அந்த இரு மாணவர்களும் எந்த பதிலும் சொல்லாமல் பள்ளியை விட்டு வெளியே சென்று விட்டனர். மறுதினம் காலை பத்து மணியளவில் பள்ளியின் மதில்சுவர் அருகில் இருந்து ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்கின்றது. என்னவென்று தலைமையாசிரியர் அறையை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார். பின்பு அங்கிருந்த ஆசிரியர்களிடம் விசாரித்தார். அந்த வெடிச்சத்ததிற்கு காரணம் உங்களால் நேற்று வெளியேற்றப் பட்ட அந்த இரண்டு மாணவர்கள் தான் என்று நடந்த விபரங்களை ஆசிரியர்கள் கூறினர். இதை கேட்டதலைமையாசிரியர் கோபம் கொண்டு அறைக்கு சென்று தொலைபேசியின் மூலம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து கூட்டி சென்றனர்.
மறுநாள் காலை வழக்கம் போல் எங்கள் ஊரில் பாத்திரிகை வருகிறது. அதில் "பள்ளியின் மீது வெடிகுண்டி வீச்சு" என்ற தலைப்புடன் செய்தி போடப்பட்டிருந்தது. மேலும் அதற்கு காரணமாக அந்த பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களும் கைது செய்யபட்டனர் எனவும், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர் எனவும் சொல்லப் பட்டிருந்தது. மேலும் அதனுடன் சேர்த்து ஒரு பெண்மணியின் பெயரை போட்டு, இவர்தான் அந்தமாணவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்ததாகவும், அவர் நடத்தி இருந்த கடையில் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கைப்பற்ற பட்டதாகவும் படத்துடன் பிரசுரிக்கப் பட்டிருந்தது. இந்தசெய்தி தான் பத்திரிகையின் பிரதான செய்தியாக அன்று வந்திருந்தது.

எங்களது ஊரில் ஊனமுற்ற பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே பெட்டிககடை ஒன்று வைத்திருந்தார். அது நான் படித்த பள்ளியின் அருகிலேயே இருந்தது. அதனால் அந்த கடையில் பள்ளி மாணவர்களை கவருவதற்காக மிட்டாய்கள் மற்றும் பரிசுச் சீட்டு போன்றவை அதிகமாக இருக்கும். அதோடு அல்லாமல் அந்தகடையில் சிறிய பட்டாசுகளும் கிடைக்கும். இதை அவர் விற்பதற்கு அரசிடம் இருந்து எந்தவித உரிமமும் வாங்கபடவில்லை. அங்கு விற்கப்படும் பட்டாசுகளில் முக்கியமானது "எறிபடக்கு" என்று அழைக்கப்படும் ஒருவகை பட்டாசு. இதன் உள்பகுதியில் வெள்ளை கல் மற்றும் வெடிமருந்து வைக்கப்பட்டு வெளியில் காகிதங்களால் சுற்றப்பட்டு சிறிய எலுமிச்சைப் பழஅளவு இருக்கும். இதை தரையில் ஓங்கி அடித்தால் "பாடார்" என்ற சத்தத்துடன் வெடிக்கும். இந்தவகை பட்டாசை சிறுவர்கள் வாங்கி வெடிப்பது உண்டு. பாதுகாப்பாக இருப்பதால் பெரியவர்களும் கண்டுகொள்வது இல்லை. குறிப்பாக இதற்கு நெருப்பு தேவையில்லை. தென்பகுதியில் உள்ளவர்கள் இதைப்பற்றி அறிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பத்திரிகையில் அன்று சொன்னது போல் அன்று பள்ளியின் மீது வெடிகுண்டு வீசப்படவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்றால், பள்ளியில் இருந்து அனுப்பபட்ட அந்த இரண்டு மாணவர்களும் தலைமையாசிரியர் கூறியது போல் மறுநாள் பெற்றோரை பள்ளிக்கு கூட்டி வரவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் இருவரும் அந்தஊனமுற்ற பெண்ணின் கடையில் இருந்து எறிபட்டாசை வாங்கி கொண்டு வந்து பள்ளியில் மதில்சுவரின் மீது எறிந்து வெடிக்கசெய்தனர். உண்மையில் அது வெடிகுண்டு இல்லை, பட்டாசு தான். இது தலைமையாசிரியருக்கும் தெரியும். ஆனால் இந்தமாணவர்களின் ஒழுங்கீனங்களை ஏற்கனவே அறிந்திருந்தபடியாலும், பட்டாசை கொண்டுவந்து பள்ளியின் மதில் மேல் எறிந்து விளையாடியதும் அவரது கோபத்தை அதிகப்படுத்தியது. இவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவே அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளும் அந்த இரண்டு மாணவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், எங்கு இருந்து வெடிகுண்டு வாங்கினீர்கள் என்று கேட்டு விட்டு அந்த ஊனமுற்ற பெண்மணியையும் கைது செய்தனர். மறுநாள் பத்திரிகையில் ஒரு பெரியகதையை எழுதி இருந்தார்கள். அதில் பெரும்பகுதி புனையப்பட்டதாகவே இருந்தது.
இந்தசம்பவத்தில் அரசியல் விளையாடியதா? அல்லது பத்திரிகைகள் தனது சுயநலத்துக்காக மிகைப் படுத்தி எழுதினவா? என்று நான் அறியேன். ஆனால் சில விசயங்கள் என்னை உறுத்தியது. பத்திரிகையில் தன்னுடைய பெயரை பார்த்த அந்த ஊனமுற்ற பெண்மணி மனதளவில் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார், பாதிக்கப்பட்டிருப்பார். அந்த மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும். அந்த சம்பவத்தில் தொடர்புடைய பையன் ஒருவனின் அப்பா வெளி நாட்டில் வேலை செய்து வந்தார். மகனின் படிப்பு முடித்தவுடன் தன்னுடன் அழைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் பையன் செய்த காரியத்தால் அவருடைய கனவு தகர்ந்தது. இனி ஜென்மத்திற்கும் வெளிநாடு போக முடியாதபடி ஆகிவிட்டது, காரணம் அந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஐயா காவல்துறை கணவான்களே! பத்திரிகை வியாதிகளே! எந்தஒரு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் போதும், எழுதும் போதும் சிறிது மனசாட்சியுடன் கையாளுங்களேன்.