எங்க‌ளை பார்த்துவிட்டு புரியாத‌ பாஷையில் எதோ சொல்லிவிட்டு சான‌லை மாத்திவிட்டு விர்ர்ரென்று கிள‌ம்பினார்... ந‌ம‌க்கு த‌மிழையும், இத்துப்போன‌ இங்கிலீஷையும் த‌விர‌ வேறு ஏதும் தெரியாத‌து எவ்வ‌ள‌வு ந‌ல்ல‌து.. இல்லைனா?.. அவ‌ரு சொன்ன‌து புரிந்திருக்குமே?... :)))))))))))

அந்த‌ ப‌ட‌த்தை ஆர‌ம்ப‌த்தில் இருந்து பார்க்கும் போதே அது ம‌லையாள‌ க‌தையாக‌ தான் இருக்கும் என்று நினைத்தேன், அங்கு இருந்து தான் இவ‌ர்க‌ள் ல‌வ‌ட்டி இருப்பார்க‌ள் என்று நினைத்தேன். இன்று காலையில் வ‌ந்து கூகிளை த‌ட்டினால் அது உண்மைதான் என்ற‌து. க‌ரும‌டிகுட்ட‌ன்(Karumadikuttan) என்ற‌ ம‌லையாள‌ப்ப‌ட‌த்தின் ரிமேக் தான் இது.. இதை ம‌லையாள‌த்தில் ஒருமுறை க‌ண்டிப்பா ப‌க்க‌னும்.. இவ‌ர்க‌ள் ரிமேக் என்ற‌ பெய‌ரில் எவ்வ‌ள‌வு சொத‌ப்புகிறார்க‌ள் என்ப‌தை அறிந்து கொள்ள‌.. :))))))


.


.

Tuesday, May 31, 2011

இர‌ண்டு பாக்கெட் கொடு!!!

சுத்த‌மான‌ த‌ண்ணி எங்கும் கிடைக்காது, கார்ப்ப‌ரேச‌ன் த‌ண்ணியை தான் எல்லா இட‌மும் வைச்சிருப்பானுங்க‌. அத‌னால‌ ப‌ச‌ங்க‌ளுக்கு வெளியில் இருந்து த‌ண்ணி வாங்கி குடிக்க‌ கொடுக்க‌ முடியாது, ரெண்டு பாட்டில‌ த‌ண்ணி நிர‌ப்பி ஹேண்ட் பேக்குல‌ போட்டுக்க‌.

ச‌ரிங்க‌..

உன‌க்கு ஒவ்வொரு வாட்டியும் சொல்ல‌னுமா?.. ப‌ச‌ங்க‌ளை வெளியில‌ கூட்டி போகும் போதும் அவ‌ங்க‌ முக‌த்தை கைக்குட்டையால‌ க‌ட்ட‌‌ சொல்லியிருக்கேனா, இல்லையா?.. ரோட்டுல‌ ம‌னுச‌ன் ந‌ட‌க்க‌ முடிய‌லை. வ‌ண்டி எல்லாம் புழுதியையும், புகையையும் ந‌ம்ம‌ மேல‌ தான் கொட்டிட்டு போவான். என்னைக்கு தான் இந்த‌ ஹ‌வ‌ர்மெண்ட் திருந்த‌ போகுதோ...

ஹெண்ட்பேக்ல‌ தான் வ‌ச்சிருக்கிறேன், இதோ க‌ட்டிவிட்டுறேன்..

ம்ம்ம்..

ஏங்க‌ வீட்ல‌ நீங்க‌ வாங்கி வ‌ந்த‌ ப‌ழ‌ம் எல்லாம் தீர்ந்து போச்சு, இதோ ப‌ழ‌ வ‌ண்டி வ‌ருது, இரு ரெண்டு கிலோ வாங்கி வைச்சுக‌லாமா?..

உன‌க்கு அறிவே கிடையாதா?.. இந்த‌ ப‌ழ‌ங்க‌ள் எல்லாம் க‌ல்லு போட்டு ப‌ழுக்க‌ வைச்சுருப்பானுங்க‌. க‌ல‌ருதான் சூப்ப‌ரா இருக்கும்.. வாங்கி சாப்பிட்டா வாந்தி தான் வ‌ரும்...

அம்மா என‌க்கு ஜ‌ஸ்கிரீம் வேணும்?..

டேய்..... என்னிட‌ம் கேட்காத‌, முன்னாடி போற‌ உங்க‌ அப்பாகிட்ட‌ போய் கேளு.. நான் அவ‌ர்கிட்ட‌ கேட்டு, வாங்கி க‌ட்டிக்கிட்ட‌து போதும்.. போ.. போய் நீயே கேளு!!!..

அப்பா... அப்பா.. இங்க‌ பாருங்க‌ ஐஸ்கிரீம் க‌டை இருக்கு, அதுல‌ இருந்து என‌க்கு ஒரு வெண்ணிலா ஐஸ்கிரீம் வாங்கி தாங்க‌..

என் செல்ல‌ குட்டியில்லா.. சூச் சூசூ.. ஐஸ்கிரீம் சாப்பிட்டா ஜ‌ல‌தோச‌ம் வ‌ரும், இரும‌ல் வ‌ரும், காய்ச்ச‌ல் வ‌ரும், அப்புற‌ம் டாக்ட‌ர் கிட்ட‌ போக‌னும், உங்க‌ளுக்கு பெரிய‌ ஊசி போட‌னும், அத‌னால‌ இப்ப‌ வேண்டாண்டா க‌ண்ணு.. போ.. போய் அம்மாகிட்ட‌ பிஸ்க‌ட் வாங்கி சாப்பிடு..

அம்மா என‌க்கு பிஸ்க‌ட் வேண்டாம், எல்லாத்தையும் த‌ம்பிக்கு கொடுங்க‌.. என‌க்கு சாக்லெட் வாங்கி தாருங்க‌..

ஏங்க‌.. உங்க‌ பொண்ணுக்கு சாக்லெட் தான் வேணுமாம், பிஸ்க‌ட் வேண்டாமாம்..

புஷ்சு இங்க‌ வாட‌ செல்ல‌ம்.. இங்க‌ பாருடா!!! சாக்லெட் சாப்பிட்ட‌ ப‌ல்லெல்லாம் சொத்தை ஆயிடும். அப்புற‌ம் அதுல‌ பூச்சி எல்லாம் வ‌ரும். அது ரெம்ப‌ வ‌லிக்கும்டா.. அத‌னால‌ இன்னைக்கு சாக்லெட் வேண்டாம். போம்மா போய் அம்மா கிட்ட‌ போய் பிஸ்க‌ட் வாங்கி ச‌ம‌த்த‌ சாப்பிடு..

ஏங்க‌ இந்த‌ ப‌ஸ் ஸ்டாப்புல‌ தானே, நாம‌ ப‌ஸ் ஏற‌னும்?...

ஆமா.. இங்க‌ தான் ஏற‌னும்.. அதோ பாரு.. அந்த‌ செய‌ர் காலியா தான் இருக்கு.. இர‌ண்டு பேரையும் கூட்டிட்டு போய் அதுல‌ உக்காரு.. நான் அந்த‌ பெட்டிக‌டைக்கு போயிட்டு வ‌ந்திடுறேன்.

ச‌ரிங்க‌..

------- X -------- X ------- X -------- X --------

வாங்க‌ சார், என்ன‌ இன்னைக்கு, குடும்ப‌தோட‌ வெளியில‌ கிள‌ம்பிட்டீங்க‌ போல‌...

ஆமா காளி.. வெளியில‌ கொஞ்ச‌ம் ஷாப்பிங்‌ இருக்கு..

கோல்ட் பிளாக் பில்ட‌ர் ஒரு பாக்கெட் போதுமா சார்?..

இல்ல‌ காளி.. நான் வ‌ர்ற‌துக்கு ஈவ்னிங் ஆயிரும் போல‌.. அத‌னால் ரெண்டு பாக்கெட்டா கொடுத்துடு, போற‌ இட‌த்துல‌ இந்த‌ பிராண்டு இல்ல‌, சிச‌ர்ஸ் இருக்கு, வில்ஸ் இருக்குனு க‌டுப்பேத்துவானுங்க‌.. உன‌க்கு தான் தெரியுமே, இந்த‌ பிராண்டை த‌விர‌ வேறுயேதும் ந‌ம‌க்கு ஒத்துக்காதுனு......

தெரியும் சார்..

------- X -------- X ------- X -------- X -------- X ------- X -------- X -------- X -------இன்று உல‌க‌ புகையிலை எதிர்ப்பு நாள்

புகையிலையால் ஏற்ப‌டும் தீமைக‌ளை நாமும் அறிவோம்!!!!!!..

ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் அறிய‌ த‌ருவோம்!!!!!..


.

.

.

Monday, May 30, 2011

எங்க வீட்ல எதுக்குடா சண்டை போடனும்?

நான் இன்னைக்கு ரூம்க்கு வரலைடா.. குமார் ரூமுக்கு போறேன்.

ஏண்டா, என்னாச்சி..

இல்லடா... வீட்ல இருந்து போன் வந்திச்சி. அப்பா ரெண்டு நாளா வீட்ல சாப்பிடலையாம், எனக்கு மனசு கஷ்டமா இருக்குடா.. தண்ணி அடிச்சே ஆகனும். குமார் ரூம்ல தான் இன்னைக்கு பாட்டில் இருக்கும்...

அப்பா ஏண்டா வீட்ல சாப்பிடலை? ஏதும் பிரச்சனையா? என்ன ஆச்சி?..

நாம இரண்டு பேரும் சென்னையில இருக்கும் போது உன்னிடம் சொல்லியிருக்கிறேனானு தெரியல.. எனக்கு அம்மா வழியில் உள்ள ஒண்ணுவிட்ட மாமா ஒருத்தர் சென்னை நெசபாக்கத்தில் குடும்பத்துடன் இருந்தார். அவருக்கு இரண்டு பொண்ணுங்க. இரண்டு பொண்ணுங்களுக்கும் விவரம் தெரியிறதுக்கு முன்பே ஒரு விபத்துல மாமி இறந்திட்டாங்க. அதுக்க அப்புறம் மாமா வேற கல்யாணம் ஏதும் பண்ணல. மாமாவின் இரண்டு பொண்ணுங்களும் படிச்சிட்டு இருந்தது. நான் கூட ஒரு நாளு அவங்க வீட்டுக்கு போயிருக்கிறேன்..

சரிடா. அதுக்கும் உங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?...

போன வாரம் வீட்டுக்கு போன் பேசினேன். ஸ்கூல் லீவா இருக்கிறதால அண்ணனும் ஊர்ல தான் இருக்கிறான். எலக்சன் டூட்டி, பரிட்சை பேப்பர் திருத்துறதுனு, வேலை எல்லாம் முடிச்சிட்டு இரண்டு வாரம் முன்னாடி தான் ஊருக்கு வந்திருக்கிறான். அன்றைக்கு, அவன் தான் போனில் என்னிடம் மாமா வீட்டு பிரச்சனை பற்றி சொன்னான். மாமாவின் மூத்த பொண்ணு கூட வேலை பார்த்த பையனுடன் வீட்டை விட்டு ஓடி போயிவிட்டாராம். ஓடிப் போனவர் சும்மா போகவில்லை, இளைய பொண்ணுக்கு மாமா செய்து வைத்திருந்த சில நகைகளையும் எடுத்திட்டு போயிட்டாராம். இந்த விசயத்தால் மாமா ரெம்ப மனசு ஒடிஞ்சி போயிட்டாராம். அதனால சென்னையில் இருந்த, தன்னோட சின்ன பொண்ணை கூட்டிட்டு ஊருக்கு வந்திருக்கிறார்.

சரி.. அப்புறம் என்ன ஆச்சி..

ஊருக்கு வந்தவர் எப்படியும் எங்க வீட்டுக்கு வருவாரு என்பதால், அண்ணனும், அம்மாவும் அப்பாவிடம் மாமாவின் பொண்ணு விசயத்தை பற்றி விவரமா சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் அவரிடம் ஓடிப்போன மூத்த பொண்ணு பற்றியே கேட்பதால் ரெம்ப மன கஷ்டத்தில் இருப்பார் என்பதால் அதை பற்றி எதுவும் திரும்பவும் மாமாவிடம் கேட்க வேண்டாமுனு சொல்லிருக்கிறார்கள். அப்பாவும் இருவரும் சொல்லும் போது "அதுவும் சரிதான், நான் ஏதும் கேட்க மாட்டேனு " தலையை ஆட்டியிருக்கிறாரு.

நேத்தைக்கு காலையில சின்ன பொண்ணுடன் வீட்டுக்கு வந்த மாமாவிடம், அப்பா; என்ன மனோகரா, மூத்த பொண்ணை கூட்டிட்டு வரலியா?.. என்று மாமாவை நெளிய வைத்திருக்கிறார். அவரும் பொண்ணுக்கு ஆபிசில் லீவு கிடைக்கவில்லை, பரிட்சை இருக்கு அப்படினு சொல்லி சமாளிச்சிட்டு கிளம்பிட்டார். அப்புறம் தான் வீட்டில் பூகம்பம் கிளம்பியிருக்கிறது.

நாங்க அவ்வளவு சொல்லியிருக்கிறோன், அவரு வந்தா.. பொண்ணு பற்றி ஏதும் கேட்க வேண்டானு, எல்லாத்துக்கும் சரினு தலையை ஆட்டிட்டு, "முதல் கேள்வியே உங்களுக்கு அதான் கிடைச்சுதானு" அண்ணனும், அம்மாவும் கேள்வி கணையை தொடுக்க...

அப்படினா, எனக்கு வயசாகி போச்சு, எனக்கு பேச தெரியாது, உங்களுக்கு தான் எல்லாம் பேச தெரியுமுனு அப்பா எதிர் கணையை தொடுக்க..

அப்படி இல்லைங்க.. நம்ம பையன் தான் அவ்வளவு சொன்னான் இல்லையா?.. அப்புறம் எதுக்கு அவரிடம் திரும்ப கேட்டீங்கனு.. அம்மா கேட்டிருக்காங்க..

"புள்ளைங்க பேச்சுதான் உனக்கு பெருசா போச்சானு" அப்பா கேட்க, சண்டை வேற மாதிரி திரும்பிடுச்சு....

இப்படி ஆரம்பிச்ச சண்டையால் தான்.. அப்பா, வீட்ல இரண்டு நாளா சாப்பிடலை...

எனக்கு காலையில இருந்து வேலையே ஓடலடா... நான் குமார் ரூமுக்கு போறேன்.

சரி போயிட்டு வா!!.. ராத்திரி சாப்பிட ரூமுக்கு வந்திருடா..

சரிடா... தூங்க வந்திடுறேன்..

"யாரோ ஒருத்தரோட பொண்ணு, யாரோ ஒருவருடன் ஓடிவிட்டாராம், அதுக்கு எங்க வீட்ல எதுக்குடா சண்டை போடனும்?, சாப்பிடாம இருக்கனும்" என்று, இரவு பதினொரு மணிக்கு தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி, அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு, பதினாறாவது முறையாக கேட்டும் நண்பனை பார்த்து, நான் என்ன சொல்வது?.... நீங்களே சொல்லுங்க!!!...
.

.

.

Monday, May 2, 2011

க‌வ‌லை உன‌க்கு..
மழைப் பொழிந்தாலும்-கவலை உனக்கு
அறுவடை செய்ய வேண்டுமேயென்று!!!

மழைப் பொய்த்தாலும்-கவலை உனக்கு
நாற்றுநடவு செய்ய வேண்டுமேயென்று!!!

அதிகப்படியாக விளைந்தாலும்-கவலை உனக்கு
தானியங்களின் விலை வீழுமேயென்று!!!

குறைவாக விளைந்தாலும்-கவலை உனக்கு
வட்டிக்கடன் வீதம் ஏறுமேயென்று!!!

திருவிழாக்கள் வந்தாலும்-கவலை உனக்கு
புத்தாடை வாங்க வேண்டுமேயென்று!!!

மகன் நன்றாக படித்தாலும்-கவலை உனக்கு
கல்விக் கட்டணம் கட்ட வேண்டுமேயென்று!!!

மகள் பெரியவள் ஆனாலும்-கவலை உனக்கு
விளைநிலம் விலை போகுமோயென்று!!!

.

.
.

Monday, April 25, 2011

வாய‌ மூடுறா!!! என்னை சொன்னேன்.

கடந்த விடுமுறையில், ஊர்ல இருக்கும் போது சந்துரு இன்னைக்கு வர்றானு அம்மா சொல்லும் போதே உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. இந்த வாட்டியும் அவங்க்கிட்ட மாட்டிட்டு முழிக்காதடா?.. உசாரா இருந்துக்கனு என்னை நானே சொல்லிக்கொண்டேன். சந்துரு எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த யமுனா அக்காவின் பையன். இவன் பிறந்தவுடன் யமுனா அக்கா சென்னையில் போய் செட்டில் ஆகிவிட்டார்கள். மே மாதம் ஸ்கூல் லீவில் மட்டும் ஊருக்கு அவங்க அம்மாவை பார்க்க வருவாங்க, அப்ப எங்க வீட்டுக்கும் வருவது வழக்கம். "இந்த காலத்து பசங்ககிட்ட பார்த்துத்தான் பேசனும்" என்பதை புரியவைத்தவன் இவன் தான்.

இப்படித்தான் நான் போன வருசம் ஊருக்கு வந்திருக்கும் போது, இந்த யமுனா அக்காவும், சந்துருவும் ஊருக்கு வந்திருந்திருந்தார்கள். பக்கத்தில் ஊரில் இருக்கும் அவங்க அம்மாவை பார்த்துவிட்டு மதியம் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள், கூடவே நம்ம சந்துருவும் வந்திருந்தான். என்னை சந்துரு "அங்கிள்" என்று தான் கூப்பிடுவான். எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் போதே யமுனா அக்காவை ஏதாவது சொல்லி கிண்டல் பண்ணுவது என்னுடைய வழக்கம். அன்றும் அப்படித்தான் யமுனா அக்காவிடம் என்னுடைய அம்மா, சென்னையில் இருந்து எப்ப வந்தேம்மா? என்று கேட்டார்கள். அதுக்கு யமுனா அக்கா, "மார்னிங் செவன் தேர்ட்டி" என்று இங்கிலீஷில் பதில் சொன்னார்கள். பக்கத்தில் இருந்த நான், "துரையம்மா இப்ப எல்லாம் இங்கிலி பீசில் தான் பேசுது" என்று சொன்னது தான் தாமதம் பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரித்துவிட்டார்கள், ஒருவனை தவிர.. அதுதான் நம்ம சந்துரு.. நானும் சரி, பையனுக்கு காமெடி புரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து யமுனா அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு செயர் போட்டு அங்கு உக்கார்ந்திருந்தேன். யமுனா அக்கா பக்கத்தில் உக்கார்ந்திருந்த சந்துரு மெதுவாக என்னிடம் வந்தான். வந்தவன், என்னிடம் "அங்கிள் நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க? என்றான். நானும் சும்மா இல்லாமல் "மெட்டீரியல் இஞ்சினீயர்" என்று கெத்தா சொல்லிட்டேன். என்ன அங்கிள் பீட்டர் விடுறீங்க.... சும்மா தமிழ்ல சொல்லுங்க என்று போட்டான் பாருங்க ஒரு பிட்டு, கொஞ்சம் ஆடித்தான் போனேன். சுதாரித்து பதில் சொல்லுவதற்குள் வீட்டில் இருந்த மொத்த பேரும் சிரிச்சு முடிச்சாச்சி......

என்ன அங்கிள் மெட்டீரியல் இஞ்சினீயருக்கு தமிழ்ல என்ன?.. என்று திரும்பவும் கேட்டான். அது.......... அது வந்து... இஞ்சினீயர் என்றால் "பொறியாளர்" டா என்று சத்தமாக சொல்லி சிரித்த என்னை, ஒரு சின்ன ரியாக்சனும் இல்லாமல் அப்படியே நக்கலாக பார்த்து விட்டு, இஞ்சினீயர்னா, பொறியாளர்னு எங்க்களுக்கும் தெரியும் அங்கிள், முன்னாடி இருக்கிற மெட்டீரியலுக்கு என்ன தமிழ் வார்த்தை என்று என்னை மடக்கினான். டேய் மெட்டீரியலுனா? "மெட்டல்" டா, அதான் உலோகம், கனிமம், தாது போன்றவை. அவைகளை மூலப்பொருட்கள் என்று சொல்லுவார்கள் அதுதான் அதனுடைய தமிழ் அர்த்தம் என்று பாடம் நடத்தினேன். போங்க அங்கிள் மெட்டீரியல் என்ற ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரிய பாடம் நடத்துறீங்க.. என்று சிரித்து விட்டு, அப்ப நீங்க மெட்டல் எஞ்சினீயரா?.. இனி நான் உங்களை மெட்டல் அங்கிளுனு கூப்பிடுறேன் என்று சொல்லி விட்டு ஓடினான்.

அவனுடைய அம்மாவை நான் கலாய்த்த போது, இவன் மட்டும் சிரிக்காமல் இருந்ததுக்கு அர்த்ததை இப்போது புரிந்து கொண்டேன்.. அட சாமீ.. இப்ப உள்ள பசங்க என்னா விவரம்......... !!!!!!..
இந்த சந்துரு தான், இந்த வருட லீவிலும் ஊருக்கு வருகிறான் என்று அம்மா காலையில் சொல்லி கொண்டிருந்தார்கள். இந்த வருடமும் அவனிடம் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள கூடாது என்று கவனமாக இருந்தேன். அதற்கு ஏற்றது போல் ஆபிஸில் இருந்து அவசரமாக ஒரு போன் அழைப்பு வந்தது. என்னுடைய மேனேஜர் தான் பேசினார். அவசரமாக ஒரு பைல் மெயில் பண்ணுறேன், கொஞ்சம் குவாலிட்டி செக் பண்ணி அனுப்புங்க என்று சொன்னார்.

நானும் நல்லவன் போல் லேப்டாப்பை ஆன் பண்ணி அந்த பைலை டவுன்லோட் செய்து வேலை செய்ய ஆரம்பிக்கும் போது, யமுனா அக்காவும் சந்துருவும் வந்தார்கள். வந்த அக்காவிடம் நலன் விசாரித்துவிட்டு, சந்துருவை என்னுடன் அழைத்து கொண்டு லேப்டாப் முன் அமர்ந்தேன். என் பக்கத்தில் இருந்த செயரில் அவனையும் உக்கார சொல்லிவிட்டு, என்னுடைய வேலையை ஆரம்பித்தேன். அது எக்ஸல் பைல். அதில் சில மெட்டீரியல் விபரங்கள் இருக்கும் அவை ஸ்டாண்டர்டு பார்மெட்டுக்கு சரியாக உள்ளதா என்பதை தான் நான் சரி பார்க்க வேண்டும். அதற்க்காக எக்ஸலில் உள்ள பல பார்முலாக்களை உபயோகிக்க வேண்டும். நான் ஒவ்வொரு பார்முலாவாக போட்டு செக் செய்து கொண்டு இருப்பதை, சந்துரு ஆச்சரியமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தவன், என்னிடம் என்ன அங்கிள்!!!! இந்த வேலை தான் ஆபிஸிலும் பார்ப்பீங்களா? என்றான். நானும் ஆமாப்பா.. இந்த பார்முலா எல்லாம் உபயோகப்படுத்துவது ரெம்ப கஷ்டம். கொஞ்சம் மாறினாலும் எல்லாம் தப்பாயிடும் என்று பில்டப் கொடுத்தேன்.

என்ன அங்கிள், உங்களுக்கு மேக்ரோ எழுத தெரியாதா?.. விபில அதான் விசுவல் பேசிக்ல ஒரு மேக்ரோ எழுதி வைச்சீங்கணா 5 நிமிச வேலை. அதுவே ஆட்டோமெட்டிக்கா செக் செய்யும் என்றான். இப்ப‌டி ஒவ்வொருவாட்டியும் நீங்க‌ லொட்டு.. லொட்டுனு பார்முலாவை டைப் ப‌ண்ண‌ வேண்டிய‌துயில்லை என்று சொல்லிவிட்டு ந‌க்க‌லா சிரித்தான்...

அப்ப‌டியே அவ‌னை பார்த்து வ‌ழிந்துவிட்டு, வ‌லிக்காத‌ மாதிரியே லேப்டாப்பை இழுத்து மூட‌ தொட‌ங்கினேன்..

என்ன‌ அங்கிள் வேலையை முடிச்சிட்டீங்க‌ளா?... வாய‌ மூடுறா!!! என்று என்னை நானே சொல்லிவிட்டு, அவ‌ன் கேட்ட‌ கேள்வியை காதில் வாங்காம‌ல், நீ அடுத்த‌ வ‌ருச‌ம் எந்த‌ கிளாஸ்டா போக‌ போறே? என்றேன்.

நான் செவ‌ந்த் கிளாஸ் போறேன் அங்கிள் என்றான்..

Tuesday, April 12, 2011

தேர்த‌ல்_இறுதிக்க‌ட்ட‌ ஓட்டு சேக‌ரிப்பு

தேர்த‌லில் போட்டியிடுப‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளை ம‌க்க‌ளிட‌ம் சொல்லி ஓட்டு கேட்ப‌தெல்லாம் சினிமாக்க‌ளில் ம‌ட்டும் தான் பார்க்க‌ முடியும் என்று நினைக்கிறேன்...

ஒவ்வொருவ‌ரின் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளையும், கொலைபாத‌க‌ங்க‌ளையும் காட்டி ஓட்டு கேட்கிறார்க‌ள். எந்த‌ ஆட்சியில் அதிக‌மாக‌ வ‌ன்முறைக‌ள் க‌ட்ட‌விழ்க்க‌ ப‌டுகிற‌து என்று போட்டா போட்டி போட்டு த‌ங்க‌ள் ஊட‌க‌ங்க‌ளில் ஒளிப‌ர‌ப்புகிறார்க‌ள். க‌ண‌க்கில் அட‌ங்காத‌ குற்ற‌ங்க‌ளை காட்டி எங்க‌ள் ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?... உன‌து ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?.. என்று போட்டி போடும் வேட்பாள‌ மாக்க‌ளே(எழுத்துப்பிழை இல்லை)!!!!.. ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் ம‌க்க‌ளுக்கு செய்த‌ ந‌ல்ல‌ விச‌ய‌ம் ஒன்றை உங்க‌ளால் சுட்டிக் காட்ட‌முடியுமா?..
எதிரெதிர் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளை காட்டி ஓட்டுப்பிச்சை கேட்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளே!!!... உங்க‌ள் ஆட்சியில் ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் செய்த‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை ப‌ட்டிய‌ல் இட்டு, ம‌க்க‌ளிட‌ம் காட்டி எப்போது ஓட்டு கேட்க‌ப் போகிறீர்க‌ள்?..

அவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் ந‌ட‌ந்த‌ ஊழ‌ல் ம‌ற்றும் வ‌ன்முறைக‌ளை இவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் குறைவாக‌ இருக்கிற‌து என்று ந‌டுநிலைமையாள‌ர்க‌ளும் வாய் ச‌வுடால் அடிக்கிறார்க‌ள்.... அட‌ பெரிய‌ம‌னுச‌ங்க‌ளா!!!! ஊழ‌ல், வ‌ன்முறை இர‌ண்டுமே அர‌சிய‌லில் த‌ப்பு.. அதில‌ சின்ன‌து, பெருசு... அதிக‌ம், குறைவு.. காமெடியா இல்ல‌... போங்க‌ய்யா!!!! போங்க‌.... நீங்க‌ளும் உங்க‌ள் ந‌டுநிலைமையும்.....

அர‌சிய‌ல் என்றாலே ஊழ‌லும், வ‌ன்முறையும் தான் என்ப‌து பெரும்பால‌ன‌ ம‌க்க‌ளில் க‌ருத்து. அந்த‌ மாயையை இப்போது உள்ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் ஊட‌க‌ங்க‌ளும் அழ‌காக‌ வ‌ள‌ர்த்தெடுகின்ற‌ன‌. இப்ப‌டியே போனால் வ‌ன்முறையும், ஊழ‌லும் தான் அர‌சிய‌ல் செய்ய‌ முக்கிய‌ கார‌ணிகள் என்று ஆகிவிடும்.. இந்த‌ ஊட‌க‌ங்க‌ளும் அத‌ற்கு தூப‌ம் போடும்..

செழிக்க‌ட்டும்‌!!!! ஊழ‌ல்‌ அர‌சிய‌ல்...

வ‌ள‌ர‌ட்டும்‌!!!! இல‌வ‌ச‌ங்க‌ள்...

--------X--------X-------X----------X----------X-------------X------------X----------------X----------X----

என்னுடைய‌ தொகுதி ப‌த்ம‌னாப‌புர‌ம். என்னுடைய‌ தொகுதி வேட்பாள‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் தான்.

ஆஸ்டின் - தேமுதிக‌

புஷ்ப‌ லீலா ஆல்ப‌ன் - திமுக‌

சுஜித்குமார் - பிஜேபி

இதில் தேதிமுக‌ வேட்பாள‌ர் ஆஸ்டின் ம‌க்க‌ளுக்கு அறிமுக‌மான‌ ஒருவ‌ர். இவ‌ர் முன்பு அதிமுகாவில் இருந்த‌வ‌ர். விஜ‌ய‌காந்த‌ க‌ட்சி ஆர‌ம்பித்த‌வுட‌ன் வ‌ந்து சேர்ந்த‌வ‌ர்.

இந்த‌ தேர்த‌லில் பிஜேபி த‌னியாக‌ வேட்பாள‌ரை நிறுத்தியிருக்கிற‌து. எங்க‌ள் ப‌குதியில் பிஜேபிக்கு க‌ணிச‌மான‌ ஓட்டு உண்டு. எது எப்ப‌டியிருந்தாலும் க‌டைசி இர‌ண்டு நாட்க‌ள் ந‌ட‌த்தும் வாக்கு சேக‌ரிப்பு தான் எங்க‌ள் தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும்..

அப்ப‌டி என்ன‌தான் ப‌ண்ணுவார்க‌ள்?.. யாரெல்லாம் வெளியூரில் இருக்கிறார்க‌ள்? என்ப‌த‌ன் க‌ண‌க்கெடுப்பு ஒன்று.

ஊரில் இருந்தும் ஓட்டு போட‌ பூத்திற்கு வ‌ராத‌வ‌ர்க‌ளின் க‌ண‌க்கெடுப்பு ம‌ற்றொன்று..

இந்த‌ க‌ண‌க்கெடுப்பு ப‌ட்டிய‌ல் போட‌ ஒவ்வொரு க‌ட்சிக்கும் ஒரு குழுவே இருக்கும். கார‌ண‌ம் வெளியூர்க‌ளிலும், வெளிநாடுக‌ளும் இருப்ப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை இங்கு அதிக‌ம். இறுதியாக‌ ப‌ட்டிய‌லில் வ‌ரைவு அந்த‌ந்த‌ க‌ட்சி பெருசு‌க‌ளின் கைளுக்கு சென்றுவிடும்.

அப்புற‌ம் என்ன‌!!!!!!! எந்த‌ பூத்தில் எந்த‌ க‌ட்சியின் கை ஓங்கி இருக்கிற‌தோ அங்கே அந்த‌ ப‌ட்டிய‌லில் உள்ள‌வ‌ர்க‌ளின் ஓட்டுக‌ளை போட‌ வேண்டிய‌துதான்..

இப்ப‌ எங்க‌ தொகுதியில‌ எந்த‌ க‌ட்சி ஜெயிக்க‌ போவுதுனு என‌க்கு புரியுது.. உங்க‌ளுக்கு புரியுதா?....... :)

Monday, April 4, 2011

ஊர் நினைவ‌லைக‌ள்_மாம்ப‌ழ‌த்துறையாறு அணை

நீங்க‌ எந்த‌ ஊரு த‌ம்பி?..

நான் க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ வில்லுக்குறி..

க‌ண்ணுக்கும், ம‌ன‌சுக்கும் ப‌சுமை த‌ரும் ஊருதான்.. உங்க‌ளுக்கு இந்த‌ சூடான‌ சென்னை வாழ்க்கை கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மாதான் இருக்கும்..

ஆமாங்க‌.. என்று சொல்லிவிட்டு அவ‌ர‌து முக‌த்தை பார்த்தால், ரெம்ப‌ ச‌ந்தோச‌மான‌ புன்ன‌கையுட‌ன், உண‌ர்ச்சி பொங்க‌, எங்க‌ள் ஊரில் உள்ள‌ வ‌ய‌ல் வெளிக‌ள் ப‌ற்றியும், நீர் நிலைக‌ள் ம‌ற்றும் அணைக‌ள் ப‌ற்றியும் அவ‌ற்றின் பெருமைக‌ளைப் ப‌ற்றியும் விவ‌ரிப்பார். அதில் என‌க்கு தெரியாத‌ சில‌ விச‌ய‌ங்க‌ளும் அட‌ங்கும்.

வெளியூரில் இருக்கும் ந‌ம்மை போன்ற‌ ம‌க்க‌ளுக்கு சொந்த‌ ஊரின் நினைவுக‌ளை ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசும் போது ந‌ம்முடைய‌ ம‌ன‌ம் த‌ன்னைய‌றியாம‌ல் ஒருவித‌ ம‌கிழ்ச்சியில் க‌ளிப்புறுவ‌து ம‌றுக்க‌யிலாது..

ஆனால் இவ‌ர்க‌ள் விய‌ந்து சொல்லும் அனைத்து விச‌ய‌ங்க‌ளுக்கும் ந‌ம்முடைய‌ ஊர், இப்போதும் ஏற்புடைய‌துதானா? என்ற‌ கேள்வி என்னில் எப்போதும் எழுவ‌து உண்டு..
சிறுவ‌ய‌தில் எங்க‌ள் ஊரில் கிண‌றுக‌ள் அதிக‌மாக‌ இருக்கும். அதில் இருந்து இறைக்கும் நீர் தான் குடிப்ப‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும். இந்த‌ கிண‌றுக‌ள் 50 அடியில் இருந்து 60 அடிக‌ள் வ‌ரை ஆழ‌ம் இருக்கும். இதில் 10 - 15 அடிக‌ள் நீர் எப்போதும் இதில் இருக்கும். கோடைக்கால‌த்திலும் வ‌ற்றாத‌ சில‌ கிண‌றுக‌ளை எங்க‌ள் ஊரில் நான் பார்த்த‌து உண்டு.

கால‌ ஓட்ட‌த்தில் இந்த‌ கிண‌றுக‌ளில் நீர் ஊற்றுக‌ள் குறைய‌ தொட‌ங்கிய‌து. ஒரு க‌ட்ட‌த்தில் முற்றிலும் நின்று க‌ட்டாந்த‌ரையை காட்டி ப‌ல்லிளித்த‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான் எங்க‌ள் ஊரில் உள்ள‌ ப‌ல‌ கிண‌றுக‌ளுக்கு மூடுவிழா போட‌ப்ப‌ட்ட‌து. அதில் என‌து வீட்டில் உள்ள‌ கிண‌றும் அட‌ங்கும். இப்போது எங்க‌ள் ஊரில் நீர் உள்ள‌ கிண‌றுக‌ளை பார்ப்ப‌து என்ப‌து மிக‌ அரிது.

கிணறுகளுக்கு மூடுவிழா போட்ட வீட்டில் எல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டது. இந்த ஆழ்துளைக் கிணறுகளில் ஆழம் சுமார் 250 அடியில் இருந்து 300 அடிகள்.. இப்போது இந்த ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து கொண்டு தான் வருகின்றது.

நிலத்தடி நீர் மட்டம் தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது, என்பது கண்முன்னே அழகாக தெரிகிறது.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் குளம் மற்றும் வாய்க்கால்கள் அதிகமாக இருக்கும். இவையிரண்டும் தான் விவசாயத்திற்கு ஊன்று கோலாய் இருந்தவை. இந்த குளங்கள் மற்றும் வாய்க்கால் பக்கம் நிலம் வைத்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி பல குளங்களை குட்டையாக மாற்றியதுண்டு.. சில நீர் நிலைகள் இருந்த இடங்களே, தடம் தெரியாமல் இன்று அடையாளம் தொலைத்து நிற்கின்றன. புதிய குளங்கள் எதுவும் வெட்டப்படவும் இல்லை. விவசாயத்திற்கு நீர் ஆதாரம் குறைவாக இருக்கிறது என்று பல விளைநிலங்கள் வீடுகளாக மாறி வருகிறது.

ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம்?_க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ள்

மேற்கண்ட என்னுடைய பதிவில் நான் காமெடியாக எழுதியிருந்தாலும் இதுதான் உண்மை..

எங்கள் ஊரில் மலைகள் அதிகமாக இருப்பதால் பருவ மழைகள் பொய்ப்பது இல்லை(2004 சுனாமி நிகழ்வுக்கு பிறகு பருவ மழைகளில் மாறுதல் உள்ளதாக சிலர் சொல்லுகிறார்கள், அது எவ்வளவு தூரம் உண்மையென்று எனக்கு தெரியவில்லை), ஆனால் இந்த மழை நீர்கள் சரியாக சேமிக்கப்படுவது இல்லை. அப்படியே கடலில் கலந்துவிடுகிறது. கோடைக்காலங்களில் எங்கள் ஊரில் வெயிலின் உக்கிரம் முன்பெல்லாம் அதிகமாக தெரிவதில்லை. ஆனால் இப்போது எங்கள் ஊரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

மேலே உள்ள விசயங்களால் குறைப்பட்டிருக்கும் எனக்கு, ஊரில் நேரில் பார்த்த சில ஆக்க பூர்வமான செயல்கள் ஆறுதல் தந்தன

பாலிதீன் பைகள் முற்றிலும் தடைச்செய்யபட்டிருக்கிறது. இந்த பைகளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடமும் அதிகமாக சென்றைடைந்திருக்கிறது. கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்பவர்களும் கைகளை வீசிக்கொண்டு செல்லாமல், கையில் துணிப்பைகளுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து எங்கள் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. எல்லா மாவட்டங்களிலும் இந்த கட்டுப்பாடு வந்தால் நன்றாக இருக்கும்..

இந்த ஆண்டு கட்டப்படும்.. அடுத்த ஆண்டு கட்டப்படும் என்று சில ஆண்டுகளாக எங்கள் ஊரில் சொல்லிவந்த மாம்பழத்துறையாறு அணைக்கட்டு ஒரு வழியாக கடந்த ஆண்டு கட்டி முடிக்கப் பட்டுவிட்டது. இது அமைந்திருக்கும் பகுதி இயற்கையாக அணைக்கட்டுவதைக்கு ஏதுவாக இருந்த இடம். மலைகளில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் இந்த அணையில் சேமிக்க படுகிறது... இந்த அணையின் மூலம் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மற்றும் விளை நிலங்களுக்கான நீர் ஆதரம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது...

அணை ப‌ற்றிய‌ விப‌ர‌ம் எல்லாம் இங்க‌ பாருங்க‌..நான் போன‌து ம‌ழைக்கால‌ம் இல்லீங்கோ..போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரெம்ப‌ நாள் ஆச்சுங்கோ..

Friday, March 18, 2011

ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம்(Online Video Resume)

வேலைத் தேட‌ வேண்டும் என்ற‌வுட‌ன் அனைவ‌ர‌து ஆழ்ம‌ன‌திலும் தோன்றுவ‌து இண்ட‌ர்வியூவை ப‌ற்றிய‌ க‌ல‌க்க‌ம் தான். இந்த‌ இண்ட‌ர்வியூவான‌து நாம் தேடும் வேலையைப் பொறுத்து மாறுப‌டும். உதார‌ண‌மாக‌ ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தின் இண்ட‌ர்வியூ என்ப‌து எழுத்துத் தேர்வில்(Written Test) ஆர‌ம்பித்து க‌ல‌ந்துரையாட‌ல்(Group Discussion) வ‌ரை போகும். அதே ஒரு சிறிய‌ நிறுவ‌ன‌மாக‌ இருந்தால் த‌குதியான‌வ‌ர்க‌ளை வ‌ர‌வ‌ழைத்து ஒரு ஓர‌ல் இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தி தேர்வு செய்வ‌ர். இவ்வாறு இண்ட‌ர்வியூவின் த‌ன்மையான‌து வேலையை பொறுத்து மாறுப‌டும்

எந்த‌வித‌மான‌ வேலையாக‌ இருந்தாலும் அந்த‌ வேலைக்கான‌ இண்ட‌ர்வியூக்கு செல்ல‌ நாம் ந‌ம்முடைய‌ ப‌யோடேட்டாவை ரெடி செய்வ‌து மிக‌ முக்கிய‌மாகிறது. பெரும்பாலான‌ நிறுவ‌ன‌ங்க‌ள் முத‌லில் ந‌ம்முடைய‌ ப‌யோடேட்டாவை பார்த்து தான் ந‌ம்மை இண்ட‌ர்வியூக்கு அழைக்க‌லாமா?.. வேண்டாமா?.. என்று முடிவு செய்கிறார்க‌ள். என‌வே ந‌ல்ல‌ வேலைக‌ள் கிடைப்ப‌தில் இந்த‌ ப‌யோடேட்டாவின் ப‌ங்கு மிக‌ முக்கிய‌மாகிற‌து.கையினால் டைப் செய்து பேப்ப‌ரில் பிரிண்ட் போட்ட‌ ப‌யோடேட்டாவிற்கு ப‌தில் வாயினால் பேசி வீடியோவாக‌ தொகுக்கும் தொழில் நுட்ப‌ முறைக‌ள் அறிமுக‌ம் ஆகிவிட்ட‌ன‌. இந்த‌ வ‌கையான‌ வீடியோ ப‌யோடேட்டாக்க‌ள் வீடியோரெஸ்யூம்(Video Resume) என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌து. இவை மேலை நாடுக‌ளில் பிர‌ப‌ல‌ம் என்றாலும், ந‌ம‌து இந்தியாவில் இப்போது தான் அறிமுக‌மாகிற‌து.

C2C Online Video Resume

மேலே உள்ள‌ லிங்கை கிளிக் செய்து நீங்க‌ளும் உங்க‌ளுடைய‌ ப‌யோடேட்ட‌வை வீடியோவாக‌ ப‌திவு செய்ய‌லாம். இவ‌ர்க‌ள் தான் இந்தியாவில் முத‌ன் முத‌லில் இந்த‌ ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம் தொழில் நுட்ப‌த்தைக் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள். C2C (Candidate to Client)

பெரும்பாலும் ப‌யோடேட்டா த‌யார் ப‌ண்ணும் போது இண்ட‌ர்நெட்டில் இருந்து கிடைக்கும் சாம்பிள் ப‌யோட்டேட்டாவில் உள்ளதை அப்ப‌டியே காப்பி செய்து பேஸ்ட் ப‌ண்ணிவிடுகிறோம். இவ்வாறு த‌யார் செய்த‌ ப‌யோடேட்டாவை கொண்டு இண்ட‌ர்வியூ சென்றால், க‌ண்டிப்பாக‌ இண்ட‌ர்வியூ ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு ப‌தில் தெரியாம‌ல் விழிக்க‌த்தான் செய்வோம். இந்த‌ வீடியோ ரெஸ்யூம் மூல‌ம் இதை க‌ண்டிப்பாக‌ த‌விர்க்க‌ முடியும். நாம் வீடியோவில் பேசிப் ப‌திவு செய்த‌தை ப‌ற்றி தான் கேட்பார்க‌ள். நாமும் எந்த‌வித‌மான‌ டென்ச‌னும் இல்லாம‌ல் இண்ட‌ர்வியூவில் ப‌ங்கேற்க‌ முடியும். இதில் ப‌திவேற்றி வைத்த‌ ந‌ம்முடைய‌ வீடியோ ரெஸ்யூமின் லிங்கை எவ‌ருக்கு வேண்டுமானாலும் மெயிலின் மூல‌ம் அனுப்பி வைக்க‌ முடியும். எல்லோராலும் ஓப‌ன் செய்து பார்க்க‌ முடியும். வீடியோ ரெஸ்யூமில் புதிதாக‌ அப்டேட் செய்ய‌வோ அல்ல‌து திருத்த‌ம் செய்ய‌வோ எளிதாக‌ முடியும்..

கால‌ம் பொன் போன்ற‌து. காலையில் இருந்து மாலை வ‌ரை இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தும் ஆபிசில் காவ‌ல் இருந்து க‌டைசியில் இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தும் அறைக்குள் நுழைந்தால் ப‌யோடேட்டாவில் உள்ள‌ விச‌ய‌ங்க‌ளையே திரும்ப‌ கேட்டுவிட்டு வீட்டிற்கு லெட்ட‌ர் அனுப்புகிறோம் என்று கூலாக‌ சொல்வார்க‌ள். இப்ப‌டிப்ப‌ட்ட‌ டெம்ப‌ளேட் நேர்முக‌த் தேர்வுக‌ளை இந்த‌ வீடியோ ரெஸ்யூம் மூல‌ம் முற்றிலும் த‌விர்க்க‌ முடியும்.

இண்ட‌ர்வியூ ந‌ட‌த்தும் க‌ம்பெனிக‌ளுக்கும், ஆட்க‌ளை தேர்வு செய்ய‌ இந்த‌ வீடியோ ரெஸ்யூம் முறையான‌து ரெம்ப‌ உத‌வியாக‌ இருக்கும். ஆட்க‌ளை தேர்வு செய்வ‌த‌ற்கு என்று த‌னியாக‌ அறைக‌ள் ஒதுக்கி அவ‌ர்க‌ளில் ஒவ்வொருவ‌ரையும் த‌னியாக‌ அழைத்து பேசி அவ‌ர்க‌ளின் திறைமையை ப‌ரிசீலிக்க‌ வேண்டிய‌து இல்லை. இத‌னால் க‌ம்பெனிக‌ளுக்கு க‌ணிச‌மான‌ ப‌ண‌மும், நேர‌ விர‌ய‌மும் மிச்ச‌மாகிற‌து.
சி2சி ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம்(C2C Online Video Resume) ந‌ட‌த்தும் இவ‌ர்க‌ளை ப‌ற்றி சொல்ல‌ வேண்டுமானால் இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ மேன்ப‌வ‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்சி ந‌ட‌த்தி ப‌ல‌ருக்கு வேலை வாய்ப்புக‌ள் ஏற்ப‌டுத்தி கொடுத்திருக்கிறார்க‌ள். மேலும் ஹெச் ஆர்(HR) தொட‌ர்பான‌ ப‌ல‌ டிரெயினிங்க் கோர்ஸ்க‌ளும் ந‌ட‌த்தி வ‌ருகிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு சென்னை ம‌ற்றும் துபாயில் ஆபிஸ் இருக்கின்ற‌து

இந்த‌ வீடியோ ரெஸ்யூம் ஆன்லைன் முறையான‌து வேலை தேடுப‌வ‌ர்க‌ளையும்(Candidate), வேலை கொடுப்ப‌வ‌ர்களையும்(Client) அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு(Next Level) அழைத்து சென்றிருக்கிற‌து என்பது திண்ண‌ம். விரைவில் இவ‌ர்க‌ள் வீடியோ விவாகா ச‌ர்வீஸும் கொண்டுவ‌ர‌யிருக்கிறார்க‌ள்..

.

.

.

Wednesday, March 16, 2011

புதிய‌ வான‌ம்(பாலைவ‌ன‌ம்).. புதிய‌ பூமி(ம‌ண‌ல்மேடு)..

அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம்.

ப‌திவு எழுதுவ‌த‌ற்கு ரெம்ப‌ நாட்க‌ள் விடுமுறை கொடுத்தாயிற்று. அத‌ற்கு முற்றுப்புள்ளி வைக்க‌வேண்டும் என‌ நினைப்பேன். ஆனால் அத‌ற்க்கான‌ச் சூழ‌ல் அமைவ‌து குதிரை கொம்பாக‌வே இருந்த‌து.ச‌வூதி அரேபியாவில் நான் ப‌ணி செய்தப் ‌பிராஜ‌க்டை ந‌ல்ல ‌ப‌டியாக‌ முடித்துவிட்டு ஊருக்கு வ‌ந்தேன். ஊரில் அண்ண‌னின் திரும‌ண‌ம். அத‌ற்கான‌ வேலையில் பிஸியாக ‌இருந்தேன். இர‌ண்டு மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரிய‌வில்லை. ச‌வூதியில் இருக்கும் போதே, இந்தப் ‌பிராஜ‌க்ட் முடித்த‌வுட‌ன் ந‌ம்ம‌ டீமில் உள்ள ‌அனைவ‌ரும் ஒரு அவுட்டிங் பிளான் ப‌ண்ண‌லாம் என்று மேனேஜ‌ர் சொல்லியிருந்தார். அத‌ன்ப‌டி கேர‌ளா சுற்றுப்ப‌ய‌ண‌ம் ஒரு வார‌ம். ப‌ய‌ண‌ம் நிறைவாய் இருந்த‌து.

க‌ட‌ந்த‌ ஒன்ப‌து வ‌ருட‌ங்க‌ளாய் வேலையின் நிமித்த‌ம் வெளியூர்க‌ளில் இருந்து வ‌ருகிறேன். ஊருக்கு விடுமுறையில் அவ்வ‌ப்போது சென்று வ‌ருவேன். அதிக‌ப‌ட்ச‌மாக‌ ப‌த்து நாட்க‌ள் தான் ஊரில் இருப்பேன். ஆனால் இந்த‌ விடுமுறையில் தான் அதிக‌ நாட்க‌ள்(மூன்று மாத‌ம்) ஊரில் இருந்த‌து.

ஊரில் அதிக‌ நாட்க‌ள் இருந்த‌தினால் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் குடும்ப‌த்தின‌ரின் இல்ல‌ நிக‌ழ்ச்சிக‌ளிலும் க‌ல‌ந்து கொள்ள‌முடிந்த‌து. என்னைப்போல் வெளியூர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் அதிக‌ம‌காக‌ விடுமுறையில் எங்க‌ள் ஊருக்கு வ‌ருவ‌து டிச‌ம்ப‌ர் ம‌ற்றும் ஜ‌ன‌வ‌ரி மாத‌மாக‌தான் இருக்கும். இந்த‌மாத‌ங்க‌ளில் தான் ப‌ண்டிகைக‌ள்(கிறிஸ்ம‌ஸ், பொங்க‌ல், கோவில் திருவிழா) அதிக‌ம். என‌வே என்னுட‌ன் ப‌டித்த‌ பால்ய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரை ச‌ந்திக்க‌ முடிந்த‌து. என்ன‌வொரு ஆச்ச‌ரிய‌ம்!!.. ப‌ல‌ருக்கு திரும‌ண‌ம் ஆகி இருந்த‌து. :‍-)

ச‌வூதியில் நான் இருக்கும் போதே, நீங்க‌ள் அடுத்து ம‌ஸ்க‌ட் தான் வ‌ருவீர்க‌ள் என்று என்னுடைய‌ மேனேஜ‌ர் சொல்லியிருந்தார். அத‌ன்ப‌டி ஊருக்கு வ‌ந்த‌வுட‌ன் என்னை ம‌ஸ்க‌ட் அனுப்புவ‌த‌ற்க்கான‌வேலையை என்னுடைய‌ ஹைதிராபாத் ஆபிஸ் தொட‌ங்கிய‌து. விசா தொட‌ர்பான‌ எல்லா வேலைக‌ளையும், மெடிக்கலையும் முடித்து ஒரு வ‌ழியாக‌ க‌ட‌ந்த‌மாத‌ம் ப‌னிரென்டாம் தேதி ம‌ஸ்க‌ட் வ‌ந்து சேர்ந்தேன்.

புதிய‌ நாடு
புதிய‌ வீடு
புதிய‌ அலுவ‌ல‌க‌ம்
புதிய‌ ம‌க்க‌ள்

என்று எல்லாவ‌த்தையும் ச‌மாளித்து செட்டில் ஆக‌ ஒரு மாத‌ம் பிடித்துவிட்ட‌து.....

இங்கு வ‌ந்த‌வுட‌ம் முத‌லில் த‌டுமாறிய‌து ப‌ண‌த்தில் தான், கார‌ண‌ம் ச‌வூதியில் உள்ள‌ ஒரு ரியாலின்(SAR) ம‌திப்பை விட‌ இங்குள்ள‌ ரியாலின்(OMR) ம‌திப்பு ப‌த்து ம‌ட‌ங்கு அதிக‌ம்!!!..

ச‌வூதி 1 ரியால் = 11.8 இந்திய‌ன் ரூபாய்

ஓம‌ன் 1 ரியால் = 118.0 இந்திய‌ன் ரூபாய்

குறிப்பு: இந்த‌ க‌டையும் திற‌க்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் க‌ழ‌ன்று போகாத‌ அனைத்து பாலோவ‌ருக்கும் என்னுடைய‌ ந‌ன்றி.... :-)

தொட‌ர்ந்து எழுத‌லாம் என்று இருக்கிறேன்.. பார்ப்போம்..
Related Posts with Thumbnails