Wednesday, June 25, 2014

எங்கள் ஊர் ஓணப்பந்தாட்டம்_யாருக்குத் தெரியும்?

நான் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களால் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய இரண்டு விளையாட்டுகளில் ஒன்று கபடி இன்னொன்று ஓணப்பந்தாட்டம். இந்த இரண்டு விளையாட்டுகளும் மிகவும் வெறித்தனமாக விளையாடப்படும். இவைகளுக்குத் தீனிப் போடும் வகையில் ஊரில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் இந்த இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் பக்கத்து ஊர்களில் இருந்து அணிகள் வரவழைக்கப்பட்டு அதிகமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். சும்மா ஊருக்குள்ள இருக்கிறவன் இரண்டு அணிப்பிரித்து விளையாடினாலே பந்தயம் அனல் பறக்கும். இதில் வெளியூரில் இருந்து அணிகள் வந்து விளையாடினால் சொல்லவே வேண்டாம். ஊர்களில் பண்டிகையின் போது நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், இந்த இரண்டு விளையாட்டுகள் மட்டும் தனியாகக் கவனம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், எல்லா விளையாட்டுப் போட்டிகளும் முடிந்தபிறகு இறுதியில் தான் இந்தக் கபடியையும் ஓணப்பந்தாட்டத்தையும் ந‌டத்துவார்கள்.

கபடி விளையாட்டின் சுவாரஸ்யத்தைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த ஓணப்பந்தாட்டம் என்ற பெயரே பலருக்குப் புதிதாக இருக்கலாம். எனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைத் தவிர வேறு எங்கும் நான் இந்த விளையாட்டை, விளையாடியதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஓணம் + பந்தாட்டம் என்று பிரித்து வைத்துப் பார்த்தால் தமிழருக்கான விளையாட்டாகத் தெரியவில்லை, கேரளாவின் விளையாட்டாகத் தெரிகிறது. ஆனால் நான் இணையத்தில் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளை வைத்துத் தேடியப் போது கேரளாவில் ஓணப் பண்டிகையின் போது விளையாடப்படும் ஒரு விளையாட்டுடன் சில விதிமுறைகளும் ஒத்துப் போகிறது. அந்த விளையாட்டின் பெயர் தலைப்பந்துகழி. கேரளாவில் கிராமங்களில் விளையாடும் நடன் பந்துகழி என்ற‌ இன்னொரு விளையாட்டும் இந்த ஓணப்பந்தாட்டத்துடன் ஒத்து போகிறது. அதன் யூ‍_டியூப் வீடியோவை இணைத்துள்ளேன்.



கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததாலோ என்னவோ, அவர்களின் வழக்குச் சொற்கள், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சிலவற்றை இங்குப் பார்க்கமுடியும். மேலும் எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் கட்டிடவேலையில் சிறப்பாகச் செய்யும் திறன் பெற்றவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைச் செய்வதற்கு முன்பு கேரளாவில் தான் வேலைச் செய்து வந்தார்கள். இப்போதும் எங்கள் ஊரிலிருந்து பலர் கேரளாவில் கட்டிடவேலைகளைக் காண்டிராக்ட் எடுத்துச் செய்து வருகிறார்கள். இவ்வாறு கேரளாவில் காண்டிராக்ட் எடுத்து வேலைச் செய்பவர்கள் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் இருந்து தான் ஆட்களைக் கொண்டு சென்று வேலையை முடித்துக் கொடுப்பார்கள். கட்டிடவேலைச் செய்பவர்களில் மகன்கள் பள்ளியில் கிடைக்கும் இரண்டு மாத கோடைவிடுமுறையில் அப்பாவுடன் கேரளாவிற்குச் சென்று கையாள் வேலைச் செய்து அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்குமளவிற்குச் சம்பாதித்துவிடுவார்கள். பல இளைஞர்களின் பால்யகாலம் கேரளாவில் தான் கழிந்திருக்கிறது. அவர்கள் தான் இந்த ஓணப்பந்தாட்டத்தை எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. விளையாட்டைப் பற்றிய வரலாற்று ஊகத் தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன். இனி இந்த‌ விளையாட்டுமுறை பற்றிச் சிலவற்றை எழுதுகிறேன்.

இந்த விளையாட்டு இரண்டு அணிகளாகப் பிரித்து விளையாட வேண்டும். ஓர் அணிக்கு ஆறு முதல் ஏழு பேர் இருப்பார்கள். முதல் அணியானது பந்தை அடித்தாடும் போது எதிர் அணியானது தடுத்தாட வேண்டும். இந்த விளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பந்து மெல்லிய‌ காட்டன் துணியால் வலுவாகச் சுற்றப்பட்டு வெளியில் நூலால் பின்னப்படும். கைக்கு அடக்கமான அளவில் இருக்கும். இந்தப் பந்தை எவர் உருவாக்கினாலும் அவரது வீட்டில் உள்ள காட்டன் லுங்கி ஒன்று கண்டிப்பாகக் காணாமல் போகும். இந்த விளையாட்டுக்கு என்று அளவுகளை வரையறைச் செய்து களம் அமைப்பது இல்லை. இருக்கும் இடத்தில் நீள, அகலமாகக் கோடுகள் போட்டு இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பக்கம் அடித்தாடும் அணியும், மறுபக்கம் தடுத்தாடும் அணியும் நிற்கும். நீள‌ வாக்கில் இரு புறங்களிலும் ஒன்றரை அடி விட்டு பவுள் கோடுகள் போடப்பட்டிருக்கும்.

எந்த அணி அடித்தாட வேண்டும்? தடுத்தாட வேண்டும் என்பதை முதலில் டாஷ் போட்டுதான் முடிவுச் செய்யப்ப‌டும். அடித்தாடும் அணியில் உள்ள முதல் வீரர் களத்தின் ஒரு முனையில் நின்று, பந்தைத் தனது கையால் ஓங்கி அடித்து மறுபக்கம் இருக்கும் தடுத்தாடும் அணியின் பக்கம் அனுப்புவார். தடுத்தாடும் அணியில் உள்ள வீரர்கள் அதைக் காலால் மிதித்து எதிர் அணியின் பக்கம் திருப்புவார்கள். எவர் ஒருவர் பவுள் கோட்டிற்கு வெளியில் அடிக்கிறாரோ அல்லது எதிர் அணியால் அடிக்கும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் விட்டாலோ அவுட் என்று அறிவிக்கப்படும். அடித்தாடும் அணியில் உள்ள வீரர் பந்தை அவுட் பண்ணினால் தடுத்தாடும் அணி இப்போது அடித்தாடும் அணியாக இருந்து பந்தை கையால் அடித்து எதிர் அணிக்கு செலுத்தும். அடித்தாடும் அணியால் மூன்று முறை நேர்த்தியாக அடித்து எதிர் அணியின் தடுப்பாட்டத்தைச் ச‌மாளித்து வெற்றிகரமாக முடித்தால் அது ஒரு கழி என்று அழைக்கப்படும். மொத்தமாக ஏழு கழிகள் உண்டு.

1) ஒற்றை
2) இரட்டை
3) முறுக்கி
4) தாளம்
5) காவடி
6) நிலை (இது மட்டும் காலால் உதைத்து அடிக்கப்படும்)
7) பட்டம்

எந்த அணி முதலில் இந்த ஏழு கழிகளையும் முடிக்கிறதோ, அந்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டில் உள்ள சில சுவரஸ்யங்கள்: 

#அடித்தாடும் அணியால் அடிக்கப்பட்ட பந்தைத் தடுத்தாடும் அணி வீரர்கள் காலால் எதிர் கொள்ள மூன்று வகையான உத்திகளைக் கையாளுவார்கள். 

மடக்கை: காலை மடக்கிப் பந்தை உதைப்பது. இந்த முறையில் பந்தை எதிர் கொண்டால் கண்டிப்பாக எதிர் அணியால் அந்தப் பந்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகக் கடினமாகக் காரியம்.(வாலிபாலில் கட்‍ ஷாட் அடிப்பது போல) 

குத்து: எதிர்வரும் பத்தை முன்னங்காலால் குத்து/கோரி விடுவது(இவ்வாறுச் செய்வதால் பந்து மேலே எழுப்பும். எதிர் அணியினர் அதைக் கேட்ச் பண்ணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், கேட்ச் பண்ணிவிட்டால் அவுட் என்று அறிவிக்கப்படும்) 

சேப்பை: காலை ஒருகளித்துத் தட்டிவிடுவது(கட்டுக்குள் அடங்காத தாக்குதலைச் ச‌மாளிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துவார்கள்)

#காலால் உதைக்கும் போதோ அல்லது கையால் அடிக்கும் போதோ பந்து மேல் எழும்பி எதிர் அணியினரால் பிடிக்கப்பட்டால் அவுட் என்று எடுத்துக்கொள்ளப்படும். 

#இவ்வாறு எதிர் அணியில் உள்ள வீரரால் பிடிக்கப்படும் போது மற்ற வீரர்களில் கைகள் முட்டிக்குக் கீழ் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வீரரும் கையை உயர்த்திப் பிடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு கைகளை உயர்த்தினால் பிடித்த பந்து செல்லுபடியாகாமல் அடுத்த அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும். 

#அதேபோல் காலால் ஒருவர் பந்தை உதைக்கும் போது அந்த அணியில் உள்ள வேறு எவரும் கால்களைக் கொண்டு சென்று முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் எதிர் அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டு மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியது தான். நான் இங்கு எழுதியிருப்பதைப் படித்துக் குழப்பமடைந்தால், அந்தக் குழப்பம் என்னுடைய எழுத்தினால் விளைந்தக் குழப்பமே அல்லாமல் விளையாட்டின் குழப்பம் அல்ல. கண்டிப்பாக உடல்வலிமையும், உத்திகளைக் கையாளும் முறையும் இதற்குத் தேவை. துணியால் பந்து இறுகச் சுற்றப்படுவதால், அதை அடிக்கும் போது காலும் கையும் வலி எடுக்கும். தரையில் கால் மோதி நகங்கள் சிதைவதும் உண்டு.

இந்த விளையாட்டை நான் ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது மிகவும் விரும்பி விளையாடுவேன். எங்களுக்கு என்று ஒரு மைதானம் இருந்தது. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று ஒரு டீம் எப்போதும் இருக்கும். கிரிக்கெட் போர் அடிக்கும் போது இரு அணியாகப் பிரித்து இந்த ஓணப்பந்தாட்டத்தை விளையாடுவோம். இந்த விளையாட்டை மிகவும் அனுபவித்து விளையாடுவோம். பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இந்த விளையாட்டைப் போட்டியாக நடத்துவதால் இன்னும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இன்றைய நிலையில் எங்கள் ஊரில் இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று பள்ளிப் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் கூடத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கே இந்த விளையாட்டின் பல விதிமுறைகள் மறந்துவிட்டது. அப்போது என்னுடன் விளையாடிய நண்பர்களிடம் கேட்டுதான் இந்தப் பதிவை எழுதி இங்குப் பதிந்துவைக்கிறேன்.

அவனவன் வாழ்க்கையே தொலைந்துவிட்டது! என்பதற்கே கவலைப்படவில்லை, இதில் விளையாட்டுத் தொலைந்துவிட்டது என்று வந்துவிட்டான் என்று நீங்கள் புலம்புவது எனது காதுகளுக்குக் கேட்கிறது.

.

.

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
வாழ்க்கையில்மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts with Thumbnails