சௌதி அரேபியாவில் இருந்து இந்த வேலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் விசாக்களுக்கு சம்பளம் 600 ரியாலில் இருந்து 1200 ரியால் வரை இருக்கும் (8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை). இந்த விசாவை வாங்கிய லோக்கல் டிராவல் ஏஜன்ட்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சரியான தகவல்களை சொல்லாமல் ஒவ்வொரு விசாவையும் லட்ச ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு வாங்கும் இளைஞர்களும் வெளிநாடு மோகத்தில் கேள்விகளை ஏதும் கேட்காமல் வாங்கிவிடுகிறார்கள்.
வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களில் பெரும்பாலனர்வர்கள் ஊரில் ஊதாரித்தனமாக சுற்றுபவர்களும், ஏதாவது பிரச்சனையில் மாட்டியவர்களுமாகத் தான் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வெளிநாட்டிற்கு போனாலாவது திருந்திட மாட்டானா என்று வீட்டில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த அளவுப் பணத்தை புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். இதில் சிலருடைய அம்மா/மனைவியின் தாலி செயின்கள் கூட விற்பனை அல்லது அடகுக் கடைக்குப் போவது மறுக்க இயலாது.
இவ்வாறு சௌதி வருபவர்களுக்கு முதலில் அறிமுகம் ஆகிறவர் கபில். இவர்தான் விசாவிற்கு சொந்த காரர், வருபவர்களை ஸ்பான்சர் செய்து அழைத்திருப்பவர். இவர் லோக்கல் அரபியாக இருப்பார். இவர்கள் கம்பெனி வைத்திருப்பவர்களாகவும் இருப்பார் அல்லது வேறு கம்பெனிகளுக்கு ஆட்களை சப்ளை பண்ணுபவராகவும் இருப்பார்.
சௌதி வந்தவுடன் அனைவருடைய பாஸ்போர்ட்டும் முதலில் கபில் கைக்கு போய்விடும். பின்னர் இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளேன் என்பதை அடையாளப்படுத்த ஒரு அட்டை கொடுக்கப்படும், அதன் அரேபிய சொல் இக்காமா(IQAMA). இந்த அடையாள அட்டை இருந்தால் தான் சௌதியில் சுதந்திரமாக சுற்றமுடியும். வாகனத்தில் அல்லது வெளியில் செல்லும் போது சௌதி போலீசார் பிடித்தால் முதலில் கேட்பது இந்த இக்காமாவை தான். வங்கியில் பணம் அனுப்ப வேண்டுமானால் கூட இந்த இக்காமாவை தான் கேட்பார்கள்.
இந்த இக்காமா சௌதி அரசால் வழங்கப்படும். இதை தருவதற்கு முன்பு நம்முடைய கைரேகை முதல் ஜாதகம் வரை அனைத்தும் அரசாங்க கோப்புகளில் பதிக்கப்பட்டுவிடும். பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கொடுக்கப்பட மாட்டாது. இக்காமா மட்டும் தான் உங்களிடம் கொடுக்கப்படும். சில கபில்கள் இந்த இக்காமாவையும் வாங்கி வைத்து கொள்வார்கள்.
உங்களுடைய கபில் சொந்தமாக கம்பெனி வைத்திருந்தால் அவருடைய கம்பெனியில் நீங்கள் வேலை செய்வீர்கள். சில கபில்கள் மேன் பவர் சப்ளை மட்டும் செய்வார்கள். அவர்கள் உங்களுக்கு வேறு கம்பெனியில் வேலை வாங்கி தருவார்கள். வேலை நேரம் 10-ல் இருந்து 12 மணி நேரம் இருக்கும்.
தங்குவதற்கு ரூம் உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள். ஒரு அறையில் நான்கில் இருந்து ஐந்து பேர் இருப்பார்கள். அனைவரும் சமைத்து தான் சாப்பிடுவார்கள்.(சமையல் செலவு + மொபைல் செலவு + இதர செலவுகள் எல்லாம் சுமார் 300-ல் இருந்து 500 ரியால் செலவாகும், மேலே சொல்லப்பட்ட சம்பளத்தில் இந்தத் தொகை போனால் மீதம் எவ்வளவு வரும் என்பதை ஊகித்து கொள்ளுங்கள்)
வெளிநாட்டிற்கு வரும் பெரும்பாலானர்வர்கள் முதலில் கொடுக்கும் லட்ச ரூபாய் கடனுக்கு வாங்கியதாக தான் இருக்கும். அதற்கு வட்டியை கொடுக்க தான் இவர்களுடைய சம்பளம் இருக்கும். சிலர் ஓவர் டைம் போன்ற வேலைகள் பார்த்து ஏதும் மீதம் பிடித்தால் உண்டு. சௌதியில் உள்ள தட்பவெப்ப நிலைகள் அனைவரும் அறிந்ததே. வெயில் என்றால் மண்டைய பிளந்துவிடும், குளிர் என்றால் மூக்கில் ரத்தம் வழிய செய்துவிடும். இந்த சூழ்நிலைகள் எல்லாம் சமாளிக்க வேண்டும்.
இவர்களுக்கு வேலை கொடுக்கும் கம்பெனியில் சரியாக வேலையிருந்தால் பரவாயில்லை. வேலையில்லையென்றால் கபில் உங்களுக்கு சம்பளம் கம்பெனியில் இருந்து தரமாட்டார். உங்களிடம் "நீங்கள் வெளியில் யாரிடமாவது வேலை செய்து கொள்ளுங்கள், ஆனால் எனக்கு மாதம் 200-ல் இருந்து 300 ரியால் கொடுத்து விட வேண்டும்" என்று சொல்லுவார். வெளியில் வேலை நீங்கள் தேடி கொள்ள வேண்டும்.
இதற்கு நீங்கள் உடன்படாமல் என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள் என்றால் கபில் மறுத்துவிடுவார். டிக்கட்டிற்கு நீயே பணம் பார்த்து கொள். உன்னுடைய பாஸ்போர்ட் என் கையில் இருக்கிறது, அது வேண்டுமானால் இவ்வளவு பணம் கொடுத்துவிட்டு செல் என்று ஒரு பெரிய அமௌண்டை சொல்லுவார்கள்.(இதற்காகவாவது நீங்கள் வேலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்). இந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் ஒரு பகுதியினர்.
கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு முதல் மூன்று, நான்கு மாதங்கள் சொல்லிய சம்பளம் கொடுக்கப்படும். பின்பு சம்பளம் கொடுப்பதிலும் பிரச்சனை பண்ணுவார்கள். லட்ச ரூபாய் கடனில் வந்த ஒருவனுக்கு சம்பளம் சரியாக கொடுக்கப்பட வில்லையென்றால் பெரிய மனகஷ்டம் வந்து சேரும். மேலும் இவர்கள் தங்கவைக்கப் பட்டிருக்கும் இடங்கள் பெரும்பாலும் கிராமமாகத் தான் இருக்கும். கபிலின் உதவியில்லாமல் இவர்கள் நகரங்களுக்கு வரமுடியாது. எனவே இவர்களின் கஷ்டங்களையும் பிறருடன் பகிந்து கொள்ளவும் முடியாது.
சரியாக சம்பளம் கொடுக்காமல் பிரச்சனை பண்ணுவதால் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கபிலின் பிடியில் இருந்து இவர்கள் வெளியில் சாடிவிடுவார்கள். இவர்களிடம் எந்த பேப்பரும் இருக்காது(பாஸ்போர்ட், இக்காமா போன்றவை). இந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் ஒரு பகுதியினர்.
ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அங்கு குறைவான சம்பளம் தருகிறார்கள், வெளியில் வேலை செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு வெளியில் சாடும் ஒரு கூட்டமும் இருக்கிறது. இவர்களிடமும் எந்தவித பேப்பரும் இருக்காது.

இவ்வாறு எந்தவித பேப்பர்களும் இல்லாமல் எவ்வாறு இங்கு சமாளிக்கிறார்கள்?. எப்படி இந்தியா வருகிறார்கள் என்பதை அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.
10 பேர் சௌதியில் வேலை செய்கிறார்கள் என்றால் அதில் 6 பேர் நான் மேலே சொன்ன மூன்று பிரச்சனைகளில் மாட்டுபவர்கள். அப்படியானால் எத்தனை சதவீதம் என்று நீங்களே கணக்கிட்டு பாருங்கள்.
-------------தொடரும்--------------
குறிப்பு: இந்தியாவிற்கு வரும் காலம் நெருங்கிவிட்டதால் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதமுடியவில்லை. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பகிருவேன்.