Showing posts with label பார்த்தவை. Show all posts
Showing posts with label பார்த்தவை. Show all posts

Tuesday, August 2, 2011

குழித்துறை; வாவுபலி பொருட்காட்சி

"ஆடி பட்டம் தேடி விதைக்கணும்" என்று ஒரு பழமொழி உண்டு. நெல் விவசாயம் செய்யஆடி மாதம் விதைத்தால் தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். எனவே விவசாயிகளை பொறுத்தவரையில் ஆடி மாதம் என்பது பயிர்கள் நடவு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடி மாதம் நடப்படும் செடி, மரம், கொடி எதுவாக இருந்தாலும் நன்றாக வளரும், நல்ல பலனை தரும் என்பது எங்கள் ஊரில் வழக்கில் இருக்கும் ஒரு ஐதீகம். இயற்கையாக எங்கள் ஊரில் ஆடி மாதம் மழை பொழியும், எனவே இந்த மழையும் எங்கள் ஊரில் மரம், செடி இந்த மாதத்தில் நடுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது. அதனால் பெரும்பாலும் எங்கள் ஊரில் ஆடி அமாவாசை அன்று எல்லோர் வீடுகளிலும் ஒரு மரமாவது நடுவார்கள். மரம் வைக்க இடம் இல்லாதவர்கள் ஒரு ரோஜா செடியாவது வீட்டின் முன்புறம் நட்டு வைப்பார்கள்.

எங்கள் வீட்டிலும் நான், எனது அக்கா, மற்றும் அண்ணன் மூன்று பேரும் போட்டி போட்டு செடிகள் நடுவோம். யாருடைய செடி முதலில் "பூ" பூக்கும் என்பதில் போட்டி நடக்கும். ரோஜா செடியாக இருந்தால் யாரு வைத்த கம்பு முதலில் தளிர்விடுகிறது என்று போட்டி இருக்கும். ரோஜா செடி வளர்க்கும் நாங்கள் பெரும்பாலும் கடையில் இருந்து தொட்டி செடி வாங்கி வைப்பது இல்லை. ஏற்கனவே வேறு சொந்தகாரர்களின் வீடுகளில் இருக்கும் ரோஜா செடியில் இருக்கும் முதிர்ந்த கம்புகளை வெட்டி வந்து எங்கள் வீட்டில் வைப்போம். இரண்டு வாரங்களில் அந்த கம்பு தளிர்விட ஆரம்பிக்கும். ஊன்றி வைக்கப்பட்டிருக்கும் ரோஜா செடியின் கம்பை தளிர்விடுவதற்கு முன்பு சிறிது அசைத்து விட்டாலே அது தளிர் விடாமல் காய்ந்து போகும். எங்கள் வீட்டில் போட்டியின் காரணமாக அடுத்தவரின் ரோஜா கம்பை அசைத்து தளிர்விடாமல் செய்யும் வில்லங்க வேலையும் நடக்கும், யாரு கம்பை அசைத்தது என்று எங்கள் மூவருக்கும் சண்டையும் நடக்கும். ஒரு வாரம் ஆகிவிட்டது இன்னும் தளிர் விடவே இல்லையே என்று அந்த கம்பை பிடுங்கி பார்த்து பல்பு வாங்கிய அனுபவமும் எனக்கு உண்டு.

ஆடி மாதங்களில் எங்கள் ஊரில் அதிகமாக மரக்கன்று மற்றும் பூச்செடி வியாபாரிகளை பார்க்கமுடியும். இதுமட்டுமல்லாது மரம், செடி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதத்தில் எங்கள் மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் நடைபெறும் "வாவுபலி பொருட்காட்சி" ஒரு வாய்ப்பாக‌ அமையும். இங்கு எல்லா விதமான மரக்கன்றுகளும், பூச்செடிகளும் கிடைக்கும்.

இந்த வாவுபலி பொருட்காட்சியானது 1926 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. அந்தகாலத்தில் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் நடத்துவதற்கு ஆடிமாதம் இறுதி அமாவாசை அன்று குழித்துறை ஆற்றின் இருபுறமும் மக்கள் கூடுவார்கள். இவ்வாறு கூடும் மக்களை கவரும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த வாவுபலி பொருட்காட்சி.

அதனை தொடர்ந்து வருடம்தோறும் இந்தபொருட்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மூன்று நாட்களாக ஆரம்பிக்கபட்ட இந்த பொருட்காட்சியானது விதவிதமான கோழிகள், மற்றும் மரக்கன்றுகள், பூச்செடிகள் என ம‌க்க‌ளின் பார்வைக்கு வைத்தன. ஆனால் இப்போது மரம், செடி மற்றும் மலர் கண்காட்சிக‌ள் ம‌ட்டும‌ல்லாது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று பட்டியல் நீண்டு 20 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த‌ க‌ண்காட்சிக்கு வ‌ந்து செல்ப‌வ‌ர்க‌ள் வீட்டிற்கு திரும்பும் போது க‌ண்டிப்பாக‌ ஒரு ம‌ர‌க்க‌ன்றாவ‌து வாங்கி செல்வார்க‌ள். ம‌ர‌ம் ந‌டுவ‌த‌ற்கு வ‌ச‌தியில்லாத‌வ‌ர்க‌ள் ஒரு பூச்செடியாவ‌து வாங்கி செல்வார்க‌ள். எப்ப‌டியோ ம‌ர‌ங்க‌ள் அழிந்து வ‌ரும் இக்கால‌த்தில் இது போன்ற‌ ம‌ர‌க்க‌ன்றுக‌ளின் ச‌ந்தைக‌ள், க‌ண்காட்சி போன்ற‌வைக‌ள் அவ‌சியமாகின்ற‌ன‌. இங்கு வ‌ந்து ஆர்வ‌மாக‌ ம‌ர‌ங்க‌ளை வாங்குப‌வ‌ர்க‌ளை பார்க்கும் போது ந‌ம‌க்கும் அவ‌ற்றின் மீதான‌ ஈர்ப்பு ம‌ன‌தில் வ‌ந்து விடுகிற‌து.

86‍-வ‌து வாவுப‌லி பொருட்காட்சி இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து. க‌ட‌ந்த‌ மாத‌ம் 20- ஆம் ‍தேதி தொட‌ங்கி இந்த‌ மாத‌ம் 8- ஆம் தேதி வ‌ரை ந‌டைபெறுகிற‌து. இதை ப‌ற்றிய‌ தின‌ம‌ல‌ர் செய்தியின் லிங்க் கீழே இணைத்துள்ளேன்.


குழித்துறை வாவுபலி பொருட்காட்சி கோலாகல துவக்கம்


குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்

ந‌ன்றி,
தின‌ம‌ல‌ர்.


க‌ட‌ந்த‌ ஆண்டு என‌து ந‌ண்ப‌ன் வாவுப‌லி பொருட்காட்சிக்கு சென்று வ‌ந்த‌ போது மொபைலில் எடுத்த‌ சில‌ ப‌ட‌ங்க‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்கிறேன்.






























.

.

.

Saturday, January 30, 2010

நம்ம கோபாலும்....கேரள வேலையும்..

நம்ம ஊரை விட்டு வந்து நாடோடியாய் சுற்ற ஆரம்பித்து வருடங்கள் பல ஆகின்றன. இதுனால ஊர்ல நடக்கிற தில்லாலங்கடி செய்தி எல்லாம் தெரிந்சுக்காம இருக்கலாமா?. முடியவே முடியாது. அதுக்கு தான் இருக்கவே இருக்கான் நம்ம சுரேஷ். விடுமுறைகளில் ஊருக்கு செல்லும் போது மறக்காமல் என்னை வந்து பார்த்து விடுவான். என்ன வேலை செய்கின்றாய் என்று கேட்டால் பல பிஸினஸ் செய்கிறேன் என்று சொல்வான். ஊரில் ஒரு வேலையும் ஒழுங்கா செய்து நான் பார்த்தது கிடையாது. என்னுடைய பொழுதுப்போக்கு ஊரில் நடக்கும் விசயங்களை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வதுதான். அப்படி தான் ஒரு நாள் நம்ம் ராஸ்கோல் விசயத்தையும் சொன்னான்.



ஊரில் வெட்டி ஆபிசர்களாய் சுற்றிக் கொண்டு இருந்த சுரேஷின் நண்பர்கள் கூட்டத்தில் நம்ம ராஸ்கோல் ரெம்ப முக்கியமானவன். அவனுடைய முழுப் பெயர் ராஜகோபால். அது நண்பர்களுடைய வாய் வழக்கில் ராஸ்கோலாக மாறிப்போனது. ஆள் பார்பதற்க்கு கலரில் யமன் வாகனத்தைப் போலவும், உடம்பு ஒங்கி வளர்ந்த மூங்கிலைப் போலவும் கன்னம் இரண்டும் டொக்கு விழுந்து பார்பதற்கு வயல் வெளியில் கட்டப் பட்ட சொக்கப் பாணை போல் காட்சி தருவான். ஊரில் எந்த கெட்ட விசயங்கள் நடந்தாலும் அதில் இந்த கூட்டத்தின் பங்கு கண்டிப்பாக இருக்கும். அதனால் ஊரில் உள்ளவர்களிடம் தறுதலைகள், திருந்தாத ஜென்மங்கள், ஊதாரிக் கூட்ட்ம் என்று பல பட்ட பெயர்களை சுமந்து வந்தார்கள்.

இப்படி போயிட்டு இருந்த நாட்களில் ஒரு நாள் அந்த கூட்டத்தில் இருந்து நம்ம ராஸ்கோலு தீடிரென காணமல் போயிட்டானாம். பிறகு மூன்று மாதம் கழித்து ஊரில் உள்ள கோவில் திருவிழா ஒன்றிற்கு வந்து சேர்ந்து இருக்கிறான். சுரேஷின் மகாசபையிலும் வந்து கலந்து இருக்கிறான். அப்போது அவனது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் மலையாளம் கலந்து இருந்ததாம். தமிழே ஒழுங்காக பேசத் தெரியாத நம்ம ராஸ்கோலு இப்ப மலையாள பாட்டு எல்லாம் பாடி இருக்கிறான். வளர சுகமானோ, பின்னே நான் கானன் என்ற மலையாள வார்த்தைகள் அவன் நாவில் விளையாடி இருக்கின்றன. இதனால் அனைவரும் ஆச்சரியத்துடன் என்ன என்று விசாரித்து இருக்கிறார்கள். அதற்க்கு அவன் நான் இப்போது கேரளாவில் வேலைக்கு சென்று வந்தேன் என்று பதில்மொழி கூறி இருக்கிறான். ஊரில் எந்த வேலைக்கு சென்றாலும் இரண்டு நாட்கள் தங்காத நம்ம ராஸ்கோலு இன்று " பட்சே ஞான் இல்லை என்றால் அவிடே ஒரு சோலியும் நடக்கா " என்று அவர்களிடம் புராணம் பாடியிருக்கிறான். இரண்டு நாட்கள் தான் ராஸ்கோலை ஊரில் பார்க்க முடிந்தாதாம். மறுபடியும் காணாமல் போய் இருந்தானாம்.

நம்ம ராஸ்கோலின் அம்மாவும் அப்பாவும் பையன் இப்ப எல்லாம் வேலைக்கு முழுக்கு போடுவதே இல்லை என்றும் ஒழுங்காக வேலைக்கு செல்கிறான் என்று ஊரில் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் சுரேஷ் கூட்டத்தின் அம்மா அப்பாவிடம் தன் பிள்ளையைப் பற்றி புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். இதை கேட்கும் அவர்களுக்கு காதில் புகை வந்து அதை அப்படியே திருப்பி இவர்களுக்கு காதில் ரத்தம் வழிய அர்ச்சனை செய்வார்களாம்.




தீடிரென ஒரு நாள் நம்ம ராஸ்கோலின் வீட்டின் முன்பு நின்று வேடிக்கை பார்க்க கூட்டம் ஒன்று கூடி இருந்ததாம். சுரேஷும் கூட்டத்தின் அருகில் சென்று ஒரு பொக்கை வாய் பெரியவரிடம் என்ன விசயம் என்று கேட்டு இருக்கிறான். அதற்கு அவர் கேரளாவிற்கு சென்ற நம்ம ராஜகோபாலு அங்க இருந்து லட்டு போல ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் லவட்டிட்டு வந்து விட்டான் என்று பொக்கை வாயைக் காட்டி சிரித்திருக்கிறார். இவனுக்கும் அந்த பெண்ணின் முகத்தை பர்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. சிறிது நகர்ந்து எட்டி பார்த்தானாம் அங்கு அழகிய சேர நாட்டு இளம்பெண் ஒருத்தி நின்று இருக்கிறாள். கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணின் அழகைப் பற்றியும், நம்ம ராஸ்கோலைப் பற்றியும் பலவாறு பேசியது இவன் காதில் விழுந்ததாம். " பின்னே நமக்கும் ஏதும் சோலி அவிடே கிட்டுமோ " என்று ராஸ்கோலிடம் சோதிக்கணும் என்ற முடிவுடன் அங்கிருந்து நகர்ந்து வந்து இருக்கிறான்.

Wednesday, January 27, 2010

சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-2

முதல் இடுகயை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை தொடரவும்.

இந்த சாலையை வெறும் வாணிபத்திற்க்கும், போக்குவரத்திற்கு மட்டும் பயன் படுத்தாமல் சுற்றுலாதலமாகவும் இதை வடிவமைத்திருப்பது இதன் மற்றும் ஒரு சிறப்பம்சம். நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன் இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர் என்று. நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து இந்த பாலத்தை சுற்றி வர காரில் அந்த சாலையில் பயணித்தோம். கார் பயணத்தில் இரண்டு பக்கங்களிலும் கடலின் அழகை காரில் இருத்தவாறு ரசிக்க முடிந்தது. சிறிது நேரத்தில் பயணம் முடிவுக்கு வந்தது கார் ஒரு நகரத்திற்குள் புகுந்தது. கடலும் கண்ணை விட்டு மறைந்தது. இரண்டு பக்கமும் மரங்களும், கட்டிடங்களும் என் கண்களுக்கு தென்பட்டன. ஒரு பூங்கா போல் தோன்றியது. காரை டிரைவர் காலியாக இருந்த இடத்தில் நிறுத்தினான். வண்டியின் முன்னால் இருந்த நண்பர் தான் எங்களை அழைத்து வந்தார். அவர் காரை விட்டு இறங்கவே நாங்களும் காரை விட்டு இறங்கினோம். எங்களுடன் வந்த நண்பரில் ஒருவர் அழைத்து வந்தவரிடம் " கடலில் உள்ள பாலத்தை சுற்றி கட்டுகிறேன் என்று கூறி விட்டு ஏதோ பூங்காவிற்கு அழைத்து வந்துருக்கிறீர் " என்று கேட்டார். நானும் அதை வழிமொழியலாம் என்று அழைத்து வந்தவரின் முகத்தை பார்த்தேன். அவர் கண்ணில் தெரிந்த ஏளன பார்வை என் வாயை மூடியது. அழைத்து வந்த நண்பர் சிரித்துக்கொண்டே " அதற்கு மேல் தான் நாம் நிற்கிறோம் " என்றார். அனைவரும் ஆச்சரியத்துடன் சுற்றும், முற்றும் பார்த்தோம்.



உண்மை தான் நாங்கள் நிற்பது கடலின் மேல் தான் என்பது அவர் சுட்டிக் காட்டிய அந்த வானுயர்ந்த கோபுரத்தை பார்த்த போது எங்களுக்கு புலப்பட்டது. ஏனென்றால் இங்கு வருவதற்கு முன் அவர் தனது மொபைலில் ஏற்கனவே அவர் வந்த போது எடுத்த போட்டோவை காட்டியிருந்தார். நாங்கள் நிற்க்கும் இடத்தை சுற்றிலும் மரங்கள் அழகாக வளர்க்கப் பட்டு இருந்தது. வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களும், கட்டிடங்களும் இருந்தன. சிறிது நடந்து சென்றோம் அங்கு கடல் கண்ணுக்கு புலப் பட்டது. அழகாக வேலி அமைக்கப் பட்டு இருந்தது. ஆங்காங்கே மண் மேடைகள் காணப்பட்டன. அதில் இருந்த வாறு சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். ஆம் தூண்டில் போட்டு கடலில் மீன் பிடிப்பது இவர்களின் பொழுதுப்போக்கு. அதில் நாமும் கலந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த மண்மேடையில் புற்கள் வளர்க்கப்பட்டு அழகாக இருந்தன. அதில் இருந்தவாறு கடலின் அழகையும், அதன் மேல் உள்ள இந்த சாலையின் ஒரு பகுதியையும் ரசிக்க முடியும்.




அங்கிருந்து அப்படியே நகர்ந்து அந்த கோபுரம் இருந்த திசையை நோக்கி நடந்தோம். கோபுரதிற்கு உள்ளே செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இந்த கோபுரம் மிக வித்தியாகமாக கட்டப்பட்டு இருந்தது. மேலே செல்வதற்கு லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது நமது பெரியோர் வாக்கு. அது இவர்கள் விசயத்தில் நூறு சதவீதம் உண்மை. இங்கு இரண்டு மசூதி(Mosque) இருக்கின்றது. மேலும் இந்த கோபுரத்தில் ஒரு உணவகமும் உள்ளது. குழந்தைகள் விளையாட விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய ஒரு அறையும் உள்ளது. மேல் தளத்தில் நின்று இந்த கடல் நகரின் அழகை சுற்றி பார்க்க கண்ணாடி சுவர் அமைக்கப்ப்ட்டுள்ளது.



இதன் மேல் நின்று பார்க்கும் போது கடல் மேல் அமைந்துள்ள இந்த அழகிய சாலையும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் மற்றும் சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்களின் அழகும் அருமை. இரவு நேரமாக இருந்தால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த சாலையின் அழகு இருமடங்காக ஜொலிக்கிறது. லிப்டில் மேலிருந்து கீழாக வரும் போதும்
அதில் உள்ள கண்ணாடி வழியாக வெளி காட்சியை பார்க்க முடிகிறது.



நான் மேலே விவரித்து இருப்பது சவூதி அரேபிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை மட்டும் தான். இதை அடுத்து பெக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் மேலே உள்ளது போல் ஒரு குட்டி நகரம் உள்ளது. கடலின் மேல் அமைக்கப் பட்ட இந்த இரு இடங்களின் பரப்பளவு 660,000 சதுர அடி. அந்த இரண்டு கோபுரங்களின் உயரம் 65 மீட்டர்.



புதன் மற்றும் வியாழக் கிழமைகாளில் இந்த சாலை மிக கூட்டமாக இருக்கும். அந்த நாட்களில் இந்த சாலையில் உள்ள வாகன நெரிசல் நமது ஊரில் உள்ள மவுண்ட் ரோடு நெரிசலை தாண்டி விடும். காரணம் நமது ஊரில் வாரத்தின் கடைசி நாட்காளாகிய சனி மற்றும் ஞாயிறு போல் இங்கு வியாழன் மற்றும் வெள்ளி. சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை போதை,.....மற்றும் எல்லா விசயங்களுக்கும் தடா என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் பெக்ரைனை பொறுத்தவரை இதற்கு நேர் எதிர்மறை. மதுவில் இருந்து மா....வரை அனைத்தும் சுலபமாக கிடைக்கும். எனவே குடிமக்கள் அதிகம் வார இறுதி நாட்களில் இந்த சாலையை பயன்படுத்துவதால் மிக நெரிசலாக இருக்கும். குடிமக்கள் என்று நான் கூறியது பயணிகளை பற்றி தான் நீங்கள் தப்பாக புரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல. 2008 ஆம் ஆண்டின் காணக்கெடுப்பின் படி சாரசரியாக ஒரு நாள் இந்த சாலையை உபயோகப்படுத்தியவர்களின் எண்ணிக்கை 48,612. வாகனங்களின் எண்ணிக்கை 23,690.




எலே மக்க இதை படிச்சிட்டு சவூதி போயிட்டு நாக்கில் எச்சில் உறினால் நாமளும் அப்படியே பெக்ரைன் போலானு நினைக்சுட்டு வந்திடாதுங்க. அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஓய்..என்னன விசா(Visa) அடிக்கும் போதே அதில் மல்டிபிள் எண்டிரி(Multiple Entry Visa) என்று அடிக்க வேண்டும். இல்லாமல் சிங்கிள் எண்டிரி(Single Entry Visa) என்று சவூதி வந்துட்டு பெக்ரைன் போனால் திரும்ப சவூதி வரமுடியாது .நல்ல கப்சாவும் குப்பூசும் ஜெயில்ல கிடைக்கும் ஓய்..

Monday, January 25, 2010

சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-1

நான் சவூதி அரேபியாவில் பார்த்த இடங்களில் என்னை பிரமிக்க வைத்த இடங்களில் ஒன்று கிங்க் பகாத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கடல் வழி மேம்பாலச் சாலை. இது சவூதி அரேபியா நாட்டையும் பெக்ரைன் நாட்டையும் இணைக்க கூடிய பெரிய கடல் வழி மேம்பாலம் ஆகும்.




மிக அழகாக, நேர்த்தியாக பிரமிக்கதக்கதாய் கட்டப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து சவூதி அரேபியா வருபவர்கள் பெக்ரைன் விமானத்தளத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து வழியாக பயணம் செய்ய நேர்ந்தால் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.




இந்த சாலையானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஒரு பகுதி சவூதி அரேபிய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மற்றும் ஒரு பகுதி பெக்ரைன் அரசால் பாதுகாக்கப்படுகிறது. இந்த இரண்டு எல்லைப் பகுதியும் இணையும் கடலின் மேல் பகுதியில் தனித் தனியே இரு குட்டி நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் இரண்டு மிக பிரமாண்ட கோபுரங்களையும் அமைத்துள்ளார்கள்.



இந்த சாலையானது அமைக்க 1965-ஆம் ஆண்டு இரு நாட்டு மன்னர்களால் முடிவுச் செய்யப்பட்டது. இரண்டு நாட்டு குழுக்கள் இணைந்து திட்டம் வகுத்தன. பின்பு 1968-ஆம் ஆண்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட வேலைகள் முடிக்கப்பட்டு 1986-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சவூதி மன்னர் கிங்க் பகாத் பின் அப்துல் அஸிஸ்(King Fahd bin Abdul Aziz) மற்றும் பெக்ரைன் மன்னர் ஹெச் ஹெச் சாகிப் இசா பின் சல்மான்(HH Shaikh Isa bin Salman) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்பு நாளைடைவில் இது கிங்க் பாகத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்பட்டது.


இந்த பாலமானது வாகனங்கள் வருவதற்க்கும் போவதற்க்கும் தனித்தனியாக சாலைகள் அமைக்கப்பட்டு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சாலையின் அகலம் 11.6 மீட்டர். ஒவ்வொரு சாலையும் இரண்டு லேன்(Lanes) களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஆங்கங்கே வண்டிகளை நிறுத்துவதற்கு அவசர வண்டி நிறுத்துமிடங்களையும்(Emergency Vehicle Parking) அமைத்துள்ளனர். இந்த சாலையானது ஐந்து பாலங்களையும்(Bridges), ஏழு செயற்கை மிதவைத் தளத்தையும்(Embankments) கொண்டு அமைக்கப் ப்ட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர். இது 536 சிமென்ட் தூண்களால்(Concrete Columns) கடல் உள் இருந்து தாங்கப்படுகிறது.



இந்த சாலையனாது நான்கு ஒப்பந்தங்களாக(Contract) போடப்பட்டு கட்டி முடிக்கப் பட்டது. இந்த சாலை கட்ட அமைக்கப் பட்ட குழுவின் பரமரிப்புக்கும், நிர்வகிப்பவர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் ஆன செலவு மட்டும் 86 மில்லியன் சவூதி ரியால். முழுவதும் கட்டி முடிக்க செலவு ஆன தொகை 3,036 மில்லியன் சவூதி ரியால்(1SR=12.32 RS)


இவர்கள் சதாரணமாக 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். இந்த கடல் வழி சாலையைக் கடப்பதற்கு 15 முதல் 20 நிமிடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பயணம் செய்யும் போது இரண்டு பக்கங்களில் உள்ள இயற்கை அழகு நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.


சவூதி அரேபியாவில் மேம்பாலங்கள் கட்டுவது சதாரணமாக செய்து விடுகிறார்கள். ஏதோ சிகரெட் அட்டையில் சிறுவர்கள் வீடுகள் கட்டுவதைப் போல் சிமென்ட் பாளங்களை(CONCRETE BLOCK) கொண்டு அடுக்கி விடுகிறார்கள்.



கிங் பகாத் கேஸ்வே க்கு(KING FAHAD CAUSEWAY) நான் சென்று வந்த அனுவத்தை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்..

தொடரும்......
Related Posts with Thumbnails