Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Thursday, July 3, 2014

கண்டிப்பா! அடி வாங்கியிருப்பார்!!

கடந்த டிசம்பர் மாதம் அண்ணனின் குழந்தைக்கு முடி எடுப்பதற்காக‌ வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான் ஹைதிராபாத்திலிருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு வந்துவிடுகிறேன் என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். ஹைதிராபாத்திலிருந்து நானும் எனது மனைவியும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேளாங்கண்ணிக்குச் செல்லவேண்டிய நாளின் காலையில் தான் சென்னை வந்திறங்கினோம். வேளாங்கண்ணிக்குச் சென்னையிலிருந்து பகல் பயண ரெயில்கள் ஏதும் இல்லை. அதனால் பேருந்தில் பயணம் செய்வது என்று முடிவெடுத்திருந்தேன். காலையில் தனியார் பேருந்துகள் ஏதும் வேளாங்கண்ணிக்கு இயக்கபடாத‌தால் என்னால் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கும் பேருந்தில் ஏறிச் சென்றுவிடலாம் என்று கோயம்பேடு வந்துவிட்டோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே ஒரு பேருந்து வேளாங்கண்ணிக்கு கிளம்பியது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அடுத்த வண்டியில் ஏறலாம் என்று காத்திருந்தோம். அந்தப் பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே அடுத்தப் பேருந்தும் வந்தது. ஓட்டுநர் வண்டியை நடைமேடையில் நிறுத்துவதற்குள் சிலர் பேருந்தில், தங்கள் பொருட்களைப் போட்டு முன் இருக்கைகளில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அதில் ஒருவர் தனது கைகளில் இருந்த இரண்டு பேக்குகளை எடுத்து அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் போட்டார். நாங்கள் இருவரும் பேருந்தை ஓட்டுநர் முழுமையாக நிறுத்தும் வரை காத்திருந்து, பின்புதான் வண்டியில் ஏறினோம். அதற்குள் பேருந்தில் பாதி இருக்கைகள் நிரம்பியிருந்தது. அடுத்தடுத்த‌ இரண்டு இருக்கைகளில் பேக்கு போடப்பட்டிருந்த‌ இருக்கைகள் எவரும் அமராமல் காலியாக இருந்தது, அவைகளைப் போட்டவரையும் காணவில்லை. நாங்கள் அந்த இருக்கைகளைக் கடந்து அடுத்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டோம்.

சிறிது நேரத்தில் இருக்கையில் பேக்கைப் போட்டவர் தனது மனைவி மற்றும் இரண்டு பையன்கள் என்று குடும்பத்தினருடன் வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுமக்க முடியாமல் ஆளுக்கு ஒன்றிரண்டு பெட்டி மற்றும் படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். வந்த சிறிது நேரத்தில் அவர்களில் இருக்கைக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் மீதும் பெட்டிகளைக் கொண்டு மோதிவதும், இருக்கைகளில் கீழ் பெட்டிகளைத் தள்ளுவதுமாகப் பேருந்தை ஒரே களோபரமாக‌ ஆக்கிவிட்டார்கள். அவர்கள் நால்வரும் தங்கள் பெட்டிப்படுக்கைகளை வைத்துச் செட்டில் ஆவதற்குள் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் ஒரு வழிப் பண்ணிவிட்டார்கள். "அக்கட தீஸ்கோ", "இக்கட பெற்றுக்கோ" என்று சத்தமாக‌ அவர்களுக்குள் பேசிய தெலுங்கும், பேருந்தில் இருந்த அனைவரின் கவனமும் இவர்களில் மீது பதிவதற்குக் காரணமாய் இருந்தது.

பேருந்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது. சிறிது நேரத்தில் நடத்துன‌ரும் வந்து டிக்கெட்டுகளைக் கொடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். எங்கள் முன்னால் அமர்ந்திருந்த தெலுங்குக் குடும்பத்தில் உள்ள‌ இரண்டு பையன்களும் சிறிது நேரத்தில் தெலுங்கில் கத்த தொடங்கிவிட்டார்கள். என்னவென்று பார்த்தால் சன்னல் இருக்கை தான் வேண்டும் என்ற‌ சண்டை. அந்தச் சண்டையைச் சிறுவர்கள் தங்களுக்குள் போட்டிருந்தால் பரவாயில்லை. சன்னல் ஓரமாக இருந்த அப்பாவிடம் தான், அந்தப் பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டார்கள். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று அவரும் விட்டுக் கொடுக்காமல் அந்தப் பையன்களை மிரட்டிக்கொண்டிருந்தார். எனக்கும், எனது மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை. அப்பா, பிள்ளைகளுக்கான சண்டையை அவருடைய‌ மனைவிதான் "மீரு இக்கட வந்து குச்சண்டி" என்று கணவனை மிரட்டிப் பிரச்சனையை முடித்துவைத்தார்.



அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினர் அவர்களுக்குள் பேசியது பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் அளவிற்கு இருந்தது, அவர்கள் பேசிய தெலுங்கில், எனக்குப் புரிந்ததை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் கடந்த ஒரு வாரமாகத் தமிழ்நாட்டில் உள்ள இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காகச் சுற்றுலா வந்திருக்கிறார்கள் என்றும் இப்போதும் அவர்கள் வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லத்தான் இந்தப் பேருந்தில் ஏறி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. சிறிது நேரத்தில் ஓட்டுநர் வந்து பேருந்தை எடுக்கத் தொடங்கினார். அதற்குள் நடத்துனரும் எங்கள் அருகில் டிக்கெட் கேட்டு வந்திருந்தார். அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினரிடம் நடத்துனர் "எத்தனை டிக்கெட்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "வேளாங்கண்ணி, இரண்டு புல் டிக்கெட்" "இரண்டு ஆப் டிக்கெட்" என்றார். நடத்துனர் இருக்கையில் இருந்த அந்த இரண்டு பையன்களையும் சைகையால் எழுந்து நிற்க சொன்னார். அந்தச் சிறுவர்களின் உயரத்தைப் பார்த்துவிட்டு, இவர்களுக்கு ஆப் டிக்கெட் கொடுக்க முடியாது, புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.

தெலுங்குப் பேசியவர் கத்துவதற்குத் தொடங்கிவிட்டார். நடத்துனர் அமைதியாக "பெர்த் சர்டிபிக்கேட்" என்று சொல்லி சைகையால் கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "பெர்த் சர்டிபிக்கேட் லேது" என்றார். அப்படினா நீங்க புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே நடத்துனர் டிக்கெட்டைக் கிழிக்கத் தொடங்கினார். நடத்துனர் சொல்லியது புரியாதது போலத் தெலுங்கு காரர் "மீரு ஏது செப்தினாரு?" என்று தொடங்கித் தெலுங்கில் தொண்டைக் கிழியும் அளவிற்குக் கத்திக்கொண்டிருந்தார். அதில் நடத்துனரை முட்டாள், பைத்தியகாரன் என்று திட்டிய வார்த்தைகளும் அடங்கும். தெலுங்குப் பேசியவர் தொடர்ந்து கத்துவதை நிறுத்தாமல் இருந்ததால், நடத்துனர் அந்த இரண்டு பையன்களையும் அழைத்துக் கொண்டு சென்று முன் இருக்கையில் வரையப்பட்டிருந்த அளவுக் கோட்டிற்கு முன்னால் நிற்குமாறுச் சொன்னார். இருவரும் அந்த 130 செ.மீ உயரம் வரையப் பட்டிருந்த கோட்டிற்கு மேலாகவே வளர்ந்திருந்தார்கள்.

நடத்துனர் செய்வது எதுவுமே புரியாத‌து போலவே, அந்தத் தெலுங்குப் பேசியவர் கத்திக்கொண்டிருந்தார். நடத்துனர் நான்கு புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவர் கேட்பதாக இல்லை. ஆந்திராவில் நான் ஆப் டிக்கெட் தான் எடுப்பேன். என்னை நீ ஏமாற்றுகிறாய்! என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். நடத்துனருக்கு, அதற்கு மேல் பொறுமை இல்லை, "யோவ்! நாலு புல் டிக்கெட் எடுத்தால் வண்டியில் இரு!, இல்லையென்றால் வண்டியை விட்டுக் கீழே இறங்கு" என்று கோபமாகச் சத்தம் போட்டார். பேருந்தில் இருந்த அனைவரும் இங்கு நடப்பதை வேடிக்கைப்பார்ப்பதும், அவர்களுக்குள் சிரிப்பதுமாக இருந்தார்கள். அந்தத் தெலுங்குக் காரர் பேசிய தெலுங்கு எனக்கு அரைகுறையாகப் புரிந்ததால், இவர் நடத்துனர் சொல்லியது புரியாமல் தான் கத்திக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து நான் இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம், ஆப் டிக்கெட் வேண்டுமானால், நீங்கள் பையன்களின் பெர்த் சர்டிபிக்கேட் காண்பிக்க வேண்டும், இல்லையென்றால் 130 செ.மீ உயரத்திற்குக் குறைவாக இருக்கவேண்டும் என்று தெலுங்கில் சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம். நடத்துனரின் மீது இருந்த கோபம் முழுவதையும் என்னிடம் திருப்பிவிட்டார்.

உன்னுடைய வேலை என்னவோ, அதைப் பாரு! எனக்கு நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம்! என்று தெலுங்கில் கத்தியதோடு மட்டும் அல்லாமல், இங்கிலீசிலும் பாடம் நடத்துவதற்குத் தொடங்கிவிட்டார். எனக்குக் கோபம் தாங்க முடியவில்லை, கையை மடித்து மூஞ்சில் ஒரு குத்துவிடலாம் என்று கையை ஓங்கிய போது அருகில் இருந்த மனைவி என்னை இழுத்து அமர வைத்துவிட்டார். நடத்துனரும், இந்த முட்டா பயலுட்ட நீங்க ஏன் சார்! பேசுறீங்க? விடுங்க, டிக்கெட் எடுக்கலைனா வண்டியை நிறுத்தி இறக்கிவிடப் போகிறேன்! என்றார். இருந்தாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. நடத்துனர் சொல்லியது அனைத்தும் அவனுக்குப் புரிந்திருக்கு, ஆனால் புரியாதது போல் நடித்திருக்கிறான். பாவம்! அந்த நடத்துனர், கடைசிவரை அவனிடம் தவறாக ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ஆனால் தெலுங்கில் எந்த அளவிற்குத் திட்ட முடியுமோ, அந்த அளவிற்கு அவன் அந்த நடத்துனரை திட்டினான். அவன் திட்டிய வார்த்தைகள் எதுவும் நடத்துனருக்குப் புரிய வாய்ப்பில்லை. அவன் திட்டிய‌ வார்த்தைகள் அனைத்தும், அரைகுறையாகத் தெலுங்குத் தெரிந்த எனக்குப் புரிந்ததால் தான், நான் எழுந்து அவனிடம் விளக்கம் கொடுக்க நேர்ந்தது.

நடத்துனர், தெலுங்குக் குடும்பத்தை விட்டுவிலகி, மற்றவ‌ர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்தத் தெலுங்குப் பேசியவரின் மனைவி நான்கு புல் டிக்கெட் கொடுங்க! என்று நடத்துனரிடம் கேட்டார், இப்போதும் அந்தத் தெலுங்குக் காரர் வாயில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.

மறுநாள் காலையில் வேளாங்கண்ணிக் கோவிலில், அண்ணனின் குழந்தைக்கு முடி எடுத்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்று கால்களை நனைத்துத் திரும்பியபோது, ஒரு கடையின் முன் கூட்டமாக இருந்தது. அந்தக் கூட்டத்தை உற்று நோக்கினேன், நேற்று பேருந்தில் பார்த்த அந்தத் தெலுங்குக்காரர் தான் நடுவில் நின்று கொண்டு ஏதோ கத்திக்கொண்டிருந்தார். கண்டிப்பாக நேற்று நான் செய்ய நினைத்ததை இன்றைக்கு எவராவது ஒருவர் செய்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டுக் கடந்தேன்.

.

Friday, June 27, 2014

வாடா மச்சான்! ஒருத்தன் சிக்கிட்டான்!

என்னடா! ஹைதிராபாத் வந்து ஒரு வருடத்திற்கு மேலே ஆகியும் இன்னும் கம்பெனியில் இருந்து ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறார்களே! என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த வாரம் ஆபிஸுக்கு வந்த ஜெனரல் மேனேஜர், ஸ்டீபன்! சவுதி புராஜெக்ட் காண்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டது, சீக்கிரமே! கிளம்புவதற்குத் தாயார் ஆகிவிடு! என்று சொல்லிச் சிரித்தார். இந்த ஷாக் எனக்குப் புதிது ஒன்றும் இல்லாததால், நானும் சிரித்துக்கொண்டே எப்ப, சார்! கிளம்பவேண்டும்? என்று கேட்டேன். நாளைக்கே வேண்டுமானாலும் கிளம்பி வாருங்கள்! என்று தான் புராஜெக்ட் தந்தவன் சொல்லிட்டு இருக்கிறான். ஆனா, விசா! தான் அவ்வளவு சீக்கிரத்தில் ரெடியாகாது, குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிமுடித்தார்.

நான் ரெம்ப நாட்கள் ஹைதிராபாத்தில் இருக்கமாட்டோம்! என்று வீட்டில் உள்ளவர்களிடமும், மனைவியிடம் சொல்லிச் சொல்லியே ஊரிலிருந்து வரும் போது பொருட்கள் எதுவும் எடுத்து வராமல், தேவைப்படும் போது ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்ததே ஒரு வண்டி வந்துவிட்டது. இப்போது நிறையப் பொருட்கள் ஊரிலும், இங்கும் என்று இரண்டு இரண்டாக இருக்கிறது. ஊருக்கு போன் செய்து வீட்டில் அப்பாவிடம் பேசிய போது, சிலப்பொருடகள் நமக்குத் தேவையாக இருக்கிறது, அவைகளைக் கொண்டுவர வேண்டுமானாலும் நீ! அதிகமாக‌ பணம் கொடுக்கத் தான் வேண்டும், அதனால் எல்லாவற்றையும் இங்குக் கொண்டு வந்துவிடு! தேவையானவைகளை வைத்துக் கொள்ளலாம், தேவையில்லாதவைகளை, நம்ம சொந்தகாரர்கள் யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றார். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது.

இந்த இணையம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும், பல நேரங்களில் நம்மை அதில் அடிமையாக முடங்க வைத்துவிடும். கடந்த சனிக்கிழமை ஆபிஸ் லீவாக இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததே லேட்டாகத் தான். வெள்ளிக்கிழமை என்னுடைய வீட்டுப் பொருட்களை ஷிப்ட் பண்ணுவது பற்றி ஆபிசில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவைக் கொடுத்தார்கள். அப்போது, சென்னை நகர் பையன் ஒருவன், எதுக்குச் சார்! ரெம்ப யோசிக்கிறீங்க? இப்ப எல்லாம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று மூலைக்கு மூலை போர்டு மாட்டி வைச்சுருக்கானுங்க! அவர்களில் எவரேனும் ஒருவரிடம் கொடுத்துடுங்க! பொருட்கள் எல்லாம் நல்ல ஷேப்பா, கொண்டு வந்து சேர்த்திடுவார்கள் என்றான். நானும் நல்ல ஐடியாவா இருக்கே! என்று நோட் பண்ணிக் கொண்டேன். நேற்று ஆபிசில் நோட் பண்ணிய ஐடியா என்னவோ, காலையில் மனைவி கொடுத்த டீயுடன் வந்து மன‌தில் ஒட்டிக்கொண்டது.

இப்போது ஞாபகம் இருப்பதை, இப்படியே விட்டால் மறந்துவிடும் என்று, லேப்டாப்பை திறந்து இணையத்தில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று தட்டியது தான் தாமதம். முதல் பக்கத்திலேயே சுலேகா டாட் காம் என்ற பேஜ் தானாகத் திறந்து போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி என்ற தகவல்களைக் கேட்டு, பாப் அப் வின்டோ ஒன்று ஓபன் ஆகியது. நான் உசாரா இருக்கிறேன்! என்ற எண்ணத்தில் அதில் என்னுடைய தகவல்கள் ஏதும் கொடுக்காமல் மூடிவிட்டு, அந்த வெப் பேஜில் இருந்த சில பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்களின் தகவல்களில் உள்ள போன் நம்ப‌ர்களை நோட் பண்ணி அதில் முதலில் இருந்த, இரண்டு பேருக்கு கால் பண்ணி விவரங்களைக் கேட்டேன். அவர்கள் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு ஷிப்ட் செய்யவேண்டும்? என்னென்ன பொருட்களை மேஜராக இருக்கின்றன? என்ற தகவல்களைக் கேட்டார்கள். நானும் பொறுமையாக அவர்களின் கேள்விக்கான பதில்களைக் கொடுத்தேன். ஒருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தவிர்த்துப் பதினான்காயிரம் என்றார், இன்னொருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்துப் பதிமூன்றாயிரம் என்றார். இவர்கள் இருவரிடம் பேசியதில் இவ்வளவு ரூபாய் வித்தியாசம் இருக்கிறதா? என்று எண்ணிக்கொண்டே குளிக்கச் சென்றேன்.

குளித்து வருவதற்குள், மனைவி இரண்டுமுறை பாத்ரூம் கதவை தட்டிவிட்டார். என்னவென்று கேட்டால், உங்க போன் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது என்றார். யார் அடிக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், புது எண்ணாக இருக்கிறது பெயர் வரவில்லை என்றார். நான் அவரிடம், மொபைலை எடுத்து பேசு! என்றேன். அதற்கு அவரோ, புது எண்ணாக இருக்கிறது, கண்டிப்பாகத் தெலுங்கில் தான் பேசுவார்கள், நான் எடுக்க மாட்டேன்! என்றார். சரி விடு! அடிக்கட்டும், நான் வெளியில் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்து மொபைலை எடுத்துப் பார்த்தால், இரண்டு எண்களிலிருந்து பனிரென்டு மிஸ்டுகால்கள் இருந்தது. அந்த எண்களில் ஒன்றை தொடர்பு கொண்டு கேட்டால், சார், நாங்க! சுலேகா டாட் காமில் இருந்து பேசுகிறோம், நீங்க பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விவரம் தேடுகிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். நானும் அவரிடம் தெரியாமல் "ஆமாம்" என்று சொல்லிவிட்டேன். அவர் என்னிடம் நாங்க உங்களுக்குப் பல பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விபரங்கள் தருகிறோம், உங்க மெயில் ஐடியை தாருங்கள் என்று கேட்டார். மெயிலுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் மொபைலுக்கும் தொடர்ந்து மெசேஸ் வந்து கொண்டே இருந்தது.

தொடந்து வந்து கொண்டிருந்த மெஸேஜ்களில் இருவதிலிருந்து இருவத்தைந்து பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸின் விபரங்கள் மற்றும் போன் நம்பர்கள் இருந்தது. இதோடு விட்டுருந்தால் நல்லாயிருக்கும், ஆனா! அந்தப் பயபுள்ள நல்லவேலை ஒண்ண பார்த்துவிட்டு விட்டது. என்னனா, அந்த மெஸேஜில் இருக்கும் அனைத்துப் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்கும் என்னுடைய போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு ஓர் அடிமைச் சிக்கிட்டான்! அவன் வேறு, இன்னைக்கு வேலைவெட்டியில்லாமல் சும்மா தான் வீட்டில் இருக்கான்! எவ்வளவு பேசினாலும் தாங்குவான் போல! அதனால் உங்க திறமையைக் காட்டுங்கள்! என்று கோர்த்து விட்டு அவன் அமைதியாகிவிட்டான். அப்புறம் என்னா! காலையில, ஒரு பத்து மணிக்குச் ச‌ங்கை எடுத்து ஊத ஆரம்பிச்சது.



சார், நீங்க வீட்டு பொருட்கள் ஷிப்ட் செய்ய வேண்டும் என்று சுலோகா டாம் காமில் சொன்னீங்களாம்!

ஆமாங்க! சொல்லியிருந்தேன்!

நாங்க‌ *---$%%%.. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸூல இருந்து பேசுறோம்!

அப்படியா! சொல்லுங்க.

எங்க, சார்! போகனும்?

அங்க, தான் போகனும்!.

என்னவெல்லாம் கொண்டு போகனும்?

இதெல்லாம் கொண்டு போகனும்!.

மேஜர் பொருட்கள் மட்டும் சொல்லுங்க?

டீவி, பிரிஜ், டைனிங்டேபிள், செயர், கூலர், பெட்!.

வண்டி இருக்க? சார்!

வண்டி இல்லங்க.

அலமாரி இருக்கா? சார்!

அலமாரி இல்லங்க.

நாகர்கோவிலில் இருந்து உங்க ஊரு எத்தனை கிலோமீட்டர்?

பதிமூணு கிலோமீட்டர்.

இவ்வளவு ரூபாய் ஆகும் சார்!

அப்படியா, நான் டேட் இன்னும் கன்பார்ம் ஆகல, டேட் கன்பார்ம் ஆனதும் சொல்லுறேன்.

நான் எப்ப, சார்! கால் பண்ணட்டும்?

அடுத்த வாரத்துல, கால் பண்ணுங்க.

மொத்தம் பதிமூணு பேரு, ஓர் ஆளு நானு, தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் என்று மூணு லாங்கேஜ் வேறு! கதற‌, க‌தற மேலே கேட்டக் கேள்வியைப் பாரபட்சம் இல்லாமல் கேட்டார்கள். நானும் எவ்வளவு நேரம் தான் காதில் இரத்தம் வராதது போலவே நடிக்கிறது!.

இதுல ஒரே பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் இருந்து, இரண்டு மூன்று பேர் மாறி மாறி வேறு பேசினார்கள், ஏம்ப்பா! இப்ப, தான் உங்க ஆபிஸில் இருந்து விபரங்கள் கேட்டார்கள், என்று சொன்னால், சாரி, சார்! சுலேகாவில் இருந்து எனக்கும் மெஸேஜ் வந்தது, நான் ஆபிஸில் இல்லை, வெளியில் இருக்கிறேன். என்று மன்னிப்பு வேறு.

கொடுமை என்னானா! எல்லாத் தகவல்களையும் கேட்டுவிட்டு, சாரி, சார்! நாங்கள் லோக்கல் பேக்கர்ஸ் அண்ட மூவர்ஸ் ஸ்டேட் விட்டு ஸ்டேட் பண்ணுறது இல்லனு எகத்தாளம் வேறு. போதும்! இதோட நிப்பாட்டிக்கலாம்! என்று சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்பது தெரியாது.

காலையில, பத்து மணிக்கு ஆரம்பிச்சது, மாலையில் ஆறு மணி ஆன‌ பிறகும் விடலியே! நாலு பேரு, சார்! நாளைக்குக் காலையில வீட்டுக்கு வந்து, உங்க பொருட்களைப் பார்த்து கொட்டேசன் தருகிறோம் என்று அவர்களின் தொழில் நேர்மையை என்னிடம் விவரித்தார்கள்.

சும்மா, இணையத்தில் ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று போட்டுத் தேடியது ஒரு குற்றமா?. கடந்த ஒரு வாரமாகக் கொட்டேசன் வாங்குவதும், எப்ப, சார்! டேட் கண்பர்ம் பண்ணுவீங்க! என்ற கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிட்டு இருக்கிறேன்.

நேற்றைக்கு எனக்குப் பதிலாக இங்கு ஹைதிராபாத் ஆபிஸில் புதிதாக ஒருவரை எடுத்திருந்தார்கள், அவர் பூர்வீகம் சென்னை. ஹைதிராபாத்தில் வீடு வாடகைக்கு வேண்டும் என்று இணையத்தில் நேற்று தேடிக்கொண்டிருந்தார். இன்னைக்கு ஆபிஸுக்குக் கொஞ்சம் லேட்டா வருகிறேன்! என்று மெஸேஜ் மட்டும் எனக்கு அனுப்பியிருக்கிறார். பாவம்! யாருடைய போனில் சிக்கி தவிக்கிறாரோ? வந்தா தான் விசாரிக்க முடியும்.

பார்ப்போம்! இன்னொரு பதிவு எழுத்துவதற்கு மேட்டர் தேறுமா என்று!

.

Wednesday, May 28, 2014

கல்யாணம்_இந்த ஆவணியில் வேண்டாம்! அடுத்த ஆவணியில் பண்ணலாம்!

எனது அம்மாவின் சித்தி, அப்படியானால் எனக்குப் பாட்டி முறை வேணும். அவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள். அவர்களை வளர்ப்பதில் ஆண், பெண் பேதங்களைக் காட்டினார்களோ! இல்லையோ!, ஆனால் அவர்களைப் பெற்றெடுக்கும் போது சரிசமமாக நான்கு ஆண், நான்கு பெண் என்று ஆண், பெண் சமவுரிமையை நிலை நாட்டினார். அம்மாவின் சித்தப்பாவிற்கு, எனக்குத் தாத்தா முறைவரும், அவர்களுக்கு மாநில‌ அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தில் கிளர்க் வேலை. கணவருக்கு அரசு வேலையாக இருந்தால் பாட்டியால் எட்டுக் குழந்தைகளையும் வளர்ப்பதில் பெரிய கஷ்டம் இருக்கவில்லை. தாத்தாவிற்கும், பாட்டிக்கும் ஆண்டவர் இயேசுவின் மீது அளவுகடந்த பக்தி. ஞாயிறு என்றால் வீட்டில் ஒருவரையும் பார்க்க முடியாது. சர்ச்சில் இருக்கும் எல்லாக் குழுக்கள் மற்றும் சபைகளிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கும். இவர்களுக்குச் சர்ச்சின் மீது இருந்த அதே ஆர்வம் பிள்ளைகளுக்கும் இருந்தது. அதனால் அவர்களின் மூத்த மகள் மற்றும் இளைய மகள் தவிர, மற்ற‌ இரண்டு மகள்களும் கல்யாணம் வேண்டாம் என்று துறவறக் கன்னியர் சபைக்குச் சென்றுவிட்டனர்.

பாட்டிக்கு வரிசையாக‌ பிறந்த எட்டுப் பிள்ளைகளில், கடைக்குட்டியைத் தவிர அனைத்துப் பிள்ளைகளுக்கும் உள்ள பிறப்பின் இடைவெளி என்பது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் தான். கடைக்குட்டி மட்டும் ரெம்பவும் தாமதமாகப் பிறந்தான். கன்னியராகத் துறவறச‌பைக்குச் சென்று இரண்டு சித்திகளைத் தவிர மற்ற இரண்டு சித்திகளுக்கும், இரண்டு மாமாவிற்கும் திருமணத்திற்கான இடைவெளிகள் என்பது ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் இருக்கும். எல்லோருக்கும் ரெம்பத் தாமதமாகத் தான் தாத்தாவும், பாட்டியும் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது மீதம் இருப்பது கடைக்குட்டி மாமாவும், அதற்கு முந்தைய மாமாவும். கடைக்குட்டி மாமாவின் வயதில் இருக்கும் பையன்களுக்கே கல்யாணம் முடிந்தும், பலருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றது. கடைக்குட்டி மாமா பிறந்ததே ரெம்பத் தாமதம் என்று முன்பே நான் சொல்லியிருந்தேன். கடைக்குட்டி மாமாவிற்கும், அதற்கு முந்தைய மாமாவிற்கும் உள்ள வயது வித்தியாசம் எப்படியும் ஆறிலிருந்து ஏழு இருக்கலாம். அப்படியானால் கடைக்குட்டிக்கு முந்தைய மாமாவின் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவரின் வயதை நான் கணக்கிட்டு எழுதினால், இங்கு ஒரு முதிர்கன்னனின்(முதிர்கன்னிக்கு எதிர்பால் முதிர்கன்னனாகத் தானே இருக்கும்!!, உன்னோட தமிழ‌றிவில் தீயை வைத்துக் கொளுத்த!!) வயதை எழுதிய பாவத்திற்கு ஆளாவேன்.

கல்யாணம் ஆகாமல் இருக்கும் மாமாவிற்கு ஊரில் தான் வேலை. எலட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் ஒர்க்குகள் சொந்தமாகக் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்வார்கள், நன்றாகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளும் வேலையில்லை என்று வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். நான் ஊருக்கு வந்திருக்கிறேன் என்று எவர் மூலமாக அறிந்தால், அன்றே எனது வீட்டிற்கு வந்து நலன் விசாரிப்பார்கள். வெளியில் எங்குக் கண்டாலும் என்ன மருமவனே! எப்ப‌டி இருக்கிற? இப்போது எந்த இடத்தில் இருக்கிறாய்? என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்திற்கு முன்பு, நானும் அவரிடம், எப்படி மாமா நல்லாயிருக்க முடியும்?. நீங்க காலக் காலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தா எனக்குச் சைட் அடிக்க நல்ல ஒரு பெண்ணையாவது பெத்து வைத்திருப்பீங்க!! இப்போது பாருங்கள், சைட் அடிக்கக் கூட நல்ல பொண்ணு ஒண்ணும் கிடைக்க மாட்டேங்கிறது! என்று நக்கல் அடிப்பேன்.

மாமாவின் வயதை அவரது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஊகித்து விட முடியாது. தலைமுடி மட்டும் தான் ஆங்காங்கே நரைத்து இருக்கும். உருவத்தில் இளமையாகத் தான் இருப்பார்கள். மாமாவிற்கு இருக்கும் சொந்தபந்தங்களுக்குக் குறைவில்லை. அவருடன் பிறந்தவர்கள் மட்டுமே, ஆளுக்கு ஒரு திசையாகத் தேடியிருந்தால் கூட எப்போதோ அவருடைய கல்யாணம் முடிந்திருக்கும். நான் ஊருக்கு வந்துபோகும் போதேல்லாம் இந்த வருடமாவது கல்யாணம் நடக்குமா மாமா? என்று கேட்பேன். வீட்ல இருக்கிறவர்கள் பாக்குறாங்கடா! ஒண்ணும் அவசரம் இல்ல! பொறுமையாக‌ பண்ணிக்கலாம்! என்று பதில் சொல்லுவார்கள். பெரும்பாலும் ஒருவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்தால் நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் செல்லுவார்கள். ஆனால் இவருக்கு வீட்டில் உள்ளவர்கள் வருடக் கணக்கில் பார்த்தார்கள்.

நான் ஊருக்கு சென்றுவரும் போதெல்லாம் எப்போது மாமா, கல்யாணசாப்பாடுப் போட போறீங்க? என்று கேட்க மறப்பதில்லை. அவரும் சிரித்துக் கொண்டே நீ, கல்யாணசாப்பாடுச் சாப்பிட வேண்டும் என்பத‌ற்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்லிச் சிரிப்பார். சில நேரங்களில் வீட்டில் உள்ளவர்களைக் குறையாகச் சொல்லி கவலைப்படுவார். எனக்குத் திருமணம் முடிந்த பிறகு அவரிடம் கல்யாணம் பற்றிய‌ பேச்சுகளைப் பற்றி அதிகம் பேசுவது கிடையாது. கண்டிப்பாக இப்போது நான் அவருடைய கல்யாணம் பற்றிக் கேட்பது அவருக்கு உறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தால் அதைப் பற்றிப் பேசுவது இல்லை. சில வருடங்களாகவே அவருடைய முகத்தில் கல்யாணத்தைப் பற்றிக் கவலைகள் அதிகமாகத் தென்பட்டது. எப்போதும் மழிக்காத, டிரிம் செய்த‌ அரைத் தாடியுடன் தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எனது வீட்டில் உள்ளவர்கள் எவரேனும் கல்யாணம் பற்றிக் கேட்டால் சலிப்பாகப் பதில் சொல்வார்கள், அல்லது வேறு திசைக்குப் பேச்சை மாற்றுவார்கள்.

கடந்த வாரம் ஊருக்குப் போயிருந்தபோது மாமாவை ஒரு வேலையாகச் சென்ற வழியில் பார்க்க முடிந்தது. முகம் வழவழப்பாக மழிக்கப்பட்டு, தலைமுடியும் அடர்கருப்பில் காட்சியளித்தது. மாமாவிடம் அவருடைய மாற்றம் குறித்து எதுவும் கேட்காமல், சாதரண நலன் விசாரிப்புகள் மட்டும் விசாரித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அண்ணனிடம் மாமாவின் மாற்றத்தைப் பற்றிக் கேட்டேன். ஆமாடா, அவங்களுக்கு நம்ம ஊரிலேயே ஒரு பொண்ணைப் பார்த்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருக்கும் போய்ப் பார்த்திருக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம். நிச்சயதார்த்தம் தேதியும் குறித்துவிட்டார்கள் என்றான். எனக்கும் மனதிற்குச் சந்தோசமாக இருந்தது.

மறுநாள் மாலையில் வெளியில் சென்றுவந்த அப்பா, மாமாவிற்குப் பார்த்து வைத்திருந்த பெண்ணின் வீட்டார்கள், இந்தத் திருமணம் வேண்டாம்! நிறுத்திவிடலாம்! என்று சொல்லிவிட்டார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். நான் அப்பாவிடம் என்ன காரணம்? என்று கேட்டேன். அப்பாவிடம் விசயத்தைச் சொல்லியவருக்கும் சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. மொட்டையாகப் பெண் வீட்டார்கள் திருமணம் இப்போது வேண்டாம்!! என்று சொல்லியதாகக் கூறினார்கள். இதைக் கேட்டுகொண்டிருந்த அம்மா, நேற்று மூத்தவன்(தாத்தாவின் எட்டுப் பிள்ளைகளில் முதலானவர்) வீட்டிற்கு வந்திருந்தான். தான் இன்னும் இளையவனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நேரில் பார்க்கவில்லை என்றும், நேற்று மாலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்ப்பதாகவும் சொன்னானே!!. ஒருவேளை இவர்கள் சென்று பார்த்த நேரத்தில் தான் ஏதேனும் பிரச்சனை வந்திருக்கும், எதற்கும் அவனை விசாரித்தால் தெரியும்! என்று மூத்த மாமாவிற்கு அம்மா போன் செய்தார்கள்.

நீங்கள் கேள்விப்பட்ட‌ விசயம் உண்மையானது தான்!. அவன் நாளைக்குக் காலையில் வீட்டிற்கு வந்து என்ன விசயம் என்பதை விளக்கமாக‌ சொல்லுகிறேன் என்று போனை வைத்துவிட்டான் என்று சொல்லி, அம்மா அப்பாவின் முகத்தைப் பார்த்தார்கள்.

காலையில் வீட்டிற்கு வந்த மூத்த மாமா அம்மாவிடம், தம்பிக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நானும் என்னோட பொண்டாட்டியும் பார்க்கவில்லை. வீட்ல உள்ளவர்கள் எல்லோரும் பெண்ணைப் பார்ப்பதற்குப் போகும் போது என்னோட குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லாத‌தால் நானும் வீட்டுக்காரியும் குழந்தையை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போய்விட்டோம். அன்றிலிருந்தே என்னிடம் நீயும் அண்ணியும் வந்து எனக்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பாருங்க! என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சரி! என்று சொல்லி இளையவன்(கடைக்குட்டி மாமா), நான், என்னோட மனைவி, குழந்தை மற்றும் அப்பாவும் போய்ப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். கிளம்புகின்ற நேரம் நானும் உங்க கூட வருகிறேன் என்று சொன்னான். அவனுக்காக‌ தான் பொண்ணையே பார்ப்பதற்குப் போகிறோம், நீ எங்க கூட வரதே! என்று அவனைத் தடுக்கவா முடியும். சரி வா! என்று சொன்னோம்.

பெண்ணின் வீட்டிற்குச் சென்று அமர்ந்திருந்தோம். அப்போது பெண்ணின் அம்மா தான் பேச்சை ஆரம்பித்தார்கள், எனக்கு இருப்பது இரண்டு பெண்கள், ஒரு பையன். மூத்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவளோட மாப்பிள்ளை ஒரு குடிக்காரன். அவனால ஒரு பிரியோஜனம் இல்ல, இந்தக் கல்யாணத்தை முன்னின்று நடத்த வேண்டிய என்னோட புருசனும், மூக்கு முட்ட குடிச்சிட்டு இந்தா ரூம்ல‌ கட்டிலில் விழுந்து கிடக்கிறான், அதனால எதுனாலும் நான் தான் பேச வேண்டும் என்றார்.

வீட்டின் நிலைமையை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசினார். என்னோட பையன் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். அவன் ஆவணி மாதம் தான் ஊருக்கு வருகிறான். இப்போது சித்திரை மாதம், நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். எங்கள் பையன் வரும் ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்றார். இதைக் கேட்டுகொண்டிருந்தவன் சட்டென்று இந்த ஆவணி மாதம் எதற்கு? அடுத்த வருடம் ஆவணி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று நக்கலாகப் பதில் சொன்னான். இவ்வாறு இவன் பேசியது பெண்ணின் அம்மாவிற்குக் கோபத்தைத் தூண்டியிருக்கும். ஆனால் அவர் அதைப் பேச்சில் வெளிக்காட்டாமல் முகத்தில் வெளிக்காட்டினார். பெண்ணின் அம்மா எந்தவொரு விசயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், பக்கத்தில் இருந்தவன் சும்மா இருக்காமல் அவர்கள் பேசுவதை நையாண்டி செய்வது போலவே பேசினான். நான் கையைப் பிடித்து அழுத்திகொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நீ அமைதியாக இரு! பெரியவர்கள் பேசட்டும் என்றும் சொன்னேன். அவன் எதுவும் காதில் போட்டு கொள்ளவில்லை.

இவனுக்குப் பெண்ணின் அம்மா ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னது பிடிக்கவில்லை. உடனே கல்யாணம் செய்யவேண்டும் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தான்.

எது எப்படியோ, இவன் இவ்வாறு நக்கல் செய்து கொண்டிருந்தது பெண்ணின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. நாங்கள் வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வரும் போது, எவர் இந்தத் திருமணத்திற்காக ஓட்டன்(புரோக்கர்) வேலைப்பார்த்தாரோ அவரிடம், என்னோட பொண்ணுக்கு நான் இப்போது கல்யாணம் பண்ணவில்லை. மெதுவாக வேற‌ நல்ல இடமாகப் பார்க்கலாம் என்று எனது காதில் படும்படியே சத்தமாகச் சொன்னார். அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்தோம் என்று கூறி முடித்தார்.

அட! மாமா! மாமா!

சாப்பாட்டை ஆக்க பொறுத்த நீங்க!! ஆற பொறுக்கலியே!!!

.

Saturday, May 3, 2014

தயவுசெய்து கிச்சன் பக்கம் வராதீங்க!!!

அன்றைக்குச் சனிக்கிழமை, ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் தூங்கி எழுவதேற்கே லேட்டாகிவிட்டது. மனைவியோ சீக்கிரமே எழுந்து டிபன் ரெடி பண்ணிவிட்டார். நான் பல்தேய்த்து, குளித்து டிபன் சாப்பிட டேபிளில் அம‌ரும் போது மணியானது பத்தை தாண்டியிருந்தது. வாரிய தலையுடன் வெளியில் கிளம்பிய மனைவி எனக்கு அவசர அவசரமாக நான்கு இட்லியை தட்டில் பரிமாறிவிட்டு, "நான் பக்கத்து வீட்டு அக்கா கூடச் சூப்பர் மார்கெட் போய் வருகிறேன், கொஞ்சம் நீங்க ப்ரிஜில் இருக்கும் கீரையை வெளியில் எடுத்து ந‌றுக்கி மட்டும் வைச்சுருங்க!" என்று சொல்லிவிட்டுக் கையில் கூடையுடன் கிளம்பினார்.

காலையில் எப்போதும் டிபன் சாப்பிடும் நேரத்தை விட இன்று லேட்டாக இருந்ததாலோ என்னவோ, பசி அதிகமாக இருந்தது. தட்டில் மனைவி வைத்த நான்கு இட்லி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு இட்லி எடுத்து சாப்பிட்டுவிட்டு கிச்சன் சென்று ப்ரிஜ்ஜில் பாலீதீன் கவரில் இரண்டு கட்டுகளாகக் கட்டியிருந்த கீரையை எடுத்தேன். கீரையின் வேரில் அதிகமான அளவு மண் ஒட்டியிருந்தது. அதைத் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நறுக்கத் தொடங்கினேன். இரண்டு கட்டுகளையும் நறுக்கிய போது ஒரு பெரிய தட்டு முழுவதும் வந்தது.

சூப்பர் மார்கெட் சென்ற மனைவி திரும்பி வருவதற்கு நேரம் இன்னும் அதிகமாகவே இருந்தது. அதனால் நறுக்கிய கீரையை நாமே பொரியல் செய்தான் என்ன? என்ற எண்ணம் மனதில் எழவே, உடனே அதைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கினேன். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவையிரண்டையும் தனியாக நறுக்கி வைத்துக் கொண்டேன். தேங்காயும் துருவி தனியாக ஒரு தட்டில் அரைத்து வைத்துக் கொண்டேன். இப்போது ஸ்டவ்வில் கடாயை வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம் பருப்புப் போட்டு, வெங்காயம் பச்சை மிளகாயைக் கொட்டி வதக்கிவிட்டு நறுக்கிய‌ கீரையைக் கொட்டினேன்.



கொட்டிய கீரையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்புப்போட்டு கிளறி, கடாயைச் சிறிது நேரம் மூடி வைத்தேன். சிறிது நேரத்தில் மூடியை எடுத்து கீரையைக் கிளறிவிட்டு ரெடியாக இருந்த தேங்காயைத் தூவி இறக்கினேன். இருபதில் இருந்து முப்பது நிமிடங்களில் எல்லாம் வேலையும் முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து டீவியை ஆன் செய்து ஒவ்வொரு சானலாக மாற்றத் தொடங்கினேன்.



சிறிது நேரத்தில் சூப்பர் மார்கெட் சென்ற மனைவி வீட்டிற்குள் நுழைந்தார். வாயிலில் நுழையும் போதே, நான் கீரையை நறுக்கி மட்டும் தானே வைக்கச் சொன்னேன், பொரியலே பண்ணிடீங்களா!! என்று ஹாலில் இருந்த‌ என்னிடம் கேட்டுக் கொண்டே கிச்சனுக்குள் சென்றார். கிச்சன் ஷெல்பில் அவர் கழுவி அடுக்கி வைத்திருந்த மொத்தப் பாத்திரங்களும், இப்போது வாஷ் பேஷனில் கிடந்தது. ஒரு கீரையைப் பொரியல் பண்ணுவதற்குள் இவ்வளவு பாத்திரங்களையா எடுத்து வாஷ் பேஷனில் போடுவது? என்று கேள்வியை என்னிடம் திருப்பினார்.

ஆமா!! என்பது போல் பெரிதாக‌ தலையை ஆட்டி வைத்தேன்.

சரிங்க, வாஷ் பேஷ‌னில் இருக்கும், இந்த இரண்டு பெரிய பாத்திரத்தை வைத்து என்ன செய்தீர்கள்?

கீரையின் வேரில் மண் அதிகமாக ஒட்டியிருந்தது, அதனால் ஒன்றில் மாற்றி ஒன்றில் கழுவினேன்.

அதுக்கு எதுக்குப் பாத்திரம்? வாஷ்பேஷனில் இருக்கும் டேப்பை திறந்துவிட்டே கழுவலாமே!!

ஓ!! இதை இப்படிக் கூடச் செய்யலாமா என்று மைன்ட் வாய்ஸ் சொல்லியது.
ஆமாயில்ல, சரி அடுத்த முறை அப்படியே கழுவலாம்..

ஆமாங்க!! எதுக்கு ரெண்டு கடாயும் எடுத்துக் கழுவுதற்குப் போட்டிருக்கீங்க? சின்னக் கடாயில் தானே கீரையைப் பண்ணியிருப்பீர்கள், அப்புறம் எப்படிப் பெரிய கடாயும் வாஷ் பேஷனுக்கு வந்தது?.

சின்னக் கடாயில் தான் பொரியல் பண்ண ஸ்டவ்வில் வைத்தேன், கீரையை முழுவதும் கொட்டிய போது அந்தச் சிறிய‌ கடாயில் நிற்கவில்லை, அதனால் பெரிய கடாயை எடுத்து மாற்றினேன்.

என்னது!! சின்னக் கடாயில் கீரை நிற்கவில்லையா? அப்படினா எத்தனை கட்டுகள் எடுத்து பொரியல் செய்தீர்கள்?.

ப்ரிஜ்ஜில் இருந்த இரண்டு கட்டையும் நறுக்கி பொரியல் செய்தேன்.

நாம் ரெண்டு பேரும் சாப்பிட‌ ரெண்டு கட்டு கீரையா?. ஒரு கட்டுத் தாராளமா போதுமே, பண்ணியது எல்லாம் சரிதான், ரெண்டு கட்டையும் நீங்க தான் சாப்பிடணும்!!

அதுக்கென்ன!! சாப்பிட்டால் போச்சு!!

ஆமா! ஷெல்பில் இருந்த மொத்த தட்டுகளும் இங்க தான் கிடக்குது!! அதுல என்ன செய்தீர்கள்?.

அது.. வந்து... ஒரு தட்டுல வெங்காயம் வெட்டி வச்சேன், அப்புறம்ம்ம்ம் ஒரு தட்டுல பச்சை மிளகாய் வெட்டி வச்சேன், இன்னொன்னுல தேங்காய்....

எல்லாம் சரிங்க!! கீரை பொரியல் பண்ணுவதற்கு எதுக்குங்க மிக்சி?..

அது வந்து, தேங்காயை துருவி துருவி பார்த்தேன், சரியாக வரல, அதனால தேங்காயை உடைத்து போட்டு மிக்சியில் அரைத்து கொட்டினேன்..

பத்து நிமிடத்தில் நான் செய்யுற பொரியல், அதை நீங்கள் செய்து ஒரு மணி நேரம் எனக்குப் பாத்திரம் கழுவும் வேலையைக் கொடுத்திருக்கிறீர்கள்!!!

"இதுக்கு பேசாமல் கையை காலை வச்சுட்டு, டீவியாவது பார்த்திருக்கலாம்". மைன்ட் வாய்ஸ்

ஹாலில் ஓடிய டீவியில் வெற்றிக்கொடி க‌ட்டுப் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விகளுக்குப் பார்த்திபன் கொடுக்கும் பதிலை பார்த்து, வடிவேலு தன் முகத்திற்கு நேரே கையை நீட்டி வேணுன்டா!! உனக்கு வேணும்!! என்ற வசனம் பேசும் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.


.

Wednesday, April 16, 2014

சூடு கண்ட பூனையாய் நான்_தேங்காய் சிதறல்!!!

சூடு-1: தேங்காய் சிதறல்

எனது மாவட்டம் முன்பு கேரளாவோடு தொடர்பு இருந்ததாலோ என்னவோ, எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள், எந்த‌க் குழம்பு வைத்தாலும் தேங்காய்ச் சேர்க்காமல் இருக்க மாட்டார்கள். என‌து மனைவியிடமும் தேங்காய் இல்லாமல் ஒரு குழம்பு வை என்றால் முழிக்கத் தான் செய்வார். அதனால் எங்கள் இருவருக்கு மட்டுமே ச‌மையல் செய்தாலும், வாரம் இரண்டு தேங்காயாவது செலவு ஆகும். அதனால் ஊரிலிருந்து எப்போது வந்தாலும் ஓர் அட்டைப்பெட்டியில் தேங்காய் எடுத்துவர மறப்பதில்லை.

சமையலுக்குத் தேவையான தேங்காயை என்றைக்குமே மனைவி தான் இரண்டாகப் பிளைப்பார். அவர் கொஞ்சம் மெதுவாக டொக், டொக் என்று பலதடவை வெட்டுக்கத்தியால் எல்லாபுறங்களிலும் வெட்டி சரிசமமாக இரண்டாகப் பிளந்துவிடுவார். அன்றைக்கு ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் வீட்டில் ஹாலில் அமர்ந்து டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவி தேங்காய் உடைப்பதற்கு டொக்..டொக் என்று வெட்டத் துவங்கினார். நாம் வீட்டில் இருக்கும் போது மனைவி தேங்காய் உடைப்பதா? என்று கடமையுணர்ச்சிப் பொங்கலுடன் கிச்சனுக்குச் சென்று மனைவிடம் இருந்த தேங்காயை வாங்கினேன்.

அவர் வேண்டாம் உங்களால் சரியாக உடைக்க முடியாது, நானே உடைத்துக் கொள்கிறேன், நீங்க போய் எப்பவும் போல் டீவியைப் பாருங்க என்று என்னிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். பிளாக் பண்ணிய வெப்சைட்டேயே ப்ராக்ஸிப் போட்டு உடைக்கிறோம், இதைச் செய்ய மாட்டோமா? என்று மனைவியை ஒரு நக்கல் பார்வையால் பார்த்துக் கொண்டே தேங்காயை உடைக்கத் தயாரானேன்.

தேங்காய் எப்போதும் வாங்குவதை விட அளவில் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. தேங்காய் எப்படி உடைக்க வேண்டும் என்று தெரியுமா? இப்படி உடைக்க வேண்டும்! என்று மனைவியைப் பார்த்துக் கொண்டே தலைக்கு மேல் வெட்டுக்கத்தியை ஓங்கி முதல் வெட்டை தேங்காயின் மீது போட்டேன், அந்த வெட்டு தேங்காயின் நடுவில் விழாமல் ஓரமாக விழுந்து தொலைத்தது. வெட்டு சரியா விழவில்லை! என்று மனைவியைப் பார்த்து வழிந்துவிட்டு, இரண்டாவது வெட்டை போட்டேன். வெட்டிய வேகத்தில் தேங்காயில் மேல் உள்ள ஒரு சிறு துண்டு சிரட்டை பாய்ந்து வந்து நெற்றியைப் பதம் பார்த்தது. சுர்ரென்று எரிச்சலுடன் வந்த வலியை வெளிக்காட்டாமல் தேங்காயைப் பார்த்தேன். இப்போது விழுந்த வெட்டு முன்பு விழுந்த வெட்டிற்கு எதிர் பக்கத்தில் தேங்காயின் ஓரமாக விழுந்து சிரட்டையைச் சிராய்த்திருந்தது. அந்தச் சிராய்த்த சிரட்டைத் துண்டுதான் என் நெற்றியைப் பதம் பார்த்திருக்க வேண்டும்.

இந்த முறையும் தேங்காயுடன் மோதியதில் நாக்அவுட் ஆனதால், மனைவியின் முகத்தைப் பார்க்காமல் கோபத்தில் இன்னும் வலுவாக ஓங்கி மூன்றாவது வெட்டை குறிப்பார்த்து நடுவில் போட்டேன். வெட்டு எங்கு விழுந்தது என்று பார்பதற்குள் கையிலிருந்த தேங்காய் நான்கு பகுதியாக உடைந்து, ஆளுக்கொரு திசையாகப் பலமான சத்ததுடன் போய் விழுந்தது. வடிவேலு ஒரு படத்தில் தன்னுடைய மனைவியிடம் சண்டையிடும் போது அங்க என்னமா சத்தம்! என்று முறுக்கு மீசை மாமானார் வீட்டில் கீழிருந்து கேட்பது போல, எங்களுடைய ஹவுஸ் ஓனர் ஆன்டியும் அங்க என்னமா சத்தம் என்று கீழிருந்துக் குரல் கொடுக்க, என்னுடைய மனைவி வெளியில் சென்று ஒண்ணும் இல்ல ஆன்டி, தேங்காய் உடைக்கும் போது கைத் தவறிக் கீழே விழுந்துவிட்டது என்று சமாளித்து வந்தார்.

நான் மெதுவாக‌ உடைத்திருந்தாலும் இரண்டு பாகமாக உடைத்தியிருப்பேன். இப்படி நான்கா உடைத்து போட்டிருக்கீங்க?. இதைத் துருவலில் வைத்து எப்படித் துருவது? என்று என்னை முறைக்க ஆரம்பித்தாள் மனைவி.

இவ்ளோ பன்ணிட்டோம்! இதைப் பண்ண மாட்டோமா! என்று மனைவின் கையிலிருந்த தேங்காய் துண்டுகளையும், கத்தியும் எடுத்துக் கொண்டு போய் ஹாலில் உக்கார்ந்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட‌த் துவங்கினேன். ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டீவியில், டேய்!! சின்னப் பேச்சாடா பேசினா! இதுவும் வேணும்! இதுக்கு மேலும் வேணும்! என்ற வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடி ஆதித்யா சேனலில் போய்க்கொண்டிருந்தது.



குறிப்பு: இந்தத் தலைப்பில் அவ்வப்போது மேலும் சில‌ சிறுகதைகள் வரும். அதனால் தான் சூடு-1 என்று இதற்குச் சப் டைட்டில் போட்டிருக்கிறேன்.

.

Saturday, April 12, 2014

சொம்பு அடிக்கத் தீயா வேலைசெய்யணும் குமாரு!!!

1) புராஜெக்ட் மீட்டிங் என்று சொன்னவுடனேயே மேனேஜர் பேசுவதற்கு முன்னால் இருக்கும் செயரில் போய் அமர்ந்து கொள்ளவேண்டும். முக்கியமாக மேனேஜர், ஐ அம் கரெக்ட என்று கேட்பது நம்மைப் பார்த்துக் கேட்பதாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும். அப்படி அவர் கேட்கும் போது அவர் சொன்னது புரிஞ்சுதோ இல்லையோ எஸ் சார், யூ ஆர் கரெக்ட் என்று பெரிசா தலையை ஆட்டி வைக்க வேண்டும். அப்போதே அவர் கவனம் உங்க மேல பட்டுவிடும்.

2) புராஜெக்ட் மீட்டிங் நடந்து கொண்டிருக்குப் போது, எல்லாம் தெரிஞ்சவனே மூடிக்கிட்டு அமைதியாக இருக்கும் போது, நாம் மட்டும் பெருசா சவுண்டை கொடுக்கணும். சொல்லுறது தப்பா இருந்தாலும் அதுக்கு ஒரு பீட்டர் இங்கிலீஸ்ல ஒரு வெளக்கெண்ணை விளக்கம் கொடுக்கணும். மேனேஜர் பேசும் போது, ஒவ்வொரு சென்டென்ஸையும் அவரு முடிக்குப் போது நாமளும் எல்லாம் தெரிஞ்ச‌ ஏகாம்பர‌ம் போல முடிக்கிற வார்த்தையை மட்டும் சவுண்டா சொல்லி முடிக்கணும்.

3) பண்ணுற புராஜெக்ட்ல ஏதாவது தப்பு நடந்து பிரச்சனையாகி, மேனேஜ‌ர் அழைத்து திட்டும் போது, தப்பித் தவறி கூட எதிர்வினை ஆற்றிவிடக்கூடாது. முகத்திலேயே குத்தினாலும் வலிக்காத மாதிரியே முகத்தை வச்சுக்கனும். எல்லாம் திட்டி முடிச்சதுக்கு அப்புறம், அவருகிட்ட போயி "சாரி சார், அடுத்த முறை அதை நால மடிச்சு எட்டா அடுக்கி வைப்பேன்" என்று வழிய வேண்டும். ரெம்ப முக்கியமானது, அறையை விட்டு வெளியே வரும் போது மேனேஜருக்கு நன்றி சொல்ல மறந்துவிடக் கூடாது. இதை ஏன் ரெம்ப முக்கியம் என்று சொல்கிறேன் என்றால் நீங்க திட்டியது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுவதற்கு.(சுரணையில்லை என்பதை நாசுக்கா எப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு).

4) எல்லா ஆபிஸுலும் நால்லா வேலை செய்தும், மேனேஜருக்குப் பிடிக்காமல் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். அவனை முதலில் தேடி அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும். அப்புறம் என்ன!! புராஜெக்ட்டில் என்ன தவறு நடந்தாலும் அவன் மீது பழியைப் போட்டு ஒன்றுக்கு நாலாக மேனேஜ‌ரின் அறைக்குச் சென்று வத்தியை வைக்க வேண்டும். முடிந்தால் அவனுடைய பிர்சனல் விசயங்களையும் ஸ்பை மூலம் அறிந்து மேனேஜருக்கு அவ்வப்போது சுவாரசியமாகப் பரிமாற வேண்டும்.

5) ஆபிஸுக்கு மேனேஜர் வருவதற்கு முன்பாகவே நாம் ஆபிஸுக்கு வந்துவிட வேண்டும், தப்பித் தவ‌றி கூட மாலையில் மேனேஜர் ஆபிஸை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு நாம் கிளம்பி விடக்கூடாது. மேனேஜர் அறைக்கு வந்தவுடன், எழுந்து சென்று குட்மார்னிங் சொல்லி வர வேண்டும். எதிரில் அவரைப் பார்க்கும் போதேல்லாம் சலாம் வைக்கத் தவற‌க்கூடாது. அப்படியே அவர் எதிரில் வரவில்லையென்றால் அதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும்.

6) காலையிலே ஆபிஸுக்கு வந்தவுடன் ஒரு நியுஸ் பேப்பரையும் விடக் கூடாது அத்தனையும் மதியத்திற்கு முன்பு படித்துவிட வேண்டும், அப்ப மதியதுக்கு மேல வேலை செய்யணுமான்னு நீங்க கேக்குறது புரியுது. அதுவும் இல்ல, லன்ச் முடித்து வந்தவுடன் பேஸ் புக்கை ஒரு ரவுண்டு கட்டி அடிக்கணும். அப்ப எப்ப தான் வேலை பாக்குறது என்று சின்சியர் சிகாமணியா, நீங்க கேட்பது புரிகிறது. மாலையில் நான்கு மணிக்கு மேல‌ மெதுவாகப் பைல்களை ஓபன் பண்ணி என்ன பண்ணலாம் என்று யோசிக்கணும், முடிஞ்சா அது சரியில்லை, இது சரியில்லை என்று வேலையை ஆரம்பிப்பதுக்கு முன்னே மேனேஜருக்கு சிசி வைச்சு நாலு மெயிலை தட்டணும். அந்த‌ மெயில்களுக்கு "எல்லாம் இருக்குடா!! கண்ணை நல்லா திறந்து பாருனு" ரிப்ளே மெயில் வந்தாலும் கவலையே படாமல் அடுத்த மெயிலை டைப் பண்ண தொடங்க வேண்டும்.

7) நாலு மணிக்கு மேல் வேலையை ஆரம்பித்துப் பக்கத்தில் இருக்குறவன் வீட்டிற்கு நகர்ந்தாலும், நாம சீட்டைவிட்டு நகரக் கூடாது. ரெம்பச் சின்சியரா வேலை பார்ப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, யாரெல்லாம் வீட்டிற்குப் போகிறார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும். ஆறு மணிக்கு மேலே மேனேஜர் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்து வீட்டிற்குக் கிளம்பலியா என்று கேட்கும் போது, ஒரு பைல் பாதியில நிக்குது சார், அதை படுக்க வச்சுட்டு கிள‌ம்புறேன் என்று பருப்பா! சாரி பொறுப்பா! பதில் சொல்ல வேண்டும்.

8) புராஜெக்ட்டில் ஏதாவது உங்களுக்குத் தெரியவில்லை என்றால் டீமில் இருக்கும் சீனியரிடமோ, டீம் லீடரிடமோ கேட்கக் கூடாது. நேரடியாக‌ நாட்டாமை டூ பாங்காளி, பங்காளி டூ நாட்டாமை என்பது போல் மேனேஜர் டூ நாம், நாம் டூ மேனேஜர் என்பது போல் தான் வைத்துக்கொள்ள வேண்டும். உப்புக்கு பெறாத அடுத்தவன் விசயமாக இருந்தாலும் மேனேஜரின் அறைக்குச் சென்று போட்டுக் கொடுத்துவிட்டு தான் மறுவேலையே பார்க்க வேண்டும். உங்களுடன் புராஜெக்ட்டில் இருக்கிறவன் உங்களை ஒரு பொருட்டாவே கருத‌வில்லையென்றாலும், நான் உங்களிடம் வந்து பேசுவதால் "புராஜெக்ட்டில் இருக்குக்கிறவர்கள் என்னை ஒதுக்குகிறார்கள்" என்று எஸ்ட்ரா பிட்டையும் சேர்த்து மேனேஜர் காதில் போட வேண்டும்.

9) வேலையைச் சீக்கிரமே முடித்துவிட்டாலும், தப்பித் தவறி கூட நம்முடைய‌ அவுட்புட்டை ஆபிஸ் நேரத்தில் மெயில் பண்ணிவிடக் கூடாது. ஆபிஸ் முடிந்து எல்லோரும் வீட்டிற்குப் போனதுக்குப் பிறகு தான் டெலிவிரபிள் மெயில் பண்ணனும், முடிந்தால் ஆபிஸில் காத்து இருந்து, லேட் நைட் பண்ணினால் இன்னும் பெரிய ஆளாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மறுநாள் மேனேஜர் வந்து எல்லார் முன்னிலும் உங்களுடைய சின்சியாரிட்டியை பாராட்டாமல் இருக்க மாட்டார்.

10) மேனேஜ்மென்டில் இருந்து நடத்தும் பார்ட்டி மற்றும் கல்ச்சுரல் புரோகிராம், கெட் டுகெதர் போன்ற‌ ஒன்றையும் தவற விடக்கூடாது. முதல் ஆளாகப் போயி மேனேஜர் பக்கமாகச் சீட் இருந்தால் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றிய அறிவிப்புகள் மற்றும் போட்டோக்கள் மெயிலில் வரும் போது, ரெம்ப நன்றி, நான் கலந்து கொண்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், உங்களை அங்குப் பார்த்ததில் ம‌கிழ்ச்சி என்று அந்த மெயில்களுக்கு ரிப்ளே பண்ணத் மறக்க‌க்கூடாது.

                                                 *-------**-------**-------**-------**-------*




இவ்வளவும் கடந்த வருடம் நீங்கள் செய்தவரா? அப்ப கவலையே வேண்டாம் அடுத்த மாதம் உங்களுக்கு டபுள் இங்கிரிமென்ட்.

இவ்வளவும் கடந்த வருடம் நீங்கள் செய்யவில்லையா? கவலையை விடுங்க, அடுத்த வருடம் நாம‌ டபுள் இங்கிரிமென்ட் வாங்க, சொம்படிப்போம் சாரி சேர்ந்துழைப்போம். கவுண்டவுன் ஸ்டார்ட்...

                          தீயா வேலைசெய்யணும் குமாரு!!!

.

Thursday, March 27, 2014

இவங்களே இப்படித்தான்!!! குத்துங்க எசமான் குத்துங்க!!!

1) ஒரு வாரமாகப் புதிதாக வந்திருக்கும் சினிமாக்குப் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியிடம் இன்னைக்குக் கண்டிப்பா நாம ஈவ்னிங் படம் பாக்க போறோம் என்று தலையில் அடிக்காத குறையாகச் சத்தியம் செய்து விட்டு ஆபிஸுக்கு வந்து இருக்கிற வேலையெல்லாம் இழுத்து போட்டு எவ்வளவு சீக்கிரமா செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமா செய்து விட்டு, பிடுங்கிய ஆணியை எல்லாம் ஒரு ரிப்போட்டா போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று மெயிலை திறந்தால் கிளைண்ட் அனுப்பிய மெயில் ஒரு நான்கை ஒபன் பண்ணி பார்க்கமலே "பிளீஸ் டூ நீட் புள்" என்று புராஜெக்ட் மேனேஜர் அனுப்பி வைத்திருப்பார். அதுல ஹை பிரியாரிட்டி கிளிக் செய்யப் பட்டிருக்கும், அது மட்டும் அல்லாமல் ஆபிஸில் இருக்கும் மொத்த பெரிய புள்ளிகளும் சிசியில் வைக்கப்பட்டிருக்கும்.

2) மூணு மாசத்துக்கு முன்பே, என்னோட மனைவின் தங்கச்சிக்குக் கல்யாணம் இருக்கிறது, நான் கண்டிப்பா போகணும், ஒரு வாரமாவது லீவு வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் சொல்லி இருப்போம். அப்பயெல்லாம் மூணு மாசம் கழிச்சி தானே, ஒண்ணும் பிரச்சனையில்லை தாராளமா நீங்க போகலாம் என்று சொல்லிவிட்டு, ஊருக்கு போறதுக்கு ஒரு வாரம் இருக்கும் போது அடுத்த வாரம் நான் கிளைன்ட் மீட்டிங்கு அவுட் ஆப் கண்டிரி போறேன் நீங்க தான் புராஜெக்ட்டை பார்த்க்கணும் என்று சீரியஸா பேசுவாரு. நான் இல்லனா நீங்க தான் புராஜெக்டை பார்த்துகிறீங்கனு மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கிறேன் என்று கொக்கியை போடுவாரு.

3) எல்லா நாளும் ஒன்பது மணி ஆபிஸுக்கு, எட்டே மூக்காலுக்கே போய் லைட் போடுற‌துல தொடங்கி, ஏசியை ஆன் செய்து ரூம் பிரஷ்னெர் அடிக்கிறது வரை நாமளா தான் இருப்போம். அப்பயெல்லாம் மேனேஜர் சீக்கிரம் வர மாட்டார், ஆனா ஒரு நாளு டிராபிக்ல வண்டி மாட்டி ஐந்து நிமிடம் லேட்டா வந்த அன்னைக்குத் தான் நம்மளை தவிர எல்லோரும் சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்து இருப்பார்கள், கிளாஸ் டோரை திறந்து உள்ளே பார்த்தால் மேனேஜர் கூடச் சீக்கிரம் வந்து இருப்பார். ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு முகத்துக்கு நேர் பார்த்துக் குட் மார்னிங் சொல்லுவார். அவர் சொல்லும் விதமே நீ இன்னைக்கு லேட்டா வந்திருக்க என்பதை உணர்த்தும்.

4) கம்பெனி நடத்தும் பார்மேசன் நாளில் மேனேஜர் உட்படப் பெரிய புள்ளிகள் அனைவரும் சொல்லிவைத்தார் போல், ஜப்பான்ல சான்சுகி கூப்டாக, அமெரிக்காவில் பில்கேட்ஸ் கூப்டாக, இவ்வளவு ஏன் இந்தியாவுல பா.சிதம்பரம் அவுங்களும் புராஜெக்ட் பண்ண கூப்பிட்டாக என்று கலர் கலரா சொன்னதை நம்பி மூணு மாசம் கழிச்சி போட போற இங்கிரிமென்ட் கனவு இப்பவே வர தொடங்கிவிடும். இங்கிரிமென்ட் கவர் கொடுக்கும் நாளில் மேனேஜர் ரூம்க்கு போனா, அந்தப் புராஜெக்ட்ல பணம் வர்ல, அந்தக் கிளைன்ட் ஏமாத்திட்டான், எக்னாமிக் கிரைசிஸ், புதுப் புராஜெக்ட் ஏதும் வரலனு கதற, கதற அழவைச்சிட்டுக் கையில் ஒரு குச்சி ஐஸு போல இங்கிரிமென்ட் கவரை தந்து விடுவார்.

5) புதுசா வர‌ போற புராஜெக்ட்டுக்குத் தேவையான பைல்களை மெயிலிலும், டாக்குமென்ட்களைப் பிரிண்ட் போட்டும் பெரிய பெரிய‌ கட்டா கொடுத்து வீட்ல இருந்து ரிபர் பண்ணுங்கனு சொல்லும் மேனேஜர், முடிச்சு கொடுத்த புராஜெக்ட்டுக்கு வர வேண்டிய இன்சன்டிவ் பற்றித் தவறா கூடப் பேச மாட்டார். நாம கேட்கலாம் என்று மேனேஜர் ரூம்க்கு போன ஏவனோ ஒரு புராஜெக்ட் மேனேஜர் பாதியில வுட்டுட்டு போன புராஜெக்ட்டுக்குப் பணம் வர்லனு மேனேஜிங் டைரக்டர் திட்டினார் என்று தலையில் கை வைப்பார்.



6) ஆறு மாசம் பண்ண வேண்டிய புராஜெக்டை, ஆர்வ கோளாரில் மூணு மாசத்துல முடிக்கலாம் என்று மைக்ரோசாப்ட் புராஜெக்ட்ல ஒவ்வொரு நாளும் முடிக்க வேண்டிய டார்கெட்டை பார் சார்ட் போட்டு கிளைண்டுக்கு பிளான் போட்டு கொடுத்துவிட்டு, நீங்க கொடுத்த பிளான் படி ஏன் புராஜெக்ட் முடிக்கவில்லை என்று கிளைன்ட் கேட்கும் போது மட்டும், அப்படியே நம்ம பக்கம் முகத்தைத் திருப்பிக் கேட்க வேண்டியது. நாமளும் வழக்கம் போலச் சர்வர் சரி இல்ல, கிளைன்ட கொடுத்த இன்புட் சரியில்லை, ஆன்சைட்ல இருந்து இன்பார்மேஷன் கரெட்ட வந்து சேரலனு ஒரு பக்க மெயில் டைப் பண்ணனும்.

7) தலை வலிக்குது என்று ஓர் அரை நாள் லீவு வாங்கலாம் என்று மேனேஜர் ரூம்க்குப் போனால், உக்கார வச்சு, நாம பண்ணிய புராஜெக்ட்டுக்குக் கிளைன்ட் கொடுத்திருக்கும் கமெண்டுகளை ஒவ்வொன்னா படிக்க ஆரம்பித்து விடுவார். இது போதாது என்று புராஜெக்ட்டுப் பிளானை வேறு ஓபன் செய்து வைத்துவிட்டு நாம் இன்னைக்கு இவ்வளவு டார்கெட் முடிச்சு இருக்கனும், ஆனா அதுல பாதிக் கூட முடிக்கவில்லை. எப்படி முடிக்கப் போகிறோம், புதுசா பிளான் ஏதும் வைச்சு இருக்கீங்கள?.. இப்படியே போய்ட்டு இருந்தா புராஜெக்ட்டை கிளைன்ட் கேன்சல் பண்ணிடுவான். நீங்க தான் ஏதாவது பண்ணனும் என்று கேப் விடாமல் பேசுவார். நமக்கு வந்த தலைவலி எப்பவோ ஓடி போயிருக்கும். அதுக்கு பதிலா பிபி ஏற துவங்கியிருக்கும்.

8) வெள்ளிக்கிழமை வந்தாலே முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோசமாக இருக்கும். இரண்டு நாளு லீவு இருக்கு நிம்மதியா தூங்கலாம், அவுட்டிங் போகலாம், சினிமா பார்க்கலாம் என்று நினைத்து கொண்டிருப்போம். அன்றைக்கு மதிய நேரத்திற்குப் பிறகு வேலை என்பது ஏதோ கடமைக்கு என்று தான் செய்து கொண்டிருப்போம். அப்பதான் கான்பிரன்ஸ் ரூம்க்கு எல்லோரும் வாங்க என்று மேனேஜரின் மெசேஸ் வரும். என்னவா இருக்கும் என்று உள்ள போனா முகத்தில் அப்படி ஒரு கடுமை இருக்கும். கிளைன்ட் கிட்ட இருந்து இப்ப தான் மெயில் வந்தது, நாம் கொடுத்த பிளான் படி டார்கெட்டை அச்சீவ் பண்ணலியாம், இப்படியே போனால் புராஜெக்ட் கான்டிராக்டை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறான். அப்படி ஒண்ணு நடந்த நீங்களும், நானும் வீட்டுக்கு தான் போகணும் என்று பீதியை கிளப்புவார் மேனேஜர். அப்புறம் என்ன "எல்லா நாளும் எங்கள் வீட்டில் கார்த்திகை" என்று விஜயகாந்த் உடன் கைகோர்த்துப் பாடுவதைப் போல், நாங்களும் "வாரத்தில் ஏழு நாளும் எங்கள் ஆபிஸில் சிவராத்திரி" என்று மேனேஜருடன் கை கோர்க்க வேண்டும்.

9) ஊருக்கு போயிட்டு வரும் போது ஏடிம் கார்ட்ல இருக்கிற மொத்த காசையும் காலி செய்துவிட்டு, பார்சையும் காலியா வைத்துக் கொண்டு எப்படியும் நாளைக்கு மாதத்தின் முதல் தேதி, சம்பளம் கார்ட்ல கிரெடிட் ஆகிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அப்ப தான் அட்மின் கிட்ட இருந்து மெசேஸ் வரும், எதிர்பாரத விதமா இன்னைக்குச் சம்பளம் பேங்க்ல போட முடியவில்லை, நாளைக்குத் தான் போடுவோம், மறுநாள் பேங்க் லீவு அதனால மண்டே தான் உங்களுக்குக் கிரெடிட் ஆகும் என்று. அப்புறம் என்ன வழக்கம் போலக் நல்ல‌ குடும்பஸ்தனா பார்த்து தேட வேண்டியது தான். ஏன்னா அவன் தான் மாச கடைசி ஆனாலும், அக்கவுட்ல பணம் வைத்திருப்பான். அதுல‌ என்ன "நல்ல குடும்பஸ்தன்" என்னைப் போலவும் எப்பவுமே அக்கவுண்டை காலியா வைத்திருக்கும் குடும்பஸ்தன் சில பேரு இருப்பாங்க தானே!!.

10) பொங்கலுக்கு ஊருக்கு போறதுக்கு மூணு மாசத்துக்கு முன்பே இரயில்ல டிக்கெட் புக் பண்ணி வைச்சுட்டு இருந்தா, பொங்கல் வர்றதுக்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி பொங்கலுக்கு நீங்க ஊருக்கு போக வேண்டாம்!! அது முடிஞ்ச பிறகு ஒரு வாரம் லீவு போட்டு போயிட்டு வாங்க, எல்லோரும் ஒரே டைம் லீவு போட்டா புராஜெக்ட்டை ரன் பண்ண முடியாது என்று தோளின் மீது தட்டுவார் மேனேஜர்.

.

Thursday, March 20, 2014

பயண அனுபவமும், தொ(ல்)லைக்காட்சித் தொடர்களும்..

எத்தனை வாட்டி ஊருக்கு வந்தாலும் ஒரு முறை கூடக் கன்னியாகுமரிக்கு போக முடியல. தம்பி டேய் நீயும் இந்த வாட்டி இங்க தானே இருக்கிற நாம் எல்லோரும் கன்னியாகுமரிக்கு போய்ட்டு வந்திடலாம். ஸ்கூல் படிக்கும் போது அங்க போனது, அதுக்க அப்புறம் இன்னும் ஒரு தடவ கூடப் போகல. சென்னையில இருக்கேன் தான் பேரு, ஆனா பாப்பாவை இன்னும் ஒரு தடவை கூடப் பீச்சுக்கு கூட்டிட்டு போகல. கொஞ்சம் பெருசா வளர்ந்த பிறகு போகலாம் என்று சொல்லியே நாட்கள் ஓடிவிட்டது என்று அக்கா என்னிடம் அவளுடைய ஆதங்கத்தை வைத்தாள்.

நானும் இங்க தான் இருக்கிறேன் என்று தான் சொல்லிக்கணும், கல்யாணம் முடிஞ்ச அப்புறம், ஒரு தடவையாவது கன்னியாகுமரிக்கு போகனும் என்று நினைப்பேன், ஆனா அதுக்கான வாய்ப்பு அமையவே இல்லை. தம்பி உனக்கு ஒரு வாரம் லீவு இருக்கு தானே, இந்த வாட்டி நாம குடும்பத்தோட கன்னியாகுமரிக்கு போயிட்டு வந்திடலாம் என்று அண்ணனும் தன்னுடைய ஆசையையும் என்னிடம் வைத்தான்.

அண்ணனும், அக்காவும் அவங்களுடைய ஆசைகளை என்னிடம் சொல்லியாயிற்று, இனி அதைச் செயல்ப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னுடையது மட்டும் தான். இவங்க எல்லோரையும் வீட்ல இருந்து நேரத்திற்குக் கிளப்பி, பார்க்க வேண்டிய இடம் எல்லாம் பார்த்துவிட்டு பொழுது சாய்வதுக்கு முன்பு கூட்டி வர முடியுமா? என்பது தான் என்னுடைய மனதில் தோன்றியது. மூணு புராஜெக்டை ஒரே நேரத்தில் தந்து மூணையும் நீ தான் பார்க்கணும் என்று ஆபிஸில் சொன்னா கூடப் பார்த்து விடலாம். ஆன அக்கா, அண்ணன், என்னுடையது என்று மூன்று குடும்பத்தையும் வெளியில் கூட்டி போயிட்டு வார்றதுனா சும்மாவா. ஒரு துணிக்கடைக்குப் போனாலே ஒம்பது மணி நேரம் ஆக்குறவங்க, இப்ப என்ன செய்யப் பொறாங்களோ என்று அடிவயிறு கலங்க ஆரம்பிச்சுது.

மனதில் இருந்ததை ஒரு பக்கம் ஓரம் கட்டி வச்சுட்டு, அதுக்கு இப்ப என்ன? நளைக்கே போயிடலாம் என்றேன்.

அம்மா, அப்பா நீங்களும் எங்க கூட வாங்க என்று அக்கா கூப்பிட்டது தான் தாமதம், என்னால ரெம்ப நேரம் வண்டியில உக்கார முடியாது, எனக்கு முதுகு வலிக்கும் என்று அம்மா ஒதுங்கி அப்பாவை பார்த்து சிரிக்க, அப்பாவும் இங்க இருக்கிறா ஆடு, கோழி எல்லாம் யாரு பாக்குறது, நீங்க போயிட்டு வாங்க என்று அப்பாவும் மெல்ல நகர்ந்தார்.

காலையில வீட்ல சாப்பிட்டு விட்டே கிளம்பலாம், மதிய சாப்பாட்டிற்கு வீட்டில் இருந்து ஏதாவது பண்ணி சாப்பிட‌ கொண்டு போனால் நல்லா இருக்கும் என்று அத்தான் ஆரம்பித்தார்கள்.

அதுக்கென்ன "பிரியாணி" பண்ணிட்டால் போச்சு என்று அண்ணி சொல்ல, நானும் பண்ணுறதே பண்ணிறீங்க மட்டன் பிரியாணியாய்ப் பண்ணினால் நல்லா இருக்கும் என்று ச‌ப்பு கொட்டினேன்.

ஆமா, காலையில எழுந்து பாப்பாக்களை ரெடி பண்ணுறதே பெரிய வேலை, இதுல மட்டன் பிரியாணியாம் மட்டன் பிரியாணி. வேணும்னா தயிர் சாதமும், புளி சாதமும் கிண்டலாம் என்று சொல்லி சிரித்தார் அக்கா.

நீங்க கிண்டுற தயிர் சாதமும், புளி சாதமும் சாப்பிடுவதற்கு, அங்க ரோட்டோரத்துல இருக்குற க‌டையிலேயே சாப்பிட்டுவிடலாம், அதனால காலையிலே சீக்கிரமா கிளம்புறதுக்குள்ள வழிய பாருங்க, ஒன்பது மணிக்கு எல்லாம் கார் வீட்ல நிற்கும் என்றான் அண்ணன்.

மறுநாள் காலை ஒன்பது மணி! 

என் வீட்டு அம்ம‌ணி அதுவரையிலும் அயன் பண்ணி கொண்டிருந்த‌ சுடிதாரை தூக்கி கொண்டு அவசர அவசரமாகப் பாத்ரூம்க்கு ஓடினார். குளிச்ச தலையுடன் ஒரு பக்க தோளில் தொங்க‌ போட்டிருந்த சட்டையை எடுத்து மெதுவாக அயன் பாக்ஸில் வைத்து தேய்க்க தொடங்கினார் அத்தான்.

வீட்டின் ஹாலில், தான் முழுவதும் கிளம்பி கையில் இட்லி தட்டுடன் அம்மணாம ஓடும் பாப்பாவை துரத்தி கொண்டு ஓடினார் அண்ணி. வீட்டின் கொல்லை புறத்தில், குத்த வைத்து உக்காந்திருக்கும் பாப்பாவை "சீக்கிரம் சீ போ" இல்லைனா உன்னை விட்டுட்டு நாங்க ம‌ட்டும் கார்ல போயிடுவோம் என்று மிரட்டி கொண்டிருந்தார் அக்கா.

இப்பவே மணி ஒன்பது தாண்டியாச்சி, இதுக்குத் தான் நான் நேத்தே வர மாட்டேன் என்று சொன்னேன், ஓர் இடத்துக்கு நேரத்துக்குப் போனாமா வந்தமானு இருக்கணும், ஆனா இவங்களைக் கூட்டிட்டு சொன்ன நேரத்திற்கு வரவும் முடியாது, போகவும் முடியாது என்ற முனகலுடன் கையில் இரண்டாவது காப்பியை கொண்டு தந்தார் அம்மா.

பெரிய கார்ல தானே போறீங்க, பக்கத்து வீட்டு பெரியப்பாவையும், பெரியாம்மாவையும் உங்க கூட வர சொல்லியிருக்கேன். அவங்க கரெட்டா கிளம்பி திண்ணையில் உக்காந்து இருப்பாங்க, காப்பியை குடிச்சுட்டு, நீ போய் அவங்களை வெயிட் பண்ண சொல்லு என்றார் அப்பா.

வீட்டில் நடக்கும் வேலைகளைப் பார்த்தால் இப்ப எல்லாம் இவர்கள் கிளம்ப மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டே,கையில் இருந்த‌ காப்பியை குடித்து விட்டுப் பக்கத்தில் இருந்த பெரியப்பா வீடு நோக்கி நடந்தேன். அப்பா சொன்னது போல் அவர்கள் இருவரும் கிளம்பி தான் இருந்தார்கள். என்னப்பா எல்லோரும் கிளம்பியாச்சா?. கீழ ரோட்ல கார் வந்து நிற்குது என்று பெரியப்பா என்னை நோக்கினார். இல்லை பெரியப்பா நம்ம வீட்டுப் பொம்பளைகள் எல்லாம் கிளம்ப எவ்வளவு நேரம் ஆகுமுனு உங்களுக்குத் தெரியாதா என்று பெரியப்பாவை பார்த்தேன். அவருடைய முகத்தில் புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை.

நம்ம வீட்டு பொம்பளங்க‌ எல்லாம் ஓர் இடத்திற்குக் கிளம்பனும் என்றால் பெரும் பாடு தான், ஆமா, நாம‌ போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வந்திடலாம் இல்ல என்று பெரியம்மா கேள்வியைக் கேட்டு என் முகத்தைப் பார்த்தார். ஏதும் வேலை இருக்கா பெரியம்மா என்று அவரிடம் கேட்டேன். இல்ல சும்மா தான் கேட்டேன் என்றார் பெரியம்மா. அதெல்லாம் ஆறு மணிக்குள்ள வந்திடாலாம் என்றேன். பெரியம்மா முகத்தில் சந்தோச புன்னகை தெரிந்தது. சரி பெரியம்மா நீங்க இங்க உக்காந்திருங்க, நான் போய் அவங்களைச் சீக்கிரம் கிளம்பச் சொல்லுறேன் என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாய் கிளம்பி கொண்டிருந்தார்கள், அப்போதே மணி பத்தை தாண்டியிருந்தது. ஒருவர் சிலேடை காணவில்லை என்றும் இன்னொருவர் ஸ்டிக்கர் பொட்டை இங்க தான் வச்சிருந்தேன் நீங்க பாத்தீங்களானு என்னிடம் கேட்க, நானே என்னோட சட்டை பாக்கெட்ல இருக்கு என்று சொல்லிவிட்டு அண்ணனை தேடினேன். நேத்து பூ வாங்க சொல்ல மறந்திட்டாங்களாம், அதான் இப்ப பூ வாங்க அவன் டூவீலரை எடுத்திட்டு ரோட்டுக்குப் போயிருக்கிறான் என்று அம்மா மெல்லிய புன்னகையுடன் என்னிடம் சொன்னார்.

எப்படியோ எல்லோரும் ஒரு வழியா கிளம்பி, வீட்டை விட்டு வெளியில் வரும் போது மணி பதினொன்று. வீட்டில் இருந்து நடந்து கீழே நிற்கும் வண்டியின் அருகில் நெருங்கும் போது, அண்ணி மட்டும் வீட்டை நோக்கி திரும்பவும் ஓடினார். ஏன்னு கேட்டால், பாப்பாவின் பால் பாட்டிலை மறந்து விட்டாராம் என்று அண்ணன் தலையில் அடித்தான். வண்டி கிளம்பி கன்னியாகுமரி போகிறதுக்குள்ள பாப்பாக்கள் இரண்டு பேரும் இரண்டு இடங்களில் இறங்க வைத்து விட்டார்கள். எப்படியோ கன்னியாகுமரிக்கு போயி இறங்கும் போது மணி பனிரென்டு முப்பது.

கடல் உள்ள போனா நீங்க திரும்ப‌ வர்றதுக்கு ரெம்ப நேரம் ஆகும். அதனால சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொன்ன டிரைவரின் ஆலோசனையின் படி ஹோட்டலை நோக்கி நடந்தோம்.

வந்ததோ இடங்களைச் சுற்றிப் பார்க்க, ஆனா முதல் வேலையே சாப்பாடு தான் நடந்தது. நான் நினைச்ச மட்டன் பிரியாணியையும் ஆர்ட‌ர் பண்ணிட்டேன், சாப்பாடும் ஒரு வழியாக முடிந்து விட்டது.

இப்போது ஒவ்வொரு இடமாகச் சுற்ற தொடங்கினோம், முதலில் போனது விவேகானந்தர் பாறைக்கு, கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறையில் இருந்து திரும்ப வர்றதுக்கு விசைப்படகிற்காக‌ ரெம்ப நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கு ரெம்ப நேரம் கால் கடுக்க‌ நின்னதாலோ, என்னவோ எல்லோரும் ஒன்றாகத் திருவள்ளுவர் சிலைக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள். சூரியனும் மேற்கு நோக்கி விரைவாக‌ நகரத் தொடங்கி விட்டான்.



இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சென்றதை விட, கோவிலை சுற்றி இப்போது அதிகமான புதுக் கடைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பொருட்களைப் பேரம் பேசி வாங்குவதற்குள் நேரம் போய்க் கொண்டே இருந்தது. பெண்கள் ஒவ்வொருவரையும் மிரட்டி ஒவ்வொரு கடையில் இருந்தும் வெளியேற்றியது பெரியம்மா தான். அதனால் ஆண்கள் எங்களுக்குப் பெரிய அளவில் கஷ்டம் இல்லை.

ஒவ்வொரு மணி நேரம் ஆகும் போதும், மணி நான்கு ஆகிவிட்டது, ஐந்து மணி ஆகிவிட்டது சீக்கிரம் வாங்க, வீட்டிற்கு ஆறு மணிக்குள்ள போகனும் என்று கோபமாகக் கத்தி கொண்டே பெரியம்மா இருந்தார்கள். ஒரு ஸ்டிக்கர் பொட்டு வாங்கவே நாலு கடை பார்க்கும் நம்ம ஆளுங்க இதற்கு எல்லாம் அசருவாங்களா என்ன. சவகாசமா கேட்டால் சங்குமுகம் வரும் போது மணி ஆறு. பெரியம்மாவின் கண்கள் கோபத்தில் கொப்பளித்தது. ஆனால் வெளியில் ஏதும் சொல்லாமல் இருந்தார்.

இருந்ததே இருந்தோம், அப்படியே சூரியன் மறையுறதையும் பார்த்து விட்டு போவோம் என்றார்கள். சூரியனும் ஒரு வழியாகக் கடலில் விழுந்து விட்டான். தண்ணீரில் விளையாட போன நம்ம‌ ஆட்களுக்குக் கடலை விட்டு வர மனம் ஒப்பவில்லை.

கடலை விட்டு வெளியில் வந்து பிளாட்பாரம் கடைகளையும் பார்க்க வேண்டும் என்று அங்கேயும் சுற்ற தொடங்கினார்கள்.

எப்படியோ ஒரு வழியாக எல்லோரும் வண்டியில் வந்து ஏறும் போது மணி எட்டு. பெரியம்மாவின் முகம் மட்டும் கொடுரமாக இருந்தது. அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது, ஆறு மணிக்குள்ள வீட்டிற்கு வரலாமா என்று பெரியம்மா கேட்டது.

வண்டியில் அம‌ரும் போது, கொஞ்சம் தள்ளி தான் இருக்கிறது என்ற பெரியப்பாவின் குரலுக்கு, அனல் பறக்கும் பார்வையுடன் கூடிய கோபம் பெரியம்மாவின் கண்ணில் தெறித்தது. அனைவரும் வண்டியில் ஏறியவுடன், வண்டி கிளம்பத் தொடங்கியது. கடலில் ரெம்ப நேரம் ஆட்டம் போட்டதனால் பாப்பா இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்தார்கள். பயணக் களைப்பும், வண்டியின் ஜன்னல் வழியாக வீசிய‌ இயற்கை காற்றும் எல்லோரின் கண்களையும் சுழற்றியது.

பக்கத்தில் இருந்த என்னுடைய மனைவியிடம், ஆமா, பெரியம்மா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்?, ஆறு மணிக்கும் யாரையும் வீட்டிற்கு வர சொல்லி இருப்பார்களோ என்று கிசுகிசுத்தேன். அதற்கு என் மனைவியோ புன்சிரிப்புடன் அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஆறு மணியில் இருந்து பெரியம்மா தொலைக்காட்சி தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னைக்கு நம்ம கூட வந்ததால் எல்லாத் தொடரும் அவங்களால பார்க்க முடியாம போச்சு, அதான் இவ்வளவு கோபமாக இருக்காங்க‌ என்றார். இவ்வளவு தானா, நானோ ஏதோ பெரிய விசயமாக இருக்குமோ என்று நினைத்தேன் என்றேன். உங்களுக்கு என்ன தெரியும் அந்தத் தொடர்களை ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கதையோட தொடர்ச்சி போயிடும் என்றார். என்ன பெரிய கதை மாடி படியில இருந்து இறங்கி வந்து கிச்சனுக்குப் போய் ஒரு கப் தண்ணி குடிச்சுட்டு, திரும்பவும் மாடி படி ஏறி பெட்ரூம் கதைவை திறக்கும் போது "தொடரும்" என்று போடுவான் என்றேன். ரெம்பச் சத்தம் போட்டு பேசாதீங்க, பெரியம்மா காதில் கேட்டுவிடப் போகிறது என்றார்.

பெரியம்மாவிற்குத் தொலைக்காட்சி தொடர் தானே பார்க்க முடியல, வீட்டுக்குப் போய்த் திரும்பவும் போட சொல்லி, நான் அவங்களுக்குக் காட்டுறேன் என்றேன். ஆமா, நீங்க சொன்ன உடன் போடுவதற்குத் தொலைக்காட்சி தொடர் என்ன உங்க வீட்டு டிவிடி பிளேயரில் உள்ள படமா? என்றார். சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தேன்.

வண்டி எங்கள் ஊர் எல்லையைத் தொடும் போது, இரவு மணி ஒன்பதை தாண்டியிருந்தது. பயணக் களைப்புடன் வண்டியில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தோம். பெரியம்மா அவங்க வீட்டிற்குக் கிளம்பினார். அவர்கள் சென்ற பின்னாடியே நானும் வீட்டில் இருந்த‌ என்னுடைய லேப்டாப்பை தூக்கி கொண்டு அவர்கள் பின்னால் போனேன். என்னுடைய யுஎஸ்பி மோடத்தை லேப்டாப்பில் கனெக்ட் செய்து, இணையத்தில் இருந்து பெரியம்மா சொன்ன அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் அவர்களுக்குப் போட்டு காட்டினேன். "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் விஜய் சேதுபதி, தாதாவாக நடித்திருக்கும் பசுபதி அவர்களிடம் "குமுதா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்வது போல் நானும் "பெரியம்மா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வந்தேன்.

வீட்டிற்கு வந்தவுடன் என்னோட மனைவி என்னிடம் வந்து, நீங்க இணையத்தில் தொலைக்காட்சி தொடர் பார்க்கலாம் என்பதை எனக்குச் சொல்லி தரவே இல்லியே என்றார். நீ தான் தொலைக்காட்சி தொடரே பார்க்க மாட்டியே என்றேன். இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டா பார்ப்பாங்க, சரி சரி அந்த விஜய் டிவியில் போடும் "உறவுகள் தொடர்கதை" சீரியலை லேப்டாப்பில் எனக்குப் போட்டு தாங்க என்றார்.

.
Related Posts with Thumbnails