நான்
ஹைதிராபாத்திலிருந்து
சவுதி வருவதற்கு முன்பு தான் வீடு கட்டும் வேலையை முழுமையாக முடித்திருந்தேன். அதற்காக என்னுடைய வீட்டில் உள்ளவர்களின் நகைகள் அனைத்தும் வங்கியில் அடமானம் வைத்திருந்தேன், மேலும் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் கடனாகவும் வாங்கியிருந்தேன். சவுதி வந்தவுடன் முதல் வேலையாக இங்குள்ள வங்கிகளில் லோன் வாங்க முடியுமா! என்று தான் ஒவ்வொரு வங்கியாக நானும், இன்னொரு நண்பரும் அலைந்தோம். இந்தியாவில் என்னால் எந்த வங்கியிலும் லோன் வாங்க முடியவில்லை. இந்த நிறுவனங்களுக்கு லோன் கொடுக்கலாம் என்று வங்கிகளால் பரிந்துரைக்க பட்ட நிறுவன லிஸ்டில் என்னுடைய நிறுவனம் இல்லை. என்னுடைய சம்பளமும் எந்த வங்கி கணக்கிலும் தொடர்ச்சியாக வருவது இல்லை, நாம் தான் நாடோடி ஆயிற்றே! அப்புறம் எங்கே!
சவுதியில்
இருக்கும் வங்கிகளிலும் நமது நாட்டில் இருக்கும் அதே நடைமுறை தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்களுக்குக் கூப்பிட்டு கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள், ஆனால் சிறிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை கண்டு கொள்வதில்லை. என்னுடைய நிறுவனத்திற்குத் தான் இந்தியன் வங்கிகளிலேயே லோனுக்கு தகுதி இல்லை என்று சொல்லும் போது சவுதியில் இருக்கும் வங்கிகள் மட்டும் கூப்பிட்டா கொடுக்கப் போகிறது, அவர்களும் இல்லை என்று தான் கை விரித்தார்கள்.
சவுதி
வங்கிகளில் உள்ள லோன் முறைகளைப் பற்றி அலுவலகத்தில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தான், நாம் ஏன் வங்கிகளில் லோன் வாங்க வேண்டும், நாம் அனைவரும் சேர்ந்து ஒரு பண்ட் சிஸ்டம் (Fund System) உருவாக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது, நண்பர்கள் எல்லோரும் அதை வரவேற்றதால் உடனடியாக செயல் படுத்தும் திட்டத்தில் இறங்கினோம். வெளிநாட்டிற்கு வேலை தேடும் நண்பர்கள் எல்லோருக்கும் பணத்திற்கான தேவைப் பெரிய அளவில் இருக்கும், அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வருபவர்களுக்குச் சொல்லவே வேண்டாம். வீடு கட்டுவது, அக்காவின் திருமணம், பெற்றோரின் மருத்துவ செலவிற்கு வாங்கிய கடன் என்று எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றுவதைத் தான் குறிக்கோளாகக் கொண்டு உழைப்பார்கள்.
நான்
வந்திருந்த ப்ரொஜெட்டில் பணிசெய்ய வந்திருந்தவர்களில் பாதி பேர் முதல் முறையாக வெளி நாட்டிற்குச் சம்பாதிக்க வந்தவர்கள், அனைவரும் ஒரு பெரிய லிஸ்டுடன் தான் வந்திருந்தார்கள். சிலருக்கு உடனடியாக ஒரு பெரிய பண தொகை தேவைப்பட்டது.
முதலில் ஒரு 5 லட்சம் பண்ட் உருவாக்கலாம், அதை மாதம் தோறும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்று பேசினோம், அதிக மாதம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து மாதம் ஒருவர் ஐம்பதாயிரம் வீதம் பத்து பேர் ஐந்து லட்சம். பத்து மாதத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் ஒருவருக்கு ஐந்து லட்சம் கிடைக்கும் படி பண்டை முடிவு செய்தோம். இப்போது யாருக்கு முதலில் ஐந்து லட்சம் கொடுப்பது, யார் இறுதியில் எடுப்பது என்ற கேள்விகள் வந்தது.
ஐம்பதாயிரம்
ரூபாய் முதலீடு செய்து முதல் மாதத்தில் ஐந்து லட்சம் கிடைப்பதற்கும், பத்து மாதம் ஐம்பதாயிரம் வீதம் முதலீடு செய்து இறுதியில் ஐந்து லட்சம் கிடைப்பது என்பதையும் ஒன்றாகக் கருத முடியாது. இருவருக்கும் கிடைக்கும் தொகை சமமாக இருந்தால் எல்லோரும் முதல் மாதமே எனக்கு வேண்டும் என்று சொல்லுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால், முதல் மாதம் பண்டை எடுப்பவரின் தொகையில் சிறிய சதவீதம் அளவு தொகையைக் குறைத்து மாற்றம் செய்து அப்படியே வரிசையாக எல்லா மாதத்திலும் சீரிய மாற்றம் செய்து கடைசி மாதம் எடுப்பவருக்கு முழுத் தொகையை கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். முதல் மாதம் பண்டை எடுக்கும் ஒருவருக்குக் கொடுக்கும் முழுத்தொகை குறைவாக இருப்பதால் அதில் வரும் மீத பணத்தைக் கட்டும் ஒவ்வொருவரின் இஎம்ஐ யில் குறைக்கலாம் என்றும் பட்டியல் தயார் செய்தோம். கீழ்கண்ட அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியலாம்.
அவரவர்
தேவைக்கு ஏற்ப எவருக்கு முதல் பண்ட் வேண்டும், எவருக்கு இரண்டாவது மாதம் வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்து பட்டியலைத் தயாரித்து கொண்டோம். நாங்கள் வெளிநாடுகளில் ப்ரொஜெக்ட்களில் இருப்பதால் எல்லோரும் ஒரே நேரத்தில் வருட விடுமுறையை எடுக்க முடியாது. அதனால் வருட விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் போது பெரும்பாலும் கைக்கு இந்தத் தொகை வருமாறு அமைத்துக் கொள்வோம். வெளிநாட்டில் பணிசெய்து தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஊரில் வீடு கட்டுதல், அக்காவின் திருமணம் என்ற செலவுகளுக்கு இது கிடைக்கும் படி பார்த்து கொள்வோம், திடிரென ஒருவருக்கு பணம் தேவைப்பட்டாலும் அந்த மாதத்தில் இந்த பண்ட் பணத்தை அவருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு அவருடைய மாதம் வரும் போது மற்றவர் எடுத்துக் கொள்வோம். முழுமையாக ஒருவர் ஐம்பதாயிரம் சேமிக்க முடியாது என்றால், இரண்டு பேர் சேர்ந்தும் கட்டலாம் என்றும் நடைமுறை படுத்தினோம். எங்கள் நிறுவனத்தில் நாங்கள் பதிமூன்று பேர் சேர்ந்து இந்தப் பண்டை நடத்தி வருகிறோம், எழு பேர் முழுமையாகச் சேமிக்கிறோம், மீதம் ஆறு பேர் பாதி பாதியாக சேமிக்கிறார்கள். இவ்வாறு ஒன்றரை ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இரண்டு பண்டுகளை முழுமையாக முடிக்கப் போகிறோம்.
இதற்காக
எவரும் மெனக்கெடுவது இல்லை, இந்தப் பண்டில் சேர்த்திருக்கும் அனைவரும் ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளை அவரவர் வங்கி கணக்குகளில் இணைத்து வைத்திருக்கிறோம், சம்பளம் போட்டவுடன் முதல் வேலையாக இந்த பண்ட் பண பரிமாற்றம் தான்
நடைபெறும். இந்த மாதம் எவருக்குத் தொகை அனுப்ப வேண்டும் என்று முன்பே பட்டியலில் இருப்பதால் அவருடைய கணக்கிற்கு எல்லோரும் பரிமாற்றம் செய்துவிட்டு இந்தப் பண்டிற்காக உருவாக்கப் பட்ட வாட்ஸ்அப் குருப்பில் தெரிவித்துவிடுவோம்.
இந்த
பண்ட் பற்றி எங்கள் மேனேஜரிடம் பேசும் போது, இந்த சிஸ்டம் ரெம்ப நல்லா இருக்கு, நானும் வருகிறேன், என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்! என்று எங்களுடைய இரண்டாவது பண்டில் சேர்ந்தது எங்களுக்கு ஊக்கம் தருவதாய் அமைந்தது.
இதில்
என்ன பெரிய லாபம் இருக்கமுடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் சில நல்ல விசயங்கள் இதில் இருக்கிறது.
1) தனியார்
நிறுவனங்கள் நடத்தும் ஏலச்சீட்டுகள் இந்தமுறை தான், ஆனால் அவற்றின் நம்பிக்கை பற்றிய பயம் எல்லோருக்கும் உண்டு, மேலும் அந்தச் சீட்டுகள் நடத்துபவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தை நமக்குள் பகிர்ந்து கொள்கிறோம்.
2) இந்த
ஏலச்சீட்டுகளில் நமக்குத் தேவையான நேரங்களில் கிடைப்பது அரிது, அப்படிக் கிடைத்தாலும், ஏல குறைவு என்று
பெரும் தொகையை அமுக்கி விடுவார்கள்.
3) பத்து
மாதங்களில் இந்த பண்ட் சிஸ்டம் முடிவதால், மனதளவில் அயர்ச்சி ஏற்படுவது இல்லை, 20 மாத ஏல சிட்டுகள் தான்
பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது, அவற்றில் முதல் ஐந்து மாதங்களில் சீட்டை நாம் பிடித்துவிட்டால் அடுத்த பதினைந்து மாதம் தவனை தொகை கட்டும் போது ஒருவித அயர்ச்சி வந்துவிடுகிறது.
4) இந்த
ஏலச்சீட்டுகளில் முதல் சில மாதங்களில் நீங்கள் சீட்டை பிடிக்க வேண்டுமானால், நீங்கள் செக் லீப் மற்றும் பத்திரத்தில் கையெழுத்து மற்றும் ஜாமீன்தாரர் என்று ஒரு பெரிய நடைமுறை சிக்கல் உண்டு.
5) நம்முடைய
பண்ட் பணம் எப்போது கிடைக்கும் என்ற தெளிவான முடிவு தெரிவதால், நம்முடைய திட்டங்களை அதற்கு ஏற்றது போல செயல் படுத்தலாம்.
இது எல்லாவற்றையும்
விட, நம்முடன் வேலை பார்ப்பவர்களின், வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, சகோதிரிகளின்
கல்யாணம் என்று ஒவ்வொரு கனவுகளும் நிறைவேறும் போதும், அந்த சந்தோசங்களை நம்மிடம் பகிரும் போதும் நம்மை
அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவது இயல்பு. ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல விசயம் ஒருவரின்
வாழ்க்கையில் இந்தப் பண்டினால் நடக்கிறது.
நம்முடைய தேவைகளை இதுபோன்று ஏதாவது ஒரு வழிகளில் நாம் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். வெற்று முழக்கங்கள் பயன் தரா!!
.
0 comments:
Post a Comment