Friday, July 8, 2016

இதற்குத் தான் இவ்வளவு பில்டப்பா!!

அப்போது நான் ஓமான் மஸ்கட்டில் உள்ள எனது அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்தேன். வார இறுதி நாட்களில் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடச் செல்லுவோம், நாங்கள் கிரிக்கெட் விளையாடும்  இடம் ஒரு பெரிய ஓடை, எப்போதாவது அந்தப் பாலைவனத்தில் மழையினால் பெரு வெள்ளம் வந்தால், இந்த ஓடையின் வழியாகத் தான் நீர் வழிந்தோடும். நான் அங்கிருந்த ஆறு மாதத்தில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை என்பது வேறு கதை. அந்த ஓடையில் கரடு முரடாக இருந்த இடங்களையும், புதர்களையும் கொஞ்சம் திருத்தி  எங்களுக்கு விளையாடுவதற்கு வசதியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தோம், வார இறுதி நாட்களில் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் அந்த ஓடையில் அனைவரும் வந்து நேர்ந்து விடுவோம். தமிழ் நண்பர்களே பதினைந்து பேருக்கு மேல் இருப்போம், இதில்லாமல் ஹைதிராபாத் நண்பர்கள் ஒரு இரண்டு, மூன்று பேர் வருவார்கள்.

எங்களுக்குள் இரண்டு அணியாகப் பிரித்து விளையாடுவோம். விளையாட்டு மிக ஆக்ரோஷமாக இருக்கும், காரணம் அலுவலகத்தில் ஒன்றாகப் பணி செய்யும் போது இருக்கும் அனைத்து ஈகோக்களுக்கும் தீனி போடுவதாக இந்த கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். அலுவலகம் என்று இருந்தால், இரண்டு மூன்று குழுக்கள் இருக்கும், எங்கள் மஸ்கட் அலுவலகத்திலும் அது போல் உண்டு, இந்தக் குழுக்களை மறைமுகமாக ஊக்குவிப்பவர்கள் என்று சில பெரிய தலைகள் இருப்பார்கள். இப்படியான பெரிய தலைகள் எதிர் எதிர் அணிகளில் இருந்தால் சொல்லவே வேண்டாம், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை விட மோசமாக இருக்கும். அனல் பறக்கும் போட்டியில் கேலி, கிண்டல்களுக்குப் பஞ்சம் இருக்காது, சில நேரங்களில் இந்தக் கிண்டல்களே மற்றவர்களைச் சீண்டுவதாக இருக்கும், அதன் விளைவு, பந்தைத் தூக்கி அடிப்பது, இல்லையென்றால் பேட்டை தரையிலோ ஸ்டம்பிலோ வீசுவது நடக்கும், எப்படி இருந்தாலும் எங்களுள் எவராவது ஒருத்தர் அந்தச் சூழ்நிலையை சமாளித்துத் தொடர்ந்து விளையாட வைத்து விடுவார்.

ஒரு நாள் அந்த ஓடையில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வழக்கத்திற்கு மாறாக எங்களுடைய ஜெனரல் மேனேஜர் வாக்கிங் செல்லுவதற்கு அந்தப் பக்கம் வரவே, அவரையும் களத்தில் இறக்கிவிட்டோம். தொடர்ந்து ஒரு சில வாரங்கள் எங்களுடன் அவரும் விளையாட ஆரம்பித்து விட்டார். கம்பெனியின் ஜிஎம் எங்களுடன் வந்து விளையாடுகிறார் என்றால் போதுமே, அப்படியே ஜிஎம் சாரிடம் பேசி கம்பெனியிலிருந்து ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டு, கிரிக்கெட் விளையாடுவதற்குத் தேவையான பெரிய கிட் ஒன்றை வாங்கிக் கொண்டோம். நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதோ டென்னிஸ் பால் வைத்து, அதற்கு கிட்னி பேடில் இருந்து கீப்பர் கிளவுஸ் வரைக்கும் வாங்கியாகிவிட்டது. ஒரு பேட் மற்றும் ஒரு செட் ஸ்டம்ப் வைத்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு, புதிதாக பேட் மற்றும் கிளவுஸ் என்று கிடைத்தவுடன் மனதில் ஒவ்வொருவரும் சச்சின் மற்றும் கபில் தேவ் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. அதற்குத் தூபம் போடுவது போல் நாம் ஒரு கிரிக்கெட் கிளப் டீமை கம்பெனி பெயரில்(ஸ்பான்சர் வேண்டும் அல்லவா, வேறு பெயரில் வைத்தால் யார் பணம் போடுவது?) உருவாக்க வேண்டும் என்று பேசப்பட்டது.

எங்கள் அணியில் கோயமுத்தூர் காரர் ஒருவர் உண்டு, திருமணம் ஆனவர், நாற்பது வயதிற்கு மேல் இருக்கும், கோவைத் தமிழில் மிகவும் மரியாதையாகப் பேசுவார், ஆனால் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பேசும் போதும் சரி, விளையாடும் போதும் சரி அதிக உணர்ச்சி வசப்பட்டு விடுவார், டிவியில் கிரிக்கெட் போட்டி பார்த்தாலும் அப்படி தான், இந்தப் பந்தை இப்படியா அடிப்பது? இவன் எல்லாம் நம்முடைய அணிக்குத் தண்டம், சிம்பிள் கேட்ச்! இதைக் கூட இவனால் பிடிக்க முடியவில்லை! எப்படி இவனை அணியில் சேர்த்தார்கள்? என்று டிவியில் நடக்கும் வர்ணனைக்கு இணையாக இவர் ஒரு வர்ணனை கொடுத்து கொண்டிருப்பார், அலுவலகத்தில் எங்களுக்கு பொதுவாக இருக்கும் மெஸ்ஸில் இருக்கும் டிவியில் இவர் கிரிக்கெட் போட்டி பார்க்கிறார் என்றால் ஒருவரும் அந்தப் பக்கம் போக மாட்டார்கள். அப்படியே புதியவர்கள் எவராவது போனால் காதில் ரத்தத்துடன் தான் கிரிக்கெட் பார்க்க முடியும். இவர் கல்லூரி படிக்கும் போது கல்லூரி கிரிக்கெட் அணியில் விளையாடியிருப்பார் போல! அவர் மட்டும் தான், எங்களுடன் கிரிக்கெட் விளையாட வரும் போது பக்காவாக கிளம்பி வருவார். டிராக் சூட், டி-சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷு வித் கேப் மற்றும் கூலிங் கிளாஸ் என்று அணிந்து வந்து கலக்குவார். நாங்கள் அந்த ஓடையில் விளையாடும் போது அவர் மட்டும் தனித்து தெரிவார்.

நாற்பது வயதிலும் ஒரு பத்து மீட்டர் ஓடி வந்து பவுலிங் போடுவார். அவர் வீசும் பந்து வேகத்திற்கு இவ்வளவு தூரம் ஓடி வர வேண்டுமா? என்ற கேள்வி சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கு வரும், ஆனால் அதை அவரிடம் கேட்டு காதில் ரத்தம் வர வைத்துக் கொள்வதற்கு எவரும் விரும்புவதில்லை. அதிகமாக கிரிக்கெட் மொழிகளில் தான் பேசுவார், ஒருமுறை இவர் பவுலிங் போடும் போது, முதல் பந்தை நண்பர் ஒருவர் சிக்ஸர் அடித்துவிட்டார், அதனால் அடுத்த பந்தை  எப்போதும் பவுலிங் போடும் வலது பக்கத்திற்கு மாறாக இடது பக்கத்தில் ஓடி வந்து போட நினைத்து அந்தப் பக்கம்  ரன்னிங் ஓடுவதற்கு நிற்கும் பேட்ஸ்மேன் நண்பரை மறுபக்கம் சென்று நிற்கச் சொல்லுவதற்கு "ஓவர் தி விக்கெட்! ஓவர் தி விக்கெட்!" என்று என்று கத்தி கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் நண்பரோ, நீங்க முதலில் பந்தை போடுங்க! அப்புறம் விக்கெட்ட்டா இல்லை சிக்ஸரா? என்று பார்க்கலாம் என்று நண்பர் நக்கலடித்து சிரித்தது கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு நண்பர்கள் உண்டு, ஒருவர் திருவாரூர் காரர் மற்றொருவர் திருநெல்வேலி. இரண்டு பேரும் எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது எந்த அணியில் இருந்தாலும் முதலில் பேட்டை எடுத்துக் கொண்டு களம் இறங்கி விடுவார்கள். அதில் திருவாரூர் காரர் கொஞ்சம் பல்க் ஆக இருப்பார், அவரால் அதிக நேரம் ஓட முடியாது, எனவே எதிர் பக்கத்தில் இறங்கும் பேட்ஸ்மேன் நண்பரிடம் சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார். ஓவரில் ஐந்து பந்துகளை மிஸ் செய்தாலும், ஒரு பந்தை எப்படியும் சிக்ஸருக்கோ, பவுண்டரிக்கோ விரட்டி விடுவார். நெல்லை நண்பர் பொறுமையாக ஆடுபவர், சில நேரம் கடைசி வரை அவுட் ஆகாமல் இருப்பார், அல்லது இடையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி அடுத்த பேட்ஸ்மேன் நண்பருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுப்பார்.

சேலம் நண்பர் ஒருவர், நன்றாக பவுலிங் செய்வார். அவருடைய ஒரு பந்தில் பவுண்டரியோ, சிக்ஸரோ போனால் நண்பர் பதட்டமாகி விடுவார். ஓடி வந்து வேகப்பந்து தான் வீசுவார், எதிரில் பேட்டிங் பண்ணுபவர், நண்பர் வீசும் பந்தை பவுண்டரிக்கு அடித்து விட்டால் போதும், மறு பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசுவார். அந்தப் பந்தையும் பேட்டிங் செய்யும் நண்பர் லாவகமாக எதிர் கொண்டால், அவ்வளவு தான், தன்னால் எவ்வளவு தூரம் ஓடி வந்து வீச முடியுமோ அந்த அளவிற்கு வீசுவார். இதனால் பந்து பவுண்ட்ஸ் ஆகவோ வைடாகாவோ போகும், அந்த ஒரு ஓவரை முடிப்பதற்குள் படாத பாடு பட்டு விடுவார்.

நெல்லை பரப்பாடி ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் ஊக்குவித்துக் கொண்டு இருப்பார். பீல்டிங் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு, மிட் ஆப்பில் தான் பெரும்பாலும் பீல்டிங் நிற்பார், பவுலிங் போடுபவனிடம் இப்படிப் போடு, அப்படிப் போடு என்று அடிக்கடி அட்வைஸ் பண்ணி கொண்டு இருப்பார், இவர் சொல்லுவதை கேட்டு பவுலிங் போட்டு, அந்தப் பந்தை பேட்ஸ்மேன் அடித்தாலும் "சூப்பர் பவுலிங்!" என்று கை தட்டுவார். மற்றவர்கள் அனைவரும் பவுலிங் போடுபவனை முறைப்பார்கள். விளையாடுவது ஓடையில், அதில் ஜான்டி ரோட்ஸ் அளவிற்கு பில்டப் கொடுத்துப் பாய்ந்து பாய்ந்து பந்தை தடுப்பார். இவர் உயிரைக் கொடுத்து பீல்டிங் பண்ணுவது, நமக்குப் பயமாக இருக்கும். தினமும் உடலில் ஒரு காயமாவது வாங்காமல் விளையாட்டை முடிக்க மாட்டார். பீல்டிங் பண்ணுவதில் காயம் வாங்க விட்டாலும் பேட்டிங் பண்ணும் போது ரன்னிங்கில் விழுந்தாவது காயத்தை வாங்கி விடுவார்.

இவர்கள் மட்டுமல்லாமல், ஊர் வாரியாக குழுவாக இயங்கும் சின்ன சின்ன கூட்டமும் எங்களுக்குள் உண்டு, ஆந்திரா முழுவதும் உள்ள‌ தெலுங்கு நண்பர்கள், நாகர்கோவில் நண்பர்கள் அதில் இரண்டு பேர் தான் உண்டு அதில் ஒன்று நான், சென்னை நண்பர்கள் மற்றும் கோவில்பட்டி நண்பர்கள். இதில் கோவில்பட்டி நண்பர்கள் தான் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள், அதுவும் ஒரே காலேஜில் படித்தவர்கள், அவர்களின் ஆதிக்கம் தான் கிரிக்கெட் விளையாட்டில் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஊர் சார்ந்து குழுவாக இருப்பவர்களின் பாசம் விளையாடுவதற்கு அணிகள் பிரிக்கும் போது வெளிப்படும், ஒரே ஊர்க் காரர்களாக ஒரு அணியில் திரள்வார்கள். இதில் கிரிக்கெட் விளையாடத் தெரிந்தவர்கள், விளையாடத் தெரியாதவர்கள் மற்றும் விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் என்று அனைவரும் அடங்குவார்கள்.

கம்பெனி பெயரில் கிரிக்கெட் கிளப் ஆரம்பிக்கலாம் என்று பேசியது தான் தாமதம், மறுநாளே நண்பர் ஒருவர் ஒரு டோர்னமென்ட்க்கான அட்டவணையுடன் வந்து நாம் இதில் கலந்து கொள்ளலாம் என்று அனைவரிடமும் பேசினார். கொண்டு வந்த நண்பரோ, நாங்கள் தினமும் விளையாடும் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்க வருபவர். அவருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது, ஆனால் டிவியில் நடக்கும் இந்திய போட்டிகள் மட்டுமல்லாமல் பிற அணிகள் விளையாடும் போட்டியையும் தவற‌ விட மாட்டார். ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களின் ஸ்டிரைக் ரேட்டிலிருந்து, அவர்களின் தரவரிசை மற்றும் சாதனைகள் வரை புள்ளி விபரங்களைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார். எந்த அணிகளின் போட்டிகள் நடந்தாலும், இன்றைக்கு இந்த அணி தான் வெற்றி பெறும் என்று போட்டிக்கு முன்பே கணித்து சொல்லி விடுவார், பெரும்பாலும் அவருடைய கணிப்பு தவறுவது இல்லை. உலக கிரிக்கெட் வீரர்களின் திறமைகளையும், அணிகளின் திறமைகளையும் புள்ளி விபரங்கள் கொண்டே கணிக்கும் நண்பரால், ஓடையில் விளையாடும் நண்பர்களின் திறமைகளை கணிக்க‌ முடியவில்லை.

ஜெனரல் மேனேஜர் விளையாட வந்த நேரம் மற்றும் கம்பெனியிலிருந்து புதிதாக வாங்கிக் கொடுத்த‌ புதிய கிரிக்கெட் கிட்டுகளை உபயோகப்படுத்திய நண்பர்களின் மனநிலை எல்லாம் சேர்ந்து ஒரு ஆர்வத்தில் டோர்னமென்டுக்கு பங்கேற்கலாம் என்று எல்லோரும் சேர்ந்து கோரஸாக தலையை ஆட்டினார்கள். ஜிஎம் சாரும் டோர்னமென்டுக்கு ஆகும் செலவை கம்பெனியிலிருந்து வாங்கித் தர பார்க்கிறேன் என்று சொல்லியது தான் தாமதம், போட்டியில் விளையாடுவதற்கு தங்களை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி திட்டம் தீட்டுவதற்கு பதிலாக என்னென்ன வாங்க வேண்டும் என்ற திட்டம் தான் பெரிதாக பரிசீலிக்கப் பட்டது. முதலில் சொல்ல பட்டது கம்பெனி பெயர் பொறித்த டி சர்ட், அவ்வளவு தான் நம்முடைய‌ கோயமுத்துர் நண்பர் அதற்குப் பொறுப்பேற்று கொண்டார். யார் யாருக்கு என்னென்ன சைஸ் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்து, டி சர்ட்டில் பின்னால் மற்றும் முன்னால் போடுவதற்கு தேவையான கம்பெனி பெயர் டிசைன், லோகோ டிசைன், பார்டர் டிசைன் மற்றும் வண்ணம் என்று ஒரு மாத காலம் அதற்காக‌ பெரிய ப்ரொஜெக்டே அவர் செய்து முடித்திருந்தார்.

டோர்னமென்ட் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே பயிற்சி என்ற பெயரில் அலுவலகம் முடிந்தவுடன் ஓடைக்குக் கிளம்பி விடுவோம். ஜிஎம் சார் சில நாட்கள் வருவார், சில நாட்கள் வர மாட்டார், ஆனால் தினமும் மாலையில் அவரை அழைப்பதற்கு ஒரு நண்பர் அவரது அறை செல்வார், அது அவரை அக்கறையுடன் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பதற்கு இல்லை, அவர் கொடுக்கும் 10 ஓமன் ரியாலுக்காக. ஓடைக்கு விளையாடச்  செல்லும் முன்பே சூப்பர் மார்க்கெட்டிலிருந்து நான்கு பாக்கெட் லேஸ் சிப்ஸ் மற்றும் வேறு சில நொறுக்கு தீனிகளும், ரெட் புள், கோக், பெப்சி என்று அவரவர் தேவைக்கு வேண்டியவைகளை வாங்கி ஒரு பெரிய கூடையில் சுமந்து செல்வோம்.

கோவை நண்பர் ஆர்டர் கொடுத்திருந்த‌ டி சர்ட்டும் ரெடியாகி வந்த சமயத்தில், டோர்னமென்டுக்கான தேதியும் நெருங்கியிருந்தது. ஊரில் விடுமுறைக்குச் சென்று வந்த கோவில்பட்டி நண்பர் ஒருவர் கிரிக்கெட் பயிற்சிக்கு கலந்து கொள்ள வந்த முதல் நாளில், பேட்டிங் பிடிக்கும் போது நண்பர் ஒருவர் போட்ட பந்து அவரது வலது கையின் நடு விரலைப் பதம் பார்த்தது. நண்பரால் வலி தாங்க முடியவில்லை, அதனால் மருத்துவமனைக்குப் போக வேண்டியதாயிற்று. விரலில் ஒடிவு இருப்பதாகச் சொல்லி ஐந்து தையல்கள் போட்டு அந்த விரலுக்கு மட்டும் கம்பு வைத்துக் கட்டியிருந்தார்கள். அந்த‌ நண்பர் மற்றவர்களிடம் பேசும் போது அடிப்பட்ட‌ கையை முன்னால் கொண்டு வந்தால், நடு விரல் மட்டும் நிமிர்ந்து நின்று மற்றவை எல்லாம் மடங்கி இருக்கும், எதிரில் இருப்பவர் இவருடைய நடுவிரல் உயர்ந்து இருப்பதைப் பார்த்தால் அவரை அசிங்கமாகப் பழித்து காட்டுவது போல் இருக்கும், அதனால் பின்னால் கையைக் கட்டி கொண்டு தான் விளையாட்டை வேடிக்கை பார்க்க ஓடைக்கு வருவார். எங்களிடம் விளையாட்டாக, ஏங்க! நான் டூர்னமென்ட்ல விளையாடக் கூடாது என்று தான் பிளான் பண்ணி என்னுடைய விரலை உடைச்சிட்டிங்க! என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் டோர்னமென்ட் முடிந்த பிறகு அவர் விளையாடாததை நினைத்து சந்தோச பட்டிருப்பார்.

டோர்னமென்டில் மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் முறையில் விளையாடுவதாகச் சொன்னார்கள். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டிகள் நடைபெறும் என்றும் நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு எங்களுடைய‌ முதல் போட்டி நடைபெறும் நாள், எங்களுடைய ஜிஎம் சாருடன் கம்பெனியின் முக்கியமான பெரிய‌ புள்ளிகளும் எங்களுடைய போட்டியை காண வந்திருந்தார்கள். கம்பெனியின் எம்டி கூட மைதானத்திற்கு வருவதாக இருந்தது கடைசி நேரத்தில் வரவில்லை என்ற செய்தி வந்தது, அதுவரையிலும் சந்தோசம். போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பு ஜிஎம் சார் 50 ரியாலை எடுத்து நண்பர் ஒருவரிடம் கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்காகவே காத்திருந்த நண்பர்கள் அனைவரும் போகும் வழியில் உள்ள‌ சூப்பர் மார்க்கெட்டில் இருந்த‌ வகை வகையான நொறுக்கு தீனிகளையும், அது நாள் வரையிலும் டேஸ்ட் பண்ணிப் பார்க்காத பிராண்டு எனர்ஜி டிரிங்ஸ்களையும் வாங்கி, வண்டியை நிறைத்துக் கொண்டு மைதானத்திற்குக் கிளம்பினோம்.

நாங்கள் போட்டிக்கு சென்ற‌ மைதானம் டிவியில் காட்டுவது போல் சுற்றிலும் மின் விளக்குகள் போடப் பட்டு, தரையில் செயற்கை புற்கள் நடப்பட்டு அழகாக இருந்தது. எங்களில் ஒரு சிலரை தவிர‌ விளையாடும் எவரும் இதுவரையிலும் இப்படியான மைதானத்தில் விளையாடியது இல்லை. எங்களுடன் போட்டியில் மோதும் எதிர் அணியில் விளையாடும் நபர்களைத் தவிர வேறு எவரும் உடன் வந்தது போல் தெரியவில்லை, பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக வந்திருந்தார்கள். ஆளுக்கொரு வண்ணத்தில் டி சர்ட் அணிந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு அப்படியே எங்களுடைய அணியைப் பார்த்தேன், விளையாடும் நண்பர்களின் எண்ணிக்கையை விடப் போட்டியை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். விளையாடுபவர்கள், விளையாடாதவர்கள் என்று எல்லோரும் கம்பெனி லோகோ போட்டு ஒரே வண்ணத்தில் புதிதாக வாங்கிய டி சர்ட்டை அணிந்து கொண்டு டிராக் சூட், ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் கூலிங் கிளாஸ் என்று ஐபிஎல் ஆடும் அணிகளை விட மோசமாக நின்று ஒரு பக்கம் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பக்கம் போட்டியில் விளையாடாத நண்பர்கள் வண்டியிலிருந்த‌ நொறுக்கு தீனிகள் மற்றும் எனர்ஜி டிரிங்ஸ்களை மைதானத்தின் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்து அதில் தங்கள் திறமையைக் காட்டி கொண்டிருந்தார்கள்.

கோவை நண்பர் தான் எங்கள் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் டாஸில் ஜெயித்து பேட்டிங் கேட்டு வந்து எங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் நண்பர்களைத் தேடினார். ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்க வேண்டிய‌ நெல்லை மற்றும் திருவாரூர் நண்பர்கள் இருவரும் மைதானத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டு இருவரும் விதம் விதமாக‌ பேட்டை பிடித்துக் கொண்டு போட்டோ சூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து ஒரு வழியாக பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தோம். அதில் திருவாரூர் நண்பர் போன வேகத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் வந்தார். எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது சிக்ஸர் அடித்து, நாங்கள் பெரிய பேட்ஸ்மென் என்று பில்டப் கொடுக்கும் எந்த நண்பர்களாலும் அந்தப் போட்டியில் சோபிக்க முடியவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆனார்கள். ஒபனிங் இறங்கிய நெல்லை நண்பர் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து விளையாடினார். எட்டு ஓவர் முடிவில் நாற்பத்து மூன்று ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் இழந்திருந்தோம்.சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு, எதிர் அணியினர் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்கள், எங்களின் வேகப் பந்து வீச்சாளர் கோவை நண்பர் தான் முதல் ஓவர் வீச வந்தார். அவர் வீசிய நான்கு பந்து சிக்ஸர் பறந்தது, இரண்டு பந்து பவுண்டரி எல்லையைத் தாண்டியது, கோபத்தில் உச்சத்தில் தொப்பியை தூக்கி வீசி விட்டு, அவருடைய வழுக்கைத் தலையை பிடித்துக் கொண்டு, அடுத்த ஓவர் வீச, சேலம் நண்பரிடம் பந்தை கொண்டு கொடுத்தார். சேலம் நண்பரும் வேகமாக ஓடி வந்து முதல் பந்தை வீசினார், பந்து எதிரில் நின்றவரின் பேட்டால் துரத்தி எல்லை கோட்டிற்கு வெளியில் அடிக்கப் பட்டது. சேலம் நண்பர் அடுத்த பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசினார். பேட்ஸ்மேன் அதற்க்காவே காத்திருந்தது போல வைடாக வெளியில் சென்ற பந்தை ஓங்கி அடித்தார், வெற்றிக்கான இலக்கை எதிர் அணி எட்டியது. எட்டு ஓவரில் நாங்கள் அடித்த ரன் இலக்கை அவர்கள் எட்டு பந்தில் அடித்திருந்தார்கள்.

ஜெனரல் மேனேஜர் தன்னுடைய‌ வண்டியில் ஏற்றி வந்த நண்பர்களை வண்டியில் ஏறச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பும் போது, ஒரு நண்பர் மட்டும் வேகமாக‌ வண்டியிலிருந்து இறங்கி ஓரத்தில் மீதமிருந்த நொறுக்கு தீனியை நோக்கி ஓடினார், அந்த நண்பரை ஜிஎம் சார் பார்த்த ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்ட நண்பர், எதையும் எடுக்காமல் திரும்பவும் வண்டியில் ஏறிக் கொண்டார்.

போட்டி நடத்தியவர்கள், எங்களிடம் நாளைக்கு விளையாட வேண்டிய ஒரு அணி, கடைசி நேரத்தில் வர முடியவில்லை என்று சொல்லியதால் அட்டவணையில் ஒரு அணி காலியாக இருக்கிறது, நீங்கள் வேண்டுமானால் திரும்பவும் நாளைக்கு மோதுகிறீர்களா? என்று கேட்டார்கள். எதற்கு தெளிய வைத்து அடிக்கவா? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். நடுவிரலில் அடிப்பட்ட நண்பர் எங்களின் முன்னால் நடந்து சென்றார். வெகு நேரமாகப் பின்னால் கட்டியிருந்த கை அவருக்கு வலித்திருக்க வேண்டும். இப்போது அவர் தன்னுடைய வலது கையை முன்னால் வைத்து இடது கையால் தாங்கிக் கொண்டு நடந்தார், கையின் மற்ற விரல்கள் மடங்கியிருக்க‌ ஒற்றை நடுவிரல் மட்டும் எங்களைப் பார்த்து பழிப்பது போல் இருந்தது.

.

0 comments:

Related Posts with Thumbnails