என்னுடன் இருந்த நண்பர்களில் சிலருக்கு இந்த இரண்டு வகைகளை பற்றி தெரிந்திருக்க வில்லை. அதில் ஒருவர் கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடித்தார். அவங்களை எல்லாம் ஒரு வழியாக சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது.. இந்த பனை மரம் ஒன்றிலேயே இவ்வளவு குழப்பமா? அப்படியானால் எனக்கு தெரிந்த சில மரங்களில் உள்ள வகைகளை சொன்னால்? உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
பலாப்பழம் அனைவரும் அறிந்ததே... அதில் எனக்கு இரண்டு வகைகள் தெரியும். எங்கள் ஊரில் பலாப்பழத்தை வழக்கு சொல்லாக சக்கை என்று அழைப்பது உண்டு.
1)வருக்கை சக்கை(பலாப்பழம்)
2)கூழன் சக்கை(பலாப்பழம்)
இதில் முதல் வகையை மட்டும் தான் நகரங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இந்த வகையில் உள்ள சுளைகளை தான் தனியாக எடுத்து பாக்கட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். இதன் சுளைகள் கொஞ்சம் அடத்தியாக இருக்கும்.
இரண்டாவது வகை பலாப்பழத்தை எங்கள் ஊரை தவிர எங்கும் பார்த்து இல்லை. இந்த பலாப்பழம் பழுத்து விட்டால் நாம் நமது கைகளின் பலத்தால் இதை பிளக்க முடியும். ஆனால் முதல் வகையை எவ்வளவு நன்றாக பழுத்தாலும் கைகளினால் பிளக்க முடியாது. ரெம்ப கடினமாக இருக்கும். கத்தியால் தான் வெட்ட முடியும்.

பழுத்த கூழன் சக்கையின் சுளையை வருக்கை சக்கையின் சுளையை போல் தனியாக எடுக்க முடியாது. கூழன் சக்கையின் சுளைகள் பகுதி திட நிலையில் இருக்கும். இதை நீங்கள் கையில் எடுத்து வாயில் வைத்தால் நூல் போல் இழுக்கும். இதன் சுவை முதல் வகையை விட தித்திப்பாக இருக்கும். பல் இல்லாத முதயவர்கள் இந்த வகையை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பலாப்பழத்தின் மணம் அதிக வாசனை திறன் கொண்டது. நமது வீட்டின் பக்கத்தில் உள்ள நான்காவது வீட்டில் பலாப்பழம் வெட்டினால் கூட நமது வீட்டில் அதன் வாசனை தெரிவித்து விடும். எனவே பக்கத்து வீட்டு காரர்களுக்கு தெரியாமல் இதை சாப்பிட முடியாது.
இதே பலாப்பழத்தின் வேறு சில ரகங்களும் நான் பார்த்திருக்கிறேன். அயினி சக்கை என்று அழைக்கப்படும். இது பலாப்பழத்தை போல் இருக்கும். ஆனால் அளவு மிக சிறியதாக இருக்கும். இது சிறிது புளிப்பு சுவையுடையது. இந்த மரம் பெரும்பாலும் வீடுகள் கட்டுவதற்கு பயன்படும். எங்கள் ஊரில் இந்த மரத்தின் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு தனி மவுசு உண்டு.
கறி சக்கை என்று அழைக்கப்படும் ஒரு ரகத்தையும் பார்த்து இருக்கிறேன். இதுவும் பார்பதற்கு பலாப்பழத்தை போல், ஆனால் சிறிய அளவில் இருக்கும். இதை சமையல் பண்ண பயன்படுத்துவார்கள்.
சீத்தாப்பழம் இதிலும் இரண்டு வகைகள் உள்ளது. பாஞ்சி பழம் என்று எங்கள் ஊரில் அழைக்க படும். ஒரு வகை இனிப்பு சுவை உடையது. இது தான் அதிகமாக நகரங்களில் பார்க்க முடிகிறது. இது மாவு போன்று சுவைப்பதற்கு தித்திப்பாக இருக்கும்.

இரண்டாவது வகை புளிப்பு சுவையுடையது. இதன் மேல் தோலில் முட்கள் காணப்படும். இது இனிப்பு சீத்தாப்பழத்தை விட சிறிது பெரிதாக இருக்கும்.

குறிப்பு: மேலே சொன்ன வகைகள் தெரியாது என்றால் அடுத்த மாதம் குழித்துறையில் நடைபெறும் "வாவுபலி சந்தை"யில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். நான் கூறியதை விட அதிகமான வகைகளை பார்க்க முடியும். முடிந்தால் அதை பற்றி அடுத்த மாதம் ஒரு இடுகை போடுகிறேன்.
.
.