Showing posts with label மருத்துவ மனை. Show all posts
Showing posts with label மருத்துவ மனை. Show all posts

Monday, June 27, 2016

அறிவுஜீவிகள் வெட்கப் பட வேண்டாமா?

சமீபத்தில் ஒரு நாள், ஊரில் என்னுடன் படித்த பெண் நண்பர் ஒருவரை அலைப்பேசியில் அழைத்திருந்தேன், அவர் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார், எதற்காக அங்குச் சென்றார் என்பதை விசாரிப்பதற்கு அவகாசம் தராமல், என்னை மாலையில் அலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார்.

மாலையில் என்னை அழைத்து, தம்பிக்கு உடம்பு சரியில்லை, அவனுடைய நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு பிரச்சனையாக இருக்கிறது என்றும் அபாய கட்டத்தில் அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை கொடுப்பதாகச் சொன்னார். என்னால் அவர் தம்பி என்று சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை, திரும்பவும் யாருக்கு உடம்பு சரியில்லை என்று கேட்டேன், காரணம் அவர் சொல்லியிருக்கும் உறுப்புகளுக்கு வரும் வியாதியெல்லாம், எந்தப் பழக்கம் உள்ளவருக்கு வரும் என்பது மருத்துவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் மீண்டும் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்திருக்கிறது என்றும், வீட்டில் உள்ள எவருக்கும் இவனுடைய இந்தக் குடி பழக்கம் சரியாக தெரியாது என்றும் சொன்னார்.

அவர் சொல்லியதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் எனக்கும் அவருடைய தம்பியை நன்றாகத் தெரியும், என்னைவிட ஐந்து வயது குறைவாக இருப்பான். பள்ளியில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன், அப்போது மிகச் சிறுவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் இந்தப் பெண் நண்பரிடம் பேசிய போது, அவருடைய தம்பியை பற்றி விசாரித்தேன், அவன் படிப்பில் பெரிய அளவு ஈடுபாடு இல்லையென்றும் சொந்தமாக தொழில் செய்வதாக சொல்லி நாகர்கோவிலில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு துணிக்கடை வைத்திருக்கிறான் என்று சொல்லியிருந்தார்.

துணிக்கடை வைத்திருக்கும் போது பெரும்பாலும் இரவில் வீட்டிற்குத் தூங்குவதற்கு வருவது இல்லையாம், நண்பர்களுடன் சேர்ந்து கடையில் தூங்கிவிடுவானாம், அதனால் அவனுடைய தொடக்க கால குடிப்பழக்கம்  வீட்டிற்குத் தெரிந்திருக்கவில்லை. இவனுடைய குடிப்பழக்கம் அளவிற்கு அதிகமாகிய பிறகு தான் வீட்டிற்குத் தெரிய வந்திருக்கிறது, இவனைக் கண்டிக்க வேண்டிய அப்பாவிற்கும் குடிப் பழக்கம் உண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் ஓடு வேய்ந்த மண் வீடு இடிந்து விழுந்திருக்கிறது, இப்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறார்களாம். இப்படியான சூழ்நிலையில் தான் இவனுடைய மருத்துவ செலவு வந்திருக்கிறது.

முதலில் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள், அவர்கள் இவனுடைய மோசமான நிலைமையைப் பார்த்துவிட்டு உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைத்து இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்ந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள், உயிருக்கான உத்திரவாதம் ஒரு வாரம் வரையிலும் சொல்லப்படவில்லை. நாள் ஒன்றிற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது.

என்னுடைய நண்பர் காதல் திருமணம் செய்தவர், அவர்  நெல்லையில் இரண்டு குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். தந்தையின் வருமானம் அவருடைய குடிப்பழக்கத்திற்கு சரியாக இருந்தது. மருத்துவமனையில் ஆன பண செலவுகளின் பெரும் பகுதியை இவர் தான் புரட்டியிருக்கிறார். தினமும் ஐம்பதாயிரம் செலவு என்றால் இப்படியான குடும்பத்தால் எத்தனை நாட்கள் கடத்திவிட முடியும், என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார். சிலரின் ஆலோசனைப் படி கேரளாவில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனை மற்றும் (அம்மா) அமிர்தா மருத்துவமனை போன்றவற்றில் விசாரித்திருக்கிறார், எவரும் குடியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இலவச சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள்.

நண்பரின் தம்பியின் மெடிக்கல் ரிப்போர்ட்

குடிப் பழக்கத்தால் 27 வயதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இந்தளவிற்குப் பாதிக்க படுகிறது என்றால் டாஸ்மாக்கில் கொடுக்கப்படும் போதை வஸ்துக்கள் எப்படியானவை என்ற கேள்விகள் வருகிறது. இப்போது டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களின் தரம் யாரால் எவரால் சோதிக்கப்படுகிறது, அதில் இருக்கும் ஆல்கஹாலின் அளவுகள் மற்றும் கெமிக்கல் மிக்சிங் போன்றவை எதன் அடிப்படையில் இந்த மதுபானங்களில் சேர்க்கப்படுகிறது என்பதற்கு வெளிப்படையான தகவல்கள் கிடையாது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட  பிராண்டட் மது பாட்டில்கள் கிடைப்பது அரிது,  அப்படியானால் கிராமங்களில் விற்கப்படும் பாட்டில்கள் சொல்லவே வேண்டாம். கிராமங்களில் உள்ள டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் பிராண்டட் பெயர் சொல்லி கேட்பது இல்லை, 120 ரூபாய், 150 ரூபாய் சரக்கு கொடு என்று தான் கேட்கிறார்கள். அதில் பெயர் போட்டிருக்கிறதா, முத்திரைகள் இருக்கின்றதா என்றெல்லாம் எவரும் சோதித்து பார்ப்பது இல்லை.

முன்பெல்லாம் ஊரில் கள்ள சாராயம் குடித்தவர்களுக்கு கூட ஒரு ஐம்பது வயதிற்கு மேல் தான் உடலில் பிரச்சனைகள் வரும், ஆனால் இன்று அரசாங்கம் விற்கும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை வாங்கிக் குடித்தால் இளம் வயதிலேயே மருத்துவமனையில் சென்று படுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஒருவனுக்கு வியாதியைக் கொடுக்கிற மதுவை வரிந்து கட்டிக்கொண்டு ஆண்டுக்கு டார்கெட் வைத்து வியாபாரம் செய்கிறது இந்த அரசு. ஆனால் அந்த மக்களின் வியாதியைக் குணப்படுத்தும் அரசு மருத்துவமனைகளைக் கண்டு கொள்வதில்லை. கிராமங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் நிலையை இந்தக் கட்டுரையில் விவரித்து விட முடியாது, மருத்துவர்கள் இருந்தால், செவிலியர்கள் இருக்க மாட்டார்கள், செவிலியர்கள் இருந்தால் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் இருந்தால், மருத்துவ முறைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. ஒருவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வராதீர்கள், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஒருவர் என்னிடம் பேசும் போது சாதாரணமாக சொல்லுகிறார்.

இன்று டாஸ்மாக்கின் அமோக விற்பனையால் தான் அரசாங்கம் நமக்கு இலவசங்களைக் கொடுக்க முடிகிறது,  வருட வருடம் மாநிலத்திற்கான நிதிநிலை அறிக்கையைப் போட முடிகிறது, இல்லையென்றால் பெரிய துண்டு விழும் என்று விவாதிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இப்படிச் சொல்ல வெட்கப் பட வேண்டாமா? ஒருவனுடைய மதுப் பழக்கம் அவனை மட்டும் பாதிப்பதில்லை, அவனைச் சார்ந்த குடும்பத்தையும் சீரழிக்கிறது, குடும்பங்கள் தான் சமூகத்தின் ஆணி வேர்கள் என்று வக்கணையாக ஏட்டில் எழுதி வைத்துப் படிக்கிறோம். ஆணி வேர்களுக்கு நஞ்சை உறிஞ்ச கொடுக்கும் டாஸ்மாக் கடைகளால் மட்டும் தான் ஒரு அரசாங்கம் ஆட்சி செய்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்றால் அந்த ஆட்சியின் கீழ் வாழும் நாம் எல்லாம் மாக்கள் தான். பல குடும்பங்கள் மதுவால் அழிந்தாலும் பரவாயில்லை, என்னுடைய இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று சொல்லும் அரசுகள் உண்மையில் "நமக்கான அரசு தான்" என்பதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும்.



ஒரு சுதந்திர நாட்டில், ஒரு குடி மகன் மதுக் குடிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை, அந்த உரிமையை எப்படி நாம் பறிக்க முடியும் என்று சில பேர் கேள்வி கேட்கிறார்கள். குடிப்பழக்கம் என்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை, அவரைச் சுற்றியிருக்கும் சமுகத்தையும் பாதிக்கிறது என்பதை எத்தனைப் புள்ளி விபரங்கள் மற்றும் செய்திகளை எடுத்து வைத்தாலும் இவர்கள் கேட்க போவது இல்லை. குடிப்பழக்கத்திற்கு நாங்கள் அடிமை இல்லை, ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறோம் என்று சொல்லும் கூட்டம் தான் டாஸ்மாக் விடுமுறை நாள் என்று அரசு அறிவித்தால் அதற்கு முந்தின நாளே வாங்கி ஃப்ரிஜில் வைத்துக் கொள்கிறது. குடிப்பழக்கம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை ஒன்றும் இல்லை. ஒழுக்க கேடான செயல்களுக்கு எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம், என் தனிப்பட்ட உரிமை என்று சட்டம் பேசிவிட முடியாது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் இந்த டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று சொல்லும் அறிவுஜீவிகள் கண்டிப்பாக மது பிரியர்களை நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் பார்த்திருப்பார்கள். கண்டிப்பாக மதுப் பழக்கம் உள்ளவர்களிடம் இவர்களுக்கான தொடர்பு அறவே இருப்பது இல்லை. நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு மட்டும் தான் இந்த மாற்று ஏற்பாடுகள் தேவை, இந்த நடுத்தர வர்க்கத்திற்கு திடீரென வேலைப் போய் விட்டால் கூட என்ன செய்வது என்று தெரியாது, அதற்கும் கூட மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது, உறவுகளையும், சமூக அக்கறைகளையும் தொலைத்து நிற்கும் இந்தக் கூட்டத்திற்கு எல்லாவற்றுக்கும் தனியாகவே ஒரு மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது என்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நடந்த இன்போசிஸ் நிறுவனத்தில்  வேலைப்பார்த்து வந்த இளம் பெண்ணின் படுகொலையே சாட்சி.

கிராமத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சொல்லுவது, காலையிலேயே கடையை திறந்து வைத்து ஆசையைத் தூண்டி விடுகிறார்கள், அந்தக் கடைப்பக்கம் செல்லாமல் வேறு பாதையில் செல்லலாம் என்றால், அங்கு நமக்குத் தெரிந்தவர்கள் இருவர் குடிக்க கிளம்புவார்கள், இல்லையென்றால் குடித்துவிட்டு வந்து நம்மிடம் பகடி செய்வார்கள், இப்படியான சூழ்நிலையை எதிர் கொள்வது தான் கடினம் என்று அங்கலாய்க்கிறார்கள். எனது அப்பாவும் குடிப்பழக்கம் உள்ளவர் தான், சில நாட்கள் காலையில் ஆரம்பித்தால் அன்று முழுவதும் அவர் அந்தப் போதை உலகத்தில் தான் இருப்பார். அவரிடம், அப்பா! டாஸ்மாக்கை மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால், அது இல்லையென்றால் குடியா மூழ்கிவிடும், அதோடு தொலைந்தது என்று விட்டு விடுவேன் என்று சொல்லுவார்கள். ஆனால் "குடிக்காமல் இருங்கள்" என்று சொன்னால் "முடியாது" என்று தான் சொல்வார்கள். இவர்களால் குடிக்காமல் இருக்க முடியும், ஆனால் எளிதாகக் கிடைக்கிறது என்ற எண்ணம் தான் இவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாமல் வைத்திருக்கிறது.

என்னுடன் சவுதியில் இருக்கும் சில நண்பர்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது நாள் தோறும் தவறாமல் மாலையில் டாஸ்மாக் சென்று வருபவர்கள் தான். ஆனால் இப்போது அவர்களால் குடிக்காமல் ஒரு வருடங்களுக்கு மேல் இருக்க முடிகிறது. குடிப்பதற்கு எளிதாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, "நீ குடிக்காதே" என்று அவனைக் கட்டுப்படுத்த நினைப்பது எப்படியான மனநிலை என்று புரியவில்லை

வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து குடும்பங்களின் இளம் குருத்துக்களை குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைத் தான் சேரும். இன்றைக்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் டாஸ்மாக் கடையை தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போன்ற காட்சிகளை அமைக்கும் இயக்குநர்களின் கற்பனை வறட்சியும் குடிப்பழக்கத்தை ஆதரித்து அதற்குத் தூபம் போடுவது போல் அமைகிறது..



.

Thursday, June 19, 2014

இந்த மருத்துவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

நேற்று மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. நுழைவுத்தேர்வில் கட் ஆப் மார்க் அதிகம் எடுத்த மாணவர்களின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது. அதில் ஒரு மாணவர் கூறியது இது தான். குழந்தைகளுக்கான மருத்துவத்தை முதன்மையாக எடுத்துப் படித்துக் கிராமத்தில் உள்ள ஏழை எளியக் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் சேவைகள் செய்வேன் என்று கூறினான். நல்ல விசயம், கண்டிப்பாக அவனுடைய அந்தப் பதிலை எவராலும் பாரட்டாமல் இருக்கமுடியாது. நானும் அந்தப் பதிலுக்குத் தலை வணங்குகிறேன். இந்த மாணவன் இப்போது சொல்லுவதைப் பிற்காலத்தில் நடைமுறைப்படுத்தினால் சந்தோசமே!. இதுபோன்ற கருத்து இந்த ஒரு மாணவனின் வாக்குமூலம் அல்ல. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர், பனிரென்டாம் வகுப்பில் மாவட்ட வாரியாக முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் கட் ஆப் மார்க் அதிகமாக எடுக்கும் மாணவ மாணவியர் என்று வருபவர்களில், எவரெல்லாம் இந்த மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் இந்த ஊடங்களுக்குக் கொடுக்கும் பேட்டியில் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்று சொல்லியபடித் தான் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நான் படிக்கும் காலத்திலிருந்து முதலாவதாக வரும் மாணவர், மாணவிகள்கள் ஊடகம் மற்றும் பொது இடங்களில் பேசும் போது, இன்றுவரை மேலே சொன்ன வாக்கியங்களில் ஒரு சில வார்த்தைகள் கூட அல்லது குறைவாகப் போட்டுதான் பேசுகிறார்கள். இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற கிரமாத்துக்காரனின் அம்மாவும், அப்பாவும் "இது பிள்ளை, பாரு! இப்பவே என்னா மாதிரி பேசுது! படிச்சா இப்படிப் படிக்கணும்" என்று நமது காது படவே உள்குத்தாகப் பேசுவார்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள பெற்றோர்கள் கிட்ட நிற்கும் பையனைப் பிடித்து நாலுச் சாத்துச் சத்துவார்கள். இப்படி ஊர்ல உள்ளவனுக்கு எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடியையும் திட்டையும் வாங்கிக் கொடுக்கும் இந்த நல்லவர்களைத் தான் இன்று தேடுகிறேன். நான் படிக்கும் போது சொன்ன மாணவ மாண‌வர்கள் எல்லாம் கண்டிப்பாக இன்று பெரிய மருத்துவர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால் எவருமே கிராமத்தில் வந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ததாக அறிய முடியவில்லை. படிக்கும் போது இப்படிச் சொன்னவர்கள், இன்றும் அதைப் பின்பற்றுகிறார்கள் என்று எவரேனும் அறிந்தால் அவரை எனக்கு அறிவதற்குத் தாருங்கள். அந்த நல்லவரையாவது ஒருமுறை பார்த்தால் மனதுக்குக் கொஞ்சம் மகிழ்வாக‌ இருக்கும். காரணம் நான் இன்றைய‌ மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் பற்றி நிறையப் பதிவுகளில் எழுதிவிட்டேன்.

நான் படிக்கும் போது, எனது வயது ஒத்த உறவினரின் பையன் ஒருவனும் சென்னையில் படித்துக்கொண்டிருந்தான். விடுமுறையில் ஊருக்கு வந்தால் கூடப் புத்தகத்தைக் கீழே வைக்கமாட்டான். அவனும் மேலே சொன்ன வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பதாக‌ அவனுடைய அம்மா ஊரிலிருக்கும் எல்லோரிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். உண்மையில் அவனும் சில வருடங்களில் மருத்துவர் ஆகிவிட்டான். ஆனால் என்ன? ஏழைகளை தேடுவதில் தான் அவன் தனது போக்கை மாற்றிகொண்டான். இங்கு இருக்கும் ஏழைகளுக்குப் போதுமான மருத்துவ‌ர்கள் இருப்பதால், பாவம்! அமெரிக்காவில் போய் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறான்.

மாணவர்கள் படிக்கும் போது இருக்கும் இந்த‌ மனநிலையானது கால ஓட்டத்தில், எதார்த்த‌ வாழ்க்கை என்று வரும்போது காணாமல் போய்விடுகிறது. அது தவறு என்று நான் வாதிட வரவில்லை. இன்றைய சில‌ மருத்துவர்கள் மருத்துவமனைகளில் செய்யும் செயல்கள் அளவில்லாக் கோபத்திற்கு உள்ளாக்கிறது. எந்த நோய்க்கும் குறைந்த பட்ச டெஸ்ட்கள் இல்லாமல் மருந்துகள் கொடுப்பதில்லை. இந்த டெஸ்ட்கள் அவர்களுடைய மருத்துவமனையில் உள்ள லேப்களில் தான் எடுக்க வேண்டும், வெளியில் இருக்கும் லேப்களில் எடுத்தால் அதன் உறுதித் தன்மையை நம்ம முடியாது என்று கையை விரிக்கிறார்கள். அந்த டெஸ்ட்களுக்குக் கொடுக்கும் பணம் வெளியில் இருக்கும் லேப்களை விட அதிகம். அதோடு மட்டும் அல்லாமல் நீங்கள் அந்த‌ டெஸ்டுகளை முடிக்க ஒரு நாள் முழுவதும் அந்த மருத்துவமனையில் காவல் இருக்க வேண்டும். வரும் எல்லா நோயாளிக்கும் இந்த டெஸ்டுகளைப் பரிந்துரைத்தால் லேப்களில் கூட்டம் இல்லாமலா இருக்கும்!.

சமீபத்தில் எனது உறவினர் ஒருவருக்காக, பெயரைச் சொன்னால் அனைவரும் அறிந்துகொள்ளும் அளவில் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவர் எனக்கு உறவில் மாமா முறை வேண்டும். அவர் சவுதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் கட்டிடவேலைச் செய்துவிட்டு ஒரு நாள் முன்னால் தான் ஊருக்கு வந்திருந்தார். வரும்போதே விமானத்தில் கொடுக்கும் மதுவை மூக்கு முட்ட‌ குடித்திருக்கிறார். அதோடு விடாமல் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவுடன் டூட்டி ஃபிரி ஷாப்பில் இருந்து இரண்டு பெரிய புல் பாட்டிலை வாங்கிக்கொண்டு தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் அட‌க்கி வைத்திருந்த குடியை வீட்டிற்கு வந்த ஒரு நாளில் தீர்க்கும் விதமாகக் கொண்டு வந்த இரண்டு பாட்டிலையும் காலிச் செய்திருக்கிறார்.

இரவு பதினொரு மணியிருக்கும் போது எனக்கு அவருடைய வீட்டிலிருந்து போன் வந்தது. மாமி அழுதுகொண்டே விசயத்தைச் சொன்னார்கள். குடித்தவர் எதுவும் சாப்பிடாமல் படுத்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே நெஞ்சைப் பிடித்திக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கியிருக்கிறார். என்னவென்று கேட்டால் சொல்லுவதற்குத் தெரியவில்லை. மாமி கதறிக்கொண்டு எனக்குப் போன் போட்டிருக்கிறார்கள். நான் உடனடியாக டூவீலரில் கிளம்பி சென்று பார்த்தால் நெஞ்சு பாரமாக‌ இருக்கிறது என்று குழறிக்கொண்டே, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு கத்தினார். இரவு நேரம் வேறு அதிகமாக ஆகியிருந்ததால் மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்பும் குறைவாக இருந்தது. எலுமிச்சைப் பழத்தைப் பிளிந்து கொடுத்தும், மோரும் கலக்கிக் கொடுத்து ஒரு வழியாக வாந்தி வருவதற்குச் செய்தோம். வாந்தியெடுத்தவுடன் தலையில் அதிகமாக எண்ணெய் வைத்துக் குளிக்கச் செய்து படுக்க வைத்தேன். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார்.

காலையில் மருத்துவமனைக்குப் போகாலாம் என்று மாமியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் காலை எட்டரை மணிக்கு எல்லாம் நான் மற்றும் மாமா, மாமி மூவரும் மருத்துவமனையில் காத்திருந்தோம். முந்தின நாள் குடித்திருந்த மாமாவின் போதை முழுவதும் தெளியவில்லை. நெஞ்சில் அவ்வப்போது கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தார். நான் டாக்டர் எப்போது வருவார் என்று வரவேற்பறையில் இருக்கும் நர்சுகளிடம் கேட்டேன். ஒன்பது மணிக்கு வந்துவிடுவார் என்றார்கள். சரி! என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம் மணி ஒன்பதையும் தாண்டி பத்து ஆகியிருந்தது. அப்போதும் வரவில்லை. எங்களுக்கு முன்பும் சிலர் வரிசையில் காத்திருந்தார்கள். மாமாவும் நேரம் ஆக ஆக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கினார். பத்தரை மணி இருக்கும் போது, ஒருவழியாக மருத்துவர் வந்தார், வந்தவர் கூடவே ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு வந்தார். இருவரும் மருத்துவர் அறைக்குச் சென்றன‌ர். வெகுநேரம் ஆகியும் வெளியில் இருந்தவர்கள் எவரையும் அழைக்கவில்லை.

மாமா கத்துவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நர்சுகள், எங்களிடம் வந்து முதலில் உங்களைத் தான் அனுப்புவோம், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவரின் அறைக்கும் சென்று விபரத்தை கூறியிருக்க வேண்டும். சிறிது நேரத்தில் மருத்துவருடன் சென்ற பெண்மணி அறையிலிருந்து வெளியேறினார். வெளியில் நின்ற நர்சு, உடனடியாக எங்களிடம் உள்ளே செல்ல அனுமதித்தது. உள்ளே சென்றால் ரெம்ப மரியாதையாக, லேய்! இங்க வா! எதுக்குல இப்படிக் கத்துற! என்று ஒருமையில் மருத்துவர் அழைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் மாமாவிற்கு நாற்பது வய‌திற்கு மேல் இருக்கும், ஆனால் மருத்துவருக்கு என்னுடைய வயது தான் இருக்கும்.

அதோடு விடாமல் மாமியிடம், இவன் கூட எல்லாம் எப்படிக் குடும்பம் நடத்துற! என்று கேள்வி வேறு. என்னை ஒரு பொருட்டாகக் கூட மருத்துவர் மதிக்கவில்லை. எனக்கு எப்படி எதிர்கொள்ளுவது என்று தெரியவில்லை. நான் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதுக்குள், மாமியிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, வெளியில் நின்ற‌ நர்சை அழைத்து ஓர் ஊசிப் போடுவதற்குப் பரிந்துரைச் செய்துவிட்டு. எங்களிடம் வெளியில் சென்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சீட்டில் எழுதிக் கொடுத்தார்.

அந்த மருத்துவமையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் வச‌தியில்லை. அதனால் மருத்துவர் பரிந்துரைத்த ஊசியைப் போட்டுவிட்டு, ஆம்புலன்ஸ் வசதியுடன் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஸ்கேன் சென்டருக்கு சென்றோம். அங்குக் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. எப்படியோ ஒரு வழியாக முடித்துவிட்டு திரும்பவும் அந்த மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக அந்த‌ மருத்துவரை பார்க்க‌ முடியவில்லை. சாப்பிடுவதற்குப் போயிருக்கிறார், வெயிட் பண்ணுங்க! என்று நர்சுகள் பதில் தந்தார்கள். ஏற்கனவே ஒர் ஊசிப் போட்டிருந்ததால் மாமாவின் வலிக் குறைந்திருந்தது.

சிறுது நேரத்தில் அறைக்கு வந்த மருத்துவர் எங்களை அழைத்து, ஸ்கேன் ரிப்போட்டைப் பார்த்துவிட்டுக் கூலாக உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை என்பது எனக்கு முன்பே தெரியும். வெளிநாட்டிலிருந்து நேற்று தானே வந்திருக்கே, அதுக்கு ஒரு செலவு வைக்க வேண்டாமா என்று நக்கலாக பதில் தந்தார். தண்ணியை அடித்தால் மூடிக்கொண்டு படுக்கணும், அதைவிட்டு சும்மா! அங்க வலிக்குது! இங்க வலிக்குது! என்று அடுத்தவன் உயிரை எடுக்கக் கூடாது என்று அட்வைஸ் வேறு.

இந்தப் பெரிய வெளக்கெண்ணை அட்வைஸ் ஹேருக்குப் பத்தாயிரம் ரூபாய் எவருடைய பாக்கெட்டுக்குத் தண்டம் அழவேண்டும்.

மருத்துவமனைக்கு நேரத்திற்கு வர மாட்டீர்கள், அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட நேரம் இருக்கையில் இருக்க மாட்டீர்கள்!. நோயாளிகளிடம் நாகரீகமாக பேசக் கூட மாட்டீர்கள். நோயாளிகளுடன் வந்திருப்பவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மாட்டீர்கள்!. ஒரு நோயாளியை எந்த அளவு பயமுறுத்த முடியுமோ, அந்த அளவு பயமுறுத்தி பணத்தை வாங்கிவிடுவீர்கள்!. உங்களை தான் நாங்கள் கடவுளாக நினைத்து சரணாகதியடைய வேண்டும்!.


.

Friday, June 6, 2014

கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு!

சமீபத்தில் ஹைதிராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வயிற்றுவலி என்று சென்றிருந்தேன். எந்தப் புண்ணியவான் காலேஜில், எவ்வளவு செலவு செய்து டாக்டருக்குப் படித்தார் என்று தெரியவில்லை, வலியோடு படுக்க வைத்து ஸ்கேன் செய்துவிட்டு 8 MM கல் சிறுநீரகத்தில் இருப்பதாகச் சொல்லி உடனடியாக லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லை எடுத்தாக‌ வேண்டும், ரெம்பச் சீரியஸ் என்று கத்தியை இடுப்புக்குக் கீழேயே வைத்திருந்தார். அவர் கையிலிருந்த கத்தியை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. நானும் மனைவியும் மட்டும் தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வீட்டில் நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தே மனைவி மிரண்டு போயிருந்தார். நானும் வலிக்காதது போல எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.

எம்ர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று ஹார்ட் பீட் ரெக்கார்டரை மாட்டிவிட்டு, கையில் பச்சை நரம்பைத் தேடி ஊசியைச் சொருகிய போதே, மனைவின் முகம் வெளறி வியர்வையை ஊற்றத் துவங்கியது. இரண்டு கையிலும், மருந்து செலுத்திய இரண்டு ஊசியைப் போட்டார்கள். அடிவயிற்றில் கனன்று கொண்டிருந்த கனல் நீர்க்கத் தொடங்கியது, சிறுது நேரத்தில் நார்மல் ஆகியிருந்தேன். அருகில் வந்த டாக்டர் உடனே அட்மிட் ஆகிடுங்க, இன்று இரவே ஆபரேசன் பண்ணிவிடலாம் என்றார். வலி அதிகமாக‌ இருந்த நேரம் டாக்டர் வந்து இப்படிச் சொல்லியிருந்தால், நானே அவரிடம் கத்தியை எடுத்துக் கொடுத்து வயிற்றைக் கிழித்து எடுத்துவிடுங்கள் என்று பல்லை இறுக கடித்திருப்பேன். ஆனால் வலியானது அட‌ங்கியிருந்ததால் ஆபிஸ் நண்பர்களுக்குப் போன் செய்தேன். மனைவியும் வீட்டிற்குப் போன் செய்திருந்தார். வீட்டில் உள்ளவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம், வலியைக் குறைத்துவிட்டு மாத்திரை வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துவிடுங்கள். இங்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள்.

திரும்பவும் மனைவியும் நானும் டாக்டரிடம் சென்று பேசினோம், மாத்திரையில் கரைக்க முடியாதா? என்று கேட்டோம். அதற்கு அவர் 8 MM கல் என்பது பெரிய அளவு, அதை மருந்து மற்றும் மாத்திரையால் கரைப்பது முடியாத காரியம் என்றும், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களின் சிறுநீரகத்திற்குத் தான் பிரச்சனை என்று கொளுத்திப்போட்டார். இருந்தாலும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, ஒரே நாள் வலியில் இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? என்பது தான். டாக்டர் என்னைப் பயமுறுத்தியது போதாது என்று நர்சு மற்றும் உதவி டாக்டர் இருவரும் சேர்ந்து, சின்ன ஆபரேசன் தான் சார்!. ஒன்றும் பிரச்சனையில்லை, முப்பதில் இருந்து முப்பந்தைந்தாயிரம் தான் செலவு ஆகும், இரண்டு நாட்கள் தான் பெட்டில் இருக்க்க வேண்டும். இப்போது நீங்கள் சரி! என்று சொன்னால் மாலையில் ஆபரேசன் செய்துவிடுவார்கள். நீங்கள் நாளைக்கே வீட்டிற்குச் சென்றுவிடலாம்! என்று அவர்கள் அந்த மருத்துவமனையில் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக‌ என்னிடம் பேசினார்கள்.

சிறிது நேரத்தில் ஆபிஸிலிருந்து நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த நண்பர், சார்! 8 MM கல்லுக்கு எல்லாம் லேப்ரோஸ்கோப்பிக் ஆப‌ரேசன் பண்ண வேண்டாம். எனது மாமியாருக்கும் இதே போல் தான் இருந்தது, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருந்தில் கரைத்துவிட்டார்கள் என்றும் அதனால் நீங்கள் இங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம் என்றும், அப்படியே ஆபரேசன் செய்ய வேண்டுமானால் ஊரில் போய்ச் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கும், மனைவிக்கும் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தார்.

இவர்களிடம் சென்று ஆபரேசன் செய்ய வேண்டாம்! என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று நினைத்துகொண்டு, டாக்டர்! நாங்கள் இருவரும் இங்குத் தனியாக இருக்கிறோம், ஆபரேசன் செய்தால் என்னைக் கவனித்துக்கொள்ள மனைவிக்குச் சிரமமாக இருக்கும், அதனால் ஊரில் சென்று செய்து கொள்கிறோம் என்று எதார்த்தத்தைச் சுட்டிப் பேசினேன். அவரும் சரியென்று தலையை ஆட்டி, எவ்வளவு சீக்கிரம் பண்ணுகிறீர்களே, அவ்வளவு நல்லது! என்று பக்கத்தில் இருந்த நர்சை அழைத்து, எங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார்.

டாக்டர் அறையை விட்டு வெளியே வந்த எங்களிடம், நர்ஸ், சார்! நாங்க, எதனால் நீங்கள் ஆபரேசன் பண்ணவில்லை? என்பதற்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் அதில் பணம் இல்லை என்று எழுதியிருக்கிறேன். ஒரு கையெழுத்துப் போட்டுவிடுங்கள் என்றார். அவரைப் பார்த்துச் சிரிக்கத் தான் தோன்றியது. டிஸ்சார்ஜ் ரிப்போட்டில் பெரிதாக நாங்கள் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறோம், நாங்கள் ஆபரேசன் செய்வதற்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்றும் எழுதிக் கையெழுத்து வாங்கினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குத் திரும்பவும் அடிவயிறு வலிப்பது போன்ற பிரம்மை வர துவங்கியது.

ஒரு வழியாக மருத்துவமனையில் உள்ளவர்களைச் சமாளித்து வீட்டிற்கு வந்தவுடன் மஸ்கட்டில் இருக்கும் ஜெனரல் மேனேஜருக்குப் போனில் அழைத்து விசயத்தைக் கூறினேன். அவர் ஹைதிராபாத்தில் வேறு மருத்துவமனைக்குச் சென்று கன்சல்ட் பண்ண வேண்டுமானாலும் நான் உதவி செய்கிறேன் அல்லது ஊருக்கு போக வேண்டுமானாலும் சென்று வா. முதலில் உடம்பை கவனித்துக் கொள், வேலைகள் எல்லாம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றார். வீட்டில் உள்ளவர்களும் ஊருக்கு வந்துவிடு என்று அழைத்தனர். உடனடியாகத் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் இரண்டு டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்துவிட்டேன். அவசர அவசரமாகக் கிளம்பி ஊருக்கு வந்தாயிற்று. மறுநாள் காலையில் உறவினர் ஒருவரின் மூலமாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிம்ஸ் மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி அங்குச் சென்று யூராலஜி டாக்டருக்காகக் காத்திருந்தோம்.

இங்குக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிச் சொல்லுவது அவசியமாகிறது. ஒருமுறை அப்பாவிற்குத் திடிரெனக் கால் மூட்டுவலி வந்தது, ந‌டக்கும் போது ஒரு பக்கமாகத் தாங்கலாகத் தான் ந‌டந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைகளில் சென்று காட்டியபோது, ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டுக் கால் மூட்டுகள் இரண்டும் அதிகமாகத் தேய்ந்து உள்ளது. நீங்கள் உடனடியாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பயம் அதிகமாக இருந்தது. உடனடியாக உறவினர் ஒருவரின் மூலம் இந்தக் கிம்ஸ் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்றிருந்தோம், சரியாக ஒரு மாதம் மாத்திரைகள் கொடுத்து, காலுக்குச் சில உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு டாக்டர் பரிந்துரைத்திருந்தார். சரியாக ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைத்தது. இப்போது அப்பா முழுமையாகக் குணமாகிவிட்டார். நான் இந்தக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை தேவையில்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைப்பது இல்லை. மேலும் பணமும் அதிகமாகப் பிடுங்குவது இல்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூட்டம் மட்டும் அதிகமாக இருக்கும். அதனால் இங்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் முழுமையாக‌ நீங்கள் செலவு செய்ய வேண்டியதுவரும்.



எனது டோக்கன் எண் டீவியில் வந்தவுடன் டாக்டரை சென்று சந்தித்தோம். ஹைதிராபாத்தில் இருந்து கொண்டு சென்ற ஸ்கேன் மற்றும் ரிப்போட்டுகள் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தவர், இப்போது வலியிருக்கிறதா? என்று மட்டும் கேட்டார், நான் இப்போது வலியில்லை என்றேன். பின்னர் இரத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்‍-ரே ஆகியவற்றை எழுதி, இவைகளைப் பண்ணிவிட்டு ரிப்போட்டுடன் வாருங்கள் என்றார். இவைகளை முடித்து ரிப்போர்ட் கிடைப்பதற்கு மதியம் ஆகியிருந்தது. மதியதிற்கு மேல் சென்று டாக்டரை பார்த்தோம். எல்லா ரிப்போட்டுகளையும் பார்த்துவிட்டு "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்றார். ஏம்ப்பா! மெத்த படித்த, கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படும் டாக்டர்களே! எல்லா நோயாளியின் மனமும் இந்த ஒற்றைச் சொல்லுக்குத் தான் ஏங்குகிறது. இந்த உண்மை என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும். காசு, பணம், துட்டு, மணி.. என்று மட்டும் யோசிப்பதால் இந்த வார்த்தைகள் உங்கள் வாயினிலிருந்து வருவது இல்லை. "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்ற வார்த்தையின் பலமே என்னுடைய சிறுநீரகக் கல்லை கரைந்திருந்தது.

ஹைதிராபாத் மருத்துவமனையில் கொடுத்திருந்த எந்த மருந்தையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி, முப்பது நாட்களுக்கு இவர் புதிதாக‌ மாத்திரையும் மருந்தும் கொடுத்துவிட்டு இவைகள் முடிந்தவுடன் திரும்பவும் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார். இந்த கல் பிரச்சனை மூன்று நாளில் முழிபிதுங்க வைத்துவிட்டது. விமான டிக்கட் செலவு என்று பணத்தையும், அறுவைச் சிகிச்சை என்று மனத்தையும் காலி செய்திருந்தது.

சிறுவயதில் அம்மா சாப்பிடுவதற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களிடம் பசியில்லை என்று சொன்னால் அவர்களின் பதில் இதுவாகத் தான் இருக்கும் "கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு". இன்றைக்குச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் ஆயில் இருக்கா? கொழுப்பு இருக்கா? என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும் கடைசியில் கல்லாகத் தான் தேங்குகிறது.

இன்று எதைச் சாப்பிடுகிறோம்? எப்படிச் சாப்பிடுகிறோம்? கண்டிப்பாகச் சிந்திகக வேண்டியிருக்கிற‌து.

.

Tuesday, March 25, 2014

முளைக்கும் ஞானப்பல்_பிடுங்குவதைத் தவிர வேறு வ‌ழியில்லை!!!

போன வருடத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் எனக்குக் கடுமையான‌ பல்வலி, என்னால் தாங்க முடியவில்லை. கீழ் தாடையின் பின் கடவாய் பல்லில் உள்ள‌ ஈறு நன்றாக வீங்கி குத்தல் வேறு. முகத்தில் ஒரு பக்கம் கன்னம் நன்றாக‌ வீங்கி விட்டது. தாடையின் அடியில் கழலை வேறு கட்டி விட்டது. ஈறு வலி பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துக் காலையில் உப்பால் நன்றாக வாயை கொப்பளித்து விட்டு, ஒரு கப் பால் மட்டும் அருந்திவிட்டு, ஆபிஸுக்குக் கிளம்பிவிட்டேன். என்னால் வாயை கூட நன்றாகப் பிளந்து பேச முடியவில்லை, எதையும் சாப்பிடவும் முடியவில்லை. ஒரு வேளை சிங்கப் பல் முளைக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் எனக்குச் சில வருடங்களுக்கு முன்பே அந்தப் பல் முளைத்து விட்டது. அதனால் எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை. எனக்குச் சொத்தை பல் இதுவரையிலும் எதுவும் இல்லை. அதனால் அது சம்பந்தமான பிரச்சனையாகவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் தாங்க முடியாத வலி. நேரம் ஆக ஆக வலி அதிகமாகி கொண்டே இருந்தது.

ஆபிஸில் உள்ள‌ நண்பர்கள் ஒவ்வொருவரும் மருத்துவ மனைக்குப் போகச் சொன்னார்கள். நான் இருக்கும் ஹைதிராபாத் ஏரியாவில் எந்தத் திசையில் திரும்பினாலும் பல் மருத்துவமனைகளைத் தான் பார்க்க முடியும். எந்த மருத்துவமனைக்குப் போவது என்பதில் எனக்கும் நண்பர்களுக்கும் குழப்பம், நானும் இங்குள்ள பல் மருத்துவமனைகளுக்குப் போனது கிடையாது.

என்னுடைய கன்னம் வீங்கி இருப்பதும், நான் வாய் திறக்க முடியாமல் பேசுவதையும் பார்த்த‌ தெலுங்கு நண்பர் ஒருவர், நீங்க என்னுடன் வாங்க, பக்கத்தில் இருக்கும் பல் மருத்துவமனைக்கே போய் விடலாம் என்றார். சரி என்று நானும் அவருடன் டூவிலரில் அமர்ந்தேன். நாங்கள் கிளம்பிய நேரம் மதிய நேரமாக‌ இருந்ததால் பெரும்பாலன கிளீனிக்குகள் மூடி இருந்தன. கொஞ்ச தூரம் சென்ற பின்பு, ஒரு டென்டல் கிளீனிக் திறந்திருப்பதைப் பார்த்தோம், வண்டியை பார்க் செய்துவிட்டு கிளீனிக்குள் நுழைந்தோம். முன் அறையிலேயே, கம்யூட்டர் வைத்த மேஜையின் முன்பாக‌ பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்தவுடன் மே ஐ ஹெல்ப் யூ சார் என்றார். நண்பர் என்னைக் காட்டி, இவருக்கு பல்வலி டாக்டரை பார்க்க வேண்டும் என்றார். பெயர், வயது, முகவரி, மொபைல் எண் என்று அனைத்தையும் கேட்டு விட்டு, முந்நூறு ரூபாய்க் கொடுங்கள் என்றார். பணத்தைக் கொடுத்தவுடன், அதை வாங்கி மேஜையில் போட்டு மூடிவிட்டு, பிரிண்டரை ஆன் செய்து என்னுடைய தகவல்களை, அவர்கள் கிளீனிக் பெயரிட்ட பேப்பரில் பிரிண்ட் செய்து, ஒரு பைலில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டார், என்னைச் சைகைக் காட்டி பின்னால் வர சொல்லி, பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

நானும் உள்ளே நுழைந்தேன், அங்கு முப்பது வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இருந்தார், வெள்ளை கோட் மாட்டியிருப்பதால் அவர் தான் டாக்டராக இருக்க முடியும் என்று எண்ணிகொண்டேன். அவர் முன்பாக இருந்த நாற்காலியில் என்னை அமர சொன்னார். நானும் அமர்ந்தேன், என்ன பிரச்சனை என்பதைக் கேட்டவர் கையில் ஒரு போர்க் போன்ற இரும்பு கத்தி ஒன்றையும், சிறிய டார்ச் லைட்டையும் கையில் எடுத்து வாயை பிளக்க சொன்னார். என்னால பெரிய அளவில் வாயை திறக்க முடியவில்லை. அவர் எழுந்து நின்று போர்க் போன்ற கத்தியால் தாடையை அழுத்தி பார்த்து விட்டு, அணிந்திருந்த கோட்டின் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து எவரிடமோ தெலுங்கில் பேச தொடங்கினார். அவர் பேசியதை வைத்து பார்க்கும் போது, அவருடைய சீனியராகத் தான் இருக்க வேண்டும். பேசி முடித்து விட்டு சார் உங்களின் பல்லுக்கு ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும். இப்போது சீனியர் டாக்டர் இங்கு இல்லை, ஈவ்னிங் வந்தால் ஸ்கேன் எடுத்துவிட்டு சீனியர் டாக்டரிடம் நீங்கள் கன்சல்ட் பண்ணலாம் என்றார். மேலும் உங்க வலிக்கு ஒரு மாத்திரை எழுதியிருக்கிறேன், ஒன்று மட்டும் போடுங்கள், நான்கு மணி நேரம் உங்களுக்கு வலி இருக்காது என்றார். என்ன பிரச்சனை என்று கேட்டேன், அதற்கு அவர் நம்ம ஊரு படங்களில் வரும் டாக்டர்களில் டயலாக் ஆன, எதுவும் ஆபரேசன் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும் என்பது போல், ஸ்கேன் எடுத்தால் தான் எதுவும் சொல்ல முடியும் என்றார். நானும் வெளியே வந்து விட்டேன்.

என் பின்னாலேயே முன் அறையில் இருந்த‌ பெண்மணியும் வந்தார், வந்தவர் மாத்திரை எழுதிய சீட்டை கொடுத்துவிட்டு, ஈவ்னிங் எப்ப சார் வருவீங்க, அப்பாயின்மென்ட் போட்டு வைக்கவேண்டும் என்றார். ஐ வில் டிரை டு கம் யேர்லி என்று சொல்லிவிட்டு நண்பனுடன் நடந்தேன். எல்லா டாக்டர்களும் எழுதும் புரியாத மருந்து சீட்டு போல் இல்லாமல் மாத்திரையைப் படிக்க முடிந்தது. "கேட்ரால்" (ketorol) என்று மாத்திரையின் பெயர் எழுதியிருந்தது, பல்வலி என்று சொன்னவுடன் எனது நண்பர் ஒருவரும் இந்த மாத்திரையின் பெயரை சொல்லித்தான் வாங்கிச் சாப்பிட சொல்லியிருந்தார். டாக்டரின் கன்சல்ட் இல்லாமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம் என்று மற்ற நண்பர்கள் சொல்லியதால் இங்கு வர வேண்டியதாயிற்று.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரையை வாங்கி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன். ஒரு மாத்திரையைப் போட்ட சிறிது நேரத்திலேயே பல்வலி குறைந்து விட்டது,. ஆனால் பல் ஈறுகளின் வீக்கம் குறையவில்லை. காலையில் இருந்து ஏதும் சாப்பிடத‌தால் கடுமையான பசி வேறு, ஒய்ப் கொடுத்த பயிறு கஞ்சியைக் குடித்து ஒரு தூக்கத்தைப் போட்டேன். சரியா நான்கு மணி நேரம் தான் அந்த மாத்திரை வேலை செய்தது. மாலை ஆறு மணியளவில் மீண்டும் கடுமையான பல்வலி ஆரம்பித்தது. ஒய்ப், காலையில் நான் சென்ற‌ டென்டல் கிளீனிக்கு திரும்பவும் போகலாம் என்றார். எனக்கோ, சாதாரண‌ பல்வலிக்கு ஸ்கேன் என்பது கொஞ்சம் ஓவராகப் பட்டது. பக்கத்தில் இருக்கும் வேறு கிளீனிக் போகலாம் என்று நான் சொன்னேன், அவரும் சரி என்று இருவரும் கிளம்பினோம்.

நான் வசிக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மெயின் ரோட்டில் குறைந்தது பத்து டென்டல் கிளீனிக்காவது இருக்கும். நாங்கள் இருவரும் நடந்து மெயின் ரோட்டை அடைந்தோம். அந்த ரோட்டின் முதல் வரிசையிலேயே இருந்த கடைகளில் முதல் மாடியில் வெள்ளை நிற போர்டில் புளுக் கலரில் எழுதப் பட்ட டென்டல் கிளீனிக்கை நோக்கி நடந்தோம். அந்தக் கிளீனிக் உள்ளே நுழைந்தவுடன் ரிசர்ப்சன் என்று எதுவும் இல்லை, விசாலமான‌ ஒற்றை அறை கொண்டது அதில் பாதியில் ஒரு ஸ்கீரின் தொங்க விடப்பட்டு, அந்த அறை இரண்டாகப் பிரிக்கப் ப‌ட்டிருந்தது. ஸ்கிரீன் முன்னால் ஒரு சாய்வு நாற்காலியில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் மட்டும் இருந்தார். அவர் முன்னால் ச‌ற்று உயரம் அதிகமான ஸ்டூல் போன்ற இருக்கை இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு ரோபட்டின் கை போன்ற ஒரு மெஷின் இருந்தது. எங்களைப் பார்த்தவுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் எழுந்து, ஐ அம் டாக்டர் ... என்று கை கொடுத்து விட்டு, ஸ்டூல் போன்று எதிரில் இருந்த‌ இருக்கையில் என்னை அமர சொன்னார்.

அவர் சொன்ன பெயரும், வெளியில் தொங்கவிடபட்டிருந்த போர்டில் இருந்த பேரும் ஒன்றாக இருந்தது. என்ன பிரச்சனை என்று என்னைக் கேட்டார், நானும் சொன்னேன். என்னோட கன்சல்டன் பீஸ் முந்நூறு ரூபாய் சார், அப்புறமா கொடுங்க என்று சொல்லிவிட்டு, ஒரு வெள்ளை நிற‌ அப்பிளிக்கேசன் தாளில் என்னுடைய பெயர், வயது, முகவரி, மொபைல் எண் என்று எழுதத் தொடங்கினார். முன்பு எப்போதாவது இது போல் பல்வலி வந்திருக்கிறதா, அடிக்கடி வருமா என்ற‌ கேள்விகளையும் கேட்டு வைத்தார். நான் எல்லாவற்றிற்கும் இல்லை ஒற்றை வரியில் பதில் சொன்னேன். இவரும் கையில் கத்தி போன்ற இரும்பை வைத்துக் கொண்டு வாயில் நுழைத்து டார்ச் லைட் கொண்டு பார்த்தார். பரிசோதனைச் செய்துவிட்டு, உங்களுக்கு ஞானப்பல்(Wisdom Tooth) தான் முளைக்கிறது, ஆனால் அதைச் சரியாக வெளியே வர விடாமல் தாடையில் உள்ள தசை தடுக்கிறது அதனால் தான் உங்களுக்கு வலியும் இருக்கிறது, எதற்கும் ஒரு சிறிய‌ எக்ஸ்‍ரே எடுத்து பார்த்து விடலாம் என்றார். அந்தக் கிளீனிக்கில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் இவர் எக்ஸ்ரே தானே சொல்லுகிறார் என்று பக்கத்தில் அமர்ந்திருந்த ஒய்ப்பை பார்த்துவிட்டு சரி என்று தலையாட்டினேன். சார் எக்ஸ்ரேவிற்கு ஒரு நூறு ரூபாய் தனியாக அப்புறம் பே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு ரோபோ கை போன்று இருந்த மெசினை எனது பக்கமாகக் கொண்டு வந்து வாயினுள் ஒரு சிறிய சதுர வ‌டிவ பிலிம் அட்டையை வாயில் திணித்தார். என்னால் வாயையே முழுமையாகத் திறக்க முடியவில்லை, அதில் இந்தச் சதுர அட்டையை ஈறு வீங்கி இருக்கும் பக்கமாக அழுத்தும் போது வலி தாங்க முடியவில்லை. நான் அ என்று கத்தினால் பக்கத்தில் இருக்கும் ஒய்ப் ஆ என்று கத்துவார், அதற்குப் பயந்தே வலியை சமாளித்தேன். ஒரு வழியாக எக்ஸ்ரே எடுத்துக் கழுவி விட்டார்.

நான் முதல் முறையாகப் பல்லுக்கான எக்ஸ்ரேவை இப்போது தான் பார்க்கிறேன். கடைவாய் பல் இரண்டு மட்டும் தான் அதில் தெரிகிறது. வேறு எதுவும் எனது கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது டாக்டர் என்னுடைய சீட்டின் பின் புறத்தில் படம் வரைய தொடங்கினார். சார் உங்க ஞானப்பல் இப்படித் தான் முளைக்க வேண்டும் என்று ஒரு படம் வரைந்தார், ஆனால் உங்கள் பல் இப்படி முளைக்காமல் உள் நோக்கி முளைக்கிறது என்று இன்னொரு படம் வரைந்தார். அதில் முன்பு வரைந்தற்கு எதிர் திசையில் பல்லின் நீளத்தை நீட்டி வரைந்திருந்தார். இப்படி நீட்சியாக இருக்கும் பல் தாடையில் உள்ள தசையைச் சேதப் படுத்துகிறது, அதனால் தான் உங்களுக்கு வலி அதிகமாக இருக்கிறது என்று தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் சொல்லி முடித்தார்.

இதற்கு என்ன தான் தீர்வு என்று கேட்டேன், அந்தப் புதிதாக‌ முளைக்கும் ஞானப்பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் டாக்டர். இப்போதே பல்லைப் பிடுங்க முடியாது, உங்களின் வலியை முதலில் குறைக்க வேண்டும் அதன் பிறகு தான் பல்லைப் பிடுங்க வேண்டும், நான் இப்போதே சில மாத்திரைகளை எழுதி தருகிறேன், அவைகளைச் சாப்பிடுங்கள், வலி முழுமையாகக் குறைந்த பிறகு வாருங்கள் பிடுங்கி விடலாம், ஒரு பல் பிடுங்குவதற்கு நான் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் சார்ஜ் செய்வேன் என்றும், அப்புறம் உங்கள் ப‌ற்களில் கறைகள் இருக்கின்றது அதை இப்போதே கிளீன் செய்கிறேன், அதற்கும் ஓர் அறுநூரு ரூபாய் சார்ஜ் ஆகும் என்று சொல்லிக்கொண்டே, என் பதில் எதையும் எதிர்பார்க்காமல் சீட்டில் மருந்தை எழுத தொடங்கினார். நானும் ஒய்ப்பும் என்ன செய்வது என்று தெரியாமல் விளித்துக் கொண்டிருந்தோம்.

மருந்து எழுதிவிட்டுத் தலையை நிமர்த்த டாக்டரிடம், அந்தப் பல்லைப் பிடுங்காமல் ஏதும் செய்ய முடியாதா? என்று கேட்டேன். இல்லை சார், உங்களுக்கு நிரந்தரமான தீர்வு வேண்டுமானால் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் டாக்டர். அவர் சொல்லும் போது, இப்போது இருந்த வலி மறந்து, இனி பல் பிடுங்கினால் வரும் வலியை இப்போதே நினைக்கத் தொடங்கிருந்த‌ என்னைப் பார்த்து, எதுக்கு சார் நீங்க பயப்படுறீங்க, நான் இன்றைக்குக் கூட ஒருவருக்குப் பல் பிடுங்கியிருக்கிறேன், நாளைக்கும் எனக்கு ஓர் அப்பாயின்மென்ட் இருக்கு, திஸ் இஸ் ஜஸ்ட் லைக் தட் சர்ஜரி என்றார்.

சற்றும் யோசிக்காமல், டாக்டர் நான் இந்த வார இறுதியில் ஊருக்குப் போகிறேன், அங்குப் போய்ப் பல்லைப் பிடுங்கிக் கொள்கிறேன், நீங்கள் இப்போது வலியைக் குறைப்பதற்கான‌ மருந்து மட்டும் எழுதிக் கொடுங்கள் என்றேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன், இல்ல சார் நீங்க நினைப்பது போல் பெரிய சர்ஜரி இல்லை என்றார். நானும் விடாமல் "ஆத்தா வையும் வீட்டுக்குப் போகனும், காசு கொடு" என்பது போல் பேசியதைப் பார்த்து விட்டு சார் அப்படினா நீங்க ப‌ல்லை கிளீன் மட்டும் பண்ணிக்குங்க என்றார். இல்ல டாக்டர் என்னால் வலியைக் கட்டுபடுத்த முடியவில்லை, இப்போது நீங்கள் கிளீன் செய்தால் என்னால் தாங்கிக்கொள்ள‌ முடியாது. வலி குறைந்த பிறகு நாளைக்கு வேண்டுமானால் வருகிறேன் என்றேன். ஒரு வழியாக "நாளைக்கு வாருங்கள்" என்று ஐந்நூரு ரூபாய் பில்லை போட்டுக் கையில் கொடுத்து விட்டு, மருந்து சீட்டையும் கொடுத்தார்.

கையில் இருந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு மருந்து சீட்டை வாங்கிக் கொண்டேன், மருந்து சீட்டில் இரண்டு மாத்திரைகள் எழுதியிருந்தார். வெளியில் வந்து யோசித்துப் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் நான்கு மணிநேரம் வலி தாங்கும் மாத்திரையைச் சாப்பிடலாம், இந்த மாத்திரைகளை வாங்க வேண்டாம் என்று ஒய்ப் சொல்ல நானும் சரி என்று, வீட்டிற்குத் திரும்பினோம். போகும் வழியில் மொபைல் போன் அடித்தது, எடுத்து யாரென்று கேட்டால் மதியம் போய் இருந்த கிளீனிக்கில் இருந்து கால் பண்ணுறோம், எப்ப சார் ஸ்கேன் எடுக்க வர்றீங்க என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்று மனதிற்கு நினைத்துக் கொண்டே பல்வலி சரியாகிவிட்டது என்று சொல்லி மொபைலை கட் செய்தேன்.

ஊரில் இருக்கும் அம்மா முதற்கொண்டு எவரிடமும் இதுவரையிலும் எனக்குப் பல்வலி என்று சொல்லவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் போனைப் போட்டு அம்மாவிடம் சொன்னேன், அவர்கள் கடவாய் பல் முளைக்கும் போது இரண்டு நாட்கள் வலி இருக்கத் தான் செய்யும், அதற்காகப் பல்லை எல்லாம் பிடுங்க கூடாது என்றும், இந்த வயதில் பல்லைப் பிடுங்கினால் தலைவலி வரும் என்று சொல்லி, சில பாட்டி வைத்தியங்களையும் சொன்னார். மிதமான வெந்நீரில் உப்பு போட்டு அடிக்கடி வாய்க் கொப்பளிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, அப்படியே பல் வலி அதிகமாக இருந்தால், இரண்டு நாட்கள் ஆபிஸில் லீவு சொல்லிவிட்டு இங்கு வந்து விடு, நம்ம ஊரில் உள்ள டாக்டரிடம் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

இரவு ஒரு மாத்திரையைப் போட்டுவிட்டுத் தூங்கிவிட்டேன், இடையில் சரியாக அதிகாலை ஒரு மணியளவில் திரும்பவும் பல் வலி, உடனே இன்னொரு மாத்திரையை எடுத்துப் போட்டுவிட்டு தூங்கி விட்டேன். காலையில் எழுந்த போது பெரிய அளவில் வலி இல்லை, ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் வீங்கய படியே இருந்தது. வாயின் உள்ளும் பல் ஈறு வீங்கி இருந்தது. அம்மா சொன்ன படியே வெந்நீரில் உப்பு போட்டு வாயைக் கொப்பளித்து, பல்லை துலக்கினேன். நேரம் ஆக ஆக வலி திரும்பவும் அதிகரித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, நேற்று என்னோடு வந்த தெலுங்கு நண்பரிடம் இருந்து போன் வந்தது. இப்ப பல் வலி எப்படி இருக்கிறது, திரும்பவும் அந்தக் கிளீனிக்கு போனீங்களா? ஸ்கேன் எடுத்தாதீர்களா? என்று கேட்டார். நான் நேற்று நடந்தவைகளைக் கூறினேன். அவர் உடனே, ஸ்டீபன் நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம், நாம் கோட்டியில்(கோட்டி என்பது ஹைதிராபாத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம்) இருக்கும் பெரிய டென்டல் கிளீனிக்குப் போகலாம், நீங்க ரெடி ஆகுங்க, நான் உங்களை வீட்டில் வந்தே அழைத்துச் செல்கிறேன் என்றார். திரும்பவும் முதல்ல இருந்தா!!! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினேன். ஒய்ப்க்கு நான் போவதில் விருப்பம் இல்லை, ஆனால் நானும், என் முகமும் இருக்கும் நிலையைப் பார்த்துவிட்டுப் போங்கள் என்றார்.

அந்தப் பெரிய‌ பல் மருத்துவமனையின் நுழைவாயிலை பார்த்தவுடனே, இது நமக்கான மருத்துவமனை இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். ஆனால் கூட்டி வந்த நண்பரின் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாமல் உள்ளே நுழைந்தோம். "நாங்க இருக்கோம் வாங்க" என்று இப்போது அழைக்கும் மருத்துவமனைகளின் தோரனை அங்கேயும் இருந்தது. வரவேற்பறையில் என்னுடைய முழுத் தகவல்களையும் சேகரித்துவிட்டு நானூறு ரூபாய் என்றார்கள். அதைக் கொடுத்தவுடன், ரூம் நம்பர் நான்கில் போய் டாக்டரை பாருங்கள் என்றார்கள். நான் அங்குப் போவதற்குள் என்னுடைய பைல் டாக்டரின் கையில் இருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டுவிட்டு, வரிசையாகச் சில டெஸ்ட்களை எழுதினார். முதலில் ஸ்கேன் எடுக்க வேண்டும், அப்புறம் பல்லை கிளீன் செய்ய வேண்டும், கடைசியாக‌ இரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொன்றாக முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். என்னைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லாத குறையாக ஒவ்வொரு இடமும் வழி காட்டினார்கள்.

முதலில் ஸ்கேன் எடுத்துவிட்டார்கள், பிறகு இரத்த பரிசோதனைக்குத் தேவையான இரத்தையும் எடுத்துவிட்டு, பல்லை கிளீன் செய்யும் அறைக்கு அனுப்பினார்கள். அதிக அழுத்தத்தில் கெமிக்கலை பீய்ச்சி அடித்துப் பல்லை கிளீன் செய்யும் போது மட்டும் அதிகமான கூச்சம் இருந்தது. கிட்ட தட்ட அரைமணி நேரம் நடந்து. எல்லாம் முடித்த பிறகு அனைத்து ரிப்போட்டும் டாக்டரின் அறைக்குச் சென்றுவிட்டது. ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து என்னிடம் காட்டி வலதுப் பக்கம் கடவாயில் முளைத்திருக்கும் இரண்டு பல்லும் தாடையில் உள்ள தசையை அழுத்துகிறது, எனவே இரண்டு பல்லையும் பிடுங்கிவிடலாம் என்றார். நேற்று சென்று வந்த‌ டாக்டர் ஒரு பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னதுக்கே தலைதெறிக்க ஓடி வந்தேன் இங்க என்னடானா இரண்டு பல்லைப் பிடுங்க வேண்டுமாம், டாக்டரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.



இரண்டு பல்லையும் பிடுங்கிவிட்டு, அதில் தசைகளை அழுத்தாத அளவு புதுப் பல்லை பிளான்டிங் செய்துவிடலாம் என்றார். பிளான்டிங் முறையை எனக்கு அவர் விளக்கியதில் இருந்து நான் புரிந்து கொண்டது இது தான், என்ன வென்றால் முதலில் காங்கிரிட் போட வேண்டும் பின்பு அதில் மேற்பூச்சு பூச வேண்டும் பின்பு பட்டி பார்க்க வேண்டும் கடைசியாகச் சில மாதங்கள் கழித்து வர்ணம் பூச வேண்டும் என்பதை மெடிக்கல் டெக்னிக்கல் வார்த்தையில் சொன்னார்.

ஒவ்வொன்றுக்கும் ஆகும் செலவையைம் பட்டியல் இட்டார், பல்லைப் பிடுங்கி விட்டு, புதுப் பல்லை நடுவதற்கு(Dental implant surgery) 15000 ரூபாய் ஆகும் என்றும், பின்பு ஓர் ஆறு மாதம் கழித்து பல்லின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்ய‌(Implant restoration) இன்னும் ஒரு 15000 ரூபாய் என்றும், அப்புறம் கடைசியாக ஒரு வருடம் கழித்து வேக்சிங்(Waxing) செய்வதற்கு 10000 ரூபாய் ஆகும் என்றும், இந்த மூன்றையும் செய்து விட்டால் உங்கள் பல்லுக்குப் பிரச்சனை என்பதே வராது என்றும் சொன்னார்.

வலி குறைவதற்கு மாத்திரை எழுதி இருக்கிறேன், தினமும் வாயை கொப்பளிக்க ஒரு மொத் வாஷ் லிக்யூர் எழுதியிருக்கிறேன். நாளைக்கு ஆபரேசனுக்கு டைமை ரிசர்ப்சனில் புக் செய்து கொள்ளுங்கள் என்று என்னைப் பார்த்தார்.

இவரிடமும் பல் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லையா என்று அப்பாவியாகக் கேட்டேன். பெர்மனட் சொலுசன் வேண்டுமானால் நீங்கள் நான் சொன்ன முறையைக் கையாளுவது தான் நல்லது என்று முடித்தார். அதற்கு மேல் அங்கு இருக்க எனக்கு விருப்பம் இல்லை. வரவேற்பறையில் மொத்தமாக இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் பில் போட்டுக் கையில் கொடுத்தார்கள். நாளைக்கு மதியத்திற்கு மேல் தான் ஆபரேசன் தியேட்டர் காலியாக உள்ளது, உங்களுக்கு ஓகே வா சார் என்று ஒரு பெண்மணி கேட்டார், "நான் இங்குத் திரும்ப வந்த தானே நீங்க ஆபரேசன் பண்ணுவீங்க" என்று மனதிற்குள் நினைத்து விட்டு, அப்படியே புக் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னுடைய பைலை வாங்கிக் கொண்டு வெளியில் திரும்பி நடந்தேன். அப்போது என்னுடன் வந்த‌ நண்பன் இங்கேயே மெடிக்கல் ஷாப் இருக்கிறது என்றார். ஓ அந்த வருமானம் கூட அடுத்தவனுக்குப் போகக் கூடாதா? என்று இங்கேயே வைத்திருக்கார்களா என்று மனதில் நினைத்துக் கொண்டு மெடிக்கல் ஷாப்பை நோக்கி நடந்தோம்.

இரண்டு நாட்கள் என்னைப் படுத்திய பல்வலி மறுநாள் காலையில் தூங்கி எழும் போது துளியும் இல்லை. கன்னத்தில் இருந்த வீக்கமும் மறைந்திருந்தது. அதற்கு மேலும் நான் பல்லைப் பிடுங்க போயிருப்பேன் என்று நினைக்கிறீங்களா?... 

எனக்கு இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, பல் சம்பந்தமாக‌ இதுவரையில் எனக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. இரண்டு நாட்கள் முன்பு நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த சிக்கன் பிரியாணியில் உள்ள லெக் பீஸை கடிக்கும் போது, அந்த எலும்பில் உள்ள மஜ்ஜை பல்லின் இடையில் அடைத்துக் கொண்டு வலிக்கிறது. இதற்காக இங்க உள்ள டாக்டரிடம் போனால் என்ன ஆகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

.
Related Posts with Thumbnails