Friday, June 3, 2016

நுனிப்புல் மேய்பவர்கள்!!

பள்ளியில் நான் பத்தாவது வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர், முதல் நாள் வகுப்பில் எடுக்கும் பாடத்திலிருந்து, மறு நாள் முதல் பதினைந்து நிமிடம் கேள்விகள் கேட்டுவிட்டுத் தான் அன்றைய பாடத்தை துவங்கும் வழக்கம் உடையவர். அதனால் ஒவ்வொரு நாளும் அன்றைய பாடத்தை முடித்துவிட்டு, நாளைக்கு நான் எடுத்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பேன், எல்லோரும் படித்து விட்டு வாருங்கள், தேவையில்லாமல் என்னை இம்போசிசன் போட வைத்து விடாதீர்கள் என்று சொல்லிவிடுவார். மறு நாள் வகுப்பிற்கு வந்தவுடன் நேற்று எடுத்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்டு முதலில் அமர்ந்திருக்கும் மாணவனிடமிருந்து ஆரம்பித்து அனைத்து வரிசையாக எழுந்து நிற்கச் சொல்லுவார், எவருக்குப் பதில் தெரியுமோ அவர் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அமரலாம், பதில் தெரியாதவர்கள் எழுந்து நிற்க வேண்டும், அவர்களின் பெயர்கள் வகுப்பு தலைமை மாணவனால் குறித்து கொள்ளப்பட்டு பின்னர் அமர வைக்கப்படுவார்கள்.

கேள்விகளின் விரிவைப் பொறுத்து இம்போசிசன் எழுதும் எண்ணிக்கை ஆசிரியரால் முடிவு செய்யப்படும், பெரிய கேள்விகளாக இருந்தால் பத்து முறையும், சிறிய கேள்விக்கான விடைகள் என்றால் இருபதினைந்து முறையும் பொதுவாக இருக்கும், மறு நாள் அந்த இம்போசிசன் பேப்பர்களை மாணவர்களிடம் சேகரித்து ஆசிரியரிடம் கொடுப்பது வகுப்பு மாணவ தலைவனின் பொறுப்பு. இதில் இரு சுவாரசியம் என்னவென்றால் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு வரிசையாக எழுந்து பதில் சொல்லச் சொல்லும்போது அந்தக் கேள்விக்கான முழு பதிலையும் எவரிடமும் நின்று பொறுமையாக கேட்க மாட்டார். ஒரு மாணவன் பதில் சொல்லும் தோரணையை பொறுத்து ஒரு பத்தி சொல்லிவிட்டால் போதும் அமர வைத்து விடுவார். இன்னும் சில மாணவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தால் போதும், உடனே அமர வைத்துவிடுவார்.

ஐம்பதிற்கு மேல் மாணவர்கள் இருக்கும் வகுப்புகளில் பத்து மாணவர்களாவது ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தவர்களாக இருப்பார்கள், இந்தப் பத்து மாணவர்களும் முழுமையாகப் பதில் சொல்லும்வரை காத்திருந்து, பாடம் எடுக்கலாம் என்று நினைத்தால் ஒரு மணி நேர வகுப்பில் பாதி நேரம் அதற்கே போய்விடும் என்பதால் அந்த ஆசிரியர் சில மாணவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதை வைத்தே அவர் அவர்களுக்குப் பதில் முழுமையாகத் தெரியும் என்றெண்ணி அவர்களை அமரச் சொல்லிவிடுவார். இதை சில வித்தகர் மாணவர்கள் அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆசிரியர் கேள்வி கேட்டவுடன் ஆக்ரோசமாக ஒரு பத்தியை சொல்ல ஆரம்பிப்பார்கள் ஆசிரியரும் இவர்களின் செய்கையை பார்த்து அமர வைத்துவிடுவார். உண்மையில் அந்த மாணவர்களுக்கு ஆசிரியர் கேட்கும் கேள்விக்கான முழு பதிலும் படித்திருக்க மாட்டார்கள் முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு இம்போசிசனிலிருந்து தப்பித்து விடுவார்கள்.

இந்த வித்தகர்களின் வித்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு ஆசிரியருக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை, அடுத்த மாத தேர்வுக்கான விடைத்தாளிலேயே அந்த மாணவர்களில் குட்டு வெளிப்பட்டுவிட்டது. ஒரு நாள் அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்து வழக்கம் போல் கேள்விகள் கேட்பது போல் கேட்டு அமரவைத்துவிட்டு, பதில் தெரியாமல் நின்றவர்களுக்கு இம்போசிசன் கணக்கைச் சொல்லிவிட்டு, பதில் தெரியும் என்று சொல்லி அமர்ந்திருக்கும் மாணவர்களை வகுப்பின் முன்னால் வந்து முழுமையான பதிலை சொல்லும் படி சொல்லிவிட்டு வகுப்பில் போடப்பட்டிருந்த நாற்காலியில் ஆசிரியர் அமர்ந்துவிட்டார். அப்புறம் என்ன, வித்தகர்கள் எல்லாம் விழித்தார்கள்.

இன்றைய கால சூழ்நிலையில் எல்லோருடைய வாழ்க்கையிலும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. பல போராளிகளை இந்தச் சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்க்க முடியும். இந்தச் சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் எந்தவொரு அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளையும் உடனடியாக மீம்ஸ்களாகவும், குறுந்தகவல்களாகவும் தெறிக்க விடுகிறார்கள். இத்தகைய குறுந்தகவல்களும் மீம்ஸுகளும் சில மணிநேரங்களில் எல்லோருடைய பார்வைகளுக்கு வந்துவிடுகிறது, அந்த ஒருவரி செய்திகளை படித்தவர்களுக்கு அதில் இருக்கும் தகவல்களே அவர்களுக்கு அந்த நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு போதுமானதாக எண்ணித் திருப்தியடைந்து விடுகிறார்கள். அந்தச் செய்திகளை பற்றிய மேலதிக தகவல்களை பற்றிய தேடல் இருப்பதில்லை.

மீம்ஸ்களாகவும், குறுந்தகவல்களாகவும் பரப்பப்படும் செய்திகளை மேலோட்டமாகப் படித்தால் அதில் இருக்கும் அரசியல் உங்களுக்குத் தெரிவதில்லை, நீங்கள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அதில் இருக்கும் ஒரு பக்க சார்பு உங்களுக்குப் புலப்படும். கண்டிப்பாக எவரோ ஒருவரால் அரசியல் செய்யப்பட்டு, திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்திகளாகத் தான் இவை வலம் வரும். இப்படியான செய்திகளை படித்துவிட்டு அவற்றுக்கு ஒரு பொங்கல் வைத்துவிட்டு தன்னை ஊடக போராளிகளாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம்.

இப்போது பெரும்பாலான ஊடகங்களும், பத்திரிக்கைகளும் உண்மையான செய்திகளை கொடுப்பதில் இருக்கும் அக்கறைகளை விட சுவாரஸ்யமான செய்திகளைக் கொடுப்பதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றன. இன்றைக்கு விவாதம் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்துத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பின்வரும் நிகழ்வுகளை எல்லோராலும் கவனிக்க முடியும், கல்வி, பொருளாதாரம் மற்றும் சூழியல் தொடர்பான விவாதங்களில், அதற்காக அழைக்கப்படும் அந்த துறைசார்ந்த வல்லுநர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் மற்றும் முக்கியத்துவத்தை விட அதை வைத்து அரசியல் செய்யும் கட்சி பிரதிநிதிகளுக்கு நிகழ்ச்சி நெறியாளரால் கொடுக்கப்படும் நேரமும், முக்கியத்துவமும் அதிகம். எந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும், எப்படியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலெல்லாம் பலகட்ட அரசியல் இருக்கிறது. இவற்றையும் தாண்டி நாம் சரியானகோணத்தில் செய்திகளை புரிந்து கொள்வது தான் நமக்கான சவால்.



இந்தச் சவால்களை எதிர்கொள்ள நாம் ஏழு கடல், ஏழு மலைகளைத் தாண்டவேண்டியது இல்லை, கொஞ்சம் விசாலமான பார்வையும், தேடல்களும் இருந்தால் போதும். பெரிய ஊடகங்களால் மட்டுமே கட்டமைக்கப்படும் செய்திகளைத் தவிர, பல சிறிய முன்னணியில் இல்லாத ஊடகங்களிலும் நம்முடைய கவனங்களை செலுத்த வேண்டும். இணையங்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றிய விரிவான செய்திகளும், அதற்கான ஆய்வுகளும், விவாதங்களும் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை நாம் தேடி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும். ஆனால் நுனிப்புல்லை மட்டுமே மேயும் பெரும்பான்மையினர் ஒரு நீளமான கட்டுரையையோ, ஆய்வறிக்கையையோ படிக்க விரும்புவதில்லை.

ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில், கடந்த மாதம் நடந்த முடிந்த தேர்தலைப் பற்றிய ஒரு விவாதத்தில், யாருக்கு வாக்களிக்க வேண்டும்?, யாருக்கு வாக்களிக்கக் கூடாது?, அந்தக் கட்சியின் கொள்கைகள் சரியில்லை, இந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை சரியில்லை, முதல்வர் வேட்பாளருக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் என்றெல்லாம் பலரிடம் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த நண்பரிடம் உங்கள் மாவட்டத்தில் மொத்தம் எத்தனைத் தொகுதிகள்? என்று கேட்டேன், அதற்கு அவரிடம் சரியான பதில் இல்லை, உங்கள் மாவட்டத்தில் உள்ள முக்கியமான மக்கள் பிரச்சனைகள் என்ன? என்றும் கேட்டேன் அதுவும் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை. இந்தத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் கல்வியை மக்களுக்கு இலவசமாகத் தருவேன் என்று தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டாலும் “நான் எந்தவொரு கட்சியின் தேர்தல் அறிக்கையும் முழுமையாகப் படிக்கவில்லை” என்று தான் பதில் வந்தது. ஆனால் தேர்தலைப் பற்றியும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றியும் குழுமத்தில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

உள்ளூரில் வசித்து, ஐரோப்பாவை உலக வரைபடத்தில் பார்த்துக்கொண்டே ஐரோப்பியர்களின் வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும் தனது சிஷ்ய கோடிகளுக்கு கற்றுக்கொடுத்து அதன்படி வாழ வைக்கும் பின்நவீனத்துவ எழுத்தாளர் சாருநிவேதிதாவின் வலைத்தளத்தில் ஒரு பக்கத்தை படிக்க நேர்ந்தது. அதில் அவருடைய தீவிர இலக்கிய வாசகர் ஒருவர், அவர் ஒரு பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை பற்றி விசாரித்ததை ஒரு கேள்வி பதில் உரை நடையில் எழுதியிருந்தார். நாங்களெல்லாம் என்றைக்கோ உள்ளூர் இலக்கியமும், அரசியலும் கரைத்து குடித்துவிட்டு ஐரோப்பிய இலக்கியத்தையும் அரசியலையும் சாருவிடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டும் சாருவின் வாசகர் ஒருவர் கேட்கிறார், அன்புமணி ராமதாஸ் என்றால் யார் என்று? இதைவிடக் கொடுமை பாமக தலித் கட்சியா என்ற விவாதம்.

அவருடைய வாசகர்கள், அவர்களுடைய விவாதம், இதில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்? என்ற கேள்வி எனக்கே வருகிறது, என்ன செய்வது நாளைக்கே இவர்கள் ஒரு 100 பக்க புத்தகத்தை எழுதி பெரிய எழுத்தாளர்கள் ஆகிவிடுவார்கள், மறு நாளே தொலைக்காட்சி விவாதங்களில் கலர், கலராகச் சட்டைகள் போட்டுவந்து சமூக ஆர்வலர், சூழியல் செயற்பாட்டாளர், டிராவலர் என்ற அடைமொழியுடன் வந்து நமக்கும், சமூகத்துக்கும் கருத்து சொல்வார்கள்.

.

2 comments:

அருள்மொழிவர்மன் said...

சுவாரசியமான பதிவு..இங்க நிறைய பேர் நுனுப்புல் மேய்பவர்களாகத்தான் உள்ளார்கள்!!

நாடோடி said...

@அருள்மொழிவர்மன்

வாங்க நண்பரே!

உங்களுடைய கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி.

Related Posts with Thumbnails