Showing posts with label விவ‌சாயி. Show all posts
Showing posts with label விவ‌சாயி. Show all posts

Monday, February 24, 2014

அடுத்தவன் தாலியை அறுத்து வயிரு வளர்ப்பவர்கள்!!!

கிராமங்களில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து உதவுவதில் கூட்டுறவு வங்கிகள் தான் உதவியாக இருக்கின்றன. இதில் கொடுக்கப்படும் விவசாயக் கடன்களுக்கு அரசு மானியங்களும் கொடுத்து வருகின்றது, சில சமயம் வறட்சியின் காரணமாக‌ ஆளும் மத்திய‌ அரசால் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுப்படி செய்வதும் உண்டு. மேலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் வசதியும் உண்டு. கிராமங்களில் பொரும்பாலன விவசாயிகளுக்கு இந்த நகைக்கடன் வசதி பெரும் உதவியாக இருப்பது உண்மை. விவசாயிகள் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் பூச்சு மருந்துகள் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது குழந்தைகளில் படிப்பு செலவாக இருந்தாலும் முதலில் அவர்கள் வீட்டில் உள்ள தங்க‌ நகைகள் தான் அடகுக்கடைக்குப் போகும். பெரும்பாலும் கடன் வாங்கும் விவசாயியாக இருந்தால் அவனிடம் இருக்கும் தங்க நகை என்பது மனைவியின் தாலி செயினாகத் தான் இருக்கும்.

விவசாயிகள் பெரும்பாலும் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைப்பதற்குக் காரணம் வட்டி குறைவாக இருப்பது ஒன்று மற்றொன்று இந்த வங்கியின் மீதான நம்பிக்கை. தனியார் வங்கிகளில் நகைகள் பேரில் பணம் அதிகமாகத் தந்தாலும் வட்டி வீதம் அதிகம். மேலும் தனியார் வங்கிகளின் மீதான நம்பிக்கையும் குறைவு. முன்னறிவும் இல்லாமலே நகைகளை ஏலத்தில் விட்டுவிடுவார்கள், நாம் போய் ஏன் முன்னறிவுப்பு செய்யவில்லை என்று கேட்டால் நாங்கள் அனுப்பினோம் உங்களுக்கு வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது, முகவரி நீங்கள் தவறாகத் தந்து இருப்பீர்கள் என்று நம் மீதே தவறை திருப்புவார்கள். இந்த மாதிரியான தில்லுமுல்லுகள் கூட்டுறவு வங்கிகளில் நடப்பது இல்லை. ஆனால் புதுவிதமான் திருட்டு இங்கு நடப்பதாக அதில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கும் நகைகளில் சிறு பகுதியை வெட்டி எடுத்து விட்டு திரும்பவும் அதை அழகாகத் தெரியாத அளவிற்குப் பத்த வைத்து கொடுத்து விடுகிறார்களாம். இந்தத் திருட்டை மோதிரம், கம்மல் போன்ற சிறிய நகைகளில் செய்வது இல்லை, செயின்களில் தான் செய்கிறார்களாம். கிராமங்களில் செயின் என்றால் பெரும்பாலும் தாலிச் செயினாகத் தான் இருக்கும் அல்லது மகள்களில் கல்யாண‌த்திற்குச் சேர்த்து வைத்திருப்பவையாக இருக்கும். தனது கழுத்திலோ, அல்லது தனது மகள்களில் கழுத்திலோ போட்டு அழகு பார்க்க கூட விவசாயத் தொழில் அவர்களுக்குப் பெரும்பாலும் கைக் கொடுப்பது இல்லை. அதனால் அதன் எடை குறைந்தாலோ அல்லது அளவு சிறிய‌தாக இருந்தாலோ பெரும் அளவில் அவர்களுக்குச் சந்தேகம் வருவது இல்லை. மேலும் இந்தத் திருட்டை கொஞ்சம் வெவரமானவர்களிடம் செய்வது இல்லையாம். பெரும்பாலும் விவசாயக் கூலி வேலை செய்பவர்களிமும், கணவன்மார்கள் வெளிநாட்டில் இருக்கும் பெண்களிடமும் தான் இந்த திருட்டு வேலையைப் பார்க்கிறார்களாம். யாரவது சந்தேகம் வந்து பிரச்சனைகள் பண்ணினால் வெளியில் தெரியாமல் பணம் கொடுத்து சரி செய்கிறார்களாம். இந்தத் திருட்டு வேலைக்கு வங்கியில் வேலை பார்க்கும் உயர் அதிகார்களும் உடந்தை. அவர்களுக்கும் சேர வேண்டிய‌ பங்குச் சரியாக‌ போய்ச் சேர்ந்து விடுகிறதாம்.

என்னிடம் சொன்ன நண்பன் இந்த கூட்டுறவு வங்கியில் வேலைப் பார்க்கவில்லை, அவன் அதன் அருகில் இருக்கும் ரேசன் கடையில் ஊழியராக பணிச்செய்கிறான். அவன் பணியில் சேர்ந்து இன்னும் முழுமையாக இரண்டு வருடம் கூட ஆகவில்லை. இந்த திருட்டைப் பற்றி எவரிடம் முறையிட வேண்டும் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அப்படியே முறையிட்டாலும் எப்படியான ந‌டவடிக்கை இருக்கும் என்பதும் உறுதியில்லை. அவனுடைய ஆற்றாமையை என்னிடம் புலம்பினான். என்னுடைய ஆற்றாமையை நினைத்து நான் இங்கு பதிந்து வைக்கிறேன்.

இதை என்னுடைய நண்பன் என்னிடம் சொல்லும் போது எனக்குப் பகீரென்று இருந்தது, காரணம் ஒரு மாதத்திற்கு முன்பு தான் வட்டி குறைவாக இருக்கும் என்று அப்பாவின் உதவியுடன் என்னுடைய சில நகைகளைத் தனியார் வங்கிகளில் இருந்து எடுத்து எங்கள் ஊரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வைத்திருக்கிறேன். அங்கு இதுபோல் நடந்தாக நான் கேள்விப்ப‌ட்டது இல்லை இருந்தாலும் நம்மையறியாமல் ஒருவித சந்தேகம் மனதில் எழாமல் இல்லை. நகைகளை நாம் அடகு வைக்கும் போது நம் நகைகளை ஒரு முறைக்கு நான்கு முறை எடை செய்து பார்க்கும் ஆசாரிகள், நாம் திரும்ப மூட்டும் போதும் அதை ஒரு முறைக் கூட எடைப் போட்டு நம்மிடம் காட்டுவது இல்லை, நாமும் அவசரத்திலும் மற்றும் இவர்களில் மீதான நம்பிக்கையிலும் அதைச் சரிப்பார்க்கச் சொல்லுவதும் இல்லை.

இப்படி கூலி விவசாயிகளின் தாலியை அறுத்து தொப்பை வளர்க்கும் ஜென்ம‌ங்களை எதைக் கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை.......


.

Monday, May 2, 2011

க‌வ‌லை உன‌க்கு..




மழைப் பொழிந்தாலும்-கவலை உனக்கு
அறுவடை செய்ய வேண்டுமேயென்று!!!

மழைப் பொய்த்தாலும்-கவலை உனக்கு
நாற்றுநடவு செய்ய வேண்டுமேயென்று!!!

அதிகப்படியாக விளைந்தாலும்-கவலை உனக்கு
தானியங்களின் விலை வீழுமேயென்று!!!

குறைவாக விளைந்தாலும்-கவலை உனக்கு
வட்டிக்கடன் வீதம் ஏறுமேயென்று!!!

திருவிழாக்கள் வந்தாலும்-கவலை உனக்கு
புத்தாடை வாங்க வேண்டுமேயென்று!!!

மகன் நன்றாக படித்தாலும்-கவலை உனக்கு
கல்விக் கட்டணம் கட்ட வேண்டுமேயென்று!!!

மகள் பெரியவள் ஆனாலும்-கவலை உனக்கு
விளைநிலம் விலை போகுமோயென்று!!!

.

.
.
Related Posts with Thumbnails