
பெரும்பாலும் நான், எனக்கு விருப்பமான படங்களை ரிலீஸின் முதல்நாளே பார்த்து விடுவேன். அப்படி பார்த்தால் தான் ஒரு திருப்தி. சென்னை சிட்டியில் எல்லா படத்துக்கும் முதல் நாள் டிக்கட் கிடைப்பது குதிரை கொம்பு தான். அதனால் நான் சென்னையின் புறநகரான அம்பத்தூரில் உள்ள ராக்கி காம்பிளக்ஸ் தான் பெரும்பாலான படங்கள் பார்ப்பேன்.
மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் ரிலீஸ் ஆன ஒருநாள் முழுவதும் அந்த காம்பிளக்ஸில் உள்ள நான்கு ஸ்கிரின்களிலும்(ராக்கி, சினி ராக்கி, மினி ராக்கி, லஷ்மி ராக்கி) போட்டுவிடுவார்கள். எனவே ஏதாவது ஒன்றில் டிக்கட் கிடைத்துவிடும். அதிகமாக போனால் டிக்கட்டின் விலை எண்பதில் இருந்து நூறுவரை இருக்கும். அதற்கு மேல் விற்றதை நான் பார்த்தது இல்லை.
ரஜினியின் சிவாஜி படம் ரிலீஸ் ஆன அன்று முதல் நாள் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அன்றைக்கு ஆபிஸில் ஆணி அதிகம் லீவு போட முடியாத நிலமை. நான் என்னுடைய நண்பனிடம் "கூட்டம் அதிகமா இருக்குமுடா!! அதனால காலையிலேயே போய் மாலைக் காட்சிக்கு இரண்டு டிக்கட் வாங்கி வச்சிக்கோ" என்று சொல்லிவிட்டு ஆபிஸுக்கு போய்விட்டேன்.
ஆபிஸ்ல இருக்கும் போது நண்பன் போன் பண்ணினான் "டேய் நான் தியேட்டரில் இருக்கிறேன், இன்னும் இரண்டு நாளைக்கு டிக்கட் எதுவும் இல்லையாம், அதனால நான் டிக்கட் வாங்கலனு சொன்னான்" என்னால் நம்ப முடியவில்லை, இவன் தியேட்டர் பக்கமே போகாமல் கதை விடுகிறான் என்று நினைத்து கொண்டேன். காரணம் எந்தவொரு படத்திற்கு இப்படி இருந்தது இல்லை. நான் கேட்டதும் இல்லை.
மாலையில் ஆபிஸ்வேலை முடித்துவிட்டு வந்து, வண்டியை எடுத்து கொண்டு நண்பனும் நானும் தியேட்டருக்கு போனோம். போகும் போதே நண்பன் சொன்னான் டிக்கெட் கிடைக்காது என்று, நான் அதை காதிலே வாங்கவில்லை. அம்பத்தூர் OT பஸ் ஸ்டாண்டை தாண்டி போகும் போதே தெரிந்தது மக்களின் கூட்டம். தியேட்டர் பக்கம் வண்டியை கொண்டு போக முடியாத அளவு கூட்டம். போலிஸ் வேறு போட்டிருந்தார்கள். எனவே வழியிலேயே நாங்கள் ரெகுலராக சாப்பிடும் ஹோட்டலில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து மெதுவாக தியேட்டர் பக்கம் சென்றேன்.
காட்சி நேரங்கள் எல்லாம் மாற்றியிருந்தார்கள். மேட்னி ஷேவே இன்னும் முடியவில்லை. அதனால் மெயின் வாசலை மூடி வைத்திருந்தார்கள். டிக்கட் எடுப்பதற்கு கவுண்டரில் ஹவுஸ்புல் போர்டு மாட்டி இருந்தார்கள். கேட்டில் நிற்கும் தியேட்டர் ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு டிக்கட் இல்ல அதனால யாரும் வெயிட் பண்ண வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தார்கள்.
அவர்கள் சொல்வதை கேட்டு கூட்டம் மட்டும் நகர்ந்ததாக தெரியவில்லை. "டிக்கட் இல்லைனு சொல்லிட்டு அவனுவளுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு மட்டும் ஆயிரம், ஐநூறுனு விக்கிறானுங்க" என்று என்னுடைய பக்கத்தில் இருந்த தாடிவச்ச அறுபது வயது பெரிசு சொல்லியது.
இது எதுவும் ஆவுறது இல்லனு பக்கத்தில் இருந்த நண்பனிடம் "வாட நாம போகலாம், அப்புறமா வந்து பாக்கலாம்" என்றேன். அவன் என்னிடம் "ஒரு நிமிடம்" என்று சொல்லி கொண்டு ஒரு பக்கமாக நடந்தான். நான் கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு ஹோண்டா காரில் இருந்து கூலிங்கிளாஸோடு இறங்கிய நபர் நேராக சைக்கிள் நிறுத்த காசு வசுலிப்பவரை நோக்கி சென்றான். அவரிடம் சென்று மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டி எனக்கு மூன்று டிக்கட் வேண்டும் என்றான். யோவ் டிக்கட் எதுவும் இல்லையா!! போய்யா என்று சுத்த சென்னை பாஷையில் கத்தினார். அப்படியும் அவரிடம் நம்ம கூலுங்கிளாஸ் ஹீரோ கெஞ்சி கொண்டிருந்தான்.
அப்படியே மறுபக்கம் திரும்பினால் குடும்ப தலைவர் ஒருத்தர் தன் குடும்ப தலைவியிடம் டிக்கட் காசை திணித்து "நீ போய் கேளு" அப்பத்தான் டிக்கட் தருவானுங்க என்று சொல்லிகொண்டிருந்தார். அந்த தங்கமணி அம்மா மருங்க மருங்க விழித்து கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தில் இருந்து கரை வேட்டி, சட்டை போட்ட ஆளு ஒருத்தர் நேராக தியேட்டருக்குள் நுழைந்தார். அவரை பார்த்தவுடன் வாசல் தானாக திறந்தது. அவ்ர் பின்னடியே ஒரு குடும்பம் உள்ளே நுழைந்தது. இப்படி வருவோரையும், போவோரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த என்னை "ஒரு நிமிடம்" என்று சொல்லிவிட்டு போன நண்பன் அரை மணி நேரம் கழித்து வந்து கையை பிடித்தான்.
என்னடானு கேட்டேன், எனக்கு தெரிஞ்ச ஒருத்தரிடம் டிக்கட் இருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்தால் இரண்டு டிக்கட் கொடுப்பார் என்றான். போடா வென்று!!!!!!!! இன்னும் இந்த மாசம் முடிய பதினஞ்சு நாளு இருக்கு என்னிடம் செலவுக்கு இருக்கிறதே அவ்வளவு தான். வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்டல்ல கொத்து புரோட்டா சாப்பிடலாம் என்று இழுத்து வந்தேன்.
60 கோடி ரூபாய் பட்ஜெட்ல தாயாரித்த "சிவாஜி" படத்திற்கே இந்த அளவு டிக்கட் விலை என்றால்(அதுவும் சென்னைக்கு அவுட்டர்) இதை போல் மூன்று மடங்கு அதிக பட்ஜெட்ல தயாரித்த "எந்திரன்" படத்திற்கு முதல் இரண்டு நாட்கள் என்ன டிக்கட் விலை வைப்பார்கள் நினைக்கவே தலை சுத்துது. ஆனா அந்த காமெடி எல்லாம் பார்க்கதான் எனக்கு இந்த வருடம் கொடுத்து வைக்கவில்லை.... ஹி.. ஹி... "எல்லாம் நன்மைக்கே"
======================================================
.
.