Friday, February 28, 2014

பல்லிளிக்கும் தமிழ்மணம் ம‌குடம்!!!

நான் பெரும்பாலும் தமிழ் பதிவுகள் படிக்க வேண்டுமானால் முதலில் இணையத்தில் திறப்பது தமிழ் மணம் திரட்டியை தான். நண்பர்களுக்கும் பதிவுகள் படிப்பத‌ற்கு பரிந்துரை செய்வது இதைத் தான். தமிழ் மணம் திரட்டியில் திறந்தவுடன் முதலில் படிப்பது மகுடத்தில் இருக்கும் பதிவையும், வாசகர் பரிந்துரை பதிவுகளையும் தான். மகுடம் ஏறும் பதிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் எனக்கும் அவ்வப்போது எழாமல் இல்லை. அதைப்பற்றிப் பல பதிவர்கள் எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் தமிழ் மணத்தில் மகுடத்தில் இருக்கும் பதிவை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பதிவுக்கு ஓட்டு அளித்திருப்பவர்களின் பெயர்களைப் பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருந்தது. நீங்களும் அந்தப் பொன்னான ஓட்டு போட்டு மகுடத்தில் ஏற்றியவர்களை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.



பல பதிவர்கள் சொல்லியதை போல, எழுதியதை போல் தமிழ்மணம் ஓட்டு முறையில் மாற்றம் கொண்டு வருவது மிக முக்கியம். இல்லையென்றால் எவர் நினைத்தாலும் அவருடைய பதிவை மகுடத்தில் ஏற்றி பார்க்கலாம் அல்லது எளிதாக வாச‌கர் பரிந்துரையிலும் கொண்டு வரலாம்.

முன்பு தமிழ்மணம் பற்றி என்னுடைய எண்ணம் இதுவாகத் தான் இருந்தது ஒருவருக்குச் சுயமாக வலைத்தளம் இருந்து, அதில் தமிழ்மணபட்டையை நிறுவி பின்னர்த் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடம் இருந்து பாஸ்வேர்டு வந்த பின்பு தான் ஒட்டளிக்க முடியும் என்று நினைத்து வந்தேன். தமிழ்மணம் ஓட்டு பற்றிய பலருடைய பதிவுகளைப் படித்த பின்பு தான் இதில் இவ்வளவு தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் இந்தப் பதிவில் ஓட்டு அளித்திருக்கும் அனைத்து பெயர்க்ளையும் கொஞ்சம் பாருங்கள். பெயர் ஒன்றாக இருக்கிறது, இறுதியில் ஒன்று, இரண்டு என்று எண்களை மட்டும் சேர்த்து இருக்கிறார்கள்..

இனியும் தாமதிக்காமல் தமிழ்மணம் நிர்வாகிகள் நட‌வடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் இதைப்போல் பல பதிவுகள் மகுடத்தில் வந்து பல்லிளிக்கும். அதையும் கொடுமை என்று படித்துத் தீர வேண்டும்...

தமிழ்மணம் என்ன செய்ய வேண்டும் என்று பல பதிவர்கள், பல பதிவுகளை எழுதியுள்ளார்கள், அவற்றில் சிறந்தவற்றைக் கருத்தில் கொண்டு உருவாகினால் நன்றாக இருக்கும். அல்லது தமிழ்மணமே ஒரு வாசகர் பரிந்துரை பக்கத்தை நிறுவி அதில் வாசகர்கள், பதிவர்கள், கருத்துரையாளர்களின் கருத்துகளைக் கேட்டு பின்பு அவற்றில் சிறந்தவற்றை எடுத்து நடைமுறைப்படுத்தலாம்.

.

Thursday, February 27, 2014

என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா ???

நம்ம ஆளுங்களுக்கு வீட்ல பொண்ணுப் பார்க்க ஆரம்சிட்டாங்க என்பதை அவர்கள் நடந்து கொள்ளும் விதங்களை வைத்தே சொல்லிட முடியும். 

1) முதல் கவலையே மயிரைப் பற்றிய தாக இருக்கும். ஊர்ல உள்ள ஆத்துத் தண்ணியில குளிக்கும் போது கருக் கருனு அடர்த்தியா இருந்துச்சு, இப்ப இங்க வந்து இந்த உப்பு தண்ணியில குளிச்சுச் செம்பட்டை பாய்ஞ்சி மண்டையே காலி ஆகிடுச்சுனு அறையில் இருக்கும் நண்பனிடம் புலம்ப ஆரம்பிப்பார்கள். இந்தப் புலம்பலை கேட்டு கிட்டு இருக்குறவனோ "சிக்கினான் அடிமை ஒருத்தனு" மயிரு வளரனமுனு சொல்லிட்டு வர்ற விளம்பரம் அத்தனையும் இவனை வச்சே டெஸ்ட் பார்த்திருவான். இதுவும் ஒவ்வொருத்தரின் பண வசதிகேற்ப எண்ணையில் ஆரம்பித்து ஹேர் பிளாண்டிங் வரை போகும்.

2) அது வரையிலும் கண்ணாடியின் முன்பு போய் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவன், இப்போது கண்ணாடியை சிறுது கீழே இறக்கி தொப்பையைப் பார்த்து "ஓ மை காட்" என்பான். அன் லிமிட்டடு மீல்ஸ் ரெண்டு சாப்பிடும் போது தெரியாத தொப்பை இப்போது, நண்பன் டீ குடிக்கலாம் என்று கூப்பிட்டால் கூட மச்சி "கிரீன் டீ" சொல்லு என்பான். இணையத்தில் படித்தாலும் சரி, புத்தகங்கள் வாங்கினாலும் சரி, தொப்பையைக் குறைக்கும் வழிகளைத் தான் அவன் கண்கள் தேடும். தங்கியிருக்கும் அறையில் பெல்லி ரெடிசுர் பெல்டில் இருந்து ஆர்பிட் எலைட் வரை அவரவர் வசதிகேற்ப இருக்கும்.

3) உடம்பை பற்றிய கவலையெல்லாம் வந்துவிடும். ஒன்பது மணி ஆபிசுக்கு எட்டரைக்கு அலாரம் வச்சு, எட்டே முக்காலுக்கு எழுந்து குளிச்சும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஒன்பது மணிக்குப் பைக்கை ஸ்டார்ட் செய்கிறவன், விடியற்காலை ஆறு மணிக்கே அலாரம் வச்சி எழுந்து டிராக் சூட்டை மாட்டுவான், அப்படியே பக்கத்தில் தூங்கிறவனையும் பிடிச்சு இழுப்பான் "வாடா வாக்கிங் போகலாம்" என்று. ஆளு பாக்குறதுக்குப் பவர் ஸ்டார் போல இருந்துட்டு, வாரணம் ஆயிரம் சூர்யா உடம்புக்கு ஆசை படுவாங்க. ஆபிஸ் முடிஞ்சு படம் பாக்கலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி ஜிம்முக்கு போகனும் என்று நமக்குப் பல்பு கொடுப்பார்கள்.

4) பண்டிகைக்கும், திருவிழாவிற்கும் எடுத்த நான்கு டிரஸ்ஸை வருசம் புள்ளா போட்டுகிட்டு இருப்பவன் தீடிரென மாசத்துக்கு நான்கு டிரஸ் எடுப்பான். பண்டிகைக்கு எந்தக் கடையில தள்ளுப்படி அதிகமா போட்டிருக்குனு பார்த்து பார்த்து எடுத்தவன், பிரண்டட் கடையா தேடிப் பார்த்து தான் இப்ப டிரஸ் எடுப்பான். சும்மா இல்லீங்க இன்னர் வேர் கூடப் பிரண்டட் பெயர் போட்டுருந்தால் தான் செலக்ட் பண்ணுவான்.

5) நாமுளும் அவன் கூட நாலு வருசமா ஒன்னா ரூம்ல தான் இருந்திருப்போம், எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா என்பது அந்தப் பாத்ரூம் கண்ணாடிக்கு தான் வெளிச்சம். ஆனா இப்ப புது இருநூறு கிராம் அடவான்ஸ்ட் சென்சோடைன் டூத் பேஸ்ட்டும், சென்சிட்டிவ் டூத் பிரஷும் ஹால்ல இருக்கிற கண்ணாடி முன்னாடி இருக்கும். காலையிலேயும் மாலையிலேயும் டங் கிளீனர் வச்சு இவன் போடுற சவுண்டை பார்த்து நம்ம நாக்கை, நாமளே பிடிங்கி வெளியே போட்டுவிடலாம் போல இருக்கும்.

6) எப்பவுமே சவரம் செய்யாத அரைத் தாடியுடம் அலையும் நம்ம ஆளு கிட்ட ஏன்டா சவரம் செய்யலைனு கேட்ட "டைம் இல்ல மச்சி" என்பான். இப்ப எல்லாம் வீட்லேயே ட்ரிபிள் பிளேடு ரேசர் வைச்சு தினமும் கண்ணாடி முன்பு ஒரு மணி நேரம் நிற்பான். வாரத்துக்கு ஒரு முறை சலூனுக்கும் கிளம்பிடுவான். ஸ்டீம் பாத், ஹேர் கலரிங், ஆயில் மசாஜ், பேசியல் என்று சொல்லி பீதியை கிளப்புவான்.

7) நான்கு வருடமா அதே இடத்தில் தான் இருந்திருப்பான். ஹோட்டல், தியேட்டர் தவிர எங்கேயுமே சுற்றாத ஆளு புதுசா அந்த ஏரியாவில் இருக்கும் கோவிலை தேடுவான். வெள்ளிக்கிழமை ஆகிட்டா காலையிலேயே குளிச்சுட்டு விபூதியை பூசிடுவான். பக்கோடா சாப்பிடலாம் வாடானு கூப்பிட்டா கூட, மச்சி சிக்கன் பக்கோடாவா சொல்லுனு சொல்லுறவன், இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்.

8) தியேட்டரில் படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சிகள் வந்தால் வெளியே தம் அடிக்கவோ, அல்லது மொபைல் போனில் கேம் விளையாடவோ செய்வான், இன்னும் ஏன், லேப்டாப்புல படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சியை மட்டும் பாஸ்ட் பார்வர்டு செய்து இரண்டரை மணி நேரப் படத்தை இரண்டு மணி நேரத்தில் பார்த்து முடிப்பான். இப்ப என்னடானா ஹெட் போனை தலையில் மாட்டிவிட்டு மெலோடிஸ் பாட்டா கேட்டுட்டு இருப்பான். ரூம்க்கு வந்தாலும் சன் மியூசிக்கோ, இசை அருவியோ தான் ஓடும். நாம ரிமோட்டை வாங்கி வேற சேனல் மாத்தினால் "ஞானசூனியம்" என்று தலையில் அடிப்பான்.

9) பேண்ட், சர்ட், செருப்புனு சுத்திட்டு இருந்த ஆளு, இப்ப ஜீன்ஸ், டீ சர்ட், சிலிம் பிட், கேன்வாஸ் என்று கலக்குவான். தண்ணியையும், அயன் பாக்ஸையும் பார்க்காத ஜீன்ஸ் பேண்ட் இப்ப லாண்டரிக்கும், வாசிங் மிசினுக்குப் போகும்.

10) லீவு நாள்ல அழுக்கான துணியைத் துவைக்காமல் குப்புற அடிச்சு தூங்கிட்டு, திங்கட்கிழமை காலையில அழுக்கான சட்டையைத் துக்கிட்டு, ஸ்பிரே அடிக்கத் தேடுற ஆளு, இப்ப எல்லாம் குளிச்சு முடிஞ்சு பாடி ஸ்பிரே போடாமல் இன்னர் பனியன் போட மாட்டன். வெளியில் நடந்து போகும் போது, வழியில் நிற்கும் ஒரு டூவீலரை கூட‌ விட மாட்டான். பக்கத்தில் போய்ப் பாக்கெட்ல இருக்குற சீப்பை எடுத்து தலையைச் சீவி விட்டு, "மச்சி முடி ரெம்பக் கொட்டுதுடா, எதாவது பண்ணனும்" என்பான்.


அப்படியே இதையும் பார்த்துட்டு போங்க.. இணையத்தில் சுட்டது தான்..



.

Monday, February 24, 2014

அடுத்தவன் தாலியை அறுத்து வயிரு வளர்ப்பவர்கள்!!!

கிராமங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து உதவுவதில் கூட்டுறவு வங்கிகள் தான் உதவியாக இருக்கின்றன. இதில் கொடுக்கப்படும் விவசாயக் கடன்களுக்கு அரசு மானியங்களும் கொடுத்து வருகின்றது, சில சமயம் வறட்சியின் காரணமாக‌ ஆளும் மத்திய‌ அரசால் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுப்படி செய்வதும் உண்டு. மேலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் வசதியும் உண்டு. கிராமங்களில் பொரும்பாலன விவசாயிகளுக்கு இந்த நகைக்கடன் வசதி பெரும் உதவியாக இருப்பது உண்மை. விவசாயிகள் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் பூச்சு மருந்துகள் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது குழந்தைகளில் படிப்பு செலவாக இருந்தாலும் முதலில் அவர்கள் வீட்டில் உள்ள தங்க‌ நகைகள் தான் அடகுக்கடைக்குப் போகும். பெரும்பாலும் கடன் வாங்கும் விவசாயியாக இருந்தால் அவனிடம் இருக்கும் தங்க நகை என்பது மனைவியின் தாலி செயினாகத் தான் இருக்கும்.

விவசாயிகள் பெரும்பாலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைப்பதற்குக் காரணம் வட்டி குறைவாக இருப்பது ஒன்று மற்றொன்று இந்த வங்கியின் மீதான நம்பிக்கை. தனியார் வங்கிகளில் நகைகள் பேரில் பணம் அதிகமாகத் தந்தாலும் வட்டி வீதம் அதிகம். மேலும் தனியார் வங்கிகளின் மீதான நம்பிக்கையும் குறைவு. முன்னறிவும் இல்லாமலே நகைகளை ஏலத்தில் விட்டுவிடுவார்கள், நாம் போய் ஏன் முன்னறிவுப்பு செய்யவில்லை என்று கேட்டால் நாங்கள் அனுப்பினோம் உங்களுக்கு வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது, முகவரி நீங்கள் தவறாகத் தந்து இருப்பீர்கள் என்று நம் மீதே தவறை திருப்புவார்கள். இந்த மாதிரியான தில்லுமுல்லுகள் கூட்டுறவு வங்கிகளில் நடப்பது இல்லை. ஆனால் புதுவிதமான் திருட்டு இங்கு நடப்பதாக அதில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கும் நகைகளில் சிறு பகுதியை வெட்டி எடுத்து விட்டு திரும்பவும் அதை அழகாகத் தெரியாத அளவிற்குப் பத்த வைத்து கொடுத்து விடுகிறார்களாம். இந்தத் திருட்டை மோதிரம், கம்மல் போன்ற சிறிய நகைகளில் செய்வது இல்லை, செயின்களில் தான் செய்கிறார்களாம். கிராமங்களில் செயின் என்றால் பெரும்பாலும் தாலிச் செயினாகத் தான் இருக்கும் அல்லது மகள்களில் கல்யாண‌த்திற்குச் சேர்த்து வைத்திருப்பவையாக இருக்கும். தனது கழுத்திலோ, அல்லது தனது மகள்களில் கழுத்திலோ போட்டு அழகு பார்க்க கூட விவசாயத் தொழில் அவர்களுக்குப் பெரும்பாலும் கைக் கொடுப்பது இல்லை. அதனால் அதன் எடை குறைந்தாலோ அல்லது அளவு சிறிய‌தாக இருந்தாலோ பெரும் அளவில் அவர்களுக்குச் சந்தேகம் வருவது இல்லை. மேலும் இந்தத் திருட்டை கொஞ்சம் வெவரமானவர்களிடம் செய்வது இல்லையாம். பெரும்பாலும் விவசாயக் கூலி வேலை செய்பவர்களிமும், கணவன்மார்கள் வெளிநாட்டில் இருக்கும் பெண்களிடமும் தான் இந்த திருட்டு வேலையைப் பார்க்கிறார்களாம். யாரவது சந்தேகம் வந்து பிரச்சனைகள் பண்ணினால் வெளியில் தெரியாமல் பணம் கொடுத்து சரி செய்கிறார்களாம். இந்தத் திருட்டு வேலைக்கு வங்கியில் வேலை பார்க்கும் உயர் அதிகார்களும் உடந்தை. அவர்களுக்கும் சேர வேண்டிய‌ பங்குச் சரியாக‌ போய்ச் சேர்ந்து விடுகிறதாம்.

என்னிடம் சொன்ன நண்பன் இந்த கூட்டுறவு வங்கியில் வேலைப் பார்க்கவில்லை, அவன் அதன் அருகில் இருக்கும் ரேசன் கடையில் ஊழியராக பணிச்செய்கிறான். அவன் பணியில் சேர்ந்து இன்னும் முழுமையாக இரண்டு வருடம் கூட ஆகவில்லை. இந்த திருட்டைப் பற்றி எவரிடம் முறையிட வேண்டும் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அப்படியே முறையிட்டாலும் எப்படியான ந‌டவடிக்கை இருக்கும் என்பதும் உறுதியில்லை. அவனுடைய ஆற்றாமையை என்னிடம் புலம்பினான். என்னுடைய ஆற்றாமையை நினைத்து நான் இங்கு பதிந்து வைக்கிறேன்.

இதை என்னுடைய நண்பன் என்னிடம் சொல்லும் போது எனக்குப் பகீரென்று இருந்தது, காரணம் ஒரு மாதத்திற்கு முன்பு தான் வட்டி குறைவாக இருக்கும் என்று அப்பாவின் உதவியுடன் என்னுடைய சில நகைகளைத் தனியார் வங்கிகளில் இருந்து எடுத்து எங்கள் ஊரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வைத்திருக்கிறேன். அங்கு இதுபோல் நடந்தாக நான் கேள்விப்ப‌ட்டது இல்லை இருந்தாலும் நம்மையறியாமல் ஒருவித சந்தேகம் மனதில் எழாமல் இல்லை. நகைகளை நாம் அடகு வைக்கும் போது நம் நகைகளை ஒரு முறைக்கு நான்கு முறை எடை செய்து பார்க்கும் ஆசாரிகள், நாம் திரும்ப மூட்டும் போதும் அதை ஒரு முறைக் கூட எடைப் போட்டு நம்மிடம் காட்டுவது இல்லை, நாமும் அவசரத்திலும் மற்றும் இவர்களில் மீதான நம்பிக்கையிலும் அதைச் சரிப்பார்க்கச் சொல்லுவதும் இல்லை.

இப்படி கூலி விவசாயிகளின் தாலியை அறுத்து தொப்பை வளர்க்கும் ஜென்ம‌ங்களை எதைக் கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை.......


.

Thursday, February 20, 2014

தரி.. கிட.. தோம்.. போடுகிறோம்

கல்வி, மருத்துவம் இவை இரண்டும் மனித வாழ்க்கையில் இன்றியமையாதவை. இன்றைய சூழலில் எத்தகைய கல்லூரிகளில் உயர் கல்வி கற்கலாம், எந்தப் பாடப்பிரிவு சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புண‌ர்வுகளும் மற்றும் நமது உடலில் இருக்கும் நோய்களுக்குத் தரமான மருத்துவம் எங்குக் கிடைக்கும் என்பது குறித்தும் நாம் அன்றாடம் தரி கிட தோம் போடுகிறோம்.



நான் பனிரென்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது கூட, அடுத்த வருடம் எந்த‌ கல்லூரியில் படிக்க போகிறோம்? எந்தத் துறை சார்ந்த படிப்புகளைத் தேர்தெடுக்கப் போகிறோம்? என்பது பற்றிய முழுமையான புரிதல் என்னிடம் இல்லை. எனக்குப் பனிரென்டாம் வகுப்பில் எண்பது விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் உண்டு. அந்த மதிப்பெண்களுக்குக் கண்டிப்பாகப் பி.இ பட்டயப் படிப்புப் படித்திருக்க முடியும். ஆனால் நான் என்ட்ரன்ஸ் தேர்வு எழுதவில்லை. என்ட்ரன்ஸ் தேர்வு எழுதவில்லை என்று சொல்லுவதை விட அதைப் பற்றிய அறிதல் மற்றும் முழுமையான‌ புரிதல் என்னிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கும் என்னிடம் என்று சொல்லுவதை விட என்னுடைய குடும்பதில் உள்ளவர்களையும் சேர்த்து தான் சொல்ல வேண்டும். உறவினர்கள் சிலருக்கு தெரியும், அவர்களிடம் அப்பா கேட்டாலும் "அது படிக்க வைக்க ரெம்பச் செல‌வாகும், படிப்பும் மிகக் கடினமாக இருக்கும், உன் பிள்ளையால் படிக்க முடியாது" என்று ஏதாவது அப்பா முன்னால் சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஏதோ, என் மீதோ அல்லது அப்பாவின் மீதோ உள்ள அக்கறையில் சொன்னதாக எடுத்துக் கொள்ள முடியாது, எங்கே இவனுடைய பையன் எல்லாம் பி.இ படிப்பதா என்பது தான் மேலோங்கி இருந்தது.

இப்பொழுதும் கிராமங்களில் படிக்கும் மாணவர்களும் எதிர்காலம் குறித்த முழுமையான புரிதலுடம் எந்தத் துறையையும், கல்லூரியையும் தேர்ந்தெடுப்பது இல்லை. அந்தக் கிராமத்தில் முன்பு படித்து முடித்து இப்போது வேலையில் சேர்ந்து அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள் என்று பேசப்படுகிற நபர்கள் படித்த‌ படிப்பையே அதிகமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அப்படித் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகச் சொல்லும் நபரிடம் கூட அந்தப் படிப்பை பற்றியோ அதற்கு இருக்கும் எதிர்காலம் பற்றியோ கேட்பது இல்லை. உண்மை என்னவெனில் அதிகம் சம்பளம் வாங்குவதாகச் சொல்லப் படும் நபர் மெக்கானிக்கல் படித்து விட்டு நண்பர்களின் உதவியுடன் ஐடி துறையில் வேலை பார்பவராக இருப்பார்.

சமீபத்தில் என்னுடைய அலுவலகத்திற்குத் துறை வாரியாக இஞ்சினியரிங்கள் முடித்தவர்கள் தேவை பட்டார்கள். வந்த ரெஸ்யூம்களில் அதிக அளவில் எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் படித்தவர்கள். மிகக் குறைந்த அளவே இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்களில் ரெஸ்யூம் வந்தது. எங்களுக்கோ அதிக அளவில் இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்கள் தேவைப் பட்டார்க்ள், பலரிடம் சொல்லியும் போதுமான அளவு கிடைக்கவில்லை. நான் பாலிடெக்னிக்னில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இரண்டு மூன்று கல்லூரிகளில் இந்த இரண்டு துறைகளும் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டது, அப்போது பலரும் ஆர்வமாக அதில் சேர்ந்தார்கள். அந்த‌ கல்லூரிகளில் இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்களின் ரெஸ்யூம் கேட்ட போது வருடா வருடம் மாணவர்களில் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அந்தத் துறையை இரண்டு வருடத்திற்கு முன்பே எடுத்துவிட்டோம் என்றார்கள். ஆனால் இந்த எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் துறையில் அதிகம் பேர் விரும்பி தேர்ந்தெடுத்துப் படிப்பதனால் இரண்டு பிரிவுகளாக வைத்து வகுப்புகள் நடத்துவதாகத் தெரிவித்தனர். நான் அறிந்த வரையில் இந்தத் துறைக்கு என்று தனியாக வேலை வாய்ப்பு என்பது குறைவு. இந்தத் துறையில் படித்தவர்கள் பெரும்பாலோர் ஐடி துறையில் தான் பணி செய்கிறார்கள். எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் துறையைத் தேர்ந்தெடுத்து படித்த பலரும் படிப்பிற்குச் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு வேலையில் இருப்பதைப் பார்க்க முடியும். பெரும்பாலும் கால் சென்டர்களிலும், மார்கெட்டிங்களிலும் இவர்களை அதிகமாகப் பார்க்கலாம். இவர்களிடம் எதனால் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படித்தீர்கள்? என்று கேட்டால் சிலர், நான் மேலே சொன்னது போல் யாரவது ஒரு நபரை கையைக் காட்டுகிறார்கள், இன்னும் சிலர் கல்லூரியில் நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்லியதால் படித்ததாகச் சொல்லுகிறார்கள்.

நான் படிக்கும் காலத்தில் இருந்தது போல் அல்லாமல், இப்போது ஊடகங்களின் வாயிலாகவும், இணையத்தில் மூலமாகவும் அதிகமான பல புதிய துறை சார்ந்த‌ படிப்புகள் பற்றிய தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனாலும் கிராமங்களில் படிக்கும் பலரும் புது விதமான துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது போல் தெரியவில்லை.

மேலே சொன்னது போல் உயர் கல்வி கற்பதில் தடுமாறுவது போல் சமீப காலமாக நடுத்தர மக்கள் தடுமாறும் இன்னொரு இடம் மருத்துவ மனை மற்றும் மருத்துவர்கள். எந்த நோய்க்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்பதும் அவர்கள் தரும் மருத்துவத் தீர்வுகள் எந்தளவு நமக்குப் பயனளிக்கிறது என்பதும் அனைவருக்கும் சொந்த அனுபவங்கள் இருக்கும். பெரும்பாலான மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்குச் செய்யச் சொல்லும் லேப் டெஸ்ட்கள் எல்லாம், அவர்களிடம் அந்த லேப் எக்கீயுப்மென்ட் இருக்கிறது என்பதற்காகவே சொல்ல படுபவைகளாக இருக்கும்.

எந்த ஒரு நோய் என்று மருத்துமனைகளுக்குச் சென்றாலும், சாதரணமாக இரத்தம், சிறு நீர் டெஸ்ட் மற்றும் ஒரு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பரிசோதித்த பின்பு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறார்கள். இதில் கொடுமையான விசயம், ஒரு மருத்துவ மனையில் எடுத்த ரிப்போர்ட்களை அடுத்த மருத்துவ மனைகள் ஏற்றுக் கொள்வதில்லை. புதிதாக அனைத்து டெஸ்ட்களும் அந்த மருத்துவ மனையில் எடுக்க வேண்டும். எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்களையும் பார்த்து விட்டு உங்கள் உடம்புக்கு ஒன்றும் இல்லை, இந்த மாத்திரையை ஒரு வாரம் சாப்பிடுங்கள் சரியாகிடும் என்கிறார்கள். நோயிக்கான மருந்து செலவு 100 ரூபாய் என்றால், இந்த டெஸ்ட்களுக்கும் ஆகும் செலவு 1000 முதல் 2000 வரை. சிலர் கேட்கலாம் "இந்த டெஸ்ட்களை எடுத்து உடலில் வேறு ஏதும் பிரச்சனை இல்லை என்று அறிந்து கொள்வது நல்லது தானே என்று!!" என்னுடைய எண்ணம் முதலில் அந்த நோயிக்கான மாத்திரையைக் கொடுத்து ஒரு வார காலம் உண்ண செய்து குறைய வில்லை என்றால் இந்த டெஸ்ட்களைப் பரிந்துரைக்கலாமே!!

பெரும்பாலான மருத்துமனைகளில் இப்போது எல்லா நோயிகளுக்கும் சர்வ லோக நிவாரணியாக‌ அறுவை சிகிச்சையைப் பரிந்துரை செய்வது இன்னும் ஒரு கொடுமையாக இருக்கிறது.

மருத்துவ மனைகளில் எனக்கு நடந்த அனுபவங்களை இந்தப் பதிவில் பகிர்ந்தால் இது மிகப் பெரிய பதிவாக மாறிவிடும். வரும் பதிவுகளில் அவைகளைப் பகிருகிறேன்.


.

Monday, February 10, 2014

திரும்பவும்.... பார்ப்போம்

அனைவருக்கும் வணக்கம், பதிவுகள் எழுதி ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பணி மற்றும் குடும்பச் சூழல்களால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது பதிவுகள் படிப்பதற்காக அவ்வப்போது இணையப் பக்கம் தலைக்காட்டுவது உண்டு. முன்பு எழுதிக் கொண்டிருந்த பல பதிவர்களின் தளங்களும் எழுதப் படாமலே இருப்பதைக் காண முடிந்தது. தொடர்பில் இருந்த சில பதிவர்களிடம் விசாரித்ததில் எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணம் பதிவுகள் எழுதாதமைக்கு இருப்பதை உணர முடிந்தது.

கடந்த ஆண்டில் எனது தளத்தில் ஒரு பதிவுகள் கூட என்னால் எழுத முடியவில்லை. கடைசியாகப் பதிவுகள் எழுதியது சீனா அய்யா அவர்களில் அழைப்பின் பேரில் வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆறு பதிவுகள் எழுதினேன். அந்தப் பதிவுகள் எழுதும் போது பல புதிய பதிவர்களில் பதிவுகளை என்னால் படிக்க முடிந்தது. அவர்களிலும் பலரும் தொடர்ச்சியாக எழுதுவது இல்லை என்று நினைக்கிறேன்.

இப்ப எதுக்கு இங்க வந்து, அவங்க எழுதல, இவங்க எழுதலனு வந்து புலம்பிக்கிட்டு இருக்கனு நீங்க கேக்குறது புரியுது... வேற என்ன? திரும்பவும் எழுதலாம் என்று நான் முடிவெடுத்துக்கிறேன்.

எத்தனை நளைக்குனு தானே கேக்குறீங்க !!!!!!!!




பார்ப்போம்.....


.
Related Posts with Thumbnails