Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Tuesday, June 10, 2014

டிரைவிங் லைசென்ஸ்_எதற்காக எட்டு போட வேண்டும்?

ரெம்ப வருடங்களாக‌ வீட்டில் அம்மாவின் பாதுகாப்பிலிருந்த டிரைவிங் லைசென்ஸ் எப்படியோ தொலைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக ஊருக்கு சென்றவுடன் மட்டும் லைசென்ஸின் ஞாபகம் வரும், உடனடியாக இரண்டு நாட்கள் அதற்கான‌ வேலையாக அலைவேன். பின்பு அதைத் தொடர்ந்து கவனிப்பதில்லை. உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் நீங்கள் அதை முதலில் போலிசில் புகார் செய்யவேண்டும். பின்னர் அவர்கள் கொடுக்கும் புகார் காப்பியை கொண்டு சென்று ஆர்.டி.ஓ ஆபிஸில் புதிய லைசென்ஸ் காப்பி வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் நேரடியாகச் சென்றால் உங்களைச் சுற்றலில் விட்டுவிடுவார்கள். ஏதாவது டிரைவிங் ஸ்கூல் முலமாகச் சென்றால், கொஞ்சம் செல‌வு ஆகும், ஆனால் எளிதாகக் காரியத்தை முடித்துவிடலாம். நானும் ஒரு டிரைவிங் ஸ்கூலின் மூலமாகத் தான் ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன்.

தொலைந்த டிரைவிங் லைசென்ஸின் எண் கூட என்னிடம் இல்லை. நான் படித்த காலேஜில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் லைசென்ஸ் எடுத்திருந்ததால் அந்தக் காலேஜில் உள்ள ஹெச்.ஓ.டியின் சிபாரிசில் சென்று பழைய ரெக்கார்டுகளைப் புரட்டி, ஒரு வழியாக என்னுடைய லைசென்ஸ் எண்ணை வாங்கிக் கொண்டேன். இந்த லைசென்ஸை எண்ணை கொண்டு சென்று போலிஸில் புகார் கொடுத்து, அதன் காப்பியை வாங்கிக் கொள்ள வேண்டும். எந்தப் போலிஸ் அலுவலகத்திலும் நீங்கள் கொடுக்கும் புகாரை உடனடியாக வாங்கிவிட மாட்டார்கள். முதலில் உங்களின் பிரச்சனையைப் போலீசார் காதுக்கொடுத்துக் கேட்பதற்கே, நீங்கள் கிடா வெட்ட வேண்டும். இல்லையென்றால் அரசியல் புள்ளிகள் அல்லது போலிஸ் அலிவலகத்தில் வேலையில் இருப்பவர்கள் என்று எவராவது உங்களுக்குச் சிபாரிசு செய்யவேண்டும்.

எனது குடும்பத்திலிருந்து இரண்டுபேர் போலிஸ் வேலையில் இருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு ஸ்டேசன்களில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமிருந்தும் நான் இரண்டு புகார்களைப் பதிவு செய்து அவற்றின் காப்பியை, டிரைவிங் ஸ்கூலில் வாங்கி வந்துக்கொடுத்ததோடு சரி. இரண்டு முறையும் ஆறு மாதத்திற்கு மேல் டிரைவிங் ஸ்கூல் பக்கம் என்னால் தலையைக் காட்டவில்லை. ஒரு புகார் காப்பியானது ஆறு மாதம் வரை தான் செல்லுபடியாகும். அதற்குமேல் என்றால் இன்னொரு புதிய காப்பியை போலிஸ் ஸ்டேசனில் சென்று வாங்க வேண்டும். நான் இரண்டுபேரிடமும் வாங்கிய, புகார் காப்பியை இப்படித் தான் வீணாக்கியிருந்தேன். என்ன தான் உறவினர்கள் என்றாலும், நம்முடைய சோம்பலுக்குத் திரும்பவும் அவர்களைத் தொந்தரவு செய்ய மனம் ஒப்பவில்லை. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் மற்றொரு யோசனையைக் கொடுத்தார். பழையதை தேடுவதற்குப் பதிலாகப் புதிதாக அப்ளை செய்து வாங்கிவிடலாம். இந்தமுறை ஒரு நாள் வந்து பழகுநர் உரிமம்(Learner's license) போட்டுவிட்டு போங்க, அடுத்தமுறை வரும் போது டிரைவிங் லைசென்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்றார். எனக்கும் அது சிறப்பானதாகவே தோன்றியது. கடந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது பழகுநர் உரிமம் போட்டுவிட்டு வந்திருந்தேன்.

இந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் படலம் ஆரம்பமாகியது. நான் சென்றிருந்த டிரைவிங் ஸ்கூலிருந்து வாரத்தின் வெள்ளிக்கிழமைதோறும் மார்த்தாண்டம் பக்கத்திலிருக்கும் ஆர்.டி.ஓ ஆபிஸுக்கு டெஸ்டுக்கு செல்லுவார்கள். நான் ஊருக்கு வாரத்தின் செவ்வாய்கிழமையே வந்துவிட்டேன். ஊருக்கு சீக்கிரமாக வந்தற்குக் காரணம் உண்டு, காலேஜில் படிக்கும் போது டிரைவிங் லைசென்ஸுக்காக ஜீப்பை ஓட்டுவதற்குக் கற்று கொண்டதோடு சரி. அதன்பிறகு எந்த வண்டியையும் நான் ஓட்டியது இல்லை. அதனால் இரண்டு நாட்களாவது டிரைவிங் ஸ்கூலில் இருக்கும் வண்டியை ஓட்டி பழகி கொள்ளலாம் என்று சீக்கிரமாக வந்திருந்தேன். புதன் மற்றும் வியாழன் இரண்டு நாட்கள் ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் ஓட்டுவதற்குக் கொடுத்தார். என்னிடம் கொடுத்தார் என்று சொல்லுவதைவிட அவரே ஓட்டினார் என்று தான் சொல்லவேண்டும். இரண்டு நாட்களில் என்னால் எல்லாவற்றையும் சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும் நான்றாகத் தெரிந்தது. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் கொடுத்த தைரியம் மற்றும் ஹைதிராபாத்திற்கு மீண்டும் ஒரு வாரத்தில் திரும்ப வேண்டும் என்ற காரணமும் இருந்ததால் வெள்ளிக்கிழமை டெஸ்டுக்கு நேரடியாக என்னுடையை டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன்.

மார்த்தாண்டம் செல்லும் மெயின்சாலையிலிருந்து இடதுபக்க‌மாகச் செல்லும் ஒரு கிளைச் சாலையில் தான் ஆர்.டி.ஓ ஆபிஸ் இருக்கின்றது. அந்தக் கிளைச்சாலையில் இரண்டு பக்கங்களிலும் புதிதாக வாங்கி ரெஜிஸ்டர் பண்ண வேண்டிய‌ டூவீலரும், எப்சிக்காகக் காத்திருக்கும் வாகனங்களும் தான் அடைந்திருந்தது. நான் வருவதற்கு முன்பாகவே டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் வந்திருந்தார். அவருடன் இன்னும் சில பேரும் வந்திருந்தார்கள். என்னிடம் அவர், நீங்கள் டூவீலரில் எட்டுப்போட்டுப் பார்க்க வேண்டுமானால் சென்று பழகிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் சாதரணமாக, டூவீலர் ஓட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை !என்றும் காரைத் தான் எப்படி ஓட்டிக்காட்டப் போகிறேனோ! என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே பயப்படாம ஓட்டுங்க! என்றார்.

டூவீலர் லைசென்ஸ் எடுக்க வந்திருந்த பெண்கள் பலரும் சாலையில் வெள்ளை நிறப் பெயின்டில் வரையப்பட்டிருந்த எட்டில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவருக்கும் சரியாக ஓட்டுவதற்குத் தெரியவில்லை. பெண்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் இடைவெளியில், சில பையன்களும் வண்டியில் எட்டைச் சுற்றி வந்தார்கள். அவர்களும் வரைய பட்டிருந்த எட்டில் திரும்பும் இடங்களில் காலை ஊன்றினார்கள். எல்லோரும் ஓட்டுவதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். சிறிது நேரத்தில் கையில் ஒரு பெரிய பேப்பர் கட்டுகளுடன் ஆர்.டி.ஓ வந்தார். யாரெல்லாம் டூவீலர் லைசென்ஸ் எடுக்க வேண்டுமோ, அவர்கள் எல்லாம் வண்டியை வரிசையாக நிறுத்திவிட்டு இப்படி ஓரமாக வாருங்கள் என்று அழைத்தார்.

கையில் வைத்திருந்த பேப்பர் கட்டுகளை எங்களை அழைத்துவந்திருந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்களிடம் கொடுத்து ஒவ்வொருவரின் பெயரையும் வாசித்துக் கொடுக்கச் சொன்னார். என்னுடைய பேப்பரும் எனது கைக்கு வந்தது. ஆர்.டி.ஓ அலுவலகம் இருக்கும் சாலையின் இரு பக்கமும் ரப்பர் மரங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. கும்பலாக நின்ற எங்கள் அனைவரையும் அந்த ரப்பர் மரங்களுக்குள் வரிசையாக நிற்கவைத்து ஆர்.டி.ஓ சாலையின் மேல் நின்றுகொண்டு எங்களுக்கு வகுப்பு எடுக்கத் தொடங்கிவிட்டார். முதலில் சொன்ன வார்த்தை இதுதான். இந்த அலுவலகத்தில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இருந்தோம், ஒருவர் பணி மாற்றலாகி சென்றுவிட்டார், அவருக்குப் பதிலாகப் புதிதாக எவரும் இதுவரை வரவில்லை. நான் ஒருவன் மட்டுமே, இரண்டுபேரின் வேலையைச் சேர்த்துப் பார்க்கிறேன். ஒருவருக்கு முப்பதுபேர் என்ற வீதம் தினமும் அறுபது லைசென்ஸ் கொடுப்போம். இப்போது நான் ஒருவன் மட்டுமே ஐம்பதிலிருந்து, அறுபது லைசென்ஸை பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே சரியாக ஓட்டவில்லையென்றால் எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் பெயில் பண்ணிவிடுவேன், ஆனால் சரியாக ஓட்டினால் எல்லோருக்கும் பாஸ் போட்டு லைசென்ஸ் கொடுத்துவிடுவேன் என்றார்.

லைசென்ஸ் எடுக்க வருகிறீர்கள் என்றால் சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சிலவற்றைப் பட்டியலிட்டார். அவைகள் ஒன்றும் நமக்குப் புதியவை இல்லை. இருந்தாலும் அவருடைய வாயால் கேட்கும் போது சுவரஸ்யமாகவே இருந்தது.

#) அடுத்தவன் சைடு ஸ்டேண்டை எடுக்காமல் வண்டியில் சென்று கொண்டிருப்பான், அதைச் சொல்லுவதற்காக அவன் பின்னால் வண்டியில் சென்றவன் விபத்தில் அடிபடுவான். முதலில் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும், பின்னர் அடுத்தவனுக்கு உதவவேண்டும். 

#) டூவீலரில் செல்லும் போது வேகத்தின் அளவைக் குறைத்தாலே, பாதி விபத்துக்களைக் குறைக்க முடியும். 

#) நமது நாட்டின் சாலைகளுக்கு ஏற்ப டூவீலர்கள் தயரிக்கப்படவில்லை, சிசி அதிகமாக இருக்கும் வண்டிகளை வாங்குவதில் கல்லூரி மாணவர்களின் ஆர்வம் காட்டுகிறார்கள். 

#) மொபைல் போனில் பேசும் எண்களின் ஹிஸ்டரியை அழிக்கமுடியாத படி எதாவது ஒரு தம்பி, புதிய‌ சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்தால் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எவனும் தனது மனைவிக்குத் தெரியாமல் அடுத்தவன் மனைவிக்குப் போன் பண்ண மாட்டான், வீட்டிற்குத் தெரியாமல் பிள்ளைகள் காதலனுக்கோ, காதலிக்கோ போன் பேச மாட்டார்கள். இந்த மறைமுகப் பேச்சுகள் அனைத்தும் வாகனங்களை ஓட்டும் போது தான் செய்கிறார்கள் அதனால் தான் பல விபத்துகள் நடக்கின்றது என்றார்.

மேலும் சில புள்ளிவிபரங்களையும் சொன்னார்.


கடந்த மாதம் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17. மொத்தமாக ஆறுபேர், ஏழுபேர் என்று விபத்துகளில் உயிரிழ‌ப்பவர்களின் செய்திகள் செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இதுபோல் சின்ன சின்ன டூவீலர் விபத்துக்களில் உயிரிழக்கும் ஒன்று, இரண்டுபேர்களின் செய்திகள் பெட்டி செய்தியாக முடங்கிவிடுகிறது. அதனால் தான் நமது மாவட்டத்தில் நடக்கும் விபத்து செய்திகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்ற உண்மையை விளக்கினார்.

இப்போது எதற்காக எட்டு போட வேண்டும்? ஓர் ஏழு போடலாம் அல்லது ஆறு போட்டுப் பார்க்கலாம், ஏன்! எட்டு மட்டும் தான் போட்டுக் கண்பிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள்? என்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். நானும் எனது பங்கிற்கு ஒன்றை சொல்லிவைத்தேன். இந்த எட்டில் எளிதாக ஓட்டி பழகினால், நமது கிராமங்களில் உள்ள குறுகலான‌ வளைவு நெளிவான சாலைகளில் எவ்விதப் பயமும் இல்லாமல் ஓட்டலாம் என்றேன். வெளிநாடுகளில் எல்லாம் நேரான பெரிய சாலைகள் தானே இருக்கிறது அங்கும் ஏன்! இந்த எட்டுப் போடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள் என்றார். நான் அவரைப் பார்த்து வழிவதை தவிர வேறு பதில் என்னிடமில்லை.



அரசின் எந்த ஒரு துறையாக இருந்தாலும், அவைகளால் நடத்தப்படும் வகுப்புகளுக்குத் தேர்வு என்பது ஒன்று வைக்கப்படுகிறது. அவைகளுக்கு ஒரு தகுதி மதிப்பெண் வைக்கப்படுகிறது. அதைப்போல் தான் போக்குவரத்துத் துறையால் நடத்தப்படும் வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கும் தேர்வுக்கு எட்டுப் போட்டு கண்பிக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்து உள்ளது. இந்தமுறையானது பல உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. நாமும் அந்த முறையைத் தான் பின்பற்றுகிறோம்.

ஒருவர் டூவீலரை சரியாக ஓட்ட‌ வேண்டுமானால் பேலன்ஸ் பண்ணுவதற்குத் தெரியவேண்டும், காலை எங்கும் ஊன்றாமல், கைகளால் சரியாக‌ சிக்னல்களைக் கண்பித்து ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முழுமையான எட்டில் நான்கு சிக்னல்கள் இருக்கின்றது. ஆனால் இங்கு வரைய பட்டிருக்கும் எட்டில் இரண்டு சிக்னல்கள் தான் இருக்கிறது, குறைந்தபட்சம் காலை ஊன்றாமல் இரண்டு சிக்னல்களை எவரெல்லாம் சரியாகச் செய்கிறீர்களோ, அவர்களுக்கு நான் லைசென்ஸ் கொடுப்பேன், இல்லாதவர்களுக்குத் "பெயில்" என்று போட்டு வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். ஆண்கள் எவரும் சிக்னல் காண்பிக்கப் போவது இல்லை, அதில் தான் அதிகமான பேர்கள் தவறு செய்வார்கள், முக்கியமா! பெண்களுக்குத் தான்! என்று பெண்கள் பக்கம் திரும்பி, ஒருத்தரும் பாஸ் ஆகப் போறது இல்ல, எல்லாரும் இந்த ஓடைக்குள் தான் வண்டியை கொண்டு விடுவத‌ற்கு போகிறீர்கள்! காலை ஊன்றாமல் ஓட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு அடுத்த வாரம் வேண்டுமானாலும் வாருங்கள்! என்றார்.

அவரின் இந்த மிரட்டலே நான் உட்பட, பாதிபேருக்குப் பீதியைக் கிளப்பியிருந்தது!

எப்படி இந்த எட்டில் டூவீலர் ஓட்ட வேண்டும், சிக்னல் செய்யவேண்டும் என்பதை, உங்களை அழைத்துவந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்று அவர் பின்னால் நின்றவர்களைத் திரும்பிப் பார்த்தார். ஒருவரையும் காணவில்லை. யோய் எங்கைய்யா ஓடிப் போனீங்க?.. வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டுமென்றால் எவரும் வ‌ராதீங்க! அப்புறம் "பெயில்" என்று போட்டால் மட்டும் என்னிடம் வந்து நில்லுங்க!.. என்று கோபமாகத் திட்டினார். எங்களுடன் கூட்டத்தில் கலந்து நின்ற சிலருடைய பெயரை சொல்லி அழைத்தார். அவர்களை டூவீலர் ஓட்டி காட்டுவதற்குச் சொன்னார்.

டிரைவிங் ஸ்கூல் வைத்திருந்த பெண் ஒருவரையும் ஓட்டி காண்பிக்கச் சொன்னார். அவர் சரியாக ஓட்டினார். ஆனால் சிக்னல் செய்யவில்லை. அவரைப்பார்த்து ஆர்.டி.ஓ பெண்களுக்குப் பேலன்ஸ் பண்ணும் திறன் குறைவு, அதனால் அவர்கள் சிக்னல் செய்யவிட்டால் "மன்னிச்சு" என்றார்.

எவருக்காவது டவுட் இருக்கா? என்றார். இன்னும் ஒருமுறை வேண்டுமானாலும் அவர்களை ஓட்டச் சொல்லி காண்பிக்கிறேன், இத‌ற்கு அப்புறமும் சிக்னல் செய்யாமல், காலை தான் ஊன்றுவேன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ரெம்ப ஸ்டிக்ட் ஆபிஸர், இப்போதே தெரிந்துவிட்டது, காரை ஓட்டும் போது எனக்கு கிடைக்கப் போகும் ரிசல்ட். முக்கால் மணிநேரத்திற்கும் மேலாக வகுப்பு எடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எவரெல்லாம் காலையிலேயே வந்து அந்த எட்டு வரையப்பட்டிருந்த இடத்தில் ஒருமுறை ஓட்டி பார்த்து கொண்டனரோ, அவரெல்லாம் காலை ஊன்றாமலும், சிக்னல் செய்தும் பிழைத்துக்கொண்டார்கள். என்னைபோல் டூவீலர் தானே! அதெல்லாம் நல்லாவே ஓட்டிடுவேன் என்று ஜம்பம் அடித்துக்கொண்டு, வேடிக்கைப் பார்த்த அனைவரும் "பெயில்" ஆக்கப்பட்டார்கள். நானும் "பெயில்" என்பதை எவ்வளவு நாசூக்காக‌ எழுத வேண்டியிருக்கிறது. பெண்கள்! சொல்லவே வேண்டாம்! ஒருவர் கூடத் தேறவில்லை. ஒன்றிரன்டு பெண்கள் வண்டியிலிருந்து, கீழேயும் விழுந்தனர்.

அப்புறம் என்ன அடுத்த வாரம் முதல் ஆளாகப் போய் அந்த எட்டின் மீது ஓட்டிப் பார்ப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய‌வில்லையே!!

.

Friday, June 6, 2014

கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு!

சமீபத்தில் ஹைதிராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வயிற்றுவலி என்று சென்றிருந்தேன். எந்தப் புண்ணியவான் காலேஜில், எவ்வளவு செலவு செய்து டாக்டருக்குப் படித்தார் என்று தெரியவில்லை, வலியோடு படுக்க வைத்து ஸ்கேன் செய்துவிட்டு 8 MM கல் சிறுநீரகத்தில் இருப்பதாகச் சொல்லி உடனடியாக லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லை எடுத்தாக‌ வேண்டும், ரெம்பச் சீரியஸ் என்று கத்தியை இடுப்புக்குக் கீழேயே வைத்திருந்தார். அவர் கையிலிருந்த கத்தியை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. நானும் மனைவியும் மட்டும் தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வீட்டில் நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தே மனைவி மிரண்டு போயிருந்தார். நானும் வலிக்காதது போல எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.

எம்ர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று ஹார்ட் பீட் ரெக்கார்டரை மாட்டிவிட்டு, கையில் பச்சை நரம்பைத் தேடி ஊசியைச் சொருகிய போதே, மனைவின் முகம் வெளறி வியர்வையை ஊற்றத் துவங்கியது. இரண்டு கையிலும், மருந்து செலுத்திய இரண்டு ஊசியைப் போட்டார்கள். அடிவயிற்றில் கனன்று கொண்டிருந்த கனல் நீர்க்கத் தொடங்கியது, சிறுது நேரத்தில் நார்மல் ஆகியிருந்தேன். அருகில் வந்த டாக்டர் உடனே அட்மிட் ஆகிடுங்க, இன்று இரவே ஆபரேசன் பண்ணிவிடலாம் என்றார். வலி அதிகமாக‌ இருந்த நேரம் டாக்டர் வந்து இப்படிச் சொல்லியிருந்தால், நானே அவரிடம் கத்தியை எடுத்துக் கொடுத்து வயிற்றைக் கிழித்து எடுத்துவிடுங்கள் என்று பல்லை இறுக கடித்திருப்பேன். ஆனால் வலியானது அட‌ங்கியிருந்ததால் ஆபிஸ் நண்பர்களுக்குப் போன் செய்தேன். மனைவியும் வீட்டிற்குப் போன் செய்திருந்தார். வீட்டில் உள்ளவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம், வலியைக் குறைத்துவிட்டு மாத்திரை வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துவிடுங்கள். இங்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள்.

திரும்பவும் மனைவியும் நானும் டாக்டரிடம் சென்று பேசினோம், மாத்திரையில் கரைக்க முடியாதா? என்று கேட்டோம். அதற்கு அவர் 8 MM கல் என்பது பெரிய அளவு, அதை மருந்து மற்றும் மாத்திரையால் கரைப்பது முடியாத காரியம் என்றும், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களின் சிறுநீரகத்திற்குத் தான் பிரச்சனை என்று கொளுத்திப்போட்டார். இருந்தாலும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, ஒரே நாள் வலியில் இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? என்பது தான். டாக்டர் என்னைப் பயமுறுத்தியது போதாது என்று நர்சு மற்றும் உதவி டாக்டர் இருவரும் சேர்ந்து, சின்ன ஆபரேசன் தான் சார்!. ஒன்றும் பிரச்சனையில்லை, முப்பதில் இருந்து முப்பந்தைந்தாயிரம் தான் செலவு ஆகும், இரண்டு நாட்கள் தான் பெட்டில் இருக்க்க வேண்டும். இப்போது நீங்கள் சரி! என்று சொன்னால் மாலையில் ஆபரேசன் செய்துவிடுவார்கள். நீங்கள் நாளைக்கே வீட்டிற்குச் சென்றுவிடலாம்! என்று அவர்கள் அந்த மருத்துவமனையில் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக‌ என்னிடம் பேசினார்கள்.

சிறிது நேரத்தில் ஆபிஸிலிருந்து நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த நண்பர், சார்! 8 MM கல்லுக்கு எல்லாம் லேப்ரோஸ்கோப்பிக் ஆப‌ரேசன் பண்ண வேண்டாம். எனது மாமியாருக்கும் இதே போல் தான் இருந்தது, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருந்தில் கரைத்துவிட்டார்கள் என்றும் அதனால் நீங்கள் இங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம் என்றும், அப்படியே ஆபரேசன் செய்ய வேண்டுமானால் ஊரில் போய்ச் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கும், மனைவிக்கும் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தார்.

இவர்களிடம் சென்று ஆபரேசன் செய்ய வேண்டாம்! என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று நினைத்துகொண்டு, டாக்டர்! நாங்கள் இருவரும் இங்குத் தனியாக இருக்கிறோம், ஆபரேசன் செய்தால் என்னைக் கவனித்துக்கொள்ள மனைவிக்குச் சிரமமாக இருக்கும், அதனால் ஊரில் சென்று செய்து கொள்கிறோம் என்று எதார்த்தத்தைச் சுட்டிப் பேசினேன். அவரும் சரியென்று தலையை ஆட்டி, எவ்வளவு சீக்கிரம் பண்ணுகிறீர்களே, அவ்வளவு நல்லது! என்று பக்கத்தில் இருந்த நர்சை அழைத்து, எங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார்.

டாக்டர் அறையை விட்டு வெளியே வந்த எங்களிடம், நர்ஸ், சார்! நாங்க, எதனால் நீங்கள் ஆபரேசன் பண்ணவில்லை? என்பதற்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் அதில் பணம் இல்லை என்று எழுதியிருக்கிறேன். ஒரு கையெழுத்துப் போட்டுவிடுங்கள் என்றார். அவரைப் பார்த்துச் சிரிக்கத் தான் தோன்றியது. டிஸ்சார்ஜ் ரிப்போட்டில் பெரிதாக நாங்கள் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறோம், நாங்கள் ஆபரேசன் செய்வதற்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்றும் எழுதிக் கையெழுத்து வாங்கினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குத் திரும்பவும் அடிவயிறு வலிப்பது போன்ற பிரம்மை வர துவங்கியது.

ஒரு வழியாக மருத்துவமனையில் உள்ளவர்களைச் சமாளித்து வீட்டிற்கு வந்தவுடன் மஸ்கட்டில் இருக்கும் ஜெனரல் மேனேஜருக்குப் போனில் அழைத்து விசயத்தைக் கூறினேன். அவர் ஹைதிராபாத்தில் வேறு மருத்துவமனைக்குச் சென்று கன்சல்ட் பண்ண வேண்டுமானாலும் நான் உதவி செய்கிறேன் அல்லது ஊருக்கு போக வேண்டுமானாலும் சென்று வா. முதலில் உடம்பை கவனித்துக் கொள், வேலைகள் எல்லாம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றார். வீட்டில் உள்ளவர்களும் ஊருக்கு வந்துவிடு என்று அழைத்தனர். உடனடியாகத் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் இரண்டு டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்துவிட்டேன். அவசர அவசரமாகக் கிளம்பி ஊருக்கு வந்தாயிற்று. மறுநாள் காலையில் உறவினர் ஒருவரின் மூலமாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிம்ஸ் மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி அங்குச் சென்று யூராலஜி டாக்டருக்காகக் காத்திருந்தோம்.

இங்குக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிச் சொல்லுவது அவசியமாகிறது. ஒருமுறை அப்பாவிற்குத் திடிரெனக் கால் மூட்டுவலி வந்தது, ந‌டக்கும் போது ஒரு பக்கமாகத் தாங்கலாகத் தான் ந‌டந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைகளில் சென்று காட்டியபோது, ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டுக் கால் மூட்டுகள் இரண்டும் அதிகமாகத் தேய்ந்து உள்ளது. நீங்கள் உடனடியாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பயம் அதிகமாக இருந்தது. உடனடியாக உறவினர் ஒருவரின் மூலம் இந்தக் கிம்ஸ் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்றிருந்தோம், சரியாக ஒரு மாதம் மாத்திரைகள் கொடுத்து, காலுக்குச் சில உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு டாக்டர் பரிந்துரைத்திருந்தார். சரியாக ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைத்தது. இப்போது அப்பா முழுமையாகக் குணமாகிவிட்டார். நான் இந்தக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை தேவையில்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைப்பது இல்லை. மேலும் பணமும் அதிகமாகப் பிடுங்குவது இல்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூட்டம் மட்டும் அதிகமாக இருக்கும். அதனால் இங்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் முழுமையாக‌ நீங்கள் செலவு செய்ய வேண்டியதுவரும்.



எனது டோக்கன் எண் டீவியில் வந்தவுடன் டாக்டரை சென்று சந்தித்தோம். ஹைதிராபாத்தில் இருந்து கொண்டு சென்ற ஸ்கேன் மற்றும் ரிப்போட்டுகள் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தவர், இப்போது வலியிருக்கிறதா? என்று மட்டும் கேட்டார், நான் இப்போது வலியில்லை என்றேன். பின்னர் இரத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்‍-ரே ஆகியவற்றை எழுதி, இவைகளைப் பண்ணிவிட்டு ரிப்போட்டுடன் வாருங்கள் என்றார். இவைகளை முடித்து ரிப்போர்ட் கிடைப்பதற்கு மதியம் ஆகியிருந்தது. மதியதிற்கு மேல் சென்று டாக்டரை பார்த்தோம். எல்லா ரிப்போட்டுகளையும் பார்த்துவிட்டு "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்றார். ஏம்ப்பா! மெத்த படித்த, கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படும் டாக்டர்களே! எல்லா நோயாளியின் மனமும் இந்த ஒற்றைச் சொல்லுக்குத் தான் ஏங்குகிறது. இந்த உண்மை என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும். காசு, பணம், துட்டு, மணி.. என்று மட்டும் யோசிப்பதால் இந்த வார்த்தைகள் உங்கள் வாயினிலிருந்து வருவது இல்லை. "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்ற வார்த்தையின் பலமே என்னுடைய சிறுநீரகக் கல்லை கரைந்திருந்தது.

ஹைதிராபாத் மருத்துவமனையில் கொடுத்திருந்த எந்த மருந்தையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி, முப்பது நாட்களுக்கு இவர் புதிதாக‌ மாத்திரையும் மருந்தும் கொடுத்துவிட்டு இவைகள் முடிந்தவுடன் திரும்பவும் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார். இந்த கல் பிரச்சனை மூன்று நாளில் முழிபிதுங்க வைத்துவிட்டது. விமான டிக்கட் செலவு என்று பணத்தையும், அறுவைச் சிகிச்சை என்று மனத்தையும் காலி செய்திருந்தது.

சிறுவயதில் அம்மா சாப்பிடுவதற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களிடம் பசியில்லை என்று சொன்னால் அவர்களின் பதில் இதுவாகத் தான் இருக்கும் "கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு". இன்றைக்குச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் ஆயில் இருக்கா? கொழுப்பு இருக்கா? என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும் கடைசியில் கல்லாகத் தான் தேங்குகிறது.

இன்று எதைச் சாப்பிடுகிறோம்? எப்படிச் சாப்பிடுகிறோம்? கண்டிப்பாகச் சிந்திகக வேண்டியிருக்கிற‌து.

.

Friday, May 30, 2014

டிரைவிங் லைசென்ஸ்_ஆணியே புடுங்க வேண்டாம்!!!

நான் படித்த டிப்ளமோ கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படித்து முடிக்கும் மூன்று வருடத்திற்குள், கல்லூரியில் இருக்கும் டிரைவிங் ஸ்கூலில் சேர வைத்துச் சிறப்புப் பயிற்சியும் கொடுத்து இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கான லைசைன்ஸை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். நானும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுப் படிக்கும் போதே டூவீலர் மற்றும் கார் இரண்டிற்கும் சேர்த்து லைசென்ஸ் வாங்கி வைத்து விட்டேன்.

வாங்கிய லைசென்ஸை பத்திரமாக எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்க்கும் போது கம்பெனி வேலையாக டூவீலர் எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றுவேன். ஒருமுறை கூட டிராபிக் போலீஸில் மாட்டியது இல்லை. நான் அம்பத்தூரில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் போது, பெரும்பாலும் டூவீலரை உபயோகிப்பது மூன்று வழித்தடங்களில் தான். ஒன்று பழைய மெசின் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டூல்கள் வாங்குவதற்காக‌ மோர் மார்கெட் மற்றும் எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்கும் வேளச்சேரி ரானே மெட்ராஸ் மற்றும் எண்ணூர் அசோக் லைலன்ட்.

நான் சென்னையில் டூவீலர் ஓட்டுவது, எனது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. நான் டூவீலர் ஓட்டிவிடக் கூடாது என்பதால் தான் என்னிடம் லைசென்ஸை தராமல் அம்மா வாங்கிப் பாதுக்காப்பாக வைத்திருந்தார். அவர் என்னிடம் லைசென்ஸ் கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனக்குச் சரியாக டூவீலர் ஓட்டுவதற்குத் தெரியாது என்பது அவரது எண்ணம். அவருடைய எண்ணதிற்குக் காரணம் இதுதான். முன்பெல்லாம் சைக்கிள் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் வாடைகைக்கு எடுத்து, ஓட்டி கற்றுக் கொள்ளலாம். கால் வண்டி, அரை வண்டி மற்றும் முழு வண்டி என்று பிரித்து வைத்து ஒரு மணி நேரத்திற்கு 25 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை வாடகை வாங்குவார்கள். இந்த வண்டிகளில் நமக்கு ஏற்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வதற்குப் பெரும்பாடு பட வேண்டும். இப்போது எல்லா வீடுகளிலும் ஆளுக்கு ஒரு டூவீலர் என்று இருக்கிறது, ஆனால் அப்போது ஊரில் அரசு பணியில் இருப்பவர்களிடமோ அல்லது புதிதாக வாத்தியார் வேலைக்குச் சேர்ந்தவர்களிடமோ மட்டும் தான் டூவீலரை பார்க்க முடியும். அவர்களும் அந்த வண்டியில் தனது பொண்டாட்டியைக் கூடப் பின்னால் ஏற்றுவதற்குத் தயங்குவார்கள். காரணம் வண்டியின் டயர் தேய்ந்து போகும் என்று, அவர்களிடம் சென்று ஓட்டி கற்றுக்கொள்ள வண்டி கேட்டால் என்ன சொல்லுவார்கள்?.

எனக்கும் அண்ணனுக்கும் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள‌ வேண்டும் என்ற ஆசை வந்தவுடன் அப்பா ஒரு பழைய ராஜூத் வண்டி(Rajdoot Bike) வாங்கிக் கொடுத்தார்கள். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஊரையே அலற வைக்கும். நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். முழு நேரமும் அண்ணன் தான் அந்த வண்டியை ஓட்டுவான். அந்த வண்டியை தெருவில் ஓட்டி சென்றாலே அனைவரும் ஒதுங்கி வழிவிடுவார்கள். அந்தளவிற்கு ஒலியை எழுப்பும். அப்பா எப்போதாவது என‌க்கு கற்றுக் கொடுக்கச் சொன்னால் மட்டுமே என்னிடம் வண்டியை அண்ணன் கொடுப்பான், இல்லையென்றால் என்னிடம் தர மாட்டன். எனக்கும் அந்த வண்டியை ஓட்டுவதற்குப் பெரியளவில் ஆர்வம் இல்லை. ஒரு வருடத்தில் அந்த வண்டியையும் அப்பா விற்றுவிட்டார்கள். அந்த வண்டியில் ஓட்டிய பழக்கத்தில் தான் காலேஜில் நண்பர்களின் உதவியுடன் லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தேன். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அம்மாவின் தூரத்து உறவுமுறையில்(எனக்கு மாமா முறை வரும்) ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வண்டியில் வந்திருந்தார். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம். ரெம்ப நேரம் வீட்டில் அமர்ந்து எங்களுடன் பேசிவிட்டு கிளம்புவதற்காக வெளியில் வந்தார். அம்மாவும் நானும் கூடவே வெளியில் வந்தோம், திடிரெனப் புது வண்டியை பார்த்தவுடன் எனக்கு ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மாமாவிடம் கேட்டவுடன் அவரும் சாவியைக் கொடுத்துவிட்டார்.

சாவியைக் கையில் வாங்கிய போதே, அம்மா என்னிடம் ஓட்ட‌ வேண்டாம் என்று சொன்னார். பக்கத்தில் நின்ற மாமா, ஒண்ணுமில்லை அக்கா! ஓட்டிப் பழகட்டும் என்றார். எனது வீட்டின் முன்பு வண்டி ஓட்டுவதற்கு என்று பெரிய அளவில் இடம் கிடையாது, சிறிய அளவில் தான் இடம் உண்டு. எங்கள் வீடு சற்று மேடான பகுதியில் இருக்கும், வீட்டின் முன்பு எங்கள் எல்லையின் முடிவில் நாங்கள் செங்கலால் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தோம். நான் வண்டியில் ஏறி காலால் ஸ்டாண்டை எடுத்துவிட்டு முன்னால் சாவியைப் போட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். இதுவரையிலும் எல்லாம் சரியாகத் தான் செய்தேன். யாருக்கும் எந்தவிதமான‌ சேதாரமும் இல்லை. பர்ஸ்ட் கியரை மெதுவாக‌ போட்டு ஆக்ஸிலேட்டரை நான் கொடுத்தது தான் தாமதம் வண்டி எம்பிகுதித்துக் கிளம்பியது. நான் நிதானத்தை இழந்திருந்தேன்.

நான் எனது வீட்டிலிருந்த ராஜூத் வண்டியில் ஆக்ஸிலேட்டரைக் கொடுப்பது போல் எடுத்தவுடன் பாதிக்கு மேல் முறுக்கிவிட்டேன். அந்தப் பழைய ராஜூத் வண்டியில் நீங்கள் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரை முக்கால் பாகம் முறுக்கினால் தான் வண்டி லேசாக மூவ் ஆகும். அதே நினைப்பில், இந்தப் புது ஸ்ப்ளெண்டர் பைக்கிலும் ஆக்ஸிலேட்டரை முறுக்கிவிட்டேன். வண்டி எம்பிகுதித்தவுடனேயே அம்மா அலற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் அலறலும், மாமாவின் பிரேக்கை பிடி!! பிரேக்கை பிடி!! என்ற சத்த‌மும் என்னைப் பதற்றபட வைத்திருந்தது.

பதட்டத்தில் கை என்னையும் அறியாமல் ஆக்ஸிலேட்டரை தான் முறுக்கியது. சிறிதுதூரம் செல்வதற்குள் சுதாரித்துக்கொண்டு பிரேக்கில் காலை வைத்து அழுத்த துவங்கினேன், அதற்குள் வீட்டின் முன்னால் இருந்த செங்கள் சுவரின் மீது மோதி விட்டேன் அந்தப் பதட்டத்தில் வண்டியின் பிரேக், கிளெச், ஆக்ஸிலேட்டர் என்று மொத்ததின் மீதும் இருந்த‌ கை, கால்களை எடுத்திருந்தேன், வண்டியானது காம்பவுண்ட் சுவரை மட்டும் இடித்துத் தள்ளி ஆப் ஆகி நின்றது. வண்டி இன்னும் ஒரு செங்கல் தூரம் நகர்ந்திருந்தால், வண்டியோடு சேர்ந்து நானும் பள்ளத்தில் விழுந்திருப்பேன். எனது வீடு மேட்டில் இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். எங்கள் எல்லையின் காம்பவுண்ட் சுவருக்குக் கீழே ஓர் ஆள் உயரம் பள்ளமாக இருக்கும். என்னுடைய இந்தச் செய்கையை நேரில் பார்த்த பிறகும் எனது அம்மா என்னிடம் லைசென்ஸை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?.

அன்றிலிருந்து நான் வண்டியைப் பற்றியோ, லைசென்ஸைப் பற்றியோ பேசினால், நீ ஆணியே புடுங்க வேண்டாம்!! என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிடுவார்கள். அத்தோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊரில் எவரும் வண்டி ஓட்டிப் பழகுவதைப் பற்றிச் சொன்னால் போதும், அம்மா என்னோட கதையைக் கதாகாலட்சேபமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கல்யாணம் முடிந்த புதிதில் என்னுடைய‌ மனைவியிடமும் இந்தக் கதையைச் சொல்ல மறக்கவில்லை. அந்தளவிற்கு நான் அவர்களை மிரட்டியிருந்தேன். இதனால் தான் என்னுடைய‌ சென்னை வாசம் லைசென்ஸ் இல்லாமல் கழிந்தது.

சென்னையில் இருக்கும் போது ஆபிஸ் வண்டியை எடுத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வெளியில் செல்வேன். என்னுடைய ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் நான் வண்டி ஓட்டியபோது எந்தவொரு டிராபிக் போலீஸிலும் மாட்டியது இல்லை. ஒருமுறை அம்பத்தூர் கம்பெனியிலிருந்து டூல் வாங்குவதற்காக மோர் மார்கெட் செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய டூல்களை என் ஒருவனால் கொண்டுவர முடியாது என்பதால் கூட ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எல்லாம் வாங்கிமுடித்து வரும் வழியில், அண்ணா நான் வண்டியை ஓட்டுகிறேன் என்று என்னுடன் வந்த பையன் வண்டியை வாங்கினான். வண்டியில் ஏறிய அடுத்தச் சிக்னலிலேயே போலீஸின் முன்பு நிப்பாட்டி பைன் கட்ட வைத்துவிட்டான்.



நான் டூவீலர் ஒட்டும் போது லைசென்ஸ் இல்லை என்பதற்காகச் சிக்னலில் போலீஸை கண்டு மிரள்வது கிடையாது, அவருக்குப் பயந்து ஓரமாகக் கொண்டும் வண்டியை நிப்பாட்டுவது இல்லை. துணிச்சலாகச் சிக்னலில் டிராபிக் போலிஸின் முன்னால் தான் வண்டியை நிப்பாட்டுவேன். ஏதாவது ரோட்டில் போலீஸ் மடக்குகிறார்கள் என்று ஒதுங்குவது இல்லை. என்னுடைய போக்கில் நான் சென்றுவிடுவேன். அதுவே எனக்குப் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. டிராபிக் போலீஸை கண்டு மிரண்டாலே, நீங்கள் எல்லாச் சிக்னலிலும் பைன் கட்டுவீர்கள். சில வருடங்கள் இப்படியே போனதான், ஊரில் சொந்தமாக வண்டி வாங்கிய பிறகும் லைசென்ஸ் பற்றிய கவலை எனக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஆபிஸ் வேலையாக‌ வெளிநாடு செல்லும் போது வீட்டில் இருக்கும் லைசென்ஸை தேடினால் கிடைக்கவில்லை. அம்மாவும் வைத்த இடத்தை மறந்திருந்தார்கள். பல வருடங்கள் ஆகியதால் வீட்டில் அவ்வப்போது பெயிண்டிங், ஷிப்டிங் என்று இருக்கும் போது தொலைந்து போனது.

அவ்வாறு தொலைந்த/தொலைத்த‌ லைசென்ஸை சமீபத்தில் தான் வாங்கினேன். அந்தக் கதையையும் நேரம் இருக்கும் போது எழுதுகிறேன்.

Sunday, March 9, 2014

சாலையைப் போடுங்க‌, ஆனா மண்டை உடையாம போடுங்க!!!

சாலைகளைப் போடுவதற்கு அரசு எப்படி ஒப்பந்தங்கள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதைக் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றிருந்தேன். பல போரட்டங்களுக்குப் பிறகு மீண்டும் நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான சாலையைப் போட தொடங்கியிருந்தார்கள். இவர்கள் ஒரு பகுதியில் இருந்து போட்டு மறுபுறத்தில் முடிப்பதற்குள் முதலில் போட பட்டிருக்கும் சாலைகள் பல்லை காட்ட தொடங்கியிருக்கும். இது தான் இவர்கள் போடும் சாலையின் லட்சணம். இவை ஒருபுறம் இருக்க நான் கேட்ட முதல் கேள்விக்கான அவசியம் இதுதான். நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலான நெடுஞ்சாலை ஒருவழிச்சாலை, இரண்டு புறமும் வாகனம் போவதும், வருவதுமாக இருக்கும்.

இவர்கள் சீரமைக்கும் சாலையில் முதல் முதலாக எந்த அளவில் சாலையில் தார் போட்டு இருப்பார்களோ, அதே அளவில் தான் திரும்பவும் அதன் மேல் சல்லியை கொட்டி தார் ஊற்றுகிறார்கள். எல்லோருக்கும் தெரியும் தார் சாலை என்பது சாதரணத் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்கும். இப்படி உயரமாக இருக்கும் சாலையில் ஒவ்வொரு முறையும் சீரமைக்கும் போது ஒர் அங்குலம் முதல் இரண்டு அங்குலம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு இரண்டு அல்லது முன்று முறை செய்யும் போது சாலையின் உயரம் தரையின் சமதளத்தில் இருந்து ஒர் அடிவரை உயர்ந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் சாலைப்போடுபவர்கள் இந்த இரண்டு ஓரங்ளையும் சிறுது சல்லிக் கொட்டி மழித்து விடுவது இல்லை. அவ்வாறு செய்தால் ஒப்பந்த தாரர்களுக்குக் கொஞ்சம் சல்லியும் சிறிது தாரும் செலவு ஆகும். அதனால் இவர்கள் செய்வது இல்லை, இன்னும் சில ஒப்பந்த தாரர்கள் சாலையின் இரண்டு ஓரங்களிலும் மண்ணைக் கொட்டி மறைத்து விடுவார்கள். சாலைப் போட்ட நான்கு நாட்கள் நன்றாக இருக்கும், ஒரு மழை வந்தால் காணமல் போகும்.

இதைப் போன்ற‌ ஒரு வழிச் சாலையில் இருச்சக்கர‌ வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், இரண்டு பெரிய பேருந்தோ அல்லது கனரக வண்டியோ நேர் எதிராக வந்தால் இவர்கள் முதலில் ஓரங்கட்டுவது ஓரத்தில் செல்லும் இருச்சக்கர‌ வாகனத்தைத் தான். சாலையில் இருந்து ஒர் அடி பள்ளத்தில் இருக்கும் தரையில் இருச்சக்கர‌ வண்டியை அனுபவம் இல்லாமலோ அல்லது கைத் தவறியோ விட்டால் என்ன ஆகும் வண்டியின் சக்கரத்தை சுழற்றி ஆளை கிழே தள்ளும். பெரும்பாலன விபத்துக்கள் இப்படித்தான் நடக்கின்றன்.

இந்த நெடுஞ்சாலை ஒரு வழிச்சலையாக இருப்பதால் ஒரு வண்டி முன்னால் போகும் போது இரண்டாவது வண்டி முதல் வண்டியை முந்த வேண்டும் என்று நினைக்கும் போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஓரங்கட்டுவது இருச்சக்கர வாகனத்தைத் தான். இருச்சக்கர வண்டியை ஓட்டும் நீங்கள் வலுக்க‌ட்டாயமாகப் பள்ளத்தில் இறக்க‌ நிர்பந்திக்கப் படுவீர்கள். உங்களால் வண்டியைக் கட்டுப்படுத்தி ஓர் அடிக்கு மேல் இருக்கும் பள்ளத்தில் இறக்க‌ முடியாவிட்டால் கீழே விழ வேண்டியது தான்.



இன்றைக்கு நமது நாட்டில் சாலைகள் ஒழுங்காக இல்லை, சாலை விதிகளும் ஒழுங்காக இல்லை, அப்படியே இருந்தாலும் அதை மதிப்பதற்கு மக்களும் தயாரில்லை. ஆனால் 200 சி.சி, 250 சி.சி என்று இருச்சக்கர‌ வாகனங்களைக் கல்லூரி படிக்கும் இளைஞர்களைக் குறி வைத்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அந்த வண்டியை ஓட்டுவதற்கான சாலை வசதி இருக்கிறதா என்று வண்டி வாங்குபவனே கவலை படாத போது, வண்டியை விற்பவன் எங்கே கவலைப்படப் போகிறான். சி.சி அதிகமான‌ வண்டிகளை இப்போது பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம். அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கைகளில் சி.சி அதிகமாக உள்ள வண்டிகளைத் தான் பார்க்க முடிகிறது. ஒரு வண்டியில் இரண்டு, முன்று பேர் என்று சிட்டாகப் பறக்கிறார்கள். இப்படி வண்டியில் போகும் என்று சொல்ல முடியாது பறக்கும் கல்லூரி மாணவர்கள் வண்டியை கொண்டு சாலையின் ஓரத்தில் இருக்கும் பள்ளத்தில் விட்டால் என்ன ஆகும், மண்டை தான் உடையும்.

கன்னியாகுமரி மாவட்ட செய்திதாள்களை என்றைக்குப் புரட்டினாலும் பக்கத்திற்குப் பக்கம் இருச்சக்கர வாகன விபத்துக்களைப் படிக்க‌ முடியும். எனது நட்பு வட்டம் மற்றும் உறவுகளில் கூடச் சமீக காலங்களில் நடந்த விபத்துகள் மட்டும் மூன்று. இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள், இன்னொருவர் ஆசிரியர். நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடைப்பெறும் இடங்கள் எது என்று எவரிடம் கேட்டலும் கீழே உள்ளவற்றைப் பட்டியல் இடுவார்கள். பார்வதி புரத்தை அடுத்த உள்ள‌ களியங்காடு, சுங்கான்கடையை அடுத்து உள்ள‌ கருப்புக்கோடு, தோட்டியோடு, வில்லுக்குறி பாலம் மற்றும் குமாரகோவிலை ஒட்டியுள்ள தென்கரை பாலம். இந்த இடங்களில் தான் அதிகமான இருச்சக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் முறையான அறிவிப்புப் பலகைகள் கூட இல்லை, அப்படியே சில இடங்களில் இருந்தாலும் அவை கண்ணுக்கு தெரியாதவாறு மிகச் சிறியதாக ஓரத்தில் எங்காவது நட்டு வைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் ஊள்ள சாலைகளைப் பற்றிப் பேசும் போது நமது கண் முன் வந்து நிற்கும் முக்கியமான ஒரு சாலை கோட்டார் ரயில்வே நிலையத்திற்குச் செல்லும் சாலை. எனக்குத் தெரிந்து இந்தச் சாலை ஒரு நாளும் மேடு பள்ளம் இல்லாமல் இருப்பது இல்லை. பிரசவத்திற்கான சாலை என்று விளையாட்டிற்குச் சொல்லும் சாலையைப் பார்க்க வேண்டும் என்றால் இது தான். தினமும் ஆயிரகணக்கானோர் வந்து செல்லும் இந்தச் சாலையின் நிலைமை ரெம்ப மோசம்.

வாஜ்பாய் அவர்கள் பிரதமாக இருக்கும் போது கொண்டு வந்த தங்க நாற்கரச் சாலையைப் பற்றிக் கருத்து விவாதங்களிலும், மேடையெங்கும் நாங்கள் கொண்டு வந்த அருமையான திட்டம் என்று முழங்கும் பொன்னார் அவர்கள், அவரது சொந்த தொகுதியில் அத்திட்டம் நடைமுறை ப‌டுத்தாது பற்றி வாயே திறப்பது இல்லை. காவல் கிணறுடன் இத்திட்டம் முடக்கப்பட்டு நிற்கின்றது. சாலை விரிவாக்கம் செய்தால் பல முதலாளிகளில் கடைகள் தகர்க்கப்படும். அரசியல்வாதிகளுக்குத் தான் முதலாளிகளுக்கு நஷ்டம் என்றால் இரத்த கண்ணீரே வருமே..

.

Monday, February 24, 2014

அடுத்தவன் தாலியை அறுத்து வயிரு வளர்ப்பவர்கள்!!!

கிராமங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து உதவுவதில் கூட்டுறவு வங்கிகள் தான் உதவியாக இருக்கின்றன. இதில் கொடுக்கப்படும் விவசாயக் கடன்களுக்கு அரசு மானியங்களும் கொடுத்து வருகின்றது, சில சமயம் வறட்சியின் காரணமாக‌ ஆளும் மத்திய‌ அரசால் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுப்படி செய்வதும் உண்டு. மேலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் வசதியும் உண்டு. கிராமங்களில் பொரும்பாலன விவசாயிகளுக்கு இந்த நகைக்கடன் வசதி பெரும் உதவியாக இருப்பது உண்மை. விவசாயிகள் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் பூச்சு மருந்துகள் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது குழந்தைகளில் படிப்பு செலவாக இருந்தாலும் முதலில் அவர்கள் வீட்டில் உள்ள தங்க‌ நகைகள் தான் அடகுக்கடைக்குப் போகும். பெரும்பாலும் கடன் வாங்கும் விவசாயியாக இருந்தால் அவனிடம் இருக்கும் தங்க நகை என்பது மனைவியின் தாலி செயினாகத் தான் இருக்கும்.

விவசாயிகள் பெரும்பாலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைப்பதற்குக் காரணம் வட்டி குறைவாக இருப்பது ஒன்று மற்றொன்று இந்த வங்கியின் மீதான நம்பிக்கை. தனியார் வங்கிகளில் நகைகள் பேரில் பணம் அதிகமாகத் தந்தாலும் வட்டி வீதம் அதிகம். மேலும் தனியார் வங்கிகளின் மீதான நம்பிக்கையும் குறைவு. முன்னறிவும் இல்லாமலே நகைகளை ஏலத்தில் விட்டுவிடுவார்கள், நாம் போய் ஏன் முன்னறிவுப்பு செய்யவில்லை என்று கேட்டால் நாங்கள் அனுப்பினோம் உங்களுக்கு வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது, முகவரி நீங்கள் தவறாகத் தந்து இருப்பீர்கள் என்று நம் மீதே தவறை திருப்புவார்கள். இந்த மாதிரியான தில்லுமுல்லுகள் கூட்டுறவு வங்கிகளில் நடப்பது இல்லை. ஆனால் புதுவிதமான் திருட்டு இங்கு நடப்பதாக அதில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கும் நகைகளில் சிறு பகுதியை வெட்டி எடுத்து விட்டு திரும்பவும் அதை அழகாகத் தெரியாத அளவிற்குப் பத்த வைத்து கொடுத்து விடுகிறார்களாம். இந்தத் திருட்டை மோதிரம், கம்மல் போன்ற சிறிய நகைகளில் செய்வது இல்லை, செயின்களில் தான் செய்கிறார்களாம். கிராமங்களில் செயின் என்றால் பெரும்பாலும் தாலிச் செயினாகத் தான் இருக்கும் அல்லது மகள்களில் கல்யாண‌த்திற்குச் சேர்த்து வைத்திருப்பவையாக இருக்கும். தனது கழுத்திலோ, அல்லது தனது மகள்களில் கழுத்திலோ போட்டு அழகு பார்க்க கூட விவசாயத் தொழில் அவர்களுக்குப் பெரும்பாலும் கைக் கொடுப்பது இல்லை. அதனால் அதன் எடை குறைந்தாலோ அல்லது அளவு சிறிய‌தாக இருந்தாலோ பெரும் அளவில் அவர்களுக்குச் சந்தேகம் வருவது இல்லை. மேலும் இந்தத் திருட்டை கொஞ்சம் வெவரமானவர்களிடம் செய்வது இல்லையாம். பெரும்பாலும் விவசாயக் கூலி வேலை செய்பவர்களிமும், கணவன்மார்கள் வெளிநாட்டில் இருக்கும் பெண்களிடமும் தான் இந்த திருட்டு வேலையைப் பார்க்கிறார்களாம். யாரவது சந்தேகம் வந்து பிரச்சனைகள் பண்ணினால் வெளியில் தெரியாமல் பணம் கொடுத்து சரி செய்கிறார்களாம். இந்தத் திருட்டு வேலைக்கு வங்கியில் வேலை பார்க்கும் உயர் அதிகார்களும் உடந்தை. அவர்களுக்கும் சேர வேண்டிய‌ பங்குச் சரியாக‌ போய்ச் சேர்ந்து விடுகிறதாம்.

என்னிடம் சொன்ன நண்பன் இந்த கூட்டுறவு வங்கியில் வேலைப் பார்க்கவில்லை, அவன் அதன் அருகில் இருக்கும் ரேசன் கடையில் ஊழியராக பணிச்செய்கிறான். அவன் பணியில் சேர்ந்து இன்னும் முழுமையாக இரண்டு வருடம் கூட ஆகவில்லை. இந்த திருட்டைப் பற்றி எவரிடம் முறையிட வேண்டும் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அப்படியே முறையிட்டாலும் எப்படியான ந‌டவடிக்கை இருக்கும் என்பதும் உறுதியில்லை. அவனுடைய ஆற்றாமையை என்னிடம் புலம்பினான். என்னுடைய ஆற்றாமையை நினைத்து நான் இங்கு பதிந்து வைக்கிறேன்.

இதை என்னுடைய நண்பன் என்னிடம் சொல்லும் போது எனக்குப் பகீரென்று இருந்தது, காரணம் ஒரு மாதத்திற்கு முன்பு தான் வட்டி குறைவாக இருக்கும் என்று அப்பாவின் உதவியுடன் என்னுடைய சில நகைகளைத் தனியார் வங்கிகளில் இருந்து எடுத்து எங்கள் ஊரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வைத்திருக்கிறேன். அங்கு இதுபோல் நடந்தாக நான் கேள்விப்ப‌ட்டது இல்லை இருந்தாலும் நம்மையறியாமல் ஒருவித சந்தேகம் மனதில் எழாமல் இல்லை. நகைகளை நாம் அடகு வைக்கும் போது நம் நகைகளை ஒரு முறைக்கு நான்கு முறை எடை செய்து பார்க்கும் ஆசாரிகள், நாம் திரும்ப மூட்டும் போதும் அதை ஒரு முறைக் கூட எடைப் போட்டு நம்மிடம் காட்டுவது இல்லை, நாமும் அவசரத்திலும் மற்றும் இவர்களில் மீதான நம்பிக்கையிலும் அதைச் சரிப்பார்க்கச் சொல்லுவதும் இல்லை.

இப்படி கூலி விவசாயிகளின் தாலியை அறுத்து தொப்பை வளர்க்கும் ஜென்ம‌ங்களை எதைக் கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை.......


.

Wednesday, September 14, 2011

கூடங்குளம்_மக்களின் போரட்டம்!!!

நான் படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் எங்கள் மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவை கீழ்க்கண்ட முன்று திட்டங்கள்.

# கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்.

# கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய போகும் ரப்பர் தொழிற்ச்சாலை.

# குளச்சல் துறைமுகம்.

சில ஓட்டு கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் அள்ளிவீசிய வாக்குறுதிகளில் இவைகளும் அடங்கும்.

இவைகளின் மூலம் எங்கள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருக போகிறது. அதனால் தொழிற்நூட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளை குறிவைத்து படித்த மாணவர்கள் அதிகம். அதில் நானும் ஒருவன்.. :))

இந்த கால கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் அதிக அளவில் பாலிடெக்னிகள் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போதும் வேறு மாவட்டங்களை கணக்கிடும் போதும் எங்கள் மாவட்டத்தில் இவைகளின் எண்ணிக்கை அதிகம் தான். திரும்பிய திசையெங்கும் கல்லூரிகள்.

படித்து முடித்தவுடன் அனைவரும் செய்யும் முதல் காரியம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. காரணம் மேலே சொன்ன திட்டங்கள் நிறைவேறினால் வேலை நிச்சயம் என்பது அனைவரின் எண்ணம். நானும் பதிந்து வைத்திருக்கிறேன். ஆறு வருடம் தவறாமல் புதுப்பிக்கவும் செய்தேன்.அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை மற்றும் பொறுமையில்லை அப்படியே கிடப்பில் இருக்கிறது.

மேலே கூறிய மூன்று திட்டங்களில் நடைமுறைக்கு வந்தது கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் மட்டும் தான். மற்றவை என்ன ஆனது? என்று அந்த அரசியல் ஆண்டவருக்கே வெளிச்சம். இத்திட்டத்திற்கு கையெழுத்து போடப்பட்ட ஆண்டு 1988. ஒரு சில காரணங்களால் பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்பு 2001 ஆம் ஆண்டில் இருந்து மிக துரிதமாக வேலைகள் ஆரம்பிக்கபட்டது.

இது ஆரம்பிக்க பட்ட காலத்தில் ஊடகங்களின் தாக்கமும், தகவல் பரிமாற்றங்கள் அதிகமாக இல்லாததால் மக்களுக்கு இந்த அணுமின் உலையை பற்றிய தகவல்களும், விழிப்புணர்வுகளும் அதிகம் இல்லை. அரசியல்வாதிகளும் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லத் தவறிவிட்டார்கள். அதற்கு பதிலாக அணு உலையின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடக்கும் போதே, ஆரம்பித்தவுடன் அனைவருக்கும் வேலை என்று மட்டும் சொல்லி ஓட்டுகளாக மாற்றினர். இன்னும் சிலர் முன்பணம் கொடுங்கள் உடனே வேலைவாங்கி தருகிறேன் என்று கல்லா கட்டினார்கள்.

ஆனால் இத்திட்டம் முழுமையடைந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள எவருக்கும் பணிகள் வழங்கப்படவில்லை. ஒரு சில இயக்கங்களில் போராட்டங்களுக்கு பிறகு சிலரை ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்தார்கள். அவர்களையும் முழுமையாக பணியில் வைத்துக்கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவரும் இந்த காலகட்டங்களில் நம்முடைய அரசு மட்டும் மீண்டும் மீண்டும் புதிய அணு உலைகளை நிறுவுகிறது. இந்த கூடங்குளம் அணு உலையிலும் இந்த வருடம் புதிய 4 ரியாக்டர்கள் (Reactors) நிறுவப்படுகிறது. இதில் இவர்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.



“வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட இந்த பூமியில் மனித உயிர்களும், இதர உயிரினங்களும் முக்கியம் அல்லவா?”

இது தான் ”தூக்கம் கெடுத்து கட்டில் வாங்குவதோ?..”

இந்த கூடங்குளம் குறித்து அதிகம் கவலைப்பட மேலும் ஒரு வலுவான காரணம் உண்டும். இது சுற்றிலும் கடலால் சூழப்பட்ட பகுதி. சுனாமி போன்ற பேரலைகள் பயம் காட்டும் இந்த காலக்கட்டதில் இந்த அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே!!!!!!!!!!...

இந்த அழிவுகள் எல்லாம் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். பலர் சாகும் வரை உண்ணாவிரதமும் இருக்கிறார்கள். இவர்களின் அறப்போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நம்முடைய சில பதிவர்களும் இதில் கலந்துள்ளார்கள் அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். இந்த பதிவில் பதிவர் கூடல் பாலா அவர்கள் எழுதிய போரட்டம் பற்றிய சுட்டியும் இணைத்துள்ளேன். முடிந்தவரை இந்த போரட்டத்தை பற்றி பலரிடம் கொண்டு சேர்க்க நண்பர்களை வேண்டுகிறேன்.

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

நன்றி: பதிவர் கூடல்பாலா.

Wednesday, May 19, 2010

பாதுகாப்பு குறித்த‌ சில‌ விழிப்புண‌ர்வு ப‌ட‌ங்க‌ள்

நான் வேலைபார்க்கும் க‌ம்பெனியில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ பாதுகாப்பு குறித்த‌ சில‌ சுவ‌ரொட்டிக‌ளை பார்க்க‌ முடிந்த‌து. அதில் இருந்த‌ சில‌ சுவ‌ரொட்டிக‌ள் க‌ம்பெனியில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தெரிந்திருக்க‌ வேண்டிய‌ விழிப்புண‌ர்வுக‌ள் அல்ல‌. அனைவ‌ரும் க‌ண்டிப்பாக‌ தெரிந்து கொள்ள‌வேண்டிய‌வை. அவ‌ற்றில் சில‌ப‌ட‌ங்க‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

வீடுக‌ளில் க‌ண்டிப்பாக‌ செய்ய‌வேண்டிய ம‌ற்றும் க‌டைபிடிக்க‌வேண்டிய‌ சில‌ பாதுகாப்பு வ‌ழிமுறைக‌ள்.‌









குழ‌ந்தைக‌ளை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ தெரிந்து கொள்ள‌வேண்டிய‌ பாதுகாப்பு வ‌ழிமுறைக‌ள்.



சாலையில் வாக‌ன‌ங்க‌ளில் செல்லும் போது க‌டைபிடிக்க‌வேண்டிய‌ பாதுகாப்பு வ‌ழிமுறைக‌ள்.





எல்லா பொதுஇட‌ங்க‌ளிலும் தீய‌ணைப்பான்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருக்கும். அதை எப்ப‌டி தீயை அணைக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து என்ப‌தை ப‌ற்றிய‌ விள‌க்க‌ம்.



.

.
Related Posts with Thumbnails