Thursday, July 10, 2014

நல்லா! கேட்குறாங்க டீடெயிலு!!!

என்னுடைய வேலையைப் பற்றி எவருக்கும் எளிதாக விளக்கிவிட முடியாது. எந்தத் துறையைச் சார்ந்தது என்றும் குறிப்பாகச் சொல்லிவிடவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் வேலையைப் பற்றி ஒருவருக்கு விளக்க வேண்டுமானால் குறைந்தது அவருக்கு அரை மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும். அதனால் என்னிடம் வேலையைப் பற்றி விசாரிக்கும் நபர்களின் தகுதியை வைத்து ஏதாவது ஒரிரு வார்த்தைகளில் அவர்களுக்குப் புரியும் படி சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். கொஞ்சம் அதிகப் படியாக என்னுடைய வேலையைப் பற்றி விளக்கி, அவர்களிடம் சின்னாபின்னமான கதைககள் நிறையவே உண்டு. கீழே நான் சொல்லியிருப்பது கொஞ்சம் சுவரஸ்யமாக‌ இருக்கும்.

இப்படித்தான் கடந்த வாரம் நான் வாடிக்கையாகச் செல்லும் சலூன் கடைக்குச் சென்றிருந்தேன். எப்போதும் என்னைப் பார்த்தவுடன் கடை ஓனர் பெரிதாக நமஸ்தே வைப்பார். அதைப் பார்த்தவுடன் அவருடைய சலூனில் வேலைச் செய்யும் பையன்களும் மரியாதையாக நமஸ்தே வைப்பார்கள். இந்தச் சலூன் கடை ஓனர் எனக்கு நமஸ்தே வைப்பதற்கு ஒரு பின்னனி உண்டு. நான் வாரத்தில் ஒரு நாள் தான் ஷேவிங் பண்ணுவது வழக்கம். அது பெரும்பாலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையாகத் தான் இருக்கும். ஒருமுறை வாரத்தின் இடைப்பட்ட  நாளில் ஆபிசில் ஒரு பார்ட்டி ந‌டைப்பெறுவதாக என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. அதில் கம்பெனியின் எம்.டி மற்றும் எல்லா ஜெனரல் மேனேஜரும் கலந்துக் கொள்கிறார்கள் என்றும் மெயில் வந்திருந்தது. அந்தப் பார்ட்டிக்கு அரைத் தாடியுடன் செல்ல வேண்டாம் என்று மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, காலையில் சலூன் பக்கம் போனேன்.

அந்தச் சலூனில் ஒரே நேரத்தில் மூன்றுபேர் அமர்ந்துக் கட்டிங் மற்றும் ஷேவிங் செய்ய முடியும். சலூனில் இருந்த இரண்டு பையன் மற்றும் ஓனர் என்று மூன்று பேருமே அன்றைக்குப் பிஸியாக இருந்தார்கள். கடையில் போடப்பட்டிருந்த ஷோபாவிலும் மூன்றுபேர் அமர்ந்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த மூன்றுபேரில் ஒருத்தர் என்னுடைய ஆபிசில் ஹெல்பர் வேலைச் செய்பவர். அவர் என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று, சார்! இங்க உக்காருங்க! என்று இடம் கொடுத்தார். நான் அவரிடம் அமர்வதற்குச் சொல்லிவிட்டு வெளியில் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் ஓனர், ஒருவருக்குக் கட்டிங் செய்து முடித்திருந்தார். அங்குக் காத்திருந்தவர்களின் வரிசைப்படி எங்கள் ஆபிஸில் வேலைச் செய்பவர் தான் அடுத்து அமர வேண்டும். அவர் நேராக என்னிடம் வந்து, சார்! நீங்க ஷேவிங் பண்ணுங்கள்! நான் அப்புறமாகப் பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னார். நான் அவரிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரி! என்று அமர்ந்துவிட்டேன். எங்கள் இருவரின் செய்கைகளை, அந்தச் சலூன் ஒனர் பார்த்துக்கொண்டிருந்தார். அதுநாள் வரையிலும் என்னைக் கண்டுகொள்ளாதவர், அதன்பிறகு எப்போது நான் அந்தச் சலூனுக்குச் சென்றாலும் நமஸ்தே வைத்துவிடுவார்.

நான் வாரம் தவறாமல் அந்தச் சலூனுக்குச் செல்வதால், என்னிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கேள்விகளைக் கேட்பார். நீங்க, என்ன வேலை சார்! பார்க்குறீங்க? என்பார். நான் ஐடி கம்பெனியில் வேலை என்பேன். நீங்க தான் மேனேஜரா? என்று ஒரு நாள் கேட்பார். உங்க கம்பெனியில் எத்தனை பேர் வேலைப் பார்ப்பார்கள்?. எல்லோரும் தமிழ்காரர்கள் தான் இருக்காங்களா?. தெலுங்குக்காரங்களும் உங்க கம்பெனியில் வேலைப் பார்க்குறாங்களா?. எந்த நாட்டுக்கு எல்லாம் போவீங்க?. எவ்வளவு சார், சம்பளம் தருவார்கள்?. நீங்க கம்பியூட்டரில் தானே வேலைப் பார்ப்பீங்க?. எத்தனை கம்பியூட்டர் உங்கள் ஆபிஸில் இருக்கிறது?. உங்களுக்குக் கம்பியூட்டரில் உள்ள பிரச்சனைகளை ரிப்பேர் செய்யத் தெரியுமா? என்று பலவாறாகக் கேள்விகள் இருக்கும். நானும் பொறுமையாக ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்வேன். சில மொக்கையான கேள்விகளுக்குச் சிரித்து வைப்பேன்.

இந்தச் சலூன் ஓனருக்கு ஹைதிராபாத்தில் மட்டும் ஐந்து கடைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் ஒருவாரம் இந்த‌ச் சலூனில் வேலையில் இருக்கும் பையன்க‌ளை மறுவாரம் அவரின் அடுத்தச் சலூனுக்கு மாற்றிவிடுவார். எவரையும் நிலையாக அந்தச் சலூனில் இருக்க விடமாட்டார். ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ கழித்துத் திரும்பவும் இந்தச் சலூனில் அந்தப் பையன்களைப் பார்க்க முடியும். இவ்வாறு வேலைச் செய்யும் பையன்களை நிலையாக ஒரு கடையில் வேலைப் பார்ப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார். அந்தக் காரணத்தை அவர் சிதம்பர ரகசியம் போல் அவருக்குள் வைத்திருந்தார். அந்தச் சிதம்பர ரகசியத்தை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு எனக்குச் சில காலம் பிடித்திருந்தது. உண்மையில் அந்த ரகசியத்தை அவரின் தொழில் யுக்தி என்று கூடச் சொல்ல‌லாம். அதாவது பையன்களை வேலைக்கு அதே கடையில் வைத்திருந்தால், சில மாதங்களில் வழக்கமாக வரும் நல்ல கஸ்டம‌ர்களிடம் பழக்கம் பிடித்துக்கொண்டு, பக்கத்துத் தெருவில் புதிய கடைகளைத் திறந்துவிடுகிறார்களாம். தொடக்கத்தில் இவர் இப்படி ரெம்பப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு தான் இந்தமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

சலூனில் கடந்த வாரம் நடந்த கதையைச் சொல்லுவதற்கு ஆரம்பித்து, எங்கோ போய்விட்டது. சரி, இப்போது அந்தக் கதைக்கு வருவோம். கடந்த ஞாயிற்றுக்கிழமைச் சலூனில் ஷேவிங் பண்ணுவதற்குச் சென்றிருந்தேன், கடையில் இருந்த பையன்கள் மட்டும் தான் கஸ்டமருடன் பிஸியாக இருந்தார்கள். கடை ஓனர் சும்மா தான் இருந்தார். என்னைக் கண்டவுடன், என்ன‌ சார்! கட்டிங்கா? ஷேவிங்கா? என்று கேட்டார். நான் ஷேவிங் என்று சொல்லிவிட்டுக் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். ஷேவிங் செய்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார், எப்போதும் அவ்வாறு இருக்க மாட்டார். ஏதாவது என்னிடம் கேட்டுக் கொண்டு இருப்பார். காசு கொடுத்துவிட்டு வெளியில் வரும் போது, சார்! ஒரு நிமிசம் என்றார்!. எனக்கு எதற்கு அழைக்கிறார்? என்று புரியாமல் விழித்தேன்.

அப்படியே வெளியில் என்னை அழைத்துவந்து காதலன், காதலியை ஓரம் கட்டுவது போல் என்னையும் ஓரம் கட்டினார்.

எனக்கு இவருடைய செய்கைகள் ஒன்றும் புரியவில்லை!

ரெம்ப நெருங்கி வந்து தன்னுடைய தலையைச் சொறிந்தார்!

ஏதோ கேட்பதாக வந்து மீண்டும் அமைதிக் காத்தார்!

இவர் எதற்கு! இந்த அளவிற்குப் பீடிகைப் போடுகிறார்? என்று யோசிப்பதற்குள், அந்தக் கேள்விகளை என்னிடம் கேட்டார்!

சார்! எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் விலைக்கு வேணும்! உங்க ஆபிசில் இருந்து எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் வாங்கிக் கொடுங்கள் என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் சரியான பல்பு வாங்கியிருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது.

நான் உடனடியாகப் பதில் சொல்லாமல் அமைதிக் காத்தவுடன், ஒண்ணு இல்ல, சார்! என்னோட தோஸ்த்க்கும் ஒண்ணு வேணும், ரெண்டா வாங்கிக் கொடுங்கள்! என்றார்.

ஒரு கம்பியூட்டர் என்ப‌தால் நான் யோசிக்கிறேன்! என்று நினைத்தவர், இரண்டு கம்பியூட்டர் வேண்டும் என்று எனக்குப் பல்க் ஆர்டர் கொடுக்கிறார். அவருடைய அறியாமையை என்னவென்று சொல்வது?.. அவரிடம் சிரித்துக் கொண்டே நான் ஆபிசில் கேட்டுச் சொல்கிறேன் என்று வந்துவிட்டேன்.



இந்த வாரமும் அந்தச் சலூன் கடைக்குத் தான் போக வேண்டும்!!..


.

Thursday, July 3, 2014

கண்டிப்பா! அடி வாங்கியிருப்பார்!!

கடந்த டிசம்பர் மாதம் அண்ணனின் குழந்தைக்கு முடி எடுப்பதற்காக‌ வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான் ஹைதிராபாத்திலிருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு வந்துவிடுகிறேன் என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். ஹைதிராபாத்திலிருந்து நானும் எனது மனைவியும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேளாங்கண்ணிக்குச் செல்லவேண்டிய நாளின் காலையில் தான் சென்னை வந்திறங்கினோம். வேளாங்கண்ணிக்குச் சென்னையிலிருந்து பகல் பயண ரெயில்கள் ஏதும் இல்லை. அதனால் பேருந்தில் பயணம் செய்வது என்று முடிவெடுத்திருந்தேன். காலையில் தனியார் பேருந்துகள் ஏதும் வேளாங்கண்ணிக்கு இயக்கபடாத‌தால் என்னால் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கும் பேருந்தில் ஏறிச் சென்றுவிடலாம் என்று கோயம்பேடு வந்துவிட்டோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே ஒரு பேருந்து வேளாங்கண்ணிக்கு கிளம்பியது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அடுத்த வண்டியில் ஏறலாம் என்று காத்திருந்தோம். அந்தப் பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே அடுத்தப் பேருந்தும் வந்தது. ஓட்டுநர் வண்டியை நடைமேடையில் நிறுத்துவதற்குள் சிலர் பேருந்தில், தங்கள் பொருட்களைப் போட்டு முன் இருக்கைகளில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அதில் ஒருவர் தனது கைகளில் இருந்த இரண்டு பேக்குகளை எடுத்து அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் போட்டார். நாங்கள் இருவரும் பேருந்தை ஓட்டுநர் முழுமையாக நிறுத்தும் வரை காத்திருந்து, பின்புதான் வண்டியில் ஏறினோம். அதற்குள் பேருந்தில் பாதி இருக்கைகள் நிரம்பியிருந்தது. அடுத்தடுத்த‌ இரண்டு இருக்கைகளில் பேக்கு போடப்பட்டிருந்த‌ இருக்கைகள் எவரும் அமராமல் காலியாக இருந்தது, அவைகளைப் போட்டவரையும் காணவில்லை. நாங்கள் அந்த இருக்கைகளைக் கடந்து அடுத்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டோம்.

சிறிது நேரத்தில் இருக்கையில் பேக்கைப் போட்டவர் தனது மனைவி மற்றும் இரண்டு பையன்கள் என்று குடும்பத்தினருடன் வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுமக்க முடியாமல் ஆளுக்கு ஒன்றிரண்டு பெட்டி மற்றும் படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். வந்த சிறிது நேரத்தில் அவர்களில் இருக்கைக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் மீதும் பெட்டிகளைக் கொண்டு மோதிவதும், இருக்கைகளில் கீழ் பெட்டிகளைத் தள்ளுவதுமாகப் பேருந்தை ஒரே களோபரமாக‌ ஆக்கிவிட்டார்கள். அவர்கள் நால்வரும் தங்கள் பெட்டிப்படுக்கைகளை வைத்துச் செட்டில் ஆவதற்குள் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் ஒரு வழிப் பண்ணிவிட்டார்கள். "அக்கட தீஸ்கோ", "இக்கட பெற்றுக்கோ" என்று சத்தமாக‌ அவர்களுக்குள் பேசிய தெலுங்கும், பேருந்தில் இருந்த அனைவரின் கவனமும் இவர்களில் மீது பதிவதற்குக் காரணமாய் இருந்தது.

பேருந்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது. சிறிது நேரத்தில் நடத்துன‌ரும் வந்து டிக்கெட்டுகளைக் கொடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். எங்கள் முன்னால் அமர்ந்திருந்த தெலுங்குக் குடும்பத்தில் உள்ள‌ இரண்டு பையன்களும் சிறிது நேரத்தில் தெலுங்கில் கத்த தொடங்கிவிட்டார்கள். என்னவென்று பார்த்தால் சன்னல் இருக்கை தான் வேண்டும் என்ற‌ சண்டை. அந்தச் சண்டையைச் சிறுவர்கள் தங்களுக்குள் போட்டிருந்தால் பரவாயில்லை. சன்னல் ஓரமாக இருந்த அப்பாவிடம் தான், அந்தப் பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டார்கள். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று அவரும் விட்டுக் கொடுக்காமல் அந்தப் பையன்களை மிரட்டிக்கொண்டிருந்தார். எனக்கும், எனது மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை. அப்பா, பிள்ளைகளுக்கான சண்டையை அவருடைய‌ மனைவிதான் "மீரு இக்கட வந்து குச்சண்டி" என்று கணவனை மிரட்டிப் பிரச்சனையை முடித்துவைத்தார்.



அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினர் அவர்களுக்குள் பேசியது பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் அளவிற்கு இருந்தது, அவர்கள் பேசிய தெலுங்கில், எனக்குப் புரிந்ததை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் கடந்த ஒரு வாரமாகத் தமிழ்நாட்டில் உள்ள இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காகச் சுற்றுலா வந்திருக்கிறார்கள் என்றும் இப்போதும் அவர்கள் வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லத்தான் இந்தப் பேருந்தில் ஏறி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. சிறிது நேரத்தில் ஓட்டுநர் வந்து பேருந்தை எடுக்கத் தொடங்கினார். அதற்குள் நடத்துனரும் எங்கள் அருகில் டிக்கெட் கேட்டு வந்திருந்தார். அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினரிடம் நடத்துனர் "எத்தனை டிக்கெட்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "வேளாங்கண்ணி, இரண்டு புல் டிக்கெட்" "இரண்டு ஆப் டிக்கெட்" என்றார். நடத்துனர் இருக்கையில் இருந்த அந்த இரண்டு பையன்களையும் சைகையால் எழுந்து நிற்க சொன்னார். அந்தச் சிறுவர்களின் உயரத்தைப் பார்த்துவிட்டு, இவர்களுக்கு ஆப் டிக்கெட் கொடுக்க முடியாது, புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.

தெலுங்குப் பேசியவர் கத்துவதற்குத் தொடங்கிவிட்டார். நடத்துனர் அமைதியாக "பெர்த் சர்டிபிக்கேட்" என்று சொல்லி சைகையால் கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "பெர்த் சர்டிபிக்கேட் லேது" என்றார். அப்படினா நீங்க புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே நடத்துனர் டிக்கெட்டைக் கிழிக்கத் தொடங்கினார். நடத்துனர் சொல்லியது புரியாதது போலத் தெலுங்கு காரர் "மீரு ஏது செப்தினாரு?" என்று தொடங்கித் தெலுங்கில் தொண்டைக் கிழியும் அளவிற்குக் கத்திக்கொண்டிருந்தார். அதில் நடத்துனரை முட்டாள், பைத்தியகாரன் என்று திட்டிய வார்த்தைகளும் அடங்கும். தெலுங்குப் பேசியவர் தொடர்ந்து கத்துவதை நிறுத்தாமல் இருந்ததால், நடத்துனர் அந்த இரண்டு பையன்களையும் அழைத்துக் கொண்டு சென்று முன் இருக்கையில் வரையப்பட்டிருந்த அளவுக் கோட்டிற்கு முன்னால் நிற்குமாறுச் சொன்னார். இருவரும் அந்த 130 செ.மீ உயரம் வரையப் பட்டிருந்த கோட்டிற்கு மேலாகவே வளர்ந்திருந்தார்கள்.

நடத்துனர் செய்வது எதுவுமே புரியாத‌து போலவே, அந்தத் தெலுங்குப் பேசியவர் கத்திக்கொண்டிருந்தார். நடத்துனர் நான்கு புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவர் கேட்பதாக இல்லை. ஆந்திராவில் நான் ஆப் டிக்கெட் தான் எடுப்பேன். என்னை நீ ஏமாற்றுகிறாய்! என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். நடத்துனருக்கு, அதற்கு மேல் பொறுமை இல்லை, "யோவ்! நாலு புல் டிக்கெட் எடுத்தால் வண்டியில் இரு!, இல்லையென்றால் வண்டியை விட்டுக் கீழே இறங்கு" என்று கோபமாகச் சத்தம் போட்டார். பேருந்தில் இருந்த அனைவரும் இங்கு நடப்பதை வேடிக்கைப்பார்ப்பதும், அவர்களுக்குள் சிரிப்பதுமாக இருந்தார்கள். அந்தத் தெலுங்குக் காரர் பேசிய தெலுங்கு எனக்கு அரைகுறையாகப் புரிந்ததால், இவர் நடத்துனர் சொல்லியது புரியாமல் தான் கத்திக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து நான் இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம், ஆப் டிக்கெட் வேண்டுமானால், நீங்கள் பையன்களின் பெர்த் சர்டிபிக்கேட் காண்பிக்க வேண்டும், இல்லையென்றால் 130 செ.மீ உயரத்திற்குக் குறைவாக இருக்கவேண்டும் என்று தெலுங்கில் சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம். நடத்துனரின் மீது இருந்த கோபம் முழுவதையும் என்னிடம் திருப்பிவிட்டார்.

உன்னுடைய வேலை என்னவோ, அதைப் பாரு! எனக்கு நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம்! என்று தெலுங்கில் கத்தியதோடு மட்டும் அல்லாமல், இங்கிலீசிலும் பாடம் நடத்துவதற்குத் தொடங்கிவிட்டார். எனக்குக் கோபம் தாங்க முடியவில்லை, கையை மடித்து மூஞ்சில் ஒரு குத்துவிடலாம் என்று கையை ஓங்கிய போது அருகில் இருந்த மனைவி என்னை இழுத்து அமர வைத்துவிட்டார். நடத்துனரும், இந்த முட்டா பயலுட்ட நீங்க ஏன் சார்! பேசுறீங்க? விடுங்க, டிக்கெட் எடுக்கலைனா வண்டியை நிறுத்தி இறக்கிவிடப் போகிறேன்! என்றார். இருந்தாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. நடத்துனர் சொல்லியது அனைத்தும் அவனுக்குப் புரிந்திருக்கு, ஆனால் புரியாதது போல் நடித்திருக்கிறான். பாவம்! அந்த நடத்துனர், கடைசிவரை அவனிடம் தவறாக ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ஆனால் தெலுங்கில் எந்த அளவிற்குத் திட்ட முடியுமோ, அந்த அளவிற்கு அவன் அந்த நடத்துனரை திட்டினான். அவன் திட்டிய வார்த்தைகள் எதுவும் நடத்துனருக்குப் புரிய வாய்ப்பில்லை. அவன் திட்டிய‌ வார்த்தைகள் அனைத்தும், அரைகுறையாகத் தெலுங்குத் தெரிந்த எனக்குப் புரிந்ததால் தான், நான் எழுந்து அவனிடம் விளக்கம் கொடுக்க நேர்ந்தது.

நடத்துனர், தெலுங்குக் குடும்பத்தை விட்டுவிலகி, மற்றவ‌ர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்தத் தெலுங்குப் பேசியவரின் மனைவி நான்கு புல் டிக்கெட் கொடுங்க! என்று நடத்துனரிடம் கேட்டார், இப்போதும் அந்தத் தெலுங்குக் காரர் வாயில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.

மறுநாள் காலையில் வேளாங்கண்ணிக் கோவிலில், அண்ணனின் குழந்தைக்கு முடி எடுத்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்று கால்களை நனைத்துத் திரும்பியபோது, ஒரு கடையின் முன் கூட்டமாக இருந்தது. அந்தக் கூட்டத்தை உற்று நோக்கினேன், நேற்று பேருந்தில் பார்த்த அந்தத் தெலுங்குக்காரர் தான் நடுவில் நின்று கொண்டு ஏதோ கத்திக்கொண்டிருந்தார். கண்டிப்பாக நேற்று நான் செய்ய நினைத்ததை இன்றைக்கு எவராவது ஒருவர் செய்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டுக் கடந்தேன்.

.

Friday, June 27, 2014

வாடா மச்சான்! ஒருத்தன் சிக்கிட்டான்!

என்னடா! ஹைதிராபாத் வந்து ஒரு வருடத்திற்கு மேலே ஆகியும் இன்னும் கம்பெனியில் இருந்து ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறார்களே! என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த வாரம் ஆபிஸுக்கு வந்த ஜெனரல் மேனேஜர், ஸ்டீபன்! சவுதி புராஜெக்ட் காண்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டது, சீக்கிரமே! கிளம்புவதற்குத் தாயார் ஆகிவிடு! என்று சொல்லிச் சிரித்தார். இந்த ஷாக் எனக்குப் புதிது ஒன்றும் இல்லாததால், நானும் சிரித்துக்கொண்டே எப்ப, சார்! கிளம்பவேண்டும்? என்று கேட்டேன். நாளைக்கே வேண்டுமானாலும் கிளம்பி வாருங்கள்! என்று தான் புராஜெக்ட் தந்தவன் சொல்லிட்டு இருக்கிறான். ஆனா, விசா! தான் அவ்வளவு சீக்கிரத்தில் ரெடியாகாது, குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிமுடித்தார்.

நான் ரெம்ப நாட்கள் ஹைதிராபாத்தில் இருக்கமாட்டோம்! என்று வீட்டில் உள்ளவர்களிடமும், மனைவியிடம் சொல்லிச் சொல்லியே ஊரிலிருந்து வரும் போது பொருட்கள் எதுவும் எடுத்து வராமல், தேவைப்படும் போது ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்ததே ஒரு வண்டி வந்துவிட்டது. இப்போது நிறையப் பொருட்கள் ஊரிலும், இங்கும் என்று இரண்டு இரண்டாக இருக்கிறது. ஊருக்கு போன் செய்து வீட்டில் அப்பாவிடம் பேசிய போது, சிலப்பொருடகள் நமக்குத் தேவையாக இருக்கிறது, அவைகளைக் கொண்டுவர வேண்டுமானாலும் நீ! அதிகமாக‌ பணம் கொடுக்கத் தான் வேண்டும், அதனால் எல்லாவற்றையும் இங்குக் கொண்டு வந்துவிடு! தேவையானவைகளை வைத்துக் கொள்ளலாம், தேவையில்லாதவைகளை, நம்ம சொந்தகாரர்கள் யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றார். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது.

இந்த இணையம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும், பல நேரங்களில் நம்மை அதில் அடிமையாக முடங்க வைத்துவிடும். கடந்த சனிக்கிழமை ஆபிஸ் லீவாக இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததே லேட்டாகத் தான். வெள்ளிக்கிழமை என்னுடைய வீட்டுப் பொருட்களை ஷிப்ட் பண்ணுவது பற்றி ஆபிசில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவைக் கொடுத்தார்கள். அப்போது, சென்னை நகர் பையன் ஒருவன், எதுக்குச் சார்! ரெம்ப யோசிக்கிறீங்க? இப்ப எல்லாம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று மூலைக்கு மூலை போர்டு மாட்டி வைச்சுருக்கானுங்க! அவர்களில் எவரேனும் ஒருவரிடம் கொடுத்துடுங்க! பொருட்கள் எல்லாம் நல்ல ஷேப்பா, கொண்டு வந்து சேர்த்திடுவார்கள் என்றான். நானும் நல்ல ஐடியாவா இருக்கே! என்று நோட் பண்ணிக் கொண்டேன். நேற்று ஆபிசில் நோட் பண்ணிய ஐடியா என்னவோ, காலையில் மனைவி கொடுத்த டீயுடன் வந்து மன‌தில் ஒட்டிக்கொண்டது.

இப்போது ஞாபகம் இருப்பதை, இப்படியே விட்டால் மறந்துவிடும் என்று, லேப்டாப்பை திறந்து இணையத்தில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று தட்டியது தான் தாமதம். முதல் பக்கத்திலேயே சுலேகா டாட் காம் என்ற பேஜ் தானாகத் திறந்து போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி என்ற தகவல்களைக் கேட்டு, பாப் அப் வின்டோ ஒன்று ஓபன் ஆகியது. நான் உசாரா இருக்கிறேன்! என்ற எண்ணத்தில் அதில் என்னுடைய தகவல்கள் ஏதும் கொடுக்காமல் மூடிவிட்டு, அந்த வெப் பேஜில் இருந்த சில பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்களின் தகவல்களில் உள்ள போன் நம்ப‌ர்களை நோட் பண்ணி அதில் முதலில் இருந்த, இரண்டு பேருக்கு கால் பண்ணி விவரங்களைக் கேட்டேன். அவர்கள் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு ஷிப்ட் செய்யவேண்டும்? என்னென்ன பொருட்களை மேஜராக இருக்கின்றன? என்ற தகவல்களைக் கேட்டார்கள். நானும் பொறுமையாக அவர்களின் கேள்விக்கான பதில்களைக் கொடுத்தேன். ஒருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தவிர்த்துப் பதினான்காயிரம் என்றார், இன்னொருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்துப் பதிமூன்றாயிரம் என்றார். இவர்கள் இருவரிடம் பேசியதில் இவ்வளவு ரூபாய் வித்தியாசம் இருக்கிறதா? என்று எண்ணிக்கொண்டே குளிக்கச் சென்றேன்.

குளித்து வருவதற்குள், மனைவி இரண்டுமுறை பாத்ரூம் கதவை தட்டிவிட்டார். என்னவென்று கேட்டால், உங்க போன் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது என்றார். யார் அடிக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், புது எண்ணாக இருக்கிறது பெயர் வரவில்லை என்றார். நான் அவரிடம், மொபைலை எடுத்து பேசு! என்றேன். அதற்கு அவரோ, புது எண்ணாக இருக்கிறது, கண்டிப்பாகத் தெலுங்கில் தான் பேசுவார்கள், நான் எடுக்க மாட்டேன்! என்றார். சரி விடு! அடிக்கட்டும், நான் வெளியில் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்து மொபைலை எடுத்துப் பார்த்தால், இரண்டு எண்களிலிருந்து பனிரென்டு மிஸ்டுகால்கள் இருந்தது. அந்த எண்களில் ஒன்றை தொடர்பு கொண்டு கேட்டால், சார், நாங்க! சுலேகா டாட் காமில் இருந்து பேசுகிறோம், நீங்க பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விவரம் தேடுகிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். நானும் அவரிடம் தெரியாமல் "ஆமாம்" என்று சொல்லிவிட்டேன். அவர் என்னிடம் நாங்க உங்களுக்குப் பல பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விபரங்கள் தருகிறோம், உங்க மெயில் ஐடியை தாருங்கள் என்று கேட்டார். மெயிலுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் மொபைலுக்கும் தொடர்ந்து மெசேஸ் வந்து கொண்டே இருந்தது.

தொடந்து வந்து கொண்டிருந்த மெஸேஜ்களில் இருவதிலிருந்து இருவத்தைந்து பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸின் விபரங்கள் மற்றும் போன் நம்பர்கள் இருந்தது. இதோடு விட்டுருந்தால் நல்லாயிருக்கும், ஆனா! அந்தப் பயபுள்ள நல்லவேலை ஒண்ண பார்த்துவிட்டு விட்டது. என்னனா, அந்த மெஸேஜில் இருக்கும் அனைத்துப் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்கும் என்னுடைய போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு ஓர் அடிமைச் சிக்கிட்டான்! அவன் வேறு, இன்னைக்கு வேலைவெட்டியில்லாமல் சும்மா தான் வீட்டில் இருக்கான்! எவ்வளவு பேசினாலும் தாங்குவான் போல! அதனால் உங்க திறமையைக் காட்டுங்கள்! என்று கோர்த்து விட்டு அவன் அமைதியாகிவிட்டான். அப்புறம் என்னா! காலையில, ஒரு பத்து மணிக்குச் ச‌ங்கை எடுத்து ஊத ஆரம்பிச்சது.



சார், நீங்க வீட்டு பொருட்கள் ஷிப்ட் செய்ய வேண்டும் என்று சுலோகா டாம் காமில் சொன்னீங்களாம்!

ஆமாங்க! சொல்லியிருந்தேன்!

நாங்க‌ *---$%%%.. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸூல இருந்து பேசுறோம்!

அப்படியா! சொல்லுங்க.

எங்க, சார்! போகனும்?

அங்க, தான் போகனும்!.

என்னவெல்லாம் கொண்டு போகனும்?

இதெல்லாம் கொண்டு போகனும்!.

மேஜர் பொருட்கள் மட்டும் சொல்லுங்க?

டீவி, பிரிஜ், டைனிங்டேபிள், செயர், கூலர், பெட்!.

வண்டி இருக்க? சார்!

வண்டி இல்லங்க.

அலமாரி இருக்கா? சார்!

அலமாரி இல்லங்க.

நாகர்கோவிலில் இருந்து உங்க ஊரு எத்தனை கிலோமீட்டர்?

பதிமூணு கிலோமீட்டர்.

இவ்வளவு ரூபாய் ஆகும் சார்!

அப்படியா, நான் டேட் இன்னும் கன்பார்ம் ஆகல, டேட் கன்பார்ம் ஆனதும் சொல்லுறேன்.

நான் எப்ப, சார்! கால் பண்ணட்டும்?

அடுத்த வாரத்துல, கால் பண்ணுங்க.

மொத்தம் பதிமூணு பேரு, ஓர் ஆளு நானு, தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் என்று மூணு லாங்கேஜ் வேறு! கதற‌, க‌தற மேலே கேட்டக் கேள்வியைப் பாரபட்சம் இல்லாமல் கேட்டார்கள். நானும் எவ்வளவு நேரம் தான் காதில் இரத்தம் வராதது போலவே நடிக்கிறது!.

இதுல ஒரே பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் இருந்து, இரண்டு மூன்று பேர் மாறி மாறி வேறு பேசினார்கள், ஏம்ப்பா! இப்ப, தான் உங்க ஆபிஸில் இருந்து விபரங்கள் கேட்டார்கள், என்று சொன்னால், சாரி, சார்! சுலேகாவில் இருந்து எனக்கும் மெஸேஜ் வந்தது, நான் ஆபிஸில் இல்லை, வெளியில் இருக்கிறேன். என்று மன்னிப்பு வேறு.

கொடுமை என்னானா! எல்லாத் தகவல்களையும் கேட்டுவிட்டு, சாரி, சார்! நாங்கள் லோக்கல் பேக்கர்ஸ் அண்ட மூவர்ஸ் ஸ்டேட் விட்டு ஸ்டேட் பண்ணுறது இல்லனு எகத்தாளம் வேறு. போதும்! இதோட நிப்பாட்டிக்கலாம்! என்று சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்பது தெரியாது.

காலையில, பத்து மணிக்கு ஆரம்பிச்சது, மாலையில் ஆறு மணி ஆன‌ பிறகும் விடலியே! நாலு பேரு, சார்! நாளைக்குக் காலையில வீட்டுக்கு வந்து, உங்க பொருட்களைப் பார்த்து கொட்டேசன் தருகிறோம் என்று அவர்களின் தொழில் நேர்மையை என்னிடம் விவரித்தார்கள்.

சும்மா, இணையத்தில் ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று போட்டுத் தேடியது ஒரு குற்றமா?. கடந்த ஒரு வாரமாகக் கொட்டேசன் வாங்குவதும், எப்ப, சார்! டேட் கண்பர்ம் பண்ணுவீங்க! என்ற கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிட்டு இருக்கிறேன்.

நேற்றைக்கு எனக்குப் பதிலாக இங்கு ஹைதிராபாத் ஆபிஸில் புதிதாக ஒருவரை எடுத்திருந்தார்கள், அவர் பூர்வீகம் சென்னை. ஹைதிராபாத்தில் வீடு வாடகைக்கு வேண்டும் என்று இணையத்தில் நேற்று தேடிக்கொண்டிருந்தார். இன்னைக்கு ஆபிஸுக்குக் கொஞ்சம் லேட்டா வருகிறேன்! என்று மெஸேஜ் மட்டும் எனக்கு அனுப்பியிருக்கிறார். பாவம்! யாருடைய போனில் சிக்கி தவிக்கிறாரோ? வந்தா தான் விசாரிக்க முடியும்.

பார்ப்போம்! இன்னொரு பதிவு எழுத்துவதற்கு மேட்டர் தேறுமா என்று!

.

Wednesday, June 25, 2014

எங்கள் ஊர் ஓணப்பந்தாட்டம்_யாருக்குத் தெரியும்?

நான் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களால் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய இரண்டு விளையாட்டுகளில் ஒன்று கபடி இன்னொன்று ஓணப்பந்தாட்டம். இந்த இரண்டு விளையாட்டுகளும் மிகவும் வெறித்தனமாக விளையாடப்படும். இவைகளுக்குத் தீனிப் போடும் வகையில் ஊரில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் இந்த இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் பக்கத்து ஊர்களில் இருந்து அணிகள் வரவழைக்கப்பட்டு அதிகமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். சும்மா ஊருக்குள்ள இருக்கிறவன் இரண்டு அணிப்பிரித்து விளையாடினாலே பந்தயம் அனல் பறக்கும். இதில் வெளியூரில் இருந்து அணிகள் வந்து விளையாடினால் சொல்லவே வேண்டாம். ஊர்களில் பண்டிகையின் போது நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், இந்த இரண்டு விளையாட்டுகள் மட்டும் தனியாகக் கவனம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், எல்லா விளையாட்டுப் போட்டிகளும் முடிந்தபிறகு இறுதியில் தான் இந்தக் கபடியையும் ஓணப்பந்தாட்டத்தையும் ந‌டத்துவார்கள்.

கபடி விளையாட்டின் சுவாரஸ்யத்தைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த ஓணப்பந்தாட்டம் என்ற பெயரே பலருக்குப் புதிதாக இருக்கலாம். எனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைத் தவிர வேறு எங்கும் நான் இந்த விளையாட்டை, விளையாடியதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஓணம் + பந்தாட்டம் என்று பிரித்து வைத்துப் பார்த்தால் தமிழருக்கான விளையாட்டாகத் தெரியவில்லை, கேரளாவின் விளையாட்டாகத் தெரிகிறது. ஆனால் நான் இணையத்தில் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளை வைத்துத் தேடியப் போது கேரளாவில் ஓணப் பண்டிகையின் போது விளையாடப்படும் ஒரு விளையாட்டுடன் சில விதிமுறைகளும் ஒத்துப் போகிறது. அந்த விளையாட்டின் பெயர் தலைப்பந்துகழி. கேரளாவில் கிராமங்களில் விளையாடும் நடன் பந்துகழி என்ற‌ இன்னொரு விளையாட்டும் இந்த ஓணப்பந்தாட்டத்துடன் ஒத்து போகிறது. அதன் யூ‍_டியூப் வீடியோவை இணைத்துள்ளேன்.



கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததாலோ என்னவோ, அவர்களின் வழக்குச் சொற்கள், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சிலவற்றை இங்குப் பார்க்கமுடியும். மேலும் எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் கட்டிடவேலையில் சிறப்பாகச் செய்யும் திறன் பெற்றவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைச் செய்வதற்கு முன்பு கேரளாவில் தான் வேலைச் செய்து வந்தார்கள். இப்போதும் எங்கள் ஊரிலிருந்து பலர் கேரளாவில் கட்டிடவேலைகளைக் காண்டிராக்ட் எடுத்துச் செய்து வருகிறார்கள். இவ்வாறு கேரளாவில் காண்டிராக்ட் எடுத்து வேலைச் செய்பவர்கள் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் இருந்து தான் ஆட்களைக் கொண்டு சென்று வேலையை முடித்துக் கொடுப்பார்கள். கட்டிடவேலைச் செய்பவர்களில் மகன்கள் பள்ளியில் கிடைக்கும் இரண்டு மாத கோடைவிடுமுறையில் அப்பாவுடன் கேரளாவிற்குச் சென்று கையாள் வேலைச் செய்து அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்குமளவிற்குச் சம்பாதித்துவிடுவார்கள். பல இளைஞர்களின் பால்யகாலம் கேரளாவில் தான் கழிந்திருக்கிறது. அவர்கள் தான் இந்த ஓணப்பந்தாட்டத்தை எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. விளையாட்டைப் பற்றிய வரலாற்று ஊகத் தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன். இனி இந்த‌ விளையாட்டுமுறை பற்றிச் சிலவற்றை எழுதுகிறேன்.

இந்த விளையாட்டு இரண்டு அணிகளாகப் பிரித்து விளையாட வேண்டும். ஓர் அணிக்கு ஆறு முதல் ஏழு பேர் இருப்பார்கள். முதல் அணியானது பந்தை அடித்தாடும் போது எதிர் அணியானது தடுத்தாட வேண்டும். இந்த விளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பந்து மெல்லிய‌ காட்டன் துணியால் வலுவாகச் சுற்றப்பட்டு வெளியில் நூலால் பின்னப்படும். கைக்கு அடக்கமான அளவில் இருக்கும். இந்தப் பந்தை எவர் உருவாக்கினாலும் அவரது வீட்டில் உள்ள காட்டன் லுங்கி ஒன்று கண்டிப்பாகக் காணாமல் போகும். இந்த விளையாட்டுக்கு என்று அளவுகளை வரையறைச் செய்து களம் அமைப்பது இல்லை. இருக்கும் இடத்தில் நீள, அகலமாகக் கோடுகள் போட்டு இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பக்கம் அடித்தாடும் அணியும், மறுபக்கம் தடுத்தாடும் அணியும் நிற்கும். நீள‌ வாக்கில் இரு புறங்களிலும் ஒன்றரை அடி விட்டு பவுள் கோடுகள் போடப்பட்டிருக்கும்.

எந்த அணி அடித்தாட வேண்டும்? தடுத்தாட வேண்டும் என்பதை முதலில் டாஷ் போட்டுதான் முடிவுச் செய்யப்ப‌டும். அடித்தாடும் அணியில் உள்ள முதல் வீரர் களத்தின் ஒரு முனையில் நின்று, பந்தைத் தனது கையால் ஓங்கி அடித்து மறுபக்கம் இருக்கும் தடுத்தாடும் அணியின் பக்கம் அனுப்புவார். தடுத்தாடும் அணியில் உள்ள வீரர்கள் அதைக் காலால் மிதித்து எதிர் அணியின் பக்கம் திருப்புவார்கள். எவர் ஒருவர் பவுள் கோட்டிற்கு வெளியில் அடிக்கிறாரோ அல்லது எதிர் அணியால் அடிக்கும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் விட்டாலோ அவுட் என்று அறிவிக்கப்படும். அடித்தாடும் அணியில் உள்ள வீரர் பந்தை அவுட் பண்ணினால் தடுத்தாடும் அணி இப்போது அடித்தாடும் அணியாக இருந்து பந்தை கையால் அடித்து எதிர் அணிக்கு செலுத்தும். அடித்தாடும் அணியால் மூன்று முறை நேர்த்தியாக அடித்து எதிர் அணியின் தடுப்பாட்டத்தைச் ச‌மாளித்து வெற்றிகரமாக முடித்தால் அது ஒரு கழி என்று அழைக்கப்படும். மொத்தமாக ஏழு கழிகள் உண்டு.

1) ஒற்றை
2) இரட்டை
3) முறுக்கி
4) தாளம்
5) காவடி
6) நிலை (இது மட்டும் காலால் உதைத்து அடிக்கப்படும்)
7) பட்டம்

எந்த அணி முதலில் இந்த ஏழு கழிகளையும் முடிக்கிறதோ, அந்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டில் உள்ள சில சுவரஸ்யங்கள்: 

#அடித்தாடும் அணியால் அடிக்கப்பட்ட பந்தைத் தடுத்தாடும் அணி வீரர்கள் காலால் எதிர் கொள்ள மூன்று வகையான உத்திகளைக் கையாளுவார்கள். 

மடக்கை: காலை மடக்கிப் பந்தை உதைப்பது. இந்த முறையில் பந்தை எதிர் கொண்டால் கண்டிப்பாக எதிர் அணியால் அந்தப் பந்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகக் கடினமாகக் காரியம்.(வாலிபாலில் கட்‍ ஷாட் அடிப்பது போல) 

குத்து: எதிர்வரும் பத்தை முன்னங்காலால் குத்து/கோரி விடுவது(இவ்வாறுச் செய்வதால் பந்து மேலே எழுப்பும். எதிர் அணியினர் அதைக் கேட்ச் பண்ணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், கேட்ச் பண்ணிவிட்டால் அவுட் என்று அறிவிக்கப்படும்) 

சேப்பை: காலை ஒருகளித்துத் தட்டிவிடுவது(கட்டுக்குள் அடங்காத தாக்குதலைச் ச‌மாளிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துவார்கள்)

#காலால் உதைக்கும் போதோ அல்லது கையால் அடிக்கும் போதோ பந்து மேல் எழும்பி எதிர் அணியினரால் பிடிக்கப்பட்டால் அவுட் என்று எடுத்துக்கொள்ளப்படும். 

#இவ்வாறு எதிர் அணியில் உள்ள வீரரால் பிடிக்கப்படும் போது மற்ற வீரர்களில் கைகள் முட்டிக்குக் கீழ் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வீரரும் கையை உயர்த்திப் பிடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு கைகளை உயர்த்தினால் பிடித்த பந்து செல்லுபடியாகாமல் அடுத்த அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும். 

#அதேபோல் காலால் ஒருவர் பந்தை உதைக்கும் போது அந்த அணியில் உள்ள வேறு எவரும் கால்களைக் கொண்டு சென்று முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் எதிர் அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டு மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியது தான். நான் இங்கு எழுதியிருப்பதைப் படித்துக் குழப்பமடைந்தால், அந்தக் குழப்பம் என்னுடைய எழுத்தினால் விளைந்தக் குழப்பமே அல்லாமல் விளையாட்டின் குழப்பம் அல்ல. கண்டிப்பாக உடல்வலிமையும், உத்திகளைக் கையாளும் முறையும் இதற்குத் தேவை. துணியால் பந்து இறுகச் சுற்றப்படுவதால், அதை அடிக்கும் போது காலும் கையும் வலி எடுக்கும். தரையில் கால் மோதி நகங்கள் சிதைவதும் உண்டு.

இந்த விளையாட்டை நான் ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது மிகவும் விரும்பி விளையாடுவேன். எங்களுக்கு என்று ஒரு மைதானம் இருந்தது. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று ஒரு டீம் எப்போதும் இருக்கும். கிரிக்கெட் போர் அடிக்கும் போது இரு அணியாகப் பிரித்து இந்த ஓணப்பந்தாட்டத்தை விளையாடுவோம். இந்த விளையாட்டை மிகவும் அனுபவித்து விளையாடுவோம். பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இந்த விளையாட்டைப் போட்டியாக நடத்துவதால் இன்னும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இன்றைய நிலையில் எங்கள் ஊரில் இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று பள்ளிப் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் கூடத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கே இந்த விளையாட்டின் பல விதிமுறைகள் மறந்துவிட்டது. அப்போது என்னுடன் விளையாடிய நண்பர்களிடம் கேட்டுதான் இந்தப் பதிவை எழுதி இங்குப் பதிந்துவைக்கிறேன்.

அவனவன் வாழ்க்கையே தொலைந்துவிட்டது! என்பதற்கே கவலைப்படவில்லை, இதில் விளையாட்டுத் தொலைந்துவிட்டது என்று வந்துவிட்டான் என்று நீங்கள் புலம்புவது எனது காதுகளுக்குக் கேட்கிறது.

.

.

Saturday, June 21, 2014

வம்புக்கு இழுப்பது_இலக்கியம் யார் படைக்கிறார்கள்?

வலைத்தளங்களில் எழுதுவர்களில், ஆண்களிடமிருந்து அதிகமாக இப்படியான புலம்பல்களைப் பார்க்க முடியும். நான் பக்கம், பக்கமாக எழுதினாலும் ஒரு கமெண்டோ, லைக்குகளோ விழுவது இல்லை. ஆனால் பெண்கள் தும்மினாலும் கூடப் பல கமெண்டுகளும், லைக்குகளும் வந்து விழுகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?. இதற்குத் தான் இந்தச் சமூகத்தில் வாழமாட்டேன் என்று சொல்லுகிறேன். நான் தமிழில் இலக்கியம் படைக்காமல் இருப்பதற்கு இதைவிட வேறு ஏதாவது காரணம் வேண்டுமா?. இந்தச் சமூகம் என்னைத் தூக்கி அடிக்கிறது(எப்படிப் படிக்க வேண்டுமோ உங்கள் விருப்பம்) என்பதற்கு இதைவிட வேறு காரணம் இருக்க முடியாது.

மேலே குறிப்பிடும் புலம்பலில் இருக்கும் சில அடிப்படையான கேள்விகள். பெண்கள் எழுதும் தும்மல்களுக்கு அதிகமான லைக்குகள், கமெண்டுகள் போடுபவர்கள் யார்? அவர்கள் ஆண்களா? பெண்களா?. எல்லோருக்கும் தெரியும் ஆண்கள் தான். அப்படியானால் இங்கு ஒரு கேள்வி வருகிறது. இதில் பெண்களின் மீது வன்மம் வளர்ப்பதற்கு என்ன வேண்டி இருக்கிறது?. ஆனா... ஊனா.. கூட்டம் கூட்டமாக லைக்குகளைப் போட்டுக் கொண்டு அலையும் இந்தக் கூட்டத்தைப் பார்த்து அல்லவா நீங்கள் கேட்க வேண்டும்?. உங்கள் இலக்கிய அறிவு என்னவென்று?. தினம் ஒரு தகவலாக இலக்கியம் படைக்கும் இலக்கியவாதியும், கனவில் வரும் செவ்விலக்கியங்களைத் தமிழில் படைக்கும் இலக்கிய ஆளுமையும் அல்லவா யோசிக்க வேண்டும்?. நம்முடைய இலக்கியப் படைப்புகளை இவர்களை எந்தளவிற்கு வருத்தியிருக்க‌ வேண்டுமென்று?. தும்மலைப் போடும் எந்தப் பெண்களும் வாருங்கள்! வந்து லைக்கு, கமெண்டு போடுங்கள் என்று புலம்பியதாகவோ! அல்லது இன்னும் புலம்பப் போவதாகவோ அறிவிக்க வில்லை. நாங்கள் இலக்கியம் படைத்துவிட்டோம்! உலக மகா இலக்கியவாதிகளே வாருங்கள்! வந்து எங்களுக்கு மதிப்பெண் தாருங்கள் என்று கேட்ட‌தாகவும் தெரியவில்லை. எங்களுக்கு விருப்பமானவைகளை படைக்கிறோம். உங்களுக்குப் பிடித்தவைகள் படைக்க வேண்டும் என்று எங்களை அடிமை படுத்தாதீர்கள் என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். இதுதான் உங்களுக்குப் பொறுக்கவில்லை, இங்குத் தான் வருகிற‌து ஆணாதிக்க மனோநிலை.

நம்முடைய சில‌ தமிழ் திரைப்படங்களில் பெண்களின் அங்கங்களுக்கு மதிப்பெண் போடும் காட்சிகளைப் பார்க்க முடியும். அதைப் பெண்களும் ரசிப்பதாக அந்தத் திரைப்படங்களில் காண்பித்திருப்பார்கள். அந்தப் புத்தம் புதுக் காட்சியைத் திரையில் வைப்பவர்கள் ஆண்கள் தான். அதை ரசிப்பவர்களும் ஆண்கள் தான். எதார்த்த வாழ்க்கையில் என்னவோ! பெண்கள் எல்லாம் தங்களுக்கு மதிப்பெண் போடுவத‌ற்கு உங்களை அழைத்தாகக் கருதி வர்ணித்தால் செருப்படியும், துடைப்பக்கட்ட அடியும் தான் மிஞ்சும். 

சரி, இப்போது ஜெ.மோ அவர்களின் பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பிரச்சனையின் தொடக்கம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். எல்லோராலும் இலக்கியவாதி என்று அறியப்பட்ட எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஆ.வி.யில் தமிழின் இலக்கிய‌ வருங்காலம் இவர்கள் கையில் தான் படப்போகிற‌து என்று ஒரு லிஸ்டை எழுதுகிறார். அதில் சில பெண் எழுத்தாளர்களின் பெயரும் இடம் பெற்றுவிட்டதாம். அதில் தான் ஜொ.மோ அவர்கள் பொங்கிவிட்டார். முக்காலமும் நாங்கள் தான் இலக்கியம் படைப்போம் என்று படைத்த பிரம்மனிட‌மே, குத்தகை வாங்கி வந்த பிறகு இப்படி ஒரு லிஸ்டை எப்படிப் போடலாம் என்று அறசீற்றம் கொள்கிறார் பாவம் தான். அறம் பாடும் இலக்கிய ஆளுமைக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணீர் வடித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன?.

இவர் பொங்கும் பொங்கலை எல்லாம் லிஸ்ட் போட்ட, நா.நா அவர்களிடம் தான் பொங்கியிருக்க வேண்டும். அந்தப் பெண் எழுத்தார்கள் என்ன படைத்திருக்கிறார்கள்?. தமிழ் இலக்கிய உல‌கில் அவர்களின் பங்களிப்பு என்ன?. எவருடைய இலக்கியங்களையாவது படித்திருக்கிறார்களா?. அப்படியென்றால் அவற்றின் தரவுகள் எங்கே?. அவற்றையெல்லாம் எனக்குத் தொகுத்துத் தரமுடியுமா?. எதன் அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்? என்று நீங்கள் எழுதினீர்கள்? என்பதாக, கம்பை நா.நா. பக்கம் சுற்றியிருக்க வேண்டும். இப்படியான இவர்களின் கம்பு சுற்றலில் நமக்கும் இன்னொரு மான் கராத்தேவைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால் ஜொ.மோ.வோ முச்சந்தியில் நின்று கொண்டு ஒரண்டை இழுத்துக்கொண்டு சொல்கிறார், இந்தக் குழாயடிச் சண்டைகளை வெறுக்கிறேன். என்னோட நிலை ரெம்பப் பெரிது. இவ்வுலகில் நான் இல்லை என்றெல்லாம் சினிமா வசனம் பேசுகிறார். முச்சந்தியில் நின்று ஒரண்டை இழுத்தால் முகம் தெரியாதவனும் தான் கல்லெடுத்து அடிப்பான். குழாயடிச் சண்டையை விட ஒரண்டை இழுப்பது இன்னும் மோசம்.

ஜெ.மோ. எழுதுவது எப்படி ஒரண்டை இழுப்பது ஆகும்?. எந்தப் பெண் எழுத்தாளர்களும், நாங்கள் பெரிய எழுத்தார்கள் என்று உங்களிடம் வந்து கொடிப்பிடிக்கவில்லை. எங்களுக்கு அங்கீகார‌ம் கொடுங்கள் என்று உங்களிடம் அவர்கள் கையை ஏந்தி நிற்கவில்லை. எங்களுக்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள் என்றும் வரவில்லை. அப்படியிருக்கும் போது எவரோ ஒருவர் எழுதினார் என்று அவர்களை இழுத்துப் போட்டுப் பொதுவீதியில் வைத்து நக்கல் செய்வதை என்னவென்று சொல்வது?.

பொதுவான தரவுகளைச் சுட்டித் தான் ஜெ.மோவும் எழுதினார். எதையும் ஆதாரபூர்வமாகச் சுட்டி எழுதவில்லை. உண்மையில் பெண்களின் படைப்புகள் மீது அக்கறையிருந்தால் அவர்தான் இந்தச் சமகால இலக்கியச் சூழலில் பெண்களின் பங்களிப்புகள் பற்றிய தரவுகளைத் தந்து எழுதியிருக்க வேண்டும். அவர்களின் படைப்புகளின் மீது விமர்சனங்களை வைத்திருக்க வேண்டும். அந்த விமர்சனங்களைப் பொதுவெளியில் விவாததிற்கு விட்டிருந்தால் பாரட்டியிருக்கலாம். ஆனால் இவர் செய்தது என்ன?. இவர் செய்யாததை எதிர்வினைக்கு மட்டும் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன‌ மனநிலை?.

சரி, இவை ஒருபுறம் இருக்கட்டும். தான் படிப்பது எனது மனைவிக்குக் கூடத் தெரியாது. (இது, தான் இன்று வாக்காலத்து வாங்கி எழுதும் எழுத்தாளருக்கு ஒரு சம‌யத்தில் சொல்லிய‌ பதில் தான்) தமிழ் நூல்களைப் படிப்பதை நான் வதையாக உணர்கிறேன் என்றெல்லாம் எழுதும் அல்டிமேட் எழுத்தாளர் சாரு அவர்கள், தனது சக எழுத்தாளருக்காகப் பொங்கும் போது, அவருடைய விஷ்ணுபுரம் நூலையாவது இந்தப் பெண் எழுத்தாளர்கள் படித்திருப்பார்களா? என்று கேள்விக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கான பதில், மேலே எழுதியிருக்கும் வாக்கியங்களுக்கான‌ நகைமுரண் ஒன்று போதும்.

பெண் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்று எழுதுவதற்கு முன், கொஞ்சம் சிந்தியுங்கள். யார் அங்கீகாரம் கொடுக்கிறார்கள்?. எழுத்தில் இல்லாத அங்கீகாரத்தைப் பாலினத்தில் பெற முடியுமா?. அப்படிப் பாலினம் பார்த்துக் கொடுத்தால் யார் அந்த அங்கீகாரத்தைக் கொடுப்பார்கள்?. அந்த அங்கீகாரம் கொடுப்பவர்களின் இலக்கிய அறிவு/புரிதல்/ஆளுமை என்ன?. நீங்களே நிமிர்ந்துப் படுத்துக் கொண்டு உங்கள் மீதே காறி உமிழ்கிறீர்கள்.

முதலில் பெண்களை எழுதவிடுங்கள். அதன்பிறகு அவர்கள் படைத்தார்களா? இல்லையா? என்று உங்கள் அளவுகோல்களை நீட்டுங்கள். தலையெடுக்கவே அவர்கள் பல தடைகளைத் தகர்க்க‌ வேண்டியிருக்கிறது. உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் எழுதுவதற்கு வந்தால் எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டும் என்று மன‌சாட்சி உள்ள ஆண்கள் சிந்தியுங்கள். இன்றைய சூழ்நிலையில் வலைத்தளங்களில் இயங்கவே பெண்களுக்கும் இருக்கும் சவால்கள் பெரிது. அவர்களும் படைப்பார்கள், படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்க முன்வாருங்கள். இப்போதே தட்டி மூலையில் அமர வைக்காதீர்கள்!.. 

Thursday, June 19, 2014

இந்த மருத்துவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

நேற்று மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. நுழைவுத்தேர்வில் கட் ஆப் மார்க் அதிகம் எடுத்த மாணவர்களின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது. அதில் ஒரு மாணவர் கூறியது இது தான். குழந்தைகளுக்கான மருத்துவத்தை முதன்மையாக எடுத்துப் படித்துக் கிராமத்தில் உள்ள ஏழை எளியக் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் சேவைகள் செய்வேன் என்று கூறினான். நல்ல விசயம், கண்டிப்பாக அவனுடைய அந்தப் பதிலை எவராலும் பாரட்டாமல் இருக்கமுடியாது. நானும் அந்தப் பதிலுக்குத் தலை வணங்குகிறேன். இந்த மாணவன் இப்போது சொல்லுவதைப் பிற்காலத்தில் நடைமுறைப்படுத்தினால் சந்தோசமே!. இதுபோன்ற கருத்து இந்த ஒரு மாணவனின் வாக்குமூலம் அல்ல. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர், பனிரென்டாம் வகுப்பில் மாவட்ட வாரியாக முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் கட் ஆப் மார்க் அதிகமாக எடுக்கும் மாணவ மாணவியர் என்று வருபவர்களில், எவரெல்லாம் இந்த மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் இந்த ஊடங்களுக்குக் கொடுக்கும் பேட்டியில் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்று சொல்லியபடித் தான் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நான் படிக்கும் காலத்திலிருந்து முதலாவதாக வரும் மாணவர், மாணவிகள்கள் ஊடகம் மற்றும் பொது இடங்களில் பேசும் போது, இன்றுவரை மேலே சொன்ன வாக்கியங்களில் ஒரு சில வார்த்தைகள் கூட அல்லது குறைவாகப் போட்டுதான் பேசுகிறார்கள். இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற கிரமாத்துக்காரனின் அம்மாவும், அப்பாவும் "இது பிள்ளை, பாரு! இப்பவே என்னா மாதிரி பேசுது! படிச்சா இப்படிப் படிக்கணும்" என்று நமது காது படவே உள்குத்தாகப் பேசுவார்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள பெற்றோர்கள் கிட்ட நிற்கும் பையனைப் பிடித்து நாலுச் சாத்துச் சத்துவார்கள். இப்படி ஊர்ல உள்ளவனுக்கு எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடியையும் திட்டையும் வாங்கிக் கொடுக்கும் இந்த நல்லவர்களைத் தான் இன்று தேடுகிறேன். நான் படிக்கும் போது சொன்ன மாணவ மாண‌வர்கள் எல்லாம் கண்டிப்பாக இன்று பெரிய மருத்துவர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால் எவருமே கிராமத்தில் வந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ததாக அறிய முடியவில்லை. படிக்கும் போது இப்படிச் சொன்னவர்கள், இன்றும் அதைப் பின்பற்றுகிறார்கள் என்று எவரேனும் அறிந்தால் அவரை எனக்கு அறிவதற்குத் தாருங்கள். அந்த நல்லவரையாவது ஒருமுறை பார்த்தால் மனதுக்குக் கொஞ்சம் மகிழ்வாக‌ இருக்கும். காரணம் நான் இன்றைய‌ மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் பற்றி நிறையப் பதிவுகளில் எழுதிவிட்டேன்.

நான் படிக்கும் போது, எனது வயது ஒத்த உறவினரின் பையன் ஒருவனும் சென்னையில் படித்துக்கொண்டிருந்தான். விடுமுறையில் ஊருக்கு வந்தால் கூடப் புத்தகத்தைக் கீழே வைக்கமாட்டான். அவனும் மேலே சொன்ன வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பதாக‌ அவனுடைய அம்மா ஊரிலிருக்கும் எல்லோரிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். உண்மையில் அவனும் சில வருடங்களில் மருத்துவர் ஆகிவிட்டான். ஆனால் என்ன? ஏழைகளை தேடுவதில் தான் அவன் தனது போக்கை மாற்றிகொண்டான். இங்கு இருக்கும் ஏழைகளுக்குப் போதுமான மருத்துவ‌ர்கள் இருப்பதால், பாவம்! அமெரிக்காவில் போய் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறான்.

மாணவர்கள் படிக்கும் போது இருக்கும் இந்த‌ மனநிலையானது கால ஓட்டத்தில், எதார்த்த‌ வாழ்க்கை என்று வரும்போது காணாமல் போய்விடுகிறது. அது தவறு என்று நான் வாதிட வரவில்லை. இன்றைய சில‌ மருத்துவர்கள் மருத்துவமனைகளில் செய்யும் செயல்கள் அளவில்லாக் கோபத்திற்கு உள்ளாக்கிறது. எந்த நோய்க்கும் குறைந்த பட்ச டெஸ்ட்கள் இல்லாமல் மருந்துகள் கொடுப்பதில்லை. இந்த டெஸ்ட்கள் அவர்களுடைய மருத்துவமனையில் உள்ள லேப்களில் தான் எடுக்க வேண்டும், வெளியில் இருக்கும் லேப்களில் எடுத்தால் அதன் உறுதித் தன்மையை நம்ம முடியாது என்று கையை விரிக்கிறார்கள். அந்த டெஸ்ட்களுக்குக் கொடுக்கும் பணம் வெளியில் இருக்கும் லேப்களை விட அதிகம். அதோடு மட்டும் அல்லாமல் நீங்கள் அந்த‌ டெஸ்டுகளை முடிக்க ஒரு நாள் முழுவதும் அந்த மருத்துவமனையில் காவல் இருக்க வேண்டும். வரும் எல்லா நோயாளிக்கும் இந்த டெஸ்டுகளைப் பரிந்துரைத்தால் லேப்களில் கூட்டம் இல்லாமலா இருக்கும்!.

சமீபத்தில் எனது உறவினர் ஒருவருக்காக, பெயரைச் சொன்னால் அனைவரும் அறிந்துகொள்ளும் அளவில் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவர் எனக்கு உறவில் மாமா முறை வேண்டும். அவர் சவுதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் கட்டிடவேலைச் செய்துவிட்டு ஒரு நாள் முன்னால் தான் ஊருக்கு வந்திருந்தார். வரும்போதே விமானத்தில் கொடுக்கும் மதுவை மூக்கு முட்ட‌ குடித்திருக்கிறார். அதோடு விடாமல் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவுடன் டூட்டி ஃபிரி ஷாப்பில் இருந்து இரண்டு பெரிய புல் பாட்டிலை வாங்கிக்கொண்டு தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் அட‌க்கி வைத்திருந்த குடியை வீட்டிற்கு வந்த ஒரு நாளில் தீர்க்கும் விதமாகக் கொண்டு வந்த இரண்டு பாட்டிலையும் காலிச் செய்திருக்கிறார்.

இரவு பதினொரு மணியிருக்கும் போது எனக்கு அவருடைய வீட்டிலிருந்து போன் வந்தது. மாமி அழுதுகொண்டே விசயத்தைச் சொன்னார்கள். குடித்தவர் எதுவும் சாப்பிடாமல் படுத்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே நெஞ்சைப் பிடித்திக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கியிருக்கிறார். என்னவென்று கேட்டால் சொல்லுவதற்குத் தெரியவில்லை. மாமி கதறிக்கொண்டு எனக்குப் போன் போட்டிருக்கிறார்கள். நான் உடனடியாக டூவீலரில் கிளம்பி சென்று பார்த்தால் நெஞ்சு பாரமாக‌ இருக்கிறது என்று குழறிக்கொண்டே, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு கத்தினார். இரவு நேரம் வேறு அதிகமாக ஆகியிருந்ததால் மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்பும் குறைவாக இருந்தது. எலுமிச்சைப் பழத்தைப் பிளிந்து கொடுத்தும், மோரும் கலக்கிக் கொடுத்து ஒரு வழியாக வாந்தி வருவதற்குச் செய்தோம். வாந்தியெடுத்தவுடன் தலையில் அதிகமாக எண்ணெய் வைத்துக் குளிக்கச் செய்து படுக்க வைத்தேன். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார்.

காலையில் மருத்துவமனைக்குப் போகாலாம் என்று மாமியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் காலை எட்டரை மணிக்கு எல்லாம் நான் மற்றும் மாமா, மாமி மூவரும் மருத்துவமனையில் காத்திருந்தோம். முந்தின நாள் குடித்திருந்த மாமாவின் போதை முழுவதும் தெளியவில்லை. நெஞ்சில் அவ்வப்போது கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தார். நான் டாக்டர் எப்போது வருவார் என்று வரவேற்பறையில் இருக்கும் நர்சுகளிடம் கேட்டேன். ஒன்பது மணிக்கு வந்துவிடுவார் என்றார்கள். சரி! என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம் மணி ஒன்பதையும் தாண்டி பத்து ஆகியிருந்தது. அப்போதும் வரவில்லை. எங்களுக்கு முன்பும் சிலர் வரிசையில் காத்திருந்தார்கள். மாமாவும் நேரம் ஆக ஆக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கினார். பத்தரை மணி இருக்கும் போது, ஒருவழியாக மருத்துவர் வந்தார், வந்தவர் கூடவே ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு வந்தார். இருவரும் மருத்துவர் அறைக்குச் சென்றன‌ர். வெகுநேரம் ஆகியும் வெளியில் இருந்தவர்கள் எவரையும் அழைக்கவில்லை.

மாமா கத்துவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நர்சுகள், எங்களிடம் வந்து முதலில் உங்களைத் தான் அனுப்புவோம், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவரின் அறைக்கும் சென்று விபரத்தை கூறியிருக்க வேண்டும். சிறிது நேரத்தில் மருத்துவருடன் சென்ற பெண்மணி அறையிலிருந்து வெளியேறினார். வெளியில் நின்ற நர்சு, உடனடியாக எங்களிடம் உள்ளே செல்ல அனுமதித்தது. உள்ளே சென்றால் ரெம்ப மரியாதையாக, லேய்! இங்க வா! எதுக்குல இப்படிக் கத்துற! என்று ஒருமையில் மருத்துவர் அழைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் மாமாவிற்கு நாற்பது வய‌திற்கு மேல் இருக்கும், ஆனால் மருத்துவருக்கு என்னுடைய வயது தான் இருக்கும்.

அதோடு விடாமல் மாமியிடம், இவன் கூட எல்லாம் எப்படிக் குடும்பம் நடத்துற! என்று கேள்வி வேறு. என்னை ஒரு பொருட்டாகக் கூட மருத்துவர் மதிக்கவில்லை. எனக்கு எப்படி எதிர்கொள்ளுவது என்று தெரியவில்லை. நான் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதுக்குள், மாமியிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, வெளியில் நின்ற‌ நர்சை அழைத்து ஓர் ஊசிப் போடுவதற்குப் பரிந்துரைச் செய்துவிட்டு. எங்களிடம் வெளியில் சென்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சீட்டில் எழுதிக் கொடுத்தார்.

அந்த மருத்துவமையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் வச‌தியில்லை. அதனால் மருத்துவர் பரிந்துரைத்த ஊசியைப் போட்டுவிட்டு, ஆம்புலன்ஸ் வசதியுடன் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஸ்கேன் சென்டருக்கு சென்றோம். அங்குக் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. எப்படியோ ஒரு வழியாக முடித்துவிட்டு திரும்பவும் அந்த மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக அந்த‌ மருத்துவரை பார்க்க‌ முடியவில்லை. சாப்பிடுவதற்குப் போயிருக்கிறார், வெயிட் பண்ணுங்க! என்று நர்சுகள் பதில் தந்தார்கள். ஏற்கனவே ஒர் ஊசிப் போட்டிருந்ததால் மாமாவின் வலிக் குறைந்திருந்தது.

சிறுது நேரத்தில் அறைக்கு வந்த மருத்துவர் எங்களை அழைத்து, ஸ்கேன் ரிப்போட்டைப் பார்த்துவிட்டுக் கூலாக உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை என்பது எனக்கு முன்பே தெரியும். வெளிநாட்டிலிருந்து நேற்று தானே வந்திருக்கே, அதுக்கு ஒரு செலவு வைக்க வேண்டாமா என்று நக்கலாக பதில் தந்தார். தண்ணியை அடித்தால் மூடிக்கொண்டு படுக்கணும், அதைவிட்டு சும்மா! அங்க வலிக்குது! இங்க வலிக்குது! என்று அடுத்தவன் உயிரை எடுக்கக் கூடாது என்று அட்வைஸ் வேறு.

இந்தப் பெரிய வெளக்கெண்ணை அட்வைஸ் ஹேருக்குப் பத்தாயிரம் ரூபாய் எவருடைய பாக்கெட்டுக்குத் தண்டம் அழவேண்டும்.

மருத்துவமனைக்கு நேரத்திற்கு வர மாட்டீர்கள், அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட நேரம் இருக்கையில் இருக்க மாட்டீர்கள்!. நோயாளிகளிடம் நாகரீகமாக பேசக் கூட மாட்டீர்கள். நோயாளிகளுடன் வந்திருப்பவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மாட்டீர்கள்!. ஒரு நோயாளியை எந்த அளவு பயமுறுத்த முடியுமோ, அந்த அளவு பயமுறுத்தி பணத்தை வாங்கிவிடுவீர்கள்!. உங்களை தான் நாங்கள் கடவுளாக நினைத்து சரணாகதியடைய வேண்டும்!.


.

Monday, June 16, 2014

டீசல் விலை பத்து ரூபாய்க்கு மேல் குறைவு!! யாருக்கு?

க‌டந்தமுறை ஊருக்கு வருவதற்கு ரெயில் பயணத்தைத் தான் தேர்வு செய்திருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஹைதிராபாத்திலிருந்து சென்னை எழும்பூருக்கான பயணத்தின் முன்பதிவையும், அதைத் தொடர்ந்து காலையில் உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கும் முன்பதிவு செய்திருந்தேன். எப்படியோ முந்தின நாள் மாலை ஹைதிராபாத்திலிருந்து நான்கு மணிக்கெல்லாம் கிள‌ம்பிய நாங்கள் வெற்றிகரமாகப் பதினைந்து மணிநேரம் பயணத்தைத் தூங்கியே கழித்துச் சென்னை எழும்பூர் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸையும் பிடித்தாகிவிட்டது. மீண்டும் ஒரு பதினாங்கு மணிநேரப் பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் அவ்வளவு எளித‌ல்ல, காரணம் பகல் பயணம். தூங்கிக் கழித்துவிடலாம் என்றாலும் முடியாது. முந்தினம் செய்த‌ப் பயணக் களைப்பு வேறு உங்களைப் பாடாய்படுத்திக்கொண்டிருக்கும். காலையில் புதிதாகப் பயணத்தைத் துவங்குபவர்களுக்கு, இந்தக் குருவாயூர் ரெயில் பயணம் செய்வது சுகமாக அனுபவம் தான். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது, அந்த நிலையத்தில் உள்ள பிரசித்திபெற்ற உணவுப்பொருட்கள் உங்களைத் தேடி வந்துகொண்டேயிருக்கும். கையில் உங்களுக்குப் பிடித்த புத்தகத்துடனோ அல்லது வாக்மேனில் பிடித்த படல்களையோ ரசித்துக்கொண்டே கிடைக்கும் உணவுகளை வாங்கி அசைப்போட்டுக் கொண்டிருந்தால் நேரம் போவது உங்களுக்கு தெரிவதில்லை. குழுவாகப் பயணம் செய்தால், சொல்லவே வேண்டாம், உங்கள் உற்சாகம் இரண்டு மடங்காக இருக்கும்.

ஆனால் எங்களின் பயணம் முந்தின நாள் இரவே தொடங்கி விடுவதால் இன்றைய பகல் பயணத்தை ரசித்துப் பயணிக்க முடிவதில்லை . ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போதும், அடுத்த நிலையம் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்க்கும். மாலையில் ஆறு மணிக்கெல்லாம் பயணத்தை முடித்துவிட்டு இறங்கிவிடலாம் என்றால் கூட மன‌தை ஓரளவிற்குச் சமாளித்துவிடலாம். ஆனால் ஒன்பது மணியையும் தாண்டிப் பயணம் செய்ய வேண்டும். மாலை ஆறுமணிக்கு மேல் ரெயிலானது ஒவ்வொரு சிக்னலிலும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நின்றுச் செல்வது இன்னும் கடுப்பை அதிகமாகக் கிளப்பும். எப்படா! வீட்டிற்குப் போவோம்! எனற எண்ணத்தில் தான் பயணிக்க வேண்டிவரும்.

ஒவ்வொரு முறையும் நானும் மனைவியும் ரயிலில் ஊருக்கு வருகிறோம் என்றால், அப்பா! ரயில் நிலையத்திற்கு வாடகை ஆட்டோவுடன் வந்துவிடுவார்கள். இந்தமுறையும் அப்பா, ரயில்வே நிலையத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து, எங்களுக்காகக் காத்திருந்தார்கள். நாங்கள் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் அரை மணிநேரம் தாமதமாக ஒன்பது முப்பதுக்கு நாகர்கோவில் நிலைய‌த்திற்குள் நுழைந்தது. ரெயில் வண்டி நிலையத்தில் நின்றவுடன், எங்களை விட்டால் போதும்! என்ற மனநிலையில் தான் லக்கேஜை எடுத்துக்கொண்டு ஓடிவந்து, நானும் மனைவியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.

அப்பாவுடன் பேசிக்கொண்டே ரயில் நிலைய‌த்திலிருந்து வெளியே வரும் சாலையில் ஆட்டோவில் வ‌ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து கோட்டார் மார்கெட்டுக்கு வரும் சாலையை நானும் பல வருடங்களாகப் பார்க்கிறேன், ஒருமுறை கூடச் சரியாகச் செப்பனிடப்பட்டதில்லை. எப்போது பார்த்தாலும் பிரசவச் சாலையாகத் தான் காட்சியளிக்கும். இன்னும் போதாக் குறைக்குக் கால்நடைகளின் ஒதுக்கிடமாக அந்தச் சாலையும், அதையொட்டிய குளமும் காட்சியளிக்கும். பகலாக இருந்தால் நாய், பன்றி, ஆடு, மாடு என்று எல்லாவகையான கால்ந‌டைகளும் மக்களோடு, மக்களாக அலைவதையும் நீங்கள் பார்க்கலாம். இப்போது மணியானது பத்தை நெருங்கியிருந்ததால் சாலையின் இருமருங்கிலும் மாடுகள் மட்டும் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

ஆட்டோவானது கோட்டார் மார்கெட்டைக் கடந்து, பார்வதிபுரத்தை ரெம்பச் சீக்கிரமாகவே நெருங்கியிருந்தது. வீட்டிலிருந்து அம்மா போனில் என்னை அழைத்து எங்கு இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் அம்மாவிடம் பார்வதிபுரம் வந்துவிட்டேன், இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று சொல்லி மொபைல் அழைப்பைத் துண்டித்தேன். என்ன வாய் முகூர்த்தத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை. பார்வதிபுரம் சிக்னல் தாண்டிச் சாலையின் இடதுபக்கம் வண்டிகள் லைன் கட்டிக் காத்து நின்றது. வலதுபக்கத்திலிருந்து மட்டும் அவ்வப்போது ஒவ்வொரு வண்டிகள் எங்களுக்கு எதிராகச் சென்று கொண்டிருந்தது. இடதுபக்கம் நிற்கும் வண்டிகள் ஒருஅடி கூட நகரவில்லை. எல்லோரும் வண்டியை ஆப் செய்துவிட்டிருந்தார்கள். வலதுபக்கம் வண்டிகள் பெரிய அளவில் வரவில்லை, ஆனாலும் எவரும் தங்கள் வண்டியை வலது பக்கமாக எடுத்துச் செல்லாமல் காத்துக்கொண்டிருந்தார்கள். டூவீலர் வண்டி ஓட்டிச் செல்பவர்கள் மட்டும் சாலையில் இருக்கும் சந்துகளில் வழியாக நுழைந்து கொண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சனை என்று அப்பாவிடமும், ஆட்டோ டிரைவரிடமும் கேட்டேன். அரசுப் பேருந்துகள் அனைத்திற்கும் டீசல் இப்போது தனியார் பங்குகளில் தான் போடுகிறார்கள் என்பது உனக்குத் தெரியும் தானே!. முன்னாடி ஒதுக்குபுறமாக இருந்த பங்குகளில் போட்டுகொண்டிருந்தார்கள். அந்தப் பங்குகளுக்குச் சரியாகப் பணம் கொடுக்கவில்லை என்று பிரச்சனையில், ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டேயிருந்தார்கள் . இப்போது கடைசியாக எல்லாப் பேருந்துகளுக்கும் சுங்காங்கடைக்கும் பார்வதிபுரத்திற்கும் இடைப்பட்ட இடத்திலிருக்கும் ஒரு தனியார் பங்கில் தான் டீசல் போடுகிறார்கள். பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுவதற்கு முன்பு எல்லா டிரைவரும் இந்த‌ தனியார் பங்கில் சென்று நாளைக்குத் தேவையான‌ டீசல்களை நிரப்பிவிட்டு தான் பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுகிறார்கள். இரவு ஒன்பது மணியிலிருந்து இந்தச் சாலையானது பெரும்பாலும் இப்படிதான் மாட்டிமுழிக்கிறது என்று அப்பா சொல்லி முடித்தார்கள்.

ஒரு பேருந்து உள்ளே சென்று டீசல் நிரப்பிய பின்புதான் அடுத்தப் பேருந்து அந்தப் ப‌ங்கிற்குள் நுழைய முடியும். நெடுங்சாலையில் இருக்கும் அந்த டீசல் பங்கானது மிகச் சிறயளவு இடவசதிக் கொண்டது. பணிமனைக்குச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் ஒரே நேரத்தில் டீசல் நிரப்புவதற்கு இந்தச் சாலையில் வந்து கூடுவதால், நெரிசல் அதிகமாகவிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்துகள் நிலைமையைப் பற்றி ஏகப்பட்ட செய்திகளும், புகைப்படங்களும் தினந்தோறும் ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லாம் தலைமுறை தாண்டியவையாகத் தான் இருக்கும். ஏதாவது ஒன்று வழியில் மண்டையைப் போட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். நான் வந்த அன்றும் அப்ப‌டி ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்.


ஒரு மணிநேரம் வண்டிகள் ஆமை போல் ஊர்ந்தது, எங்கள் ஆட்டோவும் அதன் பின்னே நகர்ந்து ஒரு வழியாக அந்தப் பெட்ரோல் பங்கை கடந்தோம். முப்பது மணிநேரம் ரயில் பயணம் முடித்து ஒரு வழியாக வீட்டை அடையலாம் என்றால் வழியில் நடந்த இந்தச் சோதனை எனக்கும், எனது மனைவிக்கும் கொடூர அனுபவமாக இருந்தது. வழி நெடுகிலும் புலம்பிக் கொண்டுதான் வீடு வந்து சேர்ந்தேன். என்றைக்கோ, ஒருநாள் ஊருக்கு வரும் போது இத்தைகைய போக்குவரத்து நெரிசல்களில் மாட்டும் எனக்கே இவ்வளவு கோபம் என்றால், தினமும் இந்த அவஸ்தைகளைச் சந்திக்கும் மக்களின் கதி! பணியை முடித்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என்று இருக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பாடுகள்!.

இப்படித் தனியார் பங்குகளில் டீசல் போடுவதால் ஒரு லிட்டரில் பத்திலிருந்து பதினொரு ரூபாய் அரசானது சேமிக்கிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்லுகிறது. இவ்வாறு சேமிக்கிறேன் என்ற வழியில் இவர்கள் பண‌த்தை இழக்கவும் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.

# பத்திலிருந்து பதினைத்துக் கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று தனியார் பங்குகளில் டீசல் போடுகிறார்கள். இவ்வளவு தூரம் ஓட்டிச் செல்லுவதற்கு ஆகும் டீசல் செல‌வை எந்தக் கணக்கில் ஏற்றுவது?

# ஒரு வழித்தடத்தில் நான்கு முறையாவது பேருந்துச் சென்றுவர வேண்டும் என்று இருந்தால், டிரைவர்கள் இந்த டீசல் போடுவதற்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு மூன்று முறையாகக் குறைத்துக் கொள்ளுகிறார்கள். இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய கணக்கில் ஏற்றுவது?

# சில தனியார் பங்குகளில் நாம் சென்று ஒரு லிட்டர் பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டிலில் கேட்டால் கூடக் கொடுப்பதற்குத் தயங்கும் இத்தகைய பரிசுத்தவான்கள், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் எப்படிச் சரியான அளவில் அளந்துக் கொடுப்பார்கள்?. இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய தலையில் ஏற்றுவது?. 

# ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகத் தனியார் பங்குகளை மாற்றுவதிலும்,பல முறைக்கேடுகள் நடக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்றால் மத்திய அரசு மட்டும் தான் என்று எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. உண்மையில் மாநில அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான, மாநில அரசின் வரியின் வீதத்தைச் சும்மா ஒருமுறை இணையத்தில் தேடிப் பாருங்கள்.
.

Tuesday, June 10, 2014

டிரைவிங் லைசென்ஸ்_எதற்காக எட்டு போட வேண்டும்?

ரெம்ப வருடங்களாக‌ வீட்டில் அம்மாவின் பாதுகாப்பிலிருந்த டிரைவிங் லைசென்ஸ் எப்படியோ தொலைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக ஊருக்கு சென்றவுடன் மட்டும் லைசென்ஸின் ஞாபகம் வரும், உடனடியாக இரண்டு நாட்கள் அதற்கான‌ வேலையாக அலைவேன். பின்பு அதைத் தொடர்ந்து கவனிப்பதில்லை. உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் நீங்கள் அதை முதலில் போலிசில் புகார் செய்யவேண்டும். பின்னர் அவர்கள் கொடுக்கும் புகார் காப்பியை கொண்டு சென்று ஆர்.டி.ஓ ஆபிஸில் புதிய லைசென்ஸ் காப்பி வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் நேரடியாகச் சென்றால் உங்களைச் சுற்றலில் விட்டுவிடுவார்கள். ஏதாவது டிரைவிங் ஸ்கூல் முலமாகச் சென்றால், கொஞ்சம் செல‌வு ஆகும், ஆனால் எளிதாகக் காரியத்தை முடித்துவிடலாம். நானும் ஒரு டிரைவிங் ஸ்கூலின் மூலமாகத் தான் ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன்.

தொலைந்த டிரைவிங் லைசென்ஸின் எண் கூட என்னிடம் இல்லை. நான் படித்த காலேஜில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் லைசென்ஸ் எடுத்திருந்ததால் அந்தக் காலேஜில் உள்ள ஹெச்.ஓ.டியின் சிபாரிசில் சென்று பழைய ரெக்கார்டுகளைப் புரட்டி, ஒரு வழியாக என்னுடைய லைசென்ஸ் எண்ணை வாங்கிக் கொண்டேன். இந்த லைசென்ஸை எண்ணை கொண்டு சென்று போலிஸில் புகார் கொடுத்து, அதன் காப்பியை வாங்கிக் கொள்ள வேண்டும். எந்தப் போலிஸ் அலுவலகத்திலும் நீங்கள் கொடுக்கும் புகாரை உடனடியாக வாங்கிவிட மாட்டார்கள். முதலில் உங்களின் பிரச்சனையைப் போலீசார் காதுக்கொடுத்துக் கேட்பதற்கே, நீங்கள் கிடா வெட்ட வேண்டும். இல்லையென்றால் அரசியல் புள்ளிகள் அல்லது போலிஸ் அலிவலகத்தில் வேலையில் இருப்பவர்கள் என்று எவராவது உங்களுக்குச் சிபாரிசு செய்யவேண்டும்.

எனது குடும்பத்திலிருந்து இரண்டுபேர் போலிஸ் வேலையில் இருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு ஸ்டேசன்களில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமிருந்தும் நான் இரண்டு புகார்களைப் பதிவு செய்து அவற்றின் காப்பியை, டிரைவிங் ஸ்கூலில் வாங்கி வந்துக்கொடுத்ததோடு சரி. இரண்டு முறையும் ஆறு மாதத்திற்கு மேல் டிரைவிங் ஸ்கூல் பக்கம் என்னால் தலையைக் காட்டவில்லை. ஒரு புகார் காப்பியானது ஆறு மாதம் வரை தான் செல்லுபடியாகும். அதற்குமேல் என்றால் இன்னொரு புதிய காப்பியை போலிஸ் ஸ்டேசனில் சென்று வாங்க வேண்டும். நான் இரண்டுபேரிடமும் வாங்கிய, புகார் காப்பியை இப்படித் தான் வீணாக்கியிருந்தேன். என்ன தான் உறவினர்கள் என்றாலும், நம்முடைய சோம்பலுக்குத் திரும்பவும் அவர்களைத் தொந்தரவு செய்ய மனம் ஒப்பவில்லை. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் மற்றொரு யோசனையைக் கொடுத்தார். பழையதை தேடுவதற்குப் பதிலாகப் புதிதாக அப்ளை செய்து வாங்கிவிடலாம். இந்தமுறை ஒரு நாள் வந்து பழகுநர் உரிமம்(Learner's license) போட்டுவிட்டு போங்க, அடுத்தமுறை வரும் போது டிரைவிங் லைசென்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்றார். எனக்கும் அது சிறப்பானதாகவே தோன்றியது. கடந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது பழகுநர் உரிமம் போட்டுவிட்டு வந்திருந்தேன்.

இந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் படலம் ஆரம்பமாகியது. நான் சென்றிருந்த டிரைவிங் ஸ்கூலிருந்து வாரத்தின் வெள்ளிக்கிழமைதோறும் மார்த்தாண்டம் பக்கத்திலிருக்கும் ஆர்.டி.ஓ ஆபிஸுக்கு டெஸ்டுக்கு செல்லுவார்கள். நான் ஊருக்கு வாரத்தின் செவ்வாய்கிழமையே வந்துவிட்டேன். ஊருக்கு சீக்கிரமாக வந்தற்குக் காரணம் உண்டு, காலேஜில் படிக்கும் போது டிரைவிங் லைசென்ஸுக்காக ஜீப்பை ஓட்டுவதற்குக் கற்று கொண்டதோடு சரி. அதன்பிறகு எந்த வண்டியையும் நான் ஓட்டியது இல்லை. அதனால் இரண்டு நாட்களாவது டிரைவிங் ஸ்கூலில் இருக்கும் வண்டியை ஓட்டி பழகி கொள்ளலாம் என்று சீக்கிரமாக வந்திருந்தேன். புதன் மற்றும் வியாழன் இரண்டு நாட்கள் ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் ஓட்டுவதற்குக் கொடுத்தார். என்னிடம் கொடுத்தார் என்று சொல்லுவதைவிட அவரே ஓட்டினார் என்று தான் சொல்லவேண்டும். இரண்டு நாட்களில் என்னால் எல்லாவற்றையும் சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும் நான்றாகத் தெரிந்தது. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் கொடுத்த தைரியம் மற்றும் ஹைதிராபாத்திற்கு மீண்டும் ஒரு வாரத்தில் திரும்ப வேண்டும் என்ற காரணமும் இருந்ததால் வெள்ளிக்கிழமை டெஸ்டுக்கு நேரடியாக என்னுடையை டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன்.

மார்த்தாண்டம் செல்லும் மெயின்சாலையிலிருந்து இடதுபக்க‌மாகச் செல்லும் ஒரு கிளைச் சாலையில் தான் ஆர்.டி.ஓ ஆபிஸ் இருக்கின்றது. அந்தக் கிளைச்சாலையில் இரண்டு பக்கங்களிலும் புதிதாக வாங்கி ரெஜிஸ்டர் பண்ண வேண்டிய‌ டூவீலரும், எப்சிக்காகக் காத்திருக்கும் வாகனங்களும் தான் அடைந்திருந்தது. நான் வருவதற்கு முன்பாகவே டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் வந்திருந்தார். அவருடன் இன்னும் சில பேரும் வந்திருந்தார்கள். என்னிடம் அவர், நீங்கள் டூவீலரில் எட்டுப்போட்டுப் பார்க்க வேண்டுமானால் சென்று பழகிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் சாதரணமாக, டூவீலர் ஓட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை !என்றும் காரைத் தான் எப்படி ஓட்டிக்காட்டப் போகிறேனோ! என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே பயப்படாம ஓட்டுங்க! என்றார்.

டூவீலர் லைசென்ஸ் எடுக்க வந்திருந்த பெண்கள் பலரும் சாலையில் வெள்ளை நிறப் பெயின்டில் வரையப்பட்டிருந்த எட்டில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவருக்கும் சரியாக ஓட்டுவதற்குத் தெரியவில்லை. பெண்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் இடைவெளியில், சில பையன்களும் வண்டியில் எட்டைச் சுற்றி வந்தார்கள். அவர்களும் வரைய பட்டிருந்த எட்டில் திரும்பும் இடங்களில் காலை ஊன்றினார்கள். எல்லோரும் ஓட்டுவதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். சிறிது நேரத்தில் கையில் ஒரு பெரிய பேப்பர் கட்டுகளுடன் ஆர்.டி.ஓ வந்தார். யாரெல்லாம் டூவீலர் லைசென்ஸ் எடுக்க வேண்டுமோ, அவர்கள் எல்லாம் வண்டியை வரிசையாக நிறுத்திவிட்டு இப்படி ஓரமாக வாருங்கள் என்று அழைத்தார்.

கையில் வைத்திருந்த பேப்பர் கட்டுகளை எங்களை அழைத்துவந்திருந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்களிடம் கொடுத்து ஒவ்வொருவரின் பெயரையும் வாசித்துக் கொடுக்கச் சொன்னார். என்னுடைய பேப்பரும் எனது கைக்கு வந்தது. ஆர்.டி.ஓ அலுவலகம் இருக்கும் சாலையின் இரு பக்கமும் ரப்பர் மரங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. கும்பலாக நின்ற எங்கள் அனைவரையும் அந்த ரப்பர் மரங்களுக்குள் வரிசையாக நிற்கவைத்து ஆர்.டி.ஓ சாலையின் மேல் நின்றுகொண்டு எங்களுக்கு வகுப்பு எடுக்கத் தொடங்கிவிட்டார். முதலில் சொன்ன வார்த்தை இதுதான். இந்த அலுவலகத்தில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இருந்தோம், ஒருவர் பணி மாற்றலாகி சென்றுவிட்டார், அவருக்குப் பதிலாகப் புதிதாக எவரும் இதுவரை வரவில்லை. நான் ஒருவன் மட்டுமே, இரண்டுபேரின் வேலையைச் சேர்த்துப் பார்க்கிறேன். ஒருவருக்கு முப்பதுபேர் என்ற வீதம் தினமும் அறுபது லைசென்ஸ் கொடுப்போம். இப்போது நான் ஒருவன் மட்டுமே ஐம்பதிலிருந்து, அறுபது லைசென்ஸை பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே சரியாக ஓட்டவில்லையென்றால் எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் பெயில் பண்ணிவிடுவேன், ஆனால் சரியாக ஓட்டினால் எல்லோருக்கும் பாஸ் போட்டு லைசென்ஸ் கொடுத்துவிடுவேன் என்றார்.

லைசென்ஸ் எடுக்க வருகிறீர்கள் என்றால் சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சிலவற்றைப் பட்டியலிட்டார். அவைகள் ஒன்றும் நமக்குப் புதியவை இல்லை. இருந்தாலும் அவருடைய வாயால் கேட்கும் போது சுவரஸ்யமாகவே இருந்தது.

#) அடுத்தவன் சைடு ஸ்டேண்டை எடுக்காமல் வண்டியில் சென்று கொண்டிருப்பான், அதைச் சொல்லுவதற்காக அவன் பின்னால் வண்டியில் சென்றவன் விபத்தில் அடிபடுவான். முதலில் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும், பின்னர் அடுத்தவனுக்கு உதவவேண்டும். 

#) டூவீலரில் செல்லும் போது வேகத்தின் அளவைக் குறைத்தாலே, பாதி விபத்துக்களைக் குறைக்க முடியும். 

#) நமது நாட்டின் சாலைகளுக்கு ஏற்ப டூவீலர்கள் தயரிக்கப்படவில்லை, சிசி அதிகமாக இருக்கும் வண்டிகளை வாங்குவதில் கல்லூரி மாணவர்களின் ஆர்வம் காட்டுகிறார்கள். 

#) மொபைல் போனில் பேசும் எண்களின் ஹிஸ்டரியை அழிக்கமுடியாத படி எதாவது ஒரு தம்பி, புதிய‌ சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்தால் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எவனும் தனது மனைவிக்குத் தெரியாமல் அடுத்தவன் மனைவிக்குப் போன் பண்ண மாட்டான், வீட்டிற்குத் தெரியாமல் பிள்ளைகள் காதலனுக்கோ, காதலிக்கோ போன் பேச மாட்டார்கள். இந்த மறைமுகப் பேச்சுகள் அனைத்தும் வாகனங்களை ஓட்டும் போது தான் செய்கிறார்கள் அதனால் தான் பல விபத்துகள் நடக்கின்றது என்றார்.

மேலும் சில புள்ளிவிபரங்களையும் சொன்னார்.


கடந்த மாதம் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17. மொத்தமாக ஆறுபேர், ஏழுபேர் என்று விபத்துகளில் உயிரிழ‌ப்பவர்களின் செய்திகள் செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இதுபோல் சின்ன சின்ன டூவீலர் விபத்துக்களில் உயிரிழக்கும் ஒன்று, இரண்டுபேர்களின் செய்திகள் பெட்டி செய்தியாக முடங்கிவிடுகிறது. அதனால் தான் நமது மாவட்டத்தில் நடக்கும் விபத்து செய்திகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்ற உண்மையை விளக்கினார்.

இப்போது எதற்காக எட்டு போட வேண்டும்? ஓர் ஏழு போடலாம் அல்லது ஆறு போட்டுப் பார்க்கலாம், ஏன்! எட்டு மட்டும் தான் போட்டுக் கண்பிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள்? என்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். நானும் எனது பங்கிற்கு ஒன்றை சொல்லிவைத்தேன். இந்த எட்டில் எளிதாக ஓட்டி பழகினால், நமது கிராமங்களில் உள்ள குறுகலான‌ வளைவு நெளிவான சாலைகளில் எவ்விதப் பயமும் இல்லாமல் ஓட்டலாம் என்றேன். வெளிநாடுகளில் எல்லாம் நேரான பெரிய சாலைகள் தானே இருக்கிறது அங்கும் ஏன்! இந்த எட்டுப் போடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள் என்றார். நான் அவரைப் பார்த்து வழிவதை தவிர வேறு பதில் என்னிடமில்லை.



அரசின் எந்த ஒரு துறையாக இருந்தாலும், அவைகளால் நடத்தப்படும் வகுப்புகளுக்குத் தேர்வு என்பது ஒன்று வைக்கப்படுகிறது. அவைகளுக்கு ஒரு தகுதி மதிப்பெண் வைக்கப்படுகிறது. அதைப்போல் தான் போக்குவரத்துத் துறையால் நடத்தப்படும் வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கும் தேர்வுக்கு எட்டுப் போட்டு கண்பிக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்து உள்ளது. இந்தமுறையானது பல உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. நாமும் அந்த முறையைத் தான் பின்பற்றுகிறோம்.

ஒருவர் டூவீலரை சரியாக ஓட்ட‌ வேண்டுமானால் பேலன்ஸ் பண்ணுவதற்குத் தெரியவேண்டும், காலை எங்கும் ஊன்றாமல், கைகளால் சரியாக‌ சிக்னல்களைக் கண்பித்து ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முழுமையான எட்டில் நான்கு சிக்னல்கள் இருக்கின்றது. ஆனால் இங்கு வரைய பட்டிருக்கும் எட்டில் இரண்டு சிக்னல்கள் தான் இருக்கிறது, குறைந்தபட்சம் காலை ஊன்றாமல் இரண்டு சிக்னல்களை எவரெல்லாம் சரியாகச் செய்கிறீர்களோ, அவர்களுக்கு நான் லைசென்ஸ் கொடுப்பேன், இல்லாதவர்களுக்குத் "பெயில்" என்று போட்டு வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். ஆண்கள் எவரும் சிக்னல் காண்பிக்கப் போவது இல்லை, அதில் தான் அதிகமான பேர்கள் தவறு செய்வார்கள், முக்கியமா! பெண்களுக்குத் தான்! என்று பெண்கள் பக்கம் திரும்பி, ஒருத்தரும் பாஸ் ஆகப் போறது இல்ல, எல்லாரும் இந்த ஓடைக்குள் தான் வண்டியை கொண்டு விடுவத‌ற்கு போகிறீர்கள்! காலை ஊன்றாமல் ஓட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு அடுத்த வாரம் வேண்டுமானாலும் வாருங்கள்! என்றார்.

அவரின் இந்த மிரட்டலே நான் உட்பட, பாதிபேருக்குப் பீதியைக் கிளப்பியிருந்தது!

எப்படி இந்த எட்டில் டூவீலர் ஓட்ட வேண்டும், சிக்னல் செய்யவேண்டும் என்பதை, உங்களை அழைத்துவந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்று அவர் பின்னால் நின்றவர்களைத் திரும்பிப் பார்த்தார். ஒருவரையும் காணவில்லை. யோய் எங்கைய்யா ஓடிப் போனீங்க?.. வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டுமென்றால் எவரும் வ‌ராதீங்க! அப்புறம் "பெயில்" என்று போட்டால் மட்டும் என்னிடம் வந்து நில்லுங்க!.. என்று கோபமாகத் திட்டினார். எங்களுடன் கூட்டத்தில் கலந்து நின்ற சிலருடைய பெயரை சொல்லி அழைத்தார். அவர்களை டூவீலர் ஓட்டி காட்டுவதற்குச் சொன்னார்.

டிரைவிங் ஸ்கூல் வைத்திருந்த பெண் ஒருவரையும் ஓட்டி காண்பிக்கச் சொன்னார். அவர் சரியாக ஓட்டினார். ஆனால் சிக்னல் செய்யவில்லை. அவரைப்பார்த்து ஆர்.டி.ஓ பெண்களுக்குப் பேலன்ஸ் பண்ணும் திறன் குறைவு, அதனால் அவர்கள் சிக்னல் செய்யவிட்டால் "மன்னிச்சு" என்றார்.

எவருக்காவது டவுட் இருக்கா? என்றார். இன்னும் ஒருமுறை வேண்டுமானாலும் அவர்களை ஓட்டச் சொல்லி காண்பிக்கிறேன், இத‌ற்கு அப்புறமும் சிக்னல் செய்யாமல், காலை தான் ஊன்றுவேன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ரெம்ப ஸ்டிக்ட் ஆபிஸர், இப்போதே தெரிந்துவிட்டது, காரை ஓட்டும் போது எனக்கு கிடைக்கப் போகும் ரிசல்ட். முக்கால் மணிநேரத்திற்கும் மேலாக வகுப்பு எடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எவரெல்லாம் காலையிலேயே வந்து அந்த எட்டு வரையப்பட்டிருந்த இடத்தில் ஒருமுறை ஓட்டி பார்த்து கொண்டனரோ, அவரெல்லாம் காலை ஊன்றாமலும், சிக்னல் செய்தும் பிழைத்துக்கொண்டார்கள். என்னைபோல் டூவீலர் தானே! அதெல்லாம் நல்லாவே ஓட்டிடுவேன் என்று ஜம்பம் அடித்துக்கொண்டு, வேடிக்கைப் பார்த்த அனைவரும் "பெயில்" ஆக்கப்பட்டார்கள். நானும் "பெயில்" என்பதை எவ்வளவு நாசூக்காக‌ எழுத வேண்டியிருக்கிறது. பெண்கள்! சொல்லவே வேண்டாம்! ஒருவர் கூடத் தேறவில்லை. ஒன்றிரன்டு பெண்கள் வண்டியிலிருந்து, கீழேயும் விழுந்தனர்.

அப்புறம் என்ன அடுத்த வாரம் முதல் ஆளாகப் போய் அந்த எட்டின் மீது ஓட்டிப் பார்ப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய‌வில்லையே!!

.

Friday, June 6, 2014

கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு!

சமீபத்தில் ஹைதிராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வயிற்றுவலி என்று சென்றிருந்தேன். எந்தப் புண்ணியவான் காலேஜில், எவ்வளவு செலவு செய்து டாக்டருக்குப் படித்தார் என்று தெரியவில்லை, வலியோடு படுக்க வைத்து ஸ்கேன் செய்துவிட்டு 8 MM கல் சிறுநீரகத்தில் இருப்பதாகச் சொல்லி உடனடியாக லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லை எடுத்தாக‌ வேண்டும், ரெம்பச் சீரியஸ் என்று கத்தியை இடுப்புக்குக் கீழேயே வைத்திருந்தார். அவர் கையிலிருந்த கத்தியை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. நானும் மனைவியும் மட்டும் தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வீட்டில் நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தே மனைவி மிரண்டு போயிருந்தார். நானும் வலிக்காதது போல எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.

எம்ர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று ஹார்ட் பீட் ரெக்கார்டரை மாட்டிவிட்டு, கையில் பச்சை நரம்பைத் தேடி ஊசியைச் சொருகிய போதே, மனைவின் முகம் வெளறி வியர்வையை ஊற்றத் துவங்கியது. இரண்டு கையிலும், மருந்து செலுத்திய இரண்டு ஊசியைப் போட்டார்கள். அடிவயிற்றில் கனன்று கொண்டிருந்த கனல் நீர்க்கத் தொடங்கியது, சிறுது நேரத்தில் நார்மல் ஆகியிருந்தேன். அருகில் வந்த டாக்டர் உடனே அட்மிட் ஆகிடுங்க, இன்று இரவே ஆபரேசன் பண்ணிவிடலாம் என்றார். வலி அதிகமாக‌ இருந்த நேரம் டாக்டர் வந்து இப்படிச் சொல்லியிருந்தால், நானே அவரிடம் கத்தியை எடுத்துக் கொடுத்து வயிற்றைக் கிழித்து எடுத்துவிடுங்கள் என்று பல்லை இறுக கடித்திருப்பேன். ஆனால் வலியானது அட‌ங்கியிருந்ததால் ஆபிஸ் நண்பர்களுக்குப் போன் செய்தேன். மனைவியும் வீட்டிற்குப் போன் செய்திருந்தார். வீட்டில் உள்ளவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம், வலியைக் குறைத்துவிட்டு மாத்திரை வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துவிடுங்கள். இங்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள்.

திரும்பவும் மனைவியும் நானும் டாக்டரிடம் சென்று பேசினோம், மாத்திரையில் கரைக்க முடியாதா? என்று கேட்டோம். அதற்கு அவர் 8 MM கல் என்பது பெரிய அளவு, அதை மருந்து மற்றும் மாத்திரையால் கரைப்பது முடியாத காரியம் என்றும், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களின் சிறுநீரகத்திற்குத் தான் பிரச்சனை என்று கொளுத்திப்போட்டார். இருந்தாலும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, ஒரே நாள் வலியில் இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? என்பது தான். டாக்டர் என்னைப் பயமுறுத்தியது போதாது என்று நர்சு மற்றும் உதவி டாக்டர் இருவரும் சேர்ந்து, சின்ன ஆபரேசன் தான் சார்!. ஒன்றும் பிரச்சனையில்லை, முப்பதில் இருந்து முப்பந்தைந்தாயிரம் தான் செலவு ஆகும், இரண்டு நாட்கள் தான் பெட்டில் இருக்க்க வேண்டும். இப்போது நீங்கள் சரி! என்று சொன்னால் மாலையில் ஆபரேசன் செய்துவிடுவார்கள். நீங்கள் நாளைக்கே வீட்டிற்குச் சென்றுவிடலாம்! என்று அவர்கள் அந்த மருத்துவமனையில் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக‌ என்னிடம் பேசினார்கள்.

சிறிது நேரத்தில் ஆபிஸிலிருந்து நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த நண்பர், சார்! 8 MM கல்லுக்கு எல்லாம் லேப்ரோஸ்கோப்பிக் ஆப‌ரேசன் பண்ண வேண்டாம். எனது மாமியாருக்கும் இதே போல் தான் இருந்தது, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருந்தில் கரைத்துவிட்டார்கள் என்றும் அதனால் நீங்கள் இங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம் என்றும், அப்படியே ஆபரேசன் செய்ய வேண்டுமானால் ஊரில் போய்ச் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கும், மனைவிக்கும் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தார்.

இவர்களிடம் சென்று ஆபரேசன் செய்ய வேண்டாம்! என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று நினைத்துகொண்டு, டாக்டர்! நாங்கள் இருவரும் இங்குத் தனியாக இருக்கிறோம், ஆபரேசன் செய்தால் என்னைக் கவனித்துக்கொள்ள மனைவிக்குச் சிரமமாக இருக்கும், அதனால் ஊரில் சென்று செய்து கொள்கிறோம் என்று எதார்த்தத்தைச் சுட்டிப் பேசினேன். அவரும் சரியென்று தலையை ஆட்டி, எவ்வளவு சீக்கிரம் பண்ணுகிறீர்களே, அவ்வளவு நல்லது! என்று பக்கத்தில் இருந்த நர்சை அழைத்து, எங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார்.

டாக்டர் அறையை விட்டு வெளியே வந்த எங்களிடம், நர்ஸ், சார்! நாங்க, எதனால் நீங்கள் ஆபரேசன் பண்ணவில்லை? என்பதற்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் அதில் பணம் இல்லை என்று எழுதியிருக்கிறேன். ஒரு கையெழுத்துப் போட்டுவிடுங்கள் என்றார். அவரைப் பார்த்துச் சிரிக்கத் தான் தோன்றியது. டிஸ்சார்ஜ் ரிப்போட்டில் பெரிதாக நாங்கள் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறோம், நாங்கள் ஆபரேசன் செய்வதற்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்றும் எழுதிக் கையெழுத்து வாங்கினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குத் திரும்பவும் அடிவயிறு வலிப்பது போன்ற பிரம்மை வர துவங்கியது.

ஒரு வழியாக மருத்துவமனையில் உள்ளவர்களைச் சமாளித்து வீட்டிற்கு வந்தவுடன் மஸ்கட்டில் இருக்கும் ஜெனரல் மேனேஜருக்குப் போனில் அழைத்து விசயத்தைக் கூறினேன். அவர் ஹைதிராபாத்தில் வேறு மருத்துவமனைக்குச் சென்று கன்சல்ட் பண்ண வேண்டுமானாலும் நான் உதவி செய்கிறேன் அல்லது ஊருக்கு போக வேண்டுமானாலும் சென்று வா. முதலில் உடம்பை கவனித்துக் கொள், வேலைகள் எல்லாம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றார். வீட்டில் உள்ளவர்களும் ஊருக்கு வந்துவிடு என்று அழைத்தனர். உடனடியாகத் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் இரண்டு டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்துவிட்டேன். அவசர அவசரமாகக் கிளம்பி ஊருக்கு வந்தாயிற்று. மறுநாள் காலையில் உறவினர் ஒருவரின் மூலமாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிம்ஸ் மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி அங்குச் சென்று யூராலஜி டாக்டருக்காகக் காத்திருந்தோம்.

இங்குக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிச் சொல்லுவது அவசியமாகிறது. ஒருமுறை அப்பாவிற்குத் திடிரெனக் கால் மூட்டுவலி வந்தது, ந‌டக்கும் போது ஒரு பக்கமாகத் தாங்கலாகத் தான் ந‌டந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைகளில் சென்று காட்டியபோது, ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டுக் கால் மூட்டுகள் இரண்டும் அதிகமாகத் தேய்ந்து உள்ளது. நீங்கள் உடனடியாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பயம் அதிகமாக இருந்தது. உடனடியாக உறவினர் ஒருவரின் மூலம் இந்தக் கிம்ஸ் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்றிருந்தோம், சரியாக ஒரு மாதம் மாத்திரைகள் கொடுத்து, காலுக்குச் சில உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு டாக்டர் பரிந்துரைத்திருந்தார். சரியாக ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைத்தது. இப்போது அப்பா முழுமையாகக் குணமாகிவிட்டார். நான் இந்தக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை தேவையில்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைப்பது இல்லை. மேலும் பணமும் அதிகமாகப் பிடுங்குவது இல்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூட்டம் மட்டும் அதிகமாக இருக்கும். அதனால் இங்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் முழுமையாக‌ நீங்கள் செலவு செய்ய வேண்டியதுவரும்.



எனது டோக்கன் எண் டீவியில் வந்தவுடன் டாக்டரை சென்று சந்தித்தோம். ஹைதிராபாத்தில் இருந்து கொண்டு சென்ற ஸ்கேன் மற்றும் ரிப்போட்டுகள் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தவர், இப்போது வலியிருக்கிறதா? என்று மட்டும் கேட்டார், நான் இப்போது வலியில்லை என்றேன். பின்னர் இரத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்‍-ரே ஆகியவற்றை எழுதி, இவைகளைப் பண்ணிவிட்டு ரிப்போட்டுடன் வாருங்கள் என்றார். இவைகளை முடித்து ரிப்போர்ட் கிடைப்பதற்கு மதியம் ஆகியிருந்தது. மதியதிற்கு மேல் சென்று டாக்டரை பார்த்தோம். எல்லா ரிப்போட்டுகளையும் பார்த்துவிட்டு "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்றார். ஏம்ப்பா! மெத்த படித்த, கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படும் டாக்டர்களே! எல்லா நோயாளியின் மனமும் இந்த ஒற்றைச் சொல்லுக்குத் தான் ஏங்குகிறது. இந்த உண்மை என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும். காசு, பணம், துட்டு, மணி.. என்று மட்டும் யோசிப்பதால் இந்த வார்த்தைகள் உங்கள் வாயினிலிருந்து வருவது இல்லை. "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்ற வார்த்தையின் பலமே என்னுடைய சிறுநீரகக் கல்லை கரைந்திருந்தது.

ஹைதிராபாத் மருத்துவமனையில் கொடுத்திருந்த எந்த மருந்தையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி, முப்பது நாட்களுக்கு இவர் புதிதாக‌ மாத்திரையும் மருந்தும் கொடுத்துவிட்டு இவைகள் முடிந்தவுடன் திரும்பவும் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார். இந்த கல் பிரச்சனை மூன்று நாளில் முழிபிதுங்க வைத்துவிட்டது. விமான டிக்கட் செலவு என்று பணத்தையும், அறுவைச் சிகிச்சை என்று மனத்தையும் காலி செய்திருந்தது.

சிறுவயதில் அம்மா சாப்பிடுவதற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களிடம் பசியில்லை என்று சொன்னால் அவர்களின் பதில் இதுவாகத் தான் இருக்கும் "கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு". இன்றைக்குச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் ஆயில் இருக்கா? கொழுப்பு இருக்கா? என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும் கடைசியில் கல்லாகத் தான் தேங்குகிறது.

இன்று எதைச் சாப்பிடுகிறோம்? எப்படிச் சாப்பிடுகிறோம்? கண்டிப்பாகச் சிந்திகக வேண்டியிருக்கிற‌து.

.

Tuesday, June 3, 2014

இப்பாடுகள் பட்டு_ஏதற்காக ஊருக்கு வரவேண்டும்?

ஒவ்வொரு முறையும் ஹைதிராபாத்திலிருந்து ஊருக்கு வந்து போவதற்குள் நானும் எனது மனைவியும் ஒரு வழியாகிவிடுவோம். காரணம் ஹைதிராபத்திலிருந்து நாகர்கோவிலுக்கான வழித்தடப் பயணத் தூரம் கிட்டதட்ட ஆயிரத்து நானுறு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். விமானத்தில் புக்கிங் செய்து வந்தால் இருவருக்கும் சேர்த்துப் பதினைந்தாயிரம் ரூபாய் டிக்கட்டிற்கு மட்டும் வைக்க வேண்டும். அதிலும் இண்டிகோ ஏர்வேஸ் மட்டும் தான் நேரடியாக ஹைதிராபாத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு விமானசேவை வைத்திருக்கிறது. மற்றவை எல்லாவற்றிலும் சென்னை அல்லது பெங்களூர் இறங்கி அடுத்த விமானத்தில் திருவனந்தபுரம் வரவேண்டும்.

நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஹைதிராபாத் விமான நிலையம் செல்வதற்குக் காருக்கு வாடகைக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் சில கால் டாக்சிக்கு மட்டும் நானுற்று ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டும். ஆட்டோவில் செல்லலாம் என்றால் விமானநிலையம் செல்லும் ரோட்டில் ஆட்டோக்களுக்கும் அனுமதியில்லை. பஸ் வசதியிருக்கிறது. அதற்கும் டிக்கட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை இருக்கிறது. இரண்டு பேருக்கும் சேர்த்து, அதுவும் ஒரு தொகை வந்துவிடும். விமான நிலையம் செல்லும் பஸ்கள் நகரில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்புகளில் இருந்து தான் கிளம்பும். அந்த‌ குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பிற்கும் வீட்டிலிருந்து கிளம்பி ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். இவ்வாறு லக்கேஜுகளைத் தூக்கி கொண்டு ஆட்டோவிற்கும், பஸ்ஸிற்கும் அலைவதற்குப் பேசாமல் கால் டாக்சியில் போய்விடலாம். வீட்டிலிருந்து ஹைதிராபாத் விமான நிலையம் செல்லுவதற்கு ஒரு செலவு என்றால், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து எனது வீட்டிற்குச் செல்வதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையையும், நேரத்தையும் செலவளிக்க வேண்டும்.

விமானப் பயணம் இப்படியிருக்க, ரெயில் பயணம் இன்னும் மோசம். தினமும் ஹைதிராபாத்திலிருந்து சென்னைக்கு மூன்று ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மூன்று ரெயில்களிலும் நீங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது புக்கிங் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும். அவசரமாக இருந்தால் தக்கல் முறையில் புக்கிங் செய்து பார்க்கலாம். ஒன்பது கிரகணங்களில் உச்சம் பெற்ற ஒருவரால் மட்டும் தான், இந்தத் தக்கல் முறையில் புக்கிங் செய்யமுடியும். எப்படியோ ஒரு வழியாக மாலையில் ரெயிலை பிடித்துக் காலையில் சென்னை வந்துவிட்டால் அடுத்து நாகர்கோவிலுக்குப் போவதற்கு வழிதேட வேண்டும்.

காலையில் சென்னையில் வந்து இறங்கியவுடன் நாகர்கோவிலுக்குச் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் என்ற‌ ஒரு ரெயில் தான் இருக்கிறது. க‌ட்சிகுடா எக்ஸ்பிர‌ஸில் வந்தால், நடைமேடை ஏறி இறங்குவதற்குத் தான் உங்களுக்கு நேரம் இருக்கும். அவசர அவசரமாக ஓடிவந்து நீங்கள் இந்த ரெயிலை பிடிக்கவேண்டும். ஹைதிராபாத் எக்ஸ்பிரஸில் வந்தால் சென்னை சென்ட்ரல் வந்து மீண்டும் டாக்ஸியோ, ஆட்டோவோ பிடித்துத் தான், சென்னை எழும்பூர் வந்து குருவாயூர் எக்ஸ்பிரஸை பிடிக்கவேண்டும். காலையில் 7.40 மணிக்கு எடுத்தால் இரவு 9.45 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதிலும் வழியில் எங்காவது சிக்னலில் கோளாறுகள் ஏற்பட்டால் மணியானது பத்தை தாண்டிவிடும்.

காலையில் உங்களால் குருவாயூர் எக்ஸ்பிரஸில் டிக்கட் கிடைக்காமலோ அல்லது பிடிக்க முடியாமலோ போனால் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மாலையில் செல்லும் ரெயில்களில் புக்கிங் செய்ய வேண்டும். இந்த ரெயில்களில் உங்களுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாததிற்கு முன்பே புக்கிங் செய்து வைக்க வேண்டும். கடைசி நேரங்களில் இந்த ரெயில்களில் டிக்கெட் கிடைப்பது அரிது. இவ்வாறு மாலையில் உள்ள ரெயில்களில் புக்கிங் செய்திருந்தால், ஹைதிராபாத்திலிருந்து காலையில் சென்னை வந்த நீங்கள் ஹோட்டலில் அறை எடுத்து தங்க வேண்டும் அல்லது ரெயில்வே ஸ்டேசனில் உள்ள பொது ஓய்வறைகளில் மாலை வரை தேவ்டுக் காக்க வேண்டும்.

இந்தப் பட்ஜெட்டில் ரயில்வே துறையானது, ஹைதிராபத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நேரடியாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது. நானும் தினமும் இயக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக, வார நாட்களில் ஒரு நாள் மட்டும் இயக்குகிறார்கள். ஒரே ரெயிலாக இருந்தபோதும், பயண நேரம் எந்தவிதத்திலும் குறையவில்லை. அதே முப்பது மணி நேரம் தான்.

தொடச்சியாக முப்பது மணி நேரம் ரெயில் பயணம் என்பது எவருக்கும் சோர்வை தரக்கூடியதாகத் தான் இருக்கும். இந்தப் பயணக் களைப்பை போக்குவதற்கு நீங்கள் வீட்டின் அறைக்கதவை இழுத்து மூடிவிட்டு ஒரு நாள் முழுவதும் படுத்து உறங்க வேண்டும்.

ஹைதிராபாத்திலிருந்து நாகர்கோவில் வழியாகத் திருவனந்தபுரத்திற்குத் தினமும் மூன்று வால்வோ பஸ்கள் தனியார் டிராவல்ஸ்களால் இயக்கப்படுகிறது. இதில் டிக்கட் கட்டணம், ஒருவருக்கும் வந்து போவதற்கு நான்காயிரம் செலவு செய்ய வேண்டும். பயண நேரம் குறைவு தான், பதினேழு மணி நேரத்திலிருந்து, பதினெட்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம். நான் தனியாக ஊருக்கு வரும் போது பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் தான் வருவேன். மனைவியால் இந்தப் பேருந்தில் சிறிது நேரம் கூடத் தாக்குபிடிக்க முடியவில்லை. பேருந்தில் ஏறியவுட‌னேயே தலையைப் பிடித்துக் கொண்டு வாந்தியெடுக்க ஆரம்பித்துவிடுவார். மாத்திரைகளைப் போட்டாலும் தாக்கு பிடிக்காது. கையில் நான்கு ஐந்து கவர்களைக் கட்டிக் கொண்டுதான் எப்போதும் வருவோம். இந்தப் பஸ்ஸில் பயணம் செய்வதில் பெண்களுக்கு இன்னும் ஒரு பெரிய பிரச்சனை கழிவறைகள்.



ஹைவே சாலையில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுவதால் வழியில் பெண்களுக்கு என்று சரியான பாதுகாப்பான கழிவறைகளில் இவர்களால் நிறுத்த‌ முடிவதில்லை. சாலையின் ஓரத்தில் நிறுத்தி போகச் சொல்லுகிறார்கள், ஆண்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் பெண்களின் பாடு தான் பெரும் கஷ்டம். டிரைவரிடம் சென்று பெண்கள் செல்ல வேண்டும் என்று சொன்னால் மட்டும் தான் ஏதாவது பெரிய‌ பெட்ரோல் பங்குகளில் நிறுத்துகிறார்கள். இதை இயக்கும் டிரைவர்களுக்குப் பயண‌நேரம் மட்டும் தான் குறிக்கோள். இந்த மணிக்கு பஸ்ஸை எடுக்க வேண்டும், இத்தனை மணிக்கு சாப்பாடிற்கு நிறுத்த வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு ஓட்டுகிறார்கள். இந்தப் பஸ்ஸுகளில் பயணம் செய்யும் போது, ஆங்காங்கே நடக்கும் வால்வோ பஸ்களின் விபத்துகள் நம் கண்முன்னே வந்து நிற்பது மறுக்க முடியாத உண்மை.

பத்து நாட்கள் ஆபிஸில் லீவு வாங்கிவிட்டு ஊருக்கு வரலாம் என்று நினைத்தால், வருவதற்கு இரண்டு நாட்கள், போவத‌ற்கு இரண்டு நாட்கள் என்று நான்கு நாட்கள் டிராவலிலேயே முடிந்துவிடுகிறது. மீதமுள்ள நாட்களில் பயணக் களைப்பு, மாமனார் வீடு, உறவினர் வீடு, திருமணம், சடங்கு, பங்காளிகள் சண்டை, நம்முடைய சொந்த வேலைகள்... அட! போங்கப்பா இப்பவே கண்ணைக் கட்டுது..

.

Friday, May 30, 2014

டிரைவிங் லைசென்ஸ்_ஆணியே புடுங்க வேண்டாம்!!!

நான் படித்த டிப்ளமோ கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படித்து முடிக்கும் மூன்று வருடத்திற்குள், கல்லூரியில் இருக்கும் டிரைவிங் ஸ்கூலில் சேர வைத்துச் சிறப்புப் பயிற்சியும் கொடுத்து இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கான லைசைன்ஸை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். நானும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுப் படிக்கும் போதே டூவீலர் மற்றும் கார் இரண்டிற்கும் சேர்த்து லைசென்ஸ் வாங்கி வைத்து விட்டேன்.

வாங்கிய லைசென்ஸை பத்திரமாக எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்க்கும் போது கம்பெனி வேலையாக டூவீலர் எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றுவேன். ஒருமுறை கூட டிராபிக் போலீஸில் மாட்டியது இல்லை. நான் அம்பத்தூரில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் போது, பெரும்பாலும் டூவீலரை உபயோகிப்பது மூன்று வழித்தடங்களில் தான். ஒன்று பழைய மெசின் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டூல்கள் வாங்குவதற்காக‌ மோர் மார்கெட் மற்றும் எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்கும் வேளச்சேரி ரானே மெட்ராஸ் மற்றும் எண்ணூர் அசோக் லைலன்ட்.

நான் சென்னையில் டூவீலர் ஓட்டுவது, எனது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. நான் டூவீலர் ஓட்டிவிடக் கூடாது என்பதால் தான் என்னிடம் லைசென்ஸை தராமல் அம்மா வாங்கிப் பாதுக்காப்பாக வைத்திருந்தார். அவர் என்னிடம் லைசென்ஸ் கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனக்குச் சரியாக டூவீலர் ஓட்டுவதற்குத் தெரியாது என்பது அவரது எண்ணம். அவருடைய எண்ணதிற்குக் காரணம் இதுதான். முன்பெல்லாம் சைக்கிள் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் வாடைகைக்கு எடுத்து, ஓட்டி கற்றுக் கொள்ளலாம். கால் வண்டி, அரை வண்டி மற்றும் முழு வண்டி என்று பிரித்து வைத்து ஒரு மணி நேரத்திற்கு 25 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை வாடகை வாங்குவார்கள். இந்த வண்டிகளில் நமக்கு ஏற்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வதற்குப் பெரும்பாடு பட வேண்டும். இப்போது எல்லா வீடுகளிலும் ஆளுக்கு ஒரு டூவீலர் என்று இருக்கிறது, ஆனால் அப்போது ஊரில் அரசு பணியில் இருப்பவர்களிடமோ அல்லது புதிதாக வாத்தியார் வேலைக்குச் சேர்ந்தவர்களிடமோ மட்டும் தான் டூவீலரை பார்க்க முடியும். அவர்களும் அந்த வண்டியில் தனது பொண்டாட்டியைக் கூடப் பின்னால் ஏற்றுவதற்குத் தயங்குவார்கள். காரணம் வண்டியின் டயர் தேய்ந்து போகும் என்று, அவர்களிடம் சென்று ஓட்டி கற்றுக்கொள்ள வண்டி கேட்டால் என்ன சொல்லுவார்கள்?.

எனக்கும் அண்ணனுக்கும் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள‌ வேண்டும் என்ற ஆசை வந்தவுடன் அப்பா ஒரு பழைய ராஜூத் வண்டி(Rajdoot Bike) வாங்கிக் கொடுத்தார்கள். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஊரையே அலற வைக்கும். நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். முழு நேரமும் அண்ணன் தான் அந்த வண்டியை ஓட்டுவான். அந்த வண்டியை தெருவில் ஓட்டி சென்றாலே அனைவரும் ஒதுங்கி வழிவிடுவார்கள். அந்தளவிற்கு ஒலியை எழுப்பும். அப்பா எப்போதாவது என‌க்கு கற்றுக் கொடுக்கச் சொன்னால் மட்டுமே என்னிடம் வண்டியை அண்ணன் கொடுப்பான், இல்லையென்றால் என்னிடம் தர மாட்டன். எனக்கும் அந்த வண்டியை ஓட்டுவதற்குப் பெரியளவில் ஆர்வம் இல்லை. ஒரு வருடத்தில் அந்த வண்டியையும் அப்பா விற்றுவிட்டார்கள். அந்த வண்டியில் ஓட்டிய பழக்கத்தில் தான் காலேஜில் நண்பர்களின் உதவியுடன் லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தேன். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அம்மாவின் தூரத்து உறவுமுறையில்(எனக்கு மாமா முறை வரும்) ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வண்டியில் வந்திருந்தார். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம். ரெம்ப நேரம் வீட்டில் அமர்ந்து எங்களுடன் பேசிவிட்டு கிளம்புவதற்காக வெளியில் வந்தார். அம்மாவும் நானும் கூடவே வெளியில் வந்தோம், திடிரெனப் புது வண்டியை பார்த்தவுடன் எனக்கு ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மாமாவிடம் கேட்டவுடன் அவரும் சாவியைக் கொடுத்துவிட்டார்.

சாவியைக் கையில் வாங்கிய போதே, அம்மா என்னிடம் ஓட்ட‌ வேண்டாம் என்று சொன்னார். பக்கத்தில் நின்ற மாமா, ஒண்ணுமில்லை அக்கா! ஓட்டிப் பழகட்டும் என்றார். எனது வீட்டின் முன்பு வண்டி ஓட்டுவதற்கு என்று பெரிய அளவில் இடம் கிடையாது, சிறிய அளவில் தான் இடம் உண்டு. எங்கள் வீடு சற்று மேடான பகுதியில் இருக்கும், வீட்டின் முன்பு எங்கள் எல்லையின் முடிவில் நாங்கள் செங்கலால் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தோம். நான் வண்டியில் ஏறி காலால் ஸ்டாண்டை எடுத்துவிட்டு முன்னால் சாவியைப் போட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். இதுவரையிலும் எல்லாம் சரியாகத் தான் செய்தேன். யாருக்கும் எந்தவிதமான‌ சேதாரமும் இல்லை. பர்ஸ்ட் கியரை மெதுவாக‌ போட்டு ஆக்ஸிலேட்டரை நான் கொடுத்தது தான் தாமதம் வண்டி எம்பிகுதித்துக் கிளம்பியது. நான் நிதானத்தை இழந்திருந்தேன்.

நான் எனது வீட்டிலிருந்த ராஜூத் வண்டியில் ஆக்ஸிலேட்டரைக் கொடுப்பது போல் எடுத்தவுடன் பாதிக்கு மேல் முறுக்கிவிட்டேன். அந்தப் பழைய ராஜூத் வண்டியில் நீங்கள் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரை முக்கால் பாகம் முறுக்கினால் தான் வண்டி லேசாக மூவ் ஆகும். அதே நினைப்பில், இந்தப் புது ஸ்ப்ளெண்டர் பைக்கிலும் ஆக்ஸிலேட்டரை முறுக்கிவிட்டேன். வண்டி எம்பிகுதித்தவுடனேயே அம்மா அலற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் அலறலும், மாமாவின் பிரேக்கை பிடி!! பிரேக்கை பிடி!! என்ற சத்த‌மும் என்னைப் பதற்றபட வைத்திருந்தது.

பதட்டத்தில் கை என்னையும் அறியாமல் ஆக்ஸிலேட்டரை தான் முறுக்கியது. சிறிதுதூரம் செல்வதற்குள் சுதாரித்துக்கொண்டு பிரேக்கில் காலை வைத்து அழுத்த துவங்கினேன், அதற்குள் வீட்டின் முன்னால் இருந்த செங்கள் சுவரின் மீது மோதி விட்டேன் அந்தப் பதட்டத்தில் வண்டியின் பிரேக், கிளெச், ஆக்ஸிலேட்டர் என்று மொத்ததின் மீதும் இருந்த‌ கை, கால்களை எடுத்திருந்தேன், வண்டியானது காம்பவுண்ட் சுவரை மட்டும் இடித்துத் தள்ளி ஆப் ஆகி நின்றது. வண்டி இன்னும் ஒரு செங்கல் தூரம் நகர்ந்திருந்தால், வண்டியோடு சேர்ந்து நானும் பள்ளத்தில் விழுந்திருப்பேன். எனது வீடு மேட்டில் இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். எங்கள் எல்லையின் காம்பவுண்ட் சுவருக்குக் கீழே ஓர் ஆள் உயரம் பள்ளமாக இருக்கும். என்னுடைய இந்தச் செய்கையை நேரில் பார்த்த பிறகும் எனது அம்மா என்னிடம் லைசென்ஸை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?.

அன்றிலிருந்து நான் வண்டியைப் பற்றியோ, லைசென்ஸைப் பற்றியோ பேசினால், நீ ஆணியே புடுங்க வேண்டாம்!! என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிடுவார்கள். அத்தோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊரில் எவரும் வண்டி ஓட்டிப் பழகுவதைப் பற்றிச் சொன்னால் போதும், அம்மா என்னோட கதையைக் கதாகாலட்சேபமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கல்யாணம் முடிந்த புதிதில் என்னுடைய‌ மனைவியிடமும் இந்தக் கதையைச் சொல்ல மறக்கவில்லை. அந்தளவிற்கு நான் அவர்களை மிரட்டியிருந்தேன். இதனால் தான் என்னுடைய‌ சென்னை வாசம் லைசென்ஸ் இல்லாமல் கழிந்தது.

சென்னையில் இருக்கும் போது ஆபிஸ் வண்டியை எடுத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வெளியில் செல்வேன். என்னுடைய ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் நான் வண்டி ஓட்டியபோது எந்தவொரு டிராபிக் போலீஸிலும் மாட்டியது இல்லை. ஒருமுறை அம்பத்தூர் கம்பெனியிலிருந்து டூல் வாங்குவதற்காக மோர் மார்கெட் செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய டூல்களை என் ஒருவனால் கொண்டுவர முடியாது என்பதால் கூட ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எல்லாம் வாங்கிமுடித்து வரும் வழியில், அண்ணா நான் வண்டியை ஓட்டுகிறேன் என்று என்னுடன் வந்த பையன் வண்டியை வாங்கினான். வண்டியில் ஏறிய அடுத்தச் சிக்னலிலேயே போலீஸின் முன்பு நிப்பாட்டி பைன் கட்ட வைத்துவிட்டான்.



நான் டூவீலர் ஒட்டும் போது லைசென்ஸ் இல்லை என்பதற்காகச் சிக்னலில் போலீஸை கண்டு மிரள்வது கிடையாது, அவருக்குப் பயந்து ஓரமாகக் கொண்டும் வண்டியை நிப்பாட்டுவது இல்லை. துணிச்சலாகச் சிக்னலில் டிராபிக் போலிஸின் முன்னால் தான் வண்டியை நிப்பாட்டுவேன். ஏதாவது ரோட்டில் போலீஸ் மடக்குகிறார்கள் என்று ஒதுங்குவது இல்லை. என்னுடைய போக்கில் நான் சென்றுவிடுவேன். அதுவே எனக்குப் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. டிராபிக் போலீஸை கண்டு மிரண்டாலே, நீங்கள் எல்லாச் சிக்னலிலும் பைன் கட்டுவீர்கள். சில வருடங்கள் இப்படியே போனதான், ஊரில் சொந்தமாக வண்டி வாங்கிய பிறகும் லைசென்ஸ் பற்றிய கவலை எனக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஆபிஸ் வேலையாக‌ வெளிநாடு செல்லும் போது வீட்டில் இருக்கும் லைசென்ஸை தேடினால் கிடைக்கவில்லை. அம்மாவும் வைத்த இடத்தை மறந்திருந்தார்கள். பல வருடங்கள் ஆகியதால் வீட்டில் அவ்வப்போது பெயிண்டிங், ஷிப்டிங் என்று இருக்கும் போது தொலைந்து போனது.

அவ்வாறு தொலைந்த/தொலைத்த‌ லைசென்ஸை சமீபத்தில் தான் வாங்கினேன். அந்தக் கதையையும் நேரம் இருக்கும் போது எழுதுகிறேன்.

Wednesday, May 28, 2014

கல்யாணம்_இந்த ஆவணியில் வேண்டாம்! அடுத்த ஆவணியில் பண்ணலாம்!

எனது அம்மாவின் சித்தி, அப்படியானால் எனக்குப் பாட்டி முறை வேணும். அவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள். அவர்களை வளர்ப்பதில் ஆண், பெண் பேதங்களைக் காட்டினார்களோ! இல்லையோ!, ஆனால் அவர்களைப் பெற்றெடுக்கும் போது சரிசமமாக நான்கு ஆண், நான்கு பெண் என்று ஆண், பெண் சமவுரிமையை நிலை நாட்டினார். அம்மாவின் சித்தப்பாவிற்கு, எனக்குத் தாத்தா முறைவரும், அவர்களுக்கு மாநில‌ அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தில் கிளர்க் வேலை. கணவருக்கு அரசு வேலையாக இருந்தால் பாட்டியால் எட்டுக் குழந்தைகளையும் வளர்ப்பதில் பெரிய கஷ்டம் இருக்கவில்லை. தாத்தாவிற்கும், பாட்டிக்கும் ஆண்டவர் இயேசுவின் மீது அளவுகடந்த பக்தி. ஞாயிறு என்றால் வீட்டில் ஒருவரையும் பார்க்க முடியாது. சர்ச்சில் இருக்கும் எல்லாக் குழுக்கள் மற்றும் சபைகளிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கும். இவர்களுக்குச் சர்ச்சின் மீது இருந்த அதே ஆர்வம் பிள்ளைகளுக்கும் இருந்தது. அதனால் அவர்களின் மூத்த மகள் மற்றும் இளைய மகள் தவிர, மற்ற‌ இரண்டு மகள்களும் கல்யாணம் வேண்டாம் என்று துறவறக் கன்னியர் சபைக்குச் சென்றுவிட்டனர்.

பாட்டிக்கு வரிசையாக‌ பிறந்த எட்டுப் பிள்ளைகளில், கடைக்குட்டியைத் தவிர அனைத்துப் பிள்ளைகளுக்கும் உள்ள பிறப்பின் இடைவெளி என்பது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் தான். கடைக்குட்டி மட்டும் ரெம்பவும் தாமதமாகப் பிறந்தான். கன்னியராகத் துறவறச‌பைக்குச் சென்று இரண்டு சித்திகளைத் தவிர மற்ற இரண்டு சித்திகளுக்கும், இரண்டு மாமாவிற்கும் திருமணத்திற்கான இடைவெளிகள் என்பது ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் இருக்கும். எல்லோருக்கும் ரெம்பத் தாமதமாகத் தான் தாத்தாவும், பாட்டியும் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது மீதம் இருப்பது கடைக்குட்டி மாமாவும், அதற்கு முந்தைய மாமாவும். கடைக்குட்டி மாமாவின் வயதில் இருக்கும் பையன்களுக்கே கல்யாணம் முடிந்தும், பலருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றது. கடைக்குட்டி மாமா பிறந்ததே ரெம்பத் தாமதம் என்று முன்பே நான் சொல்லியிருந்தேன். கடைக்குட்டி மாமாவிற்கும், அதற்கு முந்தைய மாமாவிற்கும் உள்ள வயது வித்தியாசம் எப்படியும் ஆறிலிருந்து ஏழு இருக்கலாம். அப்படியானால் கடைக்குட்டிக்கு முந்தைய மாமாவின் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவரின் வயதை நான் கணக்கிட்டு எழுதினால், இங்கு ஒரு முதிர்கன்னனின்(முதிர்கன்னிக்கு எதிர்பால் முதிர்கன்னனாகத் தானே இருக்கும்!!, உன்னோட தமிழ‌றிவில் தீயை வைத்துக் கொளுத்த!!) வயதை எழுதிய பாவத்திற்கு ஆளாவேன்.

கல்யாணம் ஆகாமல் இருக்கும் மாமாவிற்கு ஊரில் தான் வேலை. எலட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் ஒர்க்குகள் சொந்தமாகக் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்வார்கள், நன்றாகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளும் வேலையில்லை என்று வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். நான் ஊருக்கு வந்திருக்கிறேன் என்று எவர் மூலமாக அறிந்தால், அன்றே எனது வீட்டிற்கு வந்து நலன் விசாரிப்பார்கள். வெளியில் எங்குக் கண்டாலும் என்ன மருமவனே! எப்ப‌டி இருக்கிற? இப்போது எந்த இடத்தில் இருக்கிறாய்? என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்திற்கு முன்பு, நானும் அவரிடம், எப்படி மாமா நல்லாயிருக்க முடியும்?. நீங்க காலக் காலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தா எனக்குச் சைட் அடிக்க நல்ல ஒரு பெண்ணையாவது பெத்து வைத்திருப்பீங்க!! இப்போது பாருங்கள், சைட் அடிக்கக் கூட நல்ல பொண்ணு ஒண்ணும் கிடைக்க மாட்டேங்கிறது! என்று நக்கல் அடிப்பேன்.

மாமாவின் வயதை அவரது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஊகித்து விட முடியாது. தலைமுடி மட்டும் தான் ஆங்காங்கே நரைத்து இருக்கும். உருவத்தில் இளமையாகத் தான் இருப்பார்கள். மாமாவிற்கு இருக்கும் சொந்தபந்தங்களுக்குக் குறைவில்லை. அவருடன் பிறந்தவர்கள் மட்டுமே, ஆளுக்கு ஒரு திசையாகத் தேடியிருந்தால் கூட எப்போதோ அவருடைய கல்யாணம் முடிந்திருக்கும். நான் ஊருக்கு வந்துபோகும் போதேல்லாம் இந்த வருடமாவது கல்யாணம் நடக்குமா மாமா? என்று கேட்பேன். வீட்ல இருக்கிறவர்கள் பாக்குறாங்கடா! ஒண்ணும் அவசரம் இல்ல! பொறுமையாக‌ பண்ணிக்கலாம்! என்று பதில் சொல்லுவார்கள். பெரும்பாலும் ஒருவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்தால் நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் செல்லுவார்கள். ஆனால் இவருக்கு வீட்டில் உள்ளவர்கள் வருடக் கணக்கில் பார்த்தார்கள்.

நான் ஊருக்கு சென்றுவரும் போதெல்லாம் எப்போது மாமா, கல்யாணசாப்பாடுப் போட போறீங்க? என்று கேட்க மறப்பதில்லை. அவரும் சிரித்துக் கொண்டே நீ, கல்யாணசாப்பாடுச் சாப்பிட வேண்டும் என்பத‌ற்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்லிச் சிரிப்பார். சில நேரங்களில் வீட்டில் உள்ளவர்களைக் குறையாகச் சொல்லி கவலைப்படுவார். எனக்குத் திருமணம் முடிந்த பிறகு அவரிடம் கல்யாணம் பற்றிய‌ பேச்சுகளைப் பற்றி அதிகம் பேசுவது கிடையாது. கண்டிப்பாக இப்போது நான் அவருடைய கல்யாணம் பற்றிக் கேட்பது அவருக்கு உறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தால் அதைப் பற்றிப் பேசுவது இல்லை. சில வருடங்களாகவே அவருடைய முகத்தில் கல்யாணத்தைப் பற்றிக் கவலைகள் அதிகமாகத் தென்பட்டது. எப்போதும் மழிக்காத, டிரிம் செய்த‌ அரைத் தாடியுடன் தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எனது வீட்டில் உள்ளவர்கள் எவரேனும் கல்யாணம் பற்றிக் கேட்டால் சலிப்பாகப் பதில் சொல்வார்கள், அல்லது வேறு திசைக்குப் பேச்சை மாற்றுவார்கள்.

கடந்த வாரம் ஊருக்குப் போயிருந்தபோது மாமாவை ஒரு வேலையாகச் சென்ற வழியில் பார்க்க முடிந்தது. முகம் வழவழப்பாக மழிக்கப்பட்டு, தலைமுடியும் அடர்கருப்பில் காட்சியளித்தது. மாமாவிடம் அவருடைய மாற்றம் குறித்து எதுவும் கேட்காமல், சாதரண நலன் விசாரிப்புகள் மட்டும் விசாரித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அண்ணனிடம் மாமாவின் மாற்றத்தைப் பற்றிக் கேட்டேன். ஆமாடா, அவங்களுக்கு நம்ம ஊரிலேயே ஒரு பொண்ணைப் பார்த்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருக்கும் போய்ப் பார்த்திருக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம். நிச்சயதார்த்தம் தேதியும் குறித்துவிட்டார்கள் என்றான். எனக்கும் மனதிற்குச் சந்தோசமாக இருந்தது.

மறுநாள் மாலையில் வெளியில் சென்றுவந்த அப்பா, மாமாவிற்குப் பார்த்து வைத்திருந்த பெண்ணின் வீட்டார்கள், இந்தத் திருமணம் வேண்டாம்! நிறுத்திவிடலாம்! என்று சொல்லிவிட்டார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். நான் அப்பாவிடம் என்ன காரணம்? என்று கேட்டேன். அப்பாவிடம் விசயத்தைச் சொல்லியவருக்கும் சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. மொட்டையாகப் பெண் வீட்டார்கள் திருமணம் இப்போது வேண்டாம்!! என்று சொல்லியதாகக் கூறினார்கள். இதைக் கேட்டுகொண்டிருந்த அம்மா, நேற்று மூத்தவன்(தாத்தாவின் எட்டுப் பிள்ளைகளில் முதலானவர்) வீட்டிற்கு வந்திருந்தான். தான் இன்னும் இளையவனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நேரில் பார்க்கவில்லை என்றும், நேற்று மாலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்ப்பதாகவும் சொன்னானே!!. ஒருவேளை இவர்கள் சென்று பார்த்த நேரத்தில் தான் ஏதேனும் பிரச்சனை வந்திருக்கும், எதற்கும் அவனை விசாரித்தால் தெரியும்! என்று மூத்த மாமாவிற்கு அம்மா போன் செய்தார்கள்.

நீங்கள் கேள்விப்பட்ட‌ விசயம் உண்மையானது தான்!. அவன் நாளைக்குக் காலையில் வீட்டிற்கு வந்து என்ன விசயம் என்பதை விளக்கமாக‌ சொல்லுகிறேன் என்று போனை வைத்துவிட்டான் என்று சொல்லி, அம்மா அப்பாவின் முகத்தைப் பார்த்தார்கள்.

காலையில் வீட்டிற்கு வந்த மூத்த மாமா அம்மாவிடம், தம்பிக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நானும் என்னோட பொண்டாட்டியும் பார்க்கவில்லை. வீட்ல உள்ளவர்கள் எல்லோரும் பெண்ணைப் பார்ப்பதற்குப் போகும் போது என்னோட குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லாத‌தால் நானும் வீட்டுக்காரியும் குழந்தையை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போய்விட்டோம். அன்றிலிருந்தே என்னிடம் நீயும் அண்ணியும் வந்து எனக்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பாருங்க! என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சரி! என்று சொல்லி இளையவன்(கடைக்குட்டி மாமா), நான், என்னோட மனைவி, குழந்தை மற்றும் அப்பாவும் போய்ப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். கிளம்புகின்ற நேரம் நானும் உங்க கூட வருகிறேன் என்று சொன்னான். அவனுக்காக‌ தான் பொண்ணையே பார்ப்பதற்குப் போகிறோம், நீ எங்க கூட வரதே! என்று அவனைத் தடுக்கவா முடியும். சரி வா! என்று சொன்னோம்.

பெண்ணின் வீட்டிற்குச் சென்று அமர்ந்திருந்தோம். அப்போது பெண்ணின் அம்மா தான் பேச்சை ஆரம்பித்தார்கள், எனக்கு இருப்பது இரண்டு பெண்கள், ஒரு பையன். மூத்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவளோட மாப்பிள்ளை ஒரு குடிக்காரன். அவனால ஒரு பிரியோஜனம் இல்ல, இந்தக் கல்யாணத்தை முன்னின்று நடத்த வேண்டிய என்னோட புருசனும், மூக்கு முட்ட குடிச்சிட்டு இந்தா ரூம்ல‌ கட்டிலில் விழுந்து கிடக்கிறான், அதனால எதுனாலும் நான் தான் பேச வேண்டும் என்றார்.

வீட்டின் நிலைமையை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசினார். என்னோட பையன் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். அவன் ஆவணி மாதம் தான் ஊருக்கு வருகிறான். இப்போது சித்திரை மாதம், நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். எங்கள் பையன் வரும் ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்றார். இதைக் கேட்டுகொண்டிருந்தவன் சட்டென்று இந்த ஆவணி மாதம் எதற்கு? அடுத்த வருடம் ஆவணி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று நக்கலாகப் பதில் சொன்னான். இவ்வாறு இவன் பேசியது பெண்ணின் அம்மாவிற்குக் கோபத்தைத் தூண்டியிருக்கும். ஆனால் அவர் அதைப் பேச்சில் வெளிக்காட்டாமல் முகத்தில் வெளிக்காட்டினார். பெண்ணின் அம்மா எந்தவொரு விசயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், பக்கத்தில் இருந்தவன் சும்மா இருக்காமல் அவர்கள் பேசுவதை நையாண்டி செய்வது போலவே பேசினான். நான் கையைப் பிடித்து அழுத்திகொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நீ அமைதியாக இரு! பெரியவர்கள் பேசட்டும் என்றும் சொன்னேன். அவன் எதுவும் காதில் போட்டு கொள்ளவில்லை.

இவனுக்குப் பெண்ணின் அம்மா ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னது பிடிக்கவில்லை. உடனே கல்யாணம் செய்யவேண்டும் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தான்.

எது எப்படியோ, இவன் இவ்வாறு நக்கல் செய்து கொண்டிருந்தது பெண்ணின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. நாங்கள் வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வரும் போது, எவர் இந்தத் திருமணத்திற்காக ஓட்டன்(புரோக்கர்) வேலைப்பார்த்தாரோ அவரிடம், என்னோட பொண்ணுக்கு நான் இப்போது கல்யாணம் பண்ணவில்லை. மெதுவாக வேற‌ நல்ல இடமாகப் பார்க்கலாம் என்று எனது காதில் படும்படியே சத்தமாகச் சொன்னார். அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்தோம் என்று கூறி முடித்தார்.

அட! மாமா! மாமா!

சாப்பாட்டை ஆக்க பொறுத்த நீங்க!! ஆற பொறுக்கலியே!!!

.

Related Posts with Thumbnails