Showing posts with label சவூதி அரேபியா. Show all posts
Showing posts with label சவூதி அரேபியா. Show all posts

Monday, October 18, 2010

என‌து அரேபிய‌ அனுப‌வ‌ம்_புன்ன‌கை

காலையில் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகம் வரும் வழியில் நம்மிடம் அறிமுகம் இல்லாத ஒருவர் மலர்ந்த புன்னகையுடம் உங்களுக்கு காலை வணக்கம் சொன்னால் எப்படி இருக்கும்?. நம்மையும் அறியாமல் ஒரு இனம்காணத புத்துணர்ச்சி பெருக்கெடுப்பதை உணர முடியும்.

நான் அரேபியா வந்த புதிதில் இங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களில் என்னை ஆச்சரிய படுத்திய ஒன்று நான் மேலே சொன்ன விசயம் தான். நம்மை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் "சலாம் மாலிக்கும்" என்று புன்னகைக்க தவறுவது இல்லை.

அறிமுகம் இல்லாத எந்த நபராக/எந்த‌ நாட்ட‌வ‌ராக‌ இருந்தாலும் அவர்கள் சலாம் மாலிக்கும் என்று கைக்குலுக்கி மகிழ்கின்றனர். அதேப் போல் கடைகள் நடத்துபவராக இருந்தாலும், கார் வாடகைக்கு ஓட்டுபவராக இருந்தாலும் அவர்களும் இந்த பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

தொலைப்பேசியில் பேசும் போதும் முதலில் சலாம் மாலிக்கும் என்று சொல்லி தான் பேச ஆராம்பிக்கிறார்கள். பதிலுக்கு நம்மிடம் இருந்து வணக்கத்தை எதிர்பார்ப்பது கிடையாது. அதன் பின் அவருடைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பெரிய‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் அல்லாது அர‌பி குழ‌ந்தைக‌ளிட‌மும் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் இருக்கின்ற‌து. சில‌ நேர‌ங்க‌ளில் எங்க‌ளை‌ அலுவ‌ல‌க‌த்திற்கு அழைத்து செல்லும் வாக‌ன‌ம் வ‌ருவ‌த‌ற்கு தாம‌த‌ம் ஆனால் நாங்க‌ள் வீட்டில் இருந்து இற‌ங்கி சாலையில் நிற்ப்போம். அப்போது ப‌ள்ளிக்கு செல்லும் அர‌பி சிறுவ‌ர்க‌ள் "ச‌லாம் மாலிக்கும்" என்று சொல்வ‌து விய‌ப்பாக‌ இருக்கும்.

இதுவே இர‌ண்டு அர‌பிக‌ள் ச‌ந்திந்திதால் அவ‌ர்க‌ளுடைய‌ ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்வ‌து இன்னும் வித்தியாச‌மாக‌ இருக்கு. ச‌லாம் மாலிக்கும் என்று சொல்லி புன்ன‌கைத்து க‌ட்டி அணைத்து ந‌ண்ப‌ரின் க‌ன்ன‌த்துட‌ன் த‌ன்னுடைய‌ க‌ன்ன‌த்தை ப‌திந்து ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்கிறார்க‌ள்.



அரேபியா வ‌ந்த‌ புதில் இவ‌ர்க‌ள் ச‌லாம் மாலிக்கும் என்று என்னிட‌ம் சொல்லும் போது நான் அவ‌ர்க‌ளை ஏதோ விசித்திர‌மாக‌ பார்த்து விட்டு சென்ற‌து உண்டு. கார‌ண‌ம் நாம் வ‌ள‌ர்ந்த‌ சூழ்நிலைக‌ள் அப்ப‌டிதான் ந‌ம்மை க‌ட்டிய‌மைத்திருக்கிற‌து. ஒருவ‌ரிட‌ம் பேசுவ‌த‌ற்கு சிரிப்ப‌த‌ற்கும் கார‌ண‌ம் தேடுகிறோம். எல்லோரையும் ந‌ம்மைப்போல‌ எண்ண‌ ம‌றுக்கின்றோம்.

இய‌ந்திர‌த்த‌ன‌மாக‌ சுழ‌ன்று கொண்டிருக்கும் ந‌ம்முடைய‌ சூழ‌லில் புன்ன‌கை என்ற‌ ஒன்றை ம‌ற‌ந்து போனோம் என்றுதான் சொல்ல‌வேண்டும். ந‌ம்மை தின‌மும் ச‌ந்திக்கின்ற‌ ம‌க்க‌ளிட‌மாவ‌து புன்ன‌கைத்து வ‌ண‌க்க‌ம் சொல்லி ந‌ம்முடைய‌ ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்கிறோமா? இது கேள்வியாக‌ தான் நிற்கின்ற‌தே த‌விர‌ என்னிட‌ம் ப‌தில் இல்லை.

யார‌ப்பா அது!!!!!!!! பின்னூட்ட‌த்தில் வ‌ந்து ஸ்மைலி போட்டுவிட்டு போவ‌து?.. ஹி..ஹி..

குறிப்பு: க‌ட‌ந்த‌ ப‌திவில் நான் எழுதிய‌ பிர‌ச்ச‌னைக்கு க‌ருத்து சொன்ன‌ அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கு என்னுடைய‌ ந‌ன்றிக‌ள். த‌னிம‌ட‌லில் தொட‌ர்பு கொண்டு என‌க்கு ஆறுத‌ல்/அறிவுரை சொன்ன‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் மிக்க‌ வ‌ந்த‌ன‌ம். இன்னும் ப‌த்து நாட்க‌ளே அரேபியாவில் இருப்பேன் என்று நினைக்கிறேன். அத‌னால் தான் இங்குள்ள‌ அனுப‌வ‌த்தை ப‌ற்றி எழுதியுள்ளேன். இன்னும் ஒரு ப‌திவு எழுத‌ முடியுமா? என்று பார்க்கிறேன்.

.

.

Sunday, September 26, 2010

வெளிநாடு வாழ்க்கை_மீண்டார்க‌ளா?..வீழ்ந்தார்க‌ளா?..

சௌதி அரேபியாவிற்கு கட்டடத்தொழில், தோட்ட வேலை மற்றும் கூலிவேலை என்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தை சார்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள், கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களில் இருந்து இவர்கள் மீண்டார்களா?.. இல்லை மேலும் கஷ்டத்தில் விழுந்தார்களா? என்பதை நான் பார்த்த சில சம்பவங்களை கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.

சௌதி அரேபியாவில் இருந்து இந்த வேலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் விசாக்களுக்கு சம்பளம் 600 ரியாலில் இருந்து 1200 ரியால் வரை இருக்கும் (8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை). இந்த விசாவை வாங்கிய லோக்கல் டிராவல் ஏஜன்ட்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சரியான தகவல்களை சொல்லாமல் ஒவ்வொரு விசாவையும் லட்ச ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு வாங்கும் இளைஞர்களும் வெளிநாடு மோகத்தில் கேள்விகளை ஏதும் கேட்காமல் வாங்கிவிடுகிறார்கள்.

வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களில் பெரும்பாலனர்வர்கள் ஊரில் ஊதாரித்தனமாக சுற்றுபவர்களும், ஏதாவது பிரச்சனையில் மாட்டியவர்களுமாகத் தான் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வெளிநாட்டிற்கு போனாலாவது திருந்திட மாட்டானா என்று வீட்டில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த அளவுப் பணத்தை புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். இதில் சிலருடைய அம்மா/மனைவியின் தாலி செயின்கள் கூட விற்பனை அல்லது அடகுக் கடைக்குப் போவது மறுக்க இயலாது.

இவ்வாறு சௌதி வருபவர்களுக்கு முதலில் அறிமுகம் ஆகிறவர் கபில். இவர்தான் விசாவிற்கு சொந்த காரர், வருபவர்களை ஸ்பான்சர் செய்து அழைத்திருப்பவர். இவர் லோக்கல் அரபியாக இருப்பார். இவர்கள் கம்பெனி வைத்திருப்பவர்களாகவும் இருப்பார் அல்லது வேறு கம்பெனிகளுக்கு ஆட்களை சப்ளை பண்ணுபவராகவும் இருப்பார்.

சௌதி வந்தவுடன் அனைவருடைய பாஸ்போர்ட்டும் முதலில் கபில் கைக்கு போய்விடும். பின்னர் இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளேன் என்பதை அடையாளப்படுத்த ஒரு அட்டை கொடுக்கப்படும், அதன் அரேபிய சொல் இக்காமா(IQAMA). இந்த அடையாள அட்டை இருந்தால் தான் சௌதியில் சுதந்திரமாக சுற்றமுடியும். வாகனத்தில் அல்லது வெளியில் செல்லும் போது சௌதி போலீசார் பிடித்தால் முதலில் கேட்பது இந்த இக்காமாவை தான். வங்கியில் பணம் அனுப்ப வேண்டுமானால் கூட இந்த இக்காமாவை தான் கேட்பார்கள்.

இந்த இக்காமா சௌதி அரசால் வழங்கப்படும். இதை தருவதற்கு முன்பு நம்முடைய கைரேகை முதல் ஜாதகம் வரை அனைத்தும் அரசாங்க கோப்புகளில் பதிக்கப்பட்டுவிடும். பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கொடுக்கப்பட மாட்டாது. இக்காமா ம‌ட்டும் தான் உங்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும். சில‌ க‌பில்க‌ள் இந்த‌ இக்காமாவையும் வாங்கி வைத்து கொள்வார்க‌ள்.

உங்க‌ளுடைய‌ க‌பில் சொந்த‌மாக‌ க‌ம்பெனி வைத்திருந்தால் அவ‌ருடைய‌ க‌ம்பெனியில் நீங்க‌ள் வேலை செய்வீர்க‌ள். சில‌ க‌பில்க‌ள் மேன் ப‌வ‌ர் ச‌ப்ளை ம‌ட்டும் செய்வார்க‌ள். அவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு வேறு க‌ம்பெனியில் வேலை வாங்கி த‌ருவார்க‌ள். வேலை நேர‌ம் 10-ல் இருந்து 12 ம‌ணி நேர‌ம் இருக்கும்.

த‌ங்குவ‌த‌ற்கு ரூம் உங்க‌ளுக்கு கொடுத்துவிடுவார்க‌ள். ஒரு அறையில் நான்கில் இருந்து ஐந்து பேர் இருப்பார்க‌ள். அனைவ‌ரும் ச‌மைத்து தான் சாப்பிடுவார்க‌ள்.(ச‌மைய‌ல் செல‌வு + மொபைல் செல‌வு + இத‌ர‌ செல‌வுக‌ள் எல்லாம் சுமார் 300‍-ல் இருந்து 500 ரியால் செல‌வாகும், மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌ள‌த்தில் இந்த‌த் தொகை போனால் மீத‌ம் எவ்வ‌ள‌வு வ‌ரும் என்ப‌தை ஊகித்து கொள்ளுங்க‌ள்)

வெளிநாட்டிற்கு வ‌ரும் பெரும்பாலான‌ர்வ‌ர்க‌ள் முத‌லில் கொடுக்கும் ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னுக்கு வாங்கிய‌தாக‌ தான் இருக்கும். அத‌ற்கு வ‌ட்டியை கொடுக்க‌ தான் இவ‌ர்க‌ளுடைய‌ ச‌ம்ப‌ள‌ம் இருக்கும். சில‌ர் ஓவ‌ர் டைம் போன்ற‌ வேலைக‌ள் பார்த்து ஏதும் மீத‌ம் பிடித்தால் உண்டு. சௌதியில் உள்ள‌ த‌ட்ப‌வெப்ப‌ நிலைக‌ள் அனைவ‌ரும் அறிந்த‌தே. வெயில் என்றால் ம‌ண்டைய‌ பிள‌ந்துவிடும், குளிர் என்றால் மூக்கில் ர‌த்த‌ம் வ‌ழிய‌ செய்துவிடும். இந்த‌ சூழ்நிலைக‌ள் எல்லாம் ச‌மாளிக்க‌ வேண்டும்.

இவ‌ர்க‌ளுக்கு வேலை கொடுக்கும் க‌ம்பெனியில் ச‌ரியாக‌ வேலையிருந்தால் ப‌ர‌வாயில்லை. வேலையில்லையென்றால் க‌பில் உங்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் க‌ம்பெனியில் இருந்து த‌ர‌மாட்டார். உங்க‌ளிட‌ம் "நீங்க‌ள் வெளியில் யாரிட‌மாவ‌து வேலை செய்து கொள்ளுங்க‌ள், ஆனால் என‌க்கு மாத‌ம் 200‍-ல் இருந்து 300 ரியால் கொடுத்து விட‌ வேண்டும்" என்று சொல்லுவார். வெளியில் வேலை நீங்க‌ள் தேடி கொள்ள‌ வேண்டும்.

இத‌ற்கு நீங்க‌ள் உட‌ன்ப‌டாம‌ல் என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்க‌ள் என்றால் க‌பில் ம‌றுத்துவிடுவார். டிக்க‌ட்டிற்கு நீயே ப‌ண‌ம் பார்த்து கொள். உன்னுடைய‌ பாஸ்போர்ட் என் கையில் இருக்கிற‌து, அது வேண்டுமானால் இவ்வ‌ள‌வு ப‌ண‌ம் கொடுத்துவிட்டு செல் என்று ஒரு பெரிய‌ அமௌண்டை சொல்லுவார்க‌ள்.(இத‌ற்காக‌வாவ‌து நீங்க‌ள் வேலை செய்ய‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுவீர்க‌ள்). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.

க‌ம்பெனியில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளுக்கு முத‌ல் மூன்று, நான்கு மாத‌ங்க‌ள் சொல்லிய‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்க‌ப்ப‌டும். பின்பு ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌திலும் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவார்க‌ள். ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னில் வ‌ந்த‌ ஒருவ‌னுக்கு ச‌ம்ப‌ள‌ம் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌ட‌ வில்லையென்றால் பெரிய‌ ம‌ன‌க‌ஷ்ட‌ம் வ‌ந்து சேரும். மேலும் இவ‌ர்க‌ள் த‌ங்க‌வைக்க‌ப் ப‌ட்டிருக்கும் இட‌ங்க‌ள் பெரும்பாலும் கிராம‌மாக‌த் தான் இருக்கும். க‌பிலின் உத‌வியில்லாம‌ல் இவ‌ர்க‌ள் ந‌க‌ர‌ங்க‌ளுக்கு வ‌ர‌முடியாது. என‌வே இவ‌ர்க‌ளின் க‌ஷ்ட‌ங்க‌ளையும் பிற‌ருட‌ன் ப‌கிந்து கொள்ள‌வும் முடியாது.

ச‌ரியாக‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்காம‌ல் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவ‌தால் கிடைக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் க‌பிலின் பிடியில் இருந்து இவ‌ர்க‌ள் வெளியில் சாடிவிடுவார்க‌ள். இவ‌ர்க‌ளிட‌ம் எந்த‌ பேப்ப‌ரும் இருக்காது(பாஸ்போர்ட், இக்காமா போன்ற‌வை). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.

ஒரு க‌ம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்க‌ள். ஆனால் அங்கு குறைவான‌ ச‌ம்ப‌ள‌ம் த‌ருகிறார்க‌ள், வெளியில் வேலை செய்தால் அதிக‌மாக‌ ச‌ம்பாதிக்க‌லாம் என்று ஆசைப்ப‌ட்டு வெளியில் சாடும் ஒரு கூட்ட‌மும் இருக்கிற‌து. இவ‌ர்க‌ளிட‌மும் எந்த‌வித‌ பேப்ப‌ரும் இருக்காது.



இவ்வாறு எந்த‌வித‌ பேப்ப‌ர்க‌ளும் இல்லாம‌ல் எவ்வாறு இங்கு ச‌மாளிக்கிறார்க‌ள்?. எப்ப‌டி இந்தியா வ‌ருகிறார்க‌ள் என்ப‌தை அடுத்த‌ ப‌திவுக‌ளில் எழுதுகிறேன்.

10 பேர் சௌதியில் வேலை செய்கிறார்க‌ள் என்றால் அதில் 6 பேர் நான் மேலே சொன்ன‌ மூன்று பிர‌ச்ச‌னைக‌ளில் மாட்டுப‌வ‌ர்க‌ள். அப்ப‌டியானால் எத்த‌னை ச‌த‌வீத‌ம் என்று நீங்க‌ளே க‌ண‌க்கிட்டு பாருங்க‌ள்.

-------------தொட‌ரும்--------------

குறிப்பு: இந்தியாவிற்கு வ‌ரும் கால‌ம் நெருங்கிவிட்ட‌தால் வேலை கொஞ்ச‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌து. அத‌னால் தொட‌ர்ச்சியாக‌ ப‌திவுக‌ள் எழுத‌முடிய‌வில்லை. நேர‌ம் கிடைக்கும் போது க‌ண்டிப்பாக‌ ப‌கிருவேன்.

Wednesday, April 28, 2010

பொரித்த‌ மீன்_ச‌வூதி அரேபிய‌ன் ஸ்டைல்

அசைவ‌ம் சாப்பிடுப‌வ‌ர்க‌ளில் மீன் உண‌வு என்றால் பிடிக்காத‌வ‌ர்க‌ள் எவ‌ரும் இருக்க‌ மாட்டார்க‌ள். நானும் அப்ப‌டித்தான். ஆனால் ஒரு சின்ன‌ க‌ண்டிச‌ன் அது வீட்டில் த‌யாரித்த‌தாக‌ இருக்க‌ வேண்டும். ஓட்டலில் மீன் சாப்பாடு என்றால் நான் சாப்பிடுவ‌து இல்லை. அது என்ன‌வோ என‌க்கு பிடிப்ப‌து இல்லை. நாம‌ தான் வீட்டை விட்டு வேலைக்கு என்று வெளியில் வ‌ந்து கிட்ட‌திட்ட‌ ஏழு ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன. ப‌ல‌ ஊர்க‌ளுக்கும் நாடோடியாய் சுற்றியாச்சி. மீன் உண‌வு என்ப‌து என‌க்கு ம‌ற‌ந்த‌ ஒன்றாக‌வே ஆகி விட்ட‌து. இத்த‌னைக்கும் நான் க‌ன்னியாகும‌ரியில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன். அங்குள்ள‌வ‌ர்க‌ளுக்கு மீன் தான் பிர‌தான‌ உண‌வு. எங்க‌ள் வீட்டில் இன்றைக்கும் இருப‌து ரூபாய்க்கு மீன் வாங்கினால் நான்கு பேர் இர‌ண்டு நேர‌ம் தாராள‌மாக‌ சாப்பிடும் அள‌வு கிடைக்கும்.

ச‌ரி ந‌ம்ம‌ இப்ப‌ க‌தைக்கு வ‌ருவோம். க‌ட‌ந்த‌ ஆறு மாத‌ங்க‌ளாய் நான் ச‌வூதி அரேபியாவில் இருக்கிறேன். நாங்க‌ ரூம்லேயே ச‌மைய‌ல் செய்து சாப்பிடுவோம். என்றாவ‌து ச‌மைய‌ல் போர் அடிச்சுதுனா வெளியில் சென்று சாப்பிடுவோம். இப்ப‌டியே ந‌ம்ம‌ பொள‌ப்பு போய்கிட்டு இருக்கும் போது ஆபிசுல‌ ந‌ம்ம‌ கூட‌ வேலை பாக்குற‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எங்க‌ள் ரூம்முக்கு வ‌ந்தார். அவ‌ரிட‌ம் பேசிகிட்டு இருக்கும் போது மீன் சாப்பாட்டை ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து. அவ‌ரு உட‌னே எங்க‌ளிட‌ம், "நாம‌ இருக்கிற‌ இந்த‌ ஏரியா மீன் சாப்பாட்டிற்கு ரெம்ப‌ பேம‌ஸ்" உங்க‌ளுக்கு தெரியுமா? என்றார்.

நான் அவ‌ரிட‌ம் அப்ப‌டி என்ன‌ ஸ்பெச‌ல் நாங்க‌ள் கேள்வி ப‌ட‌வில்லை என்று சொன்னேன், அப்ப‌ இன்னைக்கு நைட்டு நாம‌ எல்லோரும் மீன் சாப்பிட‌ போகிறோம் என்று அந்த‌ ந‌ண்ப‌ர் கூறினார். ச‌ரி போக‌லாம் என்று சொல்லி விட்டு, அவ‌ரிட‌ம் எப்ப‌டி பிரிப்பேர் ப‌ண்ணுவார்க‌ள் என்று கேட்டேன். வெறும் உப்புதான் போடுவார்க‌ள் வேற‌ எதுவுமே இருக்காது அப்ப‌டியே ப்ரை ப‌ண்ணி த‌ருவார்க‌ள் என்று சொன்னார்.

என‌க்கு அடி வ‌யிறு க‌ல‌ங்க‌ தொட‌ங்கிடுச்சு, ஆஹா வ‌ச‌மா மாட்டிடோம்டா இன்னைக்கு நைட்டு நாம‌ கொலை ப‌ட்டினிதான் என்று. நான் வெளியில் மீன் அதிக‌மாக‌ சாப்பிடாத‌ற்கு கார‌ண‌ம் அத‌ன் பிரிப்ப‌ரேச‌ன் தான், மசாலா எல்லாம் ச‌ரியாக‌ சேர்க்க‌வில்லை என்றாலோ, அல்ல‌து ச‌ரியாக‌ மீனை கிளீன் செய்ய‌வில்லை என்றாலோ, அல்லது மீன் அழுகிவிட்டாலோ அதை எவ‌ரும் சாப்பிட‌ முடியாது. இப்ப‌டி ப‌ல‌ லோக்க‌ள் இருப்ப‌தினால் தான் மீனை அந்த‌ அள‌வு விரும்பி வெளியில் சாப்பிடுவ‌து இல்லை.

வாங்கி த‌ருகிறேன் என்று சொல்லுகிற‌ ந‌ண்ப‌ரிட‌ம் நாங்க‌ள் சாப்பிட‌ வ‌ர‌வில்லை என்று சொல்ல‌ முடியுமா?.. ச‌ரி ச‌மாளிப்போம் என்று ம‌ன‌தில் நினைத்துக் கொண்டு என்னை போல‌வே முழித்து கொண்டிருந்த‌ ந‌ம்ம‌ ரூம் மேட்கிட்ட‌ போய் சைல‌ண்டா "மீன் சாப்பிடுவ‌து போல் சாப்பிட்டு விட்டு அவ‌ரை கொண்டு போய் ரூம்ல‌ விட்டுவிட்டு நாம‌ த‌னியா போய் ந‌ம்ம‌ ம‌லையாளி சேட்டா க‌டையில் புரோட்டா சாப்பிட்டு விட‌லாம்" என்று கூறினேன். ஆஹா அருமையான‌ யோச‌னை என்று அவ‌ரும் த‌லையை ஆட்டினார்.

க‌டைக்கும் போயாச்சி. க‌டைக்கார‌ர் ந‌ம்ம‌ ந‌ண்ப‌ருக்கு பிரெண்டு போல‌.. இவ‌ரை பார்த்த‌வுட‌ன் அவ‌ன் சிரிச்சிட்டே இர‌ண்டு பெரிய‌ முழு மீனை எடுத்துக் கொண்டு வ‌ந்தான். நான் அவ‌ரிட‌ம் என்ன‌ இது இவ்வ‌ள‌வு பெரிய‌ மீனை நாம‌ சாப்பிட‌ முடியுமா? என்று கேட்டேன். கொஞ்ச‌ம் பொறுமையா இருங்க‌ நாம‌ சாப்பிட‌ தானே போகிறோம் என்று ப‌தில் சொன்னார்.

அவ‌ன் எங்க‌ள் க‌ண் முன்னாடியே அழ‌காக‌ கிளீன் செய்து உப்பை ம‌ட்டுமே த‌ட‌வி கொதிக்கும் எண்ணையில் தூக்கி போட்டான். ம‌சாலா என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

நானும் ரூம் மேட்டும் எதையோ வெறிப்ப‌து போல் நின்று கொண்டிருந்தோம். சிறிது நேர‌த்தில் மீனை எண்ணையில் இருந்து எடுத்து ஒரு பெரிய‌ த‌ட்டில் க‌ப்சா ரைசை வைத்து அத‌ன் மேல் இந்த‌ இர‌ண்டு மீனையும் வைத்து எங்க‌ளிட‌ம் கொண்டு த‌ந்தான்.

அப்ப‌டியே சாப்பிட‌ அம‌ர்ந்தோம். எங்க‌ளை அழைத்து சென்ற‌ ந‌ண்ப‌ர் சாப்பிடுங்க‌ என்று மீனை காட்டினார். ச‌ரி என்ற‌ முடிவுட‌ன் மீனை சாப்பிட‌ ஆர‌ம்பித்தோம். ஆர‌ம்பித்த‌து தான் தெரியும்.. அத‌ன் பிற‌கு ஒருவ‌ரும் வாயே தொற‌க்க‌வில்லை. அந்த‌ புல் பிளேட்டும் காலி ப‌ண்ணிட்டுதான் எழுந்தோம். உண்மையில் அவ்வ‌ள‌வு ருசி... அழைத்து சென்ற‌ ந‌ண்ப‌ர் எங்க‌ளை பார்த்து சிரித்து கொண்டே எப்ப‌டி இருந்த‌து என்று கேட்டார். அடுத்த‌து எப்ப நாம‌ வ‌றோம் என்று கேட்டோம்.

அப்புற‌ம் அடிக்க‌டி அங்கு வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌மாயிட்டு.... உண்மையில் சுத்த‌மாக‌ ம‌சாலா எதுவும் இல்லாம‌ல் மீன் சாப்பிடுவ‌து த‌னி ருசிதான். நேற்று போய் சாப்பிட்ட‌ போது எடுத்த‌ போட்டோ‌க்க‌ள்‌ தான் கீழே உள்ள‌வை...

இப்ப தாங்க‌ க‌ட‌லில் இருந்து பிடிச்சிட்டு வ‌ந்த‌து..... அப்ப‌டினு சொல்ல‌ மாட்டேன்... இன்னைக்கு இது மூணுதான் மாட்டுச்சு



நீங்க‌ இருக்கிற‌ அவ‌ச‌ர‌த்தா பார்த்தா அப்ப‌டியே போட்டு ப்ரை ப‌ண்ண‌ வேண்டிய‌து தான்..




அண்ணே அந்த வால் ப‌குதியில் நீங்க‌ கிளீன் ப‌ண்ண‌லை..... விடுங்க‌ தம்பி அடுத்த‌ முறை கிளீன் ப‌ண்ணிறேன்..



த‌ண்ணியை இப்ப‌டி செல‌வு ப‌ண்ணி கிளீன் ப‌ண்ணுறீங்க‌..... உண்மையில் த‌ண்ணி வைச்சுதான் கிளீன் ப‌ண்ணுறீங்க‌ளா... இல்லா பெட்ரோலா? ஏன்னா உங்க‌ ஊர்ல‌ த‌ண்ணியை விட‌ பெட்ரோல் தான் விலை க‌ம்மியா இருக்கு....




ஏண்ணே உப்பு போடுற‌துனால‌ இதை க‌ருவாடுனு சொல்லா மாட்டாங்க‌ இல்லா. ஏன்னா நான் மீனுன்னு சொல்லுவேன்.... எல்லாரும் ந‌ம்ப‌னும்...



அண்ணே எங்க‌ ஊர்ல‌ உள்ள‌ அந்நிய‌ன் ப‌ட‌த்துல‌ கூட‌ இது போல தான் ஒரு சட்டில‌ போட்டு வில்ல‌னை ஹீரோ பொரிப்பாரு.... நீங்க‌ மீனை பொரிக்கிறீங்க‌...



எப்ப‌டி அண்ணே உப்பு பாப்பீங்க‌.... அப்ப‌டியே கிள்ளி வாயில‌ போட்டு பாருங்க‌.... நாக்கு வெந்தா நான் பொறுப்பில்லை...



ஆஹா அடுகிட்டாங்க‌ ...... இனி பேச்சு கிடையாது வீச்சு தான்..... இதை எத்த‌னை பேர் சாப்பிட்டோம் என்று க‌ரெக்டா சொன்னால் பிஷ்ப்பிரை ப‌ற்றிய‌ முழு நீள‌ வீடியோ ப‌ட‌ம் மெயிலில் அனுப்பி வைக்க‌ப்ப‌டும்....








ஒரு விள‌ம்ப‌ர‌ம்..... இது நான் தானுங்கோ.....




குறிப்பு: மீனின் உண்மையான் டேஸ்டை இதில் தான் பார்க்க‌ முடிந்த‌து. கார‌ண‌ம் ந‌ம‌து ஊர்க‌ளில் மசாலா சேர்ப்ப‌தால் அத‌ன் டேஸ்ட் மாறி விடுகிற‌து. பொரித்து முடித்த‌ பின்பு சிறிது பெப்ப‌ர் சேர்கிறார்க‌ள். அவ்வ‌ள‌வுதான். நான் இருக்கும் இட‌த்தில் தான் செங்க‌ட‌ல்(RedSea) இருக்கின்ற‌து. மேலே பார்த்த‌ மீன்க‌ள் கூட‌ அதில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌து தான். ச‌வுதியை த‌விர‌ வேறு இங்கும் இந்த‌ மாதிரி மீன் பிரிப்ப‌ரேச‌ன் இல்லை என்று சொல்லுகிறார்க‌ள்.
.
.
.

Wednesday, January 27, 2010

சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-2

முதல் இடுகயை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை தொடரவும்.

இந்த சாலையை வெறும் வாணிபத்திற்க்கும், போக்குவரத்திற்கு மட்டும் பயன் படுத்தாமல் சுற்றுலாதலமாகவும் இதை வடிவமைத்திருப்பது இதன் மற்றும் ஒரு சிறப்பம்சம். நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன் இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர் என்று. நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து இந்த பாலத்தை சுற்றி வர காரில் அந்த சாலையில் பயணித்தோம். கார் பயணத்தில் இரண்டு பக்கங்களிலும் கடலின் அழகை காரில் இருத்தவாறு ரசிக்க முடிந்தது. சிறிது நேரத்தில் பயணம் முடிவுக்கு வந்தது கார் ஒரு நகரத்திற்குள் புகுந்தது. கடலும் கண்ணை விட்டு மறைந்தது. இரண்டு பக்கமும் மரங்களும், கட்டிடங்களும் என் கண்களுக்கு தென்பட்டன. ஒரு பூங்கா போல் தோன்றியது. காரை டிரைவர் காலியாக இருந்த இடத்தில் நிறுத்தினான். வண்டியின் முன்னால் இருந்த நண்பர் தான் எங்களை அழைத்து வந்தார். அவர் காரை விட்டு இறங்கவே நாங்களும் காரை விட்டு இறங்கினோம். எங்களுடன் வந்த நண்பரில் ஒருவர் அழைத்து வந்தவரிடம் " கடலில் உள்ள பாலத்தை சுற்றி கட்டுகிறேன் என்று கூறி விட்டு ஏதோ பூங்காவிற்கு அழைத்து வந்துருக்கிறீர் " என்று கேட்டார். நானும் அதை வழிமொழியலாம் என்று அழைத்து வந்தவரின் முகத்தை பார்த்தேன். அவர் கண்ணில் தெரிந்த ஏளன பார்வை என் வாயை மூடியது. அழைத்து வந்த நண்பர் சிரித்துக்கொண்டே " அதற்கு மேல் தான் நாம் நிற்கிறோம் " என்றார். அனைவரும் ஆச்சரியத்துடன் சுற்றும், முற்றும் பார்த்தோம்.



உண்மை தான் நாங்கள் நிற்பது கடலின் மேல் தான் என்பது அவர் சுட்டிக் காட்டிய அந்த வானுயர்ந்த கோபுரத்தை பார்த்த போது எங்களுக்கு புலப்பட்டது. ஏனென்றால் இங்கு வருவதற்கு முன் அவர் தனது மொபைலில் ஏற்கனவே அவர் வந்த போது எடுத்த போட்டோவை காட்டியிருந்தார். நாங்கள் நிற்க்கும் இடத்தை சுற்றிலும் மரங்கள் அழகாக வளர்க்கப் பட்டு இருந்தது. வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களும், கட்டிடங்களும் இருந்தன. சிறிது நடந்து சென்றோம் அங்கு கடல் கண்ணுக்கு புலப் பட்டது. அழகாக வேலி அமைக்கப் பட்டு இருந்தது. ஆங்காங்கே மண் மேடைகள் காணப்பட்டன. அதில் இருந்த வாறு சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். ஆம் தூண்டில் போட்டு கடலில் மீன் பிடிப்பது இவர்களின் பொழுதுப்போக்கு. அதில் நாமும் கலந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த மண்மேடையில் புற்கள் வளர்க்கப்பட்டு அழகாக இருந்தன. அதில் இருந்தவாறு கடலின் அழகையும், அதன் மேல் உள்ள இந்த சாலையின் ஒரு பகுதியையும் ரசிக்க முடியும்.




அங்கிருந்து அப்படியே நகர்ந்து அந்த கோபுரம் இருந்த திசையை நோக்கி நடந்தோம். கோபுரதிற்கு உள்ளே செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இந்த கோபுரம் மிக வித்தியாகமாக கட்டப்பட்டு இருந்தது. மேலே செல்வதற்கு லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது நமது பெரியோர் வாக்கு. அது இவர்கள் விசயத்தில் நூறு சதவீதம் உண்மை. இங்கு இரண்டு மசூதி(Mosque) இருக்கின்றது. மேலும் இந்த கோபுரத்தில் ஒரு உணவகமும் உள்ளது. குழந்தைகள் விளையாட விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய ஒரு அறையும் உள்ளது. மேல் தளத்தில் நின்று இந்த கடல் நகரின் அழகை சுற்றி பார்க்க கண்ணாடி சுவர் அமைக்கப்ப்ட்டுள்ளது.



இதன் மேல் நின்று பார்க்கும் போது கடல் மேல் அமைந்துள்ள இந்த அழகிய சாலையும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் மற்றும் சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்களின் அழகும் அருமை. இரவு நேரமாக இருந்தால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த சாலையின் அழகு இருமடங்காக ஜொலிக்கிறது. லிப்டில் மேலிருந்து கீழாக வரும் போதும்
அதில் உள்ள கண்ணாடி வழியாக வெளி காட்சியை பார்க்க முடிகிறது.



நான் மேலே விவரித்து இருப்பது சவூதி அரேபிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை மட்டும் தான். இதை அடுத்து பெக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் மேலே உள்ளது போல் ஒரு குட்டி நகரம் உள்ளது. கடலின் மேல் அமைக்கப் பட்ட இந்த இரு இடங்களின் பரப்பளவு 660,000 சதுர அடி. அந்த இரண்டு கோபுரங்களின் உயரம் 65 மீட்டர்.



புதன் மற்றும் வியாழக் கிழமைகாளில் இந்த சாலை மிக கூட்டமாக இருக்கும். அந்த நாட்களில் இந்த சாலையில் உள்ள வாகன நெரிசல் நமது ஊரில் உள்ள மவுண்ட் ரோடு நெரிசலை தாண்டி விடும். காரணம் நமது ஊரில் வாரத்தின் கடைசி நாட்காளாகிய சனி மற்றும் ஞாயிறு போல் இங்கு வியாழன் மற்றும் வெள்ளி. சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை போதை,.....மற்றும் எல்லா விசயங்களுக்கும் தடா என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் பெக்ரைனை பொறுத்தவரை இதற்கு நேர் எதிர்மறை. மதுவில் இருந்து மா....வரை அனைத்தும் சுலபமாக கிடைக்கும். எனவே குடிமக்கள் அதிகம் வார இறுதி நாட்களில் இந்த சாலையை பயன்படுத்துவதால் மிக நெரிசலாக இருக்கும். குடிமக்கள் என்று நான் கூறியது பயணிகளை பற்றி தான் நீங்கள் தப்பாக புரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல. 2008 ஆம் ஆண்டின் காணக்கெடுப்பின் படி சாரசரியாக ஒரு நாள் இந்த சாலையை உபயோகப்படுத்தியவர்களின் எண்ணிக்கை 48,612. வாகனங்களின் எண்ணிக்கை 23,690.




எலே மக்க இதை படிச்சிட்டு சவூதி போயிட்டு நாக்கில் எச்சில் உறினால் நாமளும் அப்படியே பெக்ரைன் போலானு நினைக்சுட்டு வந்திடாதுங்க. அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஓய்..என்னன விசா(Visa) அடிக்கும் போதே அதில் மல்டிபிள் எண்டிரி(Multiple Entry Visa) என்று அடிக்க வேண்டும். இல்லாமல் சிங்கிள் எண்டிரி(Single Entry Visa) என்று சவூதி வந்துட்டு பெக்ரைன் போனால் திரும்ப சவூதி வரமுடியாது .நல்ல கப்சாவும் குப்பூசும் ஜெயில்ல கிடைக்கும் ஓய்..

Monday, January 25, 2010

சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-1

நான் சவூதி அரேபியாவில் பார்த்த இடங்களில் என்னை பிரமிக்க வைத்த இடங்களில் ஒன்று கிங்க் பகாத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கடல் வழி மேம்பாலச் சாலை. இது சவூதி அரேபியா நாட்டையும் பெக்ரைன் நாட்டையும் இணைக்க கூடிய பெரிய கடல் வழி மேம்பாலம் ஆகும்.




மிக அழகாக, நேர்த்தியாக பிரமிக்கதக்கதாய் கட்டப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து சவூதி அரேபியா வருபவர்கள் பெக்ரைன் விமானத்தளத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து வழியாக பயணம் செய்ய நேர்ந்தால் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.




இந்த சாலையானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஒரு பகுதி சவூதி அரேபிய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மற்றும் ஒரு பகுதி பெக்ரைன் அரசால் பாதுகாக்கப்படுகிறது. இந்த இரண்டு எல்லைப் பகுதியும் இணையும் கடலின் மேல் பகுதியில் தனித் தனியே இரு குட்டி நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் இரண்டு மிக பிரமாண்ட கோபுரங்களையும் அமைத்துள்ளார்கள்.



இந்த சாலையானது அமைக்க 1965-ஆம் ஆண்டு இரு நாட்டு மன்னர்களால் முடிவுச் செய்யப்பட்டது. இரண்டு நாட்டு குழுக்கள் இணைந்து திட்டம் வகுத்தன. பின்பு 1968-ஆம் ஆண்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட வேலைகள் முடிக்கப்பட்டு 1986-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சவூதி மன்னர் கிங்க் பகாத் பின் அப்துல் அஸிஸ்(King Fahd bin Abdul Aziz) மற்றும் பெக்ரைன் மன்னர் ஹெச் ஹெச் சாகிப் இசா பின் சல்மான்(HH Shaikh Isa bin Salman) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்பு நாளைடைவில் இது கிங்க் பாகத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்பட்டது.


இந்த பாலமானது வாகனங்கள் வருவதற்க்கும் போவதற்க்கும் தனித்தனியாக சாலைகள் அமைக்கப்பட்டு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சாலையின் அகலம் 11.6 மீட்டர். ஒவ்வொரு சாலையும் இரண்டு லேன்(Lanes) களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஆங்கங்கே வண்டிகளை நிறுத்துவதற்கு அவசர வண்டி நிறுத்துமிடங்களையும்(Emergency Vehicle Parking) அமைத்துள்ளனர். இந்த சாலையானது ஐந்து பாலங்களையும்(Bridges), ஏழு செயற்கை மிதவைத் தளத்தையும்(Embankments) கொண்டு அமைக்கப் ப்ட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர். இது 536 சிமென்ட் தூண்களால்(Concrete Columns) கடல் உள் இருந்து தாங்கப்படுகிறது.



இந்த சாலையனாது நான்கு ஒப்பந்தங்களாக(Contract) போடப்பட்டு கட்டி முடிக்கப் பட்டது. இந்த சாலை கட்ட அமைக்கப் பட்ட குழுவின் பரமரிப்புக்கும், நிர்வகிப்பவர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் ஆன செலவு மட்டும் 86 மில்லியன் சவூதி ரியால். முழுவதும் கட்டி முடிக்க செலவு ஆன தொகை 3,036 மில்லியன் சவூதி ரியால்(1SR=12.32 RS)


இவர்கள் சதாரணமாக 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். இந்த கடல் வழி சாலையைக் கடப்பதற்கு 15 முதல் 20 நிமிடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பயணம் செய்யும் போது இரண்டு பக்கங்களில் உள்ள இயற்கை அழகு நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.


சவூதி அரேபியாவில் மேம்பாலங்கள் கட்டுவது சதாரணமாக செய்து விடுகிறார்கள். ஏதோ சிகரெட் அட்டையில் சிறுவர்கள் வீடுகள் கட்டுவதைப் போல் சிமென்ட் பாளங்களை(CONCRETE BLOCK) கொண்டு அடுக்கி விடுகிறார்கள்.



கிங் பகாத் கேஸ்வே க்கு(KING FAHAD CAUSEWAY) நான் சென்று வந்த அனுவத்தை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்..

தொடரும்......
Related Posts with Thumbnails