Monday, June 27, 2016

அறிவுஜீவிகள் வெட்கப் பட வேண்டாமா?

சமீபத்தில் ஒரு நாள், ஊரில் என்னுடன் படித்த பெண் நண்பர் ஒருவரை அலைப்பேசியில் அழைத்திருந்தேன், அவர் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார், எதற்காக அங்குச் சென்றார் என்பதை விசாரிப்பதற்கு அவகாசம் தராமல், என்னை மாலையில் அலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார்.

மாலையில் என்னை அழைத்து, தம்பிக்கு உடம்பு சரியில்லை, அவனுடைய நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு பிரச்சனையாக இருக்கிறது என்றும் அபாய கட்டத்தில் அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை கொடுப்பதாகச் சொன்னார். என்னால் அவர் தம்பி என்று சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை, திரும்பவும் யாருக்கு உடம்பு சரியில்லை என்று கேட்டேன், காரணம் அவர் சொல்லியிருக்கும் உறுப்புகளுக்கு வரும் வியாதியெல்லாம், எந்தப் பழக்கம் உள்ளவருக்கு வரும் என்பது மருத்துவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் மீண்டும் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்திருக்கிறது என்றும், வீட்டில் உள்ள எவருக்கும் இவனுடைய இந்தக் குடி பழக்கம் சரியாக தெரியாது என்றும் சொன்னார்.

அவர் சொல்லியதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் எனக்கும் அவருடைய தம்பியை நன்றாகத் தெரியும், என்னைவிட ஐந்து வயது குறைவாக இருப்பான். பள்ளியில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன், அப்போது மிகச் சிறுவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் இந்தப் பெண் நண்பரிடம் பேசிய போது, அவருடைய தம்பியை பற்றி விசாரித்தேன், அவன் படிப்பில் பெரிய அளவு ஈடுபாடு இல்லையென்றும் சொந்தமாக தொழில் செய்வதாக சொல்லி நாகர்கோவிலில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு துணிக்கடை வைத்திருக்கிறான் என்று சொல்லியிருந்தார்.

துணிக்கடை வைத்திருக்கும் போது பெரும்பாலும் இரவில் வீட்டிற்குத் தூங்குவதற்கு வருவது இல்லையாம், நண்பர்களுடன் சேர்ந்து கடையில் தூங்கிவிடுவானாம், அதனால் அவனுடைய தொடக்க கால குடிப்பழக்கம்  வீட்டிற்குத் தெரிந்திருக்கவில்லை. இவனுடைய குடிப்பழக்கம் அளவிற்கு அதிகமாகிய பிறகு தான் வீட்டிற்குத் தெரிய வந்திருக்கிறது, இவனைக் கண்டிக்க வேண்டிய அப்பாவிற்கும் குடிப் பழக்கம் உண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் ஓடு வேய்ந்த மண் வீடு இடிந்து விழுந்திருக்கிறது, இப்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறார்களாம். இப்படியான சூழ்நிலையில் தான் இவனுடைய மருத்துவ செலவு வந்திருக்கிறது.

முதலில் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள், அவர்கள் இவனுடைய மோசமான நிலைமையைப் பார்த்துவிட்டு உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைத்து இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்ந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள், உயிருக்கான உத்திரவாதம் ஒரு வாரம் வரையிலும் சொல்லப்படவில்லை. நாள் ஒன்றிற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது.

என்னுடைய நண்பர் காதல் திருமணம் செய்தவர், அவர்  நெல்லையில் இரண்டு குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். தந்தையின் வருமானம் அவருடைய குடிப்பழக்கத்திற்கு சரியாக இருந்தது. மருத்துவமனையில் ஆன பண செலவுகளின் பெரும் பகுதியை இவர் தான் புரட்டியிருக்கிறார். தினமும் ஐம்பதாயிரம் செலவு என்றால் இப்படியான குடும்பத்தால் எத்தனை நாட்கள் கடத்திவிட முடியும், என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார். சிலரின் ஆலோசனைப் படி கேரளாவில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனை மற்றும் (அம்மா) அமிர்தா மருத்துவமனை போன்றவற்றில் விசாரித்திருக்கிறார், எவரும் குடியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இலவச சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள்.

நண்பரின் தம்பியின் மெடிக்கல் ரிப்போர்ட்

குடிப் பழக்கத்தால் 27 வயதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இந்தளவிற்குப் பாதிக்க படுகிறது என்றால் டாஸ்மாக்கில் கொடுக்கப்படும் போதை வஸ்துக்கள் எப்படியானவை என்ற கேள்விகள் வருகிறது. இப்போது டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களின் தரம் யாரால் எவரால் சோதிக்கப்படுகிறது, அதில் இருக்கும் ஆல்கஹாலின் அளவுகள் மற்றும் கெமிக்கல் மிக்சிங் போன்றவை எதன் அடிப்படையில் இந்த மதுபானங்களில் சேர்க்கப்படுகிறது என்பதற்கு வெளிப்படையான தகவல்கள் கிடையாது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட  பிராண்டட் மது பாட்டில்கள் கிடைப்பது அரிது,  அப்படியானால் கிராமங்களில் விற்கப்படும் பாட்டில்கள் சொல்லவே வேண்டாம். கிராமங்களில் உள்ள டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் பிராண்டட் பெயர் சொல்லி கேட்பது இல்லை, 120 ரூபாய், 150 ரூபாய் சரக்கு கொடு என்று தான் கேட்கிறார்கள். அதில் பெயர் போட்டிருக்கிறதா, முத்திரைகள் இருக்கின்றதா என்றெல்லாம் எவரும் சோதித்து பார்ப்பது இல்லை.

முன்பெல்லாம் ஊரில் கள்ள சாராயம் குடித்தவர்களுக்கு கூட ஒரு ஐம்பது வயதிற்கு மேல் தான் உடலில் பிரச்சனைகள் வரும், ஆனால் இன்று அரசாங்கம் விற்கும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை வாங்கிக் குடித்தால் இளம் வயதிலேயே மருத்துவமனையில் சென்று படுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஒருவனுக்கு வியாதியைக் கொடுக்கிற மதுவை வரிந்து கட்டிக்கொண்டு ஆண்டுக்கு டார்கெட் வைத்து வியாபாரம் செய்கிறது இந்த அரசு. ஆனால் அந்த மக்களின் வியாதியைக் குணப்படுத்தும் அரசு மருத்துவமனைகளைக் கண்டு கொள்வதில்லை. கிராமங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் நிலையை இந்தக் கட்டுரையில் விவரித்து விட முடியாது, மருத்துவர்கள் இருந்தால், செவிலியர்கள் இருக்க மாட்டார்கள், செவிலியர்கள் இருந்தால் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் இருந்தால், மருத்துவ முறைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. ஒருவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வராதீர்கள், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஒருவர் என்னிடம் பேசும் போது சாதாரணமாக சொல்லுகிறார்.

இன்று டாஸ்மாக்கின் அமோக விற்பனையால் தான் அரசாங்கம் நமக்கு இலவசங்களைக் கொடுக்க முடிகிறது,  வருட வருடம் மாநிலத்திற்கான நிதிநிலை அறிக்கையைப் போட முடிகிறது, இல்லையென்றால் பெரிய துண்டு விழும் என்று விவாதிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இப்படிச் சொல்ல வெட்கப் பட வேண்டாமா? ஒருவனுடைய மதுப் பழக்கம் அவனை மட்டும் பாதிப்பதில்லை, அவனைச் சார்ந்த குடும்பத்தையும் சீரழிக்கிறது, குடும்பங்கள் தான் சமூகத்தின் ஆணி வேர்கள் என்று வக்கணையாக ஏட்டில் எழுதி வைத்துப் படிக்கிறோம். ஆணி வேர்களுக்கு நஞ்சை உறிஞ்ச கொடுக்கும் டாஸ்மாக் கடைகளால் மட்டும் தான் ஒரு அரசாங்கம் ஆட்சி செய்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்றால் அந்த ஆட்சியின் கீழ் வாழும் நாம் எல்லாம் மாக்கள் தான். பல குடும்பங்கள் மதுவால் அழிந்தாலும் பரவாயில்லை, என்னுடைய இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று சொல்லும் அரசுகள் உண்மையில் "நமக்கான அரசு தான்" என்பதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும்.ஒரு சுதந்திர நாட்டில், ஒரு குடி மகன் மதுக் குடிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை, அந்த உரிமையை எப்படி நாம் பறிக்க முடியும் என்று சில பேர் கேள்வி கேட்கிறார்கள். குடிப்பழக்கம் என்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை, அவரைச் சுற்றியிருக்கும் சமுகத்தையும் பாதிக்கிறது என்பதை எத்தனைப் புள்ளி விபரங்கள் மற்றும் செய்திகளை எடுத்து வைத்தாலும் இவர்கள் கேட்க போவது இல்லை. குடிப்பழக்கத்திற்கு நாங்கள் அடிமை இல்லை, ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறோம் என்று சொல்லும் கூட்டம் தான் டாஸ்மாக் விடுமுறை நாள் என்று அரசு அறிவித்தால் அதற்கு முந்தின நாளே வாங்கி ஃப்ரிஜில் வைத்துக் கொள்கிறது. குடிப்பழக்கம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை ஒன்றும் இல்லை. ஒழுக்க கேடான செயல்களுக்கு எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம், என் தனிப்பட்ட உரிமை என்று சட்டம் பேசிவிட முடியாது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் இந்த டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று சொல்லும் அறிவுஜீவிகள் கண்டிப்பாக மது பிரியர்களை நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் பார்த்திருப்பார்கள். கண்டிப்பாக மதுப் பழக்கம் உள்ளவர்களிடம் இவர்களுக்கான தொடர்பு அறவே இருப்பது இல்லை. நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு மட்டும் தான் இந்த மாற்று ஏற்பாடுகள் தேவை, இந்த நடுத்தர வர்க்கத்திற்கு திடீரென வேலைப் போய் விட்டால் கூட என்ன செய்வது என்று தெரியாது, அதற்கும் கூட மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது, உறவுகளையும், சமூக அக்கறைகளையும் தொலைத்து நிற்கும் இந்தக் கூட்டத்திற்கு எல்லாவற்றுக்கும் தனியாகவே ஒரு மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது என்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நடந்த இன்போசிஸ் நிறுவனத்தில்  வேலைப்பார்த்து வந்த இளம் பெண்ணின் படுகொலையே சாட்சி.

கிராமத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சொல்லுவது, காலையிலேயே கடையை திறந்து வைத்து ஆசையைத் தூண்டி விடுகிறார்கள், அந்தக் கடைப்பக்கம் செல்லாமல் வேறு பாதையில் செல்லலாம் என்றால், அங்கு நமக்குத் தெரிந்தவர்கள் இருவர் குடிக்க கிளம்புவார்கள், இல்லையென்றால் குடித்துவிட்டு வந்து நம்மிடம் பகடி செய்வார்கள், இப்படியான சூழ்நிலையை எதிர் கொள்வது தான் கடினம் என்று அங்கலாய்க்கிறார்கள். எனது அப்பாவும் குடிப்பழக்கம் உள்ளவர் தான், சில நாட்கள் காலையில் ஆரம்பித்தால் அன்று முழுவதும் அவர் அந்தப் போதை உலகத்தில் தான் இருப்பார். அவரிடம், அப்பா! டாஸ்மாக்கை மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால், அது இல்லையென்றால் குடியா மூழ்கிவிடும், அதோடு தொலைந்தது என்று விட்டு விடுவேன் என்று சொல்லுவார்கள். ஆனால் "குடிக்காமல் இருங்கள்" என்று சொன்னால் "முடியாது" என்று தான் சொல்வார்கள். இவர்களால் குடிக்காமல் இருக்க முடியும், ஆனால் எளிதாகக் கிடைக்கிறது என்ற எண்ணம் தான் இவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாமல் வைத்திருக்கிறது.

என்னுடன் சவுதியில் இருக்கும் சில நண்பர்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது நாள் தோறும் தவறாமல் மாலையில் டாஸ்மாக் சென்று வருபவர்கள் தான். ஆனால் இப்போது அவர்களால் குடிக்காமல் ஒரு வருடங்களுக்கு மேல் இருக்க முடிகிறது. குடிப்பதற்கு எளிதாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, "நீ குடிக்காதே" என்று அவனைக் கட்டுப்படுத்த நினைப்பது எப்படியான மனநிலை என்று புரியவில்லை

வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து குடும்பங்களின் இளம் குருத்துக்களை குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைத் தான் சேரும். இன்றைக்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் டாஸ்மாக் கடையை தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போன்ற காட்சிகளை அமைக்கும் இயக்குநர்களின் கற்பனை வறட்சியும் குடிப்பழக்கத்தை ஆதரித்து அதற்குத் தூபம் போடுவது போல் அமைகிறது...

4 comments:

Unknown said...

நல்ல பதிவு. எரியறதைப் புடுங்கினா தானா அடங்கிட்டுப் போகுது. ஆனால் புடுங்க மாட்டார்கள். எளிதில் கிடைப்பதால் தான் அனைவரும் தூண்டப்படுகிறார்கள். சரக்கடிக்க காரணம் தானாகவே அமைந்து விடுகிறது. வேலைபளு, சூழ்நிலை, நண்பர்கள், பொழுதுபோக்கு என்று ஆரம்பித்து கடைசியில் அடிமையாக்கி விடுகிறது.
மூடு டாஸ்மாக்கை என்று சொல்ல முதலில் நம் மக்களுக்கு துணிவும் ஒன்றுசேர்தலும் வேண்டும். தனித்தனியாக போராடிப் பயனில்லை. மாநில அளவில், அரசியல் பின்னணி இல்லாமல் ஒரு மாபெரும் இயக்கமாக முன்னெடுக்க அனைவரும் ஓரணியில் இருக்க, இயங்க வேண்டும்.
பின்குறிப்பு: நானும் சரக்கடிப்பவன் தான்.
நன்றி.
விஜயன்.

”தளிர் சுரேஷ்” said...

குடிப்பழக்கம் முன்பெல்லாம் கட்டுக்குள் இருந்தது உண்மை! கள்ளச்சாராய சாவுகள் இருப்பினும் சிறு வயதினர் பள்ளிக்கூட பிள்ளைகள் குடிக்க மாட்டார்கள். இன்றைய டாஸ்மாக் வரவினால் பள்ளிகளுக்கே பிள்ளைகள் குடித்துவிட்டு வரும் நிலை ஏற்பட்டுவிட்டது. வேலை செய்யாமல் கூலியை எதிர்பார்க்கும் மக்களின் கூலி இப்படி டாஸ்மாக்கிற்கு திரும்பிவிடுகின்றது.

K. ASOKAN said...

அருமையான பதிவு, மக்கள் விழித்தால்தான் பலன் உண்டு

நாடோடி said...

@விஜயன்.
வாங்க விஜயன்,
உங்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன், இந்த மது பழக்கத்தால் விளையும் தீமை கண்டிப்பாக மக்களை ஒன்று சேர்க்க வைக்கும்.. நன்றி.

@‘தளிர்’ சுரேஷ்,

வாங்க சுரேஷ்,
பள்ளி சிறுவர்களை குடிப்பதில் அடிமையாகியதில் நம்முடைய தமிழ் திரைப்படங்களுக்கு பெரும் பங்கு உண்டு..
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

@Asokan Kuppusamy,

வாங்க குப்புசாமி,
உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

Related Posts with Thumbnails