Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Friday, June 6, 2014

கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு!

சமீபத்தில் ஹைதிராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வயிற்றுவலி என்று சென்றிருந்தேன். எந்தப் புண்ணியவான் காலேஜில், எவ்வளவு செலவு செய்து டாக்டருக்குப் படித்தார் என்று தெரியவில்லை, வலியோடு படுக்க வைத்து ஸ்கேன் செய்துவிட்டு 8 MM கல் சிறுநீரகத்தில் இருப்பதாகச் சொல்லி உடனடியாக லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லை எடுத்தாக‌ வேண்டும், ரெம்பச் சீரியஸ் என்று கத்தியை இடுப்புக்குக் கீழேயே வைத்திருந்தார். அவர் கையிலிருந்த கத்தியை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. நானும் மனைவியும் மட்டும் தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வீட்டில் நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தே மனைவி மிரண்டு போயிருந்தார். நானும் வலிக்காதது போல எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.

எம்ர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று ஹார்ட் பீட் ரெக்கார்டரை மாட்டிவிட்டு, கையில் பச்சை நரம்பைத் தேடி ஊசியைச் சொருகிய போதே, மனைவின் முகம் வெளறி வியர்வையை ஊற்றத் துவங்கியது. இரண்டு கையிலும், மருந்து செலுத்திய இரண்டு ஊசியைப் போட்டார்கள். அடிவயிற்றில் கனன்று கொண்டிருந்த கனல் நீர்க்கத் தொடங்கியது, சிறுது நேரத்தில் நார்மல் ஆகியிருந்தேன். அருகில் வந்த டாக்டர் உடனே அட்மிட் ஆகிடுங்க, இன்று இரவே ஆபரேசன் பண்ணிவிடலாம் என்றார். வலி அதிகமாக‌ இருந்த நேரம் டாக்டர் வந்து இப்படிச் சொல்லியிருந்தால், நானே அவரிடம் கத்தியை எடுத்துக் கொடுத்து வயிற்றைக் கிழித்து எடுத்துவிடுங்கள் என்று பல்லை இறுக கடித்திருப்பேன். ஆனால் வலியானது அட‌ங்கியிருந்ததால் ஆபிஸ் நண்பர்களுக்குப் போன் செய்தேன். மனைவியும் வீட்டிற்குப் போன் செய்திருந்தார். வீட்டில் உள்ளவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம், வலியைக் குறைத்துவிட்டு மாத்திரை வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துவிடுங்கள். இங்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள்.

திரும்பவும் மனைவியும் நானும் டாக்டரிடம் சென்று பேசினோம், மாத்திரையில் கரைக்க முடியாதா? என்று கேட்டோம். அதற்கு அவர் 8 MM கல் என்பது பெரிய அளவு, அதை மருந்து மற்றும் மாத்திரையால் கரைப்பது முடியாத காரியம் என்றும், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களின் சிறுநீரகத்திற்குத் தான் பிரச்சனை என்று கொளுத்திப்போட்டார். இருந்தாலும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, ஒரே நாள் வலியில் இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? என்பது தான். டாக்டர் என்னைப் பயமுறுத்தியது போதாது என்று நர்சு மற்றும் உதவி டாக்டர் இருவரும் சேர்ந்து, சின்ன ஆபரேசன் தான் சார்!. ஒன்றும் பிரச்சனையில்லை, முப்பதில் இருந்து முப்பந்தைந்தாயிரம் தான் செலவு ஆகும், இரண்டு நாட்கள் தான் பெட்டில் இருக்க்க வேண்டும். இப்போது நீங்கள் சரி! என்று சொன்னால் மாலையில் ஆபரேசன் செய்துவிடுவார்கள். நீங்கள் நாளைக்கே வீட்டிற்குச் சென்றுவிடலாம்! என்று அவர்கள் அந்த மருத்துவமனையில் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக‌ என்னிடம் பேசினார்கள்.

சிறிது நேரத்தில் ஆபிஸிலிருந்து நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த நண்பர், சார்! 8 MM கல்லுக்கு எல்லாம் லேப்ரோஸ்கோப்பிக் ஆப‌ரேசன் பண்ண வேண்டாம். எனது மாமியாருக்கும் இதே போல் தான் இருந்தது, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருந்தில் கரைத்துவிட்டார்கள் என்றும் அதனால் நீங்கள் இங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம் என்றும், அப்படியே ஆபரேசன் செய்ய வேண்டுமானால் ஊரில் போய்ச் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கும், மனைவிக்கும் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தார்.

இவர்களிடம் சென்று ஆபரேசன் செய்ய வேண்டாம்! என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று நினைத்துகொண்டு, டாக்டர்! நாங்கள் இருவரும் இங்குத் தனியாக இருக்கிறோம், ஆபரேசன் செய்தால் என்னைக் கவனித்துக்கொள்ள மனைவிக்குச் சிரமமாக இருக்கும், அதனால் ஊரில் சென்று செய்து கொள்கிறோம் என்று எதார்த்தத்தைச் சுட்டிப் பேசினேன். அவரும் சரியென்று தலையை ஆட்டி, எவ்வளவு சீக்கிரம் பண்ணுகிறீர்களே, அவ்வளவு நல்லது! என்று பக்கத்தில் இருந்த நர்சை அழைத்து, எங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார்.

டாக்டர் அறையை விட்டு வெளியே வந்த எங்களிடம், நர்ஸ், சார்! நாங்க, எதனால் நீங்கள் ஆபரேசன் பண்ணவில்லை? என்பதற்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் அதில் பணம் இல்லை என்று எழுதியிருக்கிறேன். ஒரு கையெழுத்துப் போட்டுவிடுங்கள் என்றார். அவரைப் பார்த்துச் சிரிக்கத் தான் தோன்றியது. டிஸ்சார்ஜ் ரிப்போட்டில் பெரிதாக நாங்கள் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறோம், நாங்கள் ஆபரேசன் செய்வதற்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்றும் எழுதிக் கையெழுத்து வாங்கினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குத் திரும்பவும் அடிவயிறு வலிப்பது போன்ற பிரம்மை வர துவங்கியது.

ஒரு வழியாக மருத்துவமனையில் உள்ளவர்களைச் சமாளித்து வீட்டிற்கு வந்தவுடன் மஸ்கட்டில் இருக்கும் ஜெனரல் மேனேஜருக்குப் போனில் அழைத்து விசயத்தைக் கூறினேன். அவர் ஹைதிராபாத்தில் வேறு மருத்துவமனைக்குச் சென்று கன்சல்ட் பண்ண வேண்டுமானாலும் நான் உதவி செய்கிறேன் அல்லது ஊருக்கு போக வேண்டுமானாலும் சென்று வா. முதலில் உடம்பை கவனித்துக் கொள், வேலைகள் எல்லாம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றார். வீட்டில் உள்ளவர்களும் ஊருக்கு வந்துவிடு என்று அழைத்தனர். உடனடியாகத் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் இரண்டு டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்துவிட்டேன். அவசர அவசரமாகக் கிளம்பி ஊருக்கு வந்தாயிற்று. மறுநாள் காலையில் உறவினர் ஒருவரின் மூலமாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிம்ஸ் மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி அங்குச் சென்று யூராலஜி டாக்டருக்காகக் காத்திருந்தோம்.

இங்குக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிச் சொல்லுவது அவசியமாகிறது. ஒருமுறை அப்பாவிற்குத் திடிரெனக் கால் மூட்டுவலி வந்தது, ந‌டக்கும் போது ஒரு பக்கமாகத் தாங்கலாகத் தான் ந‌டந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைகளில் சென்று காட்டியபோது, ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டுக் கால் மூட்டுகள் இரண்டும் அதிகமாகத் தேய்ந்து உள்ளது. நீங்கள் உடனடியாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பயம் அதிகமாக இருந்தது. உடனடியாக உறவினர் ஒருவரின் மூலம் இந்தக் கிம்ஸ் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்றிருந்தோம், சரியாக ஒரு மாதம் மாத்திரைகள் கொடுத்து, காலுக்குச் சில உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு டாக்டர் பரிந்துரைத்திருந்தார். சரியாக ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைத்தது. இப்போது அப்பா முழுமையாகக் குணமாகிவிட்டார். நான் இந்தக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை தேவையில்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைப்பது இல்லை. மேலும் பணமும் அதிகமாகப் பிடுங்குவது இல்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூட்டம் மட்டும் அதிகமாக இருக்கும். அதனால் இங்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் முழுமையாக‌ நீங்கள் செலவு செய்ய வேண்டியதுவரும்.



எனது டோக்கன் எண் டீவியில் வந்தவுடன் டாக்டரை சென்று சந்தித்தோம். ஹைதிராபாத்தில் இருந்து கொண்டு சென்ற ஸ்கேன் மற்றும் ரிப்போட்டுகள் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தவர், இப்போது வலியிருக்கிறதா? என்று மட்டும் கேட்டார், நான் இப்போது வலியில்லை என்றேன். பின்னர் இரத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்‍-ரே ஆகியவற்றை எழுதி, இவைகளைப் பண்ணிவிட்டு ரிப்போட்டுடன் வாருங்கள் என்றார். இவைகளை முடித்து ரிப்போர்ட் கிடைப்பதற்கு மதியம் ஆகியிருந்தது. மதியதிற்கு மேல் சென்று டாக்டரை பார்த்தோம். எல்லா ரிப்போட்டுகளையும் பார்த்துவிட்டு "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்றார். ஏம்ப்பா! மெத்த படித்த, கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படும் டாக்டர்களே! எல்லா நோயாளியின் மனமும் இந்த ஒற்றைச் சொல்லுக்குத் தான் ஏங்குகிறது. இந்த உண்மை என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும். காசு, பணம், துட்டு, மணி.. என்று மட்டும் யோசிப்பதால் இந்த வார்த்தைகள் உங்கள் வாயினிலிருந்து வருவது இல்லை. "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்ற வார்த்தையின் பலமே என்னுடைய சிறுநீரகக் கல்லை கரைந்திருந்தது.

ஹைதிராபாத் மருத்துவமனையில் கொடுத்திருந்த எந்த மருந்தையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி, முப்பது நாட்களுக்கு இவர் புதிதாக‌ மாத்திரையும் மருந்தும் கொடுத்துவிட்டு இவைகள் முடிந்தவுடன் திரும்பவும் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார். இந்த கல் பிரச்சனை மூன்று நாளில் முழிபிதுங்க வைத்துவிட்டது. விமான டிக்கட் செலவு என்று பணத்தையும், அறுவைச் சிகிச்சை என்று மனத்தையும் காலி செய்திருந்தது.

சிறுவயதில் அம்மா சாப்பிடுவதற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களிடம் பசியில்லை என்று சொன்னால் அவர்களின் பதில் இதுவாகத் தான் இருக்கும் "கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு". இன்றைக்குச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் ஆயில் இருக்கா? கொழுப்பு இருக்கா? என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும் கடைசியில் கல்லாகத் தான் தேங்குகிறது.

இன்று எதைச் சாப்பிடுகிறோம்? எப்படிச் சாப்பிடுகிறோம்? கண்டிப்பாகச் சிந்திகக வேண்டியிருக்கிற‌து.

.

Friday, May 30, 2014

டிரைவிங் லைசென்ஸ்_ஆணியே புடுங்க வேண்டாம்!!!

நான் படித்த டிப்ளமோ கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படித்து முடிக்கும் மூன்று வருடத்திற்குள், கல்லூரியில் இருக்கும் டிரைவிங் ஸ்கூலில் சேர வைத்துச் சிறப்புப் பயிற்சியும் கொடுத்து இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கான லைசைன்ஸை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். நானும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுப் படிக்கும் போதே டூவீலர் மற்றும் கார் இரண்டிற்கும் சேர்த்து லைசென்ஸ் வாங்கி வைத்து விட்டேன்.

வாங்கிய லைசென்ஸை பத்திரமாக எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்க்கும் போது கம்பெனி வேலையாக டூவீலர் எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றுவேன். ஒருமுறை கூட டிராபிக் போலீஸில் மாட்டியது இல்லை. நான் அம்பத்தூரில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் போது, பெரும்பாலும் டூவீலரை உபயோகிப்பது மூன்று வழித்தடங்களில் தான். ஒன்று பழைய மெசின் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டூல்கள் வாங்குவதற்காக‌ மோர் மார்கெட் மற்றும் எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்கும் வேளச்சேரி ரானே மெட்ராஸ் மற்றும் எண்ணூர் அசோக் லைலன்ட்.

நான் சென்னையில் டூவீலர் ஓட்டுவது, எனது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. நான் டூவீலர் ஓட்டிவிடக் கூடாது என்பதால் தான் என்னிடம் லைசென்ஸை தராமல் அம்மா வாங்கிப் பாதுக்காப்பாக வைத்திருந்தார். அவர் என்னிடம் லைசென்ஸ் கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனக்குச் சரியாக டூவீலர் ஓட்டுவதற்குத் தெரியாது என்பது அவரது எண்ணம். அவருடைய எண்ணதிற்குக் காரணம் இதுதான். முன்பெல்லாம் சைக்கிள் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் வாடைகைக்கு எடுத்து, ஓட்டி கற்றுக் கொள்ளலாம். கால் வண்டி, அரை வண்டி மற்றும் முழு வண்டி என்று பிரித்து வைத்து ஒரு மணி நேரத்திற்கு 25 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை வாடகை வாங்குவார்கள். இந்த வண்டிகளில் நமக்கு ஏற்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வதற்குப் பெரும்பாடு பட வேண்டும். இப்போது எல்லா வீடுகளிலும் ஆளுக்கு ஒரு டூவீலர் என்று இருக்கிறது, ஆனால் அப்போது ஊரில் அரசு பணியில் இருப்பவர்களிடமோ அல்லது புதிதாக வாத்தியார் வேலைக்குச் சேர்ந்தவர்களிடமோ மட்டும் தான் டூவீலரை பார்க்க முடியும். அவர்களும் அந்த வண்டியில் தனது பொண்டாட்டியைக் கூடப் பின்னால் ஏற்றுவதற்குத் தயங்குவார்கள். காரணம் வண்டியின் டயர் தேய்ந்து போகும் என்று, அவர்களிடம் சென்று ஓட்டி கற்றுக்கொள்ள வண்டி கேட்டால் என்ன சொல்லுவார்கள்?.

எனக்கும் அண்ணனுக்கும் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள‌ வேண்டும் என்ற ஆசை வந்தவுடன் அப்பா ஒரு பழைய ராஜூத் வண்டி(Rajdoot Bike) வாங்கிக் கொடுத்தார்கள். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஊரையே அலற வைக்கும். நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். முழு நேரமும் அண்ணன் தான் அந்த வண்டியை ஓட்டுவான். அந்த வண்டியை தெருவில் ஓட்டி சென்றாலே அனைவரும் ஒதுங்கி வழிவிடுவார்கள். அந்தளவிற்கு ஒலியை எழுப்பும். அப்பா எப்போதாவது என‌க்கு கற்றுக் கொடுக்கச் சொன்னால் மட்டுமே என்னிடம் வண்டியை அண்ணன் கொடுப்பான், இல்லையென்றால் என்னிடம் தர மாட்டன். எனக்கும் அந்த வண்டியை ஓட்டுவதற்குப் பெரியளவில் ஆர்வம் இல்லை. ஒரு வருடத்தில் அந்த வண்டியையும் அப்பா விற்றுவிட்டார்கள். அந்த வண்டியில் ஓட்டிய பழக்கத்தில் தான் காலேஜில் நண்பர்களின் உதவியுடன் லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தேன். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அம்மாவின் தூரத்து உறவுமுறையில்(எனக்கு மாமா முறை வரும்) ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வண்டியில் வந்திருந்தார். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம். ரெம்ப நேரம் வீட்டில் அமர்ந்து எங்களுடன் பேசிவிட்டு கிளம்புவதற்காக வெளியில் வந்தார். அம்மாவும் நானும் கூடவே வெளியில் வந்தோம், திடிரெனப் புது வண்டியை பார்த்தவுடன் எனக்கு ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மாமாவிடம் கேட்டவுடன் அவரும் சாவியைக் கொடுத்துவிட்டார்.

சாவியைக் கையில் வாங்கிய போதே, அம்மா என்னிடம் ஓட்ட‌ வேண்டாம் என்று சொன்னார். பக்கத்தில் நின்ற மாமா, ஒண்ணுமில்லை அக்கா! ஓட்டிப் பழகட்டும் என்றார். எனது வீட்டின் முன்பு வண்டி ஓட்டுவதற்கு என்று பெரிய அளவில் இடம் கிடையாது, சிறிய அளவில் தான் இடம் உண்டு. எங்கள் வீடு சற்று மேடான பகுதியில் இருக்கும், வீட்டின் முன்பு எங்கள் எல்லையின் முடிவில் நாங்கள் செங்கலால் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தோம். நான் வண்டியில் ஏறி காலால் ஸ்டாண்டை எடுத்துவிட்டு முன்னால் சாவியைப் போட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். இதுவரையிலும் எல்லாம் சரியாகத் தான் செய்தேன். யாருக்கும் எந்தவிதமான‌ சேதாரமும் இல்லை. பர்ஸ்ட் கியரை மெதுவாக‌ போட்டு ஆக்ஸிலேட்டரை நான் கொடுத்தது தான் தாமதம் வண்டி எம்பிகுதித்துக் கிளம்பியது. நான் நிதானத்தை இழந்திருந்தேன்.

நான் எனது வீட்டிலிருந்த ராஜூத் வண்டியில் ஆக்ஸிலேட்டரைக் கொடுப்பது போல் எடுத்தவுடன் பாதிக்கு மேல் முறுக்கிவிட்டேன். அந்தப் பழைய ராஜூத் வண்டியில் நீங்கள் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரை முக்கால் பாகம் முறுக்கினால் தான் வண்டி லேசாக மூவ் ஆகும். அதே நினைப்பில், இந்தப் புது ஸ்ப்ளெண்டர் பைக்கிலும் ஆக்ஸிலேட்டரை முறுக்கிவிட்டேன். வண்டி எம்பிகுதித்தவுடனேயே அம்மா அலற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் அலறலும், மாமாவின் பிரேக்கை பிடி!! பிரேக்கை பிடி!! என்ற சத்த‌மும் என்னைப் பதற்றபட வைத்திருந்தது.

பதட்டத்தில் கை என்னையும் அறியாமல் ஆக்ஸிலேட்டரை தான் முறுக்கியது. சிறிதுதூரம் செல்வதற்குள் சுதாரித்துக்கொண்டு பிரேக்கில் காலை வைத்து அழுத்த துவங்கினேன், அதற்குள் வீட்டின் முன்னால் இருந்த செங்கள் சுவரின் மீது மோதி விட்டேன் அந்தப் பதட்டத்தில் வண்டியின் பிரேக், கிளெச், ஆக்ஸிலேட்டர் என்று மொத்ததின் மீதும் இருந்த‌ கை, கால்களை எடுத்திருந்தேன், வண்டியானது காம்பவுண்ட் சுவரை மட்டும் இடித்துத் தள்ளி ஆப் ஆகி நின்றது. வண்டி இன்னும் ஒரு செங்கல் தூரம் நகர்ந்திருந்தால், வண்டியோடு சேர்ந்து நானும் பள்ளத்தில் விழுந்திருப்பேன். எனது வீடு மேட்டில் இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். எங்கள் எல்லையின் காம்பவுண்ட் சுவருக்குக் கீழே ஓர் ஆள் உயரம் பள்ளமாக இருக்கும். என்னுடைய இந்தச் செய்கையை நேரில் பார்த்த பிறகும் எனது அம்மா என்னிடம் லைசென்ஸை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?.

அன்றிலிருந்து நான் வண்டியைப் பற்றியோ, லைசென்ஸைப் பற்றியோ பேசினால், நீ ஆணியே புடுங்க வேண்டாம்!! என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிடுவார்கள். அத்தோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊரில் எவரும் வண்டி ஓட்டிப் பழகுவதைப் பற்றிச் சொன்னால் போதும், அம்மா என்னோட கதையைக் கதாகாலட்சேபமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கல்யாணம் முடிந்த புதிதில் என்னுடைய‌ மனைவியிடமும் இந்தக் கதையைச் சொல்ல மறக்கவில்லை. அந்தளவிற்கு நான் அவர்களை மிரட்டியிருந்தேன். இதனால் தான் என்னுடைய‌ சென்னை வாசம் லைசென்ஸ் இல்லாமல் கழிந்தது.

சென்னையில் இருக்கும் போது ஆபிஸ் வண்டியை எடுத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வெளியில் செல்வேன். என்னுடைய ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் நான் வண்டி ஓட்டியபோது எந்தவொரு டிராபிக் போலீஸிலும் மாட்டியது இல்லை. ஒருமுறை அம்பத்தூர் கம்பெனியிலிருந்து டூல் வாங்குவதற்காக மோர் மார்கெட் செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய டூல்களை என் ஒருவனால் கொண்டுவர முடியாது என்பதால் கூட ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எல்லாம் வாங்கிமுடித்து வரும் வழியில், அண்ணா நான் வண்டியை ஓட்டுகிறேன் என்று என்னுடன் வந்த பையன் வண்டியை வாங்கினான். வண்டியில் ஏறிய அடுத்தச் சிக்னலிலேயே போலீஸின் முன்பு நிப்பாட்டி பைன் கட்ட வைத்துவிட்டான்.



நான் டூவீலர் ஒட்டும் போது லைசென்ஸ் இல்லை என்பதற்காகச் சிக்னலில் போலீஸை கண்டு மிரள்வது கிடையாது, அவருக்குப் பயந்து ஓரமாகக் கொண்டும் வண்டியை நிப்பாட்டுவது இல்லை. துணிச்சலாகச் சிக்னலில் டிராபிக் போலிஸின் முன்னால் தான் வண்டியை நிப்பாட்டுவேன். ஏதாவது ரோட்டில் போலீஸ் மடக்குகிறார்கள் என்று ஒதுங்குவது இல்லை. என்னுடைய போக்கில் நான் சென்றுவிடுவேன். அதுவே எனக்குப் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. டிராபிக் போலீஸை கண்டு மிரண்டாலே, நீங்கள் எல்லாச் சிக்னலிலும் பைன் கட்டுவீர்கள். சில வருடங்கள் இப்படியே போனதான், ஊரில் சொந்தமாக வண்டி வாங்கிய பிறகும் லைசென்ஸ் பற்றிய கவலை எனக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஆபிஸ் வேலையாக‌ வெளிநாடு செல்லும் போது வீட்டில் இருக்கும் லைசென்ஸை தேடினால் கிடைக்கவில்லை. அம்மாவும் வைத்த இடத்தை மறந்திருந்தார்கள். பல வருடங்கள் ஆகியதால் வீட்டில் அவ்வப்போது பெயிண்டிங், ஷிப்டிங் என்று இருக்கும் போது தொலைந்து போனது.

அவ்வாறு தொலைந்த/தொலைத்த‌ லைசென்ஸை சமீபத்தில் தான் வாங்கினேன். அந்தக் கதையையும் நேரம் இருக்கும் போது எழுதுகிறேன்.

Tuesday, March 16, 2010

குழ‌ந்தைக‌ளுக்காக‌_என்னால் முடிந்த‌து

இப்போது க‌டைக‌ளில் அதிக‌மாக‌ விற்ப‌னையாகும் குழ‌ந்தைக‌ளுக்கான‌ பொருட்க‌ளில், தோள்க‌ளில் குழ‌ந்தைக‌ளை லாவ‌க‌மாக‌ மாட்டும் பெல்ட்க‌ள் அட‌ங்கிய‌ தோள் பைக‌ள்(Baby Carry Sling) ம‌ற்றும் குழ‌ந்தைக‌ளை உட்கார‌ வைத்து கைக‌ளால் த‌ள்ளிக் கொண்டு போகும் சிறிய‌த‌ள்ளு வ‌ண்டி(Baby Stroller) போன்ற‌வை மிக‌ முக்கிய‌மான‌வை.



ந‌க‌ர‌ங்க‌ளில் மாலையில் சாலையின் இரு ப‌க்க‌ங்க‌ளிலும் இந்த‌ வ‌ண்டிக‌ளில் குழ‌ந்தைக‌ளை வைத்து த‌ள்ளிக்கொண்டு போகும் தாய்மார்க‌ள் அதிக‌ம். அந்த‌ வ‌ண்டியில் குழ‌ந்தையான‌து கொலுவில் வைக்க‌ப்ப‌ட்ட‌ பொம்மை போல் அழ‌காக‌ அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டு இருக்கும். அதைச் சுற்றி க‌ய‌றுக‌ளால் க‌ட்டிய‌து போல் பெல்ட்டுக‌ள் மாட்ட‌ப்ப‌ட்டு இருக்கும். அந்த‌ த‌ள்ளுவ‌ண்டியும் பூ, ப‌லூன், ம‌ணி போன்ற‌ விளையாட்டு பொருட்க‌ள் ஏதாவ‌து ஒன்று கட்ட‌ப‌ட்டு அழ‌காக‌ அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டு இருக்கும். என‌க்கு அந்த‌ குழ‌ந்தையை பார்க்கும் போது ப‌ரிதாப‌மாக‌ தான் தோன்றும். கார‌ண‌ம் அந்த‌ குழ‌ந்தையின் முக‌த்தில் சிரிப்பை பார்க்க‌முடியாது. மாறாக‌ திருவிழாக் கூட்ட‌தில் வ‌ழி தெரியாம‌ல் த‌த்த‌ளிக்கும் குழ‌ந்தைப் போல் அத‌ன் க‌ண்க‌ள் மிர‌ளும். வ‌ழியில் வ‌ருவோரையும், போவோரையும் ஒரு ப‌ய‌ம் க‌ல‌ந்த‌ பார்வையுட‌ன் தான் பார்க்கும். அதை எல்லாம் க‌ண்டுக்கொள்ளாம‌ல் ச‌ர்வ‌சாத‌ர‌ண‌மாக‌ அந்த‌ குழ‌ந்தையின் தாய் அந்த‌ வ‌ண்டியை த‌ள்ளிக்கொண்டு போவார். ந‌ம‌து சாலைக‌ளை சொல்ல‌ வேண்டிய‌து இல்லை, அந்த‌அள‌வு ப‌ள‌ப‌ள‌ப்பாக‌ இருக்கும். ஒரு சிறிய‌க‌ல்லின் மீது அந்த‌வ‌ண்டி ஏறினால் போதும் மொத்த‌வ‌ண்டியும் அதிரும், அத‌னுட‌ன் சேர்ந்து குழ‌ந்தையும் ஒரு ஆட்ட‌ம் போடும்.

இவ்வாறு குழ‌ந்தைக‌ளை அழைத்து செல்லும் அம்மாக்க‌ளை எங்க‌ கிள‌ம்பிட்டீங்க‌? என்று கேட்டால் அவ‌ர்க‌ள் சொல்லும் ப‌திலைக் கேட்டால் சிரிப்ப‌தா? அல்ல‌து அந்த‌ குழ‌ந்தையின் நிலையை பார்த்து வ‌ருத்த‌ப‌டுவ‌தா? என்று ந‌ம‌க்கே தெரியாது. தின‌மும் ந‌டைப்ப‌யிற்ச்சி செய்தால் உட‌ம்புக்கு ந‌ல்ல‌து என்று ம‌ருத்துவ‌ர் கூறினார், அத‌னால் தான் மாலையில் தின‌மும் இவ்வாறு குழ‌ந்தையுட‌ன் ந‌ட‌க்கிறேன் என்று ப‌தில் த‌ருவார். அதோடு குழ‌ந்தையும் எப்போதும் வீட்டில் இருப்ப‌தால் அத‌ற்கும் ஒரு மாறுத‌லுக்காக‌ வெளியில் அழைத்து வ‌ந்தேன் என்று சொல்வார். ரெம்ப‌ ந‌ல்ல‌விச‌ய‌ம் தான். ஆனால் உட‌ம்பு குறைவ‌த‌ற்காக‌ ந‌ட‌க்கிறோம் என்றால் குழ‌ந்தையை தூக்கி கொண்டு ந‌ட‌ந்தால் இன்னும் கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே உட‌ம்பு குறையும். அது ம‌ட்டும் அல்லாது அந்த‌ குழ‌ந்தையும் எந்த‌வித‌ ப‌த‌ட்ட‌மும் இல்லாம‌ல் இய‌ற்கையை ர‌சிக்கும். ந‌டைப்ப‌யிற்ச்சி மேற்கொள்ளும் போது ந‌ம‌து உட‌லின் எடையை கால்க‌ள் தாங்க‌ வேண்டும். ஆனால் இவ‌ர்க‌ள் குழ‌ந்தையை தாங்கும் வ‌ண்டியின் மீது முழு எடையையும் கொடுத்து விட்டு, அந்த‌ வ‌ண்டியின் சொல்ப‌டி ந‌ட‌ப்பார்க‌ள். அத‌ற்கு ந‌டைப்ப‌யிற்ச்சி என்று ஒரு பெய‌ரும் வைத்து விடுவார்க‌ள்.



நாம் வெளியில் ந‌ட‌ந்து போகும்போது ஏதாவ‌து ஒன்றின் மேல் தடுக்கினாலோ! அல்ல‌து ஒரு ப‌ய‌ங்க‌ர‌ ச‌த்த‌த்தினால் த‌டுமாறினாலோ, நாம் எப்ப‌டி ப‌க்க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளின் துணையை நாடுகிறோம் அல்ல‌து அவ‌ர்க‌ளை க‌ட்டிபிடித்து கொள்கிறோம், அதேப்போல் தான் குழ‌ந்தைக‌ளும். எந்த‌ வித‌ ஆப‌த்து வ‌ந்தாலும் நாம் ஒருவ‌ரின் அர‌வ‌ணைப்பில் இருக்கிறோம் என்ற‌ கார‌ண‌த்தினால் அது சிரித்துக் கொண்டே இருக்கும். ஒரு அதிர்வோ, அல்ல‌து ச‌த்த‌மோ கேட்டால் அம்மாவை இறுக‌ க‌ட்டி, முக‌த்தை மார்பில் புதைத்து கொள்ளும். பின்பு சிறிது நேர‌த்தில் ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்து விடும். இது குழ‌ந்தைக‌ளின் இய‌ல்பு.

என‌க்கு இப்போதும் ஞாப‌க‌ம் இருக்கிற‌து, என‌து அம்மா என்னை தோளில் தூக்கி சும‌ந்த‌‌ நாட்க‌ள். என்னை அவ்வாறு தூக்கி செல்லும் போது அனைவ‌ராலும் கிண்ட‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து கூட‌ என‌க்கு ம‌ற‌க்க‌வில்லை. அவ்வாறு எழு, எட்டு வ‌ய‌து இருக்கும் போது கூட‌ என்னை என‌து அம்மா வெளியில் செல்லும் போது தூக்கி கொண்டு தான் போவார்க‌ள். இத்த‌னைக்கும் நான் எங்க‌ள் வீட்டில் த‌னியாக‌ பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன் கிடையாது. என‌க்கு ஒரு அக்காவும், ஒரு அண்ண‌னும் உண்டு. இது என‌து வீட்டில் ந‌ட‌க்கும் அதிச‌ய‌ம் என்று நான் சொல்ல‌ வ‌ர‌வில்லை. பெரும்பாலான‌ கிராம‌த்து ந‌ன்ப‌ர்க‌ள் அனுப‌வித்த‌ ஒன்றாக‌ தான் இருக்கும். ஆனால் ஒரு குழ‌ந்தை வைத்திருக்கும் இப்போதைய‌ தாய்மார்க‌ளோ, அந்த‌ குழ‌ந்தையை சும‌க்க‌ த‌ள்ளுவ‌ண்டி வைத்திருப்ப‌து தான் ப‌ரிதாப‌ம்.



எங்க‌ள் உற‌வுக்கார‌ர் ஒருவ‌ர் இருக்கிறார். அவ‌ர் ம‌து அருந்தினால் அமைதியாக‌ வ‌ந்து தூங்குவ‌து கிடையாது. வ‌ழியில் வ‌ருவோர் ம‌ற்றும் போவோரை கெட்ட‌வார்த்தைக‌ள் சொல்லி வ‌ம்புச‌ண்டைக்கு இழுப்ப‌து தான் அவ‌ருடைய‌ வ‌ழ‌க்க‌ம். ஆனால் அவ‌ரும் ஒருவ‌ரின் குர‌லைக் கேட்டால் பெட்டி பாம்பாக‌ அட்ங்கி போய், அமைதியாக‌ வீட்டிற்குள் தூங்க‌ சென்று விடுவார். அது யாருடைய‌ குர‌ல் என்றால் அவ‌ரை சிறு வ‌ய‌தில் தூக்கி வ‌ள‌ர்த்த‌ அவ‌ருடைய‌ அக்காவின் குர‌ல் தான். அந்த‌ அள‌வுக்கு அவ‌ரின் மேல் ம‌திப்பு வைத்திருந்தார் என‌து உற‌வுக்கார‌ர். இதை எத‌ற்கு சொல்லுகிறேன் என்றால் ந‌ம் மீது சிறுவ‌ய‌தில் ஒருவ‌ர் காட்டும் அக்க‌றை வாழும் நாள் முழுவ‌தும் ந‌ம‌க்கு ம‌ற‌ப்ப‌தில்லை. அந்த‌ ஒருவ‌ரின் மீது ம‌திப்பும், ம‌ரியாதையும் கூடுகிற‌து என்ப‌தே உண்மை.

ஒரு நாள் நான் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில் அம்ப‌த்தூர் பாடியில் இருந்து ம‌ண‌லி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது என‌து வ‌ண்டிக்கு முன்னால் ஒரு த‌ம்ப‌திக‌ள் குழ‌ந்தையுட‌ன் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில் போய் கொண்டிருந்தார்க‌ள். அப்போது என‌து பார்வை அந்த‌ குழ‌ந்தையின் மீது திரும்பிய‌து. அந்த‌ குழ‌ந்தை முக‌ம் மிகுந்த‌ இறுக்க‌த்துட‌ன் அத‌ன் பிடி தள‌ர்ந்த‌து போல் என‌க்கு காட்சிய‌ளித்த‌து. உட‌னே அந்த அம்மாவை பார்த்தேன். அவ‌ர்க‌ள் ஏதோ தூக்க‌க‌ல‌க்க‌த்தில் இருப்ப‌து போல் க‌ண்க‌ள் சுழ‌ன்ற‌து. ஒரு கையால் த‌ன‌து க‌ண‌வ‌னின் தோளை இறுக்கிய‌ப‌டி இருந்தார். அந்த‌ அம்மாவின் க‌வ‌ன‌ம் சிறிதும் குழ‌ந்தையின் மீது இல்லை என்ப‌து என‌க்கு தெளிவாக‌ தெரிந்த‌து. பின்னால் இருப்ப‌வ‌ர்க‌ளில் நிலைமையை ச‌ற்றும் பொருட்ப‌டுத்தாம‌ல் அந்த‌ அம்மாவின் க‌ண‌வ‌ர் வ‌ண்டியை அறுப‌து மைல்க‌ளுக்கு மேல் வேக‌மாக‌ செலுத்தினார். ஒரு க‌ட்ட‌த்தில் என்னால் குழ‌ந்தையின் நிலைமையை பார்க்க‌ முடிய‌வில்லை. அது விழுந்து விடுவ‌து போல‌வே என‌க்கு தோன்றிய‌து. அத‌னால் என‌து வ‌ண்டியை வேக‌மாக‌ செலுத்தி அவ‌ரிட‌ம் வ‌ண்டியை நிறுத்த‌ சைகை செய்தேன். அவரும் உட‌னே வ‌ண்டியை ஓர‌மாக‌ நிறுத்தினார். அவ‌ரிட‌ம் குழ‌ந்தையை ப‌ற்றி சொன்னேன். அத‌ற்கு அவ‌ர் சிரித்து கொண்டே என‌து மனைவி குழ‌ந்தையை மார்புட‌ன் சேப்டி பெல்டால்(Baby Carry Sling) க‌ட்டியுள்ளார் என்று அவ‌ர் ம‌னைவியை சுட்டி காட்டினார். அப்போது தான் நானும் க‌வ‌னித்தேன், க‌ங்காரு த‌ன‌து வ‌ய‌ற்றில் உள்ள‌ பையில் குழ‌ந்தையை சும‌ப்ப‌து போல‌ அந்த‌ பெண்ம‌ணியும் த‌ன‌து மார்புட‌ன் அந்த‌ குழ‌ந்தையை சேப்டி பெல்டால் க‌ட்டியிருந்தார்.

எந்த‌ ஒரு தாய்க்கும் த‌ன‌து குழ‌ந்தையை தூக்கி சுமக்க‌ வ‌லு இல்லாம‌ல் க‌ட‌வுள் ப‌டைப்ப‌து இல்லை. அப்ப‌டி சொல்லுவ‌த‌ற்கு கார‌ண‌ங்க‌ள் இருந்தால், அது தாய்பால் கொடுப்ப‌த‌ற்கு நாம் சொல்லும் கார‌ண‌ங்க‌ள் போல் தான் அமையுமே த‌விர‌ ம‌ற்ற‌வை ஒன்றும் கிடையாது. தாவ‌ர‌ங்க‌ளை பாருங்க‌ள், அவைக‌ளின் க‌னிக‌ளையும், ம‌ல‌ர்க‌ளையும் தாங்க‌ முடியாம‌ல் கீழே முறிந்து விழுந்து விடுவ‌து கிடையாது.

"ம‌ன‌மிருந்தால் மார்க்க‌முண்டு"

நான் இந்த‌ ப‌திவை எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம், என‌து ந‌ன்ப‌ர் ஒருவ‌ர் ஊருக்கு பார்ச‌ல் அனுப்ப‌ வேண்டும் அத‌ற்கு சில‌ பொருட்க‌ள் வாங்க‌ வேண்டும் நீயும் வா? என்று என்னை அழைத்தார். ச‌ரி ந‌ன்ப‌னின் அழைப்பை ஏற்று, என்ன‌ பொருள் வாங்க‌ வேண்டும்? என்று கேட்டேன். அத‌ற்கு அவ‌ன் த‌ன‌து ம‌னைவி அலைபேசியில் பேசும் போது குழ‌ந்தையை வைத்து த‌ள்ளுவ‌த‌ற்காக‌ ஒரு வ‌ண்டி வாங்கி அனுப்பி வைக்க‌ சொன்னாள், உன‌க்கு தான் தெரியுமே அதை ப‌ற்றியுள்ள‌ செய்திக‌ளை இனைய‌த‌ள‌த்தில் இருந்தால் சேக‌ரித்து சொல்லு என்றான். என‌து ந‌ன்ப‌ர் ஒன்றும் ஐந்து இல‌க்க‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் கோமான் கிடையாது, ஒரு சராச‌ரி க‌ட்டிட‌ தொழிலாளி. அவ‌னுடைய‌ ம‌னைவி குடியிருக்கும் ஊர் ஒன்றும் அடையாறு பீச்ரோடு இல்லை, ந‌ம‌து மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ப‌தினேழு பட்டியில் அதுவும் ஒரு ப‌ட்டி. இத‌ற்கு மேலும் நான் அவ‌னுக்கு அந்த‌ வ‌ண்டியை வாங்கி கொடுத்திருப்பேன் என்று நீங்க‌ள் நினைக்கிறீர்க‌ளா?

குறிப்பு: இவை அனைத்தும் நாக‌ரீக‌ம் என்ற‌ பெய‌ரில் ந‌ட‌மாடும் மாயைக‌ள். அவைக‌ளில் ந‌ம்மில் சில‌ பேர்க‌ளும் அறிந்தோ, அறியாம‌லோ விழுந்து விடுகிறோம். எது நாக‌ரீக‌ம் என்ப‌தை முழுமையாக‌ அடையாள‌ம் காண‌வேண்டும் என்ப‌தே இந்த‌ இடுகையின் நோக்க‌ம்.

Friday, February 19, 2010

அம்மா(விற்கு)வின் பரிசு..

அதிகாலை வேளை!. கண் மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த லட்சுமி ஏதோ திடுக்கிட்டவள் போல் படுக்கையில் இருந்து எழுந்தாள். பக்கத்து அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருப்பது அரைகுறையாக மூடப்பட்டிருந்த கதவு வழியே தெரிந்தது. உடனே ஏதோ யோசனை செய்தவள் போல் எழுந்து படுக்கையறையை விட்டு வந்து சமையலறைக்கு சென்றாள். முகத்தை கழுவி விட்டு ஏற்கன‌வே திரிப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்த திரி ஸ்டவ்வில் ஒரு தீக்குச்சியை கொளுத்திப் போட்டாள். தீசுவாலையானது எல்லா திரிகளிலும் பற்றி எரிவது வரை காத்திருந்து பின்பு அதன் மேல் உருளை வடிவ அலுமினிய பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வைத்தாள். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. அதில் இரண்டு மேஜைகரண்டி தேயிலை தூள் போட்டு அடுப்பில் இருந்து இறக்கி, ஏற்கன‌வே
சக்கரைப் போடப்பட்டு தயாராய் இருந்த‌ இரண்டு கப்பில் தேயிலை நீரை ஊற்றினாள்.

ஒரு கப்பை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வந்து மின்விளக்கு எரிந்த அறையை நோக்கி நடந்தாள். அதுவரை மர நாற்காலியில் அம‌ர்ந்து குனிந்து புத்தகத்தை பார்த்திருந்த செல்வனின் தலையானது அருகில் காலடி சப்தம் கேட்கவே தலை நிமிர்ந்து பார்த்தான். அருகில் லட்சுமி கப்பில் தேயிலைநீருடன் நின்றாள். நான் தான் படிக்க வேண்டும் என்று காலையிலேயே எழுந்திருக்கிறேன். உனக்கு என்னம்மா வந்தது இவ்வளவு சீக்கிரமாய் எழுந்து தேயிலை போட வேண்டுமா?. என்று பொய் கோபத்துடன் அம்மாவை நோக்கினான். அதற்கு வழக்கமான புன்னகையை மட்டும் பதிலாக‌ உதிர்த்து விட்டு தேயிலை கப்பை செல்வன் கையில் திணித்து விட்டு அவன் தலைமுடியை கையால் கோதி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

முந்தினம் இரவும் அதிக நேரம் கண் முழித்து படித்து தூங்கிவிட்டு இன்றைக்கும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து படிப்பதால் செல்வத்துக்கும் அப்போது தேயிலை தேவையான ஒன்றாகவே இருந்தது. ஆனாலும் அவனுக்காக அம்மா கஷ்டபடுவதை விரும்பாததால் தான் லட்சுமியிடம் அவ்வாறு பேச நேர்ந்தது. கப்பில் இருந்த தேயிலை நீரை அருந்திக்கொண்டே பார்வை புத்தகத்தின் மீது திருப்பினான். பக்கங்களை புரட்டிய படியே புத்தகத்தில் தீவிரமாக‌ஆழ்ந்து போனான். தீடிரென ஏதோ ஞாபகம் வந்தது போல் அருகில் இருந்த கடிகார‌த்தை பார்த்து விட்டு "அய்யோ" என்று கத்திவிட்டு குளிக்க ஓடினான். கொல்லை புறத்தில் லட்சுமி தண்ணீர் நிரப்பியிருந்த தொட்டியில் இருந்து மொண்டு குளிக்க தொடங்கினான். குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான். அதற்குள் லட்சுமி காலை உணவுக்கு ஆவிபறக்க இட்லியும். மதியம் கல்லூரிக்கு செல்வம் எடுத்து செல்ல தக்காளி சாதமும் கட்டி ரெடியாக வைத்திருந்தாள். துணிமாற்றிவிட்டு வந்தவன் அம்மாவிடம் "அப்பா இன்னைக்கு வந்து விடுவார் இல்லையா அம்மா?" என்று கேட்டான். ஆமாப்பா இன்னைக்கு வந்து விடுவேன் என்று தான் மகேஷ் அப்பாவிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார், என்று மறுமொழி கூறினாள். இல்ல‌ அம்மா நாளைக்கு தான் பரிட்சைக்கு பணம் கட்ட கடைசி நாள், அதனால தான் கேட்டேன் என்று கூறிக்கொண்டே எடுத்து வைத்திருந்த இட்லியை சாப்பிட்டான். நீ ஒண்ணும் கவலை படாம கலேஜ்க்கு போ, நாளைக்கு கண்டிப்பா கட்டிவிடலாம் என்றாள் லட்சுமி. பாதிசாப்பிட்டும் சாப்பிடமலும் கட்டிவைத்திருந்த தக்காளி சாதத்தை பேக்க்குள் திணித்து விட்டு வீட்டிற்கு வெளியே நடந்தான். லட்சுமி வாசலில் நின்று மகன் போன பாதையை பார்த்து கொண்டே யாரையோ எதிர்பார்த்து காத்து நின்றாள்.

லட்சுமி வாசலில் எதிர்பார்த்திருப்பது அவளுடைய புருசன் முருகேசனுக்காகத் தான். இவர்களுக்கு செல்வம் ஒரே பையன். முருகேசன் ஒரு கட்டிடத் தொழிலாளி. லட்சுமி மற்றும் முருகேசனின் நெடுநாளைய கனவு செல்வத்தை எப்படியாவது இன்சினீயர் படிப்பு படிக்க வைப்பது. அதற்கு ஏற்றபடி செல்வமும் படிப்பில் வெகு கெட்டியாக இருந்தான். பத்தாம் வகுப்பில் அந்த பள்ளியில் முதல் மாணவனாகவும், பனிரென்டாம் வகுப்பில் ஆயிரத்தி இருநூறு மதிப்பெண்ணுக்கு ஆயிரத்தி நூற்றி முப்பது மதிப்பெண்களும் எடுத்து பொறியியல் கல்லூரில் இடம் வாங்கி விட்டான். செல்வத்தை பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்க ஆகும் செலவு தொகையை முருகேசன் கையில் வைத்திருக்க வில்லை. ஏனென்றால் சில‌வருடம் முன்பு தான், இது வரை சம்பாதித்தப் பண‌த்தைக் கொண்டு இரண்டு அறைகள் கொண்ட வீட்டை கட்டிமுடித்திருந்தான். முருகேசன் வீடு கட்டும் வரை உள்ளூரில் தான் வேலை செய்து வந்தான். ஆனால் வீடுகட்டி முடிந்த‌ பிறகு உள்ளுரில் தினமும் வேலை கிடைப்பதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கிடைத்தன. எனவே தனக்கு தெரிந்த நண்பன் மூலமாக கேரளாவில் ஒரு கண்டிராக்கிடம்(தென்பகுதி நடைமுறை சொல்) வேலையில் சேர்ந்தான். மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவான். கேரள வேலையில் சம்பாதித்த பணத்தையும் மற்றும் லட்சுமியின் சில நகைகளையும் கொண்டு செல்வத்தை பொறியியல் படிப்பில் மூன்று வருடங்கள் படிக்க வைத்துவிட்டான். தற்போது செல்வம் படிப்பது இறுதி ஆண்டு. இந்த வருடம் படிப்புக்கு கட்ட வேண்டிய கட்டண‌த்தை பற்றிதான் இன்று காலையில் லட்சுமிடம் செல்வம் கேட்டிருந்தான். லட்சுமி போன மாதம் முருகேசன் வந்த போதே பணத்தை பற்றி சொல்லியிருந்தாள். அதற்கு முருகேசன் தன்னுடைய கண்டிராக்கிடம் முன்பணம் கேட்டு வாங்கி வருவதாக சொல்லியிருந்தான்.

மணி பத்தாயிற்று, முருகேசன் இன்னும் வரவில்லை. வாசலில் நின்ற லட்சுமி கவலையுடன், சமையலறை வந்தாள். வழ‌க்கமான வேலைகளில் மனம் செல்ல வில்லை. ஏதோ வேண்டா வெறுப்பாய் சிதறி கிடந்த பாத்திரங்களை கழுவினாள். சற்று நேரத்தில் வெளியே நாய் குரைக்கவே வீட்டு வாசலில் வந்து பார்த்தாள். அவள் எதிர் பார்த்தது போல முருகேசன் வழக்கமாக கொண்டுவரும் தோள்பையுடன் வந்து கொண்டிருந்தான். வீட்டில் உள்ள ஆட்களுக்கும் வெளியாட்களுக்கும் உனக்கு இன்னும் வித்தியாசம் தெரியவில்லை என்று நாயை கடிந்து கொண்டு முருகேசனை வாங்க! என்று சொல்லி சிரித்துவிட்டு கையில் இருந்த பையை வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். முருகேசனின் வழக்கமான புன்னகை முகத்தில் இல்லை என்பதை வழியில் வ‌ரும் போதே லட்சுமி கண்டு கொண்டாள். செல்வம் கலேஜ்க்கு போய்விட்டானா? என்று கேட்டு கொண்டே வீட்டில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் முருகேசன். அவன் அப்பவே போய் விட்டான் என்று சொல்லிக்கொண்டு கையில் கொண்டு வந்த தண்ணீரை முருகேசனிடம் கொடுத்தாள். காலையில் எங்கு சாப்பிட்டீர்கள்? என்ன சாப்பிட்டீர்கள் என்ற விசாரிப்புகளை எல்லாம் விசாரித்து விட்டு மெதுவாக பணத்தைப் பற்றி கேட்டாள் லட்சுமி. நான் ஒரு வாரத்திற்கு முன்னமே கண்டிராக்கிடம் கேட்டு வைத்திருந்தேன், அவரும் தருவதாக சொல்லி இருந்தார். ஆனால் இரண்டு நாள் முன்னதாக கண்டிராக் வீட்டில் இருந்து அவருடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று அவருடைய மனைவி போன் பண்ணினதா என்னிடம் சொல்லி விட்டு போனவர் திரும்ப வரவில்லை என்று கவலையுடன் பதில் சொன்னான் முருகேசன். இதை கேட்ட லட்சுமி சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, அப்புறம் "ஒண்ணும் கவலை பட வேண்டாம்" எப்படியும் இன்னைக்கு புரட்டி விடலாம் என்று முருகேசனுக்கு ஆறுதல் கூறினாள். அதன் மர்மம் என்ன என்று அவள் முகத்தை பார்த்தான் முருகேசன்.

மாலை கல்லூரி முடிந்து செல்வம் வீட்டிற்கு வரும் போதே வீட்டு முற்ற‌தில் அப்பா அமர்திருப்பதை பார்த்தான். அப்பாவிடம் நலன் விசாரிப்புகள் எல்லாம் முடித்து விட்டு அடுத்த மாதம் தன‌து கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியு நடக்க போகிறது என்று உற்சாகத்துடன் சொல்லி விட்டு அம்மா? என்று அழைத்த வாறு வீட்டிற்குள் நுழைந்தான். சமையலறையில் இருந்து சிரித்துக் கொண்டே இரண்டு கப்பில் காப்பியுடன் வெளியே வந்தாள் லட்சுமி. அம்மாவின் கழுத்தை பார்த்தவுடன் செல்வத்தின் முகம் மாறியது. அம்மா உன் கழுத்தில் இருந்த செயின் எங்கே? என்று கேட்டான். அதை விடுடா என்று சமாளித்தாள் லட்சுமி. அவன் விடவில்லை எங்கே என்று திரும்பவும் கேட்டான். அது உன்னுடைய கழுத்தில் இல்லாமல் உன் முகம் எப்படியே இருக்கிறது என்று சொன்னான். அப்பா கேட்ட இடத்தில் பணம் கிடைக்கவில்லையாம், உனக்கு பரிட்சைக்கு பணம் கட்ட வேற வழி தெரியவில்லை அதனால் செயினை விற்று தான் பணம் வாங்கி வைத்திருக்கிறேன் என்று பதில் சொன்னாள் லட்சுமி. ஏற்கனவே நிறையா பவுனை என்னுடைய படிப்புக்காக வித்தாச்சி..இது ஒண்ணு தான் உன்னிடம் இருந்தது அதையும் போய் ..எல்லாம் நான் இஞ்சினியரிங் படிக்க ஆசைப் பட்டதால் தான் என்று புலம்பினான் செல்வம். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அடுத்த வருசம் நீ படிச்சி முடிச்சி நல்ல வேலைக்கு போய் வரும் போது இது போல் ஒண்ணு என்ன? ஒன்பது கூட வாங்கலாம் என்று மகனுக்கு ஆறுதல் கூறினாள். சொல்லிவிட்டு அப்படியே கண்ணாடி அருகில் சென்று அதன் அருகில் இருந்த ஒரு நீல கலர் பாசி மாலையை எடுத்து கழுத்தில் மாட்டி விட்டு இது கூட நல்லா தான் இருக்கு என்று செல்வத்தை பார்த்து சிரித்தாள்.




மாதங்கள் உருண்டோடின. அன்று மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை, அன்று காலையிலையே லட்சுமி மிக சந்தோசமாக இருந்தாள். காரணம் சென்னைக்கு வேலைக்கு சென்ற செல்வம் அன்றைக்கு வருவதாக பக்கத்து வீட்டு பூர்ணம் மாமியிடம் போனில் சொல்லிருந்தான். காலையில் இருந்து பத்து முறை வாசலை வந்து பார்த்து விட்டாள். இது போதாது என்று முருகேசனை காலையிலேயே பேருந்து நிலையத்துக்கும் அனுப்பி விட்டாள். செல்வம் கலேஜில் நடந்த கேம்பஸ் இண்டர்வியுலேயே சென்னையில் உள்ள ஒரு முன்னனி நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகி இருந்தான். தொடக்கத்திலேயே ஐந்திலக்கத்தில் சம்பளம் கொடுப்பதாக சொல்லி இருந்தார்கள். படிப்பை முடித்து விட்டு செல்வம் வேலைக்கு சென்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அந்த மூன்று மாதத்தில் இப்போது தான் முதல் முறையாக ஊருக்கு வருகிறான். வாசலில் காலடி சத்தம் கேட்கவே லட்சுமி ஓடி வந்து வாசலை பார்த்தாள். அங்கு செல்வமும், முருகேசனும் நின்று இருந்தார்கள். மகனை கண்டவுடன் இப்படி மெலிந்து போய்விட்டயே! என்று சொல்லிக்கொண்டு கன்னத்தை தடவினாள். அவன் சிரித்துக் கொண்டே போம்மா!. நானே உடம்பு போட்டு விட்டது என்று கவலையாய் இருக்கிறேன் என்று கூறினான். பின்பு வீட்டிற்குள் வந்த செல்வம் கொண்டு வந்த பேக்கில் எதையே தேடினான். இதை லட்சுமியும், முருகேசனும் பார்த்து கொண்டு நின்றனர். பேக்கில் இருந்து ஒரு பாக்சை எடுத்து அதனுள் இருந்த தங்க‌ செயினை அம்மாவின் கையில் கொடுத்தான். இது என்னுடைய முதல் ஆசை பரிசு என்று கூறி சிரித்தான். அதை பெருமையுடன் வாங்கி பார்த்து விட்டு அப்படியே செல்வத்தின் கழுத்தில் மாட்டி விட்டு பின்வறுமாறு லட்சுமி கூறினாள். "வீட்டிற்குள் இருக்க போகிற எனக்கு எதுக்கு இது. இனி நீ தான் நாலு இடம் போகனும், நாலுபேரை பார்த்து பேச வேண்டும்". இதை அமைதியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து பதில் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தான் முருகேசன்.

Friday, February 5, 2010

அம்மா

காலையில் இருந்து நான் ஒருத்தியா தான் எல்லா வேலையும் செய்ய வேண்டி இருக்கு. நேற்று இரவு சாப்பிட்டுப் போட்ட பாத்திரங்கள் எல்லாம் அப்படியே கிடக்குது. சாப்பிட்ட தட்டை வாஷ்பேஷனின் அடியில் போடுவதற்கு முன்னால் அதில் சிறிது தண்ணீர் கூட விட்டு வைக்க முடிய வில்லை. அப்பிடி விட்டு வைத்தால் கழுகுவத்ற்காவது சுலபமாக இருக்கும். எல்லாம் என் தலையெழுத்து என்று புலம்பியவாறு துடப்பத்தை கையில் எடுத்து கொண்டு ஹாலில் நுழைந்தார் விசாலாட்சி.

இதை எல்லாம் கேட்டும் கேட்காததுப் போல அன்றைய செய்தித்தாளில் முழ்கி இருந்தார் நடராஜன். மணி ஒன்பது ஆகுது இன்னும் நீங்க பேப்பர் படிச்சு முடிக்கலை. ஏழு மணியில் இருந்து ஆரம்பித்தது அப்படி என்னத்த தான் படிப்பீங்களோ! இன்னும் முடிந்த பாடில்லை. கல்யாணம் முடிந்த அன்றைக்கே அத்தை சொன்னாங்க என் பையன் படிப்புல கொஞ்சம் மக்கு என்று. நான் என்னவோ பள்ளியில் படிக்கும் படிப்பு என்று தப்பு கணக்கு போட்டு விட்டேன் என்று கூறி சிரித்தாள். இதை கேட்ட நடராஜன் செய்தித்தாளில் இருந்த பார்வையை எடுத்து விட்டு நிமிர்ந்து விசாலாட்சியைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்து விட்டு திரும்ப குனிந்து படிக்க தொடங்கினார். விசாலாட்சி தரையை துடப்பத்தால் சுத்தம் செய்தவாறே, உங்க பொண்ணு இன்னும் துங்கிட்டுதான் இருக்காள், இன்னைக்கு லீவு என்று தான் பேரு மணி ஒன்பது ஆகுது இன்னும் படுக்கையை விட்டு எழுந்திரிக்கவில்லை. அம்மா ஒருத்தி வாரத்தின் ஐந்து நாளும் காலையிலே எழுந்து சாப்பாடுக் கட்டி வேலைக்கு அனுப்பு விடுகிறாளே, இந்த லீவு நாளிலாவது சீக்கிரமாய் எழுந்து அம்மாவுக்கு வேலையில் கூட மாட உதவி செய்வோம், என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அவளுக்கு எப்படி இருக்கும் உங்க இரண்டு பேருக்கும் தான் வேலைக்காரி ஒருத்தி நான் வந்து கிடைச்சிருக்கேன் இல்ல. என்று சொல்லிக் கொண்டே அடுத்த வேலையை பார்க்க போனாள் விசாலாட்சி.

அம்மாவின் பேச்சுகளை எல்லாம் கட்டிலில் கண் மூடிப் படுத்தவாறே காதில் வாங்கிக் கொண்டு அரைகுறையாக மூடி இருந்த போர்வையை இழுத்து தலை வரை மூடினாள் காவ்யா.

நடராஜன், விசாலாட்சி தம்பதிகளுக்கு திருமணம் ஆகிப் ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்தவள் காவ்யா. அதனால் இருவராலும் செல்லமாய் வளர்க்கப்பட்டாள். நடராஜன் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தான் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்று வீட்டில் இருக்கிறார். காவ்யா கணினிப் படிப்பில் பட்டம் பெற்று கடந்த வருடம் தான் ஒரு தகவல் தொழிற்நுட்ப அலுவலகத்தில் பணியில் சேர்ந்து இருந்தாள். விசாலாட்சியும் டிகிரி முடித்தவர் தான். காவ்யா பிறப்பதற்கு முன் அவரும் ஒரு தனியார் பள்ளியில் வேலைப் பார்த்து வந்தார். காவ்யா பிறந்த பின்பு வேலையை விட்டு விட்டு, வீட்டு வேலைகளில் மூழ்கிப்போனாள். இவர்களின் வீடு அமைந்திருப்பது பல்லாவரத்தில் ஆனால் காவ்யா வேலை செய்யும் அலுவலகம் அமைந்திருப்பது மவுண்ட் ரோட்டில். தினமும் வாகனப்பயணம் மட்டும் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அலுவலக நேரத்திலும் கணிப்பொறியை முறைத்துக் கொண்டு இருப்பதால் கண்களில் ஏற்படும் உளைச்சல் மற்றும் புது புராஜெட்கள் இப்போது அதிகமாக் இருப்பதால் தினமும் அதற்க்கான நகல்களை வீட்டில் எடுத்து வந்து படிக்க வேண்டி இருந்தது. இவை எல்லாம் சேர்ந்து காவ்யாவை வாரத்தின் கடைசி இரண்டு லீவு நாட்களை எதிர்பார்க்க வைத்துவிடுகிறது.

அன்றும் அப்படித்தான் மனதில் தூக்கம் அகன்று விட்டாலும் காண்களை விட்டு அகல மறுத்தது. அப்படியே அம்மாவின் வார்த்தைகளை உள்வாங்கி படுத்து இருந்தாள். அம்மாவின் அர்ச்சனைகள் காவ்யாவிற்கு இன்று புதிதல்ல. ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் நடப்பது தான். ஆனால் அன்று என்னவோ அம்மாவின் வர்த்தைகள் அனைத்தும் திரும்ப திரும்ப அவள் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. நாளை கண்டிப்பாக சீக்கிரமாய் எழுந்து அம்மா கோவிலுக்கு சென்று வருவதற்குள் எல்லா வேலையையும் முடித்து விட வேண்டும் என்று மனதில் எண்ணியவாறு படுக்கையை விட்டு எழுந்து நடக்கலானாள்.

மறுநாள் காலை இனிதே பொழுது புலர்ந்தது. விசாலாட்சி தினமும் காலையில் வீட்டிற்கு அடுத்த தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த பின்பு தான் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிப்பாள். அன்றும் வழ்க்கம் போல் கோவிலுக்கு கிளம்பினாள். நடராஜனும் தினமும் காலையில் சிறிது தூரம் வாக்கிங் செல்வது வழக்கம். அவரும் கிளம்பிவிட்டார். காவ்யா இரவு மாற்றியமைத்திருந்த அலாரம் செல் போனில் சிணுங்கியது. தூக்கத்தை விட்டு எழுந்து சமையல் அறைக்கு வந்தாள். குப்பையாக கிடந்த பாத்திரங்களை சுத்தம் செய்து அடுக்கினாள். பின்பு வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தம் செய்து ஆங்காங்கே சிதறி கிடந்த பொருட்களை அதனதன் இடங்களில் அடுக்கி வைத்து விட்டு வாசலில் சென்று கேட்டில் தொங்க விடப்பட்டிருந்த பையில் இருந்த பால் பாக்கெட்டையும் வீசி எறிய பட்டிருந்த நாளிதழையும் எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தாள். நாளிதழை அப்பா அமரும் சாய் நாற்காலியில் வைத்து விட்டு சமையலறை சென்று பால் பாக்கெட்டை உடைத்து காப்பி போட்டாள். அதற்குள் வாக்கிங் சென்று இருந்த நடரஜனும் வந்து இருந்தார். வீட்டில் காவ்யா செய்து இருந்த வேலைகளைப் பார்த்து விட்டு மனதிற்குள் சிரித்து விட்டு நாளிதழை படிக்க அமர்ந்தார். சமையல் அறையில் இருந்து வந்த காவ்யா "வாங்க அப்பா காப்பி குடியுங்கள் என்று தட்டை நீட்டினாள்". எப்போதும் அவர் முகத்தில் உள்ள புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு திரும்பவும் நாளிதழில் மூழ்கினார்.

சற்று நேரத்தில் கோவிலுக்கு சென்றிருந்த விசாலாட்சி வீட்டிற்குள் நுழைந்தார். வீடு சுத்தம் செய்து இருப்பதையும் வீட்டுக் காரரின் ஒரு கையில் காப்பியையும் பார்த்து விட்டு சமையலறைக்கு சென்றார். அங்கு காவ்யா இரண்டு கப்பில் காப்பி ஊற்றிக் கொண்டிருந்தாள். இதை பார்த்தவுடன் விசாலாட்சி காவ்யாவின் கைகளைப் பிடித்து இன்னைக்கு ஒரு நாள் தான் உனக்கு லீவு அப்படி இருக்கும் போது இவ்வளவு சீக்கிரமாய் எதுக்குமா நீ எழுந்து இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டும். கண்ணை பாரு அப்படியே தூக்க கலக்கம் தெரிகிறது என்று கூறி கன்னத்தை தடவி உச்சிமுகர்ந்தாள். நான் ஒருத்தி எதுக்குமா இருக்கிறேன். எல்லா வேலையும் அம்மா நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போம்மா போய் தூங்கு என்றாள். காவ்யா அம்மாவை ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். தாய் மற்றும் மகளுக்குள் நடந்த எல்லா விசயங்களையும் நாளிதழை பார்த்துக் கொண்டே நடராஜன் கேட்டுகொண்டு மனதில் சிரித்தார்.

Related Posts with Thumbnails