Wednesday, May 7, 2014

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்_நீங்கள் தான் காசு கொடுக்கணும்!!!

இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்த ஒரு விமானபயணம் எனக்கு இதுவரையிலும் ஏற்பட்டிருக்கவில்லை. விமானபயணத்தில் டிரான்சிட் இருக்குமானால் அந்தப் பயணம் அவ்வளவு சுவரஸ்யமாக இருக்காது, ஒவ்வொரு டிரான்சிட்டிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து, உங்களுடைய‌ கேபின் பேக்கேஜ் ஸ்கேன் மற்றும் கஸ்டம்ஸ் செக்கப் போன்றவற்றை முடித்து அடுத்த விமானத்தைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்று உங்களுக்கு ஆகிவிடும். சவூதி அரேபியாவில் உள்ள‌ தமாம் ஏர்பேர்ட்டிலிருந்து கிளம்பிய நான் துபாய் சென்று, மஸ்கட்டையும் சுற்றி ஒருவழியாகத் திருவனந்தபுரத்தை அடைந்த போது, எமிரேட்ஸ் அதிகாரிகள் வந்து உங்களுடைய‌ செக்கிங் பேக்கேஜ் வரவில்லை என்று சொல்லியது, இன்னொரு தலைவலியாக அமைந்தது.

மேலே இருக்கும் என்னுடைய‌ பயண அனுபவத்தைப் படிக்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி படிக்கலாம்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்_நீங்க எல்லாம் நல்லா வரணும்!!!



நீண்ட ஒரு பார்மை கையில் கொண்டுவந்த எமிரேட்ஸ் பெண் ஸ்டாப், முதலிலேயே தன்னை அறிமுகம் செய்துவிட்டு, என்னுடைய விமான‌ டிக்கெட்டையும், பாஸ்பேர்ட்டையும் வாங்கித் தேவையான தகவல்களை அந்தப் பார்மில் எழுதிக் கொண்டார். என்னுடைய செக்கிங் பேக்கேஜில் இரண்டு லக்கேஜ் பேக் இருந்தது. ஒன்றின் வெயிட் தோரயமாகப் பதிமூன்று கிலோ இருக்கும், இன்னொன்று பனிரெண்டு கிலோ இருக்கும். இப்போது என்னிடம் அந்தப் பேக்குகளில் இருந்த பொருட்களின் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.

என்னுடைய லக்கேஜ் பேக்குகளில் இருக்கும் பொருட்களிளின் தக‌வல்களை ஓரளவுச் சரியாகத் தருமாறு முன்பே அந்தப் பெண் ஸ்டாப் கேட்டுக்கொண்டார். நானோ அவசர அவசரமாகச் சவூதியிலிருந்து கிளம்பி வந்ததால், கிளம்புவதற்கு முதல்நாள் தான் லூ லூ மாலுக்கு(Lu Lu Shoping Mall) சென்று சில பொருட்கள் வாங்கி இரண்டு லக்கேஜிலும் அடைத்து வந்தேன். அதிலிருந்த பொருட்களின் விபரங்கள் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவர் வைத்திருந்த பார்மில் வெளிநாட்டிலிருந்து, நம்மவர்கள் கொண்டுவரும் பொருட்களின் விபரங்கள் எழுதப்பட்டிருந்து. அந்தப் பார்மில் இருக்கும் பெருள் நம்முடைய லக்கேஜில் இருக்கிறது என்றால் அதன் எடை அல்லது எத்தனை எண்ணம் என்ற விவரம் மட்டும் கொடுத்தால் போதும். இந்த வசதி எனக்கு ரெம்ப உதவியாக இருந்தது, என்னுடைய லக்கேஜ் பேக்கில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் ஞாபகபடுத்த வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.

எமிரேட்ஸ் பெண் ஸ்டாப் பார்மில் எழுதியிருந்த ஒவ்வொரு பொருட்களின் பெயர்களையும் என்னிடம் சொல்ல, அந்தப் பொருட்கள் என்னுடைய லக்கேஜில் இருக்கின்றனவா? எத்த‌னை கிலோ இருக்கின்றது? என்ற விவரங்களை நானும் சொல்ல, அவரும் குறித்துக் கொண்டே வந்தார். டீவியில் ஆரம்பித்துச் சோப்பு, சீப்பு, கண்ணாடி வரை அந்தப் பார்மில் இருந்தது. எதற்காக இந்தளவு விவரங்கள் கேட்டு எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன், அதற்கு அவர் "கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் பண்ணுவதற்கு இந்தத் தகவல்கள் தேவை சார்! என்றுமட்டும் தான் என்னிடம் சொன்னார்.

ஆனால் அவர் எல்லாவற்றையும் எழுதிமுடித்து, அந்தப் பார்மை என்னிடம் கொடுத்துவிட்டு, நான் எல்லாம் சரியாக எழுதியிருக்கிறேனா? என்று ஒருமுறை படித்துவிட்டு என்னிடம் கையெழுத்துப் போடும்படி சொன்னார். அப்போது நான் இருந்த அவசரத்தில் கையெழுத்தைப் போட்டுவிட்டு, மறுபக்கம் இருந்த டெர்ம்ஸ் அன்ட் கண்டிசனை(Terms and Conditions) மேலோட்டமாகப் படித்தேன். அதில் ஒருவேளை என்னுடைய லக்கேஜ் தொலைந்துவிட்டால், நான் இங்கு எழுதி கொடுத்திருக்கும் பொருட்களை மட்டும் தான் அவர்களிடம் கிளைம் செய்யமுடியும் போன்ற விபரங்களை நல்ல விவரமாகச் சொல்லியிருந்தார்கள். நான் அந்தக் கண்டிசன்களைப் படிப்பதை பார்த்த அந்த எமிரேட்ஸ் பெண் ஸ்டாப் உங்க லக்கேஜ் எல்லாம் தொலையாது சார்! கண்டிப்பா வந்திடும்! நீங்க பயப்படாமல் கையெழுத்துப் போடுங்கள் என்று சொல்லிச் சிரித்தார்.

விமானபயணத்தில் ஏற்பட்ட களைப்பும், சலிப்பும் ஒரு சேர இருந்ததால் என்னால் அவரிடம் சகஜமாகச் சிரிக்க முடியவில்லை. எத்தனை நாட்களில் என்னுடைய லக்கேஜ் வரும் என்று கேட்டேன். அவர் சாதரணமாகப் பதினைந்து நாட்கள் ஆகும் சார், உங்களுக்கு நாங்கள் தகவல் சொல்லியபிறகு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். எனக்கோ கடுங்கோபம், ஏங்க! நான் வரவேண்டிய பிளைட் வரவில்லை சரி! மறுநாள் வரும் விமானத்தில் என்னுடைய லக்கேஜை அனுப்ப வேண்டியது தானே, எதற்குப் பதினைந்து நாட்கள் என்றேன். நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பார்மில் ஒரு காப்பியை என்னிடம் கொடுத்துவிட்டு, சார்!! நான் இந்த வேலைக்குப் புதிது, நீங்க வந்து மேனேஜரிடம் பேசுங்கள் என்றார்.

நானும் மேனேஜரின் அறைக்குச் சென்று கேட்டேன், அவரோ, அந்தப் பெண் ஸ்டாப் மலையாளத்தில் சொல்லியதை, இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நான் அவரிடம் என்னுடைய விடுமுறையே மொத்தம் பத்து நாட்கள் தான்! நீங்கள் பதினைந்து நாட்கள் கழித்துத் தான் லக்கேஜ் வரும் என்று கூலாகச் சொல்லுகிறீர்களே! என்று கேட்டேன். அதற்கு அவர் நான் மேக்சிம் டைம் சொல்லுகிறேன், அதற்கு முன்னதாகவே வந்திடும்! உங்கள் லக்கேஜ் சீக்கரமே கிடைப்பத‌ற்கு நான் துபாய் ஆபிசில் பேசுகிறேன் என்றார். என்னவோ பண்ணுங்கள்!! உங்கள் விமானத்தில் பயணம் செய்தது தான் நான் செய்த‌ தவறு!! என்று சொல்லிவிட்டு வெளியே எனக்காகக் காருடன் காத்திருந்த அண்ணனுடன் வீட்டிற்குக் கிளம்பினேன்.

சரியாக நான்கு நாட்களில் வீட்டு லேண்ட் லைன் போனில், எமிரேட்ஸ் ஆபிஸ் திருவனந்தபுரத்திலிருந்து பேசுகிறோம் என்று அப்பாவிடன் சொல்லி, உங்கள் மகனுடைய‌ லக்கேஜ் வந்துவிட்டது! அவரை வந்து வாங்கிக்கொள்ள சொல்லுங்கள், என்று போனில் பேசியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்போது வீட்டில் இல்லை, வெளியில் ஒரு வேலையாக‌ போயிருந்தேன், வீட்டிற்கு வந்தவுடன் அப்பா விசயத்தைச் சொன்னவுடன், என்னிடம் அவர்கள் கொடுத்திருந்த ஒரு காப்பிப் பார்மில் இருந்த போன் நம்பரை அழைத்து உறுதிபடுத்திக் கொண்டேன். என்னிடம் பேசிய ஒரு பெண் ஸ்டாப் உங்கள் லக்கேஜ் கஸ்டம்ஸில் இருக்கிறது, நீங்கள் வந்து கஸ்டம்ஸ் முடித்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

அன்று மாலை நான்கு மணியளவில் கார் எடுத்துகொண்டு நானும், அண்ணனும் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்குக் கிளம்பினோம். நான் ஏற்கனவே ஒரு பதிவில் என்னுடைய ஊரில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்குச் செல்லுவதற்கு இரண்டு மணிநேரமும், 1600 ரூபாய் வாடகையும் ஆகும் என்று சொல்லிருக்கிறேன். மாலை ஆறு மணிக்கெல்லாம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்குச் சென்றுவிட்டோம். ஏர்போர்ட் வாயிலில் காவலுக்கு நிற்கும் போலிசாரிடம் விசயத்தைச் சொல்லி என்னிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் கொடுத்த பார்மின் ஒரு காப்பியையும் காட்டி உள்ளே சென்றேன். நேராக எமிரேட்ஸ் ஆபிஸுக்குள் சென்றேன். அங்கு இருந்த ஒருவர் என்னிடம் விசயத்தைக் கேட்டுவிட்டு, என்னை நேராகக் கஸ்டம்ஸ் பிரிவுக்குக் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மூலையில் வரிசையாக‌ லக்கேஜிகள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அதில் என்னுடைய லக்கேஜை மட்டும் தேடவதற்குச் சொன்னார்.



அங்கு இருந்த மொத்த லக்கேஜிகளையும் சுற்றிசுற்றி வந்து பார்த்தேன். அதில் என்னுடைய ஒரு செக்கிங் பேக்கேஜ் மட்டும் தான் இருந்தது, இன்னொன்றை அங்குக் காணவில்லை. விசயத்தை என்னுடன் வந்த‌ எமிரேட்ஸ் அலுவலரிடம் தெரிவித்தேன். அவர் இன்னும் ஒருமுறை தேடிப்பார்பதற்குச் சொன்னார். நானும் பிள்ளையார் சிலையைச் சுற்றுவது போல் லக்கேஜ் இருக்கும் இடத்தை இருமுறை சுற்றிவந்து விட்டேன். என்னுடைய இன்னொரு லக்கேஜ் கண்ணில் மாட்டவில்லை, அங்கு இருந்தால் தானே கண்ணில் மாட்டும். இப்போது இருக்கும் ஒரு லக்கேஜை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்றால், கஸ்டம்ஸில் இருந்த ஆபிஸர்கள் அனுமதிக்கவில்லை. உங்களுடைய பார்மில் இரண்டு செக்கிங் பேக்கேஜ் என்று போட்டிருக்கிறது, ஒன்றை மட்டும் எங்களால் உங்களுக்குக் கொடுக்க முடியாது, இரண்டும் வந்தபிறகு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். நான் எமிரேட்ஸ் அலுவலரின் முகத்தைப் பார்த்தேன். அவர் சார்! நீங்க வாங்க! இவர்களிடம் பேசவும் கூடாது, பேசவும் முடியாது என்று சொல்லி என்னை அழைத்துத் திரும்பவும் எமிரேட்ஸ் அலுவலகத்திற்குக் கூட்டி வந்தார்.

திரும்ப எமிரேட்ஸ் ஆபிஸுக்கு வந்தவுடன், அங்கிருந்தவர்களிடம் எதற்காக‌ என்னை வர சொன்னீர்கள்? என்று கேட்டேன். அதற்கு உங்களில் ல‌க்கேஜ் வந்திருக்கு என்று காலையில் ஷிப்ட் முடித்தவர்கள் எங்களிடம் சொன்னார்கள், நாங்கள் சென்று செக் பண்ணவில்லை, சாரி சார்! எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்கள். நான் இப்போது யாரிடம் பேசவேண்டும் என்று கேட்டேன், அதற்கு அவர்கள் பக்கத்துக் கேபினை கையைக் காட்டினார்கள். அங்குச் சென்றால் ஏர்ஹோஸ்டர் டிரஸ் அணிந்த‌ பெண் ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று விசயத்தைச் சொல்லி கேட்டால், சார்! கஸ்டம்ஸில் எங்களால் பேச முடியாது, அதனால் உங்களுடைய இன்னொரு லக்கேஜும் வந்தபிறகு ஒன்றாக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் 1600ரூபாய் காருக்கு வாடகையைக் கொடுத்து என்னுடைய வேலையை எல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் ரெம்பச் சாரி சார்! உங்களுடைய இந்தக் கார் வாடைகையை எங்களது ஆபிஸில் தருவத‌ற்கு சொல்லுகிறோம் என்றார். அடுத்த முறை வரும் போது கார் வாடகைக்கான பில்லை கொண்டு வாருங்கள் என்றார். இதற்கு மேலும் இவரிடம் பேசுவதால் எந்தவிதப் பலனுமில்லை என்று வெறுங்கையுடன் திரும்பவும் வீட்டிற்குக் கிளம்பினேன்.

அடுத்த இரண்டு நாட்களில் திரும்பவும், என்னுடைய மொபைல் நம்பருக்கே போன் செய்து அழைத்திருந்தார்கள். இந்தமுறையும் கார் எடுத்துகொண்டு அண்ணனும், நானும் ஏர்போட்டிற்கு வந்தோம். இந்தமுறை கஸ்டம்ஸ் ஏரியாவில் என்னுடைய இரண்டு பேக்கேஜை மட்டும் தனியாக எடுத்து வைத்திருந்தார்கள். நான் சென்றவுடன் கஸ்டம்ஸில் இருந்த ஆபிஸர், உங்க லக்கேஜை எடுத்துசென்று ஸ்கேன் பண்ணி வாருங்கள் என்றார். நான் எடுத்துசென்று ஸ்கேன் பண்ணிவந்தவுடன், என்னிடம் இருந்த பார்மில் எழுதியிருந்த லிஸ்டை பார்த்துவிட்டு, உங்களின் பேக்கேஜில் இருக்கும் பொருட்களின் மதிப்பை பார்க்கும் போது முப்பதாயிரத்தை தாண்டும் போல இருக்கிறது, அதனால் நீங்கள் டியூட்டி கட்ட வேண்டும் என்றார். நான் அவரிடம் முப்பதாயிரம் தாண்டாது என்றேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் என்னுடைய கையைப் பிடித்துச் சிறிது தூரம் அழைத்துச் சென்று பாட்டில் ஏதாவது இருந்தால் கொடுத்துவிட்டுப் போங்கள் என்றார். நான் அவரிடம் அப்படி எதுவும் என்னிடம் இல்லை என்றேன். சரி! ஒரு சிறிய தொகையாவது டியூட்டி கட்ட வேண்டும் என்றார். நான் என்னுடைய பயண அனுபவத்தைச் சொன்னவுடன், ஐநூற்று முப்பது ரூபாயை ஒரு ரசீதில் எழுதி அங்கிருந்த‌ பேங்கில் கட்டிவருவத‌ற்கு சொன்னார். எல்லாம் விதி என்று நினைத்துக்கொண்டே, அதையும் கட்டிவந்து லக்கேஜை எடுத்துக் கொண்டேன்.

டிராலியில் லக்கேஜை எடுத்துக் கொண்டு, எமிரேட்ஸ் ஆபிஸுக்கு சென்று, என்னுடைய கார் வாடகைக்கு ஆன பணத்தைக் கேட்டேன். இப்போது தான் இவர்களின் சுயரூபத்தைப் பார்க்க முடிந்தது. ஒருவர் மாறி ஒருவர் வந்து என்னிடம் விபரங்கள் கேட்க ஆரம்பித்தார்கள். ஆளுக்கு ஒரு லாங்குவேஜில் பேசினார்கள். முதலில் வந்தவர் மலையாளத்தில் பேச ஆரம்பித்தார். நானும் மலையாளத்தில் பதில் சொல்லிகொண்டே இருந்தேன். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியாக‌ சார்! எங்களால் உங்களுக்கு வாடகை பணம் தரமுடியாது என்றார். ஏன்? என்று நான் கேட்டால், உங்களுடைய லக்கேஜ் தொலைந்தது ஓமன் ஏர்வேஸிசில். அதற்கு நாங்கள் பணம் கொடுத்தால் எங்களுடைய மேனேஜ்மென்ட் ஒத்துகொள்ளாது என்றார். நான் அவரிடம் என்னை இருமுறை அலைய வைத்திருக்கிறீர்கள். அது யாருடைய தவறு? என்றேன். அதற்குப் பதில் சொல்லமுடியாமல் கேபினின் உள்ளே சென்று இன்னொருவரை அனுப்பிவைத்தார். இப்போது வந்தவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசி முதலிருந்து தக‌வல்களைக் கேட்க ஆரம்பித்தார். இவரும் அவர் சொல்லியதையே சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

இப்போது வெளியில் வந்தவர் என்னிடம் ஹிந்தியில் பேசுவத‌ற்கு ஆரம்பித்தார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அவரிடன் இன்னும் எத்தனை பேருக்கு நான் விளக்கமும் தகவலும் அளிக்க வேண்டும். உங்களுடைய மேனேஜரை அழையுங்கள் நான் அவரிடமே பேசிக் கொள்கிறேன் என்றேன். என்னுடைய கோபத்தைப் பார்த்தவர் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் மேனேஜர் வெளியில் வந்தார். வந்தவர் நன்றாகத் தமிழ் பேசினார். என்னிடம் வந்து அமைதியாகச் சார்! உங்களுடைய கார் வாடகை பணத்தைக் கொடுக்கிறேன் என்று தெரியாமல் சொல்லிவிட்டார்கள்! இப்படி வாடகை பணம் கொடுக்க எங்களிடன் எந்தவிதமான சிஸ்டமும் கிடையாது என்றார். நான் அவரிடம், ஒருமுறை மட்டும் வந்து என்னுடைய லக்கேஜ் எடுத்திருந்தால், நான் பெரிதும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் இரண்டுமுறை என்னை அலைய வைத்திருக்கிறீர்கள்! அதுவும் இல்லாமல் தவறான தகவல்களை வேறு கொடுக்கிறீர்கள், இப்போது கூட நீங்கள் உள்ளே இருந்து கொண்டு வேறு ஆட்களை அனுப்பிப் பேசுகிறீர்கள், இதுதான் உங்களின் கஸ்டமர் சர்வீஸா? என்று அவரிடம் வாதம் செய்தேன்.

எல்லாவற்றிற்கும் அந்த மேனேஜர் ரெடிமேடக ஒரு பதில் வைத்திருந்தார். கடைசியாக இரண்டுமுறை காரில் வந்து போனதற்கு, ஒருமுறை மட்டும் பணம் கொடுக்கிறேன் என்று ஒத்துக் கொண்டார். அதுவும் அவருடைய சம்பளத்திலிருந்து இந்தப் பணத்தைத் தருவதாக வேறு ஒரு கதையை அளந்தார்.

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா!!, கம்பெனிக்கு விசுவாசமா இருங்க, அதுக்காக அடுத்தவனை ஏய்த்து உங்களின் கடமை உணர்ச்சியை வெளிக்காட்டதீர்கள்!!.

இதைப்போல் எத்தனை மனித‌ர்களைப் பார்த்திருப்போம்!!! அவர்களின் எத்தனை கதைகளைக் கேட்டிருப்போம்!!!

.

10 comments:

தாஸ். காங்கேயம் said...

"எப்படியோ, ஆயிரத்து அறுநூறு ரூபாய் சேமிக்கப் போகிறேன் என்று, இனிப்பு கவர் எழுனூற்றி ஐம்பது, ஹோட்டல் பில் ஒரு நானூற்றி இருபது மற்றும் டிரைவரின் டிப்ஸ் ஐநூறு, ஆக மொத்தம் ஆயிரத்து அறுநூற்று எழுபது ரூபாய் இழந்து வந்திருந்தேன்."

"எமிரேட்ஸ் ஆபிஸுக்கு சென்று, என்னுடைய கார் வாடகைக்கு ஆன பணத்தைக் கேட்டேன். இப்போது தான் இவர்களின் சுயரூபத்தைப் பார்க்க முடிந்தது"

என்ன கொடுமை சார் இது..

இருந்தாலும் எங்களுக்கு ஒரு முன் அனுபவமாய் நாங்கள் எடுத்துக் கொண்டோம். மிக்க நன்றி.

சேக்காளி said...

//மேனேஜர் ரெடிமேடக ஒரு பதில் வைத்திருந்தார்//
அதுதானே மேனேஜரின் வேலை.

bandhu said...

கொடுமை! என் லக்கேஜ் பெட்டி ஏர் இந்தியா வில் சிங்கப்பூரிலிருந்து வரும்போது கிட்ட தட்ட உடைந்து வந்தது. அதிகம் அலைய விடாமல் அதற்கு ஒரு விலையை போட்டு கொடுத்து விட்டார்கள்!

drogba said...

இந்த மாதிரி விடயங்களை கையாளும் போது உங்கள் தொலைபேசியில் அவர்களுக்கு தெரியாமல் video எடுங்கள். youtubeல் பதிவேற்றுங்கள். அல்லது அந்த videoவை அவர்களுக்கு email அனுப்புங்கள். கேட்டதற்கு மேலே கிடைக்கும்.

drogba said...

இந்த மாதிரி விடயங்களை கையாளும் போது உங்கள் தொலைபேசியில் அவர்களுக்கு தெரியாமல் video எடுங்கள். youtubeல் பதிவேற்றுங்கள். அல்லது அந்த videoவை அவர்களுக்கு email அனுப்புங்கள். கேட்டதற்கு மேலே கிடைக்கும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இதோடு முடிந்ததே! பெட்டிகள் கிடைத்தனவே!
சந்தோஷம்!

Avargal Unmaigal said...

சார் ஆண்லைனில் அந்த ஏர்லைன்ஸுக்கான கஸ்டமர் சர்வீஸ் போன் நமபர் இருந்தால் அதற்கு கூப்பீட்டு பேசுங்கள் அல்லது இமெயில் இருந்தால் அத்ற்கு இமெயில் தட்டுங்கள் அதுமட்டுமல்லாமல் ஏர்லைன்ஸ் பற்றி ரிவ்யூ சைட்டை பார்த்து அதில் நீங்கள் எழுதிய பதிவில் உள்ள விபரத்தை ஆங்கிலத்தில் தட்டி விடுங்கள் அதன் பின் பாருங்கள்

Kasthuri Rengan said...

அனுபவ பாடம் அடுத்தவருக்கு ...
பயனுள்ள பதிவு

குட்டிபிசாசு said...

பாவம் சார் நீங்க.

KILLERGEE Devakottai said...

அடுத்தவருக்கு ...பயனுள்ள பதிவு நன்றி.
Killergee
www.killergee.blogspot.com

Related Posts with Thumbnails