Thursday, January 1, 2015

போட்டிக்காக எழுதிய சிறுகதை!!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள்!! 

இந்த வருடம் முழுமையாக இணையத்தில் இயங்க முடியாவிட்டாலும் ஒரு நாற்பது பதிவுகளுக்கு மேல் எழுத முடிந்தது. கடந்த வருடம் எனது மனைவின் தூண்டுதலின் பேரில் ஒரு சிறுகதைப் போட்டியில் பங்கேற்றேன். வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், என்னாலும் முழுமையாக, இயல்பாக ஒரு கதையை எழுதமுடியும் என்று உணர்த்திய‌ தருணம் அது. நடுவர்களும் மொழி நடையை வெகுவாகப் பாரட்டினார்கள். கதைக்கரு ஆழமாக இல்லை என்று விமர்சனம் செய்திருந்தார்கள். நண்பர்களின் விமர்சனங்களுக்காக‌ இங்குப் பதிந்து வைக்கிறேன். 

படிக்கக் கொஞ்சம் நேரம் பிடிக்கும் சிறுகதை தான், நண்பர்கள் நேரம் கிடைக்கும் போது படித்துக் கருத்துக்களை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


                       சடங்குகளும், சம்பரதாயங்களும்

இருந்தாலும், உங்க அக்கா, "ஒரு வார்த்தை முன்னமே போன் போட்டு நம்மிடம் சொல்லியிருக்கலாம்".

ஆமா, சொன்னா மட்டும் உடனே கிளம்பிப் போய், நீ தான் முதல் ஆளா நின்னுருப்பியா?.

அதுவும் சரிதான்! இப்ப இருக்கிற சூழ்நிலையில் உடனே கிளம்பி, ஊருக்குப் போறது எல்லாம் நடக்காத காரியம் தான். இங்க இருந்து ஒருதடவை ஊருக்குப் போயிட்டு வரணும்னாலே, இரண்டுபேரோட ஒருமாச சம்பளத்தை வைக்க வேண்டியதா இருக்கு. அப்படியே பணத்தை வச்சாலும் லீவு வாங்குறது குதிரைக்கொம்பு தான்! நாம‌ லீவு வாங்கினாலும், குழந்தைகளுக்கு ஸ்கூல்ல லீவு வாங்குறது அதைவிடக் கஷ்டம் என்ற‌ மனைவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய சிந்தனை என்னவோ பழைய நினைவுகளில் மூழ்கியது.
                      **********************************
அன்றைக்கு லீவு நாளுமாய் இருந்தபோதிலும் அம்மா, அடுக்களையில் இருந்து தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். லேய், எழும்பி தொலை! இப்ப இருந்தே வீட்டிற்கு ஒவ்வொருத்தரும் வரத்தொடங்கி விடுவார்கள், ஒன்ன போட்டு மேய்க்க எனக்கு நேரமில்ல‌, எல்லாவேலையும் அப்படியே அங்கங்க கிடக்குது! எழும்பி, பாயை மடிச்சு வச்சுட்டு, எனக்கு ஒத்தாசையா கூடமாட இருந்து வேலைச்செய்! என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். பள்ளிக்கூட நாளாக இருந்திருந்தால் இப்படிக் கத்திக்கொண்டிருந்திருக்க‌ மாட்டார்கள். நேராக என் படுக்கைக்கே வந்து நாலு சாத்துசாத்தி எழுப்பிவிட்டிருப்பார்கள்.

காலில் இருந்து கழுத்துவரை இழுத்துப்போர்த்திய போர்வையின் நுனி, ஜன்னலில் இருந்து வீசியக்காற்றில் விலகியதால், வெளிப்ப‌ட்டக் காலின் அடிப்பாதத்தைத் தீண்டிய‌ மெல்லிய குளிர்காற்று, போர்வைப் போர்த்திய வெதுவெதுப்பிலிருந்த‌ உடம்மை சில்லிட வைத்ததையும், அடுக்களையில் இருந்துவந்த அம்மாவின் காட்டுக்கத்த‌லையும் ஒருசேர‌ சமாளிக்க, பக்கவாட்டில் திரும்பிப்படுத்து, காலைமடக்கிப் போர்வையை எடுத்துக் காலிலிருந்து தலைவரை இழுத்துமூடி, கைகளைப் போர்வைக்குள் இழுத்து, கால் கவட்டைக்குள் வைக்கும் போதுதான் டவுசர் நனைந்திருந்தது தெரிந்தது. இதற்குமேலும் படுத்திருந்தால் அடியும், உதையும் ஒருசேரக் கிடைக்குமென்பதால் அவசரஅவசரமாக எழுந்துப் பாயைச்சுருட்டும் போதுதான், வேணி அக்கா அந்தமூலையில் உக்கார்ந்திருந்தது தெரிந்தது.

இவ, இங்கன இவ்வளவுநேரம் உக்கார்ந்திருந்தால், நான் கால்வழியே ஒண்ணுக்குப் போயிருந்ததை, இந்நேரம் அம்மாவிடம் சொல்லி என்னைப் படுக்கையிலேயே மிதிக்க வைச்சிருப்பாளே! என்ன! என்னைக்கும் இல்லாமல், இன்னைக்கு இவ்வளவு அமைதியா மூலையில் உக்காந்திருக்காள்! என்று எண்ணிக்கொண்டே, போர்வையை எடுத்து மூலையில் வைத்துவிட்டு, பாயை எடுத்துக்கொண்டு போய், வீட்டிற்கு வெளியிலிருந்த‌ கம்புவேலியில் போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது, எதிரில் அம்மா வந்துநின்றார்கள். அம்மா! என்னை அடிக்காதே! இப்பவே நான் குளத்துக்குப்போயி  போர்வை, துணியெல்லாம் அலசிட்டு வந்திடுறேன், என்று சிணுங்கிய குரலில் வேண்டினேன். அம்மா சிரித்துக்கொண்டே, லேய்! துணிகளையெல்லாம் அவுத்துட்டு, டவ்வலை மட்டும் கட்டிக்கொண்டு குளத்துக்குப் போயி, சீக்கிரமா, குளிச்சுட்டு வா!. அவுத்துப்போட்டத் துணிகளோடு, போர்வையும் சேர்த்துக் கொண்டுபோய் மூலையில் இருக்கும் அக்கா துணியுடன் போட்டுவிடு!. வெள்ளையம்மாவை வீட்டிற்கு வருவதற்குச் சொல்லியிருக்கிறேன், அவ எல்லாத் துணிகளையும் கொண்டுபோய் வெளுத்துத் தருவா! என்று சொல்லிக்கொண்டே, அம்மா கையில் இருந்த கருப்பட்டிக் காப்பியை என்னுடைய‌க்கையில் கொடுத்துவிட்டு அடுக்களைக்குள் போனார்கள்.

எவர்சில்வர் கப்பில், அம்மா கொடுத்த காப்பிச் சூடாகயிருந்தது, வராந்தாவில் அமர்ந்து மெதுவாகக்குடிக்க ஆரம்பித்தேன். சிறிதுநேரத்தில் அடுக்களையிலிருந்து வெளியில் வந்த அம்மா, மவனே மோனாசு! அடுத்தத்தெருவுல இருக்கிற காமேஷ் அத்தை வீட்டிற்குப்போய், ஒரு குட்டைச் சாணம் அள்ளி வைச்சுட்டு, நீ குளிக்கப் போ! என்று சொல்லிவிட்டு திரும்பவும் வீட்டிற்குள்ளே போனார்கள். அம்மாவின் செய்கைகள் ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. படுக்கையில் ஒண்ணுக்குப்போனால் காலையிலேயே, கம்பெடுத்து நாலு இழு, காலுக்குக்கீழ் இழுத்துவிட்டுத்தான் மறுவேலையே பார்ப்பார்கள். அத்தோடு அதைவிட மாட்டார்கள். அன்று முழுவதும் அந்தத்தெருவில் உள்ளவர்களுடன் வம்புப்பேச, நான் படுக்கையில் ஒண்ணுக்குப்போன கதைத்தான் பிரதானமாக‌ இருக்கும்.

வெள்ளையம்மாவை அழைத்து, எங்கள் துணியை வெளுக்கப்போடுவது என்றால்,  வருசத்திற்கு ஒருமுறை தான் நடக்கும். அது பள்ளியில் பெரியபரிட்சை முடிந்தவுடன், என்னுடைய மற்றும் வேணி அக்காவின் இரண்டுசெட் பள்ளி யூனிபார்ம்கள் மட்டும்தான் கொடுக்கப்படும். அவர்களும் இந்த யூனிபார்ம்களைப் பள்ளித் திறப்பத‌ற்கு ஒருவாரத்திற்கு முன்பாக‌த்தான் வெளுத்துக்கொண்டு தருவார்கள். புதிதாகத் தைத்த யூனிபார்ம் போடுவதைவிட‌, இந்த வெளுத்த யூனிபார்ம் போடுவதில் தான் எனக்கு அலாதிப்பிரியம். பெரிய‌லீவு முடிஞ்சு, முதல்நாளில் அடர் நீலக்கலரில் வெள்ளைச்சட்டை அணிந்து செல்வது எனக்கு ஒரு பெருமிதமாகவே இருக்கும். யூனிபார்ம் துணிகளைத் தவிர, அம்மா அபூர்வமாக என்றாவது ஒருநாள் தன்னுடைய சொந்தகாரங்க வீட்டுத்திருமணத்திற்குச் செல்லவேண்டுமானால் அவர்களின் கல்யாணப்பட்டுச்சேலையையும் வெள்ளையம்மாவிடம் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இன்று பழையத்துணிகளை எல்லாம் வெளுக்கக்கொடுக்க, வெள்ளைய‌ம்மாவை வருவதற்குச் சொல்லியிருக்கிறேன் என்றுகூறிய, அம்மாவின் செய்கை எனக்குப் புதிராக இருந்தது.

அம்மா, சாணம் எடுத்துவரச் சொல்லியது ஞாபகம் வரவே, கையிலிருந்த சூடான‌க் காப்பியை அவசர, அவசமாக ஊதிக்குடித்துவிட்டு, கப்பை வராந்தாவில் விட்டுவிட்டு, வேலியின் ஓரத்திலிருந்த‌ குட்டையை எடுத்துக்கொண்டு காமேஷ் அத்தையின் வீட்டிற்கு ஓடினேன். தெருவைக்க‌டந்து, அத்தையின் வீட்டை நெருங்கிய போதே, அத்தையின் வெங்கலக்குரல் ஓங்கி ஒலித்தது. முற்றத்தில் நின்ற‌ மணி, வீட்டின் வாயிலைப் பார்த்துத் திரும்பி நின்று கண்களைக் கசக்கிக்கொண்டிருந்தான். கழுதைவயசு ஆச்சு! இன்னும் பாயிலேயே ஒண்ணுக்குப்போவுது, மாடு! மாடு! எத்தனை தடவைச் சொல்லியிருக்கேன், உறக்கத்துல ஒண்ணுக்கு வந்தா, என்னை எழுப்பு.. எழுப்புனு.. ஒன்னோட தினம் ரோதைனயாப்போச்சு! என்று வீட்டிற்குள் இருந்து அத்தை, வெளியில் நின்ற மணியை அர்ச்சனைச் செய்துகொண்டிருந்தார்.

அத்தையின் குரலைக்கேட்டு, தெருவிலேயே பம்மினேன். வெளியில் எட்டிப்பார்த்த அத்தை என்னைக் கண்டுக்கொண்டார். வால, மோனாசு நீனும் இவன் செஞ்ச‌ வேலையைத்தான் செஞ்சியா?. இரண்டுபேரும் சொல்லிவைச்சது போல ஒரே நாள்லதான் படுக்கையில ஒண்ணுக்கு போவீங்களா?. இரண்டு மோண்டு கள்ளனும் ஓடுங்க!, போய்க் குளத்தில, குளிச்சுட்டு வீட்டுக்கு வாங்க, என்று விரட்டினார். நான் அத்தையிடம் அம்மா, சாணம் எடுத்துவரச் சொன்னதைச் சொல்லிவிட்டு, ஓரக்கண்ணால் மணியைப் பார்த்தேன். இப்போது அவன் கண்கள் கசக்குவதை நிறுத்தி என்னைக் கள்ளப்பார்வைப் பார்த்தான். இருவரும் கண்களால் பேசிவிட்டுக் கொல்லைப்புறத்தில் இருக்கும் மாட்டுத்தொழுவத்திற்கு ஓடினோம்.

என்ன மணி, இன்னைக்குச் செம்ம திட்டுபோல! அடியேதும் கிடைச்சுதா?

இல்ல‌டா மோனாசு, நாமெல்லாம் யாரு, அதான் அடிக்க வர்றதுக்குள்ள வெளியே ஓடி வந்திட்டோம்மில்லா! என்று பொருமினான்.

எனக்கு இன்னைக்குத் திட்டும் இல்ல! அடியும் இல்ல! என்று மணியைப் பார்த்து நக்கலாகச் சிரித்தேன்.

என்னல சொல்லுற! எங்கம்மாவை விட, உங்கம்மாதான் அதிகமா அடியும் திட்டும் தருவாங்க!

ஆமால்ல, ஆனா இன்னைக்கு ஒண்ணும் என்னைச் சொல்லல. என்னைக் குளிச்சுட்டுச் சீக்கிரமா வீட்டுக்கு வரச்சொல்லியிருக்காங்க!!

லீவு நாளுமாய் நாம‌ குளத்துக்குக் குளிக்கப்போனால், என்னைக்குல சீக்கிரமாய் வீட்டுக்கு வந்திருக்கோம்! என்று என்னைப்பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.

நானும், மணியும் ஒண்ணாதான் பள்ளிக்கூடத்துல நான்காம் வகுப்புப் படிக்கிறோம். எங்க ரெண்டுப்பேரையும் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா கூட்டிட்டுப் போறது, வேணி அக்கா தான். இருவரையும் ஆளுக்கு ஒரு பக்கமா நிறுத்தி, தன்னுடைய தோளில் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு, இரண்டு கைகளால் எங்கள் இருவரின் கைகளையும் இறுக்கமாக பற்றித் தர தர‌வென்று இழுத்துக்கொண்டு செல்வார்கள். எங்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் அரைப் பர்லாங் தூரம் இருக்கும், வழியெங்கும் இருக்கும் தோப்புகள் அனைத்தும் எங்களுக்கு அத்துப்படி. எவருடைய தோப்பில் என்ன மரம் இருக்கும், அதில் எப்போது என்ன காய்கள், பழங்கள் கிடைக்குமென்ற‌ தகவல்களும் கைகளுக்குள் அடக்கம். போகும் வழியில் வேலியில் இருக்கும் ஓணானையும் விடமாட்டோம், அடிப்பதற்குக் கிளம்பிவிடுவோம். அணில் என்றால் பழம் கொடுக்கிறோம் என்ற பேர்வ‌ழியில் அவைகளையும் விரட்டுவோம்.

எங்க‌ள் கைகளின் பிடியை அக்கா கொஞ்சம் தளர்த்தினாலும், கண்தட்டி விழிப்பதற்குள் காணாமல் போயிருப்போம். பலமுறை அக்காவுக்கு இந்த அனுபவ‌முண்டு. அக்காவை தலைமையாசிரியருக்கு நன்றாகத் தெரியும், காரணம் அக்கா தான் அவள் படிக்கும் ஒன்பதாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குபவள். அதனால் எங்கள் குடும்பத்தைப் பற்றி அவருக்குத் தெரியும். அதனால் எங்களுடைய‌ தவறுக்கும் சேர்த்து அக்கா தான் திட்டு வாங்கவேண்டும். அதற்குப் பயந்தே எங்களை இழுத்துக்கொண்டு மூன்றாம் மணி அடிப்பதற்குள் பள்ளிக்குள் நுழைந்துவிடுவாள்.

மாட்டுத்தொழுவத்திலிருந்து அள்ளிய சாணத்தைக் குட்டையில் எடுத்து, எனது வீட்டுவாயிலில் வைத்துவிட்டு, நானும் மணியும் குளத்தை நோக்கி ஓடினோம்.

குளத்தில் போட்ட ஆட்டத்தில் நேரம் போனது, துளியும் தெரியவில்லை. சீக்கிரம் குளிச்சுட்டு வாடானு! அம்மா சொல்லியது ஞாபகம் வரவே, மணியை வீட்டிற்குப் போகலாம் என்று அவசரப்படுத்தினேன். அவன் என்னைச் சேட்டைப்பண்ணவே இல்லை. அதற்குமேல் இருந்தால் அம்மா வந்தாலும், வந்துவிடுவார்கள் என்று நான் கரைக்கு ஓடினேன். எனது பின்னால் மணியும் ஓடிவந்தான். இவரும் ஈரத்தலையுடன் டவுசரை மட்டும், மாட்டிவிட்டு வீட்டிற்கு ஓடினோம்.

ஓட்டமும், நடையுமாக வீட்டிற்கு வரும்போது, அப்பாவின் தலை வீட்டில் தெரிந்தது. அப்பா, இன்றைக்கு கேரளாவிலிருந்து வீட்டிற்கு வருவதாக, அம்மா என்னிடம் சொல்லவில்லை. அப்பா கேரளாவில் கொத்தனார் வேலைச்செய்கிறார்கள், மாதத்திற்கு ஒருமுறை தான் ஊருக்கு வருவார். இடையில், உறவினர்கள் திருமணம் மற்றும் கோவில்கொடைகளுக்கு மட்டும்தான் அவரை வீட்டில் பார்க்கமுடியும். வரும்போது எனக்கு மட்டும் தனியாக ஒருபொதி காரசேவும், ஜிலேபியும் கொண்டுதருவார். அதில் பங்குப்போட வரும் வேணி அக்காவுக்கும் எனக்கும் சண்டைதான் நடக்கும். மவனே! மௌனதாஸ் அக்காவுக்கும் கொஞ்சம் கொடு! என்று அப்பா மட்டும்தான் என்னுடைய பெயரை முழுமையாக உச்சரிப்பார். வேறுஎவரும் என்னுடைய பெயரை முழுமையாக உச்சரிக்க மாட்டார்கள். வருகைப்பதிவேட்டில் வாசிக்கும் போது மட்டும், டீச்சரும் மௌனதாஸ் என்று அழைப்பார்கள். இல்லாத நேரங்களில் டீச்சரும் மோனாசு என்றுதான் அழைப்பார்கள். எனக்கு அப்பா தான் "மௌனதாஸ்" என்று பெயர் வைத்ததாகவும், அந்தப்பெயரின் பகுதியில் நம் குலசாமியின் பெயரும் வருகிறது என்று அம்மா அடிக்கடிச்சொல்வார்கள்.

நான் குளித்து வருவதற்குள், அம்மா வீட்டின் முற்றங்களில் சாணம் தெளித்து வைத்திருந்தார். அப்பா என்னைப் பார்த்தவுடன் சிரித்துக்கொண்டே மௌனதாஸு! சட்டையைப் போட்டுட்டு வந்து செல்லையன் கடையில போய், அம்மா துண்டுல எழுதி வைச்சுருக்க எல்லாச் சாதனங்களையும் வாங்கிட்டு வந்துரு, கொஞ்சம் துருசமா வருனும் சரியா! என்று தலையை வருடினார். அடுக்களையில் அம்மாவின் குரல் இல்லாமல் பக்கத்துவீட்டு பெரியம்மா மற்றும் காமேஷ் அத்தையின் குரலும் கேட்டது. எவ்வளவு அரிசி ஊற வைக்கனும் மையினி? என்று அம்மாவின் கேள்விக்குக் காமேஷ் அத்தை,  நாலு உளக்குப் போட்டு ஊற‌வையி! பச்சரிசி ஊறதுக்குள்ள நான் வீட்டுக்குப்போயிக் கஞ்சு வடிச்சு வச்சிட்டு வந்திருறேன் என்று அத்தைக்கிளம்பினார்.

ச‌ட்டையைத் தேடுவதற்குத் தாழ்வாரத்துக்குள் நுழைந்தேன். அங்கு வேணி அக்கா காலையிலிருந்த‌ அதேமூலையில் இப்போதும் உக்கார்ந்திருந்தாள். தூக்கம் கலையாமல் இருப்பது போலவே அக்காவின் முகம் சோர்ந்து இருந்தது. தலைமுடியும் எப்போதும் போல் வாரிக் கட்டப்படவில்லை. லீவு நாளாக இருந்தால் அக்காவை இப்படி ஒருநாளும் பார்க்கமுடியாது. காலையிலேயே சாணம் எடுத்து வீடு முழுவதும் மொழுகுவதற்குத் தொடங்கிவிடுவாள். அதைமுடித்த பின்பு வீட்டின் ஓரத்தில் ஆசையாக வளர்க்கும் கனகாம்பரம், வந்தி, ஆலரசு செடிகளின் பக்கம்தான் பொழுதும் நிற்பாள். தாழ்வாரத்தின் மறுமூலையில் இருந்த பெட்டியில் இருந்த என்னுடையச் சட்டையை எடுத்துக்கொண்டிருக்கும் போது, அம்மா வந்து விட்டார்கள், லேய் மேனாசு! இங்க என்ன ப‌ண்ணிட்டு இருக்க, இன்னா! இந்தத்துண்டுல எழுதியிருக்கிறத‌ எல்லாம் சீக்கிரமா, போய் வாங்கிட்டு வா! மறக்காம அப்பாகிட்ட பணம் வாங்கிக்க! என்று என்னை விரட்டினார்கள். அம்மாவின் இடதுகையில் இருந்ததுண்டை என்னிடம் நீட்டினார்கள், வலதுக்கையில் ஒரு முட்டை இருந்தது. நேராக அக்காவிடம் சென்று அந்த முட்டையை உடைத்துக் குடிக்கக்கொடுத்தார்கள். அக்காவும் அதைக் குமட்டலாகக் குடித்து முடித்தார்.

வீட்டிற்கு வெளியில் அப்பாவும், பெரியப்பாவும் பழுத்த பாளையங்கொட்டை வாழைக்குலையுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கன‌ எவன்கிட்டேயும் பழுத்தகுலை இல்ல  பாத்துக்க! மேற்பாலத்தில் கடை போட்டுருக்கான் இல்ல, சுந்தரம்! அவன் கடையிலிருந்து தான் வாங்கினேன், காசு அப்புறம் தாறேன்னு சொன்னேன், எவ்வளவு கேக்குறானுத் தெரியல! என்று அப்பாவிடம் பெரியப்பாச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பா, சாதனம் வாங்கக் காசு கொடுங்க? என்று நான் அப்பாவிடம் கையை நீட்டினேன். அப்பாவும் உள் பாக்கெட்டிலிருந்து, எடுத்து ஒரு நூறுரூபாயை என்னிடம் கொடுத்தார்.

நான் கடைக்குச் செல்லும் வழியில் மணியும் வந்து என்னுடன் சேர்ந்துகொண்டான். நான் வெளியில் எங்குச்சென்றாலும் இவனுக்கு மூக்கில் வேர்த்துவிடும். எனக்கு வீட்டில் நடப்பது எதுவும் புரியவில்லை. ஏதாவது விசேசங்களுக்கு மட்டும் வரும் அப்பா இன்னைக்கு வீட்டிற்கு வந்திருக்கிறார். அக்காவும் மூலையில் உக்காந்திருப்பது வித்தியாசமாக இருக்கு. அவுச்ச‌ முட்டையையே கவுச்சுவாடை அடிக்குது, நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் அக்காவிற்கு இன்னைக்கு அம்மா பச்சை முட்டைக்கொடுக்கிறார்கள். வீட்ல அரிசி எல்லாம் ஊற வச்சியிருக்காங்க! வாழைக்குலையும் பெரியப்பா வாங்கி வந்திருக்காங்க! அம்மா வேறக் காலையிலேயே வீட்டிற்கு இனி ஒவ்வொருத்தரா வரத்தொடங்கிருவாங்க! என்று சொன்னாங்க, இப்படி யோசித்தவாறு விழிப்பிதுங்கி நடக்கும் போதே, லேய் மேனாசு! வேணி அக்கா சடங்காய்ட்டாங்களாம் இல்ல! என்று மணி என்னுடைய கையைப்பிடித்தான்.

நான் பலவற்றைப்போட்டு எனக்குள் குழப்பியதில், மணி என்னிடம் சொல்லியது சட்டென்று புரியவில்லை. என்னலே, சொல்லுற! என்று மணியிடம் திரும்பவும் கேட்டேன். ஆமா மோனாசு, உங்க அம்மா உன்னிடம் சொல்லலியா?. என்னுடைய அம்மா தான் என்னிடம் சொன்னாங்க! வேணி அக்கா சடங்காய்ட்டாங்களாம், அதனால உங்க வீட்ல‌ மாவு இடிக்கிற சோலி இருக்குனு என்னிடம் சொல்லி, உங்க வீட்டுக்குத் தான் வந்தாங்க! என்று திரும்பவும் ஒப்பிவித்தான். மணி, சொல்லியதைக் கேட்டப்பின்புதான் எனக்கும் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் புரிய ஆரம்பித்தது. இரண்டுமாதங்களுக்கு முன்னாடி, பக்கத்துத் தெருவிலிருக்கும் என்னோட பள்ளிக்கூட்டுக்காரன் மகேஷ், அவனோட அக்காவும் சடங்கான போது, தினமும் எங்களுக்காகப் பள்ளிக்கு மறைச்சு வச்சுப் பச்சைமாவும், வாழைப்பழமும் கொண்டுவந்து கொடுத்தது ஞாபகம் வந்தது. எனது வீட்டிலும் இனி பச்சைமாவும், பழமும் தினமும் கிடைக்கும் என்று மணியிடம் சொல்லிக்கண்ணடித்தேன். லேய்! மோனாசு, எனக்கு மட்டும் வெல்லம் போட்ட‌ப் பச்சைமாவைத் தரும்போது, ஒரு குத்தா அள்ளித்தரணும் இன்னா! அப்பதான் நான் பாக்கெட்டில் நிரப்பி வைக்கமுடியும் என்று மணி இப்போதே சொல்லிவைத்தான்.

அம்மா எழுதிக்கொடுத்த துண்டை எடுத்துப் பார்த்தேன், அதில் வெல்லம், சுக்கு, நல்லெண்ணெய், நாட்டுக்கோழிமுட்டை என்று எழுதியிருந்தது. மணியும் நானும் கடைக்காரர் கொடுத்தபொருட்களை ஆளுக்கு ஒன்றாகக் கையில் வாங்கிக்கொண்டு, துண்டில் இல்லாமல் வாங்கிய‌ இரண்டு கட‌லை மிட்டாயையும் ஆளுக்கு ஒன்றாக, வாயில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு நடந்தோம். இந்தமாதிரி நேரத்தில் சாதனம் வாங்கிக்கொண்டு கொடுக்கும் மீதக்காசை அப்பா எண்ண மாட்டார்கள், நேராகப் பாக்கெட்டில் போட்டுவிடுவார்கள். அதனால் ஆளுக்கொரு 50பைசா, கடலை மிட்டாயை வாங்கிக்கொண்டோம்.

நாங்கள் இருவரும் வீட்டிற்கு வரும்போது, டவுனிலிருந்து அத்தையும் வந்திருந்தார்கள். கூடவே அக்காக்களும் வந்திருந்தார்கள். பக்கத்துத்தெருவில் இருக்கும் சொந்தக்காரங்களும் வீட்டிற்கு வந்துபோனார்கள். வருபவர்கள் எல்லாம் கையில் ஒருபாட்டிலும், பொதியும் கொண்டு வந்தார்கள். அம்மா, அவர்கள் கொண்டுவரும் பாட்டிலில் உள்ளதை எங்கள் வீட்டு எண்ணெய் ஜாடியில் ஊற்றிவிட்டுப் பாட்டிலைத் திரும்பக்கொடுத்தார்கள், பொதியையும் வாங்கி மெதுவாக வைத்தார்கள். நான் நைசாகச்சென்று பொதியில் என்ன இருக்குது என்பதைப் பார்க்கலாமென்று, அதை நோண்டினேன். அம்மா, மேனாசு! அதிலலெல்லாம் முட்டை இருக்கு, ஒன்னும் செய்யாதே! உடைஞ்சிரும்! என்றார்.

அடுக்களையில் காமேஷ் அத்தை, சுளவில்(முறம்) இருந்த பச்சரிசிமாவுடன், நான் வாங்கிவந்த வெல்லத்தைச் சீவிப்போட்டு ஒன்றாகக்கையால் கலந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கத்திலேயே மணி, சம்பளம் கால்போட்டு உக்கார்ந்து ஒரு வெல்லத்துண்டைக் கடித்துக்கொண்டிருந்தான். பெரியம்மா, சுக்கை உரலில் போட்டு இடித்துக்கொண்டிருந்தார்கள். டவுன்அத்தை, அக்காவிடம் போய், பாட்டிலில் கொண்டுவந்த எண்ணெயைக் குடிக்கக்கொடுத்தார், அதையே அக்கா குமட்டலாகத்தான் குடித்தார். சிறிதுநேரத்தில் கையிலிருந்த‌ ஒரு முட்டையும் உடைத்துக்கொடுத்தார்.

சிறிதுநேரத்தில் சலவைச்செய்யும் வெள்ளையம்மா, கையில் ஒரு பெரியதுணியுடன் வந்துநின்று, வேணிஅம்மா,தண்ணி எடுத்துட்டு வரச்சொல்லுங்க! நல்லநேரம் போறதுக்குள்ள தலைக்குத்தண்ணி ஊத்திடலாம்! என்று அம்மாவிடம் சொன்னார்கள். உடனே டவுனில் இருந்து வந்த, அக்காக்கள் எல்லாம் பெரியம்மா வீட்டிலிருக்கும் கிணற்றிற்குச்சென்று மூன்றுகுடங்களில் தண்ணீர் நிரப்பிவந்து, வீட்டுக் கொல்லையில் வைத்தார்கள். தாழ்வாரத்தின் மூலையிலிருந்த‌ அக்காவை அம்மாவும், அத்தையும் கைப்பிடித்து வெளியில் கூட்டிவந்து, தண்ணிர் வைத்த கொல்லையில் ஒருமர நாற்காலிப்போட்டு உக்காரவைத்தார்கள். வெள்ளையம்மா, தான் கொண்டுவந்த துணியால் அக்காவைச்சுற்றி வேலிப்போட்டு நான்கு மூலையிலும் டவுன் அக்காக்களைப் பிடிக்கவைத்தார். துணிவேலியின் அடியில் தரைவழியாக வழிந்துவந்த மஞ்சம் கலந்த நீர், அக்கா நட்டுவைத்து மொட்டுகள் விட்ட, கனகாம்பரம் மற்றும் ஆலரசு செடிகளின் வேர்களை நனைத்துக்கொண்டிருந்தது.

அன்றுமுழுவதும் வேணி அக்காவை, புடைச்சூழ ஒரு கூட்டம் இருந்தது. அக்காவிற்குத் தாவணிக்கட்டி அலங்காரம் ப‌ண்ணியிருந்தார்கள். அக்காவை, பார்க்க‌ வருபவர்களுக்கு எல்லாம் பழமும் பச்சரிசிமாவும் அம்மா, கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நானும் மணியிம் அவ்வப்போது வந்து எங்களுக்குத்தேவையான பழங்களையும், மாவையும் அள்ளிக்கொண்டோம்.

அன்றுமுதல் அக்காவை என்னுடன் சேர்ந்துப்படுக்க விடுவது இல்லை. தனியாகப்படுக்க வைத்தார்கள். பகலிலும் பெரியாம்மா அக்காவின் துணைக்கு வந்திருப்பார்கள். அக்கா சட‌ங்கான மூன்று, ஏழு என்று எல்லா நாளும் முதல்நாளில் செய்ததுபோல் உறவினர்கள் எல்லாம் வந்து அக்காவைக் குளிக்க வைத்து அலங்காரம் செய்தார்கள். எனக்கும் மணிக்கும் சாப்பாடிற்குக் குறைவில்லை. பச்சரிசிமாவு மற்றும் பழம் என்றில்லாமல், டவுனில் இருந்துவரும் அத்தை வாங்கிவந்த பலகாரங்க‌ளும் வீட்டில் அடைந்திருந்தது. அக்கா பள்ளிக்கு வராததால், இருவரும் தினமும் தோப்புகளைச் சுற்றிவிட்டு தாமதமாகப் பள்ளிக்குச் சென்று அடிவாங்குவதும் நடந்தது. சிலநாட்கள் அக்காவின் சடங்கு என்றுசொல்லி, பள்ளிக்கு லீவும் போட்டுக்கொண்டோம்.

உனக்கு இருக்கிறது ஒருபொண்ணு, சடங்கை எடுத்துவிட்டுரு! அதுல என்ன, பெரிசா செலவாகிடபோகுது! என்று பெரியப்பா, அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆமா அண்ணே! நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பத்திரிக்கையெல்லாம் அடிக்க‌வேண்டாம், வாயாலே எல்லோரிடம் சொல்லி அழைச்சுடலாம், பதினைஞ்சுக்குச் சாப்பாட்டை வைச்சுக்கலாம் என்று அப்பா சொன்னார்கள். ச‌ரிடே! அப்படியே செய்திரு! என்றுசொல்லி பெரியப்பா கிளம்பினார்கள். எனக்கும் மணிக்கும் சந்தோசம் தாங்கல! ஏன்னா, சடங்கு எடுத்தா எப்படியும் வீட்ல டெக்கு எடுத்துப் ப‌டம் போடுவாங்க! நமக்குப் பிடிச்ச அஞ்சுப் படத்தையும் போடச்சொல்லி முழுசாகப் பாத்திரலாம் என்று பேசிக்கொண்டோம்.

வேணி அக்கா சடங்காகி, பதினைஞ்சுக்கு வீட்டில் சப்பாடு நடந்துகொண்டிருந்தது. எனக்கும், மணிக்கும் பந்தியில் தண்ணீர் ஊற்றும் வேலைத் தரப்பட்டிருந்தது. இருவருக்கும் இருப்புக்கொள்ளவில்லை. எப்படியும் வீட்டில் பந்தி முடிந்ததும் டெக்கில் போடும்படத்தில் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தையும், ரஜினியின் ராஜா சின்ன ரோஜாவையும் பார்த்து விடவேண்டும் என்பதுதான். ச‌மையல் கட்டில் இருந்து அப்பா, மவனே மொனதாஸு! அக்கா ரூம்ல அப்பளக்கட்டு இருக்கு, போய் எடுத்து வா! என்று என்னை அனுப்பினார். வேணி அக்கா இருக்கும் தாழ்வாரம் ரூம்க்குப் போகும்போது அக்காவிடம் எவருமில்லை. தாவணிப்போட்டு அலங்காரம் செய்து தனியாக நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் அப்பளக்கட்டை எடுத்துக்கொண்டு அக்காவைப் பார்த்து, அக்கா!! அக்கா!! நீ அம்மாகிட்ட எப்போதும் அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்கனுமுனுச் சொல்லிட்டே இருப்பியே! இன்னைக்கு நம்மவீட்ல டெக்குல அந்தப்படம் போடுகிறார்கள் என்றேன். அக்காவின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படவில்லை. மாறாகச் சோகம்தான் தென்பட்டது.

என்ன அக்கா! உடம்பு ஏதும் சரியில்லையா? என்று கேட்டேன், தாடையைப் பிடித்துக் கெஞ்சலுக்குப் பிறகு, மோனாசு, நான் இனி ஸ்கூலுக்கு வரமட்டேன் என்றாள், நான் ஏன்? என்று கேட்டேன். உன் கூட்டுக்காரன் மகேஷோட‌, அக்கா சடங்கான பிறகு ஸ்கூலுக்கு வந்தாளா? என்று கேட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதைச்சொல்லும் போதே அக்காவின் கண்கள் கலங்கியது. நீ அழாதே அக்கா! அப்படி எல்லாம் இருக்காது! என்று அப்பளக்கட்டுடன் ஓடினேன்.

அப்பா சமையல் அறையில் மாமாவுடன் நின்றிருந்தார். என்ன அத்தான்! பொண்ணைத் தொடர்ந்து ப‌டிக்கவைக்கப் போறியளா? இல்ல வீட்டுவேலைகளைப் பார்த்திட்டு இருக்கட்டும் என்று வீட்டிலேயே வைக்கப் போறியளா? என்று மாமா, அப்பாவைப் பார்த்துக்கேட்டார். அவ படிக்கிற வரைக்கும் படிக்கட்டும் மச்சான்! நாம ஏன் தடுக்கனும்? அந்தக்காலத்துல உங்க அக்காவை, நான் படிக்கும் போதே கல்யாணம் பண்ணிட்டேனு, இப்பவரைக்கும் சொல்லிட்டு இருக்கா, இந்தக்காலத்துல பெண்ணுங்க தான் நாட்டையே ஆளுறாங்க‌!!. நாம‌தான் இங்கன‌ இருக்குற ஸ்கூலுக்குக் கூடப் பொண்ணுங்களை அனுப்புவதற்குப் பயப்படுறோம். இப்பவரைக்கும் நல்லா, படிக்குறா! நாட்டை ஆளத்தான் படிக்க வைக்கலனாலும், ஒரு டீச்சராவது ஆக்கப்படிக்க வைக்கலாமே! என்று அப்பா நெகிழ்ந்தார்.
                       *************************

மேலே சொல்லியது நடந்து ஓர் இருபத்தைந்தாண்டுகள் ஆகியிருக்கலாம், எனக்கும் கல்யாணம் ஆகி மனைவி, குழந்தைகள் என்று சென்னைக்கு வந்துசெட்டில் ஆகிவிட்டேன். வேணி அக்காவும் அப்பாவின் ஆசைப்படிப் படித்து, டீச்சர் ஆகி ஊரிலுள்ள‌ அரசு நடுநிலைப் பள்ளியில் வேலைப்பார்க்கிறாள். அப்பா, வேணி அக்காவை ஊரில் சொந்தமாகத் தொழில் செய்யும் ஒருவருக்குத்தான் கல்யாணம் செய்துகொடுத்திருந்தார். வேணி அக்காவின் பொண்ணு, சடங்காகி விட்டாள் என்ற செய்தியை, ஒருமாதம் கழித்துத்தான், எங்களிடம் தெரியப்படுத்தினாள் என்பதற்காகத் தான் என்னுடைய மனைவி "ஒரு வார்த்தை முன்னமே சொல்லியிருக்கலாம்" என்று வியாக்கினம் பேசியது. இன்றையகாலத்தில் சடங்குகளையும், சம்பர‌தாயங்களையும் நாம் மறக்க அல்லது மாற்ற நினைக்குறோமோ! இல்லையோ! இந்த அவசர‌ உலகம், நம்மை மாற்ற அல்லது மறக்க வைக்கும்! இது காலத்தின் கட்டாயம்..
Related Posts with Thumbnails