Monday, June 20, 2016

ஏண்டா! இவனா நம்ம கோவாலு!

ஊர் திருவிழாவை திட்டமிட்டு இந்த முறை வருட விடுமுறையை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து, பிப்ரவரி முதல் வாரம் வரை எடுத்திருந்தேன், முதல் இரண்டு வாரங்கள் கோவில் திருவிழா மற்றும் சொந்த வேலைகள் என்று கொஞ்சம் பிஸியாக போனது, குடும்பத்துடன் பெரிதாக வெளியில் எங்கும் சுற்ற முடியவில்லை. திருவிழா முடிந்த வாரத்தில், ஒரு நாள் வீட்டில் சொந்த வேலைகள் எதுவும் பெரிதாக இல்லை, அதனால் வெளியில் சென்று வரலாம் என்று காலையில் மனைவியிடம் சொன்னேன், ஊரில் இருக்கும் போது பெரும்பாலும் நான் "வெளியில் செல்லலாம்" என்றால் நாகர்கோவிலுக்குப் படம் பார்க்கப் போகிறோம் என்று தான் அதன் பொருள் என்று மனைவிக்குத் தெரியும்.

காலையில் குளித்து, டிபன் சாப்பிட்டு இருவரும் கிளம்பும் போது மணி பத்தை நெருங்கியது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, வராண்டாவில் நிறுத்தியிருந்த டூவீலரை வெளியில் எடுக்கும் போது தான் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று பேப்பரில் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது, திரும்பவும் வீட்டிற்குள் சென்று பேப்பரைப் புரட்ட வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால், போகிற வழியில் சுவரொட்டி போஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து, மனைவியைப் பின்னால் ஏற்றிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

எனது வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு பதிமூன்று கிலோமீட்டர் தொலைவு தான் இருக்கும், போகிற வழியில் பெரிய அளவில் சினிமா போஸ்டர்களை பார்க்க முடியவில்லை, அப்படியே ஒட்டியிருந்தாலும் என்னால் வண்டியை நிறுத்திப் பார்க்க முடியவில்லை. அதனால் நேராக ராஜா மால் சென்று விடலாம் அங்கு ஏதாவது ஒரு புது படம் கண்டிப்பாக இருக்கும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு வண்டியை நேராக செட்டிக்குளம் விட்டேன். ராஜா மாலின் கீழ் தளத்தில் பார்க்கிங் வசதி இருக்கிறது, மனைவியை மாலின் முன் இறங்கச் சொல்லிவிட்டு, வண்டியைக் கொண்டுபோய் பார்க்கிங் ஸ்டாண்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் மாலுக்குள் நுழைந்தோம். இந்த மாலில் இரண்டாவது தளத்தில் தான் தியேட்டர் இருக்கிறது, நேராக இரண்டாவது தளத்திற்கு சென்று என்ன படம் இருக்கிறது என்று கவுண்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன், அவர் கதக்களி, ரஜினி முருகன், குங்க்பூ பாண்டா-3 இருக்கிறது என்றார், நான் கதக்களிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினேன்.

டிக்கெட் வாங்கி விட்டு ஷோ-டைமை பார்த்தேன், காலை 11.30 என்று இருந்தது, என்னுடைய கையிலிருந்த மொபைலில் மணியைப் பார்த்தேன், மணி 10.40 தான் ஆகியிருந்தது, இன்னும் படம் தொடங்குவதற்கு 40 நிமிடம் இருந்தது, இங்குக் காத்திருப்பதை விட, மேல் தளத்தில் இருக்கும் புட் கோர்ட்க்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருவரும் மாடிப் படியேறினோம், பெரிய அளவில் கூட்டம் இல்லை, எங்களைப் போல படம் பார்க்க வந்தவர்களும், கல்லூரிகளுக்குக் கட் அடித்துவிட்டுச் சுற்றிக்கொண்டிருக்கும் சில இளசுகளையும் ஆங்காங்கே இருக்கைகளில் பார்க்க முடிந்தது. மனைவியிடம் ஏதாவது சாப்பிடுகிறாயா என்று கேட்டேன், அவர் கண்கள் ஐஸ்கிரீம் பார்லரை தான் நோக்கியது, சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம் பார்லர் பக்கத்தில் போடப்பட்டிருந்த டேபிளில் மனைவியை அமரச் சொல்லிவிட்டு, நான் சென்று பார்லரில் ஒரு கேரமல் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரீம்  ஆர்டர் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த காபி ஷாப்பில் எனக்கு ஒரு காபி ஆர்டர் செய்தேன்.

ஐஸ்கீரீமை வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு, காபி வாங்குவதற்காகக் காபி ஷாப்பில் வெயிட் பண்ணினேன். இரண்டு வாண்டுகள் வேகமாக ஓடிவந்து ஐஸ்கீரீம் பார்லரின் டேபிளில் இருந்த மெனுகார்டை எடுப்பதற்காகத் துள்ளி கொண்டிருந்தார்கள், நில்லுங்கடா.. டேய்... டே .. என்று சத்தமிட்டு கொண்டு அவர்கள் பின்னால் ஓடி வந்த ஒருவர் டேபிளில் இருந்த மெனு கார்டை எடுத்து அந்த வாண்டுகளிடம் கொடுத்துவிட்டு, கடைக்காரரிடம் கண்ணாடியில் தெரிந்த ஐஸ்கீரீமை காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வாண்டுகளும் ஒருவர் மாறி ஒருவர் மெனுக்கார்டை பார்த்து, திஸ் இஸ் இ வாண்ட் என்று கை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நான் ஆர்டர் பண்ணிய காபி வரவே, அதை வாங்கிக் கொண்டு மனைவி இருந்த டேபிளின் எதிர் பக்கத்தில் அமர்ந்து இந்த இரண்டு வாண்டுகளின் செய்கைகளை நானும் மனைவியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம், அந்த இரண்டு வாண்டுகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தன. டாட் திஸ் இச் ஐ வாண்ட் என்று ஒரு வாண்டு அவர்கள் பக்கத்தில் நின்றவரிடம் கை காட்டும் போது தான், நான் அவர் முகத்தைச் சரியாக பார்த்தேன், எங்கோ பார்த்த முகமாக இருந்தது, எனக்கு உடனடியாக ஞாபகம் வரவில்லை, மனைவியிடம் நான் அவரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர் என்னை அடையாளம் கண்டுபிடித்து, "ஹே பால்! ஹவ் ஆர் யூ மேன், ஆப்டர் லாங் டைம், ஹேவ் எ ஸ்ர்பிரைச்சுடு" என்று என்னிடம் வந்தார்.

என்னை "பால்" என்று அழைத்ததும், அவனுடைய (ஆமா இனி அவர் என்ற மரியாதை இல்லை அவன் தான்) பேச்சில் இருந்த தடங்கலும் எனக்கும் ஒருவனை ஞாபகப் படுத்தியது, ஆம்! நான் நினைத்தது சரி தான், இவன் என்னுடன் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ-வில் ஒன்றாகப் படித்தவன். பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்கள் மட்டும் தான் என்னை "பால்" என்று அழைப்பார்கள். ஆனால் இவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசியது இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிளஸ் ஒன்னில் நான் படிக்கும் போது கணித பாடப் பிரிவில் காமர்ஸ் என்று ஒரு பிரிவு இருந்தது, அதில் சேருவதற்கு எவரும் விரும்ப மாட்டார்கள்,  பத்தாம் வகுப்பில் கணிதத்தில் ஒரு ஐம்பது மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்கள், கணித பிரிவை எடுத்து படிக்க விரும்பினால் அவர்களை இந்தப் பிரிவில் சேர்த்துக்கொள்வார்கள். பெரும்பாலும் இந்தப் பாட பிரிவை எடுத்தவர்களுக்கு, அந்தப் பாட பிரிவைப் பற்றிய முழு புரிதல் இருப்பதில்லை. பள்ளி நிர்வாகம் அந்தப் பாட பிரிவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சிலரை வலுக்கட்டாயமாகச் சேர்த்துவிடுவார்கள், கணிதம் பயாலஜி பிரிவு எடுத்தவர்களுடன் தான், காமர்ஸ் பிரிவு எடுத்தவர்களும் வகுப்பில் ஒன்றாக இருக்க வைக்கப் படுவார்கள். பயாலஜி மற்றும் காமர்ஸ் பாடம் மட்டும் தனித்தனியாக நடத்தப்படும்.

ஏண்டா! நண்பன் ஒருத்தனை பார்த்தேன்னு மேல் பத்தியில் எழுத்திட்டு, அவனைப் பற்றி ஏதாவது எழுதுவானென்று பார்த்தா, அப்படியே யூ டார்ன் எடுத்து பயாலஜி, காமர்ஸ்னு மொக்கை போடுறனு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது, சரி சரி ! சொல்லுறேன், நான் பிளஸ் ஒன்னில் பயாலஜி பிரிவில் படிக்கும் போது அவன் என்னுடன் காமர்ஸ் வகுப்பில் படித்தான். பத்தாம் வகுப்பிலேயே இரண்டு மூன்று முறை அட்டம்ட் எழுதி வந்தவன். என்னைவிட ஒரு மூன்று வயதாவது மூத்தவனாக இருப்பான், ஆனால் பார்ப்பதற்கு அப்படித் தெரியாது, கொஞ்சம் குள்ளமாக இருப்பான். கன்னம் இரண்டும் இட்லி வைத்துத் தைத்தது போல் உப்பலாக இருக்கும். அவன் பேசும் போது நாக்கு கொஞ்சம் குழறும். அவனுடைய அப்பாவிற்கு மரவள்ளி கிழங்கு மொத்த வியாபாரம், ஊரில் சொத்து பத்து அதிகம் உண்டு, பள்ளி படிக்கும் போதே அவனிடம் கை நிறைய பணம் புழங்கும்.

எல்லாப் பாடத்திற்கும் தனித் தனியாக டியூசன் வைத்திருந்தான், ஆனால் அவனுக்கும் படிப்பிற்கும் காதத் தூரமாக இருந்தது, எந்தத் தேர்விலும் பாஸ் மார்க்கு வாங்குவது இல்லை, அவனுக்கு அதைப் பற்றிய கவலையும் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுடன் வியாபாரத்தைக் கவனிக்க கிளம்பி விடுவான். பிளஸ் டூ விலும் நான்கு பாடம் தோல்வி அடைந்தான் என்று நினைக்கிறேன். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு நான் பள்ளிக்கு சென்றிருந்த போது, அவனும் பள்ளிக்கு வந்திருந்தான், இனிமேல் ஐடிஐ படிக்கப் போவதாக என்னிடம் சொன்னான், அப்போது தான் அவனை நான் கடைசியாக பார்த்தது, அதன்பிறகு சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது தான் தியேட்டரில் பார்க்கிறேன்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தான், அவனுடைய ஆங்கில பேச்சில் மெய்மறந்து அப்படியே நிற்கும் போது, என்ன பால்! என்ன தெரியலியா! நான் தான் கிருஷ்ணன் என்றான், ஆகா ! நீதானா நானும் உன்னை எங்கேயே பார்த்தது போல இருக்கு என்று என்னோட வைப் கிட்ட இப்பா தான் சொல்லிட்டு இருந்தேன், நீ அதுக்குள்ள என்னை அடையாளம் கண்டு அழைத்து விட்டாய் என்று கை கொடுத்து என்னுடைய மனைவியை அறிமுகம் செய்து பேசிக்கொண்டிருந்தேன், அவனும் குடும்பத்துடன் தான் வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவனுடைய இரண்டு மகன்களும் கையில் இரண்டு பெரிய கப் ஐஸ்கீரீமுடன் வந்தார்கள். டாட்! ஐ காண்ட் ஹோல்ட் திஸ் வெரி சில்! என்று ஒருவன் தனது கையில் இருந்த ஐஸ்கீரீமை நீட்ட, அருகில் இருந்த என்னுடைய மனைவி அவனிடம் இருந்து அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அவனைச் செயரில் அமர வைத்தார்

தான் இப்போது சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அங்கு தான் குடும்பத்துடன் இருப்பதாகவும் சொன்னான், இரண்டு கடைகள் தள்ளி இருக்கும் பீட்சா கடையில் சாப்பிடும் போது தான் இந்த இரண்டு வாண்டுகளும் ஐஸ்கீரீம் வேண்டும் என்று தொல்லை படுத்தி அழைத்து வந்ததாகவும், தன்னுடைய மனைவி அந்த டேபிளில் காத்திருப்பதாகவும் சொல்லி எங்களை அங்கு வருமாறு அழைத்தான். நாங்களும் அவனுடன் அந்த டேபிளுக்கு சென்றோம், அந்த புட் கோர்ட்டில் இருந்த மொத்த கடைகளின் உணவு வகைகளும் அந்த டேபிளில் இறைந்து கிடந்தது, அவனுடைய மனைவியையும் அறிமுகப்படுத்தி வைத்தான். அவரும் சிங்கப்பூரில் நர்ஸ் ஆக வேலை பார்ப்பதாக சொன்னார்.

பிள்ளைகளிடமும், மனைவியிடமும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினான், என்ன விசயமாக இங்கு வந்தாய் என்று கேட்டேன், பிள்ளைகள் எல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள், அதான் வந்தேன் என்றான், நானும் படம் பார்க்கத் தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு, என்ன படம் பார்க்க! கதகளியா?, ரஜினி முருகனா? என்று கேட்டேன். அவன் இல்லடா! தமிழ்ப் படங்கள் எல்லாம் இப்ப பார்கிறது இல்லை! குங்க்பூ பாண்டா-3 பார்க்க வந்தேன் என்று எனக்கு பல்பு கொடுத்தான். நான் என்ன படம் பார்க்க வந்திருக்கிறேன் என்று கேட்டான், நான் கதக்களி என்று சொன்னேன், அவனுடைய ஷோ-டைம் காலை 11.15 , எங்கள் படத்தின் ஷோ-டைமை விட 15 நிமிடம் முன்னதாக இருந்ததால் எங்களிடம் விடைபெற்று கொஞ்சம் சீக்கிரமாக நால்வரும் கிளம்பினார்கள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் இருந்த பாதி உணவுகள் அப்படியே இருந்தது, அந்த டேபிளில் நாம் இருவரும் இருந்தால், பார்க்கிறவங்க நம்மள தப்பா நினைப்பாங்க, வா ! நாம போய் வேறு டேபிளில் அமரலாம் என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு முன்பு நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு மாறினோம். வந்து அமர்ந்த என்னுடைய மனைவி என்னிடம், இவரை பற்றி, நீங்க! என்னிடம் ஏதும் சொன்னது போல ஞாபகம் இல்லையே! எல்லோரைப் பற்றியும் ஒரு கதை சொல்லுவிங்க! என்று கேட்டார்.



அவரிடம் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

நான் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் போது என்னுடன் படித்த இரண்டு பேர் மாதத்திற்கு ஒரு நாளாவது  வகுப்புக்குக் கட் அடித்துவிட்டு படம் பார்க்க நாகர்கோவிலுக்குப் போய்விடுவார்கள். படம் முடிந்து திரும்ப பள்ளிக்கு அருகில் இருக்கும் தென்னந் தோப்பில் இருந்துவிட்டு, பள்ளி முடிந்து எல்லோரும்  வீட்டிற்குச் செல்லும்போது இவர்களும் கூட்டத்தில் கலந்து விடுவார்கள், அவர்கள் இருவரின் பள்ளி பேக்கில், எப்போதும் இரண்டு செட் கலர் சட்டை மற்றும் பேண்ட் இருக்கும். இந்த இருவருடனும் புதிதாக ஒருவன் வந்து சேர்ந்தான், அவனுடைய பெயர் கோபால், நாங்கள் அவனை கோவாலுனு கூப்பிடுவோம். கோவாலிடம் பணத்திற்குப் பஞ்சம் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் தனது அப்பாவுடன் வியாபாரத்திற்குச் செல்வான், எனவே எப்போதும் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகள் அவன் கையில் புழங்கும், சில நேரங்களில் ஐம்பது ரூபாய் நோட்டும் வைத்திருப்பான்.

கோவாலுக்கு நாகர்கோவிலுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருந்தது, அதற்காக பிடித்த ஆட்கள் அந்த இரண்டு பேர், ஒரு முகூர்த்த நாளில் மூன்று பேரும் சேர்ந்து நாகர்கோவிலுக்கு வண்டி ஏறினார்கள்.  செட்டிகுளத்தில் நாம் இருக்கும் இந்த மால் வருவதற்கு முன்பு இந்த இடத்தில் இரண்டு தியேட்டர் இருந்தது, சக்ரவர்த்தி, மினி சக்ரவர்த்தி அந்த இரண்டு தியேட்டருக்கு தான் அந்த மூன்று பேரும் படம் பார்க்க பதினெட்டு வருடங்களுக்கு முன்பு வந்தார்கள். அந்தத் தியேட்டரில் அன்று எல்லா ஷோவும் ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டப் பட்டிருந்தது, ஒரு தியேட்டரில் முரளியின் தேசிய கீதம் படமும், மற்றொரு தியேட்டரில் விஜய காந்தின் வீரம் வெளஞ்ச மண்ணு என்ற படமும் ஓடியது.

கோவாலு எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்று இவர்களுடன் வந்திருந்தான், அவன் நாகர்கோவிலில் முதல் முறையாகப் படம் பார்க்க வருகிறான். தியேட்டர் மற்றும் படங்களை பற்றிய விபரங்கள் எதுவும் அவனுக்குத் தெரியாது. நண்பர்கள் இரண்டு பேரும் டிக்கெட் இல்லையாம், ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டியிருக்கிறது என்று கோவாலிடம் சொல்லி கொண்டிருந்தார்கள். கோவாலுக்கு நிராசையாக இருந்தது, எப்படியும் படம் பார்த்து விடலாம் என்று இவர்களை நம்பி வந்தவன்.

இவர்கள் மூன்று பேரும் நிற்கும் பக்கமாக ஒருவர், பால்கனி இருவத்தி ஐந்து, பால்கனி இருவத்தி ஐந்து  என்று சொல்லிக்கொண்டு சென்றார். அந்த நண்பர்கள் இருவரும் இருபத்தி ஐந்து ரூபாய் கொடுத்து படம் பார்க்க வேண்டாம் இன்னொரு நாள் கழித்து வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள், கோவாலு விடவில்லை, என்னது! இருவத்தி ஐந்து ரூபாய் கொடுத்தால் படம் பார்க்க போகலாமா!, அப்படியானால் போவோம்!, செலவை நான் பார்த்து கொள்கிறேன், நான் இன்னைக்கு எப்படியாவது படம் பார்க்கத் தியேட்டருக்குள் போக வேண்டும் என்று சொன்னான். அந்த இரண்டு பேரும் எவ்வளவு சொல்லியும் நம்ம கோவாலு கேட்கவில்லை.

ஒரு வழியாக பிளாகில் எழுபத்து ஐந்து ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் போனார்கள். பால்கனியில் வாசல் அருகிலிருந்த முதல் முன்று சீட்டு தான் இவர்களுக்குக் கிடைத்தது, வாசலுக்கு அருகிலேயே கோவாலு அமர்ந்திருந்தான். படம் தொடங்கியது, லஷ்மி மூவி மேக்கர் பெருமையுடன் வழங்கும் "வீரம் வெளஞ்ச மண்ணு" என்று பெயர் வந்தது, வாசலின் அருகில் இருந்த நம்ம கோவாலு லேய் மக்கா! நம்மள ஏமாத்திட்டானுவே டேய் ! என்று கூச்சல் போட்டு அந்த நண்பர்களைப் பார்த்து கத்தினான். அந்த இரண்டு பேருக்கும் ஒண்ணும் புரியவில்லை, கத்தியவன் சும்மா இருக்காமல் வாசலைத் திறந்து வெளியில் ஓடினான், அங்கு எதேச்சையாக இவர்களுக்கு பிளாகில் டிக்கெட் விற்ற நபர் நிற்க, அவரிடம் சென்று, கையைத் தட்டி "ஓய்! எழுவத்தி ஐந்து ரூபா வாங்கும் போது, என்ன ஓய் சொன்னீரு! பால்கனி படம் என்று தானே சொன்னீரு! இப்ப அங்க வேறு ஏதோ படம் போடுறான்" என்று கோவாலு காத்த, அவரு இவனை கோபத்தில் சட்டையைப் பிடிக்க  அந்த இரண்டு நண்பர்களும் வெளியில் வர சரியாக இருந்தது. இல்லையென்றால் அன்னைக்கு கோவாலுக்கு கடைசி படமாக இருந்திருக்கும் என்று கதையை முடித்தேன்.

என்னுடைய மனைவிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை, ஆமா! அந்த கோவாலு யாரு ? என்று கேட்க நான் சொன்னேன் அவனுடைய முழுப் பெயர் "கோபால கிருஷ்ணன்" என்று!...


.

0 comments:

Related Posts with Thumbnails