Friday, April 25, 2014

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்_நீங்க எல்லாம் நல்லா வரணும்!!!

நான் சவூதி அரேபியாவில் புராஜெக்ட் செய்து கொண்டிருந்த போது சிறிதுகால இடைவெளி கிடைத்தாலும் உடனடியாக ஊருக்கு வந்துவிடுவேன். ஒருமுறை பத்து நாட்கள் விடுமுறைக்காக ஊருக்கு வந்துபோவதற்கு ஆபிஸில் இருந்து டிக்கெட் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் என்பது மிகக் குறுகியகாலம் என்றாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது நான் தவறவிடுவதில்லை. வெளிநாடுகளில் குடும்பங்களை விட்டு தனியாக‌ வந்து, ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் என்று தொடந்து வேலைசெய்து கொண்டிருக்கும் போது கூடச் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தின் நினைவுகள் நம்மை அடிக்கடி தொல்லைச் செய்வதில்லை. ஆனால் விரைவில் ஊருக்குப் போகிறோம் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டால் போதும் நம்மையறியாமல் மனம் விடுமுறைக்காக மீதம் இருக்கும் நாட்களை எண்ணுவதற்குத் தொடங்கிவிடும். அதிலும் டிக்கெட் கைக்கு வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், காத்திருக்கும் ஒரு மணிநேரம் கூட ஒரு யுகமாக மாறிவிடும்.

ஆபிஸில் என்னுடைய விமான டிக்கெட்டை எமிரேட்ஸ் ஏர்லைன்சில்(EMIRATES AIRLINES) புக்கிங் செய்திருந்தார்கள். த‌மாமில்(Dammam) இருந்து துபாய்(Dubai), அங்கு ஒரு மணிநேரம் டிரான்சிட்(Transit), பின்னர்த் துபாயில்(Dubai)) இருந்து திருவனந்தபுரம்(Thiruvananthapuram). நான் ஊருக்கு வரும் நேரம் ஹஜ் சீசன், சாதரணமாகவே சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களில் இமிக்கிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் முடிப்பது என்பது சாதாரண விசயம் கிடையாது. நீண்ட‌ வரிசையில் தேவுடு காத்தே நீங்கள் வெறுத்துவிடுவீர்கள். நீண்ட வரிசையில் கால் கடுக்க‌ நின்றுவரும் நம்மிடம், ஏர்போர்ட்டில் பணிபுரியும் சவூதிகள் செய்யும் செயல்கள் மற்றும் கேட்கும் கேள்விகள், ஏன்டா நீங்க எங்க நாட்டுக்கு வர்றீங்க? என்பது போல்தான் இருக்கும். சாதாரணமாகவே இப்படிப் படுத்தியெடுக்கும் ஏர்போர்ட்டில் ஹஜ் சீசன் என்றால் பயணிகள் கூட்டம் இரண்டு மடங்காக இருக்கும். எனவே நான் தாமாம் ஏர்போர்ட்டிற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்டேன்.லக்கேஜ் ஸ்கேன், டிக்கெட் கவுண்டர் மற்றும் எமிக்கிரேசன் என்று எல்லா இட‌ங்களிலும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். லக்கேஜ் ஸ்கேன் முடித்துவிட்டு டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நானும் காத்திருந்தேன். என்னுடைய வரிசை வந்தவுடன் லக்கேஜை எடுத்து வேயின் கன்வேயரில் வைத்துவிட்டு பாஸ்போர்ட்டையும் ஆன்லைன் டிக்கெட்டையும் எடுத்துக் கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்தேன். தோளின் இருந்த ஹேண்ட் பேக்கேஜையும் எடுத்து வேயின் கன்வேயரில் வைக்கச் சொன்னார். மொத்தமாக 35 கிலோ என்று ரெட் டிஜிட்டல் டிஸ்பிளே காட்டியது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் செக்கிங் பேக்கேஜ் 30 கிலோவும், கேபின் பேக்கேஜ் 7 கிலோவும் தான் அனுமதிப்பார்கள். என்னுடைய மொத்த பேக்கேஜ் வெயிட் 35 கிலோ தான், ஆனால் கேபின் பேக்கேஜ் 10 கிலோவாக இருந்தது. சாதாரணமாக எந்த ஏர்லைன்ஸும் கேபின் பேக்கேஜ் 10 கிலோ கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். கவுண்டரில் இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கேபின் பேக்கைஜை கையில் எடுத்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு டிக்கெட்டை கையில் கொடுத்தார்.

டிக்கெட்டை கையில் வாங்கிகொண்டு, கேபின் பேக்கைஜை எடுத்துத் தோளில் மாட்டிவிட்டு இமிக்கிரேசன் முடிக்கக் கிளம்பினேன், அங்கும் மிக நீண்ட வரிசையிருந்தது. விமானம் கிளம்பும் நேரமும் நெருங்கிகொண்டிருந்தது. நான் வரிசையில் காத்திருக்கும் போதே அரைமணி நேரம் லேட்டாகத் துபாய் எமிரேட்ஸ் கிளம்பும் என்று டிஸ்பிளே மற்றும் ஸ்பீக்கரில் சொல்லப்பட்டது. ஒரு மணிநேர டிரான்சிட்டில் துபாய் ஏர்போட்டிலிருந்து திருவனந்தபுரம் எமிரேட்ஸ் விமான‌த்தை பிடிப்பது என்பதே கொஞ்சம் கஷ்டமான விசயம். இதில் அரைமணி நேரம் லேட்டாகக் கிளம்பினால் எப்படி அடுத்த விமானத்தைப் பிடிப்பது, அதுவும் லேட்டாகத் தான் கிளம்புமா? எனப‌து தான் என்னுடைய கவலையாகயிருந்தது.

ஒரு வழியாக இமிக்கிரேசன் முடித்து அவசர அவசரமாகக் கேட்டை அடைந்து விமானத்தில் ஏறிக்கொண்டேன். முப்பது நிமிடம் லேட் என்று சொல்லி நாற்பது நிமிடம் ஆக்கிய பிறகுதான் விமானத்தை எடுத்தார்கள். துபாய் நேரம் இரவு ஒன்பது மணிக்கு என்னுடைய அடுத்த விமானத்திற்கான போர்டிங். நான் தாமாமிலிருந்து துபாய் வந்து இறங்கும் போது மணி சரியாக 8.45. டிராசின்சிட் பாதையில் நடையும் ஓட்டமாகக் கடந்துவந்து கேட்டில் இருக்கும் அதிகாரியிடன் டிக்கெட்டை காட்டினால் சார்! உங்க பிளைட் கிளம்பிடுச்சு, நீங்க இங்க வெயிட் பண்ணி நாளைக்கு இதே நேரத்தில் போகலாம் என்றார். என‌க்கு வெறித்தனமான‌ கோபம். போர்டிங் ஒன்பது மணி போட்டு இருக்கீங்க!, மணி இப்பதான் 8.50 ஆகின்றது, எப்படிச் சார் கிளம்பும்? என்றேன். சாரி சார் கிளம்பிடுச்சு என்றார்.

உண்மையில் எமிரேட்ஸ் நிர்வாகம் அன்றைக்குத் துபாயில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானச் சேவையை ரத்துச் செய்திருக்கிறார்கள். போர்டிங் நேரம் ஒன்பது என்று போட்டிருக்கிறார்கள், எப்படி 8.45 க்கு விமானம் கிளம்ப முடியும்? பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தால், இவர்கள் வழக்கமாக‌ இப்படிதான் செய்கிறார்கள் என்று பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது அறிந்து கொண்டேன்.இப்போது என்னுடைய பக்கத்தில் வேறு எவராவது இருக்கிறார்களா? என்று பார்த்தேன், ஒரே ஒருவரை தவிர எவரும் இல்லை. நான் வந்த விமானத்தில் திருவனந்தபுரம் செல்வதற்கு மொத்தமே இரண்டு பேர்கள் தான். பக்கத்தில் இருந்த ஒருவரும் மலையாளி. அவர் இரண்டு வருடம் பணி முடித்து மூன்று மாதம் விடுமுறையில் இந்தியா வருகிறார். என்னால் ஒரு நாள் இங்குத் தங்க முடியாது, இதில் என்னுடைய பிரச்சனை ஏதும் இல்லை, அங்கேயே நான் டிக்கெட் வாங்கிவிட்டேன். பிளைட் தாமதமாக வந்தது என்னுடைய தவறு ஏதும் கிடையாது என்று சண்டையிடுவதற்குத் தொடங்கினேன். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரி, சார்! என்னால் ஒண்ணும் பண்ண முடியாது! நீங்க வந்து மேனேஜரை பாருங்கள்! என்று ஒரு கேபினை காட்டினார்.

மேனேஜரிடம் சென்றும் இதைத் தான் சொன்னேன். நான் ஊருக்கு வந்திருப்பதே பத்து நாட்கள் விடுமுறையில் தான், இதில் தேவையில்லாமல் ஒரு நாள் இங்குத் தங்குவதற்கு என்னால் முடியாது என்றேன். இல்ல சார் நாங்க, நீங்கள் தங்குவதற்குப் பைவ் ஸ்டார் ஹோட்டல் கொடுக்கிறோம் என்றார். நான் மேலும் கோபமாக நீங்க கொடுக்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்காக எல்லாம் நான் இங்குத் தங்க முடியாது, உடனடியாக எனக்கு அடுத்தப் பிளைட் புக்கிங் செய்து தாருங்கள் என்று சண்டையிட்டேன். இங்கு நடக்கும் பிரச்சனையை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அதிகாரியும் வந்து சேர்ந்து கொண்டார். என்னிடம் உங்க லக்கேஜ் எங்களுடைய பிளைட்டில் இருந்து டிரான்சிட் பண்ணுவது கஷ்டம். அதனால் நீங்க தயவுசெய்து நாளை செல்லுங்கள் என்று கொஞ்சினார். இருவரிடமும் நான் இங்குத் தங்கவே முடியாது. என்னுடைய பத்து நாட்கள் விடுமுறையில் ஒரு நாளை நான் இழக்கவிரும்பவில்லை என்று என்னுடைய ரிட்டன் டிக்கட்டை காட்டினேன். இனிமேலும் என்னிடம் பேசிப் பலனில்லை என்று உடனடியாக வேறு எந்தப் பிளைட் எப்போது இருக்கிறது என்று ஆன்லைனில் பார்த்துவிட்டு ஒமன் ஏர்லைன்ஸில் புக்கிங் செய்து டிக்கெட்டை கையில் கொடுத்தார்.

நான் இவ்வளவு தூரம் சண்டையிட‌வில்லையென்றால் என்னை ஒரு நாள் தங்கவைத்திருப்பார்கள். சொந்த ஊருக்கு வரும் சந்தோசத்தில் இருக்கும் நம்மிடம் வந்து கூலாக ஒரு நாள் தங்கிச் செல்லுங்கள் என்று சொல்லும் போது நமக்கு ஏற்படும் வலி இவர்களுக்குப் புரியபோவதில்லை. மனைவி உட்பட‌ வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நான் வருகிறேன் என்று வீட்டில் சொல்லியதால் அப்பாவும், அண்ணனும் கார் எடுத்து வந்து ஏர்போட்டில் வேறு வெயிட் செய்வார்கள். பயணத்தின் இடையில் வீட்டிற்குப் போன் செய்து நான் வரவில்லை என்று சொன்னால் எப்படியிருக்கும்?.

பிளைட் கிளம்ப அரைமணி நேரம் தான் இருக்கிறது சீக்கிரம் செல்லுங்கள் என்றார். கேபின் பேக்கேஜை துக்கி கொண்டு ஒமன் ஏர்வேஸ் கேட்டிற்கு ஓடினேன். அங்குச் சென்றால் ஒரு பெண் ஒமனி தான் இருந்தார். அவர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்துக் கொண்டே உங்களுடைய செக்கிங் பேக்கேஜுக்கு நாங்கள் பொறுப்புக் கிடையாது என்றார். அப்போது இருந்த மனநிலையில் லக்கேஜாவது மண்ணாகட்டியாவது என்று தான் இருந்தது. நான் வைத்திருந்த‌ கேபின் பேக்கேஜை பார்த்தவர் வேயின் மெஷினில் வைக்கச் சொன்னார். பத்து கிலோ என்று காட்டியது. உடனடியாக ஒமனி பெண் பத்து கிலோ கேபின் பேக்கேஜ் அனுமதிக்க மாட்டோம் என்றார். நான் என்னுடைய மொத்த வெயிட்டையும் டிக்கெட்டில் சுட்டிக் காட்டினேன். அவர் அதைக் கேட்பதாகயில்லை. நீங்க எமிரேட்ஸ் மேனேஜரிடம் சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என்றார்.

விமானம் கிளம்புவதற்கான‌ நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது. அங்கிருந்து திரும்பவும் எமிரேட்ஸ் ஆபிஸுக்கு ஓடினேன். அங்குச் சென்றால் மேனேஜர், இதுக்குத் தான் சார் நான் சொன்னது நீங்க நாளைக்குப் போங்க! என்று, இப்போது பாருங்க, உங்களுடைய லக்கேஜுக்கு நாங்கள் தேவையில்லாமல் பணம் கட்ட வேண்டி வருகிறது என்றார். அப்போது தான் எனக்குப் புரிந்தது, மூன்று கிலோ என்னிடம் அதிகமாக் இருப்பதற்கு இவர்களிடம் பணம் கட்டவதற்குச் சொல்லுகிறார் என்று. ஒரு வழியாக மேனேஜரும் கையெழுத்துபோட்டுக் கொடுத்துவிட்டார்.

ஒரு வழியாக எல்லாம் முடித்து ஒமன் விமானத்தில் ஏறிக்கொண்டேன். கொடுமையைப் பாருங்கள். தமாமில் இருந்து கிளம்பி துபாய், துபாயில் இருந்து மஸ்கட், மஸ்கட்டில் இருந்து திருவனந்தபுரம். எல்லாப் பயணத்தையும் முடித்துக் காலையில் திருவனந்தபுரம் வந்து இறங்கும் போது காலை எட்டு மணி. ஜெட் ஏர்வேஸில் தினமும் தமாமில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானச் சேவையிருக்கிறது. பெரும்பாலும் நான் அதில் தான் வருவேன், இந்தமுறை தான் ஆபிஸில் உள்ளவர்கள் இப்படி புக்கிங் செய்து சொதப்பிவிட்டார்கள். நான் விமானநிலையத்தில் வந்து இறங்குவதற்கு முன்பாகவே என்னைப் பற்றிய தகவல் திருவனந்தபுரம் ஏர்போட்டில் உள்ள எமிரேட்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நான் இறங்கியவுடன் நீங்கள் தான் ஸ்டீபனா? என்று ஓர் எமிரேட்ஸ் பெண் அதிகாரி ஒரு பெரிய பார்மை கொண்டு நீட்டினார். நான் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டே, எதற்கு என்றேன்? உங்க செங்கிங் பேக்கேஜ் இந்த விமானத்தில் வரவில்லை, அதற்காகத் தான் கம்பிளைன்ட் எழுதவேண்டும் என்றார்.

நல்லவேளையாகக் கேபின் பேக்கிஜில் என்னுடைய டிரஸ் எல்லாவறையும் வைத்திருந்தேன், அதனால் தான் வெயிட் அதிகமாகயிருந்தது, இல்லையென்றால் மாற்றுவதற்குக் கூட‌ டிரஸ் இல்லாமல் தான் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பேன். செக்கிங் பேக்கேஜை இவர்களிடம் இருந்து வாங்கியது ஒரு பெரிய கதை. நேரம் இருக்கும் போது பகிருகிறேன்.

.

18 comments:

ராஜி said...

ஈசியா ஃப்ளைட்ல போகப் போறேன்னு பெருமையடிக்குறதும், ம்ம்ம் பொல்லாத ஃப்ளைட்ல வந்துட்டான் ரொம்ப அலட்டிக்குறான்னு பொறாமைல பொசுங்குறதும், ஃப்ளைட்ல வந்துட்டு ரெஸ்ட் எடுக்குறானாம்ன்னு நொடிச்சு சொல்றாங்க. ஆனா, அந்த ஃப்ளைட் வர்றதுக்கு பதிலா நம்ம ஊர் நாய் புடிக்கும் வண்டி மாதிரி இருக்கும் டவுன் பஸ்ல வரலாம் போல!!

என் பொண்ணு ஏர் ஹோஸ்டசாவும், கிரவுண்ட் ஸ்டாஃபாவும் இருக்கு. இதுப்போல கதைகளை ஆயிரம் சொல்லும். காலில் விழுந்து எப்படியாவது என்னை ஏத்தி விட்டுடுங்கன்னு கெஞ்சும் பாவப்பட்ட ஆட்களை அப்பப்போ பார்க்கும்போது மனசு வலிக்குதும்மான்னு சொல்லுவா.

Anonymous said...

எல்லாமே காசுக்காக அவர்கள் செய்யும் வேலை

வடுவூர் குமார் said...

ஹூம்!

வேகநரி said...

//இவர்கள் வழக்கமாக‌ இப்படிதான் செய்கிறார்கள் என்று பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது அறிந்து கொண்டேன்.//

நானும் எமிரேட்ஸ் பற்றி இப்போ உங்களிடம்மிருந்து அறிந்து கொண்டேன்.

என்னைக் கவர்ந்தவை said...

என்னுடைய வரிசை வந்தவுடன் லக்கேஜை எடுத்து வேயின் கன்வேயரில் வைத்துவிட்டு பாஸ்போர்ட்டையும் ஆன்லைன் டிக்கெட்டையும் எடுத்துக் கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்தேன். தோளின் இருந்த ஹேண்ட் பேக்கேஜையும் எடுத்து வேயின் கன்வேயரில் வைக்கச் சொன்னார். மொத்தமாக 35 கிலோ என்று ரெட் டிஜிட்டல் டிஸ்பிளே காட்டியது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் செக்கிங் பேக்கேஜ் 30 கிலோவும், கேபின் பேக்கேஜ் 7 கிலோவும் தான் அனுமதிப்பார்கள். என்னுடைய மொத்த பேக்கேஜ் வெயிட் 35 கிலோ தான், ஆனால் கேபின் பேக்கேஜ் 10 கிலோவாக இருந்தது. சாதாரணமாக எந்த ஏர்லைன்ஸும் கேபின் பேக்கேஜ் 10 கிலோ கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். கவுண்டரில் இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கேபின் பேக்கைஜை கையில் எடுத்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு டிக்கெட்டை கையில் கொடுத்தார்.onnum puriyala

நம்பள்கி said...

எமிரேட்ஸ்-ல் விமானத்தை தவற விட்டால் (அவர்கள் தவறு என்றாலும்) ஹோட்டலில் ரூம் தருகிறார்கள? பரவாயில்லையே--இங்கு அமெரிகாவில் அதெல்லாம் ஒழித்து இருபது வருடம் ஆகிறது! நம் கை காசை போட்டு தான் ஹோட்டலில் தங்கணும்..

பிரிட்டிஷ் airவேயஸ்ஸில் லண்டனில் அவர்கள் தவறினால் இந்தியா வர முடியவில்லை என்றாலும்...நம் கை காசை போட்டு தான் ஹோட்டலலில் தங்கணும்.

மேலும், இங்குள்ள் விமான பணிப்பெண்கள் தண்ணி கூட கொடுக்க மட்டர்ர்கள்...கொழுப்பு அதிகம்.

நீங்கள் சொன்னதற்கு அப்புறம் பார்த்தால்...எமிரேட்ஸ் பற்றி படித்தால் அது தான் நம்பர் ஒன். விமான சர்வீஸ் உலகத்தில் மேலும், nanny (ஆயா) வேற உண்டாம்;குழந்தைகளை கவனித்துகொள்ள..

இனி என் வருகை...இந்தியாவீர்க்கு துபாய் வழியாக--சாப்பாடும் அட்டகாசம் என்று கேள்வி....

நன்றி நாடோடி!

நாடோடி said...

@என்னைக் கவர்ந்தவை said...
//என்னுடைய வரிசை வந்தவுடன் லக்கேஜை எடுத்து வேயின் கன்வேயரில் வைத்துவிட்டு பாஸ்போர்ட்டையும் ஆன்லைன் டிக்கெட்டையும் எடுத்துக் கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்தேன். தோளின் இருந்த ஹேண்ட் பேக்கேஜையும் எடுத்து வேயின் கன்வேயரில் வைக்கச் சொன்னார். மொத்தமாக 35 கிலோ என்று ரெட் டிஜிட்டல் டிஸ்பிளே காட்டியது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் செக்கிங் பேக்கேஜ் 30 கிலோவும், கேபின் பேக்கேஜ் 7 கிலோவும் தான் அனுமதிப்பார்கள். என்னுடைய மொத்த பேக்கேஜ் வெயிட் 35 கிலோ தான், ஆனால் கேபின் பேக்கேஜ் 10 கிலோவாக இருந்தது. சாதாரணமாக எந்த ஏர்லைன்ஸும் கேபின் பேக்கேஜ் 10 கிலோ கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். கவுண்டரில் இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கேபின் பேக்கைஜை கையில் எடுத்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு டிக்கெட்டை கையில் கொடுத்தார்.onnum puriyala//

வாங்க நண்பரே,

எந்த விமானத்தில் நீங்கள் பயணம் செய்தாலும், லக்கேஜ் கொண்டு செல்வதற்க்கு ஒவ்வொரு நிறுவனமும் சில விதிகள் வைத்திருக்கிறார்கள். நான் வந்த எமிரேட்ஸ் விமானத்தில் நீங்கள் மொத்தமாக 37 கிலோ வைத்து கொள்ள முடியும். அதில் நீங்கள் கையில் 7 கிலோ வைத்திருக்கலால். 30 கிலோ லக்கேஜ் வைக்கும் இடத்திற்கு அனுப்புவார்கள்.

கையில் 7 கிலோவுக்கு அதிகமாக வைத்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள், அதுபோல் லக்கேஜ் போடுவதும் 30 கிலோக்கு மேல் நீங்கள் கொண்டு செல்ல முடியாது. அதற்கு மேல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டுமானால் பணம் கட்ட வேண்டும்.

நான் கையில் கொண்டும் செல்லும் பேக்கில் 10 கிலோ கொண்டு செல்ல அனுமதித்தார்கள் எனப்தை தான் அந்த பத்தியில் சொல்லியிருக்கிறேன். சாதரணமாக என்னுடைய ஹேன்ட் பேக்கேஜில் அதிகமாக‌ இருந்து மூன்று கிலோவை மாற்ற சொல்லுவார்கள் அல்லது எஸ்ட்ரா பணம் கட்ட சொல்லுவார்கள்.

ஏதோ உங்களுக்கு ஓரளவு புரிய வைத்திருக்கிறேன்.
நன்றி.

நாஞ்சில் பிரதாப்™ said...

இந்த ஒரே காரணத்துக்காகத்தான் கம்பெனியின் பட்செட்டை விட டிக்ககெட் விலை அதிகமாக இருந்தாலும் கைகாசைப்போட்டு டைரக்ட் சேவையில் வந்துவிடுவேன். மற்ற ஏர்லைனாக இருந்தால் ரொம்ப அலைக்கழிப்பார்கள்.
இந்தவிசயத்தில் எமிரேட்ச் அடிச்சுக்கமுடியாது....

drogba said...

இவ்வளவு குறைந்த நேர transitல் அடுத்த flightஐ தவற விடுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். நீங்கள் அவர்களின் term and conditionஐ வாசிக்கவில்லை போலும். அவர்கள் உங்களுக்கு செய்தது போல் செய்ய வேண்டியது இல்லை. என்னைப் பொறுத்தவரை நீங்கள் அதிஷ்டசாலி

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Chokkan Subramanian said...

ஊர் வந்து சேர்வதற்குள் ஏற்பட்ட மனக் கஷ்டமே அதிகம். இதில் பேக்கேஜ் வரவில்லையென்றால் இன்னும் கொடுமை.

நாடோடி said...

@ராஜி said...
//ஈசியா ஃப்ளைட்ல போகப் போறேன்னு பெருமையடிக்குறதும், ம்ம்ம் பொல்லாத ஃப்ளைட்ல வந்துட்டான் ரொம்ப அலட்டிக்குறான்னு பொறாமைல பொசுங்குறதும், ஃப்ளைட்ல வந்துட்டு ரெஸ்ட் எடுக்குறானாம்ன்னு நொடிச்சு சொல்றாங்க. ஆனா, அந்த ஃப்ளைட் வர்றதுக்கு பதிலா நம்ம ஊர் நாய் புடிக்கும் வண்டி மாதிரி இருக்கும் டவுன் பஸ்ல வரலாம் போல!!

என் பொண்ணு ஏர் ஹோஸ்டசாவும், கிரவுண்ட் ஸ்டாஃபாவும் இருக்கு. இதுப்போல கதைகளை ஆயிரம் சொல்லும். காலில் விழுந்து எப்படியாவது என்னை ஏத்தி விட்டுடுங்கன்னு கெஞ்சும் பாவப்பட்ட ஆட்களை அப்பப்போ பார்க்கும்போது மனசு வலிக்குதும்மான்னு சொல்லுவா.//

வாங்க சகோ,

வாங்க சகோ,

விமான பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருப்பது உண்மை.. கருத்துக்கு ரெம்ப நன்றி..

நாடோடி said...

@வடுவூர் குமார் said...
//ஹூம்!//

வாங்க வடுவூர் குமார்,

கட்டட பதிவுகள் ஏதும் ரெம்ப எழுதுவது இல்லை போல..

@வேகநரி said...
//இவர்கள் வழக்கமாக‌ இப்படிதான் செய்கிறார்கள் என்று பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது அறிந்து கொண்டேன்.//

நானும் எமிரேட்ஸ் பற்றி இப்போ உங்களிடம்மிருந்து அறிந்து கொண்டேன்.//

வாங்க வேகநரி,

என்னுடைய அனுபவத்தை பகிர்ந்தேன். கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி.

நாடோடி said...

@நம்பள்கி said...
//எமிரேட்ஸ்-ல் விமானத்தை தவற விட்டால் (அவர்கள் தவறு என்றாலும்) ஹோட்டலில் ரூம் தருகிறார்கள? பரவாயில்லையே--இங்கு அமெரிகாவில் அதெல்லாம் ஒழித்து இருபது வருடம் ஆகிறது! நம் கை காசை போட்டு தான் ஹோட்டலில் தங்கணும்..

பிரிட்டிஷ் airவேயஸ்ஸில் லண்டனில் அவர்கள் தவறினால் இந்தியா வர முடியவில்லை என்றாலும்...நம் கை காசை போட்டு தான் ஹோட்டலலில் தங்கணும்.

மேலும், இங்குள்ள் விமான பணிப்பெண்கள் தண்ணி கூட கொடுக்க மட்டர்ர்கள்...கொழுப்பு அதிகம்.

நீங்கள் சொன்னதற்கு அப்புறம் பார்த்தால்...எமிரேட்ஸ் பற்றி படித்தால் அது தான் நம்பர் ஒன். விமான சர்வீஸ் உலகத்தில் மேலும், nanny (ஆயா) வேற உண்டாம்;குழந்தைகளை கவனித்துகொள்ள..

இனி என் வருகை...இந்தியாவீர்க்கு துபாய் வழியாக--சாப்பாடும் அட்டகாசம் என்று கேள்வி....

நன்றி நாடோடி!//

வாங்க நம்பள்கி,

அமெரிக்காவில் அப்படி இருக்கிறதா?.. இந்த தகவல் எனக்கு புதிது, நான் இரண்டு அல்லது மூன்று மாத விடுமுறையாக இருந்தால் கண்டிப்பாக தங்கி வந்திருப்பேன். வர்றதே பத்து நாட்கள்.. :)

எமிரேட்ஸில் நான் வெஜ் சாப்பாடு சூப்பரா இருக்கும்... :) கண்டிப்பா ஒருமுறை டிரை பண்ணுங்க..!!

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்™ said...
//இந்த ஒரே காரணத்துக்காகத்தான் கம்பெனியின் பட்செட்டை விட டிக்ககெட் விலை அதிகமாக இருந்தாலும் கைகாசைப்போட்டு டைரக்ட் சேவையில் வந்துவிடுவேன். மற்ற ஏர்லைனாக இருந்தால் ரொம்ப அலைக்கழிப்பார்கள்.
இந்தவிசயத்தில் எமிரேட்ச்
அடிச்சுக்கமுடியாது....//

வாங்க பிரதாப்,

டைரக்ட் சேவைதான் பெஸ்ட் தல.. ஒருமுறை பட்ட பாடே ரெம்ப கொடுமை..

@Chokkan Subramanian said...
//ஊர் வந்து சேர்வதற்குள் ஏற்பட்ட மனக் கஷ்டமே அதிகம். இதில் பேக்கேஜ் வரவில்லையென்றால் இன்னும் கொடுமை.//

வாங்க சுப்பிரமணியன்,

உண்மைதான், ரெம்ப கஷ்ட பட்டுதான் வந்து சேர்ந்தேன். திரும்ப‌ லக்கேஜ் எடுத்ததும் ஒரு பெரிய கதை தான்.

நாடோடி said...

@drogba said...
//இவ்வளவு குறைந்த நேர transitல் அடுத்த flightஐ தவற விடுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். நீங்கள் அவர்களின் term and conditionஐ வாசிக்கவில்லை போலும். அவர்கள் உங்களுக்கு செய்தது போல் செய்ய வேண்டியது இல்லை. என்னைப் பொறுத்தவரை நீங்கள் அதிஷ்டசாலி//

வாங்க ட்டிக்பா,

கனைக்சன் பிளைட்டை தவறவிடுவது term and condition பற்றிய விளக்கம் நான் படிக்கவில்லை, ஒரு வேளை நான் பத்து நாட்கள் விடுமுறை என்று வந்திருப்பதால் எனக்கு இந்த வழியை அவர்கள் செய்திருக்கலாம்... :)

Anonymous said...

நான் பல முறை துபாய் மூலம் பல ஊர்களுக்கு சென்று உள்ளேன். இது வரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை... நான் எப்போதும் குறைந்தது 2 மணித்தியாலம் ஆவது விமாணம் மாற்ற (முக்கியம் மத்திய கிழக்கு நாடுகளில்) இருக்கும் படி பாத்துக்கொள்வேன்.

ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/06/blog-post_6.html?showComment=1402066899274#c3308107344037492304

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts with Thumbnails