Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, June 25, 2014

எங்கள் ஊர் ஓணப்பந்தாட்டம்_யாருக்குத் தெரியும்?

நான் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களால் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய இரண்டு விளையாட்டுகளில் ஒன்று கபடி இன்னொன்று ஓணப்பந்தாட்டம். இந்த இரண்டு விளையாட்டுகளும் மிகவும் வெறித்தனமாக விளையாடப்படும். இவைகளுக்குத் தீனிப் போடும் வகையில் ஊரில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் இந்த இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் பக்கத்து ஊர்களில் இருந்து அணிகள் வரவழைக்கப்பட்டு அதிகமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். சும்மா ஊருக்குள்ள இருக்கிறவன் இரண்டு அணிப்பிரித்து விளையாடினாலே பந்தயம் அனல் பறக்கும். இதில் வெளியூரில் இருந்து அணிகள் வந்து விளையாடினால் சொல்லவே வேண்டாம். ஊர்களில் பண்டிகையின் போது நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், இந்த இரண்டு விளையாட்டுகள் மட்டும் தனியாகக் கவனம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், எல்லா விளையாட்டுப் போட்டிகளும் முடிந்தபிறகு இறுதியில் தான் இந்தக் கபடியையும் ஓணப்பந்தாட்டத்தையும் ந‌டத்துவார்கள்.

கபடி விளையாட்டின் சுவாரஸ்யத்தைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த ஓணப்பந்தாட்டம் என்ற பெயரே பலருக்குப் புதிதாக இருக்கலாம். எனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைத் தவிர வேறு எங்கும் நான் இந்த விளையாட்டை, விளையாடியதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஓணம் + பந்தாட்டம் என்று பிரித்து வைத்துப் பார்த்தால் தமிழருக்கான விளையாட்டாகத் தெரியவில்லை, கேரளாவின் விளையாட்டாகத் தெரிகிறது. ஆனால் நான் இணையத்தில் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளை வைத்துத் தேடியப் போது கேரளாவில் ஓணப் பண்டிகையின் போது விளையாடப்படும் ஒரு விளையாட்டுடன் சில விதிமுறைகளும் ஒத்துப் போகிறது. அந்த விளையாட்டின் பெயர் தலைப்பந்துகழி. கேரளாவில் கிராமங்களில் விளையாடும் நடன் பந்துகழி என்ற‌ இன்னொரு விளையாட்டும் இந்த ஓணப்பந்தாட்டத்துடன் ஒத்து போகிறது. அதன் யூ‍_டியூப் வீடியோவை இணைத்துள்ளேன்.



கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததாலோ என்னவோ, அவர்களின் வழக்குச் சொற்கள், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சிலவற்றை இங்குப் பார்க்கமுடியும். மேலும் எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் கட்டிடவேலையில் சிறப்பாகச் செய்யும் திறன் பெற்றவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைச் செய்வதற்கு முன்பு கேரளாவில் தான் வேலைச் செய்து வந்தார்கள். இப்போதும் எங்கள் ஊரிலிருந்து பலர் கேரளாவில் கட்டிடவேலைகளைக் காண்டிராக்ட் எடுத்துச் செய்து வருகிறார்கள். இவ்வாறு கேரளாவில் காண்டிராக்ட் எடுத்து வேலைச் செய்பவர்கள் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் இருந்து தான் ஆட்களைக் கொண்டு சென்று வேலையை முடித்துக் கொடுப்பார்கள். கட்டிடவேலைச் செய்பவர்களில் மகன்கள் பள்ளியில் கிடைக்கும் இரண்டு மாத கோடைவிடுமுறையில் அப்பாவுடன் கேரளாவிற்குச் சென்று கையாள் வேலைச் செய்து அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்குமளவிற்குச் சம்பாதித்துவிடுவார்கள். பல இளைஞர்களின் பால்யகாலம் கேரளாவில் தான் கழிந்திருக்கிறது. அவர்கள் தான் இந்த ஓணப்பந்தாட்டத்தை எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. விளையாட்டைப் பற்றிய வரலாற்று ஊகத் தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன். இனி இந்த‌ விளையாட்டுமுறை பற்றிச் சிலவற்றை எழுதுகிறேன்.

இந்த விளையாட்டு இரண்டு அணிகளாகப் பிரித்து விளையாட வேண்டும். ஓர் அணிக்கு ஆறு முதல் ஏழு பேர் இருப்பார்கள். முதல் அணியானது பந்தை அடித்தாடும் போது எதிர் அணியானது தடுத்தாட வேண்டும். இந்த விளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பந்து மெல்லிய‌ காட்டன் துணியால் வலுவாகச் சுற்றப்பட்டு வெளியில் நூலால் பின்னப்படும். கைக்கு அடக்கமான அளவில் இருக்கும். இந்தப் பந்தை எவர் உருவாக்கினாலும் அவரது வீட்டில் உள்ள காட்டன் லுங்கி ஒன்று கண்டிப்பாகக் காணாமல் போகும். இந்த விளையாட்டுக்கு என்று அளவுகளை வரையறைச் செய்து களம் அமைப்பது இல்லை. இருக்கும் இடத்தில் நீள, அகலமாகக் கோடுகள் போட்டு இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பக்கம் அடித்தாடும் அணியும், மறுபக்கம் தடுத்தாடும் அணியும் நிற்கும். நீள‌ வாக்கில் இரு புறங்களிலும் ஒன்றரை அடி விட்டு பவுள் கோடுகள் போடப்பட்டிருக்கும்.

எந்த அணி அடித்தாட வேண்டும்? தடுத்தாட வேண்டும் என்பதை முதலில் டாஷ் போட்டுதான் முடிவுச் செய்யப்ப‌டும். அடித்தாடும் அணியில் உள்ள முதல் வீரர் களத்தின் ஒரு முனையில் நின்று, பந்தைத் தனது கையால் ஓங்கி அடித்து மறுபக்கம் இருக்கும் தடுத்தாடும் அணியின் பக்கம் அனுப்புவார். தடுத்தாடும் அணியில் உள்ள வீரர்கள் அதைக் காலால் மிதித்து எதிர் அணியின் பக்கம் திருப்புவார்கள். எவர் ஒருவர் பவுள் கோட்டிற்கு வெளியில் அடிக்கிறாரோ அல்லது எதிர் அணியால் அடிக்கும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் விட்டாலோ அவுட் என்று அறிவிக்கப்படும். அடித்தாடும் அணியில் உள்ள வீரர் பந்தை அவுட் பண்ணினால் தடுத்தாடும் அணி இப்போது அடித்தாடும் அணியாக இருந்து பந்தை கையால் அடித்து எதிர் அணிக்கு செலுத்தும். அடித்தாடும் அணியால் மூன்று முறை நேர்த்தியாக அடித்து எதிர் அணியின் தடுப்பாட்டத்தைச் ச‌மாளித்து வெற்றிகரமாக முடித்தால் அது ஒரு கழி என்று அழைக்கப்படும். மொத்தமாக ஏழு கழிகள் உண்டு.

1) ஒற்றை
2) இரட்டை
3) முறுக்கி
4) தாளம்
5) காவடி
6) நிலை (இது மட்டும் காலால் உதைத்து அடிக்கப்படும்)
7) பட்டம்

எந்த அணி முதலில் இந்த ஏழு கழிகளையும் முடிக்கிறதோ, அந்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டில் உள்ள சில சுவரஸ்யங்கள்: 

#அடித்தாடும் அணியால் அடிக்கப்பட்ட பந்தைத் தடுத்தாடும் அணி வீரர்கள் காலால் எதிர் கொள்ள மூன்று வகையான உத்திகளைக் கையாளுவார்கள். 

மடக்கை: காலை மடக்கிப் பந்தை உதைப்பது. இந்த முறையில் பந்தை எதிர் கொண்டால் கண்டிப்பாக எதிர் அணியால் அந்தப் பந்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகக் கடினமாகக் காரியம்.(வாலிபாலில் கட்‍ ஷாட் அடிப்பது போல) 

குத்து: எதிர்வரும் பத்தை முன்னங்காலால் குத்து/கோரி விடுவது(இவ்வாறுச் செய்வதால் பந்து மேலே எழுப்பும். எதிர் அணியினர் அதைக் கேட்ச் பண்ணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், கேட்ச் பண்ணிவிட்டால் அவுட் என்று அறிவிக்கப்படும்) 

சேப்பை: காலை ஒருகளித்துத் தட்டிவிடுவது(கட்டுக்குள் அடங்காத தாக்குதலைச் ச‌மாளிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துவார்கள்)

#காலால் உதைக்கும் போதோ அல்லது கையால் அடிக்கும் போதோ பந்து மேல் எழும்பி எதிர் அணியினரால் பிடிக்கப்பட்டால் அவுட் என்று எடுத்துக்கொள்ளப்படும். 

#இவ்வாறு எதிர் அணியில் உள்ள வீரரால் பிடிக்கப்படும் போது மற்ற வீரர்களில் கைகள் முட்டிக்குக் கீழ் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வீரரும் கையை உயர்த்திப் பிடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு கைகளை உயர்த்தினால் பிடித்த பந்து செல்லுபடியாகாமல் அடுத்த அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும். 

#அதேபோல் காலால் ஒருவர் பந்தை உதைக்கும் போது அந்த அணியில் உள்ள வேறு எவரும் கால்களைக் கொண்டு சென்று முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் எதிர் அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டு மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியது தான். நான் இங்கு எழுதியிருப்பதைப் படித்துக் குழப்பமடைந்தால், அந்தக் குழப்பம் என்னுடைய எழுத்தினால் விளைந்தக் குழப்பமே அல்லாமல் விளையாட்டின் குழப்பம் அல்ல. கண்டிப்பாக உடல்வலிமையும், உத்திகளைக் கையாளும் முறையும் இதற்குத் தேவை. துணியால் பந்து இறுகச் சுற்றப்படுவதால், அதை அடிக்கும் போது காலும் கையும் வலி எடுக்கும். தரையில் கால் மோதி நகங்கள் சிதைவதும் உண்டு.

இந்த விளையாட்டை நான் ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது மிகவும் விரும்பி விளையாடுவேன். எங்களுக்கு என்று ஒரு மைதானம் இருந்தது. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று ஒரு டீம் எப்போதும் இருக்கும். கிரிக்கெட் போர் அடிக்கும் போது இரு அணியாகப் பிரித்து இந்த ஓணப்பந்தாட்டத்தை விளையாடுவோம். இந்த விளையாட்டை மிகவும் அனுபவித்து விளையாடுவோம். பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இந்த விளையாட்டைப் போட்டியாக நடத்துவதால் இன்னும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இன்றைய நிலையில் எங்கள் ஊரில் இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று பள்ளிப் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் கூடத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கே இந்த விளையாட்டின் பல விதிமுறைகள் மறந்துவிட்டது. அப்போது என்னுடன் விளையாடிய நண்பர்களிடம் கேட்டுதான் இந்தப் பதிவை எழுதி இங்குப் பதிந்துவைக்கிறேன்.

அவனவன் வாழ்க்கையே தொலைந்துவிட்டது! என்பதற்கே கவலைப்படவில்லை, இதில் விளையாட்டுத் தொலைந்துவிட்டது என்று வந்துவிட்டான் என்று நீங்கள் புலம்புவது எனது காதுகளுக்குக் கேட்கிறது.

.

.

Monday, March 31, 2014

சுயத்தை இழப்பது_கிரிக்கெட்டா?.. வீரர்களா?..

பால்ய வயதில் உண்ணும் நேரத்திற்கு உண்ணாமலும், படிக்கும் நேரத்தில் படிக்காமலும் கிராமத்தில் ஊர் ஊராகக் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றியது இப்போதும் மன‌தில் நிழலாடுகிறது. சொல்லும் படியாகப் பெரிய அளவில் விளையாடவும் தெரியாது. ஆனாலும் அதன் மீதான மோகம் அளவிடமுடியாதது. எனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் தான் நாங்கள் விளையாடும் மைதானம் இருந்தது. அந்த மைதானம் அமைந்திருக்கும் இடம் எனது நண்பனுடையது. புல் வளர்ந்துக் காடாக இருந்த இடத்தைத் திருத்தி விளையாடுவது போல் உருவாக்கியது அந்த நண்பனும் நாங்களும் தான்.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடம் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடுவது அந்தக் கிரிக்கெட் மைதானத்திற்குத் தான். எங்கள் நண்பர்களுக்குள் இரண்டு அணியைப் பிரித்துத் தான் பெரும்பாலும் விளையாடுவோம். ஓர் அணியில் நான் இருந்தால் மற்றொரு அணியில் எனது அண்ணன் இருப்பான். இப்படியாகத் தான் இரண்டு அணியிலும் நண்பர்கள் அனைவரின் அண்ணன் தம்பிகள் என்று பிரிந்து நின்று விளையாடுவோம். சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கக் கூட‌ ஒருவரும் இருக்க மாட்டர்கள். ஆனாலும் வெற்றித் தோல்விக்கு அவ்வளவு போராட்டம், சண்டை நடக்கும். உடன் விளையாடுபவர்கள் நம்முடைய‌ அண்ணன் தம்பி மற்றும் நண்பர்கள் என்ற எண்ணம் சிறிதும் இருப்பது இல்லை. நான் இருக்கும் அணி வெற்றி பெற‌ வேண்டும் அது மட்டும் தான் மனதில் ஓடும்.

ஒரு வைய்டு பாலுக்கு அவ்வளவு கடுமையான வாக்குவாதம் நடக்கும். ரன் அவுட்டாக இருந்தால் சொல்லவே வேண்டாம், கட்டி பிடித்துச் சண்டை மட்டும் தான் நடக்காது, மற்ற எல்லாம் நடந்து விடும். இரண்டு அணியில் உள்ளவர்களும் சண்டையிட்டு கூச்சல் போடுவதை எங்களுடன் விளையாடாமல் வெளியில் இருந்து யாராவது பார்த்தால் இவர்கள் இனிமேல் ஒருவர் ஒருவரோடு பேசவே மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். மறுநாளே அணியை மாற்றி விளையாடும் போது நேற்று சண்டை போட்ட இருவரும் சேர்ந்து அடுத்த அணியில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு கூச்சல் இடுவார்கள். இவ்வாறு போடும் சண்டை போலி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அந்த நிமிடத்தில் "ந‌மது அணியின் வெற்றி" என்று ஒன்று மட்டுமே எல்லோர் மன‌தில் ஆழமாக பதிந்து இருக்கும்.

இப்படி சண்டையிட்டு விளையாடும் அணி வெற்றியடைந்து விட்டால் என்ன நடந்துவிடும், பெரிதாக ஒன்றும் இருக்காது. அந்த மைதானத்தை விட்டு வெளியில் வரும் வரை அல்லது வீட்டிற்கு போகும் வரையிலும் எதிர் அணையில் உள்ளவர்களைப் பார்த்து ஒரு குத்தல் பேச்சுடன் கூடிய‌ ஏளன புன்னகை, எங்களுக்குள் ஒரு வெற்றிக்கான புன்னகையின் பகிர்வு மற்றும் மனதிற்குள் ஏற்படும் ஒரு வகையான திருப்தி. இதை அந்த நிலையில் இருந்து அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்டிப்பாக ஒரு பெட் மேட்ச் இருக்கும். பெட் மேட்ச் விளையாட நாங்கள் பெரும்பாலும் பக்கத்து ஊருக்கு தான் போவோம். அதற்கும் காரணம் இருக்கு, சொந்த ஊரில் விளையாடி எதிர் அணியிடம் தோற்றால் அவ்வளவு கவுரவமாக இருக்காது என்பதால் எதிர் அணியின் ஊருக்கே சென்று விடுவது. இங்கும் எதிர் அணியில் விளையாடுபவர்கள் எங்களுடன் பள்ளியில் ஒன்றாக‌ படிப்பவர்களாகத் தான் இருப்பார்கள். பள்ளி நாட்களில் நட்பாக இருந்து ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டு ந‌டப்பவர்களாகத் தான் இருப்போம். ஆனால் இன்றைய‌ இந்தப் பெட் மேட்சில் ஒருவர் ஒருவரை எதிரியாகப் பார்த்து தான் விளையாடுவோம். அப்போது என்னுடைய அணி வெல்ல வேண்டும், நான் நன்றாகப் பவுலிங் மற்றும் பேட்டிங் பண்ண‌ வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருக்கும்.

பெட் மேட்சிக்கான தொகை பத்து அல்லது அதிகமாகப் போனால் இருபது ரூபாய் தான் இருக்கும். அதற்காக நடக்கும் போராட்டம் என்பது பெரிதாக இருக்கும். இப்படியான மேட்சிகளில் நிற்கும் அம்பயர்களின் பாடு பெரும் பாடாக இருக்கும். அவுட் கேட்டு நிற்கும் பவுலரை மட்டும் அல்லாமல் கூடச் சேர்ந்து கூச்சல் போடுபவர்களையும் சமாளிக்க வேண்டும். ஒரு ரன்னிற்கு உயிரே போய்விட்டதாக எண்ணி சண்டையிட்டுக் கொள்வோம். பவுலிங் பண்ணும் போது எதிர் அணியில் பேட்டிங் செய்பவன், பள்ளியில் ஒரே பெஞ்சில் அருகில் இருப்பவனாகத் தான் இருப்பான். ஆனாலும் கொலை வெறியில் பாலை பவுண்ஸ் பண்ணுவதும் நடக்கும். நாங்கள் விளையாடும் இடம் டீவியில் இப்போது கண்பிக்கும் புல் வளர்ந்த சமதளமான பரப்பாக இருக்காது. சரல் மண் கொட்டப்பட்டு மேடும் பள்ளமாக இருக்கும். ஆங்காங்கே வேலியில் கற்றாழை முள்ளும் நட்டு வைத்திருப்பார்கள். அந்த வேலிகள் தான் பவுண்டரி எல்லையாக இருக்கும். ஜான்டி ரோட்ஸ் பிடிக்கும் கேட்சுகளைப் போல‌ முயற்சி செய்து பார்க்கும் போது சரல் மண் முட்டியை சிராய்க்கும். பவுண்டரியை தடுக்க நினைக்கும் போது வேலியில் இருக்கும் கற்றாழை முள் காலை பதம் பார்க்கும்.

நாங்கள் ஊர் ஊராக இதுபோல் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றும் போது, வீட்டில் உள்ளவர்க‌ள் திட்டுவது மட்டுமல்லால் சில‌ சம‌யம் உதையும் தருவார்கள். அர்ச்சனை நடக்கும் போது, அப்பா கேட்கும் முதல் வார்த்தை வெற்றியா?.. தோல்வியா?.. என்று தான். வெற்றி என்றால் திட்டு குறைவாகக் கிடைக்கும், தோல்வி என்றால் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். இப்படித் தோற்பதற்காக ஊர் ஊராகப் போக வேண்டுமா?.. என்று கேவலமாக அம்மா திட்டுவார்கள். இதுவே வெற்றிக்காகப் போராடும் ஊக்கத்தைத் தரும்.

அன்றைக்கு நடக்கும் பெட் மேட்சில் ஜெயித்துவிட்டால் கையில் பட்ட சிராய்ப்புகளும், காலில் ஏறிய முள்ளின் வலியும் துளியும் இருக்காது. அன்று முழுவதும் விளையாட்டின் வெற்றி களிப்பே முகத்தில் இருக்கும். ஆனால் தோல்வி என்றால் வீட்டில் போனவுடன் காயத்திற்கான மருந்தை கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

இவ்வளவு ஏன்!! இப்போதும் கூட ஆபிசில் இருக்கும் நண்பர்கள் அணி பிரித்துக் கிரிக்கெட் ஆடினால் கூட எந்த அளவிற்குச் சண்டை போட முடியுமோ, அவ்வளவு தூரம் சண்டையிடுவதும் நடக்கும். நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து போகும் போது, ஜாலியாக‌ இரண்டு மணி நேரம் விளையாட போகிறோம், அதில் எதற்காக வாக்குவாதம் செய்ய வேண்டும், இன்றைக்கு எந்தச் சண்டையும், எவருடனும் போட கூடாது என்று மனதில் நினைத்து போனாலும் களத்தில் அவ்வாறு இருக்க முடிவதில்லை. பவுலிங் போடும் போது இல்லாத வைய்டை வைய்டு என்று சொன்னால் என்னையறியாமல் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதைத் தடுக்கமுடிவதில்லை. இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் விளையாட்டுக் களத்தில் "வெற்றி" என்ற ஒன்றை மட்டுமே மனம் விரும்பும் என்பதை விளக்குவதற்குத் தான்.

விளையாட்டு மைதானத்தில் களம் இறங்குபவர்களையும், போர்களத்தில் எதிரிகளை எதிர்த்து போராடுபவர்களையும் மட்டும் தான் "வீரன்" என்று அழைக்கிறோம். வீரன் என்பவன் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெற்று தருபவனாகவும் அல்லது அதைப் பெறுவதற்குத் தன்னலம் கருதாமல் போராடுபவனாக‌ மட்டுமே பார்க்க படுகிறான். நம்முடைய பண்டைய‌ இலக்கியங்களில் "வீரன்" என்பதற்குப் பல விளக்கங்களையும் பலரின் வீரச் செயல்களையும் பார்க்க முடியும். போரில் புறமுதுகுக் காட்டும் வீரன் எவ்வாறு அழைக்கப்பட்டான் என்பதையும், வீரப் பண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் எட்டப்பனுக்கான இடம் என்ன என்பதும் அனைவரும் படித்திருப்போம்.



இன்று நடக்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் ஊழல்களையும், பெட்டிங் போன்ற‌ செய்திகளைப் படிக்கும் போது விளையாட்டு என்பது எப்படியான வியாபாரமாக மாறி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதில் விளையாடும் வீரர்களும் தங்களின் சுயத்தை முழுவதும் தொலைத்து நிற்பதாகத் தான் பார்க்க முடிகிறது. தான் நேசிக்கும் விளையாட்டில் வரும் வெற்றியை தான் சுவாசிக்காமல் எதிர் அணிக்கு பணத்துக்காக‌ விலை பேசுகிறான் என்றால் அவனுடைய மனநிலை எத்தகையதாக இருக்கும்?.. இன்றைய சமூகத்தில் மீதான அவனுடைய எண்ணவோட்டம் என்னவாக‌ இருக்கும்?..

கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்ற‌ துறைகளில் யாரெல்லாம் நுழைய கூடாதோ அவர்களின் கூடாரமாகவும், கைப்பாவைகளாகவும் தான் இந்தத் துறைகள் இன்று இயங்குகின்றன‌. இவைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் வாய் மூடி மவுனிக்கிறது.

இந்த ஐபில் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும், ஜெயித்தாலும்...

காசு..
பணம்..
துட்டு..
மணி மணி.. 

கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. பணம் வருகிறது என்றால் சுயம் என்ன?.. ஆடையை இழந்து அம்மணமாக வாழவும் தயார்...


.

Thursday, March 4, 2010

புதிர் விளையாட்டு_குடும்ப‌த்தை காப்பாற்றுங்க‌ள்.

இது ஒரு விளையாட்டு புதிர். இந்த‌ GAME லிங்கை அழுத்தி பார்த்தால் ஒரு வ‌லைத்த‌ள‌ம் வ‌ரும். அதில் இந்த‌ விளையாட்டின் ப‌க்க‌த்தை இணைத்துள்ளேன். அந்த‌ வ‌லைத்த‌ள‌ம் என‌து ந‌ண்ப‌ருடைய‌து. என்னுடைய‌ பிளாக்கில் இந்த‌ SWF பார்மெட்(Format) பைலை என்னால் இணைக்க‌‌ முடிய‌வில்லை. என‌வே தான் என‌து ந‌ண்ப‌ரின் இணைய‌ த‌ள‌த்தில் இணைக்க‌ வேண்டிய‌தாற்று. தெரிந்த‌வ‌ர்க‌ள் யார‌வ‌து பின்னுட்ட‌த்தில் சொன்னால் ரெம்ப‌ ம‌கிழ்ச்சிய‌டைவேன்.

இந்த‌ விளையாட்டின் விதிமுறையை சொல்லிவிடுகிறேன்.

1)இந்த குடும்ப‌த்தை இவ‌ர்க‌ள் நிற்கும் ப‌க்க‌த்தில் இருந்து ம‌றுப‌க்க‌ம் அழைத்து செல்ல‌ வேண்டும்‌

2)அரிக்கேன் விள‌க்கு ரெம்ப‌ முக்கிய‌ம். இர‌வு நேர‌ம் என‌வே விள‌க்கு இல்லாம‌ல் பாதையை க‌ட‌க்க‌ முடியாது.

3)ஒரே நேர‌த்தில் இர‌ண்டு பேர் ம‌ட்டும் தான் பாதையை க‌ட‌க்க‌ முடியும்.

4)ஒவ்வொருவ‌ரும் பாதையை க‌ட‌க்க‌ முறையே கீழ்க‌ண்ட‌ நேர‌த்தை எடுத்து கொள்கிறார்க‌ள்.

வ‌ல‌மிருந்து இட‌ம் அவ‌ர்க‌ளை A, B, C, D, E, F என்று வைத்து கொள்வோம்.
A - 1 நிமிட‌ம்
B - 3 நிமிட‌ம்
C - 6 நிமிட‌ம்
D - 8 நிமிட‌ம்
E - 12 நிமிட‌ம்

5)இர‌ண்டு பேர் பாதையை க‌ட‌க்கும் போது, க‌ட‌க்க‌ அதிக‌ நேர‌ம் எடுத்து கொள்ப‌வ‌ரின் நிமிட‌ம் விளையாட்டின் நேர‌மாக‌ எடுத்து கொள்ள‌ப்ப‌டும்.(அதாவ‌து மெதுவாக‌ ந‌ட‌ப்ப‌வ‌ரின் நேர‌ம்)

6)இது தான் முக்கிய‌மான‌து. விள‌க்கு 30 நிமிட‌ம் தான் எரியும். அத‌ன் பிற‌கு அணைந்து விடும். விள‌க்கு அணைந்து விட்டால் பாதையை க‌ட‌க்க‌ முடியாது. என‌வே 30 நிமிட‌த்துக்குள் அனைவ‌ரும் பாதையை க‌ட‌க்க‌ வேண்டும்.


இது விதிமுறையில் கிடையாது. ஆனால் சிறு த‌க‌வ‌லுக்காக‌ த‌ருகிறேன். பாதையை க‌ட‌ந்த‌ இருவ‌ரில் ஒருவ‌ர் தான் விள‌க்கை எடுத்து சென்று ம‌றுப‌க்க‌ம் உள்ள‌வ‌ர்க‌ளை கூட்டி வ‌ர‌வேண்டும்.

உங்க‌ளுட‌ய‌ ப‌தில்க‌ளை பின்னுட்ட‌த்தில் தெரிவிக்க‌வும்..ப‌திலை ச‌ரியாக‌ சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு நாஞ்சிலான‌ந்தாவின் த‌ரிச‌ன‌த்துக்கு இல‌வ‌ச‌ டிக்கெட் அனுப்ப‌ப‌டும்.

விளையாட்டின் சுவார‌சிய‌த்தை கூட்டுவ‌த‌ற்காக‌ ச‌ரியான‌ ப‌தில் பின்னூட்ட‌ங்க‌ளை உட‌ன‌டியாக‌ பிர‌சுரிக்க‌ மாட்டேன்.
Related Posts with Thumbnails