Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, July 4, 2016

குற்ற உணர்வோ, வெட்கமோ இவர்களுக்கு இல்லை!!

நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் வைத்து மென்பொறியாளர் சுவாதியைப் படுகொலை செய்த குற்றவாளி யாரென்று காவல்துறை அறிவிக்கும் முன்னரே ஒரு இஸ்லாமிய நண்பர்களின் புகைப்படத்தை பெயருடன் வெளியிட்டு, இவர் தான் சுவாதியைக் கொலை செய்தவர், விரைவில் பிடிபட அதிகமாக ஷேர் செய்யுங்கள் என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளம் முழுவதும் வலம் வந்தது. இது ஒருபுறம் நடக்க ஒய் ஜி மகேந்திரன் போன்ற ஆட்கள் மிகக் கேவலமாக நடந்து கொண்டார்கள். இவர்களின் ஆள் மனதில் குடிகொண்டிருக்கும் முற்போக்கு இயக்கங்களின் மீது இருக்கும் வெறுப்புகளை வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டார்கள்.

சம்பந்தமே இல்லாமல் இந்த இஸ்லாமிய இளைஞரின் புகைப்படத்தை பகிர்ந்ததை ஏதோ மனம் பிறழ்ந்தவர்களின் செயல்கள் என்றோ, தெரியாமல் தவறுதலாக பகிர்ந்தது என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. இதன் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி செயல் இருக்கிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. காரணம் கொலை செய்யப் பட்ட பெண் உயர்குடி பிராமணர், கொலையாளியாகச் சித்தரிக்க பட்டவர் ஒரு இஸ்லாமியர், எப்படியான விஷத்தை மக்களின் மனதில் விதைக்கப் பார்க்கிறார்கள்? ஒரு கணம் சிந்தித்தால் மனம் பதறுகிறது. இப்படிப் பகிர்வதால் நடைபெறும் குழப்பங்களில் குளிர்காய்வதற்கு என்று இருக்கும் ஒரு கூட்டம் இந்தப் புகைப்படங்களை தூக்கிச் சுமப்பதில் நமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை, இவர்களை எளிதாக இனம் கண்டு அடையாளப் படுத்திவிடலாம், ஆனால் ஆட்டு மந்தைகள் போல் அனைவரும் இந்தப் புகைப்படங்களை மற்றவர்களுக்குப் பகிர்வதை தான் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.



எவருக்கும் இந்தச் சமூக தளங்களில் வரும் தகவல்கள் குறித்த உண்மைத் தன்மையை பற்றிய கேள்வியோ அல்லது அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளவோ விரும்புவது இல்லை, எல்லோரும் ஒரு பொது புத்தியில் அப்படியே இயங்குகிறோம், இன்றைக்குச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மைத் தன்மையில் எழுதப்படுவது இல்லை. அவரவரின் அடி மனதில் இருக்கும் எண்ணம் மற்றும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எழுதப் படுகிறது, அவற்றை உண்மை என்று நம்ப வைக்க இந்தச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்து கொள்கிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறையின் எழுச்சிக்கு இந்தச் சமூக வலைத்தளங்கள் தான் காரணம் என்று நாம் பெருமிதம் அடைந்தாலும்அத்தகையைத் தலைமுறையின் செயல்களையும், எண்ணங்களையும் காயடிக்கும் வேலையையும் சர்வ சாதாரணமாக ஒரு கூட்டம் இந்தச் சமூக வலைத்தளம் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இங்குப் பகிரப்படும் ஒவ்வொரு தகவல்களிலும் நாம் அறியப்படாத நுண்ணரசியல் இருக்கிறது, இவற்றைப் புரிந்து கொள்ள நமக்கு அதிகப்படியான வாசிப்புகளும் ஆழ்ந்த தேடல்களும் தேவைப்படுகிறது, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அது தான் இருப்பதில்லையே!

வாட்ஸ் அப்பில் நான் இருக்கும் அனைத்துக் குழுமங்களில் ஒரு மணி நேரத்தில் மேற்கண்ட இஸ்லாமிய நண்பரின் புகைப்படம் பகிரப் படுகிறது. இதைப் பகிர்ந்தவர்களிடம் அதைப் பற்றிய மேற்படி தகவல்கள் கேட்டால் ஹி! ஹி! மண்டபத்தில் யாரோ, எனக்கு அனுப்பினார்கள்! நான் இங்குப் பகிர்ந்தேன்! என்ற சமாளிப்பு பதில்கள் தான் வந்தது. நம்முடைய பொது புத்தியில் ஒரு கொலையை பற்றிய தகவல்களையோ, செய்திகளையோ ஊகத்தின் அடிப்படையில் உருவகப் படுத்துவதில் இன்றைய கார்ப்பரேட் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செயல்படுகிறது, இந்தக் கொலைகளின் உண்மைகள் இவர்களின் ஊகத்திற்கு எதிராக வரும் போது அதைப் பற்றிய குற்ற உணர்வோ, வெட்கமோ இவர்களுக்கு இல்லை, அடுத்த செய்திகளுக்கு உருவகம் கொடுக்க கிளம்பிவிடுகிறார்கள்.

என்னைப் பிடிக்கவில்லையா? எடுடா! அருவாளை என்றும் காதலிக்க மாட்டியா? நான் திருநெல்வேலி காரன் என்ற மொக்கையான ஆணாதிக்க சிந்தனையுடன் கூடிய இரண்டாம் தர ஜோக்குகள் சமூக வலைத்தளங்களில் வரத் தொடங்கி விட்டன. ஒரு படுகொலையின் குருதி இன்னும் காயவில்லை, ஆனால் அதை ஜோக்குகளாக வடித்துச் சிரிப்பதற்கு பழக்கப் படுத்திய சமூக வலைத்தளங்கள் உண்மையில் பாராட்ட பட வேண்டியது தான். ஒரு குரூர கொலை நமது சமூக சீரழிவின் நீட்சி! தன் மக்களைப் பாதுகாக்க தவறிய அரசுகளின் வீழ்ச்சி! இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க விடாமல் தடுப்பதில் தான் இருக்கிறது அரசியல் சூழ்ச்சி!

இந்தச் சுவாதியின் படுகொலை ரெயில் நிலையத்தில் நடந்த போது சுற்றி நின்ற மக்கள் கை கட்டி வேடிக்கை பார்த்தார்கள், எவரும் உதவிக்கு வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பொங்கியவர்கள், இப்போது முனுசாமி என்ற தொழிலாளியை, குடித்துவிட்டு ஆடி கார் ஒட்டி போதையில் ஏற்றிக் கொன்றுவிட்டு, காரை நிறுத்தாமல் ஒட்டிய ஐஸ்வர்யா என்ற பணக்கார வீட்டுப் பெண்ணை துரத்திப் பிடித்த மக்களைப் பற்றி வாயே எவரும் வாயே  திறக்கவில்லை, எதிர்மறையான விசயத்திற்கும் மனித குணத்திற்கும் பொங்கும் இந்தச் சமூக ஊடகங்கள், நேர்மறையான மனித குணங்களை கொண்ட இத்தகைய மனிதர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை, ஒரு வேளை யாரையோ கார் ஏற்றிக் கொன்றார்கள், காவல் துறை வந்து பார்த்து கொள்வார்கள் என்று அந்த கார் ஒட்டிய பெண்மணியை விட்டிருந்தால், அன்றைக்கு அந்த ஆடி காரை ஒட்டியது தொழிலதிபர் வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநர் என்று மறுநாள் பத்திரிக்கையில் பெரிய செய்தியாக வந்திருக்கும்.



.

Monday, June 6, 2016

மாப்ள! வண்டியில கடாரி இருக்கா?

நான் ஊருக்குப் போய் இருக்கிற பத்து நாட்களில் குறைந்தது ஒரு மாதம் ஊரில் இருந்து செய்யக் கூடிய வேலைகளைத் திட்டமிட்டு செல்வேன். இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது, எனக்குத் தனியாக குடும்ப அட்டை வாங்கும் வேலைக்காக இரண்டு மூன்று நாட்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருந்தது. முந்தின நாள் தாலுகா அலுவலகத்திற்குச் சென்றிருந்த போது என்னுடைய திருமண பத்திரிக்கை ஒன்று இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கேட்டிருந்தார். என்னுடைய வீட்டில் எவ்வளவு தேடியும் பழைய திருமண பத்திரிக்கை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மாமனார் வீட்டில் போன் செய்து கேட்டபோது, அவர்கள் வீட்டில் அச்சடிக்கப் பட்ட பழைய திருமண பத்திரிக்கை இருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார்கள்.

காலையில் எழுந்து டிபன் சாப்பிட்டுவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்யும் போதே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது, காலையில் பத்து மணிக்கெல்லாம் தாலுகா அலுவலகம் வருமாறு எனக்கு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து தந்திருந்த மாற்றுத் திறனாளி பெரியவர் சொல்லியிருந்தார். அவசர அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குக் கிளம்பினேன். போகும் வழியில் ஊரில் இருக்கும் குருசடி வளாகத்தைத் தாண்டி தான் செல்ல வேண்டும். அந்த வளாகத்தில் எப்போதும் ஒரு இளைஞர் கூட்டத்தை பார்க்க முடியும். வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் ஊரில் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நண்பர்கள் பலரையும் அங்குப் பார்க்க முடியும்.

அந்தக் கூட்டத்தில் இருக்கும் மக்களில் பெரும்பாலான முகங்கள் எனக்குத் தெரிந்தவர்களாக தான் இருப்பார்கள். எப்போது சென்றாலும் அந்த இடத்தில் ஒரு சில நண்பர்களைப் பார்க்க முடியும், அன்று நான் அந்த வழியாகச் சென்ற போதும் பல நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள், தாலுகா அலுவலகம் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டதால் வண்டியை நிறுத்தாமல் அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வண்டியில் வளாகத்தைக் கடந்து சாலையில் சென்று கொண்டிருந்தேன். அதே சாலையின் சிறிது தொலைவில் இருக்கும் டீக்கடையில், எப்போதும் இந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் என்னுடைய பள்ளி தோழன் குமார் ஒரு கையில் தம் வைத்துக்கொண்டு, மற்றோரு கையால் டீக்கடை தூணைப் பிடித்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஏதேச்சையாக என்னைப் பார்த்தவன் கையில் தம்முடன் சாலையின் ஓரம் வந்து சிரித்தான்.

நானும் வண்டியை நிறுத்தி "மக்களே! நான் அவசரமாக மாமனார் வீட்டிற்குச் செல்ல வேண்டும், நான் திரும்ப வரும் போது பேசலாம்" என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியைச் சாலையில் செலுத்தினேன். வண்டியில் செல்லும் போது தான் ஞாபகம் வந்தது, தாலுகா அலுவலகம் போனால் கண்டிப்பா ஒரு 2 மணி நேரமாவது நம்மைக் காக்க வைத்து விடுவார்கள், இவனை அழைத்துச் சென்றால் ஊர் நிலவரங்களையும்,  பக்கத்து ஊர் கிசுகிசுக்களை பேசியது போலவும் இருக்கும், நம்முடைய வேலையும் நடந்தது போல இருக்கும் என்று மனதில் நினைத்து, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மாமனார் வீட்டிற்கு வண்டியைச் செலுத்தினேன்.

மாமனார் வீட்டிற்குச் சென்று, என்னுடைய பழைய திருமண பத்திரிக்கையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் போது, , நான் எந்த டீக்கடையில் என்னுடைய நண்பன் குமாரை பார்த்தேனோ, அதே டீக்கடையில் தூணைப்பிடித்துக் கொண்டு மற்றொரு தம்முடன் நின்றுகொண்டிருந்தான். எப்படியாவது இவனைத் துணைக்கு இழுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வண்டியைச் சாலையின் ஓரமாக நிறுத்தி, என்ன மக்களே! காலையிலேயே டீக்கடையில் வந்து நிக்குற, எப்படி இருக்கிற? இன்னைக்கு வேலைக்கு போகலியா? என்று கேட்டுவிட்டு, என் எதிரில் வந்து நின்ற அவனுடைய தோளில் வண்டியில் அமர்ந்து கொண்டே கையைப் போட்டேன்.

என்னவோ உயிரோட இருக்கேன் மாப்ள, வேலைக்கு எல்லாம் போய் ரெம்ப நாள் ஆச்சு, இப்ப சொந்தமா பிசினஸ் பண்ணுறேன் என்று ரெம்ப சலிப்பாக சொல்லிவிட்டு, நீ எப்ப வந்தாய்? இப்ப எங்க போற? என்று என் முகத்தைப் பார்த்து பேசாமல் சாலையின் இரு பக்கத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டே என்னிடம் கேட்டான். ரெம்பவே பதட்டமாக இருந்தான், அவனிடம் பொறுமையாக எனக்குப் பேச நேரமில்லை, ஏற்கனவே எனக்குத் தாலுகா அலுவலகம் செல்ல நேரம் ஆகி விட்டிருந்ததால், நான் அவனிடம் "மக்களே நான் வந்து ஒரு வாரம் ஆச்சு!, நீ சும்மா தான் இருக்கியா? வாயேன் தாலுகா அலுவலகம் வரைக்கும் போயிட்டு வரலாம்" என்று என்னுடைய அபிலாஷையை எதார்த்தமாகக் கேட்பது போல் கேட்டேன்.

சரி மாப்ள! போகலாம், வண்டியை எடுத்து ஓரம் வச்சுட்டு வரேன் என்று உடனடியாக சொல்வான் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இவ்வளவு வேகமாக "கூட வாறேன்!" என்று சொல்லும் போதே நான் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். நமக்குத் தான் அந்த யோசனை விளக்கெண்ணெய்யெல்லாம் பட்ட பிறகு தானே வரும்.  வேகமாக சாலையின் ஓரத்தில் சைடு ஸ்டாண்டு போட்டு நின்றுகொண்டிருந்த அவனுடைய வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக எடுத்து இரண்டு கட்டிடம் தள்ளிக் கொண்டு போய் ஒரு சந்தினுள் விட்டு வந்தான். என்ன மக்களே! வண்டியை இங்கேயே விட்டு லாக் பண்ணிட்டு வர வேண்டியது தானே! நம்ம ஊர்ல வந்து வண்டியை என்ன செய்ய போறாங்க? என்று கேட்டேன். இல்ல மாப்ள! ஊர்ல கொஞ்ச பேரு என்மேல கொலை வெறியில சுத்துறானுவ! என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சொன்னான். என்ன மக்களே! காலையிலேயே காமெடி பண்ணிட்டு இருக்க! என்று சிரித்த என்னைப் பார்த்து, இல்ல மாப்ள! என்னை அடிப்பதற்கு வெளியூரில் இருந்தெல்லாம் ஆள் செட் பண்ணியிருக்காக! என்று சிரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். எனக்கு முன்பை விட இப்போது பலமாக சிரிப்பு வந்தது. அவனுடைய நடவடிக்கைகள் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக இருந்தது, எனக்கு வேறு தாலுகா அலுவலகம் செல்லுவதற்கும் நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

சாலையின் இருபக்கமும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே, மாப்ள! நான் வண்டியை விட்டதை எவனும் பார்த்தானுவளா? என்று கேட்டான், அந்தச் சாலையில் வருவோர் போவோரை தவிர, இவன் கேட்பது போல் இவனை நோட்டம் விடுபவர் எவரும் இல்லை. இப்போதாவது நான் சுதாரித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு என்னுடைய வேலையைப் பார்க்க சென்றிருக்க வேண்டும். "விதி வலியது" என்பது போல, மக்களே! வா வந்து வண்டியில் ஏறு! ரெம்ப நேரம் ஆகிடுச்சு! தக்கலை வரை போகனும் என்று சொல்லிக்கொண்டு என்னுடைய வண்டியை ஸ்டார்ட் பண்ணினேன், இப்போதும் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு "மாப்ள! எவனும் பாக்கல இல்ல!" என்று சொல்லிக்கொண்டே மெதுவாக வண்டியில் ஏறினான். எவருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக காதலி நம்முடைய வண்டியில் ஏறும்போது பதறுவதை விட மோசமாக இவன் பதறினான்.

ஒரு வழியாக வண்டியை எடுத்துக் கிளம்பி சிறிது தூரம் போவதற்குள், மாப்ள! குருசடி வளாகம் வழியாகச் செல்ல வேண்டாம்! வேறு வழியாகச் செல்! என்று பின்புறத்திலிருந்து என் காதில் சொல்லிவிட்டு இடுப்பைப் பிடித்து இறுக்கினான். முன்பெல்லாம் அந்த குருசடி வளாகத்தில் கூடியிருக்கும் மக்களில் ஒருவனாகத் தான் இவனும் இருப்பான், இப்போது இவன் மட்டும் தனியாக டீக்கடையில் நின்றது எனக்குச் சந்தேகம் வரவழைக்க, என்ன மக்களே! நீ இப்பெல்லாம் குருசடி வளாகத்துக்கு போறது இல்லியா? என்று கேட்டேன். மாப்ள! நம்மள பாத்தா எல்லானுவளுக்கும் இப்ப பொறாமை! அதான் நாம அந்தப் பக்கம் போறது இல்ல! என்றான். அப்படியா! எல்லோரும் பொறாமை படுற அளவுக்கு. நீ என்ன பண்ணிட்ட? என்று கேட்டேன். அது ஒண்ணும் இல்ல மாப்ள! என்னோட பழைய வீட்டை இடுச்சு, புதுவீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்! அத நினைச்சா சிலருக்கு வயிறு எரியுது! என்றான்.

ஏண்டா! ஒரு புது வீடு கட்டினதுக்கெல்லாமா, நம்மூர்ல இப்ப ஆள் வச்சு அடிக்கிறானுவ! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, சரி மக்களே! யாரு உன்னை அடிக்க போறதா சொன்னா? எதுக்கு இவ்வளவு பதட்டமா இருக்க? என்று கேட்டேன். அதை விடு மாப்ள! எல்லாம் நான் பார்த்துக்குறேன், நம்ம மேல அவ்வளவு சீக்கிரம் கை வைச்சுற முடியுமா? இல்ல வைச்சுட்டு தான் போயிட முடியுமானு! என்று கொக்கரித்தான். ஆகா! சரிதான்! வேலில போற ஓணான வேட்டிக்குள்ள தான் பிடிச்சு விட்டுருக்கேன்! என்று மனதிற்குள் நினைத்த வாறு, ஆமா! இப்ப வேலைக்கு போறது இல்லனு சொன்னியே? இப்ப என்ன பிஸினஸ் பண்ணுற? என்று கேட்டேன். அதுவா மாப்ள நான் இப்ப தாஸ் அண்ணன் கூட சேர்ந்து பழைய டூவீலர் வாங்கி விற்கிறேன் என்று சொன்னான்.

இவனிடம் பேசிக்கொண்டே என்னுடைய வீடு வந்து சேர்ந்தேன், வண்டியின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியில் வந்த மனைவியிடம், தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய டாக்குமென்டுகள் வைத்திருக்கும் பையை எடுத்துத் தருமாறு சொல்லிவிட்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினேன். எனக்கு முன்பாக வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த குமார் இறங்கி நாங்கள் வந்த சாலையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். மக்களே! டீ ஏதும் குடிக்கிறியா? என்று கேட்டுவிட்டு வீட்டிற்குள் வருமாறு அழைத்தேன், டீ வேண்டாம் மாப்ள! குடிக்க தண்ணி ஒரு சொம்பு கொண்டு வா? என்று சொல்லிவிட்டு திரும்பவும் சாலையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் இருந்த பையை வாங்கிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீருடன் வெளியில் வந்தேன்.

இப்போது குமாரு, என்னுடைய வண்டியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சைலன்சர் இடுக்கிலும், சீட்டிற்கு அடியிலும் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். நான் அவனிடம் என்ன மக்களே! தேடிட்டு இருக்கிற? என்று கேட்டேன். இல்ல மாப்ள! என்னோட வண்டியில் எப்போதும் பொருள் இருக்கும், அந்த நினப்புல நானும் உன்னோட வந்திட்டேன், சரி மாப்ள ஒண்ணும் பிரச்சனை இல்லை! உங்கிட்ட கடாரி இருக்கா? எதற்கும் ஒண்ணு எடுத்து வச்சுக்க என்றான். எனக்குப் பக்கென்று இருந்தது, இவனை காமெடி பீசுனு நினைச்சு வண்டில ஏத்தினா, ரெம்ப டெரர் பீஸா இருக்கும் போல! என்று நினைத்துக்கொண்டு, அந்தச் சூழ்நிலையை சமாளிக்கத் தொடங்கினேன்.

இப்போது தான் உண்மையில் இவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, மக்களே! என்ன பிரச்சனை! யாரு உன்னை அடிக்க வர்ற? எதுக்கு அடிக்க வர்றாங்க? எதுவா இருந்தாலும் சொல்லு, நான் கூட இருக்கிறேன் என்று தம் கட்டி அவன் அருகில் சென்று கேட்டேன். கண்டிப்பாக என் மனைவி பக்கத்தில் இருந்திருந்தால் சிரித்திருப்பாள். அவனும் நான் தம் கட்டியதைப் பார்த்து நம்பி, "ஒரு லவ்வு மேட்டரு மாப்ள!" என்றான். லவ்வா! யாரோட லவ்வு மக்களே! என்றேன். என்ன மாப்ள! "என்னோட லவ்வு தான்" என்றான். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

இவனை என்னுடைய பள்ளித்தோழன் என்று சொன்னேன் அல்லவா, என்னுடன் படித்தவர்களில் இவனைப்போல் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் திருமணமாகி, அவர்களுடைய குழந்தைகளும் பள்ளிக்கு போகத் தொடங்கிவிட்டார்கள், அதாவது எல்லோரும் அரை கிழடு ஆகிவிட்டோம் என்பதைத் தான் நாசூக்காகச் சொல்லுகிறேன். இப்பவும் இவன் லவ்வு மேட்டருக்கு கத்தி, கடாரி, ஆள் வைத்து அடிப்பதற்கு செட்டிங் என்று டாப் கியரில் போவதைப் பார்க்கும் போது ஒரு சுவாரஸ்யம் இருக்கவே செய்தது.

அவனுடைய லவ்வு மேட்டருக்கு போட்டியாக இருப்பவன் தான் இவனை ஆள் வைத்து அடிப்பதற்கு செட் செய்திருக்கிறானாம். கேட்கவே எனக்கு காமெடியாக இருந்தது, அவன் சிறிதும் பிசிரு இல்லாமல் என்னிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தான். இவனுக்குப் போட்டியாக இருக்கும் பையனின் பெயரைச் சொன்னான், அவன் ஒரு முறையில் பார்த்தால் எனக்குத் தூரத்து உறவினராக வருவான். இப்போது தான் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது, இவன் கத்தி, கடாரி என்று டர் காட்டியது எனக்கும் கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியிருந்தது.

ஒருவழியாக அவனை சமாதான படுத்தி என்னுடன் தக்கலைக்கு தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன், வண்டியில் போகும் போதும் பின்னால் இருவர் வேறு வண்டியில் வந்தால் போதும், மாப்ள! எதுக்கும் கொஞ்சம் உசாரா போ! நம்மள தான் முறைச்சு பார்த்திட்டு பின்னால வண்டியில வருகிறனுவ! என்று பீதியை காட்டிக்கொண்டே வந்தான். அவர்கள் எங்களைத் தாண்டி சென்றால், அடுத்து வருபவனை நினைத்துப் பயந்து கொண்டிருந்தான், வெளியூர் ஆட்களை செட் பண்ணிருக்கானுவ மாப்ள! எவன் எந்த ரூபத்தில் வந்து போடுவானு தெரியாது என்று எனக்கும் ஷாக் கொடுத்தான்.

ஏண்டா ஒரு தாலுகா ஆபிஸ்சில் ரெண்டு மணி நேரம் பேச்சு துணைக்கு ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய தப்பா!


.

Saturday, February 13, 2010

காதல் - கேள்வி?...பதில்!...



இதை கண்டிப்பா நான் கேட்டுத் தான் ஆகனும். இதை இன்றைக்கு நான் கேட்கவில்லை என்றால் என்றைக்கும் கேட்க முடியாது. அதனால் ஒரு நிமிடம் கூட பொறுக்க முடியாது. இதை இன்றைக்கு இங்கு கேட்டதால அடுத்த மாதம் ஊருக்கு போகும் நாஞ்சிலாரு என்னைப் பற்றி ஊர்ல என்ன சொல்வார் என்பது கண்முன்னே எனக்கு தெரிந்தாலும் என்னால் கேட்காம இருக்க முடியலை. தல என்ன தான் ஊர்ல போய் தண்டோராப் போட்டாலும் என் பேர்ல இருக்குற பால் என்ற வார்த்தையும் அது வடியும் முகமும் என்னை கண்டிப்பா காப்பாத்தும். நம்பிக்கை இருக்கு. அதுனால வெட்டிப் பேச்சு பேசாம கேட்டுட வேண்டயதுதான்..

வெட்டிப் பேச்சு! வெட்டிப் பேச்சு! ஆஹா சித்ரா மேடம் வேற முதல் ஆளா வந்து படிப்பார்களே, என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க, ஏற்கனவே இவங்களும் திருட்டு தம் அடித்து பழக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதுனால் இதையும் அது போல விட்டு விடுவாங்களா. என்னத்தான் இருந்தாலும் கேட்டிருக்க கூடாதோ? பெரிய பிசகு ஆகிவிடுமோ?. எல்லாம் அண்ணாமலையானுக்கு தான் வெளிச்சம்..

அடடே அண்ணாமலையான் அவர்கள் வேற வருவாறு. கையை கட்டி நிற்பதால் விவேகானந்தர் இல்லை என்று வேட்டைக்காரன் விஜய் போல் பஞ்ச் டயலாக் எல்லாம் போட்டுருக்கார். இதை இங்க கேட்டதால கையில் கத்தியோட அடுத்த போஸ் கொடுப்பாரா? இல்லை இது ஒரு பாலான பட்டறை என்று தண்ணி தெளிச்சிட்டு போவாரா?. ஒண்ணும் புரியல.

பலாப்பட்டறை..பாலான பட்டறை..கண்டிப்பா சங்கர் வருவார் .ஏற்கனவே ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது உருப்படியான தகவல் கொடுங்கள் என்று பலமுறை பின்னூட்டம் போட்டிருக்கார். இங்க நான் கேட்டதை படித்தா "நீந்தாத மாட்டை தண்ணிக் கொண்டு போகும்" என்று வானம்பாடி அய்யா கிட்ட சொல்வாறா?..ம்ம்ம் சே...எப்படியும் நான் கேட்டுத் தான் ஆகணும்..

வானம்பாடி அய்யா வேற இப்பதான் பாலோவரா வந்தாரு..ஏதாவது உருபடியா எழுதுவான் என்று..அதுக்குள்ள இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டியதா போச்சு..இது எல்லாம் நல்லா இல்லை தான் என்னப் பண்ணுறது என்னால முடியல..அதனால தான்..நீங்களாவது உண்மையான விளக்கம் தருவீர்கள் என்று...

இதுக்கு தான் சின்ன பசங்க சகவாசம் வச்சிக்க கூடாதுனு சொல்லுறது..இப்ப பாரு சந்தி சிரிக்க வைச்சிட்டான் - தமிழ் உதயம். ஐயா சின்ன பசங்க வேலை எல்லாம் செய்யாம பெரிய மனுசன் ஆக முடியாது என்று எனக்கு ஒண்ணுவிட்ட ஆத்தாவுடைய அப்பத்தா சொன்னதா ஞாபகம். எது எப்படியே நான் இதை கேட்டிருக்க கூடாது. இருந்தாலும் முடியலை..

சவூதியில் இருந்து இந்த கேள்வியை கேட்கலாமா?..என்று சொல்லி இந்த வாரம் சவூதி பதிவர் சங்கத்தை கூட்டுவது உறுதி. கண்டிப்பா தலை ஸ்டார்ஜன் தான் தலைமை தாங்குவார். அவரோட சிஷ்யன் அக்பர் நம்ம கேள்வியை குற்றம் என்று சொல்லி கொண்டுவருவார். சரவண குமாரும் இதை வழிமொழிவார். கல்ப் தமிழன் உட்பட் எல்லாரும் சேர்ந்து கும்மியடிக்கப் போறது என்னவோ உண்மைதான். ஆனால் இதுக்கெல்லாம் பயந்தால் சரித்திரத்தில் நம்முடைய பெயர் இல்லாமல் போய்விடும் என்று எங்கள் நாஞ்சில் தல சொன்னதை முன்னிட்டு...அப்படியே சவூதி பதிவர் சங்கத்தில் இருந்து நீக்கினாலும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கு அடைக்கலம் கொடுத்த நம்ம நாஞ்சில் சங்கத்தில் வெளிப்படையாக சேருவேன் என்று..என்ன நடந்தாலும் நான் கேட்டுதான் ஆகனும்..

ஏற்கனவே இருக்குறது பதினேழு பாலோவர் தான்..இன்னைக்கு இதைப் பற்றி இங்க கேட்டு எழுதியதால் அடல்ஸ் ஒன்லி என்று சொல்லி நம்ம ஏஞ்சல் புட்டுகிட்டு போறது உறுதி. அப்பாலிக்கா பதினாறுதான். பிளாக்கர் டீம் வேற அடல்ஸ் ஒன்லி வார்னிங் மெசேஜ் கொடுக்க போறங்களாம். போச்சி எல்லாம் போச்சி..பரவாயில்லை..நான் கேட்க வந்ததை கேட்காமல் போகமாட்டேன்.

எது எப்படி ஆனாலும் நான் காண்டிப்பா கேட்பேன்..ஏன்னா இது என்னோட பிரச்சனை இல்லை. நம்ம தமிழ் நாட்டின் பிரச்சனை. இல்ல தவறு இந்தியாவின் பிரச்சனை. இல்லை இல்லை உலகத்தின் பிரச்சனை. இப்படி எல்லாம் பில்டப் கொடுத்து உங்களை கடுப்பேத்த மாட்டேன்...(ஏத்திட்டோம்ல) தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கும்..ஆகா இப்பவே உங்க முகம் எல்லாம் எனக்கு தெரிகின்றது..வேண்டாம் இதுக்கு மேல தாங்காது..கேட்டுட வேண்டியதுதான்.

(1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?
(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?
(3) காதல் கருப்பா?..இல்ல சிவப்பா?
(4) காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?
(5) காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?
(6) காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?

கீழே சொல்லிருப்பது அனைத்தும் நாடோடியின் பதில்கள்.

(1) இதை அறிந்துக் கொள்ள முயற்ச்சி செய்து உயிர்விட்டவர்கள் அதிகம் பேர்..அந்த லிஸ்ட்ல நான் சேர விரும்ப வில்லை
(2) என்னைப் பொறுத்தவரை காதல் பல நேரம் கானல் நீராகவும்..சில நேரம் கிணற்று நீராகவும் தெரிகின்றது.
(3) நான் சொல்வேன் அது ஒரு நிறக்குருடு என்று..நண்பகல் நேரம் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போது நம்ம ஹீரோ பீச்சில் நின்று வானவில் அழகை ரசிப்பான்.
(4) காலையில் எழுந்து முகம் கழுவாமல் பவுடர் போட்டு கண்ணாடி பார்ப்பதில் இருந்து..இரவில் படுக்கையில் போர்வையை மூடி செல்போன் பேசுவது வரை இதன் அறிகுறிகள் தான்.
(5) தேன் குவளையில் தலைகீழாக விழுந்த வண்டுப்போல் தான்....
(6) காதலை நம்பியவன் சாமியார்(பித்தன்) ஆனான்..நம்பாதவன் சம்சாரி( குடும்பத்தலைவன்) ஆனான்.

குறிப்பு: நானும் ரவுடிதான்னு வண்டியில வலுக்கட்டாயமா வந்து ஏற மனம் இடம் கொடுக்க வில்லை.. அப்படியே உங்களுடைய பதிலையும் சொன்னீங்கனா?..
Related Posts with Thumbnails