அன்று சனிக்கிழமை, நான் ரெயில்வே ஸ்டேசன் பக்கத்தில் இருந்த முருகன் தியேட்டரில் மேட்னி ஷோ பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழியில் உள்ள அந்த ஒயின் ஷாப் பக்கத்தில் ஒரு பெரிய கும்பல் நின்று கொண்டிருத்தது. அந்த கும்பலின் நடுவில் ஒருவர் நின்று கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். சென்னைக்கு வந்த புதிதில் சண்டை போடும் இடங்களில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் எனக்கு புரிவதே இல்லை. அப்போது நான் நினைத்து கொள்வேன் இவர்களை எல்லாம் கூட்டி கொண்டு போய் நம்ம ஊரு பொன்னுதாயிகிட்ட டியூசன் வைக்க வேண்டும் என்று. ஏன்னா எங்க ஊரு பொன்னுதாயி அந்த அளவு பேமஸ். கெட்டவார்த்தைகள் என்றால் அவர்களிடம் தான் கத்து கொள்ள வேண்டும். ஒருவருடன் சண்டை என்றால் அவருடைய பாட்டாவில் ஆரம்பித்து அவருக்கு பிறக்க போகும் குழந்தை வரை இழுத்து விடுவார். கெட்டவார்த்தைகள் ஒவ்வொன்றும் சுருதி சுத்தமாக கணீர் என்று காதில் விழும். சரி நம்ம கதைக்கு வருவோம்.
கூட்டம் முழுவதும் கத்துபவரின் வாயையே பார்த்து கொண்டு இருந்தனர். ரெம்ப அசிங்கமாக பேசிக் கொண்டிருத்தார். அம்பத்தூரில் ரெயில் மூலமாக பயணம் செய்து வேலைக்கு செல்பவர்கள் அந்த வழியாகத்தான் வீடு திரும்ப முடியும். அதுமட்டுமல்லாது வேலை முடித்து வீட்டிற்கு செல்பவர்களுக்கு வசதியாக அந்த சாலையின் ஓரங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பார்கள். எனவே அந்த சாலை எப்போதும் பிஸியாக இருக்கும். அது மாலை நேரம் ஆகையால் நிறைய பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டிருந்தார்கள். கத்துபவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. நேரம் ஆக ஆக இவருடைய கத்தும் வேகம் அதிகமாகி கொண்டிருந்தது.
நான் அந்த கூட்டத்தை கடந்து சிறது தூரம் நடந்து பக்கத்தில் இருந்த ஹோட்டலின் வாசலில் நின்றேன். அந்த ஹோட்டலில் தான் நான் தினமும் சாப்பிடுவேன். அதில் வேலை பார்த்த ஒருவர் எனக்கு நல்ல அறிமுகம், அவர் அப்போது தான் அந்த கூட்டத்தில் இருந்து வெளியில் வந்தார். அவரிடம் என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம் என்று அவரிடம் புன்னைகித்தேன். அவரும் என்ன தம்பி ஆபிஸ் லீவா? என்று கேட்டு கொண்டு அருகில் வந்தார். ஆமா.. என்று சொல்லி விட்டு என்ன பிரச்சனை என்று கேட்டேன்.
அதுவா..தம்பி... அவன் இந்த ஏரியாவிலே உள்ள ரவுடி கும்பலை சேர்ந்தவன். ஏப்பாவாது தான் இங்கு வருவான். அந்த ஒயின் ஷாப்புக்கு சென்று ஒரு குவாட்டருக்கான ரூபாயை கொடுத்து விட்டு இரண்டு குவாட்டர் கேட்பான். அப்படி கொடுக்காவிட்டால் இப்படித்தான் பிரச்சனை பண்ணுவான். இது இவனுக்கு வாடிக்கை தம்பி என்று கேஷுவலாக கூறினார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தை திரும்பவும் ஒருமுறை பார்த்துவிட்டு அவரிடம் கேட்டேன், " போலீஸுக்கு போண் பண்ண வேண்டியது தானே" என்று கேட்டேன். நீங்க வேற போலீஸுக்கு இவன் எல்லாம் பயப்படமாட்டான், அப்படியே வந்தாலும் பணத்தை வாங்கி கொண்டு விட்டு விடுவார்கள் என்று சொல்லி வாய் மூடுவதற்க்குள் போலீஸ் ஜீப் ஒன்று அந்த சாலையில் வந்தது.

போலீஸ் வண்டியை பார்த்தவுடன் கும்பலாக நின்றவர்கள் அப்படியே நழுவ தொடங்கினார்கள். ஆனால் கத்தி கொண்டிருந்த ஆசாமி எங்கும் நகராமல் அப்படியே நின்றான். என் பக்கத்தில் நின்ற ஹோட்டல் ஊழியர் என்னிடம்.. பாருங்க தம்பி போலீஸ் வருகிறது, அவன் எப்படி நிக்கிறான் என்று. போலீஸும் கண்டுக்காம போயிடுவானுங்க, வேணுண்ணா பாருங்க அந்த போலீஸ் வண்டி நிக்காமல் செல்லும் என்று என்னிடம் பெட் கட்டாத குறையாக சொன்னார். ஆனால் அவர் சொன்னதுக்கு எதிர்மாறாக நடந்தது. போலீஸ் வண்டி நேராக கத்தி கொண்டிருந்தவனின் முன்னால் வந்து நின்றது. நான் இப்போது அருகில் இருந்த ஹோட்டல் ஊழியரை பார்த்தேன். அவர் நான் என்ன கேட்க போகிறேன் என்பதை அறிந்தவராக, இல்ல தம்பி காசு ஏதாவது வாங்கிட்டு போவானுங்க, வேணுண்ணா பாருங்க அந்த சந்துல கூட்டி போய் காசு வாங்குவானுங்க என்றார்.
வந்த போலீஸ் வண்டியில் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள், அவர்களில் இரண்டு பேர் தொப்பையுடன் கொஞ்சம் வயதான தோற்றத்துடன் இருந்தார்கள், இன்னும் ஒருவர் இளம் வயதினரா இருந்தார். அந்த இளம் வயது போலீஸ் காரரை பார்த்தவுடன் என் பக்கத்தில் இருந்தவர் என்னிடம் "இந்த போலீஸ் கார பையனை நான் இதுவரை பார்த்தது இல்லை புதுசா இருக்கிறான்" என்று அவர் சொல்லுவதற்குள் வண்டியில் இருந்து இறங்கிய அந்த இளம் வயது போலீஸ்காரர், கத்தி கொண்டிருந்த ஆசாமியின் கன்னத்தில் "பளார்" என்று ஒன்று வைத்துவிட்டு, வண்டியில் ஏத்துய்யா!!!!! என்று பக்கத்தில் நின்ன போலீஸ் காரர்களுக்கு கட்டளையிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசாமி பிடிக்க வந்த இரண்டு போலீஸ் காரர்களின் கைகளையும் தட்டிவிட்டு ஓட்டம் எடுத்தான். சாலையில் வருவோர்களும் போவோர்களும் ஒரு நிமிடம் அப்படியே அசந்து ஓடுபவனையே பார்த்தார்கள்.
ஆசாமியை பிடிக்க வந்த அந்த இரண்டு போலீஸ்காரர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர். கண்டிப்பாக இவர்கள் விரட்டி சென்றால் பிடிக்க முடியாது, காரணம் அவர்களின் முதுமையும், தொப்பையும். முழித்த இருவரையும் அந்த இளவயது போலீஸ்காரர் ஒரு முறை முறைத்துவிட்டு காலில் இருந்த ஷுவை கழற்றிவிட்டு துரத்தினார் பாருங்கள்.. உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த அளவு மின்னல் வேகத்தில் ஓடினார். போலீஸ்காரர் துரத்துவதை பார்த்த ஆசாமி பக்கத்தில் இருந்த சந்துக்குள் நுழைந்து ஓடினான். நான் உட்பட் சுற்றி நின்ற அனைவரும் அந்த சந்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தோம். உண்மையில் படத்தில் நடப்பது போல் எனக்கு தோன்றியது.
இது நடந்து பத்து நிமிடம் கழித்து, அந்த ஆசாமியின் காலர் சட்டையை பிடித்து கொண்டு போலீஸ்காரர் வந்து கொண்டிருந்தார். இதை பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். ஜீப் பக்கத்தில் கொண்டு வந்து அவனை நிறுத்திவிட்டு இப்ப ஓடுடா!!! பார்ப்போம் என்று சொல்லி கொண்டு காலில் இருந்து கழட்டிய ஷுவை மாட்டினார் அந்த இளம்வயது போலீஸ்காரர். இவ்வளவு நேரமும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வயதான போலீஸ் காரர் "பளார்" என்று ஒன்று கொடுத்து வண்டியில் தள்ளினார் அந்த ஆசாமியை.. வண்டியில் ஏறிய அந்த ஆசாமியின் நிலைமையை நினைத்துக்கொண்டு நான் வீட்டை பார்த்து நடந்தேன்.
குறிப்பு: நகரங்களில் உள்ள சந்துகளில் அறிமுகம் இல்லாமல் ஒருவனை துரத்தி பிடிப்பது என்பது மிக கடினமான காரியம். அன்று அந்த போலீஸ்காரர் அந்த ஆசாமியை துரத்தி பிடிக்காவிட்டால், பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு கேலி பொருளாக மாறியிருப்பார் என்பது மட்டும் உண்மை. கண்டிப்பாக எனக்கு மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த போலீஸ்காரர் அன்று ஹீரோவாகத் தான் தெரிந்தார். இரண்டு நாட்கள் கழித்து தான் அறிந்தேன் அவர் அந்த ஏரியாவிற்கு வந்த புது உதவி ஆய்வாளர் என்று..