Wednesday, May 28, 2014

கல்யாணம்_இந்த ஆவணியில் வேண்டாம்! அடுத்த ஆவணியில் பண்ணலாம்!

எனது அம்மாவின் சித்தி, அப்படியானால் எனக்குப் பாட்டி முறை வேணும். அவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள். அவர்களை வளர்ப்பதில் ஆண், பெண் பேதங்களைக் காட்டினார்களோ! இல்லையோ!, ஆனால் அவர்களைப் பெற்றெடுக்கும் போது சரிசமமாக நான்கு ஆண், நான்கு பெண் என்று ஆண், பெண் சமவுரிமையை நிலை நாட்டினார். அம்மாவின் சித்தப்பாவிற்கு, எனக்குத் தாத்தா முறைவரும், அவர்களுக்கு மாநில‌ அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தில் கிளர்க் வேலை. கணவருக்கு அரசு வேலையாக இருந்தால் பாட்டியால் எட்டுக் குழந்தைகளையும் வளர்ப்பதில் பெரிய கஷ்டம் இருக்கவில்லை. தாத்தாவிற்கும், பாட்டிக்கும் ஆண்டவர் இயேசுவின் மீது அளவுகடந்த பக்தி. ஞாயிறு என்றால் வீட்டில் ஒருவரையும் பார்க்க முடியாது. சர்ச்சில் இருக்கும் எல்லாக் குழுக்கள் மற்றும் சபைகளிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கும். இவர்களுக்குச் சர்ச்சின் மீது இருந்த அதே ஆர்வம் பிள்ளைகளுக்கும் இருந்தது. அதனால் அவர்களின் மூத்த மகள் மற்றும் இளைய மகள் தவிர, மற்ற‌ இரண்டு மகள்களும் கல்யாணம் வேண்டாம் என்று துறவறக் கன்னியர் சபைக்குச் சென்றுவிட்டனர்.

பாட்டிக்கு வரிசையாக‌ பிறந்த எட்டுப் பிள்ளைகளில், கடைக்குட்டியைத் தவிர அனைத்துப் பிள்ளைகளுக்கும் உள்ள பிறப்பின் இடைவெளி என்பது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் தான். கடைக்குட்டி மட்டும் ரெம்பவும் தாமதமாகப் பிறந்தான். கன்னியராகத் துறவறச‌பைக்குச் சென்று இரண்டு சித்திகளைத் தவிர மற்ற இரண்டு சித்திகளுக்கும், இரண்டு மாமாவிற்கும் திருமணத்திற்கான இடைவெளிகள் என்பது ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் இருக்கும். எல்லோருக்கும் ரெம்பத் தாமதமாகத் தான் தாத்தாவும், பாட்டியும் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது மீதம் இருப்பது கடைக்குட்டி மாமாவும், அதற்கு முந்தைய மாமாவும். கடைக்குட்டி மாமாவின் வயதில் இருக்கும் பையன்களுக்கே கல்யாணம் முடிந்தும், பலருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றது. கடைக்குட்டி மாமா பிறந்ததே ரெம்பத் தாமதம் என்று முன்பே நான் சொல்லியிருந்தேன். கடைக்குட்டி மாமாவிற்கும், அதற்கு முந்தைய மாமாவிற்கும் உள்ள வயது வித்தியாசம் எப்படியும் ஆறிலிருந்து ஏழு இருக்கலாம். அப்படியானால் கடைக்குட்டிக்கு முந்தைய மாமாவின் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவரின் வயதை நான் கணக்கிட்டு எழுதினால், இங்கு ஒரு முதிர்கன்னனின்(முதிர்கன்னிக்கு எதிர்பால் முதிர்கன்னனாகத் தானே இருக்கும்!!, உன்னோட தமிழ‌றிவில் தீயை வைத்துக் கொளுத்த!!) வயதை எழுதிய பாவத்திற்கு ஆளாவேன்.

கல்யாணம் ஆகாமல் இருக்கும் மாமாவிற்கு ஊரில் தான் வேலை. எலட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் ஒர்க்குகள் சொந்தமாகக் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்வார்கள், நன்றாகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளும் வேலையில்லை என்று வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். நான் ஊருக்கு வந்திருக்கிறேன் என்று எவர் மூலமாக அறிந்தால், அன்றே எனது வீட்டிற்கு வந்து நலன் விசாரிப்பார்கள். வெளியில் எங்குக் கண்டாலும் என்ன மருமவனே! எப்ப‌டி இருக்கிற? இப்போது எந்த இடத்தில் இருக்கிறாய்? என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்திற்கு முன்பு, நானும் அவரிடம், எப்படி மாமா நல்லாயிருக்க முடியும்?. நீங்க காலக் காலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தா எனக்குச் சைட் அடிக்க நல்ல ஒரு பெண்ணையாவது பெத்து வைத்திருப்பீங்க!! இப்போது பாருங்கள், சைட் அடிக்கக் கூட நல்ல பொண்ணு ஒண்ணும் கிடைக்க மாட்டேங்கிறது! என்று நக்கல் அடிப்பேன்.

மாமாவின் வயதை அவரது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஊகித்து விட முடியாது. தலைமுடி மட்டும் தான் ஆங்காங்கே நரைத்து இருக்கும். உருவத்தில் இளமையாகத் தான் இருப்பார்கள். மாமாவிற்கு இருக்கும் சொந்தபந்தங்களுக்குக் குறைவில்லை. அவருடன் பிறந்தவர்கள் மட்டுமே, ஆளுக்கு ஒரு திசையாகத் தேடியிருந்தால் கூட எப்போதோ அவருடைய கல்யாணம் முடிந்திருக்கும். நான் ஊருக்கு வந்துபோகும் போதேல்லாம் இந்த வருடமாவது கல்யாணம் நடக்குமா மாமா? என்று கேட்பேன். வீட்ல இருக்கிறவர்கள் பாக்குறாங்கடா! ஒண்ணும் அவசரம் இல்ல! பொறுமையாக‌ பண்ணிக்கலாம்! என்று பதில் சொல்லுவார்கள். பெரும்பாலும் ஒருவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்தால் நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் செல்லுவார்கள். ஆனால் இவருக்கு வீட்டில் உள்ளவர்கள் வருடக் கணக்கில் பார்த்தார்கள்.

நான் ஊருக்கு சென்றுவரும் போதெல்லாம் எப்போது மாமா, கல்யாணசாப்பாடுப் போட போறீங்க? என்று கேட்க மறப்பதில்லை. அவரும் சிரித்துக் கொண்டே நீ, கல்யாணசாப்பாடுச் சாப்பிட வேண்டும் என்பத‌ற்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்லிச் சிரிப்பார். சில நேரங்களில் வீட்டில் உள்ளவர்களைக் குறையாகச் சொல்லி கவலைப்படுவார். எனக்குத் திருமணம் முடிந்த பிறகு அவரிடம் கல்யாணம் பற்றிய‌ பேச்சுகளைப் பற்றி அதிகம் பேசுவது கிடையாது. கண்டிப்பாக இப்போது நான் அவருடைய கல்யாணம் பற்றிக் கேட்பது அவருக்கு உறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தால் அதைப் பற்றிப் பேசுவது இல்லை. சில வருடங்களாகவே அவருடைய முகத்தில் கல்யாணத்தைப் பற்றிக் கவலைகள் அதிகமாகத் தென்பட்டது. எப்போதும் மழிக்காத, டிரிம் செய்த‌ அரைத் தாடியுடன் தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எனது வீட்டில் உள்ளவர்கள் எவரேனும் கல்யாணம் பற்றிக் கேட்டால் சலிப்பாகப் பதில் சொல்வார்கள், அல்லது வேறு திசைக்குப் பேச்சை மாற்றுவார்கள்.

கடந்த வாரம் ஊருக்குப் போயிருந்தபோது மாமாவை ஒரு வேலையாகச் சென்ற வழியில் பார்க்க முடிந்தது. முகம் வழவழப்பாக மழிக்கப்பட்டு, தலைமுடியும் அடர்கருப்பில் காட்சியளித்தது. மாமாவிடம் அவருடைய மாற்றம் குறித்து எதுவும் கேட்காமல், சாதரண நலன் விசாரிப்புகள் மட்டும் விசாரித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அண்ணனிடம் மாமாவின் மாற்றத்தைப் பற்றிக் கேட்டேன். ஆமாடா, அவங்களுக்கு நம்ம ஊரிலேயே ஒரு பொண்ணைப் பார்த்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருக்கும் போய்ப் பார்த்திருக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம். நிச்சயதார்த்தம் தேதியும் குறித்துவிட்டார்கள் என்றான். எனக்கும் மனதிற்குச் சந்தோசமாக இருந்தது.

மறுநாள் மாலையில் வெளியில் சென்றுவந்த அப்பா, மாமாவிற்குப் பார்த்து வைத்திருந்த பெண்ணின் வீட்டார்கள், இந்தத் திருமணம் வேண்டாம்! நிறுத்திவிடலாம்! என்று சொல்லிவிட்டார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். நான் அப்பாவிடம் என்ன காரணம்? என்று கேட்டேன். அப்பாவிடம் விசயத்தைச் சொல்லியவருக்கும் சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. மொட்டையாகப் பெண் வீட்டார்கள் திருமணம் இப்போது வேண்டாம்!! என்று சொல்லியதாகக் கூறினார்கள். இதைக் கேட்டுகொண்டிருந்த அம்மா, நேற்று மூத்தவன்(தாத்தாவின் எட்டுப் பிள்ளைகளில் முதலானவர்) வீட்டிற்கு வந்திருந்தான். தான் இன்னும் இளையவனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நேரில் பார்க்கவில்லை என்றும், நேற்று மாலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்ப்பதாகவும் சொன்னானே!!. ஒருவேளை இவர்கள் சென்று பார்த்த நேரத்தில் தான் ஏதேனும் பிரச்சனை வந்திருக்கும், எதற்கும் அவனை விசாரித்தால் தெரியும்! என்று மூத்த மாமாவிற்கு அம்மா போன் செய்தார்கள்.

நீங்கள் கேள்விப்பட்ட‌ விசயம் உண்மையானது தான்!. அவன் நாளைக்குக் காலையில் வீட்டிற்கு வந்து என்ன விசயம் என்பதை விளக்கமாக‌ சொல்லுகிறேன் என்று போனை வைத்துவிட்டான் என்று சொல்லி, அம்மா அப்பாவின் முகத்தைப் பார்த்தார்கள்.

காலையில் வீட்டிற்கு வந்த மூத்த மாமா அம்மாவிடம், தம்பிக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நானும் என்னோட பொண்டாட்டியும் பார்க்கவில்லை. வீட்ல உள்ளவர்கள் எல்லோரும் பெண்ணைப் பார்ப்பதற்குப் போகும் போது என்னோட குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லாத‌தால் நானும் வீட்டுக்காரியும் குழந்தையை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போய்விட்டோம். அன்றிலிருந்தே என்னிடம் நீயும் அண்ணியும் வந்து எனக்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பாருங்க! என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சரி! என்று சொல்லி இளையவன்(கடைக்குட்டி மாமா), நான், என்னோட மனைவி, குழந்தை மற்றும் அப்பாவும் போய்ப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். கிளம்புகின்ற நேரம் நானும் உங்க கூட வருகிறேன் என்று சொன்னான். அவனுக்காக‌ தான் பொண்ணையே பார்ப்பதற்குப் போகிறோம், நீ எங்க கூட வரதே! என்று அவனைத் தடுக்கவா முடியும். சரி வா! என்று சொன்னோம்.

பெண்ணின் வீட்டிற்குச் சென்று அமர்ந்திருந்தோம். அப்போது பெண்ணின் அம்மா தான் பேச்சை ஆரம்பித்தார்கள், எனக்கு இருப்பது இரண்டு பெண்கள், ஒரு பையன். மூத்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவளோட மாப்பிள்ளை ஒரு குடிக்காரன். அவனால ஒரு பிரியோஜனம் இல்ல, இந்தக் கல்யாணத்தை முன்னின்று நடத்த வேண்டிய என்னோட புருசனும், மூக்கு முட்ட குடிச்சிட்டு இந்தா ரூம்ல‌ கட்டிலில் விழுந்து கிடக்கிறான், அதனால எதுனாலும் நான் தான் பேச வேண்டும் என்றார்.

வீட்டின் நிலைமையை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசினார். என்னோட பையன் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். அவன் ஆவணி மாதம் தான் ஊருக்கு வருகிறான். இப்போது சித்திரை மாதம், நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். எங்கள் பையன் வரும் ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்றார். இதைக் கேட்டுகொண்டிருந்தவன் சட்டென்று இந்த ஆவணி மாதம் எதற்கு? அடுத்த வருடம் ஆவணி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று நக்கலாகப் பதில் சொன்னான். இவ்வாறு இவன் பேசியது பெண்ணின் அம்மாவிற்குக் கோபத்தைத் தூண்டியிருக்கும். ஆனால் அவர் அதைப் பேச்சில் வெளிக்காட்டாமல் முகத்தில் வெளிக்காட்டினார். பெண்ணின் அம்மா எந்தவொரு விசயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், பக்கத்தில் இருந்தவன் சும்மா இருக்காமல் அவர்கள் பேசுவதை நையாண்டி செய்வது போலவே பேசினான். நான் கையைப் பிடித்து அழுத்திகொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நீ அமைதியாக இரு! பெரியவர்கள் பேசட்டும் என்றும் சொன்னேன். அவன் எதுவும் காதில் போட்டு கொள்ளவில்லை.

இவனுக்குப் பெண்ணின் அம்மா ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னது பிடிக்கவில்லை. உடனே கல்யாணம் செய்யவேண்டும் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தான்.

எது எப்படியோ, இவன் இவ்வாறு நக்கல் செய்து கொண்டிருந்தது பெண்ணின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. நாங்கள் வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வரும் போது, எவர் இந்தத் திருமணத்திற்காக ஓட்டன்(புரோக்கர்) வேலைப்பார்த்தாரோ அவரிடம், என்னோட பொண்ணுக்கு நான் இப்போது கல்யாணம் பண்ணவில்லை. மெதுவாக வேற‌ நல்ல இடமாகப் பார்க்கலாம் என்று எனது காதில் படும்படியே சத்தமாகச் சொன்னார். அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்தோம் என்று கூறி முடித்தார்.

அட! மாமா! மாமா!

சாப்பாட்டை ஆக்க பொறுத்த நீங்க!! ஆற பொறுக்கலியே!!!

.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பொறுத்தார் பொண்டாட்டி ஆள்வார் - புதுமொழி!

நாடோடி said...

@கரந்தை ஜெயக்குமார் said...
//ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லை//

வாங்க ஜெயக்குமார் ஐயா!

உண்மை தான், இவர்கள் எல்லாம் வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் பானையை போட்டு உடைப்பார்கள்.

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//பொறுத்தார் பொண்டாட்டி ஆள்வார் - புதுமொழி!//

வாங்க நிஜாம் சகோ!

அடடே!!! உங்களுடைய புதுமொழி புதுசா இருக்கே..

Related Posts with Thumbnails