Monday, July 4, 2016

குற்ற உணர்வோ, வெட்கமோ இவர்களுக்கு இல்லை!!

நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் வைத்து மென்பொறியாளர் சுவாதியைப் படுகொலை செய்த குற்றவாளி யாரென்று காவல்துறை அறிவிக்கும் முன்னரே ஒரு இஸ்லாமிய நண்பர்களின் புகைப்படத்தை பெயருடன் வெளியிட்டு, இவர் தான் சுவாதியைக் கொலை செய்தவர், விரைவில் பிடிபட அதிகமாக ஷேர் செய்யுங்கள் என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளம் முழுவதும் வலம் வந்தது. இது ஒருபுறம் நடக்க ஒய் ஜி மகேந்திரன் போன்ற ஆட்கள் மிகக் கேவலமாக நடந்து கொண்டார்கள். இவர்களின் ஆள் மனதில் குடிகொண்டிருக்கும் முற்போக்கு இயக்கங்களின் மீது இருக்கும் வெறுப்புகளை வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டார்கள்.

சம்பந்தமே இல்லாமல் இந்த இஸ்லாமிய இளைஞரின் புகைப்படத்தை பகிர்ந்ததை ஏதோ மனம் பிறழ்ந்தவர்களின் செயல்கள் என்றோ, தெரியாமல் தவறுதலாக பகிர்ந்தது என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. இதன் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி செயல் இருக்கிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. காரணம் கொலை செய்யப் பட்ட பெண் உயர்குடி பிராமணர், கொலையாளியாகச் சித்தரிக்க பட்டவர் ஒரு இஸ்லாமியர், எப்படியான விஷத்தை மக்களின் மனதில் விதைக்கப் பார்க்கிறார்கள்? ஒரு கணம் சிந்தித்தால் மனம் பதறுகிறது. இப்படிப் பகிர்வதால் நடைபெறும் குழப்பங்களில் குளிர்காய்வதற்கு என்று இருக்கும் ஒரு கூட்டம் இந்தப் புகைப்படங்களை தூக்கிச் சுமப்பதில் நமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை, இவர்களை எளிதாக இனம் கண்டு அடையாளப் படுத்திவிடலாம், ஆனால் ஆட்டு மந்தைகள் போல் அனைவரும் இந்தப் புகைப்படங்களை மற்றவர்களுக்குப் பகிர்வதை தான் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.எவருக்கும் இந்தச் சமூக தளங்களில் வரும் தகவல்கள் குறித்த உண்மைத் தன்மையை பற்றிய கேள்வியோ அல்லது அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளவோ விரும்புவது இல்லை, எல்லோரும் ஒரு பொது புத்தியில் அப்படியே இயங்குகிறோம், இன்றைக்குச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மைத் தன்மையில் எழுதப்படுவது இல்லை. அவரவரின் அடி மனதில் இருக்கும் எண்ணம் மற்றும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எழுதப் படுகிறது, அவற்றை உண்மை என்று நம்ப வைக்க இந்தச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்து கொள்கிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறையின் எழுச்சிக்கு இந்தச் சமூக வலைத்தளங்கள் தான் காரணம் என்று நாம் பெருமிதம் அடைந்தாலும்அத்தகையைத் தலைமுறையின் செயல்களையும், எண்ணங்களையும் காயடிக்கும் வேலையையும் சர்வ சாதாரணமாக ஒரு கூட்டம் இந்தச் சமூக வலைத்தளம் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இங்குப் பகிரப்படும் ஒவ்வொரு தகவல்களிலும் நாம் அறியப்படாத நுண்ணரசியல் இருக்கிறது, இவற்றைப் புரிந்து கொள்ள நமக்கு அதிகப்படியான வாசிப்புகளும் ஆழ்ந்த தேடல்களும் தேவைப்படுகிறது, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அது தான் இருப்பதில்லையே!

வாட்ஸ் அப்பில் நான் இருக்கும் அனைத்துக் குழுமங்களில் ஒரு மணி நேரத்தில் மேற்கண்ட இஸ்லாமிய நண்பரின் புகைப்படம் பகிரப் படுகிறது. இதைப் பகிர்ந்தவர்களிடம் அதைப் பற்றிய மேற்படி தகவல்கள் கேட்டால் ஹி! ஹி! மண்டபத்தில் யாரோ, எனக்கு அனுப்பினார்கள்! நான் இங்குப் பகிர்ந்தேன்! என்ற சமாளிப்பு பதில்கள் தான் வந்தது. நம்முடைய பொது புத்தியில் ஒரு கொலையை பற்றிய தகவல்களையோ, செய்திகளையோ ஊகத்தின் அடிப்படையில் உருவகப் படுத்துவதில் இன்றைய கார்ப்பரேட் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செயல்படுகிறது, இந்தக் கொலைகளின் உண்மைகள் இவர்களின் ஊகத்திற்கு எதிராக வரும் போது அதைப் பற்றிய குற்ற உணர்வோ, வெட்கமோ இவர்களுக்கு இல்லை, அடுத்த செய்திகளுக்கு உருவகம் கொடுக்க கிளம்பிவிடுகிறார்கள்.

என்னைப் பிடிக்கவில்லையா? எடுடா! அருவாளை என்றும் காதலிக்க மாட்டியா? நான் திருநெல்வேலி காரன் என்ற மொக்கையான ஆணாதிக்க சிந்தனையுடன் கூடிய இரண்டாம் தர ஜோக்குகள் சமூக வலைத்தளங்களில் வரத் தொடங்கி விட்டன. ஒரு படுகொலையின் குருதி இன்னும் காயவில்லை, ஆனால் அதை ஜோக்குகளாக வடித்துச் சிரிப்பதற்கு பழக்கப் படுத்திய சமூக வலைத்தளங்கள் உண்மையில் பாராட்ட பட வேண்டியது தான். ஒரு குரூர கொலை நமது சமூக சீரழிவின் நீட்சி! தன் மக்களைப் பாதுகாக்க தவறிய அரசுகளின் வீழ்ச்சி! இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க விடாமல் தடுப்பதில் தான் இருக்கிறது அரசியல் சூழ்ச்சி!

இந்தச் சுவாதியின் படுகொலை ரெயில் நிலையத்தில் நடந்த போது சுற்றி நின்ற மக்கள் கை கட்டி வேடிக்கை பார்த்தார்கள், எவரும் உதவிக்கு வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பொங்கியவர்கள், இப்போது முனுசாமி என்ற தொழிலாளியை, குடித்துவிட்டு ஆடி கார் ஒட்டி போதையில் ஏற்றிக் கொன்றுவிட்டு, காரை நிறுத்தாமல் ஒட்டிய ஐஸ்வர்யா என்ற பணக்கார வீட்டுப் பெண்ணை துரத்திப் பிடித்த மக்களைப் பற்றி வாயே எவரும் வாயே  திறக்கவில்லை, எதிர்மறையான விசயத்திற்கும் மனித குணத்திற்கும் பொங்கும் இந்தச் சமூக ஊடகங்கள், நேர்மறையான மனித குணங்களை கொண்ட இத்தகைய மனிதர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை, ஒரு வேளை யாரையோ கார் ஏற்றிக் கொன்றார்கள், காவல் துறை வந்து பார்த்து கொள்வார்கள் என்று அந்த கார் ஒட்டிய பெண்மணியை விட்டிருந்தால், அன்றைக்கு அந்த ஆடி காரை ஒட்டியது தொழிலதிபர் வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநர் என்று மறுநாள் பத்திரிக்கையில் பெரிய செய்தியாக வந்திருக்கும்..

0 comments:

Related Posts with Thumbnails