நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி..
கண்ணுக்கும், மனசுக்கும் பசுமை தரும் ஊருதான்.. உங்களுக்கு இந்த சூடான சென்னை வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்..
ஆமாங்க.. என்று சொல்லிவிட்டு அவரது முகத்தை பார்த்தால், ரெம்ப சந்தோசமான புன்னகையுடன், உணர்ச்சி பொங்க, எங்கள் ஊரில் உள்ள வயல் வெளிகள் பற்றியும், நீர் நிலைகள் மற்றும் அணைகள் பற்றியும் அவற்றின் பெருமைகளைப் பற்றியும் விவரிப்பார். அதில் எனக்கு தெரியாத சில விசயங்களும் அடங்கும்.
வெளியூரில் இருக்கும் நம்மை போன்ற மக்களுக்கு சொந்த ஊரின் நினைவுகளை பற்றி மற்றவர்கள் பேசும் போது நம்முடைய மனம் தன்னையறியாமல் ஒருவித மகிழ்ச்சியில் களிப்புறுவது மறுக்கயிலாது..
ஆனால் இவர்கள் வியந்து சொல்லும் அனைத்து விசயங்களுக்கும் நம்முடைய ஊர், இப்போதும் ஏற்புடையதுதானா? என்ற கேள்வி என்னில் எப்போதும் எழுவது உண்டு..
சிறுவயதில் எங்கள் ஊரில் கிணறுகள் அதிகமாக இருக்கும். அதில் இருந்து இறைக்கும் நீர் தான் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும். இந்த கிணறுகள் 50 அடியில் இருந்து 60 அடிகள் வரை ஆழம் இருக்கும். இதில் 10 - 15 அடிகள் நீர் எப்போதும் இதில் இருக்கும். கோடைக்காலத்திலும் வற்றாத சில கிணறுகளை எங்கள் ஊரில் நான் பார்த்தது உண்டு.
கால ஓட்டத்தில் இந்த கிணறுகளில் நீர் ஊற்றுகள் குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் முற்றிலும் நின்று கட்டாந்தரையை காட்டி பல்லிளித்தது. இந்த காலகட்டத்தில் தான் எங்கள் ஊரில் உள்ள பல கிணறுகளுக்கு மூடுவிழா போடப்பட்டது. அதில் எனது வீட்டில் உள்ள கிணறும் அடங்கும். இப்போது எங்கள் ஊரில் நீர் உள்ள கிணறுகளை பார்ப்பது என்பது மிக அரிது.
கிணறுகளுக்கு மூடுவிழா போட்ட வீட்டில் எல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டது. இந்த ஆழ்துளைக் கிணறுகளில் ஆழம் சுமார் 250 அடியில் இருந்து 300 அடிகள்.. இப்போது இந்த ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து கொண்டு தான் வருகின்றது.
நிலத்தடி நீர் மட்டம் தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது, என்பது கண்முன்னே அழகாக தெரிகிறது.
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் குளம் மற்றும் வாய்க்கால்கள் அதிகமாக இருக்கும். இவையிரண்டும் தான் விவசாயத்திற்கு ஊன்று கோலாய் இருந்தவை. இந்த குளங்கள் மற்றும் வாய்க்கால் பக்கம் நிலம் வைத்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி பல குளங்களை குட்டையாக மாற்றியதுண்டு.. சில நீர் நிலைகள் இருந்த இடங்களே, தடம் தெரியாமல் இன்று அடையாளம் தொலைத்து நிற்கின்றன. புதிய குளங்கள் எதுவும் வெட்டப்படவும் இல்லை. விவசாயத்திற்கு நீர் ஆதாரம் குறைவாக இருக்கிறது என்று பல விளைநிலங்கள் வீடுகளாக மாறி வருகிறது.
ஒளிமயமான எதிர்காலம்?_கண்முன்னே நடந்த மாற்றங்கள்
மேற்கண்ட என்னுடைய பதிவில் நான் காமெடியாக எழுதியிருந்தாலும் இதுதான் உண்மை..
எங்கள் ஊரில் மலைகள் அதிகமாக இருப்பதால் பருவ மழைகள் பொய்ப்பது இல்லை(2004 சுனாமி நிகழ்வுக்கு பிறகு பருவ மழைகளில் மாறுதல் உள்ளதாக சிலர் சொல்லுகிறார்கள், அது எவ்வளவு தூரம் உண்மையென்று எனக்கு தெரியவில்லை), ஆனால் இந்த மழை நீர்கள் சரியாக சேமிக்கப்படுவது இல்லை. அப்படியே கடலில் கலந்துவிடுகிறது. கோடைக்காலங்களில் எங்கள் ஊரில் வெயிலின் உக்கிரம் முன்பெல்லாம் அதிகமாக தெரிவதில்லை. ஆனால் இப்போது எங்கள் ஊரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
மேலே உள்ள விசயங்களால் குறைப்பட்டிருக்கும் எனக்கு, ஊரில் நேரில் பார்த்த சில ஆக்க பூர்வமான செயல்கள் ஆறுதல் தந்தன
பாலிதீன் பைகள் முற்றிலும் தடைச்செய்யபட்டிருக்கிறது. இந்த பைகளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடமும் அதிகமாக சென்றைடைந்திருக்கிறது. கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்பவர்களும் கைகளை வீசிக்கொண்டு செல்லாமல், கையில் துணிப்பைகளுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து எங்கள் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. எல்லா மாவட்டங்களிலும் இந்த கட்டுப்பாடு வந்தால் நன்றாக இருக்கும்..
இந்த ஆண்டு கட்டப்படும்.. அடுத்த ஆண்டு கட்டப்படும் என்று சில ஆண்டுகளாக எங்கள் ஊரில் சொல்லிவந்த மாம்பழத்துறையாறு அணைக்கட்டு ஒரு வழியாக கடந்த ஆண்டு கட்டி முடிக்கப் பட்டுவிட்டது. இது அமைந்திருக்கும் பகுதி இயற்கையாக அணைக்கட்டுவதைக்கு ஏதுவாக இருந்த இடம். மலைகளில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் இந்த அணையில் சேமிக்க படுகிறது... இந்த அணையின் மூலம் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மற்றும் விளை நிலங்களுக்கான நீர் ஆதரம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது...
அணை பற்றிய விபரம் எல்லாம் இங்க பாருங்க..
நான் போனது மழைக்காலம் இல்லீங்கோ..
போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரெம்ப நாள் ஆச்சுங்கோ..