Thursday, February 20, 2014

தரி.. கிட.. தோம்.. போடுகிறோம்

கல்வி, மருத்துவம் இவை இரண்டும் மனித வாழ்க்கையில் இன்றியமையாதவை. இன்றைய சூழலில் எத்தகைய கல்லூரிகளில் உயர் கல்வி கற்கலாம், எந்தப் பாடப்பிரிவு சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புண‌ர்வுகளும் மற்றும் நமது உடலில் இருக்கும் நோய்களுக்குத் தரமான மருத்துவம் எங்குக் கிடைக்கும் என்பது குறித்தும் நாம் அன்றாடம் தரி கிட தோம் போடுகிறோம்.



நான் பனிரென்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது கூட, அடுத்த வருடம் எந்த‌ கல்லூரியில் படிக்க போகிறோம்? எந்தத் துறை சார்ந்த படிப்புகளைத் தேர்தெடுக்கப் போகிறோம்? என்பது பற்றிய முழுமையான புரிதல் என்னிடம் இல்லை. எனக்குப் பனிரென்டாம் வகுப்பில் எண்பது விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் உண்டு. அந்த மதிப்பெண்களுக்குக் கண்டிப்பாகப் பி.இ பட்டயப் படிப்புப் படித்திருக்க முடியும். ஆனால் நான் என்ட்ரன்ஸ் தேர்வு எழுதவில்லை. என்ட்ரன்ஸ் தேர்வு எழுதவில்லை என்று சொல்லுவதை விட அதைப் பற்றிய அறிதல் மற்றும் முழுமையான‌ புரிதல் என்னிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கும் என்னிடம் என்று சொல்லுவதை விட என்னுடைய குடும்பதில் உள்ளவர்களையும் சேர்த்து தான் சொல்ல வேண்டும். உறவினர்கள் சிலருக்கு தெரியும், அவர்களிடம் அப்பா கேட்டாலும் "அது படிக்க வைக்க ரெம்பச் செல‌வாகும், படிப்பும் மிகக் கடினமாக இருக்கும், உன் பிள்ளையால் படிக்க முடியாது" என்று ஏதாவது அப்பா முன்னால் சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஏதோ, என் மீதோ அல்லது அப்பாவின் மீதோ உள்ள அக்கறையில் சொன்னதாக எடுத்துக் கொள்ள முடியாது, எங்கே இவனுடைய பையன் எல்லாம் பி.இ படிப்பதா என்பது தான் மேலோங்கி இருந்தது.

இப்பொழுதும் கிராமங்களில் படிக்கும் மாணவர்களும் எதிர்காலம் குறித்த முழுமையான புரிதலுடம் எந்தத் துறையையும், கல்லூரியையும் தேர்ந்தெடுப்பது இல்லை. அந்தக் கிராமத்தில் முன்பு படித்து முடித்து இப்போது வேலையில் சேர்ந்து அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள் என்று பேசப்படுகிற நபர்கள் படித்த‌ படிப்பையே அதிகமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அப்படித் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகச் சொல்லும் நபரிடம் கூட அந்தப் படிப்பை பற்றியோ அதற்கு இருக்கும் எதிர்காலம் பற்றியோ கேட்பது இல்லை. உண்மை என்னவெனில் அதிகம் சம்பளம் வாங்குவதாகச் சொல்லப் படும் நபர் மெக்கானிக்கல் படித்து விட்டு நண்பர்களின் உதவியுடன் ஐடி துறையில் வேலை பார்பவராக இருப்பார்.

சமீபத்தில் என்னுடைய அலுவலகத்திற்குத் துறை வாரியாக இஞ்சினியரிங்கள் முடித்தவர்கள் தேவை பட்டார்கள். வந்த ரெஸ்யூம்களில் அதிக அளவில் எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் படித்தவர்கள். மிகக் குறைந்த அளவே இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்களில் ரெஸ்யூம் வந்தது. எங்களுக்கோ அதிக அளவில் இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்கள் தேவைப் பட்டார்க்ள், பலரிடம் சொல்லியும் போதுமான அளவு கிடைக்கவில்லை. நான் பாலிடெக்னிக்னில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இரண்டு மூன்று கல்லூரிகளில் இந்த இரண்டு துறைகளும் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டது, அப்போது பலரும் ஆர்வமாக அதில் சேர்ந்தார்கள். அந்த‌ கல்லூரிகளில் இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்களின் ரெஸ்யூம் கேட்ட போது வருடா வருடம் மாணவர்களில் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அந்தத் துறையை இரண்டு வருடத்திற்கு முன்பே எடுத்துவிட்டோம் என்றார்கள். ஆனால் இந்த எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் துறையில் அதிகம் பேர் விரும்பி தேர்ந்தெடுத்துப் படிப்பதனால் இரண்டு பிரிவுகளாக வைத்து வகுப்புகள் நடத்துவதாகத் தெரிவித்தனர். நான் அறிந்த வரையில் இந்தத் துறைக்கு என்று தனியாக வேலை வாய்ப்பு என்பது குறைவு. இந்தத் துறையில் படித்தவர்கள் பெரும்பாலோர் ஐடி துறையில் தான் பணி செய்கிறார்கள். எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் துறையைத் தேர்ந்தெடுத்து படித்த பலரும் படிப்பிற்குச் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு வேலையில் இருப்பதைப் பார்க்க முடியும். பெரும்பாலும் கால் சென்டர்களிலும், மார்கெட்டிங்களிலும் இவர்களை அதிகமாகப் பார்க்கலாம். இவர்களிடம் எதனால் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படித்தீர்கள்? என்று கேட்டால் சிலர், நான் மேலே சொன்னது போல் யாரவது ஒரு நபரை கையைக் காட்டுகிறார்கள், இன்னும் சிலர் கல்லூரியில் நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்லியதால் படித்ததாகச் சொல்லுகிறார்கள்.

நான் படிக்கும் காலத்தில் இருந்தது போல் அல்லாமல், இப்போது ஊடகங்களின் வாயிலாகவும், இணையத்தில் மூலமாகவும் அதிகமான பல புதிய துறை சார்ந்த‌ படிப்புகள் பற்றிய தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனாலும் கிராமங்களில் படிக்கும் பலரும் புது விதமான துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது போல் தெரியவில்லை.

மேலே சொன்னது போல் உயர் கல்வி கற்பதில் தடுமாறுவது போல் சமீப காலமாக நடுத்தர மக்கள் தடுமாறும் இன்னொரு இடம் மருத்துவ மனை மற்றும் மருத்துவர்கள். எந்த நோய்க்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்பதும் அவர்கள் தரும் மருத்துவத் தீர்வுகள் எந்தளவு நமக்குப் பயனளிக்கிறது என்பதும் அனைவருக்கும் சொந்த அனுபவங்கள் இருக்கும். பெரும்பாலான மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்குச் செய்யச் சொல்லும் லேப் டெஸ்ட்கள் எல்லாம், அவர்களிடம் அந்த லேப் எக்கீயுப்மென்ட் இருக்கிறது என்பதற்காகவே சொல்ல படுபவைகளாக இருக்கும்.

எந்த ஒரு நோய் என்று மருத்துமனைகளுக்குச் சென்றாலும், சாதரணமாக இரத்தம், சிறு நீர் டெஸ்ட் மற்றும் ஒரு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பரிசோதித்த பின்பு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறார்கள். இதில் கொடுமையான விசயம், ஒரு மருத்துவ மனையில் எடுத்த ரிப்போர்ட்களை அடுத்த மருத்துவ மனைகள் ஏற்றுக் கொள்வதில்லை. புதிதாக அனைத்து டெஸ்ட்களும் அந்த மருத்துவ மனையில் எடுக்க வேண்டும். எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்களையும் பார்த்து விட்டு உங்கள் உடம்புக்கு ஒன்றும் இல்லை, இந்த மாத்திரையை ஒரு வாரம் சாப்பிடுங்கள் சரியாகிடும் என்கிறார்கள். நோயிக்கான மருந்து செலவு 100 ரூபாய் என்றால், இந்த டெஸ்ட்களுக்கும் ஆகும் செலவு 1000 முதல் 2000 வரை. சிலர் கேட்கலாம் "இந்த டெஸ்ட்களை எடுத்து உடலில் வேறு ஏதும் பிரச்சனை இல்லை என்று அறிந்து கொள்வது நல்லது தானே என்று!!" என்னுடைய எண்ணம் முதலில் அந்த நோயிக்கான மாத்திரையைக் கொடுத்து ஒரு வார காலம் உண்ண செய்து குறைய வில்லை என்றால் இந்த டெஸ்ட்களைப் பரிந்துரைக்கலாமே!!

பெரும்பாலான மருத்துமனைகளில் இப்போது எல்லா நோயிகளுக்கும் சர்வ லோக நிவாரணியாக‌ அறுவை சிகிச்சையைப் பரிந்துரை செய்வது இன்னும் ஒரு கொடுமையாக இருக்கிறது.

மருத்துவ மனைகளில் எனக்கு நடந்த அனுபவங்களை இந்தப் பதிவில் பகிர்ந்தால் இது மிகப் பெரிய பதிவாக மாறிவிடும். வரும் பதிவுகளில் அவைகளைப் பகிருகிறேன்.


.

Monday, February 10, 2014

திரும்பவும்.... பார்ப்போம்

அனைவருக்கும் வணக்கம், பதிவுகள் எழுதி ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பணி மற்றும் குடும்பச் சூழல்களால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது பதிவுகள் படிப்பதற்காக அவ்வப்போது இணையப் பக்கம் தலைக்காட்டுவது உண்டு. முன்பு எழுதிக் கொண்டிருந்த பல பதிவர்களின் தளங்களும் எழுதப் படாமலே இருப்பதைக் காண முடிந்தது. தொடர்பில் இருந்த சில பதிவர்களிடம் விசாரித்ததில் எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணம் பதிவுகள் எழுதாதமைக்கு இருப்பதை உணர முடிந்தது.

கடந்த ஆண்டில் எனது தளத்தில் ஒரு பதிவுகள் கூட என்னால் எழுத முடியவில்லை. கடைசியாகப் பதிவுகள் எழுதியது சீனா அய்யா அவர்களில் அழைப்பின் பேரில் வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆறு பதிவுகள் எழுதினேன். அந்தப் பதிவுகள் எழுதும் போது பல புதிய பதிவர்களில் பதிவுகளை என்னால் படிக்க முடிந்தது. அவர்களிலும் பலரும் தொடர்ச்சியாக எழுதுவது இல்லை என்று நினைக்கிறேன்.

இப்ப எதுக்கு இங்க வந்து, அவங்க எழுதல, இவங்க எழுதலனு வந்து புலம்பிக்கிட்டு இருக்கனு நீங்க கேக்குறது புரியுது... வேற என்ன? திரும்பவும் எழுதலாம் என்று நான் முடிவெடுத்துக்கிறேன்.

எத்தனை நளைக்குனு தானே கேக்குறீங்க !!!!!!!!




பார்ப்போம்.....


.

Friday, July 20, 2012

சமச்சீர் கல்வி_மக்களின் மனம் மாறியதா?


கடந்த‌ கல்வியாண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முன்பு அரசு பள்ளிகளில் ஒரு பாட முறையும், தனியார்களால் நடத்தப்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குத் தனியான பாட முறையும் இருந்து வந்தது. சமச்சீர் கல்வி கொள்கையின் படி எல்லாத் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஒரே சீரான கல்வி முறையைக் கொண்டு வந்தது தமிழக அரசு.

சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அவைகளில் ஒன்று, அரசு பாடத்திட்டத்திற்கும், தனியார் பாடத்திட்டத்திற்கும் உள்ள இடைவெளி மற்றும் தரம் என்று சொல்லப்பட்டது. தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளில் உள்ள பாடத்திட்டம் தரமானதாக இருக்கிறது. அதனால் தான் பெற்றோர்கள் குழந்தைகளை அதிகமாக மெட்ரிக் பள்ளிகளில் சேர்கிறார்கள். இவைகளில் படிக்கும் குழந்தைகள் மத்திய அரசுகளால் நடத்தப்படும் பணிக்கான‌ தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சிப் பெறுகிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

இப்போது சமச்சீர் கல்வி கொள்கையின் மூலம் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஒரே சீரான பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. சமச்சீர் கல்வி தரமாக இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி நான் இங்குப் பேச வரவில்லை. ஆனால் இந்தப் பாடத்திட்டம் தான் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இப்போது பயிற்றுவிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது இந்தக் கல்வியாண்டில் குழந்தைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ சேர்ப்பதில் மக்கள் அதிகமாக‌ ஆர்வம் காட்டியிருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமையோ தலைகீழ்.

வருடத்திற்கு வருடம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாக நடைபெறுவதைப் போலத் தான், இந்த வருடமும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாகியிருகிறது என்று தனியார் பள்ளியில் வேலைப்பார்க்கும் ஆசிரியர் ஒருவர் என்னிடம் கூறியிருக்கிறார். "அந்த பள்ளியில் அதிகமாக டோனேசன் வாங்குகிறார்கள்", "இந்த பள்ளியில் அரசு நிர்ணயித்த தொகையை விடப் பல மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள்", "நோட்டு, புத்தகங்களை அவர்களே விற்கிறார்கள்", "அவர்களிடம் இருந்து தான் யூனிபார்ம் வாங்க வேண்டும் என்று கட்டாயபடுத்துகிறார்கள்" என்று புலம்பும் பெற்றோர்களைத் தான் அதிகமாகச் செய்திகளிலும், விமர்சனங்களிலும் பார்க்க முடிகிறது. எந்தப் பெற்றோருக்கும் தனது குழந்தைகளை அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலோ படிக்க வைக்க விரும்பவில்லை.

இன்னும் நமது மக்களுக்கு ஆங்கில மொழியின் மீது உள்ள மோகம் குறையவில்லை. தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு இந்த ஆங்கில மொழியின் மோகமும் ஒரு காரணம். "ஆங்கிலம் என்பது அறிவு இல்லை, அதுவும் ஒரு மொழி" என்று யார் புலம்பினாலும் இந்த மக்கள் சாட்டைச் செய்வது இல்லை. இப்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வர இருப்பதாகச் செய்திகளில் படித்தேன். ஒரு வேளை ஆங்கில மொழி கல்வி அரசு பள்ளிகளில் கொண்டு வந்தாலும், எல்லாப் பெற்றோரும் தனது குழந்தையைகளைக் கூட்டி வந்து உடனடியாக அரசு பள்ளியில் சேர்த்து விடுவார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அப்போதும் தனியார் பள்ளியில் தான் எனது பிள்ளைக்கு "டை" கட்டி "சூ" போட சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

"எங்கள் பள்ளியின் பாடத்திட்டம் உலகத் தரத்தில் உள்ளது" என்று சொல்லி வந்த தனியார் பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகளுக்குச் சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதாக அரசு அறிவித்தவுடன், அடிவயிற்றில் சிறிதுப் பயம் இருக்கத் தான் செய்தது, எங்கே நமது பள்ளிகளில் கூட்டம் குறைந்து விடுமோ என்று. ஆனால் இந்த வருடம் குழந்தைகளின் சேர்க்கைகளைப் பார்த்த பின்பு அவர்களுக்கு மகிழ்ச்சியே.

மக்களின் மனநிலையும் மாற வேண்டும். அதற்கு இந்த அரசும் தேவையான விழிப்புணர்வை மக்களிடம் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகள் நவீனமய‌மாக்க பட வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே கல்வியின் பெயரால் அடிக்கும் கொள்ளைகள் தடுக்கப்படும்.

குறிப்பு: பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். இந்த வருடம் எனது வாழ்க்கையில் பல நல்ல விசயங்கள் நடந்துள்ளது. அதனால் தான் என்னால் தொடர்ச்சியாக‌ எழுத முடியவில்லை. நல்ல நிகழ்வில் ஒன்று என‌து திருமணம். இந்த வருட தொடக்கத்தில் நல்ல படியாக நடந்தது. எனது மனைவி அவர்கள் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். அவருடைய தகவல்களும் இந்தப் பதிவில் உள்ளது.

Wednesday, June 20, 2012

க‌ழ‌ட்டி மாட்ட‌ப்ப‌டும் முக‌மூடிக‌ள்


ஒரு த‌வ‌றை சுட்டிக்காட்டு எழுதுவ‌தாலோ!!.. அல்ல‌து அந்த‌ த‌வ‌றைப் ப‌ற்றிய‌ விவாத‌த்தில் த‌ன‌து க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்தாலோ!!!.. முத‌லில் உங்க‌ளை நோக்கி வ‌ரும் கேள்வி, நீ ம‌ட்டும் யோக்கிய‌மா?.. நீ யோக்கிய‌ன் என்றால் உன் ப‌க்க‌த்து வீட்டுக் கார‌ன் யோக்கிய‌மா?.. என்று தான் வ‌ரும்.

மேலே சொன்ன‌ இர‌ண்டையும் நீங்க‌ள் எப்ப‌டியோ முட்டி மோதி "யோக்கிய‌ன்" என்று நிலை நிறுத்தி விட்டால் முடிந்து விட்ட‌து!!! என்று நீங்க‌ள் நினைத்தால்.. உங்க‌ளை விட‌ முட்டாள் யாரும் இல்லை :)))

அடுத்து அடிப்பாங்க‌ பாருங்க‌ ஒரு அந்த‌ர் ப‌ல்டி.. இந்த‌ உல‌க‌த்தில் யாரும் செய்யாத‌தையா?.. நான் செய்துவிட்டேன் என்பார்க‌ள். உல‌க‌ம்.. உல‌க‌ம்...என்று அவ‌ர் பேசுவ‌தை பார்த்தால் சில‌ருக்கும், உண்மையில் உல‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லோருமே இப்ப‌டித்தான் இருப்பார்க‌ளோ!!! என்று பீதியாகிவிடும். ஆனால் இவ‌ர்க‌ள் சொல்லும் உல‌க‌ம் என்ப‌து அந்த‌ முனை "டீக்க‌டையில் கூடும் நான்கு பேர்" என்ப‌து அனேக‌ருக்கு தெரியாது.

உன்னுடைய‌ ச‌ட்டையை க‌ழ‌ட்டி பார்!!.. நெஞ்சை பிள‌ந்து பார்!!.. கண்ணாடி முன்பு நின்று பார்!!!.. என்று வ‌ரும் யோக்கிய‌மான‌ கேள்விக‌ளை கேட்டும் போது ந‌ம‌க்கும் அடிவ‌யிறு க‌ல‌ங்க‌ ஆர‌ம்பித்துவிடும். ந‌ம்முடைய‌ புரித‌ல்‌ ப‌ற்றி ந‌ம‌க்கே ச‌ந்தேக‌ம் வ‌ருவ‌தை த‌விர்க்க‌ இய‌லாது.

நான்‌ எட்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் அம்ப‌த்தூரில் உள்ள‌ ஒரு வாக‌ன‌ உதிரிப்பாக‌ம் தாய‌ரிக்கும் தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வ‌ந்தேன். அங்கு நான் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் வேலை பார்த்து இருப்பேன். பின்பு என‌க்கு வேறு வேலை கிடைத்த‌தால் அங்கிருந்து வெளியேறினேன். நான் வேலையை விட்டு வெளியில் வ‌ருவ‌த‌ற்கு ஒரு மாத‌த்திற்கு முன்பு என‌து மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஒரு பைய‌ன் வ‌ந்து வேலையில் சேர்ந்தான். சொந்த‌ மாவ‌ட்ட‌ம் என்ப‌தால் அவ‌னிட‌ம் கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌ழ‌கி விட்டேன். கொஞ்ச‌ம் துடுதுடுப்பான‌ பைய‌ன், வேறு தொழிற்ச்சாலைக‌ளில் வேலைப் பார்த்த‌ முன் அனுப‌வ‌ம் ஏதும் இல்லாத‌தால் யார் என்ன‌ வேலை சொன்னாலும் த‌ய‌ங்காம‌ல் செய்வான்.

"ப‌ணியிட‌ பாதுக்காப்பு" என்ப‌து எந்த‌ள‌வில் இருக்கும் என்ப‌து அம்ப‌த்தூர் தொழிச்சாலைக‌ளில் வேலை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும். மெஷினில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு எப்போது வேண்டுமான‌லும் எதுவும் ந‌ட‌க்க‌லாம். ஏதாவ‌து ஒரு விப‌த்து ந‌ட‌ந்து கொண்டே இருக்கும்.

அந்த‌ தொழிற்ச்சாலையில் இருந்து வெளிவ‌ந்து ஆறு மாத‌ம் க‌ழித்து, என்னுட‌ன் அதே தொழிற்ச்சாலையில் வேலைப் பார்த்த‌ ப‌ழைய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ரை பார்க்க‌ முடிந்த‌து. அவ‌ரிட‌ம் பேசிக் கொண்டு இருக்கும் போது, என‌து மாவ‌ட்ட‌த்தில் இருந்து வ‌ந்த‌ அந்த‌ பைய‌னை ப‌ற்றியும் விசாரித்தேன். அப்போது அவ‌ர் சொன்ன‌து என‌க்கு பேர‌திர்சியாக‌ இருந்த‌து. அவ‌ன் மேனுவ‌ல் ஹைடிராலிக் பிர‌ஸ் மெசினில்(Manual Hydraulic Press Machine) வேலை பார்க்கும் போது ஒரு "கை" போய்விட்ட‌தாக‌ கூறினார்.

மேலும் "பிளாஸ்டி கை" வாங்கி வைக்கிறோம், உன்னால் முன்பு போல‌ எல்லா வேலையும் செய்ய‌ முடியும், அனைத்து ம‌ருத்துவ‌ செல‌வையும் நாங்க‌ளே ஏற்று கொள்கிறோம், ஆயுள் முழுவ‌தும் நாங்க‌ளே ப‌ணியில் வைத்து கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லி அவ‌னுடைய‌ குடும்ப‌த்தின‌ரிட‌ம் "போலிஸ் கேஸ்" ஆகாம‌ல் பார்த்து கொண்டார்க‌ள். ஆனால் இவ‌ர்க‌ள் சொன்ன‌து எதுவும் செய்யாம‌ல் கொஞ்ச‌ நாளிலேயே வேலையில் இருந்து நீக்கி விட்டார்க‌ள். என்று அவ‌ர் சொன்ன‌போது விக்கித்து நின்றேன்.

நான் மேலே உள்ள‌ ச‌ம்ப‌வ‌த்தை சொல்வ‌த‌ற்கு கார‌ண‌ம், ச‌மீப‌த்தில் அந்த‌ தொழிற்ச்சாலை ஐ எஸ் ஓ த‌ர‌ச் சான்றித‌ழ்(ISO) பெற்ற‌து. ஆனால் அந்த‌ தொழிற்ச்சாலையில் பாதுக்காப்புக்கான‌ எந்த‌ வித‌மான‌ புது மாற்ற‌மும் செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

என‌து "கை" த‌ப்பிவிட்ட‌து என்ப‌தாலும், ஐ எஸ் ஓ(ISO) த‌ர‌ச்சான்றித‌ழ் பெற்றுவிட்ட‌து என்ப‌தாலும் அந்த‌ தொழிற்ச்சாலையை ப‌ற்றி "ப‌ணிபுரிய‌ சிற‌ந்த‌ இட‌ம்" என்று நானே ஒரு ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் எடுத்தால் எப்ப‌டி இருக்கும்?... என‌ வாச‌க‌ர்க‌ளின் சிந்தைக்கே விட்டு விடுகிறேன்.

கால‌த்தின் க‌ட்டாய‌ம் இது.....இப்ப‌டித்தான் ச‌ம்பாதிக்க‌ வேண்டும் என்று இல்லை, எப்ப‌டியும் ச‌ம்பாதிக்க‌லாம் என்று திருவாய் ம‌ல‌ரும் மெத்த‌ ப‌டித்த‌, முற்போக்கு, திராவிட‌, பின்நவீன‌த்துவ‌, உல‌க‌ இல‌க்கிய‌ம் ப‌டித்த‌ பெரும‌க்க‌ள் துணைக்கு அழைப்ப‌து யாரை என்றால் "பிதாவே இவ‌ர்க‌ளை ம‌ன்னியும்" என்று சொன்ன‌ இயேசு பெருமானை...

வெட்டி ஒட்டுவ‌தில் அதி மேதாவிக‌ளான‌ ந‌ம் பெரும‌க்க‌ள், அந்த‌ பைபிள் வ‌ச‌ன‌த்தில் கீழே இருக்கும் இர‌ண்டு வ‌ரியை சேர்த்து ஒட்டியிருந்தால் ந‌ல்லாயிருக்கும்... ச‌ரி அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னையோ... :))) நாம‌ அதை ஒட்டி ப‌டிப்போம்...


"7 அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.


8 மீண்டும் குனிந்து தரையில் எழுதலானார்.


9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்; அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.


10 அவர் நிமிர்ந்துபார்த்து, "மாதே, எங்கே அவர்கள் ? உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று கேட்டார்.


11 அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என, இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்."

கூட்ட‌த்தின‌ரை பார்த்து "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்று முத‌ல் வ‌ரியில் சொல்லிவிட்டு, இர‌ண்டாவ‌து வ‌ரியில் "இனிமேல் பாவ‌ம் செய்யாதே போ" என்று சொல்லி இயேசு அந்த‌ பெண்ணை ந‌ல்வ‌ழி ப‌டுத்துகிறார்.

ஆனால் த‌த்துவ‌ முடிச்சுக‌ளை அவிழ்க்க‌ ந‌ம‌து நீதிமான்க‌ளுக்கு முத‌ல் வ‌ரி ம‌ட்டும் போதுமான‌தால் இயேசு சொன்ன‌ இர‌ண்டாவ‌து வ‌ரி தேவையில்லாம‌ல் போயிற்று....

ச‌ரி இந்த‌ ஒட்டு வேலையை விட்டுவிட்டு, பைபிளில் சொல்ல‌ப்ப‌டும் பிர‌ச்ச‌னையையும், இங்கு இவ‌ர்க‌ள் ஆராயும் பிர‌ச்ச‌னையையும் ஒன்றா? என்று சீர் தூக்கிப் பார்த்தால்............ ரெம்ப‌ கேவ‌ல‌மாக‌ இருக்கிற‌து. உண்மையில் யாருக்கு இவ‌ர்க‌ள், முட்டு குடுத்து நிறுத்துகிறார்க‌ளோ.. அவ‌ரே முக‌ம் சுழிப்பார்.....

ஏதாவ‌து ஒரு புத்த‌க‌த்தில் இருந்து காப்பி ப‌ண்ணி இது போல் ஒட்டு போடும் வேலையை செய்வ‌த‌ற்கு முன்பு ஒன்றுக்கு நாலு முறை ப‌டியுங்க‌ள்.... அப்புற‌ம் த‌த்துவ‌ முடிச்சுக‌ளை அவிழுங்க‌ள்...

ஆமா.... என‌க்கு ஒரு ட‌வுட்டு....

என‌க்கு தேவைனா ஆத்திக‌ம் முக‌மூடி போட்டுகிற‌தும், தேவையில்லைனா நாத்தீக‌ம் முக‌மூடி போட்டுகிற‌தும் தான் திராவிட‌ கொள்கையா?........

.

.

Wednesday, September 14, 2011

கூடங்குளம்_மக்களின் போரட்டம்!!!

நான் படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் எங்கள் மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவை கீழ்க்கண்ட முன்று திட்டங்கள்.

# கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்.

# கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய போகும் ரப்பர் தொழிற்ச்சாலை.

# குளச்சல் துறைமுகம்.

சில ஓட்டு கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் அள்ளிவீசிய வாக்குறுதிகளில் இவைகளும் அடங்கும்.

இவைகளின் மூலம் எங்கள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருக போகிறது. அதனால் தொழிற்நூட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளை குறிவைத்து படித்த மாணவர்கள் அதிகம். அதில் நானும் ஒருவன்.. :))

இந்த கால கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் அதிக அளவில் பாலிடெக்னிகள் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போதும் வேறு மாவட்டங்களை கணக்கிடும் போதும் எங்கள் மாவட்டத்தில் இவைகளின் எண்ணிக்கை அதிகம் தான். திரும்பிய திசையெங்கும் கல்லூரிகள்.

படித்து முடித்தவுடன் அனைவரும் செய்யும் முதல் காரியம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. காரணம் மேலே சொன்ன திட்டங்கள் நிறைவேறினால் வேலை நிச்சயம் என்பது அனைவரின் எண்ணம். நானும் பதிந்து வைத்திருக்கிறேன். ஆறு வருடம் தவறாமல் புதுப்பிக்கவும் செய்தேன்.அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை மற்றும் பொறுமையில்லை அப்படியே கிடப்பில் இருக்கிறது.

மேலே கூறிய மூன்று திட்டங்களில் நடைமுறைக்கு வந்தது கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் மட்டும் தான். மற்றவை என்ன ஆனது? என்று அந்த அரசியல் ஆண்டவருக்கே வெளிச்சம். இத்திட்டத்திற்கு கையெழுத்து போடப்பட்ட ஆண்டு 1988. ஒரு சில காரணங்களால் பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்பு 2001 ஆம் ஆண்டில் இருந்து மிக துரிதமாக வேலைகள் ஆரம்பிக்கபட்டது.

இது ஆரம்பிக்க பட்ட காலத்தில் ஊடகங்களின் தாக்கமும், தகவல் பரிமாற்றங்கள் அதிகமாக இல்லாததால் மக்களுக்கு இந்த அணுமின் உலையை பற்றிய தகவல்களும், விழிப்புணர்வுகளும் அதிகம் இல்லை. அரசியல்வாதிகளும் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லத் தவறிவிட்டார்கள். அதற்கு பதிலாக அணு உலையின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடக்கும் போதே, ஆரம்பித்தவுடன் அனைவருக்கும் வேலை என்று மட்டும் சொல்லி ஓட்டுகளாக மாற்றினர். இன்னும் சிலர் முன்பணம் கொடுங்கள் உடனே வேலைவாங்கி தருகிறேன் என்று கல்லா கட்டினார்கள்.

ஆனால் இத்திட்டம் முழுமையடைந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள எவருக்கும் பணிகள் வழங்கப்படவில்லை. ஒரு சில இயக்கங்களில் போராட்டங்களுக்கு பிறகு சிலரை ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்தார்கள். அவர்களையும் முழுமையாக பணியில் வைத்துக்கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவரும் இந்த காலகட்டங்களில் நம்முடைய அரசு மட்டும் மீண்டும் மீண்டும் புதிய அணு உலைகளை நிறுவுகிறது. இந்த கூடங்குளம் அணு உலையிலும் இந்த வருடம் புதிய 4 ரியாக்டர்கள் (Reactors) நிறுவப்படுகிறது. இதில் இவர்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.



“வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட இந்த பூமியில் மனித உயிர்களும், இதர உயிரினங்களும் முக்கியம் அல்லவா?”

இது தான் ”தூக்கம் கெடுத்து கட்டில் வாங்குவதோ?..”

இந்த கூடங்குளம் குறித்து அதிகம் கவலைப்பட மேலும் ஒரு வலுவான காரணம் உண்டும். இது சுற்றிலும் கடலால் சூழப்பட்ட பகுதி. சுனாமி போன்ற பேரலைகள் பயம் காட்டும் இந்த காலக்கட்டதில் இந்த அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே!!!!!!!!!!...

இந்த அழிவுகள் எல்லாம் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். பலர் சாகும் வரை உண்ணாவிரதமும் இருக்கிறார்கள். இவர்களின் அறப்போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நம்முடைய சில பதிவர்களும் இதில் கலந்துள்ளார்கள் அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். இந்த பதிவில் பதிவர் கூடல் பாலா அவர்கள் எழுதிய போரட்டம் பற்றிய சுட்டியும் இணைத்துள்ளேன். முடிந்தவரை இந்த போரட்டத்தை பற்றி பலரிடம் கொண்டு சேர்க்க நண்பர்களை வேண்டுகிறேன்.

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

நன்றி: பதிவர் கூடல்பாலா.

Tuesday, August 2, 2011

குழித்துறை; வாவுபலி பொருட்காட்சி

"ஆடி பட்டம் தேடி விதைக்கணும்" என்று ஒரு பழமொழி உண்டு. நெல் விவசாயம் செய்யஆடி மாதம் விதைத்தால் தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். எனவே விவசாயிகளை பொறுத்தவரையில் ஆடி மாதம் என்பது பயிர்கள் நடவு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடி மாதம் நடப்படும் செடி, மரம், கொடி எதுவாக இருந்தாலும் நன்றாக வளரும், நல்ல பலனை தரும் என்பது எங்கள் ஊரில் வழக்கில் இருக்கும் ஒரு ஐதீகம். இயற்கையாக எங்கள் ஊரில் ஆடி மாதம் மழை பொழியும், எனவே இந்த மழையும் எங்கள் ஊரில் மரம், செடி இந்த மாதத்தில் நடுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது. அதனால் பெரும்பாலும் எங்கள் ஊரில் ஆடி அமாவாசை அன்று எல்லோர் வீடுகளிலும் ஒரு மரமாவது நடுவார்கள். மரம் வைக்க இடம் இல்லாதவர்கள் ஒரு ரோஜா செடியாவது வீட்டின் முன்புறம் நட்டு வைப்பார்கள்.

எங்கள் வீட்டிலும் நான், எனது அக்கா, மற்றும் அண்ணன் மூன்று பேரும் போட்டி போட்டு செடிகள் நடுவோம். யாருடைய செடி முதலில் "பூ" பூக்கும் என்பதில் போட்டி நடக்கும். ரோஜா செடியாக இருந்தால் யாரு வைத்த கம்பு முதலில் தளிர்விடுகிறது என்று போட்டி இருக்கும். ரோஜா செடி வளர்க்கும் நாங்கள் பெரும்பாலும் கடையில் இருந்து தொட்டி செடி வாங்கி வைப்பது இல்லை. ஏற்கனவே வேறு சொந்தகாரர்களின் வீடுகளில் இருக்கும் ரோஜா செடியில் இருக்கும் முதிர்ந்த கம்புகளை வெட்டி வந்து எங்கள் வீட்டில் வைப்போம். இரண்டு வாரங்களில் அந்த கம்பு தளிர்விட ஆரம்பிக்கும். ஊன்றி வைக்கப்பட்டிருக்கும் ரோஜா செடியின் கம்பை தளிர்விடுவதற்கு முன்பு சிறிது அசைத்து விட்டாலே அது தளிர் விடாமல் காய்ந்து போகும். எங்கள் வீட்டில் போட்டியின் காரணமாக அடுத்தவரின் ரோஜா கம்பை அசைத்து தளிர்விடாமல் செய்யும் வில்லங்க வேலையும் நடக்கும், யாரு கம்பை அசைத்தது என்று எங்கள் மூவருக்கும் சண்டையும் நடக்கும். ஒரு வாரம் ஆகிவிட்டது இன்னும் தளிர் விடவே இல்லையே என்று அந்த கம்பை பிடுங்கி பார்த்து பல்பு வாங்கிய அனுபவமும் எனக்கு உண்டு.

ஆடி மாதங்களில் எங்கள் ஊரில் அதிகமாக மரக்கன்று மற்றும் பூச்செடி வியாபாரிகளை பார்க்கமுடியும். இதுமட்டுமல்லாது மரம், செடி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதத்தில் எங்கள் மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் நடைபெறும் "வாவுபலி பொருட்காட்சி" ஒரு வாய்ப்பாக‌ அமையும். இங்கு எல்லா விதமான மரக்கன்றுகளும், பூச்செடிகளும் கிடைக்கும்.

இந்த வாவுபலி பொருட்காட்சியானது 1926 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. அந்தகாலத்தில் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் நடத்துவதற்கு ஆடிமாதம் இறுதி அமாவாசை அன்று குழித்துறை ஆற்றின் இருபுறமும் மக்கள் கூடுவார்கள். இவ்வாறு கூடும் மக்களை கவரும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த வாவுபலி பொருட்காட்சி.

அதனை தொடர்ந்து வருடம்தோறும் இந்தபொருட்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மூன்று நாட்களாக ஆரம்பிக்கபட்ட இந்த பொருட்காட்சியானது விதவிதமான கோழிகள், மற்றும் மரக்கன்றுகள், பூச்செடிகள் என ம‌க்க‌ளின் பார்வைக்கு வைத்தன. ஆனால் இப்போது மரம், செடி மற்றும் மலர் கண்காட்சிக‌ள் ம‌ட்டும‌ல்லாது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று பட்டியல் நீண்டு 20 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த‌ க‌ண்காட்சிக்கு வ‌ந்து செல்ப‌வ‌ர்க‌ள் வீட்டிற்கு திரும்பும் போது க‌ண்டிப்பாக‌ ஒரு ம‌ர‌க்க‌ன்றாவ‌து வாங்கி செல்வார்க‌ள். ம‌ர‌ம் ந‌டுவ‌த‌ற்கு வ‌ச‌தியில்லாத‌வ‌ர்க‌ள் ஒரு பூச்செடியாவ‌து வாங்கி செல்வார்க‌ள். எப்ப‌டியோ ம‌ர‌ங்க‌ள் அழிந்து வ‌ரும் இக்கால‌த்தில் இது போன்ற‌ ம‌ர‌க்க‌ன்றுக‌ளின் ச‌ந்தைக‌ள், க‌ண்காட்சி போன்ற‌வைக‌ள் அவ‌சியமாகின்ற‌ன‌. இங்கு வ‌ந்து ஆர்வ‌மாக‌ ம‌ர‌ங்க‌ளை வாங்குப‌வ‌ர்க‌ளை பார்க்கும் போது ந‌ம‌க்கும் அவ‌ற்றின் மீதான‌ ஈர்ப்பு ம‌ன‌தில் வ‌ந்து விடுகிற‌து.

86‍-வ‌து வாவுப‌லி பொருட்காட்சி இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து. க‌ட‌ந்த‌ மாத‌ம் 20- ஆம் ‍தேதி தொட‌ங்கி இந்த‌ மாத‌ம் 8- ஆம் தேதி வ‌ரை ந‌டைபெறுகிற‌து. இதை ப‌ற்றிய‌ தின‌ம‌ல‌ர் செய்தியின் லிங்க் கீழே இணைத்துள்ளேன்.


குழித்துறை வாவுபலி பொருட்காட்சி கோலாகல துவக்கம்


குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்

ந‌ன்றி,
தின‌ம‌ல‌ர்.


க‌ட‌ந்த‌ ஆண்டு என‌து ந‌ண்ப‌ன் வாவுப‌லி பொருட்காட்சிக்கு சென்று வ‌ந்த‌ போது மொபைலில் எடுத்த‌ சில‌ ப‌ட‌ங்க‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்கிறேன்.






























.

.

.

Thursday, July 21, 2011

குடி குடியைக் கெடுக்கும்_விள‌ம்ப‌ர‌ ப‌ல‌கை?

"குடி குடியைக் கெடுக்கும்" "ம‌து நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு" போன்ற‌ வாச‌க‌ங்க‌ளை தாங்கி தான் இன்றைய‌ ம‌து ப‌ட்டில்க‌ள் விற்ப‌னைக்கு வ‌ருகின்ற‌ன‌. ஆனால் இந்த‌ வாச‌க‌ங்க‌ளை உள்வாங்கி தான் ந‌ம்முடைய‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் குடிக்கிறார்க‌ளா?. என்னை நானே கேட்கும் கேள்விக‌ளில் இதுவும் ஒன்று.

முன்பெல்லாம் ஊர்க‌ளில் வியாபார‌ம் செய்ய‌ப்ப‌டும் சாராய‌ம், க‌ள் போன்ற‌வைக‌ள் ஊருக்கு வெளியில் ஆட்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் இல்லாத‌ ப‌குதிக‌ளில் ம‌றைமுக‌மாக‌ ந‌ட‌க்கும். அந்த‌ இட‌ங்க‌ளுக்கு சென்று வ‌ருப‌வ‌ர்க‌ளும் ஏதோ செய்ய‌ கூடாத‌ குற்ற‌த்தை செய்து விட்ட‌தாக‌ த‌லை க‌விழ்ந்து வ‌ருவார்க‌ள். இவைக‌ளை விற்ப‌னை செய்ப‌வ‌ர்க‌ளும் ச‌மூக‌ விரோதிக‌ளாக‌ தான் பார்க்க‌ப்ப‌ட்டார்க‌ள். கேன்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ சாராய‌த்தை சிறிய‌ க‌ண்ணாடி கிளாஸ்க‌ளில் அள‌ந்து வியாபார‌ம் செய்வார்க‌ள். இத்த‌கைய‌ வியாபார‌ங்க‌ள் ந‌ட‌க்கும் இட‌ங்க‌ளில் பெரும்பாலும் குடிப்ப‌வ‌ரும், விற்ப‌னை செய்ப‌வ‌ரை த‌விர‌ வேறு எவ‌ரும் இருக்க‌ மாட்டார்க‌ள். ஒருவ‌ர் குடித்து விட்டு வ‌ந்த பிற‌கு தான் அடுத்த‌வ‌ர் செல்வார். பெரும்பாலும் கூட்ட‌ம் சேர்க்க‌ விட‌ மாட்டார்க‌ள். ஒரு நாள் விற்ற‌ இட‌த்தில் ம‌றுநாள் விற்க‌ மாட்டார்க‌ள். கார‌ண‌ம் போலீஸ் ரெய்டு. இங்கு நான் போலீஸ் ரெய்டு என்ற‌வுட‌ன் சாராய‌ வியாபாரியை பிடித்து கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிடுவார்க‌ள் அத‌ற்கு ப‌ய‌ந்து தான் இடங்களை மாற்றுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்க‌ள் அறியாமை. மாமூல் கொடுக்க‌ வேண்டும் என்று தான் இட‌த்தை மாற்றுவார்க‌ள். எந்தெந்த‌ இட‌ங்க‌ளில் எப்போது வியாபார‌ம் ந‌ட‌க்கும் என்ப‌து குடிம‌க‌ன்க‌ளில் காதுக‌ளுக்கு தானாக‌ சென்றுவிடும்.

ஊர்க‌ளில் இவ்வாறு விற்க‌ப்ப‌டும் சாராய‌ வியாபார‌ம் பெரும்பாலும், பெண்க‌ள் ம‌ற்றும் குழ‌ந்தைக‌ள் புள‌ங்காத‌ இட‌ங்க‌ளில் தான் ந‌ட‌க்கும். கால‌ப்போக்கில் இந்த‌ இந்த‌ வியாபார‌மும் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்ற‌து. ச‌ந்து பொந்துக‌ளில் விற்க‌ப்ப‌ட்ட‌வைக‌ள் எல்லாம் க‌ள்ளுக்க‌டை, சாராய‌க்க‌டை என்று உருமாறி, நாவீன‌ விருச்ச‌த்தில் ஒயின்ஷாப்புக‌ளாக‌வும், பார்க‌ளாக‌வும் ஜொலித்து, இப்போது அர‌சே எடுத்து ந‌ட‌த்தும் டாஸ்மாக்காக‌ உய‌ர்ந்து நிற்கின்ற‌து. ஊரில் உழைத்து வாழ‌ விருப்ப‌ம் இல்லாம‌ல், பிற‌ர் குடியை கெடுத்து வாழ‌ நினைப்ப‌வ‌ர்க‌ள‌ தான் இந்த‌ சாராய‌ வியாபார‌ம் செய்தார்க‌ள். அவ‌ர்க‌ள் ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தை அடுத்த‌வ‌னிட‌ம் சுர‌ண்டிய‌ ப‌ண‌மாக‌ தான் ச‌மூக‌ ம‌க்க‌ள் பார்த்தார்க‌ள். ஆனால் இன்றைய‌ ந‌வ‌நாக‌ரீக‌ உல‌கில் டாஸ்மாக் மூல‌ம் வ‌ரும் ப‌ண‌த்தில் தான் "ம‌க்க‌ளுக்கு ப‌ட்ஜெட்டே போடுகிறோம்" என்று வெட்க‌ம் இல்லாம‌ல் ஊட‌க‌ங்க‌ளுக்கு பேட்டி கொடுக்கிறார்க‌ள்.

இந்த‌ சாராய‌ம், க‌ள்ளு போன்ற‌வைக‌ள் ஊருக்கு வெளியில் ஒதுக்கு புற‌ங்க‌ளில் விற்க‌ப்ப‌டும் போது இவைக‌ளால் ச‌மூக‌த்திற்கு ஏற்ப‌டும் தீங்கு குறைவாக‌ தான் இருந்த‌து. ஆனால் இவை பார்க‌ளாக‌ உருமாறிய‌ பின்புதான் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு அடிகோலிய‌து. குடித்த‌வ‌ன் சும்மா இருந்தாலும் அவ‌னுடைய‌ வாய் சும்மா இருக்காது. போதை த‌லைக்கேறிய‌ பிற‌குதான் சில‌ருக்கு ஞான‌மே பிற‌க்கும். இந்த‌ ஞான‌த்தால் அடுத்த‌வ‌ன் வாயை கிள‌றி, அது வாய் ச‌ண்டை ஆகி, வாய் ச‌ண்டை இரு குடும்ப‌ ச‌ண்டையாகி, குடும்ப‌ ச‌ண்டை இரு கோஷ்டி ச‌ண்டையாகி, கோஷ்டி ச‌ண்டை பெரிய‌ ஊர்க‌ல‌வ‌ர‌மாக‌ வெடித்திருக்கிற‌து என்ப‌து நித‌ர்ச‌ன‌ம். இன்றைக்கும் ப‌ல‌‌ டாஸ்மாக் க‌டைக‌ளில் உள்ள‌ பார்க‌ளில் ஒரே வ‌ண்டியில் வ‌ந்திற‌ங்கி ஒரு பாட்டில் வாங்கி, ஒரே கிளாஸில் குடிக்க‌ ஆர‌ம்பித்த‌ இருவ‌ரும், சிறிது நேர‌த்தில் போதை த‌லைக்கேறி; வ‌ச‌வு வார்த்தைக‌ளில் ஆர‌ம்பித்து, க‌ட்டிப்பிடித்து ச‌ண்டையிடும் நிலைமைக்கு மாறியிருப்பார்க‌ள். பிற‌கு அங்குள்ள‌ பார் ஊழிய‌ர்க‌ள் தான் ஒருவ‌னை முன்புற‌ வாச‌ல் வ‌ழியாக‌வும், அடுத்த‌வ‌னை பின்புற‌வாச‌ல் வ‌ழியாக‌வும் ஆட்டோவில் ஏற்றிவிடுவ‌தை நாளும் பார்க்க‌லாம்.

என‌து ஊர் வில்லுக்குறியில் ஒயின்ஷாப் என்ப‌து கிடையாது. அத‌ற்கு கார‌ண‌ம் இங்கு தொண்ணூறுக‌ளில் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள். அந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் ஒருவ‌ரின் உயிர் ம‌ற்றும் ஒருவ‌ரின் கை ப‌றி போன‌து. இந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் தோன்ற‌ இங்கிருந்த‌ ம‌துக்க‌டைக‌ளும் ஒரு கார‌ண‌ம் என்று ரெக்கார்டு ப‌திவாகி போன‌து. அத‌னால் தான் இதுவ‌ரையிலும் இங்கு எவ‌ராலும் டாஸ்மாக் கொண்டுவ‌ர‌ முடிய‌வில்லை.(இத‌னால் இங்கு இருப்ப‌வ‌ர்க‌ள் ரெம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் என்று எண்ண‌ வேண்டாம், ப‌க்க‌த்துல‌ அந்த‌ ப‌க்க‌ம் நுள்ளிவிளை, இந்த‌ ப‌க்க‌ம் குமார‌கோவில், எட்டி போனால் சுங்காங்க‌டை என‌ மூன்று ப‌க்க‌ம் த‌ண்ணியால்(டாஸ்மாக்) சூழ‌ப்ப‌ட்ட‌ தீப‌க‌ற்ப‌ம் தான் வில்லுக்குறி).

இப்போது அர‌சால் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ப‌ல‌ டாஸ்மாக் க‌டைக‌ள், ம‌க்க‌ள் குடியிருப்புக‌ளுக்கு அருகிலும், ப‌ள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளுக்கு அருகிலும், பெண்க‌ள் அதிக‌மாக‌ புள‌ங்கும் கோவில்க‌ளின் ப‌க்க‌த்திலும் பார்க்க‌ முடிகிற‌து. ம‌க்க‌ளும் எந்த‌வித‌மான‌ உறுத்த‌லும் இல்லாம‌ல் இவைக‌ளை க‌ட‌ந்து செல்கிறார்க‌ள்(க‌ட‌ந்து செல்ல‌ ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்திவிட்டார்க‌ள்). சினிமாவும், ஊட‌க‌ங்க‌ளும் ம‌க்க‌ளை இவ‌ற்றில் இருந்து எளிதாக‌ வில‌கி செல்ல‌ ப‌ல‌ யுத்திக‌ளை கையாளுகின்ற‌ன‌. சினிமாவில் குடிகார‌ ஹீரோக்க‌ள், குடித்துவிட்டு அவ‌ர்க‌ள் செய்யும் கூத்துக‌ளை ர‌சிக்கும் ஹீரோயின்க‌ள் என்று இவ‌ர்க‌ள்‌ அமைக்கும் காட்சிக‌ளை வைத்தே சொல்லிவிட‌லாம் எத்த‌கைய‌ க‌லாச்சார‌த்தை வ‌ள‌ர்த்தெடுக்கிறார்க‌ள் என்று.



ப‌தின்ம‌ வ‌ய‌தை க‌ட‌ந்த‌ மாண‌வ‌ர்க‌ள் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் குடிப்ப‌த‌ற்க்கும், புகைப்ப‌த‌ற்கும் அடிமையாக‌ இருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இது தீய‌ ப‌ழ‌க்க‌மாக‌ தெரிய‌வில்லை, மாறாக‌ கொண்டாட்ட‌மாக‌ இருக்கிற‌து. த‌ண்ணிய‌டிப்ப‌தையும், புகைப்ப‌தையும் இவ‌ர்க‌ள் ஒரு த‌குதியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்கிறார்க‌ள். இத்தைகைய‌ த‌குதியை வ‌ள‌ர்த்தெடுக்காத‌வ‌ர்க‌ள் இன்றைய‌ நாக‌ரீக க‌லாச்சார‌த்தில் கோவ‌ண‌ம் க‌ட்டிய‌வ‌னாக‌ தான் பார்க்க‌ப்ப‌டுகிறார்க‌ள்.

"குடி குடியைக் கெடுக்கும்" "குடிப்ப‌ழ‌க்க‌ம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு" என்ற‌ வாச‌க‌ங்க‌ள் ஆட்டோக்க‌ளிலும், சினிமா டைட்டில்க‌ளிலும் சென்ற‌டைந்த அள‌வு, இன்றைய‌ இளைய‌த்த‌லைமுறையை சென்ற‌டைய‌வில்லை, அதுவ‌ரையிலும் தில்ஷ‌ன் போன்ற‌ மொட்டுக‌ளின் உயிர்க‌ளும், ப‌ல‌ ம‌னைவிக‌ளின் க‌ண்ணீர்க‌ளும் இந்த‌ பூமியில் சிந்த‌ப்ப‌டும் என்ப‌து திண்ண‌ம்.‌

குறிப்பு: ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம். க‌டைசி ப‌திவு எழுதி ஒரு மாத‌திற்கு மேல் ஆகிவிட்ட‌து. இந்த‌நாட்க‌ளில் என்னிட‌ம் தொட‌ர்புகொண்டு விசாரித்த‌ந‌ட்புக‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி. ச‌வூதி வ‌ந்து என்னை நிலைப்ப‌டுத்திக் கொள்ள‌இவ்வ‌ள‌வு நாட்க‌ள் எடுத்துவிட்ட‌து. இனி தொட‌ந்து எழுத‌வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எப்ப‌டி என்று பார்ப்போம்!!!!.






.






.
Related Posts with Thumbnails