Sunday, September 26, 2010

வெளிநாடு வாழ்க்கை_மீண்டார்க‌ளா?..வீழ்ந்தார்க‌ளா?..

சௌதி அரேபியாவிற்கு கட்டடத்தொழில், தோட்ட வேலை மற்றும் கூலிவேலை என்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தை சார்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள், கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களில் இருந்து இவர்கள் மீண்டார்களா?.. இல்லை மேலும் கஷ்டத்தில் விழுந்தார்களா? என்பதை நான் பார்த்த சில சம்பவங்களை கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.

சௌதி அரேபியாவில் இருந்து இந்த வேலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் விசாக்களுக்கு சம்பளம் 600 ரியாலில் இருந்து 1200 ரியால் வரை இருக்கும் (8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை). இந்த விசாவை வாங்கிய லோக்கல் டிராவல் ஏஜன்ட்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சரியான தகவல்களை சொல்லாமல் ஒவ்வொரு விசாவையும் லட்ச ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு வாங்கும் இளைஞர்களும் வெளிநாடு மோகத்தில் கேள்விகளை ஏதும் கேட்காமல் வாங்கிவிடுகிறார்கள்.

வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களில் பெரும்பாலனர்வர்கள் ஊரில் ஊதாரித்தனமாக சுற்றுபவர்களும், ஏதாவது பிரச்சனையில் மாட்டியவர்களுமாகத் தான் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வெளிநாட்டிற்கு போனாலாவது திருந்திட மாட்டானா என்று வீட்டில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த அளவுப் பணத்தை புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். இதில் சிலருடைய அம்மா/மனைவியின் தாலி செயின்கள் கூட விற்பனை அல்லது அடகுக் கடைக்குப் போவது மறுக்க இயலாது.

இவ்வாறு சௌதி வருபவர்களுக்கு முதலில் அறிமுகம் ஆகிறவர் கபில். இவர்தான் விசாவிற்கு சொந்த காரர், வருபவர்களை ஸ்பான்சர் செய்து அழைத்திருப்பவர். இவர் லோக்கல் அரபியாக இருப்பார். இவர்கள் கம்பெனி வைத்திருப்பவர்களாகவும் இருப்பார் அல்லது வேறு கம்பெனிகளுக்கு ஆட்களை சப்ளை பண்ணுபவராகவும் இருப்பார்.

சௌதி வந்தவுடன் அனைவருடைய பாஸ்போர்ட்டும் முதலில் கபில் கைக்கு போய்விடும். பின்னர் இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளேன் என்பதை அடையாளப்படுத்த ஒரு அட்டை கொடுக்கப்படும், அதன் அரேபிய சொல் இக்காமா(IQAMA). இந்த அடையாள அட்டை இருந்தால் தான் சௌதியில் சுதந்திரமாக சுற்றமுடியும். வாகனத்தில் அல்லது வெளியில் செல்லும் போது சௌதி போலீசார் பிடித்தால் முதலில் கேட்பது இந்த இக்காமாவை தான். வங்கியில் பணம் அனுப்ப வேண்டுமானால் கூட இந்த இக்காமாவை தான் கேட்பார்கள்.

இந்த இக்காமா சௌதி அரசால் வழங்கப்படும். இதை தருவதற்கு முன்பு நம்முடைய கைரேகை முதல் ஜாதகம் வரை அனைத்தும் அரசாங்க கோப்புகளில் பதிக்கப்பட்டுவிடும். பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கொடுக்கப்பட மாட்டாது. இக்காமா ம‌ட்டும் தான் உங்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும். சில‌ க‌பில்க‌ள் இந்த‌ இக்காமாவையும் வாங்கி வைத்து கொள்வார்க‌ள்.

உங்க‌ளுடைய‌ க‌பில் சொந்த‌மாக‌ க‌ம்பெனி வைத்திருந்தால் அவ‌ருடைய‌ க‌ம்பெனியில் நீங்க‌ள் வேலை செய்வீர்க‌ள். சில‌ க‌பில்க‌ள் மேன் ப‌வ‌ர் ச‌ப்ளை ம‌ட்டும் செய்வார்க‌ள். அவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு வேறு க‌ம்பெனியில் வேலை வாங்கி த‌ருவார்க‌ள். வேலை நேர‌ம் 10-ல் இருந்து 12 ம‌ணி நேர‌ம் இருக்கும்.

த‌ங்குவ‌த‌ற்கு ரூம் உங்க‌ளுக்கு கொடுத்துவிடுவார்க‌ள். ஒரு அறையில் நான்கில் இருந்து ஐந்து பேர் இருப்பார்க‌ள். அனைவ‌ரும் ச‌மைத்து தான் சாப்பிடுவார்க‌ள்.(ச‌மைய‌ல் செல‌வு + மொபைல் செல‌வு + இத‌ர‌ செல‌வுக‌ள் எல்லாம் சுமார் 300‍-ல் இருந்து 500 ரியால் செல‌வாகும், மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌ள‌த்தில் இந்த‌த் தொகை போனால் மீத‌ம் எவ்வ‌ள‌வு வ‌ரும் என்ப‌தை ஊகித்து கொள்ளுங்க‌ள்)

வெளிநாட்டிற்கு வ‌ரும் பெரும்பாலான‌ர்வ‌ர்க‌ள் முத‌லில் கொடுக்கும் ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னுக்கு வாங்கிய‌தாக‌ தான் இருக்கும். அத‌ற்கு வ‌ட்டியை கொடுக்க‌ தான் இவ‌ர்க‌ளுடைய‌ ச‌ம்ப‌ள‌ம் இருக்கும். சில‌ர் ஓவ‌ர் டைம் போன்ற‌ வேலைக‌ள் பார்த்து ஏதும் மீத‌ம் பிடித்தால் உண்டு. சௌதியில் உள்ள‌ த‌ட்ப‌வெப்ப‌ நிலைக‌ள் அனைவ‌ரும் அறிந்த‌தே. வெயில் என்றால் ம‌ண்டைய‌ பிள‌ந்துவிடும், குளிர் என்றால் மூக்கில் ர‌த்த‌ம் வ‌ழிய‌ செய்துவிடும். இந்த‌ சூழ்நிலைக‌ள் எல்லாம் ச‌மாளிக்க‌ வேண்டும்.

இவ‌ர்க‌ளுக்கு வேலை கொடுக்கும் க‌ம்பெனியில் ச‌ரியாக‌ வேலையிருந்தால் ப‌ர‌வாயில்லை. வேலையில்லையென்றால் க‌பில் உங்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் க‌ம்பெனியில் இருந்து த‌ர‌மாட்டார். உங்க‌ளிட‌ம் "நீங்க‌ள் வெளியில் யாரிட‌மாவ‌து வேலை செய்து கொள்ளுங்க‌ள், ஆனால் என‌க்கு மாத‌ம் 200‍-ல் இருந்து 300 ரியால் கொடுத்து விட‌ வேண்டும்" என்று சொல்லுவார். வெளியில் வேலை நீங்க‌ள் தேடி கொள்ள‌ வேண்டும்.

இத‌ற்கு நீங்க‌ள் உட‌ன்ப‌டாம‌ல் என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்க‌ள் என்றால் க‌பில் ம‌றுத்துவிடுவார். டிக்க‌ட்டிற்கு நீயே ப‌ண‌ம் பார்த்து கொள். உன்னுடைய‌ பாஸ்போர்ட் என் கையில் இருக்கிற‌து, அது வேண்டுமானால் இவ்வ‌ள‌வு ப‌ண‌ம் கொடுத்துவிட்டு செல் என்று ஒரு பெரிய‌ அமௌண்டை சொல்லுவார்க‌ள்.(இத‌ற்காக‌வாவ‌து நீங்க‌ள் வேலை செய்ய‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுவீர்க‌ள்). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.

க‌ம்பெனியில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளுக்கு முத‌ல் மூன்று, நான்கு மாத‌ங்க‌ள் சொல்லிய‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்க‌ப்ப‌டும். பின்பு ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌திலும் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவார்க‌ள். ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னில் வ‌ந்த‌ ஒருவ‌னுக்கு ச‌ம்ப‌ள‌ம் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌ட‌ வில்லையென்றால் பெரிய‌ ம‌ன‌க‌ஷ்ட‌ம் வ‌ந்து சேரும். மேலும் இவ‌ர்க‌ள் த‌ங்க‌வைக்க‌ப் ப‌ட்டிருக்கும் இட‌ங்க‌ள் பெரும்பாலும் கிராம‌மாக‌த் தான் இருக்கும். க‌பிலின் உத‌வியில்லாம‌ல் இவ‌ர்க‌ள் ந‌க‌ர‌ங்க‌ளுக்கு வ‌ர‌முடியாது. என‌வே இவ‌ர்க‌ளின் க‌ஷ்ட‌ங்க‌ளையும் பிற‌ருட‌ன் ப‌கிந்து கொள்ள‌வும் முடியாது.

ச‌ரியாக‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்காம‌ல் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவ‌தால் கிடைக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் க‌பிலின் பிடியில் இருந்து இவ‌ர்க‌ள் வெளியில் சாடிவிடுவார்க‌ள். இவ‌ர்க‌ளிட‌ம் எந்த‌ பேப்ப‌ரும் இருக்காது(பாஸ்போர்ட், இக்காமா போன்ற‌வை). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.

ஒரு க‌ம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்க‌ள். ஆனால் அங்கு குறைவான‌ ச‌ம்ப‌ள‌ம் த‌ருகிறார்க‌ள், வெளியில் வேலை செய்தால் அதிக‌மாக‌ ச‌ம்பாதிக்க‌லாம் என்று ஆசைப்ப‌ட்டு வெளியில் சாடும் ஒரு கூட்ட‌மும் இருக்கிற‌து. இவ‌ர்க‌ளிட‌மும் எந்த‌வித‌ பேப்ப‌ரும் இருக்காது.



இவ்வாறு எந்த‌வித‌ பேப்ப‌ர்க‌ளும் இல்லாம‌ல் எவ்வாறு இங்கு ச‌மாளிக்கிறார்க‌ள்?. எப்ப‌டி இந்தியா வ‌ருகிறார்க‌ள் என்ப‌தை அடுத்த‌ ப‌திவுக‌ளில் எழுதுகிறேன்.

10 பேர் சௌதியில் வேலை செய்கிறார்க‌ள் என்றால் அதில் 6 பேர் நான் மேலே சொன்ன‌ மூன்று பிர‌ச்ச‌னைக‌ளில் மாட்டுப‌வ‌ர்க‌ள். அப்ப‌டியானால் எத்த‌னை ச‌த‌வீத‌ம் என்று நீங்க‌ளே க‌ண‌க்கிட்டு பாருங்க‌ள்.

-------------தொட‌ரும்--------------

குறிப்பு: இந்தியாவிற்கு வ‌ரும் கால‌ம் நெருங்கிவிட்ட‌தால் வேலை கொஞ்ச‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌து. அத‌னால் தொட‌ர்ச்சியாக‌ ப‌திவுக‌ள் எழுத‌முடிய‌வில்லை. நேர‌ம் கிடைக்கும் போது க‌ண்டிப்பாக‌ ப‌கிருவேன்.

Wednesday, September 15, 2010

பேச்சில‌ர் வாழ்க்கையும்_வாட‌கை வீடும்

பேச்சில‌ரா இருந்தா சென்னையில் வீடு வாட‌கைக்கு கிடைப்ப‌து க‌ஷ்ட‌ம் என்று சொல்வ‌து உண்டு. ஆனால் சில‌ ஹ‌வுஸ் ஓன‌ர்க‌ள் இவ‌ர்க‌ளுக்கு கொடுப்ப‌தில் ஆர்வ‌மாக‌‌ இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ள் ஆர்வ‌மாக‌ இருப்ப‌த‌ற்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு.

1) முன்பு குடியிருந்த‌வ‌ர்க‌ளின் வாட‌கையை விட‌ அதிக‌மாக‌ சொன்னால், கார‌ண‌ம் ஏதும் கேட்காம‌ல் ச‌ரி என்று த‌லையை ஆட்டுவ‌து. (ந‌ம்ம‌ளை வீடு பார்க்க‌ கூட்டி வ‌ருகிற‌வ‌ன் ஒரு ப‌ய‌ம் காட்டித்தான் கூட்டி வ‌ருவான், உல‌க‌த்துல‌ வேற‌ யாருமே பேச்சில‌ருக்கு வீடு கொடுக்க‌ மாட்டாங்க‌. இவ‌ங்க‌ ம‌ட்டும் தான் கொடுப்பாங்க‌, காசு கொஞ்ச‌ம் ஜாஸ்தியா இருக்குமுனு)

2) வ‌ட‌க்கு வாச‌ல், கிழ‌க்கு வாச‌ல் என்ற‌ முறைவாச‌ல்க‌ளுக்கு நீங்க‌ளே செய்து கொள்ளுங்க‌ள் என்று அவ‌ர்க‌ளிட‌ன் பொறுப்பை ஒப்ப‌டைத்து ப‌ண‌ம் கொடுத்து விடுவ‌து. (இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை க‌ட்டிக்கொண்டு கோல‌மா போட‌ முடியும்)

3) த‌ண்ணீர், கார்ப்ப‌ரேச‌ன், மின்சார‌ம் என்று எல்லாவ‌ற்றிற்கும் சேர்த்து ஒரு மொத்த‌ தொகையை மாத‌ம் மாத‌ம் கேட்டால் வாயை மூடிக்கொண்டு கொடுத்துவிடுவ‌து.(காலையிலே தூக்க‌ம் எழுவ‌தே லேட்டாக‌ தான் இருக்கும். அந்த‌ நேர‌ம் த‌ண்ணி வ‌ர‌வில்லை, பாத்ரூம் ச‌ரியில்லை என்று நிற்க‌முடியுமா? இது அவ‌ங்க‌ளுக்கும் தெரியும்.)

4) காலையில் குடும்ப‌த்துட‌ன் குடியிருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் எழுந்து ஆபிஸ் கிள‌ம்பிய‌ பிற‌குதான் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ப‌டுக்கையில் இருந்து எழுந்து த‌லையில் த‌ண்ணீர் தெளித்துவிட்டு ஆபிஸுக்கு ஓடுவ‌து. லீவு நாளாக‌ இருந்தால் சொல்ல‌வே வேண்டாம் இர‌வு முழுவ‌தும் டீவி/க‌ம்பியூட்ட‌ர் முன் க‌ண்விளித்துவிட்டு ப‌க‌லில் ந‌ல்லா குற‌ட்டை விட்டு தூங்குவ‌து.

5) சுவ‌ரில் ஆணி அடித்துவிடுவார்க‌ள் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை. கார‌ண‌ம் அறையில் சாமி ப‌ட‌ங்க‌ளோ அல்ல‌து அம்மா, அப்பா ப‌ட‌ங்க‌ளோ தொங்க‌விடுவ‌து இல்லை. அப்ப‌டியே ப‌ட‌ங்க‌ள் இருந்தாலும் அது ந‌டிக‌ர் அல்ல‌து ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளாக‌த் தான் இருக்கும். அவை அனைத்தும் செல்லோடேப் கொண்டுதான் ஒட்டுவோம். அத‌னால் எளிதில் அவ‌ற்றை அப்புற‌ப்ப‌டுத்த‌ முடியும்.

6) த‌ண்ணீர் செல‌வாகிடும் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை, காலையில் வீட்டை விட்டு கிள‌ம்பி போனால் இர‌வுதான் வீட்டிற்கு வ‌ருவ‌து. துணிக‌ள் துவைப்பார்க‌ளா? என்று எல்லோருக்கும் ட‌வுட் இருக்கும். இத‌ற்கென்றே நான்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி வைத்திருப்போம். மூன்று மாத‌திற்கு ஒரு த‌ட‌வை ஊருக்கு போகும் போது துவைத்தால் போதும் என்று.

7) வேலையை முடித்துவிட்டு இர‌வில் வீட்டிற்கு வ‌ந்து, போர் அடிக்குதே என்று மாடிப்ப‌க்க‌ம் போய் நின்று ஒரு த‌ம்மை போட‌லாம் என்று ப‌த்த‌வைக்கும் போதுதான் ஹ‌வுஸ் ஓன‌ர் மேலே வ‌ருவார். என்ன‌ த‌ம்பி இங்க‌ தான் இருக்கீங்க‌ளா? என்று மொக்கைப்போட‌ தொட‌ங்கிவிடுவார். அப்ப‌டியே நாம‌ளும் ந‌ம்ம‌ க‌தையை கேக்க‌ ஒருத்த‌ர் சிக்கிட்டாரு நினைச்சி மொக்கை போட‌ ஆர‌ம்பிச்சிடுவோம். அவ‌ரு ந‌ம்ம‌கிட்ட‌ க‌தை கேக்குறேன் என்கிற‌ பேர்ல‌ ஊர்ல‌ என்ன‌ ப‌யிர் விளையுது, அங்க‌ என்ன‌ ஸ்வீட் பேம‌ஸு, உங்க‌ வீட்ல‌ என்ன‌ ப‌ழ‌ம் எல்லாம் இருக்குனு வாயில‌ இருந்து புடிங்கிடுவாரு. நாம‌ளும் க‌தைதானே என்று ப‌க்க‌த்து வீட்ல‌ விளையுற‌து எல்லாம் எங்க‌ வீட்டுல‌ விளையுதுனு ஜ‌ம்ப‌ம் அடிச்சி வைப்போம். இப்ப‌டி சொல்லுற‌தால‌ அப்ப‌ ஒண்ணும் பிர‌ச்ச‌னை இருக்காது, ஆனா தீபாவ‌ளி, பொங்க‌லுனு ஊருக்கு போகும் போது வீட்டை பூட்டி சாவியை ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் கொடுக்கும் போதுதான் பிர‌ச்ச‌னையே. த‌ம்பி இங்க‌ இந்த‌ ப‌ழ‌ம் எல்லாம் யானை விலை, குதிரை விலை விக்குது ஊர்ல‌ இருந்து வ‌ரும் போது அப்ப‌டியே கொஞ்ச‌ம் எடுத்து வாங்க‌ளேன்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்

8) நாம் ரூம்ல‌ ப‌க‌ல்ல‌ இருப்ப‌தே அபூர்வ‌மா தான் இருக்கும். ஏதாவ‌து முக்கிய‌ ஆபிஸ் வேலையை முடிக்க‌லாம் என்று இருந்தால் அப்ப‌ தான் ஹ‌வுஸ் ஓன‌ர் அக்கா டீவி சீரிய‌ல் பார்க்க‌ விடாம‌ல் அட‌ம்பிடிக்கிற‌ ம‌க‌னை பார்த்து, மேல‌ மாடில‌ இருக்கிற‌ அங்கிளுக்கு ஆபிஸ் இன்னைக்கு லீவாம் நீ போய் அவ‌ரோட‌ விளையாடு என்று அனுப்பி வைப்பாங்க‌. அவ‌ங்க‌ ஜாலியா சீரிய‌ல் பார்க்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌, ஆனா பைய‌ன் ந‌ம்ம‌ளை ட‌ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடுவான்.

9) ச‌மைய‌ல் அறை ஒன்றை ம‌ற‌ந்தே இருப்பார்க‌ள். அங்கு தான் துணிக‌ள் உல‌ர்த்த‌ப்ப‌டும். அத‌னால் வீட்டில் புகை ம‌ற்றும் சுவ‌ர் அழுக்காகிவிடும் என்ற‌ பிர‌ச்ச‌னை ஹ‌வுஸ் ஓன‌ருக்கு இருக்காது. அப்ப‌டியே ச‌மைய‌ல் என்று ஆர‌ம்பித்தாலும் நாலு நாள் கூத்தாக‌ தான் இருக்கும். ஐந்தாவ‌து நாள் ஹோட்ட‌லை தான் தேடுவார்க‌ள். இந்த‌ நாலு நாளு கூத்துக்கு வாங்கிய‌ பாத்திர‌ங்க‌ள் எல்லாம் வீடு காலி ப‌ண்ணும் போது ஹ‌வுஸ் ஓன‌ருக்கு தான் சொந்த‌ம்.

10) வீட்ல‌ அது ச‌ரியில்லை, இது ச‌ரியில்லை என்ற‌ புல‌ம்ப‌ல் இல்லாம‌ல் ச‌ரியா சொன்ன‌ தேதில‌ வீட்டு வாட‌கையை கொண்டு போய் ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் சேர்த்துவிடுவ‌து.

குறிப்பு:

மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)

ஆனா இதுக்கு நேர் எதிராய் ஒரு குரூப் இருக்கும் அந்த‌ குரூப்பிட‌ம் ம‌ட்டும் வீடு வாட‌கைக்கு விட்டால் அந்த‌ ஹ‌வுஸ் ஓன‌ர் வீட்டை வித்துவிட்டே ஓடிவிடுவார். அவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னை கொடுப்பார்க‌ள். அதைப் ப‌ற்றி அடுத்த‌ப் ப‌திவில் எழுதுகிறேன்.

.


.

.
Related Posts with Thumbnails