"ஆடி பட்டம் தேடி விதைக்கணும்" என்று ஒரு பழமொழி உண்டு. நெல் விவசாயம் செய்யஆடி மாதம் விதைத்தால் தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். எனவே விவசாயிகளை பொறுத்தவரையில் ஆடி மாதம் என்பது பயிர்கள் நடவு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
ஆடி மாதம் நடப்படும் செடி, மரம், கொடி எதுவாக இருந்தாலும் நன்றாக வளரும், நல்ல பலனை தரும் என்பது எங்கள் ஊரில் வழக்கில் இருக்கும் ஒரு ஐதீகம். இயற்கையாக எங்கள் ஊரில் ஆடி மாதம் மழை பொழியும், எனவே இந்த மழையும் எங்கள் ஊரில் மரம், செடி இந்த மாதத்தில் நடுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது. அதனால் பெரும்பாலும் எங்கள் ஊரில் ஆடி அமாவாசை அன்று எல்லோர் வீடுகளிலும் ஒரு மரமாவது நடுவார்கள். மரம் வைக்க இடம் இல்லாதவர்கள் ஒரு ரோஜா செடியாவது வீட்டின் முன்புறம் நட்டு வைப்பார்கள்.
எங்கள் வீட்டிலும் நான், எனது அக்கா, மற்றும் அண்ணன் மூன்று பேரும் போட்டி போட்டு செடிகள் நடுவோம். யாருடைய செடி முதலில் "பூ" பூக்கும் என்பதில் போட்டி நடக்கும். ரோஜா செடியாக இருந்தால் யாரு வைத்த கம்பு முதலில் தளிர்விடுகிறது என்று போட்டி இருக்கும். ரோஜா செடி வளர்க்கும் நாங்கள் பெரும்பாலும் கடையில் இருந்து தொட்டி செடி வாங்கி வைப்பது இல்லை. ஏற்கனவே வேறு சொந்தகாரர்களின் வீடுகளில் இருக்கும் ரோஜா செடியில் இருக்கும் முதிர்ந்த கம்புகளை வெட்டி வந்து எங்கள் வீட்டில் வைப்போம். இரண்டு வாரங்களில் அந்த கம்பு தளிர்விட ஆரம்பிக்கும். ஊன்றி வைக்கப்பட்டிருக்கும் ரோஜா செடியின் கம்பை தளிர்விடுவதற்கு முன்பு சிறிது அசைத்து விட்டாலே அது தளிர் விடாமல் காய்ந்து போகும். எங்கள் வீட்டில் போட்டியின் காரணமாக அடுத்தவரின் ரோஜா கம்பை அசைத்து தளிர்விடாமல் செய்யும் வில்லங்க வேலையும் நடக்கும், யாரு கம்பை அசைத்தது என்று எங்கள் மூவருக்கும் சண்டையும் நடக்கும். ஒரு வாரம் ஆகிவிட்டது இன்னும் தளிர் விடவே இல்லையே என்று அந்த கம்பை பிடுங்கி பார்த்து பல்பு வாங்கிய அனுபவமும் எனக்கு உண்டு.
ஆடி மாதங்களில் எங்கள் ஊரில் அதிகமாக மரக்கன்று மற்றும் பூச்செடி வியாபாரிகளை பார்க்கமுடியும். இதுமட்டுமல்லாது மரம், செடி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதத்தில் எங்கள் மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் நடைபெறும் "வாவுபலி பொருட்காட்சி" ஒரு வாய்ப்பாக அமையும். இங்கு எல்லா விதமான மரக்கன்றுகளும், பூச்செடிகளும் கிடைக்கும்.
இந்த வாவுபலி பொருட்காட்சியானது 1926 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. அந்தகாலத்தில் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் நடத்துவதற்கு ஆடிமாதம் இறுதி அமாவாசை அன்று குழித்துறை ஆற்றின் இருபுறமும் மக்கள் கூடுவார்கள். இவ்வாறு கூடும் மக்களை கவரும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த வாவுபலி பொருட்காட்சி.
அதனை தொடர்ந்து வருடம்தோறும் இந்தபொருட்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மூன்று நாட்களாக ஆரம்பிக்கபட்ட இந்த பொருட்காட்சியானது விதவிதமான கோழிகள், மற்றும் மரக்கன்றுகள், பூச்செடிகள் என மக்களின் பார்வைக்கு வைத்தன. ஆனால் இப்போது மரம், செடி மற்றும் மலர் கண்காட்சிகள் மட்டுமல்லாது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று பட்டியல் நீண்டு 20 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சிக்கு வந்து செல்பவர்கள் வீட்டிற்கு திரும்பும் போது கண்டிப்பாக ஒரு மரக்கன்றாவது வாங்கி செல்வார்கள். மரம் நடுவதற்கு வசதியில்லாதவர்கள் ஒரு பூச்செடியாவது வாங்கி செல்வார்கள். எப்படியோ மரங்கள் அழிந்து வரும் இக்காலத்தில் இது போன்ற மரக்கன்றுகளின் சந்தைகள், கண்காட்சி போன்றவைகள் அவசியமாகின்றன. இங்கு வந்து ஆர்வமாக மரங்களை வாங்குபவர்களை பார்க்கும் போது நமக்கும் அவற்றின் மீதான ஈர்ப்பு மனதில் வந்து விடுகிறது.
86-வது வாவுபலி பொருட்காட்சி இந்த வருடம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 20- ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 8- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை பற்றிய தினமலர் செய்தியின் லிங்க் கீழே இணைத்துள்ளேன்.
குழித்துறை வாவுபலி பொருட்காட்சி கோலாகல துவக்கம்
குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்
நன்றி,
தினமலர்.
கடந்த ஆண்டு எனது நண்பன் வாவுபலி பொருட்காட்சிக்கு சென்று வந்த போது மொபைலில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
.
.
.
Tuesday, August 2, 2011
Subscribe to:
Posts (Atom)