Friday, February 26, 2010

பத்திரிகைகளின் தர்மம்_நடந்தது என்ன?

நான் ப‌டித்த‌ ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌ ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை ப‌ற்றி இந்த‌ ப‌திவில் எழுதுகிறேன். அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ போது நான் கல்லூரியில் ப‌யின்று வ‌ந்தேன். நான் ப‌டித்த‌ ப‌ள்ளியின் பெய‌ர் புனித‌லாற‌ன்ஸ் மேனிலைப் ப‌ள்ளி. அதில் ப‌னிரென்டாம் வ‌குப்பு ப‌டித்த‌ இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் ப‌ள்ளி ப‌டிக்கும் போதே எல்லா கெட்ட‌ப‌ழ‌க்க‌ங்க‌ளையும் க‌ற்று இருந்த‌ன‌ர், வீட்டில் பெற்ற‌வ‌ர்க‌ள் சொல்லையும், வெளியில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்லையும் ம‌திப்ப‌தில்லை. அதே போல் வ‌குப்பிலும் ஆசிரிய‌ரின் பேச்சையும் கேட்ப‌து இல்லை. அவ்வாறு இருக்க‌ ஒரு நாள் வ‌குப்பாசிரிய‌ர் ஏதோ த‌வ‌றுக்காக‌ வ‌குப்ப‌றையை விட்டு வெளியேற‌ சொன்னார். இவ‌ர்க‌ள் இருவ‌ரும் வ‌குப்பின் வெளியில் நின்ற‌ன‌ர். அந்த‌ வ‌ழியாக‌ த‌லைமையாசிரிய‌ர் வ‌ல‌ம் வ‌ரும் போது இந்த‌ இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளையும் வ‌குப்ப‌றையின் வெளியில் பார்த்தார். அவ‌ர்க‌ளிட‌ம் என்ன‌ என்று விசாரித்தார். அத‌ற்குள் வ‌குப்பாசிரிய‌ர் வ‌ந்து இரு மாண‌வ‌ர்க‌ளின் மீது ச‌ர‌மாரியாக‌ புகார்க‌ளை அள்ளி தெளித்தார். ஏற்க‌ன‌வே அந்த‌ இரு மாண‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றி த‌லைமையாசிரிய‌ர் அறிந்திருந்த‌தால் அந்த‌ மாண‌வ‌ர்க‌ளிட‌ம் உங்க‌ளின் பெற்றோர்க‌ளை கூட்டி வ‌ந்தால் ம‌ட்டுமே ப‌ள்ளியில் சேர்ப்ப‌தாய் கூறி ப‌ள்ளியை விட்டு வெளியில் அனுப்பினார்.

அந்த‌ இரு மாண‌வ‌ர்க‌ளும் எந்த‌ ப‌திலும் சொல்லாம‌ல் ப‌ள்ளியை விட்டு வெளியே சென்று விட்ட‌ன‌ர். ம‌றுதின‌ம் காலை ப‌த்து ம‌ணிய‌ள‌வில் ப‌ள்ளியின் ம‌தில்சுவ‌ர் அருகில் இருந்து ஒரு பெரிய‌ வெடிச்ச‌த்த‌ம் கேட்கின்ற‌து. என்ன‌வென்று த‌லைமையாசிரிய‌ர் அறையை விட்டு வெளியே ஓடி வ‌ந்து பார்த்தார். பின்பு அங்கிருந்த‌ ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் விசாரித்தார். அந்த‌ வெடிச்ச‌த்த‌திற்கு கார‌ண‌ம் உங்க‌ளால் நேற்று வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ அந்த‌ இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ள் தான் என்று ந‌ட‌ந்த‌ விப‌ர‌ங்க‌ளை ஆசிரிய‌ர்கள் கூறினர். இதை கேட்ட‌த‌லைமையாசிரிய‌ர் கோப‌ம் கொண்டு அறைக்கு சென்று தொலைபேசியின் மூல‌ம் காவ‌ல் துறைக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார். உட‌ன‌டியாக‌ விரைந்து வ‌ந்த‌ காவ‌ல்துறை அதிகாரிக‌ள் அந்த‌ இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளையும் கைது செய்து கூட்டி சென்ற‌ன‌ர்.

ம‌றுநாள் காலை வ‌ழ‌க்க‌ம் போல் எங்க‌ள் ஊரில் பாத்திரிகை வ‌ருகிற‌து. அதில் "ப‌ள்ளியின் மீது வெடிகுண்டி வீச்சு" என்ற‌ த‌லைப்புட‌ன் செய்தி போட‌ப்ப‌ட்டிருந்த‌து. மேலும் அத‌ற்கு கார‌ண‌மாக‌ அந்த‌ ப‌ள்ளியில் ப‌டித்த‌ இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளும் கைது செய்ய‌ப‌ட்ட‌ன‌ர் என‌வும், அவ‌ர்க‌ள் மீது எப்.ஐ.ஆர் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப‌ட்ட‌ன‌ர் என‌வும் சொல்ல‌ப் ப‌ட்டிருந்த‌து. மேலும் அத‌னுட‌ன் சேர்த்து ஒரு பெண்ம‌ணியின் பெயரை போட்டு, இவ‌ர்தான் அந்த‌மாண‌வ‌ர்க‌ளுக்கு வெடிகுண்டு ச‌ப்ளை செய்த‌தாக‌வும், அவ‌ர் ந‌ட‌த்தி இருந்த‌ க‌டையில் இருந்து ஏராள‌மான‌ வெடிப்பொருட்க‌ள் கைப்ப‌ற்ற‌ ப‌ட்ட‌தாக‌வும் ப‌ட‌த்துட‌ன் பிர‌சுரிக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. இந்த‌செய்தி தான் ப‌த்திரிகையின் பிர‌தான‌ செய்தியாக‌ அன்று வ‌ந்திருந்த‌து.
எங்க‌ள‌து ஊரில் ஊன‌முற்ற‌ பெண்ம‌ணி ஒருவ‌ர் த‌ன‌து வீட்டிலேயே பெட்டிக‌க‌டை ஒன்று வைத்திருந்தார். அது நான் ப‌டித்த‌ ப‌ள்ளியின் அருகிலேயே இருந்த‌து. அத‌னால் அந்த‌ க‌டையில் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளை க‌வ‌ருவ‌த‌ற்காக‌ மிட்டாய்க‌ள் ம‌ற்றும் ப‌ரிசுச் சீட்டு போன்ற‌வை அதிக‌மாக‌ இருக்கும். அதோடு அல்லாம‌ல் அந்த‌க‌டையில் சிறிய‌ ப‌ட்டாசுக‌ளும் கிடைக்கும். இதை அவ‌ர் விற்ப‌த‌ற்கு அர‌சிட‌ம் இருந்து எந்த‌வித‌ உரிம‌மும் வாங்க‌ப‌ட‌வில்லை. அங்கு விற்க‌ப்ப‌டும் ப‌ட்டாசுக‌ளில் முக்கிய‌மான‌து "எறிப‌ட‌க்கு" என்று அழைக்க‌ப்ப‌டும் ஒருவ‌கை ப‌ட்டாசு. இத‌ன் உள்ப‌குதியில் வெள்ளை க‌ல் ம‌ற்றும் வெடிம‌ருந்து வைக்க‌ப்ப‌ட்டு வெளியில் காகித‌ங்க‌ளால் சுற்ற‌ப்ப‌ட்டு சிறிய‌ எலுமிச்சைப் ப‌ழ‌அள‌வு இருக்கும். இதை த‌ரையில் ஓங்கி அடித்தால் "பாடார்" என்ற‌ ச‌த்தத்துட‌ன் வெடிக்கும். இந்த‌வ‌கை ப‌ட்டாசை சிறுவ‌ர்க‌ள் வாங்கி வெடிப்ப‌து உண்டு. பாதுகாப்பாக‌ இருப்ப‌தால் பெரிய‌வ‌ர்க‌ளும் க‌ண்டுகொள்வ‌து இல்லை. குறிப்பாக‌ இத‌ற்கு நெருப்பு தேவையில்லை. தென்ப‌குதியில் உள்ள‌வ‌ர்க‌ள் இதைப்ப‌ற்றி அறிந்து இருப்பார்க‌ள் என்று நினைக்கிறேன்.

ப‌த்திரிகையில் அன்று சொன்ன‌து போல் அன்று ப‌ள்ளியின் மீது வெடிகுண்டு வீச‌ப்ப‌ட‌வில்லை. உண்மையில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்றால், ப‌ள்ளியில் இருந்து அனுப்ப‌ப‌ட்ட‌ அந்த‌ இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளும் த‌லைமையாசிரிய‌ர் கூறிய‌து போல் ம‌றுநாள் பெற்றோரை ப‌ள்ளிக்கு கூட்டி வ‌ர‌வில்லை. அத‌ற்கு ப‌திலாக‌ அவ‌ர்க‌ள் இருவ‌ரும் அந்த‌ஊன‌முற்ற‌ பெண்ணின் க‌டையில் இருந்து எறிப‌ட்டாசை வாங்கி கொண்டு வ‌ந்து ப‌ள்ளியில் ம‌தில்சுவ‌ரின் மீது எறிந்து வெடிக்க‌செய்த‌ன‌ர். உண்மையில் அது வெடிகுண்டு இல்லை, ப‌ட்டாசு தான். இது த‌லைமையாசிரிய‌ருக்கும் தெரியும். ஆனால் இந்த‌மாண‌வ‌ர்க‌ளின் ஒழுங்கீன‌ங்க‌ளை ஏற்க‌ன‌வே அறிந்திருந்த‌ப‌டியாலும், ப‌ட்டாசை கொண்டுவ‌ந்து ப‌ள்ளியின் ம‌தில் மேல் எறிந்து விளையாடிய‌தும் அவ‌ர‌து கோப‌த்தை அதிக‌ப்ப‌டுத்திய‌து. இவ‌ர்க‌ளுக்கு ஒரு பாட‌ம் புக‌ட்ட‌வே அவ‌ர் காவ‌ல்துறைக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார். அங்கு வ‌ந்த‌ காவ‌ல்துறை அதிகாரிக‌ளும் அந்த‌ இர‌ண்டு மாண‌வ‌ர்க‌ளை கைது செய்த‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், எங்கு இருந்து வெடிகுண்டு வாங்கினீர்க‌ள் என்று கேட்டு விட்டு அந்த‌ ஊன‌முற்ற‌ பெண்ம‌ணியையும் கைது செய்த‌ன‌ர். ம‌றுநாள் ப‌த்திரிகையில் ஒரு பெரிய‌க‌தையை எழுதி இருந்தார்க‌ள். அதில் பெரும்ப‌குதி புனைய‌ப்ப‌ட்ட‌தாக‌வே இருந்த‌து.

இந்த‌ச‌ம்ப‌வ‌த்தில் அர‌சிய‌ல் விளையாடிய‌தா? அல்ல‌து ப‌த்திரிகைக‌ள் த‌ன‌து சுய‌ந‌ல‌த்துக்காக‌ மிகைப் ப‌டுத்தி எழுதின‌வா? என்று நான் அறியேன். ஆனால் சில‌ விச‌ய‌ங்க‌ள் என்னை உறுத்திய‌து. பத்திரிகையில் தன்னுடைய பெயரை பார்த்த அந்த ஊனமுற்ற பெண்மணி மனதளவில் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார், பாதிக்கப்பட்டிருப்பார். அந்த மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும். அந்த‌ ச‌ம்ப‌வ‌த்தில் தொட‌ர்புடைய‌ பைய‌ன் ஒருவ‌னின் அப்பா வெளி நாட்டில் வேலை செய்து வ‌ந்தார். ம‌க‌னின் ப‌டிப்பு முடித்த‌வுட‌ன் த‌ன்னுட‌ன் அழைக்க‌ வேண்டும் என்று அவ‌ர் ஆசைப்ப‌ட்டார். ஆனால் பைய‌ன் செய்த‌ காரிய‌த்தால் அவ‌ருடைய‌ க‌ன‌வு த‌க‌ர்ந்த‌து. இனி ஜென்ம‌த்திற்கும் வெளிநாடு போக‌ முடியாத‌ப‌டி ஆகிவிட்ட‌து, கார‌ண‌ம் அந்த‌ வ‌ழ‌க்கில் எப்.ஐ.ஆர் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு இருந்த‌து. ஐயா காவ‌ல்துறை க‌ண‌வான்க‌ளே! ப‌த்திரிகை வியாதிக‌ளே! எந்த‌ஒரு ச‌ம்ப‌‌வ‌த்தை ப‌ற்றி விசாரிக்கும் போதும், எழுதும் போதும் சிறிது ம‌ன‌சாட்சியுட‌ன் கையாளுங்க‌ளேன்.

Saturday, February 20, 2010

இப்படியும் நடக்கும்_வீடியோ

எனக்கு மின்னஞ்சலில் வந்த சில வீடியோக்களை தொகுத்து அளித்துள்ளேன்.

எதையும் பிளான் பண்ணி பண்ணணும்..இல்லைனா படத்தில் உள்ள படி தான் ஆகும்.தம்பி... கிட்டி விளையாடு!..கோலி விளையாடு!..ஏன் ஓடிபுடிச்சி கூட விளையாடு!..ஆனா வாழ்க்கையோடு விளையாடாதே!..அதைக் கண்டா படையே நடுங்கும் என்று சொல்வார்கள்..இவர் எம்மாத்திரம்

Friday, February 19, 2010

அம்மா(விற்கு)வின் பரிசு..

அதிகாலை வேளை!. கண் மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த லட்சுமி ஏதோ திடுக்கிட்டவள் போல் படுக்கையில் இருந்து எழுந்தாள். பக்கத்து அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருப்பது அரைகுறையாக மூடப்பட்டிருந்த கதவு வழியே தெரிந்தது. உடனே ஏதோ யோசனை செய்தவள் போல் எழுந்து படுக்கையறையை விட்டு வந்து சமையலறைக்கு சென்றாள். முகத்தை கழுவி விட்டு ஏற்கன‌வே திரிப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்த திரி ஸ்டவ்வில் ஒரு தீக்குச்சியை கொளுத்திப் போட்டாள். தீசுவாலையானது எல்லா திரிகளிலும் பற்றி எரிவது வரை காத்திருந்து பின்பு அதன் மேல் உருளை வடிவ அலுமினிய பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வைத்தாள். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. அதில் இரண்டு மேஜைகரண்டி தேயிலை தூள் போட்டு அடுப்பில் இருந்து இறக்கி, ஏற்கன‌வே
சக்கரைப் போடப்பட்டு தயாராய் இருந்த‌ இரண்டு கப்பில் தேயிலை நீரை ஊற்றினாள்.

ஒரு கப்பை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வந்து மின்விளக்கு எரிந்த அறையை நோக்கி நடந்தாள். அதுவரை மர நாற்காலியில் அம‌ர்ந்து குனிந்து புத்தகத்தை பார்த்திருந்த செல்வனின் தலையானது அருகில் காலடி சப்தம் கேட்கவே தலை நிமிர்ந்து பார்த்தான். அருகில் லட்சுமி கப்பில் தேயிலைநீருடன் நின்றாள். நான் தான் படிக்க வேண்டும் என்று காலையிலேயே எழுந்திருக்கிறேன். உனக்கு என்னம்மா வந்தது இவ்வளவு சீக்கிரமாய் எழுந்து தேயிலை போட வேண்டுமா?. என்று பொய் கோபத்துடன் அம்மாவை நோக்கினான். அதற்கு வழக்கமான புன்னகையை மட்டும் பதிலாக‌ உதிர்த்து விட்டு தேயிலை கப்பை செல்வன் கையில் திணித்து விட்டு அவன் தலைமுடியை கையால் கோதி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

முந்தினம் இரவும் அதிக நேரம் கண் முழித்து படித்து தூங்கிவிட்டு இன்றைக்கும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து படிப்பதால் செல்வத்துக்கும் அப்போது தேயிலை தேவையான ஒன்றாகவே இருந்தது. ஆனாலும் அவனுக்காக அம்மா கஷ்டபடுவதை விரும்பாததால் தான் லட்சுமியிடம் அவ்வாறு பேச நேர்ந்தது. கப்பில் இருந்த தேயிலை நீரை அருந்திக்கொண்டே பார்வை புத்தகத்தின் மீது திருப்பினான். பக்கங்களை புரட்டிய படியே புத்தகத்தில் தீவிரமாக‌ஆழ்ந்து போனான். தீடிரென ஏதோ ஞாபகம் வந்தது போல் அருகில் இருந்த கடிகார‌த்தை பார்த்து விட்டு "அய்யோ" என்று கத்திவிட்டு குளிக்க ஓடினான். கொல்லை புறத்தில் லட்சுமி தண்ணீர் நிரப்பியிருந்த தொட்டியில் இருந்து மொண்டு குளிக்க தொடங்கினான். குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான். அதற்குள் லட்சுமி காலை உணவுக்கு ஆவிபறக்க இட்லியும். மதியம் கல்லூரிக்கு செல்வம் எடுத்து செல்ல தக்காளி சாதமும் கட்டி ரெடியாக வைத்திருந்தாள். துணிமாற்றிவிட்டு வந்தவன் அம்மாவிடம் "அப்பா இன்னைக்கு வந்து விடுவார் இல்லையா அம்மா?" என்று கேட்டான். ஆமாப்பா இன்னைக்கு வந்து விடுவேன் என்று தான் மகேஷ் அப்பாவிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார், என்று மறுமொழி கூறினாள். இல்ல‌ அம்மா நாளைக்கு தான் பரிட்சைக்கு பணம் கட்ட கடைசி நாள், அதனால தான் கேட்டேன் என்று கூறிக்கொண்டே எடுத்து வைத்திருந்த இட்லியை சாப்பிட்டான். நீ ஒண்ணும் கவலை படாம கலேஜ்க்கு போ, நாளைக்கு கண்டிப்பா கட்டிவிடலாம் என்றாள் லட்சுமி. பாதிசாப்பிட்டும் சாப்பிடமலும் கட்டிவைத்திருந்த தக்காளி சாதத்தை பேக்க்குள் திணித்து விட்டு வீட்டிற்கு வெளியே நடந்தான். லட்சுமி வாசலில் நின்று மகன் போன பாதையை பார்த்து கொண்டே யாரையோ எதிர்பார்த்து காத்து நின்றாள்.

லட்சுமி வாசலில் எதிர்பார்த்திருப்பது அவளுடைய புருசன் முருகேசனுக்காகத் தான். இவர்களுக்கு செல்வம் ஒரே பையன். முருகேசன் ஒரு கட்டிடத் தொழிலாளி. லட்சுமி மற்றும் முருகேசனின் நெடுநாளைய கனவு செல்வத்தை எப்படியாவது இன்சினீயர் படிப்பு படிக்க வைப்பது. அதற்கு ஏற்றபடி செல்வமும் படிப்பில் வெகு கெட்டியாக இருந்தான். பத்தாம் வகுப்பில் அந்த பள்ளியில் முதல் மாணவனாகவும், பனிரென்டாம் வகுப்பில் ஆயிரத்தி இருநூறு மதிப்பெண்ணுக்கு ஆயிரத்தி நூற்றி முப்பது மதிப்பெண்களும் எடுத்து பொறியியல் கல்லூரில் இடம் வாங்கி விட்டான். செல்வத்தை பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்க ஆகும் செலவு தொகையை முருகேசன் கையில் வைத்திருக்க வில்லை. ஏனென்றால் சில‌வருடம் முன்பு தான், இது வரை சம்பாதித்தப் பண‌த்தைக் கொண்டு இரண்டு அறைகள் கொண்ட வீட்டை கட்டிமுடித்திருந்தான். முருகேசன் வீடு கட்டும் வரை உள்ளூரில் தான் வேலை செய்து வந்தான். ஆனால் வீடுகட்டி முடிந்த‌ பிறகு உள்ளுரில் தினமும் வேலை கிடைப்பதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கிடைத்தன. எனவே தனக்கு தெரிந்த நண்பன் மூலமாக கேரளாவில் ஒரு கண்டிராக்கிடம்(தென்பகுதி நடைமுறை சொல்) வேலையில் சேர்ந்தான். மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவான். கேரள வேலையில் சம்பாதித்த பணத்தையும் மற்றும் லட்சுமியின் சில நகைகளையும் கொண்டு செல்வத்தை பொறியியல் படிப்பில் மூன்று வருடங்கள் படிக்க வைத்துவிட்டான். தற்போது செல்வம் படிப்பது இறுதி ஆண்டு. இந்த வருடம் படிப்புக்கு கட்ட வேண்டிய கட்டண‌த்தை பற்றிதான் இன்று காலையில் லட்சுமிடம் செல்வம் கேட்டிருந்தான். லட்சுமி போன மாதம் முருகேசன் வந்த போதே பணத்தை பற்றி சொல்லியிருந்தாள். அதற்கு முருகேசன் தன்னுடைய கண்டிராக்கிடம் முன்பணம் கேட்டு வாங்கி வருவதாக சொல்லியிருந்தான்.

மணி பத்தாயிற்று, முருகேசன் இன்னும் வரவில்லை. வாசலில் நின்ற லட்சுமி கவலையுடன், சமையலறை வந்தாள். வழ‌க்கமான வேலைகளில் மனம் செல்ல வில்லை. ஏதோ வேண்டா வெறுப்பாய் சிதறி கிடந்த பாத்திரங்களை கழுவினாள். சற்று நேரத்தில் வெளியே நாய் குரைக்கவே வீட்டு வாசலில் வந்து பார்த்தாள். அவள் எதிர் பார்த்தது போல முருகேசன் வழக்கமாக கொண்டுவரும் தோள்பையுடன் வந்து கொண்டிருந்தான். வீட்டில் உள்ள ஆட்களுக்கும் வெளியாட்களுக்கும் உனக்கு இன்னும் வித்தியாசம் தெரியவில்லை என்று நாயை கடிந்து கொண்டு முருகேசனை வாங்க! என்று சொல்லி சிரித்துவிட்டு கையில் இருந்த பையை வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். முருகேசனின் வழக்கமான புன்னகை முகத்தில் இல்லை என்பதை வழியில் வ‌ரும் போதே லட்சுமி கண்டு கொண்டாள். செல்வம் கலேஜ்க்கு போய்விட்டானா? என்று கேட்டு கொண்டே வீட்டில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் முருகேசன். அவன் அப்பவே போய் விட்டான் என்று சொல்லிக்கொண்டு கையில் கொண்டு வந்த தண்ணீரை முருகேசனிடம் கொடுத்தாள். காலையில் எங்கு சாப்பிட்டீர்கள்? என்ன சாப்பிட்டீர்கள் என்ற விசாரிப்புகளை எல்லாம் விசாரித்து விட்டு மெதுவாக பணத்தைப் பற்றி கேட்டாள் லட்சுமி. நான் ஒரு வாரத்திற்கு முன்னமே கண்டிராக்கிடம் கேட்டு வைத்திருந்தேன், அவரும் தருவதாக சொல்லி இருந்தார். ஆனால் இரண்டு நாள் முன்னதாக கண்டிராக் வீட்டில் இருந்து அவருடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று அவருடைய மனைவி போன் பண்ணினதா என்னிடம் சொல்லி விட்டு போனவர் திரும்ப வரவில்லை என்று கவலையுடன் பதில் சொன்னான் முருகேசன். இதை கேட்ட லட்சுமி சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, அப்புறம் "ஒண்ணும் கவலை பட வேண்டாம்" எப்படியும் இன்னைக்கு புரட்டி விடலாம் என்று முருகேசனுக்கு ஆறுதல் கூறினாள். அதன் மர்மம் என்ன என்று அவள் முகத்தை பார்த்தான் முருகேசன்.

மாலை கல்லூரி முடிந்து செல்வம் வீட்டிற்கு வரும் போதே வீட்டு முற்ற‌தில் அப்பா அமர்திருப்பதை பார்த்தான். அப்பாவிடம் நலன் விசாரிப்புகள் எல்லாம் முடித்து விட்டு அடுத்த மாதம் தன‌து கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியு நடக்க போகிறது என்று உற்சாகத்துடன் சொல்லி விட்டு அம்மா? என்று அழைத்த வாறு வீட்டிற்குள் நுழைந்தான். சமையலறையில் இருந்து சிரித்துக் கொண்டே இரண்டு கப்பில் காப்பியுடன் வெளியே வந்தாள் லட்சுமி. அம்மாவின் கழுத்தை பார்த்தவுடன் செல்வத்தின் முகம் மாறியது. அம்மா உன் கழுத்தில் இருந்த செயின் எங்கே? என்று கேட்டான். அதை விடுடா என்று சமாளித்தாள் லட்சுமி. அவன் விடவில்லை எங்கே என்று திரும்பவும் கேட்டான். அது உன்னுடைய கழுத்தில் இல்லாமல் உன் முகம் எப்படியே இருக்கிறது என்று சொன்னான். அப்பா கேட்ட இடத்தில் பணம் கிடைக்கவில்லையாம், உனக்கு பரிட்சைக்கு பணம் கட்ட வேற வழி தெரியவில்லை அதனால் செயினை விற்று தான் பணம் வாங்கி வைத்திருக்கிறேன் என்று பதில் சொன்னாள் லட்சுமி. ஏற்கனவே நிறையா பவுனை என்னுடைய படிப்புக்காக வித்தாச்சி..இது ஒண்ணு தான் உன்னிடம் இருந்தது அதையும் போய் ..எல்லாம் நான் இஞ்சினியரிங் படிக்க ஆசைப் பட்டதால் தான் என்று புலம்பினான் செல்வம். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அடுத்த வருசம் நீ படிச்சி முடிச்சி நல்ல வேலைக்கு போய் வரும் போது இது போல் ஒண்ணு என்ன? ஒன்பது கூட வாங்கலாம் என்று மகனுக்கு ஆறுதல் கூறினாள். சொல்லிவிட்டு அப்படியே கண்ணாடி அருகில் சென்று அதன் அருகில் இருந்த ஒரு நீல கலர் பாசி மாலையை எடுத்து கழுத்தில் மாட்டி விட்டு இது கூட நல்லா தான் இருக்கு என்று செல்வத்தை பார்த்து சிரித்தாள்.
மாதங்கள் உருண்டோடின. அன்று மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை, அன்று காலையிலையே லட்சுமி மிக சந்தோசமாக இருந்தாள். காரணம் சென்னைக்கு வேலைக்கு சென்ற செல்வம் அன்றைக்கு வருவதாக பக்கத்து வீட்டு பூர்ணம் மாமியிடம் போனில் சொல்லிருந்தான். காலையில் இருந்து பத்து முறை வாசலை வந்து பார்த்து விட்டாள். இது போதாது என்று முருகேசனை காலையிலேயே பேருந்து நிலையத்துக்கும் அனுப்பி விட்டாள். செல்வம் கலேஜில் நடந்த கேம்பஸ் இண்டர்வியுலேயே சென்னையில் உள்ள ஒரு முன்னனி நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகி இருந்தான். தொடக்கத்திலேயே ஐந்திலக்கத்தில் சம்பளம் கொடுப்பதாக சொல்லி இருந்தார்கள். படிப்பை முடித்து விட்டு செல்வம் வேலைக்கு சென்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அந்த மூன்று மாதத்தில் இப்போது தான் முதல் முறையாக ஊருக்கு வருகிறான். வாசலில் காலடி சத்தம் கேட்கவே லட்சுமி ஓடி வந்து வாசலை பார்த்தாள். அங்கு செல்வமும், முருகேசனும் நின்று இருந்தார்கள். மகனை கண்டவுடன் இப்படி மெலிந்து போய்விட்டயே! என்று சொல்லிக்கொண்டு கன்னத்தை தடவினாள். அவன் சிரித்துக் கொண்டே போம்மா!. நானே உடம்பு போட்டு விட்டது என்று கவலையாய் இருக்கிறேன் என்று கூறினான். பின்பு வீட்டிற்குள் வந்த செல்வம் கொண்டு வந்த பேக்கில் எதையே தேடினான். இதை லட்சுமியும், முருகேசனும் பார்த்து கொண்டு நின்றனர். பேக்கில் இருந்து ஒரு பாக்சை எடுத்து அதனுள் இருந்த தங்க‌ செயினை அம்மாவின் கையில் கொடுத்தான். இது என்னுடைய முதல் ஆசை பரிசு என்று கூறி சிரித்தான். அதை பெருமையுடன் வாங்கி பார்த்து விட்டு அப்படியே செல்வத்தின் கழுத்தில் மாட்டி விட்டு பின்வறுமாறு லட்சுமி கூறினாள். "வீட்டிற்குள் இருக்க போகிற எனக்கு எதுக்கு இது. இனி நீ தான் நாலு இடம் போகனும், நாலுபேரை பார்த்து பேச வேண்டும்". இதை அமைதியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து பதில் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தான் முருகேசன்.

Monday, February 15, 2010

வாழைப்பழம்_வகைகளும் நானும்..

பழங்கள் என்றால் அது ஆப்பிள், ஆரஞ்சி, திராட்சை என்று ஆகிவிட்ட காலத்தில் நமது முக்கனிகளில் ஒன்றாகிய வாழைப்பழத்தை பற்றி எனக்கு தெரிந்த சில விசயங்களை எழுதுகிறேன். பழங்களில் இதற்கு தான் வகைகள் அதிகம். சுமார் எழுபதிற்கும் அதிகமான வகைகள் காணப்படுகின்றன. மேலும் மற்ற பழங்களை ஒப்பிடும் போது இதன் விலையும் குறைவு. விலை குறைவான உணவு பொருட்களின் தரம் எதுவும் நன்றாக இருக்காது என்று சில மேல்தட்டு அறிவு ஜீவிகள் சுற்றி வருகிறார்கள். அவர்களுடைய வழியை இப்போது உள்ள நாகரீக கோமாளிகளும் பின்பற்றுவதால் தான் வாழைப்பழத்தின் பெருமைகள் மங்கி விட்டதாக நான் நினைக்கின்றேன். மேலும் நகரங்களில் வாழைப்பழத்தில் இரண்டு மூன்று வகைகளை தவிர மற்றவைகள் கிடைக்காததும் மற்றும் ஒரு காரணம்.என‌க்கு தெரிந்த சில வாழைப்பழங்களின் வகைகளை எனக்கு அறிமுகமான பெயரிலேயே கூறுகிறேன்.

(1) செந்த்துழுவன்(செவ்வாழை)

(2)வெள்ளைத்துழுவன்

(3)பாளையங்கொட்டை(மஞ்சள்)

(4)மோரிஸ்(பச்சை)

(5)ஏத்தன்(நேந்திரன்)

(6)இரசகதலி

(7)பூங்கதலி

(8)கற்பூரவல்லி

(9)மொந்தன்

(10)சிங்கன்

(11)பேயன்

(12)மட்டி(ஏலரிசி)

(13)மலை வாழைஇதில் உள்ள அனைத்து வாழைப்பழங்களும் பல மருத்துவ குணங்களை கொண்டவை. மேலே கூறப்பட்ட செந்த்துழுவனும், வெள்ளைத்துழுவனும் ஒரே இனத்தை சார்ந்தவை. இவற்றின் சுவை தித்திப்பாக மாவு போன்று இருக்கும். பாளையங்கொட்டை(மஞ்சள்)என்று அழைக்கப் படும் இந்த வாழைப்பழமானது சிறிது புளிப்பு சுவையுடையது. மற்ற ரகங்களை பார்க்கும் போது இதன் விலை ச‌ற்று குறைவாக இருக்கும். மோரிஸ்(பச்சை) பெரும்பாலும் இந்த ஒரு ரகத்தை தான் நகரங்களில் பார்க்க முடிகிறது. கிராமத்தில் இருந்து வந்தவர்கள் இதன் விலையை கேட்டால் கண்டிப்பாக‌ வாங்க மாட்டார்கள். இதுவும் இனிப்பு தன்மையுடையது. ஏத்தன்(நேந்திரன்) இது ஏதோ கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டிலும் விளைவிக்கப் படுகிறது. மற்ற ரகங்களை விட இதன் சுவைத் தனிச்சிறப்பு. இதில் ஒரு வாழைப் பழத்தை முழுமையாக சாப்பிடுவது என்பது அனைவராலும் முடியாத காரியம். அவ்வளவு பெரிதாக இருக்கும். இதில் இருந்து தாயரிக்கப் படும் சீவல்(Banana Chips) அனைவரும் அறிந்ததே. இரசகதலி, பூங்கதலி மற்றும் கற்பூரவல்லி இந்த மூன்றும் நல்ல இனிப்புச் சுவையைக் கொண்டவை. இதன் அளவும் பார்பதற்கு சிறிதாக இருக்கும். மொந்தன் இது பார்பதற்கு நேந்திரன் போல் தோற்றம் அளித்தாலும் இதன் சுவையில் இனிப்பு தன்மை குறைவாக இருக்கும். சிங்கன் இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு. பேயன் இது தான் நமது ஊரில் பஜ்ஜி போடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப் படுக்கிறது. இதன் சுவையும் தித்திப்பே. மட்டி இது வாழைப்பழ ரகங்களில் மிக சிறியது. ஆனால் இதன் சுவைப் பல மடங்கு இனிப்பானது. இதில் மாவுத் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுக்கப்ப‌டும். இந்த பழத்திலும் ம‌ருத்துவ குணம் அதிகம். மலை வாழை இதன் சுவை தனி. இதுவும் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை.வாழைப் பழத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வாழைப் பழத்தில் எழுபதிற்கும் அதிகமான வகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளன. வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. வாழைப் பழத்தில் இருந்து தாயரிக்கப் படும் எண்ணெய் ஆனது சரும அழகை பாதுகாக்கப் பயன்படுகிறது. இதய நோய் உடையவர்களும் வாழைப் பழ‌த்தை உண்ணலாம்.வாழைப் பழ சாகுபடியில் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்களுக்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். நான் மேலே சொன்ன வாழைப் பழ வகைகளை பல பேர் கண்ணால் பார்த்து கூட இருக்க மாட்டார்கள். நான் அனைத்து பழ‌ங்களையும் ஒரே இடத்தில் பார்த்தும் இருக்கிறேன். சாப்பிட்டும் இருக்கிறேன். எனது மாவட்டத்தில் தக்கலை என்ற இடத்தை அனைவரும் அறிந்ததே. அதன் அருகில் உள்ள ஒரு சந்தையின் பெயர் "பேட்டை சந்தை". வாழைத் தார்கள் மட்டுமே விற்பதற்க்காக அமைக்கப் பட்ட சந்தை. இங்கு வேறு எந்த பொருட்களும் கிடைக்காது. வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு மட்டுமே கூடுகின்றது. இந்த இரண்டு நாட்களும் வாழைத் தார்கள் மலைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளையும், ஏற்றுமதியாளர்களையும் அன்றய தினம் பார்க்க முடியும். அனைத்து வாழைப் பழ ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்தவரிடமே எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வாங்க முடிவது இந்த பேட்டை சந்தையின் சிறப்பு. இங்கு இருந்து வெளிநாடுகளுக்கும் வாழைத் தார்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. இப்போது இந்த சந்தையானது “தக்கலை வாழைக்குலை சந்தை” என்று அழைக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த சந்தையானது காங்கிரிட் தளம் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாம். வாரத்தின் புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காய்கறி சந்தையாகவும் செயல் படுகிறதாம்.

மேலும் நான் எனது ஊரில் பார்த்த ஒன்று வாழைத் தார்களின் அளவு. கோவில் திருவிழாக்களில் இதற்காகவே போட்டிகள் நடத்துவார்கள். அதாவது கோவில் திருவிழாக்களின் முதல் நாளில் அவரவர் தோட்ட‌ங்களில் விளைந்த வாழைத் தார்களில் பெரிய தாரை ம‌ரத்துடன் வெட்டி கொண்டு வந்து நட்டு விடுவார்கள். திருவிழா முற்றம் முழுவதும் வாழை மரங்களின் அணிவகுப்பை தான் பார்க்க முடியும். திருவிழாவின் இறுதி நாளில் கோவில் நிர்வாகத்தின் நடுவர்களால் பார்வையிடப் பட்டு மிகப் பெரிய அளவு வாழைத் தாருக்கு பரிசும் பணமும் வழங்கப்படும். இங்கு நான் வாழை மரத்தின் உயரத்திற்கு வாழைத் தாரை பார்த்ததுண்டு. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு என்று ஒவ்வொரு தோட்டத்திலும் வாழை மரங்கள் வளர்ப்பது உண்டு. அந்த வாழைத் தார்களை "பந்தயகுலை" என்று அழைப்பார்கள்.
குறிப்பு: வாழைப் பழத்தின் மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும், விட்டமீன்களின் விளக்கங்களும் அதன் அளவுகளும் இணைய தளங்களில் விரவி கிடப்பதால் அதைப் பற்றி அதிகம் எழுதவில்லை.

Saturday, February 13, 2010

காதல் - கேள்வி?...பதில்!...இதை கண்டிப்பா நான் கேட்டுத் தான் ஆகனும். இதை இன்றைக்கு நான் கேட்கவில்லை என்றால் என்றைக்கும் கேட்க முடியாது. அதனால் ஒரு நிமிடம் கூட பொறுக்க முடியாது. இதை இன்றைக்கு இங்கு கேட்டதால அடுத்த மாதம் ஊருக்கு போகும் நாஞ்சிலாரு என்னைப் பற்றி ஊர்ல என்ன சொல்வார் என்பது கண்முன்னே எனக்கு தெரிந்தாலும் என்னால் கேட்காம இருக்க முடியலை. தல என்ன தான் ஊர்ல போய் தண்டோராப் போட்டாலும் என் பேர்ல இருக்குற பால் என்ற வார்த்தையும் அது வடியும் முகமும் என்னை கண்டிப்பா காப்பாத்தும். நம்பிக்கை இருக்கு. அதுனால வெட்டிப் பேச்சு பேசாம கேட்டுட வேண்டயதுதான்..

வெட்டிப் பேச்சு! வெட்டிப் பேச்சு! ஆஹா சித்ரா மேடம் வேற முதல் ஆளா வந்து படிப்பார்களே, என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க, ஏற்கனவே இவங்களும் திருட்டு தம் அடித்து பழக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதுனால் இதையும் அது போல விட்டு விடுவாங்களா. என்னத்தான் இருந்தாலும் கேட்டிருக்க கூடாதோ? பெரிய பிசகு ஆகிவிடுமோ?. எல்லாம் அண்ணாமலையானுக்கு தான் வெளிச்சம்..

அடடே அண்ணாமலையான் அவர்கள் வேற வருவாறு. கையை கட்டி நிற்பதால் விவேகானந்தர் இல்லை என்று வேட்டைக்காரன் விஜய் போல் பஞ்ச் டயலாக் எல்லாம் போட்டுருக்கார். இதை இங்க கேட்டதால கையில் கத்தியோட அடுத்த போஸ் கொடுப்பாரா? இல்லை இது ஒரு பாலான பட்டறை என்று தண்ணி தெளிச்சிட்டு போவாரா?. ஒண்ணும் புரியல.

பலாப்பட்டறை..பாலான பட்டறை..கண்டிப்பா சங்கர் வருவார் .ஏற்கனவே ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது உருப்படியான தகவல் கொடுங்கள் என்று பலமுறை பின்னூட்டம் போட்டிருக்கார். இங்க நான் கேட்டதை படித்தா "நீந்தாத மாட்டை தண்ணிக் கொண்டு போகும்" என்று வானம்பாடி அய்யா கிட்ட சொல்வாறா?..ம்ம்ம் சே...எப்படியும் நான் கேட்டுத் தான் ஆகணும்..

வானம்பாடி அய்யா வேற இப்பதான் பாலோவரா வந்தாரு..ஏதாவது உருபடியா எழுதுவான் என்று..அதுக்குள்ள இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டியதா போச்சு..இது எல்லாம் நல்லா இல்லை தான் என்னப் பண்ணுறது என்னால முடியல..அதனால தான்..நீங்களாவது உண்மையான விளக்கம் தருவீர்கள் என்று...

இதுக்கு தான் சின்ன பசங்க சகவாசம் வச்சிக்க கூடாதுனு சொல்லுறது..இப்ப பாரு சந்தி சிரிக்க வைச்சிட்டான் - தமிழ் உதயம். ஐயா சின்ன பசங்க வேலை எல்லாம் செய்யாம பெரிய மனுசன் ஆக முடியாது என்று எனக்கு ஒண்ணுவிட்ட ஆத்தாவுடைய அப்பத்தா சொன்னதா ஞாபகம். எது எப்படியே நான் இதை கேட்டிருக்க கூடாது. இருந்தாலும் முடியலை..

சவூதியில் இருந்து இந்த கேள்வியை கேட்கலாமா?..என்று சொல்லி இந்த வாரம் சவூதி பதிவர் சங்கத்தை கூட்டுவது உறுதி. கண்டிப்பா தலை ஸ்டார்ஜன் தான் தலைமை தாங்குவார். அவரோட சிஷ்யன் அக்பர் நம்ம கேள்வியை குற்றம் என்று சொல்லி கொண்டுவருவார். சரவண குமாரும் இதை வழிமொழிவார். கல்ப் தமிழன் உட்பட் எல்லாரும் சேர்ந்து கும்மியடிக்கப் போறது என்னவோ உண்மைதான். ஆனால் இதுக்கெல்லாம் பயந்தால் சரித்திரத்தில் நம்முடைய பெயர் இல்லாமல் போய்விடும் என்று எங்கள் நாஞ்சில் தல சொன்னதை முன்னிட்டு...அப்படியே சவூதி பதிவர் சங்கத்தில் இருந்து நீக்கினாலும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கு அடைக்கலம் கொடுத்த நம்ம நாஞ்சில் சங்கத்தில் வெளிப்படையாக சேருவேன் என்று..என்ன நடந்தாலும் நான் கேட்டுதான் ஆகனும்..

ஏற்கனவே இருக்குறது பதினேழு பாலோவர் தான்..இன்னைக்கு இதைப் பற்றி இங்க கேட்டு எழுதியதால் அடல்ஸ் ஒன்லி என்று சொல்லி நம்ம ஏஞ்சல் புட்டுகிட்டு போறது உறுதி. அப்பாலிக்கா பதினாறுதான். பிளாக்கர் டீம் வேற அடல்ஸ் ஒன்லி வார்னிங் மெசேஜ் கொடுக்க போறங்களாம். போச்சி எல்லாம் போச்சி..பரவாயில்லை..நான் கேட்க வந்ததை கேட்காமல் போகமாட்டேன்.

எது எப்படி ஆனாலும் நான் காண்டிப்பா கேட்பேன்..ஏன்னா இது என்னோட பிரச்சனை இல்லை. நம்ம தமிழ் நாட்டின் பிரச்சனை. இல்ல தவறு இந்தியாவின் பிரச்சனை. இல்லை இல்லை உலகத்தின் பிரச்சனை. இப்படி எல்லாம் பில்டப் கொடுத்து உங்களை கடுப்பேத்த மாட்டேன்...(ஏத்திட்டோம்ல) தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கும்..ஆகா இப்பவே உங்க முகம் எல்லாம் எனக்கு தெரிகின்றது..வேண்டாம் இதுக்கு மேல தாங்காது..கேட்டுட வேண்டியதுதான்.

(1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?
(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?
(3) காதல் கருப்பா?..இல்ல சிவப்பா?
(4) காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?
(5) காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?
(6) காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?

கீழே சொல்லிருப்பது அனைத்தும் நாடோடியின் பதில்கள்.

(1) இதை அறிந்துக் கொள்ள முயற்ச்சி செய்து உயிர்விட்டவர்கள் அதிகம் பேர்..அந்த லிஸ்ட்ல நான் சேர விரும்ப வில்லை
(2) என்னைப் பொறுத்தவரை காதல் பல நேரம் கானல் நீராகவும்..சில நேரம் கிணற்று நீராகவும் தெரிகின்றது.
(3) நான் சொல்வேன் அது ஒரு நிறக்குருடு என்று..நண்பகல் நேரம் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போது நம்ம ஹீரோ பீச்சில் நின்று வானவில் அழகை ரசிப்பான்.
(4) காலையில் எழுந்து முகம் கழுவாமல் பவுடர் போட்டு கண்ணாடி பார்ப்பதில் இருந்து..இரவில் படுக்கையில் போர்வையை மூடி செல்போன் பேசுவது வரை இதன் அறிகுறிகள் தான்.
(5) தேன் குவளையில் தலைகீழாக விழுந்த வண்டுப்போல் தான்....
(6) காதலை நம்பியவன் சாமியார்(பித்தன்) ஆனான்..நம்பாதவன் சம்சாரி( குடும்பத்தலைவன்) ஆனான்.

குறிப்பு: நானும் ரவுடிதான்னு வண்டியில வலுக்கட்டாயமா வந்து ஏற மனம் இடம் கொடுக்க வில்லை.. அப்படியே உங்களுடைய பதிலையும் சொன்னீங்கனா?..

Monday, February 8, 2010

சிரிக்க மட்டும்..ரெம்ப யோசிக்காதீங்க..

எனது நண்பருக்கு மொபைலில் வந்த சில SMS ஜோக்குகளை இங்கு தொகுத்து அளித்துள்ளேன்.# மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

# எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

# தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

# தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

# டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

# யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?

கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

# இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

குறிப்பு: ஏற்கனவே படித்த ஜோக்கா இருந்தா..சைலண்டா விட்டுருங்களேன்..

Friday, February 5, 2010

அம்மா

காலையில் இருந்து நான் ஒருத்தியா தான் எல்லா வேலையும் செய்ய வேண்டி இருக்கு. நேற்று இரவு சாப்பிட்டுப் போட்ட பாத்திரங்கள் எல்லாம் அப்படியே கிடக்குது. சாப்பிட்ட தட்டை வாஷ்பேஷனின் அடியில் போடுவதற்கு முன்னால் அதில் சிறிது தண்ணீர் கூட விட்டு வைக்க முடிய வில்லை. அப்பிடி விட்டு வைத்தால் கழுகுவத்ற்காவது சுலபமாக இருக்கும். எல்லாம் என் தலையெழுத்து என்று புலம்பியவாறு துடப்பத்தை கையில் எடுத்து கொண்டு ஹாலில் நுழைந்தார் விசாலாட்சி.

இதை எல்லாம் கேட்டும் கேட்காததுப் போல அன்றைய செய்தித்தாளில் முழ்கி இருந்தார் நடராஜன். மணி ஒன்பது ஆகுது இன்னும் நீங்க பேப்பர் படிச்சு முடிக்கலை. ஏழு மணியில் இருந்து ஆரம்பித்தது அப்படி என்னத்த தான் படிப்பீங்களோ! இன்னும் முடிந்த பாடில்லை. கல்யாணம் முடிந்த அன்றைக்கே அத்தை சொன்னாங்க என் பையன் படிப்புல கொஞ்சம் மக்கு என்று. நான் என்னவோ பள்ளியில் படிக்கும் படிப்பு என்று தப்பு கணக்கு போட்டு விட்டேன் என்று கூறி சிரித்தாள். இதை கேட்ட நடராஜன் செய்தித்தாளில் இருந்த பார்வையை எடுத்து விட்டு நிமிர்ந்து விசாலாட்சியைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்து விட்டு திரும்ப குனிந்து படிக்க தொடங்கினார். விசாலாட்சி தரையை துடப்பத்தால் சுத்தம் செய்தவாறே, உங்க பொண்ணு இன்னும் துங்கிட்டுதான் இருக்காள், இன்னைக்கு லீவு என்று தான் பேரு மணி ஒன்பது ஆகுது இன்னும் படுக்கையை விட்டு எழுந்திரிக்கவில்லை. அம்மா ஒருத்தி வாரத்தின் ஐந்து நாளும் காலையிலே எழுந்து சாப்பாடுக் கட்டி வேலைக்கு அனுப்பு விடுகிறாளே, இந்த லீவு நாளிலாவது சீக்கிரமாய் எழுந்து அம்மாவுக்கு வேலையில் கூட மாட உதவி செய்வோம், என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அவளுக்கு எப்படி இருக்கும் உங்க இரண்டு பேருக்கும் தான் வேலைக்காரி ஒருத்தி நான் வந்து கிடைச்சிருக்கேன் இல்ல. என்று சொல்லிக் கொண்டே அடுத்த வேலையை பார்க்க போனாள் விசாலாட்சி.

அம்மாவின் பேச்சுகளை எல்லாம் கட்டிலில் கண் மூடிப் படுத்தவாறே காதில் வாங்கிக் கொண்டு அரைகுறையாக மூடி இருந்த போர்வையை இழுத்து தலை வரை மூடினாள் காவ்யா.

நடராஜன், விசாலாட்சி தம்பதிகளுக்கு திருமணம் ஆகிப் ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்தவள் காவ்யா. அதனால் இருவராலும் செல்லமாய் வளர்க்கப்பட்டாள். நடராஜன் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தான் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்று வீட்டில் இருக்கிறார். காவ்யா கணினிப் படிப்பில் பட்டம் பெற்று கடந்த வருடம் தான் ஒரு தகவல் தொழிற்நுட்ப அலுவலகத்தில் பணியில் சேர்ந்து இருந்தாள். விசாலாட்சியும் டிகிரி முடித்தவர் தான். காவ்யா பிறப்பதற்கு முன் அவரும் ஒரு தனியார் பள்ளியில் வேலைப் பார்த்து வந்தார். காவ்யா பிறந்த பின்பு வேலையை விட்டு விட்டு, வீட்டு வேலைகளில் மூழ்கிப்போனாள். இவர்களின் வீடு அமைந்திருப்பது பல்லாவரத்தில் ஆனால் காவ்யா வேலை செய்யும் அலுவலகம் அமைந்திருப்பது மவுண்ட் ரோட்டில். தினமும் வாகனப்பயணம் மட்டும் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அலுவலக நேரத்திலும் கணிப்பொறியை முறைத்துக் கொண்டு இருப்பதால் கண்களில் ஏற்படும் உளைச்சல் மற்றும் புது புராஜெட்கள் இப்போது அதிகமாக் இருப்பதால் தினமும் அதற்க்கான நகல்களை வீட்டில் எடுத்து வந்து படிக்க வேண்டி இருந்தது. இவை எல்லாம் சேர்ந்து காவ்யாவை வாரத்தின் கடைசி இரண்டு லீவு நாட்களை எதிர்பார்க்க வைத்துவிடுகிறது.

அன்றும் அப்படித்தான் மனதில் தூக்கம் அகன்று விட்டாலும் காண்களை விட்டு அகல மறுத்தது. அப்படியே அம்மாவின் வார்த்தைகளை உள்வாங்கி படுத்து இருந்தாள். அம்மாவின் அர்ச்சனைகள் காவ்யாவிற்கு இன்று புதிதல்ல. ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் நடப்பது தான். ஆனால் அன்று என்னவோ அம்மாவின் வர்த்தைகள் அனைத்தும் திரும்ப திரும்ப அவள் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. நாளை கண்டிப்பாக சீக்கிரமாய் எழுந்து அம்மா கோவிலுக்கு சென்று வருவதற்குள் எல்லா வேலையையும் முடித்து விட வேண்டும் என்று மனதில் எண்ணியவாறு படுக்கையை விட்டு எழுந்து நடக்கலானாள்.

மறுநாள் காலை இனிதே பொழுது புலர்ந்தது. விசாலாட்சி தினமும் காலையில் வீட்டிற்கு அடுத்த தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த பின்பு தான் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிப்பாள். அன்றும் வழ்க்கம் போல் கோவிலுக்கு கிளம்பினாள். நடராஜனும் தினமும் காலையில் சிறிது தூரம் வாக்கிங் செல்வது வழக்கம். அவரும் கிளம்பிவிட்டார். காவ்யா இரவு மாற்றியமைத்திருந்த அலாரம் செல் போனில் சிணுங்கியது. தூக்கத்தை விட்டு எழுந்து சமையல் அறைக்கு வந்தாள். குப்பையாக கிடந்த பாத்திரங்களை சுத்தம் செய்து அடுக்கினாள். பின்பு வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தம் செய்து ஆங்காங்கே சிதறி கிடந்த பொருட்களை அதனதன் இடங்களில் அடுக்கி வைத்து விட்டு வாசலில் சென்று கேட்டில் தொங்க விடப்பட்டிருந்த பையில் இருந்த பால் பாக்கெட்டையும் வீசி எறிய பட்டிருந்த நாளிதழையும் எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தாள். நாளிதழை அப்பா அமரும் சாய் நாற்காலியில் வைத்து விட்டு சமையலறை சென்று பால் பாக்கெட்டை உடைத்து காப்பி போட்டாள். அதற்குள் வாக்கிங் சென்று இருந்த நடரஜனும் வந்து இருந்தார். வீட்டில் காவ்யா செய்து இருந்த வேலைகளைப் பார்த்து விட்டு மனதிற்குள் சிரித்து விட்டு நாளிதழை படிக்க அமர்ந்தார். சமையல் அறையில் இருந்து வந்த காவ்யா "வாங்க அப்பா காப்பி குடியுங்கள் என்று தட்டை நீட்டினாள்". எப்போதும் அவர் முகத்தில் உள்ள புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு திரும்பவும் நாளிதழில் மூழ்கினார்.

சற்று நேரத்தில் கோவிலுக்கு சென்றிருந்த விசாலாட்சி வீட்டிற்குள் நுழைந்தார். வீடு சுத்தம் செய்து இருப்பதையும் வீட்டுக் காரரின் ஒரு கையில் காப்பியையும் பார்த்து விட்டு சமையலறைக்கு சென்றார். அங்கு காவ்யா இரண்டு கப்பில் காப்பி ஊற்றிக் கொண்டிருந்தாள். இதை பார்த்தவுடன் விசாலாட்சி காவ்யாவின் கைகளைப் பிடித்து இன்னைக்கு ஒரு நாள் தான் உனக்கு லீவு அப்படி இருக்கும் போது இவ்வளவு சீக்கிரமாய் எதுக்குமா நீ எழுந்து இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டும். கண்ணை பாரு அப்படியே தூக்க கலக்கம் தெரிகிறது என்று கூறி கன்னத்தை தடவி உச்சிமுகர்ந்தாள். நான் ஒருத்தி எதுக்குமா இருக்கிறேன். எல்லா வேலையும் அம்மா நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போம்மா போய் தூங்கு என்றாள். காவ்யா அம்மாவை ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். தாய் மற்றும் மகளுக்குள் நடந்த எல்லா விசயங்களையும் நாளிதழை பார்த்துக் கொண்டே நடராஜன் கேட்டுகொண்டு மனதில் சிரித்தார்.

Wednesday, February 3, 2010

வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..

வாகனங்களின் உதிரிப்பாகங்கள்(Spare Parts) பழுதாகி விட்டால் அதற்காக தனியாக அமைக்கப்பட்ட நம்பகமான கடைகளில்(Authorized Dealer) வாங்காமல், விலைக் குறைவாக கிடைக்கிறது என்பதால் சில்லறை வியாபாரிகளிடம் வாங்குவது சரியா?. என்பதை எனது பார்வையில் நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.
இப்போது பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இருச் சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அவற்றின் உதிரிப்பாகங்கள் அனைத்தும் அவர்களால் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. பெரும்பாலும் ஒப்பந்ததாரர்கள்(Sub Contract) மூலம் சிறிய தொழிற்கூடங்களில்(Small Scale Industries-SSI) உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் உதிரிப்பாகங்கள் அனைத்தும் பெரிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப் பட்டு அங்கு ஒருங்கிணைக்கப்(Assembly) படுகிறது. இப்போது பெரும்பாலான பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்திப் பிரிவுகள்(Manufacturing unit) மூடப்பட்டு விட்டன. ஒருங்கிணைக்கும் பிரிவுகள்(Assembly) மட்டுமே இயங்குகின்றன. அதற்க்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் முதன்மையாய் இருப்பது தொழிலாளர் பிரச்சனை தான். இதைப் பற்றி நான் இந்த பதிவில் எழுதவில்லை. வரும் பதிவுகளில் எழுதுகிறேன். ஒரு சின்ன உதாரணம். அசோக் லேலண்ட்(Ashok Leyland) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் லாரியில் உள்ள கியர் பாக்ஸ்(Gear Box) பாகத்தில் வரும் ஒரு சிறிய உதிரிப்பாகம்(Spare Parts) லிவர்(Gear Change Lever). இந்த லிவரானது கிண்டியில் உள்ள ஒரு தொழிற்கூடத்தில் மெஷினிங்(Machining) செய்யப்பட்டு, ஈக்காட்டுதாங்கலில் கலைமகள் தெருவில் மூன்றாவது குறுக்குச் சந்தில் உள்ள தொழிற்கூடத்தில் ட்ரில்லிங்(Drilling) செய்யப்பட்டு, அம்பத்தூரில் வாவின் பக்கத்தில் உள்ள தொழிற்கூடத்தில் கிரைண்டிங்(Grinding) செய்யப்பட்டு, பெருங்குடியில் உள்ள ஒரு தொழிற்கூடம் மூலம் ஹீட் ட்ரீட்மென்ட்(Heat Treatment) செய்யப்பட்டு, கந்தன்சாவடியில் உள்ள மின்மூலாம் பூசும் தொழிற்கூடத்தில் கோட்டிங்(Electro Plating) செய்யப்பட்டு பின்பு அசோக் லேலண்ட் நிறுவத்தை அடைகிறது. அங்கு அந்த லிவரானது கியர் பாக்ஸில் ஒருங்கிணைக்கப்படுகிறது.(Assembly). இப்பவே கண்ணைக் கட்டுதே.... சோ..இவ்வாறு சிறிய தொழிற்கூடங்களில்(SSI Unit) தாயரிக்கப்படும் உதிரிப்பாகங்களின் தரமானது அந்த தொழிற்கூடத்தில் உள்ள தர ஆய்வாளர்(Quality Inspector) ஒருவரால் ஆய்வு செய்யப்ப‌ட்டு பின்பு எந்த பெரிய நிறுவனம் மூலம் இந்த சிறிய தொழிற்கூடங்களுக்கு வேலை செய்ய உதிரிப்பாகங்கள் கொடுக்கப் படுகின்றதோ அந்த பெரிய நிறுவன‌த்தில் உள்ள தர கட்டுப்பாட்டாளர்(Quality Controller) ஒருவராலும் மீண்டும் அந்த உதிரிப்பாகத்தின் தரம் உறுதிப்படுத்த பட்டப் பின்பு வாகனங்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது(Assembly). இவ்வாறு உதிரிப்பாகங்களின் தரமான‌து இரண்டு இடங்களில் பிரிக்கப் படுகிறது. உதிரிப்பாகத்தின் அளவுகள்(Size) அனைத்தும் வரைப்படத்தாளில்(Drawing) உள்ள அளவுகள்(Size) மற்றும் விபரங்கள்(Specification) படி ஆய்வு(Check) செய்யப்படுகின்றது. வரைப்படத்தாளில் உள்ள விபரங்கள்(Specification) படி உதிரிப்பாகம் தாயரிக்கப் படவில்லையென்றால் அவை ஒதுக்கி(Rejection) வைக்கப்ப்டுகின்றன.இந்த உதிரிப்பாகம் எதனால் ஒதுக்கப் படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். ஒரு உதிரிப்பாகத்தில் வரைப்படத்தின்(Drawing) படி 9mm துளை(Drill) போட்டு அதில் 10mm டேப்(Tap) செய்ய வேண்டும். ஆனால் தவறுதலாக 9.5mm துளை(Drill) போடப்பட்டு 10mm டேப்(Tap) செய்யப் படுகிறது. 9mm துளைக்கு பதில் 9.5mm துளை போட்டதனால் இந்த உதிரிப் பாகம் ஒதுக்கப்படுகிறது. இதை மேலோட்டமாக பார்த்தால் பெரிய தவறாக தோன்றவில்லை. ஆனால் 9mm துளையில் போடப்படும் டேப்பின் தெரட் பிட்ச்(Thread Pitch) அளவு 1mm இருக்கும். 9.5mm துளையில் போடப்படும் டேப்பின் தெரட் பிட்ச்(Thread Pitch) அளவு 0.5mm தான் இருக்கும். எனவே 1mm தெரட் பிட்ச் கொண்டத் துளையில் மாட்டப்படும் போல்ட்(Bolt) ஆனது அதிக முறுக்குப் பலம்(High Tensile Strength) கொண்டதாகவும். 0.5mm தெரட் பிட்ச் கொண்டத் துளையில் மாட்டப்படும் போல்ட் ஆனது குறைந்த முறுக்குப் பலம்(Low Tensile Strength) கொண்டதாக இருக்கும். 0.5mm தெரட் பிட்ச் துளை கொண்ட உதிரிப்பாகத்தை வாகனத்தில் மாட்டினால் ஐந்து வருடங்கள் உழைக்க வேண்டிய பாகம் இரண்டு வருடத்தில் புடுங்கி விட்டு தனியே வருகிறது. இவ்வாறு தரம்(Quality Check) பிரிக்கப்படும் போது பல காரணங்களினால் உதிரிப்பாகங்கள் தர ஆய்வாளரால்(Quality Inspector) ஒதுக்கி(Rejection) வைக்கப் படுகின்றன.இந்த சிறிய தொழிற்கூடங்களில் தர ஆய்வாளரால் ஒதுக்க பட்ட உதிரிப்பாகங்களை வாங்குவதற்கு என்று சில வட நாட்டு வியாபாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த ஒதுக்கப் பட்ட உதிரிப்பாகங்களை மிக குறைந்த விலையில் தான் வாங்குவார்கள். அந்த தொழிற்கூடத்தைப் பொறுத்த வரையில் அந்த உதிரிப்பாகங்கள் கனிம கழிவில்(Scrap Bin) போட வேண்டியவை. எனவே அவர்களும் கிடைத்தது வரை லாபம் என்று விற்று விடுகிறார்கள். இவ்வாறு வாங்கிய உதிரிப்பாகங்களை எடுத்து சென்று அதை அழகாக பாலிஸ்(Polish) செய்து சிறிது ஆயில், கிரீஸ் போட்டு ஒரிஜினல் உதிரிப்பாகத்தின் பேக்கிங்கை விட அழகாக பேக் செய்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடம் நல்ல விலைக்கு விற்று விடுகிறர்கள். இவ்வாறு சிறிய தொழிற்கூடங்களின் ஒதுக்கப் பட்ட உதிரிப்பாகங்கள் அனைத்தும் சந்தையில் வந்து விடுகின்றன. இதில் இருக்கும் குறைபாடுகள் எதுவும் நமது கண்களுக்கு புலப்படுவது இல்லை. எனவே நாமும் விலை குறைவாக கிடைக்கின்றது என்று வங்கி நமது வாகனங்களில் மாட்டிவிடுகிறோம்.இவ்வாறு வாங்கி மாட்டுவதால் அந்த உதிரிப்பாகம் மட்டும் விரைவில் பழுதடைவதோடு மட்டுமல்லாது அதனுடன் தொடர்புடைய சில பாகத்தையும் பழுதடைய செய்கின்றது. நல்லா தான் போயிட்டு இருந்து தீடிரென பிரேக் பிடிக்கவில்லை என்று சொல்வதை கேட்டு இருப்போம். இவ்வாறு தீடிர் தீடிரென ஏற்படும் பிரச்சனைகளுக்கு உத்திரவாதம்(Guarantee) இல்லாத உதிரிப்பாகங்களை மாட்டுவதால் தான். நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்யும் போது வழியில் பார்த்தால் தெரியும் பல வாகனங்கள் புளிய மரத்தை சாய விடாமல் தாங்கிக் கொண்டு நிற்பதை...அந்நியன் படத்தில் கூட அம்பி விக்ரம் தனது இரு சக்கர வாகனத்தில் புதிதாக வாங்கி மாட்டிய‌ பிரேக் வயர் அறுந்து விட்டதால் கடைக் காரரிடம் சண்டை போடுவது போல் ஒரு காட்சி அமைத்து இருப்பார்கள்.இந்த குறைபாடு உள்ள உதிரிப்பாகத்தை விற்பதில் அதிக அளவு லாபம் சம்பாதிப்பது தொழிற்கூடத்திற்கும் லோக்கல் வியாபாரிக்கும் இடையில் உள்ள வட நாட்டு தரகர்கள் தான். உதாரணமாக ஒரிஜினல் உதிரிப்பாகத்தின் விலை 900 ரூபாய் என்றால் லோக்கல் வியாபாரி குறைபாடு உள்ள அதே உதிரிப்பாகத்தை 800 ரூபாய்க்கு விற்பனை செய்வான். அவன் இடைத்தரகரிடம் இருந்து வங்கிய விலை 700 ரூபாயாக இருக்கும். ஆனால் அந்த இடைத்தரகர் தொழிற்கூடத்தில் இருந்து வாங்கிய விலை 200 ரூபாயாக தான் இருக்கும். இது தான் கொடுமை...காசை சேமிக்கிறேன் என்று தரம் இல்லாத உதிரிப்பாகங்களை வாங்கி மாட்டினால் பின்பு பெரிய அளவில் காசை செலவு செய்ய வேண்டி வரும். இது உயிருடன் விளையாடும் விளையாட்டு என்பதையும் மறந்து விட வேண்டாம். இந்த தரம் இல்லாத உதிரிப்பாகங்கள் விற்பனையில் கொடிக்கட்டிப் பறக்கும் இரண்டு இடங்களை சென்னையில் கூறலாம். அவைகளில் ஒன்று சென்ட்ரல் பக்கத்தில் உள்ள மோர் மார்கெட் மற்றொன்று புதுப்பேட்டை. எனவே முடிந்த வரை உங்களின் வாகனங்களில் ஏதேனும் உதிரிப்பாகங்கள் பழுதடைந்தால் அந்த வாகனத்தின் ஒரிஜினல் முகவர்களிடம்(Original Authorized Dealer) இருந்து வாங்குவது நல்லது...நான் மேலே சொல்லியிருப்பது வாகங்களின் உதிரிப்பாகங்களுக்கு மட்டும் அல்ல. எல்லா வித தொழில் இயந்திரங்களுக்கும்(Equipments) பொருந்தும்.
Related Posts with Thumbnails