Showing posts with label வில்லுக்குறி. Show all posts
Showing posts with label வில்லுக்குறி. Show all posts

Wednesday, June 25, 2014

எங்கள் ஊர் ஓணப்பந்தாட்டம்_யாருக்குத் தெரியும்?

நான் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களால் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய இரண்டு விளையாட்டுகளில் ஒன்று கபடி இன்னொன்று ஓணப்பந்தாட்டம். இந்த இரண்டு விளையாட்டுகளும் மிகவும் வெறித்தனமாக விளையாடப்படும். இவைகளுக்குத் தீனிப் போடும் வகையில் ஊரில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் இந்த இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் பக்கத்து ஊர்களில் இருந்து அணிகள் வரவழைக்கப்பட்டு அதிகமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். சும்மா ஊருக்குள்ள இருக்கிறவன் இரண்டு அணிப்பிரித்து விளையாடினாலே பந்தயம் அனல் பறக்கும். இதில் வெளியூரில் இருந்து அணிகள் வந்து விளையாடினால் சொல்லவே வேண்டாம். ஊர்களில் பண்டிகையின் போது நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், இந்த இரண்டு விளையாட்டுகள் மட்டும் தனியாகக் கவனம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், எல்லா விளையாட்டுப் போட்டிகளும் முடிந்தபிறகு இறுதியில் தான் இந்தக் கபடியையும் ஓணப்பந்தாட்டத்தையும் ந‌டத்துவார்கள்.

கபடி விளையாட்டின் சுவாரஸ்யத்தைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த ஓணப்பந்தாட்டம் என்ற பெயரே பலருக்குப் புதிதாக இருக்கலாம். எனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைத் தவிர வேறு எங்கும் நான் இந்த விளையாட்டை, விளையாடியதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஓணம் + பந்தாட்டம் என்று பிரித்து வைத்துப் பார்த்தால் தமிழருக்கான விளையாட்டாகத் தெரியவில்லை, கேரளாவின் விளையாட்டாகத் தெரிகிறது. ஆனால் நான் இணையத்தில் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளை வைத்துத் தேடியப் போது கேரளாவில் ஓணப் பண்டிகையின் போது விளையாடப்படும் ஒரு விளையாட்டுடன் சில விதிமுறைகளும் ஒத்துப் போகிறது. அந்த விளையாட்டின் பெயர் தலைப்பந்துகழி. கேரளாவில் கிராமங்களில் விளையாடும் நடன் பந்துகழி என்ற‌ இன்னொரு விளையாட்டும் இந்த ஓணப்பந்தாட்டத்துடன் ஒத்து போகிறது. அதன் யூ‍_டியூப் வீடியோவை இணைத்துள்ளேன்.



கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததாலோ என்னவோ, அவர்களின் வழக்குச் சொற்கள், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சிலவற்றை இங்குப் பார்க்கமுடியும். மேலும் எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் கட்டிடவேலையில் சிறப்பாகச் செய்யும் திறன் பெற்றவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைச் செய்வதற்கு முன்பு கேரளாவில் தான் வேலைச் செய்து வந்தார்கள். இப்போதும் எங்கள் ஊரிலிருந்து பலர் கேரளாவில் கட்டிடவேலைகளைக் காண்டிராக்ட் எடுத்துச் செய்து வருகிறார்கள். இவ்வாறு கேரளாவில் காண்டிராக்ட் எடுத்து வேலைச் செய்பவர்கள் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் இருந்து தான் ஆட்களைக் கொண்டு சென்று வேலையை முடித்துக் கொடுப்பார்கள். கட்டிடவேலைச் செய்பவர்களில் மகன்கள் பள்ளியில் கிடைக்கும் இரண்டு மாத கோடைவிடுமுறையில் அப்பாவுடன் கேரளாவிற்குச் சென்று கையாள் வேலைச் செய்து அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்குமளவிற்குச் சம்பாதித்துவிடுவார்கள். பல இளைஞர்களின் பால்யகாலம் கேரளாவில் தான் கழிந்திருக்கிறது. அவர்கள் தான் இந்த ஓணப்பந்தாட்டத்தை எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. விளையாட்டைப் பற்றிய வரலாற்று ஊகத் தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன். இனி இந்த‌ விளையாட்டுமுறை பற்றிச் சிலவற்றை எழுதுகிறேன்.

இந்த விளையாட்டு இரண்டு அணிகளாகப் பிரித்து விளையாட வேண்டும். ஓர் அணிக்கு ஆறு முதல் ஏழு பேர் இருப்பார்கள். முதல் அணியானது பந்தை அடித்தாடும் போது எதிர் அணியானது தடுத்தாட வேண்டும். இந்த விளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பந்து மெல்லிய‌ காட்டன் துணியால் வலுவாகச் சுற்றப்பட்டு வெளியில் நூலால் பின்னப்படும். கைக்கு அடக்கமான அளவில் இருக்கும். இந்தப் பந்தை எவர் உருவாக்கினாலும் அவரது வீட்டில் உள்ள காட்டன் லுங்கி ஒன்று கண்டிப்பாகக் காணாமல் போகும். இந்த விளையாட்டுக்கு என்று அளவுகளை வரையறைச் செய்து களம் அமைப்பது இல்லை. இருக்கும் இடத்தில் நீள, அகலமாகக் கோடுகள் போட்டு இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பக்கம் அடித்தாடும் அணியும், மறுபக்கம் தடுத்தாடும் அணியும் நிற்கும். நீள‌ வாக்கில் இரு புறங்களிலும் ஒன்றரை அடி விட்டு பவுள் கோடுகள் போடப்பட்டிருக்கும்.

எந்த அணி அடித்தாட வேண்டும்? தடுத்தாட வேண்டும் என்பதை முதலில் டாஷ் போட்டுதான் முடிவுச் செய்யப்ப‌டும். அடித்தாடும் அணியில் உள்ள முதல் வீரர் களத்தின் ஒரு முனையில் நின்று, பந்தைத் தனது கையால் ஓங்கி அடித்து மறுபக்கம் இருக்கும் தடுத்தாடும் அணியின் பக்கம் அனுப்புவார். தடுத்தாடும் அணியில் உள்ள வீரர்கள் அதைக் காலால் மிதித்து எதிர் அணியின் பக்கம் திருப்புவார்கள். எவர் ஒருவர் பவுள் கோட்டிற்கு வெளியில் அடிக்கிறாரோ அல்லது எதிர் அணியால் அடிக்கும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் விட்டாலோ அவுட் என்று அறிவிக்கப்படும். அடித்தாடும் அணியில் உள்ள வீரர் பந்தை அவுட் பண்ணினால் தடுத்தாடும் அணி இப்போது அடித்தாடும் அணியாக இருந்து பந்தை கையால் அடித்து எதிர் அணிக்கு செலுத்தும். அடித்தாடும் அணியால் மூன்று முறை நேர்த்தியாக அடித்து எதிர் அணியின் தடுப்பாட்டத்தைச் ச‌மாளித்து வெற்றிகரமாக முடித்தால் அது ஒரு கழி என்று அழைக்கப்படும். மொத்தமாக ஏழு கழிகள் உண்டு.

1) ஒற்றை
2) இரட்டை
3) முறுக்கி
4) தாளம்
5) காவடி
6) நிலை (இது மட்டும் காலால் உதைத்து அடிக்கப்படும்)
7) பட்டம்

எந்த அணி முதலில் இந்த ஏழு கழிகளையும் முடிக்கிறதோ, அந்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டில் உள்ள சில சுவரஸ்யங்கள்: 

#அடித்தாடும் அணியால் அடிக்கப்பட்ட பந்தைத் தடுத்தாடும் அணி வீரர்கள் காலால் எதிர் கொள்ள மூன்று வகையான உத்திகளைக் கையாளுவார்கள். 

மடக்கை: காலை மடக்கிப் பந்தை உதைப்பது. இந்த முறையில் பந்தை எதிர் கொண்டால் கண்டிப்பாக எதிர் அணியால் அந்தப் பந்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகக் கடினமாகக் காரியம்.(வாலிபாலில் கட்‍ ஷாட் அடிப்பது போல) 

குத்து: எதிர்வரும் பத்தை முன்னங்காலால் குத்து/கோரி விடுவது(இவ்வாறுச் செய்வதால் பந்து மேலே எழுப்பும். எதிர் அணியினர் அதைக் கேட்ச் பண்ணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், கேட்ச் பண்ணிவிட்டால் அவுட் என்று அறிவிக்கப்படும்) 

சேப்பை: காலை ஒருகளித்துத் தட்டிவிடுவது(கட்டுக்குள் அடங்காத தாக்குதலைச் ச‌மாளிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துவார்கள்)

#காலால் உதைக்கும் போதோ அல்லது கையால் அடிக்கும் போதோ பந்து மேல் எழும்பி எதிர் அணியினரால் பிடிக்கப்பட்டால் அவுட் என்று எடுத்துக்கொள்ளப்படும். 

#இவ்வாறு எதிர் அணியில் உள்ள வீரரால் பிடிக்கப்படும் போது மற்ற வீரர்களில் கைகள் முட்டிக்குக் கீழ் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வீரரும் கையை உயர்த்திப் பிடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு கைகளை உயர்த்தினால் பிடித்த பந்து செல்லுபடியாகாமல் அடுத்த அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும். 

#அதேபோல் காலால் ஒருவர் பந்தை உதைக்கும் போது அந்த அணியில் உள்ள வேறு எவரும் கால்களைக் கொண்டு சென்று முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் எதிர் அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டு மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியது தான். நான் இங்கு எழுதியிருப்பதைப் படித்துக் குழப்பமடைந்தால், அந்தக் குழப்பம் என்னுடைய எழுத்தினால் விளைந்தக் குழப்பமே அல்லாமல் விளையாட்டின் குழப்பம் அல்ல. கண்டிப்பாக உடல்வலிமையும், உத்திகளைக் கையாளும் முறையும் இதற்குத் தேவை. துணியால் பந்து இறுகச் சுற்றப்படுவதால், அதை அடிக்கும் போது காலும் கையும் வலி எடுக்கும். தரையில் கால் மோதி நகங்கள் சிதைவதும் உண்டு.

இந்த விளையாட்டை நான் ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது மிகவும் விரும்பி விளையாடுவேன். எங்களுக்கு என்று ஒரு மைதானம் இருந்தது. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று ஒரு டீம் எப்போதும் இருக்கும். கிரிக்கெட் போர் அடிக்கும் போது இரு அணியாகப் பிரித்து இந்த ஓணப்பந்தாட்டத்தை விளையாடுவோம். இந்த விளையாட்டை மிகவும் அனுபவித்து விளையாடுவோம். பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இந்த விளையாட்டைப் போட்டியாக நடத்துவதால் இன்னும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இன்றைய நிலையில் எங்கள் ஊரில் இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று பள்ளிப் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் கூடத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கே இந்த விளையாட்டின் பல விதிமுறைகள் மறந்துவிட்டது. அப்போது என்னுடன் விளையாடிய நண்பர்களிடம் கேட்டுதான் இந்தப் பதிவை எழுதி இங்குப் பதிந்துவைக்கிறேன்.

அவனவன் வாழ்க்கையே தொலைந்துவிட்டது! என்பதற்கே கவலைப்படவில்லை, இதில் விளையாட்டுத் தொலைந்துவிட்டது என்று வந்துவிட்டான் என்று நீங்கள் புலம்புவது எனது காதுகளுக்குக் கேட்கிறது.

.

.

Monday, April 14, 2014

இன்றைய சூழ்நிலையில் பசுமாடு வளர்ப்பது என்பது?.

கடந்தவாரம் வீட்டிற்கு அலைப்பேசியில் அழைத்துப் பேசிய போது அப்பா, அம்மா, அண்ணன் உட்பட‌ எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னது நம்முடைய‌ பசுமாடு கன்று ஈன்றுருக்கிற‌து என்பது தான். எங்கள் வீட்டில் பெரும்பாலும் பசுமாடு ஒன்று எப்போதும் இருக்கும், அதுவும் பால் கற‌க்கும் பசுமாடாகத் தான் இருக்கும். என்னுடைய‌ அப்பா சவுதியில் ஓர் ஆறு வருடங்கள் கட்டிட‌ வேலை செய்து இருப்பார்கள். அப்போது நான் பள்ளியில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்திருப்பேன். அதன் பிறகு அப்பா வெளிநாட்டிற்குப் போகவில்லை. ஊரில் ஏதாவது தொழில் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு சவுதியை அப்போதே கைக் கழுவி விட்டார்கள். ஊரில் வந்தும் பல தொழில்களைச் செய்தார்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. ஆறு வருடங்கள் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் கடனாளியாகவும் ஆகிப் போனார்கள்.

அப்பா வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே வீட்டில் பசுமாடு வாங்கி வளர்க்க ஆரம்பித்திருந்தார்கள். எனக்கும் அண்ணனுக்கும் பள்ளி விடுமுறை நாட்களில் இதற்குப் புல் பறித்து வந்து போடுவது தான் வேலை. புல் பறிப்பதற்கு என்று இரண்டு, மூன்று மைல்கள் நடந்து போவதும் உண்டு. என்னுடைய‌ பெரியப்பா வீட்டில் ஆடுகள் வளர்ப்பார்கள், அதனால் அவைகளுக்கு வேண்டிய தழைகளை வெட்டுவதற்குப் பெரியப்பா வாரம் ஒருமுறை ஆணைக்கிடங்கு மலைக்குச் செல்வது உண்டு. நாங்களும் அவருடன்  புல்லறுப்பதற்கு மலைக்குச் செல்வது உண்டு.

1994‍-ஆம் ஆண்டு வாக்கில் அரசாங்கத்தால் சாண எரிவாயுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதை அமைப்பவர்களுக்கு மானியமும் வழங்கியது. எங்கள் வீட்டிலும் தொடர்ந்து பசுமாடுகள் இருந்து வந்ததால் சாண எரிவாயுக் குழாய் அடுப்பு எங்கள் வீட்டில் வைக்கப்பட்டது. இடையில் சிறிதுக் காலம் அம்மாவுக்கு உடல்நிலைச் சரியில்லாத போது எங்கள் வீட்டில் பசுமாடுகள் வளர்க்கப்படவில்லை. அந்த நேரத்தில் இந்தச் சாண எரிவாயுக் குழாயை மூடிவிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பசுமாட்டை எப்படிப் பராமரிக்க வேண்டும் மற்றும் அவைகளுக்குத் தேவையான உணவுகள் எவை மற்றும் எப்போது அவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் அறிந்துவைத்திருந்தோம்.

எங்கள் வீட்டில் நான், அண்ணன், அக்கா உட்பட அனைவருக்கும் பசுவின் பாலைக் கறப்ப‌தற்கும் தெரியும்.(இப்போதும் என்னால் முடியுமா?..) ராமராஜன் படத்தில் காட்டுவது போல் பால் கறப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. எங்கள் வீட்டில் இருக்கும் பசுமாடு ஒரு நேரம் குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டர் பால் கறக்கும். ஒரு கையால் பால் கறந்தால் அரை லிட்டர் பாலைக் கறப்பத‌ற்குள் பெருவிரல் வலிக்கத் தொடங்கிவிடும். நான்கு காம்புகளையும் மாற்றி மாற்றித் தொடர்ச்சியாகக் கறக்க வேண்டும். ஒற்றைக் காம்பை மட்டும் கறந்து கொண்டே இருந்தால் மற்றக் காம்பில் இருக்கும் பாலை, பசு உள்ளே எக்கி இழுத்துக் கொள்ளும். அதனால் அதிகப் பால் கறக்கும் மாடுகளில் இரண்டு காம்புகளையும் ஒரு நேரத்தில் இரண்டு கைகளால் கறக்க வேண்டும்.

பசுமாடுகள் தொடச்சியாகப் பால் தருவது இல்லை. எனவே எங்கள் வீட்டில் எப்போதும் இரண்டும் பசுமாடுகள் இருக்கும். ஒரு பசுமாடு சினையாக இருக்கும் போது இன்னொரு மாடு பால் கொடுக்கும். நம்மிடம் பால் வாங்குபவர்களுக்குத் தொடச்சியாகப் பால் கொடுக்க வேண்டுமானால் இரண்டு பசுமாடு வைத்திருப்பது தேவையாக இருக்கும். ஒரு பசுமாடு சினையாக இருக்கும் போது ஆறு முதல் ஏழு மாதம் பால் கறக்க முடியும், அதன் பிறகு கறக்க முடியாது. இந்தக் காலக் கட்டத்தில் நம்மிடம் பால் வங்குபவ‌ர்களுக்குப் பால் இல்லை என்று சொல்லிவிட்டால் அவர்கள் வேறு யாரிடமாவது வாங்குவதற்குத் துவங்கிவிட்டால் பின்பு நமது வீட்டில் உள்ள பசுமாடு கன்று ஈன்றபின்பு அவர்களைப் பால் வாங்க அழைக்க முடியாது. அந்தக் காரணத்திற்காவது எங்கள் வீட்டில் இரண்டு பசுமாடுகள் வைத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.

எப்படியும் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டில் உள்ள இரண்டு பசுமாடுகளில் ஏதாவது ஒன்று கன்று ஈனும். அந்த‌ கன்றுகுட்டியை பாரமாரிப்பதற்கு வீட்டில் எங்கள் மூவருக்கும் போட்டிதான் நடக்கும். மேலும் கன்று ஈன்ற இரண்டு நாட்களில் பசுவிலிருந்து கிடைக்கும் பாலில் அம்மா செய்துதரும் சீம்பாலின் ருசியும் தனிதான்.

சில வருடங்களாக அப்பா, வீட்டில் இரண்டு பசுமாடுகள் வைத்துப் பராமரிப்பது கஷ்டம் என்று ஒரு பசுமாடு தான் வளர்த்து வருகிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பெல்லாம் பால் விற்பது என்பது எளிது, எவருக்கெல்லாம் வேண்டுமோ, அவர்களே எங்கள் வீடுகளுக்கு வந்து வாங்கிக் கொள்வார்கள். இப்போது அப்படியில்லை, பாக்கெட்களில் கிடைக்கும் பால்களை வீடுகளில் கொண்டு போடுவதால் அதைதான் விரும்புறார்கள். வீட்டில் வளர்க்கும் பசுமாடுகளின் பால்களையும் அப்படியே வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்கிறார்கள். கறந்த நுரையுடன் கிடைக்கும் பசும்பாலுக்கும், பதப்படுத்தப்பட்டுப் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் கவர் பாலுக்கும் உள்ள வித்தியாசம் இந்தக் காலத்து அர்ஜூன் அம்மாகளுக்கு எங்குத் தெரியப்போகிறது. மேலும் மாட்டுத் தீவனங்களின் விலையும், புண்ணாக்குகளின் விலையும் மிகப் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ள‌து.

இப்போது வயல்களில் மெஷின்களின் மூலம் அறுவடைச் செய்வதால் வைக்கோல்கள் எல்லாம் குறும்பாகத் தான் கிடைக்கிறது. அவைகளின் விலையும் பசுமாடுகளுக்கு முன்னால் போடுவது போல் இல்லாமல் பின்னால் போடுவது போல் தான் இருக்கிறது. முன்பெல்லாம் பசுமாடுகள் போடும் சாணங்களை விற்றுக் கிடைக்கும் பணத்திலேயே வைக்கோல் வாங்கிவிட முடியும். இன்று எவரும் இயற்கை உரங்களை வயல்களுக்குப் போடுவது இல்லை. எல்லோரும் செயற்கை உரங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அப்படியே வயல் வைத்திருப்பவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வது வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேங்கிறது. அப்புறம் எங்க, இந்தச் சாண உரங்களைக் கொண்டுபோய் வயல்களில் கொட்டுவது? என்பது தான். எனது வீட்டிலும் கடந்த ஒரு மாதமாக எருக்குண்டில் இருக்கும் சாணத்தை விற்க முடியவில்லை என்று அப்பாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

காலை ஐந்து மணிக்கு எல்லாம் அப்பா எழுந்து பால் எடுத்துவிடுவார்கள். பின்பு அந்தப் பசுமாட்டைக் கழுவுதற்குக் குளத்திற்கு அழைத்துச் செல்வார்கள். வரும்போது அம்மா காபிப் போட்டு ரெடியாக வைத்து இருப்பார்கள். அதைக்குடித்து விட்டு, பசுமாட்டுக்குத் தேவையான புண்ணாக்கு மற்றும் தீவனங்கள் கலந்து தண்ணீர் கொடுத்து, மாட்டுத்தொழுவத்திலுள்ள சாணங்களைச் சுத்தம் செய்து, அவைகளுக்குத் தேவையான புல் மற்றும் வைக்கோல் வைத்துவிட்டு வீட்டிற்கு டிபன் சாப்பிட வரும் போது மணியானது பத்தைத் தாண்டியிருக்கும். அவசர அவசரமாக டிபனைச் சப்பிட்டுவிட்டு உடனடியாகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு புல்ல‌றுப்பதற்குக் கிளம்பி விடுவார்கள். வைக்கோல் மட்டுமே போட்டு வளர்க்க வேண்டுமானால் கணிசமான தொகையை வைக்கோலுக்குச் செலவு செய்ய வேண்டிவரும். மேலும் பசும்புல் உணவாகப் பசுமாடுகளுக்குக் கொடுத்தால் நமக்குக் கொஞ்சம் அதிகமாகப் பால் கொடுக்கும். அதனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அப்பா புல்ல‌றுக்கக் கிளம்பிவிடுவார்கள்.

காலையில் புல்லறுக்கச் சென்ற அப்பா மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் வருவார்கள். அப்பா வீட்டிற்கு வருகிறார் என்பதைப் பசுமாடுகளே குரலெழுப்பிக் காட்டிக்கொடுத்துவிடும். இத்தகைய‌ மோப்ப சக்தி மாடுகளுக்கும் உண்டு. அவை குரலெழுப்பிச் சமிக்ஞைச் செய்வது மதிய உணவிற்கு தான். அவைகளுக்குத் தேவையான புல் மற்றும் வைக்கோல் வைத்துவிட்டுதான் மதியச் சாப்பாட்டில் அப்பா கை வைக்கமுடியும். சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் தூங்குவார்கள். திரும்பவும் மாலையில் பால் எடுப்பது மற்றும் மாட்டுத்தொழுவத்தைச் சுத்தம் செய்வது என்று காலையில் செய்த‌ எல்லா வேலையும் திரும்பவும் இருக்கும்.

சில வருடங்களாக எங்கள் வீட்டில் பசுமாடுகள் கன்றுகள் ஈனும் வரை வைத்துருப்பது கிடையாது. வத்தும் பால்(கன்று ஈன்று சில மாதங்கள் ஆகியது) பசுமாட்டைத் தான் சந்தையில் இருந்து அப்பா வாங்கிவருவார்கள். அதைச் சில மாதங்கள் வளர்ப்பார்கள். அந்தப் பசுமாட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கும், வெளியில் சிலருக்கும் கொடுக்குமள‌விற்கும் பால் கிடைக்கும். சந்தையில் இருந்து வாங்குவதால் அது சினையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு, வாங்கிய சில மாதங்களிலேயே டாக்டரை அழைத்து வந்து பரிசோதனை செய்வார்கள், சினையாக இருந்தால் எத்தனை மாதம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்வார்கள். சினையில்லை என்றால் சினைக்கு அழைத்துச் செல்வார்கள். சினையிட்டு ஒன்பது மாதம் வரை வளர்ப்பார்கள்.

பசுமாடுகள் சினையிடப்பட்ட ஐந்து அல்லது ஆறு மாதங்களிலிருந்து பால் எடுக்க முடியாது. எனவே அப்பா இந்த இடைப்பட்ட காலத்தில் பாலுக்காக இன்னொரு வத்தும் பால் பசுமாட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள். சினையாக இருக்கும் மற்றொரு பசுமாட்டைச் சரியாக ஒன்பதாவது மாதத்தில் நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள். ஒன்பதாவது மாதத்தில் பசுமாட்டை நல்லவிலைக்கு விற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. என்ன கன்று ஈனும் என்பதும், எவ்வளவு பால் கொடுக்கும் என்பதும் நாம் உறுதி செய்து கொடுக்க வேண்டியது இல்லை. அதனால் பெண் கன்றாக இருக்கும், அதிகமாக‌ பால் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை சொல்லி அதிக விலை விற்க முடியும். கன்று ஈன்ற பின்பென்றால் இவையிரண்டையும் பொறுத்து விலையின் ம‌திப்பு குறையும்.

கடந்த சில வருடங்களாக எங்கள் வீட்டில் பசுமாட்டைக் கன்று ஈனும் வரை வைத்திருப்பது கிடையாது என்று சொல்லியிருக்கும் நான், முதல் பத்தியில் கடந்த வாரம் எங்கள் வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது என்று சொல்லிருக்கும் முரண்பாட்டிற்குக் காரணம் அம்மா தான்.



எப்போதும் சரியாகப் பசுமாட்டின் சினை மாதங்களைக் குறித்து வைத்துக் கொள்ளும் அம்மா இந்தமுறை கோட்டை விட்டுவிட்டார்கள். ஒரு மாதம் குறைத்துக் கணக்கு வைத்து விட்டார்கள். அதனால் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பசுமாடு கன்று ஈன்றுவிட்டது, அதுவும் பெண் கன்றுக்குட்டி. சில வருடமாக எங்கள் வீட்டில் உள்ள பசுமாட்டைக் கன்று ஈன்று விடுவதற்கு முன்பாகவே விற்றுவிடுவதால் கன்று வளர்ப்பு என்பது சில வருடங்கள் இல்லாமல் இருந்தது. அதனால் இந்தமுறை இந்தப் பசுமாட்டையும், கன்றையும் விற்க வேண்டாம், வளர்க்கலாம் என்று எல்லோரும் முடிவெடுத்துவிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் பசுமாடு வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன‌?.

.

Thursday, July 21, 2011

குடி குடியைக் கெடுக்கும்_விள‌ம்ப‌ர‌ ப‌ல‌கை?

"குடி குடியைக் கெடுக்கும்" "ம‌து நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு" போன்ற‌ வாச‌க‌ங்க‌ளை தாங்கி தான் இன்றைய‌ ம‌து ப‌ட்டில்க‌ள் விற்ப‌னைக்கு வ‌ருகின்ற‌ன‌. ஆனால் இந்த‌ வாச‌க‌ங்க‌ளை உள்வாங்கி தான் ந‌ம்முடைய‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் குடிக்கிறார்க‌ளா?. என்னை நானே கேட்கும் கேள்விக‌ளில் இதுவும் ஒன்று.

முன்பெல்லாம் ஊர்க‌ளில் வியாபார‌ம் செய்ய‌ப்ப‌டும் சாராய‌ம், க‌ள் போன்ற‌வைக‌ள் ஊருக்கு வெளியில் ஆட்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் இல்லாத‌ ப‌குதிக‌ளில் ம‌றைமுக‌மாக‌ ந‌ட‌க்கும். அந்த‌ இட‌ங்க‌ளுக்கு சென்று வ‌ருப‌வ‌ர்க‌ளும் ஏதோ செய்ய‌ கூடாத‌ குற்ற‌த்தை செய்து விட்ட‌தாக‌ த‌லை க‌விழ்ந்து வ‌ருவார்க‌ள். இவைக‌ளை விற்ப‌னை செய்ப‌வ‌ர்க‌ளும் ச‌மூக‌ விரோதிக‌ளாக‌ தான் பார்க்க‌ப்ப‌ட்டார்க‌ள். கேன்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ சாராய‌த்தை சிறிய‌ க‌ண்ணாடி கிளாஸ்க‌ளில் அள‌ந்து வியாபார‌ம் செய்வார்க‌ள். இத்த‌கைய‌ வியாபார‌ங்க‌ள் ந‌ட‌க்கும் இட‌ங்க‌ளில் பெரும்பாலும் குடிப்ப‌வ‌ரும், விற்ப‌னை செய்ப‌வ‌ரை த‌விர‌ வேறு எவ‌ரும் இருக்க‌ மாட்டார்க‌ள். ஒருவ‌ர் குடித்து விட்டு வ‌ந்த பிற‌கு தான் அடுத்த‌வ‌ர் செல்வார். பெரும்பாலும் கூட்ட‌ம் சேர்க்க‌ விட‌ மாட்டார்க‌ள். ஒரு நாள் விற்ற‌ இட‌த்தில் ம‌றுநாள் விற்க‌ மாட்டார்க‌ள். கார‌ண‌ம் போலீஸ் ரெய்டு. இங்கு நான் போலீஸ் ரெய்டு என்ற‌வுட‌ன் சாராய‌ வியாபாரியை பிடித்து கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிடுவார்க‌ள் அத‌ற்கு ப‌ய‌ந்து தான் இடங்களை மாற்றுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்க‌ள் அறியாமை. மாமூல் கொடுக்க‌ வேண்டும் என்று தான் இட‌த்தை மாற்றுவார்க‌ள். எந்தெந்த‌ இட‌ங்க‌ளில் எப்போது வியாபார‌ம் ந‌ட‌க்கும் என்ப‌து குடிம‌க‌ன்க‌ளில் காதுக‌ளுக்கு தானாக‌ சென்றுவிடும்.

ஊர்க‌ளில் இவ்வாறு விற்க‌ப்ப‌டும் சாராய‌ வியாபார‌ம் பெரும்பாலும், பெண்க‌ள் ம‌ற்றும் குழ‌ந்தைக‌ள் புள‌ங்காத‌ இட‌ங்க‌ளில் தான் ந‌ட‌க்கும். கால‌ப்போக்கில் இந்த‌ இந்த‌ வியாபார‌மும் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்ற‌து. ச‌ந்து பொந்துக‌ளில் விற்க‌ப்ப‌ட்ட‌வைக‌ள் எல்லாம் க‌ள்ளுக்க‌டை, சாராய‌க்க‌டை என்று உருமாறி, நாவீன‌ விருச்ச‌த்தில் ஒயின்ஷாப்புக‌ளாக‌வும், பார்க‌ளாக‌வும் ஜொலித்து, இப்போது அர‌சே எடுத்து ந‌ட‌த்தும் டாஸ்மாக்காக‌ உய‌ர்ந்து நிற்கின்ற‌து. ஊரில் உழைத்து வாழ‌ விருப்ப‌ம் இல்லாம‌ல், பிற‌ர் குடியை கெடுத்து வாழ‌ நினைப்ப‌வ‌ர்க‌ள‌ தான் இந்த‌ சாராய‌ வியாபார‌ம் செய்தார்க‌ள். அவ‌ர்க‌ள் ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தை அடுத்த‌வ‌னிட‌ம் சுர‌ண்டிய‌ ப‌ண‌மாக‌ தான் ச‌மூக‌ ம‌க்க‌ள் பார்த்தார்க‌ள். ஆனால் இன்றைய‌ ந‌வ‌நாக‌ரீக‌ உல‌கில் டாஸ்மாக் மூல‌ம் வ‌ரும் ப‌ண‌த்தில் தான் "ம‌க்க‌ளுக்கு ப‌ட்ஜெட்டே போடுகிறோம்" என்று வெட்க‌ம் இல்லாம‌ல் ஊட‌க‌ங்க‌ளுக்கு பேட்டி கொடுக்கிறார்க‌ள்.

இந்த‌ சாராய‌ம், க‌ள்ளு போன்ற‌வைக‌ள் ஊருக்கு வெளியில் ஒதுக்கு புற‌ங்க‌ளில் விற்க‌ப்ப‌டும் போது இவைக‌ளால் ச‌மூக‌த்திற்கு ஏற்ப‌டும் தீங்கு குறைவாக‌ தான் இருந்த‌து. ஆனால் இவை பார்க‌ளாக‌ உருமாறிய‌ பின்புதான் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு அடிகோலிய‌து. குடித்த‌வ‌ன் சும்மா இருந்தாலும் அவ‌னுடைய‌ வாய் சும்மா இருக்காது. போதை த‌லைக்கேறிய‌ பிற‌குதான் சில‌ருக்கு ஞான‌மே பிற‌க்கும். இந்த‌ ஞான‌த்தால் அடுத்த‌வ‌ன் வாயை கிள‌றி, அது வாய் ச‌ண்டை ஆகி, வாய் ச‌ண்டை இரு குடும்ப‌ ச‌ண்டையாகி, குடும்ப‌ ச‌ண்டை இரு கோஷ்டி ச‌ண்டையாகி, கோஷ்டி ச‌ண்டை பெரிய‌ ஊர்க‌ல‌வ‌ர‌மாக‌ வெடித்திருக்கிற‌து என்ப‌து நித‌ர்ச‌ன‌ம். இன்றைக்கும் ப‌ல‌‌ டாஸ்மாக் க‌டைக‌ளில் உள்ள‌ பார்க‌ளில் ஒரே வ‌ண்டியில் வ‌ந்திற‌ங்கி ஒரு பாட்டில் வாங்கி, ஒரே கிளாஸில் குடிக்க‌ ஆர‌ம்பித்த‌ இருவ‌ரும், சிறிது நேர‌த்தில் போதை த‌லைக்கேறி; வ‌ச‌வு வார்த்தைக‌ளில் ஆர‌ம்பித்து, க‌ட்டிப்பிடித்து ச‌ண்டையிடும் நிலைமைக்கு மாறியிருப்பார்க‌ள். பிற‌கு அங்குள்ள‌ பார் ஊழிய‌ர்க‌ள் தான் ஒருவ‌னை முன்புற‌ வாச‌ல் வ‌ழியாக‌வும், அடுத்த‌வ‌னை பின்புற‌வாச‌ல் வ‌ழியாக‌வும் ஆட்டோவில் ஏற்றிவிடுவ‌தை நாளும் பார்க்க‌லாம்.

என‌து ஊர் வில்லுக்குறியில் ஒயின்ஷாப் என்ப‌து கிடையாது. அத‌ற்கு கார‌ண‌ம் இங்கு தொண்ணூறுக‌ளில் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள். அந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் ஒருவ‌ரின் உயிர் ம‌ற்றும் ஒருவ‌ரின் கை ப‌றி போன‌து. இந்த‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் தோன்ற‌ இங்கிருந்த‌ ம‌துக்க‌டைக‌ளும் ஒரு கார‌ண‌ம் என்று ரெக்கார்டு ப‌திவாகி போன‌து. அத‌னால் தான் இதுவ‌ரையிலும் இங்கு எவ‌ராலும் டாஸ்மாக் கொண்டுவ‌ர‌ முடிய‌வில்லை.(இத‌னால் இங்கு இருப்ப‌வ‌ர்க‌ள் ரெம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் என்று எண்ண‌ வேண்டாம், ப‌க்க‌த்துல‌ அந்த‌ ப‌க்க‌ம் நுள்ளிவிளை, இந்த‌ ப‌க்க‌ம் குமார‌கோவில், எட்டி போனால் சுங்காங்க‌டை என‌ மூன்று ப‌க்க‌ம் த‌ண்ணியால்(டாஸ்மாக்) சூழ‌ப்ப‌ட்ட‌ தீப‌க‌ற்ப‌ம் தான் வில்லுக்குறி).

இப்போது அர‌சால் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ப‌ல‌ டாஸ்மாக் க‌டைக‌ள், ம‌க்க‌ள் குடியிருப்புக‌ளுக்கு அருகிலும், ப‌ள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளுக்கு அருகிலும், பெண்க‌ள் அதிக‌மாக‌ புள‌ங்கும் கோவில்க‌ளின் ப‌க்க‌த்திலும் பார்க்க‌ முடிகிற‌து. ம‌க்க‌ளும் எந்த‌வித‌மான‌ உறுத்த‌லும் இல்லாம‌ல் இவைக‌ளை க‌ட‌ந்து செல்கிறார்க‌ள்(க‌ட‌ந்து செல்ல‌ ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்திவிட்டார்க‌ள்). சினிமாவும், ஊட‌க‌ங்க‌ளும் ம‌க்க‌ளை இவ‌ற்றில் இருந்து எளிதாக‌ வில‌கி செல்ல‌ ப‌ல‌ யுத்திக‌ளை கையாளுகின்ற‌ன‌. சினிமாவில் குடிகார‌ ஹீரோக்க‌ள், குடித்துவிட்டு அவ‌ர்க‌ள் செய்யும் கூத்துக‌ளை ர‌சிக்கும் ஹீரோயின்க‌ள் என்று இவ‌ர்க‌ள்‌ அமைக்கும் காட்சிக‌ளை வைத்தே சொல்லிவிட‌லாம் எத்த‌கைய‌ க‌லாச்சார‌த்தை வ‌ள‌ர்த்தெடுக்கிறார்க‌ள் என்று.



ப‌தின்ம‌ வ‌ய‌தை க‌ட‌ந்த‌ மாண‌வ‌ர்க‌ள் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் குடிப்ப‌த‌ற்க்கும், புகைப்ப‌த‌ற்கும் அடிமையாக‌ இருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இது தீய‌ ப‌ழ‌க்க‌மாக‌ தெரிய‌வில்லை, மாறாக‌ கொண்டாட்ட‌மாக‌ இருக்கிற‌து. த‌ண்ணிய‌டிப்ப‌தையும், புகைப்ப‌தையும் இவ‌ர்க‌ள் ஒரு த‌குதியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்கிறார்க‌ள். இத்தைகைய‌ த‌குதியை வ‌ள‌ர்த்தெடுக்காத‌வ‌ர்க‌ள் இன்றைய‌ நாக‌ரீக க‌லாச்சார‌த்தில் கோவ‌ண‌ம் க‌ட்டிய‌வ‌னாக‌ தான் பார்க்க‌ப்ப‌டுகிறார்க‌ள்.

"குடி குடியைக் கெடுக்கும்" "குடிப்ப‌ழ‌க்க‌ம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு" என்ற‌ வாச‌க‌ங்க‌ள் ஆட்டோக்க‌ளிலும், சினிமா டைட்டில்க‌ளிலும் சென்ற‌டைந்த அள‌வு, இன்றைய‌ இளைய‌த்த‌லைமுறையை சென்ற‌டைய‌வில்லை, அதுவ‌ரையிலும் தில்ஷ‌ன் போன்ற‌ மொட்டுக‌ளின் உயிர்க‌ளும், ப‌ல‌ ம‌னைவிக‌ளின் க‌ண்ணீர்க‌ளும் இந்த‌ பூமியில் சிந்த‌ப்ப‌டும் என்ப‌து திண்ண‌ம்.‌

குறிப்பு: ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம். க‌டைசி ப‌திவு எழுதி ஒரு மாத‌திற்கு மேல் ஆகிவிட்ட‌து. இந்த‌நாட்க‌ளில் என்னிட‌ம் தொட‌ர்புகொண்டு விசாரித்த‌ந‌ட்புக‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி. ச‌வூதி வ‌ந்து என்னை நிலைப்ப‌டுத்திக் கொள்ள‌இவ்வ‌ள‌வு நாட்க‌ள் எடுத்துவிட்ட‌து. இனி தொட‌ந்து எழுத‌வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எப்ப‌டி என்று பார்ப்போம்!!!!.






.






.
Related Posts with Thumbnails