பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்ததும், பல்லுயிர் பெருக்கத்தின் செறிவு மிகுந்த பகுதியாக கருதப்படுவது அமேசான் மழைக்காடுகள் தான். இந்த காடுகளின் அழிவுகள் தான் இன்று பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.
அமேசான் மழைக்காடுகள்:
தென் அமெரிக்கா கண்டத்தில் பரந்து விரிந்துள்ளது இந்த மழைக்காடுகள். மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகையானது இந்த மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் தான் அமேசான் ஆறும், அதன் துணை ஆறுகளும் ஓடி பின் கடலில் கலக்கின்றன. இதன் பரப்பளவு சுமார் 7 மில்லியன் சதுரகிலோ மீட்டர். இதில் காடுகள் மட்டும் சுமார் 5.5 மில்லியன் சதுரகிலோ மீட்டர்.

இந்த காடுகள் சுமார் ஒன்பது நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. பிரேசில் நாட்டில் தான் இந்த மழைக்காடுகளின் 60 சதவீதம் உள்ளது. இந்த காடுகளில் சுமார் 2.5 மில்லியன் பூச்சியினங்களும், பத்தாயிரத்திற்கு அதிகமான தாவரயினங்களும், ஏறத்தாழ இரண்டாயிரம் பறவை மற்றும் பாலூட்டிகளும் வகைகள் இருப்பதாக ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மழைக்காட்டில் பாயும் ஆறுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான மீன் வகைகளும் காணப்படுகின்றன.
இந்த மழைக்காடுகளில் சுமார் 75,000 வகையான மரங்களும் தாவர இனங்களும் காணப்படுகின்றன. உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் இந்த காடுகளில் உள்ள தாவரங்கள் தான் உட்கொள்ளுகின்றன. எனவே இவைகளை பாதுகாப்பது சுற்றுபுறச்சூழலுக்கு மிக இன்றியமையாதது ஆகும்.
1960 ஆம் ஆண்டுவரை இந்தக் காடுகளுக்குள் இருக்கும் வளங்களை சுரண்டாமல் இருக்க கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு சில பண்ணைகள் மற்றும் பண்ணை விவசாயம் செய்ய, என்று உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அதில் இருந்து அந்த காடுகளின் அழிவுகள் தொடங்குகிறது.

1991 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் இந்த காடுகளின் நிலப்பரப்பு 415000 முதல் 587000 சதுர பரப்பளவு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2000 முதல் 2005 வரையிலான் இடைப்பட்ட ஐந்து வருடங்களில் இந்த காடுகளின் அழிவுகள் மிகப்பெரிய அளவு என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இதுவரையிலும் அழிக்கப்பட்ட காடுகளின் அழிவுகளின் சதவீதத்தை விட இந்த ஐந்து வருடங்களின் அழிவுகள் 18% அதிகரித்துள்ளது.
இதே சதவீதத்தில் இந்த காடுகள் அழிக்கப் படுமானால் இன்னும் 20 வருடங்களில் இந்த மழைக் காடுகளின் பரப்பளவு 40% வரை குறையும் அபாயம் உள்ளது. இந்த காடுகளின் அழிவுகளால் பசுமை இல்ல வாயுக்கள்(Green House Gases) கண்டிப்பாக பாதிக்கப்படும். இந்த பசுமை இல்ல வாயு பாதிப்புகளின் விளைவுகள் தான் பூமி வெப்பமயமாதல்(Global Warming).
இந்த பூமி வெப்பமயமாதல்(Global Warming) நிகழ்வின் வீரியத்தால் வரும் 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் துருவப் பகுதியில் உள்ள பனிப்பறைகள் முற்றிலும் உருகத் தொடங்கிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த பனிப்பாறைகளின் உருகுதலில் வெளியிடப்படும் மீதேன் போன்ற கரியமில வாயுக்கள் மேலும் வளிமண்டலத்தை பாதிக்கும். இப்படித்தான் ஒவ்வொரு விளைவுகளும் ஒன்றுடன் ஒன்றுத் சங்கிலித் தொடர் போல் தொடர்புடையவை. எனவே இந்த விளைவுகளின் காரணிகளை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

பாதுகாக்க எடுக்கப்படும் முயற்ச்சிகள்:
உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்திற்கு இழப்பு ஏற்படும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சூழலியல் வல்லுனர்கள், இயற்க்கை ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் போன்றோர் இந்தப் பல்லுயிர் பெருக்கத்தைப் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர். ஜான் முயர்(John Muir) என்பவர் இவைகளை பாதுகாப்பதிற்கும், அழிவின்றி பாதுகாப்பதிற்கும் உள்ள வேறுப்பாட்டை பின்வருமாறு விளக்குகிறார்.
இழப்பின்றி பாதுகாப்பது என்பது மனித ஊடுருவல் அல்லது உபயோகம் இல்லாத பாதுகாப்பான பகுதிகளாகும். இழப்பின்றி பாதுகாத்தல் என்ற வரைமுறையின் படி இயற்கையான வாழிடங்களுடன் பல்லுயிர் பெருக்கத்தை நிலையாக பேணுவதே பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியதுவத்தைக் கருத்தில் கொண்டுதான் ஐக்கிய நாடுகள் ஒருங்கினைப்பானது இந்த வருடத்தை பல்லுயிர் பெருக்கதின் ஆண்டாக(International Year of Biodiversity) அறிவித்துள்ளது.
பல்லுயிர் பெருக்க ஆண்டின் குறிக்கோள்கள்:
1) மக்களிடம் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தையும், அதன் முக்கியதுவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
2)அந்தந்த நாடுகளில் உள்ள குழுமங்களில் பல்லுயிர் பெருக்கத்தினை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஊக்குவிப்பது.
3)பல்லுயிர் பெருக்கத்தின் அழிவுகளை குறைக்கக் காணும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது.
4)அரசாங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தின் அழிவை தடுக்கு முயற்ச்சி எடுப்பது.
5)பல்லுயிர் பெருக்கத்தினை பற்றிய விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்களை இந்த 2010 ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது.
உயிரியல் பாதுகாப்பு வல்லுனர்கள் தற்போது உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் தன்மைகளை அறிவியல் கொண்டு கூறவது ஹோலோசீன் இழப்பு காலம்(The Holocene extinction) அல்லது ஆறாவது மொத்த இழப்பு காலம்(Sixth Mass Extinction match) என்பதாகும். பல தொல்பொருள் ஆரச்சியாளர்களின் பதிவேடுகளின் படி இந்த ஆறாவது மொத்த இழப்பானது அதன் முந்திய ஐந்து இழப்புகளை காட்டிலும் அதிகம் என்கிறது. இத்தகைய இழப்புகளில் இருந்து மீள்வதற்கு உயிரியல் பாதுகாப்பு வல்லுனர்கள் பல வரைமுறைகளை வகுத்து செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாமும் இந்த பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை உணர்ந்து பல்லுயிர்களை வாழவைப்போம். அவைகளின் வாழ்க்கை தான் நம்முடையாக வாழ்க்கையாக அமையும் என்பதையும் கருத்தில் கொள்வோம்.
Biodiversity is life.
Biodiversity is our life.
குறிப்பு: பல்லுயிர் பெருக்கத்தை பற்றி முழுவதும் எழுத வேண்டுமானால் குறந்தது இருபது இடுகையாவது எழுத வேண்டும். நான் என்னால் முடிந்த அளவு மேலோட்டமாகவே எழுதியுள்ளேன். இதன் அவசியத்தின் சிறுதுளியை விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுதியுள்ளேன். இதன் நீட்சிகளை முடிந்தால் அவ்வப்போது தொடர்வேன்.
.
.
.