Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, July 8, 2016

இதற்குத் தான் இவ்வளவு பில்டப்பா!!

அப்போது நான் ஓமான் மஸ்கட்டில் உள்ள எனது அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்தேன். வார இறுதி நாட்களில் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடச் செல்லுவோம், நாங்கள் கிரிக்கெட் விளையாடும்  இடம் ஒரு பெரிய ஓடை, எப்போதாவது அந்தப் பாலைவனத்தில் மழையினால் பெரு வெள்ளம் வந்தால், இந்த ஓடையின் வழியாகத் தான் நீர் வழிந்தோடும். நான் அங்கிருந்த ஆறு மாதத்தில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை என்பது வேறு கதை. அந்த ஓடையில் கரடு முரடாக இருந்த இடங்களையும், புதர்களையும் கொஞ்சம் திருத்தி  எங்களுக்கு விளையாடுவதற்கு வசதியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தோம், வார இறுதி நாட்களில் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் அந்த ஓடையில் அனைவரும் வந்து நேர்ந்து விடுவோம். தமிழ் நண்பர்களே பதினைந்து பேருக்கு மேல் இருப்போம், இதில்லாமல் ஹைதிராபாத் நண்பர்கள் ஒரு இரண்டு, மூன்று பேர் வருவார்கள்.

எங்களுக்குள் இரண்டு அணியாகப் பிரித்து விளையாடுவோம். விளையாட்டு மிக ஆக்ரோஷமாக இருக்கும், காரணம் அலுவலகத்தில் ஒன்றாகப் பணி செய்யும் போது இருக்கும் அனைத்து ஈகோக்களுக்கும் தீனி போடுவதாக இந்த கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். அலுவலகம் என்று இருந்தால், இரண்டு மூன்று குழுக்கள் இருக்கும், எங்கள் மஸ்கட் அலுவலகத்திலும் அது போல் உண்டு, இந்தக் குழுக்களை மறைமுகமாக ஊக்குவிப்பவர்கள் என்று சில பெரிய தலைகள் இருப்பார்கள். இப்படியான பெரிய தலைகள் எதிர் எதிர் அணிகளில் இருந்தால் சொல்லவே வேண்டாம், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை விட மோசமாக இருக்கும். அனல் பறக்கும் போட்டியில் கேலி, கிண்டல்களுக்குப் பஞ்சம் இருக்காது, சில நேரங்களில் இந்தக் கிண்டல்களே மற்றவர்களைச் சீண்டுவதாக இருக்கும், அதன் விளைவு, பந்தைத் தூக்கி அடிப்பது, இல்லையென்றால் பேட்டை தரையிலோ ஸ்டம்பிலோ வீசுவது நடக்கும், எப்படி இருந்தாலும் எங்களுள் எவராவது ஒருத்தர் அந்தச் சூழ்நிலையை சமாளித்துத் தொடர்ந்து விளையாட வைத்து விடுவார்.

ஒரு நாள் அந்த ஓடையில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வழக்கத்திற்கு மாறாக எங்களுடைய ஜெனரல் மேனேஜர் வாக்கிங் செல்லுவதற்கு அந்தப் பக்கம் வரவே, அவரையும் களத்தில் இறக்கிவிட்டோம். தொடர்ந்து ஒரு சில வாரங்கள் எங்களுடன் அவரும் விளையாட ஆரம்பித்து விட்டார். கம்பெனியின் ஜிஎம் எங்களுடன் வந்து விளையாடுகிறார் என்றால் போதுமே, அப்படியே ஜிஎம் சாரிடம் பேசி கம்பெனியிலிருந்து ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டு, கிரிக்கெட் விளையாடுவதற்குத் தேவையான பெரிய கிட் ஒன்றை வாங்கிக் கொண்டோம். நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதோ டென்னிஸ் பால் வைத்து, அதற்கு கிட்னி பேடில் இருந்து கீப்பர் கிளவுஸ் வரைக்கும் வாங்கியாகிவிட்டது. ஒரு பேட் மற்றும் ஒரு செட் ஸ்டம்ப் வைத்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு, புதிதாக பேட் மற்றும் கிளவுஸ் என்று கிடைத்தவுடன் மனதில் ஒவ்வொருவரும் சச்சின் மற்றும் கபில் தேவ் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. அதற்குத் தூபம் போடுவது போல் நாம் ஒரு கிரிக்கெட் கிளப் டீமை கம்பெனி பெயரில்(ஸ்பான்சர் வேண்டும் அல்லவா, வேறு பெயரில் வைத்தால் யார் பணம் போடுவது?) உருவாக்க வேண்டும் என்று பேசப்பட்டது.

எங்கள் அணியில் கோயமுத்தூர் காரர் ஒருவர் உண்டு, திருமணம் ஆனவர், நாற்பது வயதிற்கு மேல் இருக்கும், கோவைத் தமிழில் மிகவும் மரியாதையாகப் பேசுவார், ஆனால் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பேசும் போதும் சரி, விளையாடும் போதும் சரி அதிக உணர்ச்சி வசப்பட்டு விடுவார், டிவியில் கிரிக்கெட் போட்டி பார்த்தாலும் அப்படி தான், இந்தப் பந்தை இப்படியா அடிப்பது? இவன் எல்லாம் நம்முடைய அணிக்குத் தண்டம், சிம்பிள் கேட்ச்! இதைக் கூட இவனால் பிடிக்க முடியவில்லை! எப்படி இவனை அணியில் சேர்த்தார்கள்? என்று டிவியில் நடக்கும் வர்ணனைக்கு இணையாக இவர் ஒரு வர்ணனை கொடுத்து கொண்டிருப்பார், அலுவலகத்தில் எங்களுக்கு பொதுவாக இருக்கும் மெஸ்ஸில் இருக்கும் டிவியில் இவர் கிரிக்கெட் போட்டி பார்க்கிறார் என்றால் ஒருவரும் அந்தப் பக்கம் போக மாட்டார்கள். அப்படியே புதியவர்கள் எவராவது போனால் காதில் ரத்தத்துடன் தான் கிரிக்கெட் பார்க்க முடியும். இவர் கல்லூரி படிக்கும் போது கல்லூரி கிரிக்கெட் அணியில் விளையாடியிருப்பார் போல! அவர் மட்டும் தான், எங்களுடன் கிரிக்கெட் விளையாட வரும் போது பக்காவாக கிளம்பி வருவார். டிராக் சூட், டி-சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷு வித் கேப் மற்றும் கூலிங் கிளாஸ் என்று அணிந்து வந்து கலக்குவார். நாங்கள் அந்த ஓடையில் விளையாடும் போது அவர் மட்டும் தனித்து தெரிவார்.

நாற்பது வயதிலும் ஒரு பத்து மீட்டர் ஓடி வந்து பவுலிங் போடுவார். அவர் வீசும் பந்து வேகத்திற்கு இவ்வளவு தூரம் ஓடி வர வேண்டுமா? என்ற கேள்வி சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கு வரும், ஆனால் அதை அவரிடம் கேட்டு காதில் ரத்தம் வர வைத்துக் கொள்வதற்கு எவரும் விரும்புவதில்லை. அதிகமாக கிரிக்கெட் மொழிகளில் தான் பேசுவார், ஒருமுறை இவர் பவுலிங் போடும் போது, முதல் பந்தை நண்பர் ஒருவர் சிக்ஸர் அடித்துவிட்டார், அதனால் அடுத்த பந்தை  எப்போதும் பவுலிங் போடும் வலது பக்கத்திற்கு மாறாக இடது பக்கத்தில் ஓடி வந்து போட நினைத்து அந்தப் பக்கம்  ரன்னிங் ஓடுவதற்கு நிற்கும் பேட்ஸ்மேன் நண்பரை மறுபக்கம் சென்று நிற்கச் சொல்லுவதற்கு "ஓவர் தி விக்கெட்! ஓவர் தி விக்கெட்!" என்று என்று கத்தி கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் நண்பரோ, நீங்க முதலில் பந்தை போடுங்க! அப்புறம் விக்கெட்ட்டா இல்லை சிக்ஸரா? என்று பார்க்கலாம் என்று நண்பர் நக்கலடித்து சிரித்தது கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு நண்பர்கள் உண்டு, ஒருவர் திருவாரூர் காரர் மற்றொருவர் திருநெல்வேலி. இரண்டு பேரும் எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது எந்த அணியில் இருந்தாலும் முதலில் பேட்டை எடுத்துக் கொண்டு களம் இறங்கி விடுவார்கள். அதில் திருவாரூர் காரர் கொஞ்சம் பல்க் ஆக இருப்பார், அவரால் அதிக நேரம் ஓட முடியாது, எனவே எதிர் பக்கத்தில் இறங்கும் பேட்ஸ்மேன் நண்பரிடம் சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார். ஓவரில் ஐந்து பந்துகளை மிஸ் செய்தாலும், ஒரு பந்தை எப்படியும் சிக்ஸருக்கோ, பவுண்டரிக்கோ விரட்டி விடுவார். நெல்லை நண்பர் பொறுமையாக ஆடுபவர், சில நேரம் கடைசி வரை அவுட் ஆகாமல் இருப்பார், அல்லது இடையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி அடுத்த பேட்ஸ்மேன் நண்பருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுப்பார்.

சேலம் நண்பர் ஒருவர், நன்றாக பவுலிங் செய்வார். அவருடைய ஒரு பந்தில் பவுண்டரியோ, சிக்ஸரோ போனால் நண்பர் பதட்டமாகி விடுவார். ஓடி வந்து வேகப்பந்து தான் வீசுவார், எதிரில் பேட்டிங் பண்ணுபவர், நண்பர் வீசும் பந்தை பவுண்டரிக்கு அடித்து விட்டால் போதும், மறு பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசுவார். அந்தப் பந்தையும் பேட்டிங் செய்யும் நண்பர் லாவகமாக எதிர் கொண்டால், அவ்வளவு தான், தன்னால் எவ்வளவு தூரம் ஓடி வந்து வீச முடியுமோ அந்த அளவிற்கு வீசுவார். இதனால் பந்து பவுண்ட்ஸ் ஆகவோ வைடாகாவோ போகும், அந்த ஒரு ஓவரை முடிப்பதற்குள் படாத பாடு பட்டு விடுவார்.

நெல்லை பரப்பாடி ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் ஊக்குவித்துக் கொண்டு இருப்பார். பீல்டிங் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு, மிட் ஆப்பில் தான் பெரும்பாலும் பீல்டிங் நிற்பார், பவுலிங் போடுபவனிடம் இப்படிப் போடு, அப்படிப் போடு என்று அடிக்கடி அட்வைஸ் பண்ணி கொண்டு இருப்பார், இவர் சொல்லுவதை கேட்டு பவுலிங் போட்டு, அந்தப் பந்தை பேட்ஸ்மேன் அடித்தாலும் "சூப்பர் பவுலிங்!" என்று கை தட்டுவார். மற்றவர்கள் அனைவரும் பவுலிங் போடுபவனை முறைப்பார்கள். விளையாடுவது ஓடையில், அதில் ஜான்டி ரோட்ஸ் அளவிற்கு பில்டப் கொடுத்துப் பாய்ந்து பாய்ந்து பந்தை தடுப்பார். இவர் உயிரைக் கொடுத்து பீல்டிங் பண்ணுவது, நமக்குப் பயமாக இருக்கும். தினமும் உடலில் ஒரு காயமாவது வாங்காமல் விளையாட்டை முடிக்க மாட்டார். பீல்டிங் பண்ணுவதில் காயம் வாங்க விட்டாலும் பேட்டிங் பண்ணும் போது ரன்னிங்கில் விழுந்தாவது காயத்தை வாங்கி விடுவார்.

இவர்கள் மட்டுமல்லாமல், ஊர் வாரியாக குழுவாக இயங்கும் சின்ன சின்ன கூட்டமும் எங்களுக்குள் உண்டு, ஆந்திரா முழுவதும் உள்ள‌ தெலுங்கு நண்பர்கள், நாகர்கோவில் நண்பர்கள் அதில் இரண்டு பேர் தான் உண்டு அதில் ஒன்று நான், சென்னை நண்பர்கள் மற்றும் கோவில்பட்டி நண்பர்கள். இதில் கோவில்பட்டி நண்பர்கள் தான் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள், அதுவும் ஒரே காலேஜில் படித்தவர்கள், அவர்களின் ஆதிக்கம் தான் கிரிக்கெட் விளையாட்டில் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஊர் சார்ந்து குழுவாக இருப்பவர்களின் பாசம் விளையாடுவதற்கு அணிகள் பிரிக்கும் போது வெளிப்படும், ஒரே ஊர்க் காரர்களாக ஒரு அணியில் திரள்வார்கள். இதில் கிரிக்கெட் விளையாடத் தெரிந்தவர்கள், விளையாடத் தெரியாதவர்கள் மற்றும் விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் என்று அனைவரும் அடங்குவார்கள்.

கம்பெனி பெயரில் கிரிக்கெட் கிளப் ஆரம்பிக்கலாம் என்று பேசியது தான் தாமதம், மறுநாளே நண்பர் ஒருவர் ஒரு டோர்னமென்ட்க்கான அட்டவணையுடன் வந்து நாம் இதில் கலந்து கொள்ளலாம் என்று அனைவரிடமும் பேசினார். கொண்டு வந்த நண்பரோ, நாங்கள் தினமும் விளையாடும் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்க வருபவர். அவருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது, ஆனால் டிவியில் நடக்கும் இந்திய போட்டிகள் மட்டுமல்லாமல் பிற அணிகள் விளையாடும் போட்டியையும் தவற‌ விட மாட்டார். ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களின் ஸ்டிரைக் ரேட்டிலிருந்து, அவர்களின் தரவரிசை மற்றும் சாதனைகள் வரை புள்ளி விபரங்களைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார். எந்த அணிகளின் போட்டிகள் நடந்தாலும், இன்றைக்கு இந்த அணி தான் வெற்றி பெறும் என்று போட்டிக்கு முன்பே கணித்து சொல்லி விடுவார், பெரும்பாலும் அவருடைய கணிப்பு தவறுவது இல்லை. உலக கிரிக்கெட் வீரர்களின் திறமைகளையும், அணிகளின் திறமைகளையும் புள்ளி விபரங்கள் கொண்டே கணிக்கும் நண்பரால், ஓடையில் விளையாடும் நண்பர்களின் திறமைகளை கணிக்க‌ முடியவில்லை.

ஜெனரல் மேனேஜர் விளையாட வந்த நேரம் மற்றும் கம்பெனியிலிருந்து புதிதாக வாங்கிக் கொடுத்த‌ புதிய கிரிக்கெட் கிட்டுகளை உபயோகப்படுத்திய நண்பர்களின் மனநிலை எல்லாம் சேர்ந்து ஒரு ஆர்வத்தில் டோர்னமென்டுக்கு பங்கேற்கலாம் என்று எல்லோரும் சேர்ந்து கோரஸாக தலையை ஆட்டினார்கள். ஜிஎம் சாரும் டோர்னமென்டுக்கு ஆகும் செலவை கம்பெனியிலிருந்து வாங்கித் தர பார்க்கிறேன் என்று சொல்லியது தான் தாமதம், போட்டியில் விளையாடுவதற்கு தங்களை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி திட்டம் தீட்டுவதற்கு பதிலாக என்னென்ன வாங்க வேண்டும் என்ற திட்டம் தான் பெரிதாக பரிசீலிக்கப் பட்டது. முதலில் சொல்ல பட்டது கம்பெனி பெயர் பொறித்த டி சர்ட், அவ்வளவு தான் நம்முடைய‌ கோயமுத்துர் நண்பர் அதற்குப் பொறுப்பேற்று கொண்டார். யார் யாருக்கு என்னென்ன சைஸ் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்து, டி சர்ட்டில் பின்னால் மற்றும் முன்னால் போடுவதற்கு தேவையான கம்பெனி பெயர் டிசைன், லோகோ டிசைன், பார்டர் டிசைன் மற்றும் வண்ணம் என்று ஒரு மாத காலம் அதற்காக‌ பெரிய ப்ரொஜெக்டே அவர் செய்து முடித்திருந்தார்.

டோர்னமென்ட் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே பயிற்சி என்ற பெயரில் அலுவலகம் முடிந்தவுடன் ஓடைக்குக் கிளம்பி விடுவோம். ஜிஎம் சார் சில நாட்கள் வருவார், சில நாட்கள் வர மாட்டார், ஆனால் தினமும் மாலையில் அவரை அழைப்பதற்கு ஒரு நண்பர் அவரது அறை செல்வார், அது அவரை அக்கறையுடன் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பதற்கு இல்லை, அவர் கொடுக்கும் 10 ஓமன் ரியாலுக்காக. ஓடைக்கு விளையாடச்  செல்லும் முன்பே சூப்பர் மார்க்கெட்டிலிருந்து நான்கு பாக்கெட் லேஸ் சிப்ஸ் மற்றும் வேறு சில நொறுக்கு தீனிகளும், ரெட் புள், கோக், பெப்சி என்று அவரவர் தேவைக்கு வேண்டியவைகளை வாங்கி ஒரு பெரிய கூடையில் சுமந்து செல்வோம்.

கோவை நண்பர் ஆர்டர் கொடுத்திருந்த‌ டி சர்ட்டும் ரெடியாகி வந்த சமயத்தில், டோர்னமென்டுக்கான தேதியும் நெருங்கியிருந்தது. ஊரில் விடுமுறைக்குச் சென்று வந்த கோவில்பட்டி நண்பர் ஒருவர் கிரிக்கெட் பயிற்சிக்கு கலந்து கொள்ள வந்த முதல் நாளில், பேட்டிங் பிடிக்கும் போது நண்பர் ஒருவர் போட்ட பந்து அவரது வலது கையின் நடு விரலைப் பதம் பார்த்தது. நண்பரால் வலி தாங்க முடியவில்லை, அதனால் மருத்துவமனைக்குப் போக வேண்டியதாயிற்று. விரலில் ஒடிவு இருப்பதாகச் சொல்லி ஐந்து தையல்கள் போட்டு அந்த விரலுக்கு மட்டும் கம்பு வைத்துக் கட்டியிருந்தார்கள். அந்த‌ நண்பர் மற்றவர்களிடம் பேசும் போது அடிப்பட்ட‌ கையை முன்னால் கொண்டு வந்தால், நடு விரல் மட்டும் நிமிர்ந்து நின்று மற்றவை எல்லாம் மடங்கி இருக்கும், எதிரில் இருப்பவர் இவருடைய நடுவிரல் உயர்ந்து இருப்பதைப் பார்த்தால் அவரை அசிங்கமாகப் பழித்து காட்டுவது போல் இருக்கும், அதனால் பின்னால் கையைக் கட்டி கொண்டு தான் விளையாட்டை வேடிக்கை பார்க்க ஓடைக்கு வருவார். எங்களிடம் விளையாட்டாக, ஏங்க! நான் டூர்னமென்ட்ல விளையாடக் கூடாது என்று தான் பிளான் பண்ணி என்னுடைய விரலை உடைச்சிட்டிங்க! என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் டோர்னமென்ட் முடிந்த பிறகு அவர் விளையாடாததை நினைத்து சந்தோச பட்டிருப்பார்.

டோர்னமென்டில் மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் முறையில் விளையாடுவதாகச் சொன்னார்கள். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டிகள் நடைபெறும் என்றும் நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு எங்களுடைய‌ முதல் போட்டி நடைபெறும் நாள், எங்களுடைய ஜிஎம் சாருடன் கம்பெனியின் முக்கியமான பெரிய‌ புள்ளிகளும் எங்களுடைய போட்டியை காண வந்திருந்தார்கள். கம்பெனியின் எம்டி கூட மைதானத்திற்கு வருவதாக இருந்தது கடைசி நேரத்தில் வரவில்லை என்ற செய்தி வந்தது, அதுவரையிலும் சந்தோசம். போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பு ஜிஎம் சார் 50 ரியாலை எடுத்து நண்பர் ஒருவரிடம் கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்காகவே காத்திருந்த நண்பர்கள் அனைவரும் போகும் வழியில் உள்ள‌ சூப்பர் மார்க்கெட்டில் இருந்த‌ வகை வகையான நொறுக்கு தீனிகளையும், அது நாள் வரையிலும் டேஸ்ட் பண்ணிப் பார்க்காத பிராண்டு எனர்ஜி டிரிங்ஸ்களையும் வாங்கி, வண்டியை நிறைத்துக் கொண்டு மைதானத்திற்குக் கிளம்பினோம்.

நாங்கள் போட்டிக்கு சென்ற‌ மைதானம் டிவியில் காட்டுவது போல் சுற்றிலும் மின் விளக்குகள் போடப் பட்டு, தரையில் செயற்கை புற்கள் நடப்பட்டு அழகாக இருந்தது. எங்களில் ஒரு சிலரை தவிர‌ விளையாடும் எவரும் இதுவரையிலும் இப்படியான மைதானத்தில் விளையாடியது இல்லை. எங்களுடன் போட்டியில் மோதும் எதிர் அணியில் விளையாடும் நபர்களைத் தவிர வேறு எவரும் உடன் வந்தது போல் தெரியவில்லை, பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக வந்திருந்தார்கள். ஆளுக்கொரு வண்ணத்தில் டி சர்ட் அணிந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு அப்படியே எங்களுடைய அணியைப் பார்த்தேன், விளையாடும் நண்பர்களின் எண்ணிக்கையை விடப் போட்டியை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். விளையாடுபவர்கள், விளையாடாதவர்கள் என்று எல்லோரும் கம்பெனி லோகோ போட்டு ஒரே வண்ணத்தில் புதிதாக வாங்கிய டி சர்ட்டை அணிந்து கொண்டு டிராக் சூட், ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் கூலிங் கிளாஸ் என்று ஐபிஎல் ஆடும் அணிகளை விட மோசமாக நின்று ஒரு பக்கம் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பக்கம் போட்டியில் விளையாடாத நண்பர்கள் வண்டியிலிருந்த‌ நொறுக்கு தீனிகள் மற்றும் எனர்ஜி டிரிங்ஸ்களை மைதானத்தின் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்து அதில் தங்கள் திறமையைக் காட்டி கொண்டிருந்தார்கள்.

கோவை நண்பர் தான் எங்கள் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் டாஸில் ஜெயித்து பேட்டிங் கேட்டு வந்து எங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் நண்பர்களைத் தேடினார். ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்க வேண்டிய‌ நெல்லை மற்றும் திருவாரூர் நண்பர்கள் இருவரும் மைதானத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டு இருவரும் விதம் விதமாக‌ பேட்டை பிடித்துக் கொண்டு போட்டோ சூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து ஒரு வழியாக பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தோம். அதில் திருவாரூர் நண்பர் போன வேகத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் வந்தார். எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது சிக்ஸர் அடித்து, நாங்கள் பெரிய பேட்ஸ்மென் என்று பில்டப் கொடுக்கும் எந்த நண்பர்களாலும் அந்தப் போட்டியில் சோபிக்க முடியவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆனார்கள். ஒபனிங் இறங்கிய நெல்லை நண்பர் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து விளையாடினார். எட்டு ஓவர் முடிவில் நாற்பத்து மூன்று ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் இழந்திருந்தோம்.



சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு, எதிர் அணியினர் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்கள், எங்களின் வேகப் பந்து வீச்சாளர் கோவை நண்பர் தான் முதல் ஓவர் வீச வந்தார். அவர் வீசிய நான்கு பந்து சிக்ஸர் பறந்தது, இரண்டு பந்து பவுண்டரி எல்லையைத் தாண்டியது, கோபத்தில் உச்சத்தில் தொப்பியை தூக்கி வீசி விட்டு, அவருடைய வழுக்கைத் தலையை பிடித்துக் கொண்டு, அடுத்த ஓவர் வீச, சேலம் நண்பரிடம் பந்தை கொண்டு கொடுத்தார். சேலம் நண்பரும் வேகமாக ஓடி வந்து முதல் பந்தை வீசினார், பந்து எதிரில் நின்றவரின் பேட்டால் துரத்தி எல்லை கோட்டிற்கு வெளியில் அடிக்கப் பட்டது. சேலம் நண்பர் அடுத்த பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசினார். பேட்ஸ்மேன் அதற்க்காவே காத்திருந்தது போல வைடாக வெளியில் சென்ற பந்தை ஓங்கி அடித்தார், வெற்றிக்கான இலக்கை எதிர் அணி எட்டியது. எட்டு ஓவரில் நாங்கள் அடித்த ரன் இலக்கை அவர்கள் எட்டு பந்தில் அடித்திருந்தார்கள்.

ஜெனரல் மேனேஜர் தன்னுடைய‌ வண்டியில் ஏற்றி வந்த நண்பர்களை வண்டியில் ஏறச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பும் போது, ஒரு நண்பர் மட்டும் வேகமாக‌ வண்டியிலிருந்து இறங்கி ஓரத்தில் மீதமிருந்த நொறுக்கு தீனியை நோக்கி ஓடினார், அந்த நண்பரை ஜிஎம் சார் பார்த்த ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்ட நண்பர், எதையும் எடுக்காமல் திரும்பவும் வண்டியில் ஏறிக் கொண்டார்.

போட்டி நடத்தியவர்கள், எங்களிடம் நாளைக்கு விளையாட வேண்டிய ஒரு அணி, கடைசி நேரத்தில் வர முடியவில்லை என்று சொல்லியதால் அட்டவணையில் ஒரு அணி காலியாக இருக்கிறது, நீங்கள் வேண்டுமானால் திரும்பவும் நாளைக்கு மோதுகிறீர்களா? என்று கேட்டார்கள். எதற்கு தெளிய வைத்து அடிக்கவா? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். நடுவிரலில் அடிப்பட்ட நண்பர் எங்களின் முன்னால் நடந்து சென்றார். வெகு நேரமாகப் பின்னால் கட்டியிருந்த கை அவருக்கு வலித்திருக்க வேண்டும். இப்போது அவர் தன்னுடைய வலது கையை முன்னால் வைத்து இடது கையால் தாங்கிக் கொண்டு நடந்தார், கையின் மற்ற விரல்கள் மடங்கியிருக்க‌ ஒற்றை நடுவிரல் மட்டும் எங்களைப் பார்த்து பழிப்பது போல் இருந்தது.

.

Wednesday, June 22, 2016

நாகர்கோவில்_ஜாக்கி ஜட்டி கிடைக்குமிடம்?

சமீபத்தில் லங்கோடு போடுவதிலும், வாங்குவதில் உள்ள பிரச்சனைகளை பற்றித் தான் தற்போதைய இலக்கிய உலகம் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் நமது மாவட்ட இலக்கிய பிதாமகர் வெளியூர் பயணத்திற்கு தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்ற போது எங்கும், எதிலும் நீக்க மற போலிகள் நிறைந்திருப்பது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை தொடர்ந்து முகநூலிலும், வலைத்தளத்திலும் யாரெல்லாம் பிராண்டட் ஜட்டி போடுகிறார்கள்/லோக்கல் உபயோகிக்கிறார்கள் என்ற முக்கியமான ஆய்வுகளில் நம்மவர்கள் திளைக்கிறார்கள். அந்தக் கட்டுரையில் குறிப்பாக தனக்கு ஜாக்கி ஜட்டி கிடைக்கவில்லையென்றும், நாகர்கோவிலில் மிகப் பெரிய ரெடிமேட் ஷாப் "டவர் ரெடிமேட்" கடையில் கூட அந்த பிராண்ட் ஜட்டி கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் எழுதியிருந்தார். நாகர்கோவிலில் எங்குத் தேடியும் டியூரோ செல் பேட்டரி கிடைக்கவில்லை என்ற ஒரு புகார் வேறு அந்தக் கட்டுரையில் இருக்கிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும், அந்தக் கட்டுரைக்கும் வரும் வாசகர் கடிதத்தை பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள், ஜட்டியே போடுவது இல்லை போலவும், இப்போதும் பழைய வேட்டியைக் கிழித்து கோவணமாகச் சுற்றி கொண்டிருப்பவர்கள் போலவும், ஒரிஜினல் பிராண்டுக்கும், டூப்பிளிகேட் பிராண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குபவர்கள் போலவும் ஒரு தோற்றம் அந்தக் கட்டுரையில் தென்படுகிறது. அதிலும் இங்குள்ள எந்தக் கடையிலும் ஒரிஜினல் பொருட்கள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைக்கிறார்.

எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் பல வேலைகளுக்குச் சென்றவர்கள். இப்போதும் பெரும்பான்மையான குடும்பத்தில் ஒருவராவது வளைகுடா நாடுகளில் வேலையில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் பெரும்பாலும் பிராண்டட் எலக்ட்ரானிக் பொருட்களை தான் வாங்கி வைத்திருப்பார்கள். சொந்தக்காரனிடம் கூட வெளிநாட்டிலிருந்து உனக்காகக் கொண்டு வந்தேன் என்று ஏதாவது ஒரு பொருளை நீட்டினால், சோனியா, மேட் இன் ஜப்பானா என்று கேட்டு தான் வாங்கிக் கொள்கிறார்கள், அப்படியான ஊரில் நமது ஜெயமோகன் அவர்கள் சொல்வது போல் டூப்பிளிகேட் பொருட்களை மட்டுமே நம்பி ஒருவர் கடையை திறந்தால், அவர் சீக்கிரம் அந்தக் கடையை மூடி விட்டு போக வேண்டியது தான். அதற்காக எனது மாவட்டத்தில் போலி பிராண்டட் பொருட்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். எத்தனை டூப்பிளிகேட் பிராண்டட் இருக்கிறதே, அதே அளவு ஒரிஜினல் பிராண்டும் இருக்கிறது என்பது தான் நான் கூற வருவது.

ஜாக்கி ஜட்டி பற்றி சொல்லவே வேண்டாம், இப்போது கல்லூரியில் படிக்கும் அனைத்து இளைய பட்டாளங்களும் அந்த பிராண்டட் ஜட்டியின் ரோப் வெளியில் தெரியும் அளவிற்கு தான் ஜீன்ஸ் பேண்ட் வாங்கி அணிகிறார்கள். அதனால் இலக்கியம் படைக்கும் பெருசுகள் எல்லாம் ஜாக்கி ஜட்டியை வாங்கி தன்னுடைய வேட்டி, மற்றும் பேண்டுக்கும் மறைவாகப் போட்டுவிட்டு நாங்களும் பிராண்டட் ஜட்டி தான் போடுகிறோம் என்று இளசுகளின் முன்னால் மார் தட்டிட முடியாது, வேண்டுமானால் ஒன்று பண்ணலாம், சூப்பர் மேன் போல் ஜட்டியை வாங்கி பேண்டுக்கு மேல் போட்டு கொள்ளலாம்.

நமது எழுத்தாளர், நாகர்கோவில் முழுவதும் ஒரு ஜாக்கி ஜட்டி வாங்க அலைந்தேன், எங்கும் கிடைக்கவில்லை என்று எழுதியிருப்பது தான் என்னை இந்தக் கட்டுரையை எழுத வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது, மிகப் பெரிய எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் கட்டுரையை படித்த அவருடைய வாசகர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தால் ஒரு பிராண்டட் லங்கோடு கூட வாங்க முடியாது போல! என்ற முன் முடிவுக்கு வரக்கூடும். அதற்குத் தினமும் அவரது இணையதளத்தில் ஜாக்கி ஜட்டி கட்டுரைக்கு வந்து கொண்டிருக்கும் வாசகர் கடிதங்களே சாட்சி!

அவர் வீடு இருக்கும் பார்வதிபுரத்திலிருந்து அப்படியே செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி நடந்தால், பால் பண்ணை பஸ் ஸ்டாப் வரும், அந்த சிக்கனலில் இருக்கும் ஹோண்டா டூவீலர் ஷோரூம் பக்கத்தில் ஒரு மெகா மார்ட் இருக்கிறது, அங்குப் போனால் வித விதமான ஜாக்கி ஜட்டிகள் வாங்கலாம், இந்த ஜட்டியில் என்ன வித விதமான என்று கேட்கிறீர்களா? இருக்கிறது, இந்தமுறை நான் வாங்கிய கிளாசிக் டைப் ஜாக்கி ஜட்டி, காலேஜ் பசங்க போடுற ஜீன்ஸ் பேண்டு போல் பிருஷ்டத்திற்கு கீழாக நிற்கிறது, எவ்வளவு தான் முயற்சித்தாலும் பாதி பிருஷ்டத்திற்கு மேல் ஏற மாட்டேன் என்கிறது, உன்னோட பிருஷ்டம் பெருசு ஆனதற்குக் கடைக்காரன் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, ஆனால் என்னுடைய பிருஷ்டம் பெரிதானதால் வந்த பிரச்சனை இல்லை, அந்த வகையான மாடலின் வடிவமைப்பே அப்படி தான் இருக்கிறது, என்னென்ன வகை இருக்கிறது என்று தெரிய வேண்டுமானால் குகூள் செய்து பாருங்கள் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அதனால் ஜாக்கி ஜட்டி வாங்குபவர்கள் இதையும் கவனத்தில் வைத்து வாங்குங்கள். இந்தமுறை நான் வாங்கிய நான்கு செட் ஜாக்கி ஜட்டியை போடாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறேன். ஏன்டா! ஒரு எதிர்வினை கட்டுரையில் கூட அட்வைஸ், மெசேஜ் என்ற மொக்கைகள் இல்லாமல் எழுதத் தெரியவில்லை. நீயெல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டே! என்று சொல்லும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது..ஹி.. ஹி..

அப்படியே நமது எழுத்தாளர் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டு, மீண்டும் செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி முன்நோக்கி நடந்து அடுத்த பஸ் ஸ்டாப் ஆன மத்தியாஸ் வார்டு வந்தால் அங்கு டெரிக் சூப்பர் மார்கெட் இருக்கிறது. இவருக்கு டூயூரோ செல் பேட்டரி என்ன, பிலிப்ஸ் மற்றும் சானியோ பிராண்ட் பேட்டரி வகைகள் வரைக் கிடைக்கும். நமது எழுத்தாளர் இன்னும் திருவிதாங்கோடு பக்கம் இருக்கும் கடைகளுக்கு போனது இல்லை என்று நினைக்கிறேன், வளைகுடா நாடுகளில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சாக்லெட் வரை அனைத்துப் பொருட்களும் அங்குக் கிடைக்கிறது, அப்படி அந்தக் கடைகளில் இல்லையென்றால், என்ன பொருள் வேண்டும் என்பதை நாம் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் ஒரு வாரக் காலத்தில் நமக்கு வாங்கி வந்து தருகிறார்கள்.

இந்த பிராண்டட் பொருட்கள், நான் சொல்லிய இரண்டு இடங்கள் தவிர வேறு எங்கும் கிடைக்காதா என்றால், இல்லை வேறு பல இடங்களில் இருக்கும் கடைகள் பற்றியும் என்னால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்க முடியும், ஆனால் நமது எழுத்தாளரின் வசதிக்காக அவர் வசிக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிடைக்கும் கடைகளை மட்டும் எழுதியிருக்கிறேன்.



ஜட்டி பற்றிய கதை வந்ததால், எனது நண்பருடைய அனுபவத்தையும் சேர்த்து எழுதுகிறேன், இந்த அனுபவம் வட இந்தியா போன போது எனக்கும் ஒருமுறை நடந்து இருக்கிறது. சவுதியில் நண்பர் ஒருவரை ஒரு புது ப்ரொஜெக்ட் விசயமாக, ஒரு நாள் மீட்டிங் போய் வரலாம் என்று மேனேஜர் அழைத்துக் கொண்டு போயிருந்தார். அந்த ப்ரொஜெக்ட் பண்ண வேண்டிய சைட் கொஞ்சம் ரிமோட் ஏரியா, பெரிதாக டெவலப் ஆகாத சிட்டி. நண்பரும் ஒரு நாள் தானே, என்று அதிகமான துணிகள் எடுத்துப் போகவில்லை, இரண்டு செட் துணிகள் மட்டும் கைப் பையில் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். ப்ரொஜெக்ட் மீட்டிங் முடிந்தவுடன், உங்கள் நிறுவனத்திலிருந்து ஒரு ஆள் இன்றிலிருந்தே வேலையைத் தொடங்க வேண்டும், உங்கள் ப்ரொஜெக்டுக்கு தேவையான அனைத்தும் டாக்குமெண்டுகளும் வரத் துவங்கி விட்டது என்று கிளைண்ட் வற்புறுத்தியிருக்கிறான். அப்புறம் என்ன, ப்ரொஜெக்டில் கிளைன்ட் சொன்னால் தட்ட முடியுமா? ஒரு வாரம் "நீ சமாளித்துக் கொள்!" என்று நண்பரை அடகு வைத்துவிட்டு மேனேஜர் வந்து விட்டார்.

ஒரு வாரம் என்று நினைத்து, ஒரு மாதம் அந்த நண்பர் ப்ரொஜெக்டில் தனியாக இருக்க வேண்டி வந்தது, அதன் பிறகு தான் என்னுடன் சேர்ந்து மூன்று பேர் வந்தோம். ஒரு மாதம் நண்பர் தங்கியிருந்த ஹோட்டலில் தான் நாங்களும் தங்க வைக்கப் பட்டோம், நண்பரின் ரூமில் ஒரு மூலையில் கசங்கிய ஜட்டி குவியாக கிடந்தது, என்ன என்று விசாரித்த போது, ஹோட்டலில் துணி துவைப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றும், வெளியில் லாண்டரியில் தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கும் ஜட்டி குவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், இங்கிருக்கும் லாண்டரி கடையில் ஒரு ஜட்டி துவைப்பதற்கு கூட இரண்டு ரியால் கேட்கிறான், இரண்டு முறைத் துவைக்க கொடுத்தால் நான்கு ரியால் ஆகிறது, புதிதாகக் கடையில் விற்கும் பத்து ஜட்டிகள் இருக்கும் பாக்கெட் முப்பது ரியால் தான் சொல்கிறான், அதனால் நான் இரண்டு பாக்கெட் வாங்கி உபயோகித்து வருகிறேன் என்று சொன்னார்.


.


.

Monday, June 20, 2016

ஏண்டா! இவனா நம்ம கோவாலு!

ஊர் திருவிழாவை திட்டமிட்டு இந்த முறை வருட விடுமுறையை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து, பிப்ரவரி முதல் வாரம் வரை எடுத்திருந்தேன், முதல் இரண்டு வாரங்கள் கோவில் திருவிழா மற்றும் சொந்த வேலைகள் என்று கொஞ்சம் பிஸியாக போனது, குடும்பத்துடன் பெரிதாக வெளியில் எங்கும் சுற்ற முடியவில்லை. திருவிழா முடிந்த வாரத்தில், ஒரு நாள் வீட்டில் சொந்த வேலைகள் எதுவும் பெரிதாக இல்லை, அதனால் வெளியில் சென்று வரலாம் என்று காலையில் மனைவியிடம் சொன்னேன், ஊரில் இருக்கும் போது பெரும்பாலும் நான் "வெளியில் செல்லலாம்" என்றால் நாகர்கோவிலுக்குப் படம் பார்க்கப் போகிறோம் என்று தான் அதன் பொருள் என்று மனைவிக்குத் தெரியும்.

காலையில் குளித்து, டிபன் சாப்பிட்டு இருவரும் கிளம்பும் போது மணி பத்தை நெருங்கியது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, வராண்டாவில் நிறுத்தியிருந்த டூவீலரை வெளியில் எடுக்கும் போது தான் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்று பேப்பரில் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது, திரும்பவும் வீட்டிற்குள் சென்று பேப்பரைப் புரட்ட வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால், போகிற வழியில் சுவரொட்டி போஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து, மனைவியைப் பின்னால் ஏற்றிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

எனது வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு பதிமூன்று கிலோமீட்டர் தொலைவு தான் இருக்கும், போகிற வழியில் பெரிய அளவில் சினிமா போஸ்டர்களை பார்க்க முடியவில்லை, அப்படியே ஒட்டியிருந்தாலும் என்னால் வண்டியை நிறுத்திப் பார்க்க முடியவில்லை. அதனால் நேராக ராஜா மால் சென்று விடலாம் அங்கு ஏதாவது ஒரு புது படம் கண்டிப்பாக இருக்கும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு வண்டியை நேராக செட்டிக்குளம் விட்டேன். ராஜா மாலின் கீழ் தளத்தில் பார்க்கிங் வசதி இருக்கிறது, மனைவியை மாலின் முன் இறங்கச் சொல்லிவிட்டு, வண்டியைக் கொண்டுபோய் பார்க்கிங் ஸ்டாண்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் மாலுக்குள் நுழைந்தோம். இந்த மாலில் இரண்டாவது தளத்தில் தான் தியேட்டர் இருக்கிறது, நேராக இரண்டாவது தளத்திற்கு சென்று என்ன படம் இருக்கிறது என்று கவுண்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன், அவர் கதக்களி, ரஜினி முருகன், குங்க்பூ பாண்டா-3 இருக்கிறது என்றார், நான் கதக்களிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினேன்.

டிக்கெட் வாங்கி விட்டு ஷோ-டைமை பார்த்தேன், காலை 11.30 என்று இருந்தது, என்னுடைய கையிலிருந்த மொபைலில் மணியைப் பார்த்தேன், மணி 10.40 தான் ஆகியிருந்தது, இன்னும் படம் தொடங்குவதற்கு 40 நிமிடம் இருந்தது, இங்குக் காத்திருப்பதை விட, மேல் தளத்தில் இருக்கும் புட் கோர்ட்க்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருவரும் மாடிப் படியேறினோம், பெரிய அளவில் கூட்டம் இல்லை, எங்களைப் போல படம் பார்க்க வந்தவர்களும், கல்லூரிகளுக்குக் கட் அடித்துவிட்டுச் சுற்றிக்கொண்டிருக்கும் சில இளசுகளையும் ஆங்காங்கே இருக்கைகளில் பார்க்க முடிந்தது. மனைவியிடம் ஏதாவது சாப்பிடுகிறாயா என்று கேட்டேன், அவர் கண்கள் ஐஸ்கிரீம் பார்லரை தான் நோக்கியது, சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம் பார்லர் பக்கத்தில் போடப்பட்டிருந்த டேபிளில் மனைவியை அமரச் சொல்லிவிட்டு, நான் சென்று பார்லரில் ஒரு கேரமல் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரீம்  ஆர்டர் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த காபி ஷாப்பில் எனக்கு ஒரு காபி ஆர்டர் செய்தேன்.

ஐஸ்கீரீமை வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு, காபி வாங்குவதற்காகக் காபி ஷாப்பில் வெயிட் பண்ணினேன். இரண்டு வாண்டுகள் வேகமாக ஓடிவந்து ஐஸ்கீரீம் பார்லரின் டேபிளில் இருந்த மெனுகார்டை எடுப்பதற்காகத் துள்ளி கொண்டிருந்தார்கள், நில்லுங்கடா.. டேய்... டே .. என்று சத்தமிட்டு கொண்டு அவர்கள் பின்னால் ஓடி வந்த ஒருவர் டேபிளில் இருந்த மெனு கார்டை எடுத்து அந்த வாண்டுகளிடம் கொடுத்துவிட்டு, கடைக்காரரிடம் கண்ணாடியில் தெரிந்த ஐஸ்கீரீமை காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வாண்டுகளும் ஒருவர் மாறி ஒருவர் மெனுக்கார்டை பார்த்து, திஸ் இஸ் இ வாண்ட் என்று கை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நான் ஆர்டர் பண்ணிய காபி வரவே, அதை வாங்கிக் கொண்டு மனைவி இருந்த டேபிளின் எதிர் பக்கத்தில் அமர்ந்து இந்த இரண்டு வாண்டுகளின் செய்கைகளை நானும் மனைவியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம், அந்த இரண்டு வாண்டுகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தன. டாட் திஸ் இச் ஐ வாண்ட் என்று ஒரு வாண்டு அவர்கள் பக்கத்தில் நின்றவரிடம் கை காட்டும் போது தான், நான் அவர் முகத்தைச் சரியாக பார்த்தேன், எங்கோ பார்த்த முகமாக இருந்தது, எனக்கு உடனடியாக ஞாபகம் வரவில்லை, மனைவியிடம் நான் அவரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர் என்னை அடையாளம் கண்டுபிடித்து, "ஹே பால்! ஹவ் ஆர் யூ மேன், ஆப்டர் லாங் டைம், ஹேவ் எ ஸ்ர்பிரைச்சுடு" என்று என்னிடம் வந்தார்.

என்னை "பால்" என்று அழைத்ததும், அவனுடைய (ஆமா இனி அவர் என்ற மரியாதை இல்லை அவன் தான்) பேச்சில் இருந்த தடங்கலும் எனக்கும் ஒருவனை ஞாபகப் படுத்தியது, ஆம்! நான் நினைத்தது சரி தான், இவன் என்னுடன் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ-வில் ஒன்றாகப் படித்தவன். பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்கள் மட்டும் தான் என்னை "பால்" என்று அழைப்பார்கள். ஆனால் இவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசியது இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிளஸ் ஒன்னில் நான் படிக்கும் போது கணித பாடப் பிரிவில் காமர்ஸ் என்று ஒரு பிரிவு இருந்தது, அதில் சேருவதற்கு எவரும் விரும்ப மாட்டார்கள்,  பத்தாம் வகுப்பில் கணிதத்தில் ஒரு ஐம்பது மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்கள், கணித பிரிவை எடுத்து படிக்க விரும்பினால் அவர்களை இந்தப் பிரிவில் சேர்த்துக்கொள்வார்கள். பெரும்பாலும் இந்தப் பாட பிரிவை எடுத்தவர்களுக்கு, அந்தப் பாட பிரிவைப் பற்றிய முழு புரிதல் இருப்பதில்லை. பள்ளி நிர்வாகம் அந்தப் பாட பிரிவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சிலரை வலுக்கட்டாயமாகச் சேர்த்துவிடுவார்கள், கணிதம் பயாலஜி பிரிவு எடுத்தவர்களுடன் தான், காமர்ஸ் பிரிவு எடுத்தவர்களும் வகுப்பில் ஒன்றாக இருக்க வைக்கப் படுவார்கள். பயாலஜி மற்றும் காமர்ஸ் பாடம் மட்டும் தனித்தனியாக நடத்தப்படும்.

ஏண்டா! நண்பன் ஒருத்தனை பார்த்தேன்னு மேல் பத்தியில் எழுத்திட்டு, அவனைப் பற்றி ஏதாவது எழுதுவானென்று பார்த்தா, அப்படியே யூ டார்ன் எடுத்து பயாலஜி, காமர்ஸ்னு மொக்கை போடுறனு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது, சரி சரி ! சொல்லுறேன், நான் பிளஸ் ஒன்னில் பயாலஜி பிரிவில் படிக்கும் போது அவன் என்னுடன் காமர்ஸ் வகுப்பில் படித்தான். பத்தாம் வகுப்பிலேயே இரண்டு மூன்று முறை அட்டம்ட் எழுதி வந்தவன். என்னைவிட ஒரு மூன்று வயதாவது மூத்தவனாக இருப்பான், ஆனால் பார்ப்பதற்கு அப்படித் தெரியாது, கொஞ்சம் குள்ளமாக இருப்பான். கன்னம் இரண்டும் இட்லி வைத்துத் தைத்தது போல் உப்பலாக இருக்கும். அவன் பேசும் போது நாக்கு கொஞ்சம் குழறும். அவனுடைய அப்பாவிற்கு மரவள்ளி கிழங்கு மொத்த வியாபாரம், ஊரில் சொத்து பத்து அதிகம் உண்டு, பள்ளி படிக்கும் போதே அவனிடம் கை நிறைய பணம் புழங்கும்.

எல்லாப் பாடத்திற்கும் தனித் தனியாக டியூசன் வைத்திருந்தான், ஆனால் அவனுக்கும் படிப்பிற்கும் காதத் தூரமாக இருந்தது, எந்தத் தேர்விலும் பாஸ் மார்க்கு வாங்குவது இல்லை, அவனுக்கு அதைப் பற்றிய கவலையும் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுடன் வியாபாரத்தைக் கவனிக்க கிளம்பி விடுவான். பிளஸ் டூ விலும் நான்கு பாடம் தோல்வி அடைந்தான் என்று நினைக்கிறேன். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு நான் பள்ளிக்கு சென்றிருந்த போது, அவனும் பள்ளிக்கு வந்திருந்தான், இனிமேல் ஐடிஐ படிக்கப் போவதாக என்னிடம் சொன்னான், அப்போது தான் அவனை நான் கடைசியாக பார்த்தது, அதன்பிறகு சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது தான் தியேட்டரில் பார்க்கிறேன்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தான், அவனுடைய ஆங்கில பேச்சில் மெய்மறந்து அப்படியே நிற்கும் போது, என்ன பால்! என்ன தெரியலியா! நான் தான் கிருஷ்ணன் என்றான், ஆகா ! நீதானா நானும் உன்னை எங்கேயே பார்த்தது போல இருக்கு என்று என்னோட வைப் கிட்ட இப்பா தான் சொல்லிட்டு இருந்தேன், நீ அதுக்குள்ள என்னை அடையாளம் கண்டு அழைத்து விட்டாய் என்று கை கொடுத்து என்னுடைய மனைவியை அறிமுகம் செய்து பேசிக்கொண்டிருந்தேன், அவனும் குடும்பத்துடன் தான் வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவனுடைய இரண்டு மகன்களும் கையில் இரண்டு பெரிய கப் ஐஸ்கீரீமுடன் வந்தார்கள். டாட்! ஐ காண்ட் ஹோல்ட் திஸ் வெரி சில்! என்று ஒருவன் தனது கையில் இருந்த ஐஸ்கீரீமை நீட்ட, அருகில் இருந்த என்னுடைய மனைவி அவனிடம் இருந்து அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அவனைச் செயரில் அமர வைத்தார்

தான் இப்போது சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அங்கு தான் குடும்பத்துடன் இருப்பதாகவும் சொன்னான், இரண்டு கடைகள் தள்ளி இருக்கும் பீட்சா கடையில் சாப்பிடும் போது தான் இந்த இரண்டு வாண்டுகளும் ஐஸ்கீரீம் வேண்டும் என்று தொல்லை படுத்தி அழைத்து வந்ததாகவும், தன்னுடைய மனைவி அந்த டேபிளில் காத்திருப்பதாகவும் சொல்லி எங்களை அங்கு வருமாறு அழைத்தான். நாங்களும் அவனுடன் அந்த டேபிளுக்கு சென்றோம், அந்த புட் கோர்ட்டில் இருந்த மொத்த கடைகளின் உணவு வகைகளும் அந்த டேபிளில் இறைந்து கிடந்தது, அவனுடைய மனைவியையும் அறிமுகப்படுத்தி வைத்தான். அவரும் சிங்கப்பூரில் நர்ஸ் ஆக வேலை பார்ப்பதாக சொன்னார்.

பிள்ளைகளிடமும், மனைவியிடமும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினான், என்ன விசயமாக இங்கு வந்தாய் என்று கேட்டேன், பிள்ளைகள் எல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள், அதான் வந்தேன் என்றான், நானும் படம் பார்க்கத் தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு, என்ன படம் பார்க்க! கதகளியா?, ரஜினி முருகனா? என்று கேட்டேன். அவன் இல்லடா! தமிழ்ப் படங்கள் எல்லாம் இப்ப பார்கிறது இல்லை! குங்க்பூ பாண்டா-3 பார்க்க வந்தேன் என்று எனக்கு பல்பு கொடுத்தான். நான் என்ன படம் பார்க்க வந்திருக்கிறேன் என்று கேட்டான், நான் கதக்களி என்று சொன்னேன், அவனுடைய ஷோ-டைம் காலை 11.15 , எங்கள் படத்தின் ஷோ-டைமை விட 15 நிமிடம் முன்னதாக இருந்ததால் எங்களிடம் விடைபெற்று கொஞ்சம் சீக்கிரமாக நால்வரும் கிளம்பினார்கள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் இருந்த பாதி உணவுகள் அப்படியே இருந்தது, அந்த டேபிளில் நாம் இருவரும் இருந்தால், பார்க்கிறவங்க நம்மள தப்பா நினைப்பாங்க, வா ! நாம போய் வேறு டேபிளில் அமரலாம் என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு முன்பு நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு மாறினோம். வந்து அமர்ந்த என்னுடைய மனைவி என்னிடம், இவரை பற்றி, நீங்க! என்னிடம் ஏதும் சொன்னது போல ஞாபகம் இல்லையே! எல்லோரைப் பற்றியும் ஒரு கதை சொல்லுவிங்க! என்று கேட்டார்.



அவரிடம் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

நான் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் போது என்னுடன் படித்த இரண்டு பேர் மாதத்திற்கு ஒரு நாளாவது  வகுப்புக்குக் கட் அடித்துவிட்டு படம் பார்க்க நாகர்கோவிலுக்குப் போய்விடுவார்கள். படம் முடிந்து திரும்ப பள்ளிக்கு அருகில் இருக்கும் தென்னந் தோப்பில் இருந்துவிட்டு, பள்ளி முடிந்து எல்லோரும்  வீட்டிற்குச் செல்லும்போது இவர்களும் கூட்டத்தில் கலந்து விடுவார்கள், அவர்கள் இருவரின் பள்ளி பேக்கில், எப்போதும் இரண்டு செட் கலர் சட்டை மற்றும் பேண்ட் இருக்கும். இந்த இருவருடனும் புதிதாக ஒருவன் வந்து சேர்ந்தான், அவனுடைய பெயர் கோபால், நாங்கள் அவனை கோவாலுனு கூப்பிடுவோம். கோவாலிடம் பணத்திற்குப் பஞ்சம் கிடையாது, பள்ளி விடுமுறை நாட்களில் தனது அப்பாவுடன் வியாபாரத்திற்குச் செல்வான், எனவே எப்போதும் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகள் அவன் கையில் புழங்கும், சில நேரங்களில் ஐம்பது ரூபாய் நோட்டும் வைத்திருப்பான்.

கோவாலுக்கு நாகர்கோவிலுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருந்தது, அதற்காக பிடித்த ஆட்கள் அந்த இரண்டு பேர், ஒரு முகூர்த்த நாளில் மூன்று பேரும் சேர்ந்து நாகர்கோவிலுக்கு வண்டி ஏறினார்கள்.  செட்டிகுளத்தில் நாம் இருக்கும் இந்த மால் வருவதற்கு முன்பு இந்த இடத்தில் இரண்டு தியேட்டர் இருந்தது, சக்ரவர்த்தி, மினி சக்ரவர்த்தி அந்த இரண்டு தியேட்டருக்கு தான் அந்த மூன்று பேரும் படம் பார்க்க பதினெட்டு வருடங்களுக்கு முன்பு வந்தார்கள். அந்தத் தியேட்டரில் அன்று எல்லா ஷோவும் ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டப் பட்டிருந்தது, ஒரு தியேட்டரில் முரளியின் தேசிய கீதம் படமும், மற்றொரு தியேட்டரில் விஜய காந்தின் வீரம் வெளஞ்ச மண்ணு என்ற படமும் ஓடியது.

கோவாலு எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்று இவர்களுடன் வந்திருந்தான், அவன் நாகர்கோவிலில் முதல் முறையாகப் படம் பார்க்க வருகிறான். தியேட்டர் மற்றும் படங்களை பற்றிய விபரங்கள் எதுவும் அவனுக்குத் தெரியாது. நண்பர்கள் இரண்டு பேரும் டிக்கெட் இல்லையாம், ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டியிருக்கிறது என்று கோவாலிடம் சொல்லி கொண்டிருந்தார்கள். கோவாலுக்கு நிராசையாக இருந்தது, எப்படியும் படம் பார்த்து விடலாம் என்று இவர்களை நம்பி வந்தவன்.

இவர்கள் மூன்று பேரும் நிற்கும் பக்கமாக ஒருவர், பால்கனி இருவத்தி ஐந்து, பால்கனி இருவத்தி ஐந்து  என்று சொல்லிக்கொண்டு சென்றார். அந்த நண்பர்கள் இருவரும் இருபத்தி ஐந்து ரூபாய் கொடுத்து படம் பார்க்க வேண்டாம் இன்னொரு நாள் கழித்து வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள், கோவாலு விடவில்லை, என்னது! இருவத்தி ஐந்து ரூபாய் கொடுத்தால் படம் பார்க்க போகலாமா!, அப்படியானால் போவோம்!, செலவை நான் பார்த்து கொள்கிறேன், நான் இன்னைக்கு எப்படியாவது படம் பார்க்கத் தியேட்டருக்குள் போக வேண்டும் என்று சொன்னான். அந்த இரண்டு பேரும் எவ்வளவு சொல்லியும் நம்ம கோவாலு கேட்கவில்லை.

ஒரு வழியாக பிளாகில் எழுபத்து ஐந்து ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் போனார்கள். பால்கனியில் வாசல் அருகிலிருந்த முதல் முன்று சீட்டு தான் இவர்களுக்குக் கிடைத்தது, வாசலுக்கு அருகிலேயே கோவாலு அமர்ந்திருந்தான். படம் தொடங்கியது, லஷ்மி மூவி மேக்கர் பெருமையுடன் வழங்கும் "வீரம் வெளஞ்ச மண்ணு" என்று பெயர் வந்தது, வாசலின் அருகில் இருந்த நம்ம கோவாலு லேய் மக்கா! நம்மள ஏமாத்திட்டானுவே டேய் ! என்று கூச்சல் போட்டு அந்த நண்பர்களைப் பார்த்து கத்தினான். அந்த இரண்டு பேருக்கும் ஒண்ணும் புரியவில்லை, கத்தியவன் சும்மா இருக்காமல் வாசலைத் திறந்து வெளியில் ஓடினான், அங்கு எதேச்சையாக இவர்களுக்கு பிளாகில் டிக்கெட் விற்ற நபர் நிற்க, அவரிடம் சென்று, கையைத் தட்டி "ஓய்! எழுவத்தி ஐந்து ரூபா வாங்கும் போது, என்ன ஓய் சொன்னீரு! பால்கனி படம் என்று தானே சொன்னீரு! இப்ப அங்க வேறு ஏதோ படம் போடுறான்" என்று கோவாலு காத்த, அவரு இவனை கோபத்தில் சட்டையைப் பிடிக்க  அந்த இரண்டு நண்பர்களும் வெளியில் வர சரியாக இருந்தது. இல்லையென்றால் அன்னைக்கு கோவாலுக்கு கடைசி படமாக இருந்திருக்கும் என்று கதையை முடித்தேன்.

என்னுடைய மனைவிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை, ஆமா! அந்த கோவாலு யாரு ? என்று கேட்க நான் சொன்னேன் அவனுடைய முழுப் பெயர் "கோபால கிருஷ்ணன்" என்று!...


.

Monday, June 13, 2016

ஏன்டா டேய்! காசு கேக்குற நேரமா இது!

பேச்சுலராக சவுதியில் வேலைப்பார்த்த போது, கம்பெனி கொடுத்திருந்த ஹெஸ்ட்கவுஸில் பத்திலிருந்து பன்னிரண்டு பேர் ஒன்றாக தங்கியிருப்போம். அவ்வாறு இருப்பவர்களில் ஒருவர் வேறு ப்ரொஜெக்ட்களுக்காக வேறு இடங்களுக்குச் சென்றால் புதிதாக இன்னொருவர் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்து கொள்வார். எப்படியும் பத்துபேருக்கு மேல் தான் அந்த ஹெஸ்ட்கவுஸில் எப்போதும் தங்கியிருப்போம். நான்கு பெரிய‌ படுக்கையறை கொண்ட பங்களாவைத் தான் கம்பெனி எங்களுக்குக் கொடுத்திருந்தது. அங்குத் தங்கியிருக்கும் நாங்கள் அனைவரும் ஒன்றாக‌ சமையல் செய்து தான் சாப்பிடுவோம்.

சமையல் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வேண்டிய‌ பணத்தின் கணக்கு வழக்குகளை பராமரிப்பதற்கு எங்களுள் ஒருவரை நியமித்துக் கொள்வோம். அவரை நாங்கள் மெஸ் மேனேஜர் என்று அழைப்போம். அவரிடம் மாத சம்பளம் கைக்கு வந்தவுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை எல்லோரும் கொடுத்து விடுவோம்.அவர் அந்த பணத்தை வைத்துக்கொண்டு அந்த மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துவிடுவார்.

எங்களுக்குள் சமையல் வேலைகள் ஒவ்வொன்றையும் பிரித்துக்கொள்வோம், எவர் அன்றைக்குச் சமையலுக்கு தலைமை தாங்குகிறாரோ அவருக்கு மற்றவர்கள் உதவிகள் செய்வோம், செம ஜாலியாகவும், கலாட்டாவாகவும் சமையல் நடக்கும். எங்களுள் ஒரு மூன்று நான்கு பேருக்கு மட்டும் தான் சமையல் நன்றாகச் செய்ய தெரியும், மற்றவர்கள் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மாதத்தின் தொடக்கத்தில் காலை வேளைக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட், கார்ன் ப்ளெக்ஸ், வோட்ஸ் என்று ஆரம்பித்து அப்படியே பால், காப்பி, டீ, பிரட் வித் மயோனிஸ் என்றாகி மாத கடைசியில்  பிளாக் டீ வித் பிரட் மட்டும் என்று வந்து நிற்கும். மதியத்திற்கும் மாத தொடக்கத்தில் ரைஸ், குழம்பு, கூட்டு, பொரியல், ஆம்லெட், அப்பளம் என்று ஆரம்பித்து ரைஸ் வித் தயிரில் வந்து நிற்கும். மாத தொடக்கத்தில் வரும் வார இறுதியிலும் அப்படித்தான், மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி வித் பிஷ் அல்லது பிரான் ஃப்ரை என்று ஆரம்பித்து மாத கடைசியில் ரசம் சாதம் என்று வந்து நிற்கும்.

சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் எல்லாம் இணையத்தைப் பார்த்து சமையல் செய்து தங்களின் சமையல் திறனை வளர்த்துக் கொள்வார்கள். பெயரில்லா சட்னியில் ஆரம்பித்து பெயரில்லா பிரியாணி வரை செய்து டிரையல் பார்த்துக் கொள்வார்கள். மாத கடைசியில் இன்னும் காமெடியாக இருக்கும், மேலே நான் சொல்லிய படி மாதத்தின் தொடக்கத்திலேயே ஹெவி பர்சேஸ் செய்து மெஸ் பணத்தை காலி செய்துவிட்டு, மாத இறுதியில் பிரிஜில் மிச்சம் இருக்கும் பொருட்களை வைத்துச் சமையல் செய்யவேண்டும், இந்த மாதிரி நேரங்களில் சமையல் ஜாம்பவான்கள் எவரும் சமையலில் இறங்காமல், சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பவனை அழைத்து கோதாவில் கோத்து விட்டுவிடுவார்கள்.

ஏதாவது ஒரு காய் மாதத்தின் தொடக்கத்தில் வாங்கி வைத்து, எவரும் குழம்பு வைக்கும் போது சீண்டாமல் அப்படியே வாடி வதங்கி பிரிஜில் ஓரத்தில் இருக்கும், அன்றைக்குப் பலிகடாவான நண்பனிடம் "அந்தக் காய் இருக்கிறது,  யூடியுபில் எப்படிச் செய்வது என்று பார்த்து விட்டு டிரை பண்ணு!" என்று உசுப்பேற்றுவார்கள். அவனும் அந்தக் காயை வைத்து எப்படிக் குழம்பு செய்வது என்று நாலைந்து வீடியோவை பார்த்து ஒரு பெரிய லிஸ்டுடன் சமையலறைக்கு வருவான். வந்தவன் கேட்கும் முதல் மசாலா பொருளே இருக்காது, அப்படியே அவன் ஒவ்வொரு மசாலா பொருளாக சொல்லி ஒரு பத்து பொருள் கேட்டால், இரண்டு தான் சமையலறையில் இருக்கும். அய்யோ! இதை வைத்து எப்படிக் குழம்பு செய்வது என்று கேட்கும் அப்பாவியிடம், நாங்க இருக்கோம்! என்ற வாசன் ஐ கேர் டையலாக்குடன் சமையல் தெரிந்த இரண்டு பேர் சிரித்துக்கொண்டே நிற்பார்கள்.

அந்த டயலாக் மற்றும் சிரிப்பிற்குள் இருக்கும் விஷமத்தைப் புரிந்து கொண்டு, உஷாராகி விட்டால் நல்லது, இல்லையென்றால் அன்று முழுவதும் அவனை காமெடி பீஸாக்கி விடுவார்கள். நீ, யூடியூபில் பார்த்த முறைப்படி சமையல் செய்ய ஆரம்பி!, மசாலா பொடி போடுவது எல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று, சமையல் அறையில் மிச்சம் மீதம் இருக்கும் எல்லா மசாலா பவுடர்களையும் எடுத்து அருகில் வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள். அவனும் இவர்களின் பேச்சை நம்பிச் சமையலை ஆரம்பிப்பான். கோலம் போட புள்ளிகளை ஆரம்பிப்பது மட்டும் அவனாக‌ இருப்பான், அதை வண்ணம் தூவி முடிப்பது இவர்களாக இருப்பார்கள்.

சமையல் முடித்த போது அவனுக்கே டவுட் வரும், இதைச் சாதத்தில் ஊற்றி சாப்பிடுவதா? அல்லது ஒதுக்கி வைத்துச் சாப்பிடுவதா? என்று. ஒருவழியாக எடுத்து அதை டைனிங் டேபிளில் வைத்தால் மொத்த பேரும் மார்க்கு போட‌ வந்துவிடுவார்கள் ஷெப் தாமு வாக. ஏன்டா! இந்தக் குழம்பை வைக்கத் தான் யூடியூபுல ஒரு மணி நேரம் வளைச்சு வளைச்சு வீடியோ பார்த்தியா? என்று ஒருவன் சொல்ல‌, இதுக்கு "நான் தயிரை ஊற்றியே சாப்பிடுவேன்" என்று சொல்லிக்கொண்டு  இரண்டாவது ரவுண்டு சாதத்தைப் போட்டு அதே குழம்பை ஊற்றுவான். மச்சி! ஜஸ்ட் மிஸ்சு, வீடியோ மட்டும் எடுத்திருந்தா, இந்த வாரம் இது தான் மச்சு வைரல் வீடியோ! என்று ஒருவன் ஆரம்பிக்க, மச்சி! வீட்ல ஏதும் இந்த குழம்பை டிரை பண்ணிராத! அதோடு உன்னை தலை முழுகிடுவாங்க! என்று நக்கலுக்கும், கிண்டலுக்கும் பிஎச்டி வாங்கினவன் எல்லாம் அந்தக் கூட்டத்தில் தான் இருப்பான், வெச்ச குழம்பில் வயிறு நிறைகிறதோ, இல்லையோ! இவனுங்க அடிக்கிற லூட்டியில் வயிறு நிறைந்துவிடும்.

மெஸ் மேனேஜர் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா, ஒருமுறை சென்னையை சேர்ந்த நண்பர் ஒருவரை மெஸ் மேனேஜர் ஆக நியமித்து இருந்தோம், நண்பர் காசு விசயத்தில் ரெம்ப கறாரான‌ ஆளு! ஐம்பது ஹலாலா என்றாலும் கணக்கு பார்த்து வாங்கிவிடுவார். வாரத்துக்கு ஒருமுறை எங்கள் சமையலுக்கு தேவையான பொருட்களை லூலூ, பாண்டா போன்ற சூப்பர் மார்கெட்டுக்கு சென்று வாங்கிவருவோம். நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து டாக்சியில் தான் இந்த இடங்களுக்குச் செல்ல முடியும். சில நேரங்களில் நாங்கள் நியமித்திருக்கும் மெஸ் மேனேஜர் மாலையில் வாக்கிங் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றே பொருட்களை வாங்கி வந்து விடுவார். டாக்சிக்கு செலவு செய்யும் 20 ரியால் மிச்சம் என்ற அளவிற்குக் கணக்கு பார்ப்பவர் என்றால் நீங்களே அவரின் கருமி தனத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தனைக்கும் வாங்க வேண்டிய பொருட்கள் எல்லோருக்கும் பொதுவானது, அந்த டாக்சிக்கான காசும் கூட மெஸ் கணக்கில் இருந்து தான் கொடுக்கப்படும். அதில் அவருடைய காசு 2 ரியால் அடங்கியிருக்கிறது என்ற அளவிற்குக் கணக்கு பார்ப்பவர்.

சமையலில் எந்தப் பொருட்களையும் வேஸ்ட் பண்ணுவதில் இந்த நண்பருக்கு உடன்பாடு இருக்காது, பிரிஜில் ஒருவாரம் வைத்த குழம்பு மீதம் இருந்தாலும், நண்பர் கூச்சப்படாமல் சூடு பண்ணி சாப்பிடுவார். ஏதாவது காய்கறிகள் வேஸ்ட் ஆகிறது என்றால், நாம் அழைக்க வேண்டாம் இவரே வாலண்டியராக வந்து குழம்பு செய்கிறேன் என்று காமெடி பண்ணுவார், வாயில் எவரும் வைக்க முடியவில்லை என்று சொன்னாலும் சிரித்துக்கொண்டே, ஒரு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி  சாப்பிடுங்க ஜி என்று சொல்லுவார். இவரிடம் உள்ள நல்ல குணம், எவர் என்ன சொன்னானும் கோபமே படாமல் சிரித்துக்கொண்டே இருப்பார். நம்ம கூட இருக்கிறவனுங்களுக்கு இது போதாதா? போர் அடிக்கும் போதெல்லாம் இந்த நண்பரைத் தான் ஓட்டுவார்கள். அவர்கள் நம்மை ஓட்டுகிறார்கள் என்று தெரிந்தாலும் இவரும் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பார், அவ்வளவு நல்லவர்.

மெஸ் மேனேஜராக இருந்த நண்பர், புதிய ப்ரொஜெக்ட்டுக்காக வேறு ஒரு இடத்திற்கு செல்ல‌ வேண்டியிருந்தது. எனவே அவர் பார்த்து வந்த எங்கள் மெஸ் கணக்கு வழக்குகளை முடித்து வேறு ஒருவரிடம் கொடுக்க வேண்டி வந்தது. அதற்காக  நண்பர் ஒரு நாட்கள் முழுவதும் அமர்ந்து எல்லா கணக்குகளையும் பார்த்துவிட்டு யாருக்கெல்லாம் பணம் கொடுக்கவேண்டி வந்ததோ அவைகளை கொடுத்துவிட்டு, யாரெல்லாம் அவருக்கு தரவேண்டுமோ, அந்த பணத்தையும் வசூலித்துக்கொண்டிருந்தார். சிலர் ஏதோ ஒரு தருணத்தில் இவரிடம் வாங்கிய ரியால்களை கூட ஞாபமாக கேட்டு வாங்கிக்கொண்டார், பெரிய தொகையெல்லாம் கிடையாது இரண்டு ரியால், ஐந்து ரியால் அப்படி தான், என்னிடம் கூட ஜீ!நீங்க, ஒரு நாள் காலையில சாண்ட்விச் சாப்பிட்ட கணக்கில் ஒரு மூன்று ரியால் தரவேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டார். நான் அதை சுத்தமாக மறந்து போயிருந்தேன். ஒருவரிடம் வாங்கி சாப்பிட்டதை கூடவா மறப்பார்கள் என்று எண்ண தோன்றும், காரணம் நானும் சில நாட்கள் அவருக்கு சாண்ட்விச் வாங்கி கொடுத்திருப்பேன்.

இவ்வாறு எங்களுடன் இருந்தவர்கள் எல்லோரிடமும் ஒரு ஹலாலா கூட‌ பாக்கி இல்லாமல் எல்லாவற்றையும் கணக்குப்பார்த்து வாங்கிக் கொண்டார். நண்பருக்கு கம்பெனியிலிருந்து விடியற்காலை ஆறு மணிக்கு பிளைட் புக் பண்ணியிருந்தார்கள். நண்பர் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி கொண்டிருந்தார். ஒவ்வொரு அறையாகச் சென்று லைட் போட்டு ஏதாவது பொருளை மிஸ் பண்ணி விட்டோமா! என்று சோதித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் செய்த களோபரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நான் உட்பட பாதி பேர் தூக்கத்திலிருந்து விழித்துவிட்டோம். நாங்களும் ஆளுக்கொரு பக்கமாக உதவி செய்து அவருடைய சோப்பு முதல் பாத்ரூம் சப்பல் வரை எடுத்து கவரில் போட்டுக் கொடுத்துவிட்டோம்.

வேறொரு நண்பர் இரண்டு நாட்கள் ப்ரொஜெக்ட் விசயமாக சைட்டுக்கு சென்று லேட்டாக வந்து ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தவர் தூங்கிக் கொண்டிருந்த நண்பரின் அறைக்கு, ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு முறை சென்று பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த நண்பரோ சைட்டுக்கு சென்று வந்த‌ பயண களைப்பில், நல்ல குறட்டை விட்டுத் தூங்கி கொண்டிருந்தார். இவர் அவரை நேரடியாக எழுப்பாமல், ஏதாவது செய்து விழிக்கச் செய்யலாம் என்ற எண்ணத்தில் அறையில் லைட் போடுவது, அவர் தூங்கி கொண்டிருக்கும் கட்டிலுக்கு அடியில் தேடுவது என்று ஏதேதோ செய்து கொண்டிருந்தார். விழித்திருந்த நண்பர்களிடமும், இவன் எப்போது எழுவானோ! தெரியவில்லை! என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

ஒரு வழியாக நண்பரும் நான்கு மணிக்கெல்லாம் தன்னுடைய பெட்டியுடன் ரெடியாகி விட்டார். பெட்டியுடன் ரெடியானவர் திரும்பவும் தூங்கி கொண்டிருந்தவரின் அறைக்குச் சென்று பார்த்து வந்தார். நானும் இவர் அவரிடம் சொல்லிவிட்டு கிளம்புவதற்குத் தான் இத்தனை பிரியப்படுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இவரை வழியனுப்பிவிட்டு இன்னொரு தூக்கத்தை போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த‌ நண்பர்களிடம், திரும்பி சைட்டுக்கு சென்று வந்த நண்பர் விழித்துவிட்டானா? என்று திரும்பவும் கேட்க, எங்களில் கொஞ்சம் நக்கலான நண்பர் ஒருவர் ஓடிச்சென்று தூங்கிக் கொண்டிருந்த நண்பரைத் தட்டி எழுப்பி, டேய்! இவனை வழியனுப்பிவிட்டு நீ தூங்குடா, இல்லனா! இவன் எங்களைத் தூங்க விடாமல் நீ விழிக்கும் வரை காத்திருப்பான் போலிருக்கு என்று கத்த, தூங்கிக் கொண்டிருந்தவனோ! திடுக்கிட்டு எழுந்து கண்ணைக் கசக்க‌, பிளைட்டில் போவதற்குக் கிளம்பி நின்றவர், அவரிடம் சென்று, ஒரு நீண்ட‌ பில்லை நீட்டி ஜீ! இது தான் மெஸ் கணக்கு, நீங்க எனக்கு ஒரு நான்கு ரியால் தரவேண்டும் என்று கேட்க, இவரோ, வந்து எழுப்பிய நண்பரைக் கொடூரமாக பார்க்க! சுற்றி நின்ற நாங்கள் அனைவரும் ஙே! ஙே! ஙே!.. என்று முழித்தோம்.



.

Monday, June 6, 2016

மாப்ள! வண்டியில கடாரி இருக்கா?

நான் ஊருக்குப் போய் இருக்கிற பத்து நாட்களில் குறைந்தது ஒரு மாதம் ஊரில் இருந்து செய்யக் கூடிய வேலைகளைத் திட்டமிட்டு செல்வேன். இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது, எனக்குத் தனியாக குடும்ப அட்டை வாங்கும் வேலைக்காக இரண்டு மூன்று நாட்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருந்தது. முந்தின நாள் தாலுகா அலுவலகத்திற்குச் சென்றிருந்த போது என்னுடைய திருமண பத்திரிக்கை ஒன்று இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கேட்டிருந்தார். என்னுடைய வீட்டில் எவ்வளவு தேடியும் பழைய திருமண பத்திரிக்கை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மாமனார் வீட்டில் போன் செய்து கேட்டபோது, அவர்கள் வீட்டில் அச்சடிக்கப் பட்ட பழைய திருமண பத்திரிக்கை இருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார்கள்.

காலையில் எழுந்து டிபன் சாப்பிட்டுவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்யும் போதே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது, காலையில் பத்து மணிக்கெல்லாம் தாலுகா அலுவலகம் வருமாறு எனக்கு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து தந்திருந்த மாற்றுத் திறனாளி பெரியவர் சொல்லியிருந்தார். அவசர அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குக் கிளம்பினேன். போகும் வழியில் ஊரில் இருக்கும் குருசடி வளாகத்தைத் தாண்டி தான் செல்ல வேண்டும். அந்த வளாகத்தில் எப்போதும் ஒரு இளைஞர் கூட்டத்தை பார்க்க முடியும். வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் ஊரில் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நண்பர்கள் பலரையும் அங்குப் பார்க்க முடியும்.

அந்தக் கூட்டத்தில் இருக்கும் மக்களில் பெரும்பாலான முகங்கள் எனக்குத் தெரிந்தவர்களாக தான் இருப்பார்கள். எப்போது சென்றாலும் அந்த இடத்தில் ஒரு சில நண்பர்களைப் பார்க்க முடியும், அன்று நான் அந்த வழியாகச் சென்ற போதும் பல நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள், தாலுகா அலுவலகம் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டதால் வண்டியை நிறுத்தாமல் அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வண்டியில் வளாகத்தைக் கடந்து சாலையில் சென்று கொண்டிருந்தேன். அதே சாலையின் சிறிது தொலைவில் இருக்கும் டீக்கடையில், எப்போதும் இந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் என்னுடைய பள்ளி தோழன் குமார் ஒரு கையில் தம் வைத்துக்கொண்டு, மற்றோரு கையால் டீக்கடை தூணைப் பிடித்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஏதேச்சையாக என்னைப் பார்த்தவன் கையில் தம்முடன் சாலையின் ஓரம் வந்து சிரித்தான்.

நானும் வண்டியை நிறுத்தி "மக்களே! நான் அவசரமாக மாமனார் வீட்டிற்குச் செல்ல வேண்டும், நான் திரும்ப வரும் போது பேசலாம்" என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியைச் சாலையில் செலுத்தினேன். வண்டியில் செல்லும் போது தான் ஞாபகம் வந்தது, தாலுகா அலுவலகம் போனால் கண்டிப்பா ஒரு 2 மணி நேரமாவது நம்மைக் காக்க வைத்து விடுவார்கள், இவனை அழைத்துச் சென்றால் ஊர் நிலவரங்களையும்,  பக்கத்து ஊர் கிசுகிசுக்களை பேசியது போலவும் இருக்கும், நம்முடைய வேலையும் நடந்தது போல இருக்கும் என்று மனதில் நினைத்து, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மாமனார் வீட்டிற்கு வண்டியைச் செலுத்தினேன்.

மாமனார் வீட்டிற்குச் சென்று, என்னுடைய பழைய திருமண பத்திரிக்கையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் போது, , நான் எந்த டீக்கடையில் என்னுடைய நண்பன் குமாரை பார்த்தேனோ, அதே டீக்கடையில் தூணைப்பிடித்துக் கொண்டு மற்றொரு தம்முடன் நின்றுகொண்டிருந்தான். எப்படியாவது இவனைத் துணைக்கு இழுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வண்டியைச் சாலையின் ஓரமாக நிறுத்தி, என்ன மக்களே! காலையிலேயே டீக்கடையில் வந்து நிக்குற, எப்படி இருக்கிற? இன்னைக்கு வேலைக்கு போகலியா? என்று கேட்டுவிட்டு, என் எதிரில் வந்து நின்ற அவனுடைய தோளில் வண்டியில் அமர்ந்து கொண்டே கையைப் போட்டேன்.

என்னவோ உயிரோட இருக்கேன் மாப்ள, வேலைக்கு எல்லாம் போய் ரெம்ப நாள் ஆச்சு, இப்ப சொந்தமா பிசினஸ் பண்ணுறேன் என்று ரெம்ப சலிப்பாக சொல்லிவிட்டு, நீ எப்ப வந்தாய்? இப்ப எங்க போற? என்று என் முகத்தைப் பார்த்து பேசாமல் சாலையின் இரு பக்கத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டே என்னிடம் கேட்டான். ரெம்பவே பதட்டமாக இருந்தான், அவனிடம் பொறுமையாக எனக்குப் பேச நேரமில்லை, ஏற்கனவே எனக்குத் தாலுகா அலுவலகம் செல்ல நேரம் ஆகி விட்டிருந்ததால், நான் அவனிடம் "மக்களே நான் வந்து ஒரு வாரம் ஆச்சு!, நீ சும்மா தான் இருக்கியா? வாயேன் தாலுகா அலுவலகம் வரைக்கும் போயிட்டு வரலாம்" என்று என்னுடைய அபிலாஷையை எதார்த்தமாகக் கேட்பது போல் கேட்டேன்.

சரி மாப்ள! போகலாம், வண்டியை எடுத்து ஓரம் வச்சுட்டு வரேன் என்று உடனடியாக சொல்வான் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இவ்வளவு வேகமாக "கூட வாறேன்!" என்று சொல்லும் போதே நான் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். நமக்குத் தான் அந்த யோசனை விளக்கெண்ணெய்யெல்லாம் பட்ட பிறகு தானே வரும்.  வேகமாக சாலையின் ஓரத்தில் சைடு ஸ்டாண்டு போட்டு நின்றுகொண்டிருந்த அவனுடைய வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக எடுத்து இரண்டு கட்டிடம் தள்ளிக் கொண்டு போய் ஒரு சந்தினுள் விட்டு வந்தான். என்ன மக்களே! வண்டியை இங்கேயே விட்டு லாக் பண்ணிட்டு வர வேண்டியது தானே! நம்ம ஊர்ல வந்து வண்டியை என்ன செய்ய போறாங்க? என்று கேட்டேன். இல்ல மாப்ள! ஊர்ல கொஞ்ச பேரு என்மேல கொலை வெறியில சுத்துறானுவ! என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சொன்னான். என்ன மக்களே! காலையிலேயே காமெடி பண்ணிட்டு இருக்க! என்று சிரித்த என்னைப் பார்த்து, இல்ல மாப்ள! என்னை அடிப்பதற்கு வெளியூரில் இருந்தெல்லாம் ஆள் செட் பண்ணியிருக்காக! என்று சிரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். எனக்கு முன்பை விட இப்போது பலமாக சிரிப்பு வந்தது. அவனுடைய நடவடிக்கைகள் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக இருந்தது, எனக்கு வேறு தாலுகா அலுவலகம் செல்லுவதற்கும் நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

சாலையின் இருபக்கமும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே, மாப்ள! நான் வண்டியை விட்டதை எவனும் பார்த்தானுவளா? என்று கேட்டான், அந்தச் சாலையில் வருவோர் போவோரை தவிர, இவன் கேட்பது போல் இவனை நோட்டம் விடுபவர் எவரும் இல்லை. இப்போதாவது நான் சுதாரித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு என்னுடைய வேலையைப் பார்க்க சென்றிருக்க வேண்டும். "விதி வலியது" என்பது போல, மக்களே! வா வந்து வண்டியில் ஏறு! ரெம்ப நேரம் ஆகிடுச்சு! தக்கலை வரை போகனும் என்று சொல்லிக்கொண்டு என்னுடைய வண்டியை ஸ்டார்ட் பண்ணினேன், இப்போதும் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு "மாப்ள! எவனும் பாக்கல இல்ல!" என்று சொல்லிக்கொண்டே மெதுவாக வண்டியில் ஏறினான். எவருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக காதலி நம்முடைய வண்டியில் ஏறும்போது பதறுவதை விட மோசமாக இவன் பதறினான்.

ஒரு வழியாக வண்டியை எடுத்துக் கிளம்பி சிறிது தூரம் போவதற்குள், மாப்ள! குருசடி வளாகம் வழியாகச் செல்ல வேண்டாம்! வேறு வழியாகச் செல்! என்று பின்புறத்திலிருந்து என் காதில் சொல்லிவிட்டு இடுப்பைப் பிடித்து இறுக்கினான். முன்பெல்லாம் அந்த குருசடி வளாகத்தில் கூடியிருக்கும் மக்களில் ஒருவனாகத் தான் இவனும் இருப்பான், இப்போது இவன் மட்டும் தனியாக டீக்கடையில் நின்றது எனக்குச் சந்தேகம் வரவழைக்க, என்ன மக்களே! நீ இப்பெல்லாம் குருசடி வளாகத்துக்கு போறது இல்லியா? என்று கேட்டேன். மாப்ள! நம்மள பாத்தா எல்லானுவளுக்கும் இப்ப பொறாமை! அதான் நாம அந்தப் பக்கம் போறது இல்ல! என்றான். அப்படியா! எல்லோரும் பொறாமை படுற அளவுக்கு. நீ என்ன பண்ணிட்ட? என்று கேட்டேன். அது ஒண்ணும் இல்ல மாப்ள! என்னோட பழைய வீட்டை இடுச்சு, புதுவீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்! அத நினைச்சா சிலருக்கு வயிறு எரியுது! என்றான்.

ஏண்டா! ஒரு புது வீடு கட்டினதுக்கெல்லாமா, நம்மூர்ல இப்ப ஆள் வச்சு அடிக்கிறானுவ! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, சரி மக்களே! யாரு உன்னை அடிக்க போறதா சொன்னா? எதுக்கு இவ்வளவு பதட்டமா இருக்க? என்று கேட்டேன். அதை விடு மாப்ள! எல்லாம் நான் பார்த்துக்குறேன், நம்ம மேல அவ்வளவு சீக்கிரம் கை வைச்சுற முடியுமா? இல்ல வைச்சுட்டு தான் போயிட முடியுமானு! என்று கொக்கரித்தான். ஆகா! சரிதான்! வேலில போற ஓணான வேட்டிக்குள்ள தான் பிடிச்சு விட்டுருக்கேன்! என்று மனதிற்குள் நினைத்த வாறு, ஆமா! இப்ப வேலைக்கு போறது இல்லனு சொன்னியே? இப்ப என்ன பிஸினஸ் பண்ணுற? என்று கேட்டேன். அதுவா மாப்ள நான் இப்ப தாஸ் அண்ணன் கூட சேர்ந்து பழைய டூவீலர் வாங்கி விற்கிறேன் என்று சொன்னான்.

இவனிடம் பேசிக்கொண்டே என்னுடைய வீடு வந்து சேர்ந்தேன், வண்டியின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியில் வந்த மனைவியிடம், தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய டாக்குமென்டுகள் வைத்திருக்கும் பையை எடுத்துத் தருமாறு சொல்லிவிட்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினேன். எனக்கு முன்பாக வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த குமார் இறங்கி நாங்கள் வந்த சாலையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். மக்களே! டீ ஏதும் குடிக்கிறியா? என்று கேட்டுவிட்டு வீட்டிற்குள் வருமாறு அழைத்தேன், டீ வேண்டாம் மாப்ள! குடிக்க தண்ணி ஒரு சொம்பு கொண்டு வா? என்று சொல்லிவிட்டு திரும்பவும் சாலையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் இருந்த பையை வாங்கிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீருடன் வெளியில் வந்தேன்.

இப்போது குமாரு, என்னுடைய வண்டியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சைலன்சர் இடுக்கிலும், சீட்டிற்கு அடியிலும் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். நான் அவனிடம் என்ன மக்களே! தேடிட்டு இருக்கிற? என்று கேட்டேன். இல்ல மாப்ள! என்னோட வண்டியில் எப்போதும் பொருள் இருக்கும், அந்த நினப்புல நானும் உன்னோட வந்திட்டேன், சரி மாப்ள ஒண்ணும் பிரச்சனை இல்லை! உங்கிட்ட கடாரி இருக்கா? எதற்கும் ஒண்ணு எடுத்து வச்சுக்க என்றான். எனக்குப் பக்கென்று இருந்தது, இவனை காமெடி பீசுனு நினைச்சு வண்டில ஏத்தினா, ரெம்ப டெரர் பீஸா இருக்கும் போல! என்று நினைத்துக்கொண்டு, அந்தச் சூழ்நிலையை சமாளிக்கத் தொடங்கினேன்.

இப்போது தான் உண்மையில் இவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, மக்களே! என்ன பிரச்சனை! யாரு உன்னை அடிக்க வர்ற? எதுக்கு அடிக்க வர்றாங்க? எதுவா இருந்தாலும் சொல்லு, நான் கூட இருக்கிறேன் என்று தம் கட்டி அவன் அருகில் சென்று கேட்டேன். கண்டிப்பாக என் மனைவி பக்கத்தில் இருந்திருந்தால் சிரித்திருப்பாள். அவனும் நான் தம் கட்டியதைப் பார்த்து நம்பி, "ஒரு லவ்வு மேட்டரு மாப்ள!" என்றான். லவ்வா! யாரோட லவ்வு மக்களே! என்றேன். என்ன மாப்ள! "என்னோட லவ்வு தான்" என்றான். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

இவனை என்னுடைய பள்ளித்தோழன் என்று சொன்னேன் அல்லவா, என்னுடன் படித்தவர்களில் இவனைப்போல் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் திருமணமாகி, அவர்களுடைய குழந்தைகளும் பள்ளிக்கு போகத் தொடங்கிவிட்டார்கள், அதாவது எல்லோரும் அரை கிழடு ஆகிவிட்டோம் என்பதைத் தான் நாசூக்காகச் சொல்லுகிறேன். இப்பவும் இவன் லவ்வு மேட்டருக்கு கத்தி, கடாரி, ஆள் வைத்து அடிப்பதற்கு செட்டிங் என்று டாப் கியரில் போவதைப் பார்க்கும் போது ஒரு சுவாரஸ்யம் இருக்கவே செய்தது.

அவனுடைய லவ்வு மேட்டருக்கு போட்டியாக இருப்பவன் தான் இவனை ஆள் வைத்து அடிப்பதற்கு செட் செய்திருக்கிறானாம். கேட்கவே எனக்கு காமெடியாக இருந்தது, அவன் சிறிதும் பிசிரு இல்லாமல் என்னிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தான். இவனுக்குப் போட்டியாக இருக்கும் பையனின் பெயரைச் சொன்னான், அவன் ஒரு முறையில் பார்த்தால் எனக்குத் தூரத்து உறவினராக வருவான். இப்போது தான் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது, இவன் கத்தி, கடாரி என்று டர் காட்டியது எனக்கும் கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியிருந்தது.

ஒருவழியாக அவனை சமாதான படுத்தி என்னுடன் தக்கலைக்கு தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன், வண்டியில் போகும் போதும் பின்னால் இருவர் வேறு வண்டியில் வந்தால் போதும், மாப்ள! எதுக்கும் கொஞ்சம் உசாரா போ! நம்மள தான் முறைச்சு பார்த்திட்டு பின்னால வண்டியில வருகிறனுவ! என்று பீதியை காட்டிக்கொண்டே வந்தான். அவர்கள் எங்களைத் தாண்டி சென்றால், அடுத்து வருபவனை நினைத்துப் பயந்து கொண்டிருந்தான், வெளியூர் ஆட்களை செட் பண்ணிருக்கானுவ மாப்ள! எவன் எந்த ரூபத்தில் வந்து போடுவானு தெரியாது என்று எனக்கும் ஷாக் கொடுத்தான்.

ஏண்டா ஒரு தாலுகா ஆபிஸ்சில் ரெண்டு மணி நேரம் பேச்சு துணைக்கு ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய தப்பா!


.

Monday, May 30, 2016

இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!

இன்றுடன் ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது, கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் படி என்னை மாற்றியமைத்தது இந்த ஐபிஎல் போட்டிகள். அதுவரையிலும் இந்தியா மட்டுமே ஜெயிக்க வேண்டும், எதிர் அணி எவ்வளவு வலுவாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலையில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக உலகத்தில் உள்ள அத்தனை கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி ரசிகன். பள்ளியில் விடுமுறை விட்டுவிட்டால் போதும் பேட்டைத் தூக்கி கொண்டு கிரவுண்டுக்கு ஓடி விடுவேன். சோறு தண்ணி இல்லாமல் 10 ரூபாய் பெட் மேட்சுக்கு ஊர் ஊராகச் சுற்றிய வரலாறு கூட உண்டு.

இப்படி எல்லாம் எழுதியவுடன் பெரிய ஒரு ஆல் ரவுண்டரை இந்தியா டீம் இழந்திடுச்சோ! என்று நீங்கள், நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல. பேட்டிங் என்றால் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது தெரியும், பவுலிங் என்றால் பந்தை மாங்கா எறிவது போல் எறியாமல் கையை சுற்றிப் போட தெரியும். எனக்கு அந்த அளவிற்குத் தெரிந்திருப்பதே என்னுடைய டீமிற்கு பெரிய தகுதியாக இருந்தது என்றால் எங்களுடைய டீம் எவ்வளவு பெரிய டீம் ஆக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், வாரம்தோறும் ஊரில் பல இடங்களில் நடக்கும் பெட் மேட்சுகளில் எங்க டீம் போய் அடி வாங்காத இடமே கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருந்துவிட்டு, அடுத்த வாரமும் அடி வாங்கிய டீமிடம் போய் பெட் மேட்சு கேட்போம்.



நான் விளையாடும் போது எட்டு ரூபாய்க்கு ரப்பர் பந்து வாங்குவதே பெரிய கஷ்டம், அதற்கு வாரம் தோறும் தலைக்கு 50 காசு, 1 ரூபாய் என்று டீமில் வசூலிக்க வேண்டும், அந்த 50 காசுக்கும் 1 ரூபாய்க்கும் கடன் சொல்லுறவங்களே டீமில் அதிகம் பேர் இருப்பார்கள். இது இப்படி இருக்க வாரம்தோறும் 10 ரூபாய் பெட் மேட்சு போட்டுத் தோற்பதற்கு எவரிடமும் பணம் இருக்காது, அதற்கு என்று சில புரவலர்களை வைத்திருப்போம். நம்ம புரவலர்கள் எல்லாம் உள்ளுரில் வேலை செய்பவர்களாக தான் இருப்பார்கள். மாலையில் வேலை முடித்து கிரவுண்டுக்கு வரும் புரவலர்களிடம், அண்ண! இந்த வாரம் அந்த ஊர் டீமோட பெட் மேட்சு போடுறோம், தோத்த காசை வாங்குறோம் அண்ண! நீங்க, தான் ஒப்பனிங் பேட்டிங்! கெத்து காட்டுறோம்! மறந்திறாதீங்க! என்று உசுப்பேற்ற சில பேர், நம்ம டீம்ல ரெடியா இருப்பாங்க.

அண்ணா! நீங்களும் நானும் தான் ஒப்பனிங் பேட்டிங் இறங்குகிறோம்! நான் அடிக்கவே மாட்டேன் அண்ணேன், ஸ்டிரோக் மட்டும் வச்சு ஓடி வந்து உங்களுக்கு வாய்ப்பு தருவேன், நீங்க தான் பேட்டை சுத்தணும்! இன்னைக்கு நாம் யாருன்னு, அந்த டீமுக்கு காட்டுறோம்! அண்ண, ஆனா ஒண்ணு, நீங்க பேட்டை சுத்தும் போது மட்டும் பந்தை பார்த்து சுத்துங்க! ஏன்ன, நீங்கப் பேட்டை நல்லா தான் சுத்துறீங்க, என்ன ஒண்ணு பந்து தான் பேட்டில் பட மாட்டேங்குது, ஆனா ஒண்ணு அண்ணே! பந்து மட்டும் பேட்டில் பட்டால் போதும் கிரவுண்டுக்கு வெளிய தான்னேன் என்று தன்னை கலாய்க்கிறானா, பாராட்டுறானா! என்று தெரியாமல் பெட் மேட்சுக்கு வந்து நிற்கும் புரவலர் அண்ணனிடம் பெட் மேட்சுக்கான பணம் வாங்கி விட்டால் போதும், “ஒப்பனிங் பேட்டிங் நீங்க தான்!!” என்று சொன்னவன் அவர் கண்ணிலிருந்து காணாமல் போயிருப்பான்.

இப்ப மற்றொருவன் வந்து, அண்ணா! நாம தான் டாஸ் ஜெயித்திருக்கிறோம், பெட் மேட்சுக்கு காசு வேற, நீங்க தான் கொடுத்து இருக்கிறீர்கள், எதிரணியில் பவுலிங் நல்லா போடுறவன் பேரை சொல்லி, அவன் வேற முதல் ஓவரே பவுலிங் போட இருக்கிறான், உங்க விக்கெட் போச்சுன்னா டீம்ல எவனும் அப்புறம் ஒழுங்க ஆட மாட்டன், நீங்க தான் அண்ணே! மேட்சை நடத்தணும், வாண்ணே! வந்து அம்பயரா நில்லுன்னு! என்று அடிக்கிற வெயிலுல கொண்டு மண்டைக் காய விட்டுடுவானுங்க.

ஊர்ல விளையாடும் போது அம்பயர் எல்லாம் சும்மா தான், பேட்டிங் பண்ணுறவன் சொல்லுறது தான் அம்பயர் சொல்லுவார், பேட்டிங் பண்ணுறவன் வைடு என்று சொன்னால் அம்பயர் வைடு கொடுப்பார், விக்கெட் இல்லையென்றால் விக்கெட் இல்லை, எதிரணியில் உள்ளவன் சண்டை போடுவது மட்டும் அம்பயரிடம், பெட் மேட்சில் அம்பயராக நிற்பதற்கும், தெருவில் குழாயடியில் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

அம்பயரா நிற்கும் புரவலர் அண்ணன், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், நான் போகலாமா என்று டீம் நண்பர்களை பார்த்தால், அண்ணே! நல்ல டார்கெட் வைக்கணும், இப்ப ரன்ரேட் ரெம்ப கம்மிண்ணேன், நீங்க வேற பெட் மேட்சுக்கு பணம் கொடுத்து இருக்கீங்க! என்று அப்பப்ப பீதியை காட்டி, நாம ஜெயிக்கணும் அண்ணே! அவன் போகட்டும், இவன் போகட்டும், கடைசி ரெண்டு ஓவர் அண்ணேன், நீங்க தான் பேட்டை சுத்துறீங்க்க, நாலு சிக்சர் போகும், ரன்ரேட்டும் நல்லா இருக்கும், என்று வாயிலேயே வடை சுட்டுவிட்டு கடைசி வரைக்கும் பேட்டை கையில் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி ஊர்க் கதை பேசினால் அப்படியே நீண்டு விட்டுப் போகும், நான் சொல்ல வந்தது சொல்ல முடியாமல் போகும். பேச்சுலராக சவுதியில் இருக்கும் போது, என்னுடன் ப்ராஜெக்ட்க்கு வந்த மூன்று பேருடன் சேர்ந்து தங்கியிருந்த வில்லாவிற்குள் கிரிக்கெட் விளையாடுவோம். நான்கு பக்கமும் இரண்டு ஆள் உயரத்திற்குச் சுவர் இருக்கும், அதற்குள் தான் நாங்கள் நான்கு பேரும் வெளியில் தூக்கி அடித்தால் அவுட் என்று வைத்து விளையாடுவோம். நாங்கள் அப்போது தான் முதல் முறையாகச் சவுதிக்கு வந்திருந்தோம், வெளியில் யாரையும் அறிமுகம் கிடையாது, கொஞ்ச நாட்களில் எங்கள் ப்ராஜெக்ட்லில் ஒரு சிறிய பகுதியை அவுட்சோர்சிங் கொடுத்திருந்தோம், அந்த அவுட்சோர்சிங் கம்பெனிலிருந்து இரண்டு மலையாளி நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த மலையாளி நண்பர்களும் லீவு நாட்களில் எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுவார்கள், அவர்கள் இருவரும் சவுதி வந்து நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கும். அதனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள், நாங்கள் தங்கியிருக்கும் வில்லாவிற்கு பக்கத்தில் ஒரு காலியிடம் இருப்பதாகவும், அதில் கிரிக்கெட் விளையாடலாம், பலர் லீவு நாட்களில் விளையாடுவார்கள் என்றும் அந்த மலையாளி நண்பர்கள் சொன்னார்கள். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் எங்கள் நால்வரையும் வற்புறுத்தி அந்தக் காலியிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுடைய நண்பர்கள் சிலரும் இருந்தார்கள், பவுலிங் போடுவதற்கு ஒரு தளம் போல் போட்டு விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. நான்கு சுவருக்குள் விளையாடிய எங்களுக்கு அந்த இடத்தில் விளையாடியது ரெம்பவே ஜாலியாக இருந்தது.



மறு வாரமும் அந்த மலையாளி நண்பர்களுடன் விளையாட அந்தக் காலியிடத்திற்கு சென்றோம், ஆனால் அன்று அந்த இடத்தில் நமது பக்கத்து நாட்டு மக்கள் (பாகிஸ்தான்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். மலையாளி நண்பர்கள் அவர்களிடம் போய் பேசினார்கள், நாங்கள் இப்ப தான் விளையாட வந்தோம், விளையாடி முடிப்பதற்கு ரெம்ப நேரம் ஆகும், உங்களுக்கு விளையாடனும் என்றால் வாருங்கள்! ஒரு மேட்சு போடலாம் என்று அந்தப் பக்கத்து நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று மலையாளி நண்பர்கள் எங்களிடம் வந்து சொன்னார்கள். பின்னர் அவர்களே இவங்க! கூட விளையாட வேண்டாம் நாம அடுத்த வாரம் வந்து விளையாடலாம் என்று சொன்னார்கள், கிரகம்! என்னோட வாயிதான் சும்மா இருக்காம, ஊர்லயே பெரிய பெரிய டீம் கூடவே விளையாடி ஜெயித்துருக்கோம், இவங்க என்ன பெரிய பிசாத்து டீம், வாங்க ஒரு மேட்சு போடுவோம் என்று நண்பர்களை உசுப்பேற்றினேன்.

மலையாளி நண்பர்கள் என்னிடம் மட்டும், மலையாளத்தில் பேசுவார்கள், அவர்கள் என்னிடம், "வேண்டாம் ஸ்டீபன்! நமக்கு இவிட பந்து பொறுக்கும் சோலி மாட்டும் தான் கிட்டும்" என்று சொன்னார்கள், நான் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், என்னுடைய நண்பர்களிடம் வாங்க விளையாடுவோம் என்று சொல்லியது தான் தாமதம், பக்கத்து நாட்டு மக்கள் டாஸ் போட அழைத்தார்கள், போட்ட டாஸில் அவர்கள் தான் ஜெயித்தார்கள், பேட்டிங் என்று சொல்லி, இரண்டு பேர் பேட்டிங் இறங்கினார்கள். மலையாளி நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

நம்ம நண்பர் ஒருவர், கொஞ்சம் நல்லா பவுலிங் பண்ணுவார்கள், அவரை தான் ஓபனிங் பவுலிங் போட அழைத்தோம், பந்தைப் பக்கத்து நாட்டு மக்கள் தான் கொடுத்தார்கள், டென்னிஸ் பாலில் செல்லோடேப் சுற்றி இருந்தார்கள், அதை வைத்துத் தான் விளையாட வேண்டும் என்று சொன்னார்கள், நார்மலா நாம விளையாடும் டென்னிஸ் பால் கொஞ்சம் கனமாக இருக்கும், இது ரெம்ப லைட் வெயிட், சரி என்று சொல்லிக்கொண்டு பவுலிங் போட ரெடியானோம்.

நாங்கள் ஆறு பேரும் பில்டிங் நிற்க தயாரானோம், மிட்விக்கெட், மிட்ஆன், மிட்ஆப் என்று நின்று கொண்டிருந்த எங்களை, பேட்டிங் பண்ணுவதற்கு நின்று கொண்டிருந்த பக்கத்து நாட்டுக்காரர் கோ லாங்! கோ லாங்! என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை, இவன் ஏண்டா பில்டிங் செட் பண்ணுறான், நாம் தானே பீல்டிங் செட் பண்ணனும்! இவனுக்கு என்ன வந்தது? என்று அவன் சொல்வது புரியாது போலவே நிற்க, என்னிடம் வந்து கையை பிடித்து அழைத்துக்கொண்டு சிக்ஸ் லைனில் நிற்க வைத்தான். நான் அவனிடம் "எனக்குத் தெரியும் போடா, போய் ஒழுங்கா பேட்டிங் புடிடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு திரும்பவும் வந்து மிட்ஆப் ல் வந்து பீல்டிங் நின்றேன், அவன் திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று சொன்னான், எல்லாம் எனக்குத் தெரியும், பேட்டிங் புடிடா என்று சொல்லிக்கொண்டே நண்பரை பவுலிங் போடச் சைகை காட்டினேன்.

பேட்டிங் பண்ணுவதற்க்கு நின்ற பக்கத்து நாட்டுக்காரர் ஸ்டைல் ஒரு மார்க்கமாக இருந்தது, நம்ம ஊரில் டீம் பிரிக்கும் போது கடைசிவரை எவரும் எடுக்காமல் ஒருத்தனை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, கடைசியில் எடுத்து டபுள் சைட் பேட்டிங்டா நீ! என்று நாசூக்காகப் போடுவோம் தானே, அவன் பேட்டை எவ்வாறு பிடிப்பானோ! அதுபோல் தான் பக்கத்து நாட்டுக்கார ஓபனிங் பேட்ஸ்மேன் பேட்டைப் பிடித்திருந்தான். நம்ம நண்பர் ஓடி வந்து முதல் பாலை போட்டார், போட்டது தான் தெரியும், பந்து பேட்டில் பட்டு சிக்ஸ் லைன் தாண்டி விழுந்தது. பந்து விழுந்த திசை சரியாக என் கையை பிடித்துக் கொண்டு பக்கத்து நாட்டுக்காரர் கொண்டு விட்ட இடம். இப்போது அந்தப் பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மேன் சிரித்துக்கொண்டே "மேர போலேனா! போலேனா! என்றான்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும்! போடா டேய்! ஒரு பால் ஏதோ குருட்டாம் போக்கில் பேட்டில் பட்டு சிக்ஸ்ர் போயிட்ட நீ பெரிய ஆளா! ஓடிப்போய் மணலில் அழுந்தியிருந்த பந்தை எடுத்து வந்து, பவுலிங் போடும் நண்பரிடம் கொடுத்து, அடுத்த பாலை போடு நண்பா! என்று சொல்லிவிட்டு திரும்பவும், மிட்ஆப் பொசிசனில் பீல்டிங் வந்து நின்றேன், திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மென் கத்தினான், இப்போதும் எல்லாம் தெரியும் நீ மூடு! என்று சைகை செய்துவிட்டு பவுலிங் போட சொன்னேன்.

இந்தப் பந்தும் சிக்ஸர் பறந்தது, நண்பரும் எல்லா வியூகத்திலும் பந்தை போட்டார், பந்து மிட் ஏரியாவை தாண்டி தான் விழுந்தது, அடுத்த ஓவரே நான் பவுலிங் போட வந்தேன், நம்ம பாலும் நாலு திசைக்கும் பறந்தது, எவ்வளவு தான் ஓடி வந்து போட்டாலும் பந்து ஸ்லோவாக தான் போனது, லைட் வெயிட் பந்தில் ரெம்ப பாஸ்ட்டா வீச முடியவில்லை. அப்புறம் என்ன? மொத்தம் எட்டு ஓவர் கதறக் கதற ஓட விட்டார்கள், பந்தைப் பொறுக்குவதற்கு நாலு திசையிலும் ஓடியே களைத்திருந்தோம். இப்போது தான் மலையாளி நண்பர்கள் சொன்ன "சோலி" யும், பக்கத்து நாட்டுக்காரர் சொன்ன "கோ லாங்!" க்குமான அர்த்தம் புரிந்தது.

எட்டு ஓவரில் ஒரு ரன் அவுட் தவிர வேறு எந்த விக்கெட்டும் எடுக்க முடியவில்லை, ரிட்டய்ர்டு ஹெர்டு முறையில் ஒருவர் பின் ஒருவர் வந்து பந்தை துவம்சம் செய்தார்கள். இப்போது தான் அப்ரடியின் சிக்ஸ்ர் மகிமை புரிந்தது. எல்லோரும் நல்ல ஹேண்ட்பவர் வைத்திருக்கிறார்கள், அவர்கள் பேட்டில் பட்டால் பந்து தெறிக்கிறது. ஒருவழியாக பவுலிங் முடித்து பேட்டிங் பிடித்தால் இன்னும் கொடுமையாக இருந்தது, நாங்களும் அதே பந்தில் தான் பவுலிங் போட்டோம், ஆனால் அவர்கள் வீசும் பந்து சொயிங்! சொயிங்! என்று இடுப்புக்கு வந்தது. எப்படியோ மூணு ஓவர் வரை மொத்த விக்கெட்டும் சமாளித்ததே பெரிய விசயம்.

நான்காவது ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்துவிட்டு நொந்து நூடில்ஸ் ஆகி நண்பர்கள் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பும் போது, எங்களுடன் விளையாடிய‌ பக்கத்து நாட்டுக்காரர் ஒருவன் வந்து "அடுத்த வாரமும் இதே டைம் நாங்க இங்க தான் விளையாட வருவோம், கண்டிப்பா வாங்க!! என்று எங்களிடம் கைக்கொடுத்தார். எதற்கு வைச்சு செய்யவா? அதான் செஞ்சுட்டீங்களே! இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!


.

Thursday, July 10, 2014

நல்லா! கேட்குறாங்க டீடெயிலு!!!

என்னுடைய வேலையைப் பற்றி எவருக்கும் எளிதாக விளக்கிவிட முடியாது. எந்தத் துறையைச் சார்ந்தது என்றும் குறிப்பாகச் சொல்லிவிடவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் வேலையைப் பற்றி ஒருவருக்கு விளக்க வேண்டுமானால் குறைந்தது அவருக்கு அரை மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும். அதனால் என்னிடம் வேலையைப் பற்றி விசாரிக்கும் நபர்களின் தகுதியை வைத்து ஏதாவது ஒரிரு வார்த்தைகளில் அவர்களுக்குப் புரியும் படி சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். கொஞ்சம் அதிகப் படியாக என்னுடைய வேலையைப் பற்றி விளக்கி, அவர்களிடம் சின்னாபின்னமான கதைககள் நிறையவே உண்டு. கீழே நான் சொல்லியிருப்பது கொஞ்சம் சுவரஸ்யமாக‌ இருக்கும்.

இப்படித்தான் கடந்த வாரம் நான் வாடிக்கையாகச் செல்லும் சலூன் கடைக்குச் சென்றிருந்தேன். எப்போதும் என்னைப் பார்த்தவுடன் கடை ஓனர் பெரிதாக நமஸ்தே வைப்பார். அதைப் பார்த்தவுடன் அவருடைய சலூனில் வேலைச் செய்யும் பையன்களும் மரியாதையாக நமஸ்தே வைப்பார்கள். இந்தச் சலூன் கடை ஓனர் எனக்கு நமஸ்தே வைப்பதற்கு ஒரு பின்னனி உண்டு. நான் வாரத்தில் ஒரு நாள் தான் ஷேவிங் பண்ணுவது வழக்கம். அது பெரும்பாலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையாகத் தான் இருக்கும். ஒருமுறை வாரத்தின் இடைப்பட்ட  நாளில் ஆபிசில் ஒரு பார்ட்டி ந‌டைப்பெறுவதாக என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. அதில் கம்பெனியின் எம்.டி மற்றும் எல்லா ஜெனரல் மேனேஜரும் கலந்துக் கொள்கிறார்கள் என்றும் மெயில் வந்திருந்தது. அந்தப் பார்ட்டிக்கு அரைத் தாடியுடன் செல்ல வேண்டாம் என்று மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, காலையில் சலூன் பக்கம் போனேன்.

அந்தச் சலூனில் ஒரே நேரத்தில் மூன்றுபேர் அமர்ந்துக் கட்டிங் மற்றும் ஷேவிங் செய்ய முடியும். சலூனில் இருந்த இரண்டு பையன் மற்றும் ஓனர் என்று மூன்று பேருமே அன்றைக்குப் பிஸியாக இருந்தார்கள். கடையில் போடப்பட்டிருந்த ஷோபாவிலும் மூன்றுபேர் அமர்ந்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த மூன்றுபேரில் ஒருத்தர் என்னுடைய ஆபிசில் ஹெல்பர் வேலைச் செய்பவர். அவர் என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று, சார்! இங்க உக்காருங்க! என்று இடம் கொடுத்தார். நான் அவரிடம் அமர்வதற்குச் சொல்லிவிட்டு வெளியில் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் ஓனர், ஒருவருக்குக் கட்டிங் செய்து முடித்திருந்தார். அங்குக் காத்திருந்தவர்களின் வரிசைப்படி எங்கள் ஆபிஸில் வேலைச் செய்பவர் தான் அடுத்து அமர வேண்டும். அவர் நேராக என்னிடம் வந்து, சார்! நீங்க ஷேவிங் பண்ணுங்கள்! நான் அப்புறமாகப் பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னார். நான் அவரிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரி! என்று அமர்ந்துவிட்டேன். எங்கள் இருவரின் செய்கைகளை, அந்தச் சலூன் ஒனர் பார்த்துக்கொண்டிருந்தார். அதுநாள் வரையிலும் என்னைக் கண்டுகொள்ளாதவர், அதன்பிறகு எப்போது நான் அந்தச் சலூனுக்குச் சென்றாலும் நமஸ்தே வைத்துவிடுவார்.

நான் வாரம் தவறாமல் அந்தச் சலூனுக்குச் செல்வதால், என்னிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கேள்விகளைக் கேட்பார். நீங்க, என்ன வேலை சார்! பார்க்குறீங்க? என்பார். நான் ஐடி கம்பெனியில் வேலை என்பேன். நீங்க தான் மேனேஜரா? என்று ஒரு நாள் கேட்பார். உங்க கம்பெனியில் எத்தனை பேர் வேலைப் பார்ப்பார்கள்?. எல்லோரும் தமிழ்காரர்கள் தான் இருக்காங்களா?. தெலுங்குக்காரங்களும் உங்க கம்பெனியில் வேலைப் பார்க்குறாங்களா?. எந்த நாட்டுக்கு எல்லாம் போவீங்க?. எவ்வளவு சார், சம்பளம் தருவார்கள்?. நீங்க கம்பியூட்டரில் தானே வேலைப் பார்ப்பீங்க?. எத்தனை கம்பியூட்டர் உங்கள் ஆபிஸில் இருக்கிறது?. உங்களுக்குக் கம்பியூட்டரில் உள்ள பிரச்சனைகளை ரிப்பேர் செய்யத் தெரியுமா? என்று பலவாறாகக் கேள்விகள் இருக்கும். நானும் பொறுமையாக ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்வேன். சில மொக்கையான கேள்விகளுக்குச் சிரித்து வைப்பேன்.

இந்தச் சலூன் ஓனருக்கு ஹைதிராபாத்தில் மட்டும் ஐந்து கடைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் ஒருவாரம் இந்த‌ச் சலூனில் வேலையில் இருக்கும் பையன்க‌ளை மறுவாரம் அவரின் அடுத்தச் சலூனுக்கு மாற்றிவிடுவார். எவரையும் நிலையாக அந்தச் சலூனில் இருக்க விடமாட்டார். ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ கழித்துத் திரும்பவும் இந்தச் சலூனில் அந்தப் பையன்களைப் பார்க்க முடியும். இவ்வாறு வேலைச் செய்யும் பையன்களை நிலையாக ஒரு கடையில் வேலைப் பார்ப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார். அந்தக் காரணத்தை அவர் சிதம்பர ரகசியம் போல் அவருக்குள் வைத்திருந்தார். அந்தச் சிதம்பர ரகசியத்தை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு எனக்குச் சில காலம் பிடித்திருந்தது. உண்மையில் அந்த ரகசியத்தை அவரின் தொழில் யுக்தி என்று கூடச் சொல்ல‌லாம். அதாவது பையன்களை வேலைக்கு அதே கடையில் வைத்திருந்தால், சில மாதங்களில் வழக்கமாக வரும் நல்ல கஸ்டம‌ர்களிடம் பழக்கம் பிடித்துக்கொண்டு, பக்கத்துத் தெருவில் புதிய கடைகளைத் திறந்துவிடுகிறார்களாம். தொடக்கத்தில் இவர் இப்படி ரெம்பப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு தான் இந்தமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

சலூனில் கடந்த வாரம் நடந்த கதையைச் சொல்லுவதற்கு ஆரம்பித்து, எங்கோ போய்விட்டது. சரி, இப்போது அந்தக் கதைக்கு வருவோம். கடந்த ஞாயிற்றுக்கிழமைச் சலூனில் ஷேவிங் பண்ணுவதற்குச் சென்றிருந்தேன், கடையில் இருந்த பையன்கள் மட்டும் தான் கஸ்டமருடன் பிஸியாக இருந்தார்கள். கடை ஓனர் சும்மா தான் இருந்தார். என்னைக் கண்டவுடன், என்ன‌ சார்! கட்டிங்கா? ஷேவிங்கா? என்று கேட்டார். நான் ஷேவிங் என்று சொல்லிவிட்டுக் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். ஷேவிங் செய்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார், எப்போதும் அவ்வாறு இருக்க மாட்டார். ஏதாவது என்னிடம் கேட்டுக் கொண்டு இருப்பார். காசு கொடுத்துவிட்டு வெளியில் வரும் போது, சார்! ஒரு நிமிசம் என்றார்!. எனக்கு எதற்கு அழைக்கிறார்? என்று புரியாமல் விழித்தேன்.

அப்படியே வெளியில் என்னை அழைத்துவந்து காதலன், காதலியை ஓரம் கட்டுவது போல் என்னையும் ஓரம் கட்டினார்.

எனக்கு இவருடைய செய்கைகள் ஒன்றும் புரியவில்லை!

ரெம்ப நெருங்கி வந்து தன்னுடைய தலையைச் சொறிந்தார்!

ஏதோ கேட்பதாக வந்து மீண்டும் அமைதிக் காத்தார்!

இவர் எதற்கு! இந்த அளவிற்குப் பீடிகைப் போடுகிறார்? என்று யோசிப்பதற்குள், அந்தக் கேள்விகளை என்னிடம் கேட்டார்!

சார்! எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் விலைக்கு வேணும்! உங்க ஆபிசில் இருந்து எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் வாங்கிக் கொடுங்கள் என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் சரியான பல்பு வாங்கியிருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது.

நான் உடனடியாகப் பதில் சொல்லாமல் அமைதிக் காத்தவுடன், ஒண்ணு இல்ல, சார்! என்னோட தோஸ்த்க்கும் ஒண்ணு வேணும், ரெண்டா வாங்கிக் கொடுங்கள்! என்றார்.

ஒரு கம்பியூட்டர் என்ப‌தால் நான் யோசிக்கிறேன்! என்று நினைத்தவர், இரண்டு கம்பியூட்டர் வேண்டும் என்று எனக்குப் பல்க் ஆர்டர் கொடுக்கிறார். அவருடைய அறியாமையை என்னவென்று சொல்வது?.. அவரிடம் சிரித்துக் கொண்டே நான் ஆபிசில் கேட்டுச் சொல்கிறேன் என்று வந்துவிட்டேன்.



இந்த வாரமும் அந்தச் சலூன் கடைக்குத் தான் போக வேண்டும்!!..


.

Thursday, July 3, 2014

கண்டிப்பா! அடி வாங்கியிருப்பார்!!

கடந்த டிசம்பர் மாதம் அண்ணனின் குழந்தைக்கு முடி எடுப்பதற்காக‌ வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான் ஹைதிராபாத்திலிருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு வந்துவிடுகிறேன் என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். ஹைதிராபாத்திலிருந்து நானும் எனது மனைவியும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேளாங்கண்ணிக்குச் செல்லவேண்டிய நாளின் காலையில் தான் சென்னை வந்திறங்கினோம். வேளாங்கண்ணிக்குச் சென்னையிலிருந்து பகல் பயண ரெயில்கள் ஏதும் இல்லை. அதனால் பேருந்தில் பயணம் செய்வது என்று முடிவெடுத்திருந்தேன். காலையில் தனியார் பேருந்துகள் ஏதும் வேளாங்கண்ணிக்கு இயக்கபடாத‌தால் என்னால் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கும் பேருந்தில் ஏறிச் சென்றுவிடலாம் என்று கோயம்பேடு வந்துவிட்டோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே ஒரு பேருந்து வேளாங்கண்ணிக்கு கிளம்பியது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அடுத்த வண்டியில் ஏறலாம் என்று காத்திருந்தோம். அந்தப் பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே அடுத்தப் பேருந்தும் வந்தது. ஓட்டுநர் வண்டியை நடைமேடையில் நிறுத்துவதற்குள் சிலர் பேருந்தில், தங்கள் பொருட்களைப் போட்டு முன் இருக்கைகளில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அதில் ஒருவர் தனது கைகளில் இருந்த இரண்டு பேக்குகளை எடுத்து அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் போட்டார். நாங்கள் இருவரும் பேருந்தை ஓட்டுநர் முழுமையாக நிறுத்தும் வரை காத்திருந்து, பின்புதான் வண்டியில் ஏறினோம். அதற்குள் பேருந்தில் பாதி இருக்கைகள் நிரம்பியிருந்தது. அடுத்தடுத்த‌ இரண்டு இருக்கைகளில் பேக்கு போடப்பட்டிருந்த‌ இருக்கைகள் எவரும் அமராமல் காலியாக இருந்தது, அவைகளைப் போட்டவரையும் காணவில்லை. நாங்கள் அந்த இருக்கைகளைக் கடந்து அடுத்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டோம்.

சிறிது நேரத்தில் இருக்கையில் பேக்கைப் போட்டவர் தனது மனைவி மற்றும் இரண்டு பையன்கள் என்று குடும்பத்தினருடன் வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுமக்க முடியாமல் ஆளுக்கு ஒன்றிரண்டு பெட்டி மற்றும் படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். வந்த சிறிது நேரத்தில் அவர்களில் இருக்கைக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் மீதும் பெட்டிகளைக் கொண்டு மோதிவதும், இருக்கைகளில் கீழ் பெட்டிகளைத் தள்ளுவதுமாகப் பேருந்தை ஒரே களோபரமாக‌ ஆக்கிவிட்டார்கள். அவர்கள் நால்வரும் தங்கள் பெட்டிப்படுக்கைகளை வைத்துச் செட்டில் ஆவதற்குள் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் ஒரு வழிப் பண்ணிவிட்டார்கள். "அக்கட தீஸ்கோ", "இக்கட பெற்றுக்கோ" என்று சத்தமாக‌ அவர்களுக்குள் பேசிய தெலுங்கும், பேருந்தில் இருந்த அனைவரின் கவனமும் இவர்களில் மீது பதிவதற்குக் காரணமாய் இருந்தது.

பேருந்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது. சிறிது நேரத்தில் நடத்துன‌ரும் வந்து டிக்கெட்டுகளைக் கொடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். எங்கள் முன்னால் அமர்ந்திருந்த தெலுங்குக் குடும்பத்தில் உள்ள‌ இரண்டு பையன்களும் சிறிது நேரத்தில் தெலுங்கில் கத்த தொடங்கிவிட்டார்கள். என்னவென்று பார்த்தால் சன்னல் இருக்கை தான் வேண்டும் என்ற‌ சண்டை. அந்தச் சண்டையைச் சிறுவர்கள் தங்களுக்குள் போட்டிருந்தால் பரவாயில்லை. சன்னல் ஓரமாக இருந்த அப்பாவிடம் தான், அந்தப் பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டார்கள். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று அவரும் விட்டுக் கொடுக்காமல் அந்தப் பையன்களை மிரட்டிக்கொண்டிருந்தார். எனக்கும், எனது மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை. அப்பா, பிள்ளைகளுக்கான சண்டையை அவருடைய‌ மனைவிதான் "மீரு இக்கட வந்து குச்சண்டி" என்று கணவனை மிரட்டிப் பிரச்சனையை முடித்துவைத்தார்.



அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினர் அவர்களுக்குள் பேசியது பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் அளவிற்கு இருந்தது, அவர்கள் பேசிய தெலுங்கில், எனக்குப் புரிந்ததை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் கடந்த ஒரு வாரமாகத் தமிழ்நாட்டில் உள்ள இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காகச் சுற்றுலா வந்திருக்கிறார்கள் என்றும் இப்போதும் அவர்கள் வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லத்தான் இந்தப் பேருந்தில் ஏறி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. சிறிது நேரத்தில் ஓட்டுநர் வந்து பேருந்தை எடுக்கத் தொடங்கினார். அதற்குள் நடத்துனரும் எங்கள் அருகில் டிக்கெட் கேட்டு வந்திருந்தார். அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினரிடம் நடத்துனர் "எத்தனை டிக்கெட்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "வேளாங்கண்ணி, இரண்டு புல் டிக்கெட்" "இரண்டு ஆப் டிக்கெட்" என்றார். நடத்துனர் இருக்கையில் இருந்த அந்த இரண்டு பையன்களையும் சைகையால் எழுந்து நிற்க சொன்னார். அந்தச் சிறுவர்களின் உயரத்தைப் பார்த்துவிட்டு, இவர்களுக்கு ஆப் டிக்கெட் கொடுக்க முடியாது, புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.

தெலுங்குப் பேசியவர் கத்துவதற்குத் தொடங்கிவிட்டார். நடத்துனர் அமைதியாக "பெர்த் சர்டிபிக்கேட்" என்று சொல்லி சைகையால் கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் "பெர்த் சர்டிபிக்கேட் லேது" என்றார். அப்படினா நீங்க புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே நடத்துனர் டிக்கெட்டைக் கிழிக்கத் தொடங்கினார். நடத்துனர் சொல்லியது புரியாதது போலத் தெலுங்கு காரர் "மீரு ஏது செப்தினாரு?" என்று தொடங்கித் தெலுங்கில் தொண்டைக் கிழியும் அளவிற்குக் கத்திக்கொண்டிருந்தார். அதில் நடத்துனரை முட்டாள், பைத்தியகாரன் என்று திட்டிய வார்த்தைகளும் அடங்கும். தெலுங்குப் பேசியவர் தொடர்ந்து கத்துவதை நிறுத்தாமல் இருந்ததால், நடத்துனர் அந்த இரண்டு பையன்களையும் அழைத்துக் கொண்டு சென்று முன் இருக்கையில் வரையப்பட்டிருந்த அளவுக் கோட்டிற்கு முன்னால் நிற்குமாறுச் சொன்னார். இருவரும் அந்த 130 செ.மீ உயரம் வரையப் பட்டிருந்த கோட்டிற்கு மேலாகவே வளர்ந்திருந்தார்கள்.

நடத்துனர் செய்வது எதுவுமே புரியாத‌து போலவே, அந்தத் தெலுங்குப் பேசியவர் கத்திக்கொண்டிருந்தார். நடத்துனர் நான்கு புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவர் கேட்பதாக இல்லை. ஆந்திராவில் நான் ஆப் டிக்கெட் தான் எடுப்பேன். என்னை நீ ஏமாற்றுகிறாய்! என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். நடத்துனருக்கு, அதற்கு மேல் பொறுமை இல்லை, "யோவ்! நாலு புல் டிக்கெட் எடுத்தால் வண்டியில் இரு!, இல்லையென்றால் வண்டியை விட்டுக் கீழே இறங்கு" என்று கோபமாகச் சத்தம் போட்டார். பேருந்தில் இருந்த அனைவரும் இங்கு நடப்பதை வேடிக்கைப்பார்ப்பதும், அவர்களுக்குள் சிரிப்பதுமாக இருந்தார்கள். அந்தத் தெலுங்குக் காரர் பேசிய தெலுங்கு எனக்கு அரைகுறையாகப் புரிந்ததால், இவர் நடத்துனர் சொல்லியது புரியாமல் தான் கத்திக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து நான் இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம், ஆப் டிக்கெட் வேண்டுமானால், நீங்கள் பையன்களின் பெர்த் சர்டிபிக்கேட் காண்பிக்க வேண்டும், இல்லையென்றால் 130 செ.மீ உயரத்திற்குக் குறைவாக இருக்கவேண்டும் என்று தெலுங்கில் சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம். நடத்துனரின் மீது இருந்த கோபம் முழுவதையும் என்னிடம் திருப்பிவிட்டார்.

உன்னுடைய வேலை என்னவோ, அதைப் பாரு! எனக்கு நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம்! என்று தெலுங்கில் கத்தியதோடு மட்டும் அல்லாமல், இங்கிலீசிலும் பாடம் நடத்துவதற்குத் தொடங்கிவிட்டார். எனக்குக் கோபம் தாங்க முடியவில்லை, கையை மடித்து மூஞ்சில் ஒரு குத்துவிடலாம் என்று கையை ஓங்கிய போது அருகில் இருந்த மனைவி என்னை இழுத்து அமர வைத்துவிட்டார். நடத்துனரும், இந்த முட்டா பயலுட்ட நீங்க ஏன் சார்! பேசுறீங்க? விடுங்க, டிக்கெட் எடுக்கலைனா வண்டியை நிறுத்தி இறக்கிவிடப் போகிறேன்! என்றார். இருந்தாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. நடத்துனர் சொல்லியது அனைத்தும் அவனுக்குப் புரிந்திருக்கு, ஆனால் புரியாதது போல் நடித்திருக்கிறான். பாவம்! அந்த நடத்துனர், கடைசிவரை அவனிடம் தவறாக ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ஆனால் தெலுங்கில் எந்த அளவிற்குத் திட்ட முடியுமோ, அந்த அளவிற்கு அவன் அந்த நடத்துனரை திட்டினான். அவன் திட்டிய வார்த்தைகள் எதுவும் நடத்துனருக்குப் புரிய வாய்ப்பில்லை. அவன் திட்டிய‌ வார்த்தைகள் அனைத்தும், அரைகுறையாகத் தெலுங்குத் தெரிந்த எனக்குப் புரிந்ததால் தான், நான் எழுந்து அவனிடம் விளக்கம் கொடுக்க நேர்ந்தது.

நடத்துனர், தெலுங்குக் குடும்பத்தை விட்டுவிலகி, மற்றவ‌ர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்தத் தெலுங்குப் பேசியவரின் மனைவி நான்கு புல் டிக்கெட் கொடுங்க! என்று நடத்துனரிடம் கேட்டார், இப்போதும் அந்தத் தெலுங்குக் காரர் வாயில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.

மறுநாள் காலையில் வேளாங்கண்ணிக் கோவிலில், அண்ணனின் குழந்தைக்கு முடி எடுத்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்று கால்களை நனைத்துத் திரும்பியபோது, ஒரு கடையின் முன் கூட்டமாக இருந்தது. அந்தக் கூட்டத்தை உற்று நோக்கினேன், நேற்று பேருந்தில் பார்த்த அந்தத் தெலுங்குக்காரர் தான் நடுவில் நின்று கொண்டு ஏதோ கத்திக்கொண்டிருந்தார். கண்டிப்பாக நேற்று நான் செய்ய நினைத்ததை இன்றைக்கு எவராவது ஒருவர் செய்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டுக் கடந்தேன்.

.

Friday, June 27, 2014

வாடா மச்சான்! ஒருத்தன் சிக்கிட்டான்!

என்னடா! ஹைதிராபாத் வந்து ஒரு வருடத்திற்கு மேலே ஆகியும் இன்னும் கம்பெனியில் இருந்து ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறார்களே! என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த வாரம் ஆபிஸுக்கு வந்த ஜெனரல் மேனேஜர், ஸ்டீபன்! சவுதி புராஜெக்ட் காண்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டது, சீக்கிரமே! கிளம்புவதற்குத் தாயார் ஆகிவிடு! என்று சொல்லிச் சிரித்தார். இந்த ஷாக் எனக்குப் புதிது ஒன்றும் இல்லாததால், நானும் சிரித்துக்கொண்டே எப்ப, சார்! கிளம்பவேண்டும்? என்று கேட்டேன். நாளைக்கே வேண்டுமானாலும் கிளம்பி வாருங்கள்! என்று தான் புராஜெக்ட் தந்தவன் சொல்லிட்டு இருக்கிறான். ஆனா, விசா! தான் அவ்வளவு சீக்கிரத்தில் ரெடியாகாது, குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிமுடித்தார்.

நான் ரெம்ப நாட்கள் ஹைதிராபாத்தில் இருக்கமாட்டோம்! என்று வீட்டில் உள்ளவர்களிடமும், மனைவியிடம் சொல்லிச் சொல்லியே ஊரிலிருந்து வரும் போது பொருட்கள் எதுவும் எடுத்து வராமல், தேவைப்படும் போது ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்ததே ஒரு வண்டி வந்துவிட்டது. இப்போது நிறையப் பொருட்கள் ஊரிலும், இங்கும் என்று இரண்டு இரண்டாக இருக்கிறது. ஊருக்கு போன் செய்து வீட்டில் அப்பாவிடம் பேசிய போது, சிலப்பொருடகள் நமக்குத் தேவையாக இருக்கிறது, அவைகளைக் கொண்டுவர வேண்டுமானாலும் நீ! அதிகமாக‌ பணம் கொடுக்கத் தான் வேண்டும், அதனால் எல்லாவற்றையும் இங்குக் கொண்டு வந்துவிடு! தேவையானவைகளை வைத்துக் கொள்ளலாம், தேவையில்லாதவைகளை, நம்ம சொந்தகாரர்கள் யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றார். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது.

இந்த இணையம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும், பல நேரங்களில் நம்மை அதில் அடிமையாக முடங்க வைத்துவிடும். கடந்த சனிக்கிழமை ஆபிஸ் லீவாக இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததே லேட்டாகத் தான். வெள்ளிக்கிழமை என்னுடைய வீட்டுப் பொருட்களை ஷிப்ட் பண்ணுவது பற்றி ஆபிசில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவைக் கொடுத்தார்கள். அப்போது, சென்னை நகர் பையன் ஒருவன், எதுக்குச் சார்! ரெம்ப யோசிக்கிறீங்க? இப்ப எல்லாம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று மூலைக்கு மூலை போர்டு மாட்டி வைச்சுருக்கானுங்க! அவர்களில் எவரேனும் ஒருவரிடம் கொடுத்துடுங்க! பொருட்கள் எல்லாம் நல்ல ஷேப்பா, கொண்டு வந்து சேர்த்திடுவார்கள் என்றான். நானும் நல்ல ஐடியாவா இருக்கே! என்று நோட் பண்ணிக் கொண்டேன். நேற்று ஆபிசில் நோட் பண்ணிய ஐடியா என்னவோ, காலையில் மனைவி கொடுத்த டீயுடன் வந்து மன‌தில் ஒட்டிக்கொண்டது.

இப்போது ஞாபகம் இருப்பதை, இப்படியே விட்டால் மறந்துவிடும் என்று, லேப்டாப்பை திறந்து இணையத்தில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று தட்டியது தான் தாமதம். முதல் பக்கத்திலேயே சுலேகா டாட் காம் என்ற பேஜ் தானாகத் திறந்து போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி என்ற தகவல்களைக் கேட்டு, பாப் அப் வின்டோ ஒன்று ஓபன் ஆகியது. நான் உசாரா இருக்கிறேன்! என்ற எண்ணத்தில் அதில் என்னுடைய தகவல்கள் ஏதும் கொடுக்காமல் மூடிவிட்டு, அந்த வெப் பேஜில் இருந்த சில பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்களின் தகவல்களில் உள்ள போன் நம்ப‌ர்களை நோட் பண்ணி அதில் முதலில் இருந்த, இரண்டு பேருக்கு கால் பண்ணி விவரங்களைக் கேட்டேன். அவர்கள் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு ஷிப்ட் செய்யவேண்டும்? என்னென்ன பொருட்களை மேஜராக இருக்கின்றன? என்ற தகவல்களைக் கேட்டார்கள். நானும் பொறுமையாக அவர்களின் கேள்விக்கான பதில்களைக் கொடுத்தேன். ஒருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தவிர்த்துப் பதினான்காயிரம் என்றார், இன்னொருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்துப் பதிமூன்றாயிரம் என்றார். இவர்கள் இருவரிடம் பேசியதில் இவ்வளவு ரூபாய் வித்தியாசம் இருக்கிறதா? என்று எண்ணிக்கொண்டே குளிக்கச் சென்றேன்.

குளித்து வருவதற்குள், மனைவி இரண்டுமுறை பாத்ரூம் கதவை தட்டிவிட்டார். என்னவென்று கேட்டால், உங்க போன் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது என்றார். யார் அடிக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், புது எண்ணாக இருக்கிறது பெயர் வரவில்லை என்றார். நான் அவரிடம், மொபைலை எடுத்து பேசு! என்றேன். அதற்கு அவரோ, புது எண்ணாக இருக்கிறது, கண்டிப்பாகத் தெலுங்கில் தான் பேசுவார்கள், நான் எடுக்க மாட்டேன்! என்றார். சரி விடு! அடிக்கட்டும், நான் வெளியில் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்து மொபைலை எடுத்துப் பார்த்தால், இரண்டு எண்களிலிருந்து பனிரென்டு மிஸ்டுகால்கள் இருந்தது. அந்த எண்களில் ஒன்றை தொடர்பு கொண்டு கேட்டால், சார், நாங்க! சுலேகா டாட் காமில் இருந்து பேசுகிறோம், நீங்க பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விவரம் தேடுகிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். நானும் அவரிடம் தெரியாமல் "ஆமாம்" என்று சொல்லிவிட்டேன். அவர் என்னிடம் நாங்க உங்களுக்குப் பல பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விபரங்கள் தருகிறோம், உங்க மெயில் ஐடியை தாருங்கள் என்று கேட்டார். மெயிலுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் மொபைலுக்கும் தொடர்ந்து மெசேஸ் வந்து கொண்டே இருந்தது.

தொடந்து வந்து கொண்டிருந்த மெஸேஜ்களில் இருவதிலிருந்து இருவத்தைந்து பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸின் விபரங்கள் மற்றும் போன் நம்பர்கள் இருந்தது. இதோடு விட்டுருந்தால் நல்லாயிருக்கும், ஆனா! அந்தப் பயபுள்ள நல்லவேலை ஒண்ண பார்த்துவிட்டு விட்டது. என்னனா, அந்த மெஸேஜில் இருக்கும் அனைத்துப் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்கும் என்னுடைய போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு ஓர் அடிமைச் சிக்கிட்டான்! அவன் வேறு, இன்னைக்கு வேலைவெட்டியில்லாமல் சும்மா தான் வீட்டில் இருக்கான்! எவ்வளவு பேசினாலும் தாங்குவான் போல! அதனால் உங்க திறமையைக் காட்டுங்கள்! என்று கோர்த்து விட்டு அவன் அமைதியாகிவிட்டான். அப்புறம் என்னா! காலையில, ஒரு பத்து மணிக்குச் ச‌ங்கை எடுத்து ஊத ஆரம்பிச்சது.



சார், நீங்க வீட்டு பொருட்கள் ஷிப்ட் செய்ய வேண்டும் என்று சுலோகா டாம் காமில் சொன்னீங்களாம்!

ஆமாங்க! சொல்லியிருந்தேன்!

நாங்க‌ *---$%%%.. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸூல இருந்து பேசுறோம்!

அப்படியா! சொல்லுங்க.

எங்க, சார்! போகனும்?

அங்க, தான் போகனும்!.

என்னவெல்லாம் கொண்டு போகனும்?

இதெல்லாம் கொண்டு போகனும்!.

மேஜர் பொருட்கள் மட்டும் சொல்லுங்க?

டீவி, பிரிஜ், டைனிங்டேபிள், செயர், கூலர், பெட்!.

வண்டி இருக்க? சார்!

வண்டி இல்லங்க.

அலமாரி இருக்கா? சார்!

அலமாரி இல்லங்க.

நாகர்கோவிலில் இருந்து உங்க ஊரு எத்தனை கிலோமீட்டர்?

பதிமூணு கிலோமீட்டர்.

இவ்வளவு ரூபாய் ஆகும் சார்!

அப்படியா, நான் டேட் இன்னும் கன்பார்ம் ஆகல, டேட் கன்பார்ம் ஆனதும் சொல்லுறேன்.

நான் எப்ப, சார்! கால் பண்ணட்டும்?

அடுத்த வாரத்துல, கால் பண்ணுங்க.

மொத்தம் பதிமூணு பேரு, ஓர் ஆளு நானு, தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் என்று மூணு லாங்கேஜ் வேறு! கதற‌, க‌தற மேலே கேட்டக் கேள்வியைப் பாரபட்சம் இல்லாமல் கேட்டார்கள். நானும் எவ்வளவு நேரம் தான் காதில் இரத்தம் வராதது போலவே நடிக்கிறது!.

இதுல ஒரே பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் இருந்து, இரண்டு மூன்று பேர் மாறி மாறி வேறு பேசினார்கள், ஏம்ப்பா! இப்ப, தான் உங்க ஆபிஸில் இருந்து விபரங்கள் கேட்டார்கள், என்று சொன்னால், சாரி, சார்! சுலேகாவில் இருந்து எனக்கும் மெஸேஜ் வந்தது, நான் ஆபிஸில் இல்லை, வெளியில் இருக்கிறேன். என்று மன்னிப்பு வேறு.

கொடுமை என்னானா! எல்லாத் தகவல்களையும் கேட்டுவிட்டு, சாரி, சார்! நாங்கள் லோக்கல் பேக்கர்ஸ் அண்ட மூவர்ஸ் ஸ்டேட் விட்டு ஸ்டேட் பண்ணுறது இல்லனு எகத்தாளம் வேறு. போதும்! இதோட நிப்பாட்டிக்கலாம்! என்று சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்பது தெரியாது.

காலையில, பத்து மணிக்கு ஆரம்பிச்சது, மாலையில் ஆறு மணி ஆன‌ பிறகும் விடலியே! நாலு பேரு, சார்! நாளைக்குக் காலையில வீட்டுக்கு வந்து, உங்க பொருட்களைப் பார்த்து கொட்டேசன் தருகிறோம் என்று அவர்களின் தொழில் நேர்மையை என்னிடம் விவரித்தார்கள்.

சும்மா, இணையத்தில் ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று போட்டுத் தேடியது ஒரு குற்றமா?. கடந்த ஒரு வாரமாகக் கொட்டேசன் வாங்குவதும், எப்ப, சார்! டேட் கண்பர்ம் பண்ணுவீங்க! என்ற கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிட்டு இருக்கிறேன்.

நேற்றைக்கு எனக்குப் பதிலாக இங்கு ஹைதிராபாத் ஆபிஸில் புதிதாக ஒருவரை எடுத்திருந்தார்கள், அவர் பூர்வீகம் சென்னை. ஹைதிராபாத்தில் வீடு வாடகைக்கு வேண்டும் என்று இணையத்தில் நேற்று தேடிக்கொண்டிருந்தார். இன்னைக்கு ஆபிஸுக்குக் கொஞ்சம் லேட்டா வருகிறேன்! என்று மெஸேஜ் மட்டும் எனக்கு அனுப்பியிருக்கிறார். பாவம்! யாருடைய போனில் சிக்கி தவிக்கிறாரோ? வந்தா தான் விசாரிக்க முடியும்.

பார்ப்போம்! இன்னொரு பதிவு எழுத்துவதற்கு மேட்டர் தேறுமா என்று!

.

Friday, May 30, 2014

டிரைவிங் லைசென்ஸ்_ஆணியே புடுங்க வேண்டாம்!!!

நான் படித்த டிப்ளமோ கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படித்து முடிக்கும் மூன்று வருடத்திற்குள், கல்லூரியில் இருக்கும் டிரைவிங் ஸ்கூலில் சேர வைத்துச் சிறப்புப் பயிற்சியும் கொடுத்து இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கான லைசைன்ஸை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். நானும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுப் படிக்கும் போதே டூவீலர் மற்றும் கார் இரண்டிற்கும் சேர்த்து லைசென்ஸ் வாங்கி வைத்து விட்டேன்.

வாங்கிய லைசென்ஸை பத்திரமாக எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்க்கும் போது கம்பெனி வேலையாக டூவீலர் எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றுவேன். ஒருமுறை கூட டிராபிக் போலீஸில் மாட்டியது இல்லை. நான் அம்பத்தூரில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் போது, பெரும்பாலும் டூவீலரை உபயோகிப்பது மூன்று வழித்தடங்களில் தான். ஒன்று பழைய மெசின் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டூல்கள் வாங்குவதற்காக‌ மோர் மார்கெட் மற்றும் எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்கும் வேளச்சேரி ரானே மெட்ராஸ் மற்றும் எண்ணூர் அசோக் லைலன்ட்.

நான் சென்னையில் டூவீலர் ஓட்டுவது, எனது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. நான் டூவீலர் ஓட்டிவிடக் கூடாது என்பதால் தான் என்னிடம் லைசென்ஸை தராமல் அம்மா வாங்கிப் பாதுக்காப்பாக வைத்திருந்தார். அவர் என்னிடம் லைசென்ஸ் கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனக்குச் சரியாக டூவீலர் ஓட்டுவதற்குத் தெரியாது என்பது அவரது எண்ணம். அவருடைய எண்ணதிற்குக் காரணம் இதுதான். முன்பெல்லாம் சைக்கிள் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் வாடைகைக்கு எடுத்து, ஓட்டி கற்றுக் கொள்ளலாம். கால் வண்டி, அரை வண்டி மற்றும் முழு வண்டி என்று பிரித்து வைத்து ஒரு மணி நேரத்திற்கு 25 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை வாடகை வாங்குவார்கள். இந்த வண்டிகளில் நமக்கு ஏற்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வதற்குப் பெரும்பாடு பட வேண்டும். இப்போது எல்லா வீடுகளிலும் ஆளுக்கு ஒரு டூவீலர் என்று இருக்கிறது, ஆனால் அப்போது ஊரில் அரசு பணியில் இருப்பவர்களிடமோ அல்லது புதிதாக வாத்தியார் வேலைக்குச் சேர்ந்தவர்களிடமோ மட்டும் தான் டூவீலரை பார்க்க முடியும். அவர்களும் அந்த வண்டியில் தனது பொண்டாட்டியைக் கூடப் பின்னால் ஏற்றுவதற்குத் தயங்குவார்கள். காரணம் வண்டியின் டயர் தேய்ந்து போகும் என்று, அவர்களிடம் சென்று ஓட்டி கற்றுக்கொள்ள வண்டி கேட்டால் என்ன சொல்லுவார்கள்?.

எனக்கும் அண்ணனுக்கும் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள‌ வேண்டும் என்ற ஆசை வந்தவுடன் அப்பா ஒரு பழைய ராஜூத் வண்டி(Rajdoot Bike) வாங்கிக் கொடுத்தார்கள். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஊரையே அலற வைக்கும். நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். முழு நேரமும் அண்ணன் தான் அந்த வண்டியை ஓட்டுவான். அந்த வண்டியை தெருவில் ஓட்டி சென்றாலே அனைவரும் ஒதுங்கி வழிவிடுவார்கள். அந்தளவிற்கு ஒலியை எழுப்பும். அப்பா எப்போதாவது என‌க்கு கற்றுக் கொடுக்கச் சொன்னால் மட்டுமே என்னிடம் வண்டியை அண்ணன் கொடுப்பான், இல்லையென்றால் என்னிடம் தர மாட்டன். எனக்கும் அந்த வண்டியை ஓட்டுவதற்குப் பெரியளவில் ஆர்வம் இல்லை. ஒரு வருடத்தில் அந்த வண்டியையும் அப்பா விற்றுவிட்டார்கள். அந்த வண்டியில் ஓட்டிய பழக்கத்தில் தான் காலேஜில் நண்பர்களின் உதவியுடன் லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தேன். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அம்மாவின் தூரத்து உறவுமுறையில்(எனக்கு மாமா முறை வரும்) ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வண்டியில் வந்திருந்தார். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம். ரெம்ப நேரம் வீட்டில் அமர்ந்து எங்களுடன் பேசிவிட்டு கிளம்புவதற்காக வெளியில் வந்தார். அம்மாவும் நானும் கூடவே வெளியில் வந்தோம், திடிரெனப் புது வண்டியை பார்த்தவுடன் எனக்கு ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மாமாவிடம் கேட்டவுடன் அவரும் சாவியைக் கொடுத்துவிட்டார்.

சாவியைக் கையில் வாங்கிய போதே, அம்மா என்னிடம் ஓட்ட‌ வேண்டாம் என்று சொன்னார். பக்கத்தில் நின்ற மாமா, ஒண்ணுமில்லை அக்கா! ஓட்டிப் பழகட்டும் என்றார். எனது வீட்டின் முன்பு வண்டி ஓட்டுவதற்கு என்று பெரிய அளவில் இடம் கிடையாது, சிறிய அளவில் தான் இடம் உண்டு. எங்கள் வீடு சற்று மேடான பகுதியில் இருக்கும், வீட்டின் முன்பு எங்கள் எல்லையின் முடிவில் நாங்கள் செங்கலால் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தோம். நான் வண்டியில் ஏறி காலால் ஸ்டாண்டை எடுத்துவிட்டு முன்னால் சாவியைப் போட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். இதுவரையிலும் எல்லாம் சரியாகத் தான் செய்தேன். யாருக்கும் எந்தவிதமான‌ சேதாரமும் இல்லை. பர்ஸ்ட் கியரை மெதுவாக‌ போட்டு ஆக்ஸிலேட்டரை நான் கொடுத்தது தான் தாமதம் வண்டி எம்பிகுதித்துக் கிளம்பியது. நான் நிதானத்தை இழந்திருந்தேன்.

நான் எனது வீட்டிலிருந்த ராஜூத் வண்டியில் ஆக்ஸிலேட்டரைக் கொடுப்பது போல் எடுத்தவுடன் பாதிக்கு மேல் முறுக்கிவிட்டேன். அந்தப் பழைய ராஜூத் வண்டியில் நீங்கள் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரை முக்கால் பாகம் முறுக்கினால் தான் வண்டி லேசாக மூவ் ஆகும். அதே நினைப்பில், இந்தப் புது ஸ்ப்ளெண்டர் பைக்கிலும் ஆக்ஸிலேட்டரை முறுக்கிவிட்டேன். வண்டி எம்பிகுதித்தவுடனேயே அம்மா அலற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் அலறலும், மாமாவின் பிரேக்கை பிடி!! பிரேக்கை பிடி!! என்ற சத்த‌மும் என்னைப் பதற்றபட வைத்திருந்தது.

பதட்டத்தில் கை என்னையும் அறியாமல் ஆக்ஸிலேட்டரை தான் முறுக்கியது. சிறிதுதூரம் செல்வதற்குள் சுதாரித்துக்கொண்டு பிரேக்கில் காலை வைத்து அழுத்த துவங்கினேன், அதற்குள் வீட்டின் முன்னால் இருந்த செங்கள் சுவரின் மீது மோதி விட்டேன் அந்தப் பதட்டத்தில் வண்டியின் பிரேக், கிளெச், ஆக்ஸிலேட்டர் என்று மொத்ததின் மீதும் இருந்த‌ கை, கால்களை எடுத்திருந்தேன், வண்டியானது காம்பவுண்ட் சுவரை மட்டும் இடித்துத் தள்ளி ஆப் ஆகி நின்றது. வண்டி இன்னும் ஒரு செங்கல் தூரம் நகர்ந்திருந்தால், வண்டியோடு சேர்ந்து நானும் பள்ளத்தில் விழுந்திருப்பேன். எனது வீடு மேட்டில் இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். எங்கள் எல்லையின் காம்பவுண்ட் சுவருக்குக் கீழே ஓர் ஆள் உயரம் பள்ளமாக இருக்கும். என்னுடைய இந்தச் செய்கையை நேரில் பார்த்த பிறகும் எனது அம்மா என்னிடம் லைசென்ஸை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?.

அன்றிலிருந்து நான் வண்டியைப் பற்றியோ, லைசென்ஸைப் பற்றியோ பேசினால், நீ ஆணியே புடுங்க வேண்டாம்!! என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிடுவார்கள். அத்தோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊரில் எவரும் வண்டி ஓட்டிப் பழகுவதைப் பற்றிச் சொன்னால் போதும், அம்மா என்னோட கதையைக் கதாகாலட்சேபமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கல்யாணம் முடிந்த புதிதில் என்னுடைய‌ மனைவியிடமும் இந்தக் கதையைச் சொல்ல மறக்கவில்லை. அந்தளவிற்கு நான் அவர்களை மிரட்டியிருந்தேன். இதனால் தான் என்னுடைய‌ சென்னை வாசம் லைசென்ஸ் இல்லாமல் கழிந்தது.

சென்னையில் இருக்கும் போது ஆபிஸ் வண்டியை எடுத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வெளியில் செல்வேன். என்னுடைய ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் நான் வண்டி ஓட்டியபோது எந்தவொரு டிராபிக் போலீஸிலும் மாட்டியது இல்லை. ஒருமுறை அம்பத்தூர் கம்பெனியிலிருந்து டூல் வாங்குவதற்காக மோர் மார்கெட் செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய டூல்களை என் ஒருவனால் கொண்டுவர முடியாது என்பதால் கூட ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எல்லாம் வாங்கிமுடித்து வரும் வழியில், அண்ணா நான் வண்டியை ஓட்டுகிறேன் என்று என்னுடன் வந்த பையன் வண்டியை வாங்கினான். வண்டியில் ஏறிய அடுத்தச் சிக்னலிலேயே போலீஸின் முன்பு நிப்பாட்டி பைன் கட்ட வைத்துவிட்டான்.



நான் டூவீலர் ஒட்டும் போது லைசென்ஸ் இல்லை என்பதற்காகச் சிக்னலில் போலீஸை கண்டு மிரள்வது கிடையாது, அவருக்குப் பயந்து ஓரமாகக் கொண்டும் வண்டியை நிப்பாட்டுவது இல்லை. துணிச்சலாகச் சிக்னலில் டிராபிக் போலிஸின் முன்னால் தான் வண்டியை நிப்பாட்டுவேன். ஏதாவது ரோட்டில் போலீஸ் மடக்குகிறார்கள் என்று ஒதுங்குவது இல்லை. என்னுடைய போக்கில் நான் சென்றுவிடுவேன். அதுவே எனக்குப் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. டிராபிக் போலீஸை கண்டு மிரண்டாலே, நீங்கள் எல்லாச் சிக்னலிலும் பைன் கட்டுவீர்கள். சில வருடங்கள் இப்படியே போனதான், ஊரில் சொந்தமாக வண்டி வாங்கிய பிறகும் லைசென்ஸ் பற்றிய கவலை எனக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஆபிஸ் வேலையாக‌ வெளிநாடு செல்லும் போது வீட்டில் இருக்கும் லைசென்ஸை தேடினால் கிடைக்கவில்லை. அம்மாவும் வைத்த இடத்தை மறந்திருந்தார்கள். பல வருடங்கள் ஆகியதால் வீட்டில் அவ்வப்போது பெயிண்டிங், ஷிப்டிங் என்று இருக்கும் போது தொலைந்து போனது.

அவ்வாறு தொலைந்த/தொலைத்த‌ லைசென்ஸை சமீபத்தில் தான் வாங்கினேன். அந்தக் கதையையும் நேரம் இருக்கும் போது எழுதுகிறேன்.
Related Posts with Thumbnails