Sunday, July 17, 2016

மாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்!!

கடந்த மாதம் இறுதியில் எனது ஊரில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை கல்வி கடன் வாங்கிய மாணவர்கள் அனைவருக்கும் அலைபேசியின் வழியாக அழைப்பு வருகிறது. அலைபேசியில் பேசிய வங்கி ஊழியர்கள் வரும் 26 ம் தேதி மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் சம்பந்தமாக நேரில் வந்து வங்கி மேலாளருடன் பேசுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது, வெளியூரில் இருக்கும் மாணவர்கள், நேரில் வர முடியாவிட்டால் அவர்களுடைய பெற்றோரை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

அவர்கள் அழைத்த தேதியில் காலையிலேயே மாணவர்களும் பெற்றோர்களும் வந்து குழுமி விடுகிறார்கள். வந்தவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வங்கி மேலாளர் அழைத்துப் பேசுகிறார். எப்போது வாங்கிய கல்வி கடனைக் கட்டுவீர்கள்? என்ற பொதுவான கேள்வி கேட்க படுகிறது சிலர் கடனை மொத்தமாகக் கட்டுவதற்கு, தங்களுக்கு வசதி படும் மாதத்தை குறிப்பிட்டு சொல்லுகிறார்கள், பலர் தவணை முறையில் கட்டுகிறோம் அதற்காக வழிமுறையைக் கேட்கிறார்கள். வந்திருந்திருக்கும் மாணவர்களின் விசாரணைக்கும், விபரங்களுக்கும் பதிலளிக்க வங்கி அலுவலர்கள்  மாணவர்களை அழைக்கவில்லை. மாணவர்கள் கல்விக்கடன் வாங்கிய தொகையை மொத்தமாக வங்கியில் எப்போது கட்ட வேண்டும், வங்கிச் சொல்லும் தேதிக்குள் கட்டவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காக தான் அழைத்திருந்தார்கள்.

கடந்த மாத இறுதிக்குள், அதாவது நான்கு நாட்களுக்குள் கல்விக்கடனாக வாங்கிய முழுத் தொகையையும் கட்டுவதாக இருந்தால் வட்டி தள்ளுபடி. ஒரு மாதத்தில், அதாவது இந்த மாதத்திற்குள் கட்டுவதாக இருந்தால் ஒரு நாற்பதாயிரம் ரூபாய் வட்டி சேர்த்து கட்ட வேண்டும், அதற்கு மேல் எடுத்துக் கொண்டால் எழுபதாயிரம் ரூபாய் வட்டி சேர்த்து கட்ட வேண்டும், அதுவும் மூன்று மாதத்திற்குள் கட்ட வேண்டும், இல்லையென்றால் தனியாரிடம் வசூலிக்க நாங்கள் கொடுத்து விடுவோம், அப்போது உங்களுக்கு வட்டி எப்படி வரும் என்று நீங்கள் கணக்கு கூடப் போட்டு பார்க்க முடியாது என்று வந்திருந்த மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பீதியை கிளப்பி அனுப்பியிருக்கிறார்கள். கொசுறு செய்தியாக, அன்றைக்கு வந்த மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கையில் வைத்திருந்த பணத்தை கண்டிப்பாகக் கட்டி செல்லவும் சொல்லியிருக்கிறார்கள், இப்போது பணம் ஏதும் கொண்டு வரவில்லை என்று சொல்லியவர்களிடம், உங்களுடைய பாக்கெட்டை பாருங்கள், பர்ஸை பாருங்கள் என்று அனைத்தையும் சோதித்து 500 ரூபாய் இருந்தாலும் வசூலித்திருக்கிறார்கள்.



வங்கிகள் கல்விக்கடன் கொடுத்ததை வசூலிக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து கிடையாது, ஆனால் அதை வசூலிப்பதற்குச் சரியான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறோம். கல்விக்கடனைத் தவணை முறையில் கட்டுவதற்கு எதனால் வங்கிகள் அனுமதிப்பது இல்லை என்று தெரியவில்லை. முழுத் தொகையையும் மொத்தமாகக் கட்ட வேண்டும் என்று சொல்வதன் விபரமும் நமக்குப் புரியவில்லை. இப்போது ஒரு பத்து வருடங்களாகக் கிராமங்களில் கல்விக் கடனை நம்பி தான் பலரின் கனவுகள் துளிர்விட்டிருக்கின்றன. வங்கிகளில் கடன் வாங்கி கல்வி கற்றவர்கள் கண்டிப்பாகக் கடனை கட்டாமல் ஏமாற்றப் போவது கிடையாது, பெரும்பாலும் அவர்களில் சொந்த ஊரில் இருக்கும் வங்கியில் தான் கடன் வாங்கியிருப்பார்கள், வாங்கிய கடனை அந்த வங்கிகளில் செலுத்தவில்லை என்றால் அந்த வங்கிகளில் வேறு எந்தவிதமான காரியங்களுக்கும் அந்த வங்கியை அணுக முடியாது என்பதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், அதனால் காலம் தாழ்த்தியாவது வங்கிகளில் உள்ள கடனை அடைத்து விடுக்கிறார்கள், இது இப்படியிருக்க வங்கிகளில் நிலுவையில் இருக்கும் கல்விக்கடன்களை வசூலிக்கத் தனியார் முதலாளிகளிடம் மத்திய அரசு கொடுத்திருப்பதை என்னவென்று சொல்வது.

தேசிய வங்கிகளில் வசூல் ஆகாமல் இருக்கும் கல்விக்கடனை ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு 45% என்ற கணக்கீட்டில் விற்றிருக்கிறது. இனி மாணவர்கள் கட்ட வேண்டிய கல்விக்கடனை வசூலிப்பது வங்கிகள் அல்ல, இந்த ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனம் தான். வட்டிகளுடன் சேர்த்து 125% முதல் 145% வரும் பணத்தின் மதிப்பை வெறும் 45% க்கு இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றிருக்கிறது. இந்த 45% பணத்தையும் உடனடியாக, மத்திய அரசுக்கு இந்த நிறுவனம் கொடுப்பது இல்லை, முதலில் 15% பணத்தைத் தான் கொடுக்கிறது, முழுத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலித்த பின்பு தான் மீத பணத்தை இந்த நிறுவனம் மத்திய அரசுக்குக் கொடுக்கும். அப்படியானால் மாணவர்களின் கல்விக்கடனில் அரசுக்கு முதலில் வருவது வெறும் 15% பணம் மட்டும் தான். அந்தத் தனியார் நிறுவனத்திற்கு வரும் லாபத்தைத் தோராயமாக கணக்கிட்டால் நம்முடைய அரசுகள் யாருக்காகத் தரகு வேலை பார்க்கிறது என்பது தெளிவாக தெரியும்.

வெறும் 45% பண மதிப்பிற்கு இந்தக் கல்வி கடனைத் தனியாருக்கு விற்றிருக்கும் மத்திய அரசு அந்தத் தள்ளுபடி சலுகையை நேரடியாக மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாமே. எரிவாயு மானியம் நேரடியாக மக்களின் வங்கி கணக்கில், உர மானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில், அரசின் மானிய தள்ளுபடி அனைத்தும் மக்களின் வங்கி கணக்கில் நேரடியாகப் போடுவோம் என்று மக்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைத்து கொண்டிருந்த இந்தச் சலுகைகளை பெற வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு பெரிய விளம்பரம் செய்த மத்திய அரசு, கல்விக்கடனை மட்டும் மாணவர்களுக்கு நேரடியாக அந்தச் சலுகையை கொடுக்காமல் தனியார் முதலாளியைக் கூட்டு சேர்த்ததில் தெரிந்து விடுகிறது இவர்கள் சொல்லும் வளர்ச்சி யாருக்கு என்று.

சமீபத்தில் கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு கொடுத்து அதற்குள் அரசிடம் நேரடியாகக் கொண்டு வந்து ஒப்படைத்தால் எந்தவித கெடுபிடியும் இருக்காது என்று கருப்பு பண முதலைகளுக்குச் சலுகைகளை பிரதமர் நேரடியாக அறிவிக்கிறார். ஆனால் கல்வி கற்க மாணவர்கள் வாங்கிய வங்கிக் கடனை வசூலிக்கத் தனியார் முதலாளிகளிடம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்படைக்கிறார், ஏன், இந்த நாட்டில் எவரெல்லாம் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று அரசுக்குத் தெரியாதா? அவர்களிடமிருந்து அந்தக் கருப்பு பணத்தை வசூலிக்க இப்படி தனியார் முதலாளிகளை நியமிக்க வேண்டியது தானே, அதெப்படி முடியும் திருடர் கூட்டத்தைப் பிடிக்க திருடர் கூட்டம் ஒத்துக் கொள்ளுமா என்ன?, இப்படியான செயல்களில் எல்லாம் முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள், அனைத்து வங்கிகளிலும் கடன் வாங்கிய மல்லையாவின் கடனை நான் வசூலித்துத் தருகிறேன் என்று ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் முன்வருமா? இல்லை இந்த முதலாளிகளின் கூட்டமைப்பான நாஸ்காம்(NASSCOM) தான் மல்லையாவின் கடனுக்கு பொறுப்பேற்குமா? ஒரு காலமும் அப்படி நடக்கப் போவது இல்லை, ஆனால் ஏழை, எளிய மக்களின் விவசாய மற்றும் கல்வி கடன்களை வசூலிக்க அடியாட்களுடன் இந்தத் தனியார் முதலாளிகள் முன் வருவார்கள்.

ஒரு பக்கம் அரசு வங்கிகளிலிருந்து மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கத் தனியார் நிறுவனங்களை நியமிக்கிறது, மறு பக்கம் அரசுத்துறை நிறுவனமான அஞ்சல் துறையை, தனியார்கள் செய்ய வேண்டிய வியாபாரத்தைச் செய்ய வைக்கப் போவதாக அறிவிக்கிறது. இது எந்த மாதிரியான கொள்கை என்று தெரியவில்லை. இப்படியே போனால் இன்னும் சில வருடத்தில் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கும் ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் என்று பிரித்து கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

போங்க பாஸ்!, நீங்க காமெடி பண்ணிட்டு! இப்ப மட்டும் அரசு தான் மாநிலம் மற்றும் மாவட்டங்களை நிர்வகிக்கிறதா என்ன?. தாது மணல், நிலக்கரி, கிரானைட், எரிவாயு என்று மொத்த இயற்கை வளங்களும் தனியார் நிறுவனங்கள் கையில்! அப்படியானால் அரசு?


.

Friday, July 15, 2016

சாருவின் அறிவுரைகள்_யாருக்கு?

சாருவின் கட்டுரைகளை இப்போது படிக்கும் போதெல்லாம் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்திருக்கும் வயசான பெரிசுகள் இன்றைய இளைய தலைமுறையை பார்த்து "லோகம் கெட்டு போயிடிச்சி பார்த்தேளா!" என்று புலம்பும் விதமாகத் தான் இருக்கிறது.  எங்கேயோ ஒரு முலையில் அமர்ந்து புலம்பும் பெரிசாக இவரும் இருப்பாரானால் நாமும் "போகட்டும்" என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால் இவரின் கழிவிரக்க புலம்பல்கள் எல்லாம் பத்திரிக்கைகளில் வரும் போது தான், நாம் இவற்றை விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. சமீபத்தில் வந்த தினமலர் பத்திரிக்கைகளில் இவர் எழுதிய கட்டுரையில் முதல் பத்தியிலேயே முரண்பாடுகளும், தடுமாற்றமும் தான், நீங்களே படித்து பாருங்கள்.

"வெறும், 100, 'லைக்' மட்டுமே வந்தால் மனம் பதறுகிறது; முகம் வாடுகிறது." இப்படி பெண்களை பற்றி எழுதியவர் அடுத்த வரியில் இப்படி எழுதுகிறார்.

"எந்தப் பெண்ணின் புகைப்படம் வரும் என்று, தவமாய்க் கிடக்கிறது மாபெரும் இளைஞர் கூட்டம். ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தவுடன், மாறி மாறி, 'சரசர' வென்று லைக்குகள் குவிகின்றன. வெறும் லைக்குகள் மட்டுமல்ல. 'ஆசம்... அடடா என்ன அழகு, மனம் கிறங்குகிறது, அழகே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை"

தர்க்கரீதியாக பார்த்தால், மேலே சொன்ன இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே உண்மையில்லை, பெண்கள் என்ற அடையாளத்துடன் கவர்ச்சியான புகைப்படங்களையும், கிளுகிளுப்பு ஏற்றும் கவிதைகளையும் பதிவிடுபவர்கள் உண்மையில் யார் என்று முகநூலில் அனா ஆவன்னா தெரியாத கத்துக்குட்டிகளுக்கு கூடத் தெரியும். உண்மை இப்படி இருக்க இவரோ அந்தப் படங்களுக்கு ஜொள்ளு விட்டு திரியும் சிறு கூட்டத்தை மிகைப்படுத்திப் புலம்புகிறார்.

"இவ்வளவுக்கும் அந்தப் பெண் செய்த சாதனை என்னவென்று பார்த்தால், காலையில் எழுந்து தன் புகைப்படத்தைப் போட்டு, 'குட் மார்னிங்' சொன்னார்; அவ்வளவு தான். இத்தனை லைக்குகளையும், கமென்டுகளையும் பார்த்த பெண்ணின் மனம் குதூகலிக்கிறது."

பெண்கள் தன்னுடைய புகைப்படத்தைப் போடுவது அவ்வளவு பெரிய குற்றமா?.. உங்களுக்கு ஏன் சாரு வயிறு எரிகிறது? தனக்கு வராத லைக்குகளும் கமெண்டுகளும் இவர்களுக்கு வருகிறதே! என்ற ஆதங்கம் தான் இதில் வெளிப்படுகிறது. தாங்கள் இந்தப் பதிவிற்கு எதற்காக உங்களுடைய வரைபடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்ளும் வாசகர் கடிதத்தில் கூட "சாருவின் புகைப்படம் இல்லாமல் பத்திரிக்கையில் கட்டுரையா?" என்றெல்லாம் அள்ளித் தெளிப்பது எதற்காக?. தங்களின் புகைப்படம் பதிந்த டி-ஷர்டை எதற்காக வெளியிட்டீர்கள்?. பொதுவெளியில் வரும் போதெல்லாம் என்னைப் புகைப்படம் எடுக்க முடியுமா ? என்னைக் காணொளி எடுக்க முடியுமா? என்று கூவி கூவி அழைப்பது எதனால்? சமீபத்தில் உங்களுடைய புத்தகத்தில் உள்ள அட்டைப் படத்தில் தங்கள் புகைப்படத்தை சரியாக லே-அவுட் செய்யவில்லை என்று எத்தனைக் கட்டுரை எழுதினீர்கள்?

"எதார்த்த உலகில் ஒரு பெண்ணை, ஆண் எப்படி எதிர்கொள்கிறான்? எந்தப் பெண்ணிடமும் ஒரு ஆண் எடுத்த எடுப்பில், 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!' என்று சொன்னால், உதை தான் விழும்."

எதார்த்த உலகம் மட்டுமல்ல, இணைய உலகிலும் "உதை தான் விழும்" சாருவிற்கு விழுந்த உதை மறந்து விட்டது என்று நினைக்கிறேன். உங்களின் முகநூல் பேச்சுக்கள் அதற்கான எதிர்வினைகள் இன்றும் இணையத்தில் இருக்கிறது.

"ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'சாட்டிங்'கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, 'வாடி, போடி' என்று அழைக்க முடியும்."

இந்த மைனர் குஞ்சு வாயில் வடை சுடுகிறது, சாரு அந்த மைனர் குஞ்சு சுட்ட வடையை எடுத்துக் கொண்டு வந்து பொதுவெளியில் வைத்து உளுந்து வடையா? பருப்பு வடையா? என்று கிண்டி பார்க்கிறார். அய்யோ சாரு, கிண்டிப் பார்க்க வேண்டியது வடையை அல்ல மைனர் குஞ்சை. சமீபத்தில் இறைவி படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்திருக்கும் ஆண் நண்பர், அந்தப் பெண் நண்பரிடம் சொல்லுவது தான் எனக்கு ஞாபகம் வருகிறது, எனக்கும் இது தான் முதல்முறை, ஒரு பெண் கூட என்னைக் கிட்ட சேர்க்க மாட்டார்கள், வீட்டிற்குக் கூட அழைக்க மாட்டார்கள் என்ற நிதர்சன உண்மையை  வருத்தத்துடன்  சொல்வார், அதற்கு அந்தப் பெண் நண்பர் "அப்ப நீ அட்டைக் கத்தியா" என்று கேட்டு சிரிப்பார்.

நிதர்சன உலகில் சிலர், இந்தப் பெண்ணை நான் வளைத்துக் காட்டட்டுமா? அவளை என்னிடம் "ஐ லவ் யு" சொல்ல வைக்கட்டுமா? என்று உதார் விட்டுக் கொண்டு நடப்பார்கள், நிஜத்தில் தன்னால் செய்ய முடியாத ஒன்றை, தான் செய்ததாகவும், செய்யப் போகிறதாகவும் சொல்லிக்கொண்டு கனவுலகில் மிதப்பார்கள், அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் இப்படியானவர்களின் பேச்சை பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஜெயமோகன் அவர்கள் சாருவிற்கு புனைவு எழுத வாராது என்று சொல்லியதை படித்திருக்கிறேன். சாருவின் எழுத்தில் அதை பார்த்திருக்கவும் செய்திருக்கிறேன், கீழே சாரு எழுதியிருக்கும் பத்தியில் இருப்பது புனைவா? நிதர்சனமா? ஒரு வித தடுமாற்றத்துடனே தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

"'வாடி, போடி!' ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை."

" 'சாட்டிங்'கின் முடிவில் அது, 'செல்லம்' வரை போய் விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்."

முதல் பத்தியில் "தப்பு தாண்டா பேச்சு எதுவும் இல்லை" என்று பூசி மெழுகுகிறார், அப்படியே அடுத்த பத்தியில் "செல்லம் வரை போய் விட்டது" என்று அங்கலாய்க்கிறார்.

ஒரு பெண் தன்னுடன் மட்டும் தோழியாக பேசினால் அது "சுதந்திரம்" அவள் அப்படியே தோழியாக இன்னொரு ஆணிடம் பேசினால் "கட்டற்ற சுதந்திரம்" உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் தீயை வைக்க... போங்கய்யா போங்க !!


கட்டுரையின் இணைப்பு:


சாருவின் தினமலர் முதல் கட்டுரைக்கு நான் எழுதிய முகநூல் பதிவு:

இது தான் சாத்தான் வேதம் ஓதுவது!

முகநூலில் உள்ள உள் பெட்டியில் இளம் பெண் ஒருவரிடம் இந்த எழுத்தாளர் செய்த வக்கிர பேச்சுகளின் ஈரம் இன்னும் காயவில்லை, அதற்குள் வந்துவிட்டார் லோகத்துக்கு அறிவுரை சொல்ல... பிரபல கவிஞர் சொன்னது போல் போங்கய்யா! போய் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கள் என்று சொல்ல மாட்டேன்! போய் முதலில்‌ பொதுத் தளத்தில் பெண்களிடம் எப்படிப் பேசுவது என்று படியுங்கள்! அப்புறம் வந்து பொங்கல் வைக்கலாம்.

பாமினி என்று பெண் வாசகருக்கு இந்த எழுத்தாளர் சொன்னதாவது இவருக்கு ஞாபகம் இருக்கிறதா? மறந்துவிட்டது என்றால் அவருடைய‌ விமர்சகர் வட்டம் வந்து கேட்டால் பக்குவமாகச் சொல்லுவார்கள்.

பெண்களைப் பற்றிய இவரின் மனோபாவத்தை இயக்குநர் மிஸ்கின் அவர்களிடம் கேட்டால் தெரியும்!

வாசகர்களுக்கு மறதி என்று ஒன்று இருப்பது இவர்களுக்குச் சாதகமாக போய்விடுகிறது ..

கட்டுரையின் இணைப்பு:

மனோபாவம் மாற வேண்டும்!
.

Tuesday, July 12, 2016

பிச்சைப் பாத்திரம் ஏந்தி!!

ஊரில் இருக்கும் போது, வழக்கமான ஒரு நாள். காலையில் துக்கம் எழுந்து, கடன்களை முடித்து காபி குடிக்கும் போது அன்றைய தினம் எனக்கான அலுவல்கள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை என்று தோன்றியதால் நாகர்கோவிலில் கடை வைத்திருக்கும் நண்பனைப் பார்த்து வரலாம் என்ற எண்ணம் வந்தது. ஊரில் இருக்கும் போது இப்படியான நாட்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கும். உறவினர்கள் எவராவது அவர்கள் வீட்டிற்கு அழைத்திருப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு வேலையாக அரசு அலுவலகங்களுக்குச் சென்று வர வேண்டியிருக்கும், இல்லையென்றால் குடும்பத்தில் சுப காரியங்கள் ஏதாவது இருக்கும். அப்படி எதுவும் இல்லையென்றால் மனைவி தன்னுடைய வீட்டிற்குச் சென்று வரலாம் என்று அழைப்பார்கள். அன்றைக்கு இப்படியான லவுகீக‌ வேலைகள் ஏதும் இதுவரை காதுக்கு வரவில்லை.  அதனால் காலையிலேயே குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

நாகர்கோவிலில் கடை வைத்திருக்கும் நண்பன் என்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். பொறியியல் முடித்து சென்னை, பெங்களூர், ஹைதிராபாத் என்று பல இடங்களில் இருக்கும் சிறு சிறு நிறுவனங்களில் வேலைப்பார்த்து விட்டு, எதிலும் நிரந்தரமாகப் பணி செய்யப் பிடிக்காமல் ஊருக்கு வந்து, வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் நாகர்கோவிலில் ஒரு மொபைல் போன் சர்வீஸ் சென்டர் தொடங்கியிருந்தான். சென்ற முறை நான் ஊருக்கு வந்திருந்த போது என்னிடம் தான் கடை தொடங்கியிருப்பதை சொல்லி, விசிட்டிங் கார்டு கொடுத்து ஒரு நாள் கடைக்கு வருமாறு அழைத்திருந்தான், அப்போது என்னால் செல்ல முடியவில்லை. சவுதியில் இருக்கும் போதும் ஒருமுறை என்னை அழைத்து விசாரித்திருந்தான், இந்தமுறை ஊருக்கு வரும் போது கண்டிப்பாகக் கடைக்கு வருவதாகச் சொல்லியிருந்தேன்.

நண்பர் கடை வைத்திருப்பது மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு எதிர் புறம் இருக்கும் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில். இரு சக்கர வாகனத்தில் வேப்பம்மூடு ஜங்சன் வழியாகப் பேருந்து நிலைய சாலையில் சென்றால் திரும்ப வர முடியாது, அது ஒரு வழிப்பாதை, ஒரு நான்கு கிலோ மீட்டர் சுற்றினால் தான் திரும்பவும் வேப்பம்மூடு ஜங்சனுக்கோ அல்லது செட்டிக்குளத்திற்கோ வர முடியும். அதனால் மீனாட்சிபுரம் பேருந்து நிலைய சாலையில் ஏதும் வேலையிருந்தால் நான் பெரும்பாலும் என்னுடைய வாகனத்தை நகராட்சி பூங்காவிற்கு எதிர் புறத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, ஆக வேண்டிய வேலைகளை நடந்து சென்று முடித்துவிட்டுத் திரும்ப வந்து வாகனத்தை எடுத்துச் செல்வேன். நான்கு கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் சுற்றுவதில் பிரச்சனையில்லை, ஆனால் அந்தச் சாலையில் செல்லும் வாகனம் அனைத்தும் கடும் நெருக்கடியில் ஆமை வேகத்தில் நகரும், சாலையும் குண்டும் குழியுமாக இருக்கும். முன்னால் செல்லும் வண்டியிலிருந்து வரும் புகை மற்றும் அது கிளப்பும் செம்மண் துகள் மொத்தம் உங்களை முகத்தில் வந்து ஒட்டிக் கொள்ளும்.  மழைக்காலமாக இருந்தால் சொல்லவே வேண்டாம், சேறும் சகதியுமாக உங்களை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும். இதற்குப் பயந்தே அந்தச் சாலையில் நடந்து சென்று ஆக வேண்டிய வேலையைப் பார்த்து விடுவது.

நான் வில்லுக்குறியிலிருந்து கிளம்பி கலெக்டர் அலுவலகத்திலிருந்து நேராக செட்டிக்குளம் போகாமல், இடது பக்கம் திரும்பி டதி மேனிலைப் பள்ளி வழியாக நாகர்கோவில் நகராட்சி பூங்காவிற்கு வந்தடைந்தேன். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கும் நேரம் தாண்டியிருந்ததால் பெரிய அளவில் வாகன நெருக்கடி இல்லை. அதனால் வீட்டிலிருந்து கிளம்பிய இருபது நிமிடத்தில் அங்கு வந்தடைந்திருந்தேன். இதுவே ஒரு அரை மணி நேரம் முன்னதாக வீட்டிலிருந்து கிளம்பியிருந்தால், கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் வாகனங்களின் நெருக்கடியில் சிக்கியிருப்பேன். நான் இருபது நிமிடத்தில் கடந்து வந்த சாலையில் ஒரு எட்டு பொறியியல் கல்லூரியும், இரண்டு கலைக் கல்லூரியும் இருக்கிறது. காலையில் இந்தச் சாலையானது வாகன நெரிசலில் விழிபிதுங்கித் தவிக்கும்.

காலையில் நகராட்சி பூங்காவிற்கு எதிரில் இருக்கும் இடத்தில் பார்க்கிங் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல, சாலையின் ஓரம் ஒரு வரிசையில் தான் வாகனங்கள் நிறுத்த முடியும். கடைகளில் வேலைபார்ப்பவர்கள் மற்றும் நகருக்குள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வருபவர்கள் என்று எல்லோரும் அந்த இடத்தில் தான் தங்களுடைய இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். நான் வந்த நேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முழுமையாக அந்த பார்க்கிங் நிரம்பியிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி மெதுவாக தள்ளிக் கொண்டே வந்து ஏதாவது ஒரு இடைவெளி இருக்கிறதா? என்று பார்த்தேன். சிறிது தூரத்தில் ஒரு இடைவெளி இருப்பது கண்ணுக்கு புலப்பட்டது. அவசரமாக வண்டியை தள்ளிக் கொண்டு அதில் விடுவதற்கு முனைவதற்குள் ஒரு வண்டி என்னை இடிப்பது போல் சீறிக் கொண்டு வந்து அந்த பார்க்கிங் இடத்தை நிரப்பியது.

எனக்குக் கடுங்கோபம், நான் வண்டியை அந்த இடைவெளியில் தான் பார்க்கிங் செய்ய வருகின்றேன் என்பதை வண்டியை விட்டவர் ஊகித்திருக்கக் கூடும், அதற்காகத் தான் அவ்வளவு வேகமாக அவர் வண்டியைக் கொண்டு வந்து அதில் பார்க்கிங் செய்தார். முறைத்துக் கொண்டே, ஏன்டா! என்னோட கவட்டைக்குள்ள கொண்டு வந்து வண்டியை விட வேண்டியது தானே! என்று கேட்பதற்கு வாய் வரை வந்த வார்த்தையை, அவருடைய கால் சட்டையைப் பார்த்தவுடன் கேட்காமல் மென்று விழுங்கினேன்.

சாரி தம்பி! கொஞ்சம் அவசரம், அதான்! அதோ, அந்தப் பக்கம் ஒரு இடம் காலியாக இருக்குது அங்க விடுங்க! என்று சொல்லிவிட்டு என்னுடைய முகத்தைக் கூட திரும்பிப் பார்க்காமல் எதிர்த் திசையில் இருந்த டீக்கடையை நோக்கி வேகமாகச் சென்றார். அந்த டீக்கடையில் நின்ற இருவர் இவரைப் பார்த்தவுடன் லேசாகத் தலை கவிழ்ந்து வணக்கம் வைத்தனர். இவரும் பதிலுக்கு தலையை ஆட்டிக் கொண்டு அவர்களை நெருங்கினார். மூன்று பேரும் அணிந்திருந்த காக்கி நிறத்திலான கால் சட்டை அவர்கள் காவல் துறை என்பதை ஊர்ஜிதம் செய்தது. மூவரும் காலில் அணிந்திருந்த ஷூ அவர்களின் கடமையை பளிச்சிட வைத்தது.

அந்த போலிஸ்காரர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன், நல்ல வேளை ஒரு வண்டி நிறுத்துவதற்கான இடம் காலியாக இருந்தது. அதில் வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு வேப்பம்மூடு சிக்னல் கடந்து பேருந்து நிலையத்தை நோக்கி மெதுவாக நடந்தேன். எதேச்சையாகத் திரும்பி பார்த்த போது அந்த மூன்று போலிஸ் காரர்களும் என் பின்னால் சிறிது தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

நடந்து செல்லும் வழியில், அப்போது தான் ஒவ்வொரு பிளாட்பார கடைகளும் துளிர் விடத் துவங்கியிருந்தது, பெரிய நீல நிற பிளாஸ்டிக் கவர்களில் நிறைத்து வைத்திருந்த செருப்புகள், பேக்குகள், குடைகள் மற்றும் வளையல்கள் போன்ற பொருட்களை அடுக்கி வைக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை கூடைகளிலிருந்து எடுத்து பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் பேப்பர் விரித்துக் கூறு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். அதைக் கடந்து சிறிது தூரம் கடந்து பூ விற்பவர்களின் வரிசை ஆரம்பித்திருந்தது.

சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டு நடந்த என்னுடைய மனதில் திடீரென அந்த போலிஸ்காரர்களின் ஞாபகம் வரவே திரும்பவும் திரும்பி அவர்கள் வருகிறார்களா? என்று பார்த்தேன். இப்போதும் அவர்கள் மூன்று பெரும் நான் போய் கொண்டிருக்கும் திசையில் தான் வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு என்னவோ, அவர்கள் மூவரும் என்னைத் தான் பின் தொடருகிறார்கள்! என்ற எண்ணம் முன் மூளையில் தோன்றி என்னை சல சலக்க வைத்தது. நான் நடந்து கொண்டிருக்கும்  பிளாட்பாரத்தை ஒட்டி ஒரு பழக்கடை இருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் போது அவசர அவசரமாக மூன்று தோசையை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டு விட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தது, அதன்பிறகு இது வரையிலும் தொண்டையை எதுவும் நனைக்காததால் பழக்கடையில் முன்னால் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற சர்பத் பாட்டிலை அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் நாக்கு மேலும் வறண்டது.

அந்த போலிஸ்காரர்கள் என்னைத் தான் பின் தொடர்கிறார்களா? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, அந்தக் கடையில் மேல் சட்டை அணியாமல் கை பனியனுடன் இருந்த பெரியவரிடம் ஒரு சர்பத்! சொல்லிவிட்டுத் திரும்பி நின்றேன். பழ சர்பத் போடட்டுமா தம்பி! நல்ல பழுத்த நயம் பேயன் பழம் இந்த கிடக்கு பாருங்க! என்று கட்டி தொங்க விடப்பட்டிருந்த வாழைக்குலையை காட்டிய கடைக்காரரிடம், வேண்டாங்க! வெறும் சர்பத் ஒரு முழு எலுமிச்சை பழம் பிழிந்து போடுங்கள்! என்று சொல்லிக் கொண்டு, சிறிது தூரத்தில் பேருந்து நிலையத்திற்குள் இறங்கும் படிக்கட்டுகளில் வரிசையாக அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களின் மீது என்னுடைய கவனம் சென்றது.

ஆணும் பெண்ணுமாக வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அழுக்கு தரித்த ஆடையுடன், தண்ணீர் கண்டு பல வருடங்கள் ஆன தேகத்துடன் கையில் தட்டுடனும், சிலர் அழுக்கு துணி மூட்டைகளைக் கக்கத்தில் வைத்துக் கொண்டும் வழியில் வந்து போவோரிடம் கை நீட்டி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலை நேரமாக இருந்ததால் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கவில்லை. மாலை நேரமாக இருந்தால் அவர்கள் இவ்வளவு சவுகரியமாக அமர்ந்து, இந்த இடங்களில் பிச்சைகள் கேட்க முடியாது. அலுவலகம் முடிந்து, வீட்டிற்குச் செல்ல பேருந்து பிடிக்க வரும் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து நேரத்தைக் குறிவைத்து இயங்கும் பேருந்துகளை தேடிவரும் மாணவர்கள், கிராமங்களிலிருந்து வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிச் செல்லும் கூட்டம் என்று இந்தப் படிக்கட்டுகள் எப்போதும் பரபரப்பாக இயங்கும்.

அந்தப் பிச்சை எடுப்பவர்கள் கூட்டத்தில் இடையில் அமர்ந்திருந்த ஒருவர் மீது மட்டும் என்னுடைய பார்வை கொஞ்சம் ஆழமாகப் பதிந்தது, அவருக்கு உடலில் எந்தவித ஊனமும் எனது கண்களுக்கு தெரியவில்லை, மற்றவர்களை விட இவரது ஆடையில் அழுக்கு குறைவாகவே இருந்தது. தலைமுடி செம்பட்டை பாய்ந்து, ஒரு வாரம் சவரம் செய்யாத தாடியுடன், கழுத்தில் ஒரு பெரிய கருப்பு கயிறு கட்டி கையில் ஒரு கீறலான சில்வர் தட்டுடன் அமர்த்திருந்தார். பக்கத்தில் ஒரு கை இழந்த ஒருவர், வாழை இலை பொதிந்த பார்சலிலிருந்து எதையோ எடுத்துச் சாப்பிட்டு கொண்டிருந்தார். இவர் அவரை ஏக்கத்துடன் பார்ப்பது போல எனக்குத் தோன்றியது.

தம்பி சர்பத்! என்று சொல்லிய குரலைக் கேட்டு திரும்பி, கடைக்காரர் கொடுத்த வெளிர் மஞ்சள் நிற சர்பத் நிரம்பிய கண்ணாடி கப்பை வாங்கிக் குடிக்க துவங்கினேன். வறண்ட நாவிற்குக் குளிர்ச்சியாக இறங்கிய இனிப்பும், புளிப்பும் கலந்த பானம் அடி வயிறு வரை நனைத்தது. எவ்வளவு? என்று கடைக்காரரிடம் கேட்டேன். ஒரு சர்பத் பத்து ரூபாய் தம்பி, நீங்க முழு பழமும் பிழிய சொன்னீங்க! பன்னிரண்டு ரூபாய் கொடுங்க! என்றார். பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, திரும்பி அந்த போலீஸ்காரர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்தேன். அவர்கள் வருவதற்கான அறிகுறி ஏதும் என் கண்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் வந்த வழியாகத் திரும்பி சென்றிருக்க வேண்டும், அல்லது என்னைத் தாண்டி சென்றிருக்க வேண்டும், என் பார்வையிலிருந்து தவறி என்னைத் தாண்டி செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. நான் நிற்பதற்கு எதிர்த் திசையில் இருக்கும் கடைகளுக்குள் சென்றிருக்க வாய்ப்பு உண்டு, ஆனால் அங்கு இருப்பது துணிக்கடைகளும், செருப்பு கடைகளும். போலிஸ்காரர்கள் அப்படியான கடைகளுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு.

அந்த பழக் கடையிலிருந்து நகர்ந்து பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்கும் படிக்கட்டில் நடந்தேன். நான் அந்த பழக் கடையிலிருந்து வேடிக்கை பார்த்த பிச்சைக்காரர் இப்போது என்னுடைய முகத்தைப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. அனிச்சையாக என்னுடைய கை பாக்கெட்டுக்குள் சென்றது, ஒரு பத்து ரூபாயை எடுத்து அவருடைய தட்டில் போட்டுவிட்டு, மற்ற பிச்சைக்காரர்கள் சுதாரிப்பதற்குள் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

சிறிது தூரம் நடந்து வரும் போது மேல் பாக்கெட்டிலிருந்த‌ மொபைல் போன் அலறியது, சாலையில் வண்டிகள் சென்று வரும் ஒலியில் எதுவும் பேச முடியாது என்பதால், அருகில் இருந்த செருப்பு கடையின் சுவர் ஓரமாக நின்று மொபைலை ஆன் செய்து பேசினேன். நண்பன் ஒருவன், வெளிநாட்டிலிருந்து அழைத்திருந்தான். அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, என்னைத் தாண்டி ஒரு சிலர் வேகமாக ஓடினார்கள், நானும் திரும்பி என்னவென்று அவர்கள் ஓடும் திசையில் பார்த்தேன். இப்போது அந்தப் பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்த படிக்கட்டுகளை சுற்றி ஒரு பெரிய கூட்டம் சேர்ந்திருந்தது.

நண்பனிடம், இரவு அழைக்குமாறு சொல்லிவிட்டு, மொபலை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு, கூட்டத்தில் ஒருவனாக நானும் வந்து என்னவென்று எட்டிப் பார்த்தேன். இரு சக்கர வாகன நிறுத்தும் இடத்தில், எனது வண்டியை நிறுத்தப் போகும் இடத்தில் அவசரமாகக் கொண்டு நிறுத்திய போலீஸ்காரர் இப்போது நான் பத்து ரூபாய் பிச்சை போட்ட பிச்சைக்காரரின் பிடரியை இடது கையால் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பிச்சைக்காரர், விடுங்க சார்! என்கிட்ட ஒண்ணும் இல்ல! சொன்னா கேளுங்க! விடுங்க சார்! என்று திமிறி கொண்டிருந்தார்.



பிச்சைக்காரர் முழு பலத்தை கூட்டி போலீஸ்காரரின் பிடியிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. எங்கல வச்சிருக்க! மடிய அவுருல! என்று சொல்லியவாறு வலது கையால் பிச்சைக்காரரின் இடுப்புத் துணியை பிடித்து இழுக்கச் சாணி தாள் பொதிந்த ஒரு பொட்டலம் கீழே விழுந்தது. பொட்டலம் கீழே விழுந்த கணம், போலீஸ்காரரின் கை பிச்சைக்காரரின் கன்னத்தில் பதிந்தது. விழுந்த அடியின்
வீச்சு என்னுள் அதிர்ந்தது, அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. அதற்குள் அந்த இடம் முழுவதும் பெருங்கூட்டம் வேடிக்கை பார்க்க கூடியிருந்தது. மற்ற இரு போலீஸ்காரர்களும் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து போங்கய்யா! போங்கய்யா! கூட்டம் போடாதீங்க! போங்க! போய் வேலையை பாருங்க! என்று கத்தினார்கள்.

ஆண்களும் பெண்களும் வாயில் எதை எதையோ முனகியவாறு அவர்கள் தம் வேலையைப் பார்க்க கிளம்பினார்கள். நானும் திரும்பி நடந்தேன், கையிலும், தோளிலும் சில்வர் மற்றும் பித்தளை நிறத்தில் மாலையாகத் தொடங்கவிடப்பட்ட ஊக்குகளையும் பாச்சா உருண்டை பாக்கெட்டுகளையும் கொண்டு என்னுடன் திரும்பி நடந்த முதியவர் "காலம் போற போக்கை பாத்தியளா தம்பி! இந்த வயசுல இவனுக்கு இது தேவையா! காலேஜ் பயலுவளுக்கு கஞ்சா விக்கிறான்! இன்னா மாட்டிடான் இல்லா! உள்ள வச்சி எலும்பை எண்ணி புடுவானுங்க!" என்று என்னிடம் சொல்லிவிட்டு சாலையைக் கடந்து சென்றார். சாலையில் சென்ற ஆட்டோவின் பின்னால் "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்று எழுதியிருந்தது.  ஒரு சினேக பார்வையுடன், ஆட்டோவும் முதியவரும் சென்ற திசையைப் பார்த்து கொண்டு என் வழியில் நடந்தேன்.

.

Friday, July 8, 2016

இதற்குத் தான் இவ்வளவு பில்டப்பா!!

அப்போது நான் ஓமான் மஸ்கட்டில் உள்ள எனது அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்தேன். வார இறுதி நாட்களில் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடச் செல்லுவோம், நாங்கள் கிரிக்கெட் விளையாடும்  இடம் ஒரு பெரிய ஓடை, எப்போதாவது அந்தப் பாலைவனத்தில் மழையினால் பெரு வெள்ளம் வந்தால், இந்த ஓடையின் வழியாகத் தான் நீர் வழிந்தோடும். நான் அங்கிருந்த ஆறு மாதத்தில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை என்பது வேறு கதை. அந்த ஓடையில் கரடு முரடாக இருந்த இடங்களையும், புதர்களையும் கொஞ்சம் திருத்தி  எங்களுக்கு விளையாடுவதற்கு வசதியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தோம், வார இறுதி நாட்களில் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் அந்த ஓடையில் அனைவரும் வந்து நேர்ந்து விடுவோம். தமிழ் நண்பர்களே பதினைந்து பேருக்கு மேல் இருப்போம், இதில்லாமல் ஹைதிராபாத் நண்பர்கள் ஒரு இரண்டு, மூன்று பேர் வருவார்கள்.

எங்களுக்குள் இரண்டு அணியாகப் பிரித்து விளையாடுவோம். விளையாட்டு மிக ஆக்ரோஷமாக இருக்கும், காரணம் அலுவலகத்தில் ஒன்றாகப் பணி செய்யும் போது இருக்கும் அனைத்து ஈகோக்களுக்கும் தீனி போடுவதாக இந்த கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். அலுவலகம் என்று இருந்தால், இரண்டு மூன்று குழுக்கள் இருக்கும், எங்கள் மஸ்கட் அலுவலகத்திலும் அது போல் உண்டு, இந்தக் குழுக்களை மறைமுகமாக ஊக்குவிப்பவர்கள் என்று சில பெரிய தலைகள் இருப்பார்கள். இப்படியான பெரிய தலைகள் எதிர் எதிர் அணிகளில் இருந்தால் சொல்லவே வேண்டாம், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை விட மோசமாக இருக்கும். அனல் பறக்கும் போட்டியில் கேலி, கிண்டல்களுக்குப் பஞ்சம் இருக்காது, சில நேரங்களில் இந்தக் கிண்டல்களே மற்றவர்களைச் சீண்டுவதாக இருக்கும், அதன் விளைவு, பந்தைத் தூக்கி அடிப்பது, இல்லையென்றால் பேட்டை தரையிலோ ஸ்டம்பிலோ வீசுவது நடக்கும், எப்படி இருந்தாலும் எங்களுள் எவராவது ஒருத்தர் அந்தச் சூழ்நிலையை சமாளித்துத் தொடர்ந்து விளையாட வைத்து விடுவார்.

ஒரு நாள் அந்த ஓடையில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வழக்கத்திற்கு மாறாக எங்களுடைய ஜெனரல் மேனேஜர் வாக்கிங் செல்லுவதற்கு அந்தப் பக்கம் வரவே, அவரையும் களத்தில் இறக்கிவிட்டோம். தொடர்ந்து ஒரு சில வாரங்கள் எங்களுடன் அவரும் விளையாட ஆரம்பித்து விட்டார். கம்பெனியின் ஜிஎம் எங்களுடன் வந்து விளையாடுகிறார் என்றால் போதுமே, அப்படியே ஜிஎம் சாரிடம் பேசி கம்பெனியிலிருந்து ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டு, கிரிக்கெட் விளையாடுவதற்குத் தேவையான பெரிய கிட் ஒன்றை வாங்கிக் கொண்டோம். நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதோ டென்னிஸ் பால் வைத்து, அதற்கு கிட்னி பேடில் இருந்து கீப்பர் கிளவுஸ் வரைக்கும் வாங்கியாகிவிட்டது. ஒரு பேட் மற்றும் ஒரு செட் ஸ்டம்ப் வைத்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு, புதிதாக பேட் மற்றும் கிளவுஸ் என்று கிடைத்தவுடன் மனதில் ஒவ்வொருவரும் சச்சின் மற்றும் கபில் தேவ் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. அதற்குத் தூபம் போடுவது போல் நாம் ஒரு கிரிக்கெட் கிளப் டீமை கம்பெனி பெயரில்(ஸ்பான்சர் வேண்டும் அல்லவா, வேறு பெயரில் வைத்தால் யார் பணம் போடுவது?) உருவாக்க வேண்டும் என்று பேசப்பட்டது.

எங்கள் அணியில் கோயமுத்தூர் காரர் ஒருவர் உண்டு, திருமணம் ஆனவர், நாற்பது வயதிற்கு மேல் இருக்கும், கோவைத் தமிழில் மிகவும் மரியாதையாகப் பேசுவார், ஆனால் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பேசும் போதும் சரி, விளையாடும் போதும் சரி அதிக உணர்ச்சி வசப்பட்டு விடுவார், டிவியில் கிரிக்கெட் போட்டி பார்த்தாலும் அப்படி தான், இந்தப் பந்தை இப்படியா அடிப்பது? இவன் எல்லாம் நம்முடைய அணிக்குத் தண்டம், சிம்பிள் கேட்ச்! இதைக் கூட இவனால் பிடிக்க முடியவில்லை! எப்படி இவனை அணியில் சேர்த்தார்கள்? என்று டிவியில் நடக்கும் வர்ணனைக்கு இணையாக இவர் ஒரு வர்ணனை கொடுத்து கொண்டிருப்பார், அலுவலகத்தில் எங்களுக்கு பொதுவாக இருக்கும் மெஸ்ஸில் இருக்கும் டிவியில் இவர் கிரிக்கெட் போட்டி பார்க்கிறார் என்றால் ஒருவரும் அந்தப் பக்கம் போக மாட்டார்கள். அப்படியே புதியவர்கள் எவராவது போனால் காதில் ரத்தத்துடன் தான் கிரிக்கெட் பார்க்க முடியும். இவர் கல்லூரி படிக்கும் போது கல்லூரி கிரிக்கெட் அணியில் விளையாடியிருப்பார் போல! அவர் மட்டும் தான், எங்களுடன் கிரிக்கெட் விளையாட வரும் போது பக்காவாக கிளம்பி வருவார். டிராக் சூட், டி-சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷு வித் கேப் மற்றும் கூலிங் கிளாஸ் என்று அணிந்து வந்து கலக்குவார். நாங்கள் அந்த ஓடையில் விளையாடும் போது அவர் மட்டும் தனித்து தெரிவார்.

நாற்பது வயதிலும் ஒரு பத்து மீட்டர் ஓடி வந்து பவுலிங் போடுவார். அவர் வீசும் பந்து வேகத்திற்கு இவ்வளவு தூரம் ஓடி வர வேண்டுமா? என்ற கேள்வி சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கு வரும், ஆனால் அதை அவரிடம் கேட்டு காதில் ரத்தம் வர வைத்துக் கொள்வதற்கு எவரும் விரும்புவதில்லை. அதிகமாக கிரிக்கெட் மொழிகளில் தான் பேசுவார், ஒருமுறை இவர் பவுலிங் போடும் போது, முதல் பந்தை நண்பர் ஒருவர் சிக்ஸர் அடித்துவிட்டார், அதனால் அடுத்த பந்தை  எப்போதும் பவுலிங் போடும் வலது பக்கத்திற்கு மாறாக இடது பக்கத்தில் ஓடி வந்து போட நினைத்து அந்தப் பக்கம்  ரன்னிங் ஓடுவதற்கு நிற்கும் பேட்ஸ்மேன் நண்பரை மறுபக்கம் சென்று நிற்கச் சொல்லுவதற்கு "ஓவர் தி விக்கெட்! ஓவர் தி விக்கெட்!" என்று என்று கத்தி கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் நண்பரோ, நீங்க முதலில் பந்தை போடுங்க! அப்புறம் விக்கெட்ட்டா இல்லை சிக்ஸரா? என்று பார்க்கலாம் என்று நண்பர் நக்கலடித்து சிரித்தது கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு நண்பர்கள் உண்டு, ஒருவர் திருவாரூர் காரர் மற்றொருவர் திருநெல்வேலி. இரண்டு பேரும் எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது எந்த அணியில் இருந்தாலும் முதலில் பேட்டை எடுத்துக் கொண்டு களம் இறங்கி விடுவார்கள். அதில் திருவாரூர் காரர் கொஞ்சம் பல்க் ஆக இருப்பார், அவரால் அதிக நேரம் ஓட முடியாது, எனவே எதிர் பக்கத்தில் இறங்கும் பேட்ஸ்மேன் நண்பரிடம் சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார். ஓவரில் ஐந்து பந்துகளை மிஸ் செய்தாலும், ஒரு பந்தை எப்படியும் சிக்ஸருக்கோ, பவுண்டரிக்கோ விரட்டி விடுவார். நெல்லை நண்பர் பொறுமையாக ஆடுபவர், சில நேரம் கடைசி வரை அவுட் ஆகாமல் இருப்பார், அல்லது இடையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி அடுத்த பேட்ஸ்மேன் நண்பருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுப்பார்.

சேலம் நண்பர் ஒருவர், நன்றாக பவுலிங் செய்வார். அவருடைய ஒரு பந்தில் பவுண்டரியோ, சிக்ஸரோ போனால் நண்பர் பதட்டமாகி விடுவார். ஓடி வந்து வேகப்பந்து தான் வீசுவார், எதிரில் பேட்டிங் பண்ணுபவர், நண்பர் வீசும் பந்தை பவுண்டரிக்கு அடித்து விட்டால் போதும், மறு பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசுவார். அந்தப் பந்தையும் பேட்டிங் செய்யும் நண்பர் லாவகமாக எதிர் கொண்டால், அவ்வளவு தான், தன்னால் எவ்வளவு தூரம் ஓடி வந்து வீச முடியுமோ அந்த அளவிற்கு வீசுவார். இதனால் பந்து பவுண்ட்ஸ் ஆகவோ வைடாகாவோ போகும், அந்த ஒரு ஓவரை முடிப்பதற்குள் படாத பாடு பட்டு விடுவார்.

நெல்லை பரப்பாடி ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் ஊக்குவித்துக் கொண்டு இருப்பார். பீல்டிங் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு, மிட் ஆப்பில் தான் பெரும்பாலும் பீல்டிங் நிற்பார், பவுலிங் போடுபவனிடம் இப்படிப் போடு, அப்படிப் போடு என்று அடிக்கடி அட்வைஸ் பண்ணி கொண்டு இருப்பார், இவர் சொல்லுவதை கேட்டு பவுலிங் போட்டு, அந்தப் பந்தை பேட்ஸ்மேன் அடித்தாலும் "சூப்பர் பவுலிங்!" என்று கை தட்டுவார். மற்றவர்கள் அனைவரும் பவுலிங் போடுபவனை முறைப்பார்கள். விளையாடுவது ஓடையில், அதில் ஜான்டி ரோட்ஸ் அளவிற்கு பில்டப் கொடுத்துப் பாய்ந்து பாய்ந்து பந்தை தடுப்பார். இவர் உயிரைக் கொடுத்து பீல்டிங் பண்ணுவது, நமக்குப் பயமாக இருக்கும். தினமும் உடலில் ஒரு காயமாவது வாங்காமல் விளையாட்டை முடிக்க மாட்டார். பீல்டிங் பண்ணுவதில் காயம் வாங்க விட்டாலும் பேட்டிங் பண்ணும் போது ரன்னிங்கில் விழுந்தாவது காயத்தை வாங்கி விடுவார்.

இவர்கள் மட்டுமல்லாமல், ஊர் வாரியாக குழுவாக இயங்கும் சின்ன சின்ன கூட்டமும் எங்களுக்குள் உண்டு, ஆந்திரா முழுவதும் உள்ள‌ தெலுங்கு நண்பர்கள், நாகர்கோவில் நண்பர்கள் அதில் இரண்டு பேர் தான் உண்டு அதில் ஒன்று நான், சென்னை நண்பர்கள் மற்றும் கோவில்பட்டி நண்பர்கள். இதில் கோவில்பட்டி நண்பர்கள் தான் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள், அதுவும் ஒரே காலேஜில் படித்தவர்கள், அவர்களின் ஆதிக்கம் தான் கிரிக்கெட் விளையாட்டில் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஊர் சார்ந்து குழுவாக இருப்பவர்களின் பாசம் விளையாடுவதற்கு அணிகள் பிரிக்கும் போது வெளிப்படும், ஒரே ஊர்க் காரர்களாக ஒரு அணியில் திரள்வார்கள். இதில் கிரிக்கெட் விளையாடத் தெரிந்தவர்கள், விளையாடத் தெரியாதவர்கள் மற்றும் விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் என்று அனைவரும் அடங்குவார்கள்.

கம்பெனி பெயரில் கிரிக்கெட் கிளப் ஆரம்பிக்கலாம் என்று பேசியது தான் தாமதம், மறுநாளே நண்பர் ஒருவர் ஒரு டோர்னமென்ட்க்கான அட்டவணையுடன் வந்து நாம் இதில் கலந்து கொள்ளலாம் என்று அனைவரிடமும் பேசினார். கொண்டு வந்த நண்பரோ, நாங்கள் தினமும் விளையாடும் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்க வருபவர். அவருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது, ஆனால் டிவியில் நடக்கும் இந்திய போட்டிகள் மட்டுமல்லாமல் பிற அணிகள் விளையாடும் போட்டியையும் தவற‌ விட மாட்டார். ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களின் ஸ்டிரைக் ரேட்டிலிருந்து, அவர்களின் தரவரிசை மற்றும் சாதனைகள் வரை புள்ளி விபரங்களைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார். எந்த அணிகளின் போட்டிகள் நடந்தாலும், இன்றைக்கு இந்த அணி தான் வெற்றி பெறும் என்று போட்டிக்கு முன்பே கணித்து சொல்லி விடுவார், பெரும்பாலும் அவருடைய கணிப்பு தவறுவது இல்லை. உலக கிரிக்கெட் வீரர்களின் திறமைகளையும், அணிகளின் திறமைகளையும் புள்ளி விபரங்கள் கொண்டே கணிக்கும் நண்பரால், ஓடையில் விளையாடும் நண்பர்களின் திறமைகளை கணிக்க‌ முடியவில்லை.

ஜெனரல் மேனேஜர் விளையாட வந்த நேரம் மற்றும் கம்பெனியிலிருந்து புதிதாக வாங்கிக் கொடுத்த‌ புதிய கிரிக்கெட் கிட்டுகளை உபயோகப்படுத்திய நண்பர்களின் மனநிலை எல்லாம் சேர்ந்து ஒரு ஆர்வத்தில் டோர்னமென்டுக்கு பங்கேற்கலாம் என்று எல்லோரும் சேர்ந்து கோரஸாக தலையை ஆட்டினார்கள். ஜிஎம் சாரும் டோர்னமென்டுக்கு ஆகும் செலவை கம்பெனியிலிருந்து வாங்கித் தர பார்க்கிறேன் என்று சொல்லியது தான் தாமதம், போட்டியில் விளையாடுவதற்கு தங்களை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி திட்டம் தீட்டுவதற்கு பதிலாக என்னென்ன வாங்க வேண்டும் என்ற திட்டம் தான் பெரிதாக பரிசீலிக்கப் பட்டது. முதலில் சொல்ல பட்டது கம்பெனி பெயர் பொறித்த டி சர்ட், அவ்வளவு தான் நம்முடைய‌ கோயமுத்துர் நண்பர் அதற்குப் பொறுப்பேற்று கொண்டார். யார் யாருக்கு என்னென்ன சைஸ் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்து, டி சர்ட்டில் பின்னால் மற்றும் முன்னால் போடுவதற்கு தேவையான கம்பெனி பெயர் டிசைன், லோகோ டிசைன், பார்டர் டிசைன் மற்றும் வண்ணம் என்று ஒரு மாத காலம் அதற்காக‌ பெரிய ப்ரொஜெக்டே அவர் செய்து முடித்திருந்தார்.

டோர்னமென்ட் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே பயிற்சி என்ற பெயரில் அலுவலகம் முடிந்தவுடன் ஓடைக்குக் கிளம்பி விடுவோம். ஜிஎம் சார் சில நாட்கள் வருவார், சில நாட்கள் வர மாட்டார், ஆனால் தினமும் மாலையில் அவரை அழைப்பதற்கு ஒரு நண்பர் அவரது அறை செல்வார், அது அவரை அக்கறையுடன் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பதற்கு இல்லை, அவர் கொடுக்கும் 10 ஓமன் ரியாலுக்காக. ஓடைக்கு விளையாடச்  செல்லும் முன்பே சூப்பர் மார்க்கெட்டிலிருந்து நான்கு பாக்கெட் லேஸ் சிப்ஸ் மற்றும் வேறு சில நொறுக்கு தீனிகளும், ரெட் புள், கோக், பெப்சி என்று அவரவர் தேவைக்கு வேண்டியவைகளை வாங்கி ஒரு பெரிய கூடையில் சுமந்து செல்வோம்.

கோவை நண்பர் ஆர்டர் கொடுத்திருந்த‌ டி சர்ட்டும் ரெடியாகி வந்த சமயத்தில், டோர்னமென்டுக்கான தேதியும் நெருங்கியிருந்தது. ஊரில் விடுமுறைக்குச் சென்று வந்த கோவில்பட்டி நண்பர் ஒருவர் கிரிக்கெட் பயிற்சிக்கு கலந்து கொள்ள வந்த முதல் நாளில், பேட்டிங் பிடிக்கும் போது நண்பர் ஒருவர் போட்ட பந்து அவரது வலது கையின் நடு விரலைப் பதம் பார்த்தது. நண்பரால் வலி தாங்க முடியவில்லை, அதனால் மருத்துவமனைக்குப் போக வேண்டியதாயிற்று. விரலில் ஒடிவு இருப்பதாகச் சொல்லி ஐந்து தையல்கள் போட்டு அந்த விரலுக்கு மட்டும் கம்பு வைத்துக் கட்டியிருந்தார்கள். அந்த‌ நண்பர் மற்றவர்களிடம் பேசும் போது அடிப்பட்ட‌ கையை முன்னால் கொண்டு வந்தால், நடு விரல் மட்டும் நிமிர்ந்து நின்று மற்றவை எல்லாம் மடங்கி இருக்கும், எதிரில் இருப்பவர் இவருடைய நடுவிரல் உயர்ந்து இருப்பதைப் பார்த்தால் அவரை அசிங்கமாகப் பழித்து காட்டுவது போல் இருக்கும், அதனால் பின்னால் கையைக் கட்டி கொண்டு தான் விளையாட்டை வேடிக்கை பார்க்க ஓடைக்கு வருவார். எங்களிடம் விளையாட்டாக, ஏங்க! நான் டூர்னமென்ட்ல விளையாடக் கூடாது என்று தான் பிளான் பண்ணி என்னுடைய விரலை உடைச்சிட்டிங்க! என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் டோர்னமென்ட் முடிந்த பிறகு அவர் விளையாடாததை நினைத்து சந்தோச பட்டிருப்பார்.

டோர்னமென்டில் மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் முறையில் விளையாடுவதாகச் சொன்னார்கள். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டிகள் நடைபெறும் என்றும் நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு எங்களுடைய‌ முதல் போட்டி நடைபெறும் நாள், எங்களுடைய ஜிஎம் சாருடன் கம்பெனியின் முக்கியமான பெரிய‌ புள்ளிகளும் எங்களுடைய போட்டியை காண வந்திருந்தார்கள். கம்பெனியின் எம்டி கூட மைதானத்திற்கு வருவதாக இருந்தது கடைசி நேரத்தில் வரவில்லை என்ற செய்தி வந்தது, அதுவரையிலும் சந்தோசம். போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பு ஜிஎம் சார் 50 ரியாலை எடுத்து நண்பர் ஒருவரிடம் கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்காகவே காத்திருந்த நண்பர்கள் அனைவரும் போகும் வழியில் உள்ள‌ சூப்பர் மார்க்கெட்டில் இருந்த‌ வகை வகையான நொறுக்கு தீனிகளையும், அது நாள் வரையிலும் டேஸ்ட் பண்ணிப் பார்க்காத பிராண்டு எனர்ஜி டிரிங்ஸ்களையும் வாங்கி, வண்டியை நிறைத்துக் கொண்டு மைதானத்திற்குக் கிளம்பினோம்.

நாங்கள் போட்டிக்கு சென்ற‌ மைதானம் டிவியில் காட்டுவது போல் சுற்றிலும் மின் விளக்குகள் போடப் பட்டு, தரையில் செயற்கை புற்கள் நடப்பட்டு அழகாக இருந்தது. எங்களில் ஒரு சிலரை தவிர‌ விளையாடும் எவரும் இதுவரையிலும் இப்படியான மைதானத்தில் விளையாடியது இல்லை. எங்களுடன் போட்டியில் மோதும் எதிர் அணியில் விளையாடும் நபர்களைத் தவிர வேறு எவரும் உடன் வந்தது போல் தெரியவில்லை, பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக வந்திருந்தார்கள். ஆளுக்கொரு வண்ணத்தில் டி சர்ட் அணிந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு அப்படியே எங்களுடைய அணியைப் பார்த்தேன், விளையாடும் நண்பர்களின் எண்ணிக்கையை விடப் போட்டியை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். விளையாடுபவர்கள், விளையாடாதவர்கள் என்று எல்லோரும் கம்பெனி லோகோ போட்டு ஒரே வண்ணத்தில் புதிதாக வாங்கிய டி சர்ட்டை அணிந்து கொண்டு டிராக் சூட், ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் கூலிங் கிளாஸ் என்று ஐபிஎல் ஆடும் அணிகளை விட மோசமாக நின்று ஒரு பக்கம் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்னொரு பக்கம் போட்டியில் விளையாடாத நண்பர்கள் வண்டியிலிருந்த‌ நொறுக்கு தீனிகள் மற்றும் எனர்ஜி டிரிங்ஸ்களை மைதானத்தின் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்து அதில் தங்கள் திறமையைக் காட்டி கொண்டிருந்தார்கள்.

கோவை நண்பர் தான் எங்கள் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் டாஸில் ஜெயித்து பேட்டிங் கேட்டு வந்து எங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் நண்பர்களைத் தேடினார். ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்க வேண்டிய‌ நெல்லை மற்றும் திருவாரூர் நண்பர்கள் இருவரும் மைதானத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டு இருவரும் விதம் விதமாக‌ பேட்டை பிடித்துக் கொண்டு போட்டோ சூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து ஒரு வழியாக பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தோம். அதில் திருவாரூர் நண்பர் போன வேகத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் வந்தார். எங்களுக்குள் அணி பிரித்து விளையாடும் போது சிக்ஸர் அடித்து, நாங்கள் பெரிய பேட்ஸ்மென் என்று பில்டப் கொடுக்கும் எந்த நண்பர்களாலும் அந்தப் போட்டியில் சோபிக்க முடியவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆனார்கள். ஒபனிங் இறங்கிய நெல்லை நண்பர் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து விளையாடினார். எட்டு ஓவர் முடிவில் நாற்பத்து மூன்று ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் இழந்திருந்தோம்.



சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு, எதிர் அணியினர் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்கள், எங்களின் வேகப் பந்து வீச்சாளர் கோவை நண்பர் தான் முதல் ஓவர் வீச வந்தார். அவர் வீசிய நான்கு பந்து சிக்ஸர் பறந்தது, இரண்டு பந்து பவுண்டரி எல்லையைத் தாண்டியது, கோபத்தில் உச்சத்தில் தொப்பியை தூக்கி வீசி விட்டு, அவருடைய வழுக்கைத் தலையை பிடித்துக் கொண்டு, அடுத்த ஓவர் வீச, சேலம் நண்பரிடம் பந்தை கொண்டு கொடுத்தார். சேலம் நண்பரும் வேகமாக ஓடி வந்து முதல் பந்தை வீசினார், பந்து எதிரில் நின்றவரின் பேட்டால் துரத்தி எல்லை கோட்டிற்கு வெளியில் அடிக்கப் பட்டது. சேலம் நண்பர் அடுத்த பந்தை இன்னும் வேகமாக ஓடி வந்து வீசினார். பேட்ஸ்மேன் அதற்க்காவே காத்திருந்தது போல வைடாக வெளியில் சென்ற பந்தை ஓங்கி அடித்தார், வெற்றிக்கான இலக்கை எதிர் அணி எட்டியது. எட்டு ஓவரில் நாங்கள் அடித்த ரன் இலக்கை அவர்கள் எட்டு பந்தில் அடித்திருந்தார்கள்.

ஜெனரல் மேனேஜர் தன்னுடைய‌ வண்டியில் ஏற்றி வந்த நண்பர்களை வண்டியில் ஏறச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பும் போது, ஒரு நண்பர் மட்டும் வேகமாக‌ வண்டியிலிருந்து இறங்கி ஓரத்தில் மீதமிருந்த நொறுக்கு தீனியை நோக்கி ஓடினார், அந்த நண்பரை ஜிஎம் சார் பார்த்த ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்ட நண்பர், எதையும் எடுக்காமல் திரும்பவும் வண்டியில் ஏறிக் கொண்டார்.

போட்டி நடத்தியவர்கள், எங்களிடம் நாளைக்கு விளையாட வேண்டிய ஒரு அணி, கடைசி நேரத்தில் வர முடியவில்லை என்று சொல்லியதால் அட்டவணையில் ஒரு அணி காலியாக இருக்கிறது, நீங்கள் வேண்டுமானால் திரும்பவும் நாளைக்கு மோதுகிறீர்களா? என்று கேட்டார்கள். எதற்கு தெளிய வைத்து அடிக்கவா? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். நடுவிரலில் அடிப்பட்ட நண்பர் எங்களின் முன்னால் நடந்து சென்றார். வெகு நேரமாகப் பின்னால் கட்டியிருந்த கை அவருக்கு வலித்திருக்க வேண்டும். இப்போது அவர் தன்னுடைய வலது கையை முன்னால் வைத்து இடது கையால் தாங்கிக் கொண்டு நடந்தார், கையின் மற்ற விரல்கள் மடங்கியிருக்க‌ ஒற்றை நடுவிரல் மட்டும் எங்களைப் பார்த்து பழிப்பது போல் இருந்தது.

.

Monday, July 4, 2016

குற்ற உணர்வோ, வெட்கமோ இவர்களுக்கு இல்லை!!

நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் வைத்து மென்பொறியாளர் சுவாதியைப் படுகொலை செய்த குற்றவாளி யாரென்று காவல்துறை அறிவிக்கும் முன்னரே ஒரு இஸ்லாமிய நண்பர்களின் புகைப்படத்தை பெயருடன் வெளியிட்டு, இவர் தான் சுவாதியைக் கொலை செய்தவர், விரைவில் பிடிபட அதிகமாக ஷேர் செய்யுங்கள் என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளம் முழுவதும் வலம் வந்தது. இது ஒருபுறம் நடக்க ஒய் ஜி மகேந்திரன் போன்ற ஆட்கள் மிகக் கேவலமாக நடந்து கொண்டார்கள். இவர்களின் ஆள் மனதில் குடிகொண்டிருக்கும் முற்போக்கு இயக்கங்களின் மீது இருக்கும் வெறுப்புகளை வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டார்கள்.

சம்பந்தமே இல்லாமல் இந்த இஸ்லாமிய இளைஞரின் புகைப்படத்தை பகிர்ந்ததை ஏதோ மனம் பிறழ்ந்தவர்களின் செயல்கள் என்றோ, தெரியாமல் தவறுதலாக பகிர்ந்தது என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. இதன் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி செயல் இருக்கிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. காரணம் கொலை செய்யப் பட்ட பெண் உயர்குடி பிராமணர், கொலையாளியாகச் சித்தரிக்க பட்டவர் ஒரு இஸ்லாமியர், எப்படியான விஷத்தை மக்களின் மனதில் விதைக்கப் பார்க்கிறார்கள்? ஒரு கணம் சிந்தித்தால் மனம் பதறுகிறது. இப்படிப் பகிர்வதால் நடைபெறும் குழப்பங்களில் குளிர்காய்வதற்கு என்று இருக்கும் ஒரு கூட்டம் இந்தப் புகைப்படங்களை தூக்கிச் சுமப்பதில் நமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை, இவர்களை எளிதாக இனம் கண்டு அடையாளப் படுத்திவிடலாம், ஆனால் ஆட்டு மந்தைகள் போல் அனைவரும் இந்தப் புகைப்படங்களை மற்றவர்களுக்குப் பகிர்வதை தான் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.



எவருக்கும் இந்தச் சமூக தளங்களில் வரும் தகவல்கள் குறித்த உண்மைத் தன்மையை பற்றிய கேள்வியோ அல்லது அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளவோ விரும்புவது இல்லை, எல்லோரும் ஒரு பொது புத்தியில் அப்படியே இயங்குகிறோம், இன்றைக்குச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மைத் தன்மையில் எழுதப்படுவது இல்லை. அவரவரின் அடி மனதில் இருக்கும் எண்ணம் மற்றும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எழுதப் படுகிறது, அவற்றை உண்மை என்று நம்ப வைக்க இந்தச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்து கொள்கிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறையின் எழுச்சிக்கு இந்தச் சமூக வலைத்தளங்கள் தான் காரணம் என்று நாம் பெருமிதம் அடைந்தாலும்அத்தகையைத் தலைமுறையின் செயல்களையும், எண்ணங்களையும் காயடிக்கும் வேலையையும் சர்வ சாதாரணமாக ஒரு கூட்டம் இந்தச் சமூக வலைத்தளம் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இங்குப் பகிரப்படும் ஒவ்வொரு தகவல்களிலும் நாம் அறியப்படாத நுண்ணரசியல் இருக்கிறது, இவற்றைப் புரிந்து கொள்ள நமக்கு அதிகப்படியான வாசிப்புகளும் ஆழ்ந்த தேடல்களும் தேவைப்படுகிறது, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அது தான் இருப்பதில்லையே!

வாட்ஸ் அப்பில் நான் இருக்கும் அனைத்துக் குழுமங்களில் ஒரு மணி நேரத்தில் மேற்கண்ட இஸ்லாமிய நண்பரின் புகைப்படம் பகிரப் படுகிறது. இதைப் பகிர்ந்தவர்களிடம் அதைப் பற்றிய மேற்படி தகவல்கள் கேட்டால் ஹி! ஹி! மண்டபத்தில் யாரோ, எனக்கு அனுப்பினார்கள்! நான் இங்குப் பகிர்ந்தேன்! என்ற சமாளிப்பு பதில்கள் தான் வந்தது. நம்முடைய பொது புத்தியில் ஒரு கொலையை பற்றிய தகவல்களையோ, செய்திகளையோ ஊகத்தின் அடிப்படையில் உருவகப் படுத்துவதில் இன்றைய கார்ப்பரேட் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செயல்படுகிறது, இந்தக் கொலைகளின் உண்மைகள் இவர்களின் ஊகத்திற்கு எதிராக வரும் போது அதைப் பற்றிய குற்ற உணர்வோ, வெட்கமோ இவர்களுக்கு இல்லை, அடுத்த செய்திகளுக்கு உருவகம் கொடுக்க கிளம்பிவிடுகிறார்கள்.

என்னைப் பிடிக்கவில்லையா? எடுடா! அருவாளை என்றும் காதலிக்க மாட்டியா? நான் திருநெல்வேலி காரன் என்ற மொக்கையான ஆணாதிக்க சிந்தனையுடன் கூடிய இரண்டாம் தர ஜோக்குகள் சமூக வலைத்தளங்களில் வரத் தொடங்கி விட்டன. ஒரு படுகொலையின் குருதி இன்னும் காயவில்லை, ஆனால் அதை ஜோக்குகளாக வடித்துச் சிரிப்பதற்கு பழக்கப் படுத்திய சமூக வலைத்தளங்கள் உண்மையில் பாராட்ட பட வேண்டியது தான். ஒரு குரூர கொலை நமது சமூக சீரழிவின் நீட்சி! தன் மக்களைப் பாதுகாக்க தவறிய அரசுகளின் வீழ்ச்சி! இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க விடாமல் தடுப்பதில் தான் இருக்கிறது அரசியல் சூழ்ச்சி!

இந்தச் சுவாதியின் படுகொலை ரெயில் நிலையத்தில் நடந்த போது சுற்றி நின்ற மக்கள் கை கட்டி வேடிக்கை பார்த்தார்கள், எவரும் உதவிக்கு வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பொங்கியவர்கள், இப்போது முனுசாமி என்ற தொழிலாளியை, குடித்துவிட்டு ஆடி கார் ஒட்டி போதையில் ஏற்றிக் கொன்றுவிட்டு, காரை நிறுத்தாமல் ஒட்டிய ஐஸ்வர்யா என்ற பணக்கார வீட்டுப் பெண்ணை துரத்திப் பிடித்த மக்களைப் பற்றி வாயே எவரும் வாயே  திறக்கவில்லை, எதிர்மறையான விசயத்திற்கும் மனித குணத்திற்கும் பொங்கும் இந்தச் சமூக ஊடகங்கள், நேர்மறையான மனித குணங்களை கொண்ட இத்தகைய மனிதர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை, ஒரு வேளை யாரையோ கார் ஏற்றிக் கொன்றார்கள், காவல் துறை வந்து பார்த்து கொள்வார்கள் என்று அந்த கார் ஒட்டிய பெண்மணியை விட்டிருந்தால், அன்றைக்கு அந்த ஆடி காரை ஒட்டியது தொழிலதிபர் வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநர் என்று மறுநாள் பத்திரிக்கையில் பெரிய செய்தியாக வந்திருக்கும்.



.

Wednesday, June 29, 2016

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் நடந்த சுவாதி படுகொலை மிகக் கொடூரமானது, கண்டிப்பாக இந்தக் கொலையை செய்தவன் மனித தன்மை சிறிதும் இல்லாதவனாகத் தான் இருப்பான். அவனுக்கு எத்தகையைக் கொடூர தண்டனையைக் கொடுத்தாலும் அது இந்தக் கொலைக்கு ஈடாகாது. இது இப்படி இருக்க இந்தக் கொலையை வைத்து சமூக வலைத்தளங்களில் சிலர் நடத்தும் அரசியலும், கண் துடைப்பு ஒப்பாரிகளும் தாங்க முடியவில்லை.

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

அவர்கள் பாடிய பீப் பாடல்களின் நீட்சிகள் தான் இந்தச் சுவாதியின் கொலையும், வினுபிரியாவின் தற்கொலையும் என்று கூடவா இந்த மர மண்டைகளுக்குப் புரியவில்லை. யாருக்காகக் கொடி பிடிக்கிறோம், எதற்காகக் கொடி பிடிக்கிறோம் என்று கூட தெரியாமல் எவனோ ஒருவன் வெட்டி ஒட்டிய வால்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடலை பாடியதற்குச் சிம்பு மற்றும் அனிருத் இருவரில் ஒருவரோ, அவர்களுடைய குடும்பத்தினரோ இதுவரையிலும் ஒரு சிறு துளி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தவறுகள் செய்வது இயல்பு, ஆனால் அதைத் திருத்தி கொள்ள முயல்வதும், நடந்த தவற்றுக்கு வருத்தம் தெரிவிப்பதும் தான் பண்பட்ட மனிதர்களின் செயல்களாக இருக்கும். ஆனால் இந்தத் தற்குறிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, மாதர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்க இந்த இருவர் செய்த ஈனச் செயலுக்கு இலக்கணம் கற்பிப்பது தான் கொடுமையாக இருக்கிறது.

தன்னுடைய மனைவியையோ, சகோதரியையோ எந்தவொரு பொது தளங்களிலும், சமூக தளங்களிலும் இயங்க அனுமதிக்காத காவாளி கூட்டம் தான் இன்றைக்கு மாதர் சங்கங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வகுப்பு எடுக்கிறது. இது கூட வேண்டாம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் கூடும் கூட்டங்களுக்கு கூட தன்னுடைய வீட்டிலிருக்கும் பெண்களை அனுமதிக்காத கூட்டம் தான் இன்று ஏதோ ஒரு சில பிரச்சனைகளுக்காவது குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்பைப் பார்த்து ஊளையிடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் செயல்படும் ஒரு சில‌ பெண்களையே இந்த ஆணாதிக்க மனநிலை கொண்ட கூட்டம் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல, வலைத்தளங்களில் கூட பெண்களுக்கு எதிராக எழுதியிருக்கும் பல பதிவுகளை நீங்கள் பார்க்கலாம், முன்பு போல் பல பெண்கள் இந்தத் தளங்களில் செயல்படாமல் முழுமையாக விலகி இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் பெண்களின் முன் இருப்பது மிகப் பெரிய சவால். அவர்களுக்கு ஆதரவாகக் கூட நீங்கள் எழுத வேண்டாம், அவர்களைக் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.

தன்னைப்போல் ஒரு பிறவி தான் பெண், இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் அனைத்து உரிமையும் அவளுக்கும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள அல்லது அந்த உரிமையை அவள் எடுத்துக் கொள்ளும் போது சகித்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் அந்த ஆணாதிக்க மனோபாவம் தான் இப்படியான செயல்களை செய்ய வைக்கிறது.

தன்னை ஒரு பெண் விரும்பா விட்டால், அவனவனுக்கான திறமை மற்றும் தகுதிக்கேற்ப அவளைத் தாக்குவதற்கு கீழ்கண்ட வழிகளில் ஆயுதங்களைத் தூக்குகிறான்.

*அவளைத் திட்டி பாடல்கள்/கவிதைகள் எழுதுவது, எழுத முடியாதவன் கை கொட்டி அந்தப் பாடல்களை/கவிதைகளை ரசிப்பது.. 

*அவளுடைய நடத்தைக்குக் களங்கம் விளைவிக்க முயல்வது, சமூகத்தில் அவளின் ஒழுக்கத்தைப் பற்றி புனைவு கதைகள் கட்டுவது..

*சமூக வலைத்தளங்களில் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பகிருவது, அதை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டுவது..

*அமிலத்தை எடுத்து அவளின் முகத்தில் வீசுவது இல்லையென்றால் கத்தி எடுத்து படுகொலை செய்வது..

எப்படியான மனநிலையில் நாம் வாழ்ந்து கொண்டியிருக்கிறோம் என்று சுய சிந்தனை செய்து கொள்வது நமக்கும் நம்முடைய தலைமுறைக்கும் நலன் பயக்கும். காரணம் நீ வானத்திலிருந்து குதித்து வந்தவன் அல்ல, உன்னுடன் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கும் இன்னொரு பிறவியை அழிக்கத் தான் மேலே சொல்லியிருக்கும் ஆயுதங்களை எடுத்து வீசுகிறாய்.



(பழைய திருவிளையாடல் பட பாலைய்யா வசனம் ஞாபகம் வரலாம்)

ஆமா, யாரோ பண்டிதராம்!
என்னை சொல்லிட்டு இவன் உளறுகிறான், பண்டிதர் இல்ல, பாகவதராம்! ஹி ஹி !!
இரண்டு பயலுவளும் உளறுகிறார்கள்!
அப்படியா! நீ திருத்திச் சொல்லு!
பண்டிதரும் இல்ல ! பாகவதரும் இல்ல ! ஒய் ஜி மகேந்திரன் னு ஒருத்தரு!
யாரவர்?
இந்த கலா மண்டபத்துல நாடகத்துல எல்லாம் நடிப்பாருல்ல!
வேதனை! வேதனை! இந்த படு கொலையைக் கண்டிக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா?
பழைய படங்களில் கூடச் சோடா புட்டி கண்ணாடி போட்டுவிட்டு, கைவிரலைச் சப்பி கொண்டே நடிப்பார் அவரு தானுங்க!
என்னடா இது! இந்தத் தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை! இந்தப் படுகொலையை பத்தி கருத்து கேட்க வேற ஆளே கிடைக்கவில்லையா!
என்னங்க செய்யுறது! மேக்கப் போட்டு திரையில் வந்துட்டா, சமூகத்துக்குக் கருத்து சொல்லித் தானே ஆகவேண்டும்!
ஆமா! ஆமா! கண்டிப்பா சொல்லித்தான் ஆகவேண்டும்!
சமூகத்தில் அநியாயம் நடந்தால் அப்படியே பொங்கிடுவார்!
ஓ அப்படியா! அந்த பீப் பாட்டுக்கு இசை அமைத்த, இவருடைய பங்காளி பையன் அனிருத் பற்றி என்ன பொங்கி இருக்காரு?

ஙே! ஙே! ஙே! ஙே! ஙே!

பாலா இருந்தால் பொங்கும்! பச்சை தண்ணி எப்படிப் பொங்கும்?


.

Monday, June 27, 2016

அறிவுஜீவிகள் வெட்கப் பட வேண்டாமா?

சமீபத்தில் ஒரு நாள், ஊரில் என்னுடன் படித்த பெண் நண்பர் ஒருவரை அலைப்பேசியில் அழைத்திருந்தேன், அவர் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார், எதற்காக அங்குச் சென்றார் என்பதை விசாரிப்பதற்கு அவகாசம் தராமல், என்னை மாலையில் அலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார்.

மாலையில் என்னை அழைத்து, தம்பிக்கு உடம்பு சரியில்லை, அவனுடைய நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு பிரச்சனையாக இருக்கிறது என்றும் அபாய கட்டத்தில் அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை கொடுப்பதாகச் சொன்னார். என்னால் அவர் தம்பி என்று சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை, திரும்பவும் யாருக்கு உடம்பு சரியில்லை என்று கேட்டேன், காரணம் அவர் சொல்லியிருக்கும் உறுப்புகளுக்கு வரும் வியாதியெல்லாம், எந்தப் பழக்கம் உள்ளவருக்கு வரும் என்பது மருத்துவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் மீண்டும் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்திருக்கிறது என்றும், வீட்டில் உள்ள எவருக்கும் இவனுடைய இந்தக் குடி பழக்கம் சரியாக தெரியாது என்றும் சொன்னார்.

அவர் சொல்லியதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் எனக்கும் அவருடைய தம்பியை நன்றாகத் தெரியும், என்னைவிட ஐந்து வயது குறைவாக இருப்பான். பள்ளியில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன், அப்போது மிகச் சிறுவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் இந்தப் பெண் நண்பரிடம் பேசிய போது, அவருடைய தம்பியை பற்றி விசாரித்தேன், அவன் படிப்பில் பெரிய அளவு ஈடுபாடு இல்லையென்றும் சொந்தமாக தொழில் செய்வதாக சொல்லி நாகர்கோவிலில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு துணிக்கடை வைத்திருக்கிறான் என்று சொல்லியிருந்தார்.

துணிக்கடை வைத்திருக்கும் போது பெரும்பாலும் இரவில் வீட்டிற்குத் தூங்குவதற்கு வருவது இல்லையாம், நண்பர்களுடன் சேர்ந்து கடையில் தூங்கிவிடுவானாம், அதனால் அவனுடைய தொடக்க கால குடிப்பழக்கம்  வீட்டிற்குத் தெரிந்திருக்கவில்லை. இவனுடைய குடிப்பழக்கம் அளவிற்கு அதிகமாகிய பிறகு தான் வீட்டிற்குத் தெரிய வந்திருக்கிறது, இவனைக் கண்டிக்க வேண்டிய அப்பாவிற்கும் குடிப் பழக்கம் உண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் ஓடு வேய்ந்த மண் வீடு இடிந்து விழுந்திருக்கிறது, இப்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறார்களாம். இப்படியான சூழ்நிலையில் தான் இவனுடைய மருத்துவ செலவு வந்திருக்கிறது.

முதலில் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள், அவர்கள் இவனுடைய மோசமான நிலைமையைப் பார்த்துவிட்டு உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைத்து இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்ந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள், உயிருக்கான உத்திரவாதம் ஒரு வாரம் வரையிலும் சொல்லப்படவில்லை. நாள் ஒன்றிற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது.

என்னுடைய நண்பர் காதல் திருமணம் செய்தவர், அவர்  நெல்லையில் இரண்டு குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். தந்தையின் வருமானம் அவருடைய குடிப்பழக்கத்திற்கு சரியாக இருந்தது. மருத்துவமனையில் ஆன பண செலவுகளின் பெரும் பகுதியை இவர் தான் புரட்டியிருக்கிறார். தினமும் ஐம்பதாயிரம் செலவு என்றால் இப்படியான குடும்பத்தால் எத்தனை நாட்கள் கடத்திவிட முடியும், என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார். சிலரின் ஆலோசனைப் படி கேரளாவில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனை மற்றும் (அம்மா) அமிர்தா மருத்துவமனை போன்றவற்றில் விசாரித்திருக்கிறார், எவரும் குடியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இலவச சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள்.

நண்பரின் தம்பியின் மெடிக்கல் ரிப்போர்ட்

குடிப் பழக்கத்தால் 27 வயதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இந்தளவிற்குப் பாதிக்க படுகிறது என்றால் டாஸ்மாக்கில் கொடுக்கப்படும் போதை வஸ்துக்கள் எப்படியானவை என்ற கேள்விகள் வருகிறது. இப்போது டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களின் தரம் யாரால் எவரால் சோதிக்கப்படுகிறது, அதில் இருக்கும் ஆல்கஹாலின் அளவுகள் மற்றும் கெமிக்கல் மிக்சிங் போன்றவை எதன் அடிப்படையில் இந்த மதுபானங்களில் சேர்க்கப்படுகிறது என்பதற்கு வெளிப்படையான தகவல்கள் கிடையாது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட  பிராண்டட் மது பாட்டில்கள் கிடைப்பது அரிது,  அப்படியானால் கிராமங்களில் விற்கப்படும் பாட்டில்கள் சொல்லவே வேண்டாம். கிராமங்களில் உள்ள டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் பிராண்டட் பெயர் சொல்லி கேட்பது இல்லை, 120 ரூபாய், 150 ரூபாய் சரக்கு கொடு என்று தான் கேட்கிறார்கள். அதில் பெயர் போட்டிருக்கிறதா, முத்திரைகள் இருக்கின்றதா என்றெல்லாம் எவரும் சோதித்து பார்ப்பது இல்லை.

முன்பெல்லாம் ஊரில் கள்ள சாராயம் குடித்தவர்களுக்கு கூட ஒரு ஐம்பது வயதிற்கு மேல் தான் உடலில் பிரச்சனைகள் வரும், ஆனால் இன்று அரசாங்கம் விற்கும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை வாங்கிக் குடித்தால் இளம் வயதிலேயே மருத்துவமனையில் சென்று படுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஒருவனுக்கு வியாதியைக் கொடுக்கிற மதுவை வரிந்து கட்டிக்கொண்டு ஆண்டுக்கு டார்கெட் வைத்து வியாபாரம் செய்கிறது இந்த அரசு. ஆனால் அந்த மக்களின் வியாதியைக் குணப்படுத்தும் அரசு மருத்துவமனைகளைக் கண்டு கொள்வதில்லை. கிராமங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் நிலையை இந்தக் கட்டுரையில் விவரித்து விட முடியாது, மருத்துவர்கள் இருந்தால், செவிலியர்கள் இருக்க மாட்டார்கள், செவிலியர்கள் இருந்தால் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் இருந்தால், மருத்துவ முறைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. ஒருவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வராதீர்கள், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஒருவர் என்னிடம் பேசும் போது சாதாரணமாக சொல்லுகிறார்.

இன்று டாஸ்மாக்கின் அமோக விற்பனையால் தான் அரசாங்கம் நமக்கு இலவசங்களைக் கொடுக்க முடிகிறது,  வருட வருடம் மாநிலத்திற்கான நிதிநிலை அறிக்கையைப் போட முடிகிறது, இல்லையென்றால் பெரிய துண்டு விழும் என்று விவாதிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இப்படிச் சொல்ல வெட்கப் பட வேண்டாமா? ஒருவனுடைய மதுப் பழக்கம் அவனை மட்டும் பாதிப்பதில்லை, அவனைச் சார்ந்த குடும்பத்தையும் சீரழிக்கிறது, குடும்பங்கள் தான் சமூகத்தின் ஆணி வேர்கள் என்று வக்கணையாக ஏட்டில் எழுதி வைத்துப் படிக்கிறோம். ஆணி வேர்களுக்கு நஞ்சை உறிஞ்ச கொடுக்கும் டாஸ்மாக் கடைகளால் மட்டும் தான் ஒரு அரசாங்கம் ஆட்சி செய்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்றால் அந்த ஆட்சியின் கீழ் வாழும் நாம் எல்லாம் மாக்கள் தான். பல குடும்பங்கள் மதுவால் அழிந்தாலும் பரவாயில்லை, என்னுடைய இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று சொல்லும் அரசுகள் உண்மையில் "நமக்கான அரசு தான்" என்பதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும்.



ஒரு சுதந்திர நாட்டில், ஒரு குடி மகன் மதுக் குடிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை, அந்த உரிமையை எப்படி நாம் பறிக்க முடியும் என்று சில பேர் கேள்வி கேட்கிறார்கள். குடிப்பழக்கம் என்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை, அவரைச் சுற்றியிருக்கும் சமுகத்தையும் பாதிக்கிறது என்பதை எத்தனைப் புள்ளி விபரங்கள் மற்றும் செய்திகளை எடுத்து வைத்தாலும் இவர்கள் கேட்க போவது இல்லை. குடிப்பழக்கத்திற்கு நாங்கள் அடிமை இல்லை, ராணுவ ஒழுங்குடன் குடிக்கிறோம் என்று சொல்லும் கூட்டம் தான் டாஸ்மாக் விடுமுறை நாள் என்று அரசு அறிவித்தால் அதற்கு முந்தின நாளே வாங்கி ஃப்ரிஜில் வைத்துக் கொள்கிறது. குடிப்பழக்கம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை ஒன்றும் இல்லை. ஒழுக்க கேடான செயல்களுக்கு எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம், என் தனிப்பட்ட உரிமை என்று சட்டம் பேசிவிட முடியாது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் இந்த டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று சொல்லும் அறிவுஜீவிகள் கண்டிப்பாக மது பிரியர்களை நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் பார்த்திருப்பார்கள். கண்டிப்பாக மதுப் பழக்கம் உள்ளவர்களிடம் இவர்களுக்கான தொடர்பு அறவே இருப்பது இல்லை. நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு மட்டும் தான் இந்த மாற்று ஏற்பாடுகள் தேவை, இந்த நடுத்தர வர்க்கத்திற்கு திடீரென வேலைப் போய் விட்டால் கூட என்ன செய்வது என்று தெரியாது, அதற்கும் கூட மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது, உறவுகளையும், சமூக அக்கறைகளையும் தொலைத்து நிற்கும் இந்தக் கூட்டத்திற்கு எல்லாவற்றுக்கும் தனியாகவே ஒரு மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது என்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நடந்த இன்போசிஸ் நிறுவனத்தில்  வேலைப்பார்த்து வந்த இளம் பெண்ணின் படுகொலையே சாட்சி.

கிராமத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சொல்லுவது, காலையிலேயே கடையை திறந்து வைத்து ஆசையைத் தூண்டி விடுகிறார்கள், அந்தக் கடைப்பக்கம் செல்லாமல் வேறு பாதையில் செல்லலாம் என்றால், அங்கு நமக்குத் தெரிந்தவர்கள் இருவர் குடிக்க கிளம்புவார்கள், இல்லையென்றால் குடித்துவிட்டு வந்து நம்மிடம் பகடி செய்வார்கள், இப்படியான சூழ்நிலையை எதிர் கொள்வது தான் கடினம் என்று அங்கலாய்க்கிறார்கள். எனது அப்பாவும் குடிப்பழக்கம் உள்ளவர் தான், சில நாட்கள் காலையில் ஆரம்பித்தால் அன்று முழுவதும் அவர் அந்தப் போதை உலகத்தில் தான் இருப்பார். அவரிடம், அப்பா! டாஸ்மாக்கை மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால், அது இல்லையென்றால் குடியா மூழ்கிவிடும், அதோடு தொலைந்தது என்று விட்டு விடுவேன் என்று சொல்லுவார்கள். ஆனால் "குடிக்காமல் இருங்கள்" என்று சொன்னால் "முடியாது" என்று தான் சொல்வார்கள். இவர்களால் குடிக்காமல் இருக்க முடியும், ஆனால் எளிதாகக் கிடைக்கிறது என்ற எண்ணம் தான் இவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாமல் வைத்திருக்கிறது.

என்னுடன் சவுதியில் இருக்கும் சில நண்பர்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது நாள் தோறும் தவறாமல் மாலையில் டாஸ்மாக் சென்று வருபவர்கள் தான். ஆனால் இப்போது அவர்களால் குடிக்காமல் ஒரு வருடங்களுக்கு மேல் இருக்க முடிகிறது. குடிப்பதற்கு எளிதாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, "நீ குடிக்காதே" என்று அவனைக் கட்டுப்படுத்த நினைப்பது எப்படியான மனநிலை என்று புரியவில்லை

வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து குடும்பங்களின் இளம் குருத்துக்களை குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைத் தான் சேரும். இன்றைக்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் டாஸ்மாக் கடையை தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போன்ற காட்சிகளை அமைக்கும் இயக்குநர்களின் கற்பனை வறட்சியும் குடிப்பழக்கத்தை ஆதரித்து அதற்குத் தூபம் போடுவது போல் அமைகிறது..



.
Related Posts with Thumbnails