Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Friday, July 8, 2016

இதற்குத் தான் இவ்வளவு பில்டப்பா!!

அப்போது நான் ஓமான் மஸ்கட்டில் உள்ள எனது அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்தேன். வார இறுதி நாட்களில் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடச் செல்லுவோம், நாங்கள் கிரிக்கெட் விளையாடும்  இடம் ஒரு பெரிய ஓடை, எப்போதாவது அந்தப் பாலைவனத்தில் மழையினால் பெரு வெள்ளம் வந்தால், இந்த ஓடையின் வழியாகத் தான் நீர் வழிந்தோடும். நான் அங்கிருந்த ஆறு மாதத்தில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை என்பது வேறு கதை. அந்த ஓடையில் கரடு முரடாக இருந்த இடங்களையும், புதர்களையும் கொஞ்சம் திருத்தி  எங்களுக்கு விளையாடுவதற்கு வசதியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தோம், வார இறுதி நாட்களில் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் அந்த ஓடையில் அனைவரும் வந்து நேர்ந்து விடுவோம். தமிழ் நண்பர்களே பதினைந்து பேருக்கு மேல் இருப்போம், இதில்லாமல் ஹைதிராபாத் நண்பர்கள் ஒரு இரண்டு, மூன்று பேர் வருவார்கள்.

எங்களுக்குள் இரண்டு அணியாகப் பிரித்து விளையாடுவோம். விளையாட்டு மிக ஆக்ரோஷமாக இருக்கும், காரணம் அலுவலகத்தில் ஒன்றாகப் பணி செய்யும் போது இருக்கும் அனைத்து ஈகோக்களுக்கும் தீனி போடுவதாக இந்த கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். அலுவலகம் என்று இருந்தால், இரண்டு மூன்று குழுக்கள் இருக்கும், எங்கள் மஸ்கட் அலுவலகத்திலும் அது போல் உண்டு, இந்தக் குழுக்களை மறைமுகமாக ஊக்குவிப்பவர்கள் என்று சில பெரிய தலைகள் இருப்பார்கள். இப்படியான பெரிய தலைகள் எதிர் எதிர் அணிகளில் இருந்தால் சொல்லவே வேண்டாம், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை விட மோசமாக இருக்கும். அனல் பறக்கும் போட்டியில் கேலி, கிண்டல்களுக்குப் பஞ்சம் இருக்காது, சில நேரங்களில் இந்தக் கிண்டல்களே மற்றவர்களைச் சீண்டுவதாக இருக்கும், அதன் விளைவு, பந்தைத் தூக்கி அடிப்பது, இல்லையென்றால் பேட்டை தரையிலோ ஸ்டம்பிலோ வீசுவது நடக்கும், எப்படி இருந்தாலும் எங்களுள் எவராவது ஒருத்தர் அந்தச் சூழ்நிலையை சமாளித்துத் தொடர்ந்து விளையாட வைத்து விடுவார்.

ஒரு நாள் அந்த ஓடையில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வழக்கத்திற்கு மாறாக எங்களுடைய ஜெனரல் மேனேஜர் வாக்கிங் செல்லுவதற்கு அந்தப் பக்கம் வரவே, அவரையும் களத்தில் இறக்கிவிட்டோம். தொடர்ந்து ஒரு சில வாரங்கள் எங்களுடன் அவரும் விளையாட ஆரம்பித்து விட்டார். கம்பெனியின் ஜிஎம் எங்களுடன் வந்து விளையாடுகிறார் என்றால் போதுமே, அப்படியே ஜிஎம் சாரிடம் பேசி கம்பெனியிலிருந்து ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டு, கிரிக்கெட் விளையாடுவதற்குத் தேவையான பெரிய கிட் ஒன்றை வாங்கிக் கொண்டோம். நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதோ டென்னிஸ் பால் வைத்து, அதற்கு கிட்னி பேடில் இருந்து கீப்பர் கிளவுஸ் வரைக்கும் வாங்கியாகிவிட்டது. ஒரு பேட் மற்றும் ஒரு செட் ஸ்டம்ப் வைத்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு, புதிதாக பேட் மற்றும் கிளவுஸ் என்று கிடைத்தவுடன் மனதில் ஒவ்வொருவரும் சச்சின் மற்றும் கபில் தேவ் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. அதற்குத் தூபம் போடுவது போல் நாம் ஒரு கிரிக்கெட் கிளப் டீமை கம்பெனி பெயரில்(ஸ்பான்சர் வேண்டும் அல்லவா, வேறு பெயரில் வைத்தால் யார் பணம் போடுவது?) உருவாக்க வேண்டும் என்று பேசப்பட்டது.

எங்கள் அணியில் கோயமுத்தூர் காரர் ஒருவர் உண்டு, திருமணம் ஆனவர், நாற்பது வயதிற்கு மேல் இருக்கும், கோவைத் தமிழில் மிகவும் மரியாதையாகப் பேசுவார், ஆனால் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பேசும் போதும் சரி, விளையாடும் போதும் சரி அதிக உணர்ச்சி வசப்பட்டு விடுவார், டிவியில் கிரிக்கெட் போட்டி பார்த்தாலும் அப்படி தான், இந்தப் பந்தை இப்படியா அடிப்பது? இவன் எல்லாம் நம்முடைய அணிக்குத் தண்டம், சிம்பிள் கேட்ச்! இதைக் கூட இவனால் பிடிக்க முடியவில்லை! எப்படி இவனை அணியில் சேர்த்தார்கள்? என்று டிவியில் நடக்கும் வர்ணனைக்கு இணையாக இவர் ஒரு வர்ணனை கொடுத்து கொண்டிருப்பார், அலுவலகத்தில் எங்களுக்கு பொதுவாக இருக்கும் மெஸ்ஸில் இருக்கும் டிவியில் இவர் கிரிக்கெட் போட்டி பார்க்கிறார் என்றால் ஒருவரும் அந்தப் பக்கம் போக மாட்டார்கள். அப்படியே புதியவர்கள் எவராவது போனால் காதில் ரத்தத்துடன் தான் கிரிக்கெட் பார்க்க முடியும். இவர் கல்லூரி படிக்கும் போது கல்லூரி கிரிக்கெட் அணியில் விளையாடியிருப்பார் போல! அவர் மட்டும் தான், எங்களுடன் கிரிக்கெட் விளையாட வரும் போது பக்காவாக கிளம்பி வருவார். டிராக் சூட், டி-சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷு வித் கேப் மற்றும் கூலிங் கிளாஸ் என்று அணிந்து வந்து கலக்குவார். நாங்கள் அந்த ஓடையில் விளையாடும் போது அவர் மட்டும் தனித்து தெரிவார்.

நாற்பது வயதிலும் ஒரு பத்து மீட்டர் ஓடி வந்து பவுலிங் போடுவார். அவர் வீசும் பந்து வேகத்திற்கு இவ்வளவு தூரம் ஓடி வர வேண்டுமா? என்ற கேள்வி சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கு வரும், ஆனால் அதை அவரிடம் கேட்டு காதில் ரத்தம் வர வைத்துக் கொள்வதற்கு எவரும் விரும்புவதில்லை. அதிகமாக கிரிக்கெட் மொழிகளில் தான் பேசுவார், ஒருமுறை இவர் பவுலிங் போடும் போது, முதல் பந்தை நண்பர் ஒருவர் சிக்ஸர் அடித்துவிட்டார், அதனால் அடுத்த பந்தை  எப்போதும் பவுலிங் போடும் வலது பக்கத்திற்கு மாறாக இடது பக்கத்தில் ஓடி வந்து போட நினைத்து அந்தப் பக்கம்  ரன்னிங் ஓடுவதற்கு நிற்கும் பேட்ஸ்மேன் நண்பரை மறுபக்கம் சென்று நிற்கச் சொல்லுவதற்கு "ஓவர் தி விக்கெட்! ஓவர் தி விக்கெட்!" என்று என்று கத்தி கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் நண்பரோ, நீங்க முதலில் பந்தை போடுங்க! அப்புறம் விக்கெட்ட்டா இல்லை சிக்ஸரா? என்று பார்க்கலாம் என்று நண்பர் நக்கலடித்து சிரித்தது கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு நண்பர்கள் உண்டு, ஒருவர் திருவாரூர் காரர் மற்றொருவர் திருநெல்வேலி. இரண்டு பேரும் எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது எந்த அணியில் இருந்தாலும் முதலில் பேட்டை எடுத்துக் கொண்டு களம் இறங்கி விடுவார்கள். அதில் திருவாரூர் காரர் கொஞ்சம் பல்க் ஆக இருப்பார், அவரால் அதிக நேரம் ஓட முடியாது, எனவே எதிர் பக்கத்தில் இறங்கும் பேட்ஸ்மேன் நண்பரிடம் சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார். ஓவரில் ஐந்து பந்துகளை மிஸ் செய்தாலும், ஒரு பந்தை எப்படியும் சிக்ஸருக்கோ, பவுண்டரிக்கோ விரட்டி விடுவார். நெல்லை நண்பர் பொறுமையாக ஆடுபவர், சில நேரம் கடைசி வரை அவுட் ஆகாமல் இருப்பார், அல்லது இடையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி அடுத்த பேட்ஸ்மேன் நண்பருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுப்பார்.

சேலம் நண்பர் ஒருவர், நன்றாக பவுலிங் செய்வார். அவருடைய ஒரு பந்தில் பவுண்டரியோ, சிக்ஸரோ போனால் நண்பர் பதட்டமாகி விடுவார். ஓடி வந்து வேகப்பந்து தான் வீசுவார், எதிரில் பேட்டிங் பண்ணுபவர், நண்பர் வீசும் பந்தை பவுண்டரிக்கு அடித்து விட்டால் போதும், மறு பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசுவார். அந்தப் பந்தையும் பேட்டிங் செய்யும் நண்பர் லாவகமாக எதிர் கொண்டால், அவ்வளவு தான், தன்னால் எவ்வளவு தூரம் ஓடி வந்து வீச முடியுமோ அந்த அளவிற்கு வீசுவார். இதனால் பந்து பவுண்ட்ஸ் ஆகவோ வைடாகாவோ போகும், அந்த ஒரு ஓவரை முடிப்பதற்குள் படாத பாடு பட்டு விடுவார்.

நெல்லை பரப்பாடி ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் ஊக்குவித்துக் கொண்டு இருப்பார். பீல்டிங் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு, மிட் ஆப்பில் தான் பெரும்பாலும் பீல்டிங் நிற்பார், பவுலிங் போடுபவனிடம் இப்படிப் போடு, அப்படிப் போடு என்று அடிக்கடி அட்வைஸ் பண்ணி கொண்டு இருப்பார், இவர் சொல்லுவதை கேட்டு பவுலிங் போட்டு, அந்தப் பந்தை பேட்ஸ்மேன் அடித்தாலும் "சூப்பர் பவுலிங்!" என்று கை தட்டுவார். மற்றவர்கள் அனைவரும் பவுலிங் போடுபவனை முறைப்பார்கள். விளையாடுவது ஓடையில், அதில் ஜான்டி ரோட்ஸ் அளவிற்கு பில்டப் கொடுத்துப் பாய்ந்து பாய்ந்து பந்தை தடுப்பார். இவர் உயிரைக் கொடுத்து பீல்டிங் பண்ணுவது, நமக்குப் பயமாக இருக்கும். தினமும் உடலில் ஒரு காயமாவது வாங்காமல் விளையாட்டை முடிக்க மாட்டார். பீல்டிங் பண்ணுவதில் காயம் வாங்க விட்டாலும் பேட்டிங் பண்ணும் போது ரன்னிங்கில் விழுந்தாவது காயத்தை வாங்கி விடுவார்.

இவர்கள் மட்டுமல்லாமல், ஊர் வாரியாக குழுவாக இயங்கும் சின்ன சின்ன கூட்டமும் எங்களுக்குள் உண்டு, ஆந்திரா முழுவதும் உள்ள‌ தெலுங்கு நண்பர்கள், நாகர்கோவில் நண்பர்கள் அதில் இரண்டு பேர் தான் உண்டு அதில் ஒன்று நான், சென்னை நண்பர்கள் மற்றும் கோவில்பட்டி நண்பர்கள். இதில் கோவில்பட்டி நண்பர்கள் தான் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள், அதுவும் ஒரே காலேஜில் படித்தவர்கள், அவர்களின் ஆதிக்கம் தான் கிரிக்கெட் விளையாட்டில் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஊர் சார்ந்து குழுவாக இருப்பவர்களின் பாசம் விளையாடுவதற்கு அணிகள் பிரிக்கும் போது வெளிப்படும், ஒரே ஊர்க் காரர்களாக ஒரு அணியில் திரள்வார்கள். இதில் கிரிக்கெட் விளையாடத் தெரிந்தவர்கள், விளையாடத் தெரியாதவர்கள் மற்றும் விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் என்று அனைவரும் அடங்குவார்கள்.

கம்பெனி பெயரில் கிரிக்கெட் கிளப் ஆரம்பிக்கலாம் என்று பேசியது தான் தாமதம், மறுநாளே நண்பர் ஒருவர் ஒரு டோர்னமென்ட்க்கான அட்டவணையுடன் வந்து நாம் இதில் கலந்து கொள்ளலாம் என்று அனைவரிடமும் பேசினார். கொண்டு வந்த நண்பரோ, நாங்கள் தினமும் விளையாடும் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்க வருபவர். அவருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது, ஆனால் டிவியில் நடக்கும் இந்திய போட்டிகள் மட்டுமல்லாமல் பிற அணிகள் விளையாடும் போட்டியையும் தவற‌ விட மாட்டார். ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களின் ஸ்டிரைக் ரேட்டிலிருந்து, அவர்களின் தரவரிசை மற்றும் சாதனைகள் வரை புள்ளி விபரங்களைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார். எந்த அணிகளின் போட்டிகள் நடந்தாலும், இன்றைக்கு இந்த அணி தான் வெற்றி பெறும் என்று போட்டிக்கு முன்பே கணித்து சொல்லி விடுவார், பெரும்பாலும் அவருடைய கணிப்பு தவறுவது இல்லை. உலக கிரிக்கெட் வீரர்களின் திறமைகளையும், அணிகளின் திறமைகளையும் புள்ளி விபரங்கள் கொண்டே கணிக்கும் நண்பரால், ஓடையில் விளையாடும் நண்பர்களின் திறமைகளை கணிக்க‌ முடியவில்லை.

ஜெனரல் மேனேஜர் விளையாட வந்த நேரம் மற்றும் கம்பெனியிலிருந்து புதிதாக வாங்கிக் கொடுத்த‌ புதிய கிரிக்கெட் கிட்டுகளை உபயோகப்படுத்திய நண்பர்களின் மனநிலை எல்லாம் சேர்ந்து ஒரு ஆர்வத்தில் டோர்னமென்டுக்கு பங்கேற்கலாம் என்று எல்லோரும் சேர்ந்து கோரஸாக தலையை ஆட்டினார்கள். ஜிஎம் சாரும் டோர்னமென்டுக்கு ஆகும் செலவை கம்பெனியிலிருந்து வாங்கித் தர பார்க்கிறேன் என்று சொல்லியது தான் தாமதம், போட்டியில் விளையாடுவதற்கு தங்களை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி திட்டம் தீட்டுவதற்கு பதிலாக என்னென்ன வாங்க வேண்டும் என்ற திட்டம் தான் பெரிதாக பரிசீலிக்கப் பட்டது. முதலில் சொல்ல பட்டது கம்பெனி பெயர் பொறித்த டி சர்ட், அவ்வளவு தான் நம்முடைய‌ கோயமுத்துர் நண்பர் அதற்குப் பொறுப்பேற்று கொண்டார். யார் யாருக்கு என்னென்ன சைஸ் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்து, டி சர்ட்டில் பின்னால் மற்றும் முன்னால் போடுவதற்கு தேவையான கம்பெனி பெயர் டிசைன், லோகோ டிசைன், பார்டர் டிசைன் மற்றும் வண்ணம் என்று ஒரு மாத காலம் அதற்காக‌ பெரிய ப்ரொஜெக்டே அவர் செய்து முடித்திருந்தார்.

டோர்னமென்ட் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே பயிற்சி என்ற பெயரில் அலுவலகம் முடிந்தவுடன் ஓடைக்குக் கிளம்பி விடுவோம். ஜிஎம் சார் சில நாட்கள் வருவார், சில நாட்கள் வர மாட்டார், ஆனால் தினமும் மாலையில் அவரை அழைப்பதற்கு ஒரு நண்பர் அவரது அறை செல்வார், அது அவரை அக்கறையுடன் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பதற்கு இல்லை, அவர் கொடுக்கும் 10 ஓமன் ரியாலுக்காக. ஓடைக்கு விளையாடச்  செல்லும் முன்பே சூப்பர் மார்க்கெட்டிலிருந்து நான்கு பாக்கெட் லேஸ் சிப்ஸ் மற்றும் வேறு சில நொறுக்கு தீனிகளும், ரெட் புள், கோக், பெப்சி என்று அவரவர் தேவைக்கு வேண்டியவைகளை வாங்கி ஒரு பெரிய கூடையில் சுமந்து செல்வோம்.

கோவை நண்பர் ஆர்டர் கொடுத்திருந்த‌ டி சர்ட்டும் ரெடியாகி வந்த சமயத்தில், டோர்னமென்டுக்கான தேதியும் நெருங்கியிருந்தது. ஊரில் விடுமுறைக்குச் சென்று வந்த கோவில்பட்டி நண்பர் ஒருவர் கிரிக்கெட் பயிற்சிக்கு கலந்து கொள்ள வந்த முதல் நாளில், பேட்டிங் பிடிக்கும் போது நண்பர் ஒருவர் போட்ட பந்து அவரது வலது கையின் நடு விரலைப் பதம் பார்த்தது. நண்பரால் வலி தாங்க முடியவில்லை, அதனால் மருத்துவமனைக்குப் போக வேண்டியதாயிற்று. விரலில் ஒடிவு இருப்பதாகச் சொல்லி ஐந்து தையல்கள் போட்டு அந்த விரலுக்கு மட்டும் கம்பு வைத்துக் கட்டியிருந்தார்கள். அந்த‌ நண்பர் மற்றவர்களிடம் பேசும் போது அடிப்பட்ட‌ கையை முன்னால் கொண்டு வந்தால், நடு விரல் மட்டும் நிமிர்ந்து நின்று மற்றவை எல்லாம் மடங்கி இருக்கும், எதிரில் இருப்பவர் இவருடைய நடுவிரல் உயர்ந்து இருப்பதைப் பார்த்தால் அவரை அசிங்கமாகப் பழித்து காட்டுவது போல் இருக்கும், அதனால் பின்னால் கையைக் கட்டி கொண்டு தான் விளையாட்டை வேடிக்கை பார்க்க ஓடைக்கு வருவார். எங்களிடம் விளையாட்டாக, ஏங்க! நான் டூர்னமென்ட்ல விளையாடக் கூடாது என்று தான் பிளான் பண்ணி என்னுடைய விரலை உடைச்சிட்டிங்க! என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் டோர்னமென்ட் முடிந்த பிறகு அவர் விளையாடாததை நினைத்து சந்தோச பட்டிருப்பார்.

டோர்னமென்டில் மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் முறையில் விளையாடுவதாகச் சொன்னார்கள். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டிகள் நடைபெறும் என்றும் நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு எங்களுடைய‌ முதல் போட்டி நடைபெறும் நாள், எங்களுடைய ஜிஎம் சாருடன் கம்பெனியின் முக்கியமான பெரிய‌ புள்ளிகளும் எங்களுடைய போட்டியை காண வந்திருந்தார்கள். கம்பெனியின் எம்டி கூட மைதானத்திற்கு வருவதாக இருந்தது கடைசி நேரத்தில் வரவில்லை என்ற செய்தி வந்தது, அதுவரையிலும் சந்தோசம். போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பு ஜிஎம் சார் 50 ரியாலை எடுத்து நண்பர் ஒருவரிடம் கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்காகவே காத்திருந்த நண்பர்கள் அனைவரும் போகும் வழியில் உள்ள‌ சூப்பர் மார்க்கெட்டில் இருந்த‌ வகை வகையான நொறுக்கு தீனிகளையும், அது நாள் வரையிலும் டேஸ்ட் பண்ணிப் பார்க்காத பிராண்டு எனர்ஜி டிரிங்ஸ்களையும் வாங்கி, வண்டியை நிறைத்துக் கொண்டு மைதானத்திற்குக் கிளம்பினோம்.

நாங்கள் போட்டிக்கு சென்ற‌ மைதானம் டிவியில் காட்டுவது போல் சுற்றிலும் மின் விளக்குகள் போடப் பட்டு, தரையில் செயற்கை புற்கள் நடப்பட்டு அழகாக இருந்தது. எங்களில் ஒரு சிலரை தவிர‌ விளையாடும் எவரும் இதுவரையிலும் இப்படியான மைதானத்தில் விளையாடியது இல்லை. எங்களுடன் போட்டியில் மோதும் எதிர் அணியில் விளையாடும் நபர்களைத் தவிர வேறு எவரும் உடன் வந்தது போல் தெரியவில்லை, பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக வந்திருந்தார்கள். ஆளுக்கொரு வண்ணத்தில் டி சர்ட் அணிந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு அப்படியே எங்களுடைய அணியைப் பார்த்தேன், விளையாடும் நண்பர்களின் எண்ணிக்கையை விடப் போட்டியை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். விளையாடுபவர்கள், விளையாடாதவர்கள் என்று எல்லோரும் கம்பெனி லோகோ போட்டு ஒரே வண்ணத்தில் புதிதாக வாங்கிய டி சர்ட்டை அணிந்து கொண்டு டிராக் சூட், ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் கூலிங் கிளாஸ் என்று ஐபிஎல் ஆடும் அணிகளை விட மோசமாக நின்று ஒரு பக்கம் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பக்கம் போட்டியில் விளையாடாத நண்பர்கள் வண்டியிலிருந்த‌ நொறுக்கு தீனிகள் மற்றும் எனர்ஜி டிரிங்ஸ்களை மைதானத்தின் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்து அதில் தங்கள் திறமையைக் காட்டி கொண்டிருந்தார்கள்.

கோவை நண்பர் தான் எங்கள் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் டாஸில் ஜெயித்து பேட்டிங் கேட்டு வந்து எங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் நண்பர்களைத் தேடினார். ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்க வேண்டிய‌ நெல்லை மற்றும் திருவாரூர் நண்பர்கள் இருவரும் மைதானத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டு இருவரும் விதம் விதமாக‌ பேட்டை பிடித்துக் கொண்டு போட்டோ சூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து ஒரு வழியாக பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தோம். அதில் திருவாரூர் நண்பர் போன வேகத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் வந்தார். எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது சிக்ஸர் அடித்து, நாங்கள் பெரிய பேட்ஸ்மென் என்று பில்டப் கொடுக்கும் எந்த நண்பர்களாலும் அந்தப் போட்டியில் சோபிக்க முடியவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆனார்கள். ஒபனிங் இறங்கிய நெல்லை நண்பர் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து விளையாடினார். எட்டு ஓவர் முடிவில் நாற்பத்து மூன்று ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் இழந்திருந்தோம்.



சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு, எதிர் அணியினர் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்கள், எங்களின் வேகப் பந்து வீச்சாளர் கோவை நண்பர் தான் முதல் ஓவர் வீச வந்தார். அவர் வீசிய நான்கு பந்து சிக்ஸர் பறந்தது, இரண்டு பந்து பவுண்டரி எல்லையைத் தாண்டியது, கோபத்தில் உச்சத்தில் தொப்பியை தூக்கி வீசி விட்டு, அவருடைய வழுக்கைத் தலையை பிடித்துக் கொண்டு, அடுத்த ஓவர் வீச, சேலம் நண்பரிடம் பந்தை கொண்டு கொடுத்தார். சேலம் நண்பரும் வேகமாக ஓடி வந்து முதல் பந்தை வீசினார், பந்து எதிரில் நின்றவரின் பேட்டால் துரத்தி எல்லை கோட்டிற்கு வெளியில் அடிக்கப் பட்டது. சேலம் நண்பர் அடுத்த பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசினார். பேட்ஸ்மேன் அதற்க்காவே காத்திருந்தது போல வைடாக வெளியில் சென்ற பந்தை ஓங்கி அடித்தார், வெற்றிக்கான இலக்கை எதிர் அணி எட்டியது. எட்டு ஓவரில் நாங்கள் அடித்த ரன் இலக்கை அவர்கள் எட்டு பந்தில் அடித்திருந்தார்கள்.

ஜெனரல் மேனேஜர் தன்னுடைய‌ வண்டியில் ஏற்றி வந்த நண்பர்களை வண்டியில் ஏறச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பும் போது, ஒரு நண்பர் மட்டும் வேகமாக‌ வண்டியிலிருந்து இறங்கி ஓரத்தில் மீதமிருந்த நொறுக்கு தீனியை நோக்கி ஓடினார், அந்த நண்பரை ஜிஎம் சார் பார்த்த ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்ட நண்பர், எதையும் எடுக்காமல் திரும்பவும் வண்டியில் ஏறிக் கொண்டார்.

போட்டி நடத்தியவர்கள், எங்களிடம் நாளைக்கு விளையாட வேண்டிய ஒரு அணி, கடைசி நேரத்தில் வர முடியவில்லை என்று சொல்லியதால் அட்டவணையில் ஒரு அணி காலியாக இருக்கிறது, நீங்கள் வேண்டுமானால் திரும்பவும் நாளைக்கு மோதுகிறீர்களா? என்று கேட்டார்கள். எதற்கு தெளிய வைத்து அடிக்கவா? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். நடுவிரலில் அடிப்பட்ட நண்பர் எங்களின் முன்னால் நடந்து சென்றார். வெகு நேரமாகப் பின்னால் கட்டியிருந்த கை அவருக்கு வலித்திருக்க வேண்டும். இப்போது அவர் தன்னுடைய வலது கையை முன்னால் வைத்து இடது கையால் தாங்கிக் கொண்டு நடந்தார், கையின் மற்ற விரல்கள் மடங்கியிருக்க‌ ஒற்றை நடுவிரல் மட்டும் எங்களைப் பார்த்து பழிப்பது போல் இருந்தது.

.

Monday, May 30, 2016

இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!

இன்றுடன் ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது, கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் படி என்னை மாற்றியமைத்தது இந்த ஐபிஎல் போட்டிகள். அதுவரையிலும் இந்தியா மட்டுமே ஜெயிக்க வேண்டும், எதிர் அணி எவ்வளவு வலுவாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலையில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக உலகத்தில் உள்ள அத்தனை கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி ரசிகன். பள்ளியில் விடுமுறை விட்டுவிட்டால் போதும் பேட்டைத் தூக்கி கொண்டு கிரவுண்டுக்கு ஓடி விடுவேன். சோறு தண்ணி இல்லாமல் 10 ரூபாய் பெட் மேட்சுக்கு ஊர் ஊராகச் சுற்றிய வரலாறு கூட உண்டு.

இப்படி எல்லாம் எழுதியவுடன் பெரிய ஒரு ஆல் ரவுண்டரை இந்தியா டீம் இழந்திடுச்சோ! என்று நீங்கள், நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல. பேட்டிங் என்றால் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது தெரியும், பவுலிங் என்றால் பந்தை மாங்கா எறிவது போல் எறியாமல் கையை சுற்றிப் போட தெரியும். எனக்கு அந்த அளவிற்குத் தெரிந்திருப்பதே என்னுடைய டீமிற்கு பெரிய தகுதியாக இருந்தது என்றால் எங்களுடைய டீம் எவ்வளவு பெரிய டீம் ஆக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், வாரம்தோறும் ஊரில் பல இடங்களில் நடக்கும் பெட் மேட்சுகளில் எங்க டீம் போய் அடி வாங்காத இடமே கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருந்துவிட்டு, அடுத்த வாரமும் அடி வாங்கிய டீமிடம் போய் பெட் மேட்சு கேட்போம்.



நான் விளையாடும் போது எட்டு ரூபாய்க்கு ரப்பர் பந்து வாங்குவதே பெரிய கஷ்டம், அதற்கு வாரம் தோறும் தலைக்கு 50 காசு, 1 ரூபாய் என்று டீமில் வசூலிக்க வேண்டும், அந்த 50 காசுக்கும் 1 ரூபாய்க்கும் கடன் சொல்லுறவங்களே டீமில் அதிகம் பேர் இருப்பார்கள். இது இப்படி இருக்க வாரம்தோறும் 10 ரூபாய் பெட் மேட்சு போட்டுத் தோற்பதற்கு எவரிடமும் பணம் இருக்காது, அதற்கு என்று சில புரவலர்களை வைத்திருப்போம். நம்ம புரவலர்கள் எல்லாம் உள்ளுரில் வேலை செய்பவர்களாக தான் இருப்பார்கள். மாலையில் வேலை முடித்து கிரவுண்டுக்கு வரும் புரவலர்களிடம், அண்ண! இந்த வாரம் அந்த ஊர் டீமோட பெட் மேட்சு போடுறோம், தோத்த காசை வாங்குறோம் அண்ண! நீங்க, தான் ஒப்பனிங் பேட்டிங்! கெத்து காட்டுறோம்! மறந்திறாதீங்க! என்று உசுப்பேற்ற சில பேர், நம்ம டீம்ல ரெடியா இருப்பாங்க.

அண்ணா! நீங்களும் நானும் தான் ஒப்பனிங் பேட்டிங் இறங்குகிறோம்! நான் அடிக்கவே மாட்டேன் அண்ணேன், ஸ்டிரோக் மட்டும் வச்சு ஓடி வந்து உங்களுக்கு வாய்ப்பு தருவேன், நீங்க தான் பேட்டை சுத்தணும்! இன்னைக்கு நாம் யாருன்னு, அந்த டீமுக்கு காட்டுறோம்! அண்ண, ஆனா ஒண்ணு, நீங்க பேட்டை சுத்தும் போது மட்டும் பந்தை பார்த்து சுத்துங்க! ஏன்ன, நீங்கப் பேட்டை நல்லா தான் சுத்துறீங்க, என்ன ஒண்ணு பந்து தான் பேட்டில் பட மாட்டேங்குது, ஆனா ஒண்ணு அண்ணே! பந்து மட்டும் பேட்டில் பட்டால் போதும் கிரவுண்டுக்கு வெளிய தான்னேன் என்று தன்னை கலாய்க்கிறானா, பாராட்டுறானா! என்று தெரியாமல் பெட் மேட்சுக்கு வந்து நிற்கும் புரவலர் அண்ணனிடம் பெட் மேட்சுக்கான பணம் வாங்கி விட்டால் போதும், “ஒப்பனிங் பேட்டிங் நீங்க தான்!!” என்று சொன்னவன் அவர் கண்ணிலிருந்து காணாமல் போயிருப்பான்.

இப்ப மற்றொருவன் வந்து, அண்ணா! நாம தான் டாஸ் ஜெயித்திருக்கிறோம், பெட் மேட்சுக்கு காசு வேற, நீங்க தான் கொடுத்து இருக்கிறீர்கள், எதிரணியில் பவுலிங் நல்லா போடுறவன் பேரை சொல்லி, அவன் வேற முதல் ஓவரே பவுலிங் போட இருக்கிறான், உங்க விக்கெட் போச்சுன்னா டீம்ல எவனும் அப்புறம் ஒழுங்க ஆட மாட்டன், நீங்க தான் அண்ணே! மேட்சை நடத்தணும், வாண்ணே! வந்து அம்பயரா நில்லுன்னு! என்று அடிக்கிற வெயிலுல கொண்டு மண்டைக் காய விட்டுடுவானுங்க.

ஊர்ல விளையாடும் போது அம்பயர் எல்லாம் சும்மா தான், பேட்டிங் பண்ணுறவன் சொல்லுறது தான் அம்பயர் சொல்லுவார், பேட்டிங் பண்ணுறவன் வைடு என்று சொன்னால் அம்பயர் வைடு கொடுப்பார், விக்கெட் இல்லையென்றால் விக்கெட் இல்லை, எதிரணியில் உள்ளவன் சண்டை போடுவது மட்டும் அம்பயரிடம், பெட் மேட்சில் அம்பயராக நிற்பதற்கும், தெருவில் குழாயடியில் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

அம்பயரா நிற்கும் புரவலர் அண்ணன், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், நான் போகலாமா என்று டீம் நண்பர்களை பார்த்தால், அண்ணே! நல்ல டார்கெட் வைக்கணும், இப்ப ரன்ரேட் ரெம்ப கம்மிண்ணேன், நீங்க வேற பெட் மேட்சுக்கு பணம் கொடுத்து இருக்கீங்க! என்று அப்பப்ப பீதியை காட்டி, நாம ஜெயிக்கணும் அண்ணே! அவன் போகட்டும், இவன் போகட்டும், கடைசி ரெண்டு ஓவர் அண்ணேன், நீங்க தான் பேட்டை சுத்துறீங்க்க, நாலு சிக்சர் போகும், ரன்ரேட்டும் நல்லா இருக்கும், என்று வாயிலேயே வடை சுட்டுவிட்டு கடைசி வரைக்கும் பேட்டை கையில் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி ஊர்க் கதை பேசினால் அப்படியே நீண்டு விட்டுப் போகும், நான் சொல்ல வந்தது சொல்ல முடியாமல் போகும். பேச்சுலராக சவுதியில் இருக்கும் போது, என்னுடன் ப்ராஜெக்ட்க்கு வந்த மூன்று பேருடன் சேர்ந்து தங்கியிருந்த வில்லாவிற்குள் கிரிக்கெட் விளையாடுவோம். நான்கு பக்கமும் இரண்டு ஆள் உயரத்திற்குச் சுவர் இருக்கும், அதற்குள் தான் நாங்கள் நான்கு பேரும் வெளியில் தூக்கி அடித்தால் அவுட் என்று வைத்து விளையாடுவோம். நாங்கள் அப்போது தான் முதல் முறையாகச் சவுதிக்கு வந்திருந்தோம், வெளியில் யாரையும் அறிமுகம் கிடையாது, கொஞ்ச நாட்களில் எங்கள் ப்ராஜெக்ட்லில் ஒரு சிறிய பகுதியை அவுட்சோர்சிங் கொடுத்திருந்தோம், அந்த அவுட்சோர்சிங் கம்பெனிலிருந்து இரண்டு மலையாளி நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த மலையாளி நண்பர்களும் லீவு நாட்களில் எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுவார்கள், அவர்கள் இருவரும் சவுதி வந்து நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கும். அதனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள், நாங்கள் தங்கியிருக்கும் வில்லாவிற்கு பக்கத்தில் ஒரு காலியிடம் இருப்பதாகவும், அதில் கிரிக்கெட் விளையாடலாம், பலர் லீவு நாட்களில் விளையாடுவார்கள் என்றும் அந்த மலையாளி நண்பர்கள் சொன்னார்கள். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் எங்கள் நால்வரையும் வற்புறுத்தி அந்தக் காலியிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுடைய நண்பர்கள் சிலரும் இருந்தார்கள், பவுலிங் போடுவதற்கு ஒரு தளம் போல் போட்டு விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. நான்கு சுவருக்குள் விளையாடிய எங்களுக்கு அந்த இடத்தில் விளையாடியது ரெம்பவே ஜாலியாக இருந்தது.



மறு வாரமும் அந்த மலையாளி நண்பர்களுடன் விளையாட அந்தக் காலியிடத்திற்கு சென்றோம், ஆனால் அன்று அந்த இடத்தில் நமது பக்கத்து நாட்டு மக்கள் (பாகிஸ்தான்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். மலையாளி நண்பர்கள் அவர்களிடம் போய் பேசினார்கள், நாங்கள் இப்ப தான் விளையாட வந்தோம், விளையாடி முடிப்பதற்கு ரெம்ப நேரம் ஆகும், உங்களுக்கு விளையாடனும் என்றால் வாருங்கள்! ஒரு மேட்சு போடலாம் என்று அந்தப் பக்கத்து நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று மலையாளி நண்பர்கள் எங்களிடம் வந்து சொன்னார்கள். பின்னர் அவர்களே இவங்க! கூட விளையாட வேண்டாம் நாம அடுத்த வாரம் வந்து விளையாடலாம் என்று சொன்னார்கள், கிரகம்! என்னோட வாயிதான் சும்மா இருக்காம, ஊர்லயே பெரிய பெரிய டீம் கூடவே விளையாடி ஜெயித்துருக்கோம், இவங்க என்ன பெரிய பிசாத்து டீம், வாங்க ஒரு மேட்சு போடுவோம் என்று நண்பர்களை உசுப்பேற்றினேன்.

மலையாளி நண்பர்கள் என்னிடம் மட்டும், மலையாளத்தில் பேசுவார்கள், அவர்கள் என்னிடம், "வேண்டாம் ஸ்டீபன்! நமக்கு இவிட பந்து பொறுக்கும் சோலி மாட்டும் தான் கிட்டும்" என்று சொன்னார்கள், நான் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், என்னுடைய நண்பர்களிடம் வாங்க விளையாடுவோம் என்று சொல்லியது தான் தாமதம், பக்கத்து நாட்டு மக்கள் டாஸ் போட அழைத்தார்கள், போட்ட டாஸில் அவர்கள் தான் ஜெயித்தார்கள், பேட்டிங் என்று சொல்லி, இரண்டு பேர் பேட்டிங் இறங்கினார்கள். மலையாளி நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

நம்ம நண்பர் ஒருவர், கொஞ்சம் நல்லா பவுலிங் பண்ணுவார்கள், அவரை தான் ஓபனிங் பவுலிங் போட அழைத்தோம், பந்தைப் பக்கத்து நாட்டு மக்கள் தான் கொடுத்தார்கள், டென்னிஸ் பாலில் செல்லோடேப் சுற்றி இருந்தார்கள், அதை வைத்துத் தான் விளையாட வேண்டும் என்று சொன்னார்கள், நார்மலா நாம விளையாடும் டென்னிஸ் பால் கொஞ்சம் கனமாக இருக்கும், இது ரெம்ப லைட் வெயிட், சரி என்று சொல்லிக்கொண்டு பவுலிங் போட ரெடியானோம்.

நாங்கள் ஆறு பேரும் பில்டிங் நிற்க தயாரானோம், மிட்விக்கெட், மிட்ஆன், மிட்ஆப் என்று நின்று கொண்டிருந்த எங்களை, பேட்டிங் பண்ணுவதற்கு நின்று கொண்டிருந்த பக்கத்து நாட்டுக்காரர் கோ லாங்! கோ லாங்! என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை, இவன் ஏண்டா பில்டிங் செட் பண்ணுறான், நாம் தானே பீல்டிங் செட் பண்ணனும்! இவனுக்கு என்ன வந்தது? என்று அவன் சொல்வது புரியாது போலவே நிற்க, என்னிடம் வந்து கையை பிடித்து அழைத்துக்கொண்டு சிக்ஸ் லைனில் நிற்க வைத்தான். நான் அவனிடம் "எனக்குத் தெரியும் போடா, போய் ஒழுங்கா பேட்டிங் புடிடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு திரும்பவும் வந்து மிட்ஆப் ல் வந்து பீல்டிங் நின்றேன், அவன் திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று சொன்னான், எல்லாம் எனக்குத் தெரியும், பேட்டிங் புடிடா என்று சொல்லிக்கொண்டே நண்பரை பவுலிங் போடச் சைகை காட்டினேன்.

பேட்டிங் பண்ணுவதற்க்கு நின்ற பக்கத்து நாட்டுக்காரர் ஸ்டைல் ஒரு மார்க்கமாக இருந்தது, நம்ம ஊரில் டீம் பிரிக்கும் போது கடைசிவரை எவரும் எடுக்காமல் ஒருத்தனை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, கடைசியில் எடுத்து டபுள் சைட் பேட்டிங்டா நீ! என்று நாசூக்காகப் போடுவோம் தானே, அவன் பேட்டை எவ்வாறு பிடிப்பானோ! அதுபோல் தான் பக்கத்து நாட்டுக்கார ஓபனிங் பேட்ஸ்மேன் பேட்டைப் பிடித்திருந்தான். நம்ம நண்பர் ஓடி வந்து முதல் பாலை போட்டார், போட்டது தான் தெரியும், பந்து பேட்டில் பட்டு சிக்ஸ் லைன் தாண்டி விழுந்தது. பந்து விழுந்த திசை சரியாக என் கையை பிடித்துக் கொண்டு பக்கத்து நாட்டுக்காரர் கொண்டு விட்ட இடம். இப்போது அந்தப் பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மேன் சிரித்துக்கொண்டே "மேர போலேனா! போலேனா! என்றான்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும்! போடா டேய்! ஒரு பால் ஏதோ குருட்டாம் போக்கில் பேட்டில் பட்டு சிக்ஸ்ர் போயிட்ட நீ பெரிய ஆளா! ஓடிப்போய் மணலில் அழுந்தியிருந்த பந்தை எடுத்து வந்து, பவுலிங் போடும் நண்பரிடம் கொடுத்து, அடுத்த பாலை போடு நண்பா! என்று சொல்லிவிட்டு திரும்பவும், மிட்ஆப் பொசிசனில் பீல்டிங் வந்து நின்றேன், திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மென் கத்தினான், இப்போதும் எல்லாம் தெரியும் நீ மூடு! என்று சைகை செய்துவிட்டு பவுலிங் போட சொன்னேன்.

இந்தப் பந்தும் சிக்ஸர் பறந்தது, நண்பரும் எல்லா வியூகத்திலும் பந்தை போட்டார், பந்து மிட் ஏரியாவை தாண்டி தான் விழுந்தது, அடுத்த ஓவரே நான் பவுலிங் போட வந்தேன், நம்ம பாலும் நாலு திசைக்கும் பறந்தது, எவ்வளவு தான் ஓடி வந்து போட்டாலும் பந்து ஸ்லோவாக தான் போனது, லைட் வெயிட் பந்தில் ரெம்ப பாஸ்ட்டா வீச முடியவில்லை. அப்புறம் என்ன? மொத்தம் எட்டு ஓவர் கதறக் கதற ஓட விட்டார்கள், பந்தைப் பொறுக்குவதற்கு நாலு திசையிலும் ஓடியே களைத்திருந்தோம். இப்போது தான் மலையாளி நண்பர்கள் சொன்ன "சோலி" யும், பக்கத்து நாட்டுக்காரர் சொன்ன "கோ லாங்!" க்குமான அர்த்தம் புரிந்தது.

எட்டு ஓவரில் ஒரு ரன் அவுட் தவிர வேறு எந்த விக்கெட்டும் எடுக்க முடியவில்லை, ரிட்டய்ர்டு ஹெர்டு முறையில் ஒருவர் பின் ஒருவர் வந்து பந்தை துவம்சம் செய்தார்கள். இப்போது தான் அப்ரடியின் சிக்ஸ்ர் மகிமை புரிந்தது. எல்லோரும் நல்ல ஹேண்ட்பவர் வைத்திருக்கிறார்கள், அவர்கள் பேட்டில் பட்டால் பந்து தெறிக்கிறது. ஒருவழியாக பவுலிங் முடித்து பேட்டிங் பிடித்தால் இன்னும் கொடுமையாக இருந்தது, நாங்களும் அதே பந்தில் தான் பவுலிங் போட்டோம், ஆனால் அவர்கள் வீசும் பந்து சொயிங்! சொயிங்! என்று இடுப்புக்கு வந்தது. எப்படியோ மூணு ஓவர் வரை மொத்த விக்கெட்டும் சமாளித்ததே பெரிய விசயம்.

நான்காவது ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்துவிட்டு நொந்து நூடில்ஸ் ஆகி நண்பர்கள் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பும் போது, எங்களுடன் விளையாடிய‌ பக்கத்து நாட்டுக்காரர் ஒருவன் வந்து "அடுத்த வாரமும் இதே டைம் நாங்க இங்க தான் விளையாட வருவோம், கண்டிப்பா வாங்க!! என்று எங்களிடம் கைக்கொடுத்தார். எதற்கு வைச்சு செய்யவா? அதான் செஞ்சுட்டீங்களே! இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!


.

Monday, March 31, 2014

சுயத்தை இழப்பது_கிரிக்கெட்டா?.. வீரர்களா?..

பால்ய வயதில் உண்ணும் நேரத்திற்கு உண்ணாமலும், படிக்கும் நேரத்தில் படிக்காமலும் கிராமத்தில் ஊர் ஊராகக் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றியது இப்போதும் மன‌தில் நிழலாடுகிறது. சொல்லும் படியாகப் பெரிய அளவில் விளையாடவும் தெரியாது. ஆனாலும் அதன் மீதான மோகம் அளவிடமுடியாதது. எனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் தான் நாங்கள் விளையாடும் மைதானம் இருந்தது. அந்த மைதானம் அமைந்திருக்கும் இடம் எனது நண்பனுடையது. புல் வளர்ந்துக் காடாக இருந்த இடத்தைத் திருத்தி விளையாடுவது போல் உருவாக்கியது அந்த நண்பனும் நாங்களும் தான்.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடம் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடுவது அந்தக் கிரிக்கெட் மைதானத்திற்குத் தான். எங்கள் நண்பர்களுக்குள் இரண்டு அணியைப் பிரித்துத் தான் பெரும்பாலும் விளையாடுவோம். ஓர் அணியில் நான் இருந்தால் மற்றொரு அணியில் எனது அண்ணன் இருப்பான். இப்படியாகத் தான் இரண்டு அணியிலும் நண்பர்கள் அனைவரின் அண்ணன் தம்பிகள் என்று பிரிந்து நின்று விளையாடுவோம். சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கக் கூட‌ ஒருவரும் இருக்க மாட்டர்கள். ஆனாலும் வெற்றித் தோல்விக்கு அவ்வளவு போராட்டம், சண்டை நடக்கும். உடன் விளையாடுபவர்கள் நம்முடைய‌ அண்ணன் தம்பி மற்றும் நண்பர்கள் என்ற எண்ணம் சிறிதும் இருப்பது இல்லை. நான் இருக்கும் அணி வெற்றி பெற‌ வேண்டும் அது மட்டும் தான் மனதில் ஓடும்.

ஒரு வைய்டு பாலுக்கு அவ்வளவு கடுமையான வாக்குவாதம் நடக்கும். ரன் அவுட்டாக இருந்தால் சொல்லவே வேண்டாம், கட்டி பிடித்துச் சண்டை மட்டும் தான் நடக்காது, மற்ற எல்லாம் நடந்து விடும். இரண்டு அணியில் உள்ளவர்களும் சண்டையிட்டு கூச்சல் போடுவதை எங்களுடன் விளையாடாமல் வெளியில் இருந்து யாராவது பார்த்தால் இவர்கள் இனிமேல் ஒருவர் ஒருவரோடு பேசவே மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். மறுநாளே அணியை மாற்றி விளையாடும் போது நேற்று சண்டை போட்ட இருவரும் சேர்ந்து அடுத்த அணியில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு கூச்சல் இடுவார்கள். இவ்வாறு போடும் சண்டை போலி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அந்த நிமிடத்தில் "ந‌மது அணியின் வெற்றி" என்று ஒன்று மட்டுமே எல்லோர் மன‌தில் ஆழமாக பதிந்து இருக்கும்.

இப்படி சண்டையிட்டு விளையாடும் அணி வெற்றியடைந்து விட்டால் என்ன நடந்துவிடும், பெரிதாக ஒன்றும் இருக்காது. அந்த மைதானத்தை விட்டு வெளியில் வரும் வரை அல்லது வீட்டிற்கு போகும் வரையிலும் எதிர் அணையில் உள்ளவர்களைப் பார்த்து ஒரு குத்தல் பேச்சுடன் கூடிய‌ ஏளன புன்னகை, எங்களுக்குள் ஒரு வெற்றிக்கான புன்னகையின் பகிர்வு மற்றும் மனதிற்குள் ஏற்படும் ஒரு வகையான திருப்தி. இதை அந்த நிலையில் இருந்து அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்டிப்பாக ஒரு பெட் மேட்ச் இருக்கும். பெட் மேட்ச் விளையாட நாங்கள் பெரும்பாலும் பக்கத்து ஊருக்கு தான் போவோம். அதற்கும் காரணம் இருக்கு, சொந்த ஊரில் விளையாடி எதிர் அணியிடம் தோற்றால் அவ்வளவு கவுரவமாக இருக்காது என்பதால் எதிர் அணியின் ஊருக்கே சென்று விடுவது. இங்கும் எதிர் அணியில் விளையாடுபவர்கள் எங்களுடன் பள்ளியில் ஒன்றாக‌ படிப்பவர்களாகத் தான் இருப்பார்கள். பள்ளி நாட்களில் நட்பாக இருந்து ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டு ந‌டப்பவர்களாகத் தான் இருப்போம். ஆனால் இன்றைய‌ இந்தப் பெட் மேட்சில் ஒருவர் ஒருவரை எதிரியாகப் பார்த்து தான் விளையாடுவோம். அப்போது என்னுடைய அணி வெல்ல வேண்டும், நான் நன்றாகப் பவுலிங் மற்றும் பேட்டிங் பண்ண‌ வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருக்கும்.

பெட் மேட்சிக்கான தொகை பத்து அல்லது அதிகமாகப் போனால் இருபது ரூபாய் தான் இருக்கும். அதற்காக நடக்கும் போராட்டம் என்பது பெரிதாக இருக்கும். இப்படியான மேட்சிகளில் நிற்கும் அம்பயர்களின் பாடு பெரும் பாடாக இருக்கும். அவுட் கேட்டு நிற்கும் பவுலரை மட்டும் அல்லாமல் கூடச் சேர்ந்து கூச்சல் போடுபவர்களையும் சமாளிக்க வேண்டும். ஒரு ரன்னிற்கு உயிரே போய்விட்டதாக எண்ணி சண்டையிட்டுக் கொள்வோம். பவுலிங் பண்ணும் போது எதிர் அணியில் பேட்டிங் செய்பவன், பள்ளியில் ஒரே பெஞ்சில் அருகில் இருப்பவனாகத் தான் இருப்பான். ஆனாலும் கொலை வெறியில் பாலை பவுண்ஸ் பண்ணுவதும் நடக்கும். நாங்கள் விளையாடும் இடம் டீவியில் இப்போது கண்பிக்கும் புல் வளர்ந்த சமதளமான பரப்பாக இருக்காது. சரல் மண் கொட்டப்பட்டு மேடும் பள்ளமாக இருக்கும். ஆங்காங்கே வேலியில் கற்றாழை முள்ளும் நட்டு வைத்திருப்பார்கள். அந்த வேலிகள் தான் பவுண்டரி எல்லையாக இருக்கும். ஜான்டி ரோட்ஸ் பிடிக்கும் கேட்சுகளைப் போல‌ முயற்சி செய்து பார்க்கும் போது சரல் மண் முட்டியை சிராய்க்கும். பவுண்டரியை தடுக்க நினைக்கும் போது வேலியில் இருக்கும் கற்றாழை முள் காலை பதம் பார்க்கும்.

நாங்கள் ஊர் ஊராக இதுபோல் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றும் போது, வீட்டில் உள்ளவர்க‌ள் திட்டுவது மட்டுமல்லால் சில‌ சம‌யம் உதையும் தருவார்கள். அர்ச்சனை நடக்கும் போது, அப்பா கேட்கும் முதல் வார்த்தை வெற்றியா?.. தோல்வியா?.. என்று தான். வெற்றி என்றால் திட்டு குறைவாகக் கிடைக்கும், தோல்வி என்றால் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். இப்படித் தோற்பதற்காக ஊர் ஊராகப் போக வேண்டுமா?.. என்று கேவலமாக அம்மா திட்டுவார்கள். இதுவே வெற்றிக்காகப் போராடும் ஊக்கத்தைத் தரும்.

அன்றைக்கு நடக்கும் பெட் மேட்சில் ஜெயித்துவிட்டால் கையில் பட்ட சிராய்ப்புகளும், காலில் ஏறிய முள்ளின் வலியும் துளியும் இருக்காது. அன்று முழுவதும் விளையாட்டின் வெற்றி களிப்பே முகத்தில் இருக்கும். ஆனால் தோல்வி என்றால் வீட்டில் போனவுடன் காயத்திற்கான மருந்தை கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

இவ்வளவு ஏன்!! இப்போதும் கூட ஆபிசில் இருக்கும் நண்பர்கள் அணி பிரித்துக் கிரிக்கெட் ஆடினால் கூட எந்த அளவிற்குச் சண்டை போட முடியுமோ, அவ்வளவு தூரம் சண்டையிடுவதும் நடக்கும். நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து போகும் போது, ஜாலியாக‌ இரண்டு மணி நேரம் விளையாட போகிறோம், அதில் எதற்காக வாக்குவாதம் செய்ய வேண்டும், இன்றைக்கு எந்தச் சண்டையும், எவருடனும் போட கூடாது என்று மனதில் நினைத்து போனாலும் களத்தில் அவ்வாறு இருக்க முடிவதில்லை. பவுலிங் போடும் போது இல்லாத வைய்டை வைய்டு என்று சொன்னால் என்னையறியாமல் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதைத் தடுக்கமுடிவதில்லை. இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் விளையாட்டுக் களத்தில் "வெற்றி" என்ற ஒன்றை மட்டுமே மனம் விரும்பும் என்பதை விளக்குவதற்குத் தான்.

விளையாட்டு மைதானத்தில் களம் இறங்குபவர்களையும், போர்களத்தில் எதிரிகளை எதிர்த்து போராடுபவர்களையும் மட்டும் தான் "வீரன்" என்று அழைக்கிறோம். வீரன் என்பவன் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெற்று தருபவனாகவும் அல்லது அதைப் பெறுவதற்குத் தன்னலம் கருதாமல் போராடுபவனாக‌ மட்டுமே பார்க்க படுகிறான். நம்முடைய பண்டைய‌ இலக்கியங்களில் "வீரன்" என்பதற்குப் பல விளக்கங்களையும் பலரின் வீரச் செயல்களையும் பார்க்க முடியும். போரில் புறமுதுகுக் காட்டும் வீரன் எவ்வாறு அழைக்கப்பட்டான் என்பதையும், வீரப் பண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் எட்டப்பனுக்கான இடம் என்ன என்பதும் அனைவரும் படித்திருப்போம்.



இன்று நடக்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் ஊழல்களையும், பெட்டிங் போன்ற‌ செய்திகளைப் படிக்கும் போது விளையாட்டு என்பது எப்படியான வியாபாரமாக மாறி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதில் விளையாடும் வீரர்களும் தங்களின் சுயத்தை முழுவதும் தொலைத்து நிற்பதாகத் தான் பார்க்க முடிகிறது. தான் நேசிக்கும் விளையாட்டில் வரும் வெற்றியை தான் சுவாசிக்காமல் எதிர் அணிக்கு பணத்துக்காக‌ விலை பேசுகிறான் என்றால் அவனுடைய மனநிலை எத்தகையதாக இருக்கும்?.. இன்றைய சமூகத்தில் மீதான அவனுடைய எண்ணவோட்டம் என்னவாக‌ இருக்கும்?..

கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்ற‌ துறைகளில் யாரெல்லாம் நுழைய கூடாதோ அவர்களின் கூடாரமாகவும், கைப்பாவைகளாகவும் தான் இந்தத் துறைகள் இன்று இயங்குகின்றன‌. இவைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் வாய் மூடி மவுனிக்கிறது.

இந்த ஐபில் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும், ஜெயித்தாலும்...

காசு..
பணம்..
துட்டு..
மணி மணி.. 

கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. பணம் வருகிறது என்றால் சுயம் என்ன?.. ஆடையை இழந்து அம்மணமாக வாழவும் தயார்...


.

Friday, March 12, 2010

இர‌ண்டு ச‌த‌ம் அடிப்ப‌து உங்க‌ள் கையில்..புதிர்

இன்று முத‌ல் ஐபில் கிரிக்கெட் திருவிழா ஆர‌ம்பித்துவிடும். என்னை போல் கிரிக்கெட் ர‌சிக‌ர்க‌ளுக்கு கொண்டாட்ட‌ம் தான். அப்ப‌டியே அந்த‌ கொண்டாட்ட‌த்தை ப‌ற்றி ஏதாவ‌து எழுத‌லாம் என்று பார்க்கும் போது என் ந‌ண்ப‌ன் கேட்ட‌ ஒரு புதிர் தான் ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து. அதை உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

ஆட்ட‌ம் இறுதி க‌ட்ட‌த்தை அடைந்து விட்ட‌து. ஆட்ட‌த்தில் க‌டைசி ஓவ‌ரில் இறுதி மூன்று ப‌ந்துக‌ள் தான் மீத‌ம் உள்ள‌து. இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளில் நிற்கும் பேட்ஸ்மேன்க‌ளும் 94 ர‌ன்க‌ள் அடித்து ஆட்ட‌ம் இழ‌க்காம‌ல் உள்ள‌ன‌ர். பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற‌ இன்னும் ஏழு ர‌ன்க‌ள் தான் தேவை. ஆறு ர‌ன்க‌ள் அடித்தால் டிரா.




ஆட்ட‌ முடிவில் எதிரெதிர் ப‌க்க‌ம் உள்ள‌ இர‌ண்டு பேட்ஸ்மேன்க‌ளும் ச‌த‌ம் அடிக்கிறார்க‌ள். அணி வெற்றி பெற‌வும் செய்கிற‌து. ந‌ன்றாக‌ ஞாப‌க‌ம் வைத்து கொள்ளுங்க‌ள் க‌டைசி மூன்று ப‌ந்துக‌ள் தான் உள்ள‌து. இது எப்ப‌டி சாத்திய‌ம் ஆகும் என்ப‌தை நீங்க‌ள் தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும். நீங்க‌ள் கூறும் ப‌தில்க‌ள் அனைத்தும் கிரிக்கெட் விதிமுறைக்கு உட்ப‌ட்டு இருக்க‌ வேண்டும்.

குறிப்பு: என்னால் இந்த‌ புதிருக்கு இர‌ண்டு வ‌ழிக‌ளில் விடைய‌ளிக்க‌ முடியும். வேறு ஏதாவ‌து புது வ‌ழிக‌ளை யாராவ‌து சொல்கிறார்க‌ளா என்று பின்னூட்ட‌த்தில் பார்ப்போம்.
Related Posts with Thumbnails